பஃறி |
பஃறி – (பெ) படகு, boat
வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல் வாய் பஃறி
பணை நிலை புரவியின் அணை முதல் பிணிக்கும்
கழி சூழ் படப்பை – பட் 29-32
வெள்ளை(வெளேர் என்ற) உப்பின் விலையைச் சொல்லி(விற்று, அதற்கு மாற்றாக வாங்கிய)
நெல்லைக் கொண்டுவந்த, கெட்டியான விளிம்புகளையுடைய படகுகளை
கொட்டில் பந்தியில் நிறுத்தப்படும் குதிரைகளை(க் கட்டிவைப்பதை)ப் போன்று — கட்டுத்தறிகளில் கட்டிவைக்கும்
உப்பங்கழி சூழ்ந்த ஊர்ப்புறங்களையும்
|
பஃறுளி |
பஃறுளி – (பெ) குமரியாற்றின் தெற்கேயிருந்து கடலால் கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் ஒரு யாறு.
An ancient river south of the river Kumari, said to have been swallowed by sea;
இதனை, பல் + துளி எனப் பிரிப்பர்.
எம் கோ வாழிய குடுமி தம் கோ
செம் நீர் பசும்_பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன் நீர் பஃறுளி மணலினும் பலவே – புறம் 9/8-11
எம்முடைய வேந்தனாகிய குடுமி வாழ்வானாக, தம்முடைய கோவாகிய
சிவந்த நீர்மையையுடைய போக்கற்ற பசிய பொன்னைக் குத்தர்க்கு வழங்கிய
முந்நீர்க் கடல்தெய்வத்திற்கு எடுத்த விழாவிஐயுடைய நெடியோனால் உளதாக்கப்பட்ட
நல்ல நீரையுடைய பஃறுளி என்னும் ஆற்றின் மணலினும் பலகாலம்.
|
பஃறேர் |
பஃறேர் – (பெ) பல் + தேர், பல தேர்கள், many chariots
உருள் நடை பஃறேர் ஒன்னார் கொன்ற தன்
தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும் – புறம் 361/9,10
உருண்டுசெல்லும் தேர்கள் பலவற்றை, பகைவரைக் கொன்ற தன்
தாளாண்மையைப் பாராட்டிப் பாடும் புலவர்க்கு உவந்து அளித்தும்
|
பகடு |
பகடு – (பெ) 1. காளை, எருது, bull, Ox
2. பெரியது, largeness, hugeness
3. ஆண் யானை, male elephant
4. வலிமை, strength, might
1.
உழுத நோன் பகடு அழி தின்று ஆங்கு – புறம் 125/7
உழுத வலிய காளை, பின் வைக்கோலைத் தின்னாற்போல
2.
பகட்டு எருத்தின் பல சாலை – பட் 52
பெரிய எருதுகளுக்கான (அவற்றிற்கு வைக்கோல் இடும்)பல சாலைகளையும்,
3.
உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு
ஒளி திகழ் ஓடை பொலிய – புறம் 161/17,18
உயர்ந்த கொம்பினை ஏந்திய மலையைப்போன்ற வலிய களிற்றை
ஒளி விளங்கும் நெற்றிப்பட்டம் பொலிய
4.
ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன்
கதிர் விடு நுண் பூண் அம் பகட்டு மார்பின் – புறம் 88/3,4
பாடம் செய்யும் விளங்கிய நெடிய வேலையுடைய இளையோர்க்குத் தலைவனாகிய
சுடர்விடுகின்ற நுண்ணிய தொழிலையுடைய பூண் அணிந்த அழகிய வலிய மார்பினையும்
|
பகன்றை |
பகன்றை – (பெ) ஒரு கொடி வகை, அதன் மலர், indian jalap, Ipomaea turpethum
1. இது படரும் தன்மையது எனப்படுவதால், இது ஒரு கொடி வகை எனப் பெறப்படும்.
வறள் அடும்பின் இவர் பகன்றை – பொரு 195
நீரற்ற இடத்தில் எழுந்த அடும்பினையும், படர்கின்ற பகன்றையினையும்,
2.
இது வயலில் காணப்படும் என்பதால் இது ஒரு நீர்த்தாவரமாகும்.
ஒலிந்த பகன்றை விளைந்த கழனி – மது 261
தழைத்த பகன்றையின் (நெல்)முற்றிய வயல்களில்
3.
இதனை மகளிர் மாலையாகக் கட்டித் தலையில் சூடிக்கொள்வர்
பகன்றை கண்ணி பழையர் மகளிர் – மலை 459
பகன்றைப்பூ மாலை(சூடிய) கள்விற்கும் பழையர்வீட்டுப் பெண்கள்,
4.
இது வட்டவடிவமாக இருக்கும்.
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் – நற் 86/3
பாண்டில் போன்று வட்டமான, பகன்றை மலர்கின்ற
பகல் மதி உருவின் பகன்றை மா மலர் – ஐங் 456/2
பகலில் காணப்படும் மதியின் தோற்றத்தில் உள்ள பகன்றையின் பெரிய மலர்கள்
5.
இது முன்பனிக்காலத்தில் மலரும்.
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்
கடும் பனி அற்சிரம் – நற் 86/3,4
பாண்டில் போன்று வெள்ளை வட்டமான, பகன்றை மலர்கின்ற
கடுமையான பனியையுடைய முன்பனிக்காலத்தில்
6.
இதன் இலை பெரியது, இதன் மலர் பொதியை அவிழ்த்தது போன்று இருக்கும்.
மேலும் இதன் மலர் வெண்மையாக இருக்கும்.
பேர் இலை பகன்றை பொதி அவிழ் வான் பூ – குறு 330/4
பெரிய இலையைக் கொண்ட பகன்றையின் கூம்பு விரிந்த வெள்ளிய பூக்கள்
7.
இதன் பூ குறைந்த அளவு மணத்தைக் கொண்டு கள் போல் மணக்கும்.
பேர் இலை பகன்றை பொதி அவிழ் வான் பூ
இன் கடும் கள்ளின் மணம் இல கமழும் – குறு 330/4,5
பெரிய இலையைக் கொண்ட பகன்றையின் கூம்பு விரிந்த வெள்ளிய பூக்கள்
இனிமையும், கடுப்பையும் உடைய கள்ளைப் போன்று மணமின்றிக் கமழும்
8.
கோவலரும் இதனை மாலையாகக் கட்டித் தலையில் சூடிக்கொள்வர்.
பகன்றை கண்ணி பல் ஆன் கோவலர் – ஐங் 87/1
பகன்றைப்பூ மாலையைத் தலையில் சூடியவரும், பல பசுக்களை மேய்ப்பவருமான கோவலர்கள்
9.
மலர்வதற்கு முன்னர், இது சுரித்த தன்மையுடன் மொட்டாக இருக்கும்.
தளை பிணி அவிழா சுரி முக பகன்றை – அகம் 24/3
கட்டுண்ட பிணிப்பு அவிழாத சுரிந்த முகத்தையுடைய பகன்றையின் போதுகள்
|
பகர் |
பகர் – (வி) 1. சொல், கூறு, அறிவி,
2. விற்பனை செய், sell, hawk
3. கொடு, give
4. உணர்த்து, சுட்டு, indicate
5. இடம்பெயர், shift, move
1.
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து
தேறு நீர் சடை கரந்து திரிபுரம் தீமடுத்து – கலி 1/1,2
ஆறு அங்கங்களையும் அறிந்த அந்தணர்களுக்கு அரிய வேதங்கள் பலவற்றையும் அறிவித்து,
தெளிந்த நீரைக்கொண்ட கங்கையைத் தன் சடையில் அடக்கிக்கொண்டு, முப்புரங்களையும் தீயூட்டி,
2.
பகர் விரவு நெல்லின் பல அரி அன்ன – மலை 413
(பண்டங்களை)விற்றுப் (பண்டமாற்றாகப்)பெற்ற கலப்பு நெல்லின் பலவாறான அரிசியைப் போல,
3.
பரி உடை நன் மான் பொங்கு உளை அன்ன
அடைகரை வேழம் வெண் பூ பகரும்
தண் துறை ஊரன் பெண்டிர்
துஞ்சு ஊர் யாமத்தும் துயில் அறியலரே – ஐங் 13
விரைந்த ஓட்டத்தையுடைய நல்ல குதிரையின் பொசுபொசுவென்ற தலையாட்டம் போன்ற
திண்ணிய கரையில் வளர்ந்திருக்கும் கொறுக்கச்சியின் வெண்மையான பூக்களைக் கொடுக்கும்
குளிர்ந்த துறையையுடைய ஊரினைச் சேர்ந்த தலைவனின் காதற்பெண்டிர்
ஊரே தூங்கும் நள்ளிரவிலும் தூக்கத்தை அறியாதிருப்பர்.
4.
குருகு இலை உதிர குயில்_இனம் கூவ
பகர் குழல் பாண்டில் இயம்ப – பரி 15/41,42
குருக்கத்தி இலைகள் உதிரும்வண்ணம் குயில் கூட்டங்கள் கூவ,
சுருதியை உணர்த்துகின்ற குழலும் தாளமும் ஒலியெழுப்பும்போது
5.
குறும் பல் கோதை கொன்றை மலர
நெடும் செம் புற்றம் ஈயல் பகர
மா பசி மறுப்ப கார் தொடங்கின்றே – ஐங் 497/1-3
குறிய பலவான மாலையாய்க் கொன்றை மலர்ந்திருக்க,
நெடிய செந்நிறப் புற்றுகளினின்றும் ஈசல்கள் வெளிப்பட,
விலங்கினங்கள் தம் பசியை மறக்க, கார்காலம் தொடங்கிவிட்டது
|
பகர்நர் |
பகர்நர் – (பெ) விற்பனை செய்பவர், seller
இரும் கழி செறுவின் வெள் உப்பு பகர்நரொடு
ஒலி ஓவா கலி – மது 117,118
பெரிய கழியின் பாத்திகளில் விளைந்த வெள்ளை உப்பை விற்போரின் ஒலியோடு,
முழங்குதல் ஓயாத முழக்கத்தோடே
|
பகர்பவர் |
பகர்பவர் – (பெ) விற்பனைசெய்பவர், seller
வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் – கலி 66/1
பெருகுகின்ற நீரில் மலர்ந்த குவளை மலரை விற்பவர்,
|
பகர்வர் |
பகர்வர் – (பெ) விற்பனைசெய்பவர், seller
அவரை அருந்த மந்தி பகர்வர்
பக்கின் தோன்றும் நாடன் வேண்டின் – ஐங் 271/1,2
அவரையை நிறையத் தின்ற குரங்கு, பொருள்களின் விலைகூறி விற்பவரின்
பையைப் போன்று தோன்றும்
|
பகர்வு |
பகர்வு – (பெ) கொடுத்தல், giving
துணரியது கொளா ஆகி பழம் ஊழ்த்து
பயம் பகர்வு அறியா மயங்கு அரில் முது பாழ் – புறம் 381/8,9
குலைகுலையாகப் பூத்துளதாயினும் எவ்வுயிர்களாலும் கொள்ளப்படாவாய்ப் பழுத்துக் கனிந்து
பயன் கொடுத்தலை அறியாத முட்கள் கலந்த கொடிகள்பின்னிக்கிடக்கும் புதரிடையே நின்று வற்றும் முதிய
பாழிடத்தில்
|
பகற்குறி |
பகற்குறி – (பெ) களவொழுக்கத்தில் பகலில் தலைவனும் தலைவியும் சந்திக்கக் குறிப்பிட்ட இடம்.
Place assigned by lovers for clandestine meetings during day-time;
பல் பூ கானல் பகற்குறி வந்து நம்
மெய் கவின் சிதைய பெயர்ந்தனன் ஆயினும் – நற் 235/4,5
பலவான பூக்கள் உள்ள கடற்கரைச் சோலையே பகலில்சந்திக்கும் இடமாக வந்து, நமது
உடம்பின் அழகைச் சிதைத்துவிட்டுச் சென்றானாயினும்
|
பகலோன் |
பகலோன் – (பெ) சூரியன், sun
பகலோன் மறைந்த அந்தி ஆரிடை – அகம் 201/8
ஞாயிறு மறைந்த அந்தியாகிய அரிய போழ்திலே
|
பகல் |
பகல் – (பெ) 1. காலைமுதல் மாலைவரையுள்ள காலம், day time
2. பகுத்தல், dividing, separating
3. நுகத்தாணி, Middle or main peg in a yoke
4. ஊழிக்காலம், the day of destruction of the universe;
5. இளவெயில், morning sunlight
1.
மடவரல் மகளிரொடு பகல் விளையாடி – பெரும் 387
மடப்பம் தோற்றுதலையுடைய மகளிரோடு பகற்பொழுது விளையாடி;
2.
கடவுள் வழங்கும் கையறு கங்குலும்
அச்சம் அறியாது ஏமம் ஆகிய
மற்றை யாமம் பகல் உற கழிப்பி – மது 651-653
தெய்வங்கள் உலாவும் செயலற்ற இருளிடத்தும்,
அச்சத்தை அறியாமல் காவலையுடைய
முந்திய யாமத்தை (அடுத்துவந்த நடு யாமத்தினின்றும்)பகுத்தல் உண்டாகப் போக்கி,
3.
கொடு மேழி நசை உழவர்
நெடு நுகத்து பகல் போல
நடுவு நின்ற நல் நெஞ்சினோர்நெடு நுகத்து பகல் போல – பட் 205-207
வளைந்த மேழி(யால் உழவுத்தொழிலை) விரும்பும் உழவரும்
நீண்ட நுகத்தடியில் (தைத்த) பகலாணி போல,
நடுவுநிலையென்னும் குணம் நிலைபெற்ற நல்ல நெஞ்சினையுடையோர்
4.
துஞ்சல் உறூஉம் பகல் புகு மாலை – பதி 72/8
எல்லா உயிர்களும் இறக்கின்ற ஊழிக்காலம் நுழைகின்ற போதில்
5.
