சங்க இலக்கிய அருஞ்சொற்களஞ்சியம்

முனைவர் ப.பாண்டியராஜா
(www.tamilconcordance.in)


105

52

77

24

121

13

36

20

5

32

20

1
க்
124
கா
24
கி
12
கீ
2
கு
58
கூ
17
கெ
9
கே
7
கை
23
கொ
48
கோ
28
கௌ
1
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
15
சா
42
சி
51
சீ
7
சு
29
சூ
13
செ
66
சே
17
சை
1
சொ
6
சோ
4
சௌ
ஞ்
3
ஞா
15
ஞி
4
ஞீ ஞு ஞூ ஞெ
17
ஞே ஞை ஞொ
1
ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
113
தா
23
தி
54
தீ
13
து
76
தூ
25
தெ
44
தே
25
தை
6
தொ
44
தோ
16
தௌ
1
ந்
82
நா
44
நி
40
நீ
21
நு
30
நூ
11
நெ
39
நே
12
நை
3
நொ
24
நோ
13
நௌ
1
ப்
245
பா
80
பி
63
பீ
7
பு
173
பூ
19
பெ
48
பே
25
பை
22
பொ
76
போ
37
பௌ
1
ம்
240
மா
85
மி
35
மீ
13
மு
163
மூ
24
மெ
14
மே
30
மை
9
மொ
6
மோ
11
மௌ
1
ய்
2
யா
30
யி யீ யு யூ
2
யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
236
வா
71
வி
120
வீ
15
வு வூ வெ
81
வே
67
வை
18
வொ வோ வௌ
2
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
வகிர்

வகிர் – 1. (வி) பிள, கீறு, split, tear open, rip up
– 2. (பெ) 1. பிளந்த துண்டு, slice
2. பிளப்பு, cleaving, tearing
3. வகிடு, parting in the hair from the crown to the forehead
1.
வெடி படா ஒடி தூண் தடியொடு
தடி தடி பல பட வகிர் வாய்த்த உகிரினை – பரி 4/21,21
வெடிபட்டு ஒடிந்துபோன தூணின் துண்டங்களோடு,(இரணியனின்)
தசைத் துண்டங்களும் பலவாகக் கலந்து விழும்படி அவனது மார்பினைக் கீறிப் பிளந்த நகத்தினை உடையவனே!

வடு வகிர் வென்ற கண் மா தளிர் மேனி – பரி 8/38
இரண்டாகப் பிளந்த மாவடுவின் அழகை வெல்லும் கண்களும், மாந்தளிர் போன்ற மேனியும்
2.1
துய் தலை பூவின் புதலிவர் ஈங்கை
நெய் தோய்த்து அன்ன நீர் நனை அம் தளிர்
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர – அகம் 294/6-8
பஞ்சு போன்ற தலையினையுடைய பூவினையுடையதும், புதர்களில் படர்வதுமான ஈங்கையது
நெய்யில் தோய்த்தெடுத்தாற் போன்ற நீரால் நனைந்த அழகிய தளிர்கள்
இரண்டு பிளந்த துண்டுகளாகிய ஈரல் போல ஈரமுடையனவாய் அசைந்திட
2.2
உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல்
நெடு வகிர் விழுப்புண் கழாஅ – அகம் 308/1,2
புலியொடு பொருது உழந்த வருந்திய நடையையுடைய களிற்றியானையின்
நீண்ட பிளப்பாகிய நெற்றிப் புண்ணைக் கழுவி
2.3
மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலே போல்
பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டு – கலி 55/1,2
மின்னல்கள் ஒளிர்ந்து பிரகாசித்துக் கொடியாய் ஓட, அதனிடையே பிளந்துகொண்டு செல்லும் மேகத்தைப் போல,
பொன் கம்பிகளைக் கூறுகளாக்கி அழகுற வகிடுகளாக வகைப்படுத்திய நெறித்த கூந்தலில் ஒளிபெறச் சூடி,

வகு

வகு – (வி) 1. கூறுபடுத்து, separate, divide
2. வடிவமை, உருவாக்கு, frame, formulate, conceptualize
3. நியமி, ஒதுக்கிக்கொடு, assign
4. பிள, split, tear apart
1.
ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல்
மை ஈர் ஓதி மடவீர் – அகம் 48/17,18
ஐந்துவகையாக வகுத்த கூந்தலையும், அழகிய நெற்றியையும்,
கரிய நெய்தடவிய கொண்டையினையும் உடைய இளமங்கையரே!
2.
அவல் வகுத்த பசும் குடையான்
புதல் முல்லை பூப்பறிக்குந்து – புறம் 352/3,4
பள்ளமுண்டாகச் செய்யப்பட்ட பசிய ஓலைக் குடையில்
புதரிடத்தே மலர்ந்த முல்லைப் பூக்களைப் பறிக்கும்

பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து – நெடு 78
பெரும் புகழ்பெற்ற அரசர்க்குத் தகுந்தவகையில் (அரண்)மனையின் பாகங்களைப் பகுத்துக்கொண்டு
3.
எமக்கு என வகுத்த அல்ல – புறம் 378/10
எம்மைப்போலும் பரிசிலர்க்கு அளித்தற்கு என ஒதுக்கப்பட்டாதன ஆன
4.
மரல் வகுந்து தொடுத்த செம் பூ கண்ணியொடு – புறம் 264/2
மரலைக் கீறித் தொகுக்கப்பட்ட சிவந்த பூவையுடைய கண்ணியுடனே

வகுந்து

வகுந்து – (பெ) வழி, way, road
மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கி
செல்லாமோ தில் சில் வளை விறலி – பதி 57/5,6
மென்மையான நிலத்து வழியினில், தன் சிறிய கால்களால் ஒதுங்கி நடந்து
செல்வோமா, ஒருசில வளையல்களை அணிந்த விறலியே?

வகுளம்

வகுளம் – (பெ) மகிழம்பூ, Pointed-leaved ape flower, Mimusaps elangi
பசும்பிடி வகுளம் பல் இணர் காயா – குறி 70
குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி – பரி 12/79

வகை

வகை – 1. (வி) வகிர், cut
– 2. (பெ) 1. ரகம், விதம், variety
2. வகுக்கப்பட்டது, that which is designed
3. முறை, வழி, manner, method
4. மனையின் பகுப்பு, apartments of a house
5. பிரிவு, கூறுபாடு, division, section
6. இயல்பு, தன்மை, nature, quality
7. உடல் உறுப்பு, limb
8. வகுத்துக்கூறல், catagorizing
9. அழகு, beauty
1.
வாளை ஈர்ம் தடி வல்லிதின் வகைஇ – நற் 120/5
வாளை மீனின் ஈரமான நீண்ட துண்டை சிரமப்பட்டு நறுக்கி
2.1
பிடகை பெய்த கமழ் நறும் பூவினர்
பல வகை விரித்த எதிர் பூ கோதையர் – மது 397,398
கூடைகளில் இட்டுவைத்த கமழ்கின்ற நறிய பூவினையுடையவரும்,
பல ரகங்களாக விரித்துவைத்த ஒன்றற்கொன்று மாறுபட்ட பூமாலையுடையவரும்,

சிறு கோல் இணர பெரும் தண் சாந்தம்
வகை சேர் ஐம்பால் தகைபெற வாரி – நற் 140/2,3
சிறிய கிளைகளிலே பூங்கொத்துக்களையுடைய பெரிய குளிர்ச்சி பொருந்திய சந்தனமரத்தின் கட்டையோடு
பலவித பொருள்களையும் சேர்த்து அமைக்கப்பெற்ற சாந்தம்பூசிய கூந்தலை அழகுபெற வாரி
2.2
முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை – நற் 314/1,2
வயது முதிர்ந்தோர் தம் இளமையை எவ்வளவு வருந்தியும் மீண்டும் பெறமாட்டார்கள்;
வாழ்நாளின் வகுக்கப்பட்ட அளவு இன்னது என்று அறிபவரும் இங்கு இல்லை;
2.3
நகை அமர் காதலரை நாள்_அணி கூட்டும்
வகை சாலும் வையை வரவு – பரி 6/12,13
மகிழ்ச்சி பொருந்திய தம் காதலரை நீர் விளையாட்டுக்குரிய நாளணிகளை அணியச்செய்விக்கும்
முறையில் மிகுந்துநிற்கிறது வையையில் நீர் வரவு;
2.4
வகை மாண் நல் இல் – புறம் 398/2
மனையின் பகுப்புகளில் மாண்புற்ற நல்ல பெரிய மனை
2.5
சாந்து உளர் வணர் குரல் வாரி வகை வகுத்து – அகம் 117/10
மயிர்ச்சாந்து பூசிய வளைந்த கொத்தாகிய கூந்தலை வாரி பிரிவுகளாக வகைப்படுத்தி
2.6
ஆய்நலம் தொலைந்த மேனியும் மா மலர்
தகை வனப்பு இழந்த கண்ணும் வகை இல
வண்ணம் வாடிய வரியும் – அகம் 69/1-3
ஆராயும் அழகு தொலைந்த மேனியினையும், கரிய மலரின்
சிறந்த அழகினை இழந்த கண்ணினையும், முன்னை இயல்பு இலவாய்
அழகு வாடின திதலையும்
2.7
வகை எழில் வனப்பு எஞ்ச வரை போக வலித்து நீ
பகை அறு பய வினை முயறிமன் – கலி 17/13,14
இவளது உறுப்பழகும் தோற்றப்பொலிவும் கெடும்படி மலையிடைப் போக நீ துணிந்து
பகை நீங்குவதற்குக் காரணமான பயனைத் தரும் பிரிவினை நீ மிகவும் முயல்வாய்
2.8
தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக – கலி 39/48
அழகு மிகும் தொகுத்துக் கூறல் வகுத்துக் கூறல் ஆகியவற்றை அறியும் சான்றோர் தனக்குச் சுற்றமாக விளங்க,
2.9
வல்லை நீ துறப்பாயேல் வகை வாடும் இவள் என – கலி 3/10
விரைவில் இவளை நீ பிரிந்துசென்றால், இவளின் அழகிய உறுப்புகள் களையிழந்துபோகும் என்று
– வகை – அழகு – இராசமாணிக்கனார் உரை விளக்கம்.
நீ விரைவாகப் பிரிந்தால் இவள் தன் அழகை இழப்பாள் என்று
– ச.வே.சு.உரை

அவை புகழ் அரங்கின் மேல் ஆடுவாள் அணி நுதல்
வகை பெற செரீஇய வயந்தகம் போல் தோன்றும் – கலி 79/4,5
பலரும் பாராட்ட அரங்கில் நடனமிடும் பெண்ணின் தலையின் முன்புறத்தில்
அழகாகச் செருகி வைத்த வைந்தகம் என்ற அணிகலத்தைப் போலத் தோன்றுகிறது
– ச.வே.சு.உரைஃ

வகை என்பதற்கு அழகு என்ற பொருள் எந்த ஓர் அகராதியிலும் இல்லை. ஆனால் இராசமாணிக்கனார் அவர்களும்,
ச.வே.சு அவர்களும் மேலே குறிப்பிட்ட இந்த இரு இடங்களில்வரும் வகை என்ற சொல்லுக்கு அழகு என்றே
பொருள்கொள்கின்றனர்.

இன்றைய பேச்சுவழக்கிலும் இந்தப் பொருள் அமைந்துவருவதைக் காணலாம்.
ஒரு தச்சர் சிறந்த வேலைப்பாடு உள்ள பல கட்டில்கள் செய்கிறார். அவற்றுள் மிகவும் அமைப்பாக வந்துள்ள
கட்டிலைக் காட்டி, “இது ஒண்ணுதான் வகையா அமஞ்சிருக்கு” என்பார். இந்த இடத்தில் வகை என்பதற்கு அழகு,
சிறப்பு ஆகிய பொருள்களைக் காணலாம்.
செப்புச் செம்புகள் வார்க்கும்போது அவற்றில் நூற்றில் ஒன்றுதான் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும். அதனை
வகையாக அமைந்த செம்பு என்பார்கள்.

புடை அமை பொலிந்த வகை அமை செப்பில் – மது 421

என்றவிடத்தில் இந்தப்பொருளே பொருந்திவருவதைக் காணலாம்.
இதுபோல் வரும் பல இடங்களில் இப்பொருள் ஒத்துவருவதைக் காணலாம்.

நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை – திரு 86
வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து – சிறு 224
கவவொடு பிடித்த வகை அமை மோதகம் – மது 626
வார் அணி கொம்மை வகை அமை மேகலை – பரி 22/30
வகை அமை தண் தாரான் கோடு உயர் பொருப்பின் மேல் – கலி 57/16
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய – அகம் 64/3
வகை அமை பொலிந்த வனப்பு அமை தெரியல் – அகம் 76/8
வயங்கு மணி பொருத வகை அமை வனப்பின் – அகம் 167/1

இங்கெல்லாம் வகை என்பதற்கு அழகு, சிறப்பு என்ற பொருள் மிகவும் பொருந்திவருவதைக் காணலாம்.

வங்கம்

வங்கம் – (பெ) 1. மாடுகளால் இழுக்கப்படும் ஒரு வகை வண்டி, a kind of cart pulled by bullocks
2. மரக்கலம், ship
1.
திண் தேர் புரவி வங்கம் பூட்டவும்
வங்க பாண்டியில் திண் தேர் ஊரவும் – பரி 20/16,17
அவசரத்தில் திண்ணிய தேருக்குரிய குதிரைகளை வண்டியில் பூட்டவும்,
வண்டிக்குரிய மாடுகளைப் பூட்டிக்கொண்டு திண்ணிய தேரில் செல்லவும்,
வங்கம் – பள்ளியோடம் என்னும் வண்டி – பொ.வே.சோ. உரை, விளக்கம்
2.
வால் இதை எடுத்த வளி தரு வங்கம்
பல் வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து – மது 536,537
வெண்மையான பாய் விரித்த, காற்றுக் கொண்டுவந்த மரக்கலங்கள்(கொணர்ந்த)
பலவாய் வேறுபட்ட சரக்குகள் இறங்குதலைச் செய்யும் பட்டினத்து

வங்கா

வங்கா – (பெ) ஒரு பறவை, a bird
வங்கா கடந்த செம் கால் பேடை
எழால் உற வீழ்ந்து என கணவன் காணாது
குழல் இசை குரல குறும் பல அகவும் – குறு 151/1-3
ஆண் வங்காப்பறவை நீங்கிய சிவந்த காலையுடைய பெடைவங்கா
புல்லூறு என்னும் பறவை தன்மேல் பாய்ந்ததாக, தன் சேவலைக்காணாமல்
குழல் போன்று இசைக்கும் குரலையுடைய அது குறிய பல ஓசைகளை எழுப்பும்

இதன் பெயர் மாம்பழக்குருவி என்பார் ஓர் ஆய்வாளர்.
வங்கா என்கிற மாம்பழக்குருவிப் பற்றி குறுந்தொகை(151), நற்றிணை (341) ஆகிய சங்க இலக்கியங்களில்
காணமுடிகின்றது – து.ரோசி தமிழ்த்துறைத் தலைவர் – http://siragu.com/பறவைகள்/

வங்கூழ்

வங்கூழ் – (பெ) காற்று, wind
உலகு கிளர்ந்து அன்ன உரு கெழு வங்கம்
புலவு திரை பெரும் கடல் நீர் இடை போழ
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட – அகம் 255/1-4
உலகு புடைபெயர்ந்தாலொத்த அச்சம் தரும் நாவாய்
புலால் வீசும் அலைகளையுடைய பெரிய கடலின் நீரை இடையே பிளந்து செல்ல
இரவும் பகலும் ஈரிடத்தும் தங்குதல் இன்றி
விரைந்து செல்லும் இயற்கையினதாகிய காற்று அசைத்துச் செலுத்த

வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை
நன் பொன் அன்ன நறும் தாது உதிர – அகம் 378/3,4
காற்று அசைத்தலால் அழகிய தளிர்களையுடைய வேங்கை மரத்தின்
பொன் போன்ற நறிய தாது உதிர்தலால்

எனவே, வங்கூழ் என்பது வேகமாக அடிக்கும் காற்று எனக்கொள்லலாம்.

வசி

வசி – 1. (வி) 1. பிள, split, cut apart
2. வளை, bend
– 2. (பெ) பிளவு, cleft, split
1.1
வயங்கு வெயில் ஞெமிய பாஅய் மின்னு வசிபு
மயங்கு துளி பொழிந்த பானாள் கங்குல் – அகம் 322/1,2
விளங்கும் வெயில் மறையவே மேகம் பரந்து மின்னல் பிளந்திட
மிக்க மழையைப் பொழிந்த நடு இரவில்
1.2
வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள் – திரு 106
வளவிய புகழ் நிறையப்பெற்று, வளைந்து நெளிந்து(உருண்டு திரண்ட) நிமிர்ந்த தோள்களில்
2.
கொடுவரி பாய்ந்தென கொழுநர் மார்பில்
நெடு வசி விழுப்புண் தணிமார் காப்பு என
அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல் – மலை 302-304
வளைந்த வரிகளைக்கொண்ட)புலி பாய்ந்ததால் (தம்)கணவர் மார்பில்(ஏற்பட்ட)
நீண்ட பிளவாகிய விழுப்புண்ணை ஆற்றுவதற்காக, காக்கக்கூடியது என
(ஆற்றுக் கருமணல் போல் அலை அலையான)நெறிப்பு உள்ள மயிரினையுடைய (மலை)இடைச்சியர் பாடலோசையும்;

வசிவு

வசிவு – (பெ) பிளத்தலால் உண்டாகும் வடு, scar due to splitting
வானம் மின்னு வசிவு பொழிய ஆனாது – மலை 97
மேகம் மின்னாகிய பிளந்து வசிப்படுதலோடே பெய்கையினாலே

வசை

வசை – 1. (வி) பழி, திட்டு, இழிசொல்கூறு, make slanderous remarks
– 2. (பெ) 1. பழிப்பு, இழிசொல், திட்டு, abuse, blame, calumny
2. குற்றம், fault, defect
1.
பிழையா விளையுள் நாடு அகப்படுத்து
வையா மாலையர் வசையுநர் கறுத்த
பகைவர் தேஎத்து ஆயினும்
சினவாய் ஆகுதல் இறும்பூதால் பெரிதே – பதி 32/14-17
தவறாத விளைச்சலையுடைய நாடுகளைக் கைப்பற்றி,
ஒரு பொருட்டாக மதிக்கத்தகாத இயல்பினரும், வசைமொழியே பேசுபவரும் ஆகிய உன்னால் வெகுளப்பட்ட
பகைவரின் நாட்டில் இருப்பினும்,
சினங்கொள்ளாது இருக்கிறாய்! எனக்குண்டாகும் வியப்பு பெரியது!
2.1
வருநர்க்கு வரையா வசை இல் வாழ்க்கை – புறம் 10/8
விருந்தினர்க்கு மிகுதி குறைபடாமல் வழங்கும் பழி தீர்ந்த மனை வாழ்க்கையை
2.2
வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின் – பெரும் 35
வலம்புரி(ச் சங்கை) ஒத்த, குற்றம் தீர்ந்த தலைமையினையும்,

வச்சியம்

வச்சியம் – (பெ) வசியம், the magic art of subjugating others
வச்சிய மானே மறலினை மாற்று – பரி 20/84
வசிகரிக்கும் மானே! இவ்வாறு எதிர்த்து உரையாடுவதை மாற்றிக்கொள்

வச்சிரத்தான்

வச்சிரத்தான் – (பெ) இந்திரன், Lord Indra
அச்சிரக்கால் ஆர்த்து அணி மழை கோலின்றே
வச்சிரத்தான் வானவில்லு – பரி 18/38,39
முன்பனிக் காலத்தில் ஆரவாரித்துடன் அழகிய மேகம் தோற்றுவித்தது
இந்திரனின் வானவில்லை;

வச்சிரத்தோன்

வச்சிரத்தோன் – (பெ) இந்திரன், Lord Indra
அணங்கு உடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும்
கணம்_கொள் பல் பொறி கடும் சின புகரும் – கலி 105/15,16
வருத்தத்தை உண்டாக்கும் வச்சிரப்படையையுடைய இந்திரனின் ஆயிரம் கண்களைப் போன்றிருக்கும்
பேரளவிலான பலவித புள்ளிகளைக் கொண்ட பெருங்கோபமுள்ள புகர்நிறக் காளையும்,

வச்சிரம்

வச்சிரம் – (பெ) வச்சிராயுதம், இரு பக்கமும் கூர்நுனியும், நடுவில் கைப்பிடியும் உள்ள ஓர் ஆயுதம்
Thunderbolt, a weapon sharp-edged at both ends and held in the middle
வச்சிர தட கை நெடியோன் கோயிலுள் – புறம் 241/3
வச்சிராயுதத்தையுடைய விசாலமாகிய கையையுடைய இந்திரனது கோயிலுள்ளே

வஞ்சன்

வஞ்சன் – (பெ) ஒரு சேர மன்னன், a chEra king
வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன்
நகைவர் குறுகின் அல்லது பகைவர்க்கு
புலியினம் மடிந்த கல் அளை போல
துன்னல் போகிய பெரும் பெயர் மூதூர்- புறம் 398/8-11
அவரவர் வரிசை அறிந்து புரவுக்கடன் செலுத்திய வாய்மையே மொழியும் சேரமான் வஞ்சனுடைய
இன்பம் செய்பவராகிய பாணர் முதலாயினோரும் நட்புடைய வேந்தராயினோரும் செல்ல இயலுதலன்றி பகைவருக்கு
புலியினம் கிடந்துறங்கும் கல்முழைஞ்சு போல
நெருங்குதற்கு ஆகாத பெரும் பெயரையுடைய மூதூர்

இவன் இப்பாடலில் பறை இசை அருவி பாயல் கோ எனப்படுகிறான்.
பாயல் என்பது ஒரு மலையின் பெயர். அதுவே இவன் ஆண்ட பகுதிக்கு ஆகி, இவனது நாடு பாயல் நாடு
எனப்பட்டது. அது இப்போது வயநாடு எனப்படுகிறது. இவனது ஆட்சி வடக்கே பாயல் நாட்டிலிருந்து தெற்கே
திருவிதாங்கூர் அரசைச் சேர்ந்த அஞ்சனாடு முடிய இருந்தது. இச் சேரமான் தொகை நூல்கலுள் காணப்படும்
சேர வேந்தருள் மிகவும் பழையோன் என்பர் ஔவை.சு.து.அவர்கள்.

வஞ்சம்

வஞ்சம் – (பெ) 1. வஞ்சகம், தந்திரம், cunning
2. வஞ்சகம், ஏமாற்று, deceit, cheating
3. பொய், lie, falsehood
1.
நெஞ்சத்த பிற ஆக நிறை இலள் இவள் என
வஞ்சத்தான் வந்து ஈங்கு வலி அலைத்தீவாயோ – கலி 69/14,15
நெஞ்சத்துள் பிற எண்ணங்களை வைத்துக்கொண்டு, இவள் உறுதிப்பாடான மனத்தினள் அல்லள் என்று
வஞ்சகமாய் வந்து இங்கு என் மனவலிமையை வருத்துவாயோ!
2
யார் இவன் எம் கூந்தல் கொள்வான் இதுவும் ஓர்
ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து எம் மனை
வாரல் நீ வந்து ஆங்கே மாறு
என் இவை ஓர் உயிர் புள்ளின் இரு தலையுள் ஒன்று
போர் எதிர்ந்த அற்றா புலவல் நீ கூறின் என்
ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது
ஏஎ தெளிந்தேம் யாம் காயாதி எல்லாம் வல் எல்லா
பெரும் காட்டு கொற்றிக்கு பேய் நொடித்து ஆங்கு
வருந்தல் நின் வஞ்சம் உரைத்து – கலி 89/1-9
யார் இவன், எம் கூந்தலைப் பற்றுபவன்? இதுவும் ஒரு
நாட்டாமை(அதிகாரமுள்ள துடுக்குத்தனம்) போன்ற கொடுமையைக் கொண்டது, என் வீட்டுக்கு
வரவேண்டாம், நீ வந்த வழியே திரும்பிச் செல்;
என்ன இது? ஒரு உயிரும் இரு தலையும் கொண்ட சிம்புள் பறவையின் இரு தலைகளில் ஒன்று
மற்றொன்றுடன் சண்டைக்கு வந்தது போல் வெறுப்பு மொழிகளை நீ கூறினால் என்னுடைய
அருமையான உயிர் நிற்கும் வழி என்ன?
ஏடா! எமக்குத் தெரியும்! வெகுளவேண்டாம்! எதையும் செய்ய வல்லவனே!
பெரிய காட்டிலிருக்கும் கொற்றவைக்குப் பேய் வந்து குறி சொன்னாற்போல,
உன்னை நீ வருத்திக்கொள்ளாதே உன் வஞ்சகமொழிகளை உரைத்து.
3.
ஆய் மலர் புன்னை கீழ் அணி நலம் தோற்றாளை
நோய் மலி நிலையளா துறப்பாயால் மற்று நின்
வாய்மை கண் பெரியது ஓர் வஞ்சமாய் கிடவாதோ – கலி 135/9-11
அழகிய மலர்களையுடைய புன்னை மரத்தடியில் உன்னிடம் தன் அழகிய நலத்தை இழந்தவளைக்
காமநோய் மிகுந்த நிலையினளாய் மாற்றிவிட்டு அவளைக் கைவிடுவாயேல், அது உன்
வாய்மையே வழங்கும் வாழ்க்கையில் பொய்யும் இடம்பெற்றதாய் முடியாதா?

வஞ்சி

வஞ்சி – (பெ) 1. ஒரு மரம்/பூ, Glabrous mahua of the Malabar coast. Bassia malabarica;
ஆற்றிலுப்பை, Madhuca neriifolia
2. சேர மன்னரின் தலைநகர், இது இன்றைய கரூர் என்பர்,
the capital city of cEra kings, the present city of Karur
3. வஞ்சித்திணை என்ற ஒரு புறத்திணை, a theme in ‘puRam’
1.
வஞ்சி பித்திகம் சிந்துவாரம் – குறி 89
வஞ்சிப்பூ, பிச்சிப்பூ, கருநொச்சிப்பூ,

வஞ்சி ஓங்கிய யாணர் ஊர – ஐங் 50/2
வஞ்சி மரங்கள் ஓங்கி வளர்ந்த புதுவருவாய் உள்ள ஊரனே!

நாண் கொள் கோலின் மீன் கொள் பாண்மகள்
தான் புனல் அடைகரை படுத்த வராஅல்
நார் அரி நறவு உண்டிருந்த தந்தைக்கு
வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும் – அகம் 216/1-4
கயிற்றினைக் கொண்ட நுண்ணிய தூண்டிற்கோலால் மீனைப் பிடிக்கும் பாணரது மகள்
புனலை அடுத்த கரையில் அகப்படுத்திய வரால் மீனை
பன்னாடையால் அரிக்கப்பெற்ற கள்ளை உண்டு களித்திருந்த தன் தந்தைக்கு
வஞ்சி மரத்தின் விறகினால் சுட்டு வாயில் உண்பிக்கும்

நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய
விடியல் வந்த பெரு நீர் காவிரி – அகம் 226/9,10
நீண்ட வெள்ளிய மருதமரத்துடன் வஞ்சி மரத்தையும் சாய்த்து
நாட்காலையில் வந்த மிக்க வெள்ளத்தையுடைய காவிரியிடத்தே

மென்பாலான் உடன் அணைஇ
வஞ்சி கோட்டு உறங்கும் நாரை – புறம் 384/1,2
மென்புலமான மருதவயற்கண் தன் இனத்துடனே மேய்ந்துண்டு
வஞ்சி மரத்தின் கிளையின்கண் தங்கி உறங்குதலைச் செய்யும் நாரை

2.
ஒளிறு வேல் கோதை ஓம்பி காக்கும்
வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க – அகம் 263/11,12
ஒளிவீசும் வேலையுடைய சேரன் பாதுகாத்து ஆளும்
வஞ்சி போன்ற எனது வளம் பொருந்திய மனைசிறப்புற்று விளங்க

புல் இலை வஞ்சி புற மதில் அலைக்கும்
கல்லென் பொருநை மணலினும் – புறம் 387/33,34
இலை இல்லாத வஞ்சியாகிய வஞ்சிமாநகரின் மதிற்புறத்தை அலைக்கும்
கல்லென்னும் ஓசையையுடைய ஆன்பொருநையாற்று மணலினும்
3.
வீயா சிறப்பின் வேள்வி முற்றி
யூபம் நட்ட வியன் களம் பலகொல்
யா பல கொல்லோ பெரும வாருற்று
விசி பிணி கொண்ட மண்கணை முழவின்
பாடினி பாடும் வஞ்சிக்கு
நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே – புறம் 15/20-25
கெடாத தலைமையுடைய யாகங்களை முடித்து
தூண் நடப்பட்ட அகன்ற வேள்விச்சாலைகள் பலவோ
இவற்றுள் யாவையோ பல பெருமானே, வார் பொருந்தி
வலித்துக் கட்டுதலைப் பொருந்திய மார்ச்சனை செறிந்த தண்ணுமையையுடைய
விறலி பாடும் வஞ்சித்திணைப் பாடலுக்கு ஏற்ப
ஆராய்தல் அமைந்த வலிமையுடையோய் நினக்கு

பாடினி பாடும் வஞ்சி என்றது படையெடுத்துச் சென்ற சிறப்பைப் பாடினி பாடினள் என்பதாம். வஞ்சித்திணை என்பது
படையெடுத்துச் செல்லும் இயல்பு.

வஞ்சி-தானே முல்லையது புறனே
எஞ்சா மண் நசை வேந்தனை வேந்தன்
அஞ்சு தக தலை சென்று அடல் குறித்தன்றே – தொல்-பொருள்-புறத்-6,7

என்பது தொல்காப்பியம். மண்ணாசை கொண்ட ஒரு வேந்தனை, இன்னொரு வேந்தன், அவன் அஞ்சுமாறு
படையெடுத்துசென்று அவனை அழித்தல். இவ்வாறு படையெடுத்துச் செல்லுதலை மேற்செலவு என்பர்.
இதனைப் பாடுவது வஞ்சிப் பாடல் ஆகும்.

வஞ்சினம்

வஞ்சினம் – (பெ) சூளுரை, சபதம், oath, swearing
வினை_வயின் பிரிந்த வேறுபடு கொள்கை
அரும்பு அவிழ் அலரி சுரும்பு உண் பல் போது
அணிய வருதும் நின் மணி இரும் கதுப்பு என
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உண கூறி – நற் 214/3-6
பொருளீட்டும்பொருட்டுப் பிரிந்து சென்ற நம்மிடம் வேறுபட்ட கொள்கையுடனே,
அரும்புகள் அவிழ்ந்து மலராகிச் சுரும்புகள் தேனைப் பருகும் பலவான மலர்களை
சூடுவதற்கு வருவேன் உன் நீலமணி போன்ற கரிய கூந்தலில் என்று
குறைவற்ற சூளுரைகளை என் மனம் கொள்ளுமாறு கூறி

வடகுன்றம்

வடகுன்றம் – (பெ) இமயமலை, வேங்கடமலை, Mount Himalayas, Mount vEnkaTam
தென் பௌவத்து முத்து பூண்டு
வடகுன்றத்து சாந்தம் உரீஇ – புறம் 380/1,2
தெற்குக் கடலில் குளித்தெடுத்த முத்துமாலை சூடி
வடமலையிற் பெற்ற சந்தனத்தை அணிந்து

– வடமலை என்றது இமயமலையை. வேங்கடமலையுமாம் – ஔவை.சு.து.உரை, விளக்கம்

வடவர் தந்த வான் கேழ் வட்டம்
தென் புல மருங்கில் சாந்தொடு துறப்ப – நெடு 51,52
வடநாட்டவர் கொண்டுவந்த வெண்மை நிற வட்டக்கல்
தென் நாட்டு ஓரத்து(பொதிகை மலை) சந்தனத்துடன் (பயன்படாமல்)கிடப்ப;

வடவர் தந்த வான் கேழ் வட்டம்
குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
வண்டு இமிர் நறும் சாந்து அணிகுவம் – அகம் 340/16-18
வடநாட்டிலுள்ளோர் கொணர்ந்த வெள்ளிய நிறத்தையுடைய வட்டக்கல்லில்
குடமலையாயபொதியில் சந்தனக் கட்டையால் பிற மணப் பொருள்களையும் கூட்டி உண்டாக்கிய
வண்டுகள் ஒலிக்கும் நறிய சாந்தினை அணிவிப்பேம்

என்று தென்புல சந்தனம்தான் விதந்து ஓதப்படும். இந்தத் தென்புல சந்தனத்தை அரைக்க
வடவர் தந்த வெண்ணிறக் கல் (பளிங்குக்கல்?) பயன்பட்டதாக அறிகிறோம்..

ஆனால் இந்தப் புறப்பாடலில் வடக்கிலிருந்து சந்தனம் வந்ததாகப் புலவர் கூறுகிறார்.

வடக்கிரு

வடக்கிரு – (வி) ஒரு காரணமாக உயிர்துறக்கத் துணிந்து உண்ணாநோன்பு மேற்கொண்டு வடக்கு நோக்கு
அமர்ந்திரு,
sit facing north, taking a vow of fasting to death
தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
புறப்புண் நாணி மறத்தகை மன்னன்
வாள் வடக்கிருந்தனன் ஈங்கு – புறம் 65/9-11
தன்னை ஒக்கும் வேந்தன் முன்னாகக் கருதி எறிந்த
புறத்துற்ற புண்ணுக்கு நாணி, மறக்கூறுபாட்டையுடைய மன்னன்
வாளோடு வடக்கிருந்தான்

வடந்தை

வடந்தை – (பெ) 1. வடக்கிலுள்ளது, that which is in north
2. வட காற்று, வாடை, north wind
1.
வடந்தை தண் வளி எறி-தொறும் நுடங்கி
தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல்
பாண்டில் விளக்கில் பரூஉ சுடர் அழல – நெடு 173-175
வடக்கிலிருந்து வரும் குளிர்ந்த காற்று அடிக்குந்தோறும் நெளிந்து அசைந்து,
தெற்கு நோக்கி எழுந்து சாய்ந்த தீச்சுடரையுடையவாய், நன்றாகிய பலவான
பாண்டில் விளக்கில் பருத்த தீக்கொழுந்து எரிய,
2.
தண் பனி வடந்தை அச்சிரம் – ஐங் 223/4
குளிர்ந்த பனியோடே சேர்ந்த வாடையுடன் கூடிய முன்பனிக்காலத்தையும்

வடபெருங்கல்

வடபெருங்கல் – (பெ) இமயமலை, Mount Himalayas
தென் குமரி வடபெருங்கல்
குண குட கடலா எல்லை
தொன்று மொழிந்து தொழில் கேட்ப – மது 70-72
தெற்கே குமரியும், வடக்கே பெரிய இமயமும்,
கிழக்கிலும் மேற்கிலும் கடல்களும் எல்லையாக உள்ள (வேந்தர்கள்)
(தத்தம்)பழைமையான தொடர்புகளைக் கூறி, ஏவிய வழி ஒழுக,

தென் குமரி வடபெருங்கல்
குண குட கடலா எல்லை
குன்று மலை காடு நாடு
ஒன்றுபட்டு வழிமொழிய – புறம் 17/1-4
தென்திசைக்கண் கன்னியும் வடதிசைக்கண் இமயமும்
கீழ்த்திசைக்கண்ணும் மேற்றிசைக்கண்ணும் கடலும் எல்லையாக
நடுவுட்பட்ட நிலத்துக் குன்றமும் மலையும் காடும் நாடும்
ஒருபெற்றிப்பட்டு வழிபாடு கூற

குண குட கடல் என்றாற் போலக் குமரிக்கண் கடல் கூறப்படாமையால் குமரி கடல்கோள்படுதற்கு முன்னையது
இப்பாடலென்பது தெளிவாகும் – ஔவை.சு.து.விளக்கம்

வடமலை

வடமலை – (பெ) இமயமலை, Mount Himalayas
வடமலை பிறந்த மணியும் பொன்னும் – பட் 187
இமயமலையில் பிறந்த மாணிக்கமும், பொன்னும்,

வடமீன்

வடமீன் – (பெ) வசிட்டரின் மனைவியாகிய அருந்ததியின் பெயரிலுள்ள நட்சத்திரம்,
Arunthathi, Name of the wife of Vasiṣṭha, considered a paragon of chastity
The scarcely visible star Alcor of the great Bear, supposed to be Arundhati transformed;
வடமீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள் – கலி 2/21
அருந்ததி போல் வணங்கி வழிபடக்கூடிய பிறரால் போற்றுதற்குரிய கற்பினையுடைய இவளின்

வடமீன் புரையும் கற்பின் மட மொழி – புறம் 122/8
வடதிசைக்கண் தோன்றும் அருந்ததியை ஒக்கும் கற்பினையும் மெல்லிய மொழியினையுமுடைய

வசிட்டரும் அருந்ததியும் (Mizar and Alcor) சப்தரிசி மண்டலத்தின் ஒரு பகுதியான விண்மீன் குழுவாகும்.
சப்தரிசி மண்டலம் வடக்கு வானில் இரவு நேரத்தில் மிக எளிதாக அடையாளம் காணக்கூடிய நட்சத்திரக்
கூட்டங்களில் ஒன்று.
வானியலில் வசிட்டர் நட்சத்திரம் மிஸார் எனவும், அருந்ததி அல்கோர் எனவும் அழைக்கப்படுகிறது.
சப்தரிசி மண்டலத்தின் முதல் இரண்டு நட்சத்திரங்களான துபே, மெராக்சையும் இணைக்கும் கற்பனைக்கோடு
தற்போதுள்ள துருவ நட்சத்திரமான போலாரிஸ்- ஐக் காட்டுகிறது. பூமியின் சுழற்சி அச்சு இதனை நோக்கித் தான்
அமைந்துள்ளது. இதனால் மற்ற நட்சத்திரங்கள் பூமியின் நகர்வுக்கு ஏற்ப இடம் மாறினாலும்
துருவ நட்சத்திரம் ஒரே இடத்தில் தான் இருக்கும். அருந்ததியும் துருவமீனுக்கு வெகு அருகாமையில் இருப்பதால்
ஏறக்குறைய இடமாற்றம் இல்லாமல் இருக்கும்.

வடமொழி

வடமொழி – (பெ) சமஸ்கிருத மொழி, sanskrit language
தேம் படு கவுள சிறு கண் யானை
ஓங்கு நிலை கரும்பொடு கதிர் மிடைந்து யாத்த
வயல் விளை இன் குளகு உண்ணாது நுதல் துடைத்து
அயில் நுனை மருப்பின் தம் கை இடை கொண்டென
கவை முள் கருவியின் வடமொழி பயிற்றி
கல்லா இளைஞர் கவளம் கைப்ப – முல் 31-37
மதம் பாய்கின்ற கதுப்பினையும் சிறிய கண்ணையும் உடைய யானை
உயர்ந்து நிற்றலையுடைய கரும்புகளுடன் (நெற்)கதிரைச் செறிந்து கட்டிப்போட்ட
வயலில் விளைந்த இனிய (அதிமதுரத்)தழையைத் உண்ணாது, (அவற்றால் தம்)நெற்றியைத் துடைத்து,
கூர்மையான முனையுடைய கொம்புகளில் (வைத்த)தம் துதிக்கையில் கொண்டு நின்றனவாக,
கவைத்த முள்ளையுடைய பரிக்கோலால் குத்தி, (யானைப் பேச்சான)வடசொற்களைப் பலகாலும் சொல்லி,
(வேறொரு தொழிலைக்)கல்லாத இளைஞர் கவளத்தை ஊட்டிவிட

வயக்கு_உறு மண்டிலம் வடமொழி பெயர் பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்
ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா – கலி 25/1-3
ஒளிமிக்க ஞாயிற்று மண்டிலத்துக்குரிய வடமொழிப் பெயரான பகன் என்ற கண்ணற்றவனின்
முகத்தைக்கொண்டவனான திருதராட்டிரனின் மக்களுள் மூத்தவனின் சூழ்ச்சியால்
ஐவர் என்று உலகம் போற்றும் அரசர்கள் உள்ளேயிருக்க,

வடவனம்

வடவனம் – (பெ) ஒரு மரம் / பூ, a species of tree/flower
வடவனம் வாகை வான் பூ குடசம் – குறி 67
வடவனம், வாகை, வெண்ணிறப் பூவுடைய வெட்பாலைப்பூ,

கபிலர் இயற்றிய குறிஞ்சிப்பாட்டு என்னும் பத்துப்பாட்டு நூலில், குறிஞ்சி நில மகளிர் குவித்துவிளையாடியதாகக்
கூறும் 99 மலர்களின் தொகுப்பில் அது இடம்பெற்றுள்ளது. இது துளசி என்பர். துளசி எனப்படும் துழாஅய்
என்னும் மலரும் 99 மலர்களில் ஒன்றாக எண்ணப்படுவதால் வடவனம் என்னும் மலரைத் துளசி என
அறிஞர்கள் காட்டுவதை ஏற்க இயலவில்லை. துளசியில் செந்துளசி, கருந்துளசி என இரண்டு வகை உண்டு.
செந்துளசி என்னும் சொல்லிலுள்ள செம்மை செந்நிறத்தைக் குறிப்பது அன்று. செம்பொருள் என்னும்
சொல்லிலுள்ள செம்மை என்பது உண்மை என்னும் பொருளை உணர்த்துவது போல உண்மையான துளசி
எனப் பொருள்படுவது. வடவனம் கருந்துளசி மலரைக் குறிப்பதாகலாம்.
– விக்கிப்பீடியா – https://ta.wikipedia.org/wiki/வடவனம்

இதனைப் பற்றிய குறிப்பு வேறு சங்க நூல்களில் இல்லை.

வடவனம் – ஆலமரம் – Indian banyan – Ficus benghalensis என்பார் உளர்.

வடவனம் என்பது திருநீற்றுப்பச்சை என்பார் சிலர்.
http://vaiyan.blogspot.com/2015/10/vadavanam-kurinjipattu.html

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலர் (பக். 441) வடவனம் என்று அடியிற்கண்ட பூவைக் குறிப்பிடுகிறது.

வடவரை

வடவரை – (பெ) வடமலை, இமயமலை, Mount Himalayas
தொன்று முதிர் வடவரை வணங்கு வில் பொறித்து – அகம் 396/17
பழையதாகிய முதிர்ந்த இமயமலையின் மீது வளைந்த விற்பொறியைப் பதித்து

வடாது

வடாது – (பெ) வடக்கில் உள்ளது, That which is in the north
வடாஅது
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை – அகம் 59/3,4
வடக்குத் திசையில் உள்ள
வளமிக்க நீருள்ள யமுனை ஆற்றின் நீண்ட மணலையுடைய அகன்ற துறையில்

வாணன் சிறுகுடி வடாஅது
தீம் நீர் கான்யாற்று அவிர் அறல் போன்றே – அகம் 117/18,19
வாணனது சிறுகுடி என்னும் ஊர்க்கு வடக்கின்கண் உள்ள
இனிய நீரினையுடைய காட்டாற்றின் விளங்கும் அறல்போன்று

வடாஅது பனி படு நெடு வரை வடக்கும் – புறம் 6/1
வடக்கின்கண்ணது பனிதங்கிய நெடிய

வடி

வடி – 1. (வி) 1. தட்டையாக்கு, flatten out
2. அச்சில் வார், cast, mould
3. திருத்தமாகச் செய், ஆக்கு, make perfectly
4. கிள்ளியெடு, pluck, nip
5. யாழ் நரம்பைத் தடவு, stroke with the fingers over the strings of yazh, the lute
6. ஒழுகு, வழி, drip, trickle
7. அழகுபெறு, become beautiful
8. வடியச் செய், பிழிந்துவிடு, drain, squeeze out
9. தலைமுடியை வாரிவிடு, comb and tie up the hair
10. திருந்து, be perfected
– 2. (பெ) 1. மாவடு, மாம்பிஞ்சு, tender green mango
2. தேன், honey
3. தலைமுடியை வாரி முடித்தல், combing and tying up the hair
4. கூர்மை, sharpness
1.1
இரும்பு வடித்து அன்ன மடியா மென் தோல் – பெரும் 222
இரும்பைத் தகடாக்கினாற் போல் சுருக்கமில்லாத மெல்லிய தோலினையும் உடைய
1.2
இரும்பு வடித்து அன்ன கரும் கை கானவன் – அகம் 172/6
இரும்பினை வார்த்துச் செய்தாற் போன்ற வலிய கையினையுடைய வேட்டுவன்

வடி மணி பலகையொடு நிரைஇ முடி நாண்
சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர் – பெரும் 120,121
வார்த்த மணி (கட்டின)பலகைகளோடு வரிசையில் வைத்து, (தலையில்)முடிந்த நாணையுடைய
வில்லைச் சார்த்தி வைத்த அம்புகள் தங்கும் அகன்ற வீடுகளையும்;
1.3
வேல் வடித்து கொடுத்தல் கொல்லற்கு கடனே – புறம் 312/3
வேல் முதலிய கருவிகளைத் திருத்தமாகச் செய்து கொடுத்தல் கொல்லர்களின் கடமை
1.4
மாஅத்து
கிளி போல் காய கிளை துணர் வடித்து
புளி_பதன் அமைத்த புது குட மலிர் நிறை – அகம் 37/7-9
மாமரத்தில்
கிளி(மூக்கு) போன்ற காய்களைக் கொண்ட கிளை(யில் தொங்கும்) கொத்துக்களைக் கிள்ளி எடுத்து
புளிப்புச் சுவை சேர்த்துப் புதுக்குடங்களில் விளிம்புதட்ட நிறைத்ததை,
1.5
ஆறலை கள்வர் படை விட அருளின்
மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை
வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும்
சீர் உடை நன் மொழி நீரொடு சிதறி – பொரு 21-24
வழி(ப்போவாரை) அலைக்கின்ற கள்வர் (தம்)படைக்கலங்களைக் கைவிடும்படி செய்து, அருளின்
மாறாகிய மறப்பண்பினை (அவரிடத்திலிருந்து)அகற்றுகின்ற மருவுதல் இனிய பாலை யாழை –
(நரம்புகளை)(சுட்டுவிரலால்)தெறித்தும், (பெருவிரலும் சேர்த்து)உருவியும், உந்திவிட்டும், ஒன்றுவிட்டுத் தெறித்தும்,
சீர்களை உடைய பண்ணை நீர்மையுடன் பரப்பி –
1.6
நெடியோன்_மகன் நயந்து தந்து ஆங்கு அனைய
வடிய வடிந்த வனப்பின் என் நெஞ்சம்
இடிய இடை கொள்ளும் சாயல் ஒருத்திக்கு – கலி 140/8-10
திருமால் மகனாகிய மன்மதன் விரும்பித் தந்ததைப் போன்று அப்படிப்பட்ட
ஒழுக ஒழுகும் பேரழகினையுடைய, என் நெஞ்சம் என்ற அரண்
இடிந்துபோகும்படி நடுவே வந்து என்னை ஆட்கொள்ளும் சாயலையுடைய ஒருத்திக்கு
– வடிய வடிந்த வனப்பு – ஒழுக ஒழுகும் பேரழகு – நச். உரைக்கு, பொ.வே.சோ. விளக்கம்
1.7
வடு இன்றி வடிந்த யாக்கையன் கொடை எதிர்ந்து – புறம் 180/6
ஆண்மைக் குறைபாடு இன்மையின் வசை இன்றி அழகுபெற்ற உடம்பை உடையனாய்
1.8
நீர் அலை கலைஇய கூழை வடியா
சாஅய் அம் வயிறு அலைப்ப உடன் இயைந்து
ஓரை மகளிரும் ஊர் எய்தினரே – நற் 398/3-5
நீராடியதால் அலைக்கப்பட்டுக் கலைந்துபோன கூந்தலின் நீரைப் பிழிந்து வடித்துவிட்டு
சுருக்கி முடித்து, அழகிய வயிறு குலுங்க ஒன்றுசேர்ந்து
ஓரை விளையாடிய மகளிரும் ஊருக்குத் திரும்பிவிட்டனர்;
1.9
வணர்சுரி
வடியா பித்தை வன்கண் ஆடவர் – அகம் 161/1,2
வளைந்து சுருண்ட
கோதப்பெறாத மயிரினையுடைய கொடிய மறவர்
1.10
வள்ளியோர் படர்ந்து புள்ளின் போகி
நெடிய என்னாது சுரம் பல கடந்து
வடியா நாவின் வல்லாங்கு பாடி
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கை – புறம் 47/1-6
வண்மையுடையோரை நினைத்து பழுமரம் தேரும் பறவை போலப் போகி
நெடிய என்று கருதாது அரிய வழி பலவற்றையும் கடந்து
திருந்தாத நாவால் தம் வல்லபடி பாடி
ஆண்டுப் பெற்ற பரிசிலால் மகிழ்ந்து சுற்றத்தை ஊட்டி
தாமும் பொருளைப் பாதுகாவாது உண்டு, உள்ளம் கூம்பாமல் வழங்கி
தம்மைப் புரப்போராற் பெறும் சிறப்பு ஏதுவாக வருந்தும் இப் பரிசிலால் வாழும் வாழ்க்கை
2.1
நெடு மர கொக்கின் நறு வடி விதிர்த்த
தகை மாண் காடியின் வகைபட பெறுகுவி – பெரும் 309,310
நெடிய மரமாகிய மாவின் நறிய வடுவினைத் துண்டாக்கிப்போட்ட,
ஊறவைத்தல் நன்கமைந்த ஊறுகாயோடும் வகை வகையாகப் பெறுவீர்
2.2
வடி சேறு விளைந்த தீம் பழ தாரம் – மலை 513
தேன் போன்ற சதைப்பற்று முதிர்ந்த இனிய பழங்களாகிய அரும்பண்டங்களும்,
2.3
வடி கொள் கூழை ஆயமோடு ஆடலின் – நற் 23/2
வாரி முடித்த கூந்தலையுடையவள் தோழியரோடு ஆடியதால்
2.4
வடி நவில் அம்பின் வினையர் – நற் 48/7
கூர்மை பயின்ற அம்பினால் செய்யும் கொடுந்தொழிலையுடையோராய்

வடிம்பு

வடிம்பு – (பெ) 1. விளிம்பு, border edge
2. நெம்புகோல், lever
3. முனை, extremity
1.
நெடும் தொடர் குவளை வடிம்பு உற அடைச்சி – மது 588
நெடிய தொடராகவுள்ள குவளை மலர்களை வடிம்பிலே விழும்படி செருகி
வடிம்பு – ஈண்டு அடிகளின் விளிம்பு – பொ.வே.சோ உரை விளக்கம்

களிறு கடைஇய தாள்
மா உடற்றிய வடிம்பு
சமம் ததைந்த வேல் – பதி 70/1-3
களிறுகளைச் செலுத்திய கால்களையும்,
குதிரைகளைப் போரிடுவதற்குச் செலுத்திய காலின் விளிம்பினையும்,
பகைவரின் போரைச் சிதைத்த வேலினையும்,
– குதிரை மேலிருந்து பொரும் குதிரை வீரர் தம் தாளின் (காலின் அடிப்பகுதி) அக விளிம்பால் அவற்றிற்குத் தம்
குறிப்பை உணர்த்திச் செலுத்துபவாகலின் அச் சிறப்பு நோக்கி மா உடற்றிய வடிம்பு என்றார்.
வடிம்பு – தாளின் விளிம்பு – ஔவை.சு.து.உரை விளக்கம்.
2.
கடு மா கடைஇய விடு பரி வடிம்பின்
நல் தார் கள்ளின் சோழன் கோயில் – புறம் 378/4,5
கடுகிச் செல்லும் குதிரையைச் செலுத்தற்கென்று காலில் இடப்பெற்ற பரிவடிம்பு என்னும் காலணியும்
நல்ல தாரினையும், கள்ளினையுமுடைய சோழவேந்தனின் அரண்மனை
– பரி வடிம்பு – குதிரை இவர்ந்து செல்பவர் அதனை விரையச் செலுத்தற்பொருட்டுக் காலில் அணியும் இரும்பு;
இது வடிம்பு போறலின் வடிம்பு எனப்பட்டது.
– ஔவை.சு.து.உரை,விளக்கம்
3.
ஏற்று எருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு – கலி 103/43
எருமைக்கடாவில் வருகின்ற கூற்றுவனின் நெஞ்சத்தைக் கால்நுனியால் பிளந்திட்டு

வடு

வடு – (பெ) 1. புண்ணினால் ஏற்பட்ட தழும்பு, காய்த்துப்போனதால் ஏற்பட்ட தழும்பு, cicatrice, scar
2. பழி, disgrace
3. குற்றம், கறை, defect, blemish
4. கருமணல், fine black sand
5. காயத்தின் வாய், mouth of a wound
6. உளியாற்செதுக்கின உரு, chiselled figure
7. தடம், சுவடு, imprint, mark
8. மாவடு, மாம்பிஞ்சு, tender green mango
1.
வை_நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் – திரு 78
கூரிய நுனி(யையுடைய தோட்டி) வெட்டின வடு அழுந்தின புகரையுடைய நெற்றியில்

மிரியல்
புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து
அணர் செவி கழுதை – பெரும் 78-80
மிளகின்
ஒத்த கனமாகச் சேர்ந்த சுமையைத் தாங்கிக் காய்த்துப்போன தழும்பு அழுந்தின வலிமையான முதுகினையும்,
உயர்த்திய செவியினையும் உடைய கழுதை
2.
மறு இன்றி விளங்கிய வடு இல் வாய் வாள் – சிறு 121
குற்றமின்றி விளங்கிய, பழி இல்லாத, (தன் தொழில் நன்கு)வாய்க்கும் வாளினையுடைய
3.
வடு இன்று நிறைந்த மான் தேர் – நற் 130/1
குற்றமின்றி நல்லிலக்கணங்கள் நிறைந்த குதிரைகளைப் பூட்டிய தேரில்
4.
வடு வாழ் எக்கர் மணலினும் பலரே – மலை 556
கருமணல் இருக்கும் மணல்மேடுகளிலுள்ள மணலினும் பலரே
5.
புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல்
வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை – சிறு 181,182
புலால் நாறும் கயலை(முழுகி) எடுத்த பொன்(னிறம் போலும்) வாயையுடைய (நீல)மணி(போன்ற) மீன்கொத்தியின்
பெரிய நகம் கிழித்த காயத்தினால் ஏற்பட்ட கிழிசல் அழுந்தின பசிய இலையினுடைய
6.
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு – சிறு 252
கூரிய சிற்றுளிகள் சென்று செத்திய உருவங்கள் அழுந்தின, வலிமையான, அச்சுக்குடத்தில்
7.
நுண் பூண் ஆகம் வடு கொள முயங்கி – மது 569
நுண்ணிய அணிகலன்களையுடைய மார்பைத் (தம் மார்பில்) தடம்பதியும்படியாகத் தழுவி
8.
வடு கொள் மாஅத்து வண் தளிர் நுடங்கும் – ஐங் 14/2
பிஞ்சுகள் தோன்றிய மா மரத்தின் வளமையான தளிர்கள் மடங்கி அசையும்

வடுகர்

வடுகர் – (பெ) தெலுங்கர், People of the Telugu country
இந்த வடுகர் யார் என்பது பற்றியும், அவரது வாழ்வுமுறை பற்றியும் சங்க இலக்கியங்கள் விரிவாகக்
கூறுகின்றன.
1.
இந்த வடுகர் வேங்கட மலைக்கும் வடக்கில் உள்ள நாட்டைச் சேர்ந்தவர்கள்.
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர்
கொய் குழை அதிரல் வைகு புலர் அலரி
சுரி இரும் பித்தை சுரும்பு பட சூடி
இகல் முனை தரீஇய ஏறு உடை பெரு நிரை
நனை முதிர் நறவின் நாள் பலி கொடுக்கும்
வால் நிண புகவின் வடுகர் தேஎத்து
நிழல் கவின் இழந்த நீர் இல் நீள் இடை
அழல் அவிர் அரும் சுரம் நெடிய என்னாது
அகறல் ஆய்ந்தனர் – அகம் 213/3-11
உயர்ந்து தோன்றும் வெள்ளிய அருவிகளையுடைய வேங்கடமலைக்கு அப்பாலுள்ளதும்
கொய்யப்பெற்ற தழைகளையுடைய காட்டு மல்லிகையின் வைகறையில் அலரும் பூவினை
சுருண்ட கரிய மயிரில் வண்டு மொய்க்கச் சூடி
பகைவர் போர்முனையில் வென்றுகொண்ட ஏறுகளையுடைய பெரிய ஆனிரைக்காக
முதிர்ந்த கள்ளாகிய நறவினை விடியற்காலத்தே பலியாகச் செலுத்தும்
வெள்ளிய நிணச் சோற்றினையுடைய வடுகரது தேயத்தேயுள்ள
நிழலின் அழகை இழந்த நீர் இல்லாத நீண்ட இடத்தையுடைய
தீயின் வெப்பம் விளங்கும் அரிய காடுகள் நீண்டன என்று கருதாமல்
நம்மைப் பிரிந்துபோகத் துணிந்தனர்
2.
இவர்கள் வேட்டைநாயுடன் இருப்பர்
கடும் குரல் பம்பை கத நாய் வடுகர்
நெடும் பெரும் குன்றம் நீந்தி நம் வயின்
வந்தனர் வாழி தோழி – நற் 212/5-7
கடும் ஒலியையுடைய பம்பை எனும் பறையையும் சினங்கொண்ட நாய்களையும் கொண்ட வடுகரின்
நீண்ட பெரிய குன்றுகளைக் கடந்து நம்மிடம்
வந்துசேர்ந்தார், வாழ்க, தோழியே!

கல்லா நீள்மொழி கத நாய் வடுகர்
வல் ஆண் அரு முனை நீந்தி – அகம் 107/11,12
கல்வியில்லாத நெடுமொழி கூறும் சினம் மிக்க நாயையுடைய வடுகரது
வலிய ஆண்மை விளங்கும் அரிய போர்முனையாகிய சுரத்தினைக் கடந்து சென்று
3.
இவர்கள் வேறு மொழி பேசுபவர்கள்.
குல்லை கண்ணி வடுகர் முனையது
வல் வேல் கட்டி நன் நாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் – குறு 11/5-7
கஞ்சங்குல்லையைக் கண்ணியாக அணிந்த வடுகரின் இடத்ததாகிய
வலிய வேலையுடைய கட்டி என்பவனின் நல்ல நாட்டுக்கும் அப்பால்
மொழி வேறுபட்ட நாட்டில் உள்ளவராயினும்
4.
இவர்கள் நாடு எருமை நாடு எனப்படும். எருமை என்பான் இவர்களின் தலைவன்.
கணம் சால் கோவலர் ————- ————–
——————- —————————
துறு காழ் வல்சியர் தொழுவறை வௌவி
கன்றுடை பெரு நிரை மன்று நிறை தரூஉம்
நேரா வன் தோள் வடுகர்பெருமகன்
பேர் இசை எருமை நன்னாட்டு உள்ளதை
அயிரியாறு இறந்தனராயினும் – அகம் 253/12-20
கூட்டம் மிக்க கோவலரான —————– —
—————— – —————————-
செறிவு மிக்க உணவினரின் தொழுவாகிய அறையினைக் கவர்ந்தும்
கன்றுகளையுடைய ஆனிரையை மன்றுகள்நிறையுமாறு கொணரும்
ஒப்பில்லாத வலிய தோளினையுடைய வடுகர் தலைவனாகிய
பெரிய புகழினையுடைய எருமை என்பானது நல்ல நாட்டின்கண் உள்ளதாகிய
அயிரி என்னும் ஆற்றினைக் கடந்து சென்றனராயினும்
5.
மோரியர் தமிழ்நாட்டின் மீதுபடையெடுத்துவந்த போது அவர்களை இவர்கள் அழைத்துவந்தனர்.
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி
வான் போழ் வல் வில் சுற்றி நோன் சிலை
அம் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல்
கனை குரல் இசைக்கும் விரை செலல் கடும் கணை
முரண் மிகு வடுகர் முன் உற மோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண் உற ஓங்கிய பனி இரும் குன்றத்து
ஒண் கதிர் திகிரி உருளிய குறைத்த
அறை இறந்து அவரோ சென்றனர் – அகம் 281/4-12
நுடங்கும் தன்மையுடைய இளமை பொருந்திய மயில் கழித்த தோகையை
நீண்ட வாரினால் வலிய வில்லில்வைத்துக் கட்டி, அந்த வலிய வில்லின்
அழகிய நெடிய நாணின் விளிம்பிற்குப் பொருந்திய விரைவுத்தன்மையுடைய
மிக்க ஒலி ஒலிக்கும் விரைந்த செலவு பொருந்திய கடிய அம்புகளையுடைய
மாறுபாடு மிக்க வடுகர் தமக்கு முன்னே துணையாகி வர, மோரியர் என்பார்
தென்றிசை நாடுகளைப் பற்ற எண்ணிப் போந்த வருகைக்கு
வான் அளாய உயர்ந்த பனியுடைய பெரிய மலையினை
தமது ஒள்ளிய கதிர்களையுடைய ஆழி தடையின்றிச் செல்ல போழ்ந்து வழியாக்கிய
பாறைகளைக் கடந்து அவர் சென்றார்
6.
இவர்கள் கள் குடிப்பதில் விருப்பமுடையவர்கள்.
நோன் சிலை
தொடை அமை பகழி துவன்று நிலை வடுகர்
பிழி ஆர் மகிழர் கலி சிறந்து ஆர்க்கும்
மொழி பெயர் தேஎம் இறந்தனராயினும் – அகம் 295/14-17
வலிய வில்லில்
தொடுத்தல் அமைந்த அம்புகளின் செறிவினையுடைய வடுகர்
கள்ளினைஉண்ட மகிழ்ச்சியுடையராய் செருக்கு மிக்கு ஆரவாரிக்கும்
வேற்றுமொழி வழங்கும் தேயத்தைக் கடந்து சென்றுளாராயினும்
7.
இவர்கள் சோழநாட்டின் மீது படையெடுத்து வந்தபோது சோழமன்னன் இவர்களை முறியடித்தான்.
சோழர் பெருமகன்
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெரும் சென்னி
—————————— ——————————-
செம்பு உறழ் புரிசை பாழி நூறி
வம்ப வடுகர் பைம் தலை சவட்டி – அகம் 375/10-14
சோழர் பெருமானாகிய
என்றும் விளங்கும் புகழினை நிலைநாட்டிய இளம்பெரும் சென்னி என்பான்
———————– —————————
செம்பினை ஒத்த மதிலையுடைய பாழி என்னும் அரணை அழித்து
புதிய வடுகரது பசிய தலையைத் தறித்து
8.
இவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் குடில்களைக் கன்றின் தோல்கொண்டு வேய்ந்திருப்பார்கள்
கற்று உரி குடம்பை கத நாய் வடுகர் – அகம் 381/7
கன்றின் தோலால் ஆன கூட்டினையும் சினம் பொருந்திய நாயினையுமுடைய வடுகர்

வட்கர்

வட்கர் – (பெ) பகைவர், enemies
வட்கர் போகிய வளர் இளம் போந்தை – புறம் 100/3
பகைவர் தொலைதற்கேதுவாகிய வளரும் இளம் பனையினது

வட்கார் என்பது வட்கர் என்று ஆனது. வட்கர் என்பது குற்றம் என்ற பொருளையும் தரும்.

வட்டம்

வட்டம் – (பெ) 1. கோளம், உருண்டை, globe
2. உருள் வடிவம், circle
3. பாராவளை, சுழல்படை, திருமாலின் ஐந்து படைகளில் ஒன்று, boomerang
4. அப்பம். a kind of pastry
5. சந்தனம் தேய்த்து அரைப்பதற்கான வட்டமான கல், a round stone to grind sandal wood paste
6. ஆலவட்டம் என்னும் கைவிசிறி, circular ornamental hand fan
7. பீச்சாங்குழல், a kind of water-squirt
8. கேடயம், shield
1.
அத்த நெல்லி தீம் சுவை திரள் காய்
வட்ட கழங்கின் தாஅய் துய் தலை
செம் முக மந்தி ஆடும் – அகம் 241/13-15
பாலை வழியிலுள்ள நெல்லி மரத்தின் இனிய சுவையுடைய காய்கள் என்னும்
வட்டமான கழங்குகளைக் கொண்டு பஞ்சைப் போன்ற தலையையும்
சிவந்த முகத்தையும் உடைய மந்திகள் விளையாடும்
2.
வட்ட வரிய செம் பொறி சேவல் – புறம் 28/8
வட்டமாகிய வரியை உடைத்தாகிய செம் பொறியை உடைய காட்டுக்கோழிச் சேவல்
3.
வரி சிலை வய அம்பினவை
புகர் இணர் சூழ் வட்டத்தவை புகர் வாளவை – பரி 15/60,61
வரிந்த வில்லுடன் வெற்றி மிக்க அம்புகளையும் கொண்டிருக்கிறாய்;
புள்ளிகள் நெருக்கமாய்ச் சூழ்ந்திருக்கும் சுழல்வட்டத்தையும், புள்ளிகளுடைய வாளினையும் வைத்திருக்கிறாய்
4.
பாசிலை குருகின் புன் புற வரி பூ
கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல்
நிழல் தாழ் வார் மணல் நீர் முகத்து உறைப்ப – பெரும் 376-379
பசிய இலையினையும் உடைய குருக்கத்தியின் புற்கென்ற புறத்தினையும் வரிகளையும் உடைய பூக்கள்,
கரிய வட்டிலில் அப்ப வாணிகர் பாகுடன் பிடித்த
நூல் போலச் சூழ்ந்துகிடக்கின்ற அப்பம் பாலிலே கிடந்தவை போல்,
நிழல் கிடந்த வார்ந்த மணலிடத்துக் குழிகளில் நின்ற நீரிடத்தே மிக விழும்படி
5.
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
தென் புல மருங்கில் சாந்தொடு துறப்ப – நெடு 51,52
வடநாட்டவர் கொண்டுவந்த வெண்மை நிற வட்டக்கல்
தென் நாட்டு ஓரத்து(பொதிகை மலை) சந்தனத்துடன் (பயன்படாமல்)கிடப்ப
6.
கை வல் கம்மியன் கவின் பெற புனைந்த
செம் கேழ் வட்டம் சுருக்கி கொடும் தறி
சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க – நெடு 57-59
கை(வேலைப்பாட்டில்) சிறந்த கைவினைக்கலைஞன் அழகுபெறச் செய்த
சிவந்த நிறத்தையுடைய விசிறி (மூடிச்)சுருக்கிடப்பட்டு, வளைந்த முளைக்கோலில்,
சிலந்தியின் வெள்ளிய நூலால் சூழப்பட்டனவாய் தொங்கிக்கொண்டிருக்க;
7.
மீ நீர் நிவந்த விறல்_இழை கேள்வனை
வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக என
பூ நீர் பெய் வட்டம் எறிய – பரி 21/40-42
நீர் மேல் எழுந்த மிகச் சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணொருத்தி, கரையில் நிற்கும் தன் கணவனை
ஒரு மூங்கிற்கழியைப் புணையாக நீரில் மூழ்கும் தன் கையில் எட்டுமாறு கொடுக்க என்று வேண்ட,
அவன் மணமுள்ள சாயநீர் நிரப்பிய பீச்சாங்குழலை எறிய,
8.
ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ஒரு கை – திரு 111
அழகிய பெரிய கேடகத்தோடு வேற்படையையும் வலமாகச் சுற்றிநிற்ப; ஒரு கை

வட்டி

வட்டி – 1. (வி) 1. சுழற்று, swing round
2. பறையை வட்டமாகச் சுற்றியடித்து இயக்கு, இசை,
play (a drum by beating its face circularly)
3. வட்டமாகச் சுற்றிவா, move around in a circular fashion
4. (சூதாட்டக்காய்களை)உருட்டு, roll, throw (as dice)
– 2. (பெ) 1. வட்டில், தட்டு, கிண்ணம், plaller, bowl, porringer
2. கடகம், பனை நாரால் செய்யப்பட்ட பெட்டி, basket made of palm stem fibre
1.1.
காம கணிச்சியால் கையறவு வட்டித்து
சேம திரை வீழ்த்து சென்று அமளி சேர்குவோர் – பரி 10/33,34
காமம் என்னும் கோடரியால் தமது ஊடலால் ஏற்பட்ட செயலற்ற நிலையைச் சுழற்றி எறிந்துவிட்டு
பாதுகாவலான திரையைச் சூழப்போட்டு தன் கணவருடன் மலர்ப்படுக்கையில் கூடிக்களிப்போருமாய்,

மணம் வரு மாலையின் வட்டிப்போரை
துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும் – பரி 11/56,57
மணம்தருகின்ற மாலையினால் சுழற்றியடிப்போரின்மேல்
அறுக்கப்பட்ட சொரசொரப்பான கொம்பில் நீரை மொண்டு வீசுவோரும்,
1.2
மதியத்து அன்ன என் அரிகுரல் தடாரி
இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து
உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய் – புறம் 398/12-14
முழுமதி போன்ற வடிவினதாகிய அரித்த ஓசையையுடைய என் தடாரிப் பறையை
தனது இரப்புரை புலப்படுமாறு அதன் நெடிய வார்கள் அரித்த குரல் எடுத்தியம்ப இசைத்து
நின்னை நினைந்துவரும் பரிசிலருடைய கொள்கலம் நிரம்ப அரிய பொருள்களை வழங்குபவனே

– வட்டித்தல் – இசைத்தல் – சிறுகோல் கொண்டு அதன் தலை வட்டமிடச் சுற்றியடித்தல் பற்றி
வட்டித்து என்றார் – வட்டம் என்னும் பெயர் அடியாகப் பிறந்த வினை – ஔவை.சு.து.உரை, விளக்கம்
1.3
வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி
பரூஉ உறை பஃறுளி சிதறி வான் நவின்று
பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து
புயல்_ஏறு உரைஇய வியல் இருள் நடுநாள் – அகம் 218/3-6
வாளின் நிறம் போலும் உருவுடன் ஒளிறுமாறு மின்னி
பரிய பலவாகிய மழைத்துளிகளைச் சிதறி, வானிலே பயின்று
பெரிய மலையின் குளிர்ந்த உச்சி அதிரச் சூழ்ந்துகொண்டு
1.4
இவர் திமில் எறி திரை ஈண்டி வந்து அலைத்த_கால்
உவறு நீர் உயர் எக்கர் அலவன் ஆடு அளை வரி
தவல் இல் தண் கழகத்து தவிராது வட்டிப்ப
கவறு உற்ற வடு ஏய்க்கும் காமரு பூ கடல் சேர்ப்ப – கலி 136/1-4
ஊர்ந்து செல்லும் மீன்படகுகளை ஓங்கியடிக்கும் அலைகள் ஒன்றுசேர்ந்து வந்து கரையினில் மோதும்போது
நீர் சுரக்கும் உயர்ந்த மணல்மேடுகளில் தன் வளையிலிருந்து வந்த நண்டு ஓடித்திரிவதால் ஏற்பட்ட வரிகள்,
தடையின்றி விளையாடும் ஈரமான சூதாடு களத்தில் ஆர்வம் குறையாமல் சூதாட்டக்காயை உருட்ட,
அந்தக் சூதாட்டக்காய் ஏற்படுத்திய கோடுகளைப் போன்றிருக்கும் காண்பவர் விரும்பும் அழகினையுடைய
கடல் நாட்டுச் சேர்ப்பனே!
2.1
வரி மென் முகைய நுண் கொடி அதிரல்
மல்கு அகல் வட்டியர் – அகம் 391/2,3
மெல்லிய வரிகளையுடைய அரும்புகளுடன் கூடிய நுண்ணிய கொடியாகிய காட்டு மல்லிகையின் பூக்கள்
நிறைந்த அகன்ற வட்டியை உடையோராகிய பூ விற்போர்

வட்டி – மலர் பெய்யும் செப்பு – நாட்டார் உரை விளக்கம்
2.2
தேனினர் கிழங்கினர் ஊன் ஆர் வட்டியர் – மலை 152
தேனினையுடையராய், கிழங்கினையுடையராய், தசை நிறைந்த கடகத்தையுடையராய்

வட்டி, கடகம் – பனை அகணியாற் செய்த பெரிய பெட்டி – நச். உரை, விளக்கம்
(அகணி – பனை, தெங்கு ஆகியவற்றின் புற நார் – palm fibre)

கான் உறை வாழ்க்கை கத நாய் வேட்டுவன்
மான் தசை சொரிந்த வட்டியும் – புறம் 33/1,2
காட்டின்கண்ணே தங்கும் வாழ்க்கையையுடைய சினம் பொருந்திய நாயையுடைய வேட்டுவன்
மானினது தசையைச் சொரிந்த கடகமும்

– கடகம் – ஓலையாற் செய்யப்பட்ட கடகப்பெட்டி – ஔவை.சு.து.உரை, விளக்கம்

வட்டு

வட்டு – (பெ) 1. சிறுவர் விளையாட்டுக் கருவி, a children’s game piece
2. உருண்டை, that which is round and spherival, globe, ball
3. நீர் பீய்ச்சும் கருவி, a water-squirt
4. சூதாடு கருவி, Small spheroidal pawn, dice, draught
1.
ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடும் சினை
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து
கல்லா சிறாஅர் நெல்லி வட்டு ஆடும் – நற் 3/1-4
அடைகாக்கும் பருந்து வருத்தமுடன் இருக்கும் வானத்தை முட்டும் நீண்ட கிளையினையும்
பொரிந்துபோன அடிமரத்தையும் உடைய வேம்பின் புள்ளிபுள்ளியான நிழலில்
கட்டளைக் கல் போன்ற வட்டரங்கினை கீறிக்கொண்டு
கல்லாத சிறுவர்கள் நெல்லிக்காய்களைக் கொண்டு வட்டு ஆடும்

இந்தக் காலத்தில் இதனை குண்டு விளையாட்டு அல்லது கோலி விளையாட்டு என்பர்.
அன்றைய சிறுவர்கள் வைத்து விளையாடிய நெல்லிக்காய்கள் இன்று கோலிக்குண்டு எனப்படும்.
சிறிய குழிகளை அமைத்து அதற்குள் இந்த கோலிகளை விரல் நுனியில் வைத்துத்தெறித்து விழப்பண்ணும்
விளையாட்டு. இதில் பலவகை உண்டு.
குழியாட்டம்
ஒருகுழியாட்டம் – சுவரோரம் அரையடி தள்ளிப் போடப்பட்ட குழிக்குச் சுமார் பத்தடி தொலைவிலிருந்து
குண்டுகளை உருட்டி விளையாடுவது.
முக்குழியாட்டம் – சுமார் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நேர்கோட்டில் மூன்று குழிகள் போட்டு
அதில் குண்டுகளைப் போட்டும், அடித்தும் விளையாடுவது.
பேந்தா-ஆட்டம் – சுமார் 50-க்கு 30 சென்டி-மீட்டர் அளவுள்ள செவ்வகம் நீள-வாக்கில் இரண்டாகப் பகுக்கப்படும்
நடுக்கோடு போடப்பட்டது இந்த ஆட்டத்தின் அரங்கம். குண்டு கோட்டில் நிற்காமல் உருட்டி 10 புள்ளிகள் (பழம்)
சேர்ப்பது.இந்த விளையாட்டு.

செல்வர் வீட்டுக் குழந்தைகள் யானையின் தந்தத்தில் இந்த வட்டினைச் செய்துகொள்வார்கள்.