சாய் குழை பிண்டி தளிர் காதில் தையினாள்
பாய் குழை நீலம் பகல் ஆக தையினாள் – பரி 11/95,96
சாய்ந்து குழைந்த அசோகின் தளிரைத் தன் காதில் செருகியிருந்தவள், (அந்த அசோகந்தளிரின் செம்மையால்)
ஒளிபாயும் குழையையுடையவள் அணிந்திருந்த நீலமலர் இளவெயில் படர்ந்தது போன்று ஆகும்படி
சூடிக்கொண்டாள்,
|
பகல்கெழுசெல்வன் |
பகல்கெழுசெல்வன் – (பெ) சூரியன், sun
பகல்கெழுசெல்வன் குட மலை மறைய – நற் 215/2
பகல்பொழுதைச் செய்த ஞாயிறு மேற்குமலையில் மறைய,
|
பகழி |
பகழி – (பெ) அம்பு, arrow
கொடு வில் எயினர் பகழி மாய்க்கும் – குறு 12/3
வளைந்த வில்லையுடைய எயினர் தம் அம்புகளைத் தீட்டும்
|
பகார் |
பகார் – (பெ) பகர்வார், விற்பவர், seller
பகாஅர்
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால் – அகம் 181/22,23
விற்பாரது
நறுமணப் பண்டங்கள் நாறுகின்ற வண்டுகள் மொய்க்கும் ஐம்பகுதியாய கூந்தல்
பகர்வார் என்பது பகார் எனத் திரிந்து நின்றது.
|
பகு |
பகு – (வி) 1. பிளவுபடு, be split, divided
2. பகிர்ந்துகொடு, பங்கிடு, distribute
3. பிள, split into parts
4. பிரி, divide
1.
பகு வாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி – பெரும் 112
பிளவுபட்ட வாயையுடைய நாய்களுடன் பசிய புதர்களை அடித்து
2
கானவன் எய்த முளவு_மான் கொழும் குறை
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு
காந்தள் அம் சிறுகுடி பகுக்கும் – நற் 85/8-10
வேட்டுவன் எய்த முள்ளம்பன்றியின் கொழுத்த தசையை,
தேன் மணக்கும் கூந்தலையுடைய கொடிச்சி தான் அகழ்ந்தெடுத்த கிழங்குடன்
காந்தள் மலர்ந்துகிடக்கும் அழகிய சிறுகுடியினருக்குப் பகிர்ந்துகொடுக்கும்
3.
மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையை
வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன்-கொல்
மாயோன் என்று உட்கிற்று என் நெஞ்சு – கலி 103/53-55
தன்னை விரும்பாத கஞ்சன் முதலானோர் கட்டவிழ்த்துவிட்ட கழுத்து மயிரினைக் கொண்ட குதிரையை
அதன் வாயைப் பிளந்திட்டு அதனைக் கையால் அடித்த சமயத்தில் இப்படிப்பட்டவனாயிருந்தானோ அந்தக்
கண்ணன் என்று கூறும்படியாக நடுங்கியது என் நெஞ்சு;
4.
நினக்கு யான்
உயிர் பகுத்து அன்ன மாண்பினேன் ஆகலின் – நற் 128/3,4
உனக்கு யான்
ஓருயிரை இரு உடம்புகளுக்குள் பிரித்து வைத்தாற் போன்ற சிறப்புற்றவளாதலினால்
|
பகுத்தூண் |
பகுத்தூண் – (பெ) பகிர்ந்து உண்ணும் உணவு, food shared with others
இனியவை பெறினே தனிதனி நுகர்கேம்
தருக என விழையா தா இல் நெஞ்சத்து
பகுத்தூண் தொகுத்த ஆண்மை
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 38/13-16
உன்னிடமிருந்து இனியவற்றைப் பெறும்போது, ‘அவற்றைத் தனித்தனியே நுகருவோம்,
கொண்டுவாருங்கள்’ என்று பெறுவோர் விரும்பாமல், மாசற்ற மனத்தினராய்
பகிர்ந்து உண்ணுவதற்காக உணவைத் திரளாகத் தருகின்ற ஆண்மைச் சிறப்பொடு
பிறர்க்கென்று வாழ்பவனாக நீ இருப்பதால்
|
பகை |
பகை – (பெ) 1. விரோதம், பகையுணர்ச்சி, hostility, enmity
2. பகைவன், விரோதி, எதிராளி, foe, enemy, opponent
3. மாறுபாடு, contrast
1.
வேந்து பகை தணிக யாண்டு பல நந்துக – ஐங் 6/2
வேந்தன் பகை தணிவானாக; அவன் வாழ்நாள் பல ஆண்டுகளுக்கு நீளுக
2.
விரி கடல் வியன் தானையொடு
முருகு உறழ பகை தலைச்சென்று – மது 180,181
விரிந்து நிற்கும் கடல் போல் அகன்ற படையோடு
முருகனைப் போன்று பகைவரிடத்திற்குச் சென்று
3.
நெய்தல் அம் பகை தழை பாவை புனையார் – ஐங் 187/3
நெய்தல் பூவினின்றும் மாறுபாடுடைய இந்தத் தழையுடையைத் தம் பாவைக்கும் அணியமாட்டார்
|
பக்கு |
பக்கு – (பெ) பை, bag
அவரை அருந்த மந்தி பகர்வர்
பக்கின் தோன்றும் – ஐங் 271/1,2
அவரையை நிறையத் தின்ற குரங்கு, பொருள்களின் விலைகூறி விற்பவரின்
பையைப் போன்று தோன்றும்
|
பங்கம் |
பங்கம் – (பெ) துண்டம், piece
செம் குங்கும செழும் சேறு
பங்கம் செய் அகில் பல பளிதம்
மறுகுபட அறை புரை அறு குழவியின்
அவி அமர் அழல் என அரைக்குநர் – பரி 10/81-84
சிவந்த குங்குமத்தால் ஆகிய செழுமையான சேற்றையும்,
துண்டாக்கப்பட்ட அகிலையும், பலவகைப் பச்சைக்கற்பூரத்தையும்,
ஒன்றாகக் கலக்குமாறு குற்றமற்ற குழவிக்கல்லால்
அவியாக பலியுணவை இட்ட வேள்வித்தீயின் நிறத்தைப் போன்று அரைப்பார் சிலர்
|
பங்கு |
பங்கு – (பெ) சனி, the planet Saturn
அங்கி உயர் நிற்ப அந்தணன் பங்குவின்
இல்ல துணைக்கு உப்பால் எய்த – பரி 11/7,8
கார்த்திகை உச்சமாக நிற்க, வியாழன் சனியின்
இரட்டை இல்லங்களாகிய மகரம், கும்பம் ஆகியவற்றுக்கு மேலேயுள்ள மீனராசியைச் சேர
|
பங்குனி |
பங்குனி – (பெ) பன்னிரண்டாம் தமிழ் மாதம், the twelfth month of the Tamil year, March-April
பங்குனி முயக்கம் கழிந்த வழி நாள் – அகம் 137/9
பங்குனி விழா கழிந்த அடுத்தநாளில்
|
பச |
பச – (வி) 1. பசலை நிறம்பெறு, காதல் நோயினால் நிறம் மாறு,
turn sallow or pale due to love-sickness
2. ஒளி மங்கு, lose lustre
3. பொன்னிறம் பெறு, become golden
1.
கடுங்கண் யானை கானம் நீந்தி
இறப்பர்-கொல் வாழி தோழி நறு வடி
பைம் கால் மாஅத்து அம் தளிர் அன்ன
நன் மா மேனி பசப்ப
நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே – குறு 331/4–8
கடுமையான யானைகள் இருக்கும் பாலைநிலத்தைக் கடந்து
செல்வாரோ தோழி! வாழ்க! நறிய வடுவையும்
பசிய அடிமரத்தையும் உடைய மா மரத்தின் அழகிய தளிர் போன்ற
நல்ல மாமைநிறமுள்ள மேனியில் பசலை ஊர
நம்மைக்காட்டிலும் சிறந்த அரிய பொருளை ஈட்டுவதற்கு
2.
அம்ம வாழி தோழி நம் ஊர்
பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால்
நிறத்தினும் நிழற்றுதல்-மன்னே
இனி பசந்தன்று என் மாமை கவினே – ஐங் 35
தோழியே கேட்பாயாக! நம் ஊரின்
பொய்கையில் பூத்த ஆம்பல் மலரின் நார் உரிக்கப்பெற்ற மெல்லிய தண்டின்
நிறத்தைக் காட்டிலும் ஒளியுடையதாக இருந்து,
இப்போது பசந்துபோயிற்று, என் மாநிற மேனியழகு.
3.
அம்ம வாழி தோழி நம் ஊர்
பொய்கை பூத்த புழை கால் ஆம்பல்
தாது ஏர் வண்ணம் கொண்டன
ஏதிலாளற்கு பசந்த என் கண்ணே – ஐங் 34
தோழியே கேட்பாயாக! நம் ஊரின்
பொய்கையில் பூத்த உள்துளையுள்ள தண்டினையுடைய ஆம்பல் மலரின்
தாதுக்கள் போன்ற பொன் நிறத்தைக் கொண்டன,
நமக்கு அயலானாகிவிட்டவனுக்காகப் பசந்துபோன எனது கண்கள்.
|
பசப்பு |
பசப்பு – (பெ) காதலர் பிரிவால் பெண்களின் மேனியில் நிறம் மாறுபடுதல்,
turning sallow or pale due to love-sickness
வேய் நலம் இழந்த தோள் விளங்கு இழை பொறை ஆற்றாள்
வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை – கலி 127/16,17
மூங்கில் போன்ற அழகை இழந்த தோள்கள், தம் ஒளிவீசும் அணிகலன்களைத் தாங்கமாட்டாமல் தளர,
பளிச்சென்ற நெற்றியில் பசலை படர இவளை நீ துறந்து சென்றாய்?
பிரிவுத்துன்பத்தால் பெண்களுக்கு இவ்வாறு ஏற்படும் நிறமாற்றம் சிறிது சிறிதாக நடைபெறுவதைப்
பசப்பு ஊர்தல், பசப்பு இவர்தல் எனப் புலவர்கள் பாடியுள்ளனர்.
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே – நற் 197/2
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர – நற் 358/2
நுதல் பசப்பு இவர்ந்து திதலை வாடி – குறு 185/1
கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும் – குறு 371/1
மை இல் வாள் முகம் பசப்பு ஊரும்மே – கலி 7/8
பாம்பு சேர் மதி போல பசப்பு ஊர்ந்து தொலைந்த_கால் – கலி 15/17
நிறன் ஓடி பசப்பு ஊர்தல் உண்டு என – கலி 16/21
நுதல் ஊரும் பசப்பு ஆயின் நுணங்கு_இறை அளி என்னோ – கலி 28/15
போர்ப்பது போலும் பசப்பு – கலி 33/15
பிறை நுதல் பசப்பு ஊர பெரு விதுப்பு உற்றாளை – கலி 99/10
பழி தபு வாள் முகம் பசப்பு ஊர காணும்_கால் – கலி 100/18
பொதுவாகப் பெண்களின் மேனியில் ஏற்படும் நிறமாற்றம், குறிப்பாக, அவர்களுடைய கண்களிலும்,
நெற்றியிலும் படரும் எனவும் புலவர்கள் பாடியுள்ளனர்.
|
பசலை |
பசலை – (பெ) 1. இளமை, infancy
2. பொன்னிறம், golden colour
3. காதலர் பிரிவால் பெண்களின் மேனியில் ஏற்படும் நிறமாற்றம்
sallowness or paleness of complexion in lady’s body or body parts due to
love-sickness
1.1
சிறு தாம்பு தொடுத்த பசலை கன்றின் – முல் 12
சிறிய கயிறினாலே கட்டப்பட்ட பச்சிளங்கன்றின்
1.2
பசலை நிலவின் பனி படு விடியல் – புறம் 392/3
இளம் நிலவு திகழும் பனி சொரியும் விடியற்காலத்தே
2
பாழ் ஊர் நெருஞ்சி பசலை வான் பூ – புறம் 155/4
பாழூரின்கண் நெருஞ்சியினது பொன்னிறத்தையுடைய வாலிய பூ
3.
ஊர் உண் கேணி உண்துறை தொக்க
பாசி அற்றே பசலை காதலர்
தொடு_உழி தொடு_உழி நீங்கி
விடு_உழி விடு_உழி பரத்தலானே – குறு 399
ஊரினர் உண்ணும் சிறிய குளத்தில் உண்ணும் துறையில் கூடிய
பாசியைப் போன்றது பசலைநோய்; காதலர்
தொடும்பொழுதெல்லாம் நீங்கி,
அவர் விடும்பொழுதெல்லாம் மீண்டும் பரந்துவிடுகிறது
|
பசிப்பிணிமருத்துவன் |
பசிப்பிணிமருத்துவன் – (பெ) இரவலர் வறுமையைப் போக்கும் வள்ளல், philanthropist
பசிப்பிணிமருத்துவன் இல்லம் – புறம் 173/11
பசிநோய் தீர்க்கும் மருத்துவனான வள்ளலின் இல்லம்
|
பசு |
பசு – 1. (பெ.அ) 1. இள மஞ்சள் நிறமான, pale yellow
2. புத்தம்புதிய, fresh
3. தூய்மைசெய்யப்படாத, unpure, crude
4. இளமையான, young
-2. (பெ) பால் தரும் பெண் மாடு, cow
1.1.
செம் நீர் பசும்பொன் புனைந்த பாவை
செல் சுடர் பசு வெயில் தோன்றி அன்ன – மது 410,411
{சிவந்த தன்மையினையுடைய பசும்பொன்னால் செய்த பாவை
வீழ்கின்ற ஞாயிற்றின் இள மஞ்சள் நிறமான மாலைவெயிலில் காட்சியளித்தது போன்ற
1.2.
வால் அரிசி பலி சிதறி
பாகு உகுத்த பசு மெழுக்கின்
காழ் ஊன்றிய கவி கிடுகின்
மேல் ஊன்றிய துகில் கொடியும் – பட் 165-168
வெண்மையான அரிசியையும் பலியாகத் தூவி,
சந்தனக் குழம்பினைக் கொட்டி மெழுகிய புது மெழுக்கினையுடைய,
கால்கள் நட்டு (அதன் மேல்)வைத்த கவிந்த மேற்கூரையின்
மேலே நட்டுவைத்த (வீர வணக்க)துகில் கொடிகளும்,
1.3.
கைவல் கம்மியன் கவின் பெற கழாஅ
மண்ணா பசு முத்து ஏய்ப்ப குவி இணர்
புன்னை அரும்பிய – நற் 94/4-6
கைத்தொழிலில் வல்ல கம்மியன் அழகுபெறக் கழுவாத
தூய்மைசெய்யாத சுத்தமற்ற முத்தைப் போல குவிந்த கொத்துக்களையுடைய
புன்னை மரம் அரும்புவிட்டிருக்கின்ற
1.4.