நிறை சூல் யாமை மறைத்து ஈன்று புதைத்த
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை – அகம் 160/5,6
நிறையவாய சூலுற்ற ஆமை, மறைய ஈன்று புதைத்த
யானைக் கொம்பினாற் செய்த வட்டின் வடிவமுடைய புலால் நாறும் முட்டையை

2.
அட்டு அரக்கு உருவின் வட்டு முகை ஈங்கை – நற் 193/1
உருக்கிய அரக்குப்போன்ற சிவந்த வட்டமாகிய மொட்டினையுடைய ஈங்கை
3.
வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும் – பரி 11/55
சாயம் கலந்த நீரை உள்ளேகொண்ட பீச்சாங்குழலை விட்டெறிவோரும்
4
வட்டு உருட்டு வல்லாய் மலைய நெட்டுருட்டு
சீர் ததும்பும் அரவமுடன் சிறந்து
போர் ததும்பும் அரவம் போல்
கருவி ஆர்ப்ப கருவி நின்றன குன்றம் – பரி 18/42-45
சூதில் வட்டு உருட்டுவதில் வல்லவனே! உன் மலையில், நெட்டுருட்டு என்னும்
தாளவகை மிகுந்து ஒலிக்கும் ஒலியுடன் சிறந்து,
போரில் மிகுத்து எழும் ஆரவாரம் போல
இசைக்கருவிகள் ஆரவாரிக்க, கூட்டமான மேகங்களும் அவற்றுடன் முழங்கி நின்றன;

வணக்கு

வணக்கு – (வி) 1. வளை, bend
2. வணங்கச்செய், பணியச்செய், make one submissive
1.
வன் கை கானவன் வெம் சிலை வணக்கி
உளம் மிசை தவிர்த்த முளவு_மான் ஏற்றையொடு – நற் 285/3,4
ஆற்றல் மிக்க கைகளையும் கொண்ட கானவன், தன் கடுமையான வில்லை வளைத்து,
மார்பில் செலுத்தி வீழ்த்திய ஆண் முள்ளம்பன்றியோடு,
2.
புலியொடு வில் நீக்கி புகழ் பொறித்த கிளர் கெண்டை
வலியினான் வணக்கிய வாடா சீர் தென்னவன் – கலி 104/3,4
சோழனின் புலிச் சின்னத்தோடு, சேரனின் வில் சின்னத்தையும் நீக்கி, புகழ்மிக்க கயல் சின்னத்தை அங்குப்
பொறித்து,
தன் வலிமையினால் பகைவரை வணங்கச் செய்த வாட்டமுறாத தலைமைப் பண்பையுடைய பாண்டியனின்

வணங்கு

வணங்கு – (வி) 1. வளை, bend
2. பணி, be submissive
3. மரியாதையுடன் கைகூப்பு, salute respectfully
4. வழிபடு, தொழு, worship, pray
1.
அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த
வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க – நெடு 21,22
அழகிய வெளியையுடைய அகன்ற வயலில் நிறைந்த நீரால் செழித்து வளர்ந்த
வளப்பமான தாள்களையுடைய நெல்லிலிருந்து மேலெழுந்த கதிர் (முற்றி)வளைய;
2.
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை – பதி 70/20
நட்பமைந்த சான்றோர்க்குப் பணிந்தொழுகும் மென்மையினையும், பகைவர்க்கு வணங்காத
ஆண்மையினையுமுடைய
3.
விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது
இளையோர் இல்லிடத்து இற்செறிந்து இருத்தல்
அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம் என
குறு நுரை சுமந்து நறு மலர் உந்தி
பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம்
வல்லிதின் வணங்கி சொல்லுநர் பெறினே
செல்க என விடுநள்-மன்-கொல்லோ – நற் 68/1-7
விளையாட்டுத் தோழியருடன் ஓரை என்னும் ஆட்டத்தை ஆடாமல்
இள மங்கையர் தமது வீடுகளில் அடைத்துக்கிடத்தல்
அறநெறி ஆகாது; வீட்டின் செல்வமும் குன்றும் என்று
சிறிய நுரைகளைச் சுமந்துகொண்டு, நறிய மலர்களை வீசியெறிந்துகொண்டு
பொங்கி வருகின்ற புது நீரில் மனம் மகிழ ஆடுவோம்;
இதனை விரைந்து சென்று அன்னையை வணங்கிச் சொல்லுபவரைப் பெற்றால்
செல்லுங்கள் என்று அனுப்பிவிடுவாளோ?
4.
முந்து நீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்தி
கைதொழூஉ பரவி கால் உற வணங்கி – திரு 251,252
நின் முன் அம் முருகப்பெருமானைக் கண்ட பொழுது, முகத்தால் விரும்பி நோக்கி, வாயால் வாழ்த்தி,
கையால் தொழுது, புகழ்ந்து, அவன் அடிகளில் வீழ்ந்து வணங்கி,

வணர்

வணர் – (வி) வளை, bend
பா அமை இதணம் ஏறி பாசினம்
வணர் குரல் சிறுதினை கடிய
புணர்வது-கொல்லோ நாளையும் நமக்கே – நற் 373/7-9
பரப்பு அமைந்த பரண் மீது ஏறி, பச்சைக் கிளிகளின் கூட்டத்தை
வளைந்த கதிர்களைக் கொண்ட சிறுதினையில் படியாதவாறு ஓட்டுவதற்கு
வாய்ப்புக் கிட்டுமோ, நாளைக்கும் நமக்கு?

வண்

வண் – (பெ) 1. வளம், செழிப்பு, Fertility; fecundity
2. மிகுதி, abundance
3. பெரியதாய் இருத்தல், largeness, bigness
4. கைவண்மை, ஈகை, கொடை, bounty, liberality, munificience
5. வாளிப்பு, உடல் திரட்சி, செழுமை, rotundity

1.
வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர் – திரு 31
வளமுடைய செவிகளில் இட்டு நிறைந்த பிண்டியினது ஒள்ளிய தளிர்
2.
வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள் – திரு 106
மிகுதியான புகழ் நிறைந்து பகைவருடலைப் பிளந்து மீட்டும் வேலை வாங்கிய நிமிர்ந்த தோள்கள்
3.
வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின் – சிறு 27
பெரிய குலையினையுடைய பனை வளர்த்த நுங்கின்கண் உள்ள
4.
தேர் வண் விராஅன் இருப்பை அன்ன என் – நற் 350/4
தேர்களை வழங்கும் வண்மையுடையவனாகிய விரான் என்பானது இருப்பையூரை ஒத்த
5.
வலவன் ஆய்ந்த வண் பரி
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு எனவே – அகம் 20/15,16
பாகன் ஆய்ந்து தெரிந்த நன்கு வளர்ந்த குதிரைகள் (பூட்டிய)
நிலா வெளிச்சம் போன்ற வெண்மணலில் சுற்றிச் சுற்றி வரும் ஒரு தேர் உள்ளது என்று

வண்டன்

வண்டன் – (பெ) சங்ககாலத்துச் செல்வன், a wealthy man in sangam period
வண்டன் சங்ககாலத்தில் வாழ்ந்த பெரும் பணக்காரன்.
களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் இந்த வண்டன் போல் செல்வ வளம் மிக்கவனாம்.

வெண் திரை முந்நீர் வளைஇய உலகத்து
வண் புகழ் நிறுத்த வகை சால் செல்வத்து
வண்டன் அனையை-மன் நீயே – பதி 31/21-23
வெண்மையான அலைகளையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில்
கொடையால் வரும் புகழை நிலைநிறுத்திய வகைவகையான செல்வங்களைக் கொண்ட
வண்டன் என்பானைப் போன்றவன் நீ

வண்டல்

வண்டல் – (பெ) 1. சிறுவர் மணல்வீடு கட்டி விளையாடும் விளையாட்டு,
children’s game of making toy-houses out of wet fine sand
2. சிறுவர் கட்டி விளையாடும் மணல்வீடு ,
toy-houses made by children out of wet fine sand
3. ஆற்றுநீர் முதலியவை ஒதுக்கிவிட்ட வளமான மண்,
Earth washed ashore by a river, lake etc
4. நீர் முதலியவற்றினடியில் மண்டிய பொடிமண், silt, sediment
1.
இளையோர் வண்டல் அயரவும் முதியோர்
அவை புகு பொழுதில் தம் பகை முரண் செலவும் – பொரு 187,188
இளையோர் மணல்வீடு(கட்டி) விளையாடவும், முதியோர்
(நீதி வேண்டி)அவைக்களம் புகும்பொழுதிலேயே பகையின் மாறுபாடு (அகன்று அன்பு)கொள்ளவும்,
2.
மணல் காண்-தோறும் வண்டல் தைஇ – நற் 9/8
மணல் கண்டவிடமெல்லாம் சிறுவீடுகட்டி மகிழ்ந்து விளையாடி

தண் புனல் வண்டல் உய்த்து என
உண்கண் சிவப்ப அழுது நின்றோளே – ஐங் 69/3,4
குளிர்ந்த வெள்ளநீர், தன் மணல்வீட்டை அழித்துவிட்டதாகத்
தன் மையுண்ட கண்கள் சிவந்துபோகும்படி அழுதுகொண்டிருந்தாள்
3.
சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர்
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த
வண்டல் பாவை வன முலை முற்றத்து
ஒண் பொறி சுணங்கின் ஐது பட தாஅம் – நற் 191/1-4
சிறிய பூக்களைக் கொண்ட ஞாழலின் தேன் செறிந்திருந்த ஒளிரும் பூங்கொத்துக்கள்
அழகிய அணிகலன்களை அணிந்த மகளிர் நெடிய மணலில் செய்த
வண்டல்மண்ணால் ஆன பாவையின் அழகிய முலைகளின் பரப்பில்
ஒளிரும் புள்ளிகளையுடைய சுணங்கைப் போல மெல்லிதாகப் பரவிவிழும்
4.
நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட – பரி 6/18
முலைகளில் அணிந்த குங்குமக் குழம்பும் மிகுதியாய் வண்டல் போன்று படிந்து தோன்ற,

வண்ணம்

வண்ணம் – 1. (பெ) 1. நிறம், colour
2. நிறக்கலவை, paint
3. அழகு, beauty
4. இயற்கை அழகு, Unadorned, natural beauty
5. குணம், இயல்பு, Nature, character, quality
6. இசைப்பாட்டு, song
– 2. (இ.சொ) வகையில் விதத்தில், in the manner of, as indicated
1.1.
வண்ண ஒண் தழை நுடங்க வால் இழை
ஒண் நுதல் அரிவை பண்ணை பாய்ந்து என – ஐங் 73/1,2
நிறமமைந்த ஒளியையுடைய தழையுடை அசையும்படி, தூய அணிகலன்களையும்
ஒளிபொருந்திய நெற்றியையும் உடைய தலைவி, நீர்விளையாட்டு ஆடினபோது
1.2.
வண்ணம் நீவிய வணங்கு இறை பணை தோள் – புறம் 32/3
நிறமுடைய கலவை பூசப்பட்ட வளைந்த சந்தினையுடைய முன்கையினையும்
1.3.
மா மலர் வண்ணம் இழந்த கண்ணும் – அகம் 197/1
கரிய குவளை மலரின் அழகினை இழந்த கண்களும்

பிறை நுதல் வண்ணம் ஆகின்று – புறம் 1/9
பிறை திருநுதற்கு அழகாயது
1.4.
மாசு அற கண்ணடி வயக்கி வண்ணமும்
தேசும் ஒளியும் திகழ நோக்கி – பரி 12/20,21
அழுக்கு நீங்க கண்ணாடியைப் பளபளப்பாக்கி, அதில் தம் இயற்கையழகும்,
செயற்கையழகும், மேனியெழிலும் தோன்ற, அவற்றைக் கண்டு மகிழ்ந்து
1.5.
வண்ணமும் துணையும் பொரீஇ எண்ணாது
எமியேம் துணிந்த ஏமம் சால் அரு வினை – குறி 31,32
(தலைவன்)குணத்தையும் கூட்டாளிகளையும் (நம்மவருடன்)ஒப்பிட்டுப்பார்த்தும், யோசித்துப்பாராமல்,
நாங்களாக(வே) துணிந்துசெய்த (தலைவிக்கு)ஆபத்தற்ற (இந்த)சிறப்பான செயல்
1.6.
பாடுவல் விறலி ஓர் வண்ணம் நீரும்
மண் முழா அமைமின் பண் யாழ் நிறுமின் – புறம் 152/13,14
யான் பாடுவேன் விறலியே ஒரு இசைப்பாட்டு, நீங்களும்
முழாவின்கண்ணே மார்ச்சனையை இடுமின், யாழிலே பண்னை நிறுத்துமின்
2.
கொடுப்பின் நன்கு உடைமையும் குடி நிரல் உடைமையும்
வண்ணமும் துணையும் பொரீஇ எண்ணாது
எமியேம் துணிந்த ஏமம் சால் அரு வினை
நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணர
செப்பல் ஆன்றிசின் சினவாதீமோ – குறி 30-34
(நாமாக)மணந்தால் நன்கு அமையுமோ என்பதையும்,(தலைவனின்)குடும்பம் ஒத்ததாக இருக்குமோ என்பதையும்,
(தலைவன்)குணத்தையும் கூட்டாளிகளையும் (நம்மவருடன்)ஒப்பிட்டுப்பார்த்தும், யோசித்துப்பாராமல்,
நாங்களாக(வே) துணிந்துசெய்த (தலைவிக்கு)ஆபத்தற்ற (இந்த)சிறப்பான செயல்
(முன்பு)நடந்தவிதத்தை நீ முழுதும் நன்றாகப் புரிந்துகொள்ளும்படியாக
சொல்லுதல் மேற்கொண்டேன், (அது கேட்டுக்)கோபிக்கவேண்டாம் –

வண்மை

வண்மை – (பெ) ஈகைத்தன்மை, கொடைத்தன்மை, வள்ளல்தன்மை, liberality, munificence
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள – பரி 4/27
அனைவர்க்கும் அருள்சுரக்கும் இயல்பும், கொடைத்தன்மையும் மழையினிடத்தில் இருக்கின்றன;

வதி

வதி – 1. (வி) தங்கியிரு, வாழ், abide, stay, dwell
– 2. (பெ) தங்குமிடம், dwelling place
1.
வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை – குறு 5/2
தன்னிடத்தில் தங்கும் கொக்குகள் உறங்கும்படியான இனிய நிழலையுடைய புன்னைமரம்
2.
அளிதோ தானே நாணே
ஆங்கு அவர் வதி_வயின் நீங்கப்படினே – குறு 395/7,8
இரங்கத்தக்கது நாணம்!
அங்கே அவர் வசிக்கும் இடத்திற்கு நீங்கிச் சென்றால்-(நாணம் அழிந்துபோகும்)

வெறி கொண்ட புள்_இனம் வதி சேரும் பொழுதினான் – கலி 123/12
ஒழுங்குமுறையில் பறந்து செல்லும் பறவைக் கூட்டம் தம் இருப்பிடம் சேரும் மாலைப்பொழுதில்

வதுவை

வதுவை – (பெ) 1. திருமணம், marriage
2. மண மாலை, marriage garland
1.
விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள்
பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்-மன்-கொலோ – கலி 39/38,39
விண்ணைத் தொடுகின்ற மலைநாட்டைச் சேர்ந்தவனும், நீயும், திருமணத்தின்போது
முன்னமே ஒருவரையொருவர் பார்த்தறியாதவர் போல் நடந்துகொள்வீர்களோ?
2.
வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால் – மலை 30
மணமாலை (இன்னும்)மணக்கும்(புதுமணம் மாறாத), (மொய்க்கும்)வண்டுகளும் மணம்வீசும் கூந்தலினையுடைய

வான் அர_மகளிர்க்கு வதுவை சூட்ட – திரு 117
தெய்வ மகளிர்க்கு மணமாலை சூட்ட

வத்தம்

வத்தம் – (பெ) சோறு, cooked rice
சுடர் கடை பறவை பெயர் படு வத்தம் – பெரும் 305
ஞாயிறு பட்ட காலத்தே, பறவையினது பெயரைப் பெற்ற கருடன் சம்பா என்னும் நெல்லின் சோற்றையும்,

வந்தனம்

வந்தனம் – (வி.மு) வந்திருக்கின்றோம், (we) have arrived
வெம் துகள் ஆகிய வெயில் கடம் நீந்தி
வந்தனம் ஆயினும் ஒழிக இனி செலவே – ஐங் 330/1,2
பொசுக்குகின்ற புழுதிக்காடாகிய வெயில் காயும் இந்தப் பாலைவழியைக் கடந்து
வந்தோமாயினும், கைவிடுக, இனிமேலும் பயணம்செய்வதை;

வந்தனை

வந்தனை – 1. (வி) வந்துள்ளாய், (you) have come
2. (வி.எ) வந்து, come
1.
வினை அமை பாவையின் இயலி நுந்தை
மனை வரை இறந்து வந்தனை – நற் 362/1,2
நடக்கும் திறன் அமைக்கப்பட்ட பாவையைப் போல் நடந்து, உன் தந்தையின்
வீட்டு எல்லையைக் கடந்து என்னோடு வந்துள்ளாய்
2.
வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப – அகம் 200/7
வந்து செல்வாயாக சங்குகள் மேயும் கடற்பரப்பினையுடைய தலைவனே

வந்தி

வந்தி – (வி) வணங்கு, salute reverentially
சிந்திக்க தீரும் பிணியாள் செறேற்க
மைந்து உற்றாய் வெம் சொல் மட மயில் சாயலை
வந்திக்க வார் என மன தக்க நோய் இது
வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு
போற்றாய் காண் அன்னை புரையோய் புரை இன்று
மாற்றாளை மாற்றாள் வரவு – பரி 20/68-73
இவள் பெயரைச் சிந்தித்தாலேயே தீர்ந்துவிடும் பாவப்பிணிகள், அப்படிப்பட்டவள் மீது சினங்கொள்ளாதே,
பேதைமைகொண்டாய் கொடிய சொல்கூறி, இந்த இளம் மயில்போன்ற சாயல் உடையவளை
வணங்க வருவாயாக என்று சொல்ல, என்றும் நீங்காத துன்பமாகிவிட்டதே என்று எண்ணிய பரத்தை,
வேற்றவரை வேற்றவர் தொழுவதென்பது இழிவு தருவதாகும்,
அறியமாட்டாயோ? அன்னையே! பெரியவளே! பெருமைக்குரியதல்ல
மாற்றாளை மாற்றாள் வழிபடுவது என்று சொல்ல,

வந்திகை

வந்திகை – (பெ) கையில் தோளின்கீழ் அணியப்படும் ஆபரணம், armlet
வார்ந்த வாயர் வணங்கு இறை பணை தோள்
சோர்ந்து உகு அன்ன வயக்கு_உறு வந்திகை – மது 414,415
ஒழுங்குபட்ட வாயையுடையவரும்; வளைந்த மூட்டுக்களையுடைய மூங்கில்(போன்ற) தோளினையும்,
நெகிழ்ந்து விழுந்துவிடுவது போன்ற மின்னுகின்ற கைவந்திகைகளையும்

– கைவந்தி – ஒரு மகளிர் அணி;ஆடையுமாம். தோள்வந்தி – என இக்காலத்தே (தோவந்தி) மகளிர் மேலாடையை
வழங்குதலுண்டு – பொ.வே.சோ உரை, விளக்கம்.

வந்திசின்

வந்திசின் – (வி.மு) 1. வருவாயாக, (please) do come
2. வந்தேன், வந்திருக்கிறேன், I have come
1.
எமக்கு நயந்து அருளினை ஆயின் பணை தோள்
நன் நுதல் அரிவையொடு மென்மெல இயலி
வந்திசின் வாழியோ மடந்தை – ஐங் 175/1-3
எனக்குக் கனிவோடு அருள்செய்வதென்றால், மூங்கில் போன்ற தோளையும்
நல்ல நெற்றியையும் கொண்ட உன் தோழியோடும் மெல்ல மெல்ல நடந்து
வருவாயாக, வாழ்க மடப்பமுள்ள நங்கையே!

கொடியோர் நல்கார் ஆயினும் யாழ நின்
தொடி விளங்கு இறைய தோள் கவின் பெறீஇயர்
உவ காண் தோழி அ வந்திசினே – குறு 367/1-3
கொடியவரான தலைவர் நமக்கு நல்மணத்தைத் தரமாட்டாரெனினும், உன்னுடைய
தோள்வளை விளங்கும் இறங்கிவரும் தோள்கள் அழகுபெறும்படி
இன்னும் சற்றுத்தொலைவுக்கு அங்கே வருவாயாக தோழி!
2.
ஞாயிறு தோன்றி ஆங்கு மாற்றார்
உறு முரண் சிதைத்த நின் நோன் தாள் வாழ்த்தி
காண்கு வந்திசின் கழல் தொடி அண்ணல் – பதி 64/13-15
ஞாயிறு உதிப்பதைப்போல், பகைவரின்
மிகுந்த பகையைச் சிதைத்த உன் வலிய கால்களை வாழ்த்திக்
காண்பதற்கு வந்திருக்கிறேன் – காலில் கழலையும், தோளில் தொடியையும் அணிந்திருக்கும் அண்ணலே!

வந்தீ

வந்தீ – (ஏ.வி.மு) வருவாய், Oh! come
செல்வு_உறு திண் தேர் கொடும் சினை கைப்பற்றி
பைபய தூங்கும் நின் மெல் விரல் சீறடி
நோதலும் உண்டு ஈங்கு என் கை வந்தீ
செம்மால் நின் பால் உண்ணிய – கலி 85/18-21
எளிதில் உருண்டு வருகின்ற திண்ணிய நடைவண்டியின் வளைவான மேற்பிடியைப் பிடித்துக்கொண்டு
மிக மிக மெதுவாக நடக்கும் உன் மென்மையான விரல்களைக் கொண்ட சிறிய அடிகள்
வலிக்கவும் செய்யும், இங்கு என் கையில் வருவாய்,
செம்மலே! உனக்குரிய பாலை உண்பதற்கு;

வந்தீக

வந்தீக – (ஏ.வி.மு) வருவாயாக, Oh! come
செல்க பாக நின் செய்வினை நெடும் தேர்
விருந்து விருப்பு_உறூஉம் பெரும் தோள் குறு_மகள்
மின் ஒளிர் அவிர் இழை நன் நகர் விளங்க
நடை நாள் செய்த நவிலா சீறடி
பூ கண் புதல்வன் உறங்கு_வயின் ஒல்கி
வந்தீக எந்தை என்னும்
அம் தீம் கிளவி கேட்கம் நாமே – நற் 221/7-13
செல்வாயாக பாகனே! உனது வேலைப்பாடு சிறப்பாக அமைந்த நெடிய தேரில்;
விருந்தோம்பலில் விருப்பமுள்ள பெரிய தோளையுடைய இளமகளான தலைவி,
மின்னலைப் போன்று ஒளிர்ந்து பளபளக்கும் அணிகலன்கள் நல்ல மாளிகையைச் சிறப்புறச் செய்ய
நடத்தலைப் புதிதாகச் செய்து இன்னும் பழகாத சிறிய அடிகளையும்,
பூப்போன்ற கண்களையும் உடைய புதல்வன் உறங்கும்போது அவன் முன் சாய்ந்து,
வருவாயாக, என் அப்பனே! என்று கூறும்
அந்த இனிய சொற்களைக் கேட்டு மகிழ்வோம் நாம்

வந்தீத்தந்தாய்

வந்தீத்தந்தாய் – (வி) வந்தாய், (where do you) come (from)?
ஏந்து எழில் மார்ப எதிர் அல்ல நின் வாய் சொல்
பாய்ந்து ஆய்ந்த தானை பரிந்து ஆனா மைந்தினை
சாந்து அழி வேரை சுவல் தாழ்ந்த கண்ணியை
யாங்கு சென்று ஈங்கு வந்தீத்தந்தாய் – கலி 96/1-4
உயர்ந்த அழகினையுடைய மார்பனே! உன் வாய்ச்சொல்லுக்கு எதிர்ப்பேச்சு இல்லை,
பாய்த்துக்கட்டிய அழகிய வேட்டி கழன்று கிடக்கும் அழகோடு நிற்கிறாய்!
சந்தனமெல்லாம் அழிந்துகிடக்கிறது வியர்வையால்! தலைமாலை தோள்வரை தொங்குகிறது!
எங்கு சென்றுவிட்டு இங்கு வந்தாய்?
வந்தீத்தந்தாய் – வினைத்திரிசொல்; வந்தாய் என்றவாறு – நச்.உரை, பொ.வே.சோ விளக்கம்

வந்தீத்தனர்

வந்தீத்தனர் – (வி.மு) வந்தார், (he) has come
மறை நின்று தாம் மன்ற வந்தீத்தனர் – கலி 86/28
மறைவாக நின்றுகொள்ள அவர் இங்கு வந்திருக்கிறார்;

வந்தீமே

வந்தீமே – (வி.மு) வருவீராக, (please)come
புன்னை அம் கானல் பகல் வந்தீமே – அகம் 80/13
புன்னை மரங்களுடைய அழகிய கடற்கரைச் சோலையில் பகலில் வருவீராக

தண் பெரும் சாரல் பகல் வந்தீமே – அகம் 218/22

வந்தீமோ

வந்தீமோ – (வி.மு) வருவீராக, (please)come
சிறுதினை காக்குவம் சேறும் அதனால்
பகல் வந்தீமோ பல் படர் அகல – நற் 156/5,6
சிறுதினையைக் காவல்காக்கச் செல்கிறோம்; அதனால்
பகற்பொழுதில் வருவீராக, பலவான நம் துன்பங்கள் தீர;

வந்தீய

வந்தீய – (வி.எ) வர, for coming
வண்டு ஊது சாந்தம் வடு கொள நீவிய
தண்டா தீம் சாயல் பரத்தை வியன் மார்ப
பண்டு இன்னை அல்லை-மன் ஈங்கு எல்லி வந்தீய
கண்டது எவன் மற்று உரை – கலி 93/1-4
வண்டுகள் மொய்க்கும்படியாக அரைத்த சந்தனத்தை செழும்பப் பூசிய
பார்க்கத் தெவிட்டாத இனிய தோற்றத்தினையும், பரத்தைமைப் பண்பையும் கொண்ட அகன்ற மார்பினனே!
முன்பெல்லாம் நீ இவ்வாறு இல்லை! இங்கு இரவினில் வர
வெளியில் நீ கண்டது என்ன? சொல்வாயாக;

வந்தீயான்

வந்தீயான் – (வி.மு) வருவான், வாரான், (he) will/wont come
ஒரு நீ பிறர் இல்லை அவன் பெண்டிர் என உரைத்து
தேரொடும் தேற்றிய பாகன் வந்தீயான்-கொல் – கலி 71/9,10
உன் ஒருத்தியைத் தவிர வேறு பெண்டிர் அவனுக்கு இல்லை என்று சொல்லித்
தேரின் மேல் சத்தியம் செய்த பாகன் இங்கு வரமாட்டானோ,

– வந்தீயான் : வினைத்திரிசொல் – நச். உரை
வந்தீயான்கொல் : வினைத்திரிசொல், வாரான்கொல் என்றவாறு – பொ.வே.சோ.விளக்கம்.

வந்தீயாய்

வந்தீயாய் – (வி.மு) வருவாய், (you) come
வாரி நெறிப்பட்டு இரும் புறம் தாஅழ்ந்த
ஓரி புதல்வன் அழுதனன் என்பவோ
புதுவ மலர் தைஇ எமர் என் பெயரால்
வதுவை அயர்வாரை கண்டு மதி அறியா
ஏழையை என்று அகல நக்கு வந்தீயாய் நீ – கலி 114/1-5
விரல்களால் கோதப்பட்டு, அலையலையாக, பெரிய முதுகுப்பக்கம் விழுந்துகிடக்கிற
நீண்ட தலைமுடியை உடைய ஆண்மகன் அழுதுகொண்டிருந்தான் என்கிறார்களோ,
புதிய மலர்களைச் சூட்டி, எம் சுற்றத்தார் என் பெயரைச் சொல்லி,
திருமண ஏற்பாடுகளைச் செய்வாரைக் கண்டு? ‘அறிவு கெட்ட
கோழையே’ என்று பெரிதாகச் சிரித்துவிட்டு வருவாய் நீ

வந்தை

வந்தை – (வி) வா, come
இன்னும் கடம் பூண்டு ஒரு_கால் நீ வந்தை உடம்பட்டாள்
என்னாமை என் மெய் தொடு – கலி 63/12,13
நீ வாராய், இன்னமும் ஒருகால் அவனிடத்தே சென்று உன் குறைமுடித்தலை தனக்குக் கடனாக அவள்
ஏறட்டுக்கொண்டு கூட்டத்திற்கு உடம்பட்டாளென்று
அவற்குக் கூறாமைக்கு என் மெய்யைத் தொட்டுச் சூளுறுவாயாக என்றாள்
– வா என்றது வந்தை எனத் திரிந்தது – நச்.விளக்கம்

வன

வன – (பெ.அ) அழகிய, beautiful
அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும் – நற் 10/1
நிமிர்ந்து உயர்ந்த அழகிய இவள் மார்புகள் தளர்ந்து சாய்ந்த காலத்தும்

சங்க இலக்கியத்தில் ’வன’ என்ற சொல் வருமிடம் எல்லாம் அது ’வன முலை’ என்று
முலையைக் குறிப்பதாகவே வரக் காண்கிறோம்.

வனப்பு

வனப்பு – (பெ) அழகு, Beauty, grace, comeliness
கை புனைந்து இயற்றா கவின் பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை – திரு 17,18
ஒருவர் கையாற் சிறப்பித்துப் பிறப்பியாத அழகைத் தமக்கு இயல்பாகப் பெறுகின்ற அழகினையும்
நாவலின் பெயர்பெற்ற சாம்பூந்தமென்னும் பொன்னால் செய்த ஒளிரும் அணிகலன்களையும்,

வனை

வனை – 1. (வி) 1. உருவமை, வடிவமை, form, shape
2. சித்திரமெழுது, draw, paint
3. பதி, infix, inlay
– 2. (பெ.அ) அழகிய, beautiful
1.1.
வனை கல திகிரியின் குமிழி சுழலும் – மலை 474
(குயவர்)மட்பாண்டங்கள் வடிவமைக்கப் பயன்படுத்தும் கருவியின் சக்கரத்தைப் போல நீர்க்குமிழி சுழலும்,

1.2.
வனை புனை எழில் முலை வாங்கு அமை திரள் தோள் – மலை 57
கோலமிட்டு அலங்கரிக்கப்பட்ட அழகிய முலையையும் வளைவுள்ள மூங்கில்(போன்ற) திரண்ட தோளையும்

யான் தன்
வனைந்து ஏந்து இள முலை நோவ-கொல் என – நற் 29/6,7
தன்னுடைய
தொய்யில் வரைந்த உயர்ந்த இளமுலைகள் நோவுமே எனக் கருதி
2.
காம்பின்
வனை கழை உடைந்த கவண் விசை கடி இடி
கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது – அகம் 309/12-14
மூங்கிலின்
அழகிய தண்டு உடைதற்கு ஏதுவாய், கவண் கல்லின் வேகம் தங்கின கடிய தாக்குதலை உடைய
வெப்பம் மிக்க கதிர்களையுடைய பகற்பொழுதில் செல்லாமல்
– நாட்டார் உரை
3.
பூண் வனைந்து அன்ன பொலம் சூட்டு நேமி
வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த
கூழை நெய்தலும் உடைத்து இவண்
தேரோன் போகிய கானலானே – குறு 227
புதிய வளையத்தைப் பதித்ததைப் போன்ற பொன் விளிம்பினையுடைய சக்கரங்களின்
வாளைப் போன்ற முகம் துண்டாக்கியதால் கொழுத்த இதழ்கள் குறைப்பட்டு
மூளியாகிப்போன நெய்தலை உடையது, இங்கே
தேரில் வந்தவன் சென்ற கடற்கரையில்

வன்

வன் – (பெ.அ) 1. வலிய, strong
2. கடிய, stern
3. கடுமையான severe, intense
4. வலிதாக ஏற்படுத்தப்பட்ட, செயற்கையான, artificial
1.
விழு தண்டு ஊன்றிய மழு தின் வன் கை – பெரும் 170
விழுமிய தடியை ஊன்றின கோடரித் தழும்பிருந்த வலிய கையினையும்
2.
உவலை கண்ணி வன் சொல் இளைஞர்
சிலை உடை கையர் கவலை காப்ப – மது 311,312
தழை விரவின கண்ணியினையும் கடிய சொல்லினையுமுடைய இளைஞர்
வில்லையுடைய கையை உடையராய்ப் பல வழிகள் கூடுமிடத்தே காவல்காக்க
3.
பெரும் கை தொழுதியின் வன் துயர் கழிப்பி – பதி 76/6
பெரிய கைகளைக் கொண்ட கூட்டமான யானைகளின் கடுமையான துயரத்தைப் போக்கி,
4.
இன்புற்று அணிந்த இயல் அணியும் வன் பணியும் – பரி 28/2
அந்த உறவினால் இன்புற்றதால் ஏற்பட்ட இயற்கை அழகும், செயற்கை அழகும்

வன்கண்

வன்கண் – (பெ) 1. கொடுமை, இரக்கமின்மை, cruelty, heartlessness
2. கடுமை, sternness
3. வீரத்தனமை, மனவுரம், Bravery, fortitude
1.
விடு கணை வில்லொடு பற்றி கோடு இவர்பு
வருநர் பார்க்கும் வன்கண் ஆடவர் – குறு 274/3,4
விடுவதற்கான அம்பினை வில்லோடும் கையினில் பற்றி, அந்த மரத்தின் கிளைகளில் ஏறி
வழியில் வருவோரைப் பார்க்கும் கொடுமைமிக்க ஆடவர்
2.
வலி புணர் யாக்கை வன்கண் யவனர் – முல் 61
வலிமை கூடின உடம்பினையும் உடைய கடுமையான யவனர்
3.
வாள் தோள் கோத்த வன்கண் காளை – நெடு 182
வாளைத் தோளில் கோத்த தறுகண்மையையுடைய காளைபோன்றவன்
– நச். உரை
– தறுகண்மை – அஞ்சாமையையுடைய வீரம்

வன்கண்ணள்

வன்கண்ணள் – (பெ) கடுமையான மனம் படைத்தவள், lady with sternness
நீ நீங்கு கன்று சேர்ந்தார்_கண் கத ஈற்று ஆ சென்று ஆங்கு
வன்கண்ணள் ஆய் வரல் ஓம்பு – கலி 116/8,9
நீ விலகிச் செல், கன்றினைப் பிடித்தவரிடம் கோபமுள்ள, கன்றினை ஈன்ற பசு பாய்வதைப் போல
கடுமையான மனம் படைத்த என் தாய் வருவாள், உன்னைக் காத்துக்கொள்

வன்கண்ணி

வன்கண்ணி – (பெ) அஞ்சாமையுடைடவள், fearless girl
உள்ளாது கழிந்த முள் எயிற்று துவர் வாய்
சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ
அறியா தேஎத்தள் ஆகுதல் கொடிதே – அகம் 385/16-18
வழிவருத்தம் எண்ணாது கழிந்த முள் போன்ற கூரிய பற்களையும், பவளம் போன்ற வாயினையும் உடைய
அஞ்சாமை உடையளாய இளையள் சிலம்பு கழித்து
அறியப்படாத தேசத்தில் வதுவை செய்திருத்தல் கொடிது.

வன்னி

வன்னி – (பெ) ஒரு மரம், Indian mesquit, Prosopis spicigera
துளங்கு நீர் வியல்_அகம் ஆண்டு இனிது கழிந்த
மன்னர் மறைத்த தாழி
வன்னி மன்றத்து விளங்கிய காடே – பதி 44/21-23
அசைகின்ற கடல் சூழ்ந்த அகன்ற நிலப்பரப்பை ஆட்சிசெய்து, தம் வாழ்நாளை இனிதே கழித்து இறந்துபோன
மன்னர்களை உள்ளிட்டு மூடிமறைத்த தாழிகளைக் கொண்ட
வன்னி மரம் நிற்கும் ஊர்ப்பொதுவிடத்தில் விளங்கிய இடுகாடு

வன்பர்

வன்பர் – (பெ) கல்நெஞ்சினர், இரக்கமற்றவர், heartless person, hard-hearted
அம் வரி வாட துறந்தோர்
வன்பர் ஆக தாம் சென்ற நாட்டே – குறு 180/6,7
அழகிய தேமல் வரிகள் கெடும்படி துறந்துசென்றோர்
கல்நெஞ்சினராக இருக்கட்டும், தாம் சென்ற நாட்டில்

வன்பு

வன்பு – (பெ) வலிமை, உறுதி, strength, firmness
நன்_நாள் நீத்த பழி தீர் மாமை
வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின்
சொல்லகிற்றாம் மெல் இயலோயே – குறு 368/2-4
ஒரு நல்லநாளில் நம்மைவிட்டுப்போன குற்றமற்ற மாமைநிறத்தின் இழப்பினை
நமது மனவுறுதியால் பொறுத்திருத்தலன்றி, அதனைச் சொற்களால்
சொல்லமுடியாதிருந்தோம் மென்மையான தன்மையுடையவளே!

வன்புறை

வன்புறை – (பெ) தலைவியைத் தலைவன்/தோழி ஆற்றி வற்புறுத்துகை,
Assurance, comfort, given to a lady by her lover or friend
இன்றே வருவர் ஆன்றிகம் பனி என
வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும்
நின் வலித்து அமைகுவன் மன்னோ – அகம் 74/12-14
இன்றே நம் தலைவர் வந்துவிடுவார் நாம் நடுக்கத்தை அமைவேம் என்று கூறும்
வன்புறையாகிய பல இனிய நல்ல சொற்களைக் கூறிவரும்
நின் சொல்லைத்துணிந்து அமைந்திருப்பேன், அது மாட்டுகிலேன்

வன்புலம்

வன்புலம் – (பெ) 1. முல்லை நிலம், jungle tract, pastrol tract
2. வலிய நிலம், hard soil
3. மேட்டுநிலம், elevated land, high land
1.
தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை
அரி புகு பொழுதின் இரியல் போகி
வண்ண கடம்பின் நறு மலர் அன்ன
வளர் இளம் பிள்ளை தழீஇ குறும் கால்
கறை அணல் குறும்பூழ் கட்சி சேக்கும்
வன்_புலம் இறந்த பின்றை மென் தோல் – பெரும் 201-206
வளைவாக, விதைத்தவாறே, உழுத, (பின்னர் வளர்ந்த களைகளைக்)களைக்கொட்டுச் செத்திய தோட்டத்தை,
(கதிர்களை)அறுப்பதற்குச் செல்லும்போது, (ஆட்களின் அரவத்தால்)நிலைகெட்டு ஓடி,
(வெண்மையான)நிறத்தையுடைய கடம்பின் நறிய பூவை ஒத்த
வளரும் இளமையான (தம்)குஞ்சுப்பறவைகளைத் அணைத்தவாறு, குறிய காலினையும்,
கரிய கழுத்தினையும் உடைய காடைப்பறவை காட்டில் தங்கும்
வன்புலமான முல்லைநிலத்தைக் கடந்த பின்பு
2.
நெல் மிக்கு
அறை_உறு கரும்பின் தீம் சேற்று யாணர்
வருநர் வரையா வளம் வீங்கு இருக்கை
வன்_புலம் தழீஇ – பதி 75/5-8
நெல் மிகுதியாய் விளைய,
வெட்டப்பட்ட கரும்பின் இனிய சாறாகிய புதுவருவாயினை
வருவோர்க்கு அளவின்றிக் கொடுக்கும் செல்வம் பெருகியிருக்கும் குடியிருப்புகள்
வன்புலத் தன்மை பெற்று,
3.
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வன்_புலம் சேரும்
சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏற்ப- புறம் 173/5-7
காலம் தப்பாத மழை பெய்யும் காலத்தைப் பார்த்து
தம் முட்டைகளைக் கொண்டு மேட்டுநிலத்தினை அடையும்
மிகச் சிறிய எறும்பினது சிலவாகிய ஒழுக்கத்தை ஒப்ப

வன்மை

வன்மை – (பெ) 1. ஆண்மை, manliness, fortitude
2. ஆற்றல், திறன், ability
1.
உள்ளது சிதைப்போர் உளர் எனப்படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு என
சொல்லிய வன்மை தெளிய காட்டி
சென்றனர் வாழி தோழி – குறு 283/1-4
இருக்கின்ற பொருளைச் செலவழிப்போர் செல்வமுடையோர் எனப்படார்;
பொருள் இல்லாதவர் வாழ்க்கை இரந்து வாழ்வதனினும் இழிவானதாகும் என்று
சான்றோர் சொல்லிய ஆண்மைச் சால்பினை புரியும்படி எடுத்துக் காட்டிச்
சென்றுவிட்டார், வாழ்க, தோழியே!
2.
நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் அது
முன்னம் முகத்தின் உணர்ந்து அவர்
இன்மை தீர்த்தல் வன்மையானே – புறம் 3/25,26
நின்பால் நச்ச்சிய விருப்பத்தால் இரப்போர் வருகுவர், அங்ஙனம் வருவது
அவர் மனக்குறிப்பை அவர் முகத்தால் அறிந்து, அவருடைய
வறுமையைப் போக்குதலை வல்ல தன்மையால்.

வம்

வம் – (ஏ.வி) வாரும், welcome
கதுமென கரைந்து வம் என கூஉய் – பொரு 101
விரைவாக அழைத்து, ‘வருக வருக’ என்று உரத்துச் சொல்லி,
– தம் என்பது தாரும் என நின்றாற்போல வம் என்பது வாரும் என்னும் பொருட்டாய் நின்றது- நச்-உரை விளக்கம்

திதலை அல்குல் நலம் பாராட்டிய
வருமே தோழி வார் மணல் சேர்ப்பன்
இறை பட வாங்கிய முழவு முதல் புன்னை
மா அரை மறைகம் வம்-மதி – நற் 307/4-7
உன் தேமல் படர்ந்த அல்குலின் அழகைப் பாராட்டுவதற்கு
வருகின்றான் தோழி! நீண்ட மணல் பரந்த நெய்தல்நிலத் தலைவன்!
நம் வீட்டுக் கூரையின் சாய்ப்பில் படுமாறு வளைந்த முழவு போன்ற அடியையுடைய புன்னையின்
கரிய அடிப்பகுதியில் மறைந்துகொள்வோம் வா!

பாடுகம் வம்-மினோ பரிசில்_மாக்கள் – புறம் 32/6
அவனைப் பாடுவோமாக வாரீர், பரிசில் மக்களே

மாண்பு இல் கொள்கையொடு மயங்கு துயர் செய்த
அன்பு இல் அறனும் அருளிற்று மன்ற
வெம் சுரம் இறந்த அம்_சில்_ஓதி
பெரு மட மான் பிணை அலைத்த
சிறு நுதல் குறு_மகள் காட்டிய வம்மே – ஐங் 394
மாண்பு சிறிதும் இல்லாத நெறிமுறையோடு, மனம் கலங்க இன்னல் செய்த
அன்பே இல்லாத தருமமும் எனக்கு அருள்செய்வதாயிற்று, உண்மையாய் –
வெப்பமிக்க பாலைவழியில் சென்ற என் அழகிய சிலவான கூந்தலையுடைய,
பெரிதான பேதைமையால் பெண்மானையே நிலைகெடச்செய்யும்,
சிறிய நெற்றியையுடைய என் இளையமகளை என் கண்முன் காட்டிற்று, வந்து பாருங்கள்.

அன்பு பெரிது உடைமையின் அளித்தல் வேண்டி
பகலும் வருதி பல் பூ கானல்
இ நீர ஆகலோ இனிதால் எனின் இவள்
அலரின் அரும் கடிப்படுகுவள் அதனால்
எல்லி வம்மோ மெல்லம்புலம்ப – நற் 223/2-6
அன்பு பெரிதாக உடைமையினாலே இவளுக்குக் கருணைகாட்டல் வேண்டி
பகலிலும் வருகிறாய்; பலவான பூக்களைக் கொண்ட இந்தக் கடற்கரைச் சோலையில்
இத்தன்மையராக இருத்தல் இனிதே! எனினும் இவள்
ஊராரின் பழிச்சொல்லுக்கு ஆளாகி அரிய கட்டுக்காவலுக்குட்படுத்தப்படுவாள்; அதனால்
இரவானபின் வருவாயாக, மென்புலமான நெய்தல்நிலத் தலைவனே!

வம்ப

வம்ப – (பெ.அ) புதிதான, new
1.
வம்ப மாக்கள் – புதியவர், அயலவர், newcomer, stranger
வம்ப மாக்கள் வரு_திறம் நோக்கி
செம் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் – நற் 298/1,2
பாலை வழியில், புதிய மக்கள் வருகின்ற தன்மையைப் பார்த்து,
செம்மையான அம்பினை அவர்மீது தொடுக்கும் சினந்த பார்வையினரான ஆடவர்
2.
வம்ப மாரி – காலமல்லாத காலத்தில் பெய்யும் மழை, unseasonal rain

மடவ மன்ற தடவு நிலை கொன்றை
கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை நெரிதர
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த
வம்ப மாரியை கார் என மதித்தே – குறு 66
அறியாமையுடையன, நிச்சயமாக! இந்த அகலமாய் நிற்கும் கொன்றை மரங்கள்!
மலைகள் விளங்கும் பாலைநிலத்து அரிய வழியில் சென்றோர் கூறிய
பருவம் இன்னும் வராதபோது, மிகச் செறிவாக
கிளைகளில் சேர்ந்த கொடிபோல் கொத்தாகப் பூத்தன,
காலமல்லாது திடீரென்று தோன்றிய மழையைக் கார்ப்பருவ மழை என்று கருதி.
3.
வம்பப் பறவை – கால மாற்றத்தால் வேறு நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வரும் பறவை, migration bird
விட்டு என விடுக்கும் நாள் வருக அது நீ
நேர்ந்தனை ஆயின் தந்தனை சென்மோ
குன்றத்து அன்ன குவவு மணல் அடைகரை
நின்ற புன்னை நிலம் தோய் படு சினை
வம்ப நாரை சேக்கும்
தண் கடல் சேர்ப்ப நீ உண்ட என் நலனே – குறு 236
எம்மை விட்டுவிட்டுப் பிரியும் நாள் வருக! அதனை நீ
மிகவும் வேண்டிப் பெற்றிருந்தால், தந்துவிட்டுச் செல் –
மலையைப் போல குவித்திருக்கும் அடைத்தகரைமீது
நின்றிருக்கும் புன்னையின் நிலத்தைத்தோய்ந்த தாழ்ந்த கிளையில்
புதிய நாரை தங்கும்
குளிர்ந்த கடற்பகுதியையுடைய தலைவனே! நீ நுகர்ந்த எனது பெண்மைநலனை –
4.
மோரியர், வடுகர் போன்ற அயல்நாட்டவரைக் குறிக்கும் சொல், a word denoting aliens
மா கெழு தானை வம்ப மோரியர் – அகம் 251/12
வம்ப வடுகர் பைம் தலை சவட்டி – அகம் 375/14
5.
அண்மையில் இறந்தவரைக் கற்களால் மூடிய அமைப்பு வம்ப எனப்பட்டது , fresh
அம்பு விட வீழ்ந்தோர் வம்ப பதுக்கை – புறம் 3/21
அம்பை விடுதலால் இறந்தவரது உடல் மூடிய புதிய கற்குவியலின் மேலே

வம்பலர்

வம்பலர் – (பெ) புதியவர், வழிப்போக்கர், Newcomer, stranger Wayfarer
வறும் கை வம்பலர் தாங்கும் பண்பின் – அகம் 15/6
பொருள் இன்றி வரும் புதியவர்களைப் புரக்கும் நற்பண்பினையுடைய

கொள்ளும் பொருள் இலர் ஆயினும் வம்பலர்
துள்ளுநர் காண்-மார் தொடர்ந்து உயிர் வௌவலின் – கலி 4/4,5
கவர்ந்து கொள்ளக்கூடிய பொருள் இல்லாதவரெனினும், அவ்வழி வரும் புதியவர்
துடித்து வருந்துவதைக் கண்டு மகிழ்வதற்காக, அவரை விரட்டி அவரின் உயிரைக் கவர்வதால்,

ஆறு செல் வம்பலர் காய் பசி தீர
சோறு அடு குழிசி – பெரும் 365,366
வழிச்செல்கின்ற புதியோருடைய மிக்க பசி தீரும்படி
(அவர்)சோற்றை ஆக்குகின்ற பானை

வம்பு

வம்பு – (பெ) 1. கச்சு belt
2. புதிதானது, புதுமை, a new thing, newness, novelty
3. நறுமணம், fragrance
4. தேர்ச்சீலை, screen for the chariot
5. கைச்சரடு, உள்ளங்கையில் அணிந்துகொள்ளும் கவசம், gloves to hide palm
செம்பு நிறை கொண்மரும் வம்பு நிறை முடிநரும் – மது 514
செம்பை நிறுத்துக் கொள்வாரும், கச்சுக்களை நிறைவாக முடிவாரும்,
இது இன்ன வகைக் கச்சு என எந்த உரையும் குறிப்பிடவில்லை. எனவே இதற்குப் பல்வேறு விளக்கங்கள்
காணப்படுகின்றன.
பொதுவாகக் கச்சு என்பது ஒரு பட்டையான துணி. இதனைப் பெண்கள் தம் மார்பை மறைக்கக் கட்டிக்கொள்வர்.
ஆண்கள் தம் வேட்டி நழுவிவிடாமல் இருக்க, அதன்மேல் இடுப்பில் கட்டிக்கொள்வர். இந்தக் கச்சில் வாளைச்
செறுகிக் கொள்வதும் உண்டு.

துணியை மகளிரின் மார்பணிகளாகத் தைத்துத் தருபவர்கள் – https://ta.wikipedia.org/s/3dtf

மகளிர் சட்டையில் மணிமுடிந்து அழகுபடுத்துவோர் – http://vaiyan.blogspot.com/2015/08/51.html

those who tie knots on ends of fabrics – https://learnsangamtamil.com/maduraikanchi/

1.1.
வம்பு – பெண்கள் முலைக்கச்சு. Stays for woman’s breast
பின்னுவிட நெறித்த கூந்தலும் பொன் என
ஆகத்து அரும்பிய சுணங்கும் வம்பு விட
கண் உருத்து எழுதரும் முலையும் – அகம் 150/1-3
பின்னும்படி வளர்ந்து நெளிந்த கூந்தலையும் பொன் போல
மார்பிலே தோன்றிய தேமலையும், கட்டிய கச்சு கிழியும்படி
கண்ணுடன் உருப்பெற்று எழுந்த முலையினையும்

அம் பணை தடைஇய மென் தோள் முகிழ் முலை
வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின்
மெல் இயல் மகளிர் நல் அடி வருட – நெடு 149-151
அழகான மூங்கில் (போலத்)திரண்ட மெல்லிய தோளினையும், (மொட்டுப்போல்)குவிந்த முலை
கச்சை வலித்துக் கட்டினவாய், வளைந்து நெளியும் இடையினையும்,
மென்மையான தன்மையினையும் உடைய சேடியர் (தலைவியின்)நல்ல அடியை வருடிக்கொடுக்க,
1.2
வம்பு – ஆடவர் அரைக்கச்சு -இடுப்புப்பட்டை,Girdle, belt for the waist
இது, வம்புடை ஒள் வாள் மறவர் என்ற புறப்பொருள் வெண்பாமாலை (6, 24) பாடலாலல் அறியலாம்
1.3
யானைக்கும் அதன் கழுத்தைச் சுற்றி இந்தக் கச்சு கட்டப்படுவது உண்டு.
தும்பி தொடர் கதுப்ப தும்பி தொடர் ஆட்டி
வம்பு அணி பூ கயிறு வாங்கி மரன் அசைப்பார் – பரி 19/30,31
வண்டுகள் தொடர்ந்து மொய்த்துக்கொண்டுவரும் கன்னங்களையுடைய யானைகளின் கால்களில் சங்கிலியைப்
பிணித்து, கச்சை அணிந்த புரோசக்கயிற்றினால் கழுத்தைச் சுற்றிக் கட்டி அந்த யானைகளை மரத்தில் கட்டுவர்;

வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின் – புறம் 37/12
கச்சு அணிந்த யானையையுடைய அரசு உண்டாகலின்
1.4
இந்தக் கச்சு வெள்ளை வெளேர் என்ற நிறத்தில் இருக்கும்.
வம்பு விரித்து அன்ன பொங்கு மணல் கான்யாற்று – அகம் 11/8
கச்சினை விரித்துப் பரப்பி வைத்தாலென்ன விளங்கும் மணல் மிக்க காட்டாற்றினது

இந்தக் கச்சு அழகிய பூவேலைப்பாடு உள்ளவைகளாகவும் இருக்கும்.
விண் பொரும் சென்னி கிளைஇய காந்தள்
தண் கமழ் அலரி தாஅய் நன் பல
வம்பு விரி களத்தின் கவின் பெற பொலிந்த – குறி 196-198
விசும்பைத் தீண்டுகின்ற சிகரங்களில் கிளைத்த செங்காந்தளின்
குளிர்ந்த மணம் கமழ்கின்ற பூக்கள் உதிர்ந்து பரவி, நன்றாகிய பற்பல
கச்சை விரிந்த களம் போல அழகு மிக்குப் பொலிவுற்ற
2.
தண் துளிக்கு ஏற்ற பைம் கொடி முல்லை
முகை தலை திறந்த நாற்றம் புதல் மிசை
பூ அமல் தளவமொடு தேம் கமழ்பு கஞல
வம்பு பெய்யுமால் மழையே வம்பு அன்று
கார் இது பருவம் ஆயின்
வாராரோ நம் காதலோரே – குறு 382
குளிர்ந்த மழைத்துளிகளை ஏற்றுக்கொண்ட பசிய கொடியுள்ள முல்லை
மொட்டுகள் வாய் திறந்தததனால் ஏற்பட்ட நறுமணம், புதரின்மேல்
பூக்கள் செறிந்திருக்கும் செம்முல்லையொடு தேன் மணக்கும்படி நெருங்கியிருக்க
புதிதாகப் பெய்கின்றது மழையே! இது புதுமழை இல்லை,
கார்காலத்து மழையே இது கார்ப்பருவம் என்றால்
வந்திருக்கமாட்டாரோ நம் காதலர்?

வதி மண வம்பு அலர் வாய் அவிழ்ந்து அன்னார் – பரி 10/20
நறுமணம் தங்குகின்ற புதிய மலர் வாய்விரிந்தாற்போன்ற பருவத்தையுடையவரும் ஆகிய
3.
மணி கண்டு அன்ன மா நிற கருவிளை
ஒண் பூ தோன்றியொடு தண் புதல் அணிய
பொன் தொடர்ந்து அன்ன தகைய நன் மலர்
கொன்றை ஒள் இணர் கோடு-தொறும் தூங்க
வம்பு விரித்து அன்ன செம் புல புறவில் – நற் 221/1-5
நீலமணியைக் கண்டாற்போன்ற கரிய நிறமுள்ள கருவிளை மலர்,
ஒள்ளிய பூவாகிய செங்காந்தளோடு குளிர்ச்சியுள்ள புதர்களை அழகுசெய்ய,
பொற்காசுகளைத் தொங்கவிட்டாற்போன்ற அழகுள்ள நல்ல மலராகிய
கொன்றையின் ஒள்ளிய பூங்கொத்துக்கள் கிளைகள்தோறும் தொங்க,
ஒரு புதுமையான நறுமணத்தைப் பரப்பிவிட்டாற்போன்ற சிவந்தநிலமாகிய முல்லை நிலத்தில்
4.
வம்பு பரந்த தேர் – பதி 22/19
புதிய தேர்ச் சீலைகள் பரந்து விளங்கும் தேர்களோடும்
5.
வில்வீரர்கள் உள்ளங்கையில் அணிந்துகொள்ளும் கவசம் வம்பு எனப்படுகிறது.
மண்_உறு முரசம் கண் பெயர்த்து இயவர்
கடிப்பு உடை வலத்தர் தொடி தோள் ஓச்ச
வம்பு களைவு அறியா சுற்றமோடு அம்பு தெரிந்து – பதி 19/7-9
கழுவிப் பூசிக்கப்பட்ட முரசத்தின் மேற்பகுதியில் குருதியினைப் பூசி, முரசு முழக்குவோர்
குறுந்தடியை வலது கையில் கொண்டவராய், தொடி அணிந்த தோளினை ஓங்கி உயர்த்தி முழக்க,
கைச்சரடுகளைக் களைதலை அறியாத வீரரோடு, அம்புகளைத் தெரிவுசெய்து

வம்பு – கைச்சரடு, ஏந்திய படை கை வியர்த்தலால் நெகிழாமைப் பொருட்டு அணிவது என்பார்
ஔவை.சு.து.அவர்கள்.
இது கைக்கு அணியும் தோலாகிய கவசம் என்பார் கு.வெ.பா

வய

வய – (பெ) 1. வலிமை, திறன், strength, power
2. மிகுதி increase, abundance
3. வயா நோய், பிரசவ வலி, Pains of child-birth
1.
வய களிறு பார்க்கும் வய புலி போல – மது 643
வலிய களிற்றை(இரையாக)ப் பார்க்கும் வலிய புலியைப் போல,
2.
சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை
வய தணிந்து ஏகு – பரி 11/39,40
நெடுந்தொலைவைக் கடந்து மலைகளில் ஊர்ந்துவந்த சிறப்புமிக்க அணிகலன்களை அணிந்த வையையே!
மிகுதியும் தணிந்து செல்வாயாக!

இந்த இடத்திலும் வய – வலி(மை) என்றே பொருள்கொள்வார் பொ.வே.சோ. அவர்கள்.
ஆசிரியர் பரிமேலழகர் வய என்றதற்கு மிகுதி என்று பொருள் கூறினர். வய என்பதற்கு மிகுதி என்னும் பொருள்
உளதாயினும் கொள்க என்று அவர் கூறுகிறார்.
3.
கல் அயல் கலித்த கரும் கால் வேங்கை
அலங்கல் அம் தொடலை அன்ன குருளை
வய புனிற்று இரும் பிண பசித்து என வய புலி
புகர் முகம் சிதைய தாக்கி களிறு அட்டு – நற் 383/1-4
மலையடிவாரத்தில் செழித்து வளர்ந்த கரிய அடிப்பகுதியையுடைய வேங்கைமரத்து மலரின்
அசைகின்ற அழகிய மாலையைப் போன்ற குட்டிகளை ஈன்ற
பிரசவ வலியால் வாடிய ஈன்றணிமையான பெரிய பெண்புலிக்குப் பசித்ததாக, வலிய ஆண்புலி
புள்ளிகளையுடைய முகம் உருக்குலைந்துபோகத் தாக்கிக் களிற்றினைக் கொன்று

வயக்கு

வயக்கு – (வி) துலக்கு, பளபளப்பாக்கு, மெருகேற்று, cause to shine
மாசு அற கண்ணடி வயக்கி வண்ணமும்
தேசும் ஒளியும் திகழ நோக்கி – பரி 12/20,21
அழுக்கு நீங்க கண்ணாடியைப் பளபளப்பாக்கி, அதில் தம் இயற்கையழகும்,
செயற்கையழகும், மேனியெழிலும் தோன்ற, அவற்றைக் கண்டு மகிழ்ந்து

வயக்குறு

வயக்குறு – (வி) துலக்கப்படு, மெருகேற்றப்படு, cause to shine by others
வாடுபு வனப்பு ஓடி வயக்குறா மணி போன்றாள் – கலி 132/14
மெலிந்து, வனப்பிழந்து, மெருகேற்றப்படாத மணியைப் போன்று ஆனவளின்

வயங்கல்

வயங்கல் – (பெ) கண்ணாடி, mirror
மணி புரை வயங்கலுள் துப்பு எறிந்தவை போல
பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உக – கலி 33/3,4
பளிங்கு மணி போன்ற கண்ணாடிக்குள் பவளத்தைப் பதித்துவைத்ததைப் போல்,
முறுக்கு அவிழ்ந்த முருக்க மரத்தின் இதழ்கள் அழகிய குளத்தில் காம்பவிழ்ந்து உதிர,

வயங்கியோர்

வயங்கியோர் – (பெ) பொலிவுபெற்றோர், தேவர்கள், radiant persons, celestials
வான் உரி உறையுள் வயங்கியோர் அவாவும்
பூ மலி சோலை அ பகல் கழிப்பி – குறி 213,214
விசும்பில் தமக்குரிய இருப்பிடத்தையுடைய பொலிவு பெற்ற தேவர்களும் விரும்பும்
பூக்கள் நிறைந்த சோலையில் அன்றைய பகற்பொழுதைக் கழித்து

வயங்கு

வயங்கு – (வி) 1. ஒளிர், சுடர்விடு, shine, glitter
2. விளங்கு, பிரசித்தமாகு, become renowned, illustrious
3. (ஒரு செயல்) முற்றுப்பெறு, accomplish (a job)
4. தெளி, become clear, lucid
5. மிகு, abound
6. பொலிவுபெறு, become resplendent, radiant
1.
வசை இல் புகழ் வயங்கு வெண் மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும் – பட் 1,2
பழிச்சொல் இல்லாத புகழையுடைய, சுடர் வீசும் வெள்ளியாகிய மீன்
(தான் நிற்பதற்குரிய)வடதிசையினின்றும் மாறி தென்திசையில் சென்றாலும்

2.
வட_மீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள் – கலி 2/21
அருந்ததி போல் வணங்கி வழிபடக்கூடிய பிறரால் போற்றுதற்குரிய கற்பினையுடைய இவளின்
வயங்கிய – பிறரால் போற்றுதற்குரிய – இராசமாணிக்கனார் உரை
3.
செய்பொருள்
வயங்காது ஆயினும் பயம் கெட தூக்கி
நீடலர் வாழி தோழி – அகம் 333/6-8
செய்யப்படும் பொருள்
முற்றாதாயினும் இன்பப் பயன் கெடுமாறு அதனையே பெரிதாக எண்ணி
அங்கேயே தாழ்த்துவிடார்
– நாட்டார் உரை
4.
அறம் கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய
உரை சால் வேள்வி முடித்த கேள்வி
அந்தணர் அரும் கலம் ஏற்ப – பதி 64/3-5
அறநூல்களை ஓதியதால் தெளிவான நாவினையுடைய, உயர்ந்த
புகழ் நிறைந்த வேள்விகள் செய்து முடித்த கேள்வியறிவையுடைய
அந்தணர்கள் அரிய கலன்களை நீர் வார்க்க ஏற்றுக்கொள்வதால்,
5.
வான் இகுபு சொரிந்த வயங்கு பெயல் கடை நாள் – நற் 142/1
வானமே இறங்கியதைப் போன்று பொழிந்த மிகுதியான மழையின் கடைசி நாளில்
6.
வயங்கு எழில் யானை பய மலை நாடனை – கலி 43/22
பொலிவுள்ள அழகுடைய யானைகளையுடைய பயன் மிக்க மலையைச் சேர்ந்தவனைப் பற்றி,

வயந்தகம்

வயந்தகம் – (பெ) மகளிர் தலை அணியின் தொங்கல், நெற்றிச்சுட்டி,
Pendant in front of a head-ornament, worn by women;
புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடை பூத்த
முள் அரை தாமரை முழு_முதல் சாய்த்து அதன்
வள் இதழ் உற நீடி வயங்கிய ஒரு கதிர்
அவை புகழ் அரங்கின் மேல் ஆடுவாள் அணி நுதல்
வகை பெற செரீஇய வயந்தகம் போல் தோன்றும் – கலி 79/1-5
பறவைகள் ஒலிக்கும் வயலில் செழித்து வளர்ந்த செந்நெல்லின் இடையே பூத்த
முள்ளைத் தண்டிலே கொண்டிருக்கும் தாமரை மலரை அடியோடு சாய்த்து, அதன்
வளமையான இதழைத் தீண்டுமளவு நீண்ட பொலிவுபெற்ற ஒரு கதிர்,
அவையோர் புகழும் அரங்கின் மேல் ஆடுகின்ற ஆடல்மகள் அழகிய நெற்றியில்
சிறப்பாகச் சூட்டிய வயந்தகம் என்னும் தலையணி போல் தோன்றும்

வயமா

வயமா – (பெ) 1. சிங்கம், கரடி முதலிய வலிய விலங்குகள், strong animals like lion, bear etc.,
2. குதிரை, horse
1.
கூட்டு உறை வயமா புலியொடு குழும – மது 677
கூட்டில் உறைகின்ற (சிங்கம், கரடி முதலிய)வலிய விலங்குகள் புலியுடன் முழங்க,
2.
முரம்பு கண் உடைய திரியும் திகிரியொடு
பணை நிலை முணைஇய வயமா புணர்ந்து
திண்ணிதின் மாண்டன்று தேரே – ஐங் 449/1-3
சரளைக் கற்கள் நிரம்பிய மேட்டுநிலம் பிளக்குமாறு இயங்கும் சக்கரங்களோடு,
கொட்டகையில் நிற்பதை வெறுத்த வலிய குதிரைகள் பூட்டப்பெற்று,
திண்மையாக ஆயத்தமாக்கப்பட்டுள்ளது தேர்;

வயமான்

வயமான் – (பெ) சிங்கம், புலி முதலிய வலிய விலங்குகள், powerful animals like lion, tiger etc.,
பொறி வரி புகர்_முகம் தாக்கிய வயமான்
கொடு_வரி குருளை கொள வேட்டு ஆங்கு – பெரும் 448,449
‘ஆழமாய்ப்பதிந்த இரேகைகளும், புள்ளிகளும் உள்ள முகத்தினையுடைய யானையைப் பாய்ந்த அரிமா
(பின்னர்)புலியின் குட்டியைப் பாய்ந்து கொள்ள விரும்பினாற் போன்று

புலி பொறி கொண்ட பூ கேழ் தட்டத்து
தகடு கண் புதைய கொளீஇ துகள் தீர்ந்து
ஊட்டுறு பல் மயிர் விரைஇ வயமான்
வேட்டம் பொறித்து வியன் கண் கானத்து
முல்லை பல் போது உறழ பூ நிரைத்து – நெடு 126-130
புலியின் உருவம் பொறிக்கப்பட்ட பொலிவு பெற்ற நிறத்தையுடைய தட்டம் போன்ற
தகடுகளால் நடுவுவெளியான இடம் மறையும்படி கோக்கப்பட்டு, குற்றமற்று
சாயம் ஏற்றப்பட்ட பல மயிர்களை (உள்ளே)பரப்பி, அதன்மேல் சிங்க
வேட்டை(க் காட்சியைப்) பொறித்து, அகன்ற இடத்தையுடைய காட்டிடத்து
முல்லைப் போது பலவற்றுடன் கலக்கும்படி (பிற)பூக்களையும் நிரைத்து

வாள் வரி வயமான் கோள் உகிர் அன்ன – அகம் 99/1
வாள் போலும் வரிகளையுடைய வலிய புலியினது கொல்லும் தொழிலையுடைய நகம் போன்ற

வயம்

வயம் – (பெ) 1. வலிமை, power, might
2. புலி, tiger
3. வெற்றி, victory
4. மூலம், வழி, Means, agency
1.
ஒடுங்கா வயத்தின் கொடும் கேழ் கடுங்கண்
இரும் புலி கொள்-மார் நிறுத்த வலையுள் – கலி 65/23,24
அடக்கமுடியாத வலிமையினையும், வளைந்த வரிகளையும், கொடிய குணமும் கொண்ட
பெரிய புலியைப் பிடிப்பதற்கு விரித்த வலையினில்
2.
வரி வயம் பொருத வய களிறு போல – புறம் 100/7
வரிகளையுடைய புலியொடு பொருத வலிய யானையை ஒப்ப
– வரி வயம் -வரிகளையுடைய புலி – ஔவை.சு.து.உரை, விளக்கம்.
3.
வயம் படு பரி புரவி மார்க்கம் வருவார் – பரி 9/51
வெற்றிக்குக் காரணமான ஓட்டத்தையுடைய குதிரைகளின் நடையினைக் கொண்டனர்,
4.
அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும்
குருகு இரை தேர கிடக்கும் பொழி காரில்
இன் இளவேனில் இது அன்றோ வையை நின்
வையை வயம் ஆக வை – பரி 6/75-78
அருகில் உன் ஊர் இருந்தும், வைகையின் நீர்ப்பெருக்கினால் தெப்பத்தில் வருவதனால் அது உன்னைத்
தாமதப்படுகின்றது,
குருகினங்கள் இரை தேடுமளவுக்கு வைகையில் நீர் வற்றிக்கிடக்கின்றது, முறையே, பொழிகின்ற
கார்காலத்திலும்,
இனிய இளவேனிகாலத்திலும்; இத்தன்மை உடையதன்றோ வையை, உன்னுடைய காமமும்
வையையின் வழிப்பட்டதே என்று கொள்;

வயலை

வயலை – (பெ) பசலைக்கொடி, purslane
1.
இந்தக் கொடியை வீட்டில் வளர்ப்பர். பசுக்கள் இதனை விரும்பி உண்ணும்.
இல் எழு வயலை ஈற்று ஆ தின்று என – நற் 179/1
வீட்டில் முளைத்தெழுந்த வயலைக்கொடியை ஈற்றுப்பசு தின்றுவிட

மனை நடு வயலை வேழம் சுற்றும் – ஐங் 11/1
வீட்டில் நடப்பட்ட வயலைக்கொடி வெளியிற் சென்று கொறுக்கச்சியைச் சுற்றிக்கொண்டிருக்கும்
2.
இதன் காய் பச்சையாக இருக்கும். கொடி சிவப்பு நிறத்தில் இருக்கும்.
புயல் புறந்தந்த புனிற்று வளர் பைம் காய்
வயலை செம் கொடி களவன் அறுக்கும் – ஐங் 25/1,2
மழையினால் பேணி வளர்க்கப்பட்ட இளமையான வளர்கின்ற பச்சையான காயையுடைய
வயலையின் சிவந்த கொடியை நண்டு அறுத்துச் செல்லும்

வயலை செம் கொடி பிணையல் தைஇ – ஐங் 52/1
வயலையின் சிவந்த கொடியைப் பிணைத்து மாலையாகக் கட்டியதால்
3.
வயலைக்கொடி வேலியிலும் படர்ந்திருக்கும்
வயலை வேலி வியலூர் அன்ன நின் – அகம் 97/13
வயலைக் கொடி படர்ந்த வேலியினையுடைய வியலூரினைப் போன்ற
4.
வயலைக் கொடியினால் ஆம்பல் மலர்களைச் சேர்த்துக்கட்டித் தழையுடையாக மகளிர் அணிந்துகொள்வர்.
மனை நகு வயலை மரன் இவர் கொழும் கொடி
அரி அலர் ஆம்பலொடு ஆர் தழை தைஇ – அகம் 176/13,14
மனையின்கண் விளங்கும் மரத்தில் படரும் கொழுவிய வயலைக் கொடியினை
விளங்கும் மலர்களையுடைய ஆம்பலொடு சேர்த்துக்கட்டிய தழையுடையை உடுத்து
5.
இந்த வயலைக்கொடியைப் பந்தல்போட்டு வளர்த்தனர்.
ஓங்கு நிலை தாழி மல்க சார்த்தி
குடை அடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலை பந்து எறிந்து ஆடி – அகம் 275/1-3
உயர்ந்த நிலையினதாகிய தாழியில் நிறைய அடைவித்து
பனங்குடையால் முகந்த நீரினை சொரிந்து வளர்த்த
வயலைக் கொடி படர்ந்த பந்தலில் பந்தினை எறிந்து விளையாடி
6.
வாடிய வயலைக்கொடி போல் பார்ப்பான் ஒருவனின் மருங்குல் (அடிவயிறு) இருந்ததாம்
வயலை கொடியின் வாடிய மருங்கின்
உயவல் ஊர்தி பயலை பார்ப்பான் – புறம் 305/1,2

வயல்

வயல் – (பெ) நெல், கரும்பு முதலியன விளையும் இடம், field where paddy, sugarcane are grown
அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த
வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க – நெடு 21,22
அழகிய வெளியையுடைய அகன்ற வயலில் நிறைந்த நீரால் செழித்து வளர்ந்த
வளப்பமான தாள்களையுடைய நெல்லிலிருந்து மேலெழுந்த கதிர் (முற்றி)வளைய

அகல் வயல்
நீடு கழை கரும்பின் கணை கால் வான் பூ – அகம் 217/3,4
அகன்ற வயலிலுள்ள
நீண்ட தண்டினையுடைய கரும்பின் திரண்ட காம்புடைய பெரிய பூக்கள்

கழனி, செறு, வயல், ஆகியவற்றுக்கிடையேயுள்ள வேறுபாட்டைக் காண
இங்கே சொடுக்கவும். கழனி செறு

வயவர்

வயவர் – (பெ) 1. வீரர், படைத்தலைவர், திண்ணியர்,
strong man; valiant man, man of robust build, Commander
2. வேட்டுவர், கானவர், hunters
1.
ஒண் பொறி கழல் கால் மாறா வயவர்
திண் பிணி எஃகம் புலியுறை கழிப்ப – பதி 19/3,4
ஒளிரும் புள்ளிகளையுடைய கழல் அணிந்த கால் முன்வைத்ததைப் பின்னால் எடுக்காத வீரர்கள்
திண்ணிதாகப் பிணிக்கப்பட்ட வாளினை அதன் புலித்தோல் உறையிலிருந்து உருவியவாறு

பொரு முரண் எதிரிய வயவரொடு பொலிந்து – மலை 547
போரிடும் பகைவரை எதிர்கொள்ளும் படைத்தலைவர்களோடே (முகம்)மலர்ந்து,
2.
கோடு துவையா கோள் வாய் நாயொடு
காடு தேர்ந்து அசைஇய வய_மான் வேட்டு
வயவர் மகளிர் என்றி ஆயின் – நற் 276/1-3
கொம்புகளை ஊதியவாறு, வேட்டையைப் பற்றிக்கொள்ளும் வாயையுடைய நாயுடன்
காட்டில் வேட்டையைத் தேடி, தளைர்ச்சியுற்ற வலிமையான விலங்குகளை வேட்டையாடும்
வேட்டுவரின் பெண்கள் என்று எம்மைச் சொல்வாயாயின்,
– ஔவை.சு.து.உரை, விளக்கம்

வயவு

வயவு – (பெ) 1. வலிமை, strength, prowess
2. வயாநோய், மசக்கைநோய், languor during pregnancy
3. பிரசவ வலி, Pains of child-birth
4. அன்பு, காதல், ஆசை, love, affection, desire
1.
வயவு பிடி முழந்தாள் கடுப்ப குழி-தொறும்
விழுமிதின் வீழ்ந்தன கொழும் கொடி கவலை – மலை 127,128
வலிமையுள்ள பெண்யானையின் முழங்காலைப் போன்று, குழிகள்தோறும்,
சிறந்த நிலையில் (நிலத்தடியில்)வளர்ந்தன, செழுமையான கொடியையுடைய கவலை எனும் கிழங்கு;
2.
கரும் கால் அன்றில் காமர் கடும் சூல்
வயவு பெடை அகவும் பானாள் கங்குல் – குறு 301/3,4
கரிய கால்களைக் கொண்ட ஆண் அன்றிலை, அது விரும்பும் முதிய சூல்கொண்ட
மசக்கைநோயால் வாடும் பெண் அன்றில் அழைக்கும் நடுராத்திரியாகிய இரவில்

வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது
பகைவர் உண்ணா அரு மண்ணினையே – புறம் 20/14,15
மசக்கைநோய் கொண்ட பெண்கள் ஆசைப்பட்டுத் தின்றால் ஒழிய
பகைவர் கைப்பற்றமுடியாத பெறுதற்கரிய மண்ணையுடையை
3.
ஈன்று அணி வயவு பிண பசித்து என மற புலி – அகம் 112/5
குட்டியை ஈன்ற அண்மையினையுடைய பிரசவ வலியினையுடைய பெண்புலி பசித்ததாக
4.
புனை வினை பொலம் கோதையவரொடு
பாகர் இறை வழை மது நுகர்பு களி பரந்து
நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்-மார்
காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்பு_உற – பரி 11/65-68
புனைந்த தொழிலையுடைய பொன்னால் செய்யப்பட்ட கழுத்துமாலைகளை அணிந்த மகளிரோடு
பாகு தங்கிய இளம் கள்ளைப் பருகி, களிப்பு மிகுந்து,
நல்ல செல்வத்தைத் தருகின்ற அறச்செயல்களைச் செய்த நாகர்களைப் போன்று இன்பநாட்டம் மிக,
நெருங்கிச் சேரும்பொருட்டு
அழகாகிய மதுவை ஒருவருக்கொருவர் கண்களாலேயே கவர்ந்து பருகும்படியாக,

வயா

வயா – 1. (வி) 1. விரும்பு, desire
2. வேட்கைகொள், காமவிருப்பம்கொள், have sexual desire
– 2. (பெ) 1. மசக்கை நோய், morning sickness, languor during pregnancy
2. காம வேட்கை, sexual desire
1.1
காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின் – மலை 476
காண்போர் விரும்பும், கண்ணுக்கு இனிய சேயாற்றின்
2.1
ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற
கடும் சூல் வயாவிற்கு அமர்ந்து நெடும் சினை
தீம் கண் கரும்பின் கழை வாங்கும் – கலி 40/26-28
சோம்பியிருத்தலை அறியாத அழகிய ஆண்யானை, தான் விரும்பும் பெண்யானை கொண்ட
முதல் கருவுறுதலின் போதான மசக்கை நோய்க்கு, மிக்க விருப்பத்துடன் நெடிதாகக் கிளைத்த
இனிய கணுக்களைக் கொண்ட கரும்பின் கழையை வளைத்து முறிக்கும்
1.2; 2.2
நீர் உறை கோழி நீல சேவல்
கூர் உகிர் பேடை வயாஅம் ஊர
புளிங்காய் வேட்கைத்து அன்று நின்
மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கே – ஐங் 51
நீரில் வாழும் சம்பங்கோழியின் நீல நிறச் சேவலை
கூர்மையான நகத்தைக் கொண்ட அதன் பேடை வேட்கை மிகுதியால் நினைக்கும் ஊரனே!
புளியங்காய்க்கு ஆசைப்பட்டது போன்றது அல்ல, உன்னுடைய
அகன்ற மார்பானது இவளின் வேட்கை நோய்க்கு

வயாஅம் என்பது வேட்கைப் பெருக்கம் உணர்த்தும் உரிச்சொல் அடியாகப் பிறந்த பெயரெச்சவினை என்பார்
ஔவை.சு.து. தன் ஐங். உரை விளக்கத்தில்

வயின்

வயின் – 1. (பெ) 1. இடம், place
2. பக்கம், side
3. பக்குவம், பதம், proper stage, as in boiling rice
4. முறை, order
– 2. (இ.சொ) இடம் என்னும் பொருள்படும் ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபு.,
Sign of the locative with meaning ‘in’, ‘with’

1.1.
வாவலும் வயின்-தொறும் பறக்கும் சேவலும்
நகை வாய் கொளீஇ நகு-தொறும் விளிக்கும் – நற் 218/3,4
வௌவாலும் இடங்கள்தோறும் பறந்து திரியலாயின; ஆந்தைச் சேவலும்
மகிழ்ச்சி மிகப்பெற்று, தனது பேடை நகுவதுபோல கூவுந்தோறும் அதனை அழைக்கும்;
1.2
புடை வீழ் அம் துகில் இட வயின் தழீஇ – நெடு 181
பக்கவாட்டில் (நழுவி)வீழ்ந்த அழகிய மேல் துண்டை இடப்பக்கத்தே அணைத்துக்கொண்டு
1.3
வளை கை மகடூஉ வயின் அறிந்து அட்ட
சுடர் கடை பறவை பெயர் படு வத்தம் – பெரும் 304,305
வளையலை அணிந்த கையினையும் உடைய பார்ப்பனி பதமறிந்து ஆக்கிய
ஞாயிறு பட்ட காலத்தே, பறவையினது பெயரைப் பெற்ற கருடன் சம்பா என்னும் நெல்லின் சோற்றையும்,
1.4
வகை சால் உலக்கை வயின்_வயின் ஓச்சி – கலி 40/5
சிறப்புப் பொருந்திய உலக்கைகளை முறை முறையாக(மாற்றி மாற்றி)க் குற்றி,
2.
அம்ம வாழி தோழி நம்-வயின்
நெய்த்தோர் அன்ன செவிய எருவை
கல் புடை மருங்கில் கடு முடை பார்க்கும்
காடு நனி கடிய என்ப – ஐங் 335/1-4
தோழியே! கேட்பாயாக! நம்மிடம் –
இரத்தம் போலச் சிவந்த செவியை உடைய கழுகுகள்
மலையின் பக்கவாட்டுப் பகுதியில் கடுமையான முடைநாற்றத்தைக் கொண்ட பிணங்களைப்
பார்த்துக்கொண்டிருக்கும்
– காட்டுப்பகுதி மிகவும் கடுமைகொண்டது என்பார்கள்

வயின்வயின்

வயின்வயின் – (வி.அ) 1. இடந்தோறும், in every place
2. முறைமுறையாக, மாற்றிமாற்றி, அடுத்தடுத்து, alternately, one after another
1.
மா_மாவின் வயின்_வயின் நெல்
————– —————————
கூடு கெழீஇய குடி வயினான் – பொரு 180-182
ஒவ்வொரு மா அளவிலான சிறு நிலங்கள்தோறும், நெல்லின் –
—————————– ——————-
– கூடு பொருந்தின வளமிக்க குடியிருப்புகளில்,

வறல் குழல் சூட்டின் வயின்_வயின் பெறுகுவிர் – சிறு 163
உலர்ந்த குழல்மீனைச் சுட்டதனோடு இடங்கள்தோறும் பெறுவீர்:
2.
வகை சால் உலக்கை வயின்வயின் ஓச்சி – கலி 40/5
சிறப்புப் பொருந்திய உலக்கைகளை மாற்றி மாற்றிக் குற்றி

வயின்_வயின்
உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை
வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே – புறம் 77/8-10
முறை முறையாக
வெகுண்டு மேல்வந்த புதிய வீரரை
மதித்தலும் அவமதித்தலும் இலன்

வயிரம்

வயிரம் – (பெ) நவமணியுள் ஒன்று, diamond
பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்று வாய் நிறைய குவைஇ – அகம் 127/8,9
பொன்னால் இயன்ற பாவையினையும், வயிரங்களையும் ஆம்பல் என்னும் எண்ணளவு
இடம் நிறையக் குவித்து

வயிரியர்

வயிரியர் – (பெ) கூத்தர், professional dancers
1.
இவர்கள் ஊர்களில் நடக்கும் திருவிழாக்களில் ஆடுவார்கள்
விழவின் ஆடும் வயிரியர் மடிய – மது 628
திருநாளின்கண் கூத்தாடும் கூத்தர் துயில்கொள்ள,
2.
இவர்கள் அரசர்களிடம் சென்று, பாடியும் ஆடியும் அவர்களை மகிழ்வித்து, அவர்களிடமிருந்து பரிசில் பெறுவர்
பாணர் வருக பாட்டியர் வருக
யாணர் புலவரொடு வயிரியர் வருக என
இரும் கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்
கொடுஞ்சி நெடும் தேர் களிற்றொடும் வீசி – மது 749-752
‘பாணர் வருவாராக, பாணிச்சியர் வருவாராக,
புது வருவாயினையுடைய புலவரோடு கூத்தரும் வருவாராக’, என்று அழைத்து
(தம்)பெரிய சுற்றத்தாரைப் பேணி ஆதரிக்கும் பரிசிலர்க்கெல்லாம்
கொடுஞ்சியையுடைய நெடிய தேர்களை யானைகளோடும் வழங்கி,
3.
இவர்கள் ஆடும்போது நிறையக் கள்ளினைக் குடிப்பர்.
நிரம்பு அகல்பு அறியா ஏறா_ஏணி
நிறைந்து நெடிது இரா தசும்பின் வயிரியர்
உண்டு என தவாஅ கள்ளின்
வண் கை வேந்தே நின் கலி மகிழானே – பதி 43/33-36
நிரம்புதலும் அகலுதலும் இல்லாத, கோக்காலியின் மேல் வைக்கப்பட்டுள்ள
நீண்ட நேரம் நிறைந்து இருப்பதை அறியாத குடங்களிலிருக்கும், கூத்தரும் பாடகரும்
உண்டபோதும் குறையாத, கள்ளினையுடைய
வளமையான கொடையினையுடைய வேந்தனே! உன்னுடைய மகிழ்ச்சிமிக்க அரசவையில்
4.
இவர்கள் பொய்பேசி அறியாதவர்கள்.
செயிர் தீர் நாவின் வயிரியர் – அகம் 155/13
குற்றமற்ற நாவினையுடைய கூத்தர்
5.
இவர்கள் யாழையும் முழவையும் இசைத்து ஆடுவர்.
பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ்
மண் அமை முழவின் வயிரியர் – புறம் 164/11,12
பண்ணுதலமைந்த நரம்பினையுடைய தோலால் போர்க்கப்பட்ட நல்ல யாழையும்
மார்ச்சனை நிறைந்த மத்தளத்தினையும் உடைய கூத்தர்

வயிர்

வயிர் – (பெ) 1. ஊதுகொம்பு, எக்காளம், trumpet, bugle
2. மூங்கில், bamboo
1.1. இது சங்குடன் சேர்ந்து முழங்கப்படும்.
வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல – திரு 120
கொம்பு மிக்கு ஒலிப்பவும், வெள்ளிய சங்கு முழங்கவும்,

வளை நரல வயிர் ஆர்ப்ப – மது 185
சங்கம் முழங்க, கொம்புகள் ஒலிக்க,
1.2.
இது மயில் அகவும் ஓசையைப் போன்றது
கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை – நெடு 99
செருக்கின மயில் ஆரவாரிக்கும், ஊது கொம்பின் ஓசையோ என்று எண்ணத்தோன்றும் இனிய ஓசை
1.3.
ஆண் அன்றில் பறவை, தன் பேடையை அழைக்கும் ஓசையைப் போன்றது.
ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில்
ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ – குறி 219,220
ஊதுகின்ற கொம்பு(போன்ற) ஓசையையுடைய வளைந்த வாயையுடைய அன்றில் பறவை
உயர்ந்த பெரிய பனையின்கண் உள்ள உள்மடலில் (இருந்து தம் பெடையை)அழைக்க
1.4
வெருண்டு பறக்கும் நாரை எழுப்பும் ஓசையைப் போன்றது.
வெண்ணெல் அரிநர் பின்றை ததும்பும்
தண்ணுமை வெரீஇய தடம் தாள் நாரை
செறி மடை வயிரின் பிளிற்றி பெண்ணை
அக மடல் சேக்கும் – அகம் 40/13-16
வெண்ணெல்லை அரிவோரின் பின்னே நிறைந்து ஒலிக்கும்
தண்ணுமைப் பறையின் ஓசைக்கு அஞ்சிய நீண்ட கால்களையுடைய நாரை
செறிந்த மூட்டுவாயினை உடைய கொம்புவாத்தியம் போல் பிளிற்றிப் பனைமரத்தின்
அகமடலில் தங்கும் கடல்துறையில் வாழும்
1.5
இதனை ஊதிப்பார்க்க, முதலில் காற்றால் ஊதி எழுப்பும் ஒலி, கிளிகள் கீ கீ எனக் கத்துவதைப் போல் இருக்கும்.