மா கடல் நடுவண் எண் நாள் பக்கத்து
பசு வெண் திங்கள் தோன்றி ஆங்கு – குறு 129/3,4
கரிய கடலின் நடுவில் எட்டாம் நாளுக்குரிய
இளமையான வெள்ளிய திங்கள் தோன்றியதைப் போல்
2.
பல் பசு பெண்டிரும் பெறுகுவன் – ஐங் 271/3
பல பசுக்களையும், பெண்டிரையும் பெறக்கூடிய தகுதியையுடையவன்
|
பசுமஞ்சள் |
பசுமஞ்சள் – (பெ) பச்சையான மஞ்சள், fresh turmeric root
சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து – திரு 235
பச்சையாக, பசுமையாக பறித்தவுடன் காணப்படும் மஞ்சளே பசுமஞ்சள்.
|
பசுமபொன் |
பசும்பொன் – (பெ) மாற்று உயர்ந்த பொன், fine gold
செம் நீர் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன் – புறம் 9/9,10
சிவந்த நீர்மையுள்ள போக்கற்ற பசிய பொன்னை கூத்தர்க்கு வழங்கிய
முந்நீர்க் கடல்தெய்வத்திற்கு எடுத்த விழாவினையுடைய நெடியோன்
|
பசும் |
பசும் – (பெ.அ) 1. பசிய, greenish
2. முற்றாத, not riped
3. புத்தம்புதிய, fresh
4. இளமையான, young, tender
5. உலர்ந்துபோகாத, not dried
6. பசும்பொன்னாலான, golden
7. சுடப்படாத, வேகவைக்காத, not burnt
1.
உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய்
சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின்
கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க
பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு
உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் – திரு 47-51
காய்ந்து போன மயிரினையும், நிரை ஒவ்வாத பல்லினைக் கொண்ட பெரிய வாயினையும்,
சுழலும் விழியையுடைய பசிய கண்ணினையும், கொடிய பார்வையினையும்,
பிதுங்கிய கண்ணையுடைய கூகையோடு, கொடிய பாம்பும் தூங்கும் அளவிற்குப் பெரிதான
பெரிய முலையை வருத்துகின்ற காதினையும், சொரசொரப்பான பெரிய வயிற்றையும்,
(கண்டோர்)அஞ்சுதல் பொருந்திய நடையினையும் உடைய அச்சம் தோன்றுகின்ற பேயாகிய மகள்
2.
முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்
கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை
நுண் நீர் தெவிள வீங்கி புடை திரண்டு
தெண் நீர் பசும் காய் சேறு கொள முற்ற – நெடு 23-26
பெரிய அடிப்பகுதியையுடைய பாக்கு மரத்தின் (நீல)மணியைப் போன்ற கழுத்தின்
கொழுத்த மடல்களில் (பாளை)விரிந்த திரட்சியைக் கொண்ட கொத்துக்களில்
நுண்ணிய நீர் திரளும்படியாக வீங்கிப் பக்கம் திரண்டு
தெளிந்த நீர் (கொண்ட)முற்றாத காய் இனிமை கொள்ளும்படி முற்ற;
3.
பண்ணியம் அட்டியும் பசும் பதம் கொடுத்தும் – பட் 203
(பல)பண்டங்களை ஆக்கியிட்டும், புதிய நல்லுணவு கொடுத்தும்
4.
துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதி தேறல் – மலை 463
(வேகும்போது கொதிப்பதால்)குலுங்கும் பானையிலிருந்து வடித்த (நெல்லின்)இளம் முளைகளாலான தெளிந்த
கள்ளை
5.
கரும் கொடி மிளகின் காய் துணர் பசும் கறி – மலை 521
கரிய கொடிகளையுடைய மிளகின் காய்க்குலைகளின் (காய்ந்துபோகாத)பச்சை மிளகும்
6.
கை புனை சிறு நெறி வாங்கி பையென
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்று
பசும் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கி
செலவுடன் விடுகோ தோழி – நற் 222/3-6
கையால் செய்யப்பட்ட சிறிய வளைவைக் கொண்ட ஊஞ்சலை இழுத்து, மெதுவாக
விசும்பில் பறக்கும் அழகிய மயிலைப் போன்று, நான் இன்று
பசும்பொன்னால் ஆகிய மணிகள் பதித்த வடத்தையுடைய அல்குலைப் பற்றி, தள்ளிவிட்டு
உயரே செல்ல விடுக்கிறேன் தோழி!
7.
ஈர் மண் செய்கை நீர் படு பசும் கலம்
பெரு மழை பெயற்கு ஏற்று ஆங்கு – நற் 308/8,9
ஈர மண்ணால் செய்யப்பட்டு நீர் நிறைந்திருக்கும் பச்சையான மண்குடம்
பெரிய மழை பெய்வதனில் நனைந்து கரைந்ததைப் போல,
|
பசும்கண்கடவுள் |
பசும்கண்கடவுள் – (பெ) சிவபெருமான், Lord Siva
படர் அணி அந்தி பசும்கண்கடவுள் – கலி 101/24
துன்பத்தை நுகர்கின்ற அந்திக்காலமாகிய ஊழிமுடிவில் ஒருபாதி உமையின் பச்சைநிறத்தைக் காட்டும்
இறைவன்
|
பசும்பாம்பு |
பசும்பாம்பு – (பெ) பச்சைப்பாம்பு, a kind of snake green in colour
சினை பசும்பாம்பின் சூல் முதிர்ப்பு அன்ன
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ – குறு 35/2,3
கருவுற்ற பச்சைப்பாம்பின் சூல் முதிர்ச்சி போன்ற
பருத்த கரும்பின் குவிந்த அரும்பு மலரும்படி
|
பசும்பிடி |
பசும்பிடி – (பெ) ஒரு மரம், அதன் பூ, Mysore gamboge, Garcinia xanthochymus;
பசும்பிடி இள முகிழ் நெகிழ்ந்த வாய் ஆம்பல் – பரி 19/75
பச்சிலையின் இளம் அரும்பும், மலர்ந்த வாயையுடைய ஆம்பலும்
|
பசை |
பசை – 1. (வி) அன்புகொள், be kind, loving
– 2. (பெ) 1. துவைக்கும்போது துணிகளுக்குப் போடும் கஞ்சி, starch for the washed clothes
2. பிசின், glue
1.
பசைஇ பசந்தன்று நுதலே – குறு 87/4
அவர்மீது அன்புகொண்டதால் வெளுத்துப்போயிற்று என் நெற்றி
2.1.
நலத்தகை புலைத்தி பசை தோய்த்து எடுத்து
தலை புடை போக்கி தண் கயத்து இட்ட
நீரின் பிரியா பரூஉ திரி கடுக்கும்
பேர் இலை பகன்றை பொதி அவிழ் வான் பூ – குறு 330/1-4
பெண்மை நலமும் அழகும் வாய்ந்த சலவைப்பெண், கஞ்சியில் தோய்த்து எடுத்து
ஒருதரம் கல்லில் அடித்து முடித்து, குளிர்ந்த குளத்தில் இட்ட,
நீரில் அலசிவிடாத பருத்த ஆடையின் முறுக்கைப் போன்றிருக்கும்
பெரிய இலையைக் கொண்ட பகன்றையின் கூம்பு விரிந்த வெள்ளிய பூக்கள்
2.2.
பசை படு பச்சை நெய் தோய்த்து அன்ன
சேய் உயர் சினைய மா சிறை பறவை – அகம் 244/1,2
பசை பொருந்திய தோலை நெய்யில் தோய்த்தாற்போன்ற,
மிக்க உயரமான கிளைகளில் இருக்கும் கரிய சிறகினையுடைய வாவல்
|
பச்சிறா |
பச்சிறா – (பெ) பச்சை + இறா, fresh prawn
பச்சிறா கவர்ந்த பசும் கண் காக்கை – நற் 258/8
பசிய இறாமீனைக் கவர்ந்த பசுமையான கண்களைக்கொண்ட காக்கை,
|
பச்சிலை |
பச்சிலை – (பெ) பச்சை + இலை, green leaf
புலரா பச்சிலை இடை இடுபு தொடுத்த
மலரா மாலை பந்து கண்டன்ன – புறம் 33/12,13
காய்ந்துபோகாத பசிய இலையை இடையிட்டுத் தொடுக்கப்பட்ட
மலராத முகையினையுடைய மாலையினது பந்தைக் கண்டாற்போன்று
|
பச்சூன் |
பச்சூன் – (பெ) பச்சை + ஊன், raw meat
மறு இல் தூவி சிறு_கரும்_காக்கை
அன்பு உடை மரபின் நின் கிளையோடு ஆர
பச்சூன் பெய்த பைம் நிண வல்சி
பொலம் புனை கலத்தில் தருகுவென் மாதோ – ஐங் 391/1-4
கறை படியாத இறகுகளையுடைய சிறிய கரிய காக்கையே!
ஒருவருக்கொருவர் அன்புகொள்ளும் மரபையுடைய உனது சுற்றத்தோடு வயிறார உண்ணும்படி
பச்சை ஊன் கலந்த புதிய கொழுப்புள்ள சோற்றினைப்
பொன்னால் செய்த கலத்தில் தருவேன், பார்!
|
பச்சை |
பச்சை – (பெ) 1. தோல், skin
2. தோலினால் ஆன போர்வை, covering or hide made of skin
3. பிரத்தியும்நன், Pradyumna. A vyūha manifestation of Viṣṇu.
4. பச்சை நிறம், green colour
1.
புல புல்வாய் கலை பச்சை
சுவல் பூண் ஞான் மிசை பொலிய – புறம் 166/11,12
காட்டுநிலத்தில் வாழும் புல்வாய் என்னும் கலைமானின் தோல்
உனது தோளின்கண் இடப்பட்ட பூணு நூல் மீது சிறந்து விளங்க
2.1
விளக்கு அழல் உருவின் விசி_உறு பச்சை
எய்யா இளம் சூல் செய்யோள் அம் வயிற்று
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை – பொரு 5-8
விளக்குப் பிழம்பின் (நிறத்தை ஒத்த)நிறமுடையதும் விசித்துப் போர்க்கப்பட்டதும் ஆகிய தோல்,
(பிறரால் நன்கு)அறியப்படாத இளைய கருவினையுடைய சிவந்த நிறமுடையவளின் அழகிய வயிற்றின்மேல்
மென்மையாகிய மயிர் ஒழுங்குபடக் கிடந்த தோற்றத்தைப்போல,
இரண்டு தலைப்பையும் கூட்டித் தைத்த (மரத்தைத் தன் அகத்தே)பொதிதலுறும் போர்வையினையும்
2.2
கான குமிழின் கனி நிறம் கடுப்ப
புகழ் வினை பொலிந்த பச்சையொடு தேம் பெய்து
அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின்
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி
கூடு கொள் இன் இயம் – சிறு 225-229
காட்டுக் குமிழின் பழத்தின் நிறத்தை ஒப்ப,
புகழப்படும் தொழில்வினை சிறந்து விளங்கும் போர்வையோடு; தேன் (போன்ற தன்மையைப்)பெய்துகொண்டு,
அமிழ்தத்தைப் பொதிந்து துளிக்கின்ற முறுக்கு அடங்கின நரம்பையும் உடைய
பாடும் துறைகளெல்லாம் முடியப் பாடுதற்கு, பயன் விளங்குகின்ற இசைகளைத்
சுதிசேர்த்தல் கொண்ட இனிய யாழை
2.3
பாசிலை ஒழித்த பராஅரை பாதிரி
வள் இதழ் மா மலர் வயிற்று இடை வகுத்ததன்
உள்ளகம் புரையும் ஊட்டு_உறு பச்சை – பெரும் 4-6
பசிய இலைகளை உதிர்த்த பெருத்த அடிமரத்தையுடைய பாதிரியின்
வளமையான இதழையுடைய பெரிய பூவின் வயிற்றை நடுவே பிளந்ததனுடைய
உள்ளிடத்தைப் போன்ற நிறமூட்டப்பெற்ற தோலினையும்;
2.4
புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து
புதுவது போர்த்த பொன் போல் பச்சை – மலை 28,29
புதுமையான உருவாக்கமாக தந்தத்தை யாப்பாக(பத்தரின் மேல் குறுக்குக்கட்டையாக) அமைத்து,
புதியதாகப் போர்த்திய பொன்னின் நிறம் போன்ற (நிறமுடைய) தோல்போர்வையை உடையதாய்
யாழின் பத்தல் என்று சொல்லப்படும் குடத்தினைப் பதப்படுத்திய தோல்கொண்டு போர்வை போல் மூடுவர்.
இந்தத் தோல்போர்வையே பச்சை எனப்படும்.
3.
பொன் கண் பச்சை பைம் கண் மாஅல் – பரி 3/82
பொன்னிறக் கண்ணையும் பச்சைமேனியும் உடைய பிரத்தியும்நனே! பசிய கண்ணையுடைய திருமாலே!
4.
பவள வளை செறித்தாள் கண்டு அணிந்தாள் பச்சை
குவளை பசும் தண்டு கொண்டு – பரி 11/101,102
பவள வளையலைச் செறிய அணிந்திருந்தாள் ஒருத்தியைக் கண்டு, இன்னொருத்தி அணிந்தாள் பச்சையான
குவளையின் இளம் தண்டினைக் கையில் வளையல்போல்,
|
பஞ்சவன் |
பஞ்சவன் – (பெ) பாண்டியன், the Pandiya king
பணிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன் கூடல் – பரி 24/46
பிறரைப் பணிதல் இல்லாத உயர்ந்த சிறப்பினையுடைய பாண்டியனின் மதுரை
|
பஞ்சவர் |
பஞ்சவர் – (பெ) பாண்டியர், Pandiya kings
செரு மாண் பஞ்சவர் ஏறே நீயே – புறம் 58/8
போரின்கண் மாட்சிமைப்பட்ட பாண்டவர் குடியுள் ஏறு போவான் நீ.
|
பஞ்சாய் |
பஞ்சாய் – (பெ) ஒரு கோரை வகை, a grass, cyperus rotundus tuberosus;
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி
கொடும் கால் மா மலர் கொய்துகொண்டு அவண
பஞ்சாய் கோரை பல்லின் சவட்டி
புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி – பெரும் 215-218
அரும்புகள் சூழ்ந்த இதழ்களையுடைய மறிந்த வாயையுடைய முள்ளியின்
வளைந்த காம்பினையுடைய கரிய பூவைப் பறித்துக்கொண்டு, அங்கு உண்டாகிய
பஞ்சாய்க் கோரையைப் பல்லால் சிதைத்து(க் கிழித்து)
முடிந்த நாரால் கட்டிய உருவாக்கம் இனிதான மாலையை
|
பஞ்சி |
பஞ்சி – (பெ) 1. பஞ்சு, cotton
2. வெள்ளைத்துணி, white piece of cloth
1.
பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே – நற் 324/9
பஞ்சு போன்ற மென்மையான அடிகளால் நடந்துவருகின்றாள்.
2.
பஞ்சியும் களையா புண்ணர் – புறம் 353/15
வெள்ளைத்துணியும் நீக்கப்படாத புண்ணையுடையராய்
|
பஞ்சுரம் |
பஞ்சுரம் – (பெ) குறிஞ்சி அல்லது பாலைப் பண் வகை,
A secondary melody-type of the kuRinjci or pAlai class
வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும் – ஐங் 311/1
வேங்கை மரத்தில் பூப் பறிப்போர் பஞ்சுரப்பண் இசையில் ஒருவரையொருவர் அழைத்துக்கொள்வதைக்
கேட்டாலும்
|
படப்பு |
படப்பு – (பெ) வைக்கோல்போர், hayrick
புன் தலை சிறார் மன்றத்து ஆர்ப்பின்
படப்பு ஒடுங்கும்மே – புறம் 334/3,4
புல்லிய தலையையுடைய சிறுவர்கள் மன்றத்தின்கண் விளையாடுவோர் செய்யும் ஆரவாரத்துக்கு அஞ்சி
வைக்கோல்போருக்குள் பதுங்கும்
|
படப்பை |
படப்பை – (பெ) 1. தோட்டம், கொல்லை, enclosed garden
2. வீட்டுக்குப் பின்புறம், புழைக்கடை, backyard of a house
3. அடுத்துள்ள இடம், அண்மைப் பகுதி, adjoining region or locality
4. புறநகர்ப்பகுதி, outskirts of a city
1.
எம் படப்பை
கொடும் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை
பழம் தூங்கு நளிப்பின் காந்தள் அம் பொதும்பில்
பகல் நீ வரினும் புணர்குவை – அகம் 18/13-16
எம் தோட்டத்தை அடுத்துள்ள
வளைந்த தேனிறால் கட்டப்பட்ட உச்சி உயர்ந்த நெடிய மலையில்
பழங்கள் தொங்குகின்ற செறிவான மரங்கள் உள்ள காந்தள் பூத்துள்ள சோலையில்
பகலில் நீ வந்தாலும் பொருந்தலாம்
2.
இன்னள் ஆயினள் நன்_நுதல் என்று அவர்
துன்ன சென்று செப்புநர் பெறினே
நன்று-மன் வாழி தோழி நம் படப்பை
நீர் வார் பைம் புதல் கலித்த
மாரி பீரத்து அலர் சில கொண்டே – குறு 98
இதுபோல் ஆகிவிட்டாள் நல்ல நெற்றியையுடையவள் என்று அவர்
கிட்டச் சென்று கூறுவார் கிடைத்தால்,
நல்லது நிச்சயமாக, வாழ்க தோழி! நம் கொல்லைப்புறத்தில்
நீர் ஒழுகி வளர்ந்த புதரின்மேல் செழித்துப் படர்ந்த
கார்காலத்து பீர்க்கின் மலர்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு சென்று
3.
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை
தண்டலை உழவர் தனி மனை சேப்பின் – பெரும் 354,355
மஞ்சளையுடைய முற்றத்தினையும் மணல் கமழ்கின்ற சுற்றுப்புறங்களையும் உடைய
தோப்புகளில் வாழும் உழவரின் தனித்தனியாக அமைந்த மனைகளில் தங்கினால்
4.
கழி சூழ் படப்பை கலி யாணர்
பொழில் புறவின் பூ தண்டலை – பட் 32,33
உப்பங்கழி சூழ்ந்த ஊர்ப்புறங்களையும், மனமகிழ்ச்சி தரும் புதுவருவாயையுடைய
தோப்புக்களை அடுத்து இருக்கும் பூஞ்சோலைகளையும்,
|
படம் |
படம் – (பெ) 1. சட்டை, coat, jacket
2. புடவை, saree
1.
அடி புதை அரணம் எய்தி படம் புக்கு – பெரும் 69
பாதங்களை மறைக்கின்ற செருப்பைக் கோத்து, சட்டை அணிந்து
2.
படம் செய் பந்தர் கல் மிசையதுவே – புறம் 260/28
புடவையால் செய்யப்பட்ட பந்தலின் கீழ் நட்ட கல்லின் மேலது.
|
படர் |
படர் – 1. (வி) 1. (செடி, கொடி முதலியன) கிளைத்து வளர், spread or branch out as a creeper
2. அடை, சென்று சேர், reach, arrive at
3. செல், ஒழுகு, pass, proceed
4. எண்ணு, கருது, think of, consider
5. பரவு, spread, fan out
6. விரவிப்பரவு, மேவு, pervade, diffuse
7. விரி, அகலு, be wide
– 2. (பெ) 1. விரிதல், பரவுதல், spreading, expanding
2. வருத்தம், துன்பம், sorrow, distress
1.1.
நெய்தல்
நீர் படர் தூம்பின் பூ கெழு துறைவன் – ஐங் 109/1,2
நெய்தலின்,
நீரில் படர்ந்த உள்துளையுள்ள தண்டுகளில் பூக்கள் பொருந்தியிருக்கும் துறையைச் சேர்ந்தவன்
1.2.
பல நாள் நில்லாது நில நாடு படர்-மின் – மலை 192
(எனவே)பல நாட்கள் நிற்காமல், (=தாமதியாமல்)(மலையை விட்டிறங்கி)சமவெளிப்பகுதியைச் சென்றடைவீர்
1.3.
சிறு நனி ஒரு வழி படர்க என்றோனே எந்தை – புறம் 381/21
ஒரு வழியே சிறிது பெரிது நினைந்து ஒழுகுவாயாக என்று சொன்னான் எங்கள் தலைவன்.
1.4.
அல்லது கடிந்த அறம் புரி செங்கோல்
பல் வேல் திரையன் படர்குவிர் ஆயின் – பெரும் 36,37
(நல்லது)அல்லாததை விலக்கிய அறத்தை விரும்பின செங்கோலையும்,
பல வேற்படையினையும் உடைய திரையனிடம் செல்ல எண்ணுவீராயின்
1.5.
மால் வரைச் சீறூர் மருள் பல் மாக்கள்
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்மார்
திருத்திக்கொண்ட அம்பினர் நோன் சிலை
எருத்தத்து இரீஇ இடம்-தொறும் படர்தலின் – அகம் 171/9-12
பெரிய மலையடிவாரத்திலுள்ள சிறிய ஊரில் மருண்ட மக்களாய பலர்
கொல்லுதல் வல்ல கரடி ஏற்றின் ஒலியினை உணர்வதற்காக
செப்பம் செய்துகொண்ட அம்பினராய், வலிய வில்லை
தோளில் கொண்டு இடமெல்லாம் பரவிவருதலினால்
1.6.
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்வயின்
படர்ந்த உள்ளம் பழுது அன்று ஆக – அகம் 68/12,13
விளங்கும் ஒளியையுடைய வளை கழன்றிடும் நம்மிடத்து
மேவிய தமது உள்ளம் குற்றமற்றதாக
1.7.
பெயர் பயம் படர தோன்று குயில் எழுத்து – அகம் 297/8
பெயரும் புகழும் விரியத் தோன்றுமாறு பொறித்த எழுத்துக்களை
2.1
வெயில் கதிர் மழுங்கிய படர் கூர் ஞாயிற்று – மது 431
வெயிலையுடைய சுடர்கள் (வெப்பம்)குறைந்த, விரிந்து பரவுதல் மிக்க ஞாயிற்றையுடைய
2.2
உள் கரந்து உறையும் உய்யா அரும் படர் – குறி 11
(தன்)மனத்துள்ளே மறைந்து உறைந்து கிடக்கும் (ஆற்றுதற்கு)அரிய துன்பத்தை
|
படர்தரு(தல்) |
படர்தரு(தல்) – (வி) 1. பரவு, spread, fan out
2. வந்துசேர், reach
3. செல், leave, go
4. மறைந்து மறைந்து வா, move hidingly
5. குதித்துக்குதித்து நட, walk with jumps
1.
பைம் குரல் ஏனல் படர்தரும் கிளி என – ஐங் 289/2
பசிய கதிர்களையுடைய தினைப்புனத்தில் வந்து படர்கின்றன கிளிகள் என்று
2.
குறி இறை குரம்பை கொலை வெம் பரதவர்
எறி_உளி பொருத ஏமுறு பெரு மீன்
—————- —————————
நிரை திமில் மருங்கில் படர்தரும் துறைவன் – அகம் 210/1-6
குறிய இறப்பினையுடைய குடிசையில் வாழும் கொலைத் தொழிலையுடைய கொடிய பரதவரால்
எறியப்பட உளி தாக்கிய களிப்புப் பொருந்திய பெரிய மீன்
—————- —————————
வரிசையாக உள்ள படகின் பக்கலில் வந்துசேரும் துறையினையுடைய நம் தலைவன்
3.
வலை காண் பிணையின் போகி ஈங்கு ஓர்
தொலைவு இல் வெள் வேல் விடலையொடு என் மகள்
இ சுரம் படர்தந்தோளே – அகம் 7/11-13
வலையைக் கண்ட பெண்மானைப் போலத் தப்பி ஓடி, இங்கு ஒரு,
தோல்வியையே அறியாத வெள்ளிய வேலை உடைய இளங்காளையொடு என் மகள்
இந்த வழியே சென்றுவிட்டாள்;
4.
கள்ளர் படர்தந்தது போல தாம் எம்மை
எள்ளும்-மார் வந்தாரே ஈங்கு – கலி 81/23,24
கள்வர்கள் மறைந்து மறைந்து வருவதைப் போல், எம்மை
எள்ளி நகையாடற்பொருட்டே இவர் வந்திருக்கிறார் இங்கு
5.
புனவர் கொள்ளியின் புகல் வரும் மஞ்ஞை
இருவி இருந்த குருவி வருந்து_உற
பந்து ஆடு மகளிரின் படர்தரும்
குன்று கெழு நாடனொடு சென்ற என் நெஞ்சே – ஐங் 295/3-6
தினைப்புனத்தார் கொளுத்திய நெருப்புக்கு அஞ்சிப் புகலிடம் தேடியோடும் மயில்,
கதிர் அறுத்த மொட்டைத் தாளின் மீது இருந்த குருவி வருந்தும்படியாக,
பந்தாடும் மகளிரைப் போன்று குதித்துக் குதித்துச் செல்லும்
குன்றுகளைச் சேர்ந்த நாட்டினனோடு சென்ற என் நெஞ்சம் –
|
படலம் |
படலம் – (பெ) கூடு, உட்குழிவு, the hollow, as of a crown;
இலங்கு மணி மிடைந்த பசும்பொன் படலத்து
அவிர் இழை தைஇ மின் உமிழ்பு இலங்க
சீர் மிகு முத்தம் தைஇய
நார்முடிச்சேரல் – பதி 39/14-17
மின்னுகின்ற மணிகள் இடையிடையே கலந்த பசும்பொன்னாலான உட்குழிவுள்ள கூட்டின் ஓரத்தை.
ஒளிருகின்ற இழைகளால் தைத்து, மின்னலைப் போல பளிச்சிட,
சிறப்பு மிகுந்த முத்துக்கள் தைக்கப்பெற்ற
நார்முடிச் சேரலே!
|
படலை |
படலை – (பெ) 1. மாலை, garland
2. இலை, தழை, foliage
3. இலை, தழைகளாலான படல், தட்டி
4. பல மலர்களாலான கதம்பம்
.
வண் சினை கோங்கின் தண் கமழ் படலை
இரும் சிறை வண்டின் பெரும் கிளை மொய்ப்ப – ஐங் 370/1,2
வளமுள்ள கிளைகளையுடைய கோங்க மரத்தின் மலரால் செய்த குளிர்ந்த மணங்கமழும் மாலையை,
கரிய சிறகினைக் கொண்ட வண்டின் பெருங்கூட்டம் மொய்க்க,
2.
படலை பந்தர் புல் வேய் குரம்பை – அகம் 87/3
இலைதழைகளால் ஆகிய பந்தலையுடைய புல்லால் வேயப்பட்ட குடில்கள்
3
உடும்பு இழுது அறுத்த ஒடும் காழ் படலை
சீறில் முன்றில் கூறுசெய்திடும்-மார் – புறம் 325/7,8
அறுத்தெடுத்த உடும்பின் தசையை, ஒடு மரத்தின் வலிய கால்களால் செய்யப்பட்டு
மேலே இலைதழைகளாலான படல் சார்த்தப்பட்ட
சிறிய மனையின் முற்றத்தில் கூறுபோடுமாறு
4.
ஓங்கு மிசை
கோட்டவும் கொடியவும் விரைஇ காட்ட
பல் பூ மிடைந்த படலை கண்ணி
ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன் – பெரும் 172-175
உயர்கின்ற உச்சிகளிலுள்ள
கொம்புகளில் உள்ளனவும், கொடிகளில் உள்ளனவும் கலந்து, காட்டிடத்துள்ளவாகிய
பல்வேறு பூக்களையும் நெருங்கிச்சேர்த்த கலம்பகமாகிய மாலையினையும்,
ஒன்றாய்ப் பொருந்தின உடையினையும் உடைய, கூழை உண்ணுகிற இடைமகன்
பல பூக்கள் கலந்து தொடுக்கப்பட்ட படலை மாலையைக் கண்ணியாக இடையர்கள்/கோவலர்கள்
தங்கள் தலையிலும், நீத்தோருக்கும் சூடிக்கொள்ளும் செய்தியைப் பிறகுறிப்புகளாலும் அறிகிறோம்.
பல் ஆன் கோவலர் படலை கூட்டும் – ஐங் 476/3
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீ
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து
பல் ஆன் கோவலர் படலை சூட்ட
கல் ஆயினையே கடு மான் தோன்றல் – புறம் 265/2-5
|
படல் |
படல் – (பெ) 1. படுத்துத்தூங்குதல், lie down and sleep
2. பட்டுக்கொள்ளுதல், சிக்கிக்கொள்ளுதல், caught up, stuck
3. இறந்துபடுதல், dying
4. உடன்படுதல், consenting, agreeing
5. ஈடுபடுதல், indulging
1.