வாரல் மென் தினை புலர்வு குரல் மாந்தி
சாரல் வரைய கிளை உடன் குழீஇ
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும் – நற் 304/1-3
நீண்ட மெல்லிய தினையின் புலர்ந்த கதிரினை நிறையத் தின்று
சரிவுள்ள மலையில் இருக்கும் தன் இனத்தோடே சேர்ந்து கூடி,
காற்று புகுந்து செல்வதால் ஒலிக்கும் வயிர் என்ற ஊதுகொம்பைப் போல கிளிகள் ஒலிசெய்யும்
1.6
இந்தக் கொம்பில் ஒளிவிடும் மணிகள் பதிக்கப்பெற்றிருக்கும்.
வயங்கு கதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்ப – பதி 67/6
ஒளிர்கின்ற கதிர்களையுடைய மணிகள் பதித்த கொம்புகளுடன், வலம்புரிச் சங்குகளும் முழங்க
1.7
போருக்குச் செல்லும் முன் கொம்புகள் ஊதப்படும்.
கொல் படை தெரிய வெல் கொடி நுடங்க
வயங்கு கதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்ப – பதி 67/5,6
வீரர்கள் கொல்லுகின்ற படைக்கலன்களைத் தெரிவுசெய்ய, வெற்றிக்கொடி அசைந்தாட,
ஒளிர்கின்ற கதிர்களையுடைய மணிகள் பதித்த கொம்புகளுடன், வலம்புரிச் சங்குகளும் முழங்க
1.8
போரில் வெற்றிபெற்றுத் திரும்பும்போது கொம்புகள் ஊதப்படும்.
வேண்டு புலம் கவர்ந்த ஈண்டு பெரும் தானையொடு
விசயம் வெல் கொடி உயரி வலன் ஏர்பு
வயிரும் வளையும் ஆர்ப்ப – முல் 90-92
(தான்)விரும்பும் நிலங்களைக் கைக்கொண்ட, திரளுகின்ற பெரிய படையோடே,
வெற்றியால், வென்றெடுக்கின்ற கொடியை உயர்த்தி, வலப்பக்கம் உயர்த்தி
கொம்பும் சங்கும் முழங்க

2.
முளி வயிர் பிறந்த வளி வளர் கூர் எரி
சுடர் விடு நெடும் கொடி விடர் முகை முழங்கும்- ஐங் 395/1,2
காய்ந்துபோன மூங்கிலில் உற்பத்தியாகி, காற்றால் வளர்க்கப்பட்ட கூர்மையான கொழுந்துகளையுடைய நெருப்பின்
ஒளிவிடும் நீண்ட கொடியானது மலைப் பிளவுகளின் பொந்துகளில் முழக்கமிடும்

வரகு

வரகு – (பெ) ஒரு வகைத் தானியம், Common millet, Paspalum scrobiculatum
1.
வரகரிசி பூளைப் பூவைப்போல் இருக்கும். இது விளையும் தாவரம் குட்டையாக இருக்கும்.
நெடும் குரல் பூளை பூவின் அன்ன
குறும் தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி – பெரும் 192,193
நெடிய கொத்தினையுடைய சிறு பூளையின் பூவை ஒத்த
குறிய தாளினையுடைய வரகின் சிறிய பருக்கைகளாகிய சோற்றை,
– வரகு நெற்பயிர் போல் ஓங்கி வளராமையின் குறுந்தாள் என்றார் – பொ.வே.சா விளக்கம்

2.
முல்லைநில மக்கள் தங்கள்வீட்டுக் கூரைகளை வரகுத்தாள்களால் வேய்வர்
ஏனல் உழவர் வரகு மீது இட்ட
கான் மிகு குளவிய வன்பு சேர் இருக்கை – பதி 30/22,23
தினைப்புனத்தை உழுது வாழும் குறவர்கள், வரகுத்தாள்களை மேலே வேய்ந்த,
மணம் மிக்க காட்டுமல்லிகை வளர்கின்ற, வலிய நிலத்தைச் சேர்ந்த, மனைகளில்
3.
வரகு விளைந்தபின், அதனை அறுத்து, நிலத்தை உழுது கொள்ளை விதைப்பர்
வெள் வரகு உழுத கொள் உடை கரம்பை – பதி 75/11
வெள்ளை வரகுக்குப் பின் உழுது விதைத்துப் பெற்ற கொள்ளும் உடைய களர்நிலம் ஆகி,

வரன்று

வரன்று – (வி) இழுத்துச்செல், தேய்த்து அடித்துச்செல்
அரு வரை மருங்கின் ஆய் மணி வரன்றி
ஒல்லென இழிதரும் அருவி – ஐங் 233/2,3
அரிய மலையின் பக்கங்களில் அழகுபெற்ற மணிகளைத் தேய்த்து இழுத்துக்கொண்டுபோய்
ஒல்லென்ற ஓசையுடன் கீழிறங்கும் அருவியையுடைய

வரம்

வரம் – (பெ) தெய்வம் முதலியவற்றாற் பெறும் பேறு, Boon, gift, blessing by a deity or a great person;
ஒரு முகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி
காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே – திரு 92-94
ஒரு முகம்
(தன்பால்)அன்புசெய்தவர்கள் வாழ்த்த, (அவர்க்கு) முகனமர்ந்து இனிதாக நடந்து,
(அவர்மேல் கொண்ட)காதலால் மகிழ்ந்து (வேண்டும்)வரங்களைக் கொடுத்தது

வரம்பு

வரம்பு – (பெ) 1. எல்லை, உயரளவு, Boundary, limit, extent
2. வயல் வரப்பு, ridge of a field
1.
எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கை – அகம் 109/8
எண்ணின் எல்லை அறியலாகாத தழையிட்டு மூடிய பதுக்கைகளையுடைய
2.
கழனி நெல்லின் கவை முதல் அலங்கல்
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையா துயல்வர – அகம் 13/19,20
வயல் நெல்லின் பலவாகக் கிளைத்த முதலிலிருந்து தோன்றிய நெற்கதிர்
நிரம்பிய அகன்ற வயலினிடத்து வரப்புகளை அணையாகக் கொண்டு கிடந்து அசைய

வரால்

வரால் – (பெ) வெளிர்ப்பச்சை அல்லது வெளிர்க் கருநிற மீன் வகை,
Murrel, a fish, greyish green, attaining 4 ft. in length, ophiocephalus marulius
நுண் ஆரல் பரு வரால்
குரூஉ கெடிற்ற குண்டு அகழி – புறம் 18/9,10
நுண்ணிய ஆரல் மீனையும், பரிய வரால் மீனையும்
நிறமுடைய கெடிற்றினையுடைய குழிந்த கிடங்கினையும்

வரி

வரி – 1. (வி) 1. இழுத்துக் கட்டு, tie, bind, fasten
2. ஓடு, run, flow
3. கோலமிடு, கோடுபோடு, decorate by drawing lines
– 2. (பெ) 1. புள்ளி, dot
2. கோடு, line, stripe
3. நிறம், colour
4. பெண்களின் மார்பில் தொய்யிலால் தீட்டப்பெற்ற வரைவு, Ornamental marks on the breast
5. வளையல், bangles
6. இசைப்பாடல், tune, melody
7. தேமல், Spreading spots on the skin
8. ஒழுங்கு வரிசை, orderly line, as of ducks in flight
9. அழகு, beauty;

1.1
வரி புனை பந்தொடு பாவை தூங்க – திரு 68
(நூலால்)வரிந்து புனையப்பட்ட பந்துடன் பாவையும் தூங்கிக்கிடப்ப,

வண்ண வரி வில் ஏந்தி அம்பு தெரிந்து – குறி 124
வண்ணத்தையுடைய வரிந்து கட்டப்பட்ட வில்லை எடுத்து, அம்புகளைத் தெரிந்து பிடித்து
1.2
துனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும்
காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின் – மலை 475,476
வேகமான நீரோட்டத்தையுடைய முதல் மதகில் ஒழிவின்றி ஓடும்,
காண்போர் விரும்பும், கண்ணுக்கு இனிய சேயாற்றின்
1.3
எக்கர் ஞெண்டின் இரும் கிளை தொழுதி
இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர்
உணங்கு தினை துழவும் கை போல் ஞாழல்
மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன் – நற் 267/2-5
மணல்மேட்டு நண்டின் பெரிய சுற்றத்தோடு கூடிய கூட்டம்,
ஒளிரும் பற்களையுடைய அழகிய இனிய நகையினை உடைய மகளிர்
வெயிலில் காயும் தினையைத் துழாவும் கையைப் போல், ஞாழலின்
மணம் கமழும் நறிய உதிர்ந்த பூக்களை இழுத்துச் சென்று வரிவரியாகக் கோலம் செய்யும் துறையைச்
சேர்ந்தவன்

மண் கொள வரிந்த வை நுதி மருப்பின்
அண்ணல் நல் ஏறு – புறம் 288/1,2
மண்ணைக் குத்திக்கொள்வதால் வரிவரியாகக் கோடுகள் போடப்பட்ட மிக்க கூரிய கொம்பினையுடைய
பெருமை பொருந்திய நல்ல ஆனேறு
2.1
வை_நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் – திரு 78
கூரிய நுனி(யையுடைய தோட்டி) வெட்டின வடு அழுந்தின புகரையுடைய நெற்றியில்
2.2
பாம்பு பட புடைக்கும் பல் வரி கொடும் சிறை
புள் அணி நீள் கொடி செல்வனும் – திரு 150,151
பாம்புகள் மாளும்படி அடிக்கின்ற பல வரியினையுடைய வளைந்த சிறகினையுடைய
கருடனை அணிந்த நீண்ட கொடியினையுடைய திருமாலும்

சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ – சிறு 12
சுரத்தின்கண்ணுள்ள கடப்ப மரத்தினுடைய கோடுகளாகிய நிழலிடத்தே தங்கி
2.3
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
விரவு வரி கச்சின் பூண்ட மங்கையர் – முல் 46,47
இரவைப் பகலாக்கும், திண்ணிய கைப்பிடியையுடைய ஒளிவிடும் வாளை
பலவித நிறங்களையுடைய கச்சினால் பூண்ட மங்கையர்,
2.4
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்ப – நற் 225/7
தொய்யில் குழம்பால் தீட்டப்பட்ட அழகிய முலைகள் தம் மீது வரைந்த வனப்பை இழக்க,
2.5
வணங்கு இறை வரி முன்கை வரி ஆர்ந்த அல்குலாய் – கலி 60/4
வளைந்து இறங்குகின்ற, வளையல் அணிந்த முன்கையினையும், தித்தியாகிய வரி நிறைந்த அல்குலையும்
உடையவளே
– நச். உரை
2.6
பொன் வார்ந்து அன்ன புரிஅடங்கு நரம்பின்
வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப – புறம் 135/5,6
பொன்னைக் கம்பியாகச் செய்தாற் போன்ற முறுக்கடங்கின நரம்பினையுடைய
இசைப்பாடலின் பொருண்மையொடு பயிலும் பாட்டு நிலந்தோறும் மாறிமாறி ஒலிப்ப
2.7
அடர் பொன் அவிர் ஏய்க்கும் அம் வரி வாட
சுடர் காய் சுரம் போகும் நும்மை – கலி 22/19,20
அடித்து நீட்டப்பட்ட பொன் தகட்டைப் போல் ஒளி வீசும் எம் அழகிய தேமல் தம் அழகு கெட
ஞாயிறு காய்கின்ற காட்டுவழியைக் கடந்து போக எண்ணும் உம்மை
2.8
கார் மழை முன்பின் கைபரிந்து எழுதரும்
வான் பறை குருகின் நெடு வரி பொற்ப – பதி 83/1,2
கரிய மேகங்களுக்கு முன்பாக, ஒழுங்கு குலைந்து எழுகின்ற
வெண்மையான சிறகுகளைக் கொண்ட கொக்குகள் பின்பு நீண்ட வரிசையாய்ச் செல்வதைப் போன்ற
2.9
விசும்பின்
எய்யா வரி வில் அன்ன பைம் தார்
செ வாய் பைம் கிளி – அகம் 192/3-5
வானத்திலுள்ள
எய்யப்பெறாத அழகிய வில்லை ஒத்த பசிய மாலையினையும்
சிவந்த வாயினையும் உடைய சிறிய கிளி

வரிசை

வரிசை – (பெ) 1. தகுதி, worth, merit
2. பாராட்டு, regard
3. ஒருவர்க்குச் செய்யப்படும் மரியாதை, சிறப்பு,
Distinctive mark of honour or privilege granted by a royal or other authority
4. சிறப்பு, மேம்பாடு, excellence, eminence
5. ஒழுங்கு, முறைமை, order, regularity
1.
வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும்
பரிசில் வாழ்க்கை பரிசிலர் ஏத்த – சிறு 217,218
(புலவரின்)தகுதியை அறிதலையும், குறையாமல் கொடுத்தலையும்(உள்ள அவனை)
பரிசில் (பெற்று வாழும்)வாழ்க்கையையுடைய பரிசிலர் புகழ்ந்துசொல்ல,
2.
வரிசை பெரும் பாட்டொடு எல்லாம் பருகீத்தை – கலி 85/35
உன் புகழைப் பாராட்டும் பெரிய பாராட்டுரைகளைக் கேட்டு மீதியுள்ள எல்லாப்பாலையும் பருகுவாயாக,
3.
வரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கை – புறம் 47/6
தம்மைப் புரப்போராற் பெறும் சிறப்புஏதுவாக வருந்தும் இப் பரிசிலான் வாழும் வாழ்க்கை
4.
நின், ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப
பாடுவன்மன்னால் பகைவரை கடப்பே – புறம் 53/14,15
நினது, வென்றிகொண்ட சிறப்பிற்குப் பொருந்த
பாடுவேன், நீ பகைவரை வென்ற வெற்றியை
5.
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன் – புறம் 200/14
பகைவரைப் போர்செய்யும் முறைமையால் பொருது அவர்களைத் தாழ்விக்கும் வாளால் மேம்பட்டவன்

வருகம்

வருகம் – (வி.மு) வருவோம், let us (go and)come
செறி தொடி தெளிர்ப்ப வீசி சிறிது அவண்
உலமந்து வருகம் சென்மோ தோழி – அகம் 106/8,9
செறிந்த வலை ஒலித்திடக் கையை விசி, சிறிது பொழுது அவ்விடத்தே
உலாவி வருவோம் வருவாயாக

வருகுவை

வருகுவை – (வி.மு) வருவாய், you may come
இன்று யாண்டையனோ தோழி ———
——————– ——————–
அறிவு காழ்க்கொள்ளும் அளவை செறி_தொடி
எம் இல் வருகுவை நீ என
பொம்மல் ஓதி நீவியோனே – குறு 379/5
இன்று எங்கிருக்கின்றானோ? தோழி! ————
———————- ————————-
உன் அறிவு முதிர்ச்சியடையும் காலத்தில், செறிந்த வளையல்களையுடையாய்!
எமது இல்லத்துக்கு வருவாய் நீ என்று
பொங்கிவரும் கூந்தலைத் தடவிக்கொடுத்தவன் –

வருகோ

வருகோ – (வினா) வரவா? shall I come?
குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ
குறும் சுனை குவளை அடைச்சி நாம் புணரிய
நறும் தண் சாரல் ஆடுகம் வருகோ
இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உண – நற் 204/2-5
தளிர்கள் சேர்ந்த குளிர்ச்சியுள்ள தழையுடையை அணிந்து உனது தந்தையின்
கிளிகடிகருவியால் காக்கப்படும் அகன்ற தினைப்புனத்திற்கு ஞாயிறு தோன்றும் காலையில் வரவா?
பறித்த சுனைக் குவளை மலரைச் சூடி, நாம் முன்பு சேர்ந்திருந்த
நறிய குளிர்ந்த மலைச்சாரலில் ஆடுவதற்கு வரவா?

வருடு

வருடு – (வி) தடவிக்கொடு, கோது, stroke gently, caress lightly, fondle, massage
மெல் இயல் மகளிர் நல் அடி வருட – நெடு 151
மென்மையான தன்மையினை உடைய சேடியர் (தலைவியின்)நல்ல அடியை மென்மையாக அமுக்கிவிட

ஈன்ற மாத்தின் இளம் தளிர் வருட
ஆர் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் – அகம் 306/4,5
காய்த்த மாமரத்தின் இளம் தளிர் தடவிக்கொடுக்க
மீனை உண்ட நாரை துயிலும் நீர் சூழ்ந்த வளம்பொருந்திய வயலிடத்தே

வருடை

வருடை – (பெ) 1. வரையாடு, Mountain sheep
2. மேட இராசி, Aries of the zodiac
1.
நெடு வரை மிசையது குறும் கால் வருடை
தினை பாய் கிள்ளை வெரூஉம் நாட – ஐங் 287/1,2
நீண்ட மலையின் உச்சியில் உள்ள குட்டையான கால்களையுடைய வரையாட்டைப் பார்த்து,
தினைக் கதிரில் வந்து வீழும் கிளிகள் வெருளும் நாட்டினனே

2.
உரு கெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர
வருடையை படிமகன் வாய்ப்ப – பரி 11/4,5
மிக்க வெண்மையான நிறத்தைக்கொண்ட வெள்ளியானது இடபராசியைச் சேர,
மேடராசியைச் செவ்வாய் சேர்ந்துநிற்க

வருதி

வருதி – (வி.மு) வருகிறாய், you are coming
துஞ்சு மனை நெடு நகர் வருதி
அஞ்சாயோ இவள் தந்தை கை வேலே – ஐங் 60/3,4
வீட்டிலுள்ளோர் தூங்கிக்கொண்டிருக்கும் பெரிய இல்லத்திற்கு வருகிறாய்;
அஞ்சமாட்டாயோ, இவளின் தந்தையின் கையிலுள்ள வேலுக்கு?

வருதியர்

வருதியர் – (ஏவல்) வருவீராக, you(plural) may come.
நல் கோள் சிறு தினை படு புள் ஓப்பி
எல் பட வருதியர் என நீ விடுத்தலின் – குறி 38,39
நன்றாக(த் தன்னிடத்தில்) கொள்ளுதலையுடைய சிறுதினை(ப்பயிர்களின்மேல்) வீழ்கின்ற கிளிகளை ஓட்டி(விட்டு)
பொழுது சாய (நீர்)வருவீராக” என்று கூறி நீ (போக)விடுகையினால்,

வருதியோ

வருதியோ – (வினா) வருகிறாயா? do you come (with me)?
குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம்
எம்மொடு வருதியோ பொம்மல்_ஓதி என
கூறின்றும் உடையரோ – நற் 274/5-7
குமிழமரங்கள் செறிந்துவளர்ந்த, சிறிதானவும் பலவானதுமான வழிகளில்
என்னோடு வருகிறாயா? அடர்ந்த கூந்தலையுடையவளே என்று
கூறியதும் உண்டல்லவா?

வருதிர்

வருதிர் – (வி.மு) வருகின்றீர், you are coming
ஒன்றி முயங்கும் என்று என் பின் வருதிர் – கலி 143/17
என்றேனும் ஒருநாள் இவள் அவனைச் சேர்ந்து ஒன்றாயிருப்பாள் என்று என் பின்னே வருகின்றீர்

வருதிறம்

வருதிறம் – (பெ) வருகின்ற வழி, வருகின்ற விதம்,
the way, path in which (s.b) comes, the manner of coming
வம்ப மாக்கள் வரு_திறம் நோக்கி
செம் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் – நற் 298/1,2
பாலை வழியில், புதிய மக்கள் வருகின்ற தன்மையைப் பார்த்து,
செம்மையான அம்பினை அவர்மீது தொடுக்கும் சினந்த பார்வையினரான ஆடவர் எழுப்பும்

புருவை பன்றி வரு_திறம் நோக்கி – அகம் 88/4
இளமை பொருந்திய பன்றி வரும் வழியைப் பார்த்து

வீளை பருந்தின் கோள் வல் சேவல்
வளை வாய் பேடை வரு_திறம் பயிரும் – அகம் 33/5,6
சிள்ளென்று ஒலிசெய்யும் இரை கொள்வதில் வல்ல பருந்தினது சேவல்
வளைந்த வாயையுடைய தனது பேடை தன்பால் வரும்விதத்தில் அழைக்கும்

வருதும்

வருதும் – (வி.மு) வருகிறோம், we are coming
யாம் அவண்_நின்றும் வருதும் – சிறு 143
யாம் அங்கேயிருந்து வருகிறோம்.

வருநர்

வருநர் – (பெ) வருபவர், comers
உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய் – புறம் 398/14
நின்னை நினைத்து வரும் பரிசிலரின் கொள்கலம் நிரம்ப அரிய பொருள்களை வழங்குபவனே

வருந்தல்

வருந்தல் – 1. (வி.மு) வருந்தவேண்டாம், do not be grieved
2. (பெ) வருத்தம் கொள்ளுதல், grieving
1.
யாம் செய் தொல்_வினைக்கு எவன் பேது உற்றனை
வருந்தல் வாழி தோழி – நற் 88/1,2
நாம் என்றோ செய்த அந்தப் பழைய செயலுக்காக ஏன் கலக்கமுறுகின்றாய்?
வருந்தவேண்டாம்! வாழ்க தோழியே!
2.
கடும் பரி நெடும் தேர் கால் வல் புரவி
நெடும் கொடி முல்லையொடு தளவ மலர் உதிர
விரையுபு கடைஇ நாம் செல்லின்
நிரை வளை முன்கை வருந்தலோ இலளே – ஐங் 422
விரைந்த ஓட்டத்தையுடைய, நெடிய தேரில் பூட்டப்பட்ட, கால்கள் வலிதான குதிரையை,
நீண்ட கொடியையுடைய முல்லையுடன் தளவ மலர்களும் உதிர்ந்து விழுமாறு
வேகமாகச் செலுத்தி நாம் சென்றால்,
வரிசையாக அடுக்கப்பட்ட வளையல்களையுடைய முன்னங்கையையுடையவள் வருத்தம் தீர்வாள்.

வருபு

வருபு – (வி.எ) வந்து, came
வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி – கலி 101/11
ஏறுதழுவும் நடைமுறையை எதிர்கொண்டு வந்து வந்து திரண்டு

வருவம்

வருவம் – (வி.மு) வருகின்றோம், வருவோம், shall come
முன்னியது முடித்தனம் ஆயின் நன்_நுதல்
வருவம் என்னும் பருவரல் தீர
படும்-கொல் வாழி நெடும் சுவர் பல்லி – நற் 169/1-3
எண்ணிச் சென்ற காரியத்தை முடித்துவிட்டால், நல்ல நெற்றியையுடையவளே!
திரும்பிவிடுவோம் என்று கூறியவுடன் அவள் பட்ட துன்பமெல்லாம் இப்போது தீரும்படியாக,
ஒலித்தது, வாழ்க! நீண்ட சுவரில் உள்ள பல்லி!

வருவல்

வருவல் – (வி.மு) 1. வருகிறேன், am coming
பனி வார் உண்கண் பைதல கலுழ
நும்மொடு வருவல் என்றி – நற் 162/5,6
நீர் வடிகின்ற மையுண்டகண்கள் துன்பமுற்றனவாய்க் கலங்கிநிற்க,
உம்முடனேயே வருகிறேன் என்று கூறுகின்றாய்

வருவை

வருவை – (வி.மு) வருவாய், you will come
வருவை ஆகிய சில் நாள்
வாழாள் ஆதல் நற்கு அறிந்தனை சென்மே – நற் 19/8,9
நீ மீண்டும் வருவாய் என்று குறிப்பிட்ட சில நாட்களும்
வாழமாட்டாள் என்பதனை நன்கு அறிந்தவனாகச் செல்வாயாக!

வரை

வரை – 1. (வி) 1. மணம்பேசு, மணம்செய், ask for marriage, marry
2. நீங்கு, கைவிடு, forsake, abandon
3. தனக்குரியதாக்கு, To make one’s own; to appropriate;
4. நிர்ணயி, fix, appoint
5. ஒரே அளவாக நறுக்கு, cut into pieces of same size
6. தடு, கட்டுப்படுத்து, stop, restrain
7. அளவுபடுத்து, limit;
– 2. (பெ) 1. மூங்கில், bamboo
2. மலை, mountain
3. மலைச்சாரல், பக்கமலை, side-hill, slope of a hill
4. வரைப்பு, எல்லை, limit, boundary
5. கட்டுப்பாடு, restraint
6. அளவு, measure, extent
1.1
வேந்து பகை தணிக யாண்டு பல நந்துக
என வேட்டோளே யாயே யாமே
மலர்ந்த பொய்கை முகைந்த தாமரை
தண் துறை ஊரன் வரைக
எந்தையும் கொடுக்க என வேட்டேமே – ஐங் 6/2-6
வேந்தன் பகை தணிவானாக; அவன் வாழ்நாள் பல ஆண்டுகளுக்கு நீளுக
என்று வேண்டினாள் தலைவி; தோழியராகிய நாங்களோ
அகன்று விரிந்த பொய்கையில் மொட்டுகள் விட்டிருக்கும் தாமரையையுடைய
குளிர்ந்த நீர்த்துறையையுடைய ஊரினைச் சேர்ந்த தலைவன் மணம்பேசி வருக,
எம் தந்தையும் இவளை அவனுக்குக் கொடுக்கட்டும் என்று வேண்டினோம்

நின் உறு விழுமம் கூற கேட்டு
வருமே தோழி நன் மலை நாடன்
வேங்கை விரிவு இடம் நோக்கி
வீங்கு இறை பணை தோள் வரைந்தனன் கொளற்கே – கலி 38/23-26
நீ படுகின்ற பாட்டை நான் கூறக்கேட்டு
வருகின்றார், தோழியே! நல்ல மலைநாட்டைச் சேர்ந்தவர்!
வேங்கை மரங்கள் பூக்கின்ற நல்ல நாளை எதிர்நோக்கியிருந்து,
பருத்து இறங்குகின்ற இந்தப் பெருத்த தோள்காரியை மணமுடித்துச் செல்வதற்கு.
1.2
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக என் நிலவரை – புறம் 72/15,16
உலகத்தோடு நிலைபெற்ற பலரும் புகழும் தலைமையையுடைய
புலவர் பாடாது நீங்குக எனது நில எல்லையை

நன் நுதல் நலன் உண்டு துறத்தல் கொண்க
தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல் – கலி 133/16,17
நல்ல நெற்றியின் நலத்தை நுகர்ந்து அவளைக் கைவிடுதல், கொண்கனே!
இனிய பாலைக் குடித்தவர் பின்பு அந்தக் கலத்தைத் தூக்கியெறிவது போலாகும்
1.3
வீங்கு செலம் மண்டிலம்
பொழுது என வரைதி புறக்கொடுத்து இறத்தி – புறம் 8/6,7
மிக்க செலவையுடைய ஞாயிற்று மண்டிலமே
நீ பகற்பொழுதை நினக்கென கூறுபடுப்பை, திங்கள் மண்டிலத்திற்குப் புறக்கொடுத்துப் போகிறாய்
1.4
அதனால் புகழொடும் கழிக நம் வரைந்த நாள் என – மலை 557
அதனால், புகழோடே முடிவடையட்டும், நமக்காக நிர்ணயித்த வாழ்நாள்’ என்று
1.5
வெள்ளி
கோல் வரைந்து அன்ன வால் அவிழ் மிதவை – அகம் 37/12,13
வெள்ளிக்
கம்பியை ஒரேஅளவாக நறுக்கியதைப் போன்ற வெண்மைநிறமுள்ள சோற்றுப்பருக்கைகள் நிறைந்த கஞ்சியை
1.6
பெரும் செய் ஆடவர் தம்மின் பிறரும்
யாவரும் வருக ஏனோரும் தம் என
வரையா வாயில் செறாஅது இருந்து – மது 746,748
பெரிய செய்கைகளையும் உடைய ஆடவர்களைக் கொணர்மின்; (இத்தகைய)பிறரும்
எல்லாரும் வருக, ஏனோரையும் கொணர்மின்’ என்று
வரைந்து கூறி, வாயிலில் தடுத்து நிறுத்தாமல் யாவருக்கும் காண்பதற்கு எளிமையாய் இருந்து,
1.7
வரையா தாரம் வரு விருந்து அயரும் – நற் 135/3
அளவுபடாத உணவுப்பொருள்களை இல்லத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு அளித்துமகிழும்
2.1.
மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் – திரு 12
பெரிய மூங்கில் உயர்ந்து வளர்ந்துள்ள வானளாவிய மலையிடத்தே,
2.2.
வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி – மலை 92
மலையை ஒத்த உயர்ச்சியோடு வானை எட்டித் தொடும் மதிலினையுமுடைய,
2.3.
வரை தாழ் அருவி பொருப்பின் பொருந – மது 42
மலைச்சாரலில் வீழ்கின்ற அருவியினையுடைய மலைக்கு வேந்தனே
2.4.
கரும் கால் குறிஞ்சி மதன் இல் வான் பூ
ஓவு கண்டு அன்ன இல் வரை இழைத்த
நாறு கொள் பிரசம் ஊறு நாடற்கு – நற் 268/3-5
கருத்த காம்புகளைக் கொண்ட குறிஞ்சியின் வலிமையற்ற ஒளிரும் பூவின் தேனைக்கொண்டு
ஓவியத்தைப் பார்த்தாற்போன்று வீட்டு உச்சியில் கட்டப்பட்டுள்ள
மணங்கமழும் தேன்கூட்டில் தேன் ஒழுகுகின்ற நாட்டினையுடைவனிடம்

பகைவர்
கால் கிளர்ந்து அன்ன கதழ் பரி புரவி
கடும் பரி நெடும் தேர் மீமிசை நுடங்கு கொடி
புல வரை தோன்றல் யாவது – பதி 80/12-15
உன் பகைவரின்
காற்று மேலெழுந்ததைப் போன்ற விரைவான ஓட்டத்தையுடைய குதிரைகள் பூட்டிய
வேகமாகச் செல்லும் நெடிய தேர் மீது கட்டிய அசைந்தாடும் கொடி
அவரது நாட்டின் எல்லையில் தோன்றுவது எவ்வாறு?
2.5
காழ் வரை நில்லா கடும் களிற்று ஒருத்தல்
யாழ் வரை தங்கிய ஆங்கு – கலி 2/26,27
குத்துக்கோலின் கட்டுப்பாட்டுக்கும் அடங்காமல் செல்லும் களிற்றியானை
யாழிசையின் எல்லையிலே அடங்கி நிற்பது போல
2.6
சேயார் கண் சென்ற என் நெஞ்சினை சில்_மொழி
நீ கூறும் வரைத்து அன்றி நிறுப்பென்-மன் – கலி 29/10,11
தொலைநாட்டில் இருப்பவரிடம் சென்ற என் நெஞ்சினை, சிறிதளவே பேசுபவளே!
நீ கூறும் அளவுக்கும் மேல் தடுத்து நிறுத்துகின்றேன்,

இமைப்பு வரை அமையா நம்_வயின்
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே – குறு 218/6,7
இமைப்பொழுது அளவும் பிரிந்திருக்காத நம்மை
மறந்து அங்கு இருப்பதற்கு ஆற்றலுள்ளோருக்காக –

வரைஅரமகளிர்

வரைஅரமகளிர் – (பெ) மலைவாழ்தெய்வப்பெண்கள், Goddesses residing in mountains
வரை_அர_மகளிரின் சாஅய் விழை_தக
விண் பொரும் சென்னி கிளைஇய காந்தள்
தண் கமழ் அலரி தாஅய் – குறி 195-197
மலைவாழ் தெய்வப்பெண்டிர் ஆடுதலால் தம் நலம் சிறிது கெட்டு, கண்டோர் விரும்பும்படி 195
விசும்பைத் தீண்டுகின்ற சிகரங்களில் கிளைத்த செங்காந்தளின்
குளிர்ந்த மணம் கமழ்கின்ற பூக்கள் உதிர்ந்து பரவி

வரைகோள்

வரைகோள் – (பெ) வரைவுகொள்ளுதல், தடைசெய்யல், தடுத்தல், forbidding
உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும்
வரைகோள் அறியா சொன்றி
நிரை கோல் குறும்_தொடி தந்தை ஊரே – குறு 233/4-7
பெரியவர்களுக்கு
நீருடன் சொரிந்து மிஞ்சிய பொருளையும், எல்லாருக்கும்
வரையறுத்துக்கொள்ளுதலை அறியாத சோற்றினையும் உடைய
வரிசைப்பட்ட திரண்ட குறிய வளையலையுடையவளின் தந்தையின் ஊர்

உண்மரும் தின்மரும் வரைகோள் அறியாது
குரை தொடி மழுகிய உலக்கை வயின்-தோறு
அடை சேம்பு எழுந்த ஆடு_உறும் மடாவின்
எஃகு உற சிவந்த ஊனத்து யாவரும்
கண்டு மதி மருளும் வாடா சொன்றி – பதி 24/18-22
உண்பாரும், தின்பாருமாய் வரைவுகொள்வதை அறியாது உண்டும்
ஒலிக்கின்ற பூண் மழுங்கிப்போன உலக்கை இருக்கும் இடங்கள்தோறும்
இலையையுடைய சேம்பினைப் போன்ற அடுப்பிலிடப்பட்ட பெரிய பானையினையும்,
வாளால் இறைச்சியை வெட்டும்போது சிவந்துபோன வெட்டுமரத்தையும் யாவரும்
கண்டு வியக்கும் – குறையாத சோறு

வரைப்பு

வரைப்பு – (பெ) 1. உலகம், world
2. எல்லை, limit, boundary
3. சுவர்/வேலி சூழ்ந்த இடம்/வீடு, enclosed space/house
4. மதில், wall of a fort or temple
5. மாளிகை, mansion
1.
வெம்பாது ஆக வியல் நில வரைப்பு என – பரி 11/80
வெம்மையால் வாடாது இருக்கட்டும் இந்த அகன்ற நிலவுலகம் என்று
2.
இன்னா செயினும் இனிது தலையளிப்பினும்
நின் வரைப்பினள் என் தோழி
தன் உறு விழுமம் களைஞரோ இலளே – குறு 397/6-8
இன்னாதவற்றைச் செய்தாலும், இனியவற்றை அளித்தாலும்
உன் எல்லைக்குட்பட்டவளே என் தோழி!
தானுற்ற மிக்க துன்பத்தைக் களைவார் அவளுக்கு இல்லை.
3.
உதள
நெடும் தாம்பு தொடுத்த குறும் தறி முன்றில்
கொடு முக துருவையொடு வெள்ளை சேக்கும்
இடு முள் வேலி எரு படு வரைப்பின் – பெரும் 151-154
ஆட்டுக்கிடாயின்
நெடிய தாம்புகள் கட்டப்பட்ட குறிய முளைகளையும் உடைய முற்றத்தில்,
வளைந்த முகத்தையுடைய செம்மறியாட்டுடன் வெள்ளாடும் கிடக்கும்
கட்டு முள் வேலியினையுடைய எருக்குவியல்கள் மிகுந்திருக்கும் வேலி சூழ்ந்த இடத்தில்
4.
அரும் கடி வரைப்பின் ஊர் கவின் அழிய – பட் 269
அரிய காவலையுடைய மதிலையுடைய பகைவரின் படைவீடுகள் அழகு அழியவும்
5.
துறை விட்டு அன்ன தூ மயிர் எகினம்
துணையொடு திளைக்கும் காப்பு உடை வரைப்பில் – அகம் 34/12,13
ஆற்றுத்துறையில் அலசிவிடுவது போன்ற தூய வெண்மையான மயிர்களையுடைய அன்னங்கள்
தம் பெடைகளுடன் விளையாடி மகிழும் காவல் உள்ள மனையகத்தில்,

வரைவு

வரைவு – (பெ) 1. அளவு, measure, extent
2. மணம்புரிதல், marrying
1.
உரை சால் நன் கலம் வரைவு இல வீசி – பதி 54/8
புகழ்ந்துரைக்கும்படியான நல்ல அணிகலன்களை அளவில்லாமல் வழங்கி
2.
நுதலும் தோளும் திதலை அல்குலும்
வண்ணமும் வனப்பும் வரியும் வாட
வருந்துவள் இவள் என திருந்துபு நோக்கி
வரைவு நன்று என்னாது அகலினும் – அகம் 119/1-4
நெற்றியும் தோளும் தேமலையுடைய அல்குலும்
நிறமும் அழகும் வரியும் வாட
இவள் வருந்துவாள் என நன்கு ஆராய்ந்துணர்ந்து
மணந்துகொள்ளல் தக்கது என்னாது பிரிந்திடினும்

வரைவோர்

வரைவோர் – (பெ) ஏற்றுக்கொள்வோர், those who receive/accept (us)
வள்ளன்மையின் எம் வரைவோர் யார் என – புறம் 393/6
இரப்போர்க்கு இல்லென்னாது கொடுக்கும் தன்மையுடைமையால் எம்மை ஏற்று உதவுவோர் யார் உளர் என்று

வற

வற – (வி) வறண்டுபோ, காய்ந்துபோ, dry up
வறந்த ஞாலம் தளிர்ப்ப வீசி – ஐங் 452/1
வறண்டுகிடந்த நிலம் வளம்பெறுமாறு பெருமழை பெய்து

வறட்கு

வறட்கு – (பெ) வறளுக்கு, வறள் – வறட்சி, காய்ந்துபோதல், for drought
புரந்தோன் எந்தை யாம் எவன் தொலைவதை
அன்னோனை உடையேம் என்ப இனி வறட்கு
யாண்டு நிற்க வெள்ளி – புறம் 384/17-19
எம்மை ஆதரிப்பவன் எம் தலைவன்; நாங்கள் ஏன் வருந்தவேண்டும்?
அப்படிப்பட்டவனைத் தலைவனாகக் கொண்டிருக்கிறோம், இப்பொழுது வறட்சிக்கு
எங்குவேண்டுமானாலும் நின்றுகொள்ளட்டும் அந்த வெள்ளி மீன்

வறன்

வறன் – (பெ) பார்க்க : வறம்
1.
வறம் – பஞ்சம், வற்கடம், famine
எல்லை தருநன் பல் கதிர் பரப்பி
குல்லை கரியவும் கோடு எரி நைப்பவும்
அருவி மா மலை நிழத்தவும் மற்று அ
கருவி வானம் கடல் கோள் மறப்பவும்
பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும் – பொரு 233-237
பகற்பொழுதைத் தருகின்ற ஞாயிறு பலவாகிய கதிர்களைப் பரப்புகையினால்,
கஞ்சங் குல்லை தீயவும், மரங்களின் கொம்புகளை நெருப்புத் தின்னவும்,
அருவிகள் — பெரிய மலைகளில் — கொஞ்சம் கொஞ்சமாக வற்றிப்போகவும், இவை ஒழிந்த 235
கூட்டமான மேகங்கள் கடலிடத்தே நீர் முகத்தலை மறக்கவும்,
பெரும் பஞ்சம் உண்டாகிய நற்குணமில்லாத காலத்தும்
2.
வறம் – வறுமை, poverty
வறன் இல் புலைத்தி எல்லி தோய்த்த – நற் 90/3
வறுமை இல்லாத சலவைப்பெண், பகலில் வெளுத்த
3.
வறம் – வறண்ட நிலம், parched land
ஞாயிறு
கடுகுபு கதிர் மூட்டி காய் சினம் தெறுதலின்
உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம்
வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்றி நிலம் சேர – கலி 8/2-5
ஞாயிறு
மிகுந்த அனல் பரக்கும் கதிர்களைச் செலுத்திக் காய்கின்ற வெப்பத்தால் சுடுதலால்
வண்டுகள் நெருங்கிச் சேர, ஒழுகுகின்ற கமழும் மதநீரையுடைய, இப்பொழுது கெட்டுப்போன அழகையுடைய
யானை
வறண்ட நிலத்தை உழுகின்ற கலப்பையைப் போல் தன் கொம்புகளை ஊன்றி நிலத்தில் கிடக்க,
4.
வறம் – வறட்சி – drought
வறன்_உறு குன்றம் பல விலங்கினவே – அகம் 109/15
வறட்சியுற்ற குன்றுகள் பல குறுக்கிட்டுள்ளனவே
5.
வறம் – பட்டுப்போன மரம், dried up tree
வறன் நிழல் அசைஇ வான் புலந்து வருந்திய
மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும் – அகம் 49/11,12
பட்டுப்போன மரநிழலில் தங்கி, தலையை மேல்நோக்கிப் பார்த்து வருந்தும்
இளையமானின் தளர்வுற்ற கூட்டம் வற்றிய மரல் செடிகளைச் சுவைக்கும்
6.
வறம் – காய்ந்துபோதல், getting dried up
வறன்_உறல் அறியா சோலை – அகம் 382/12
காய்ந்துபோதலை அறியாத சோலை

வறம்

வறம் – (பெ) வறட்சி, drought; பார்க்க : வறன்
பெரு வறம் கூர்ந்த வேனில் காலை – புறம் 224/13
பெரும் வறட்சி மிக்க வேனிற்காலத்து

வறல்

வறல் – (பெ) 1. உலர்ந்துபோதல், drying up
2. வறட்சி, drought
3. வறண்ட நிலம், parched land
4. காய்ந்த சிறுகுசி, சுள்ளி, dried twig
1.
வறல் குழல் சூட்டின் வயின்_வயின் பெறுகுவிர் – சிறு 163
உலர்ந்த குழல்மீனைச் சுட்டதனோடு இடங்கள்தோறும் பெறுவீர்:
2.
அருவி அற்ற பெரு வறல் காலையும் – பதி 28/9
அருவிகள் வற்றிப்போன பெரும் வறட்சியான காலத்திலும்
3
எரி மேய்ந்த கரி வறல் வாய் புகவு காணாவாய் – கலி 13/2
நெருப்பு பரவலாய்ச் சுட்டதினால் கரியாகி வறண்டு போன நிலத்தில் பசித்த வாய்க்குப் பச்சை இலை
கிடைக்காதவையாய்
4.
ஆழ் நீர்
அறு கய மருங்கில் சிறு கோல் வெண் கிடை
என்றூழ் வாடு வறல் போல நன்றும்
நொய்தால் அம்ம – புறம் 75/7-10
தாழ்ந்த நீரையுடைய
வற்றிய கயத்திடத்து சிறிய தண்டாகிய வெளிய நெட்டியின்
கோடைக்கண் உலர்ந்த சுள்ளியைப் போலப் பெரிதும்
நொய்து

வறள்

வறள் – 1. (வி) வறண்டுபோ, become dry
– 2. (பெ) 1. நீர் அற்ற இடம், dried up place
2. மணற்பாங்கான இடம், sandy soil
1.
மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்ன
சேவலாய் சிறகர் புலர்த்தியோய் – பரி 3/25,26
பெரிய வானத்திலிருந்து நிற்காமல் வழிகின்ற மழைநீர் வறண்டுபோகும்படி, அன்னத்தின்
சேவலாய்ச் சிறகுகளால் உலரச் செய்தவனே
2.1.
வறள் அடும்பின் இவர் பகன்றை – பொரு 195
நீர் அற்ற இடத்தில் எழுந்த அடும்பினையும், படல்கின்ற பகன்றையினையும்
2.2.
வறள் அடும்பின் மலர் மலைந்தும் – பட் 65
மணற்பாங்கான இடத்தின் (அங்கு வளரும்)அடப்பம் பூவைத் தலையிலே கட்டியும்

வறாற்க

வறாற்க – (வி.மு) வற்றாதிருக்க, let not get dried up
மறாஅற்க வானம் மலிதந்து நீத்தம்
வறாஅற்க வைகை நினக்கு – பரி 16/54,55
மறவாதிருக்கட்டும் வானம், மிகுந்த பெருக்கினைத் தந்து வெள்ளம்
வற்றாது இருக்கட்டும் வையையே உனக்கு

வறிது

வறிது – (பெ) 1. வெறுமை, உள்ளீடற்ற தன்மை, emptiness, hollowness
2. சிறிதளவு, That which is little, small or insignificant
3. வற்றியது, சுருங்கியது, that which is emaciated, grown thin
1.
அறிவும் உள்ளமும் அவர்_வயின் சென்று என
வறிதால் இகுளை என் யாக்கை – நற் 64/8,9
அறிவும் உள்ளமும் அவரிடம் சென்றதாக
வெறுமையாய்ப்போயிற்று தோழியே! என் உடம்பு;

நெடு நீர் வார் குழை களைந்தென குறும் கண்
வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின் – நெடு 139,140
மிகுதியாக ஒளி சிந்தும் காதணி(குண்டலங்)களை நீக்கிட, சிறிய துளைகளில்
தாளுருவி அழுத்திய வெறுமையாகத் தொங்கும் காதினையும்
2.
வறிது நெறி ஒரீஇ வலம் செயா கழி-மின் – மலை 202
சற்றே அவ்வழியைக் கடந்த பின்னர் வலப்பக்கமாகவே செல்லுங்கள்

வரு புனல் வாயில் வஞ்சியும் வறிதே – சிறு 50
(பெருகி)வரும் நீரும் (கோபுர)வாயிலும் உடைய வஞ்சியை(யே) தரும் பரிசிலும் சிறிதாயிருக்கும்
3.
வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறு – கலி 7/1
வேனில்காலத்து வெம்மையால் துன்பமடைந்து உடல் சுருங்கி வருந்தி ஓய்ந்துபோன களிறுகள்

அறிவு அஞர் உழந்து ஏங்கி ஆய் நலம் வறிது ஆக
செறி வளை தோள் ஊர இவளை நீ துறந்ததை – கலி 127/12,13
தன் அறிவு வருத்தத்தில் ஆழ்ந்து ஏக்கம்கொள்ள, தன் அழகிய பெண்மை நலம் வற்றிப்போக,
செறிவாக இருந்த வளைகள் இவள் தோள்களில் கழன்று வீழும்படியாக இவளை நீ துறந்துசென்றாய்?;

வறு

வறு – (பெ.அ) 1. வறிய, வற்றிய, dried up
2. வெறுமையான, empty
1.
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி
அண்நா இல்லா அமைவரு வறு வாய் – பொரு 11,12
(உவாவிற்கு)எட்டாம் நாள் (தோன்றும்)திங்களின் வடிவினையுடையது ஆகி,
உள்நாக்கு இல்லாத (நன்றாக)அமைதல் பொருந்திய வறிய வாயினையும்

வறு நீர் நெய்தல் போல – நற் 183/10
நீர் வற்றிய குளத்து நெய்தல் மலர் போல

பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறு முலை – புறம் 164/3,4
பால் இல்லாததால் தோலாகிப் போன தன்மையுடன் சுருங்கி
துளை தூர்ந்த பொல்லாத வற்றிய முலையை
2.
புல்லென் வறு மனை நோக்கி மெல்ல – நற் 321/6
பொலிவிழந்து வெறுமையாய்த் தோன்றும் தன் இல்லத்தை நோக்கி

நெல்லி
கோடை உதிர்த்த குவிகண் பசும் காய்
அறு நூல் பளிங்கின் துளை காசு கடுப்ப
வறு நிலத்து உதிரும் அத்தம் – அகம் 315/10,13
நெல்லியின்
மேல்காற்று உதிர்த்திட்ட குவிந்த கண்ணினையுடைய பசிய காய்கள்
நூல் அற்று உதிர்ந்த துளையினையுடைய பளிக்குக் காசுகளை ஒப்ப
வறிய நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் காட்டு நெறியில்

வறும்

வறும் – (பெ.அ) பார்க்க : வறு
1.
வறும் – வறு – வறிய – வற்றிப்போன, dried up
உணீஇய மண்டி
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை
கை தோய்த்து உயிர்க்கும் வறும் சுனை – அகம் 119/17-19
நீர் உண்டற்கு விரைந்து சென்று
மண்ணில் முழங்காலை மடித்து ஊன்றிய நெடிய நல்ல யானையானது
தனது கையால் தோய்த்தும் நீர் இன்மையால் பெருமூச்செறியும் வறிய சுனையினையுடைய
2.
வறும் – வறு – வறிய – வெறுமையான – empty, bare
உணவு இல் வறும் கூட்டு உள்ளகத்து இருந்து
வளை வாய் கூகை நன் பகல் குழறவும் – பட் 267
நெல் இல்லாமற்போன வெறுமையான நெற்கூட்டின் உட்புறத்தில் தங்கி,
வளைந்த அலகையுடைய கூகை உச்சிக்காலத்து(ம்) கூவவும்;
வறும் கூடு – empty receptacle (container for grains)

விறலியர் வறும் கை குறும் தொடி செறிப்ப – மது 218
விறலியரின் வெறுமையான கைகளில் குறிய வளைகளைச் செறித்துச்சேர்க்க,
வறும் கை – bare hand

வறுவிது

வறுவிது – (பெ) வறிதாகுவது, வெறுமையாகுவது,
நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து
நிலவன்மாரோ புலவர் – புறம் 375/17,18
நீ இல்லாததால் வெறுமையாகிப்போகும் இவ்வுலகின்கண்
இலராய் ஒழிவாராக புலவர்கள்

வறுவியன்

வறுவியன் – (பெ) வெறுமையானவன், bare-handded person
நசைதர வந்த நன்னராளன்
நெஞ்சு பழுது ஆக வறுவியன் பெயரின்
இன்று இ பொழுதும் யான் வாழலனே – அகம் 362/8-10
நம்பாலுள்ள காதல்கொண்டுவருதலால் வந்த நம் தலைவன்
தன் எண்ணம் பயனிலதாக வெறுங்கையுடன் மீண்டுசென்றால்
இன்று இவ்விரவும் யான் உயிர் தரித்திரேன்

வறுவியேன்

வறுவியேன் – (த. பெ) வெறுமையானவன், (first person) bare-handded person
நின்
நசை தர வந்து இன் இசை நுவல் பரிசிலேன்
வறுவியேன் பெயர்கோ வாள் மேம்படுந – புறம் 209/10-12
உன் மேலுள்ள
ஆர்வத்தால் இங்குவந்து உன் புகழைக்கூறும் பரிசிலேன் யான்
வறியேனாய் மீளக்கடவேனோ? வாட்போரின்கண் மேம்படுவோய்!

வறை

வறை – (பெ) பொரித்த கறி, Fried curry or meat
பரல் வறை கருனை காடியின் மிதப்ப
அயின்ற காலை பயின்று இனிது இருந்து – பொரு 115,116
பருக்கைக் கற்கள் போன்று (நன்கு)பொரித்த பொரிக்கறிகளையும், தொண்டையில் மிதக்கும்படி
உண்டபொழுதின், இடையறாது பழகி இனிதாக உடனுறைந்து,

சுவல் விளை நெல்லின் செ அவிழ் சொன்றி
ஞமலி தந்த மனவு சூல் உடும்பின்
வறை கால்யாத்தது வயின்-தொறும் பெறுகுவிர் – பெரும் 131-133
மேட்டுநிலத்தில் விளைந்த நெல்லின் சிவந்த பருக்கையாகிய சோற்றை,
நாய்(கடித்துக்) கொணர்ந்த சங்குமணி(போன்ற) முட்டைகளையுடைய உடும்பின்
பொரியலால் மறைக்கப்படுமளவு மனைகள்தோறும் பெறுவீர்கள்

மரம்தோறும் மை வீழ்ப்ப
நிண ஊன் சுட்டு உருக்கு அமைய
நெய் கனிந்து வறை ஆர்ப்ப – மது 754-756
மரத்தடிகள்தோறும் செம்மறிக்கிடாயை வெட்டவும்,
நிணத்தையுடைய தசைகள் சுடுதலால் (அந்நிணம்)உருகுதல் பொருந்தவும்,
நெய் நிறையப்பெற்று வறுபடும் கறிகள் ஆரவாரிப்பவும்,

நெய் துள்ளிய வறை முகக்கவும்
சூடு கிழித்து வாடூன் மிசையவௌம் – புறம் 386/3,4
நெய்யினது துளியினையுடையவாய் வறுக்கப்பட்ட வறுவல்களை முகந்துண்ணவும்
சூட்டுக்கோலால் கிழித்து சுடப்பட்ட ஊனைத் தின்னவும்

மண்டைய கண்ட மான் வறை கருனை – புறம் 398/24
தான் உண்ணும், மண்டையிடத்துத் துண்டித்த மான் இறைச்சியாகிய வறுத்த பொரிக்கறியையும்

வற்றல்

வற்றல் – (பெ) காய்ந்தது, That which is withered, shrunk or dried up
வெம் திறல் கடும் வளி பொங்கர் போந்து என
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் – குறு 39/1,2
வெப்பமிக்க வலிமையுடைய கடும் காற்று சோலைக்குள் நுழைந்ததாக
நெற்றாக முதிர்ந்த வாகையின் வற்றல்கள் ஆரவாரிக்கும்

வல

வல – 1. (வி) 1. சூழ், சுற்று, encircle, surround
2. பின்னு, spin, as a spider its thread; plait; weave
3. சிக்கலுண்டாக்கு, tangle, complicate
4. பின்னிக்கிட, entangle, entwine
5. சுழற்று, brandish, swing around
– 2. (பெ.அ) வலது, right side
1.1.
மீன் சுடு புகையின் புலவு நாறு நெடும் கொடி
வயல் உழை மருதின் வாங்கு சினை வலக்கும் – புறம் 52/9,10
மீன் சுடுகின்ற புகையினது புலால் நாறும் நெடிய கொடிபோன்ற ஒழுங்கு
வயலிடத்து மருதினது வளைந்த கிளையைச் சூழ்ந்திருக்கும்
1.2.
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி – அகம் 111/5
காய்ந்த தலையினையுடைய ஞெமை மரத்தின் மீது பின்னிய சிலந்தியின் கூடானது
1.3.
மாயோய் நின் வயின் பரந்தவை உரைத்தேம்
மாயா வாய்மொழி உரைதர வலந்து – பரி 3/10,11
மாயவனே! உன்னிடமிருந்து தோன்றிப் பரவினவை என்று சொன்னோம்,
அழிவற்ற வேதங்கள் சொன்னபடி முறைப்படி கூறாது, முன்னும் பின்னுமாக மாறி மாறி
1.4.
கோட்டொடு சுற்றி குடர் வலந்த ஏற்றின் முன் – கலி 103/28
கொம்புகளைச் சுற்றிக் குடல்கள் பின்னிக்கிடந்த காளையின் முன்
1.5.
சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சி சுட்டுவிரல் சேர்த்தி
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற
சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப – நற் 149/1-4
சிலரும், பலருமாகக் கூடி, கடைக்கண்ணால் அக்கம்பக்கம் பார்த்து,
மூக்கின் உச்சியில் சுட்டுவிரலை வைத்து
தெருவில் பெண்டிர் கிசுகிசுப்பாய்ப் பழிச்சொற்களால் தூற்ற,
சிறிய கோலை ஏந்தி அது சுழலும்படி வீசிஅடிப்பவும் அன்னை வருத்த
– வலந்தனள் – சுழற்றினளாகி – பின்னத்தூரார் உரை
2.
புனை மாண் எஃகம் வல வயின் ஏந்தி – அகம் 215/4
அழகிய மாண்புற்ற வேலை வலப்பக்கம் ஏந்தி

வலஞ்சுழி

வலஞ்சுழி – (பெ) வலப்புறமாகச் சுழியுஞ் சுழி. Curl winding to the right
துறையே முத்து நேர்பு புணர் காழ் மத்தக நித்திலம்
பொலம் புனை அவிர் இழை கலங்கல் அம் புனல் மணி
வலஞ்சுழி உந்திய – பரி 16/5-7
நீராடும் துறைகளில், முத்துக்களை ஒன்றாகக் கட்டிய வடம், தலைக்கோலம் என்ற முத்தணி,
பொன்னால் செய்யப்பட்ட ஒளிரும் அணிகலன்கள், கலங்கலான அழகிய நீரைப் போன்ற சிவந்த மணிகள்,
ஆகியவை, வலமாகச் சுழித்துக்கொண்டு வரும் சுழியினால் உந்தப்பட்டுவர,

வலத்தர்

வலத்தர் – (பெ) 1. வலக்கையில் உடையவர், those who held s.t in the right hand
2. வெற்றியுடைவர், victorious men
1.
மண்ணுறு முரசம் கண் பெயர்த்து இயவர்
கடிப்பு உடை வலத்தர் தொடி தோள் ஓச்ச – பதி 19/7,8
நீராடி வார்க்கட்டமைக்கப்பட்ட முரசத்தின் கண்ணில் குருதி பூசி, முரசு முழக்கும் வீரர்
கடிப்பினை வலக்கையில் ஏந்தியவராய் தொடி அணிந்த தம் தோளோச்சிப் புடைத்து முரசினை முழக்க
2.
முன்னிய
செய்_வினை வலத்தர் ஆகி இவண் நயந்து
எய்த வந்தனரே தோழி – அகம் 363/15-17
தாம் கருதிச் சென்ற பொருளீட்டும் தொழிலில் வெற்றியுடையர் ஆகி நம்மை விரும்பி
இங்கே வந்து சேர்ந்தனர் தோழி

வலன்

வலன் – (பெ) பார்க்க : வலம்
1.
ஞாயிறு அடிவானத்தில் தோன்றி மேலே எழுவதையும், மேகங்கள் அடிவானத்தில் தோன்றி மேலே எழுந்து மழை
பொழிவதையும் குறிப்பிடும்போது வலன் ஏர்பு – வலமாக எழுந்து – என்ற தொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு – திரு 1
பாடு இமிழ் பனி கடல் பருகி வலன் ஏர்பு – முல் 4
வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ – நெடு 1
நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரும் – பட் 67
அணங்கு உடை அரும் தலை உடலி வலன் ஏர்பு – நற் 37/9
பாம்பு அளை செறிய முழங்கி வலன் ஏர்பு – நற் 264/1
சிறு பல் கருவித்து ஆகி வலன் ஏர்பு – நற் 328/6
மா கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு – குறு 237/5
வன்_புல நாடன் தரீஇய வலன் ஏர்பு – ஐங் 469/2
மன் உயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும் – பதி 24/27
நிலன் அதிர்பு இரங்கல ஆகி வலன் ஏர்பு – பதி 31/29
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு இரங்கி – அகம் 43/2
தாழ் பெயல் பெரு_நீர் வலன் ஏர்பு வளைஇ – அகம் 84/3
இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇ – அகம் 188/2
தோல் நிரைத்து அனைய ஆகி வலன் ஏர்பு – அகம் 278/3
வயம் தொழில் தரீஇயர் வலன் ஏர் விளங்கி – அகம் 298/2
வழை அமல் அடுக்கத்து வலன் ஏர்பு வயிரியர் – அகம் 328/1
மலர் தலை உலகம் புதைய வலன் ஏர்பு – அகம் 374/2

வேண்டு புலம் கவர்ந்த ஈண்டு பெரும் தானையொடு
விசயம் வெல் கொடி உயரி வலன் ஏர்பு
வயிரும் வளையும் ஆர்ப்ப – முல் 90-92
(தான்)விரும்பும் நிலங்களைக் கைக்கொண்ட, திரளுகின்ற பெரிய படையோடே,
வெற்றியால், வென்றெடுக்கின்ற கொடியை உயர்த்தி, வலப்பக்கம் உயர்த்தி
கொம்பும் சங்கும் முழங்க

என்ற ஓரிடத்தில் மட்டும் வலன் ஏர்பு என்பதற்கு வெற்றி தோன்றி என்று நச்சினார்க்கினியர் பொருள்கொள்வார்.
இங்கும் வெற்றியைக் கொண்டாட கொம்புவாத்தியங்களையும், சங்குகளையும் வலக்கரத்தில் பிடித்து உயர்த்து
முழங்குவதால் வலன் ஏர்பு என்பதற்கு வலப்பக்கமாக உயர்ந்து என்று பொருள்கொள்வது பொருத்தம் எனத்
தோன்றுகிறது.
2.
’வலன் ஏர்பு’-வை அடுத்து ’வலன் உயர்’ என்ற தொடர் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றில்
ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி – பதி 24/3
வலன் உயர் எழிலியும் மாக விசும்பும் – பரி 1/50
வலன் உயர் நெடு வேல் என் ஐ கண்ணதுவே – புறம் 309/7
ஆகிய இடங்களில் வலன் என்பதற்கு வலப்பக்கம் என்ற பொருளே பொருந்திவருகிறது.
ஆனால்,
வலன் உயர் மருப்பின் நிலம் ஈர் தட கை – நற் 194/4
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானை – பதி 11/18
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள் – அகம் 338/4
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை – புறம் 56/1
என்ற இடங்களில் வலன் என்பதற்கு வெற்றி அல்லது வலிமை என்ற பொருள் கொள்ளப்படுகிறது.
3.
வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய – பரி 7/6
வலன் இரங்கு முரசின் வாய் வாள் வளவன் – புறம் 60/10
ஆகிய இடங்களில் வலன் என்பதற்கு வெற்றி என்ற பொருள் கொள்ளப்படுகிறது.
4.
சிலை நவில் எறுழ் தோள் ஓச்சி வலன் வளையூஉ – பெரும் 145
ஒளிறு வேல் வலன் ஏந்தி ஒருவன் யான் என்னாது – கலி 49/20
ஆகிய இடங்களில் வலன் என்பதற்கு வலப்பக்கம் என்ற பொருளே பொருந்திவருகிறது.
5.
வலன் ஆக வினை என்று வணங்கி நாம் விடுத்த_கால் – கலி 35/15
வலன் ஆக என்றலும் நன்று-மன் தில்ல – அகம் 215/6
பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே – புறம் 169/12
ஆகிய இடங்களில் வலன் என்பதற்கு வெற்றி என்ற பொருள் கொள்ளப்படுகிறது.

வலம்

வலம் – (பெ) 1. வெற்றி, Victory, triumph
2. வலிமை, Strength, power
3. வலது கை, right hand
4. வலப்பக்கம், right side, clockwise direction
5. வலமாகச் சுற்றிவருதல், Circumambulation from left to right
6. திறமை, skill, ability, efficiency
1.
அவுணர் நல் வலம் அடங்க கவிழ் இணர்
மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து – திரு 59,60
அவுணரின் நல்ல வெற்றி இல்லையாகும்படி, கீழ்நோக்கின பூங்கொத்துக்களையுடைய
மாமரத்தின் அடியை வெட்டின குற்றம் இல்லாத வெற்றியினையும்,
2.
வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த – புறம் 24/29
சிறந்த வாட்போராலே வாழ்வோர் நினது முயற்சியின் வலிமையை வாழ்த்த

பறை வலம் தப்பிய பைதல் நாரை – குறு 125/5
சிறகுகளின் வலிமையை இழந்த வருத்தமுடைய நாரை
3.
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய – பரி 1/55
பொன்னால் செய்யப்பட்ட அழகிய சக்கரப்படையை வலது கையில் தாங்கிக்கொண்டவனாய்
4.
தட மருப்பு யானை வலம் பட தொலைச்சி – அகம் 357/4
பெரிய கொம்பினையுடைய யானையை வலப்பக்கத்தே விழக் கொன்று

வலம் சுரி தோகை ஞாளி மகிழும் – அகம் 122/8
வலப்பக்கம் சுரிதலையுடைய வாலினையுடைய நாய் குரைக்கும்

வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு – அகம் 304/9
வலமாகத் திரிந்த கொம்பினையுடைய தலைமையுடைய கலைமானொடு

5.
புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு
புக்க_வழி எல்லாம் கூறு – கலி 82/4,5
தேவர்களின் கோவிலை வலமாகச் சுற்றிவந்து பின்னர் என் மகனாகிய இவனோடு
நீ சென்ற இடங்களையெல்லாம் சொல்வாயாக;

ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் – கலி 69/5
வேதம் ஓதுதலையுடைய அந்தணன் தீயினை வலம் வருவதைப் போல
6.
செல்க தேரே நல் வலம் பெறுந – அகம் 374/16
ஓடட்டும் தேர், நல்ல திறன் வாய்ந்த பாகனே

வலம்படு

வலம்படு – (வி) 1. வெற்றியுண்டாகு, be victorious
2. வலப்பக்கமாகச் செல், pass from left to right
1.
வலம்பட நடக்கும் வலி புணர் எருத்தின்
உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை – சிறு 189,190
வெற்றியுண்டாக நடக்கும், (இழுத்தற்குரிய)வலி பொருந்திய கழுத்தினால்
மனஉறுதி கொண்ட வலிமையான எருத்தினையுடைய உழவரின் தங்கையாகிய

வலம்படு முரசின் வெல் போர் வேந்தன் – புறம் 304/9
வெற்றியுண்டாக்கும் முரசினையும் வெல்லும் போரையுமுடைய வேந்தன்
2.
துளங்கு நடை மரையா வலம்பட தொலைச்சி – அகம் 3/7
அசைந்தாடும் நடையைக் கொண்ட மரையா மானை வலப்பக்கம் வீழ்த்தி

வலம்புரி

வலம்புரி – (பெ) வலமாகச் சுற்றுதல்களையுடைய சங்கு, conch with clockwise whorls
வலம்புரி புரையும் வால் நரை முடியினர் – திரு 127
வலம்புரிச்சங்கினை ஒத்த வெண்மையான நரைமுடியினை உடையவரும்,
1.
இந்த வலம்புரிச் சங்கினைப் போர்க்காலத்தில் கொம்பு வாத்தியத்துடன் முழக்குவர்.

கறங்கு இசை வயிரொடு வலம்புரி ஆர்ப்ப – பதி 92/10
வயிர் என்பது கொம்பு வாத்தியம்.
2.
இந்த வலம்புரிச் சங்கின் வடிவத்தில் தலையில் அணிகலன் அணிவர்
A head-ornament, shaped like valampuri-c-caṅku
அது தலைக்கோலம் எனப்படும்.
தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – திரு 23,24
தெய்வவுத்தி, வலம்புரி ஆகிய தலைக்கோலங்களை அதனதன் இடத்தில் வைத்து,
திலகம் இட்ட மணம் நாறுகின்ற அழகிய நெற்றியில்
3.
திருமாலின் உள்ளங்கையில் இந்தச் சங்கு வடிவில் இரேகை இருக்கும்.
Lines in the palm of the hand resembling valampuri-c-caṅku, considered auspicious
நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தட கை – முல் 1,2
சக்கரத்துடன்
வலம்புரி(ச் சங்கின்) குறிகள் பொறிக்கப்பட்ட, திருமகளை அணைத்த பெரிய கையில்
3.
இந்த வலம்புரிச் சங்கு மிகவும் புனிதமானது என்ற கருத்து பண்டைய காலத்தும் உண்டு.
இலங்கு நீர் பரப்பின் வளை மீக்கூறும்
வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின் – பெரும் 34,35
விளங்குகின்ற நீரையுடைய கடலிடத்துப் பிறந்த சங்குகளில் மேலாகக்கூறப்படும்
வலம்புரி(ச் சங்கை) ஒத்த, குற்றம் தீர்ந்த தலைமையினையும்,
4.
மிகவும் விலையுயர்ந்த இந்த வலம்புரிச் சங்கினை அறுத்துச் செய்யப்பட்ட வளையல்களை அரசியர் அணிந்திருப்பர்.
வலம்புரி வளையொடு கடிகை_நூல் யாத்து – நெடு 142
வலம்புரிச் சங்கு வளையல்களோடு காப்புக்கயிறைக் கட்டி

சங்கின் ஒரு பக்கம் கூர்மையான முகப்பையும், மறுபக்கம் திறந்த வாயினையும் கொண்டிருக்கும். அந்தக்
கூர்மையான முகப்பின் நுனியிலிருந்து ஆரம்பித்து, ஒரு கோடு வட்டமாக வளைந்தவாறே அதன் மையப்
பகுதியை நோக்கிச் செல்லும். இந்தக் கோடு எந்தப் பக்கம் வளைந்து செல்கிறது என்பதைப் பொருத்து அந்தச்
சங்கு தன் பெயரைப் பெறும். மிகப் பெரும்பாலான சங்குகளில் இந்தக் கோடு இடப்பக்கமாக (anti-clockwise)
வளைந்து செல்லும். மிகவும் அரிதாக, இந்தக் கோடு சில சங்குகளில் வலப்பக்கமாக (clockwise) வளைந்து
செல்லும். இதுவே வலம்புரிச் சங்கு. புரி என்றால் முறுக்கு என்று பொருள். வலப்பக்கமாக புரியைக் கொண்டது
வலம்புரி. இந்தச் சங்கின் முகப்பில் ஒரு சிறு துளையிட்டு, அதில் வாய்வைத்து ஊதுவார்கள். காற்று மறுபக்கம்
உள்ள திறப்பின் வழியாக வெளிவந்து உரத்த ஒலியை எழுப்பும்.
வலம்புரிச் சங்கிற்கு இந்தத் திறப்பு வலப்பக்கமாக இருக்கும். எனவே இதில் வலதுகையின் விரல்களை
நுழைத்துக்கொண்டு பிடிப்பதற்கு எளிதாக இருக்கும். படத்தில் கிருஷ்ணர் சங்கு ஊதுவதைப் பாருங்கள்.
அவர் கையில் இருப்பது வலம்புரிச் சங்கு.
ஆனால், மேல்நாட்டார் இதனை வேறுவிதமாகக் கூறுகிறார்கள். இந்தச் சங்கில் வளைவு இருக்கும் முகப்பை
மேல் நோக்கி நிறுத்தினால், சங்கின் திறந்த வாய் நமக்கு இடப்பக்கமாக இருந்தால் அதுவே நமது வலம்புரிச் சங்கு.
ஆனால் இதனை மேல்நாட்டார் இடப்பக்க (left handed) சங்கு என்கிறார்கள். இதனை அவர்கள் sinistral conch
என்பார்கள். sinister என்றால் லத்தீன் மொழியில் இடது என்று பொருள். சாதாரணமான சங்கு நமக்கு இடம்புரியாக
இருக்கும். இதனுடைய முகப்புப் பகுதியை மேல்நோக்கி வைத்தால், இதன் வாய்த் திறப்பு நமக்கு வலப்பக்கம்
இருக்கும். எனவே இதனை அவர்கள் வலப்பக்க (right-handed) சங்கு என்பார்கள். இதனை அவர்கள் dextral conch
என்பார்கள். dexter என்றால் லத்தீன் மொழியில் வலது என்று பொருள். இந்தப் பெயர்க் குழப்பத்திற்குக் காரணம்,
மேல்நாட்டர் மேல்நோக்கி வைத்துப்பார்க்கும் முகப்பினை நாம் கீழ் நோக்கி வைத்து நம் வாயில் வைக்கிறோம்.

The Very Rare Sinistral (Left-Handed) Opening Shell (நமது வலம்புரிச் சங்கு)
and the Normal Dextral (Right-Handed) Opening Shell (சாதாரண – இடம்புரிச் சங்கு).
This Right or Left Handed Direction is Determined when the Spire is Held Upwards.

வலயம்

வலயம் – (பெ) 1. கைவளை, armlet
2. வளையம், வட்டம், ring
தொடியும் உந்தியும் தோள் அணி வலயமும்
தாளும் தோளும் எருத்தொடு பெரியை – பரி 13/53,54
உன் கைவளையும், தொப்புளும், தோளில் அணிந்திருக்கும் வளையமும்
திருவடியும், தோளும், உன் பிடரியுடனே பெரியனவாகக் கொண்டிருக்கிறாய்

எறி மகர வலயம் அணி திகழ் நுதலியர் – பரி 10/77
தாக்கிக் கொல்லும் சுறாமீன் வடிவத்தில் அமைந்த மகரவலயம் என்னும் அணி விளங்கும் நெற்றியையுடைய
மகளிர்,

வலவன்

வலவன் – (பெ) ஓட்டுநன், செலுத்துநன், பாகன், driver, charioteer
புணரி பொருத பூ மணல் அடைகரை
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பு ஆய்ந்து ஊர
நிலவு விரிந்தன்றால் கானலானே – நற் 11/6-9
அலைகள் மோதிய குறுமணல் அடைந்துகிடக்கும் கரையினில்
சக்கரத்தின் கீழ் நண்டுகள் சிக்கிக்கொள்வதைத் தவிர்த்து
பாகன் தன் கடிவாளத்தை ஆய்ந்து செலுத்தும் அளவுக்கு
நிலவொளியும் பரந்துள்ளது இக் கடற்கரைச் சோலையில்

மா செலவு ஒழிக்கும் மதன் உடை நோன் தாள்
வாள் முக பாண்டில் வலவனொடு தரீஇ – சிறு 259,260
குதிரையின் செலவினைப் பின்னே நிறுத்தும் வலிமையுள்ள கால்களையும்,
ஒளியுள்ள முகத்தினையும் உடைய காளையை (அதனைச் செலுத்தும்)பாகனோடு, கொடுத்து,

வலி

வலி – 1. (வி) 1. உடன்படு, agree to, consent to
2. முடிவுசெய், துணி, decide
3. வலியுறுத்து, நிர்ப்பந்தி, compel, force
4. இழு, draw, pull
5. கடினமாய் வாங்கு, இறுக்கு, tighten
6. உடன்படச்செய், ஒருப்படுத்து, cause to consent
7. கருது, consider
8. உறுதிகொள், உறுதியானதாகு, be firm, become strong, become hard
9. கருத்தோடுசெய், மனம் ஒன்றிச் செயல்புரி, Execute with undivided attention, as a work;
10. தானாக முன்வந்து செய், act of one’s own free will;
தானாக (அறியாமல்) ஒன்றில் மாட்டிக்கொள்தல், be caught up on one’s own act
– 2. (பெ) வலிமை, strength, power
1.1
திறம் புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லது
அரும் பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல் என
வலியா நெஞ்சம் வலிப்ப சூழ்ந்த
வினை இடை விலங்கல போலும் – நற் 252/3-6
திட்டமிட்டுச் செயலாற்றும் கொள்கையுடன் சென்று பொருள்சேர்த்தால் அன்றி
அரிய பொருளைச் சேர்ப்பது சோம்பியிருப்போர்க்கு இல்லை என்று,
இதுவரையிலும் உடன்பட்டெழாத நெஞ்சம் ஒருப்படுதலால், ஆராய்ந்து தொடங்கிய
செயல்முனைப்பினைத் தடுக்கவில்லை போலும்
1.2
காதலர்
பேணார் ஆயினும் பெரியோர் நெஞ்சத்து
கண்ணிய ஆண்மை கடவது அன்று என
வலியா நெஞ்சம் வலிப்ப
வாழ்வேன் தோழி என் வன்கணானே – குறு 341/3-7
காதலர்
தம் சொல்லைக் காவாராயினும், பெரியோர்களின் நெஞ்சத்தில்
கருதிய ஆண்மைச் செயல்கள் நிறைவேற்றப்படுவது இல்லை என்று
முன்னர்த் துணியாத என் நெஞ்சம் இப்போது துணிந்தமையால்
வாழ்கின்றேன் தோழி என் மனவுரத்தாலே.
1.3
அரும் சுர கவலை நீந்தி என்றும்
இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல் – அகம் 53/12-15
அரிய பாலைநிலத்தின் கிளைத்துச் செல்லும் வழிகளைக் கடந்துசென்று, என்றும்
இல்லாதவர்களுக்கு இல்லையென்று கூறி இயன்றதைத் தராமல் மறைப்பதற்கு
வலிமையற்ற நெஞ்சம் வற்புறுத்தலால், நம்மைக்காட்டிலும்
பொருளே காதலரின் விருப்பம்;
1.4
தொடி நிலை நெகிழ்த்தார் கண் தோயும் என் ஆர் உயிர்
வடு நீங்கு கிளவியாய் வலிப்பென்-மன் வலிப்பவும்
நெடு நிலா திறந்து உண்ண நிரை இதழ் வாய் விட்ட
கடி மலர் கமழ் நாற்றம் கங்குல் வந்து அலைத்தரூஉம் – கலி 29/18-21
என் வளையல்களைக் கழன்றோடச் செய்த அவரையே நோக்கிச் செல்லும் என் ஆருயிரை,
குற்றமற்ற சொற்களையுடையவளே! இழுத்து நிறுத்துகின்றேன், அவ்வாறு நிறுத்தினாலும்
நீண்டிருக்கும் நிலவொளி விரித்துவிட்டுத் தன் கதிர்களைப் பரப்ப, அதனால் வரிசையான இதழ்கள் மலர்ந்து
மணமிக்க மலர்கள் வீசும் நறுமணம் இரவில் வந்து வருத்துகின்றதே!
1.5
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா
வண்டு ஓர் அன்ன அவன் தண்டா காட்சி
கண்டும் கழல் தொடி வலித்த என்
பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே – நற் 25/9-12
தேனை உண்ணும் வேட்கையினால் மலரின் தன்மையை ஆராயாமல் போய் விழுகின்ற
வண்டின் ஒரு தன்மையை ஒத்த அவனது அமையாத தோற்றத்தைக்
கண்டும் கழன்றுபோன வளையல்களை மீண்டும் செறித்துக்கொண்ட எனது
பண்பற்ற செய்கை என்னில் நினைப்பாகவே இருக்கின்றது.

கோள் வல் பாண்_மகன் தலை வலித்து யாத்த
நெடும் கழை தூண்டில் நடுங்க – பெரும் 284,285
(மீனைக்)கொள்ளுதலில் வல்ல பாண்மகனுடைய தலையில் இறுக்கிக் கட்டின
நெடிய மூங்கில் கோலாகிய தூண்டில் நடுங்கும்படியும்,
1.6
பெரு விதுப்பு உறுக மாதோ எம் இல்
பொம்மல்_ஓதியை தன் மொழி கொளீஇ
கொண்டு உடன் போக வலித்த
வன்கண் காளையை ஈன்ற தாயே – நற் 293/6-9
பெரிதாக மனம் ‘விதுக்’கென்று போகட்டும்; எமது வீட்டுப்
பொங்கிநிற்கும் கூந்தல்காரியான என் மகளைத் தன் சொற்களால் மயக்கித்
தன்னுடன் கூட்டிக்கொண்டுபோய்விடுவதற்கு மனத்தை ஒருப்படுத்திய
கொடுமைக்கார இளைஞனைப் பெற்றெடுத்த தாய்க்கு
1.7
நல் இசை வலித்த நாண் உடை மனத்தர் – அகம் 231/4
நல்ல புகழைக் கருதிய நாண் உடைய மனத்தராய நம் தலைவர்
1.8
சுரன் இடை விலங்கிய மரன் ஓங்கு இயவின்
வந்து வினை வலித்த நம்_வயின் என்றும்
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது – அகம் 289/4-6
பாலை நிலத்தே குறுக்கிடும் மரங்கள் உயர்ந்துள்ள நெறியில்
வந்து பொருளீட்டும் தொழிலில் உறுதிகொண்டுள்ள நம்மிடத்தே
எப்பொழுதும் நினைந்து சுழலும் உள்ளத்தால் வருந்துதல் குறையாமல்

நீர் நுங்கின் கண் வலிப்ப – புறம் 389/1
நீர் உள்ள பனை நுங்கு வற்றிக் கல் போல் கெட்டியாக
1.9
களம் புகல் ஓம்பு-மின் தெவ்விர் போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே – புறம் 87
போர்க்களத்தில் புகுதலைத் தவிருங்கள், பகைவர்களே, போரின்கண் மாறுபட்டு
எங்களுக்குள்ளும் ஒரு வீரன் உளன், ஒருநாள்
எட்டுத் தேரைச் செய்யும் தச்சன்
ஒரு மாதம் கூடிக் கருதிச் செய்த தேர்க்காலை ஒப்பவன்
1.10
தொழுதி போக வலிந்து அகப்பட்ட
மட நடை ஆமான் – மலை 499,500
(தன்)கூட்டமெல்லாம் ஓடிப்போய்விட (ஓடமுடியாமல்) வலிய அகப்பட்ட
மெல்லிய நடையையுடைய காட்டுப்பசுவின் கன்றும்
2.
மத வலி நிலைஇய மா தாள் கொழு விடை – திரு 232
மிகுந்த வலிமை நிலைபெற்ற பெரிய காலையுடைய கொழுவிய கிடாயின்

கன்று அரைப்பட்ட கயம் தலை மட பிடி
வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின் – மலை 307,308
கன்றை வயிற்றுக்குக் கீழே(கால்களுக்கிடையே) கொண்ட இளந் தலையுடைய பேதைமையுள்ள பெண்யானை,
வலிமைக்கு ஓர் எல்லை என்று கூறத்தக்க அதன் கணவன் பாதுகாத்துநிற்பதினால்,

வலிதின்

வலிதின் – (வி.அ) 1. வலிய, on one’s own accord
தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னா
செய்வது நன்று ஆமோ – கலி 62/7,8
தமக்கு இனிமையானது என்று வலியப்போய் பிறர்க்குத் துன்பம்
செய்வது நல்லதாகுமோ?

வலியுறுத்து

வலியுறுத்து – (வி) 1. பலப்படுத்து, strengthen
2. கருமியாக இரு, be stingy
3. வற்புறுத்திக்கூறு, emphasize
4. உறுதியளி, affirm
1.
பெரும் கடல் நீந்திய மரம் வலியுறுக்கும்
பண்ணிய விலைஞர் போல புண் ஒரீஇ – பதி 76/4,5
பெரிய கடலில் சென்றுவந்த மரக்கலத்தினைப் பழுதுநீக்கி மீண்டும் வலிமைப்படுத்தும்
பொருள்கள் விற்கும் கடல்வாணிகர் போலப் போரில் ஏற்பட்ட புண்களை ஆற்றி,
2.
வளன் வலியுறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல்லாகியரோ – புறம் 190/4,5
தம்முடைய செல்வத்தை நுகராது இறுகப்பிடிக்கும் உள்ளமிகுதி இல்லாருடன்
பொருந்திய நட்பு இல்லையாகுக
3.
வினை வலியுறூஉம் நெஞ்சமொடு – அகம் 197/17
பொருளீட்டும் வினையை வற்புறுத்தும் நெஞ்சத்தால்

ஒல்கு இயல் அரிவை நின்னொடு செல்கம்
சில் நாள் ஆன்றனை ஆகு என பல் நாள்
உலைவு இல் உள்ளமொடு வினை வலியுறீஇ
எல்லாம் பெரும்பிறிதாக ———–
———– ————— —————- —-
ஒழிய சென்றோர் மன்ற – அகம் 325/13-21
தளரும் இயலினையுடைய அரிவையே! பின் உன்னுடன் செல்வேன்
சில நாள் பொறுத்திரு என்று, பலகாலம்
தளர்தல் இல்லாத ஊக்கத்துடன் தன் கூட்டிச்சென்று மணம் முடிக்கும் செயலை வற்புறுத்துரைத்து
அவை எல்லாம் அழிந்துபோக ————
————————— ———————-
நாம் இங்கே இருக்க, சென்றுவிட்டார்

மீளி உள்ளம் செலவு வலியுறுப்ப – அகம் 373/7
திண்மையையுடைய நம் உள்ளம் மீண்டும் செல்லுதலை வற்புறுத்த
4.
கோடு வாய் கூடா பிறையை பிறிது ஒன்று
நாடுவேன் கண்டனென் சிற்றிலுள் கண்டு ஆங்கே
ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய
காணான் திரிதரும்-கொல்லோ மணி மிடற்று
மாண் மலர் கொன்றையவன்
தெள்ளியேம் என்று உரைத்து தேராது ஒரு நிலையே
வள்ளியை ஆக என நெஞ்சை வலியுறீஇ
உள்ளி வருகுவர்-கொல்லோ வளைந்து யான்
எள்ளி இருக்குவேன்-மன்-கொலோ – கலி 142/24-32
சிற்றில் விளையாடி, தலைவர் வருவாரா என்று காண மணலில் வட்டங்கள் இட்டேன், அதில் முனைகள் கூடாமல்
பிறை தோன்றிற்று, எனவே, தலைவர் வாரார் என அறிந்து, அந்தப் பிறைநிலவை
என் ஆடையால் மூடி மறைத்துவிட்டேன், ஆனால் தலையில் சூடுவதற்காகக்
காணாமல் அலைவான் அல்லவா, மணி நிறத்தைக் கழுத்தினில் கொண்ட
மாண்பு மிக்க மலரான கொன்றையைச் சூடிய சிவபெருமான் என்று எண்ணி,
நாம் தெளிந்த அறிவுடையோம் என்று சொல்லிக்கொண்டு, ஆராய்ந்து பாராமல், அதை நிலைநாட்டும் வகையில்
அப் பிறையைச் சிவனுக்கே அளித்து, வள்ளல் என்ற பெயரைப் பெறுவாயாக என்று நெஞ்சிற்கு உறுதியளித்துவிட்டு,
காதலர் நம்மை நினைத்து வருவாரோ?, வருந்தி நான்
இவரை இகழ்ந்திருப்பேனோ? என்று எண்ணியபடி இருக்க,

வலையம்

வலையம் – (பெ) மலர் வளையம், ring of flowers, wreath
சூட்டும் கண்ணியும் மோட்டு வலையமும்
இயல் அணி அணி நிற்ப ஏறி அமர் பரப்பின் – பரி 20/30,31
தலையில் சூடிக்கொள்ளும் சூட்டும், கண்ணியும், பெரிய வளையமுமாய்
செய்யப்பட்ட அணிகளையுடைவர்கள் திரளாக ஏறி விரும்பத்தக்க கரைப் பரப்பில் நிற்க
– சூட்டு, கண்ணி, வலையம் என்பனவும் மலர்மாலை வகைகளே என்க; மோட்டு வலையம் – பரிய மாலையான
வளையம் என்க. – பொ.வெ.சா – விளக்கம்

வலைவர்

வலைவர் – (பெ) வலைகொண்டு மீன் பிடிக்கும் மீனவர், வலைகொண்டு விலங்குகளைப் பிடிக்கும் வேட்டுவர்,
fishermen or hunters using net to catch their prey
வலைவர் தந்த கொழு மீன் வல்சி
பறை தபு முது குருகு – ஐங் 180/2,3
வலைவீசும் மீனவர் கொண்டுவந்த மிகுதியான மீனைத் தனக்கு உணவாகக் கொள்ள
பறத்தல் இயலாத முதிய நாரை

வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல – கலி 23/17
வேடனின் வலையில் சென்று விழுந்த இளம் மானைப் போல

வல்

வல் – 1. (வி.அ) சீக்கிரமாக, quickly
– 2. (பெ) 1. வலிமை, strength, power
2. திறமை, ability
3. சூதாடு கருவி, dice
– 3. (பெ.அ) 1. மிகுந்த, கடுமையான, excessive, severe
2. அரிதும் சிறிதுமான, rare and little
1.
நிலை துறை வழீஇய மதன் அழி மாக்கள்
புனல் படு பூசலின் விரைந்து வல் எய்தி – மலை 280,281
வழக்கிலுள்ள துறையைத் தவறவிட்ட(வேறு துறையில் புகுந்து,திரும்பிவர முயன்று, முடியாத)வலிமை குன்றிய
மக்கள்
நீரில் சிக்கிய கூச்சலைக் கேட்டதைப் போல் (உம் இசையைக்கேட்டு)வேகமாக ஓடிவந்து சீக்கிரமாய் (உம்மைக்)கிட்டி,
2.1
கொடும் தொழில் வல் வில் கொலைஇய கானவர் – திரு 194
கொடிய தொழிலையுடைய வலிமையுடைய வில்லால் கொல்லுதலைச் செய்த குறவர்
2.2
பச்சூன் பெய்த சுவல் பிணி பைம் தோல்
கோள் வல் பாண்_மகன் – பெரும் 283,284
பச்சை இறைச்சியை வைத்த, தோளில் மாட்டிய, பதப்படுத்தாத தோலினால் செய்த பையையுடைய
(மீனைக்)கொள்ளுதலில் திறமையுள்ள பாண்மகனுடைய
2.3
நரை மூதாளர் நாய் இட குழிந்த
வல்லின் நல் அகம் நிறைய பல் பொறி
கான வாரணம் ஈனும்
காடு ஆகி விளியும் நாடு உடையோரே – புறம் 52/14-17
நரையையுடைய முதியோர் சூதாடும் கருவியை இடுதலால் குழிந்த
அந்தச் சூது கருவியினது நல்ல மனையாகிய இடம் நிறைய பல பொறிகளையுடைய
காட்டுக்கோழி முட்டையிடும்
காடாய்க் கெடும் நாடுடையோர்
3.1
வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப – பொரு 99
மிகுந்த வறுமையாலுண்டாகிய வருத்தம் பொதிந்த (என்)உள்ளம் உவக்கும்படி
3.2
நெடும் கிணற்று
வல் ஊற்று உவரி தோண்டி – பெரும் 97,98
ஆழமான கிணற்றில்
சில்லூற்றாகிய உவரிநீரை முகந்துகொண்டு,
– வல்லூற்று என்றது, அரிதில் சிறிதே ஊறும் ஊற்று என்றவாறு – பொ.வே.சோ உரை விளக்கம்

வல்சி

வல்சி – (பெ) 1. வழக்கமாக உண்ணும் உணவு, usual food
2. வாழ்க்கைக்கான உணவு, life-giving food
1.
இல் எலி வல்சி வல் வாய் கூகை – அகம் 122/13
இல்லிலுள்ள எலியை வழக்கமான உணவாகக் கொண்ட வலிய வாயினதாகிய கூகையின் சேவல்
2.
ஓர் ஆன் வல்சி சீர் இல் வாழ்க்கை – குறு 295/4
ஒரு பசுவினால் வரும் வருமானத்தால் உணவு கொண்டு வாழும் சிறப்பில்லாத வாழ்க்கை

வல்லம்

வல்லம் – (பெ) சோழநாட்டு ஊர், a city in chOzhA country
வென்வேல்
மாரி அம்பின் மழை தோல் சோழர்
வில் ஈண்டு குறும்பின் வல்லத்து புற மிளை
ஆரியர் படையின் உடைக – அகம் 336/19-22
வெற்றிபொருந்திய வேலினையும்
மழை போன்ற அம்பினையும் மேகம் போன்ற தோல்கிடுகினையும் உடைய சோழரது
வில்படை நெருங்கிய அரணையுடைய வல்லம் என்ற ஊருக்குப் புறத்தேயுள்ள காவற்க்காட்டின்கண் வந்தடைந்த
ஆரியரது படை போல சிதைந்தொழிவனவாக

வல்லா

வல்லா – 1. (பெ) செய்ய/நடக்க முடியாதவை, impossibilities
– 2. (பெ.அ) செய்ய முடியாத, incapable of doing
1.
பயப்பு என் மேனியதுவே நயப்பு அவர்
நார் இல் நெஞ்சத்து ஆரிடையதுவே
செறிவும் சேண் இகந்தன்றே அறிவே
ஆங்கண் செல்கம் எழுக என ஈங்கே
வல்லா கூறி இருக்கும் – குறு 219/1-5
பசலைநோய் என் மேனியில் இருக்கிறது; விருப்பமோ
தலைவருடைய அன்பில்லாத நெஞ்சமெனும் அடையமுடியாத இடத்தில் உள்ளது.
என் பெண்மை அடக்கமோ என்னைவிட்டு நெடுந்தொலைவு சென்றுவிட்டது; என் அறிவும்
தலைவர் இருக்குமிடம் செல்வோம், எழுக என்று, இங்கு
நடக்காததைச் சொல்லிக்கொண்டு என்னுடன் இருக்கும்
2.
இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல் – அகம் 53/13-15
இல்லாதவர்களுக்கு இல்லையென்று கூறி அவரைப் போலிருந்து மறைத்தலைச்
செய்ய மாட்டாத நெஞ்சம் வற்புறுத்தலால், நம்மைக்காட்டிலும்
பொருளே காதலரின் விருப்பம்;

வல்லாங்கு

வல்லாங்கு – (வி.அ) இயன்ற அளவில், as far as possible, to the best of one’s capabilities
வள்ளியோர் படர்ந்து புள்ளின் போகி
நெடிய என்னாது சுரம் பல கடந்து
வடியா நாவின் வல்லாங்கு பாடி
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி – புறம் 47/1-4
வள்ளண்மையுடையோரை நினைத்து, பழுமரம் தேரும் பறவை போலச் சென்று,
நெடிய என்று கருதாது அரிய வழி பலவற்றையும் கடந்து
திருந்தாத நாவால் தாம் வல்லபடி பாடி
பெற்ற பரிசிலால் மகிழ்ந்து சுற்றத்தை ஊட்டி

வல்லாதீம்

வல்லாதீம் – (ஏ.வி.மு) வல்லவனாயிருக்கவேண்டாம், don’t be capable of doing
கல்லா கோவலர் கோலின் தோண்டிய
ஆன் நீர் பத்தல் யானை வௌவும்
கல் அதர் கவலை செல்லின் மெல் இயல்
புயல்_நெடும்_கூந்தல் புலம்பும்
வய_மான் தோன்றல் வல்லாதீமே – ஐங் 304
கல்வியறிவில்லாத இடையர்கள் தம் கையிலுள்ள கோலினால் தோண்டிய
பசுக்களுக்கான நீரையுடைய பள்ளத்தில் உள்ள நீரை யானை கவர்ந்து குடிக்கும்
பாறைகள் நிரம்பிய பலவகையாய்ப் பிரிந்து செல்லும் பாதையின் வழியே சென்றால், மென்மையான
இயல்பினையுடைய
மேகத்தைப் போன்ற கரிய நீண்ட கூந்தலையுடைய இவள் தனிமையில் வாடுவாள்,
வலிமையான குதிரையையுடைய தலைவனே! நீ பிரிந்துசெல்லுதல் வல்லையல்லை ஆகுக.

– மெல்லியல் என்றதால், மெல்லியோர் புலம்ப ஒரு செயலை வல்லுநர் செய்வது வன்மையாகாது என்பாள்
வல்லாதீமே என்று கூறினாள். – ஔவை.சு.து.விளக்கம்

எக்கர் ஞாழல் பூவின் அன்ன
சுணங்கு வளர் இள முலை மடந்தைக்கு
அணங்கு வளர்த்து அகறல் வல்லாதீமோ – ஐங் 149
மணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தின் பொன்னிறப் பூவைப் போன்ற
அழகுத்தேமல் படர்ந்திருக்கும் இளமையான முலைகள் உள்ள தலைவிக்கு
முதலில் அழகைப் பெருகச் செய்து, பின்னர் பிரிந்து செல்லல் மாட்டீராக!

வல்லாதீ – முன்னிலை வினையின் ஈறு நீண்டது.
வரவிடை வைத்துப் பிரிதல் பயின்று வல்லோயாயினை யாகலின், பிரியின் அஃது இவட்கு வருத்தம் உறுவிக்கும்
என்பாள் அகறல் வல்லாதீமோ என்றாள். – ஔவை.சு.து.விளக்கம்

வல்லாறு

வல்லாறு – (பெ) வல்லவகை, மிகவும் கடினமான வழி, very difficult manner
அத்த நீள் இடை அவனொடு போகிய
முத்து ஏர் வெண் பல் முகிழ் நகை மடவரல்
தாயர் என்னும் பெயரே வல்லாறு
எடுத்தேன் மன்ற யானே
கொடுத்தோர் மன்ற அவள் ஆயத்தோரே – ஐங் 380
கடினமான பாதையைக் கொண்ட நீண்ட வெளியில் அவனோடு போய்விட்ட
முத்தைப் போன்ற அழகிய வெண்மையான பற்களையும், முகிழ்க்கின்ற புன்னகையையும் கொண்ட
அந்தப் பேதையின்
தாய் என்ற பெயரையே மிகவும் கடினமானவகையால்
பெற்றேன் நான்;
அவளை அவனுக்குக் கொடுத்து அனுப்பிவைத்தவர்கள் அவளின் தோழிமாரே!

வல்லி

வல்லி – (பெ) 1. வல்லமைபெற்றது/பெற்றவன், person/thing capable of doing s.t
2. கொடி, creeper
அமர் கண் ஆமான் அம் செவி குழவி
கானவர் எடுப்ப வெரீஇ இனம் தீர்ந்து
கானம் நண்ணிய சிறுகுடி பட்டு என
இளையர் ஓம்ப மரீஇ அவண் நயந்து
மனை உறை வாழ்க்கை வல்லி ஆங்கு – குறு 322/1-5
அமர்த்த கண்களையுடைய ஆமானின் அழகிய செவிகளையுடைய குட்டி
குறவர்கள் விரட்டியதால் வெருண்டு, தன் கூட்டத்தைவிட்டு ஓடி
காட்டின்கண் சேர்ந்துள்ள சிறுகுடியில் அகப்பட்டுக்கொள்ள,
இளம்பெண்கள் அதனைப் பேண, அவருடன் கலந்து, அவ்விடத்தை விரும்பி
வீட்டில் வாழும் வாழ்க்கையில் வல்லமையைப்பெற்றது போல்

அரும் பொருள் நசைஇ பிரிந்து உறை வல்லி
சென்று வினை எண்ணுதியாயின் – அகம் 191/11,12
அரிது ஈட்டும் பொருளை விரும்பி நம் தலைவியைப் பிரிந்து உறையும் வன்மையுடையவனாய்
சென்று பொருள் ஈட்டும் வினையை எண்ணுவையானால்
2.
தோள் தாழ்பு தழை மலர் துவளா வல்லியின்
நீள் தாழ்பு தோகை நித்தில அரி சிலம்பு – பரி 22/48,49
தோளில் தாழ்ந்து தழைக்கும் மலரையுடைய துவள்கின்ற கொடிபோல
நீண்டு தாழ்ந்த தொங்கலுடன் முத்துப் பரலைக் கொண்ட சிலம்பு

வல்லிகை

வல்லிகை – (பெ) குதிரைக்கழுத்தில் கட்டும் வடம், Halter of a horse;
குதிரை வழங்கி வருவல்
அறிந்தேன் குதிரை தான்
பால் பிரியா ஐம்_கூந்தல் பல் மயிர் கொய் சுவல்
மேல் விரித்து யாத்த சிகழிகை செ உளை
நீல மணி கடிகை வல்லிகை யாப்பின் – கலி 96/6-10
குதிரை ஏற்றம் பயின்றுவிட்டு வருகிறேன்!
தெரியும் எனக்கு, நீ ஏறியது குதிரைதான்!
ஐந்து வகையாகப் பிரித்துவிட்ட கூந்தலே பல மயிர்களைக் கொய்துவிட்ட பிடரி மயிராகவும்,
அதற்குமேல் விரித்துக் கட்டிய தலைமாலையே சிவந்த தலையாட்டமாகவும்,
நீல மணிகள் கோத்த கடிகையென்னும் கழுத்தணியே வல்லிகையென்னும் கட்டப்பட்ட கழுத்துக்கயிறாகவும்,

வல்லிதின்

வல்லிதின் – (வி.அ) 1. விரைந்து சென்று, going quickly
2. சிரமப்பட்டு, with great effort
1.
பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம்
வல்லிதின் வணங்கி சொல்லுநர் பெறினே
செல்க என விடுநள்-மன்-கொல்லோ – நற் 68/5-7
பொங்கி வருகின்ற புது நீரில் மனம் மகிழ ஆடுவோம்;
இதனை விரைந்து சென்று அன்னையை வணங்கிச் சொல்லுபவரைப் பெற்றால்
செல்லுங்கள் என்று அனுப்பிவிடுவாளோ?
– வல்லிதின் – விரைந்து சென்று – பின்னத்தூரார் உரை, ச.வே.சு உரை, கு,வெ.பா உரை, இராமையா பிள்ளை உரை
– வல்லிதின் – வற்புறுத்தி – ஔவை.சு.து உரை
– வல்லிதின் – வலியச் சென்று – புலியூர்க் கேசிகன் உரை
2.
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப
வாளை ஈர்ம் தடி வல்லிதின் வகைஇ – நற் 120/4,5
சிறிய மோதிரத்தை இறுக்க அணிந்திருந்த மெல்லிய விரல்கள் சிவந்துபோகும்படி,
வாளை மீனின் ஈரமான நீண்ட துண்டை சிரமப்பட்டு நறுக்கி
– வல்லிதின் – வல்லபடி, பல்வேறு வகையாக – ஔவை.சு.து.உரை, விளக்கம்
– வல்லிதின் – மிகவும் சிரமப்பட்டு – புலியூர்க் கேசிகன் உரை
– வல்லிதின் – உண்ணும் வகையில் – ச.வே.சு உரை, கு,வெ.பா உரை
– வல்லிதின் – திறம்பட – இராமையா பிள்ளை உரை

வல்லினர்

வல்லினர் – (பெ) வலிமையுடையவர், capable person
எல் வளை ஞெகிழ சாஅய் ஆய்_இழை
நல் எழில் பணை தோள் இரும் கவின் அழிய
பெரும் கையற்ற நெஞ்சமொடு நம் துறந்து
இரும்பின் இன் உயிர் உடையோர் போல
வலித்து வல்லினர் காதலர் – அகம் 185/1-5
ஒளிபொருந்திய வளை நெகிழும்படி மெலிந்து, ஆய்ந்தெடுத்த அணிகளையும்
நல்ல அழகினையுமுடைய மூங்கில் போலும் நமது தோள் பெரிய அழகு கெடுமாறு
பெரிய செயலற்ற நெஞ்சமோடிருக்கும் நம்மைக் கைவிட்டு
இரும்பினால் இயன்ற இனிய உயிரை உடையார் போல
வன்மையுடனே இருக்க வலிமையுடையவர் ஆயினர் நம் தலைவர்

வல்லிய

வல்லிய – (வி.மு) வலிமையுடையவனாவாய், You are capable
குன்ற வைப்பின் கானம்
சென்று சேண் அகறல் வல்லிய நீயே – நற் 137/9,10
குன்றுகள் சூழ்ந்த ஊர்களைக் கொண்ட பாலைநிலத்தில்
சென்று நெடுந்தொலைவுக்கு அகன்று போவதற்கு வலிமையுள்ளவனானாய் நீயே!

வல்லியம்

வல்லியம் – (பெ) புலி, tiger
பைம் கண் வல்லியம் கல் அளை செறிய – அகம் 362/4
பசிய கண்ணினையுடைய ஆண்புலி கற்குகையினுள்ளே ஒடுங்கியிருக்க

வல்லியர்

வல்லியர் – (பெ) வலிமையுள்ளவர், capable person
பிரிதல் வல்லியர் இது நம் துறந்தோர் – அகம் 223/1
நம்மைப் பிரிதற்கு மனவலி எய்தினராகி அங்ஙனம் நம்மைப் பிரிந்து சென்றார்

வல்லியோர்

வல்லியோர் – (பெ) பார்க்க : வல்லியர்
படப்பை வேங்கைக்கு மறந்தனர்-கொல்லோ
மறப்பு அரும் பணை தோள் மரீஇ
துறத்தல் வல்லியோர் புள்_வாய் தூதே – குறு 266/3-5
கொல்லைப்புறத்து வேங்கை மரத்துக்கு ஒரு சொல் சொல்ல மறந்துவிட்டாரே!
மறக்கமுடியாத பருத்த தோளைத் தழுவி
நம்மைத் துறந்து செல்லும் ஆற்றலுள்ளோர் பறவைகள் மூலம் விடும் தூதின் வழியாக

வல்லிர்

வல்லிர் – (மு.வி.மு) (நீர்) வல்லமையுள்ளவர், (you are) capable
கண்ணும் நுதலும் நீவி முன் நின்று
பிரிதல் வல்லிரோ ஐய – நற் 71/5,6
ண்களையும் நெற்றியையும் தடவிக்கொடுத்து அவள் முன் நின்று,
அவளைவிட்டுப் பிரிந்துசென்றுவிடுவீரோ ஐய!

வல்லிற்று

வல்லிற்று – (பெ) வலிமையுடையது, that which is capable
பிறிது என்வயின்
சொல்ல வல்லிற்றும் இலனே – அகம் 32/14,15
பிறிதோர் சொல்லும் என்னிடம்
சொல்லும் வலிமையுடைய சொல் ஒன்றையும் காணாதவன் ஆனான்

வல்லு

வல்லு – 1. (வி) (ஒன்றனைச் செய்ய) இயலு, (ஒன்றில்) வலிமையுள்ளவனாயிரு, be able
– 2. (பெ) சூதாடு கருவி, dice
1.
வல்லினும் வல்லார் ஆயினும் சென்றோர்க்கு
சால் அவிழ் நெடும் குழி நிறைய வீசும்
மாஅல் யானை ஆஅய் – அகம் 152/19-21
கல்வியில் வல்லுநராயினும், வல்லுநர் அல்லாராயினும் பரிசில் நாடி வருபவர்க்கு
மிடாச் சோற்றை மண்டையின் நெடிய குழி நிறையும்படியாக அளிக்கும்
பெரிய யானைகளையுடைய ஆய் என்பானது
2.
நரை மூதாளர் அதிர் தலை இறக்கி
கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய
வரி நிற சிதலை அரித்தலின் – அகம் 377/7-9
நரையினையுடைய முதியோர் நடுங்கும் தம் தலையைக் கவிழ்த்து
தமது கவர்த்த மனத்திலே இருத்தி சூதுவிளையாடும் சூதாடும் தரையின் அழகுகெட
வரிகள் பொருந்திய நிறமுடைய கறையான் அரித்தமையால்
– வல்லு – சூது கருவி; ஈண்டுச் சூதாடுமிடத்திற்கு ஆயிற்று. – வே.நாட்டார் உரை, விளக்கம்

வல்லென

வல்லென – (வி.அ) விரைந்து, quickly
பொய் வலாளர் முயன்றுசெய் பெரும் பொருள்
நம் இன்று ஆயினும் முடிக வல்லென
பெரும் துனி மேவல் நல்கூர் குறு_மகள் – அகம் 229/8-10
பொய் மிக்காராய் நம் தலைவர் முயன்று ஈட்டும் பெரும் பொருள்
நாம் இல்லையாயினும் கைகூடுக விரைந்து
பெரிய வெறுப்பு மேவற்க, மகட்கு நல்கூர்ந்தார் பெற்ற செல்வ மகளாகிய இளைய தலைவியே

வல்லென்ற

வல்லென்ற – (பெ.அ) திண்ணிய, robust
வலி முன்பின் வல்லென்ற யாக்கை புலி நோக்கின்
சுற்று அமை வில்லர் சுரி வளர் பித்தையர்
அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண் மறவர் – கலி 4/1-3
அளவிறந்த உடல் வலிமையும், உறுதியான உடம்பும், புலிப் பார்வையும் கொண்ட,
முறுக்கிக்கட்டிய வில்லினையுடய, சுருண்டு வளர்ந்த மயிரையுடைய,
சரியான சமயத்தை எதிர்நோக்கிக் காத்துக்கிடக்கும் கொடிய மறவர்கள்,
– வல்லென்ற – வற்கென்ற – நச் உரை
– வல்லென்ற – திண்ணிய – இராசமாணிக்கனார் உரை

வல்லே

வல்லே – (வி.அ) விரைந்து, முனைப்புடன், quickly, swiftly, promptly
வருக தில் வல்லே வருக தில் வல் என – புறம் 284/1
விரைய வருக விரைய வருக என்று

வல்லை

வல்லை – 1. (மு.வி.மு) (நீ) ஆற்றலுடையவள்(ன்), (you are) capable
– 2. (வி.அ) விரைவாக, quickly
1.
நும்மொடு வருவல் என்றி எம்மொடு
பெரும் பெயர் தந்தை நீடு புகழ் நெடு நகர்
யாயொடு நனி மிக மடவை முனாஅது
வேனில் இற்றி தோயா நெடு வீழ்
வழி நார் ஊசலின் கோடை தூக்கு-தொறும்
துஞ்சு பிடி வருடும் அத்தம்
வல்லை ஆகுதல் ஒல்லுமோ நினக்கே – நற் 162/6-12
உம்முடனேயே வருகிறேன் என்று கூறுகின்றாய்; எம்முடன் –
பெரும் பெயர் கொண்ட தந்தையின் நீண்ட புகழ் பொருந்திய நெடிய மாளிகையில்
உன் தாயோடு மிகவும் அதிகமான அன்புச் சூழலில் வளர்ந்த இளம்பெண்ணே! – முன்பு
வேனிற்காலத்து இத்தி மரத்தின் நிலத்தில் தோயாத நீண்ட விழுது
ஒழுகுகின்ற நாரால் கட்டப்பட்ட ஊசலைப் போலக் கோடைக்காற்று வீசித்தூக்கும்போதெல்லாம்
அதன் அடியில் தூங்குகின்ற பெண்யானையின் முதுகில் வருடிவிடும் பாலை வழியில் –
வருவதற்குத் திறன் உள்ளவளாயிருத்தல் இயலுமோ உனக்கு.
2.
கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை
புல்லென் வறு மனை நோக்கி மெல்ல
வருந்தும்-கொல்லோ திருந்து இழை அரிவை
வல்லை கடவு-மதி தேரே சென்றிக – நற் 321/5-8
மலையில் ஞாயிறு சேரும் கதிர்கள் மழுங்கிய மாலையில்
பொலிவிழந்து வெறுமையாய்த் தோன்றும் தன் இல்லத்தை நோக்கி மெல்ல
வருந்தியிருப்பாள் திருத்தமான அணிகலன்களை அணிந்திருக்கும் நம் தலைவி,
எனவே, விரை

வல்வது

வல்வது – (பெ) வலிமையுள்ளது, that which is strong
நிலை அரும் பொருள்_பிணி நினைந்தனிர் எனினே
வல்வது ஆக நும் செய்_வினை – அகம் 271/10,11
ஓரிடத்து, நிற்றலில்லாத பொருளை நினைந்து செல்வீராயின்
நும் பொருளீட்டும் வினை வலிமையுறுவதாக.

வளகு

வளகு – (பெ) திராட்சை போன்ற பழங்களையுடைய நீண்ட மரவகை, Common sebesten tree., Cordia myxa
புணர் நிலை வளகின் குளகு அமர்ந்து உண்ட
புணர் மருப்பு எழில் கொண்ட வரை புரை செலவின்
வயங்கு எழில் யானை – கலி 43/20-22
பெண்யானையுடன் சேர்ந்து, வளகுத்தழையைத் தின்ற,
இணையான கொம்புகளை அழகுடன் கொண்ட, மலை நடப்பது போல் நடக்கின்ற,
ஒளிவீசும் அழகுடைய யானைகளையுடைய

வளப்பாடு

வளப்பாடு – (பெ) வளம், பெருக்கம், abundance, increase
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்
படிநிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டி
திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்
நின் உருபுடன் உண்டி
பிறர் உடம்படுவாரா
நின்னொடு புரைய
அந்தணர் காணும் வரவு – பரி 2/61-68
வேதங்களில் தேர்ந்த ஆசானின் மந்திரமொழிகளும்,
படிப்படியாக உயர்ந்துகொண்டே செல்லும் வேள்விச்சாலையில் யாகபலிக்காக ஆடுகளைக் கொண்டுபோவதும்,
புகழ் பொருந்த இசைக்கும் வேதவிதிகளின்படி யாகத்தீயை முறையாக மூட்டி,
திகழும் ஒளியையுடைய பிரகாசமான சுடரினது பெருக்கத்தைச் செய்துகொள்வதும், ஆகிய இம்மூன்று செயல்களும்
முறையே, உன் உருவமும், உன் உணவும்,
பிறரும் ஏற்றுக்கொள்ளும்படியான
உனது பெருமைக்குப் பொருந்தும்படி
அந்தணர்கள் போற்றிக் காணும் உன்னுடைய தோற்றப்பொலிவின் சிறப்பும் ஆகும்

வளமை

வளமை – (பெ) செல்வச்செழிப்பு, opulence, richness, prosperity
இளமை கழிந்த பின்றை வளமை
காமம் தருதலும் இன்றே – நற் 126/9,10
இளமை கழிந்த பின்னால், அந்தச் செல்வச்செழிப்பு
இன்பம் தருவதும் இல்லை

வளர்

வளர் – (வி) 1. உயிரினங்கள் பெரிதாகு, grow, develop
2. மிகு, அதிகமாகு, increase, expand, wax, enlarge
3. வளர்த்து, வளரச்செய், raise, nurture
4. மிகுதியாக்கு, cause to increase
5. தூங்கு, துயில், sleep
1.
களர் வளர் ஈந்தின் காழ் கண்டு அன்ன – பெரும் 130
களர் நிலத்தே வளர்ந்த ஈந்தின் விதையைக் கண்டாற் போன்று

வளர் இளம் பிள்ளை தழீஇ – பெரும் 204
வளரும் இளமையான (தம்)குஞ்சுப்பறவைகளைத் அணைத்தவாறு
2.
அம் வாய் வளர் பிறை சூடி – பெரும் 412
அழகிய வாயைக்கொண்ட வளர்பிறையைச் சூடி
3.
வார் பெயல் வளர்த்த பைம் பயிர் புறவில் – அகம் 324/5
பெய்யும் மழை வளர்த்த பசிய பயிரினையுடைய காட்டில்
4.
பகை வளர்த்து இருந்த இ பண்பு இல் தாயே – புறம் 336/12
ஊர்க்குப் பகைவர் மிகவுளராக இருத்தலால் பண்பின்மையுடைய இத் தாய்
5.
பாயல் வளர்வோர் கண் இனிது மடுப்ப – மது 630
படுக்கையில் துயில்கொள்வோர் கண் இனிதாகத் துயில

வளவன்

வளவன் – (பெ) சோழர்களின் பெயர்களில் ஒன்று. one of the names of chOzhA kings
கோடை ஆயினும் கோடா ஒழுக்கத்து
காவிரி புரக்கும் நல் நாட்டு பொருந
வாய் வாள் வளவன் வாழ்க என
பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே – புறம் 393/22-25
கோடக்காலம் வந்த போதும் தப்பாதி நீர் ஒழுகுதலையுடைய
காவிரியாறு பாயும் நல்ல நாட்டுக்குத் தலைவனே
தப்பாத வாட்படையை உடைய வளவன் வாழ்வானாக என்று
பெருமை பொருந்திய நின் வலிய தாலை பலபடியும் பாடுவோம்

வளாகம்

வளாகம் – (பெ) சூழப்பட்ட இடம், enclosed place, surrounded place
தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண் குடை நிழற்றிய ஒருமையோர்க்கும் – புறம் 189/1,2
தெளிந்த நீரால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் பிற வேந்தர்க்குப் பொதுவாதலின்றி தமக்கே உரித்தாக ஆண்டு
வெண்கொற்றக்குடையால் நிழல்செய்த ஒரு தன்மையை உடையோர்க்கும்

திரை தரும் முந்நீர் வளாஅகம் எல்லாம் – கலி 146/28
அலைகளைக் கொணரும் கடல் சூழ்ந்த இம் மண்ணுலகம் எங்கும்

வளாய்

வளாய் – (வி.எ) வளாவி, கலந்து, mixing, as hot water with cold
கல்லகார பூவால் கண்ணி தொடுத்தாளை
நில்லிகா என்பாள் போல் நெய்தல் தொடுத்தாளே
மல்லிகா மாலை வளாய் – பரி 11/103-105
குளிரிப்பூவால் தலைமாலை தொடுக்கும் ஒருத்தியை
அவ்வாறு தொடுப்பதை நிறுத்துக என்பாள் போல் நெய்தல் மலரைத் தொடுத்தாள்
மல்லிகை மாலையில் இடையிடையே கலந்து;

வளாவு

வளாவு – (வி) 1. சூழ்ந்திரு, surround
2. கல, mix, as hot water with cold; dilute
1.
மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வு என
பொன் புனை உடுக்கையோன் புணர்ந்து அமர் நிலையே – பரி 15/27,28
நிலையான குளிர்ச்சியையுடைய இளவெயில் தன்னைச் சூழ்ந்து நிற்க, உள்ளே இருள் வளர்ந்திருப்பதைப் போல்,
பொன்னால் புனையப்பட்ட ஆடையினை அணிந்திருப்போன் தன் முன்னோனுடன் சேர்ந்து அமர்ந்திருக்கும்
நிலையை
2.
வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம்
யாம் தனக்கு உறு முறை வளாவ – புறம் 292/1,2
வேந்தனுக்காக எடுத்துக்கொடுத்த இனிய குளிர்ந்த நறவை
தனக்குரிய முறைப்படியே யாங்கள் வேறு பொருள் கலந்து கொடுத்தோமாக

வளி

வளி – (பெ) காற்று, wind, air
வளி கிளர்ந்து அன்ன செலவினர் வளி இடை
தீ எழுந்து அன்ன திறலினர் – திரு 170,171
காற்று எழுந்ததைப் போன்ற செலவினையுடையராய், காற்றிடத்தே
நெருப்பு எழுந்ததைப் போன்ற வலிமையினையுடையராய்,

துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடும் கோட்டு
நளி மலை நாடன் நள்ளியும் – சிறு 106,107
சொட்டும் மழை (எப்போதும்)பெய்யும் (உயர்ச்சியால்)காற்றுத் தங்கும் நெடிய சிகரங்களையுடைய
செறிந்த மலைநாட்டையும் உடைய நள்ளியும்; செறிந்த கொம்புகளிடத்தே

வளிதரும்செல்வன்

வளிதரும்செல்வன் – (பெ) காற்றுக்கடவுள், சூரியன், Lord of the winds, Sun
வளி_தரும்_செல்வனை வாழ்த்தவும் இயைவதோ – கலி 16/16
காற்றுக் கடவுளை வாழ்த்தி வேண்டுவது சரியாக இருக்குமோ?
– வளிதரும்செல்வன் – ஞாயிறு – என்னை? காற்றின் இயக்கத்திற்கு அவனேகாரணம் ஆதலின் என்க.
– நச்.உரை – பொ.வே.சோ. விளக்கம்

வளிமகன்

வளிமகன் – (பெ) காற்றின் மகன், வீமன், Son of the Wind, Bhima
ஒள் உரு அரக்கு இல்லை வளி_மகன் உடைத்து – கலி 25/7
தீயினால் ஒளிவிடும் உருவத்தையுடைய அரக்கு மாளிகையை காற்றின் மகனான வீமன் உடைத்து

வளை

வளை – 1. (வி) 1. சூழ், surround
2. கோணு, bend, curve
3. சுற்றிவா, hover round; walk around
4. சுற்றிச்சூழ், close in
5. வரை, எழுது, paint, delineate
6. கோணச்செய், bend, inflect
7. சுற்றிக்கொள், போர்த்து, wear, put on enclosing the body
8. முற்றுகையிடு, besieze
9. கைகளால் சுற்றி அணை, embrace
– 2. (பெ) 1. சங்கு என்ற கடல் நத்தை, conch, tropical marine gastropod of the genus Strombus
having a brightly-colored spiral shell with large outer lip
2. சங்கு என்ற கடல் நத்தையின் ஓடு, conch shell
3. வளையல், bangles
4. எலி முதலியவற்றின் பொந்து, Rat-hole, burrow;
1.1
இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து – திரு 293
இருண்ட நிறத்தையுடைய கடல் சூழ்ந்த (இந்த)உலகத்தில்
1.2
வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் – பெரும் 110
வளைந்த கொம்பினையுடைய பன்றியின் வரவைப் பார்த்து நிற்கும்
1.3
வையகம் முழுதுடன் வளைஇ பையென
என்னை வினவுதியாயின் – புறம் 69/7,8
உலகம் எல்லாவற்றையும் சுற்றிவந்து, பின்னை என்னை மெல்ல
வறுமை தீர்ப்போர் யார் எனக் கேட்கின்றாயாயின்
1.4
நெடும் செவி குறு முயல் போக்கு அற வளைஇ
கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும் – பெரும் 115,116
நீண்ட காதுகளைக்கொண்ட சிறிய முயல்களைப் (வேறு)போக்கிடம் இல்லாதவாறு வளைத்து(ப் பிடித்து),
கடுமையான கானவர் (அக்)காட்டில் (கூட்டாஞ்சோற்றைக்)கூடியுண்ணும்
1.5
செம்பு இயன்று அன்ன செய்வுறு நெடும் சுவர்
உருவ பல் பூ ஒரு கொடி வளைஇ
கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல் – நெடு 112-114
செம்பினால் பண்ணினாற்போன்ற (சிறப்பாகச்)செய்தலுற்ற நெடிய சுவரில்,
வடிவழகுகொண்ட பல பூக்களையுடைய ஒப்பில்லாத கொடியை வரைந்து,
கருவோடு பெயர்பெற்ற காட்சிக்கினிய நல்ல இல் (கர்ப்பக் கிருகம் – கருவறை)
1.6
கொடும் புறம் வளைஇ கோடி கலிங்கத்து
ஒடுங்கினள் – அகம் 86/21,22
முதுகினை வளைத்து கோடிப்புடவைக்குள்
ஒடுங்கிக்கிடந்தாள்
1.7
முருங்கா கலிங்கம் முழுவதும் வளைஇ
பெரும் புழுக்கு உற்ற நின் பிறை நுதல் பொறி வியர் – அகம் 136/20,21
கசங்காத புத்துடையால் உடல் முழுவதும் போர்த்தியதால்
மிக்க புழுக்கத்தை எய்திய நினது பிறைபோன்ற நெற்றியில் அரும்பிய வியர்வை
1.8
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ
அரும் சமம் கடந்து படிமம் வவ்விய – அகம் 149/11,12
வளம் பொருந்திய முசிறி என்னும்பட்டினத்தை ஆரவாரம் மிக முற்றுகையிட்டு
அரிய போரை வென்று அங்குள்ள பொற்பாவையைக் கவர்ந்துகொண்ட
1.9
வன்கணாளன் மார்பு உற வளைஇ
இன் சொல் பிணிப்ப நம்பி – அகம் 153/5,6
கொடுமையுடைய தலைவன் மார்போடு சேர்த்து அணைத்து
இனிய சொல்லாலேகட்டிவிட, அதனை விரும்பி

துனி கண் அகல வளைஇ கங்குலின்
இனிதின் இயைந்த நட்பு – அகம் 328/6,7
தமது வருத்தம் தம்மிடத்தினின்றும் நீங்க ஆகத்தைத் தழுவி, இரவெல்லாம்
இனிமையாகப் பொருந்திய நட்பினை
2.1
பனை_மீன் வழங்கும் வளை மேய் பரப்பின் – மது 375
பனைமீன்கள் உலாவும் சங்கு மேய்கின்ற கடலிடத்தில்

வாள் சுறா வழங்கும் வளை மேய் பெரும் துறை – அகம் 150/7
வாள் போன்ற கொம்பினையுடைய சுறா மீன் இயங்கும் சங்குகள் மேயும் பெரிய துறையையுடைய

2.2
வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல – திரு 120
கொம்பு மிக்கு ஒலிப்பவும், வெள்ளிய சங்கு முழங்கவும்

விசயம் வெல் கொடி உயரி வலன் ஏர்பு
வயிரும் வளையும் ஆர்ப்ப – முல் 91,92
வெற்றியால், வென்றெடுக்கின்ற கொடியை உயர்த்தி, வலப்பக்கம் உயர்த்தி
கொம்பும் சங்கும் முழங்க

வளை நரல வயிர் ஆர்ப்ப – மது 185
சங்கம் முழங்க, கொம்புகள் ஒலிக்க,

2.3
வளை கை கிணை_மகள் வள் உகிர் குறைத்த
குப்பை வேளை உப்பு இலி வெந்ததை – சிறு 136,137
வளையல்(அணிந்த) கையினையும் உடைய கிணைமகள் பெரிய நகத்தால் கிள்ளின
குப்பை(யில் முளைத்த) கீரை உப்பில்லாமல் வெந்ததை,

அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை – மது 316
அரம் கீறியறுத்த இடம் நேரிதாகிய விளங்கும் வளையல்களும்

வல்லோன்
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை
அகன் தொடி செறித்த முன்கை ஒண் நுதல் – நற் 77/8-10
வளைசெய்வதில் வல்லவன்
தன் வாள் போன்ற அரத்தால் அராவிச் செய்த நன்றாகப் பொருந்திய நேரிய ஒளிமிகுந்த வளையலையும்,
அகன்ற தொடியையும் செறித்த முன்கையையும், ஒளிவிடும் நெற்றியையும்

வளை என்ற சங்கினை அரம் கொண்டு அறுத்துச் செய்வதால் பெண்கள் கைகளில் அணியும் வட்டமான அணி
வளையல் எனப்பட்டது.

2.4
இல் எலி வல்சி வல்வாய் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதக குழறும்
வளை கண் சேவல் வாளாது மடியின் – அகம் 122/13-15
இல்லிலுள்ள எலியை இரையாகக் கொண்ட வலிய வாயினதான கூகையின் சேவல்
பேய்கள் திரியும் நள்ளிரவில் அழிவுண்டாகக் குழறும்
பொந்தில் வாழும் அச் சேவல் வறிதே உறங்கின்

வள்

வள் – (பெ) 1. பெருமை, பெரிய தன்மை, largeness, bigness
2. வளமை, செழிப்பு, fertility, fecundity
3. கூர்மை, sharpness
4. வார், lash, thong
5. வண்மை, வள்ளன்மை, liberality, munificience
1.
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி – திரு 8
ஒளியையுடைய ஞாயிறும் திங்களும் இருளை நீக்கும் வானிடத்தே பெருமையுடைய துளியை முற்படச் சிதறி
– வாள் – ஒளி – ஈண்டு ஞாயிற்றையும் திங்களையும் குறிப்பதால் ஆகுபெயர் என்க – நச். பொ.வே,சோ விளக்கம்
2.
வள் இதழ் குளவியும் குறிஞ்சியும் குழைய – மலை 334
வளவிய இதழையுடைய குளவியும், குறிஞ்சியும் வாடும்படி
3.
முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வய பிணவு – அகம் 362/5
செம்முருக்கின் அரும்பினை ஒத்த கூரிய நகத்தினையுடைய வலிய பெண்புலி
4.
வள் பரிந்து கிடந்த என் தெண் கண் மா கிணை – புறம் 399/23
வார் அறுப்புண்டு கிடந்த என் தெளிந்த கண்ணையுடைய மாக்கிணையை
5.
மழவர் பெருமகன் மா வள் ஓரி – நற் 52/9
வீரர்களின் தலைவனான, மிகுந்த வள்ளன்மையுள்ள ஓரியின்

வள்பு

வள்பு – (பெ) 1. வார், lash, thong
2. விசைவார், strip of leather that is attached to the bridle
3. கடிவாளம், bridle
1.
சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல்
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண
வெள் வசி படீஇயர் மொய்த்த வள்பு அழீஇ
கோள் நாய் கொண்ட கொள்ளை
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே – நற் 82/7-11
சிறிய கண்களையுடைய பன்றியின் மிக்க சினத்தையுடைய ஆண்
சேறு பட்ட கரிய பக்கம் புழுதி படிந்து அதன் நிறத்தைப் பெற
சுருக்குவார் வைத்த வெறும் பிளப்பில் வீழ்ந்துபட்டதாக, வாரை அழித்து மொய்த்தனவாகக்
கொன்று நாய்கள் பற்றிக்கொண்ட மிகுதிப்பட்ட தசைகளை
கானவர் சென்று அவற்றை விலக்கிப் பன்றி இறைச்சியைக்கொணரும் சிறுகுடியின்கண்ணே
– பின்னத்தூரார் உரை.
2.
வள்பு தெரிந்து ஊர்-மதி வலவ – ஐங் 486/4
குதிரைகளின் விசைவாரினை ஆராய்ந்து கையிற்கொண்டு செலுத்துவாயாக, பாகனே!
– வள்பு- குதிரை வாயின் வடம்; கடிவாளத்தோடு இணைத்த விசை வார். குதிரையை விரையச் செலுத்த வேண்டின்
பாகன் இவ்வாரினைக் கையிற்கொண்டு அடிக்கடி விசைப்பது வழக்கம் – பொ.வே.சோ உரை – விளக்கம்
– வள்பு, குதிரையைச் செலுத்தும் விசைவார் – ஔவை.சு.து.விளக்கம்
3.
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய – அகம் 64/3
கூறுபாடமைந்த வனப்பினையுடைய கடிவாள வாரினை நீ ஆராய்ந்து கொள்ள
– நாட்டார் உரை

வள்ளன்மை

வள்ளன்மை – (பெ) கொடையுடைமை, Liberality, munificence;
வள்ளன்மையின் எம் வரைவோர் யார் என
உள்ளிய உள்ளமோடு உலை நசை துணையா – புறம் 393/6,7
இரப்பார்க்கு இல்லையென்னாது கொடுக்கும் தன்மையுடைமையால் எம்மை ஏற்று உதவுவோர் யாருளர் என்று
நினைந்த நெஞ்சத்துடனே வருந்துதற்கேதுவான விருப்பம் துணையாக

வள்ளம்

வள்ளம் – (பெ) வட்டில் வகை, a dish for use in eating or drinking
1.
இந்த வள்ளத்தில் கள்ளை ஊற்றிக் குடிப்பர்
வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின்
கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய – பெரும் 338,339
கள்ளைச் சமைக்கின்ற மகளிர் வட்டில் கழுவிக் கவிழ்த்த
வழிந்து சிந்தின கழுநீர் வழிந்த குழம்பிடத்து
2.
இந்த வள்ளத்தில் பாலை ஊற்றிக் குடிப்பர்.
பால் பெய் வள்ளம் சால்கை பற்றி – அகம் 219/5
பால் பெய்யப்பெற்ற கிண்ணம் நிறைந்ததனைப் பற்றிக்கொண்டு

சேடு இயல் வள்ளத்து பெய்த பால் சில காட்டி
ஊடும் மென் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போல – கலி 72/3,4
சிறப்பான இயல்புடைய கிண்ணத்தில் ஊற்றிய பாலைச் சிறிதளவு எடுத்துக்காட்டி,
கோபித்துக்கொண்டிருக்கும் மென்மையான சிறிய கிளியை உண்ணச்செய்தவளின் முகத்தைப் போல
3.
செல்வர் மனைகளில் இந்த வள்ளம் வெள்ளி, பொன் ஆகியவற்றால் செய்யப்பட்டிருக்கும்.
கண் பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தான்
தண் கமழ் நறும் தேறல் உண்பவள் முகம் போல – கலி 73/3,4
கண் கூசும்படியாக ஒளி விடும் வெண்மையான வெள்ளிக் கிண்ணத்தில்
குளிர்ச்சியான நறுமணம் கமழும் மதுவைக் குடிக்கும் மங்கையின் முகத்தைப் போல,

பொன் செய் வள்ளத்து பால் கிழக்கு இருப்ப – நற் 297/1
பொன்னால் செய்யப்பட்ட கிண்ணத்தில் இருக்கும் பால் கீழே இருக்க,
4.
பயன்படாத நேரத்தில் வள்ளத்தை உறையினில் இட்டு வைப்பர்.
முகில் அகடு கழி மதியின்
உறை கழி வள்ளத்து உறு நறவு வாக்குநர்
அரவு செறி உவவு மதி என அங்கையில் தாங்கி – பரி 10/74–76
முகிலின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளிவரும் திங்களைப் போல்
கரிய உறைக்குள் போட்டுவைத்திருந்த வெள்ளி வட்டிலை வெளியில் எடுத்து, சூட்டை உண்டாக்கும் கள்ளை
வார்த்து,
பாம்பு பற்றிய முழுநிலவைப் போலத் தம் உள்ளங்கையில் தாங்கி,

வள்ளி

வள்ளி – (பெ) 1. கொடிவகை, அதன் பூ, கிழங்கு, a creeper, Convolvulus batatas
2. கைவளை, Armlet, bracelet, wristlet
3. முருகனின் மனைவி, A wife of Lord Murugan
4. குறிஞ்சிமகளிர் கூத்துவகை, A kind of dance of hill women
1.
முதிர் காய் வள்ளி அம் காடு பிறக்கு ஒழிய – முல் 101
முதிர்ந்த காயையுடைய வள்ளியங்காடு பின்னாக மறைய

மலர்ந்த வள்ளி அம் கானம் கிழவோன் – ஐங் 250/3
விரிந்த வள்ளிக்கொடிகள் நிறைந்த கானத்துக்கு உரியன்
– வள்ளியங்கானம்- வள்ளிக்கொடிகள் காடு போல் படர்ந்துள்ளமை பற்றி இவ்வாறு கூறப்பட்டது.- ஔவை.சு.து.உரை

வாழை வள்ளி நீள் நறு நெய்தல் – குறி 79
வாழைப்பூ, வள்ளிப்பூ, நீண்ட நறிய நெய்தற்பூ

பூண்டதை சுருள் உடை வள்ளி இடை இடுபு இழைத்த
உருள் இணர் கடம்பின் ஒன்றுபடு கமழ் தார் – பரி 21/10,11
நீ அணிந்துகொண்டது, சுருளும்தன்மையுடைய வள்ளிப்பூவை இடையிடையே இட்டுத் தொடுத்த
தேருருள் போன்ற பூங்கொத்துக்களையுடைய கடம்பின் பூவுடன் சேர்ந்து கமழ்கின்ற மாலை;

உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே
இரண்டே தீம் சுளை பலவின் பழம் ஊழ்க்கும்மே
மூன்றே கொழும் கொடி வள்ளி கிழங்கு வீழ்க்கும்மே
நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீது அழிந்து
திணி நெடும் குன்றம் தேன் சொரியும்மே – புறம் 109/3-8
உழவரால் உழுது விளைக்கப்படாதன நான்கு விளையுளை உடைத்து,
ஒன்று, சிறிய இலையையுடைய மூங்கிலினது நெல் விளையும்,
இரண்டு, இனிய சுளையையுடைய பலாவினது பழம் ஊழ்க்கும்,
மூன்று, கொழுவிய கொடியையுடைய வள்ளிக்கிழங்கு தாழ இருக்கும்
நான்கு, அழகிய நிறத்தையுடைய ஓரி பாய்தலால், அதன் மேற்பவர் அழிந்து
கனத்த நெடிய மலை தேனைப்பொழியும்.

(Convolvulus batatas என்ற வள்ளிக்கொடி வகைகளுக்குக் கிழங்குதான் உண்டு. ஆனால், முல்லைப்பாட்டு அதற்குக்
காய் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. இது ஆய்வுக்குரியது. ஆனால் Dioscorea pentaphylla என்ற ஒரு வகை
வள்ளிக்கொடியில் காய்கள் காய்த்திருப்பதைக் காணலாம்)

2.
வெள்ளி வள்ளி வீங்கு இறை பணை தோள் – நெடு 36
வெண்சங்கு வளையல்கள் இறுகின இறையினை உடைய மூங்கில்(போன்ற) தோளினையும்

ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர் – புறம் 352/5
ஆம்பலின் தண்டால் செய்யப்பட்ட வளை அணிந்த கையையுடைய மகளிர்
3.
குறிஞ்சி குன்றவர் மறம் கெழு வள்ளி தமர்
வித்தக தும்பை விளைத்தலான் வென் வேலாற்கு
ஒத்தன்று தண் பரங்குன்று – பரி 9/67-69
குறிஞ்சி நிலத்துக் குறவரின் வீரம் பொருந்திய மகளாகிய வள்ளியின் தோழிமார்
திறமையோடு போரிட்டு வெற்றியை விளைத்ததால் வெற்றியையுடைய வேலவனுக்குப்
பெரிதும் பொருந்துவதாயிற்று தண்ணிய பரங்குன்றம்;

முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல நின் – நற் 82/4
முருகவேளைக் கலந்து உடன்சென்ற வள்ளி நாச்சியாரைப் போல
4.
வாடா வள்ளியின் வளம் பல தரூஉம்
நாடு பல கழிந்த பின்றை – பெரும் 370,371
வாடாத வள்ளியாகிய வள்ளிக் கூத்தினைக் கொண்ட, வளங்கள் பலவற்றையும் தருகின்ற
நாடுகள் பலவற்றையும் கடந்த பின்பு

வள்ளியன்

வள்ளியன் – (பெ) வண்மையுடையவன், Generous, liberal person
ஈத்-தொறும் மா வள்ளியன் என நுவலும் நின்
நல் இசை தர வந்திசினே – பதி 61/13,14
கொடுக்கக் கொடுக்க இன்னும் பெரிதும் கொடுப்பவன் என்று உலகத்தவர் கூறும் உன்னுடைய
நல்ல புகழ் என்னை ஈர்க்க உன்னிடம் வந்துள்ளேன்;

வள்ளியை

வள்ளியை – (வி.மு) வண்மையுடையவனாயிருக்கிறாய், you are munificent
வள்ளியை என்றலின் காண்கு வந்திசினே – பதி 54/1
ஈகை நெஞ்சுடையவன் என்று சொல்லப்படுவதால் உன்னைக் காண்பதற்காக வந்திருக்கிறேன்

வள்ளியோன்

வள்ளியோன் – (பெ) பார்க்க : வள்ளியன்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே – புறம் 119/7
இரவலர்க்கு வழங்கும் வண்மையையுடைவனது நாடு

வள்ளியோய்

வள்ளியோய் – (வி.வே) வண்மையுடையவனே, Oh! munificent
ஆர் எயில் அவர்கட்டாகவும் நுமது என
பாண்_கடன் இறுக்கும் வள்ளியோய் – புறம் 203/10,11
பகைவரது அரிய அரண் அவர்களிடத்தில் இருக்கும்போதே, உன்னுடையது என
பாணர்க்குக் கடனாகக் கொடுக்கும் வண்மையுடையவனே

வள்ளியோர்

வள்ளியோர் – (பெ) வண்மையுடையவர், Generous, liberal persons
வள்ளியோர் படர்ந்து புள்ளின் போகி
நெடிய என்னாது சுரம் பல கடந்து
வடியா நாவின் வல்லாங்கு பாடி
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கை – புறம் 47/1-6
வண்மையுடையோரை நினைத்து பழுமரம் தேரும் பறவை போலப் போகி
நெடிய என்று கருதாது அரிய வழி பலவற்றையும் கடந்து
திருந்தாத நாவால் தம் வல்லபடி பாடி
ஆண்டுப் பெற்ற பரிசிலால் மகிழ்ந்து சுற்றத்தை ஊட்டி
தாமும் பொருளைப் பாதுகாவாது உண்டு, உள்ளம் கூம்பாமல் வழங்கி
தம்மைப் புரப்போராற் பெறும் சிறப்பு ஏதுவாக வருந்தும் இப் பரிசிலால் வாழும் வாழ்க்கை

வள்ளுரம்

வள்ளுரம் – (பெ) இறைச்சி, தசை, flesh, meat
உள் ஆற்று கவலை புள்ளி நீழல்
முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள – புறம் 219/1,2
ஆற்றிடைக்குறையுள் புள்ளிப்பட்ட மரநிழலிற்கண் (உண்ணாநோன்பு) இருந்து
தன் உடம்பிலுள்ள முழுத்தசையையும் வாட்டும் வீரனே

வள்ளூரம்

வள்ளூரம் – (பெ) பார்க்க : வள்ளுரம்
தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம்
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி – புறம் 320/13,14
துண்டுதுண்டாக அறுத்து நிறைந்த இறைச்சியை
கரிய பெரிய சுற்றத்தாரோடே ஒருங்கு கூடியிருந்து இனிது உண்டு

வள்ளை

வள்ளை – (பெ) 1. ஒரு நீர்நிலைக் கொடி, Creeping bind weed, Ipomoea aquatica
2. மகளிர் நெற்குத்தும் போது ஒரு தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு,
Song in praise of a hero, sung by women when husking or hulling grain
1.
வள்ளை நீக்கி வய மீன் முகந்து
கொள்ளை சாற்றிய கொடு முடி வலைஞர் – மது 255,256
வள்ளைக்கொடிகளை ஒதுக்கிவிட்டு வலிமையுடைய மீன்களை முகந்துகொண்டு,
(தாம்)கொண்டவற்றைக் கூவிவிற்கும் கொடிய முடிச்சுக்களையுடைய வலைகளையுடையோர்,
1.1
இந்த வள்ளைக்கொடிகள் மிக நெருக்கமாகப் பின்னிக்கிடக்கும்.
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி – அகம் 36/5
பின்னிக்கிடக்கும் வள்ளையின் அழகிய கொடிகளை உழப்பி,
1.2
வள்ளைக்கொடியின் இலை நீண்டு இருக்கும்.
பிணங்கு அரில் வள்ளை நீடு இலை பொதும்பில – அகம் 256/1
பின்னிய தூறுகளையுடைய வள்ளைக்கொடியின் நீண்ட இலைச் செறிவில்
1.3
வள்ளைக்கொடியின் தண்டு உள்துளை உள்ளதாக இருக்கும்.
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய் – அகம் 6/17,18
அழகிய உள்துளையுள்ள வள்ளையின் மெல்லிய கொடிகளை உழப்பி,
வாளைமீனைத் தின்ற கூரிய பற்களை உடைய நீர்நாய்

2.
நெல்,தினை ஆகியவற்றை உரலில் இட்டு, இரண்டு பெண்கள் உலக்கையால் மாறிமாறிக் குற்றும்போது
பாடிக்கொள்ளும் பாடல் வள்ளைப்பாட்டு எனப்படும்.
பா அடி உரல பகு வாய் வள்ளை
ஏதில்_மாக்கள் நுவறலும் நுவல்ப – குறு 89/1,2
பரந்த அடிப்பகுதியையுடைய உரலிடத்து பகுத்த வாயாற் பாடும் வள்ளைப்பாட்டை
அயலோராகிய பெண்கள் குறையும் கூறுவர்;

தினை குறு_மகளிர் இசை படு வள்ளையும் – மலை 342
தினையைக் குற்றுகின்ற பெண்களுடைய தாளத்தோடு கூடிய வள்ளைப்பாட்டும்

கொல் யானை கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம்
வள்ளை அகவுவம் வா இகுளை – கலி 42/7,8
கொல்லுகின்ற யானையின் கொம்பினால், மூங்கில் நெல்லைக் குற்றியவாறு நாம்,
வள்ளைப்பாடலாய்ப் பாடுவோம், வா, தோழியே!