வளை படு முத்தம் பரதவர் பகரும்
கடல் கெழு கொண்கன் காதல் மட_மகள்
கெடல் அரும் துயரம் நல்கி
படல் இன் பாயல் வௌவிளே – ஐங் 195/1-4
சங்கு ஈன்ற முத்துக்களைப் பரதவர் விலைக்கு விற்கும்
கடலைச் சேர்ந்த தலைவனின் அன்பிற்குரிய இளமையான மகள்
தீர்ப்பதற்கு முடியாத துயரத்தைக் கொடுத்து
படுத்துத்தூங்கும் இனிய உறக்கத்தைக் கவர்ந்துகொண்டாள்.
2.
களைஞரும் இல்_வழி கால் ஆழ்ந்து தேரோடு
இள மணலுள் படல் ஓம்பு – கலி 98/36,37
காப்பாற்றுவாரும் இல்லாத இடத்தில் ஆழப்பதிந்து, தேருடன்
நீ குறுமணலில் அகப்பட்டுக்கொள்ளாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்வாயாக!
3.
வெம் திறல் கூற்றம் பெரும்பேதுறுப்ப
எந்தை ஆகுல அதன் படல் அறியேன் – புறம் 238/10,11
வெம்மையான ஆற்றலையுடைய கூற்றுவன் பெரிய இறந்துபாட்டை எய்துவிக்க
என் தலைவன் பேதுறவெய்தி அதனால் இறந்துபட்டதை அறியேனாய் வந்தேன்
4.
ஊரேம் என்னும் இ பேர் ஏமுறுநர்
தாமே ஒப்புரவு அறியின் தே மொழி
கயல் ஏர் உண்கண் குறு_மகட்கு
அயலோர் ஆகல் என்று எம்மொடு படலே – நற் 220/7-10
இந்த ஊரினர் என்று சொல்லிப் பெருமகிழ்ச்சி கொள்ளும் இச்சிறுவர்கள்
தாமே உலகநடப்பினைத் தெரிந்திருந்ததால், இனிக்கும் சொற்களையும்,
கயல் போன்ற அழகுடைய மையுண்ட கண்ணும் உடைய இளைய மகளாகிய தலைவிக்கு
(இத் தோழிகள்) அயலோராவர் என்ற எம் கருத்தோடு ஒத்துப்போவதால்
5.
புரைய அல்ல என் மகட்கு என பரைஇ
நம் உணர்ந்து ஆறிய கொள்கை
அன்னை முன்னர் யாம் என் இதன் படலே – அகம் 95/13-15
பொருந்துவன அல்ல என் மகளுக்கு என்று தெய்வத்தைத் தொழுது
நமது களவொழுக்கத்தினைத் தெரிந்துவைத்து அமைதியுற்றிருக்கும் கொள்கையினையுடைய
நம் அன்னை முன் யாம் இக் களவொழுக்கத்தில் பட்டு ஒழுகல் எங்ஙனம் இயலும்?
|
படாகை |
படாகை – (பெ) பதாகை, கொடி, flag, banner
படாகை நின்றன்று – பரி 9/78
கொடி உயர்ந்து நின்றது;
|
படாமை |
படாமை – (பெ) உறங்காமை, sleeplessness
மடாஅ நறவு உண்டார் போல மருள
விடாஅது உயிரொடு கூடிற்று என் உண்கண்
படாஅமை செய்தான் தொடர்பு – கலி 147/54-56
பெரிய பானையளவு மது உண்டவர் போல, என்னை மயங்க
விடாமல் என் உயிரோடு கலந்துவிட்டது, என் மைதீட்டிய கண்களை
உறங்காமற் செய்தவனின் நட்பு;
|
படாம் |
படாம் – (பெ) சீலை, போர்வை, cloth
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ – புறம் 141/11
சீலையைப் போர்வையாக மயிலுக்குக் கொடுத்த எம் அரசன்
|
படார் |
படார் – (பெ) சிறுதூறு, சற்று உயரமான குறும் புதர், Low bush, low thicket of creepers;
அதிரல் பூத்த ஆடு கொடி படாஅர்
சிதர் வரல் அசை வளிக்கு அசைவந்து ஆங்கு – முல் 51,52
காட்டு மல்லிகை பூத்த அசைகின்ற கொடியினையுடைய புதர்கள்
துவலை தூறலுடன் மெல்ல வரும் காற்றிற்கு அசைந்தாற்போல,
|
படி |
படி – 1. (வி) 1. நிலைகொள், be ingrained
2. தங்கு, rest, as clouds upon a mountain
3. வந்து அமர், settle
4. மூழ்கு, be immersed in water
5. கவி, rest upon
– 2. (பெ) 1. பூமி, earth
2. முறை, வகை, manner, mode
3. கோயில் முதலியவற்றுக்கு அன்றாடம் வழங்கப்படும் உணவுப்படி, நித்தியக்கட்டளை,
Fixed daily allowance for food;
4. படிக்கட்டு, step
1.1.
பெரும் கடற்கரையது சிறுவெண்காக்கை
துறை படி அம்பி அகம்_அணை ஈனும் – ஐங் 168/1,2
பெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
துறையில் நிலையாகக் கிடக்கும் தோணியின் உள்கட்டைக்குள் கூடுகட்டி முட்டையிடும்
1.2
நின்று பெற நிகழும் குன்று அவை சிலவே
சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்பு_உறும்
மலர் அகல் மார்பின் மை படி குடுமிய
குல வரை சிலவே – பரி 15/7-10
எப்பொழுதும் தந்து நிலையாக அமைந்து விளங்கும் மலைகள் சிலவே!
அந்தச் சில மலைகளிலும் சிறந்து விளங்குவன தெய்வங்கள் விரும்பும்
மலர்களையுடைய அகன்ற பகுதிகளையுடைய மேகங்கள் தங்கும் உச்சிகளையுடைய
குலமலைகள் சிலவே!
1.3
படி கிளி பாயும் பசும் குரல் ஏனல்
கடிதல் மறப்பித்தாய் ஆயின் இனி நீ
நெடிது உள்ளல் ஓம்புதல் வேண்டும் – கலி 50/9-11
கதிர்களின்மேல் வந்து படியும் கிளிகள் பரவலாய்த் திரியும் பசிய கதிர்களைக் கொண்ட தினைப்புனத்தில்,
அந்தக் கிளிகளை விரட்டுவதை மறக்கச்செய்ததனால், இனி நீ
இவளையே இடைவிடாமல் நினைத்துக்கொண்டிருப்பதைக் காத்துக்கொள்வதை இவள் விரும்புவாள்,
1.4
பொங்கடி படி கயம் மண்டிய பசு மிளை – அகம் 44/17
யானைகளும் மூழ்கும் குளங்களையும், செறிந்த பசிய காவற்காடுகளையும் (உடைய)
1.5
உயர் சினை மருத துறை உற தாழ்ந்து
நீர் நணி படி கோடு ஏறி சீர் மிக
கரையவர் மருள திரை_அகம் பிதிர
நெடு நீர் குட்டத்து துடுமென பாய்ந்து
குளித்து மணல் கொண்ட கல்லா இளமை – புறம் 243/6-10
உயர்ந்த கிளைகளையுடைய மருதமரத்தின் துறையிலே வந்து உறத் தாழ்ந்து
நீர்க்கு அண்மையாகப் படிந்த கொம்பிலே ஏறி அழகு மிக
கரையில் நிற்போர் மருள திரையிடத்துத் திவலை எழ
ஆழமான நீரையுடைய மடுவில் துடுமென்று குதித்து
மூழ்கி மணலை முகந்து கட்டிய கல்வியில்லாத இளமை
2.1
கள் உண்ணூஉ
பருகு படி மிடறு என்கோ பெரிய
திருமருத நீர் பூ துறை – பரி 11/28-30
கள்ளினை வாயில் கொண்டு
பருகும் நிலமகளின் கழுத்து என்று கூறவா? பெரிய
திருமருத நீர்ப்பெருந்துறையை;
2.2
இந்திரன் பூசை இவள் அகலிகை இவன்
சென்ற கவுதமன் சினன் உற கல் உரு
ஒன்றிய படி இது என்று உரைசெய்வோரும் – பரி 19/50-52
இந்திரன் இந்தப் பூனை, இவள் அகலிகை , இவன்
வெளியில் சென்ற கவுதமன், இவன் சினங்கொள்ள கல்லுருவம்
அடைந்த வகை இது என்று விளக்கிச் சொல்வோரும்,
2.3
மடி இலான் செல்வம் போல் மரன் நந்த அ செல்வம்
படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப – கலி 35/1,2
சோம்பல் இல்லாதவனின் செல்வத்தைப் போல் மரங்கள் தழைத்துச் சிறக்க, அந்தச் செல்வத்தை
அவனால் படியளக்கப்பட்டார் உண்பதுபோல், பலவான கிளைகளிலும் வண்டுகள் ஆரவாரிக்க,
2.4
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்
படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய
பிடி படி முறுக்கிய பெரு மர பூசல் – அகம் 8/9-11
வாழைமரங்கள் ஓங்கிய தாழ்வான இடத்திலுள்ள வழுக்குநிலத்தில்
அகப்பட்டுக்கொண்ட கடுமையான களிற்றின் துன்பத்தினைப் போக்க
பெண்யானை, படிக்கட்டாக அமைக்க ஒடிக்கும் பெரிய மரத்தின் ஓசை
|
படிக்கால் |
படிக்கால் – (பெ) ஏணி, ஏணிச்சட்டங்கள், ladder, ladder bars
குறும் தொடை நெடும் படிக்கால் – பட் 142
(ஒன்றற்கொன்று)நெருக்கமாய் அமைந்த படிகளையுடைய நீண்ட ஏணிச்சட்டங்கள்
|
படின் |
படின் – (வி.எ) 1. மறைந்துபோனால், if set (படு = மறை, set)
2. சாய்ந்தால், if fell down (படு = சாய் incline, lean over)
3. நுழைந்தால், if (you) enter (படு = நுழை, புகு, enter)
1.
சுடர் நோக்கி மலர்ந்து ஆங்கே படின் கூம்பும் மலர் போல் – கலி 78/15
‘ஞாயிற்றைப் பார்த்து மலர்ந்து, அது மறைந்தபின் கூம்பிப்போகும் மலரைப் போல்
2.
கிடந்து உயிர் மறுகுவது ஆயினும் இடம் படின்
வீழ் களிறு மிசையா புலியினும் சிறந்த – அகம் 29/2,3
(படுத்துக்)கிடந்து உயிர் வருந்தினாலும், (தான் தாக்கி) இடப்பக்கம் சாய்ந்தால்
விழுந்த களிறை உண்ணாத புலியைக் காட்டிலும் சிறந்த,
3.
செழும் பல் யாணர் சிறுகுடி படினே
இரும் பேர் ஒக்கலொடு பதம் மிக பெறுகுவிர் – மலை 156,157
வளப்பம் மிக்க பல்வித புதுவருவாயையுடைய சிறிய ஊரில் தங்கினால்,
(அலைச்சலால்)கறுத்துப்போன பெரிய சுற்றத்துடன் பக்குவமாக வேகவைத்த அவ்வுணவை நிறையப் பெறுவீர்
|
படிமகன் |
படிமகன் – (பெ) பூமியின் மகன், செவ்வாய், the sonof earth, Mars
வருடையை படிமகன் வாய்ப்ப – பரி 11/5
மேடராசியைச் செவ்வாய் சேர்ந்துநிற்க
|
படிமம் |
படிமம் – (பெ) பிரதிமம், விக்கிரகம், image, idol
அரும் சமம் கடந்து படிமம் வவ்விய
நெடு நல் யானை அடு போர் செழியன் – அகம் 149/12,13
அரிய போரை வென்று அங்குள்ள பொற்பாவையினைக் கவர்ந்துகொண்ட
நெடிய நல்ல யானைகளையும் வெல்லும் போரினையும் உடைய செழியனது
|
படிமை |
படிமை – (பெ) தவம், penance
முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை
வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும்
தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என
வேறு படு நனம் தலை பெயர
கூறினை பெரும நின் படிமையானே – பதி 74/24-28
உணரத் தக்கவற்றை முழுதும் உணர்ந்து, பிறரையும் நன்னெறியில் ஒழுகச்செய்யும் நரை கொண்ட
முதுமையான புரோகிதனை,
கொடையும், மாட்சிமையும், செல்வமும், மகப்பேறும்,
தெய்வ உணர்வும் ஆகிய யாவையும் தவப்பயன் பெறுவோர்க்கே என்று அறிவுறுத்தி
நாட்டிலிருந்து வேறுபட்ட அகன்ற இடமாகிய காட்டுக்குத் தவத்தினை மேற்கொண்டு செல்லும்படி
கூறி அனுப்பிவைத்தாய், பெருமானே! உன் தவ ஒழுக்கத்தால்.
|
படியோர் |
படியோர் – (பெ) படியாதவர், சொல்கேளாதவர், பகைவர்
படியோர் தேய்த்த பணிவு இல் ஆண்மை – மலை 423
தனக்குப் படியாதாரை அழித்த (யாருக்கும்)அடங்குதல் இல்லாத ஆளுமையுள்ளவனும்,
|
படிறு |
படிறு – (பெ) 1. வஞ்சனை, deceit, fraud
2. கொடுமை, wickedness
3. குறும்புச்செயல், prank, mischief
1.
அதிர்வு இல் படிறு எருக்கி வந்து என் மகன் மேல்
முதிர் பூண் முலை பொருத ஏதிலாள் முச்சி
உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப
எதிர் வளி நின்றாய் நீ செல் – கலி 81/29-32
நெஞ்சு நடுங்காத வஞ்சனையால் என்னை வருத்தி, என் மகன் மேல் விருப்பம் கொண்டு வந்து,
பூண்களையுடைய முதிர்ந்த முலைகளால் உன் மார்போடு பொருத பரத்தையின் கொண்டைமுடியிலிருந்து
உதிர்ந்த பூந்தாதுக்கள் சிந்திக்கிடக்கும் உன் ஆடை ஓசையெழுப்ப,
எதிர்காற்றில் வந்து நிற்பவனே! நீ போகலாம்!
2.
யார் இவன் எம் கூந்தல் கொள்வான் இதுவும் ஓர்
ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து – கலி 89/1,2
யார் இவன், எம் கூந்தலைப் பற்றுபவன்? இதுவும் ஒரு
நாட்டாமை(அதிகாரமுள்ள துடுக்குத்தனம்) போன்ற கொடுமையைக் கொண்டது
3.