வழக்கு

வழக்கு – (பெ) 1. இயக்கம், இயங்குதல், moving, funtioning
2. புழக்கம், பயன்பாடு, usage
– 3. நடைமுறை, practice
1.
வையை அன்ன வழக்கு உடை வாயில் – மது 356
வைகை போன்று (மக்களின் இடையறாத)போக்குவரத்தை உடைய வாயில்
2.
கொடும் தாள் முதலை கோள் வல் ஏற்றை
வழி வழக்கு அறுக்கும் கானல் அம் பெரும் துறை – குறு 324/1,2
வளைந்த கால்களையுடைய முதலையின் கொல்லுதலில் வல்ல ஆணானது
வழியில் பிறர் செல்வதை இல்லாமற்செய்யும் கடற்கரைச் சோலையுள்ள அழகிய பெரிய துறையில்
3.
ஏறு தொழூஉ புகுத்தனர் இயைபு உடன் ஒருங்கு
அ வழி முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப
வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி – கலி 101/9-11
ஏறுகளை அவற்றின் தொழுவினுள் (வாடிவாசலுக்கு உள்ளே) ஒரு சேர அடைத்தனர்
அவ்விடத்தில், முரசின் முழக்கத்தைப் போலவும், இடியினைப் போலவும் ஏறுதழுவும் களத்தின் முன்னே
ஆரவாரம் உண்டாக,
ஏறுதழுவும் நடைமுறையை எதிர்கொண்டு வந்து வந்து திரண்டு

வழங்கு

வழங்கு – 1. (வி) 1. புழங்கு, நடமாடு, இயங்கு, keep in use, move about
2. நடைமுறையில் இரு, பயன்பாட்டில் இரு, be in use
3. கூறு, சொல், utter, say
4. கொடு, give
5. பக்கவாட்டில் அசை, மேலும் கீழும் அசை, swing, move up and down
6. இயங்குநிலையில் இரு, be operative, function
7. உலவு, walk about
8. ஊர், ஏறு, ஏறிச்செல், mount, ride (as a horse)
– 2. (பெ) வழங்குதல், giving
1.1.
களிறு வழங்கு அதர கானத்து அல்கி – பொரு 49
யானைகள் நடமாடும் வழிகளை உடைய காட்டிடத்தே தங்கி,

தேர் வழங்கு தெருவில் நீர் திரண்டு ஒழுக – மது 648
தேர்கள் புழங்கும் தெருவில் நீர் திரண்டு ஒழுகும்படி

வருநர்க்கு வரையாது பொலம் கலம் தெளிர்ப்ப
—————– ——————————
கூந்தல் விறலியர் வழங்குக அடுப்பே – பதி 18/3-6
வருவோர்க்கு வரையாது வழங்குதற்பொருட்டு நீவிர் அணிந்துள்ள பொற்றொடிகள் ஒலிக்க
——————— —————————
வரிசைபெறும் தகுதி வாய்ந்த விறலியரே! – புழங்குங்கள் அடுப்புகளை
– அடுப்பு வழங்குக என்றது இடையறவின்றிச் சமைத்தவண்ணமே இருக்க என்றவாறு – ஔவை.ச்சு.து.விளக்கம்
1.2.
கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி – குறு 207/5
பாறைகளின் அருகே உள்ளது நீண்ட நாட்களாய் புழக்கத்திலிருக்கும் சிறிய வழியில்
1.3
வண்டு பட ததைந்த கொடி இணர் இடை இடுபு
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்
கதுப்பின் தோன்றும் புது பூ கொன்றை
கானம் கார் என கூறினும்
யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே – குறு 21
வண்டுகள் மொய்ப்பதால் மலர்ந்த நீண்ட கொத்துக்கள் (தழைகளினிடையே) விட்டுவிட்டு,
பொன்னால் செய்யப்பட்ட தலைச்சுட்டி போன்ற அணிகள் அணிந்த பெண்களின்
கூந்தலைப்போல் தோன்றும் புதிய பூக்களையுடைய கொன்றை மரமுள்ள
(இந்த) நந்தவனம் (இது) கார்ப்பருவம் என்று தெரிவித்தாலும்
நான் ஏற்கமாட்டேன்; அவர் பொய் சொல்லமாட்டார்.
1.4
நீர் நாண நெய் வழங்கியும்
எண் நாண பல வேட்டும் – புறம் 166/21,22
நீர் நாணும் அளவுக்கு நெய்யினைக் கொடுத்தும்
எண்ணிக்கை நாணும் அளவுக்குப் பல வேள்விகளை வேட்டும்

பெரும் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து
இருந்தனை சென்மோ வழங்குக சுடர் என – நற் 146/6,7
பெரிதும் குளிர்ச்சியையுடைய மரத்தின் நிழலில் சிறிது நேரம் இறங்கியிருந்து
தங்கிச் செல்வாயாக! அருள் வழங்கட்டும் சூரியன் என்று
1.5
மைந்து மலைந்த மழ களிறு
கந்து சேர்பு நிலைஇ வழங்க – புறம் 22/8,9
வலிமை மிக்க இளங் களிறு
கம்பத்தைப் பொருந்தித் தான் நின்ற நிலையிலேயே நின்று பக்கவாட்டில் அசைய

நீர் தெவ்வு நிரை தொழுவர்
பாடு சிலம்பும் இசை ஏற்றத்
தோடு வழங்கும் அகல் ஆம்பியின்
கயன் அகைய வயல் நிறைக்கும்
மென் தொடை வன் கிழாஅர் – மது 89-93
நீரினை முகக்கும் (ஏற்றத்தில்)வரிசையாய் நிற்கும் தொழிலாளர்கள்
பாடுதலால் ஒலிக்கும் இசையும், ஏற்றத்(தோடு)
(ஏற்றத்)தோடு மேலும் கீழும் இயங்கும் அகன்ற (நீரிறைக்கும்)சாலின் ஓசையும்,
குளத்தின் நீர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய(நீரை முகந்து) வயலை நிறைக்கின்ற
மென்மையான கட்டுக்களையுடைய வன்மையான ஏற்றப்பொறியின் ஓசையும்
1.6,1.7
ஊர் காப்பாளர் ஊக்கு அரும் கணையினர்
————————— ————————–
அசைவு இலர் எழுந்து நயம் வந்து வழங்கலின்
கடவுள் வழங்கும் கையறு கங்குலும்
அச்சம் அறியாது ஏமம் ஆகிய
மற்றை யாமம் – மது 647-653
ஊர்க் காவலர்கள், தப்புதற்கு அரிய அம்பினையுடையவராய்;
———————————- ——————————
சோம்பலற்றவராய்ப் புறப்பட்டு நியதி உணர்வு தோன்ற சுற்றிவருதலால்,
தெய்வங்கள் உலாவும் செயலற்ற இருளிடத்தும்
அச்சத்தை அறியாமல் காவலையுடைய
முந்திய யாமத்தை
1.8
குதிரை வழங்கி வருவல் – கலி 96/6
குதிரை ஏறி வருவேன்
– நச்.உரை
குதிரை ஏற்றம் பயின்று வருகிறேன்
– பொ.வே.சோ விளக்கம்
குதிரை ஊர்ந்து வந்தேன்
– ம.இரா. உரை
2.
வறன் ஒரீஇ வழங்கு வாய்ப்ப – புறம் 382/15
வறுமையின் நீங்கி, பிறர்க்கும் யாம் வழங்குதல் அமைய

வழலை

வழலை – (பெ) ஆண் ஓந்தி, male chameleon
வேனில் ஓதி பாடு நடை வழலை
வரி மரல் நுகும்பின் வாடி – நற் 92/2,3
வேனிற்காலத்து ஓந்தியின் வருத்தமான நடையைக்கொண்ட ஆண் ஓந்தி
வரிகள் உள்ள பெருங்குரும்பையின் குருத்துப்போல வாடி,
– ஓந்தி ஓதி எனவும், அதன் ஆண் வழலை எனவும் வழங்கும் – ஔவை.சு.து.உரை விளக்கம்

வழா

வழா – (பெ.எ) 1. வழுவாத, விலகாத, நெறிபிறழாத, not falling off, not going astray
2. வழுவாத, தவறாத, unfailing
1.
ஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே – திரு 95,96
ஒரு முகம்
மந்திர நியதிகளின் மரபுள்ளவற்றில் வழுவாத
அந்தணருடைய வேள்விகளை கூர்ந்து கேட்கும்
2.
பழுவும் பாந்தளும் உளப்பட பிறவும்
வழுவின் வழாஅ விழுமம் அவர்
குழு மலை விடரகம் உடையவால் எனவே – குறி 259-261
பேயும், மலைப்பாம்பும், (இவற்றை)உள்ளிட்ட பிறவும்,
(நாம் சிறிது)தவறினாலும் (அவை உடனே கொல்லத்)தவறாத இடர்ப்பாடுகளை — (அவரின்
கூட்டமான மலைகளில் உள்ள பிளவுகள் உள்ள இடம்) — உடையன’

வழாது

வழாது – (வி.எ) 1. வழுவாமல், நெறிபிறழாமல், without erring, without going astray
2. வழுவாமல், தவறாமல், unfailingly
1.
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர்
நிறை_வயின் வழாஅது நின் சூலினரே – பரி 5/46,47
குற்றமற்ற கற்பினையுடைய அந்த முனிவர்களின் மனைவியர்
தம் கற்பினில் வழுவாமல் உன்னைக் கருக்கொண்டனர்;
2.
இரும் பறை இரவல சேறி ஆயின்
தொழாதனை கழிதல் ஓம்பு-மதி வழாது
வண்டு மேம்படூஉம் இ வற நிலை ஆறே
———————- ———————–
வில் உமிழ் கடும் கணை மூழ்க
கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல்லே – புறம் 263/2-8
பெரிய பறையினையுடைய இரவலனே! நீ போகின்றாயாயின்
தொழாதவனாய்க் கடந்து செல்லுதலைத் தவிர்ப்பாயாக, (தொழுது சென்றால்) இடைவிடாமல்
வண்டுகள் மேம்பட்டு வாழும் இந்தக் கொடிய வழி;
——————- ——————
வில் உமிழ்ந்த விரைந்த அம்புகளில் மூழ்கி
கரையைக் கொல்லும் புனலின் அணை போல எதிர்நின்று விலக்கியவனின் நடுகல்லை,

வழாமை

வழாமை – (பெ) வழுவாமை, தவறாமை, not failing
அறனும் பொருளும் வழாமை நாடி – அகம் 286/10
அறம் பொருள் ஆகிய இரண்டிலிருந்தும் தவறாமையை ஆராய்ந்து

தொல் இயல் வழாஅமை துணை என புணர்ந்தவள்
புல் ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை – கலி 2/17,18
தொன்மையான நெறிகளினின்றும் வழுவாமல், நீயே துணை என்று நின்னை மணந்த இவளின்
தழுவுதற்கு இனிய மார்பினை விட்டுப் பிரியாதிருப்பதே செல்வம் ஆகுமே அல்லாமல் –

வழால்

வழால் – (பெ) வழுக்காமை, not slipping
அகழ் இழிந்து அன்ன கான்யாற்று நடவை
வழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பி – மலை 214,215
அகழியில் இறங்குவது போன்ற, காட்டாற்று வழித்தடம்
வழுக்கும் இடங்களைக் கொண்டிருத்தலால், வழுவாமை காத்து
வழால் ஓம்பி – வழுக்காமல் பாதுகாத்து – ச.வே.சு உரை

வழி

வழி – 1. (வி) 1. பூசு, smear, rub with hand
2. ஒழுகு, ஓடு, flow
– 2. (பெ) 1. பாதை, way, path
2. பின்வருவது, That which is subsequent
3. தடம், சுவடு, footprint
4. இடம், place
5. உபாயம், means
6. முறைமை, manner, method
7. சந்ததியினர், descendants
1.1
நுண் சேறு வழித்த நோன் நிலை திரள் கால் – நெடு 157
நுண்ணிய கூழ்(சாதிலிங்கம்)பூசின, உறுதியாக நிற்றலையுடைய திரண்ட கால்களை,
1.2
கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய
வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின் – பெரும் 339,340
கள்ளைச் சமைக்கின்ற மகளிர் வட்டில் கழுவிக் கவிழ்த்த
வடிந்து சிந்தின கழுநீர் வழிந்தோடிய குழம்பிடத்து
2.1.
பாலை நின்ற பாலை நெடு வழி – சிறு 11
பாலைத் தன்மை நிலைபெற்றமையால் தோன்றிய பாலையாகிய, நீண்ட பாதை
2.2
சாறு கழி வழி நாள் சோறு நசை_உறாது
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந – பொரு 2,3
விழாக்கழிந்த அடுத்தநாளில், (அங்குப்பெறுகின்ற)சோற்றை விரும்புதல் செய்யாது,
வேற்றுப்புலத்தை எய்த நினைத்த விவேகத்தை அறிந்த பொருநனே,
2.3
குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல் – பொரு 4
(மானின்)குளம்பு (பதிந்த)இடத்தைப் போன்று பகுக்கப்பட்ட (இரண்டு பக்கமும் தாழ்ந்து நடுவுயர்ந்த)பத்தலினையும்;
2.4
கண்ணில் காண நண்ணு வழி இரீஇ – பொரு 76
(தன்)கண்ணில் படும்படியாக (தனக்குப்) பக்கத்து இடத்தில் (என்னை)இருத்தி,

ஆ சேந்த வழி மா சேப்ப
ஊர் இருந்த வழி பாழ் ஆக – மது 157,158
பசுக்கள் இருந்த இடங்களில் விலங்குகள் தங்க,
ஊர்கள் இருந்த இடமெல்லாம் பாழிடம் ஆக,
2.5
நல் ஏர் நடந்த நசை சால் விளை வயல்
பன் மயிர் பிணவொடு கேழல் உகள
வாழாமையின் வழி தவ கெட்டு
பாழ் ஆயின நின் பகைவர் தேஎம் – மது 173-176
நல்ல ஏர் உழுத விரும்புதல் அமைந்த விளைகின்ற வயல்களில்
பல மயிரினையுடைய பெண்பன்றியோடு ஆண்பன்றி ஓடித்திரிய,
உனக்கு அடங்கி வாழாமற்போனதால் வாழும்வழி மிகவும் கெட்டு
பாழ்நிலம் ஆயின நின் பகைவர் நாடுகள்
2.6
செற்ற தெவ்வர் நின் வழி நடப்ப – மது 189
(நீ)சினந்த பகைவர் நின் சொற்படி நடப்ப
2.7
புன் பொதுவர் வழி பொன்ற – பட் 281
வளங்குன்றிய முல்லைநில மன்னர் கிளை(முழுதும்)கெட்டுப்போக

வழிநாள்

வழிநாள் – (பெ) அடுத்த நாள், tomorrow
சாறு கழி வழிநாள் சோறு நசை_உறாது
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந – பொரு 2,3
விழாக்கழிந்த அடுத்தநாளில், (அங்குப்பெறுகின்ற)சோற்றை விரும்புதல் செய்யாது,
வேற்றுப்புலத்தை எய்த நினைத்த விவேகத்தை அறிந்த பொருநனே

வழிபடு

வழிபடு – (வி) வணங்கு, தொழு, worship, pray
வழிபடு தெய்வம் கண் கண்டு ஆஅங்கு – நற் 9/2
தாம் வணங்குகின்ற தெய்வத்தை நேரில் கண்டதைப் போல்

வழிப்படு

வழிப்படு – (வி) 1. வழியில்செல், go along the path
2. சரியான வழியில் நடத்திச்செலு, set on the right path
3. நேர்ப்படு, சந்தி, meet, encounter
4. தொடர்ந்து செல், follow
5. விருப்பப்படி நட, கட்டுக்குள் இரு, be as per one’s desire, be under some one’s control
6. சூழ்ந்திரு, surround
1.
புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம்
சென்ற காதலர் வழி வழிப்பட்ட
நெஞ்சே நல்வினைப்பாற்றே ஈண்டு ஒழிந்து – நற் 107/6-8
புன்மையான இலையையுடைய ஓமை மரங்களுடைய புலிகள் நடமாடும் கடிய பாதையில்
சென்ற நம் காதலரின் வழி வழியே தொடர்ந்து சென்ற
நம் நெஞ்சமே நற்பேறு பெற்றதாகும்;

நீர் வழிப்படூஉம் புணை போல் ஆர் உயிர்
முறை வழிப்படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் – புறம் 192/9-11
நீரின் வழியே போம் மிதவை போல, அரிய உயிர்
ஊழின்வழியேபடும் என்பது, நன்மை கூறுபாடறிவோர்
கூறிய நூலானே தெளிந்தேம்
2.
ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தல் – நற் 240/8
பசுக்களை நடத்திச்செல்பவர்கள் தோண்டிய குழிவான பள்ளத்தின் நீரை
3.
புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு – அகம் 395/10
தனிமையை நேர்ப்பட்ட கலங்கிய உள்ளத்துடன்
4.
ஏவல்_இளையரொடு மா வழிப்பட்டு என – நற் 389/5
ஏவின செய்யும் இளைஞரோடு புனத்தை அழிக்கும் மாவாகிய பன்றியைப் பின்தொடர்ந்து செல்ல
5.
பொலம் தார் யானை இயல் தேர் பொறைய
வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து
நின் வழிப்படார் ஆயின் – பதி 75/3-5
பொன்னால்செய்த மாலையை அணிந்த யானையையும், இலக்கணம் அமைந்த தேரினையும் உடைய
இரும்பொறையே!
முடியுடை வேந்தரும், குறுநில மன்னரும், பிறரும் உன்னைக் கீழ்ப்பணிந்து
உன் விருப்பப்படி நடக்காவிட்டால்,
6.
பூளை அன்ன பொங்கு மயிர் பிள்ளை
மதி சூழ் மீனின் தாய் வழிப்படூஉம் – அகம் 297/14,15
பூளைப் பூவினைப் போல விளங்குகின்ற மயிரினையுடைய (பூனைக்)குட்டிகள்
திங்களைச் சூழ்ந்துள்ள விண்மீன் போலத் தம் தாயின் பின் சூழ்ந்திருக்கும்
– நாட்டார் உரை

வழிமுறை

வழிமுறை – 1. (பெ) சந்ததி, தலைமுறை, progeny, descendant, generation
2. (வி.அ) பின்னர், afterwards
1.
உவரா ஈகை துவரை ஆண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே – புறம் 201/10-12
வெறுப்பிலாத கொடையினையுடையராய்த் துவராபதி என்னும் படைவீட்டை ஆண்டு
நாற்பத்தொன்பது தலைமுறை தொன்றுபட்டு வந்த
வேளிருள்வைத்து வேளாயுள்ளாய்
2.
நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மை இல் கமலமும் வெள்ளமும் நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை – பரி 2/13-15
நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம்
குற்றமற்ற தாமரை, வெள்ளம் ஆகிய பேரெண்களால்
குறிக்கப்பட்ட காலங்களின் ஈட்டங்களையும் கடந்த பின்னர்

புக்க_வழி எல்லாம் கூறு
கூறுவேன் மேயாயே போல வினவி வழிமுறை
காயாமை வேண்டுவல் யான் – கலி 82/5-7
நீ சென்ற இடங்களையெல்லாம் சொல்வாயாக;
சொல்கிறேன், விரும்பிக்கேட்பது போல் கேட்டு அதன் பின்னே
வெகுளாதிருக்க வேண்டுகிறேன் நான்

வழிமொழி

வழிமொழி – (வி) 1. போற்று, praise, eulogize
2. பணிந்துபேசு, talk submissively
3. வணங்கிப்பேசு, talk with reverence
அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி – பதி 24/8
அறச்செயல்களை விரும்பும் அந்தணர்களை வழிபட்டு நடந்து,
– ஔவை.சு.து.உரை

உண் கடன் வழிமொழிந்து இரக்கும்_கால் முகனும் தாம்
கொண்டது கொடுக்கும்_கால் முகனும் வேறு ஆகுதல்
பண்டும் இ உலகத்து இயற்கை – கலி 22/1-3
உண்பதற்குரிய பொருளைப் கடனாகப் பெறப் பணிந்து பேசி, இரந்து கேட்கும்போது இருக்கும் முகமும், தாம்
வாங்கிக் கொண்டதைத் திருப்பிக் கொடுக்கும்போது இருக்கும் முகமும் வேறுபடுதல்
பண்டைக் காலத்திலும் இந்த உலகத்துக்கு இயற்கை,
– வழிமொழிந்து – பணிவாகப் பேசி – மா.இரா.உரை விளக்கம்
– வழிமொழிந்து – வழிபாடாகச் சொல்லி – நச்.உரை
– வழிமொழிந்து இரத்தலாவது – கடன் கொடுப்போர் கருத்தறிந்துஅவர் கருத்திற்கியைவன பேசிக் கடன் கேட்டல்
– பொ.வே.சோ விளக்கம்

வந்து திறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து
சென்றீக என்ப ஆயின் – அகம் 124/2,3
(பகைவர்) வந்து திறை கொடுத்து வணங்கி, பணிமொழிகூறிச்
சென்றருள்க என்பாராயின்
– நாட்டார் உரை

வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக – புறம் 8/1
உலகத்தைக் காக்கும் அரசர் வழிபாடுசொல்லி நடக்க,
– ஔவை.சு.து.உரை

குன்று மலை காடு நாடு
ஒன்று பட்டு வழிமொழிய – புறம் 17/3,4
குன்றமும் மலையும் காடும் நாடும் என இவற்றையுடையோர்
ஒரு பெற்றிப்பட்டு வழிபாடுகூற
– ஔவை.சு.து.உரை

வலியர் என வழிமொழியலன்
மெலியர் என மீக்கூறலன் – புறம் 239/6,7
இவர் நம்மினும் வலியர் என்று கருதி அவர்க்கு வழிபாடு கூறி அறியான்
இவர் நம்மினும் எளியர் என்று கருதி அவரின் மிகுத்துச் சொல்லியறியான்
– ஔவை.சு.து.உரை

வழியடை

வழியடை – (பெ) தடை, இடையூறு, இடையீடு, obstacle, hindrance, impediment
சினனே காமம் கழி கண்ணோட்டம்
அச்சம் பொய் சொல் அன்பு மிக உடைமை
தெறல் கடுமையொடு பிறவும் இ உலகத்து
அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும் – பதி 22/1-4
கோபம், காமம், மிகுந்த உவகை,
அச்சம், பொய்சொல்லல், பொருளின் மீது மிகுந்த பற்றுக்கொள்ளல்,
தண்டிப்பதில் கடுமை ஆகிய இவற்றோடு இவை போன்ற பிறவும் இந்த உலகத்தில்
அறவழியிலான ஆட்சிக்குத் தடைக்கற்கள் ஆகும்;

வழிவழி

வழிவழி – (வி.அ) பரம்பரை பரம்பரையாக, from generation to generation
வழிவழி சிறக்க நின் வலம் படு கொற்றம் – மது 194
வழிமுறை வழிமுறையாகச் சிறக்க நின் ஆளுமையுள்ள அரசாட்சி

வழீஇ

வழீஇ – (வி.எ) வழுக்கி, வழுவி – என்பதன் சொல்லிசை அளபெடை, having slipped
ஏறு தம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரி குடர்
ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ
ஆலும் கடம்பும் அணி-மார் விலங்கிட்ட
மாலை போல் தூங்கும் சினை – கலி 106/26-29
காளைகள், தம்முடைய அலங்கரிக்கப்பட்ட கொம்புகளால் குத்தி எடுத்த கொத்தான குடல்களைத்
தொங்கவிட்டவாறே தூக்கிக்கொண்டு பறந்த பருந்துகளின் வாயிலிருந்து வழுக்கி விழ, அவை
ஆலமரத்தின் மேலும், கடம்ப மரத்தின்மேலும் தெய்வங்களுக்கு அணிவிப்பதற்காகப் போடப்பட்ட
மாலையைப் போல தொங்கிக்கொண்டிருந்தன மரக்கிளைகளில்;

தான் தவம்
ஒரீஇ துறக்கத்தின் வழீஇ ஆன்றோர்
உள் இடப்பட்ட அரசனை பெயர்த்து அவர்
உயர்_நிலை_உலகம் உறீஇ ஆங்கு – கலி 139/33-36
தான் தவ முறையிலிருந்து
விலகி, விண்ணுலகம் செல்லும் நெறியில் வழுவி, பெரியோர்
உயர்நிலைக்கு உரியவன் என்று எண்ணிய ஓர் அரசனை, மீண்டும் நல்வழியில் ஈடுபடுத்தி, அந்தப் பெரியோர்
அவனைப் பேரின்ப உலகம் சேர்ப்பதைப் போன்று,

வழு

வழு – (பெ) தவறு, தப்பு, error, mistake, fault
அவன்
எழு உறழ் திணி தோள் வழு இன்று மலைந்தோர்
வாழ கண்டன்றும் இலமே – புறம் 61/15-17
அவனுடைய
கணைய மரத்தோடு மாறுபடும் திணிந்த தோளைத் தப்பில்லாமல்
மாறுபட்டோர் வாழக் கண்டதும் இல்லை
– வழு இன்று மலைதலாவது – வெளிப்பட நின்று மலைதல் -ஔவை.சு.து.விளக்கம்

வழுக்கு

வழுக்கு – 1. (வி) 1. விலகு, தள்ளி அமை, be apart
2. நழுவு, slip
– 2. (பெ) கொழுப்பு, பிறந்த கன்று போன்றவற்றின் மேலுள்ள மெல்லிய ஏடு,
mucus as on fat or on new born calf

1.1.
மாதிரம்
விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்
இரு கோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு
ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து – நெடு 72-75
திசைகள்(எல்லாவற்றிலும்)
விரிந்த கிரணங்களைப் பரப்பின அகன்ற இடத்தையுடைய ஞாயிறு,
(நாட்டப்பட்ட)இரண்டு கோல்களின் நிழல்கள் விலகியிராமல் ஒன்றும்வகையில், (கிழக்கிலிருந்து)மேற்கே
செல்வதற்காக,
ஒரு பக்கத்தைச் சாராத (உச்சியில் இருக்கும்)நண்பகல் நேரத்தில்
1.2.
தோள் வலி துணி பிணி துறந்து இறந்து எய்தி மெய் சாய்ந்து
கோள் வழுக்கி தன் முன்னர் வீழ்ந்தான் மேல் செல்லாது
மீளும் புகர் ஏற்று தோற்றம் காண் – கலி 104/46-48
தன் தோள் வலிமையினால் துணிந்த பிடிப்பு நெகிழ, காளையின் கழுத்தை விட்டுக் கைகள் தள்ளப்பட உடல்
தளர்ந்து
தான் பிடித்த பிடி வழுக்கித் தன் முன்னே வீழ்ந்தவனை முட்டித்தள்ளாமல்,
திரும்பிச் செல்லும் புள்ளிகளையுடைய காளையின் தோற்றத்தைப் பார்!
2.
நிணம் பொதி வழுக்கில் தோன்றும்
மழை தலைவைத்து அவர் மணி நெடும் குன்றே – ஐங் 207/3,4
நிணத்தைப் பொதிந்துவைத்து மூடியுள்ள மெல்லிய ஏடைப் போல் தெரிகிறது,
மேகங்களை உச்சியில் கொண்டுள்ளன, அவரின் மணிபோன்ற நெடிய குன்று
– வழுக்கு – கொழுவிய ஊன் தடி மேல் வெண்ணெய் போலப் படிந்து தோன்றுவது -ஔவை.சு.து.விளக்கம்

வழுதி

வழுதி – (பெ) பாண்டிய அரசர், Pandiya king
வழுதி என்பது பாண்டியரின் குடிப்பெயர்களில் ஒன்று. கூடல், மருங்கை, கொற்கை ஆகிய இடங்களில்
இருந்துகொண்டு வழுதி அரசர்கள் ஆண்டுவந்தனர்.

பசும் பூண் வழுதி மருங்கை அன்ன என் – நற் 358/10

வாடா வேம்பின் வழுதி கூடல் – அகம் 93/9

நல் தேர் வழுதி கொற்கை முன்துறை – அகம் 130/11

வழுதுணை

வழுதுணை – (பெ) வழுதுணங்காய், கத்தரிக்காய், brinjal
பிடி மிதி வழுதுணை பெரும் பெயர் தழும்பன் – அகம் 227/17
பெண் யானை மிதித்தமையால் ஆகிய வழுதுணங்காய் போலும் தழும்பினையுடைமையால் வழுதுணைத்
தழும்பன் என்னும் சிறந்த பெயரினையுடையான்.
இவனது ஊர் ஊணூர் எனப்படும். இந்த ஊருக்கு அப்பால் பாண்டியரின் மருங்கூர் இருந்தது என்கிறது இப்பாடல்.

இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் புண்
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண் – நற் 300/9,10
என்ற பாடல் அடிகளும் இதனை உறுதிப்படுத்தும்.

வழுத்து

வழுத்து – (வி) வாழ்த்து, துதி, praise, extol
மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தி
தேம் பலி செய்த ஈர் நறும் கையள் – ஐங் 259/3,4
மலையில் வாழும் கடவுளான தங்களின் குலதெய்வத்தை வாழ்த்தி,
இனிய பலியுணவைப் படைத்த ஈரமுள்ள நறிய கையினையுடையவள்,

வழும்பு

வழும்பு – (பெ) கொழுப்பு, பிறந்த கன்று போன்றவற்றின் மேலுள்ள மெல்லிய ஏடு,
mucus as on fat or on new born calf
வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி – மலை 221
வழுவழுப்பான மெல்லிய ஏட்டால் (கீழுள்ள)தரையை மறைக்கும் நுண்ணிய தன்மையுள்ள பாசி

அழுந்துபடு விழுப்புண் வழும்பு வாய் புலரா
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்து ஆங்கு – நற் 97/1,2
நெடுங்காலம் இருக்கும் விழுப்புண்ணின் மெல்லிய மேல்தோலையுடைய வாய் காய்ந்துபோகாத
துன்பத்தையுடைய மார்பினில் வேலை எறிந்தது போல்

வழுவாய்

வழுவாய் – (பெ) பாவம், sin
ஆன் முலை அறுத்த அறன் இலோர்க்கும்
மாண் இழை மகளிர் கரு சிதைத்தோர்க்கும்
பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும்
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள என – புறம் 34/1-4
பசுவின் மடியை அறுத்த தீவினையாளர்க்கும்
மாட்சிமைப்பட்ட அணிகலனையுடைய பெண்டிரது கருப்பத்தை அழித்தோர்க்கும்
பார்ப்பாரைப் பிழைத்த கொடுந்தொழிலையுடையோர்க்கும்
அவர் செய்த பாதகத்தினை ஆராயுமிடத்து அவற்றைப் போக்கும் வழியும் உள எனவும்

வழுவு

வழுவு – (வி) தவறு, fail, err
பழுவும் பாந்தளும் உளப்பட பிறவும்
வழுவின் வழாஅ விழுமம் அவர்
குழு மலை விடரகம் உடையவால் எனவே – குறி 259-261
பேயும், மலைப்பாம்பும், (இவற்றை)உள்ளிட்ட பிறவும்,
(நாம் சிறிது)தவறினாலும் (அவை உடனே கொல்லத்)தவறாத இடர்ப்பாடுகளை — (அவரின்
கூட்டமான மலைகளில் உள்ள பிளவுகள் உள்ள இடம்) — உடையன

வழூஉ

வழூஉ – (பெ) வழு, இழிசொல், words of ill-repute
கழுவொடு சுடு படை சுருக்கிய தோல் கண்
இமிழ் இசை மண்டை உறியொடு தூக்கி
ஒழுகிய கொன்றை தீம் குழல் முரற்சியர்
வழூஉ சொல் கோவலர் தத்தம் இன நிரை
பொழுதொடு தோன்றிய கார் நனை வியன் புலத்தார் – கலி 106/1-5
பசுவின் தலையில் கட்டும் கழியும், சூட்டுக்கோலும் வைத்துக் கட்டிய தோல்பையையும்,
ஒன்றோடொன்று கயிற்றினால் கட்டப்பட்ட மண்கலங்களைக் கொண்ட உறியையும் தூக்கிக்கொண்டு
நீண்டிருக்கிற கொன்றைப் பழத்தில் செய்யப்பட்ட இனிய குழலை வாசித்துக்கொண்டவராய்,
கொச்சையான பேச்சுக்களைப் பேசும் கோவலர்கள் தத்தம் மாட்டுக்கூட்டங்களை,
நேரத்தில் வந்த கார் காலத்தில் தோன்றின மழையில் நனைந்த அகன்ற புல்வெளிக்குக் கொண்டுசென்றனர்;

வழூஉம்

வழூஉம் – (பெ.அ) வழுக்கும், slippery
அகழ் இழிந்து அன்ன கான்யாற்று நடவை
வழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பி – மலை 214,215
அகழியில் இறங்குவது போன்ற, காட்டாற்று வழித்தடம்
வழுக்கும் இடங்களைக் கொண்டிருத்தலால், வழுவாமை காத்து,

வழை

வழை – (பெ) சுரபுன்னை, long-leaved two-sepalled gamboge, Ochrocarpos longifolius
1.
இந்தப் பூவில் மகரந்தப்பொடிகள் முதிர்ந்து கிடக்கும். எனவே, இதனைக் ‘கொங்கு முதிர் நறு வழை’ எனக்
குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடுகிறது.
கோடல் கைதை கொங்கு முதிர் நறு வழை – குறி 83,84
வெண்கோடற்பூ, தாழம்பூ, தாது முதிர்ந்த நறிய சுரபுன்னைப்பூ
2.
இந்த மரம் மலைப்பாங்கான இடங்களில் வளரும்.
வழை அமை சாரல் கமழ துழைஇ – மலை 181
சுரபுன்னை மரங்கள் வளர்ந்துநிற்கும் மலைச்சாரல் கமகமக்கும்படி கிளறி,

வழைச்சு

வழைச்சு – (பெ) புதிதாக இருத்தல், freshness, newness
வல் வாய் சாடியின் வழைச்சு அற விளைந்த
வெம் நீர் அரியல் விரல் அலை நறும் பிழி
தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் – பெரும் 280-282
கெட்டியான வாயினையுடைய சாடியில் இளங்கள்ளின் நாற்றம் அறும்படி முற்றின(பின்),
வெந்நீரில்(போட்டு) இறுத்ததை விரலிடுக்கில் அலைத்துப்(பின் விரல்மூடிப்) பிழிந்த நறிய கள்ளை,
பச்சை மீனைச் சுட்டதனோடு, (பசியால்)தளர்ந்தவிடத்தே பெறுவீர்

வவ்வு

வவ்வு – 1. (வி) வலிந்து பற்று. கவர்ந்து செல், பறி, பிடுங்கு, snatch, grab, seize
– 2. (பெ) கவர்தல், snatching
1.
வண்டு படு கடாஅத்து உயர் மருப்பு யானை
—————— ————————-
சிறுதினை பெரும் புனம் வவ்வும் நாட – அகம் 148/3-6
வண்டு மொய்க்கும் மதத்தினையும் நிமிர்ந்த கோட்டினையுமுடைய யானை
——————– ————————-
சிறிய தினை விளைந்த பெரிய புனத்தினைக் கவர்ந்துகொள்ளும் நாடனே

ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப – அகம் 136/23,24
அன்பு மிக்க நெஞ்சமோடு போர்வையைக் கவர்தலின்
உறையினின்றும் எடுத்த வாளைப் போல அவள் உருவம் வெளிப்பட்டு விளங்க
2.
செல் யாற்று தீம் புனலில் செல் மரம் போல
வவ்வு வல்லார் புணை ஆகிய மார்பினை – பரி 6/79,80
ஓடுகின்ற ஆற்றின் இனிய நீரில் அதன் வழியே செல்லும் மரத்தைப் போல,
கவர்வதில் வல்லவராகிய மகளிர் இயக்கிய வழியே இயங்கி அவருக்குத் தெப்பம் ஆகிய மார்பினைக் கொண்டாய்

வா

வா – (வி) 1. ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழை, come
2. தாவு, leap, gallop
1.
வள்ளை அகவுவம் வா இகுளை நாம்
வள்ளை அகவுவம் வா
காணிய வா வாழி தோழி வரை தாழ்பு
வாள் நிறம் கொண்ட அருவித்தே நம் அருளா
நாண் இலி நாட்டு மலை – கலி 42/8-12
வள்ளைப்பாடலாய்ப் பாடுவோம், வா, தோழியே! நாம்
வள்ளைப்பாடலாய்ப் பாடுவோம், வா!
காண்பதற்கு வா தோழியே! மலையிலிருந்து இறங்கி
வெள்ளை நிறத்தில் விழுகின்ற அருவியைப் பெற்றுள்ளது, நம் மீது அருள்கொள்ளாத
அந்த நாணம் கெட்டவன் நாட்டு மலையை!
2.
வளை நீர் மேய்ந்து கிளை முதல் செலீஇ
வா பறை விரும்பினை ஆயினும் தூ சிறை
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து
கரும் கால் வெண்_குருகு எனவ கேள்-மதி – நற் 54/1-4
சங்குகள் உள்ள கடல்நீரில் இரைதேடி, உன் சுற்றமுதலானவருடன் சென்று
சிறகுகளை விரித்து உயரப் பறக்க எழும்புவதை விரும்பினாயெனினும், தூய சிறகுகளுடன்
மிக்க புலவைத் தின்னும் உன் கிளையுடன் சற்றுத் தாமதித்து,
கரிய காலைக் கொண்ட வெண்ணிறக் குருகே! நான் சொல்வதைக் கேட்பாயாக!

விசும்பு விசைத்தெறிந்த கூதளம் கோதையின்
பசும் கால் வெண்_குருகு வா பறை வளைஇ – அகம் 273/1,2
வானில் வேகங்கொண்டு எறிந்த கூதாளியின் மாலை போல
பசிய காலினையுடைய வெள்ளாங்குருகுதாவும் சிறகினை வளைத்து

வாஅ பாணி வயங்கு தொழில் கலி_மா
தாஅ தாளிணை மெல்ல ஒதுங்க
இடி மறந்து ஏமதி வலவ – அகம் 134/7-9
தாவிச்செல்லும் தாளச்சீர் விளங்கும் நடை வாய்ந்த செருக்கிய குதிரையின்
தாவிச் செல்லும் இணை ஒத்த கால்கள் மெல்லென நடக்கும்படி
தாற்றுக்கோலால் குத்துதலை மறந்து செலுத்துவாயாக, பாகனே

வாம் பரிய கடும் திண் தேர்
காற்று என கடிது கொட்பவும் – மது 51,52
தாவும் குதிரைகளையுடைய கடிய செலவினையுடைய திண்ணிய தேர்
(சுழல்)காற்றுப் போன்று விரைந்து சுழலவும்,
– வாம் பரி – வாவும் பரி; வாவும் என்னும் செய்யும் என் வாய்பாட்டுப் பெயரெச்சம் – பொ.வே.சோ விளக்கம்

பறவைகள் நின்றுகொண்டிருக்கும் நிலையிலிருந்து பறப்பதற்காக, சிறகுகளை மேலுயர்த்தி விரித்து,
இரண்டு கால்களும் பின்னோக்கி இருக்க, உடம்பினை முன்னோக்கி நீட்டி எழும்பிப் பறக்கும் நிலையே
வாப் பறை எனப்படும். குதிரைகள் நாலுகால் பாய்ச்சலில் பின்னங்கால்கள் பின்னோக்கி இருக்க, முன்னங்
கால்கள் முன்னோக்கி நீண்டிருக்கத் தாவிச் செல்லுவதையே வாவுதல் என்கிறோம்.

வாகுவலயம்

வாகுவலயம் – (பெ) தோள் அணி, an ornament worn on shoulders
துனைந்து ஆடுவார் ஆய் கோதையர்
அலர் தண் தாரவர் காதில்
தளிர் செரீஇ கண்ணி பறித்து
கை வளை ஆழி தொய்யகம் புனை துகில்
மேகலை காஞ்சி வாகுவலயம்
எல்லாம் கவரும் இயல்பிற்றாய் தென்னவன்
ஒன்னார் உடை புலம் புக்கற்றால் மாறு அட்ட
தானையான் வையை வனப்பு – பரி 7/43-50
விரைந்து நீருக்குள் விளையாடும் ஆராய்ந்தணிந்த மாலையினையுடைய பெண்கள்,
மலர்ந்த குளிர்ந்த மாலையணிந்த ஆடவர், ஆகியோருக்கு, முறையே, காதுகளில்
தளிர்களைச் செருகியும், தலையின் மாலையைப் பறித்துக்கொண்டும்,
பெண்களின் கைவளையல்கள், மோதிரங்கள், தலையணியாகிய தொய்யகங்கள், உடுத்தியிருந்த ஆடை,
மேகலைகள், காஞ்சிகள் ஆகியவற்றையும், ஆண்களின் தோள்வளையங்கள் ஆகிய
எல்லாவற்றையும் கவர்ந்து செல்லும் தன்மையையுடையதாய், பாண்டிய மன்னன்
பகைவரின் தோற்றுப்போன நிலத்துக்குள் புகுவதைப் போன்று இருந்தது, அந்தப் பகைவரைக் கொன்றழித்த
படையை உடையவனின் வையையின் வனப்பு;

வாகை

வாகை – (பெ) 1. ஒரு மரம், காட்டுவாகை, Albizia lebbeck
2. அகத்தி, Sesbania grandiflora
3. சங்ககாலப் போர்க்களங்களில் ஒன்று, a battlefield during sangamperiod
4. எயினன் என்ற மன்னனின் நகரம்
1.
சங்க காலத்தில், போரில் வெற்றியடைந்தவர்கள் இதன் பூவைச் சூடிக்கொள்வர். இன்றைக்கும் ஏதேனும்
வெற்றி அடைந்தவர்களை வாகைசூடினார் என்று கூறுவது வழக்கம்.
1.1
வாகை மரத்து நெற்றுக்களில் உள்ள விதைகள் காற்றடிக்கும்போது அசைந்து ஒலியெழுப்பும்.
ஆரியர்
கயிறு ஆடு பறையின் கால் பொர கலங்கி
வாகை வெண் நெற்று ஒலிக்கும் – குறு 7/3-5
ஆரியக் கூத்தர்
கயிற்றில் ஆடும்போது ஒலிக்கும் பறையினைப்போல், காற்று மோதுவதால் கலங்கி
வாகைமரத்தின் வெண் நெற்று ஒலிக்கின்ற

அத்த வாகை அமலை வால் நெற்று
அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்ப – குறு 369/1,2
அரிய வழியில் உள்ள வாகையின் ஒலியெழுப்பும் வெண்மையான நெற்று
உள்ளீடான பரல்கள் நிறைந்த சிலம்பு போன்று அதன் விதைகள் ஒலிக்க
1.2
வாகையின் பூ ஆண் மயிலின் தலைக்குடுமி போல் இருக்கும்.
குமரி வாகை கோல் உடை நறு வீ
மட மா தோகை குடுமியின் தோன்றும் – குறு 347/2,3
இளம் வாகைமரத்தின் காம்புடைய நறிய பூக்கள்
மடப்பத்தையுடைய பெரிய ஆண்மயிலின் உச்சிக்குடுமியைப் போல் தோன்றும்
காடாகிய நீண்ட வெளியில் தானும் நம்மோடு

வாகை ஒண் பூ புரையும் முச்சிய
தோகை ஆர் குரல் – பரி 14/7,8
வாகையின் ஒளிரும் பூவினைப் போன்ற கொண்டையைக் கொண்ட
மயில்களின் நிறைந்த அகவல் குரல்

1.3
வாகைப்பூ பஞ்சுபோல் மென்மையாக இருக்கும், அதன் இலைகள் இரண்டிரண்டாகப் பிரிந்திருக்கும்.
மென் பூ வாகை புன் புற கவட்டு இலை – அகம் 136/10
மெல்லிய பூவையுடைய வாகையின் புல்லிய புறத்தினையுடைய கவர்த்த இலை

துய் வீ வாகை – பதி 43/23
மேலே பஞ்சு போன்ற முடியினைக் கொண்ட வாகைப்பூ

1.4
நன்னன் என்ற மன்னனின் காவல்மரமாக இருந்தது இந்த வாகை மரம்.
பொன் அம் கண்ணி பொலம் தேர் நன்னன்
சுடர் வீ வாகை கடி முதல் தடிந்த – பதி 40/14,15
பொன்னால் செய்த அழகிய தலைமாலை அணிந்த, பொன்னாலான தேரினைக் கொண்ட நன்னனின்
ஒளிவிடும் பூக்களையுடைய வாகையாகிய காவல்மரத்தை அடியோடு வெட்டிச் சாய்த்த
2.
வாகையின் ஒரு வகையான அகத்திப்பூவின் மொட்டு,காட்டுப்பன்றியின் கொம்புபோல் இருக்கும்
புகழா வாகை பூவின் அன்ன
வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் – பெரும் 109,110
புகழாத வாகையாகிய அகத்திப் பூவினை ஒத்த, (புகழ் வாகை – வெற்றி வாகை – வாகைத் திணை)
வளைந்த கொம்பினையுடைய பன்றியின் வரவைப் பார்த்து நிற்கும்

3.
மயங்கு மலர் கோதை குழைய மகிழ்நன்
முயங்கிய நாள் தவ சிலவே அலரே
கூகை கோழி வாகை பறந்தலை
பசும் பூண் பாண்டியன் வினை வல் அதிகன்
களிறொடு பட்ட ஞான்றை
ஒளிறு வாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே – குறு 393
கலந்து கோத்த மலர்களையுடைய மாலை குழைந்துபோகும்படியாக, தலைவன்
தழுவிய நாட்கள் மிகச் சிலவே; அதனால் எழுந்த பழிச்சொல்லோ,
கோட்டான்களாகிய கோழிகளையுடைய வாகை என்னும் போர்க்களத்தில்
பசும்பூண் பாண்டியனின் செயல்திறம் மிக்க அதிகன் என்பான்
தன் யானையோடு இறந்தபோது
ஒளிறும் வாள்களையுடைய கொங்கர் எழுப்பிய கூச்சலினும் பெரியது.
4.
வண் கை எயினன் வாகை அன்ன – புறம் 351/6
வள்ளன்மையுடைய எயினன் என்பானுக்குரிய வாகை என்னும் நகரத்தைப் போன்ற

வாக்கல்

வாக்கல் – (பெ) வடிக்கப்பட்ட சோறு, cooked rice with excess water drained
கவை கதிர் வரகின் அவைப்பு_உறு வாக்கல் – புறம் 215/1
கவர்ந்த கதிரினையுடைய வரகினது குற்றுதலுற்ற வடிக்கப்பட்ட சோற்றை

வாக்கு

வாக்கு – 1. (வி) வடி, வார், ஊற்று, pour
– 2. (பெ) செம்மை, திருத்தம், correctness, perfection
1.
சோறு வாக்கிய கொழும் கஞ்சி
யாறு போல பரந்து ஒழுகி
ஏறு பொர சேறாகி
தேர் ஓட துகள் கெழுமி – பட் 44-47
சோற்றை வடித்து வார்த்த கொழுமையான கஞ்சி
ஆற்றுநீர் போல (எங்கும்)பரவி ஓடி,
(அதைக் குடிக்க வந்த)காளைகள் தம்மில் பொருவதால் சேறாய் ஆகி,
(அச் சேற்றின் மீது)(பல)தேர்கள் ஓடுவதால் துகள்களாய் (மதில்கள் மீது)தெறித்து,
துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதி தேறல் – மலை 463

பாணர் மண்டை நிறைய பெய்ம்மார்
வாக்க உக்க தே கள் தேறல் – புறம் 115/2,3
பாணருடைய மண்டைகள் நிரம்ப வார்க்கவேண்டி
வடிக்க உக்க இனிய கள்ளாகிய தேறல்
2.
மெல்லிய நெஞ்சு பையுள் கூர தம்
சொல்லினான் எய்தமை அல்லது அவர் நம்மை
வல்லவன் தைஇய வாக்கு அமை கடு விசை
வில்லினான் எய்தலோ இலர்-மன் ஆய்_இழை – கலி 137/8-11
எனது மென்மையான நெஞ்சில் வருத்தம் மிகும்படியாகத் தன்
வாக்குத்தவறிய சொல்லம்புகளால் என்னைத் துளைத்தாரே அன்றி, அவர் நம் மேல்
வல்ல ஒருவன் செய்த வடிவத்தில் திருத்தமான, விரைந்து செல்லக்கூடிய
வில்லின் அம்புகளை விட்டது இல்லை, அழகிய இழையணிந்தவளே!

வாங்கு

வாங்கு – (வி) 1. பற்று, grab
2. வளை, bend
3. இழு, draw, pull
4. நெகிழ், நீக்கு, make loose, remove, take away
5. அடித்துச்செல், drag, carry away
6. செய்வி, make others do
7. மாட்டிக்கொள், சிக்கிக்கொள், get entangled
8. நாணேற்று, string a bow
9. முக, draw, bail
10. கேள், hear
11. தணி, குறை, reduce, subside
12. அணை, embrace
13. கலை, சிதறச்செய், disperse, scatter
14. செலுத்து, send forth, shoot
15. பிரித்தெடு, கொய், பறி, separate, pluck
16. பெற்றுக்கொள், receive
17. செறி, இணை, சேர், be joined
18. அழி, destroy
19. கவர், அகப்படுத்து, seize, capture
20. அப்புறப்படுத்து, நீக்கு, அகற்று, remove, take away
1.
மாசு இல் கற்பின் மடவோள் குழவி
பேஎய் வாங்க கைவிட்டு ஆங்கு – நற் 15/7,8
குற்றமற்ற கற்பினையுடைய இளையவள் ஒருத்தி தன் குழந்தையைப்
பேய் கைப்பற்றப் பறிகொடுத்ததைப் போல

கடல்_மரம் கவிழ்ந்து என கலங்கி உடன் வீழ்பு
பலர் கொள் பலகை போல
வாங்க_வாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே – நற் 30/8-10
கடலில் மரக்கலம் கவிழ்ந்துவிட, கலங்கி எல்லாரும் கடலுக்குள் வீழ்ந்து
பலரும் பிடித்துக்கொள்ளும் ஒரு பலகை போல,
அவரவரும் பற்றி இழுக்க, நீ நின்றுகொண்டு முன்னும் பின்னும் அசையும் துன்பமான நிலையை
2.
பெரும் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நார் உடை ஒசியல் அற்றே
கண்டிசின் தோழி அவர் உண்ட என் நலனே – குறு 112/3-5
பெரிய களிறு வளைக்க வளைந்து நிலத்தில் படாத
பட்டையை உடைய ஒடிந்த கிளையைப் போன்றது
காண்பாயாக! தோழி! அவர் நுகர்ந்த என் பெண்மை நலன்.

இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன் – கலி 38/1
இமையமலையாகிய வில்லை வளைத்த, கங்கை தங்கும் சடைமுடியோனாகிய சிவன்

வாங்கு கோல் நெல்லொடு வாங்கி வரு_வைகல்
மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி – கலி 50/1,2
மூங்கிலின் வளைகின்ற கழையை நெல்லோடு வளைத்து, விடியற்காலத்தில்,
அதனைத் தின்ற முழந்தாளையுடைய கரிய பெண்யானை
3,4,5
தண்டு தழுவா தாவு நீர் வையையுள்
கண்ட பொழுதில் கடும் புனல் கை வாங்க
நெஞ்சம் அவள் வாங்க நீடு புணை வாங்க – பரி 11/106-108
ஓர் இளைஞன் வாழைத்தண்டைத் தழுவிக்கொண்டு பாய்ந்து வரும் நீரைக் கொண்ட வையை ஆற்றில்,
கரையினில் இருந்த கன்னி ஒருத்தியைக் கண்ட மாத்திரத்தில், விரையும் நீர் அவன் கைகளை நெகிழ்க்க,
அவன் நெஞ்சத்தை அவள் இழுக்க, நீண்ட வாழைமரத்தை வெள்ளம் அடித்துச் செல்ல,
6.
நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்க
கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல – கலி 8/1,2
நடுவுநிலைமையைத் துறந்து, அதனை அகற்றிப்போட்ட அருளற்ற அமைச்சன் வினை செய்வித்துக்கொள்ள
கொடுமை செய்வதையே மேற்கொண்ட மன்னனின் கொடுங்கோலாட்சியைப் போல
– வினை வாங்குதல் – வினை செய்வித்துக்கோடல்; வேலை வாங்குதல் என வரும் உலக வழக்கும் நோக்குக
– நச்.உரை- பெ.விளக்கம்
7.
ஒருத்தி தெரி முத்தம் சேர்ந்த திலகம்
ஒருத்தி அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க – கலி 92/35,36
ஒருத்தியின் நெற்றியில் திலகமாய் சூடிக்கொண்டிருந்த தெரிந்தெடுத்த முத்துக்களைச் சேர்த்த முத்துவடம்
இன்னொருத்தியின் அழகு சிறந்த ஒளிரும் மகரக்குழையணிந்த காதினில் மாட்டிக்கொள்ள
– மா.இரா.உரை
– துடக்கிக்கொள்ளா நிற்க – நச்.உரை- துடக்கு – சிக்கவை
8.
உடு உறும் பகழி வாங்கி கடு விசை
அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின் – குறி 170,171
இறகு சேர்ந்த அம்பினை வலிந்திழுத்து, கடும் வேகத்துடன்,
தலைமை யானையின் அழகிய முகத்தில் ஆழச்செலுத்துதலினால்
9.
கல் ஊற்று ஈண்டல கயன் அற வாங்கி
இரும் பிணர் தட கை நீட்டி நீர் நொண்டு
பெரும் கை யானை பிடி எதிர் ஓடும் – நற் 186/1-3
கல்லில் ஊறும் ஊற்றில் சேர்ந்துள்ள நீரைக் குழியிலிருந்து முற்றிலும் அற்றுப்போகுமாறு முகந்து,
கரிய சொரசொரப்பான நீண்ட கையை நீட்டி நீரைத் தாங்கிக்கொண்டு
பெரிய கையையுடைய யானை தன் பிடியை எதிர்கொண்டு ஓடும்
10.
கானம் வெம்பிய வறம் கூர் கடத்து இடை
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து
பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர்
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில – நற் 186/4-7
காடு முற்றிலும் வெம்பிப்போன வறட்சி மிகுந்த பாலைநிலத்தில்,
வேனில்காலத்து பச்சோந்தியின், தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் முதிய ஆணானது
பாணர்கள் யாழினை இசைக்க, அதனைக் கேட்டு, அருகிலிருக்கும்
நெடியதாய் நிற்கும் யா மரத்தில் ஏறும் தொழிலையுடையது –
– வாங்கு – காதில் வாங்கு – கேள், hear
11.
கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின் – கலி 134/4
மலையினை அடைந்த ஞாயிறு தன் கதிர்களை ஒடுக்கிக்கொண்டு மறைவதால்

பகல் செல
பல் கதிர் வாங்கிய படு_சுடர் அமையத்து – அகம் 213/11,12
பகற்பொழுது நீங்க
ஞாயிறு தனது பல கதிர்களையும் சுருக்கிய ஒளி மங்கும் நேரத்தே
12.
பலவும் சூள் தேற்றி தெளித்தவன் என்னை
முலை இடை வாங்கி முயங்கினன் – கலி 147/23,24
பலவான பொய்வாக்குறுதிகளைக் கொடுத்து, என்னைத் தேற்றித் தெளிவித்தவன், என்னை
முலை நடுவே அணைத்துத் தழுவினான்,
13.
மின்மினி மொய்த்த முரவு வாய் புற்றம்
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி
குரும்பி கெண்டும் பெரும் கை ஏற்றை – அகம் 72/3-5
மின்மினிகள் மொய்த்திருக்கும் முரிந்த இடத்தினையுடைய புற்றினை
இரும்பினைக் காய்ச்சி அடிக்குங்கால் சிதறும் பிதிர்போல அம் மின்மினிகள் ஒளிவிடக் கலைத்து
புற்றாஞ்சோற்றினைத் தோண்டியெடுக்கும் பெரிய கையினையுடைய கரடியேறு
14.
வடியா பித்தை வன்கண் ஆடவர்
அடி அமை பகழி ஆர வாங்கி
வம்பலர் செகுத்த அஞ்சுவரு கவலை – அகம் 161/2-4
கோதப்பெறாத மயிரினையுடைய கொடிய மறவர்
குதை அமைந்த அம்பினை முழுதும் இழுத்து விடுத்து
வழிச்செல்லும் புதியரைக் கொன்ற அச்சம் தோன்றும் கவர்ந்த நெறியில்
15.
செம் வாய் சிறு கிளி சிதைய வாங்கி
பொறை மெலிந்திட்ட புன் புற பெரும் குரல் – அகம் 192/5,6
சிவந்த வாயினையுடைய சிறிய கிளி, தினை சிதையும்படி கொய்து
சுமக்கலாற்றாது போகட்ட புல்லிய புறத்தினையுடைய பெரிய கதிரினை

ஆளி நன்மான் அணங்கு உடை ஒருத்தல்
மீளி வேழத்து நெடும் தகை புலம்ப
ஏந்தல் வெண் கோடு வாங்கி குருகு அருந்தும் – அகம் 381/1-3
ஆளியாகிய நல்ல விலங்கினது வருத்துதலையுடைய ஏறு
வலியுடைய யானையின் தலைவனான களிறு வருந்த
அதன் நிமிர்ந்த வெள்ளிய கோட்டினைப் பறித்து, குருந்தினை அருந்தும்
16.
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்
செம் பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு
வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள் – திரு 104-106
ஆரத்தைத் தாங்கிய அழகுடைய பெரிய மார்பிடத்தே கிடக்கின்ற
சிவந்த வரிகளை வாங்கிக்கொண்ட, வலிமை மிக்க, வேலை எறிந்து,
வளவிய புகழ் நிறையப்பெற்று, வளைந்து நெளிந்து(உருண்டு திரண்ட) நிமிர்ந்த தோள்களில்
– வாங்கிய என்றார், அவ்வரி தோளளவும் வந்துகிடந்தமை தோன்ற – நச். உரை, விளக்கம்
17.
ஏழ் ஊர் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த
உலை வாங்கு மிதி தோல் போல – குறு 172/5,6
ஏழு ஊர்களிலுள்ள பொதுவான ஈயம்பூசும் தொழிலுக்கு ஓர் ஊரில் அமைக்கப்பட்ட
உலையில் செறித்த துருத்தியைப் போல
18.
கள்ளொடு காமம் கலந்து கரை வாங்கும்
வெள்ளம் தரும் இ புனல் – பரி 10/69,70
இவ்வாறாகக் கள்வெறியுடன் காமவெறியையும் கலந்து கரைகளை உடைத்துச் செல்லும்
வெள்ளத்தைத் தருகின்றது வையையின் புதுப்புனல்;
19.
பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை
மயிர் வார்ந்த வரி முன்கை மட நல்லாய் நின் கண்டார்
உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ உணராயோ – கலி 56/24-26
மழைநீரின் எழும் மொக்குகள் என்று கூறும்படியாக, பெரியதாய் நிற்கும் உன் இளமையான முலைகள்,
மயிர் ஒழுகிய வரிகளையுடைய முன்கையையுடைய இளம்பெண்ணே! உன்னைக் கண்டவரின்
உயிரை வாங்கக் கூடியன என்பதனை நீ அறிவாயோ? அறியமாட்டாயோ?
20.
தும்பி தொடர் கவுள தும்பி தொடர் ஆட்டி
வம்பு அணி பூ கயிறு வாங்கி மரன் அசைப்பார்
வண் தார் புரவி வழி நீங்க வாங்குவார் – பரி 19/30-32
மதம் உண்பதற்காக வண்டுகள் தொடர்ந்து வரும் கவுளையுடைய யானைகளை, காலில் சங்கிலியை ஆட்டி
கச்சை அணிந்த புரோசக்கயிற்றினால், அந்த யானைகளை வழியினின்றும் அகற்றி, மரத்தில் கட்டுவர்;
பெரிய மாலையை அணிந்த குதிரைகளை வழியைவிட்டு அகலும்படி அகற்றுவர்

வாசம்

வாசம் – (பெ) மணம், fragrance, odour
கைவினை மாக்கள் தம் செய்வினை முடி-மார்
சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட
நீடிய வரம்பின் வாடிய விடினும்
கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும்
நின் ஊர் நெய்தல் அனையேம் பெரும – குறு 309/1-6
களையெடுக்கும் மாந்தர் தாம் செய்யும் தொழிலை முடிப்பதற்காக
வண்டுகள் மொய்ப்பதினால் மலர்ந்த மலரின் மணம் நிலத்தில் படும்படி
நீண்ட வரப்பில் வாடும்படி போட்டுவைத்தாலும்
கொடியவரின் நிலத்தைவிட்டு வேறு நிலத்துக்குப்போய் வாழ்வோம் என்னாமல்
எடுத்துப்போட்டும் தம்மைக் களைந்த கழனியில் பூக்கும்
உனது ஊரின் நெய்தலைப் போன்றவள் நான், தலைவனே!

ஓசனை கமழும் வாச மேனியர் – பரி 12/25
நெடுந்தொலைவுக்கு மணம் வீசும் வாசமுள்ள மேனியரும்,

வாடல்

வாடல் – (பெ) வாடிப்போனது, உலர்ந்துபோனது, that which is dried
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் – அகம் 45/1
உலர்ந்த வாகைமரத்திலுள்ள விளைந்த நெற்றுக்களின் கொத்து

இரும் கழி கொண்ட இறவின் வாடலொடு
நிலவு நிற வெண் மணல் புலவ – குறு 320/2,3
இருண்ட கழியில் கொண்ட இறாவின் வற்றலோடு
நிலவொளி போன்ற வெள்ளை மணற்பரப்பு புலால்நாறும்படி

வாடு

வாடு – 1. (வி) 1. காய்ந்துபோ, உலர்ந்துபோ, dry up
2. வாட்டமுறு, வருந்து, pine away, grieve
3. வற்றிச்சுருங்கு, dry up and wrinkle
4. வதங்கு, மெலி, wither, wilt
5. தேய், grow weak
6. அழி, perish
7. களையிழ, lose lustre
8. குறை, குன்று, be diminished, decrease
– 2. (பெ) வாடிய பூ, faded flower
1.1.
வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை – பெரும் 353,354
வளவிய தோட்டினையுடைய தென்னை மரத்தின் காய்ந்துபோன மடலினை வேய்ந்த,
மஞ்சளையுடைய முற்றத்தினையும் மணல் கமழ்கின்ற சுற்றுப்புறங்களையும் உடைய
1.2.
கேள் அலன் நமக்கு அவன் குறுகன்-மின் என மற்று எம்
தோளொடு பகைபட்டு நினை வாடு நெஞ்சத்தேம் – கலி 68/10,11
அவன் நமக்கு உறவு அல்லன், அவனை அணுகாதீர்கள் என்று சொல்லிவிட்டு, அவனை அடையத் துடிக்கும்
தோள்களொடு பகைகொண்டு நினைவிழந்து வாட்டமுறும் நெஞ்சினையுடைய நாங்கள்
1.3.
வரு படை போழ்ந்து வாய்ப்பட விலங்கி
இடைப்படை அழுவத்து சிதைந்து வேறாகிய
சிறப்புடையாளன் மாண்பு கண்டு அருளி
வாடு முலை ஊறி சுரந்தன
ஓடா பூட்கை விடலை தாய்க்கே – புறம் 295/4-8
மேல்வரும் பகைவர் படையைப் பிளந்து இடமுண்டாகக் குறுக்கிட்டுத் தடுத்து
படைகளுக்கு நடுவே நடுக்களத்தில் வெட்டுண்டு சிதைந்து வேறுபட்டுக்கிடந்த
சிறப்புடையாளனாகிய தன் மகனின் மாண்பைக் கண்டு அன்பு மிக்கு
வற்றிய முலைகள்மீண்டும் பாலூறிச் சுரந்தன
பின்னிடாத கொள்கையினையுடைய காளைக்குத்தாயாகிய இவளுக்கு
1.4.
நின், வாடு பசி அருத்திய பழி தீர் ஆற்றல் – புறம் 227/7
நினது, மெய் வாடுதற்கேதுவாகிய பசி தீர்தற்கு ஊட்டிய வசையற்ற வலியையுடைய
1.5.
வடவர் வாட குடவர் கூம்ப – பட் 276
வடநாட்டவர் தேய, குடநாட்டவர் (மனவெழுச்சி)குன்றிப்போக
1.6.
அடங்கார் ஆர் அரண் வாட செல்லும்
காலன் அனைய கடும் சின முன்ப – பதி 39/7,8
அடங்காதாரின் கடத்தற்கரிய அரண் அழியும்படியாக முன்னோக்கிச் செல்லும்
காலனைப் போன்றவன் நீ, கடும் சினத்தோடுகூடிய வலிமையுடையவனே!
1.7.
கிளி புரை கிளவியாய் எம்மொடு நீ வரின்
தளி பொழி தளிர் அன்ன எழில் மேனி தகை வாட
முளி அரில் பொத்திய முழங்கு அழல் இடை போழ்ந்த
வளி உறின் அ எழில் வாடுவை அல்லையோ – கலி 13/18-21
கிளியைப் போன்ற இனிமையான மொழியினை உடையவளே! என்னோடு நீ வந்தால்,
மழைத்துளிகள் பொழிவதால் வளர்ந்த மென் தளிர் போன்ற அழகு மிக்க உன் மேனி அழகிழந்து போகும்படி,
காய்ந்துபோன புதரில் பற்றிச் ‘சடசட’வென்று எரியும் காட்டுத்தீயினிடையே புகுந்து வந்த
அனல் காற்று உன் மேனியில் பட்டால், அந்த அழகு பொலிவிழந்துபோய்விடும் அல்லவா
1.8.
வாள் வென்று வருபவர் வனப்பு ஆர விடுவதோ
நீள் கழை நிவந்த பூ நிறம் வாட தூற்றுபு
தோள் அதிர்பு அகம் சேர துவற்றும் இ சில் மழை – கலி 31/14-16
தன் வாள் திறத்தால் வெற்றியை ஈட்டிவரும் நம் தலைவரின் வனப்பினைக் காண விடுமோ,
நீண்ட கரும்பில் உயர்ந்து நிற்கும் பூவின் நிறம் குன்றிப்போக, தூறிக்கொண்டு
தோள்கள் நடுங்கி மார்பில் குறுக்காக அணைத்துக்கொள்ள தூவுகின்ற இந்தத் தூறல்
2.
கடும் புனல் கால் பட்டு கலுழ் தேறி கவின் பெற
நெடும் கயத்து அயல்_அயல் அயிர் தோன்ற அம் மணல்
வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உக – கலி 31/1-3
முன்பு பெருகி வந்த வெள்ளம் வற்றிப்போய் வாய்க்காலளவாய் மாறி, கலங்கல் தெளிந்து, அழகுடன்
நெடிய குளங்களின் அயல்புறமெல்லாம் நுண்மணல் படிந்திருக்க, அம் மணலின்
அறல் மறையும்படி, கோலம்செய்வன போல் ஈங்கையின் வாடிய பூக்கள் கழன்று கீழே விழ

வாடூன்

வாடூன் – (பெ) உப்புக்கண்டம், dried flesh
முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி
வாராது அட்ட வாடூன் புழுக்கல் – பெரும் 99,100
விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான வாயையுடைய பானையில் வார்த்த உலையை முரிந்த அடுப்பிலே ஏற்றி,
(கஞ்சியை)வடிக்காமல் பொங்கிய (மான் கறியின்)உப்புக்கண்ட(ம் சேர்ந்த) ஊன் சோற்றை
வாடூன் கொழும் குறை – புறம் 328/9
சூடு கிழித்து வாடூன் மிசையவும் – புறம் 386/4

வாடை

வாடை – (பெ) 1. குளிர் காற்று, chill wind
2. வடக்குக்காற்று, north wind
1.
நிரைத்து நிறை கொண்ட கமம் சூல் மா மழை
அழி துளி கழிப்பிய வழி பெயல் கடை நாள்
இரும் பனி பருவத்த மயிர் காய் உழுந்தின்
அகல் இலை அகல வீசி அகலாது
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை – நற் 89/3-7
ஒழுங்காக அமைந்து நிறைவுகொண்ட முற்றிய கருக்கொண்ட கரிய மேகங்கள்
மிக்க துளிகளைப் பெய்து ஒழிந்து, ஒழுக்கும் மழையைக் கொண்ட கார்காலத்தின் இறுதிநாளில்
பெரும் பனிக் காலத்தில் காய்க்கும் மயிர்கள் அமைந்த காய்களைக் கொண்ட உழுந்தின்
அகன்ற இலைகள் சிதையும்படி வீசி, நம்மை விட்டு நீங்காது
நாள்தோறும் நம்மைத் துன்புறுத்தும் அன்பில்லாத வாடைக்காற்று
2.
வட புல வாடைக்கு பிரிவோர்
மடவர் வாழி இ உலகத்தானே – நற் 366/11,12
வடநாட்டிலிருந்து வாடை வீசும் காலத்தில் பிரிந்து செல்வோர்
அறிவில்லாதவர் ஆவார், வாழ்க நெஞ்சமே! இந்த உலகத்தில்.

கூதிரொடு
வேறு புல வாடை அலைப்ப
துணை இலேம் தமியேம் பாசறையேமே – நற் 341/8-10
கூதிரோடு கலந்து
வேற்று நாட்டுள்ள வாடையும் துன்புறுத்துதலால்
துணை இல்லாதவ்னாய், தனிமையில் பாசறையில் இருக்கின்றேன்

தண் என, வாடை தூக்கும் வரு பனி அற்சிரம் – அகம் 78/10
தண்ணென்று, வாடைக்காற்று வீசும் தோன்றுகின்ற பனியையுடைய முன்பனிக்காலத்தில்

வாட்டல்

வாட்டல் – (பெ) 1. மெலிவித்தல், causing to grow thin or weak, emaciating
2. அழித்தல், destroying
1.
ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது
இல் என மறுத்தலும் இரண்டும் வல்லே
இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்
புகழ் குறைபடூஉம் வாயில் அத்தை – புறம் 196/4-7
தனக்கு இயலாததனை இயலும் என்றலும், இயலும் பொருளை
இல்லை என்று மறுத்தலுமாகிய இரண்டும், விரைய
இரப்போரை மெலிவித்தல்;அன்றியும் ஈவோர்
புகழ் குறைபடும் வழியாம்

செறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்கு
உறுமிடத்து உய்க்கும் உதவி ஆண்மையும்
இல் இருந்து அமைவோர்க்கு இல் என்று எண்ணி – அகம் 231/1-3
தம் பகைவர் செருக்கினை ஒழித்தலும், தம்மைச் சேர்ந்தோர்க்கு
ஓர் ஊறு எய்துமிடத்து உதவி செய்தலாய ஆண்மையும்
இல்லின்கண்ணெ வாளாவிருந்து மடியாலமைந்திருப்போர்க்கு இல்லை என்று எண்ணி

வாட்டாறு

வாட்டாறு – (பெ) ஓர் ஊர், a city in sangam period
வள நீர் வாட்டாற்று எழினியாதன் – புறம் 396/13
நீர் வளம் சிறந்த வாட்டாறு என்னும் ஊர்க்கு உரியனாகிய எழினியாதன்

வாட்டு

வாட்டு – 1. (வி) 1. வாடிப்போகச்செய், cause to wither
2. வருத்து, vex, afflict, torment
3. தொலை, அழி, cause to perish
– 2. (பெ) நெருப்பில் வாட்டிப் பொரித்தது, roasted meat or vegetables
1.1.
என்
ஒலி பல் கூந்தல் நலம் பெற புனைந்த
முகை அவிழ் கோதை வாட்டிய
பகைவன்-மன் யான் மறந்து அமைகலனே – நற் 260/7-10
என்னுடைய
தழைத்த பலவான கூந்தல் அழகுபெற அலங்கரித்த
மொட்டுக்கள் மலர்ந்த பூமாலையை வாடும்படி செய்த
பகைவனல்லவா நீ? நான் மறக்கமாட்டேன்!

நல்கி நீ தெளித்த சொல் நசை என தேறியாள்
பல் இதழ் மலர் உண்கண் பனி மல்க காணும்_கால்
சுரந்த வான் பொழிந்து அற்றா சூழ நின்று யாவர்க்கும்
இரந்தது நசை வாட்டாய் என்பது கெடாதோ தான் – கலி 100/11-14
அன்புகொண்டு, பிரியமாட்டேன் என்று நீ உறுதியாகக் கூறிய சொல்லை ஆசையுடன் நம்பியிருந்தவளின்
பல இதழ்களையுடைய மலர் போன்ற மைதீட்டிய கண்களில் நீர் நிறைய அவளைக் காணும்போது;
பெருகி நிறைந்த மேகம் மழையைப் பொழிந்தது போல் உன்னைச் சூழவந்து நின்ற யாவர்க்கும்
அவர் வேண்டிக் கேட்கும் விருப்பத்தை வாடிப்போகச் செய்யமாட்டாய் என்ற பெயர் கெட்டுவிடாதோ
1.2.
விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர்
மை படு திண் தோள் மலிர வாட்டி
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய
திருந்து வாள்வயவர் அரும் தலை துமித்த – அகம் 89/10-13
கொழுப்பினையுடைய ஊனைத் தின்ற விசைகொண்ட சிலையினராய மறவர்கள்
கருமை பொருந்திய வலிய தோள்கள் பூரிக்க, வருத்தி
பாரம் மிக்க கழுதைகளின் நீண்ட நிரைகளைப் பின்பற்றிவரும்
செப்பமுடைய வாளினைக்கொண்ட வீரர்களாய வணிகர்களின் அரிய தலையைத் துணித்த
1.3.
செறு பகை வாட்டிய செம்மலொடு – அகம் 332/7
செற்றங்கொண்ட தன் பகையைத் தொலைத்த செருக்குடன்
2.
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி
மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர் – பெரும் 255,256
உழவர் தந்த வெண்மையான நெற்சோற்றை
மனையில் வாழும் பெட்டைக்கோழி(யைக்கொன்று) வாட்டிய பொரியலோடு பெறுவீர்

வாணன்

வாணன் – (பெ) 1. ஒரு சூரன்,
An Asura, said to have had a thousand hands, and considered as a sovereign
2. ஒரு சங்ககாலச் செல்வன், a rich man in sangam period
1.
தென் புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழு நிதி பெறினும் – மது 202,203
தெற்கு நாட்டு இடங்களிலுள்ள மலைகள் நிறையுமளவு
வாணன் எனும் சூரன் வைத்த சீரிய பெரும்செல்வத்தைப் பெற்றாலும்
2.
வாணன் என்பவன் பாண்டிய நாட்டின் கடற்கரையிலுள்ள ஒரு சிறுகுடி என்னும் ஊரைச் சேர்ந்தவன்.
இவன் பெரும் செல்வம் படைத்தவன். இவனது ஊரான சிறுகுடி நீர்வளம், நெல்வளம் மிக்கது.

பெருநீர் கானல் தழீஇய இருக்கை
வாணன் சிறுகுடி வணங்கு கதிர் நெல்லின் – அகம் 269/21,22
கடற்கரைச் சோலை சூழ்ந்த ஊராகிய
வாணன் என்பானது ஊராகிய சிறுகுடியிலுள்ள வளைந்த கதிர்களைக் கொண்ட நெல்லினையுடைய

பொய்கை சூழ்ந்த பொய்யா யாணர்
வாணன் சிறுகுடி – அகம் 117/17,18
பொய்கைகள் சூழ்ந்துள்ள என்றும் அறாத புதுவருவாய்களையுடைய
வாணனது சிறுகுடி என்னும் ஊர்

வெண்ணெல் அரிநர் மடி வாய் தண்ணுமை
பன் மலர் பொய்கை படு புள் ஓப்பும்
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடி – அகம் 204/10-12
வெண்ணெல்லை அரிவோர் அடிக்கும் தோல் மடங்கிய வாயினையுடைய கிணையின் ஒலி
பல மலர்களையுடைய பொய்கையில் பொருந்திய பறவைகலை ஓட்டும்
விளைந்த நெற்களையுடைய வயல்களையுடைய வாணனது சிறுகுடி

பாண்டிய மன்னன் செழியன் குளத்து மடைநீர் இவ் வாணன் சிறுகுடி வழியாக கடலில் பாய்ந்தது

கல்லா யானை கடும் தேர் செழியன்
படை மாண் பெரும் குள மடை நீர் விட்டு என
கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளை
அள்ளல் அம் கழனி உள்வாய் ஓடி
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து
செம் சால் உழவர் கோல் புடை மதரி
பைம் கால் செறுவின் அணை முதல் பிறழும்
வாணன் சிறுகுடி அன்ன என்
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே – நற் 340/2-10
பாகன் மொழியைத் தவிர வேறொன்றைக் கல்லாத யானைப்படையையும் கடிய தேர்ப்படையையும் உடைய செழியனின்
சிறப்பாகச் செய்யப்பெற்ற பெரிய குளத்தின் மடை நீரைத் திறந்துவிட,
வாய்க்காலை ஒட்டிச் சென்று மடைநீரை எதிர்கொண்ட திரண்ட கொம்பினையுடைய வாளை மீன்
சேற்றையுடைய அழகிய கழனியின் உட்பக்கம் ஓடி
காளைகள் சேற்றை மிதித்தலால் எழுந்த சேறுத்துகள் படிந்த தம் வெள்ளையான முதுகுடன்,
செம்மையாக நீள உழும் உழவர் தம் காளையைக் கோலால் அடிப்பதற்கும் அஞ்சாது செருக்குக்கொண்டு
பசுமையான வாய்க்காலையுடைய வயல் வரப்பின் அணையினடியில் பிறழும்
வாணனின் சிறுகுடி என்ற ஊரைப் போன்ற என்
அணிந்துகொள்வதற்கு நேராக இருக்கும் ஒளிமிகுந்த வளையல்கள் நெகிழும்படி செய்த உன்னை –

வாணிகம்

வாணிகம் – (பெ) பலன், ஊதியம், gain, profit
காணாது ஈத்த இ பொருட்கு யான் ஓர்
வாணிக பரிசிலன் அல்லேன் – புறம் 208/6,7
என்னை அழைத்துக் காணாதே தந்த இப்பொருட்கு யான் ஓர்
ஊதியமே கருதும் பரிசிலன் அல்லேன்.

வாதம்

வாதம் – (பெ) மாறுபாடு, மனக்கோணல், crookedness
பெரு மணம் பண்ணி அறத்தினில் கொண்ட
பரும குதிரையோ அன்று பெரும நின்
ஏதில் பெரும் பாணன் தூது_ஆட ஆங்கே ஓர்
வாதத்தான் வந்த வளி குதிரை – கலி 96/33-36
முறையாக மணம் செய்து அறவழியில் வந்த
மேகலையாகிய சேணம் தரித்த காமக்கிழத்தியாகிய குதிரையும் இல்லை! பெருமானே! உன்
அந்நியனான பெரும்பாணன் தூது போக அங்கே ஒரு
மனக்கோணலால் வந்த காற்றாய்ப் பறக்கும் குதிரை!
– வாதம் – மாறுபாடு – நச்.உரை, பெ.விளக்கம்

வாதி

வாதி – (பெ) வாதிடுபவன், one who argues
மேதி அன்ன கல் பிறங்கு இயவின்
வாதி கை அன்ன கவை கதிர் இறைஞ்சி
இரும்பு கவர்வுற்றன பெரும் புன வரகே – மலை 111-113
எருமையைப் போன்ற பாறைகள் மிகுந்திருக்கும் வழியில்,
வாதிடுபவனின் கைகளைப் போன்று கிளைத்துப்பிரிந்த கதிர்கள் (முற்றியதால்)தலைவணங்கி,
(இரும்பாலாகிய)அரிவாள் வசப்பட்டன(=அரிதலுற்றன) பெரிய கொல்லைக்காட்டின் வரகுகள்;

வாதுவன்

வாதுவன் – (பெ) குதிரைப்பாகன், groom – Someone employed in a stable to take care of the horses
ஆய் சுதை மாடத்து அணி நிலாமுற்றத்துள்
ஆதி கொளீஇ அசையினை ஆகுவை
வாதுவன் வாழிய நீ – கலி 96/19-21
அழகிதாகச் சுண்ணாம்புச் சாந்து பூசிய மாடத்தில், அழகினையுடைய நிலாமுற்றத்தில்,
குதிரையின் நேரான ஓட்டத்தை அதற்குக் கற்பித்துக் களைத்துப்போனவனானாய்!
நல்ல குதிரைப்பாகன்தான் நீ! நீ வாழ்க!

வானம்

வானம் – (பெ) 1. ஆகாயம், sky
2. மேகம், cloud
3. மழை, rain
1.
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம் – அகம் 11/1
ஆகாயத்தில் ஊர்ந்தேகும் விளங்கும் ஒளியினதாகிய ஞாயிற்று மண்டிலம்
2.
கருவி வானம் கடல் கோள் மறப்பவும் – பொரு 236
கூட்டமான மேகங்கள் கடலிடத்தே நீர் முகத்தலை மறக்கவும்
3.
வானம் வாய்த்த வளம் மலை கவாஅன் – சிறு 84
மழை பொய்க்காத செல்வத்தையுடைய மலைப்பக்கத்து

வானம்பாடி

வானம்பாடி – (பெ) ஒரு பறவை, Indian skylark, Alanda gulgula
வானம்பாடி வறம் களைந்து ஆனாது
அழி துளி தலைஇய புறவின் காண்வர
வான் அர_மகளோ நீயே – ஐங் 418/1-3
வானம்பாடியின் நாவறட்சியைக் களைந்து, ஓயாமல்
பெரும் மழை பெய்த முல்லைக்காட்டைப் போலக் கண்ணுக்கினியதாய்த் தோன்ற,
வானுலக மங்கையோ நீ?

வானவன்

வானவன் – (பெ) 1. இந்திரன், Lord Indra
2. சேர அரசன், chEra king
1.
வரை அகலத்தவனை வானவன் மகள்
மாண் எழில் மலர் உண்கண்
மட மொழியவர் உடன் சுற்றி
கடி சுனையுள் குளித்து ஆடுநரும் – பரி 9/58-61
மலை போன்ற மார்பினையுடைய முருகப்பெருமானை, இந்திரன் மகளான தேவசேனையின்
மாட்சிமை கொண்ட அழகால் மலர் போன்ற மையுண்ட கண்களையும்
மடப்பமுடைய மொழியினையும் உடைய தோழியர் ஒன்றுசேர்ந்து சூழ்ந்துகொண்டு
வள்ளியின் தோழியருக்கு அஞ்சி, மணங்கமழும் சுனையில் குளித்து ஆடுவோரும்,
2.
வெல் போர் வானவன் கொல்லி மீமிசை – அகம் 33/14
போர் வெல்லும் சேரனது கொல்லிமலையினுச்சியில்

வானவன் மறவன் வணங்கு வில் தட கை
ஆனா நறவின் வண் மகிழ் பிட்டன் – அகம் 77/15,16
சேரன் படைத்தலைவனாகிய வளைந்த வில்லைப் பெரிய கையில் கொண்ட
அமையாத கள்ளினது மிக்க மகிழ்ச்சியையுடைய பிட்டன் என்பான்

இந்த வானவன் என்ற பெயர் அகம் 143, 159, 213, 309, 381, புறம் 39, 126 ஆகிய பாடல்களில்
காணக்கிடக்கின்றது. ஏனைச் சங்க இலக்கியங்களில் இச் சொல் காணப்படவில்லை என்பது ஆய்வுக்குரியது.
வசை இல் வெம் போர் வானவன் மறவன் – அகம் 143/10
வில் கெழு தட கை வெல் போர் வானவன் – அகம் 159/15
வெல் போர் வானவன் கொல்லி குட வரை – அகம் 213/15
பெரும் படை குதிரை நல் போர் வானவன் – அகம் 309/10
தேன் இமிர் நறும் தார் வானவன் உடற்றிய – அகம் 381/15

இமயம் சூட்டிய ஏம விற்பொறி
மாண் வினை நெடும் தேர் வானவன் தொலைய – புறம் 39/16
– இந்த வானவரம்பன் ’இமயம் சூட்டிய ஏம விற்பொறி’என்னப்படுதலால், இந்தச் சேர மன்னன்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆக இருக்கக்கூடும்.
இவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் தோற்றான் என இப்பாடல் குறிக்கிறது.

சினம் மிகு தானை வானவன் குட கடல்
பொலம் தரு நாவாய் ஓட்டிய அவ்வழி
பிறர் கலம் செல்கலதனையேம் – புறம் 126/14-16
– இந்த வானவரம்பன் மேலைக்கடலில் பிற கப்பல்கள் செல்லாவண்ணம் தன் மரக்கலங்களை ஓட்டி வாணிகம்
செய்த கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனாக இருக்கலாம்.

வானவமகளிர்

வானவமகளிர் – (பெ) விண்ணுலக மங்கையர், celestial women
நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
வானவமகளிர் மான கண்டோர்
நெஞ்சு நடுக்குறூஉ கொண்டி மகளிர் – மது 581-583
நீல நிறத்தையுடைய வானத்தின்கண் நெஞ்சமர்ந்து விளையாடும்
தெய்வமகளிர் போல, (தம்மைக்)கண்டோருடைய
நெஞ்சு நடுக்கமடையும் வரைவின் மகளிர்

வானவரம்பன்

வானவரம்பன் – (பெ) சேர மன்னர்களின் பொதுப்பெயர், a common name for chEra kings
1.
கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்
பொய் படுபு அறியா வயங்கு செம் நாவின்
எயில் எறி வல் வில் ஏ விளங்கு தட கை
ஏந்து எழில் ஆகத்து சான்றோர் மெய்ம்மறை
வானவரம்பன் என்ப – பதி 58/8-12
போருக்கான தலைமாலையை சூடக் கருதிய வீரர்களின் பெருமகன்,
தம்முடைய கூற்று பொய்யாவதனை அறியாத தெளிவானதும் செம்மையானதுமான நாவினையும்,
பகைவரின் மதில்களை அழிக்கும் வலிய வில்லும், அம்பும் விளங்குகின்ற பெரிய கையினையும்,
உயர்ந்த அழகிய மார்பினையும் கொண்ட, சான்றோரின் கவசம் போன்ற,
வானவரம்பனாகிய சேரமன்னன் என்று கூறுவர்
– சேரர்கட்குப் பொதுவாயமைந்த இப்பெயர் தனக்குச் சிறப்பாக விளங்குமாறு இச் சேரமான் தன் திறல்
விளங்கு செயலைச் செய்தான் என்பது தோன்ற – ஔவை.சு.து.உரை விளக்கம்
இச் சேரமான் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன்.
2.
களங்காய்க்கண்ணி நார்முடி சேரல்
எயில் முகம் சிதைய தோட்டி ஏவலின்
தோட்டி தந்த தொடி மருப்பு யானை
செ உளை கலி_மா ஈகை வான் கழல்
செயல் அமை கண்ணி சேரலர் வேந்தே
பரிசிலர் வெறுக்கை பாணர் நாள்_அவை
வாள்_நுதல் கணவ மள்ளர் ஏறே
மை அற விளங்கிய வடு வாழ் மார்பின்
வசை இல் செல்வ வானவரம்ப – பதி 38/4-12
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேர வேந்தனே!
பகைவரின் கோட்டை மதிலின் முகப்பு சிதையும்படியாக அங்குசத்தால் குத்தி ஏவுதலினால்,
அந்த நாட்டின் ஆளுமையை உனக்கே பெற்றுத்தந்த பூண் அணிந்த தந்தங்களைக் கொண்ட யானைப்படையையும்,
சிவந்த தலையாட்டத்தைக் கொண்டு விரைகின்ற குதிரைப் படையையும், பொன்னால் செய்த உயர்ந்த கழலையும்,
நல்ல வேலைப்பாடு அமைந்த தலைமாலையையும் உடைய சேரநாட்டு வேந்தனே!
பரிசிலர்களின் செல்வமாக இருப்பவனே! பாணர்கள் இருக்கும் அரச அவையை உடையவனே!
ஒளி பொருந்திய நெற்றியையுடையவளுக்குக் கணவனே! போர்வீரர்க்குக் காளை போன்றவனே!
குற்றமின்றி விளங்குகிற, விழுப்புண்ணாலேற்பட்ட வடுக்கள் இருக்கும் மார்பினனே!
பழிச்சொல் இல்லாத செல்வத்தையுடையவனே! வானவரம்பனே!
– சேரன் களங்காய்க்கண்ணி நார்முடி சேரல் என்பவனும் வானவரம்பன் எனப்படுகிறான்.
3.
யாணர் வைப்பின் நன்னாட்டு பொருந
வானவரம்பனை நீயோ பெரும – புறம் 2/11,12
புதுவருவாய் இடையறாத ஊர்களையுடைய நல்ல நாட்டிற்கு வேந்தே,
வானவரம்பன் நீயே, பெருமானே
– இங்கு வானவரம்பன் எனப்படுபவன் சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்
4.
பொலம் தார்
கடல் கால்கிளர்ந்த வென்றி நல் வேல்
வானவரம்பன் அடல் முனை கலங்கிய
உடை மதில் ஓர் அரண் போல – அகம் 45/15-18
பொன் மாலை அணிந்தவனும்
கடலையே கலக்கிய வெற்றியை உடையவனும் நல்ல வேலினை உடையவனும் ஆகிய
வானவரம்பன் தாக்குமுனையில் கலங்கிய
உடைந்துபோன மதிலைக் கொண்ட ஒரே அரணைப் போல
– ’கடல் கால்கிளர்ந்த வென்றி’ என்ற தொடரால் இந்த வானவரம்பன் கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்
ஆக இருக்கலாம்.
5.
வானவரம்பன் வெளியத்து அன்ன நம்
மாண் நலம் தம்மொடு கொண்டனர் – அகம் 359/6,7
வானவரம்பனது வெளியம் எனுமிடத்தை ஒத்த நமது
சிறந்த அழகினைத்தம்முடன் கொண்டுசென்றனர்.
– இந்த வானவரம்பன் வெளியம் என்ற ஊரை ஆண்டவன். பெயர் தெரியவில்லை. வெளியம் என்பது வளம்
மிக்க ஊராக இருந்திருத்தல் வேண்டும்.
6.
வானவரம்பன் நன் நாட்டு உம்பர்
வேனில் நீடிய வெம் கடற்று அடை முதல்
—————- ———————– ————
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே – அகம் 389/16-24
வானவரம்பனது நல்ல நாட்டின் அப்பாலுள்ள
வெப்பம் மிக்க கொடிய காட்டினை அடைந்த இடத்தே
—————– —————— —————-
நெடிய மரங்களையுடைய மலைவழிகளைக் கடந்து சென்றனரே
– இந்த வானவரம்பன் சேரநாட்டின் வடபகுதியை ஆண்டவனாக இருத்தல்வேண்டும். பொருள் தேடிச் செல்வோர்
இவனது நாட்டிற்கும் அப்பாலுள்ள இடத்திற்குச் சென்ரதாக அறிகிறோம். – இந்த வானவரம்பன்
யார் எனத் தெரியவில்லை.

வானி

வானி – (பெ) ஒரு மரம் / பூ, a tree / its flower
பயினி வானி பல் இணர் குரவம் – குறி 69
இந்தப் பூவைப் பற்றி வேறு சங்க இலக்கியங்களில் குறிப்பு இல்லை.

இதனை ஓமம் (Biship’s-weed, herbaceous plant, Carum copticum – Trachyspermum copticum) என்று
குறிப்பிடுகிறது தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலர் (பக்கம் 442)

வானோர்

வானோர் – (பெ) தேவர்கள், celestial beings
வானோர் வணங்கு வில் தானை தலைவ – திரு 260
தேவர்கள் வணங்குகின்ற விற்படைத் தலைவனே,

வான்

வான் – (பெ) 1. தேவர் உலகு, celestial world
2. வானம், sky
3. மழை, rain
4. மேகம், cloud
5. அழகு, beauty
1.
வான் அர_மகளிர்க்கு வதுவை சூட்ட – திரு 117
தேவருலகு மகளிர்க்கு மணமாலை சூட்ட
2.
வான் பொரு நெடு வரை வளனும் பாடி – சிறு 128
வானத்தைத் தொடும் நெடிய மலையின்கண் உள்ள செல்வத்தையும் பாடி,
3.
வான் மடி பொழுதில் நீர் நசைஇ குழித்த – பெரும் 107
மழை பெய்யாதிருக்கும் காலத்தில் நீரை விரும்பித் தோண்டிய
4.
வான் முகந்த நீர் மலை பொழியவும் – பட் 126
மேகம் (தான்) முகந்த நீரை மலையில் சொரியவும்
5.
வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும் – கலி 103/14
அழகிய ஒளிர்வு பரந்த வெள்ளைப் புள்ளிகளைக் கொண்ட காளையும்

வாம்

வாம் – (பெ.எ) வாவும், தாவுகின்ற, leaping
வாம் பரிய கடும் திண் தேர்
காற்று என கடிது கொட்பவும் – மது 51,52
தாவும் குதிரைகளையுடைய கடிய செலவினையுடைய திண்ணிய தேர்
(சுழல்)காற்றுப் போன்று விரைந்து சுழலவும்,
– வாம் பரி – வாவும் பரி; வாவும் என்னும் செய்யும் என் வாய்பாட்டுப் பெயரெச்சம் – பொ.வே.சோ விளக்கம்

வாயடை

வாயடை – (பெ) உணவு, food
வாயடை அமிர்தம் நின் மனத்து அகத்து அடைத்தர
மூவா மரபும் ஓவா நோன்மையும்
சாவா மரபின் அமரர்க்கா சென்ற – பரி 2/69-71
தேவர்களின் உணவான அமிர்தத்தை உன் மனத்தினுள்ளே நினைத்த பொழுதே,
மூப்படையாத முறைமையும், ஒழியாத ஆற்றலும்,
இறவாத மரபையுடைய அந்தத் தேவர்களைச் சென்றடைந்தன;

வாயில்

வாயில் – (பெ) 1. வாசல், gate, doorway
2. வழி, source
1.
வையை அன்ன வழக்கு உடை வாயில் – மது 356
வைகை போன்று (மக்களின் இடையறாத)போக்குவரத்தை உடைய வாசல்,

வாயிலொடு புழை அமைத்து
ஞாயில்தொறும் புதை நிறீஇ – பட் 287,288
பெரிய வாசல்களுடன் சிறு வாசல்களையும் உண்டாக்கி,
கோட்டை முகப்புத்தோறும் (மறைந்தெறியும்)அம்புக்கட்டுக்களைக் கட்டிவைத்து
2.
வெள்ளி முளைத்த நள் இருள் விடியல்
ஒன்று யான் பெட்டா அளவையின் ஒன்றிய
கேளிர் போல கேள் கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்ப கூறி – பொரு 72-75
வெள்ளி எழுந்த செறிந்த இருளையுடைய விடியற்காலத்தே,
ஒரு பாட்டினை யான் பேணிப் பாடி முடிக்கும் முன்னே – (தன்னோடு)பொருந்திய
உறவினரைப் போல என்னுடன் உறவுகொள்ளுதலை விரும்பி,
(தான்)உபசரிப்பதற்கு வழியாகிய இரப்பினையே (யான்) எப்பொழுதும் விரும்புமாறு (முகமன்)பொழிந்து

வாயுறை

வாயுறை – (பெ) தாளுருவி, பெண்கள் காதணி வகை, a kind of ornament worn by women in their ears.
நெடு நீர் வார் குழை களைந்தென குறும் கண்
வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின் – நெடு 139,140
மிகுதியாக ஒளி சிந்தும் காதணி(குண்டலங்)களை நீக்கிட, சிறிய துளைகளில்
தாளுருவி அழுத்திய வெறுமையாகத் தொங்கும் காதினையும்;

வாய்

வாய் – 1. (வி) 1. வாய்க்கப்பெறு, கிடைக்கப்பெற்றிரு, possess, have
2. நன்கு அமை, properly situated, be well-formed
3. சித்தி, வெற்றியாகு, succeed, be gained
4. நிச்சயமாய் நிகழ், happen with certainty, come true
5. சரியாக நிகழ், happen correctly
– 2 (பெ) 1. உதடு அல்லது அலகு இவற்றினிடையிலுள்ள உறுப்பு, mouth or beak of birds
2. மலர்களின் மேற்புறம், upper portion of flowers
3. திறப்பு, opening
4. உதடுகள், lips
5. விளிம்பு, edge, rim
6. பாத்திரம், பை முதலியவற்றின் திறந்த மேல்பகுதி, opening or mouth of a vessel or bag
7. ஆயுதத்தின் முனை, pointed edge as of a spear
8. உண்மை, truth
9. இடம், place
10. வாசல், சாளரம், gate, window
11. பேச்சு, மொழி, talk, speech
12. சித்தித்தல், நிகழ்தல், coming true, succeeding
– 3. (இ.சொ) ஏழாம் வேற்றுமை உருபு, A sign of the locative case
1.1
அளியன்தானே முது வாய் இரவலன் – திரு 284
‘அருள்புரியத் தகுந்தவன் (இந்த)அறிவு வாய்க்கப்பெற்றோனாகிய இரவலன்,
1.2
நேர் வாய் கட்டளை திரியாது திண் நிலை
போர் வாய் கதவம் தாழொடு துறப்ப – நெடு 62,63
நேருக்கு நேராக அமைந்த சாளரங்கள் திறக்கப்படாமல், சிக்கென்ற நிலையினையுடைய
தம்முள் பொருதுதல் வாய்த்த (இரட்டைக்)கதவுகள் தாழிட்டுக் கிடக்க;

1.3
வருந்தேன் தோழி வாய்க்க அவர் செலவே – நற் 148/12
வருந்தமாட்டேன் தோழி, வெற்றியடையட்டும் அவரின் பயணம்
1.4
தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
வருதல் தலைவர் வாய்வது நீ நின்
பருவரல் எவ்வம் களை மாயோய் – முல் 18-21
பகைவர்
மண்ணை வெற்றிகொண்டு பெற்ற திறையினையுடையோராய், (தமது)வினையை முடித்து
வருவது (நம்)தலைவர்க்கு நேர்வது (உறுதி), நீ நின்
துன்பம் தீராமையைப் போக்கு, மாமை நிறத்தையுடையோளே’

மாரி வாய்க்க வளம் நனி சிறக்க – ஐங் 10/2
மழை காலம் தவறாமல் பெய்யட்டும்; வளம் மிகுந்து சிறக்கட்டும்
1.5
வாள் வாய்த்த வடு பரந்த நின்
மற மைந்தர் – புறம் 98/12,13
பகைவரின் வாள் குறிதவறாமல் தைத்த வடுப் பரந்த நின்னுடைய
மறத்தையுடைய வீரரது
2.1
புல்லென் யாக்கை புலவு வாய் பாண – பெரும் 22
பொலிவழிந்த உடம்பினையும் புலவு நாறும் வாயினையுமுடைய பாணனே

உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய்
சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின்
கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க
பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு
உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் – திரு 47-51
காய்ந்து போன மயிரினையும், நிரை ஒவ்வாத பல்லினைக் கொண்ட பெரிய வாயினையும்,
சுழலும் விழியையுடைய பசிய கண்ணினையும், கொடிய பார்வையினையும்,
பிதுங்கிய கண்ணையுடைய கூகையோடு, கொடிய பாம்பும் தூங்கும் அளவிற்குப் பெரிதான
பெரிய முலையை வருத்துகின்ற காதினையும், சொரசொரப்பான பெரிய வயிற்றையும்,
(கண்டோர்)அஞ்சுதல் பொருந்திய நடையினையும் உடைய அச்சம் தோன்றுகின்ற பேயாகிய மகள்

கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர் – பொரு 34
கிளியின் வாயோடு ஒப்பினையுடைய ஒளிவிடுகின்ற பெரிய நகங்களையும்
2.2
இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த
முள் தாள் தாமரை – திரு 72,73
கரிய சேற்றினையுடைய அகன்ற வயலில் முறுக்கவிழ்ந்து மேற்புறமும் மலர்ந்த
முள்ளிருக்கும் தண்டையுடைய தாமரைப் பூவில்
2.3
துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி – பொரு 10
(பத்தலிரண்டும் சேர்த்தற்குத் திறந்த)துளைகளின் வாய் மறைய முடுக்குதலமைந்த ஆணியினையும்
2.4
இலவு இதழ் புரையும் இன் மொழி துவர் வாய்
பல உறு முத்தின் பழி தீர் வெண் பல் – பொரு 27,28
இலவின் இதழை ஒக்கும் இனிய சொல்லையுடைய சிவந்த வாயினையும்,
பலவும் சேர்ந்த முத்துக்கள் போல் குற்றம் தீர்ந்த வெண்மையான பல்லினையும்,

2.5
அர வாய் வேம்பின் அம் குழை தெரியலும் – பொரு 144
அர(த்தின்) வாய் (போலும் வாயையுடைய)வேம்பின் அழகிய தளிரால் செய்த மாலையினையும்

ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு – சிறு 253
ஆரக்கால்களைச் சூழ்ந்த இரும்புப்பட்டையை மேற்புறம் கொண்ட சக்கரத்துடன்

2.6
முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி – பெரும் 99
விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான வாயையுடைய பானையில் வார்த்த உலையை முரிந்த அடுப்பிலே ஏற்றி,

2.7
வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம் – பெரும் 119
கூரிய முனை மழுங்கின புலால் நாறும் வாயையுடைய வேல்களை
2.8
பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே – மது 198
பொய்யைத் தூர விலக்கிய வாய்மையுள்ள நட்பினையுடையாய்

இன் தீம் கிளவியாய் வாய் மன்ற நின் கேள் – கலி 24/3
இனிய, சுவை மிக்க சொற்களையுடையவளே! மெய்யே முக்காலும்; உன்னுடைய உறவான என் கணவன்
2.9
விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம் – நெடு 73
விரிந்த கிரணங்களைப் பரப்பின அகன்ற இடத்தையுடைய ஞாயிறு
2.10
வளி நுழையும் வாய் பொருந்தி – பட் 151
தென்காற்று வரும் சாளரங்களைச் சேர்த்து
2.11
வெம் வாய் பெண்டிர் கவ்வை தூற்ற – நற் 133/6
கொடியனவற்றைப் பேசும் பெண்டிர் பழிச்சொற்களைத் தூற்ற,
2.12
வாய் ஆகின்றே தோழி ஆய் கழல்
சே இலை வெள் வேல் விடலையொடு
தொகு வளை முன்கை மடந்தை நட்பே – குறு 15/4-6
வாய்த்தல் ஆனது தோழி ஆய்ந்தெடுத்த வீரக் கழலையும்
செம்மையான இலையையுடைய வெள்ளிய வேலையும் உடைய இளைஞனோடு
தொகுத்த வளைகள் அணிந்த முன்கையையுடைய மடந்தையின் காதல்.
3.
நீ கண்டனையோ கண்டார் கேட்டனையோ
—————- —————————– —–
யார்வாய் கேட்டனை காதலர் வரவே – குறு 75
நீ நேரில் பார்த்தாயா? அல்லது பார்த்தவர் சொன்னதைக் கேட்டாயா?
——————- ——————— ——————-
யார்வாயிலாகக் கேட்டாய்? காதலர் வந்துவிட்ட செய்தியை

வாய்பூசு

வாய்பூசு – (வி) ஆசமனஞ்செய்தல், sip water ceremonially; to perform ācamaṉam
வலது உள்ளங்கையில் நீரை இட்டு, மும்முறை உட்கொள்ளல்.

ஈ பாய் அடு நறா கொண்டது இ யாறு என
பார்ப்பார் ஒழிந்தார் படிவு
மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்று
அந்தணர் தோயலர் ஆறு
வையை தேம் மேவ வழுவழுப்பு_உற்று என
ஐயர் வாய்பூசுறார் ஆறு – பரி 24/58-63
ஈக்கள் மொய்க்கும் சமைக்கப்பட்ட கள்ளினைக் கொண்டது இந்த ஆறு என்று
பார்ப்பனர் தவிர்த்தார் நீராடுதலை;
ஆடவரும் பெண்டிரும் பூசியிருந்த நறுமணப் பொருட்களைத் தூவப்பெற்றதாயிற்று என்று
அந்தணர்கள் நீராடவில்லை ஆற்றில்;
வையையின் நீர் தேன் கலந்து மழுமழுவென்றானது என்று
ஐயர் வாய்கொப்பளிக்கவில்லை ஆற்றில்;

– வாய்பூசு உறார் – வாய்பூசுறார்

வாய்ப்படு

வாய்ப்படு – (வி) வழிகாண், find a way
புரையர் அல்லோர் வரையலள் இவள் என
தந்தையும் கொடாஅன் ஆயின் வந்தோர்
வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை
வருந்தின்று-கொல்லோ தானே – புறம் 343/12-15
தகுதியானவர் அல்லாதரை மணந்துகொள்ளாள் இவள் என்று
தந்தையும் கொடுக்கமாட்டான், எனின் பெண் வேண்டி வந்தவர்கள்
அரண் மீது ஏறுவதற்கு வழியுண்டாகச் சார்த்திய ஏணிகள் இதற்கிடையில்
வருந்தும்போலும்.

வாய்ப்பு

வாய்ப்பு – (பெ) சித்தித்தல், success, gain
வாய்ப்பு அறியலனே வெயில் துகள் அனைத்தும்
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே – பதி 20/6,7
– பகைவர்க்குச் சித்தியாவதை அறியான் – வெயிலில் காணப்படும் சிறிய தூசியளவுகூட –
பகைப்புலத்தே தனக்கு மாறாக அவராற் செய்யப்படும் பகை வினைகள்
– வாய்ப்பு – மெய்யாய்ப் பயன்படுதல், வாய்ப்பு – தப்பின்றி வாய்ப்பது

வாய்ப்புள்

வாய்ப்புள் – (பெ) நற்சொல்லாகிய நிமித்தம், Chance-heard word, considered a good omen
இது தற்செயலாகக் கேட்ட நற்பேறு தரும் சொல்.

அரும் கடி மூதூர் மருங்கில் போகி
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய் கைதொழுது
பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்ப
சிறு தாம்பு தொடுத்த பசலை கன்றின்
உறு துயர் அலமரல் நோக்கி ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள் கைய
கொடும் கோல் கோவலர் பின் நின்று உய்த்தர
இன்னே வருகுவர் தாயர் என்போள்
நன்னர் நன் மொழி கேட்டனம் அதனால்
நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
வருதல் தலைவர் வாய்வது நீ நின்
பருவரல் எவ்வம் களை மாயோய் – முல் 7-21
அரிய காவலையுடைய பழைய ஊரின் எல்லையில் போய்,
யாழின் ஓசையினையுடைய கூட்டமான வண்டுகள் ஆரவாரிக்கும்படி, நெல்லுடன்
உழக்கில் கொண்டுபோன நறிய பூக்களையுடைய முல்லையின்
அரும்புகள் அவிழ்ந்த பூவைத் தூவி, கைகூப்பி வணங்கி, 10
பெரிய முதிர்ந்த பெண்டிர் நற்சொல் கேட்டு நிற்க –
சிறிய தாம்புக்கயிற்றால் (காலில்)கட்டப்பட்ட பச்சிளம் கன் றின்
மிக்க துயரால் மனம் கலங்கிநின்ற நிலையைப் பார்த்து, இடைமகள்
(குளிரால்)நடுங்குகின்ற தோளின் மேல் கட்டின கையளாய் (நின்று), ‘கையிலுள்ள
கடுமையான கோல் (உடைய)இடையர் பின்னே நின்று செலுத்துதலைச் செய்ய
“இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவர் (உம்)தாயர்” என்று கூறுகின்றோளுடைய
நன்மையான நற்சொல் (நாங்கள்)கேட்டோம், அதனால்
நல்லதே, நல்லவர் நற்சொல்; பகைவர்
மண்ணை வெற்றிகொண்டு பெற்ற திறையினையுடையோராய், (தமது)வினையை முடித்து
வருவது (நம்)தலைவர்க்கு நேர்வது (உறுதி), நீ நின் 20
துன்பம் தீராமையைப் போக்கு, மாமை நிறத்தையுடையோளே’

வாய்மை

வாய்மை – (பெ) உண்மை, truth
நகையினும் பொய்யா வாய்மை பகைவர்
புறஞ்சொல் கேளா புரை தீர் ஒண்மை – பதி 70/12,13
விளையாட்டுக்கும் பொய்கூறாத வாய்மையினையும், பகைவரின்
ஒளிவுமறைவான இகழ்ச்சிப்பேச்சையும் கேளாத குற்றம் நீங்கிய அறிவினையும் கொண்ட –

வாய்மொழி

வாய்மொழி – (பெ) 1. ஏவல், order, command
2. வாய்மை பொருந்திய சொற்கள், truthful words
3. வேதம், மறை, scripture
1.
கடந்து அடு வாய் வாள் இளம் பல் கோசர்
இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப – மது 773,774
(பகைவரை)வென்று கொல்லும் தப்பாத வாளினையுடைய இளைய பலராகிய கோசர்கள்
நடக்கின்ற நெறிமுறைமையால் உன்னுடைய ஏவல் கேட்டு அதன்படி நடக்க,
2.
பொய் அறியா வாய்மொழியால்
புகழ் நிறைந்த நன் மாந்தரொடு – மது 19,20
பொய்மையே அறியாத (தங்களின்)மெய்மொழியால்
புகழ் நிறைந்த நல்ல அமைச்சர்களோடு

வரை போல் யானை வாய்மொழி முடியன் – நற் 390/9
மலை போலத் தோன்றும் யானைகளையும், வாய்மையான சொற்களையும் உடைய முடியன் என்பானின்
3.
மாயா வாய்மொழி உரைதர வலந்து
வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரை பூவினுள் பிறந்தோனும் தாதையும்
நீ என பொழியுமால் அந்தணர் அரு மறை – பரி 3/11-14
அழிவற்ற வேதங்கள் சொன்னபடி விரிவாக,
வேதங்களாகிய ஓடையில் மலர்ந்த
தாமரைப் பூவினில் பிறந்தவனாகிய பிரமனும், அவனுடைய தந்தையும்,
நீயே என்று கூறுகின்றன அந்தணரின் வேதங்கள்

வாய்வாள்

வாய்வாள் – (வி) வாய்திறந்து பேசு, open mouth and talk
தந்து முழவின் வருவாய் நீ வாய்வாளா – பரி 20/75
மத்தளத்தை முழக்கியதுபோல் முழங்கிக்கொண்டு வருபவளே! நீ பேச்சை நிறுத்து!
– வாய்வாளா – சொல்லாதமைக – பொ.வே.சோ.விளக்கம்
– வாய்வாளா – பேச்சைக் கைவிடுக – புலி..கே.உரை

பேது உற்றாய் போல பிறர் எவ்வம் நீ அறியாய்
யாது ஒன்றும் வாய்வாளாது இறந்தீவாய் கேள் இனி – கலி 56/28,29
மனம் குழம்பியவளைப் போல், பிறருடைய வருத்தத்தை நீ அறியாதவளாய்
வேறொன்றும் வாய்திறந்து கூறாமல் கடந்து போகின்றவளே! இப்போது கேட்பாயாக!

தையால் தம்பலம் தின்றியோ என்று தன்
பக்கு அழித்து கொண்டீ என தரலும் யாது ஒன்றும்
வாய்வாளேன் நிற்ப – கலி 65/13-15
பெண்ணே, வெற்றிலைபாக்கு போடுகின்றாயோ? என்று தன்
பையினைத் திறந்து எடுத்துக்கொள் என்று தந்தான்; நான் ஒரு வார்த்தையும்
வாய்திறந்து சொல்லாமல் நின்றிருந்தேன்;
– வாய் வாளேன் – வாய் திறந்து பேசாது – மா.இரா. விளக்கம்

ஆயனை அல்லை பிறவோ அமரருள்
ஞாயிற்று புத்தேள்_மகன்
அதனால் வாய்வாளேன்
முல்லை முகையும் முருந்தும் நிரைத்து அன்ன
பல்லும் பணை தோளும் பேர் அமர் உண்கண்ணும்
நல்லேன் யான் என்று நல_தகை நம்பிய
சொல்லாட்டி நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார் – கலி 108/12-18
ஆயர்மகனைப் போல் நீ இல்லை! வேறாகத் தேவர்களுக்குள்
ஞாயிறாகிய தெய்வத்தின் மகனோ நீ?
இவ்வாறு இகழ்ந்து பேசுகிற உன்னோடு ஒன்றும் பேசேன்!
முல்லை மொட்டையும், மயிலிறகின் அடியையும் வரிசையாய் அடுக்கிவைத்தது போன்ற
பல்லும், மூங்கில் போன்ற தோள்களும், பெரிதாய்ச் செழுமையாக இருக்கும் மைதீட்டிய கண்களும், ஆகிய இவற்றால்
நான் அழகி என்று தற்பெருமை பாராட்டிக்கொள்ளும்
சொல்லாட்டியே! உன்னோடு சொல்லாடக்கூடியவர் யார்?

வாய்விடு

வாய்விடு – (வி) வாயைத்திற, open mouth
அரிது வாய்விட்டு இனிய கூறி – குறு 298/2
– எப்போதாவது சிறிது பேசுவன் என்பாள் ‘அரிது வாய்விட்டு’ என்றாள்.

வருந்தினென் என பல வாய்விடூஉம் தான் என்ப – கலி 46/15
வருத்தமுற்றதாகப் பலமுறை வாய்திறந்து கூறுகிறான் அவன் என்றால்,

வாரணம்

வாரணம் – (பெ) 1. கோழி, cock
2. யானை, elephant
1.
பொறி மயிர் வாரணம் வைகறை இயம்ப – மது 673
பொறிகளுள்ள மயிரினையுடைய கோழிச்சேவல் விடியற்காலத்தை அறிந்து கூவ,

காமரு தகைய கான வாரணம்
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்
புலரா ஈர் மணல் மலிர கெண்டி
நாள்_இரை கவர மாட்டி – நற் 21/8-11
காண்போர் விரும்பும் தன்மையவான காட்டுக்கோழியின் சேவல்
மழை நீர் ஓடிய அகன்ற நெடிய முல்லைக்காட்டில்
புலராத ஈர மணலை நன்றாகக் கிளறி
அன்றைய நாளுக்குரிய இரையை அலகினால் பற்றிக் கொன்று
2.
முதல்வ நின் யானை முழக்கம் கேட்ட
கதியிற்றே காரின் குரல்
குரல் கேட்ட கோழி குன்று அதிர கூவ
மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப – பரி 8/17-20
முதல்வனே! உன் ஊர்தியாகிய யானை பிளிறும் ஒலியின் முழக்கத்தைக் கேட்ட
தன்மையது முகிலின் இடிக்குரல்;
அந்தக் காரின் இடிக் குரலைக் கேட்ட கோழி குன்றே அதிரும்படி கூவும்;
அதைக் கேட்ட மதம் நிறைந்த யானையும் எதிர்க்குரலிட்டு அதிர முழங்கும்;

முறம் செவி வாரணம் முன் குளகு அருந்தி – கலி 42/2
முறம் போன்ற காதுகளைக் கொண்ட யானை, தனக்கு முன்னுள்ள தழைகளை அருந்தி

வாரணவாசி

வாரணவாசி – (பெ) வாரணாசி, காசி, benares
தெருவின்-கண் காரணம் இன்றி கலங்குவார் கண்டு நீ
வாரணவாசி பதம் பெயர்த்தல் ஏதில – கலி 60/12,13
தெருவில் காரணமில்லாமல் கலங்குகிறவர்களைப் பார்த்து
மாற்றார் துயரத்தைத் தம் துயராகக்கொள்ளும் வாரணவாசிக்காரர்களின் குணத்தைப் பெறுதல் நமக்கு அயலானது

வாரலன்

வாரலன் – (வி.மு) வந்தானல்லன், (he) didn’t come
ஒரு நாள் வாரலன் இரு நாள் வாரலன் – குறு 176/1
ஒருநாள் வந்தானல்லன், இரண்டு நாள் வந்தானல்லன்

வாரலென்

வாரலென் – (வி.மு) நான் வரமாட்டேன், (I) won’t come
வளம் பெரிது பெறினும் வாரலென் யானே – அகம் 199/24
பெரியசெல்வத்தைப் பெறுவதாயினும் வருவேன் அல்லேன்

வாரல்

வாரல் – 1. (ஏ.வி.மு) வரவேண்டாம், don’t come
– 2. (பெ) 1. கொள்ளையிடுதல், robing, stealing
2. நீளுதல், being long
1.
சாரல் நாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே – குறு 69/5,6
சாரல் நாட்டைச் சேர்ந்தவனே! நள்ளிரவில்
வரவேண்டாம்! நீ வாழ்க! வருந்துகிறோம் நாம்
2.1.
வாரல் மென் தினை புலர்வு குரல் மாந்தி – நற் 304/1
கொள்ளையிடுதற்குரிய மெல்லிய தினையின் மணம் நிரம்பிய கதிரைக் கொய்துதின்று
– பின்னத்தூரார் உரை
2.2.
வாரல் மென் தினை புலர்வு குரல் மாந்தி – நற் 304/1
நீளுதலுள்ள மெல்லிய தினையின் மணம் நிரம்பிய கதிரைக் கொய்துதின்று
– வாரல் நீளுதலுமாம் – பின்னத்தூரார் உரை விளக்கம்

தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர்
அரி மான் வழங்கும் சாரல் – பதி 12/4,5
பிடரி மயிர் அழகுசெய்யும் கழுத்தினையும், நீண்ட கூரிய நகங்களையும் கொண்ட,
சிங்கங்கள் நடமாடும் மலைச்சாரலில்

வாரி

வாரி – (பெ) 1. விளைச்சல், produce
2. வருமானம், வருவாய், resoures, income
3. வெள்ளம், flood
4. யானையை அகப்படுத்தும் இடம், Kheddha, an enclosure constructed to trap wild elephants
1.
மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் – புறம் 35/27
மழை பெய்யுங்காலத்துப் பெய்யாதொழியினும், விளைவு குறையினும்
2.
பாடி சென்றோர்க்கன்றியும் வாரி
புரவிற்கு ஆற்றா சீறூர் – புறம் 330/5,6
பாடிச் சென்ற பரிசிலர்க்கேயன்றியும், தனது வருவாய்
புரவுவரி செலுத்துவதற்கும் ஆற்றாத சிறிய ஊர்
3.
எரி மலர் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி
விரி சடை பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப
தணிவு_உற தாங்கிய தனி நிலை சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் – பரி 9/4-7
தீயைப் போன்று மலர்ந்திருக்கும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவன் விழச்செய்த பெரு வெள்ளத்தைத்
தன் விரித்த சடையினில் பாரமாக, மலர்ந்து விழும் புதிய மலரைத் தாங்குவது போன்று,
விழுகின்ற வேகம் தணியும்படியாகத் தாங்கிய ஒப்பற்ற நிலையையுடைய சலதாரி என்னும் பெயர்கொண்ட
நீல நிறக் கழுத்தினையுடைய சிவபெருமானுக்கு, மதிப்பு வாய்ந்த கார்த்திகை மகளிரிடத்தில் பிறந்தவனே!
4..
வாரி கொள்ளா வரை மருள் வேழம் – மலை 572
யானைபிடிக்குமிடத்தில் கொள்ளாத (பகைவரது), மலையோ என்று நினைக்கத்தோன்றும் யானைகளையும்

வாரு

வாரு – (வி) 1. முடியைச் சீவு, கோதிவிடு, comb the hair, run the fingers through the hair
2. பூசு, smear
3. திரட்டி எடு, அள்ளு, take in a sweep, scoop
4. யாழ் நரம்பைத் தடவு, play upon the strings of a lute
5. (விளக்குமாற்றால்) கூட்டு, பெருக்கு, sweep (with a broom)
1.
துளி தலை தலைஇய மணி ஏர் ஐம்பால்
சிறுபுறம் புதைய வாரி குரல் பிழியூஉ – அகம் 8/15,16
மழைத்துளிகளைக் கொண்ட நீலமணி போன்ற அழகிய கூந்தலைப்
பின்புறம் மறையப் பின்னே கோதிவிட்டு. கூந்தலைக் கொத்தாகப் பிழிந்து
2.
சிறு கோல் இணர பெரும் தண் சாந்தம்
வகை சேர் ஐம்பால் தகைபெற வாரி
புலர்வு_இடத்து உதிர்த்த துகள் படு கூழை – நற் 140/2-4
சிறிய கிளைகளில் பூங்கொத்துக்களையுடைய மிகவும் குளிர்ந்த சந்தனத்தைப்
பிற பொருள்களையும் சேர்த்துக் கூந்தலில் அழகு உண்டாகப் பூசி,
அவை காய்ந்துபோன பின் உதிர்ந்துபோன துகள்கள் பரவிய கூந்தலையுடைய
3.
வருநர் வரையார் வார வேண்டி – பதி 21/8
தம்பால் வருபவர்கள் அளவில்லாமல் தாமே வாரி எடுத்துக்கொள்ளவேண்டியும்
– நிரம்ப உண்டல் வேண்டி – வார்தல் – சேரக் கொள்ளுதல்
4.
மருவு இன் பாலை
வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும் – பொரு 22,23
மருவுதல் இனிய பாலை யாழை –
(நரம்புகளை)(சுட்டுவிரலால்)தெறித்தும், (பெருவிரலும் சேர்த்து)உருவியும், உந்திவிட்டும், ஒன்றுவிட்டுத் தெறித்தும்,
5.
சேகா கதிர் விரி வைகலில் கை வாரூஉ கொண்ட
மதுரை பெரு முற்றம் போல நின் மெய் கண்
குதிரையோ வீறியது – கலி 96/22-24
சேவகனே! ஞாயிற்றின் கதிர்கள் விரிகின்ற விடியற்காலையில் கையில் பிடித்த அலகினால் வாரப்பெற்ற
மதுரை நகரின் பெரிய முற்றத்தைப் போல, உன் உடம்பின் மீது
அந்தக் குதிரையோ பிறாண்டியது?
– வாரூஉ – அலகினால் துராலை அகற்றி – துரால் – செற்றை, குப்பை – நச்.உரை, பெ.விளக்கம்

வார்

வார் – 1. (வி) 1. ஒழுங்குபடப் பரப்பு, spread evenly
2 ஒழுகு, flow – தாழ், கீழ்நோக்கி வா, flow down, decline
3. முடியை ஒழுங்குபடுத்து, கோது, comb the hair
4. ஒழுங்குபடு, be in order, be arranged in order
5. நீண்டிரு, be long, நீள், lengthen
6. ‘வா’ என்னும் சொல்லின் ஏவல் வடிவம்,
second person imperative form of the verb ‘come’
7. உதிர், தூர், தூவிவிடு, shower, pour forth
8. நேரிதாகு, become upright
9. உருக்கி அச்சில் ஊற்று, cast in a mould as metal
10. நெல்மணி முதலியன பால் பிடி, form milk, as grain
11, ஊற்று, ஒழுக்கு, (சோற்றை வடி), pour, cause to flow, drain
– 2. (பெ) 1. பட்டையான தோல், துணி போன்றவை, strap, belt, strip of leather, cloth etc.,
2. பெண்கள் மார்புக்கச்சு, bodice
3. நீர், water
1.1
முத்த வார் மணல் பொன் கழங்கு ஆடும் – பெரும் 335
முத்தை ஒத்த வார்ந்த மணலில் பொன்னாற் செய்த கழங்கைக் கொண்டு விளையாடும்
– முத்த வார் மணல் என்றது முத்துப்போன்ற பருமணல் பரப்பிக் கழங்காடற்கமைந்த இடத்தில் என்றவாறு.
– பொ.வே.சோ. விளக்கம்
1.2
பனி வார் சிமைய கானம் போகி – மது 148
பனி ஒழுகுகின்ற மலையிடத்தனவாகிய காடுகளைக் கடந்து,

நீர் வார் கண்ணேன் கலுழும் – நற் 143/4
நீர் ஒழுகும் கண்ணுடையவளாய் மனம் கலங்குகின்றேன்

வயலை அம் பிணையல் வார்ந்த கவாஅன் – அகம் 189/8
வயலைக் கொடியாலாகிய அழகிய தழையுடை தாழ்ந்த துடையினையும்
1.3
இரும் கடல் வான் கோது புரைய வார்_உற்று
பெரும் பின் இட்ட வால் நரை கூந்தலர் – மது 407,408
கரிய கடலில் (மிதக்கும்)வெண்மையான சங்கைப் போல, வாருதல் உற்று(தலை முடியைச் சீவி)
பெரியதாகப் பின்பக்கத்தில் இட்ட (முழுதும்)வெளுத்த நரையுள்ள கூந்தலையுடைய
1.4
பொலம் தொடி தின்ற மயிர் வார் முன்கை – நெடு 141
பொன்னாற் செய்த தொடி கிடந்து தழும்பிருந்த மயிர் ஒழுங்குபட்டுக்கிடந்த முன்கையிலே

முதிர் வார் இப்பி முத்த வார் மணல் – புறம் 53/1
முற்றி நீண்ட சிப்பிக்கண் முத்துப்போலும் வெளிய ஒழுங்குபட்ட மணற்கண்ணே
– ஔவை.சு.து.உரை

வார்ந்து இலங்கு வால் எயிற்று – நற் 198/7
நேராக விளங்கும் வெண்மையான பற்களும்
1.5
வார் கோல்
உடு உறும் பகழி வாங்கி கடு விசை
அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின் – குறி 169-171
நெடிய கோலையுடைய,
இறகு சேர்ந்த அம்பினை வலிந்திழுத்து, கடும் வேகத்துடன்,
தலைமை யானையின் அழகிய முகத்தில் ஆழச்செலுத்துதலினால்,

நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த
வண்டல் பாவை – நற் 191/2,3
அழகிய அணிகலன்களை அணிந்த மகளிர் நெடிய மணலில் செய்த
வண்டல்மண்ணால் ஆன பாவை

கோடு வார்ந்து அன்ன வெண் பூ தாழை – நற் 203/4
சங்கு நீண்டாற் போன்ற, வெள்ளையான பூவைக்கொண்ட தாழையானது

வண்ணம் மிகுந்த அண்ணல் யானை
நீர் கொள் நெடும் சுனை அமைந்து வார்ந்து உறைந்து – நற் 273/6,7
இயற்கை அழகு மிகுந்த தலைமைப்பண்புள்ள யானை
நீர் உண்ணும் நெடிய சுனையில் அமைந்து நீண்டநாள் இருக்கும்
– வார்தல் – நெடுகுதல் – பின்னத்தூரார் உரை விளக்கம்.
– வார்ந்து – நீண்டு – ச.வே.சு. உரை விளக்கம்
– நெடுகு-தல் – நீளுதல் – To extend; to be lengthened; to grow tall , high or long – தமிழ்ப்பேரகராதி
1.6
சிந்திக்க தீரும் பிணியாள் செறேற்க
மைந்து உற்றாய் வெம் சொல் மட மயில் சாயலை
வந்திக்க வார் என – பரி 20/68-70
இவள் பெயரைச் சிந்தித்தாலேயே தீர்ந்துவிடும் பாவப்பிணிகள், அப்படிப்பட்டவள் மீது சினங்கொள்ளாதே,
பேதைமைகொண்டாய் கொடிய சொல்கூறி, இந்த இளம் மயில்போன்ற சாயல் உடையவளை
வணங்க வருவாயாக என்று சொல்ல
1.7
புது மணல் கானல் புன்னை நுண் தாது
கொண்டல் அசை வளி தூக்கு-தொறும் குருகின்
வெண் புறம் மொசிய வார்க்கும் தெண் கடல் – நற் 74/7-9
புதுமணற்பரப்பைக் கொண்ட கானலில் உள்ள புன்னை மரத்தின் நுண்ணிய தாதுக்கள்
கிழக்கிலிருந்து வீசும் காற்று வந்து மோதும்போதெல்லாம், குருகின்
வெள்ளையான முதுகில் மொய்ப்பதுபோல் உதிர்க்கும் தெளிந்த கடற்கரையிலுள்ள

வரகின்
குரல் வார்ந்து அன்ன நுண் துளை இரீஇ – மலை 24,25
வரகின்
கதிர்(மணிகள்) ஒவ்வொன்றாக உதிர்ந்ததைப்போல நுண்ணிய துளைகளை இட்டு
1.8
பொங்கு திரை பொருத வார் மணல் அடைகரை – நற் 35/1
பொங்கிவரும் அலைகள் மோதுவதினால் நேரிதாகிய மணல் அடைத்த கடற்கரையில்
1.9
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் – சிறு 34
பொன்னை உருக்கிஊற்றிய (கம்பியினை)ஒத்த முறுக்கு அடங்கின நரம்பின்
1.10
பால் வார்பு கெழீஇ பல் கவர் வளி போழ்பு
வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல் – மலை 114,115
பால் பிடித்து முற்றி, பலவிதமாய்க் கிளைத்து (அடிக்கும்)காற்றால் ஊடறுக்கப்பட்டு,
மிகுதியாக விளைந்தன ஐவனம் என்னும் மலைநெல்

துய் தலை புனிற்று குரல் பால் வார்பு இறைஞ்சி
தோடு அலை கொண்டன ஏனல் – நற் 206/1,2
மெல்லிய பஞ்சினைத் தலையிலே கொண்டு பிஞ்சுவிட்டிருக்கும் கதிர்கள் பால்பிடித்துத் தலைசாய்க்கக்
கதிரை மூடிய தாள்கள் காற்றால் அசைகின்றன தினைப்பயிருக்கு
1.11
முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி
வாராது அட்ட வாடூன் புழுக்கல் – பெரும் 99,100
விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான வாயையுடைய பானையில் வார்த்த உலையை முரிந்த அடுப்பிலே ஏற்றி,
(கஞ்சியை)வடிக்காமல் பொங்கிய (மான் கறியின்)உப்புக்கண்ட(ம் சேர்ந்த) ஊன் சோற்றை
2.1
பண் அமைத்து
திண் வார் விசித்த முழவொடு – மலை 2,3
தாளங்களைத் தட்டிப்பார்த்து,
உறுதியான தோல்பட்டையால் இறுகக் கட்டிய மத்தளத்துடன்,
2.2
மார்பு அணி கொங்கை வார் மத்திகையா புடைப்பார் – பரி 9/46
மார்பினை அழகுசெய்யும் தம் கொங்கைகளின் கச்சினையே சாட்டையாகக் கொண்டு அடித்துக்கொள்வார்,
2.3
மேல் துறை கொளீஇய கழாலின் கீழ் துறை
உகு வார் அருந்த பகு வாய் யாமை – அகம் 356/1,2
மேலைத்துறையில் கள்ளினைக் கொண்ட கலங்களைக் கழுவுதலின், கீழ்த்துறையின்
ஒழுகும் கள்ளின் கலங்கல்நீரை அருந்திட,பிளந்த வாயினையுடைய யாமை

வார்த்தை

வார்த்தை – (பெ) மொழி, பேச்சு, speech, utterance
கார்த்திகை காதில் கன மகர குண்டலம் போல்
சீர்த்து விளங்கி திரு பூத்தல் அல்லது
கோத்தை உண்டாமோ மதுரை கொடி தேரான்
வார்த்தை உண்டாகும் அளவு – பரி 33
கார்த்திகை மகளிரின் பொன்னாலாகிய மகரக்குழை போன்று
சிறந்து விளங்கி, செல்வம் பெருகிப் பொலிதலை அன்றி
குற்றம் உடையதாகுமோ மதுரை நகரின் புகழ்? மீன்கொடியைத் தேரில் கொண்ட பாண்டியனின்
செந்தமிழ் மொழி இருக்கின்ற காலம் அளவும்.

வாலம்

வாலம் – (பெ) வால், tail
வரி அணில் வாலத்து அன்ன – புறம் 307/4
வரிகளையுடைய அணிலினது வாலைப் போன்ற

வாலா

வாலா – (பெ) வாலாமை, தூய்மையின்மை, தீட்டு, uncleanliness, ceremonial impurity
கடும் சூல் வய பிடி கன்று ஈன்று உயங்க
பால் ஆர் பசும் புனிறு தீரிய களி சிறந்து
வாலா வேழம் வணர் குரல் கவர்தலின் – நற் 393/2-4
முற்றின சூலைக் கொண்ட வலிய பெண்யானை கன்று ஈன்று வருந்த,
பால் கொடுத்ததினால் பச்சைமேனியான ஈன்றணிமை தீர, மகிழ்ச்சி மிகுந்து
தீட்டுள்ள ஆண்யானை வளைந்த தினைக்கதிரைக் கவர்வதால்

ஆர் தளி பொழிந்த வார் பெயல் கடைநாள்
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை – அகம் 139/5,6
மிக்க நீரைச் சொரிந்த நீண்ட பெயலைக்கொண்ட கார்காலத்தின் கடைநாளில்
மழைபெய்து நாள் கழிந்த தீட்டுள்ள வெளிய மேகம்

மேகம் மழைபெய்வதை அது ஈனுவதாகக் கொண்டு, அதன் பின் அது தீட்டுப்பட்டுவிட்டதாகக் கூறி,
அதனை வாலா வெண்மேகம் என்று புலவர் கூறியிருப்பதின் நயம் சுவைத்து மகிழத்தக்கது.

வாலிதின்

வாலிதின் – (வி.அ) 1. வெண்மையாக, white
2. மிகுதியாக, plentifully
1.
வாலிதின் விரிந்த புன் கொடி முசுண்டை – மலை 101
வெண்மையாக மலர்ந்தன மிக மெல்லிய கொடியை உடைய முசுட்டை;
2.
வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல் – மலை 115
மிகுதியாக விளைந்தன ஐவனம் என்னும் மலைநெல்;

வாலிது

வாலிது – (பெ) 1. நன்றானது, சிறந்தது, that which is good or excellent
2. தூயதானது, that which is pure
1.
வாலிது கிளர்ந்த வெண் கால் சேயும் – கலி 105/18
நன்றாய் உயர்ந்த வெண்மையான கால்களையுடைய சிவந்த காளையும்
2.
கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள் – அகம் 262/7
கலத்திலிட்டு உண்ணமாட்டாள், தூயதாய உடையினை உடுத்தமாட்டாள்

வாலிய

வாலிய – (வி.அ) வெண்மையாக, white
குழை அமல் முசுண்டை வாலிய மலர – அகம் 264/2
தழை நிறைந்த முசுண்டையின் பூக்கள் வெள்ளியவாக மலரவும்

வாலியோன்

வாலியோன் – (பெ) (வெண்ணிறமுள்ளவன்)பலராமன், Balaraman, as white in colour
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி – நற் 32/2
பலராமனைப் போன்ற ஒளிவிடும் வெள்ளிய அருவியையுடைய

வாலுவன்

வாலுவன் – (பெ) சமைப்போன், cook
அஞ்சுவந்த போர்க்களத்தான்
ஆண் தலை அணங்கு அடுப்பின்
வய வேந்தர் ஒண் குருதி
சின தீயின் பெயர்பு பொங்க
தெறல் அரும் கடும் துப்பின்
விறல் விளங்கிய விழு சூர்ப்பின்
தொடி தோள் கை துடுப்பு ஆக
ஆடுற்ற ஊன் சோறு
நெறி அறிந்த கடி வாலுவன்
அடி ஒதுங்கி பின் பெயரா
படையோர்க்கு முருகு அயர – மது 28-38
அச்சந்தரும் போர்க்களத்தின்கண்
ஆண்களின் தலையால் செய்த (பார்த்தவரை)வருத்தும் அடுப்பில்
வலிமிக்க வேந்தருடைய ஒள்ளிய குருதியாகிய உலை 30
வெகுளியாகிய நெருப்பில் மறுகிப் பொங்க,
வெல்லுதற்கு அரிய கடிய வலியினையும்,
வெற்றி விளங்கிய சீரிய கொடும்தொழிலினையுமுடைய
வீரவளையல்கள் அணிந்த தோளையுடைய கைகளே துடுப்பாக
துழாவிச் சமைத்த ஊனாலாகிய சோற்றை
இடும்முறை அறிந்த பேய் மடையன் (சமையல் செய்வோன்)
(இட்ட)அடியை வாங்கிப் பின்போகாத
வீரர்க்குக் களவேள்விசெய்யும்படி,

கணை துளி பொழிந்த கண்கூடு பாசறை
பொருந்தா தெவ்வர் அரிந்த தலை அடுப்பின்
கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல்
ஆனா மண்டை வன்னி அம் துடுப்பின்
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த – புறம் 372/4-9
அம்புகளாகிய அழையைப் பெய்த இடம் நிறைந்த பாசறைக்கண்ணே
மனம்பொருந்தாத பகைவர் உடலினின்றும் நீங்கிய அரிய தலைகளால் செய்யப்பட்ட அடுப்பிலே
கூவிளங்கட்டையாகிய விறகிட்டு எரித்து ஆக்கப்படும் கூழிடையே வரிக்குடர்கள் பிறழ்ந்து பொங்க
தலையிற் பொருந்தாது நீங்கிய மண்டையோட்டை அகப்பையாகவும் வன்னி மரத்தின் கொம்பை
அதில் செருகப்பட்ட காம்பாகவும்
ஈனாத பேய்மகள் தோண்டித்துழாவி சமைத்த
மாக்களும் உண்ண மறுக்கும் ஊன்சோறாகிய பிண்டத்தை பேய்மடையன் எடுத்துக் கொற்றவைக்குப் படைக்க

பேய்மடையனான வாலுவன் என்ற சொல், சங்க இலக்கியங்களில் இரண்டு இடங்களில் வருகின்றது. இந்த
இரண்டு இடங்களுமே மன்னனின் போர்வெற்றியைக் கொண்டாட பேய்கள் எடுக்கும் களவேள்வியைப் பற்றிய
குறிப்புக்கள் கொண்டவை. இந்த இரண்டு குறிப்புகளுமே பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியனின் போர்வெற்றியைப் புலவர் மாங்குடிக் கிழார் எனப்படும் மாங்குடி மருதனார் பாடியவை
என்பது ஆய்விற்குரியது.

வால்

வால் – (பெ) 1. வெண்மை, whiteness
2. தூய்மை, purity
3. முகுதி, பெருக்கம், plentitude, abundance
1.
வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல – திரு 120
கொம்பு மிக்கு ஒலிப்பவும், வெள்ளிய சங்கு முழங்கவும்
2.
வருந்தாது ஏகு-மதி வால் இழை குறு_மகள் – நற் 76/5
வருந்தாது வருவாயாக, தூய அணிகலன்களை அணிந்த இளமங்கையே!
3.
வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல் – மலை 115
மிகுதியாக விளைந்தன ஐவனம் என்னும் மலைநெல்;

வாளா

வாளா – (வி.அ) பேசாமல், அமைதியாக, silently, quietly
மறலினாள் மாற்றாள் மகள்
வாய் வாளா நின்றாள்
செறி நகை சித்தம் திகைத்து – பரி 20/45-47
மறுத்துப் பேசினாள் அந்த மாற்றாளாகிய பெண்;
வாய்பேச முடியாமல் நின்றாள்,
செறிவான பற்களைக் கொண்ட தலைவி, அதைக் கேட்டு சித்தம் திகைத்து;

இல் எலி வல்சி வல் வாய் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதக குழறும்
வளை கண் சேவல் வாளாது மடியின்
மனை செறி கோழி மாண் குரலியம்பும் – அகம் 122/13-16
இல்லிலுள்ள எலியை இரையாகக் கொண்ட வலிய வாயினதாகிய கூகையின் சேவல்
பேய்கள் திரியும் நள்ளிரவில் அழிவுண்டாகக் குழறும்
பொந்தில் வாழும் அச் சேவல் வறிதே உறங்கின்
மனையில் தங்கிய கோழிச்சேவல் மாண்புற்ற குரலை எழுப்பிக் கூவும்

வாளாதி

வாளாதி – (வி.மு) பயனில கூறாதே, don’t utter useless words
வாளாதி வயங்கு_இழாய் வருந்துவள் இவள் என – கலி 31/22
வீணான சொற்களை வழங்காதே! ஒளிவிடும் அணிகலன்களை அணிந்தவளே! வருந்துவாள் இவள் என்று

வாளாது

வாளாது – (வி.எ) பேசாமல், without talking
ஊரன்-மன் உரன் அல்லன் நமக்கு என்ன உடன் வாளாது
ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேர் ஆகி – கலி 68/6,7
தலைவன் நமக்கு மட்டும் ஆதரவாக இருப்பவன் அல்லன் என்று ஒருவர் போல் ஒருவர் பேசாமல்,
ஒரு பெரிய ஊரில் குடிவைக்கக்கூடிய அளவு திரண்டிருந்த உன் சேரிப் பரத்தையருக்குச் சமமாக
– உடன் வாளாது – ஒருவர் போல் ஒருவர் பேசாமல் – ச.வே.சு.உரை விளக்கம்

வாளி

வாளி – (பெ) 1. அம்பு, arrow
2. அம்பின் முனையிலுள்ள பற்கள், the pointed teeth at the head of an arrow.
1.
செம் கோல் வாளி கொடு வில் ஆடவர் – நற் 164/6
செம்மையான கோல் வடிவிலான அம்புகளையும், வளைந்த வில்லையும் உடைய ஆடவர்
2.
அரம் போழ் நுதிய வாளி அம்பின் – அகம் 67/5
அரத்தினால் அராவப்பட்ட முனையையுடைய பற்களையுடைய அம்பின்
– வாளி அம்பு – எயிற்றம்பு – ந.மு.வே.நாட்டார் உரை விளக்கம்

வாளை

வாளி – (பெ) 1. அம்பு, arrow
2. அம்பின் முனையிலுள்ள பற்கள், the pointed teeth at the head of an arrow.
1.
செம் கோல் வாளி கொடு வில் ஆடவர் – நற் 164/6
செம்மையான கோல் வடிவிலான அம்புகளையும், வளைந்த வில்லையும் உடைய ஆடவர்
2.
அரம் போழ் நுதிய வாளி அம்பின் – அகம் 67/5
அரத்தினால் அராவப்பட்ட முனையையுடைய பற்களையுடைய அம்பின்
– வாளி அம்பு – எயிற்றம்பு – ந.மு.வே.நாட்டார் உரை விளக்கம்

மேல்

வாளை – (பெ) ஒரு வகைக் குளத்து மீன்,
Scabbard-fish, silvery, attaining 16 in. in length, Trichiurus haumela
இது 16 அங்குலம் வளர்வதும் வெண்ணிற முள்ளதுமான மீன் வகை.
1.
குளங்களில் இதனைத் தூண்டில் போட்டுப் பிடிப்பர்.

கோள் வல் பாண்மகன் தலை வலித்து யாத்த
நெடும் கழை தூண்டில் நடுங்க நாண் கொளீஇ
கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப
பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை
நீர் நணி பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம் – பெரும் 284-288
(மீனைக்)கொள்ளுதலில் வல்ல பாண்மகனுடைய தலையில் வலித்துக் கட்டின
நெடிய மூங்கில் கோலாகிய தூண்டில் நடுங்கும்படியும், கயிற்றிலே கொளுவப்பட்ட
வளைந்த வாயினையுடைய தூண்டில் முள்ளின் மடித்த தலை (இரையின்றித்)தனிக்கும்படியும்,
பொதிந்த இரையைக் கௌவி (அகப்படாதுபோன)பிளந்த வாயையுடைய வாளை மீன்,
நீர் அருகிலுள்ள பிரம்பின் (நீரலையால்)நடுங்கு(வது போல் தோன்று)ம் நிழலைக் கண்டு அஞ்சும்
2.
குளத்துக்குள் இறங்கி வலைபோட்டும் இம் மீனைப் பிடிப்பர்.

கண்பு மலி பழனம் கமழ துழைஇ
வலையோர் தந்த இரும் சுவல் வாளை – மலை 454,455
சம்பங்கோரை நெருங்கிவளர்ந்த வயல்வெளிகள் (சேற்று)மணம்வீச (கைகளினால்)துழாவி,
வலைகொண்டு மீன்பிடிப்போர் கொண்டுவந்த பெரிய கழுத்தையுடைய வாளைமீன்(துண்டங்களை)
3.
இது நீருக்குள் அடிக்கடி பிறழக்கூடியது. இதன் நிறமும் வடிவமும் வாளைப் போன்றிருப்பதால், இது
பிறழ்வது வாளைச் சுழற்றுவது போலிருக்கும். இதனால் பார்ப்போரை மருட்டும்.

வாளை வாளின் பிறழ நாளும் – நற் 390/1
வாளை மீன்கள் வாளைப் போல பிறழ

அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய
இரும் சுவல் வாளை பிறழும் ஊர – நற் 400/3,4
நெல்லறுப்போர் களத்தில் குவித்த நெற்கதிர்குவைக்கு அயலாக, பெரிய
கரிய பிடரியையுடைய வாளைமீன் துள்ளிப்பாயும் மருதநிலத்தலைவனே

விளக்கின் அன்ன சுடர்விடு தாமரை
களிற்று செவி அன்ன பாசடை தயங்க
உண்துறை மகளிர் இரிய குண்டு நீர்
வாளை பிறழும் ஊரற்கு – நற் 310/1-4
விளக்கின் சுடரைப் போன்று சுடர்விட்டு நிற்கும் தாமரையின்
யானைச் செவியைப் போன்ற பசிய இலைகள் திடீரென அசைய,
நீருண்ணும் துறையில் நீர்மொள்ளும் மகளிர் வெருண்டு ஓட,
வாளை மீன் நீருக்குள் பிறழும் ஊரனாகிய தலைவனுக்கு,
4.
குளத்து மடையைத் திறக்கும்போது மடைநீருடன் வெளிவந்து வயல்வரை செல்லும்.

படை மாண் பெரும் குள மடை நீர் விட்டு என
கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளை
அள்ளல் அம் கழனி உள்வாய் ஓடி
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து
செம் சால் உழவர் கோல் புடை மதரி
பைம் கால் செறுவின் அணை முதல் பிறழும் – நற் 340/3-8
5.
இதன் பிளந்த வாயை ஒப்ப வாயமைத்து விரலுக்கு மோதிரம் செய்துகொள்வர்.

வாளை பகு வாய் கடுப்ப வணக்கு_உறுத்து
செ விரல் கொளீஇய செம் கேழ் விளக்கத்து – நெடு 143,144
வாளைமீனின் பிளந்த வாயைப் போன்ற வளைவை உண்டாக்கிச்
சிவந்த விரலில் மாட்டிய சிவந்த நிறத்தையுடைய (முடக்கு அல்லது நெளி என்னும்)மோதிரத்தையும்;(கொண்டு)
6.
இது பொய்கைகளிலுள்ள நீர்நாய்களுக்கும் கொக்குகளுக்கும் இரையாகும்.

அரில் பவர் பிரம்பின் வரி புற நீர்நாய்
வாளை நாள் இரை பெறூஉம் ஊரன் – குறு 364/1,2
இறுகப் பின்னிய கொடிப்பிரம்பினைப் போல் வரிவரியான முதுகினைக் கொண்ட நீர்நாய்
வாளை மீனை அன்றைய ஊணவாகப் பெறும் ஊரினனான தலைவனின்

பொய்கை பள்ளி புலவு நாறு நீர்நாய்
வாளை நாள் இரை பெறூஉம் ஊர – ஐங் 63/1,2
பொய்கையில் வாழும் புலவு நாற்றத்தையுடைய நீர்நாயானது
வாளை மீனை தன் அன்றைய இரையாகப் பெறும் ஊரைச் சேர்ந்த தலைவனே!

நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த
வாளை வெண் போத்து உணீஇய நாரை – அகம் 276/1,2
நீண்ட பெரிய பொய்கையில் இரையை விரும்பிப் புறப்பட்ட
வெள்ளிய வாளைப் போத்தினை உண்ணும்பொருட்டு நாரையானது
7.
இது கரையோரத்து மாமரங்களிலிருந்து விழும் மாங்கனிகளைக் கவ்வி விளையாடும்.

கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்
பழன வாளை கதூஉம் ஊரன் – குறு 8/1,2
வயல்வெளியிலுள்ள மா மரத்தில் விளைந்து உதிர்ந்த இனிய பழத்தை
பொய்கையின் வாளைமீன் கவ்வும் ஊரையுடைய தலைவன்,

கணை கோட்டு வாளை கமம் சூல் மட நாகு
துணர் தே கொக்கின் தீம் பழம் கதூஉம் – குறு 164/1,2
கணைபோன்று திரண்ட கொம்பினையுடைய முதிர்ந்த கருக்கொண்ட பெண் வாளைமீன்
கொத்துக்கொத்தானை தேமாமரத்தின் இனிய பழத்தைக் கௌவும்
8.
சில வகை வாளை மீன்களுக்குக் கொம்பு இருக்கும் என்று இலக்கியங்கள் கூறுகின்றன.

காலை தந்த கணை கோட்டு வாளைக்கு – அகம் 126/8
விடியலிற் கொணர்ந்த திரண்ட கோடுகளையுடைய வாளை மீனுக்கு

ஆனால், இந்தக் கோடு என்பது அதன் மீசை என்பர் ஔவை.சு.து.அவர்கள்.

கணை கோட்டு வாளை மீ நீர் பிறழ – புறம் 249/2
திரண்ட கோட்டையுடைய வாளைமீன் நீர்மேலே பிறழ
– வாளை மீனின் மீசை ஈண்டுக்கோடு எனப்பட்டது – ஔவை.சு.து.உரை விளக்கம்
9.
மற்ற சில மீன்களுடன் ஒப்பிடும்போது இதன் கழுத்துப்பகுதி திடமாக இருப்பதால் இது இரும் சுவல் வாளை
எனப்படுகிறது.

இரும் சுவல் வாளை பிறழும் ஆங்கண் – புறம் 322/8
பெரிய பிடரையுடைய வாளைமீன்கள் துள்ளிப்பாயும் அழகிய இடத்தையுடைய

வாள்

வாள் – (பெ) 1. போரில் பயன்படும் நீண்ட கத்தி, sword
2. கத்தரிக்கோல், scissors
3. அரிவாள், sickle
4. ஒளி, விளக்கம், brightness, splendour
5. கூர்மை, sharpness
1.
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள் – முல் 46
இரவைப் பகலாக்கும், திண்ணிய கைப்பிடியையுடைய ஒளிவிடும் வாளை
2.
வாள் இடைப்படுத்த வயங்கு ஈர் ஓதி – கலி 36/23
கத்தரிக்கோலால் ஒழுங்காக வெட்டிவிடப்பட்ட, ஒளிவிடும் நெய்ப்புள்ள கூந்தல்
3.
செந்நெல் அரிநர் கூர் வாள் புண் உற – நற் 275/1
செந்நெல்லின் கதிர் அறுப்போரின் கூரிய அரிவாளால் காயப்பட்டு
4.
மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர் – சிறு 31
மடப்பத்தையுடைய மான்(போலும்) பார்வையையும்; ஒளியுள்ள நெற்றியையும் (உடைய)விறலியரின்
5.
வேளா பார்ப்பான் வாள் அரம் துமித்த
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன – அகம் 24/1,2
வேள்வி செய்யாத பார்ப்பான் கூரிய அரத்தால் துண்டாக்கி எடுத்த
வளையல்கள் போக எஞ்சிய சங்கின் தலைப்பகுதியைப் போன்ற
– ந.மு.வே.நாட்டார் உரை

வாழ்

வாழ் – (வி) 1. வசி, live, dwell
2. உயிரோடிரு, live, be alive
3. இரு, exist, be
1.
அளை வாழ் அலவன் கண் கண்டு அன்ன – பொரு 9
வளையில் வாழ்கின்ற நண்டின் கண்னைக் கண்டது போன்ற
2.
வாழ் முள் வேலி சூழ் மிளை படப்பை – பெரும் 126
உயிருள்ள முள்செடியாலான வேலியையும், சூழ்ந்த காவற்காட்டினையும் உடைய ஊர்ப்புறத்தையும்

வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை – நற் 314/2
உயிரோடிருக்கும் நாளை வகுத்து இன்ன அளவுள்ளது என்னும் அறிபவரும் இங்கு இல்லை;
3.
அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல் – மலை 304
(ஆற்று மணல் போல் அலை அலையான)நெறிப்பு உள்ள மயிரினையுடைய (மலை)இடைச்சியர் பாடலோசையும்

கடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று
வடு வாழ் எக்கர் மணலினும் பலரே – மலை 555,556
வேகமாகப் பாயும் வெள்ளத்தையுடைய கண்ணுக்கு இனிய சேயாற்றின்
கருமணல் இருக்கும் மணல்மேடுகளிலுள்ள மணலினும் பலரே

உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்று அன்ன என் – நற் 184/6,7
மையுண்ட கண்களின்
மணிகளில் இருக்கும் பாவையானது வெளியில் வந்து நடக்கக் கற்றுக்கொண்டதைப் போல என்

வாழ்ச்சி

வாழ்ச்சி – (பெ) வாழ்தல், living
மடம் பெருமையின் உடன்று மேல்வந்த
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
வீந்து உகு போர்_களத்து ஆடும் கோவே – பதி 56/6-8
அறியாமை மிகுதியால் பகைகொண்டு போர்மேற்கொண்டு வந்து பொருத
வேந்தர் தம்முடம்பைத் துறந்து துறக்கத்தே வாழ்வுபெறுதலால்
பட்டுவீழும் போர்க்களத்திலே இனிது ஆடுதல் வல்ல வேந்தனாவான்.
– தம் உடலைக் கைவிட்டு உயிர்கொண்டு துறக்கம் புகுந்து வாழ்தலுற்றான் என்றற்கு ‘மெய்ம்மறந்த வாழ்ச்சி’
என்று கூறினார் – ஔவை.சு.து.விளக்கம்

வாழ்தி

வாழ்தி – (வி.மு) (நீ) உயிரோடிருக்கிறாய், (you are) alive
அனைத்தும் அடூஉ நின்று நலிய
யாங்ஙனம் வாழ்தி என்றி தோழி – அகம் 378/16,17
யாவும் ஒன்றுகூடி நின்று வருத்தவும்
நீ எங்ஙனம் உயிர்வாழ்கிறாய் என்று வினவுகின்றனை

வாழ்தும்

வாழ்தும் – (வி.மு) (நாம்) வாழ்ந்திருப்போன், (we would) live
தம் வினை முற்றி வரூஉம் வரை நம் மனை
வாழ்தும் என்ப நாமே – நற் 129/5,6
தன்னுடைய பொருள்தேடும் வினையை முடித்துத் திரும்பி வரும்வரை நாம் நம் வீட்டில்
வாழ்ந்திருப்போம் என்று கூறுவர்

வாழ்நர்

வாழ்நர் – (பெ) 1. வாழ்வோர், residents, inhabitants
2. வாழும் வழியாகக் கொண்டவர், those who live by something
3. ஒன்றனைச் சார்ந்து இருப்பவர், those who live depending on something/somebody
1.
கொல்லை குரல் வாங்கி ஈனா மலை வாழ்நர்
அல்ல புரிந்து ஒழுகலான் – கலி 39/14,15
தினைப் புனங்களும் கதிர்களை வளைத்து ஈனமாட்டா! இந்த மலைவாழ் மக்கள்
இவளுடைய காதலை மறுக்கும் அறமில்லாத செயல்களைச் செய்து நடப்பதால்!
2.
ஏரின்_வாழ்நர் பேர் இல் அரிவையர் – புறம் 33/4
ஏரால் உழுதுண்டு வாழ்பவரது பெரிய மனையின் மகளிர்
3.
என் நிழல் வாழ்நர் செல் நிழல் காணாது – புறம் 72/10
எனது ஆட்சியின்கீழ் வாழ்வார் தாங்கள் சென்றடையும் புகலிடம் காணாமல்

தாள் நிழல் வாழ்நர் நன் கலம் மிகுப்ப – புறம் 161/30
உன் ஆதரவில் வாழ்வோர் நல்ல ஆபரணத்தை மிகுப்ப

வாவல்

வாவல் – (பெ) வௌவால், bat
உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல் அம் சினை தூங்கு துயில் பொழுதின் – நற் 87/1,2
நம் ஊரிலுள்ள மா மரத்தில் இருக்கும் முள் போன்ற பற்களைக் கொண்ட வௌவால்,
உயர்ந்த அழகிய கிளையில் தொங்கியவாறு துயிலும் பொழுதில்

வாவி

வாவி – (பெ) குளம், நீர்நிலை, Tank, reservoir of water
செறுவும் வாவியும் மயங்கி நீர் அற்று – பட் 244
வயலும், குளங்களும், தம்மில் ஒன்றாகி, நீரற்று,

வாவு

வாவு – (வி) தாண்டு, குதித்தோடு, jump, leap, gallop
சிறு பைம் தூவி செம் கால் பேடை
நெடு நீர் வானத்து வாவு பறை நீந்தி – அகம் 57/1,2
சிறிய மெல்லிய சிறகுகளையும் சிவந்த கால்களையும் உடைய வௌவால் பேடை
நீண்ட தன்மையையுடைய வானத்தில் தாவித்தாவிப் பறந்து கடந்து

முள் உறின் சிறத்தல் அஞ்சி மெல்ல
வாவு உடைமையின் வள்பின் காட்டி
ஏ தொழில் நவின்ற எழில் நடை புரவி
செழு நீர் தண் கழி நீந்தலின் – அகம் 160/9-11
தாற்றினால் குத்தப்பெறின் வேகம் அளவுகடந்துபோதலை அஞ்சி, மெல்ல
தாவிச் செல்லுதல் கொண்டமையின் கடிவாளத்தினால் அதனைக் குறிப்பிக்க,
அம்பின் வேகம் போலச் செல்லுதலைப்பழகிய அழகிய நடையினையுடைய குதிரைகள்
செழுமை வாய்ந்த நீரினையுடைய குளிர்ந்த கழியினைக் கடக்குங்கால்

வாவுதல் என்பது தாவுதல் (leap). நீந்துவதில் எத்தனையோ வகையுண்டு. இரு கைகளையும் முழுதும் முன்னே
நீட்டி, அப்படியே பக்கவாட்டில் அவற்றை வலித்து உள்ளங்கைகளால் நீரைப் பின்னே தள்ளி உடலை முன்னே
செலுத்துதலே வாவுதல். சிறிய சிறகுகளைக்கொண்ட குருவி போன்ற பறவைகள் தம் சிறகுகளைப் படபட-வென்று
அடித்துக்கொண்டு பறக்கும். ஆனால் கொக்கு நாரை போன்றவைகளுக்குச் சிறகுகள் பெரியதாக இருக்கும்.
அவற்றை மேலும் கீழும் மெல்ல அசைத்து அசைத்து அவை பறக்கும். இதுதான் வாவுப் பறை. பழந்தின்னி
வௌவால்கள் பெரிய சிறகுகளைக் கொண்டவை. எனவேதான் புலவர் வாவுப் பறை என்கிறார்.
மனிதர்கள் நீரில் வாவி வாவி நீந்துவது போல, இந்த வௌவால் வானத்தில் வாவி வாவி நீந்துகிறதாம்.
வாவுப் பறை நீந்தி என்ற சொல்லாக்கம் எத்துணை பொருத்தமாக வந்து விழுந்திருக்கிறது பாருங்கள்!

வாவு என்ற சொல்லைக்கொண்ட இரு குறிப்புகளும் நீந்தி என்ற சொல்லைக் கையாளுதலை உற்றுக்கவனிக்க.