கண்ட பொழுதே கடவரை போல நீ
பண்டம் வினாய படிற்றால் தொடீஇய நின்
கொண்டது எவன் எல்லா – கலி 108/22-24
கடன்வாங்கியவரைக் கண்டபொழுதே, கடன் கொடுத்தவர் போல நீ
தான் கொடுத்த பொருளைப் பற்றிக் கேட்கத்தொடங்கும் குறும்புச்செயலால், கேட்கும்படியாக உன்னிடம்
நான் வாங்கிய கடன்தான் என்ன, ஏடா!
|
படிவம் |
படிவம் – (பெ) 1. தவம், நோன்பு, விரதம், penance, austerities
2. வழிபடு தெய்வம், tutelary deity
1.
கல் தோய்த்து உடுத்த படிவ பார்ப்பான் – முல் 37
(ஆடையைக்)காவிக்கல்லைத் தோய்த்து உடுத்திய, விரதங்களையுடைய அந்தணன்
2.
பைம்_சேறு மெழுகிய படிவ நன் நகர் – பெரும் 298
பசிய சாணக் கரைசலால் மெழுகிய வழிபடும் தெய்வங்களையுடைய நன்றாகிய அகங்களையும்,
|
படிவு |
படிவு – (பெ) நீராடுதல், bathing
ஈ பாய் அடு நறா கொண்டது இ யாறு என
பார்ப்பார் ஒழிந்தார் படிவு – பரி 24/58,59
ஈக்கள் மொய்க்கும் சமைக்கப்பட்ட கள்ளினைக் கொண்டது இந்த ஆறு என்று
பார்ப்பனர் தவிர்த்தார் நீராடுதலை;
|
படீஇ |
படீஇ – (வி.எ) 1. படியச்செய்து, ஆக்கமாகச்செய்து, settling, resolving
2. படிவித்து, குளிப்பாட்டி, giving a bath
1.
வினை நலம் படீஇ வருதும் அ வரை
தாங்கல் ஒல்லுமோ பூ குழையோய் – குறு 256/4,5
நாம் மேற்கொண்ட தொழிலின் பயனைப் படியச்செய்து வருவோம்; அந்நாள் வரை
பொறுத்திருக்க முடியுமா, பொலிவுள்ள குழையை அணிந்தவளே?
2.
கடி துறை நீர் களிறு படீஇ – புறம் 16/6
காவற்பொய்கைகளின் நீரில் களிற்றைக் குளிப்பாட்டி
|
படீஇய |
படீஇய – (வி.எ) 1. படிந்து, கவிந்து, covering with
2. படிய, குளிக்க, to bath
1.
ஞாயிறு காணாத மாண் நிழல் படீஇய
மலை முதல் சிறு நெறி மணல் மிக தாஅய்
தண் மழை தலைய ஆகுக நம் நீத்து
சுடர் வாய் நெடு வேல் காளையொடு
மட மா அரிவை போகிய சுரனே – குறு 378
சூரியனையே காணாத மாண்புள்ள நிழல் படிந்து
மலையில் தொடங்கும் சிறிய வழியும், மணல் மிகப் பரவியதாய்
குளிர்ந்த மழை பெய்வதாகவும் ஆகுக; நம்மைப் பிரிந்து
ஒளிவிடும் இலையைக் கொண்ட நெடிய வேலையுடைய தலைவனோடு
மடப்பம் உள்ள மாமைநிறமுள்ள நம் பெண் போகின்ற பாலைநிலத்தில்
2.
மடப்பிடி
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய – அகம் 43/4,5
இளைய பெண்யானை
தன் துதிக்கை மறையத்தக்க வெள்ளத்தில் தன் ஆண்யானையுடன் குளித்து விளையாட
|
படீஇயர் |
படீஇயர் – 1. (வி.மு) 1. வருந்துவனவாக, let them suffer
2. தூங்கட்டும், let them sleep
3. சேர்ந்தவர்களாகட்டும், let them belong to
– 2. (வி.எ) 1. சிக்கிக்கொள்ள, having stuck
2. புகுவதற்கு, to enter
3. தூங்குவதற்கு, to sleep
4. படும்படி, விழும்படி, to fall on
5. பொருந்தி வருவதற்கு, to come closely
1.1.
பெரு முது செல்வர் பொன் உடை புதல்வர்
சிறு தோள் கோத்த செ அரி_பறையின்
கண்_அகத்து எழுதிய குரீஇ போல
கோல் கொண்டு அலைப்ப படீஇயர் மாதோ
——————————————– —
ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே – நற் 58
நிறைந்த பழமையான செல்வத்தைப் பெற்றவரின் பொன்தாலி அணிந்த புதல்வர்
தமது சிறிய தோளில் சேர்த்துக்கட்டிய செவ்வையாக அரித்து ஒலிக்கும் பறையின்
முகப்பில் எழுதப்பட்ட குருவியைப் போல
சாட்டைக் குச்சியால் அடிக்கப்பட்டுத் துன்பப்படுவனவாக;
———————————- ————————
ஓடுகின்ற தேரின் நுண்ணிய நுகத்தில் பூட்டப்பட்ட குதிரைகள் –
1.2
புள் இமிழ் பெரும் கடல் சேர்ப்பனை
உள்ளேன் தோழி படீஇயர் என் கண்ணே – குறு 243/4,5
பறவைகள் ஒலிக்கும் பெரிய கடலின் கரைக்குத் தலைவனை
இனி நினைக்கமாட்டேன் தோழி! படுத்துத் தூங்கட்டும் என் கண்கள்.
1.3
எவ்வி தொல் குடி படீஇயர் – புறம் 202/14
எவ்வியினுடைய பழைய குடியிலே படுவார்களாக
2.1
சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல்
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண
வெள் வசி படீஇயர் மொய்த்த வள்பு அழீஇ
கோள் நாய் கொண்ட கொள்ளை
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே – நற் 82/7-11
சிறிய கண்களைக் கொண்ட பெரும் சினத்தைக் கொண்ட ஆண்பன்றி
சேற்றில் ஆடிய கருத்த முதுகில் புழுதியோடு அதன் நிறத்தைப் பெற்று,
வெறுமையான பிளவினில் மாட்டிக்கொள்ள, அதனைச் சூழ்ந்த வார்களை அழித்து,
வேட்டை நாய்கள் கொன்ற கொள்ளைப்பொருளை
கானவர் எடுத்துக்கொண்டு செல்லும் சிறுகுடியில்
2.2
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின்
செய்ம்ம் மேவல் சிறு கண் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில் தாழாது
பாங்கர் பக்கத்து பல்லி பட்டு என – நற் 98/1-5
முள்ளம்பன்றியின் முள்ளைப்போன்ற பருத்த மயிருள்ள பிடரியைக் கொண்ட,
வயலில் மேயும் விருப்பமுள்ள, சிறிய கண்கள் உள்ள, பன்றியானது,
உயர்ந்த மலையிலுள்ள அகன்ற கொல்லையில் புகுவதற்கு, விலங்குகளைப் பிடிக்கும் பெரிய பொறியின்
சிறிய வாசலில் நுழையும் பொழுதில், விரைவாக
அருகே பக்கத்திலிருக்கும் பல்லி ஒலியெழுப்பினதாக
2.3
மலர்ந்த பொய்கை பூ குற்று அழுங்க
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர்
அன்னையும் சிறிது தணிந்து உயிரினள் – நற் 115/1-3
அகன்று விரிந்த பொய்கையின் பூக்களைப் பறித்துத் தளர்ந்ததால்
சோர்வடைந்த தோழியர் கூட்டம் இனிதாகக் கண்ணுறங்கவேண்டி
அன்னையும் சிறிது சினம் தணிந்து மெல்ல மூச்சுவிடுகிறாள்;
2.4
பயறு போல் இணர பைம் தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினை
காஞ்சி – குறு 10/2-4
பயற்றங்காய் போன்ற கொத்துக்களையுடைய இளம் பூந்தாதுகள் தங்கள் மேலே விழும்படி
உழவர்கள் வளைத்த கமழ்கின்ற பூக்களையுடைய மெல்லிய கிளைகளைக் கொண்ட
காஞ்சிமரத்தை
2.5
வேனில் பாதிரி கூனி மா மலர்
நறை வாய் வாடல் நாறும் நாள் சுரம்
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப
எம்மொடு ஓர் ஆறு படீஇயர் – அகம் 257/1-4
வேனிற்காலத்துப் பாதிரியின் வளைவையுடைய சிறந்த பூக்களின்
தேன் பொருந்திய வாடல் நாறுகின்ற பகற்பொழுதில் சுரத்தின் கண்ணே
பரற்கல் பொருந்திய சிலம்பினை அணிந்த நின் சிறிய அடிகள் சிவக்க
எம்முடன் ஒரு நெறியில் பொருந்திவரற்கு
|
படு |
படு – 1. (வி) 1. தொங்கு, hang
2. வீழ், மொய், swarm as bees
3. உண்டாகு, தோன்று, appear, come into existence
4. மிகு, be large
5. விசையுடன் தாக்கு, hit or strike with force
6. தொடு, விழு, ஒட்டிக்கொண்டிரு, touch, fall upon, cling to
7. ஒலி, sound
8. பாய், வழிந்தோடு, exude, as must from an elephant;
9. மேன்மையடை, சிறப்படை, be eminent, distinguidhed
10. அகப்படு, சிக்கு, get caught, entrapped
11. செய், நிகழ்த்து, உண்டாக்கு, ஏற்படுத்து, தா, provide, cause to exist, do, make, effect
12. விழு, fall down
13. பரவு, spread out
14. மறை, set disappear
15. அமைந்திரு, தகுதியாகு, be suitable
16. எழு, வெளித்தோன்று, rise, appear
17. வைத்திரு, possess
18. அனுபவி, experience, undergo
19. தங்கியிரு, settle at the bottom
20. பொருந்தியிரு, தன்னுள்கொண்டிரு, be constituted
21. அடை, எய்து, attain
22. உளதாகு, exist
23. நிகழ், happen
24. புகு, தலைப்படு, enter
25. இற, die
26. சேர், மாட்டு, fix
27. தூங்கச்செல், go to sleep
28. காணப்படு, cause to appear
29. ஆக்கு, cook
30. கடன்படு, become indebted
31. விரி, பரப்பு, spread out
32. அகப்படுத்து, சிக்கவை, entrap
33. உண்டாக்கு, cause to appear
34. வீழ்த்து, விழச்செய், fell, cast down
35. கீழே (உடலை) ஒரு பரப்பின் மீது கிடத்து, lie down
36. பூசு, smear
37. செல், go, be driven
38. இணங்கு, உடன்படு, agree, consent to
– 2. (பெ.அ) மிகுதியான, extreme, intense
– 3. (து.வி) 1. உள்ளாக்கு என்னும் பொருளில்வரும் வினையாக்கி,
verbaliser of certain nouns in the sense of experience
2. செயப்பாட்டுத்தன்மையை உணர்த்தும் துணைவினை, passivizer
– 4. (பெ) பள்ளம், மடு, deep pool
1.1.
படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை
கூற்றத்து அன்ன மாற்று அரு மொய்ம்பின்
கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு – திரு 80-82
தாழ்கின்ற மணி மாறிமறி ஒலிக்கின்ற பக்கத்தினையும், கடிய நடையினையும்,
கூற்றுவனை ஒத்த பிறரால் தடுத்தற்கரிய வலிமையினையும் உடைய,
காற்று எழுந்ததைப் போன்ற (ஓட்டத்தையுடைய)களிற்றில் ஏறி –
1.2.
குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி – திரு 199
ஆழ்ந்த சுனையில் பூத்த மலர்(புனையப்பட்ட) வண்டு வீழ்கின்ற மாலையினையும்,
1.3.
இரு நில கரம்பை படு நீறு ஆடி
நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர் – பெரும் 93,94
கரிய நிலமாகிய கரம்பை நிலத்தில் உண்டாகின்ற புழுதியை அளைந்து,
மெல்லிய புல்லரிசியை வாரியெடுத்துக்கொண்ட வெண்மையான பல்லையுடைய எயிற்றியர்
1.4.
இடு முள் வேலி எரு படு வரைப்பின் – பெரும் 154
கட்டு முள் வேலியினையுடைய எருக்குவியல்கள் மிகுகின்ற ஊரில் –
1.5.
தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை – பெரும் 201
வளைவாக, விதைத்தவாறே, உழுத, (பின்னர் வளர்ந்த களைகளைக்)களைக்கொட்டுச் செத்திய தோட்டத்தை,
1.6.
பைம் சாய் கொன்ற மண் படு மருப்பின்
கார் ஏறு பொருத கண் அகல் செறுவில் – பெரும் 209,210
பசிய கோரையை (அடியில்)குத்தி எடுத்த மண் படிந்த கொம்பினையுடைய
கரிய ஆனேறுகள் பொருத இடமகன்ற வயல்களில்,
1.7.
படு நீர் புணரியின் பரந்த பாடி – முல் 28
ஒலிக்கின்ற கடலலை போல் பரந்த பாசறையில் –
1.8.
தேம் படு கவுள சிறு கண் யானை – முல் 31
மதம் பாய்கின்ற கதுப்பினையும் சிறிய கண்ணையும் உடைய யானை
1.9.
வழிவழி சிறக்க நின் வலம் படு கொற்றம் – மது 194
வழிமுறை வழிமுறையாகச் சிறக்க நின் வெற்றி ஓங்கும் அரசாட்சி –
1.10.
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்
படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய – அகம் 8/9,10
வாழைமரங்கள் ஓங்கிய தாழ்வான இடத்திலுள்ள வழுக்குநிலத்தில்
அகப்பட்டுக்கொண்ட கடுமையான களிற்றின் துன்பத்தினைப் போக்க
1.11.
கயம் புக்கு அன்ன பயம் படு தண் நிழல் – மலை 47
குளத்தில் மூழ்கியதைப் போன்ற பயனைத் தருகின்ற குளிர்ந்த நிழலில்,
1.12.
ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை
மீன் படு சுடர் ஒளி வெரூஉம் – குறு 357/6,7
தீக்கடைகோலில் எழுப்பிய தீயினால் இடம்பெயர்ந்த நெடிய நல்ல யானை
விண்மீன் விழுவதால் ஏற்படும் சுடர்விடும் ஒளியினைக் கண்டு அஞ்சும்
1.13.