விக்கு

விக்கு – (வி) விக்கலெடு, hiccup
என்னை
வளை முன்கை பற்றி நலிய தெருமந்திட்டு
அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா
அன்னை அலறி படர்தர தன்னை யான்
உண்ணு நீர் விக்கினான் என்றேனா – கலி 51/9-13
அவன் எனது
வளையணிந்த முன்கையைப் பற்றி அழுத்த, மருண்டுபோய்
அன்னையே! இவன் செய்வதைப் பாரேன் என்று கூவிவிட,
அன்னையும் அலறிப்புடைத்துக்கொண்டு ஓடிவர, அவனை, நான்
நீர் உண்ணும்போது விக்கினான் என்று சொல்ல,

விசயம்

விசயம் – (பெ) 1. கருப்பஞ்சாறு, Juice of the sugarcane
2. கருப்பட்டி, jaggery
3. பாகு, (sugar)syrup
4. வெற்றி, victory, triumph
1.
எந்திரம் சிலைக்கும் துஞ்சா கம்பலை
விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும்
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசைமின் – பெரும் 260-262
ஆலை ஆரவாரிக்கும் மாறாத ஓசையுடைய
கருப்பஞ்சாற்றைக் (கட்டியாகக்)காய்ச்சும் புகை சூழ்ந்த கொட்டில்தோறும்,
கரும்பினது இனிய சாற்றை விருப்பமுடையீராய் பருகுவீர்
2.
விசயம் கொழித்த பூழி அன்ன – மலை 444
கருப்புக்கட்டியைக் கொழித்த பொடியையொத்த
– நச்.உரை
3.
அயிர் உருப்பு_உற்ற ஆடு அமை விசயம்
கவவொடு பிடித்த வகை அமை மோதகம் – மது 625,626
கண்டசருக்கரையை வெப்பமேற்றிச் சமைத்தல் அமைந்த பாகினை(க் கூட்டிய)
உள்ளீட்டோடெ பிடித்த வகுப்பு அமைந்த கொழுக்கட்டைகளையும்,
4.
விசயம் வெல் கொடி உயரி வலன் ஏர்பு
வயிரும் வளையும் ஆர்ப்ப – முல் 91,92
வெற்றியால், வென்றெடுக்கின்ற கொடியை உயர்த்தி, வலப்பக்கம் உயர்த்தி
கொம்பும் சங்கும் முழங்க

விசி

விசி – 1. (வி) 1. இறுகக்கட்டு, fasten tightly
2. புடை, விம்மு, become swollen, over-stretched, as the abdomen from over-eating
– 2. (பெ) இறுக்கம், இறுக்கமாகக் கட்டுதல், tightening
1.1
திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின்
விண் அதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்து
திண் வார் விசித்த முழவொடு – மலை 1-3
கருக்கொண்ட மேகங்கள் ஒன்றுகூடிய கருமை நிறங்கொண்ட பரந்த வானில்
விண்ணகமே அதிரும்படி முழங்கும் ஓசையைப் போன்று, தாளங்களைத் தட்டிப்பார்த்து,
உறுதியான வாரால் இறுகக் கட்டிய மத்தளத்துடன்
1.2
பழன வாளை பரூஉ கண் துணியல்
புது நெல் வெண் சோற்று கண்ணுறையாக
விலா புடை மருங்கு விசிப்ப மாந்தி – புறம் 61/4-6
பொய்கையிடத்து வாளையினது பரிய இடத்தையுடைய தடியை
புதிய நெல்லினது வெள்ளிய சோற்றுக்கு மேலீடாகக் கொண்டு
விலாப்புடைப்பக்கம் விம்ம உண்டு
(இங்கேயும் விசித்தல் – இறுக்கமாதல் – என்ற பொருள் குறிப்பால் உணர்த்தப்படுதலைக் காண்க)
2.
வள் வார்
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை – அகம் 249/2,3
வளம்பொருந்திய வாரினால்
இறுகப் பிணித்துக் கட்டிய அடிக்கும் கோலினையுடைய தெளிந்த ஒலியினதாகிய கிணைப்பறையின்

விசும்பு

விசும்பு – (பெ) ஆகாயம், sky
விசும்பு என்பது சூரிய சந்திரர், விண்மீன்கள், மேகங்கள், மேலோகத்தார், தெய்வமகளிர், பறவைகள் ஆகியோர்
வழிச்செல்லும் பகுதி.

அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி
பகல் கான்று எழுதரு பல் கதிர் பருதி – பெரும் 1,2
அகன்ற பெரிய வானில் பரந்த இருளை விழுங்கி,
பகற்பொழுதைத் தோற்றுவித்து, எழுதலைச்செய்யும் பல கதிர்களையுடைய ஞாயிறு

நிலவே நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி
பால் மலி கடலின் பரந்து பட்டன்றே – நற் 348/1,2
நிலவானது, நீல நிற விசும்பில் பல கதிர்களைப் பரப்பி
பால் மிகுந்த கடலைப் போல ஒளியைப் பரப்பி விளங்குகிறது;

மை அற விளங்கிய மணி நிற விசும்பில்
கைதொழும் மரபின் எழு மீன் போல – நற் 231/1,2
மேகங்கள் சிறிதுமில்லாமல் விளங்கிய நீலமணி நிறத்ததான விசும்பில்
வணங்கக்கூடிய மரபினதான ஏழு மீன்களான சப்தரிஷிமண்டலம் போல

கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி – திரு 7,8
கடலில் முகந்த நிறைத்த சூல் கொண்டமேகங்கள்,
மின்னலாகியவாள் பிளந்த வானிடத்தே பெரிய துளியைச் சிதறி

நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
வானவ மகளிர் மான கண்டோர்
நெஞ்சு நடுக்குறூஉ கொண்டி மகளிர் – மது 581-583
நீல நிறத்தையுடைய வானத்தின்கண் நெஞ்சமர்ந்து விளையாடும்
தெய்வமகளிர் போல, (தம்மைக்)கண்டோருடைய
நெஞ்சு நடுக்கமடையும் வரைவின் மகளிர்,

வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல
உரம் தலை கொண்ட உரும் இடி முரசமொடு
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ
விசும்பு ஆறு ஆக விரை செலல் முன்னி
உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழு சீர்
அலைவாய் சேறலும் நிலைஇய பண்பே – திரு 120-125
கொம்பு மிக்கு ஒலிப்பவும், வெள்ளிய சங்கு முழங்கவும்,
வலிமையை(த் தன்னிடத்து)க் கொண்ட உருமேற்றின் இடி(யைப் போன்று ஒலிக்கும்)முரசுடன்
பல பீலியையுடைய மயில் வெற்றிக் கொடியிலிருந்து அகவ,
வானமே வழியாக விரைந்த செலவினை மேற்கொண்டு,
உலகமக்களால் புகழப்பட்ட மிக உயர்ந்த சிறந்த புகழினையுடைய
அலைவாய் என்னும் ஊரில் ஏற எழுந்தருளுதலும் (அவன்)நிலைபெற்ற பண்பே

விசை

விசை – 1. (வி) 1. விரைவுபடுத்து, cause to move swiftly
2. கடுமையாக்கு, be forceful
3. துள்ளு, leap, hop
– 2. (பெ) 1. உந்துசக்தி, power, force
2. வேகம், speed
1.1
விசும்பு விசைத்து எழுந்த கூதளம் கோதையின்
பசும் கால் வெண் குருகு வாப்பறை வளைஇ – அகம் 273/1,2
வானில் வேகங்கொண்டு எறிந்த கூதாளியின் மாலை போல்
பசிய காலையுடைய வெள்ளாங்குருகு தாவும் சிறகினை வளைத்து
1.2
கரும் கை கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த
கூட திண் இசை வெரீஇ மாடத்து
இறை உறை புறவின் செம் கால் சேவல்
இன் துயில் இரியும் பொன் துஞ்சு வியல் நகர் – பெரும் 437-440
வலிய கையினையுடைய கொல்லன் சம்மட்டியை உரத்துக் கொட்டின
கூடத்து எழுந்த திண்ணிய ஓசையை அஞ்சி, மாடத்தின்
இறப்பில் உறையும் புறாவின் சிவந்த காலையுடைய சேவல்
இனிய துயில் (நீங்கி)விரைந்தோடும் பொன் துஞ்சுகின்ற; அகன்ற அரண்மனையிடத்தே
– விசைத்து எறி = ஓங்கிஎறி ; விசைத்து அடி = ஓங்கிஅடி
1.3
நறு நெய் கடலை விசைப்ப சோறு அட்டு
பெருந்தோள் தாலம் பூசல்மேவர – புறம் 120/14,15
நறிய நெய்யிலே கடலை துள்ள, சோற்றை ஆக்கி
பெரிய தோளையுடைய மனையாள் உண்கலன்களைக் கழுவ
2.1
உடு உறும் பகழி வாங்கி கடு விசை
அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின் – குறி 170,171
இறகு சேர்ந்த அம்பினை வலிந்திழுத்து, கடும் சக்தியுடன்
தலைமை யானையின் அழகிய முகத்தில் ஆழச்செலுத்துதலினால்,
2.2
புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர்
உயர் நிலை இதணம் ஏறி கை புடையூஉ
அகல் மலை இறும்பில் துவன்றிய யானை
பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடும் கல்
—————- ———————— —————
வரும் விசை தவிராது மரம் மறையா கழிமின் – மலை 203-210
காய்ந்து, பிஞ்சுத்தன்மை நீங்கிய(பிஞ்சுத்தன்மை நீங்கிக் காய்ந்த) தினைப்புனத்தைச் சுற்றிவந்த குறவர்கள்,
உயரமான இடத்திலுள்ள பரணில் ஏறி, கைகளைத் தட்டி,
பரந்துபட்டுக்கிடக்கும் மலைகளின் புதர்க்காடுகளில் கூட்டமாகத்திரியும் யானைகள்
பகலில் (வந்து)நிற்கும் நிலையைக் குலைக்கின்ற கவண்கள் விடும் மூர்க்கத்தனமான கற்கள்,
———————- ———————– ——————
வருகின்ற வேகம் குறையமாட்டா, (எனவே)மரங்களில் ஒளிந்துநின்று (ப் பின்)கடந்துசெல்லுங்கள்-

விசைப்பு

விசைப்பு – (பெ) துள்ளி எழல், jumping out with force
விட்ட குதிரை விசைப்பின் அன்ன – குறு 74/1
அவிழ்த்துவிட்ட குதிரை துள்ளி எழுந்தாற்போன்று

விசையம்

விசையம் – (பெ) பார்க்க : விசயம் – 2
விசையம் கொழித்த பூழி அன்ன – மலை 444
சருக்கரையைக் கொழித்த பொடியை ஒத்த
– பொ.வே.சோ.உரை விசயம் – சருக்கரை, அது விசையம் என அகரம் ஐகாரமாயிற்று

விச்சிக்கோ

விச்சிக்கோ – (பெ)
விச்சிக்கோ சங்ககால மன்னர்களில் ஒருவன். விச்சிமலை நாட்டின் அரசன். விச்சிக்கோ, விச்சிக்கோன், விச்சியர்
பெருமகன் என்றெல்லாம் சங்கநூல்களில் இவன் குறிப்பிடப்படுகிறான்.
பாரி இறந்தபின் கபிலர் பாரிமகளிரை அழைத்துக்கொண்டு சென்று அவர்களைத் திருமணம் செய்துகொள்ளுமாறு
இவனை வேண்டினார். விச்சிக்கோ பாரிமகளிரைத் திருமணம் செய்துகொள்ளவில்லை எனத் தெரிகிறது.

விளங்கு மணி கொடும் பூண் விச்சிக்கோவே – புறம் 200/8
விளங்கிய மணிகளால் செய்யப்பட்ட வளைந்த ஆபரனத்தையுமுடைய விச்சிக்கோவே

விச்சியர்பெருமகன்

விச்சியர்பெருமகன் – (பெ) பார்க்க : விச்சிக்கோ
வில் கெழு தானை விச்சியர்பெருமகன் – குறு 328/5
விற்படையைக் கொண்ட சேனைகளையுடைய விச்சியரின் தலைவன்

விச்சை

விச்சை – (பெ) கல்வி, learning, education
கற்பித்தான் நெஞ்சு அழுங்க பகர்ந்து உண்ணான் விச்சை_கண்
தப்பித்தான் பொருளே போல் தமியவே தேயுமால்
ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் மற்று அவன்
எச்சத்துள் ஆயினும் அஃது எறியாது விடாதே காண் – கலி 149/4-7
கற்பித்த ஆசிரியனின் நெஞ்சம் நோகும்படி, அவன் வறுமையில் அவனோடு பகிர்ந்து உண்ணாமல், தான் கற்ற
கல்விக்குக்
கேடுசெய்தவனுடைய பொருளைப் போல் தானாகவே அழிந்து போவான்,
தனது வறுமைக் காலத்தில் தனக்கு உதவியோருக்கு, அவரது வறுமைக் காலத்தில் அவருக்கு உதவாதவன்,
அவனது
பிற்காலத்திலும் அது அவனைப் பழிதீர்க்காமல் விடாது;

விடக்கு

விடக்கு – (பெ) இறைச்சி, meat, flesh
மீன் தடிந்து விடக்கு அறுத்து – பட் 176
மீனை வெட்டி, பின்னர் இறைச்சியையும் அறுத்து

விடக்கு உடை பெரும் சோறு உள்ளுவன இருப்ப – நற் 281/6
ஊன் துண்டங்களோடு கூடிய பெருவிருந்தை நினைத்துக்கொண்டு இருக்க

இன்றைய பேச்சு வழக்கில் இதனை வெடுக்கு என்பர். சங்க இலக்கிய வழக்கில் ‘புலவு நாறு’ என்ற
தொடர் இப்போது ‘வெடுக்கு வீசி’ என்று சொல்லப்படுகிறது.

விடத்தர்

விடத்தர் – (பெ) விடத்தேரை, Ashy babool, Dichrostachys cinerea
திரி காய் விடத்தரொடு கார் உடை போகி – பதி 13/14
முறுக்கிய காய்களையுடைய விடத்தேரை மரங்களுடன், கரிய உடை மரங்கள் நெடிது வளர்ந்து

விடம்

விடம் – (பெ) விஷம், நஞ்சு, poison
விடம் உடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம் – பரி 4/42
நஞ்சை உடைய பாம்பின் உடலையும், உயிரையும் உண்ணும் கருடன்

விடரி

விடரி – (பெ) மலைப்பிளப்பு, crevice on the mountain
விடரி அம் கண்ணி பொதுவனை சாடி – கலி 101/22
மலைப்பிளவிலே பூத்த பூவைக் கொண்ட தலைமாலை அணிந்த இடையனைத் துவட்டி
விடரி – மலைப்பிளப்பு – மா,இராசமாணிக்கனார் உரை விளக்கம்

விடர்

விடர் – (பெ) 1. நிலப்பிளப்பு, fissure, cleft
2. மலை வெடிப்பு, crevice, gap in mountain slope
3. மலைச்சரிவில் ஏற்பட்ட பிளப்பினால் ஆகிய குகை, cave in a mountain slope
1.
கை கோள் மறந்த கரு விரல் மந்தி
அரு விடர் வீழ்ந்த தன் கல்லா பார்ப்பிற்கு
முறி மேய் யாக்கை கிளையொடு துவன்றி
சிறுமையுற்ற களையா பூசல் – மலை 311-314
(குட்டியைக்)கையில் பிடிப்பதை மறந்த கரிய விரலையுடைய மந்தி,
எளிதாய் அணுகமுடியாத பிளவுக்குள் விழுந்துவிட்ட தன் (தாவுதலை முற்றிலும்)கற்றுக்கொள்ளாத குட்டிக்காக
தளிர்களை மேய்ந்து (வளர்ந்த) உடம்பினையுடைய சுற்றத்தோடே கூடிநின்று
துன்பப்பட்ட (யாராலும்)களையமுடியாத பெரிய அமளியும்;

கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி
விடர் முகை அடுக்கம் பாய்தலின் உடன் இயைந்து
அமை கண் விடு நொடி கண கலை அகற்றும் – அகம் 47/5-7
சூறாவளி வெப்பமுறச் செய்த, பக்கங்களில் நீண்டும், கூரான கொழுந்துவிட்டும் எரியும் நெருப்பு
பிளவுகளும் குகைகளும் கொண்ட மலைச் சரிவில் பரந்து விரிதலால், அதனுடன் சேர்ந்து,
மூங்கில் கணுக்கள் வெடித்தலால் எழும் ஒலி மான் கூட்டத்தை விரட்டும்
2.
குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம்
பெரும் கல் விடர் அளை செறிய – திரு 313,314
கரிய நிறத்தையுடைய மயிரினையுடைய உடம்பினையும் வளைந்த அடியினையுமுடைய கரடி
பெரும் பாறைகளின் வெடிப்பாகிய முழைஞ்சிலே சேர,

விடர் முகை செறிந்த வெம் சின இரும் புலி – நற் 158/5
மலையின் பிளப்புகளிலுள்ள குகையில் பதுங்கியிருக்கும் மிக்க சினமுள்ள பெரிய புலி

விடலை

விடலை – (பெ) 1. இளைஞன், youth
2. வீரன், warrior
1.
புது கலத்து அன்ன கனிய ஆலம்
போகில்-தனை தடுக்கும் வேனில் அரும் சுரம்
தண்ணிய இனிய ஆக
எம்மொடும் சென்மோ விடலை நீயே – ஐங் 303
புதிய மண்பாண்டத்தைப் போன்ற நிறத்தையுடைய கனிகளைக் கொண்ட ஆலமரம்,
பறவைகள் தன்னைவிட்டுப் போவதைத் தடுத்து நிறுத்தும் தன்மையுடைய கடினமான பாலை வழி
குளிர்ச்சிபொருந்தியதாகவும், இனிமையானதாகவும் ஆகும்படி
என்னையும் அழைத்துக்கொண்டு செல்வாயாக, இளங்காளையாகிய நீ

சுடர் தொடி குறு_மகள் இனைய
எனை பயம் செய்யுமோ விடலை நின் செலவே – ஐங் 305/3,4
ஒளிவிடும் தோள்வளையைக் கொண்ட இளையமகள் வாடும்படியாக,
என்ன பயனைத் தருமோ, இளங்காளையே! உனது பயணம்?
2.
வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே – புறம் 237/14
வெளிய வேலையுடைய வீரன் போய் இறந்துபட்டான்

விடியல்

விடியல் – (பெ) பொழுது விடிகின்ற நேரம், break of day, dawn
1. கிழக்கில் வெள்ளி முளைக்கின்ற காலம்.
விரிகதிர்
வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல் – பொரு 71,72
விரிகின்ற (ஒளிக்)கதிர்களையுடைய
வெள்ளி எழுந்த செறிந்த இருளையுடைய விடியற்காலத்தே
2.
வானம் வெளுக்கின்ற நேரம்.
வான்_கண் விரிந்த விடியல் – மலை 257
வானம் துயிலெழுந்த விடியற்காலத்தே,
3.
பறவைகள் துயில் எழும் நேரம்.
நள்ளிருள் விடியல் புள் எழ போகி – பெரும் 155
செறிந்த இருள் (போகின்ற)விடியற்காலத்தே பறவைகள் துயிலெழ எழுந்து சென்று,
4.
நள்ளிரவுக்கு அடுத்து வரும் காலம்.
காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர் துஞ்சு யாமமும் விடியலும் என்று இ
பொழுது இடை தெரியின் பொய்யே காமம் – குறு 32/1-3
காலையும் பகலும் செயலற்ற மாலையும்
ஊர் உறங்கும் நள்ளிரவும் விடியலும் என்று இந்தப்
பொழுதுகள் இடையே தெரியின் பொய்யானது காமம்

விடிவு

விடிவு – (பெ) துன்பம் நீங்கி இன்பம் வருகை, Approach of good times; dawn of happiness
திருமருத முன்துறை சேர் புனல்-கண் துய்ப்பார்
தாமம் தலை புனை பேஎம் நீர் வையை
நின் பயம் பாடி விடிவு உற்று ஏமாக்க – பரி 7/83-85
திருமருத முன்துறை என்ற பெயர்கொண்ட துறையைச் சேரும் வையை நீரில் குளித்து இன்புறுவாரின்
கழுத்து மாலைகளத் தன் தலைமேல் சூட்டிக்கொள்ளும் அச்சந்தரும் ஆழமான நீரைக்கொண்ட வையையே!
– உன்னால் கிடைக்கும் இன்பமான பயனைப் பாடி, துன்பம் நீங்கப்பெற்று மகிழ்வோமாக!

விடை

விடை – (பெ) 1. எருது, bull
2. ஆட்டுக்கிடா, ram
1.
பல ஆன் பொதுவர் கதழ் விடை கோள் காண்-மார் – கலி 103/5
பல பசுக்களையுடைய இடையர்கள் வேகமுள்ள காளையை அடக்குவதைக் காண்பதற்காக
2.
மட்டு வாய் திறப்பவும் மை விடை வீழ்ப்பவும் – புறம் 113/1
மதுச்சாடியை வாய் திறப்பவும், ஆட்டுக்கிடாயை வீழ்ப்பவும்

விட்டம்

விட்டம் – (பெ) உத்திரம், cross beam
ஒல்கி, இட்டிகை நெடும் சுவர் விட்டம் வீழ்ந்து என – அகம் 167/12,13
தளர்ந்து, செங்கல்லாலான நீண்ட சுவரிலுள்ள உத்திரம் வீழ்ந்ததாக

விண்

விண் – பெ) 1. வானம், sky
2. மேலுலகம், heaven
1.
ஞாயிறு, திங்கள், மீன்கள், மேகங்கள் நடமாடும் இடம்
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து – நெடு 161
விண் வீற்றிருக்கும் கய மீன் விரி தகையின் – பரி 23/12
விண் இவர் விசும்பின் மீனும் – புறம் 302/10
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி – அகம் 294/1

மிக உயரமாக இருக்கும் மலை, கட்டிடமாடம் போன்றவற்றை, ’விண் பொரு’, ’விண் தோய்’, ’விண் உயர்’,
’விண் உற ஓங்கு’ என்று குறிப்பிடுவது உண்டு
விண் பொரு நெடு வரை குறிஞ்சி கிழவ – திரு 267
விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த – திரு 299
விண் பொர நிவந்த வேயா மாடத்து – பெரும் 348
விண் பொரும் சென்னி கிளைஇய காந்தள் – குறி 196
விண் பொரு நெடும் குடை இயல் தேர் மோரியர் – அகம் 69/10
விண் பொரு நெடு நகர் தங்கி இன்றே – அகம் 167/4
விண் பொரு நெடு வரை கவாஅன் – அகம் 173/17
விண் பொரு புகழ் விறல் வஞ்சி – புறம் 11/6
கண் பொர விளங்கும் நின் விண் பொரு வியன் குடை – புறம் 35/19
விண் பொரு நெடும் குடை கொடி தேர் மோரியர் – புறம் 175/6

விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த – பெரும் 369
விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த – குறி 226
விண் தோய் விடர்_அகத்து இயம்பும் – குறு 241/6
விண் தொட நிவந்த விலங்கு மலை கவாஅன் – குறு 262/6
விண் தோய் மா மலை சிலம்பன் – குறு 362/6
விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள் – கலி 39/38
விண் தோய் வரை பந்து எறிந்த அயா வீட – கலி 40/22
விண் தோய் விடர்_அகத்து இயம்பும் அவர் நாட்டு – அகம் 8/12
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 111/15
வீயா விழு புகழ் விண் தோய் வியன் குடை – அகம் 135/11
விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன் – அகம் 179/1
விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன் – புறம் 151/2
விண் தோய் தலைய குன்றம் பிற்பட – புறம் 379/13
விண்டு அனைய விண் தோய் பிறங்கல் – புறம் 391/2

விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே – குறு 144/7
விண் உயர் அரண் பல வௌவிய – ஐங் 443/4
விண் உயர் வைப்பின காடு ஆயின நின் – பதி 23/15
விண் உயர்ந்து ஓங்கிய கடற்றவும் பிறவும் – பதி 30/29
விண் உயர் புள் கொடி விறல் வெய்யொனும் – புறம் 56/6

விண் உற ஓங்கிய பல் படை புரிசை – மது 352
விண் உற ஓங்கிய பனி இரும் குன்றத்து – அகம் 281/10
2.
விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒரு கை – திரு 107,108
விண்ணுலகத்திற்குச் செல்லும் முறைமையினையுடைய துறவிகட்குப் பாதுகாவலாக ஏந்தியது
ஒரு கை

விண்ட

விண்ட – (பெ.அ) 1. மலர்ந்த, blossomed
2. வாய் பிளந்த, with opened mouth
1.
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம் – நற் 238/3
வண்டுகள் கிளறி முறுக்கவிழ்ப்பதனால் மலர்ந்த பிடவ மலர்கள்
2.
விண்ட கட கரி மேகமொடு அதிர – பரி 23/51
பிளிறுகின்ற மதயானை மேகத்தின் முழக்கத்தைப் போல் முழங்க,
– விண்ட – பிளிறிய ;விள்ளுதல் என்னும் வினையடியாகப் பிறந்த பெயரெச்சம், விள்ளுதல் – திறத்தல்
அது வாய்திறத்தல் என்னும் பொருள்பட்டு அதன் காரியமாகிய பிளிற்றொலியை ஈண்டுக் குறித்து நின்றது
என்க.- பொ.வே.சோ.உரை விளக்கம்.

விண்டு

விண்டு – (பெ) மலை, mountain
தென் புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழு நிதி பெறினும் – மது 202,203
தெற்கு நாட்டு இடங்களிலுள்ள மலைகள் நிறையுமளவு
வாணன் எனும் சூரன் வைத்த சீரிய பெரும்செல்வத்தைப் பெற்றாலும்,

விண்ணோர்

விண்ணோர் – (பெ) தேவர், celestials
விண்ணோர் வேள்வி முதல்வன்
விரி கதிர் மணி பூணவற்கு – பரி 5/31,32
அந்த விண்ணவரின் வேள்வியின் முதல்வனான
விரிந்த கதிர்களையுடைய மணிகளைப் பூண்டிருக்கும் இந்திரனுக்கு,

விதலை

விதலை – (பெ) நடுங்குதல், shivering
பனி படு பைதல் விதலை பருவத்து – பரி 11/75
பனி மிகுதலானே குளிரால் நடுங்குதலையுடைய (முன்பனிப்) பருவத்தின்கண்

விதவை

விதவை – (பெ) கூழ், gruel
விழுக்கு நிணம் பெய்த தயிர் கண் விதவை – புறம் 326/10
விழுக்காகிய தசையைப் பெய்து சமைக்கப்பட்ட தயிரோடு கூடிய கூழை

விதி

விதி – (பெ) 1. அமைக்கும் முறை, direction, recipe
2. நியதி, rule
3. காசிபன், kasyapa
1.
விதி ஆற்றான் ஆக்கிய மெய் கலவை போல – பரி 7/20
விதிமுறைகளைக் கடைப்பிடிக்காதவன் செய்த மேனிப் பூச்சுக்குரிய கலவையைப் போல,

அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாள
விதி கூட்டிய இய மென் நடை போல – பரி 10/24,25
அதிரும் குரலையுடைய, இசைவல்லுநர்கள் ஆக்கிய தாள
விதியால் கூட்டப்பட்ட, பல்வேறு இசைக்கருவிகளின் இசையும் மென்மையான நடையில் சென்றாற்போல
2.
ஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே – திரு 94-96
ஒரு முகம்
மந்திர நியதிகளின் மரபுள்ளவற்றில் வழுவாத
அந்தணருடைய வேள்விகளை கூர்ந்து கேட்கும்
3.
திதியின் சிறாரும் விதியின் மக்களும் – பரி 3/6
திதியின் சிறுவர்களாகிய அசுரர்களும், விதியின் மக்களாகிய சூரியன் பன்னிருவரும்,
– பதினொரு பிரமர்களுள் ஒருவனாகிய காசிபன் ஈண்டு விதி எனப்பட்டான்; ஆதித்தர் பன்னிருவர் காசிபன்
மக்கள் என்பது புராணக்கதை – பொ.வே.சோ உரை விளக்கம்.

விதிர்

விதிர் – (வி) 1. சிதறு, scatter
2. துண்டாக்கு, cut into piecces
3. ஊற்று, சொரி, pour
4. தெளி, sprinkle
5. உதறு, shake off
1.
நெய் உடை அடிசில் மெய்பட விதிர்த்தும் – புறம் 188/5
நெய்யை உடைய சோற்றை உடம்பின்கண் படச் சிதறியும்

யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்து அன்ன நின்
ஆக மேனி அம் பசப்பு ஊர – அகம் 333/1,2
யா மரத்தின் ஒள்ளிய தளிரில் அரக்குப்பொடியைச் சிதறினாற் போன்ற, நின்
உடம்பினது மேனியின்கண் அழகிய பசலை பரக்க
2.
நெடு மர கொக்கின் நறு வடி விதிர்த்த
தகை மாண் காடியின் வகைபட பெறுகுவிர் – பெரும் 309,310
நெடிய மரமாகிய மாவின் நறிய வடுவினைத் துண்டாக்கிப்போட்ட,
ஊறவைத்தல் நன்கமைந்த ஊறுகாயோடும் வகை வகையாகப் பெறுவீர்
3.
குருதி விதிர்த்த குவவு சோற்று குன்றோடு – பதி 88/11
இரத்தம் ஊற்றிக் கலந்து குவிக்கப்பட்டிருக்கும் குன்று போன்ற சோற்றுக் குவியலுடன்
4.
விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி
காமர் சேவல் – அகம் 103/3,4
தெளித்தன போலும் அழகிய சிறிய பலவாய புள்ளிகளையுடைய
அழகிய குறும்பூழ் சேவல்

உருக்கு_உறு நறு நெய் பால் விதிர்த்து அன்ன – நற் 21/6
உருக்கிய நறுமணமுள்ள நெய்யில் பாலைத் தெளித்தாற்போல்
5.
புல்_இனத்து ஆயர்_மகன் சூடி வந்தது ஓர்
முல்லை ஒரு காழும் கண்ணியும் மெல்_இயால்
கூந்தலுள் பெய்து முடித்தேன்-மன் தோழி யாய்
வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே
அன்னையும் அத்தனும் இல்லரா யாய் நாண
அன்னை முன் வீழ்ந்தன்று அ பூ
அதனை வினவலும் செய்யாள் சினவலும் செய்யாள்
நெருப்பு கை தொட்டவர் போல விதிர்த்திட்டு
நீங்கி புறங்கடை போயினாள் – கலி 115/4-12
ஆட்டினத்து ஆயர்மகன் சூடி வந்த ஒரு
முல்லைச் சரத்தையும், தலைமாலையையும், மெல்லிய இயல்புடையவளே!
என்னுடைய கூந்தலுக்குள் வைத்து முடிந்திருந்தேன், தோழியே! என் செவிலித்தாய்
என்னுடைய தலைக்கு வெண்ணெய் தடவுவதற்காக என் கூந்தலை விரித்துவிட
என் தாயும், தந்தையும் வீட்டிலே இருக்கும்போது, செவிலித்தாய் பதறிப்போக,
என் தாயின் முன் விழுந்தது அந்தப் பூ;
அதனை ஏன் என்று அவள் கேட்கவுமில்லை, கோபப்படவும் இல்லை,
நெருப்பைக் கையால் தொட்டவர் அக் கையைப் பிதிர்க்குமாறு போலக் கையைப் பிதிர்த்து
வீட்டைவிட்டு நீங்கி வாசலுக்கு வெளியே சென்றாள்
– நச்.உரை.
– விதிர்த்திட்டு – நடுங்கி உதறி – மா.இரா. விளக்கம்.

பருமம் களையா பாய் பரி கலி மா
இரும் சேற்று தெருவின் எறி துளி விதிர்ப்ப – நெடு 179,180
சேணம் களையப்பெறாத பாயும் ஓட்டத்தையுடைய செருக்கின குதிரைகள்
கரிய சேற்றையுடைய தெருவில் (தம்மேலே)வீசும் துளிகளை உடல் குலுக்கி உதற,
6.
ஈர்ம் தண் முழவின் எறி குணில் விதிர்ப்ப
தண் நறும் சாந்தம் கமழும் தோள்மணந்து – அகம் 186/11,12
மிக்க தண்மை வாய்ந்த முழவினைக் குறுந்தடியால் அடிக்கவும்
தண்ணிய நறிய சந்தனம் நாறும் தோளையுடையவளை மணம்புரிந்து

மேலே குறிப்பிட்ட ஐந்து வகையான விதிர்ப்புகளை உற்றுநோக்குங்கால், விதிர்த்தலில் ஒரு விரைவான செயல்
(quick action) தெரிகிறது. எனவே, இங்குக் கூறப்பட்டுள்ள ’எறி குணில் விதிர்ப்ப’ என்பதிலும் ஒரு விரைவான
செயல் இருக்கவேண்டும். இங்குக் குறிப்பிடப்படும் முழவினைத் தடியால் விதிர்ப்பது என்பது, ஒரு மண
நிகழ்வின் போது நடப்பதாகும். ’எறி குணில் விதிர்ப்ப — தோள் மணந்து’என்று வருவதால், தற்காலத்துத்
திருமணங்களில் மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டும்நேரத்தில் எழுப்பப்படும் கெட்டிமேளம் போல்
அன்றைக்கும் விரைவாக முழவு அடிக்கப்படுவதையே பாடலாசிரியர் ‘எறி குணில் விதிர்ப்ப’ என்கிறார் என்று
தோன்றுகிறது.

விதிர்ப்பு

விதிர்ப்பு – (பெ) 1. நடுக்கம், trembling
2. சுழற்றுதல், brandishing
1.
எழில் மாடத்து
கை புனை கிளர் வேங்கை காணிய வெருவு_உற்று
மை புரை மட பிடி மட நல்லார் விதிர்ப்பு உற
செய் தொழில் கொள்ளாது மதி செத்து சிதைதர – பரி 10/45-48
அழகிய அந்த மாடத்தில்
கையால் புனையப்பட்ட பாயும் வேங்கைப் புலியைக் கண்டு, அச்சங்கொண்டு,
மை போன்ற கரிய அந்த இளம் பெண்யானை, அந்த இளைய பெண்கள் நடுக்கமெய்த
பாகரின் அடக்கும் தொழிலுக்கும் அடங்காது, தன் மதி கெட்டுச் சிதைந்து ஓட
2.
ஆற்று அணி வெள் வாள் விதிர்ப்போர் மிளிர் குந்தம் ஏந்துவோர் – பரி 11/50
ஆற்றில் அணிஅணியாக, வெண்மையான வாளைச் சுழற்றுவோரும், ஒளிரும் குத்துவேலை
ஏந்திக்கொண்டிருப்போரும்

விதுப்பு

விதுப்பு – (பெ) 1. நடுக்கம், trembling
2. வேட்கை, desire
3. விரைவு, haste
1.
கார் பெயல் உருமின் பிளிறி சீர் தக
இரும் பிணர் தட கை இரு நிலம் சேர்த்தி
சினம் திகழ் கடாஅம் செருக்கி மரம் கொல்பு
மையல் வேழம் மடங்கலின் எதிர்தர
உய்விடம் அறியேம் ஆகி ஒய்யென
திருந்து கோல் எல் வளை தெழிப்ப நாணு மறந்து
விதுப்புறு மனத்தேம் விரைந்து அவன் பொருந்தி
சூருறு மஞ்ஞையின் நடுங்க – குறி 162-169
கார்காலத்து மழையின் இடி போல முழக்கத்தையுண்டாக்கி, தன் தலைமைக்குத் தக்கதாக
கரிய சொரசொரப்பான பெரிய துதிக்கையை(ச் சுருட்டி) பரந்த நிலத்தே எறிந்து,
கோபம் விளங்கும் மதத்தால் மனம் செருக்கி, மரங்களை முறித்து,
மதக்களிப்புடைய (அக்)களிறு எமனைப்போல் (எமக்கு)எதிரே வருகையினால்,
உயிர்பிழைப்பதற்குரிய இடத்தை (எங்கும்)அறியேமாய், சடுதியாக,
சீரான உருட்சியும் பளபளப்பும் உள்ள வளையல்கள் ஒலிக்குமாறு, வெட்கத்தை விட்டு,
நடுக்கமுற்ற மனத்தினையுடையவராய், விரைந்து (ஓடி)அவனை ஒட்டிநின்று,
தெய்வமகளிரேறின(பேய் பிடித்த) மயிலைப் போல் நடுங்கிநிற்க
2.
குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை
————- ———————- —————–
கொடியோர் சென்ற தேஎத்து மடியாது
இனையை ஆகி செல்-மதி
வினை விதுப்பு உறுநர் உள்ளலும் உண்டே – அகம் 163/9-14
மலையையும் நடுங்கச் செய்வது போன்ற குளிரைக் கொண்டவாடைக் காற்றே
——————– ———————-
கொடியராய என் தலைவர் சென்ற திசையில் அயராது
இதுபோலவே இருந்து செல்வாயாக
பொருளீட்டும் தொழிலில் பெருவேட்கை கொண்டவர் என்னை நினைத்துப்பார்க்கவும் செய்வார்
3.
ஒண் கேழ் வய புலி பாய்ந்து என குவவு அடி
வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ
கன்று ஒழித்து ஓடிய புன் தலை மட பிடி
கை தலை வைத்த மையல் விதுப்பொடு
கெடு மக பெண்டிரின் தேரும் – அகம் 347/11-15
ஒள்ளிய நிறமுடைய வலிய புலி பாய்ந்ததாக, திரண்ட அடியினையும்
வெள்ளிய கொம்பினையுமுடைய களிறு முழக்கிய ஒலியினைக் கேட்டு அஞ்சி
தன் கன்றினைவிட்டு ஓடிய புல்லென்ற தலையினையுடைய இளைய பிடியானை
கையைத் தலைமீது வைத்துக்கொண்ட மயக்கம் தங்கிய விரைவுடன்
தம் மகவினைக் காணாதொழிந்த பெண்டிர் போல அக் கன்றினைத் தேடித்திரியும்

விதும்பு

விதும்பு – (பெ) விரைவு, haste
வானோர்
அரும்_பெறல்_உலகத்து ஆன்றவர்
விதும்பு_உறு விருப்பொடு விருந்து எதிர்கொளற்கே – புறம் 213/22-24
விண்ணோரது பெறுதற்கரிய உலகத்தின்கண் அமைந்தவர்
விரைந்த விருப்பத்தோடு விருந்தாக ஏற்றுக்கொள்ள

வித்தகம்

வித்தகம் – (பெ) திறமை, சாமர்த்தியம், ability, skill
வித்தக தும்பை விளைத்தலான் வென் வேலாற்கு
ஒத்தன்று தண் பரங்குன்று – பரி 9/68,69
திறமையோடு போரிட்டு வெற்றியை விளைத்ததால் வெற்றியையுடைய வேலவனுக்குப்
பெரிதும் பொருந்துவதாயிற்று தண்ணிய பரங்குன்றம்;

வித்தகர்

வித்தகர் – (பெ) வல்லவர், skilfuls, able persons
அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாள
விதி கூட்டிய இய மென் நடை போல – பரி 10/24,25
அதிரும் குரலையுடைய, இசைவல்லுநர்கள் ஆக்கிய தாள
விதியால் கூட்டப்பட்ட, பல்வேறு இசைக்கருவிகளின் இசையும் மென்மையான நடையில் சென்றாற்போல

வித்தம்

வித்தம் – (பெ) சூதாட்டத்தில் அல்லது தாய ஆட்டத்தில் ஓர் எறியில் விழும் எண், A cast in dice play
முத்து உறழ் மணல் எக்கர் அளித்த_கால் முன் ஆயம்
பத்து உருவம் பெற்றவன் மனம் போல நந்தியாள்
அ திறத்து நீ நீங்க அணி வாடி அ ஆயம்
வித்தத்தால் தோற்றான் போல் வெய் துயர் உழப்பவோ – கலி 136/5-8
முத்துப்போன்ற வெண்மணலில் நீ இவளிடம் அன்புசெய்தபோது, சூதாட்டத்தில் முதல் உருட்டில்
பத்து எண்ணிக்கையைப் பெற்றவன் மனத்தைப் போல் மகிழ்ந்து சிறந்தவள்
அவ்வாறு அன்புசெய்வதிலிருந்து நீ விலகிப்போக, தன் அழகெல்லாம் வாடிப்போய், அந்த உருட்டில்
சிறிய எண்ணிக்கையைப் பெற்றுத் தோற்றவனைப் போலக் கொடும் துயரில் வருந்தமாட்டாளோ?

நறு வீ தாழ் புன்னை கீழ் நயந்து நீ அளித்த_கால்
மறு_வித்தம் இட்டவன் மனம் போல நந்தியாள்
அறிவித்து நீ நீங்க கருதியாய்க்கு அ பொருள்
சிறு_வித்தம் இட்டான் போல் செறி துயர் உழப்பவோ – 136/13-16
நறிய மலர்கள் உதிர்ந்துகிடக்கும் புன்னை மரத்தின் கீழ் விருப்பத்துடன் நீ இவளிடம் அன்புசெய்தபோது
மறுதாயம் கிட்டியவன் மனத்தைப் போல மகிழ்ந்து சிறந்தவள்,
பிரிந்து போவேன் என்று அறிவித்து நீ பிரியக் கருதிய உன் பொருட்டாய்
பெரிய எண் பெறவேண்டிய இடத்தில் சிறிய தாயம் இட்டவனைப் போல் மிகுந்த துயரில் வருந்தமாட்டாளோ?
– முன் ஆயம், முதலிலே இடப்படும் தாயம். தாயம் என்பது சூதாட்டத்தில் காயைப் புகுத்தற்கு வேண்டிய எண்.
– நச்.உரை, பெ.விளக்கம்

வித்தாயம்

வித்தாயம் – (பெ) சிறுதாயம், a small number in the cast of dice
முட தாழை முடுக்கருள் அளித்த_கால் வித்தாயம்
இடை தங்க கண்டவன் மனம் போல நந்தியாள்
கொடை தக்காய் நீ ஆயின் நெறி அல்லா கதி ஓடி
உடை பொதி இழந்தான் போல் உறு துயர் உழப்பவோ – கலி 136/9-12
வளைந்து கிடக்கும் தாழையின் குறுகிய வெளியில் நீ இவளிடம் அன்புசெய்தபோது, சிறு தாயம் வேண்ட
உருட்டும்போது அதனையே கிடைக்கக் கண்டவனின் மனத்தைப் போல மகிழ்ந்து சிறந்தவள்,
கொடுப்பதில் சிறந்தவனே! நீ பிரிய எண்ணினால், சிறு தாயம் வேண்டியபோது பெரும் எண்ணிக்கை பெற்று
கட்டிவைத்த பந்தயப் பொருளை இழந்தவனைப் போலப் பெரும் துயரில் வருந்தமாட்டாளோ?
வித்தம் – சிறுதொகை, ஆயம் – தாயம் – மா.இரா. உரை விளக்கம்

வித்து

வித்து – 1. (வி) விதை, sow
– 2. (பெ) விதை, seed
1.
அருவி பரப்பின் ஐவனம் வித்தி
பரு இலை குளவியொடு பசு மரல் கட்கும் – குறு 100/1,2
அருவி விழும் பரந்த நிலத்தில் மலைநெல்லை விதைத்து
பெரிய இலைகளைக் கொண்ட மலைமல்லிகையொடு பசிய மரல் கொடியைக் களையெடுக்கும்
2.
வீழ் குடி உழவன் வித்து உண்டு ஆங்கு – புறம் 230/13
தளர்ந்த குடியையுடைய உழவன் விதையை உண்டாற்போல

வினவல்

வினவல் – 1. (எ.வி.மு) கேட்கவேண்டாம், do not enquire
– 2. (பெ) கேட்டல், asking
1.
செல் இனி சென்று நீ செய்யும் வினை முற்றி
அன்பு அற மாறி யாம் உள்ள துறந்தவள்
பண்பும் அறிதிரோ என்று வருவாரை
என் திறம் யாதும் வினவல் வினவின்
பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய
தவல் அரும் செய்_வினை முற்றாமல் ஆண்டு ஓர்
அவலம் படுதலும் உண்டு – கலி 19/7-13
போ, இப்போது போய் நீ மேற்கொள்ளும் பொருளீட்டும் தொழில் முடியுந்தறுவாயில்
அன்பு அற்றுப்போகுமாறு மாறுபட்டு, நான் வேண்டுமென்றே பிரிந்துவந்த என் மனைவி
எப்படி இருக்கிறாள் என்று தெரியுமா? என்று இங்கிருந்து அங்கு வருவாரிடம்
என்னுடைய நிலைமை பற்றி ஒன்றும் கேட்கவேண்டாம்; அப்படிக் கேட்டால்,
ஞாயிற்றைப் போல விளங்கும் உன் தலைமைச் சிறப்பெல்லாம் அழிந்துபோகுமாறு
உன்னுடைய குற்றமற்ற அருமையான பணிகள் முற்றுப்பெறாமல், அங்கு ஓர்
அவலநிலை உருவாகக் கூடும்
2.
மாவின் நறு வடி போல காண்-தொறும்
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண்
நினையாது கழிந்த வைகல் எனையதூஉம்
வாழலென் யான் என தேற்றி பல் மாண்
தாழ கூறிய தகை சால் நன் மொழி
மறந்தனிர் போறிர் எம் என சிறந்த நின்
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க
வினவல் ஆனா புனை_இழை கேள் இனி – அகம் 29/7-14
மாவின் நறும் பிஞ்சு போல, காணுந்தோறும்
ஆசை குறையாத மகிழ்ந்த நோக்கினை உடைய மைதீட்டிய கண்களை
நினையாது கழிந்த நாளில் சிறிதுநேரங்கூட
வாழமாட்டேன் நான்’ – என்று ஆறுதல் கூறி பல்வேறு மாண்புகளும்
தாழ்ந்துபோகும்படி கூறிய உயர்வான நல்ல சொற்களை
மறந்துவிட்டீர் போலத் தோன்றுகிறீர் எனக்கு” எனச் சிறந்த உனது
பற்கள் சிறந்து விளங்கும் பவள வாயில் இனிய புன்னகை கெடும்படியாக
வினவுதல் நீங்காத, அழகிய அணிகளை உடையவளே! கேட்பாயாக, இப்போது

வினவு

வினவு – (வி) 1. கேள்விகேள், ask
2. விசாரி, enquire
3. சொல்வதைக் கேள், செவிமடு, listen to, pay attention to
1.
நும் கோ யார் என வினவின் எம் கோ
இரு முந்நீர் துருத்தியுள்
முரணியோர் தலைச்சென்று
கடம்பு முதல் தடிந்த கடும் சின முன்பின்
நெடுஞ்சேரலாதன் வாழ்க அவன் கண்ணி – பதி 20/1-5
உம்முடைய அரசன் யார் என்று கேட்பீராயின், எமது அரசன்
கரிய கடலிலுள்ள தீவினுள் வாழ்ந்த,
அவனுடன் முரண்பட்டோரை எதிர்த்துச் சென்று,
அவரின் காவல் மரமான கடம்பினை அடியோடு வெட்டிச் சாய்த்த மிக்க சினமும், வலிமையும் கொண்ட
நெடுஞ்சேரலாதன் ஆவான்; வாழ்க அவன் சூடியிருக்கும் தலைமாலை
2.
அகல் வயல் படப்பை அவன் ஊர் வினவி
சென்மோ வாழி தோழி – நற் 365/4,5
அகன்ற வயல்களையும் தோட்டங்களையும் உடைய அவனது ஊருக்கு வழிகேட்டுப்
போவோமா? வாழ்க, தோழியே!
3.
புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு
புக்க_வழி எல்லாம் கூறு
கூறுவேன் மேயாயே போல வினவி வழிமுறை
காயாமை வேண்டுவல் யான் – கலி 82/4-7
தேவர்களின் கோவிலை வலம்வந்து பின்னர் என் மகனாகிய இவனோடு
நீ சென்ற இடங்களையெல்லாம் சொல்வாயாக;
சொல்கிறேன், விரும்பிக்கேட்பது போல் கேட்டு அதன் பின்னே
வெகுளாதிருக்க வேண்டுகிறேன் நான்

வினா

வினா – 1. (வி) பார்க்க :வினவு
2. (பெ) கேள்வி, question
1.
சேரியால் சென்று நீ சேர்ந்த இல் வினாயினன்
தேரொடு திரிதரும் பாகனை பழிப்பேமோ – கலி 68/16,17
சேரிதோறும் சென்று நீ இருக்கும் வீட்டைக் கேட்டறிந்துகொள்பவனாய்த்
தேரோடு சுற்றித்திரியும் பாகனையே பழிப்போமா?

ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய்
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்
பரவியும் தொழுதும் விரவு மலர் தூயும் – குறி 2-5
செழித்து வளர்ந்த மென்மையான கூந்தலையும் உடைய என்னுடைய தோழியின் உடம்பிலுள்ள
தனிச்சிறப்புக் கொண்ட நகைகள் கழன்று விழப்பண்ணின, குணப்படுத்த முடியாத கொடிய நோய்(பற்றி)
அகன்ற உட்புறங்களையுடைய ஊரில் (அந் நோய்பற்றி)அறிந்தோரைக் கேட்டும்,
(கடவுளரை)வாயால் வாழ்த்தியும், வணங்கியும், பலவித பூக்களைத் தூவியும்,
2.
விரகியர் வினவ வினா இறுப்போரும் – பரி 19/49
காமவயப்பட்டிருப்போர் கேள்விகேட்க, அந்தக் கேள்விகளுக்கு விடையிறுப்போரும்

வினாய

வினாய – (வி.எ) வினவிய, கேட்ட, asked
கண்ட பொழுதே கடவரை போல நீ
பண்டம் வினாய படிற்றால் தொடீஇய நின்
கொண்டது எவன் எல்லா யான் – கலி 108/22-24
கடன்வாங்கியவரைக் கண்டபொழுதே, கடன் கொடுத்தவர்
தான் கொடுத்த பொருளைப் பற்றிக் கேட்கத்தொடங்குவது போல நீ கேட்கும்படியாக உன்னிடம்
நான் வாங்கிய கடன்தான் என்ன, ஏடா!

வினாய்

வினாய் – (வி.எ) வினவி, asking for, enquiring
மாசு அற மண்_உற்ற மணி ஏசும் இரும் கூந்தல்
வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்-மன்
நோய் சேர்ந்த திறம் பண்ணி நின் பாணன் எம் மனை
நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின் – கலி 77/16-19
மாசறக் கழுவப்பட்ட நீல மணியையே ஏளனம்செய்யும் கரிய கூந்தல்
பூ அணிந்து வண்டுகள் ஆரவாரிக்கும் அழகைப் பெறுவதை விரும்பமாட்டேன்,
சோகப் பாட்டை இசைத்துக்கொண்டு உன் பாணன், என் வீட்டுக்கு
நீ போன பரத்தையர் வீட்டைப்பற்றி வினவிக்கொண்டு வராமலிருப்பதைப் பெறுவேனாயி
– நீ சேர்ந்த இல் வினாய்- நீ சென்றிருக்கின்ற பரத்தையர் வீடு யாது என வினவி – நச்.உரை, பெ.விளக்கம்

செரு செய் யானை செல் நெறி வினாஅய் – அகம் 82/12
தன்னால் அம்பு எய்யப்பெற்ற யானை சென்ற நெறியினை வினவி

வினை

வினை – (பெ) 1. செயல், தொழில், Act, action, deed, work
2. தொழில்திறம், வேலைப்பாடு, கைத்தொழில்,
workmanship, craftmanship, Efficiency or skill, as in an art or craft
3. போர், war
4. மேற்கொண்ட செயல், work on hand
5. இப்பிறப்பில் இன்ப,துன்பங்களுக்குக் காரணமான முற்பிறப்பில் செய்த செயல்,
நல்வினை தீவினை என இருவகைப்பட்ட பூர்வகருமம்,
Karma, as the accumulated result of deeds done in former births
1.
முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறி
கண்டனம் வருகம் சென்மோ தோழி
எல் ஊர் சேர்தரும் ஏறு உடை இனத்து
புல் ஆர் நல் ஆன் பூண் மணி-கொல்லோ
செய் .வினை முடித்த செம்மல் உள்ளமொடு
வல் வில் இளையர் பக்கம் போற்ற
ஈர் மணல் காட்டாறு வரூஉம்
தேர் மணி-கொல் ஆண்டு இயம்பிய உளவே – குறு 275
முலை படர்ந்த கல்லின் மேலாக ஏறி நின்று
கண்டு வருவோம், செல்வோம் தோழி!
மாலையில் ஊர்வந்து சேரும் காளையையுடைய பசுவினங்களின்
புல்லை உண்ட நல்ல பசுக்கள் பூண்டிருக்கும் மணியோசையோ?
செய்யக் கருதிய கருமத்தை முடித்த மனநிறைவான உள்ளத்தோடு
வலிய வில்லையுடைய இளைஞர்கள் தன் இருபக்கமும் பாதுகாக்க,
ஈரமான மணலையுடைய காட்டாற்றுப்பக்கம் வரும்
தேரின் மணியோசையோ? அங்கு ஒலிப்பனவாக உள்ளவற்றை
2.
யவனர் இயற்றிய வினை மாண் பாவை – நெடு 101
யவனர் பண்ணின தொழில் மாட்சிமைப்பட்ட பாவை
– வினை மாண் பாவை – தொழில் திறத்தால் மாட்சிமைப்பட்ட பாவை
3.
தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
வருதல் தலைவர் வாய்வது – முல் 18-20
பகைவர்
மண்ணை வெற்றிகொண்டு பெற்ற திறையினையுடையோராய், (தமது)போர்வினையை முடித்து
வருவது (நம்)தலைவர்க்கு நேர்வது (உறுதி),

ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை – நெடு 169
நெற்றிப்பட்டத்தோடு பொலிவு பெற்ற போர்த்தொழிலைப் பயின்ற யானையின்
4.
வினை இவண் முடித்தனம் ஆயின் வல் விரைந்து
எழு இனி வாழிய நெஞ்சே – அகம் 47/2,3
இவ்விடத்தில் வந்த வேலையை முடித்தோமென்றால், மிகவும் விரைவாக
எழுவாயாக, நெஞ்சே நீ வாழ்வாயாக
5.
கிழவர் இன்னோர் என்னாது பொருள் தான்
பழ வினை மருங்கின் பெயர்பு பெயர்பு உறையும் – கலி 21/10,11
தமக்குரியவர் இவர்தான் என்றுகொள்ளாமல், செல்வமானது
அவரவரின் பழைய நல்வினை, தீவினைகளையொட்டி ஆள்விட்டு ஆள் மாறிச் சென்று தங்கியிருக்கும்

வினைஇ

வினைஇ – (வி.எ) வினாவி, enqiring
இரும் கலி யாணர் எம் சிறுகுடி தோன்றின்
வல் எதிர் கொண்டு மெல்லிதின் வினைஇ
துறையும் மான்றன்று பொழுதே சுறவும்
ஓதம் மல்கலின் மாறு ஆயினவே
எல்லின்று தோன்றல் செல்லாதீம் என – அகம் 300/14-18
மிக்க ஆரவாரமுடைய அழகிய எமது சீறூரின்கண் வரின்
விரைய எதிர்கொண்டு அழைத்து மெல்லென விசாரித்து
நீர்த்துறையும், பொழுது மயங்கிவிட்டது, சுறாக்களும்
அலைபெருகி ஏறலின் பகையாகின
இருண்டுவிட்டது, தலைவனே! செல்லற்க என்று

வினைஞர்

வினைஞர் – (பெ) தொழில்வல்லோர், Workers; artisans, artificers
கரும் தொழில் வினைஞர் கைவினை முற்றி
ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடை பாகரொடு – சிறு 257,258
வன் தொழில் செய்யும் தச்சரின் செயல்திறம் நிறைந்து,
ஏறிப் பார்த்து (நல்லதெனக்கண்ட)பெயர்பெற்ற, அழகிய நடையை உடைய தேரோடு

கார் ஏறு பொருத கண் அகன் செறுவின்
உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர்
முடி நாறு அழுத்திய நெடு நீர் செறுவில் – பெரும் 210-212
கரிய ஆனேறுகள் பொருத இடமகன்ற வயல்களில்,
(தம்மால்)உழப்படாத (அந்த)நுண்ணிய சேற்றை(க் காலால் சமப்படுத்திய)உழவர்
முடி(யாக வீசிய)நாற்றை அழுத்தி நட்ட நீண்டநாள் நிற்கும் நீரையுடைய வயலில்

நனம் தலை வினைஞர் கலம் கொண்டு மறுக – மது 539
அகன்ற இடத்தையுடைய (பிறநாட்டு)வணிகர் (இங்குச் செய்த)அணிகலன்களை (வாங்கி)எடுத்துச்செல்ல,

நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும்
மீன் முதிர் இலஞ்சி – அகம் 186/2,3
வலிய தூண்டிற்கயிற்றினையுடைய மீன்பிடிப்போர், மீன் இரை கோத்த முள்ளினைப் பற்றியதை உணர்ந்து
இழுக்கும்
மீன் மிக்க நீர்நிலையில்

ஓவியர்கள் கண்ணுள்வினைஞர் எனப்படுகிறார்.

எ வகை செய்தியும் உவமம் காட்டி
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்
கண்ணுள் வினைஞரும் பிறரும் கூடி – மது 516-518
பல வகைப்பட்ட தொழில்களையும் ஒப்புக்காட்டிக்
கூரிதாக உணர்ந்த கூரிய அறிவினையுடைய
ஓவியரும், பிறரும் கூடி

வினைவர்

வினைவர் – (பெ) தொழில்செய்வோர், professionalist
வலி மிகு வெகுளியான் வாள்_உற்ற மன்னரை
நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல் மறிதரும் – கலி 46/7,8
வலி மிகும் சினத்தால் வாளை உருவிக்கொண்டு நின்ற மன்னர்களைச்
சமாதானம் செய்யும் வழியை நாடி அவர்களை நண்பர்களாக்க முயலும் சான்றோர் போல மாறி மாறித் திரியும்,

பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு
மதி மொழி இடல் மாலை வினைவர் போல் – கலி 68/1,2
இந்த உலகம் பொதுவானது என்ற பேச்சே பிறர்க்கு இல்லாமல் உலக முழுதும் ஆளும் மா மன்னர்க்கு
அறிவு நிறைந்த அறவுரைகள் கூறும் இயல்புள்ள அமைச்சர்கள் போல,

அலவு_உற்று குடி கூவ ஆறு இன்றி பொருள் வெஃகி
கொலை அஞ்சா வினைவரால் கோல் கோடியவன் நிழல்
உலகு போல் உலறிய உயர் மர வெம் சுரம் – கலி 10/5-7
வருத்தமுற்றுக் குடிமக்கள் கூக்குரலிட, அறநெறி கெட்டுப் பொருளின்மேல் ஆசைகொண்டு,
கொலைக்கு அஞ்சாத கொடிய அமைச்சரால் தனது நல்லாட்சியில் பிறழ்ந்த அரசனின் ஆட்சியின் கீழ் வாழும்
நாட்டு மக்களின் உள்ளங்களைப் போல் வற்றிக் காய்ந்துபோன உயர்ந்த மரங்களைக் கொண்ட கொடிய பாலை
வழியில்

கைவல் வினைவன் தையுபு சொரிந்த
சுரிதக உருவின ஆகி – நற் 86/5,6
கைவேலைப்பாட்டில் வல்லவனான கம்மியன் மணிகளைக் கோத்துச் செய்த
சுரிதகம் என்னும் அணியைப் போன்ற உருவத்தைக்கொண்டனவாகி

விம்மு

விம்மு – (வி) தேம்பியழு, heave a sob, as a child
இல் எழு வயலை ஈற்று ஆ தின்று என
பந்து நிலத்து எறிந்து பாவை நீக்கி
அம் வயிறு அலைத்த என் செய்வினை குறு_மகள்
மான் அமர்ப்பு அன்ன மையல் நோக்கமொடு
யானும் தாயும் மடுப்ப தேனொடு
தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி
நெருநலும் அனையள்-மன்னே இன்றே
மை அணல் காளை பொய் புகல் ஆக
அரும் சுரம் இறந்தனள் என்ப – நற் 179/1–9
வீட்டில் முளைத்தெழுந்த வயலைக்கொடியை ஈற்றுப்பசு தின்றுவிட
தான் விளையாடும் பந்தை நிலத்தில் எறிந்து, விளையாட்டுப்பொம்மையைத் தூக்கிப்போட்டுத்
தன் அழகிய வயிற்றில் அடித்துக்கொண்ட என் காரியக்காரியான சிறுமகள்,
மானின் மருண்ட பார்வையைப் போன்ற தன் மயக்கந்தரும் பார்வையோடு
நானும் தாயும் ஊட்டிவிட தேன்கலந்த
இனிய பாலை அருந்தாமல், ஏக்கங்கொண்டு விம்மி அழுதுகொண்டு
நேற்றைக்குக்கூட அவ்வாறே இருந்தாள்; இன்றோ,
கரிய மீசையும் தாடியையுமுடைய காளையொருவனின் பொய்மொழிகளை ஆதரவாகக் கொண்டு
கடப்பதற்கரிய பாலைவழியில் சென்றுவிட்டாள் என்கின்றனர்,
விம்மு_உறு கிளவியள் என் முகம் நோக்கி – நற் 33/10

விய

விய – (வி) 1. அதிசயி, ஆச்சரியப்படு, wonder
2. நன்கு மதி, esteem, admire
1.
வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே – புறம் 217/9
வியக்குந்தோறும் வியக்குந்தோறும் வியப்பு கைம்மிக்கது
2.
மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே – புறம் 192/11-13
நன்மையான்
மிக்கவரை பெரிதும் மதித்தலும் இலம்
சிறியோரைப் பழித்தல் அம் மதித்தலினும் இலம்

வியங்கொள்

வியங்கொள் – (வி) பார்க்க : வியம்கொள்
நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி
நின் குறி வந்தனென் இயல் தேர் கொண்க
செல்கம் செல வியங்கொண்மோ அல்கலும்
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும் என் மகள் நுதலே – குறு 114
நெய்தல் மணற்பரப்பில் எனது பாவையைக் கிடத்திவிட்டு
உனது குறிப்பிட்ட இடத்துக்கு வந்தேன், நன்கு செய்த தேரையுடைய தலைவனே!
அங்குப் போகின்றேன்; செல்ல நீ விடுப்பாயாக; இரவு வருவதால்
ஆரல் மீனைத் தின்று நிறைந்த வயிற்றையுடைய
நாரை மிதித்துவிடும் என் பாவையின் நெற்றியை.

வியன்

வியன் – (பெ) பார்க்க : வியல்
நெடு நீர துறை கலங்க
மூழ்த்து இறுத்த வியன் தானையொடு – பதி 33/4,5
ஆழமான நீரையுடைய குளங்களின் துறைகள் கலங்குமாறு
அதனை மூழ்கடிப்பதுபோல் தங்கிய பெரும் படையோடு

விரி கடல் வியன் தானையொடு – மது 180
விரிந்த கடலைப் போன்ற அகற்சியையுடைய படையுடன்

வியமம்

வியமம் – (பெ) வியத்தற்குரியது, பாராட்டத்தக்கது, That which is worthy of admiration
வியமமே வாழி குதிரை – கலி 96/31
இக் குதிரை பெரிதும் வியப்பே, நீ வாழ்வாயாக
விய என்னும் உரிச்சொல் முதனிலையாகப் பிறந்து வியமம் எனப் பெயர்பட நின்றது.அம் அசை. இனி விஷமம்
என்னும் வடமொழி என்பாரும் உளர்.
– நச். உரை, விளக்கம்.

வியம்கொள்

வியம்கொள் – (வி) 1. ஏவு, order, command, ஏவலை மேற்கொள், obey the command
2. வழிவிடு, வழியேசெல், give way, go by the way
1,2
நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி
நின் குறி வந்தனென் இயல் தேர் கொண்க
செல்கம் செல வியங்கொண்மோ அல்கலும்
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும் என் மகள் நுதலே – குறு 114
நெய்தல் மணற்பரப்பில் எனது பாவையைக் கிடத்திவிட்டு
உனது குறிப்பிட்ட இடத்துக்கு வந்தேன், நன்கு செய்த தேரையுடைய தலைவனே!
அங்குப் போகின்றோம்; அவளைப் போகும்படி நீயே ஏவுவாயாக; இரவு வருவதால்
ஆரல் மீனைத் தின்று நிறைந்த வயிற்றையுடைய
நாரை மிதித்துவிடும் என் பாவையின் நெற்றியை
– வியங்கொள்ளல் – ஏவலை மேற்கொள்ளல் – உ.வே.சா உரை விளக்கம்

செல வியங்கொண்மோ – செல்ல நீ விடுப்பாயாக – வியங்கொள்ளல் – விடுத்தல் – செல்ல விடு என்றவாறு –
பொ.வே.சோ. உரை, விளக்கம்.

செலவியம் – செல்லவிடுதல் – ச.வே.சு.உரை விளக்கம்.

நிலம் தப இடூஉம் ஏணி புலம் படர்ந்து
படு கண் முரசம் நடுவண் சிலைப்ப
தோமர வலத்தர் நாமம் செய்ம்-மார்
ஏவல் வியம்கொண்டு இளையரொடு எழுதரும்
ஒல்லார் யானை காணின்
நில்லா தானை இறை கிழவோயே – பதி 54/12-17
எதிர்ப்பாரின் நிலப்பகுதி குறைவுபடும்படி அமைக்கப்பட்ட, அவரின் எல்லைக்குட்பட்ட நிலத்துப்பாசறையில் தங்கி,
ஒலிக்கின்ற முகப்பையுடைய முரசம் பாசறையின் நடுவில் முழங்க,
வலக்கையில் தண்டினை ஏந்தியவராய், போரினைச் செய்வதற்காக,
முரசின் ஏவலை மேற்கொண்டு இளைய வீரருடன் நிற்கின்ற,
உன்னுடன் உடன்படாதோரின் யானைப் படையைக் கண்டால்,
நில்லாமல் சென்று தாக்கும் சேனைகளையுடைய அரசுரிமை உடையவனே!
2.
படியோர் தேய்த்த பணிவு இல் ஆண்மை
கொடியோள் கணவன் படர்ந்திகும் எனினே
தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ
ஓம்புநர் அல்லது உடற்றுநர் இல்லை
ஆங்கு வியம்கொள்-மின் அது அதன் பண்பே – மலை 423-427
‘தனக்குப் படியாதாரை அழித்த (யாருக்கும்)அடங்குதல் இல்லாத ஆளுமையுள்ளவனும்,
(பூங்)கொடிபோன்றவளின் கணவனும் ஆகிய (நன்னனிடம்) செல்கின்றோம்’ என்று சொன்னால்,
தசைகளையும் கிழங்குகளையும் இறையாகப்பெற்றவராய் (அவற்றை உமக்குக்)கொடுத்து,
(உம்மைப்)பேணுபவர் அன்றி, வருத்துபவர்கள் இல்லை;
(பின்னர்)அங்கே (அவர்)போகச்சொன்ன வழியைக் கொள்வீர் – அதுவே அக்காட்டின் தன்மையாம்

கண்டல் வேலி கழி சூழ் படப்பை
தெண் கடல் நாட்டு செல்வென் யான் என
வியம்கொண்டு ஏகினை ஆயின் – நற் 363/1-3
கண்டல் மரங்களால் ஆன வேலியும், கழி சூழ்ந்துகிடக்கும் கொல்லையையுமுடைய
தெளிந்த கடலையுடைய நாட்டுக்குச் செல்வேன் யான் என்று
வழியினை மேற்கொண்டு போவாயாயின்

சொல் அறியா பேதை மடவை மற்று எல்லா
நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல் அகலும் நீடு இன்று
நினக்கு வருவதா காண்பாய் அனைத்து ஆக
சொல்லிய சொல்லும் வியம்கொள கூறு – கலி 114/8-11
தன்னுடைய விருப்பத்தைப் பற்றி ஒரு சொல்லும் சொல்லாத பேதையிடம், இளம்பெண்ணே! ‘ஏடா!
இந்தத் திருமணம் உனக்கில்லாமல் உன் கையைவிட்டுப்போகும், அதற்கும் நெடுநாள் இல்லை,
அந்த மணம் உனக்கே வரவேண்டுமென்று உறுதியாய் எண்ணுவாய்’, என்று இவ்வாறாக
நீ சொல்லிய சொல்லும் உன் ஏவலை அவன் மனம் ஏற்றுக்கொள்ளும்படி சொல்;
– வியங்கொளக்கூறுதலாவது – ஏவியதனைக் கேட்டாங்கு உடனே செய்யுமாறு திறம்படக் கூறுதல் என்க.
– நச்.உரை- பெ.விளக்கம்.

வியம் என்ற பெயர்ச்சொல்லுக்கு (1) ஏவல், கட்டளை order, command (2) வழி, way, course என்ற இரண்டு
பொருள் உள்ளதாக அகராதிகள் குறிப்பிடுகின்றன. சங்க இலக்கியத்தில் வியம் என்ற சொல் கொள் என்ற
வினையுடன், வியம்கொள் (வியங்கொள்) என்றே சேர்த்து ஒரே தொடராகவே வரக் காண்கிறோம்.

வியர்

வியர் – 1. (வி) உடலில் வியர்வை தோன்று, sweat, perspire
– 2. (பெ) வியர்வை, sweat, perspiration
1.
பெயர்த்தனென் முயங்க யான் வியர்த்தனென் என்றனள் – குறு 84/1
முதுகோடு பெயர்த்தெடுத்துத் தழுவினேன், எனக்கு வியர்க்கிறது என்றாள்,
2.
மெய்யது வியரே மிடற்றது பசும் புண் – புறம் 100/2
உடம்பின்கண்னது வேர்ப்பு, மிடற்றின்கண்ணது ஈரம் புலராத பசிய புண்

வியர்ப்பு

வியர்ப்பு – (பெ) வியர், வியர்வை, perspiration, sweat
வெய்து உண்ட வியர்ப்பு அல்லது
செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை – புறம் 386/7,8
உண்பனவற்றைச் சுடச்சுட உண்டு வியர்த்தலை அன்றி
தொழில்செய்து மெய்வருந்தி வியர்வை கொள்ளாவண்ணம்

வியலுள்

வியலுள் – (பெ) அகன்ற இடம், wide open space
முழவு துயில் அறியா வியலுள் ஆங்கண் – மலை 350
முரசுகள் தூக்கம்(=ஓய்வு) அறியாத அகன்ற ஊரினில்(கொண்டாடும்)

விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்
கோடியர் முழவின் முன்னர் ஆடல்
வல்லான் அல்லன் வாழ்க அவன் கண்ணி – பதி 56/1-3
விழா நடைபெறுகின்ற அகன்ற உள்ளிடத்தைக் கொண்ட ஊரில்
கூத்தரின் முழவுக்கு முன்னால் ஆடுவதில்
வல்லவன் அல்லன்; வாழ்க! அவன் தலைமாலை!

வியலூர்

வியலூர் -(பெ) சங்க கால நன்னன் என்பானின் ஊர், a city belonging to the sangam chieftain nannan
நறவு மகிழ் இருக்கை நன்னன் வேள்மான்
வயலை வேலி வியலூர் அன்ன நின்
அலர் முலை ஆகம் புலம்ப – அகம் 97/12-14
கள்ளுண்டு மகிழும் இருக்கையினையுடைய நன்னன் வேண்மானது
வயலைக்கொடி சூழ்ந்த வியலூரினை ஒத்த நினது
பரந்த முலையையுடைய மார்பகம் தனித்து வருந்த

வியல்

வியல் – (பெ) 1. பெருமை, greatness
2. அகலம், பரப்பு, width, extension
3. மிகுதி, abindance
1.
வியல் மலர் அகன் பொழில் ஈம தாழி – புறம் 256/5
பெரிய பரப்பினையுடைய அகலிய பூமியிடத்துக் காட்டின்கண் முதுமக்கள்தாழியை
2.
விழவு நின்ற வியல் மறுகின் – மது 328
விழாக்கோலம் நிலைபெற்ற அகன்ற தெருவினையும்,

அகல் நகர் வியல் முற்றத்து – பட் 20
அகன்ற மனையின் பரந்த முற்றத்தில்
3.
வெம் சின வேந்தன் வியன் பெரும் பாசறை – அகம் 364/10
கொடிய சினத்தினையுடைய அரசனது மிகப்பெரிய பாசறைக்கண்ணே

விரகியர்

விரகியர் – (பெ) காமவயப்பட்டோர், those who long for sexual love
விரகியர் வினவ வினா இறுப்போரும் – பரி 19/49
காமவயப்பட்டிருப்போர் எழுப்பிய வினாக்களுக்கு விடையிறுப்போரும்,

விரகு

விரகு – (பெ) 1. உபாயம், expedient
2. தின்பண்டம், confectionery
3. பயன், use
4. விவேகம், discretion
1.
அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர்
சாறு கழி வழி நாள் சோறு நசையுறாது
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந – பொரு 1-3
இடையறாத (செல்வ)வருவாயினையுடைய அகன்ற இடத்தையுடைய பெரிய ஊர்களிடத்து,
விழாக்கழிந்த அடுத்தநாளில், (அங்குப்பெறுகின்ற)சோற்றை விரும்புதல் செய்யாது,
வேற்றுப்புலத்தை எய்த நினைத்த உபாயத்தை அறிந்த பொருநனே
2.
வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ – பொரு 108
வெவ்வேறான பல வடிவினையுடைய தின்பண்டங்களைக் கொணர்ந்து (எங்களை)இருத்தி
– உபாயங்களாற் பண்ணுதலால் விரகு என்றார், ஆகுபெயர்
3.
நெய்யும் குய்யும் ஆடி மெய்யொடு
மாசு பட்டன்றே கலிங்கமும் தோளும்
திதலை மென் முலை தீம் பால் பிலிற்ற
புதல்வன் புல்லி புனிறு நாறும்மே
வால் இழை மகளிர் சேரி தோன்றும்
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம் அதனால்
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ்
எழாஅல் வல்லை ஆயினும் தொழாஅல்
கொண்டு செல் பாண நின் தண் துறை ஊரனை
பாடு மனை பாடல் கூடாது நீடு நிலை
புரவியும் பூண் நிலை முனிகுவ
விரகு இல மொழியல் யாம் வேட்டது இல் வழியே – நற் 380
நெய்யும், தாளிப்புப் புகையும் படிந்து, என் உடம்புடன்
அழுக்கடைந்துள்ளது என் ஆடையும்; தோள்களும்
தேமல் படிந்த மென்மையான கொங்கைகளின் இனிய பால் சுரந்து வழிய
புதல்வனை அணைத்துக்கொள்வதால் புனிற்றுப் புலவு நாறுகின்றது;
தூய அணிகலன்கள் அணிந்த மகளிர் வாழும் சேரியில் தோன்றும்
தேரையுடைய தலைவனுக்கு நாம் ஒத்துவரமாட்டோம்; அதனால்,
பொன் போன்ற நரம்பைக் கொண்ட இனிய ஓசையைக் கொண்ட சிறிய யாழை
இசைப்பதில் வல்லவன் என்றாலும், என்னை வணங்கிநிற்கவேண்டாம்;
கொண்டுபோய்விடு, பாணனே! உன்னுடைய குளிர்ந்த துறையையுடைய மருதநிலத்தானை!
சிறந்த என் வீட்டிலிருந்து பாடவேண்டாம்; என் உள்ளம் அதற்கு ஒருப்படாது; நீண்ட நேரம் நிற்பதால்
குதிரைகளும் தாம் தேரில் பூட்டப்பட்டிருக்கும் நிலையை வெறுக்கின்றன;
பயனில்லாத சொற்களைச் சொல்லவேண்டாம், நான் விரும்பியது எனக்கு இல்லாத போது
– விரகு – பயன் – ஔவை.சு.து.உரை, விளக்கம்
4.
விடுந்தவர் விரகு இன்றி எடுத்த சொல் பொய்யாக
கடிந்ததும் இலையாய் நீ கழறிய வந்ததை – கலி 76/12,13
வேண்டாம் என்று தள்ளிவைக்கப்பட்ட மகளிர் விவேகம் இன்றி கூறிய சொற்கள் பொய்யாக இருக்க,
அவறைக் கடிந்துகூறாதது மட்டுமன்றி என்னை இடித்துரைக்கவும் வந்துவிட்டாய்?

விரவு

விரவு – (வி) 1. கல, mix, mingle, blend
2. கட்டு, பொருத்து, bind, be joined
3 பரந்திரு, be spread
1.
விரவு மொழி கட்டூர் வேண்டுவழி கொளீஇ – அகம் 212/14
பல மொழியும் கலந்த பாசறையைத் தான் வேண்டுமிடங்களில் அமைத்து

நளி கொள் சிமைய விரவு மலர் வியன் கா – நெடு 27
செறிவைக் கொண்ட மேற்பகுதியையுடைய, (பலவிதமாய்க்)கலந்த பூக்களுள்ள அகன்ற பொழில்கள்

இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
விரவு வரி கச்சின் பூண்ட மங்கையர் – முல் 46,47
இரவைப் பகலாக்கும், திண்ணிய கைப்பிடியையுடைய ஒளிவிடும் வாளை
விரவின நிறங்களையுடைய கச்சினால் பூண்ட மங்கையர்,
– வரி விரவு கச்சு என மாறுக.

பொரு கணை தொலைச்சிய புண் தீர் மார்பின்
விரவு வரி கச்சின் வெண் கை ஒள் வாள்
வரை ஊர் பாம்பின் பூண்டு புடை தூங்க – பெரும் 70-72
(ஆறலைப்போர்)எய்த கணைகளின் வலியைத் தொலைத்த புண்கள் தீர்ந்த மார்பினையும்;
(மார்பில்)விரவிய, வரியுடைய கச்சையில், வெண்மையான கைப்பிடியையுடைய ஒள்ளிய வாள்
மலையில் ஊர்கின்ற பாம்புபோலப் பூணப்பட்டு ஒருபக்கத்தே தொங்கிநிற்க,
– பொ.வே.சோ.உரை
– விரவு வரிக் கச்சு என்றதனை, வரி விரவிய கச்சு என மாறிக் கோடலுமாம்.
2.
இந்தப் பொருள் எந்த அகராதியிலும் காணப்படவில்லை. செய்யுள் உரைகளினின்றும் பெறப்படுகிரது.

இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
விரவு வரி கச்சின் பூண்ட மங்கையர் – முல் 46,47
இரவைப் பகலாக்கும், திண்ணிய கைப்பிடியையுடைய ஒளிவிடும் வாளை
விரவின நிறங்களையுடைய கச்சினால் பூண்ட மங்கையர்,
– வரி விரவு கச்சு என மாறுக.
– இனி, வாள் விரவிய கச்சு, வரிக்கச்சு எனினுமாம். வாள் விரவுதலாவது வாளைச் சேரக் கட்டின என்றவாறு.
வரிக் கச்சு – வரிந்து கட்டின கச்சென்க.

பொரு கணை தொலைச்சிய புண் தீர் மார்பின்
விரவு வரி கச்சின் வெண் கை ஒள் வாள்
வரை ஊர் பாம்பின் பூண்டு புடை தூங்க – பெரும் 70-72
(ஆறலைப்போர்)எய்த கணைகளின் வலியைத் தொலைத்த புண்கள் தீர்ந்த மார்பினையும்;
(மார்பில்)விரவிய, வரியுடைய கச்சையில், வெண்மையான கைப்பிடியையுடைய ஒள்ளிய வாள்
மலையில் ஊர்கின்ற பாம்புபோலப் பூணப்பட்டு ஒருபக்கத்தே தொங்கிநிற்க,
– பொ.வே.சோ.உரை
– விரவு வரிக் கச்சு என்றதனை, வரி விரவிய கச்சு என மாறிக் கோடலுமாம்.

இந்த இரு எடுத்துக்காட்டுகளிலும், விரவுக்குரிய முதல் பொருளும் ஒத்துவரக் காண்கிறோம்.
3.
இந்தப் பொருளும் எந்த அகராதியிலும் காணப்படவில்லை. செய்யுள் உரைகளினின்றும் பெறப்படுகிரது.

நெடும் கரை கான்யாற்று கடும் புனல் சாஅய்
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறை – அகம் 25/1,2
நீண்ட கரையினைக் கொண்ட காட்டாற்றின் வேகம் மிக்க நீர் அற்றொழிய
விளங்கும் அறலாம் தன்மை கொண்ட விரவிய மணலையுடைய அகன்ற துறையிடத்துள்ள
– விரவிய மணலையுடைய – நாட்டார் உரை
– மணல் பரந்த – மாணிக்கம் உரை.
– பரந்த மணல் – செயபால் உரை
– மணல் பரந்த – ந.சி.கந்தையா உரை
– பரந்து கிடக்கின்ற மணல் – பொ.வே.சோ.உரை
– விரவு மணல் – வந்து கலந்த மணலுமாம்.- பொ.வே.சோ.உரை விளக்கம் – விரவுக்குரிய பொருள் – 1
– விரவு மணல் – mixed sand – வைதேகி ஹெர்பர்ட் மொழிபெயர்ப்பு – விரவுக்குரிய பொருள் – 1

விரவு பொறி மஞ்ஞை வெரீஇ அரவின் – அகம் 108/12
புள்ளிகள் விரவிய மயிலைக் கண்டு அஞ்சி
– நாட்டார் உரை
– புள்ளிகள் விரவிக்கிடக்கும் – புலி. உரை
– விரவிய புள்ளிகளையுடைய – பொ.வே.சோ.உரை
– விரவு பொறி மஞ்ஞை – peacock with spread spots – வைதேகி ஹெர்பர்ட் மொழிபெயர்ப்பு

விரான்

விரான் – (பெ) சங்க வள்ளல்களில் ஒருவன், a philanthropist chieftain of sangam period
விராலி மலைக்குஅடியில் இருக்கும் இருப்பையூர் என்ற ஊரை ஆண்ட வள்ளல்.

தேர் வண் விராஅன் இருப்பை அன்ன என்
தொல் நலம் தொலையினும் தொலைக – நற் 350/4,5
தேர்க்கொடை கொடுப்பதில் சிறந்த விரான் என்பானின் இருப்பையூர் போன்ற என்
பழைய அழகு தொலைந்துபோனாலும் போகட்டும்

விண்டு அன்ன வெண்ணெல் போர்வின்
கைவண் விராஅன் இருப்பை அன்ன
இவள் அணங்கு உற்றனை போறி – ஐங் 58/1-3
மலை போலக் குவித்த வெண்ணெல் அறுத்த கதிர்க்குவியல்களையும்,
கொடைத்தன்மையிலும் சிறந்த விரான் என்பானின் இருப்பை நகரைப் போன்ற
இவள்மீது காதல்வேட்கை பெருகித் துன்பப்பட்டாய் போலும்!

விராய

விராய – (வி.எ) 1. விரவிய – கலந்த
2. விரவிய – சுற்றிக்கொண்ட, கட்டிப்போட்ட, coil up, as rope,
1.
நாள்_மீன் விராய கோள்_மீன் போல – பட் 68
(அன்றைய)நாளுக்குரிய விண்மீனுடன் கலந்த கோள்களாகிய மீன்கள் போல,

இஞ்சி வீ விராய பைம் தார் பூட்டி – பதி 42/10
இஞ்சியினையும் பூவினையும் கலந்த வாடாத மாலையை அணிந்து,
2.
வெருவார்
இனத்து அடி விராய வரி குடர் அடைச்சி – புறம் 370/23,24
அஞ்சாத வீரர்
கூட்டத்தின் தன்னுடைய கால்களைச் சுற்றிக்கொள்ளும் வரி பொருந்திய குடரை ஒருங்குசேர்த்து

விராய்

விராய் – (வி.எ) கலந்து, getting mixed
மராஅ மலரொடு விராஅய் – அகம் 99/8
வெண்கடப்பம் பூக்களொடு விரவி

விராவு

விராவு – (பெ) விரவுதல், கலத்தல், mingling
நரை விராவுற்ற நறு மென் கூந்தல் – நெடு 152
நரை கலத்தலுற்ற நறிய மெல்லிய மயிரினையுடைய

விரி

விரி – (வி) 1. பெரிதாகு, பர, expand, spread out, be vast
2. மலர், blossom, unfold
3. அவிழ், நெகிழ், become loosened
4. பரப்பு, spread out
5. நீளத்தைப் பெரிதாக்கு, cause to expand, extend
1.
விரி கதிர்
வெள்ளி முளைத்த நள் இருள் விடியல் – பொரு 71,72
விரிகின்ற (ஒளிக்)கதிர்களையுடைய
வெள்ளி எழுந்த செறிந்த இருளையுடைய விடியற்காலத்தே,

விரி கடல் வேலி வியல்_அகம் விளங்க – சிறு 114
பரந்த கடலாகிய வேலியை உடைய உலகம் (எல்லாம்)விளங்கும்படி

பை விரி அல்குல் கொய் தழை தைஇ – குறி 102
பாம்பின் படத்தைப் போல பரந்த அல்குலுக்கு நறுக்கின தழையைக் கட்டி உடுத்தி

விரி நூல் அந்தணர் விழவு தொடங்க – பரி 11/78
விரிந்த மெய்நூல்களைக் கற்றறிந்த அந்தணர் திருவிழாவைத் தொடங்க
– விரி நூல் அந்தணர் – Brahmins who know the vast books வைதேகி ஹெர்பர்ட் மொழிபெயர்ப்பு
2.
முள் அரை தாமரை முகிழ் விரி நாள்_போது – சிறு 183
முள்(இருக்கும்) தண்டினை(க்கொண்ட) தாமரையின் அரும்பு விரிந்த அன்றைய பூவின்
3.
கவரி முச்சி கார் விரி கூந்தல் – பதி 43/1
கவரிமானின் மயிர் சேர்த்த உச்சிக் கொண்டையினையும், மேகத்தைப் போன்ற விரிந்த கூந்தலையும்
4.
நன் பல, வம்பு விரி களத்தின் கவின் பெற பொலிந்த – குறி 197,198
நல்ல பலவாகிய,கச்சைகளைப் பரப்பிவிட்ட களம் போல அழகு மிக்குப் பொலிவுற்ற

விரிச்சி

விரிச்சி – (பெ) யாரோ ஒருவர் தற்செயலாகக் கூற, அது நிமித்தமாகக் கொள்ளப்படும் கூற்று,
accuidental utterance of an unknown person taken as good omen
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை
அரும் கடி மூதூர் மருங்கில் போகி
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய் கைதொழுது
பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்ப – முல் 6-11
பெரிய மழையைப் பெய்த சிறு(பொழுதாகிய) துன்பமூட்டும் மாலைக் காலத்து
அரிய காவலையுடைய பழைய ஊரின் எல்லையில் போய்,
யாழின் ஓசையினையுடைய கூட்டமான வண்டுகள் ஆரவாரிக்கும்படி, நெல்லுடன்
உழக்கில் கொண்டுபோன நறிய பூக்களையுடைய முல்லையின்
அரும்புகள் அவிழ்ந்த பூவைத் தூவி, கைகூப்பி வணங்கி,
பெரிய முதிர்ந்த பெண்டிர் நற்சொல் கேட்டு நிற்க –

நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்
செம் முது பெண்டின் சொல்லும் நிரம்பா – புறம் 280/6,7
நெல்லும் நீரும் சொரிந்து விரிச்சி கேட்கும்
செம்மையுடைய முதுபெண்டானவள் சொல்லிய சொற்களும் குறையுடையவாயுள்ளன

விரிவு

விரிவு – (பெ) பூத்தல், blossoming
நின் உறு விழுமம் கூற கேட்டு
வருமே தோழி நன் மலை நாடன்
வேங்கை விரிவு இடம் நோக்கி
வீங்கு இறை பணை தோள் வரைந்தனன் கொளற்கே – கலி 38/23-26
நீ படுகின்ற பாட்டை நான் கூறக்கேட்டு
வருகின்றார், தோழியே! நல்ல மலைநாட்டைச் சேர்ந்தவர்!
வேங்கை மரங்கள் பூக்கின்ற நல்ல நாளை எதிர்நோக்கியிருந்து,
பருத்து இறங்குகின்ற இந்தப் பெருத்த தோள்காரியை மணமுடித்துச் செல்வதற்கு.

விரீஇ

விரீஇ – (வி.எ) மலர்ந்து, விரிந்து என்பதன் சொல்லிசை அளபெடை, having blossomed
பேஎய் தலைய பிணர் அரை தாழை
எயிறு உடை நெடும் தோடு காப்ப பல உடன்
வயிறு உடை போது வாலிதின் விரீஇ
புலவு பொருது அழித்த பூ நாறு பரப்பின் – அகம் 130/5-8
பேய் போலும் தலையினையுடைய சருச்சரை வாய்ந்த அரையினையுடைய தாழையின்
முள்ளாகிய பற்களையுடைய நீண்ட புற இதழ்கள் பலவும் ஒருங்கே காத்து நிற்க
அதன் வயிற்றினை இடமாகவுடைய பூ தூயதாய் விரிந்து
புலால் நாற்றத்தைத் தாக்கி ஒழிந்த மலர் நாற்றம் கமழும் இடத்தின்கண்

விருந்து

விருந்து – (பெ) 1. விருந்தினர், guest
2. விருந்தினரை உபசரித்து வழங்கும் சிறப்பான உணவு, feast
3. புலன்களுக்கு / மனத்திற்கு மகிழ்வூட்டக்கூடியது, a treat, delight
4. ஏதேனும் புதிய ஒன்று, புதுமை, any new thing, newness, novelty
1.
பல் ஆ பயந்த நெய்யின் தொண்டி
முழுது உடன் விளைந்த வெண்ணெல் வெம் சோறு
எழு கலத்து ஏந்தினும் சிறிது என் தோழி
பெரும் தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வர கரைந்த காக்கையது பலியே – குறு 210/2-6
கூட்டமான பசுக்கள் கொடுத்த நெய்யோடு, தொண்டி
முழுவதும் ஒருசேர விளைந்த வெண்ணெல்லால் ஆக்கிய சூடான சோற்றை
ஏழு பாத்திரங்களில் வைத்து ஏந்திக் கொடுத்தாலும், அது சிறிதாகும் என் தோழியே!
உனது பெரிய தோள்களை நெகிழ்த்த துன்பம் தீர
விருந்தினர் வரும்படி கரைந்த காக்கைக்கு இடும் பலி
2
விருந்து எவன் செய்கோ தோழி சாரல்
——————- ————- ——————
சிலை வல் ஏற்றொடு செறிந்த இ மழைக்கே – நற் 112
விருந்து என்ன படைப்போம் தோழி! மலைச்சாரலில்
——————- ————- ——————
ஒலிக்கின்ற வலிய இடியுடன் செறிவாகக் கலந்துவந்த இந்த மழைக்கு
3.
வரி நுணல் கறங்க தேரை தெவிட்ட
கார் தொடங்கின்றே காலை இனி நின்
நேர் இறை பணை தோட்கு ஆர் விருந்து ஆக
வடி மணி நெடும் தேர் கடைஇ
வருவர் இன்று நம் காதலோரே – ஐங் 468
வரிகளைக் கொண்ட தவளைகள் மிக்கு ஒலிக்க, தேரைகள் ஒன்றாய் ஒலிக்க,
கார்காலம் தொடங்கிவிட்டது குறித்த பருவத்தில்; இனிமேல் உன்
அழகாய் இறங்கும் பருத்த தோள்களுக்கு நல்ல விருந்தாக
நன்கு வடித்த மணிகள் கட்டப்பட்ட நெடிய தேரைச் செலுத்தி
வருவார், இன்று, நம் காதலர்.
4.
அரும் திறல் கடவுள் பழிச்சிய பின்றை
விருந்தின் பாணி கழிப்பி – மலை 538,539
அளவற்ற வலிமைகொண்ட கடவுளை வாழ்த்திய பின்னர்,
(உமக்கே உரித்தான)புதிய பாடல்களைப் பாடி

ஆர் கலி வானம் தலைஇ நடுநாள்
கனை பெயல் பொழிந்து என கானல் கல் யாற்று
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும் – நற் 53/5-8
பெருத்த முழக்கமிடும் மேகங்கள் கூடிவந்து நள்ளிரவில்
மிகுந்த மழையைப் பொழிந்ததாக, காட்டின் பாறைகளில் மோதி வரும் ஆற்றின்
காய்ந்த சருகுகளோடும், உதிர்ந்த மலர்க் கொத்துக்களோடும் வரும்
புதிய சுவையான நீர் மருந்தும் ஆகும்

பசி அட முடங்கிய பைம் கண் செந்நாய்
மாயா வேட்டம் போகிய கணவன்
பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும்
விருந்தின் வெம் காட்டு வருந்துதும் யாமே – நற் 103/6-9
பசி வருத்துவதால் சுருண்டுகிடக்கும் பசிய கண்ணையுடைய செந்நாயின்,
குறிதப்பாத வேட்டையை மேற்கொண்டு சென்ற, கணவனான ஆண்நாய்,
தன் அன்பில் பொய்க்காத மரபினையுடைய தன் பெண்நாயை நினைத்து வருந்துகின்ற
புதிய வழித்தடமான கொடிய பாலைநிலத்தில் வருந்துகின்றேன் நான்!

கரும் கோட்டு புன்னை குடக்கு வாங்கு பெரும் சினை
விருந்தின் வெண்_குருகு ஆர்ப்பின் – நற் 167/1,2
கரிய கொம்பினையுடைய புன்னையின் மேலோங்கி வளைந்த பெரிய கிளையிலிருந்து
புதியதாய் வந்த வெண்குருகுகள் ஒலிக்குமாயின்

விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்
துறை கெழு கொண்க – நற் 172/7-9
புதியதாய் வந்த பாணரின் மெல்லிய இசைப்பாட்டுப் போல
வலம்புரியாக வெண்சங்கு ஒலிக்கும் ஒளிர்கின்ற நீரையுடைய
துறையைச் சேர்ந்த கொண்கனே!

அன்னாய் இவன் ஓர் இள மாணாக்கன்
தன் ஊர் மன்றத்து என்னன்-கொல்லோ
இரந்தூண் நிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெரும் செம்மலனே – குறு 33
தோழியே! இந்தப் பாணன் ஓர் இளம் மாணாக்கன் போல் இருக்கிறான்.
தன் ஊர் மன்றத்தில் எப்படி இருப்பானோ?
இரந்து உண்ணும் உணவினையுடைய நன்கு வளர்ச்சி பெறாத மேனியோடு
இந்தப் புது ஊரிலும் பெரும் சிறப்புடையவனாயிருக்கிறான்

விருந்தின் வாழ்க்கையொடு பெரும் திரு அற்று என – பதி 71/19
புதிதாகத் தாம் தேடிய செல்வத்தோடு, தமது முன்னோர் தேடிவத்த பெரும் செல்வமும் அழிந்துபோயின என்று,

விருந்தின் மன்னர் அரும் கலம் தெறுப்ப
வேந்தனும் வெம் பகை தணிந்தனன் – அகம் 54/1,2
புதிதாய் முளைத்த அரசர்கள் அரிய அணிகலன்களைத் திறையாகக் கொட்ட
(நம்)வேந்தனும் கொடிய பகைமை தீர்ந்தனன்;

பேஎய் வெண்தேர் பெயல் செத்து ஓடி
தாஅம் பட்ட தனி முதிர் பெரும் கலை
புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது அலங்கு தலை
விருந்தின் வெம் காட்டு வருந்தி வைகும் – அகம் 241/9-12
வெள்ளிய பேய்த்தேரை மழைஎன்று கருதி ஓடி
தாகம்பட்ட தனித்த முதிர்ந்த பெரிய கலைமான்
அவ்விடத்தினின்றும் மீண்டூறைதல் மாட்டாது, அப் பேய்த்தேர் அசையும் இடமாய
புதிய வெவ்விய காட்டின்கண்ணே வருத்தமுற்றுத் தங்கிக்கிடக்கும்

விருந்தின் புன்கண் நோவு உடையர் – புறம் 46/7
முன்பு அறியாத புதியதொரு வருத்தத்தையுடையர்

வேய்வை காணா விருந்தின் போர்வை
அரிக்குரல் தடாரி – புறம் 369/20,21
குற்றமில்லாத புதிதாகப் போர்க்கப்பட்ட தோலையுடைய
அரித்த ஓசையையுடைய தடாரிப் பறையை

மெலியர் அல்லோர் விருந்து புனல் அயர – பரி 6/40
மெலியர் அல்லாத வலியவர் புதுப்புனலுக்குள் பாய்ந்து விளையாட

விரை

விரை – 1. (வி) 1. வேகமாகச்செல், be speedy, swift, fast
2. அவசரப்படு, hasten, hurry
– 2. (பெ) 1. நறுமணம், fragrance, scent
2. நறுமணப்பொருள், perfume
1.1
புரி உளை கலி_மான் தேர் கடவுபு
விரி தண் தார் வியல் மார்ப விரைக நின் செலவே – கலி 124/20,21
சுருள் சுருளான பிடரி மயிரைக் கொண்ட விரைந்தோடும் குதிரை பூட்டிய உன் தேரினைச் செலுத்தி
மலர்ந்த குளிர்ந்த மாலையையுடைய அகன்ற மார்பினையுடையவனே! விரைந்துசெல்லட்டும் உனது பயணம்.

விசும்பு ஆறு ஆக விரை செலல் முன்னி – திரு 123
வானமே வழியாக விரைந்த செலவினை மேற்கொண்டு
1.2
உள்ளம் பிணிக்கொண்டோள்_வயின் நெஞ்சம்
செல்லல் தீர்கம் செல்வாம் என்னும்
செய்_வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என
உறுதி தூக்கா தூங்கி அறிவே
சிறிது நனி விரையல் என்னும் – நற் 284/3-8
நம் உள்ளத்தை வசமாக்கிக்கொண்டவளிடம், நெஞ்சம்
அவளின் துன்பத்தைத் தீர்க்கத் திரும்பிச் செல்வோம் என்று சொல்லும்;
மேற்கொண்ட பணியை முடிக்காமல் அதற்கு இடையூறு விளைவிப்பது
வந்த நோக்கத்தையும் அடையாமல், பழிச்சொல்லையும் கொண்டுசேர்க்கும் என்று
உறுதிப்பாட்டை தூக்கிநிறுத்தித் தாமதித்து, அறிவானது
சிறிதளவுகூட கூடுதல் அவசரப்படவேண்டாம் என்று சொல்லும்;

முளவு_மா வல்சி எயினர் தங்கை
இள மா எயிற்றிக்கு நின் நிலை அறிய
சொல்லினேன் இரக்கும் அளவை
வெல் வேல் விடலை விரையாதீமே – ஐங் 364
முள்ளம்பன்றியை உணவாகக் கொண்ட எயினரின் தங்கையான
இளமையும் மாநிறமும் உடைய பாலைநிலப் பெண்ணுக்கு உன் நிலையைப் புரிந்துகொள்ளும்படி
எடுத்துக் கூறினேன்; அவளது உடன்பாட்டை நான் இரந்து பெறும் வரை
வெல்லுகின்ற வேலையுடைய இளங்காளையே! நீ அவசரப்படவேண்டாம்.
2.1
விரை உறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து – திரு 188
(வாசனைப்புகை முதலியவற்றால்)வாசனையேற்றப்பட்ட மணமுள்ள பூவை எடுத்துத் தூவி, பெரிதும் மகிழ்ந்து

வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின் – சிறு 155
மிகுகின்ற அலை கொண்டுவந்த மணத்தையுடைய (அகில்)மர விறகால்
2.2
சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து – திரு 235
சிறிய பசுமஞ்சளோடு மணமுள்ள சந்தனம் முதலியவற்றையும் தெளித்து,

நன் நெடும் கூந்தல் நறு விரை குடைய – மது 552
நல்ல நீண்ட கூந்தலில் மணமிக்க நறுமணத் தைலத்தை ஊடுருவித்தேய்க்க

விரைஇ

விரைஇ – (வி.எ) 1. விரவி, கலந்து, mixed with
2. விரவி, பரப்பி, spread out
1.
சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து – திரு 218
சிறிய தினை அரிசியைப் பூக்களோடு கலந்து, மறியை அறுத்து,
2.
வேழம் நிரைத்து வெண் கோடு விரைஇ
தாழை முடித்து தருப்பை வேய்ந்த
குறி இறை குரம்பை – பெரும் 263-265
மூங்கில்கோலை நெடு வரிசையாகச் சார்த்தி, வெண்மையான மரக்கொம்புகளை குறுக்காகப் பரப்பி,
தாழைநாரால் (இரண்டையும்)முடித்துத் தருப்பைப்புல்லை (அதன் மேல்)வேய்ந்த
குறுகிய இறப்பையுடைய குடிலின்,

விற

விற – (வி) 1. அடர்ந்திரு, செறிவாக இரு, be dense, close
2. வெருவு, அஞ்சு, fear
1.
ஊர் குறு_மகளிர் குறு_வழி விறந்த
வராஅல் அருந்திய சிறு சிரல் – அகம் 286/5,6
ஊரிலுள்ள இளைய பெண்கள் குற்றுங்கால் செறிந்த
இரால் மீனைத் தின்ற சிறிய சிரற்பறவை

பணை நிலை முனைஇய பல் உளை புரவி
புல் உணா தெவிட்டும் புலம்பு விடு குரலொடு
நிலவு பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து
கிம்புரி பகு வாய் அம்பணம் நிறைய
கலிழ்ந்து வீழ் அருவி பாடு விறந்து – நெடு 93-97
கொட்டிலில் நிற்பதை வெறுத்த நிறைந்த பிடரிமயிரையுடைய குதிரைகள்
புல்லாகிய உணவை வாய் நிறைய மெல்லும்(போது ஏற்படும்) தனிமை (அமைதியைக்)கெடுக்கும் ஓசையோடு –
நிலாவின் பயனை அரசன் நுகரும் நெடிய வெள்ளிய நிலாமுற்றத்திலுள்ள
நீர்த்தூம்பின் (மீனின்)பிளந்த வாயாகப் பகுத்த உருளி நிறைகையினால்,
கலங்கி விழுகின்ற அருவியின் ஓசை(யும்) செறிந்து
2.
கோடு முற்று இளம் தகர் பாடு விறந்து இயல – அகம் 378/7
கொம்புகள் பொருந்திய இளைய கடாக்கள் இலியைக் கேட்டு அஞ்சி இரிய
– விறந்து – அஞ்சி – நாட்டார் உரை, விளக்கம்
– விறப்பே வெரூஉப் பொருட்டு மாகும் (தொல். சொல். 348) – Tamil Lexicon

விறகு

விறகு – (பெ) எரிக்கப்பயன்படும் மரக்கட்டை, firewood
வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின்
கரும் புகை செம் தீ மாட்டி – சிறு 155,156
மிகுகின்ற அலை கொண்டுவந்த மணத்தையுடைய (அகில்)மர விறகால்
கரிய புகையையுடைய சிவந்த நெருப்பை மூட்டி,

செம் தீ பேணிய முனிவர் வெண் கோட்டு
களிறு தரு விறகின் வேட்கும்
ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனே – பெரும் 498-500
சிவந்த தீயைக் கைவிடாமல் காத்துப்போந்த முனிவர்கள், வெண்மையான கொம்பினையுடைய
களிறுகள் முறித்துக் கொண்டுவந்த விறகால் வேள்வியைச் செய்யும்,
ஒளிறுகின்ற விளங்கும் அருவிகளையுடையவாகிய மலையை ஆளும் உரிமையுடையோன்

நொய் மர விறகின் ஞெகிழி மாட்டி – மலை 446
(உடைப்பதற்கு எளிதான)சுள்ளிக் குச்சிகளைக் கொள்ளியாகத் தீமூட்டி

விறலவன்

விறலவன் – (பெ) வெற்றியையுடையவன், man of success
புதல்வன் தழீஇயினன் விறலவன்
புதல்வன் தாய் அவன் புறம் கவைஇயினளே – குறு 359/5,6
புதல்வனைத் தழுவினான் வெற்றியையுடைய நம் தலைவன்;
அந்தப் புதல்வனின் தாய் அவனின் முதுகை இருகைகளாலும் இறுக்கிக்கொண்டாள் –

விறலி

விறலி – (பெ) ஆடிப்பாடிப் பரிசில் பெற்று வாழ்பவள், female minstrel
கலம் பெறு விறலி ஆடும் இ ஊரே – நற் 328/11
நல்ல கலன்களைப் பரிசிலாகப் பெறும் விறலி ஆடுகின்ற இவ்வூரில்

செல்லாயோ தில் சில் வளை விறலி
மலர்ந்த வேங்கையின் வயங்கு இழை அணிந்து
மெல் இயல் மகளிர் எழில் நலம் சிறப்ப
பாணர் பைம் பூ மலைய இளையர்
இன் களி வழாஅ மென் சொல் அமர்ந்து
நெஞ்சு மலி உவகையர் வியன் களம் வாழ்த்த
தோட்டி நீவாது தொடி சேர்பு நின்று
பாகர் ஏவலின் ஒண் பொறி பிசிர
காடு தலைக்கொண்ட நாடு காண் அவிர் சுடர்
அழல் விடுபு மரீஇய மைந்தின்
தொழில் புகல் யானை நல்குவன் பலவே – பதி 40/21-31
செல்வாயாக! சிலவாகிய வளைகளை அணிந்த விறலியே!
மலர்ந்த வேங்கை மரத்தைப் போல ஒளிரும் அணிகலன்களை அணிந்து
மென்மையான இயல்பினையுடைய மகளிரின் அழகு நலம் சிறந்திருக்க,
பாணர்கள் பசும்பொன் மாலையைச் சூடியிருக்க, இளையவர்கள்
இனிய களிப்பால் வழுவாத மெல்லிய சொற்களை விருப்பத்துடன் பேசி
நெஞ்சு நிறைந்த மகிழ்ச்சியினராய் பெரிய போர்க்களத்தை வாழ்த்த,
அங்குசம் காட்டும் குறிப்பினை மீறாமல் – தந்தத்தின் பூண்கள் இறுக்க அணியப்பெற்று
பாகரின் ஏவுதலின்படி, கால் மிதித்து எழுகின்ற தூசியின் ஒளிவிடும் துகள்கள் சிதறும்படியாக,
காட்டினில் தோன்றி பரந்து உயர்ந்து நின்று, நாட்டிலுள்ளோர் காணும்படி ஒளிரும் காட்டுத்தீயைப் போன்ற
சினத்தைக் கைவிட்டு – நடக்கின்ற, வலிமையுடைய
வேண்டும் தொழிலை விரும்பிச் செய்யும் யானைகள் பலவற்றைக் கொடுப்பான்.

விறல்

விறல் – (பெ) 1. வெற்றி, victory
2. வலிமை, strength
3. விசேடம், சிறப்பியல்பு, Distinctive excellence
1.
கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி – திரு 38
‘கோழியின் உருவத்தைத் தன்னிடத்தே கொண்டு உயர்ந்த வென்று அடுகின்ற வெற்றியையுடைய கொடி
2.
வென்று அடு விறல் களம் பாடி தோள் பெயரா – திரு 55
வென்று அழிக்கும் திறலையுடைய போர்க்களத்தைப் பாடி, தோளை அசைத்து
3.
பெரு விறல் யாணர்த்து ஆகி அரிநர் – புறம் 42/12
பெரிய விசேடத்தையுடைய புதுவருவாயை உடைத்தாய்
– ஔவை.சு.து.உரை

விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் – குறி 3
தனிச்சிறப்புக் கொண்ட நகைகள் கழன்று விழப்பண்ணின, குணப்படுத்த முடியாத கொடிய நோய்

வேய் மருள் பணை தோள் விறல் இழை நெகிழவும் – நற் 85/2
மூங்கில்போலும் பருத்த தோளிடத்துச் சிறந்த தொடியும் முன்கையிடத்து வளையும் நெகிழ்ந்து வீழவும்
– தொடியும் வளையும் ஏனை அணிவகையிற் சிறந்தமை விளங்க விறலிழை என்றார்
– ஔவை.சு.து.உரை, விளக்கம்

விலங்கல்

விலங்கல் – (பெ) மலை, மலைபோல் நிற்கும் மதில், mountain, huge wall obstructing like a hill
இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல்
விலங்கல் மீமிசை பணவை கானவர்
புலம் புக்கு உண்ணும் புரி வளை பூசல் – மலை 297-299
ஒளிர்கின்றதும் ஏந்திநிற்பதுமான கொம்பினையுடைய (தன்)இனத்தைப்பிரிந்த ஒற்றை ஆண்யானை,
குறுக்குமலையில் மிக உயரமான பரண் (மீது இருக்கும்)குறவர்களின்
நிலத்தில் புகுந்து (பயிர்களைத்)தின்ன, (அதனை விரட்ட, அவர்கள்)ஆர்வத்துடன் சுற்றிவளைத்து ஏற்படுத்தும்
ஓசையும்;

கோடு உறழ்ந்து எடுத்த கொடும் கண் இஞ்சி
நாடு கண்டு அன்ன கணை துஞ்சு விலங்கல் – பதி 16/1,2
மலைச் சிகரங்களோடு மாறுபடுவது போன்று கட்டிய, வளைந்த பார்க்குமிடங்களையுடைய வெளிமதிலை
அடுத்துள்ள,
ஒரு நாட்டைக் கண்டது போன்ற அகன்ற இடைவெளியைக் கொண்ட அம்புக்கட்டுகள் இருக்கும் நடுமதிலையும்
அடுத்து,
– புற மதிலைக் கடந்து போதருவார்க்குக் குறுக்கே மலை போல் நிற்றலின் விலங்கல் என்றும் கூறினார்.

விலங்கு

விலங்கு – 1. (வி) 1. குறுக்கிடு, lie across, be transverse
2. ஒதுங்கு, step aside
3. மாறுபடு, change, become different
4. விலகு, நீங்கு, leave, go away
5. கடந்து செல், go past
6. மாட்டு, fasten on, hook
7. தவிர், avoid
8. தடு, obstruct, hinder
9. விலக்கு, turn aside, put out of the way
10. வளை, bend
11. தவறுசெய், err
– 2. (பெ) 1. குறுக்கு, that which is crosswise
2. மிருகம், animal
1.1
மை படு மா மலை விலங்கிய சுரனே – அகம் 17/22, அகம் 153/19, அகம் 187/24
மேகங்கள் பொருந்திய பெரிய மலைகள் குறுக்கிட்டு நிற்கும் சுரநெறியில்
1.2
துஞ்சு_மரம் கடுக்கும் மாசுணம் விலங்கி – மலை 261
விழுந்துகிடக்கும் மரத்தைப்போன்ற மலைப்பாம்பினின்றும் ஒதுங்கி,
1.3
ஆறு விலங்கி தெருவின் கண் நின்று ஒருவன்
கூறும் சொல் வாய் என கொண்டு அதன் பண்பு உணராம்
தேறல் எளிது என்பாம் நாம் – கலி 60/23-25
உலக ஒழுக்கத்திலிருந்து மாறுபட்டு தெருவில் நின்றுகொண்டு ஒருவன்
கூறும் சொல்லை உண்மையென்று எடுத்துக்கொண்டு, அதன் தன்மையை உணராமல்
அவனை நம்பி எளிதாக ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்று சொல்லுவோம் நாம்
1.4
இருள் மயங்கு யாமத்து இயவு கெட விலங்கி – அகம் 218/10
இருள் செறிந்த நடுயாமத்தே நெறி தடுமாறுதலான் விலகி
1.5
புடையல் கழல் கால் புல்லி குன்றத்து
நடை அரும் கானம் விலங்கி – அகம் 295/13,14
ஒலிக்கின்ற வீரக் கழலணிந்தபுல்லி என்பானது வேங்கடமலையைச் சார்ந்த
செல்லற்கு அரிய காட்டினைக் கடந்து
– நாட்டார் உரை
1.6
ஏறு தம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரி குடர்
ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ
ஆலும் கடம்பும் அணி-மார் விலங்கிட்ட
மாலை போல் தூங்கும் சினை – கலி 106/26-29
காளைகள், தம்முடைய அலங்கரிக்கப்பட்ட கொம்புகளால் குத்தி எடுத்த கொத்தான குடல்களைத்
தொங்கவிட்டவாறே தூக்கிக்கொண்டு பறந்த பருந்துகளின் வாயிலிருந்து வழுக்கி விழ, அவை
ஆலமரத்தின் மேலும், கடம்ப மரத்தின்மேலும் தெய்வங்களுக்கு அணிவிப்பதற்காக விலங்க இட்டுவைத்த
மாலையைப் போல தொங்கிக்கொண்டிருந்தன மரக்கிளைகளில்
– நச். உரை
– விலங்கிட்ட – மாட்டிவிட்ட – பெ.விளக்கம்
1.7
நன் பகல் அந்தி நடை இடை விலங்கலின் – பொரு 46
நல்ல உச்சிக்காலமான சந்தியிலே நடத்தலை நடுவே தவிர்த்தலால்
1.8
வலியா நெஞ்சம் வலிப்ப சூழ்ந்த
வினை இடை விலங்கல போலும் – நற் 252/5,6
இதுவரை துணியாத நெஞ்சம் இப்போது முடிவுசெய்ய, ஆராய்ந்து தொடங்கிய
செயல்முனைப்பினைத் தடுக்கவில்லை போலும்

யாரீரோ எம் விலங்கியீஇர் என – அகம் 390/14
எம்மைத் தடுப்பீர் நீவிர் யாவிரோ என
1.9
சிறியவும் பெரியவும் புழை கெட விலங்கிய
மான் கணம் தொலைச்சிய கடு விசை கத நாய் – புறம் 205/7,8
சிறியனவும் பெரியனவும் ஆகிய புழைகளைப் போக்கற விலக்கிய
மானினது திரட்சியைத் தொலைத்த கடிய செலவையுடைய சினமிக்க நாயையும்

இன்று நம்
செய்_வினை ஆற்று_உற விலங்கின்
எய்துவை அல்லையோ பிறர் நகு பொருளே – அகம் 33/18-20
இன்று நமது
செய்யப்படும் இவ்வினையை இந்த இடைநெறியில் உற்ற அளவில் விலக்குவையாயின்
பிறர் சிரிக்கத்தக்க இகழ்ச்சியை அடைவாய் அல்லவா?
1.10
வில் என விலங்கிய புருவத்து வல்லென
நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று மகளிர் – புறம் 361/15,16
வில் போல் வளைந்த புருவத்தையும், வல்லென ஒரு சொல்
நல்கின் நா அஞ்சுதற்கேதுவாகிய முள் போன்ற பற்களையுமுடைய மகளிர்
– ஔவை.சு.து.உரை
1.11
கடவுள் கடி நகர்-தோறும் இவனை
வலம் கொளீஇ வா என சென்றாய் விலங்கினை
ஈரம் இலாத இவன் தந்தை பெண்டிருள்
யார் இல் தவிர்ந்தனை கூறு – கலி 84/6-9
தெய்வங்கள் மிகுதியாக இருக்கும் கோயில்கள்தோறும் இவனை
சுற்றிக்காண்பித்துக் கொண்டுவா என்று சொல்ல, அப்படியே சென்றாய்! தவறுசெய்துவிட்டாய்!
நெஞ்சில் ஈரமில்லாத இவனுடைய தந்தையின் பரத்தையர்களுக்குள்
யாருடைய வீட்டில் தங்கியிருந்தாய்? கூறு!
– விலங்கினை – தப்பினாய் – நச்.உரை
– விலங்கினை – தவறினை – பெ.விளக்கம்
2.1
பேஎம் நிலைஇய இரும் பௌவத்து
கொடும் புணரி விலங்கு போழ
கடும் காலொடு கரை சேர
நெடும் கொடி மிசை இதை எடுத்து – மது 76-79
அச்சம் நிலைபெற்ற கரிய கடலில்,
வளையும் திரை குறுக்கே பிளவுபடுமாறு,
வேகமான காற்றால் (ஓடித்)துறையைச் சேரும்பொருட்டு,
நெடிய கொடியை உச்சியில் உடையவாய், பாய் விரித்து
2.2
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம் எளிதின் நின் மலை
பல் வேறு விலங்கும் எய்தும் நாட – அகம் 2/7-9
நறிய பூக்களாலான படுக்கையில் களிப்புற்றுத் தூங்கும்
எண்ணி முயலாத இன்பத்தை எளிதாக, நின் மலையிலுள்ள
பல்வேறு விலங்குகளும் எய்தும் நாடனே!

விலைஞர்

விலைஞர் – (பெ) விற்போர், persons engaged in selling things
பல் வேறு பண்ணியம் தழீஇ திரி விலைஞர்
மலை புரை மாடத்து கொழு நிழல் இருத்தர – மது 405,406
பல வேறுபட்ட பண்டங்களைத் தம்மிடத்தே சேர்த்துக்கொண்டு திரிந்து விற்பவரும்,
மலை போன்ற மாடங்களின் குளிர்ந்த நிழலில் இருக்க –

விலைநலப்பெண்டிர்

விலைநலப்பெண்டிர் – (பெ) விலைமகளிர், women, who engage in sexual intercourse for money
முன்னோர் செல்லவும் செல்லாது இன்னும்
விலை_நல_பெண்டிரின் பலர் மீக்கூற
உள்ளேன் வாழியர் யான் என பன் மாண்
நிலமகள் அழுத காஞ்சியும்
உண்டு என உரைப்பரால் உணர்ந்திசினோரே – புறம் 365/7-11
முன்னுள்ளோராகிய வேந்தர் விண்ணுலகம் செல்லக்கண்டு வைத்தும் உடன் செல்லாது, யான் இப்பொழுதும்
தம் நலத்தைப் பிறர்க்கு விற்கும் மகளிர் போல, பலர் என் நலத்தைப் பாராட்டிப் புகழ
நிலையாக இருக்கிறேன் யான் வாழ்க என்று பலவகையாலும் மாண்புற்ற
நிலமாகிய மகள் புலம்பிய காஞ்சியும்
உண்டென்று அறிவுடையோர் கூறுவர்

விலைமாறு

விலைமாறு – (பெ) பண்டமாற்று, barter, exchange of goods
நெல்லின் நேரே வெண் கல் உப்பு என
சேரி விலைமாறு கூறலின் – அகம் 140/7,8
நெல்லுக்கு ஒத்த அளவினதே வெள்ளிய கல்லுப்பு என்று
சேரியில் பண்டமாற்றாகிய விலை கூறலின்

விலைவன்

விலைவன் – (பெ) பொருளுக்காகக் கொல்கிறவன், a person who kills for benefit
விலைவன் போலான் வெறுக்கை நன்கு உடையன் – புறம் 152/9
விலை ஏதுவாகக் கொன்றானாக மாட்டான், செல்வத்தை மிக உடையவனாக இருந்தான்.

விலோதம்

விலோதம் – (பெ) விலோதனம், பெரிய கொடி, large flag
திண் காழ் ஏற்ற வியல் இரு விலோதம்
தெண் கடல் திரையின் அசை வளி புடைப்ப – மது 449,450
திண்ணிய கொடித்தண்டுகளில் ஏற்ற அகலத்தினையுடைய பெருங் கொடிகளைத்
தெளிந்த கடல் அலைகளைப் போல் எழுந்து விழும்படி காற்று மோதுகையினால்

வில்லியாதன்

வில்லியாதன் – (பெ) சங்ககால மன்னர்களின் ஒருவன், a chieftain in sangam period
இவனது முழுப்பெயர் ஓய்மான் வில்லியாதன். இவன் சங்ககால வள்ளல்களில் ஒருவன்.
புறத்திணை நன்னாகனார் என்னும் புலவர் புறநானூறு 379-ஆம் பாடலில் இவனது வள்ளண்மையைப் போற்றிப்
பாடியுள்ளார். இப் பாடலில் இவன் ‘நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன்’ என்று குறிப்பிடப்படுகிறான்.
இந்த வில்லியாதனைப் பாடிய இந்தப் புலவர் ஓய்மான் நல்லியாதனின் கொடையையும் (புற, 376) பாராட்டிப்
பாடியுள்ளார். இதே புலவர் புறம் 176-இல் ஓய்மான் நல்லியக்கோடன் என்பானைப் பற்றியும் பாடியுள்ளார்.
பத்துப்பாட்டில் ஒன்றான சிறுபாணாற்றுப்படை நூலின் பாட்டுடைத் தலைவன் ஓய்மானாட்டு
நல்லியக்கோடன் அப்பாடலில் ‘நன்மா இலங்கைத் தலைவன்’ என்று சிறப்பிக்கப்பட்டுள்ளான்.
இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நல்லியக்கோடன், நல்லியாதன், வில்லியாதன் என்னும் பெயர் கொண்ட
மூவர் ஓய்மானாட்டில் சற்றேறக் குறைய ஒரே காலத்தில் வாழ்ந்த வள்ளல்கள் எனத் தெரியவருகிறது.
இவர்கள் மூவரும் அண்ணன் தம்பியராய் அடுத்தடுத்தோ, ஆங்காங்கேயோ செல்வாக்குடன் வாழ்ந்தவர்கள்
என்பது புலனாகிறது.

நெல் அமல் புரவின் இலங்கை கோமான்
வில்லியாதன் கிணையேம் பெரும – புறம் 379/6,7
நெற்பயிர் நெருங்கிய விளைவயல்களையுடைய மாவிலங்கை என்னும் ஊர்க்குத் தலைவனான
ஓய்மான் வில்லியாதனுக்குக் கிணைப்பொருநராவோம், பெருமானே

விளக்கம்

விளக்கம் – (பெ) 1. விளக்கு, lamp
2. மோதிரம், ring
3. ஒளி, light
1.
நெய் உமிழ் சுரையர் நெடும் திரி கொளீஇ
கை அமை விளக்கம் நந்து-தொறும் மாட்ட – முல் 48,49
நெய்யைக் காலுகின்ற திரிக்குழாயையுடையோராய் நெடிய திரியை (எங்கும்)கொளுத்தி
(பாவையின்)கைகளில் அமைந்த விளக்குகள் அவியுந்தோறும் (நெய் விட்டுத்)தூண்டிவிட –
2.
பொலம் செய பொலிந்த நலம் பெறு விளக்கம்
வலி கெழு தட கை தொடியொடு சுடர்வர – மது 719,720
பொன்னாற் செய்ததினால் பொலிவு பெற்ற மணிகள் அழுத்தின மோதிரம்
வலி பொருந்தின பெரிய கையில் வீர வளையோடு விளக்கம் வர

செ விரல் கொளீஇய செம் கேழ் விளக்கத்து – நெடு 144
சிவந்த விரலில் மாட்டிய சிவந்த நிறத்தையுடைய (முடக்கு அல்லது நெளி என்னும்)மோதிரத்தையும்;(கொண்டு)
3.
நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள – பரி 4/25
அனைத்தையும் அழிக்கவல்ல உன் வெம்மையும், அனைத்தையும் தெளிவுறுத்தும் உன் ஒளியும் ஞாயிற்றில்
இருக்கின்றன

விளக்கு

விளக்கு – 1. (வி) 1. விவரி, விரிவாக எடுத்துரை, explain, explicate
2. தெளிவாகக் காட்டு, show clearly
3. பலர் அறியச்செய், make something wellknown
4. தெளிவாக்கு, illustrate, elucidate
5. விளங்கச்செய், make shine
– 2. (பெ) 1. ஒளிகொடுக்கும் சாதனம், lamp
2. வெளிச்சம், light
1.1.
நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து
வல்லார் ஆயினும் புறம் மறைத்து சென்றோரை
சொல்லிக்காட்டி சோர்வு இன்றி விளக்கி
நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும் – மலை 77-80
நல்லோர் கூடியிருக்கும் நாவால் (சிறந்தவற்றை)உரைக்கும் அவையில்,
(சொல்)வன்மையில்லாதவர் எனினும் (அவர்)தரப்பை மறைத்து, தம்மிடம் சென்றோரை,
(தம் பொருளைச்)சொல்லிக் காட்டி, (திரும்பத் திரும்ப)சோர்வடையாமல் விவரித்து,
நன்றாக நடத்தும் அவனுடைய அவைமக்களின் சீலத்தையும்
1.2.
அஞ்சுவரு விடர் முகை ஆர் இருள் அகற்றிய
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க
தனியன் வந்து பனி அலை முனியான் – அகம் 272/4-6
அச்சம்தரும் பிளப்பாகிய குகைகளிலுள்ள அரிய இருளைப் போக்கிய
மின் போல் விளங்கும் வேல், தான் செல்லும் நெறியினைக் காட்ட
நம் தலைவன் தமியனாய் வந்து பனி அலைத்தலை வெறானாகி
1.3.
வியப்பும் சால்பும் செம்மை சான்றோர்
பலர்வாய் புகர் அறு சிறப்பின் தோன்றி
அரிய தந்து குடி அகற்றி
பெரிய கற்று இசை விளக்கி
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பன் மீன் நடுவண் திங்கள் போலவும்
பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கி – மது 764-770
இறும்பூதும், நிறைவும், செப்பமும் உடைய சான்றோர்
பலர் கூற்றுக்களிலும் களங்கமற்ற சிறப்போடே காணப்பட்டு,
அரியவான பொருள்களைக் கொணர்ந்து (எல்லார்க்கும் கொடுத்து), குடிமக்களைப் பெருக்கி,
பெரிய நூற்களைக் கற்று, (நின்)புகழைப் பலரறியச்செய்து,
கடல் நடுவே ஞாயிறு போன்றும்,
பல விண்மீன்களுக்கு நடுவே திங்கள் போன்றும்,
பொலிவுபெற்ற சுற்றத்தாரோடு பொலிந்து இனிதாக விளங்கி,
1.4
ஒரு முகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி
திங்கள் போல திசை விளக்கும்மே – திரு 96-98
ஒரு முகம்.
எஞ்சிய பொருள்களைச் (சான்றோர்)காவலுறும்படி ஆராய்ந்துணர்ந்து,
திங்கள் போலத் திசைகளெல்லாவற்றையும் தெளிவாக்கி நிற்கும்;
– திசைவிளக்குதலாவது, இறைப்பொருள் தனது வியாபகமெல்லாம் உயிர்கள் உணர்ந்து இன்புறுமாறு
உணர்த்துதல் என்க – பொ.வே.சோ.உரை விளக்கம்.
1.5
மாதிரம் விளக்கும் சால்பும் செம்மையும் – பதி 32/2
நாற்புறத்தையும் விளங்கச் செய்யும் நற்குணங்களும், நடுவுநிலைமையும்

அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆக – கலி 119/1
அகன்ற உலகத்தை வெளிச்சமாக்கும் தன் பல கதிர்களையே வாயாகக்கொண்டு
2.1
அந்தி மாட்டிய நந்தா விளக்கின் – பட் 247
அந்திக்காலத்தே கொளுத்தின அணையாத விளக்கினையுடைய

பாவை_விளக்கில் பரூஉ சுடர் அழல – முல் 85
பாண்டில்_விளக்கில் பரூஉ சுடர் அழல – நெடு 175
ஓதிம விளக்கின் உயர்_மிசை கொண்ட – பெரும் 317
இரும்பு செய் விளக்கின் ஈர் திரி கொளீஇ – நெடு 42

பார்க்க : ஓதிமவிளக்கு
பார்க்க : பாண்டில்-3
பார்க்க : பாவைவிளக்கு
2.2
காய் சின முன்பின் கடுங்கண் கூளியர்
ஊர் சுடு விளக்கின் தந்த ஆயமும் – மது 691,692
எரிகின்ற சினத்தையுடைத்தாகிய வலியினையும் தறுகண்மையையும் உடைய வேட்டுவர்
(பகைவரின்)ஊரைச் சுடுகின்ற வெளிச்சத்தில் கொண்டுவந்த பசுத்திரளும்
– ச.வே.சு.உரை

விளக்குறு

விளக்குறு – (வி) 1. விளக்குகளை ஏற்று, light the lamp
2. ஒளிபெறச்செய், ஒளிரச்செய், brighten, give splendour to
1.
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி – அகம் 141/9
தெருக்களில் விளக்குகளை ஏற்றி, மாலைகளைத் தொங்கவிட்டு
2.
பெரு வரை சிறுகுடி மறுகு விளக்குறுத்தலின்
இரவும் இழந்தனள் அளியள் உரவு பெயல் – அகம் 192/12,13
பெரிய மலையிலுள்ள எமது சீறூரின் தெருவினை இருளகற்றி விளங்கச் செய்தலாலே
இரவினுமிழந்தாள் ஆவாள்

தமனியம் வளைஇய தாவு இல் விளங்கு இழை
நிலம் விளக்குறுப்ப மே தக பொலிந்து – மது 704,705
பொன்னின் ஒளி சூழ்ந்து குற்றமற்றுத் தகதகக்கும் பேரணிகலன்களால்
நிலம் பிரகாசமடைந்து மேன்மை தகப் பொலிவுபெற்று

விளங்கில்

விளங்கில் – (பெ) ஒரு சங்க கால ஊர், a city in sangam period
விளங்கில் என்னும் ஊர் சங்ககாலத்தில் அரபிக்கடல் ஓரத்தில் இருந்தது. இந்த விளங்கில் செல்வச்செழிப்பு
மிக்கதாயிருந்தது. இதன் மாடங்கள் மணிகள் பதிக்கப்பெற்றவை (புறம் 84).
இதைக் கடலன் என்பவன் ஆண்டான். இவன் பகைவரின் வேற்படையையும், யானைப்படையையும் அழிக்கும்
ஆற்றல்மிக்கவன். சிறந்த வள்ளல். எனவே மா வண் கடலன் என்று போற்றப்படுகிறான் (அகம் 81)

விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற
களம் கொள் யானை கடு மான் பொறைய – புறம் 53/4,5
விளங்கிய சீர்மையையுடைய விளங்கிற்குப் பகைவரான் வந்த இடும்பையைத் தீர்த்த
போர்க்களத்தைத் தனதாக்கிக்கொண்ட யானையையும் விரைந்த குதிரையையும் உடைய பொறையனே

— சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறையின் ஆட்சிக்குட்பட்டிருந்த விளங்கில் என்னும் ஊரைப் பகைவர்
முற்றுகையிட்டு வருத்தமுறுவித்தாராக, இவன் யானைப்படையும், குதிரைப்படையும் சிறப்புறக்கொண்டு
சென்று பகைவரை வெருட்டி விளங்கிலரை உய்வித்தனன் என்பர் ஔவை.சு.து.

— சேரர் ஆட்சிக்குக் கட்டுப்படாமல் இருந்த இந்த ஊரைச் சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை சூறையாடித்
தன் நாட்டுடன் சேர்த்துக்கொண்டான் என்னும் விக்கிப்பீடியா.

விழுமம் என்பதற்குச் சிறப்பு, இடும்பை என்ற இரு பொருளும் இருப்பதால் இவ்வாறு கருத்துக்கள்
மாறுபடுகின்றன.

விளங்கு

விளங்கு – (வி) 1. ஒளிர், பிரகாசி, shine
2. திகழ், சிறப்பாக இரு, be renowned, illustrious
3. தெளிவாக இரு, பொருள் புரியும்படி இரு, be clear, understand the meaning
1.
ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி – திரு 3
ஒழிவு இல்லாமல் மின்னும் சேய்த்துநின்று ஒளிரும் பிரகாசமான ஒளியையுடை
2.
திண் கதிர் மதாணி ஒண் குறுமாக்களை
ஓம்பினர் தழீஇ தாம் புணர்ந்து முயங்கி
தாது அணி தாமரை போது பிடித்து ஆங்கு
தாமும் அவரும் ஓராங்கு விளங்க
காமர் கவினிய பேரிளம் பெண்டிர் – மது 461-465
திண்ணியதாய் ஒளிரும் பேரணிகலன்களையுடைய இயற்கையாகவே அழகுள்ள சிறுபிள்ளைகளைப்
பேணியவராய் (அவரைத்)தழுவி, தாம் (மேலும்) இறுக மார்புற அணைத்து,
தாது சேர்ந்த தாமரைப்பூ (அதன்)மொட்டைப் பிடித்தாற் போல
தாமும் அம் மக்களும் ஓரிடத்தே சேரநின்று திகழும்படி,
ஆசைப்படும்படி அழகுபெற்ற இளமை முதிர்ந்த மகளிர்,

முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பன் மீன் நடுவண் திங்கள் போலவும்
பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கி – மது 768-770
கடல் நடுவே ஞாயிறு போன்றும்,
பல விண்மீன்களுக்கு நடுவே திங்கள் போன்றும்,
பொலிவுபெற்ற சுற்றத்தாரோடு பொலிந்து இனிதாகத் திகழ்ந்து
3.
சிறந்த வேதம் விளங்க பாடி – மது 468
சிறந்த வேதங்களைத் தமக்குப் பொருள்தெரியும்படி ஓதி,

விளம்பழம்

விளம்பழம் – (பெ) ஒரு பழம், விளாம்பழம், விளவு, Wood-apple, Feronia elephantum, Limonia acidissima
விளம்பழம் கமழும் கமம் சூல் குழிசி – நற் 12/1
விளாம்பழம் கமழும், நிறைசூலியைப் போன்ற தயிர்ப்பானையில்
– பல்லாண்டுகளாய்த் தொடர்ந்து வெண்ணெய் கடைந்தெடுக்கும் பானை விளாம்பழத்தின் மணம் கமழும்
என்னும் வழக்கு இன்றும் நாட்டுமக்களிடையே நிலவுகிறது. -ஔவை.சு.து.விளக்கம்

விளம்பு

விளம்பு – (வி) சொல், கூறு, speak, say
வேள்வியின் அழகு இயல் விளம்புவோரும் – பரி 19/43
முருகனுக்காகச் செய்யப்படும் வேள்வியின் அழகுத்தன்மையை எடுத்துச்சொல்வோரும்

விளரி

விளரி – (பெ) 1. இரங்கற் பண், melody-type suited for mourning
2. ஏழிசையில் ஆறாவது, The sixth note of the gamut
1.
சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்ப – குறு 336/3
சிறிய நாவினையுடைய ஒளிரும் மணிகள் விளரிப்பண்ணைப்போல இசைப்ப
– விளரி – இரங்கற்பண்; நெய்தல் நிலத்துக்கு உரியது – உ.வே.சா

விளரி கொட்பின் வெள் நரி கடிகுவென் – புறம் 291/4
விளரிப்பண்ணைச் சுழற்சியுறப் பாடித் தின்னவரும் குறுநரிகளை ஓட்டுவேன்
2.
விளரி நரம்பின் நயவரு சீறியாழ் – அகம் 279/11
விளரி என்னும் நரம்பினது இனிமை பொருந்திய சிறிய யாழின் இசை

விளர்

விளர் – 1. (வி) வெளுத்திரு, be pale
– 2. (பெ) 1. வெண்மை, whiteness
2. வெண்மையான கொழுப்பு, fat which is white in colour
3. வெண்மையான ஊன், pale flesh
4. இளமையானது, முற்றாதது, that which is young, immature
1.
விளர்த்த
வளை இல் வறும் கை ஓச்சி – புறம் 254/3,4
வெளுத்த
வளையில்லாத வறிய கையைத் தலைமேலே வைத்து
2.1.
அணில்வரி கொடும் காய் வாள் போழ்ந்திட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது – புறம் 246/4,5
அணிலினது வரி போலும் வரியையுடைய வளைந்த வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்திடப்பட்ட
விதை போன்ற நல்ல வெள்ளிய நறிய நெய் தீண்டாமல்

விளர் ஊன் தின்ற வெம் புலால் மெய்யர் – புறம் 359/5
வெள்ளிய தசையைத் தின்றதனால் வெவ்விய புலால் நாறும் மெய்யினையுடையராய்

அவரை
கொழும் கொடி விளர் காய் கோள் பதம் ஆக – புறம் 120/10,11
அவரையினது
கொழுவிய கொடியின்கண் வெள்ளைக் காய் அறுக்கும் செவ்வியாக
2.2.
நெய் துழந்து அட்ட
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி – நற் 41/7,8
நெய் பெய்து சமைத்த
கொழுத்த தசையிலிருந்து எழும் மணமுள்ள புகை படிந்த நெற்றியில்

விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர் – அகம் 89/10
கொழுப்பினையுடைய ஊனைத்தின்ற விசைகொண்ட சிலையினராய மறவர்கள்
2.3.
குறும் தாள் ஏற்றை கொழும் கண் அம் விளர்
நறு நெய் உருக்கி நாள்_சோறு ஈயா – புறம் 379/8,9
குறுகிய கால்களையுடைய பன்றியின் கொழுவிய ஊன் துண்டங்களான நல்ல வெள்ளிய ஊனை
நறிய நெய்யைஉருக்கி அதன்கண் பெய்து நாட்காலையில் சோற்றுணவோடு கொடுத்து
2.4.
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப – நற் 172/7
புதியதாய் வந்த பாணரின் மெல்லிய இசைப்பாட்டுப் போல

விளர்ப்பு

விளர்ப்பு – (பெ) வெளுப்பு, paleness
பைம் கழை பொதி களைந்து அன்ன விளர்ப்பின்
வளை இல் வறும் கை ஓச்சி – புறம் 253/4,5
பசிய மூங்கில் பட்டை ஒழித்தாற் போன்று வெளுத்திருந்த
வளை இல்லாத வறிய கையை தலைமேலே ஏற்றிக்கொண்டு

விளவு

விளவு – (பெ) விளா, ஒரு மரம், பார்க்க: விளம்பழம்
களவும் புளித்தன விளவும் பழுநின – அகம் 394/1
களாவும் பழுத்துப் புளிப்புச்சுவையை எய்தின, விளாவும் முதிர்ந்து பழுத்தன

உடும்பு அடைந்து அன்ன நெடும் பொரி விளவின் – நற் 24/2
உடும்பு அடைந்துகிடந்ததைப் போன்ற நெடிய செதில்களையுமுடைய விளாமரத்திலிருந்து

பொரி அரை விளவின் புன் புற விளை புழல் – அகம் 219/14
பொரி அரை விளவின் – of the wood apple trees with rough and cracked trunks –
வைதேகி ஹெர்பர்ட் மொழிபெயர்ப்பு

பார்க்க:
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல் – நற் 3/2
பொரிந்த அடியினையுடைய வேப்பமரத்தினது புள்ளியிட்டாற் போன்ற நிழலின்கண்
– ஔவை.சு.து.உரை

விளி

விளி – 1. (வி) 1. அழை, call
2. இற, die
3. அழி, perish, be ruined
4. பாடு, sing
5. தணி, குறை, subside, lessen, abate
6. நில், தடைப்படு, cease, be interrupted
7. கழி, pass, pass away
– 2. (பெ) 1. ஓசை, ஒலி, sound
2. சொல், பேச்சு, குரல், word, speech, voice
3. இசை, இசைப்பாட்டு, music, song
4. கூப்பிடுதல், calling
5. அழைப்பொலி, sound of calling
6. பேரோசை, முழக்கம், roar
1.1
புலி உற வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி
கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து – மலை 404,405
புலி வந்ததால், (தன்னைக்)கைவிட்டு ஓடிப்போன தான் (இன்னும்)விரும்புகின்ற துணையை எண்ணி,
ஆண்மான் நின்று கூப்பிடும் (அக்)காட்டை வழக்கமானபாதையில் சென்றுகடந்து
1.2
திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவை-கொல்லோ நீயே – அகம் 126/16,17
திதியன் என்பானொடு போரிட்டு மடிந்த அன்னி என்பானைப் போல
நீ இறந்துபடுவை போலும்.
1.3
புள் ஒலி மணி செத்து ஓர்ப்ப
விளிந்தன்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே – நற் 178/9,10
பறவைகள் எழுப்பும் ஒலியை மணியின் ஓசையாக எண்ணி உற்றுக்கேட்டு
வலி அழிந்து சோர்ந்துபோகிறது அவரை முற்றிலும் நம்பியிருந்த என் நெஞ்சம்.

காடு கவின் அழிய உரைஇ கோடை
நின்று தின விளிந்த அம் பணை நெடு வேய்
கண்விட தெறிக்கும் மண்ணா முத்தம் – அகம் 173/12-14
காடுகள் அழகு கெடவும், கோடை பரவி
நிலைபெர்று நீரினை உறிஞ்சுதலால் வற்றிய அழகிய பெரிய நெடிய மூங்கிலின்
கணுக்கள் பிளக்கத் தெறித்துவிழும் கழுவப்பெறாத முத்துக்கள்
1.4
இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ – மலை 7,8
இளியென்னும் பண்ணின் ஓசையைத் தானொலிக்கும் குறுகிய பாரமான நெடுவங்கியத்துடன்,
பாடுவதைச் சுருதி குன்றாமல் கைக்கொள்ளும் இனிய வேய்ங்குழலும் நெருக்கமாகச் சேர்க்கப்பட்டு,
1.5
விளியா நோய் உழந்து ஆனா என் தோழி நின் மலை – கலி 53/21
சற்றும் குறையாத பிரிவுத்துன்பத்தால் வருந்தி நிற்கும் என் தோழி,
1.6
விளியாது
உரவு கடல் பொருத விரவு மணல் அடைகரை – குறு 316/3,4
இடைவிடாமல்
வலிய கடல் மோதுகின்ற மணல் விரவிக்கிடக்கும் அடைத்தகரையில்

அளி இன்று பிணி இன்று விளியாது நரலும்
கானல் அம் சேர்ப்பனை கண்டாய் போல – கலி 128/5,6
நம்மீது இரக்கமில்லாமல், நம்மைப்போல் துயரமும் இல்லாமல், ஓயாமல் குரலெழுப்புகின்ற
அழகிய கடற்கரைச் சோலையின் தலைவனைக் கண்டவளைப் போல
1.7
நீ உறும் பொய் சூள் அணங்கு ஆகின் மற்று இனி
யார் மேல் விளியுமோ கூறு – கலி 88/20,21
நீ கூறும் பொய்ச்சூள் உனக்குத் தெய்வகுற்றம் ஏற்படுத்துமாயின் அதனால் விளையும் கேடு, இனி
யார்மேல் இறங்குமோ கூறு!
2.1
வளை வாய் கிள்ளை மறை விளி பயிற்றும்
மறை காப்பாளர் உறை பதி – பெரும் 300,301
வளைந்த வாயினையுடைய கிளிக்கு வேதத்தின் ஓசையைக் கற்பிக்கும்
வேதத்தைக் காக்கின்றோர் இருக்கின்ற ஊரிடத்தே

தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி
சிறு தலை தொழுதி ஏமார்த்து அல்கும் – நற் 142/6,7
கைத் தண்டினை இன்னொரு காலாக ஊன்றிப் பிடித்து, ஒடுங்கிய நிலையில் உதடுகளை மடித்து எழுப்பும்
சீழ்க்கையொலியினால்
சிறிய தலையினையுடைய ஆட்டுக் கூட்டத்தை வேறுபக்கம் போகாதவாறு மயங்கச் செய்து
தங்கியிருக்கவைக்கும்
2.2
வள் உயிர் தெள் விளி இடையிடை பயிற்றி
கிள்ளை ஓப்பியும் – குறி 100,101
பெருத்த ஓசையுடன் தெளிந்த சொற்களை நடுநடுவே சொல்லி
கிளியை ஓட்டியும்

கொடும் கோல் உமணர் பகடு தெழி தெள் விளி
நெடும் பெரும் குன்றத்து இமிழ் கொள இயம்பும் – அகம் 17/13,14
கடிய தார்க்குச்சிகளையுடைய, உப்புவணிகர் தம் காளைகளை அதட்டும் தெளிந்த குரல்கள்
உயர்ந்த பெரிய மலையில் மோதி எதிரொலிக்கும்
2.3
பல் வயின் கோவலர்
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற – குறி 221,222
பற்பல இடங்களிலுள்ள இடையர்கள்
ஆம்பல் எனும் பண்ணினையுடைய இனிய குழலில் தெளிந்த இசையைப் பலமுறை எழுப்ப
2.4
கிளி கடி மகளிர் விளி படு பூசல் – மலை 329
கிளியை விரட்டுகின்ற பெண்கள் கூப்பிடுதலால் பிறந்த ஆரவாரமும்;
2.5
வரி புற புறவின் புலம்பு கொள் தெள் விளி – நற் 305/7
வரிகளை முதுகில் கொண்ட புறாவின் தனிமைத்துயருடன் கூடிய தெளிந்த அழைப்பொலியைக் கேட்டு
2.6
தளி தரு தண் கார் தலைஇ
விளி இசைத்தன்றால் வியல் இடத்தானே – நற் 316/9,10
மழைத்துளியைப் பெய்யும் குளிர்ந்த கார்காலத்தைச் செய்து
இடிமுழக்கத்தை எழுப்பியது அகன்ற வானப்பரப்பில்.
– விளி – இடிக்குரல் – ஔவை.சு.து.உரை விளக்கம்

விளிம்பு

விளிம்பு – (பெ) ஓரம், Border, edge, rim
வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை – அகம் 175/1
தமது தடித்த தோளின் மேற்புறத்தை உரசிய வேகம் அமைந்த வலிய வில்லில் வைத்து

விளியர்

விளியர் – (பெ) இரைச்சல் போடுபவர், roaring men
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை
அணைய கண்ட அம் குடி குறவர்
கணையர் கிணையர் கை புனை கவணர்
விளியர் புறக்குடி ஆர்க்கும் நாட – நற் 108/2-5
தன் துணையினின்றும் பிரிந்த கொடிய யானை
அணுகுவதைக் கண்ட அழகிய குடியிருப்பின் கானவர்
அம்புகளோடும், கிணைப்பறையோடும், கையில் கட்டப்பட்ட கவண்களோடும்
கூவிப் பேரிரைச்சல் எழுப்பியவராய் தமது குடியின் புறத்தே ஆரவாரிக்கும் நாட்டினனே!

விளிவு

விளிவு – (பெ) 1. தணிதல், subsiding
2. உறக்கம், sleep
3. முடிவு, end
1.
விறல் சால் விளங்கு இழை நெகிழ விம்மி
அறல் போல் தெண் மணி இடை முலை நனைப்ப
விளிவு இல கலுழும் கண்ணொடு பெரிது அழிந்து – நற் 208/1-3
வெற்றி பொருந்திய ஒளிரும் அணிகலன்கள் நெகிழும்படியாக விம்மி அழுது,
அரித்தோடும் நீராய் தெளிந்த கண்ணீர்த்துளிகள் முலைகளினிடையே விழுந்து நனைக்க,
சற்றும் குறையாமல் மனமுருகி அழும் கண்ணுடனே பெரிதும் நிலைகெட்டு,
2.
காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது
வரி அதள் படுத்த சேக்கை – அகம் 58/3,4
காட்டில் தேடுகின்ற வேட்டையில் துயிலும் இடம் பெறாமல்
புலித்தோல் விரித்த படுக்கையில்,
3.
கடிது இடி உருமொடு கதழ் உறை சிதறி
விளிவு இடன் அறியா வான் உமிழ் நடுநாள் – அகம் 162/5,6
கடுமையாக இடிக்கும் இடியுடன் விரைந்த நீரைச் சிதறி
முடிவிடம் அறியாவாறு மேகம் பெய்தலைச் செய்யும் நடு இரவில்

விளை

விளை – (வி) 1. பயிர் முதலியன வளர், உற்பத்தியாகு, grow, be produced
2. முற்று, முதிர், mature, ripen
3. உண்டாகு, come into being
4. உற்பத்திச் செய், உண்டாக்கு, raise, produce
5. ஒன்றன் தன்மையைக் கொண்டிரு, possess the property of something else
6. நிகழ், occur
7. பின் நிகழ்வாக ஆகு, பலனாக அமை, result in
1.
சுவல் விளை நெல்லின் செ அவிழ் சொன்றி – பெரும் 131
மேட்டுநிலத்தில் விளைந்த நெல்லின் சிவந்த பருக்கையாகிய சோற்றை

உவர் விளை உப்பின் குன்று போல் குப்பை – நற் 138/1
உவர் நிலத்தில் உற்பத்தியாகும் குன்றுகளைப் போன்ற உப்புக்குவியல்களை
2.
விளை தயிர் பிதிர்வின் வீ உக்கு – மலை 109
முற்றிய தயிர் (கீழே விழுந்து ஏற்பட்ட)சிதறலைப்போல் பூக்கள் உதிர்ந்து,

வளை வாய் சிறு கிளி விளை தினை கடீஇயர் – குறு 141/1
வளைந்த வாயையுடைய சிறிய கிளிகள் விளைந்து முற்றிய தினையின்மேல் வீழாதபடி விரட்ட

நீடு அமை விளைந்த தே கள் தேறல் – திரு 195
நெடிய மூங்கிலில் இருந்து முற்றின தேனால் செய்த கள்தெளிவை
3.
நனை விளை நறவின் தேறல் மாந்தி – அகம் 221/1
அரும்பினின்றும் உண்டாகிய கள்ளின் தெளிவைப் பருகி
4.
மை படு சிலம்பின் ஐவனம் வித்தி
அருவியின் விளைக்கும் நாடனொடு – குறு 371/2,3
மேகங்கள் படியும் மலைச்சரிவில் மலைநெல்லை விதைத்து
அருவிநீரால் விளைவிக்கும் நாட்டினனால்
5.
அமிழ்து விளை தீம் கனி ஔவைக்கு ஈந்த – சிறு 101
அமிழ்தின் தன்மைகொண்ட இனிய பழத்தை ஔவைக்குக் கொடுத்தவனும்
– அமிழ்து விளைதலாவது – அமிழ்தின் தன்மையைத் தான் உடைத்தாதல்
6.
காதலான் மார்பின் கமழ் தார் புனல் வாங்கி
ஏதிலாள் கூந்தலிடை கண்டு மற்று அது
தா தா என்றாளுக்கு தானே புறன் தந்து
வேய்தந்தது என்னை விளைந்தமை மற்று அது
நோதலே செய்யேன் நுணங்கு இழையாய் இ செவ்வி
போதல் உண்டாம்-கொல் அறிந்து புனல் புணர்த்தது
ஓஓ பெரிதும் வியப்பு – பரி 24/34-40
ஒரு காதற்பரத்தையின் காதலன் தன் மார்பில் கிடந்த மணங்கமழும் மாலையைக் கழற்றி நீரில் விட,
அதனை நீர் இழுத்துச் செல்ல,
அவனது இல்பரத்தை அதனை எடுத்துச் சூடிக்கொள்ள, ஓர் அயலாளின் கூந்தலில் தன் காதலன் மாலையைக்
கண்டு, அதனைக்
கொடு, கொடு என்று கேட்ட காதற்பரத்தைக்கு, இது தானாகவே எங்கிருந்தோ வந்து
என் கூந்தலில் சூட்டிக்கொண்டது என்று சொல்ல, இது எப்படி நடந்தது? அவ்வாறு விளைந்ததற்கு
வருந்தமாட்டேன், நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகலன்களையுடையவளே! இத்தகைய தருணத்தில்
நீ இங்கு இருப்பாய் என அறிந்து அந்த மாலையை நீர் கொண்டுவந்து சேர்த்தது
ஓஓ இது பெரிதும் வியப்பிற்குரியது
7.
இரும் புலி கொள்-மார் நிறுத்த வலையுள் ஓர்
ஏதில் குறு நரி பட்டு அற்றால் காதலன்
காட்சி அழுங்க நம் ஊர்க்கு எலாஅம்
ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன்
வாழ்க்கை அது ஆக கொண்ட முது பார்ப்பான்
வீழ்க்கை பெரும் கரும்_கூத்து – கலி 65/24-29
பெரிய புலியைப் பிடிப்பதற்கு விரித்த வலையினில், ஒரு
ஒன்றிற்கும் உதவாத குள்ள நரி மாட்டிக்கொண்டதைப் போல், காதலனுடனான
சந்திப்பு கெடும்படியாகவும், நம் ஊருக்கெல்லாம்
பெரும் பேச்சாகவும் ஆகி முடிந்துபோனது, என்றைக்கும் தனக்குத்
தொழிலாகக் கொண்ட முதிய பார்ப்பானின்
காம வேட்கை என்னும் பெரிய கேலிக்கூத்து!

விளையல்

விளையல் – (பெ) நன்றாக விளைந்தது / முதிர்ந்தது, that which is grown / ripened fully
விழு தலை பெண்ணை விளையல் மா மடல் – குறு 182/1
செழித்த உச்சியையுடைய பனையின் நன்கு விளைந்த பெரிய மடலால் செய்த குதிரைக்கு

களமர்க்கு அரித்த விளையல் வெம் கள் – புறம் 212/2
களமர்க்கு அரிக்கப்பட்ட முதிர்ந்த விரும்பத்தக்க கள்

விளையாட்டி

விளையாட்டி – (பெ) விளையாட்டுப்பெண், சிறுமி, playful girl
பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல் – நற் 110/7-9
பந்தல்கால்களுக்கிடையே ஓடி
செவிலியரின் கெஞ்சலை மறுக்கும் சிறிய விளையாட்டைச் செய்பவள்,
இல்லறத்துக்குரிய அறிவையும் ஒழுக்கத்தையும் எங்கிருந்து கற்றுக்கொண்டாளோ?

விளையுட்டு

விளையுட்டு – (பெ) விளைவுடையது, one which has the yield
சாலி நெல்லின் சிறை கொள் வேலி
ஆயிரம் விளையுட்டு ஆக – பொரு 246,247
செந்நெல் விளைந்துநின்ற, வரம்பு கட்டின ஒரு வேலி அளவுள்ள நிலம்,
ஓராயிரம் கலம் என்னும் அளவில் நெல் விளைவுடையது ஆக

விளையுள்

விளையுள் – (பெ) 1. விளைச்சல், மகசூல், produce, crop
2. விளைந்தது, உற்பத்தியானது, poduce, that which is matured
கல் காயும் கடு வேனிலொடு
இரு வானம் பெயல் ஒளிப்பினும்
வரும் வைகல் மீன் பிறழினும்
வெள்ளம் மாறாது விளையுள் பெருக – மது 106-109
பாறைகள் சூடேறும் கடுமையான வேனிலால்
பெரிய மேகம் மழையை மறைத்துக்கொண்டாலும்,
(நாள்தோறும் முறையாக)வரும் விடியற்காலத்து வெள்ளி (தன் திசையில்)மாறினாலும்,
மிகுந்த நீர் மாறாது (வருகையினால்)விளைச்சல் பெருக

வேய் பெயல் விளையுள் தே கள் தேறல் – மலை 171
மூங்கில் குழாய்க்குள் பெய்தலுற்று விளைவித்ததான தேனால் செய்த கள்ளின் தெளிவை

விளைவு

விளைவு – (பெ) விளைதல், விளைச்சல், மகசூல், produce, crop
வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலை தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி – பட் 5-8
மேகம் பொய்த்தாலும் தான் பொய்யாத (காலந்தோறும் வருகின்ற),
(குடகு)மலையை உற்பத்தியிடமாகக்கொண்ட கடற்பக்கத்துக் காவிரி(யின்)
நீர் பரந்து பொன்(போல் விளைச்சல்) செழித்துப்பெறுகும் – (28-பெரிய சோழநாட்டில்),
விளைதல் தொழில் அற்றுப்போகாத அகன்ற வயல்களில்,

விழவு

விழவு – (பெ) 1. தெய்வங்களுக்கு எடுக்கப்படும் திருவிழா, festivel for a deity
2. மணவிழா போன்ற இல்ல விழா, festivel at home, like marriage
1.
வாடா பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவின் உரு கெழு பெரியோர்க்கு
மாற்று அரு மரபின் உயர் பலி கொடுமார்
அந்தி விழவில் தூரியம் கறங்க – மது 457-460
வாடாத பூக்களையும், இமைக்காத கண்ணினையும்,
அவியாகிய உணவினையுமுடைய அச்சம் பொருந்திய தெய்வங்களுக்கு,
பதிலீடு செய்வதற்கு முடியாத முறைமையை உடைய உயர்ந்த பலிகளைக் கொடுப்பதற்கு,
அந்திப் பொழுதின் விழாவில் இசைக்கருவிகள் முழங்க q

விழவு அறா வியல் ஆவணத்து
மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய
மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும் – பட் 158-160
விழாக்கோலம் நீங்காத அகன்ற அங்காடித் தெருவினில் –
குற்றம் அற்ற சிறப்பினைடைய தெய்வங்களைக் கொண்ட
மலர் அணிந்த (கோயில்)வாசலில் (கட்டின) பலரும் வணங்கும் கொடிகளும்
2.
பொன்னுடை நெடு நகர் புரையோர் அயர
நன் மாண் விழவில் தகரம் மண்ணி
ஆம் பல புணர்ப்ப செல்லாள் – அகம் 385/5-7
செல்வம் மிக்க பெரிய மனையில் மேலோர் மணம் முடித்துவைக்க
நல்ல சிறப்புற்ற மணவிழாவில் மயிர்ச்சாந்தினைப் பூசி
மற்றும் பொருந்திய பல சிறப்புக்களையு