மை படு மா மலை பனுவலின் பொங்கி
கை தோய்வு அன்ன கார் மழை தொழுதி – மலை 361,362
கருமை பரந்த பெரிய மலையில், பஞ்சு போலப் பொங்கியெழுந்து,
கையால் எட்டித்தொடமுடியும் என்பதைப் போன்ற கார்காலத்து மேகக் கூட்டம்,
1.14.
படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை – நற் 33/1
மறைகின்ற ஞாயிறு சேர்ந்த பிளந்த வாய்ப்பகுதியையுடைய நீண்ட மலைத்தொடரின்
1.15
நீ நல்கின்
இறை படு நீழல் பிறவும்-மார் உளவே – நற் 172/9,10
நீ இவளிடம் அன்புசெய்தால்
தங்குவதற்கு அமைந்த நிழல் வேறிடத்திலும் உண்டு.
1.16
பரந்து படு கூர் எரி கானம் நைப்ப – நற் 177/1
பரந்து எழுந்த பெரும் தீயானது காட்டினை அழிக்க,
1.17
குளிர் படு கையள் கொடிச்சி செல்க என – நற் 306/3
குளிர் என்னும் கிளிகடி கருவியை வைத்திருக்கும் கையையுடைய கொடிச்சியாகிய நீ மனைக்குச் செல்க என
1.18
கூவல்
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட
உயர்திணை ஊமன் போல – குறு 224/3-5
வருத்தத்தினும், மிகுந்த வருத்தமாகிறது; கிணற்றில் விழுந்த
கபிலைநிறப் பசு படுகின்ற துயரத்தை இரவில் கண்ட
ஊமை மகனைப் போல
1.19
பரல் அவல் படு நீர் மாந்தி – குறு 250/1
பருக்கைக் கற்களையுடைய பள்ளத்தில் தங்கியிருக்கும் நீரைக் குடித்து,
1.20
கைவல் சீறியாழ் பாண நுமரே
செய்த பருவம் வந்து நின்றதுவே
எம்மின் உணரார் ஆயினும் தம்_வயின்
பொய் படு கிளவி நாணலும்
எய்யார் ஆகுதல் நோகோ யானே – ஐங் 472
சீறியாழை இயக்குவதில் கைவன்மை பெற்ற பாணனே! உன் தலைவர்
தாமே சொல்லிச்சென்ற கார்ப்பருவம் வந்து நிலைபெற்றுவிட்டது;
என்னைப் பற்றி எண்ணிப்பார்க்கவில்லை என்றாலும், தம்மிடமுள்ள
பொய் பொருந்திய சொற்களுக்காக வெட்கப்படவும்
செய்யாமல் இருப்பதை எண்ணி வருந்துகிறேன் நான்.
1.21
இ ஊர் மன்றத்து மடல்_ஏறி
நிறுக்குவென் போல்வல் யான் நீ படு பழியே – கலி 58/22,23
இந்த ஊர் மன்றத்தில் மடலேறி
உன் மேல் நிலைநாட்டுவது போல் உள்ளேன் நான், நீ எய்தும் பழியை.
1.22
என்பொடு தடி படு இடம் எல்லாம் எமக்கு ஈயும்-மன்னே – புறம் 235/6
என்போடுகூடிய ஊன் தடி உளதாகிய இடம் முழுதும் எங்களுக்கு அளிப்பான்
1.23
இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ
படு வழி படுக இ புகழ் வெய்யோன் தலையே – புறம் 239/20,21
நீ வாளால் அறுத்துப்போட்டாலும் போடுக அல்லது சுட்டாலும் சுடுக
நிகழும் வழி நிகழட்டும் – இந்தப் புகழை விரும்புவோன் தலையை
1.24
கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர்
வாடிய பசியராகி பிறர்
நாடு படு செலவினர் ஆயினர் இனியே – புறம் 240/12-14
ஆரவாரிக்கும் கிளையுடனே செயலற்று அறிவுடையோர்
தம் மெய் வாடிய பசியை உடையராய், பிறருடைய
நாட்டின்கண் தலைப்படும் போக்கையுடையராயினர் இப்பொழுது.
1.25
கொண்ட வாளொடு படு பிணம் பெயரா
செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய
படு மகன் கிடக்கை காணூஉ – புறம் 278/6-8
வாளைக் கையில் ஏந்திப் போர்க்களம் சென்று, அங்கே இறந்துகிடக்கும் பிணங்களைப்
புரட்டிப்பார்த்துக்கொண்டே
சிவந்த போர்க்களத்தை முற்றும் சுற்றிவருவோள், விழுப்புண்பட்டுச் சிதைந்து வேறுவேறாகத் துணிபட்டு
இறந்து கிடக்கின்ற தன் மகனது கிடக்கையைக் கண்டு
1.26
பெரும் கை யானை கொடும் தொடி படுக்கும்
கரும் கை கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த
கூட திண் இசை வெரீஇ மாடத்து
இறை உறை புறவின் செம் கால் சேவல்
இன் துயில் இரியும் – பெரும் 436-440
வலிய கையினையுடைய கொல்லன் சம்மட்டியை உரத்துக் கொட்டின
கூடத்து எழுந்த திண்ணிய ஓசையை அஞ்சி, மாடத்தின்
இறப்பில் உறையும் புறாவின் சிவந்த காலையுடைய சேவல்
இனிய துயில் (நீங்கி)விரைந்தோடும்
1.27
அடு புலி முன்பின் தொடு கழல் மறவர்
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழல் படுக்கும்
அண்ணல் நெடு வரை – அகம் 75/6-8
கொல்லும் புலி போலும் வலியையும் கட்டப்பட்ட கழலையுமுடைய மறவர்கள்
பழையதாய் வருகிற இயல்பையுடைய தமது சீறூரிலுள்ள மன்றத்து நிழலில் கண்படுக்கும்
1.28
கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து அ
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும் – அகம் 343/7,8
கூரிய உளியால் இயற்றப்பெற்ற கோடுகள் மறைந்த எழுத்துக்கள், அந்த
வழியே செல்லும் புதியர்க்கு வேறு பொருளினவாகப் பிறழ்ந்து காணப்படும்
1.29
சோறு படுக்கும் தீயோடு
செஞ்ஞாயிற்று தெறல் அல்லது
பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரே – புறம் 20/7-9
சோற்றை ஆக்கும் நெருப்புடனே
செஞ்ஞாயிற்றினது வெம்மை அல்லது
வேறு வெம்மை அறியார், நின் குடை நிழற்கண் வாழ்வோர்
1.30
பெரும் பொன் படுகுவை பண்டு – கலி 64/7
பெரும் பொன் கொடுக்கும் கடன்பட்டாய், முன்னொரு காலத்தில்
1.31
வரி அதள் படுத்த சேக்கை – அகம் 58/4
புலியின் தோலினை விரித்துள்ள படுக்கையில்
1.32
மீன் கொள் பாண்மகள்
தான் புனல் அடைகரை படுத்த வராஅல் – அகம் 216/1,2
மீனைப் பிடிக்கும் பாணரது மகள்
தான் புனலை அடுத்த கரையில் அகப்படுத்திய வரால்மீனை
1.33
கடும்பகட்டு ஒருத்தல் நடுங்க குத்தி
போழ் புண் படுத்த பொரி அரை ஓமை – அகம் 397/10,11
கடிய பெருமையையுடைய ஆண்யானை மரமசையும்படி குத்தி
பிளத்தலால் புண் உண்டாக்கிய பொரிகள் பொருந்திய அடியினையுடைய ஓமை மரத்தின்
1.34
அம்பு சென்று இறுத்த அறும் புண் யானை
தூம்பு உடை தட கை வாயொடு துமிந்து
நாஞ்சில் ஒப்ப நிலம் மிசை புரள
எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர் – – புறம் 19/9-12
அம்பு சென்று தைத்த பொறுத்தற்கரிய புண்ணையுடைய யானையின்
துளையையுடைய பெருங்கையை வாயுடனே துணிந்து
கலப்பையை ஒப்ப நிலத்தின் மேலே புரள
வெட்டிப் போர்க்களத்தில் வீழ்த்திய ஏந்திய வாள் வெற்றியையுடையோராய்
1.35
படுத்து வைத்து அன்ன பாறை மருங்கின் – மலை 15
கீழே கிடத்தி வைத்ததைப்போன்ற ஒரு பாறையின் பக்கத்தில்
1.36
பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/12,13
பற்பல வகைகளில் பயன்படும் நறிய சந்தனக் கட்டைகள் தன்னை அரைத்துப் பூசிக்கொள்பவர்க்கன்றி,
அவை மலையிலே பிறந்தாலும் மலைக்கு அவை தாம் என்ன செய்யும்?
1.37
கால் பார் கோத்து ஞாலத்து இயக்கும்
காவல் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறு இன்று ஆகி ஆறு இனிது படுமே – புறம் 185/1-3
உருளையையும் பாரையும் கோத்து உலகின்கண்ணே செலுத்தும்
காப்புடைய சகடம்தான் அதனைச் செலுத்துவோன் மாட்சிமைப்படின்
ஊறுபாடு இல்லையாய் வழியே இனிதாகச் செல்லும்
1.38
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேல்பால் ஒருவனும் அவன் கண் படுமே – புறம் 183/9,10
கீழ்க்குலத்துள் ஒருவன் கற்றால்
மேற்குலத்து ஒருவனும் அவனிடத்தே சென்று இணங்கிநடப்பான்
2.
வெம் கடற்று அடை முதல் படு முடை தழீஇ – நற் 164/8
வெம்மையான பாலைவழியின் உலர்ந்த சருகுகளின் மேல் மிக்க முடைநாற்றம் சூழ்ந்திருக்க,
3.1.
அரும் கடி படுக்குவள் அறன் இல் யாயே – அகம் 60/15
மிகவும் அரிய காவற்படுத்திவிடுவாள் அறம் கருதாத தாய்
3.2
அறம் புரி செங்கோல் மன்னனின் தாம் நனி
சிறந்தன போலும் கிள்ளை பிறங்கிய
பூ கமழ் கூந்தல் கொடிச்சி
நோக்கவும் படும் அவள் ஓப்பவும் படுமே – ஐங் 290
அறத்தைப் புரியும் செங்கோல் ஆட்சியையுடைய மன்னனைக் காட்டிலும், தாம் மிகவும்
சிறந்தன போலும் இந்தக் கிளிகள், சுடர்விடும்
பூக்கள் மணக்கும் கூந்தலையுடைய இந்தக் குறிஞ்சிப்பெண்ணால்
கனிவுடன் பார்க்கவும் படும், அவளால் கடிந்து ஓட்டவும் படுமே!
4.
கல் உடை படுவில் கலுழி தந்து – நற் 33/4
பாறையை உடைத்த பள்ளத்தில் இருக்கும் கலங்கல் நீரைத் தந்து
|
படுகர் |
படுகர் – (பெ) ஏற்ற இறக்கங்கள் மிகுந்த பாதை, path with upsand downs
அலங்கு கழை நரலும் ஆரி படுகர்
சிலம்பு அடைந்து இருந்த பாக்கம் எய்தி – மலை 161,162
(மேலும் கீழூம்)அசைகின்ற மூங்கில்கள் கிரீச்சிடும் கடினமான ஏற்ற இறக்கங்களான பாதைகளையுடைய
மலைச்சரிவை அடுத்திருந்த சிறிய ஊரை அடைந்து,
|
படுநர் |
படுநர் – (பெ) உழைப்பவர், labourers
அழிகளில் படுநர் களி அட வைகின் – புறம் 399/10
வைக்கோல்களில் உழைக்கும் களமர் தாம் உண்ட கள்ளால் பிறந்த மயக்கத்தால் மடிந்திருப்பார்களாயின்
|
படுமலை |
படுமலை – (பெ) ஒரு பாலைப்பண், A secondary melody-type of the pAlai class;
பெரும் கலி எழிலி
படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு
எழீஇ அன்ன உறையினை – நற் 139/3-5
பெரிய முழக்கத்தையுடைய மேகமே!
படுமலை என்னும் பாலைப்பண் அமைந்திருக்கும் நல்ல யாழின் வடித்தலைப் பொருந்திய நரம்பு
எழுப்பிய இசையினைப் போன்ற ஓசையையுடைய மழைத்துளிகளையுடையாய்!
|
படூஉம் |
படூஉம் – (வி.மு/வி.எ) ’படும்’ என்பதன் நீட்டல்.
1. அகப்படும், மாட்டிக்கொள்ளும், be caught, entrapped
2. உடன்படும், agree to
3. தோன்றுகின்றன, appear
4. கிடக்கும், be lying
5. செல்லும், go, proceed
6. ஒலிக்கும், make a sound
7. உண்டாகின்ற, உருவாகின்ற, arising
1.
தினை உண் கேழல் இரிய புனவன்
சிறு பொறி மாட்டிய பெரும் கல் அடாஅர்
ஒண் கேழ் வய புலி படூஉம் நாடன் – நற் 119/1-3
தினையை உண்ணும் காட்டுப்பன்றி வெருண்டு ஓட, தினைப்புனத்தான்
சிறிய பொறியைப் பொருத்தி வைத்த பெரிய கல்லிலான சாய்வுப்பலகையில்
ஒளிரும் நிறமுடைய வலிமையான புலி மாட்டிக்கொள்ளும் நாட்டைச் சேர்ந்தவன்
2.
சுனை பூ குற்றும் தொடலை தைஇயும்
மலை செம்_காந்தள் கண்ணி தந்தும்
தன் வழி படூஉம் நம் நயந்து அருளி – நற் 173/1-3
சுனையிலுள்ள மலர்களைக் கொய்தும், அவற்றை மாலையாகத் தொடுத்தும்,
மலையிலுள்ள செங்காந்தள் பூவைத் தலைமாலையாகச் செய்துதந்தும்,
தன் கருத்துக்கு இணங்கிநடக்கும் நம்மை விரும்பி, நம்மேல் இரக்கங்கொண்டு
3.
இடூஉ ஊங்கண் இனிய படூஉம்
நெடும் சுவர் பல்லியும் பாங்கில் தேற்றும் – நற் 246/1,2
இது நடைபெறும் என்று சொன்ன இடங்களில் நல்ல நிமித்தங்கள் தோன்றுகின்றன;
நெடிய சுவரில் உள்ள பல்லியும் பக்கத்தில் ஒலித்து அதனை உறுதிப்படுத்தும்;
4.
பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி
மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப
உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன் – அகம் 5/9-11
பளிங்கைப் போன்று பல காய்களைக் காய்க்கும் நெல்லிமரங்கள்
முகடுகளில் இருக்கும் பாறையில், (சிறுவரின்)பல கோலிக்குண்டுகள் போன்று
உதிர்ந்து கிடக்கும் – ஞாயிற்றின் கதிர்கள் காயும் – உச்சிமலைச் சரிவுகளில்
5.
நீங்கா வம்பலர் கணை இட தொலைந்தோர்
வசி படு புண்ணின் குருதி மாந்தி
ஒற்று செல் மாக்களின் ஒடுங்கிய குரல
இல் வழி படூஉம் காக்கை – அகம் 313/13-16
ஒழியாத புதியோராகிய, ஆறலைப்போர் அம்பினை எய்தலால் இறந்துபட்டோரின்
பிளந்த புண்ணிலிருந்து இழியும் குருதியைக் குடித்து
ஒற்றராகச் செல்லும் மக்களைப் போல உள்ளடங்கிய குரலினவாய்
தம்கூடுகளை நோக்கிச்செல்லும் காக்கை
6.
உள்ளு-தொறு படூஉம் பல்லி – அகம் 351/16
நினைக்குந்தோற்ம் ஒலிக்கும் பல்லியானது
7.
அளிய தாமே சிறு வெள் ஆம்பல்
இளையம் ஆக தழை ஆயினவே இனியே
பெரு வள கொழுநன் மாய்ந்து என பொழுது மறுத்து
இன்னா வைகல் உண்ணும்
அல்லி படூஉம் புல் ஆயினவே – புறம் 248
இரங்கத்தக்கன சிறிய வெளிய ஆம்பல்
யாம் இளையவராயிருக்கும்போது எமக்குத் தழையுடை ஆயின. இப்பொழுது
பெரிய செல்வத்தையுடைய தலைவன் இறந்தானாக, உண்ணும் பொழுது மாறிப்போய்
இன்னாத விடியலில் உண்ணும்
தம் அல்லியிடத்து உண்டாகும் புல்லரிசியாய் உதவின.
|
படை |
படை – 1. (வி) 1. உண்டாக்கு, create, bring into existence
2. கொண்டிரு, பெற்றிரு, have, possess
3. ஈட்டு, சம்பாதி, earn, acquire
– 2. (பெ) 1. ஆயுதம், கருவி, arms, weapons
2. போர்வீரர்களின் தொகுதி, army of soldiers
3. குதிரைச் சேணம், saddle
4. வாள், sword
5. யானைகளின் முகபடாம், Ornamental cloth on the face of an elephant;
6. சமச்சீராகப் பரப்புதல், spreading evenly
7. செய்கருவி, instrument, tool
8. காமக்கணை, cupid’s arrow
9. காலாட்படை, land force in the army
10. அரண், கோட்டை, fortress
11. அடுக்கு மெத்தை, layers of cushion
12. வடம், ஆபரணம், chains of a necklace, ornaments
13. கலப்பை, ploughshare
1.1.
பனி மிக
புல்லென் மாலை சிறு தீ ஞெலியும்
கல்லா இடையன் போல குறிப்பின்
இல்லது படைக்கவும் வல்லன் – புறம் 331/3-6
குளிர் மிகுதலால்
புல்லென்ற மாலைப்போதில் சிறிய தீக்கடைகோலைக் கடைந்து தீயை உண்டாக்கும்
கல்லாத இடையன் போல தேவையைக் குறிப்பாய் அறிந்து
இல்லாததை உண்டாக்கிக்கொள்ளும் வல்லமையுடையவன்
1.2
குவளை குழை காதின் கோல செவியின்
இவள் செரீஇ நான்கு விழி படைத்தாள் – பரி 11/97,98
குவளை மலரை, குழையணிந்த காதான அழகிய செவியில்
இவள் செருகிக்கொண்டு நான்கு விழிகளை உடையவள் ஆயினாள்
1.3
படைப்பு பல படைத்து பலரோடு உண்ணும்
உடைப்பெரும் செல்வராயினும் – புறம் 188/1,2
ஈட்டப்படும்செல்வம் பலவற்றையும் ஈட்டி, பலருடனே கூட உண்ணும்
உடைமை மிக்க செல்வத்தையுடையோராயினும்
2.1
ஆறலை கள்வர் படை விட அருளின்
மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை – பொரு 21,22
வழி(ப்போவாரை) அலைக்கின்ற கள்வர் (தம்)ஆயுதங்களைக் கைவிடும்படி செய்து, அருளின்
மாறாகிய மறப்பண்பினை (அவரிடத்திலிருந்து)அகற்றுகின்ற மருவுதல் இனிய பாலை யாழை –
2.2
ஆண் அணி புகுதலும் அழி படை தாங்கலும் – சிறு 211
(பகை)மறவரின் அணியில் (அச்சமின்றிப்)புகுதலையும், தோற்ற படையினரைப் பொறுத்தலையும்,
2.3
விசும்பு செல் இவுளியொடு பசும் படை தரீஇ – பெரும் 492
விண்(ணுக்குச்) செல்(வது போல் முன் கால்களைத் தூக்கும்)குதிரைகளுடன் பசிய சேணமும் தந்து,
2.4
பகைவர் சுட்டிய படை கொள் நோன் விரல் – முல் 77
பகைவரை நோக்கி வாளைப் பிடித்த வலியினையுடைய கையால்,
2.5
புள் ஏர் புரவி பொலம் படை கைம்_மாவை – பரி 11/52
பறவை போல் விரையும் குதிரைகளையும், பொன்னாலான முகபடாம் அணிந்திருக்கும் யானைகளையும்
2.6
படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ
புடைபெயர்வாய் ஆயினும் புலம்பு கொண்டு இனைபவள் – கலி 10/10,11
சீராகப் பரப்பப்பெற்ற படுக்கையில் உறங்கும்போது உன்னை அறியாமல் நீ
சற்று விலகிப் படுத்தாலும் தனிமையுணர்வுகொண்டு தவித்துப்போகின்றவள்;
2.7
கழுவொடு சுடு படை சுருக்கிய தோல் கண்
இமிழ் இசை மண்டை உறியொடு தூக்கி
ஒழுகிய கொன்றை தீம் குழல் முரற்சியர்
வழூஉ சொல் கோவலர் தத்தம் இன நிரை
பொழுதொடு தோன்றிய கார் நனை வியன் புலத்தார் – கலி 106/1-5
பசுவின் தலையில் கட்டும் கழியும், சூட்டுக்கோலும் வைத்துக் கட்டிய தோல்பையையும்,
ஒன்றோடொன்று கயிற்றினால் கட்டப்பட்ட மண்கலங்களைக் கொண்ட உறியையும் தூக்கிக்கொண்டு
நீண்டிருக்கிற கொன்றைப் பழத்தில் செய்யப்பட்ட இனிய குழலை வாசித்துக்கொண்டவராய்,
கொச்சையான பேச்சுக்களைப் பேசும் கோவலர்கள் தத்தம் மாட்டுக்கூட்டங்களை,
நேரத்தில் வந்த கார் காலத்தில் தோன்றின மழையில் நனைந்த அகன்ற புல்வெளிக்குக் கொண்டுசென்றனர்;
2.8
அகல் ஆங்கண் அளை மாறி அலமந்து பெயரும்_கால்
நகை வல்லேன் யான் என்று என் உயிரோடு படை தொட்ட
இகலாட்டி நின்னை எவன் பிழைத்தேன் எல்லா யான் – கலி 108/5-7
அகன்ற மன்றங்கள் உள்ள ஊர்களிலே மோரை விற்றுக் களைத்துப்போய் திரும்பும்போது,
எள்ளி நகைக்கத்தக்கவன் நான் என்று என் உயிர்போகும்படி காமக்கணைகளை வீசிச்செல்லும்
கொடுமையுடையவளே! உனக்கு என்ன பிழைசெய்தேன், பெண்ணே! நான்?
2.9
நிரை திமில் களிறு ஆக திரை ஒலி பறை ஆக
கரை சேர் புள்_இனத்து அம் சிறை படை ஆக – கலி 149/1-2
வரிசையாக மிதக்கும் மீன்படகுகளே யானைகளாக, அலைகள் எழுப்பும் ஒலியே போர்ப்பறை ஒலி ஆக,
கரையிலிருக்கும் அழகிய சிறகுகளைக் கொண்ட பறவைக் கூட்டமே காலாட்படையாக,
2.10
நுழை நுதி நெடு வேல் குறும் படை மழவர் – அகம் 35/4
கூரிய முனை கொண்ட நீண்ட வேலை உடைய சிற்றரண் மழவர்கள்
2.11
பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை – அகம் 305/5
பல அடுக்கு மெத்தைகளால் உயர்ந்த வளம் மிக்க படுக்கை
2.12
பூம் பொறி பல் படை ஒலிப்ப பூட்டி – அகம் 400/11
அழகிய புள்ளிகளையுடைய பல வடங்கள் ஒலிக்கும்படி பூட்டி
அழகிய ஓவியம் பொறிக்கப் பெற்ற பல அணிகலன்களையும் ஆரவாரம் உண்டாகும்படி அவற்றின்
கழுத்திலே பூட்டி
2.13
பொரு படை தரூஉம் கொற்றமும் உழு படை
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே – புறம் 35/25,26
நின் போர்செய்யும் படை தரும் வெற்றியும், உழுகின்ற கலப்பை
நிலத்தின்கண்ணே ஊன்று சாலிடத்து விளைந்த நெல்லினது பயன்.
|
படைஞர் |
படைஞர் – (பெ) படைவீரர்கள், soldiers
நின் படைஞர் சேர்ந்த மன்றம் கழுதை போகி – பதி 25/4
உன் படைவீரர்கள் கூடிய ஊர்ப்பொதுவிடங்களில் கழுதைகள் கூடிக்கிடக்கின்றன;
|
படைப்பு |
படைப்பு – (பெ) செல்வம், wealth
வாழிய பெரும நின் வரம்பு இல் படைப்பே – புறம் 22/30
வாழ்க பெருமானே உன் எல்லையில்லாத செல்வம்
|
பட்டம் |
பட்டம் – (பெ) நீர்நிலை, ஓடை, tank, pond, stream
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு கால் பட்டத்து
இன்னா ஏற்றத்து இழுக்கி முடம் கூர்ந்து
ஒரு தனித்து ஒழிந்த உரன் உடை நோன் பகடு – அகம் 107/13-15
இடிந்து விழும் மண்ணின் இடையூற்றினை அஞ்சுவதான ஒரே துறையினையுடைய ஓடையிலுள்ள
இன்னாததாகிய ஏற்றம் கொண்ட நெறியில் வழுக்கி விழுந்து மிக்க முடம்பட்டு
தன்னந்தனியே ஒழிந்து கிடக்கும் உடல்வலி வாய்ந்த தன்மையினையுடைய பொறுக்கும் பகட்டினை
|
பட்டி |
பட்டி – (பெ) ஊர்சுற்றித்திரிபவன், unbridled lawless person
சிறு பட்டி ஏதிலார் கை எம்மை எள்ளுபு நீ தொட்ட
மோதிரம் யாவோ யாம் காண்கு – கலி 84/20,21
விருப்பம்போல் திரிபவனே! அந்தப் பரத்தையரின் கையிலுள்ளதை, என்னை இகழும்படியாக நீ அணிந்திருக்கும்
மோதிரங்கள் எவை? நான் பார்க்கிறேன்!
|
பட்டினம் |
பட்டினம் – (பெ) 1. கடற்கரை நகரம். a city on the seashore
2. எயிற்பட்டினம், an ancient port city near Puduchery
3. புகார் எனப்படும் காவிரிப்பூம்பட்டினம், an ancient port city in the chOza country
1.
தாம் வேண்டும் பட்டினம் எய்தி கரை சேரும்
ஏமுறு நாவாய் வரவு எதிர்கொள்வார் போல் – பரி 10/38,39
தாம் நினைக்கும் பட்டினத்தை நோக்கி வந்து கரை சேர்கின்ற
இன்பமான நாவாயின் வரவை எதிர்கொள்ளும் வணிகர் போல,
2.
மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய
பனி நீர் படுவின் பட்டினம் படரின் – சிறு 152,153
(நீல)மணி (போலும்)கழி (சூழ்ந்த)ஊர்களையுடையதும், மதிலின் பெயர்கொண்ட,
குளிர்ந்த நீர் மிக்க குளங்களையுடைத்தாகிய, (எயில்)பட்டினத்தே செல்வீராயின்
3.
முட்டா சிறப்பின் பட்டினம் பெறினும்
வார் இரும் கூந்தல் வயங்கிழை ஒழிய
வாரேன் வாழிய நெஞ்சே – பட் 218-220
குறைவுபடாத சிறப்புகள் கொண்ட – பட்டினம் (எனக்கு உரித்தாகப்)பெறுவதாயினும் –
நீண்ட கரிய கூந்தலையுடைய ஒளிரும் அணிகளையுடையாள் (இங்கு என்னைப்)பிரிந்திருப்ப,
(யான் நின்னோடு கூட)வாரேன்; (நீ)வாழ்க, நெஞ்சே
|
பணவை |
பணவை – (பெ) பரண், watch tower
கானவர்
விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த – குறி 225,226
காட்டில் வாழ்வோர்
வானத்தைத் தீண்டுகின்ற (தம்)பரணில் தீக்கொள்ளிகளை மூட்ட,
|
பணி |
பணி – 1. (வி) 1. குனிந்து வணங்கு, make obeisance to
2. கீழ்ப்படி, அடங்கு, கட்டுப்படு, be submissive, compliant
3. ஆணையிடு, கட்டளையிடு, order, command
4. கீழ்ப்படியச்செய், அடக்கு, கட்டுப்படுத்து, make submissive, compliant
5. அழி, சிதை, trample on, stamp on
6. தாழ்த்து, lower
7. தாழ், be lowered
– 2. (பெ) 1. வினை, செயல், act, deed, work
2. பணிமொழி, கீழ்ப்படிதலுள்ள பேச்சு, submissive talk
3. ஏவல், கட்டளை, order, command
4. ஆபரணம், அணிகலன், ornament
1.1
சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம்
—————————————— ————-
மாயோன் ஒத்த இன் நிலைத்தே
சென்று தொழுகல்லீர் கண்டு பணி-மின்மே – பரி 1523-/34
சோலை என்ற சொல்லோடும் தொடர்மொழியாக வருகின்ற மாலிருங்குன்றம்
———————————————- ———-
திருமாலைப் போன்ற இனிய நிலையினைக் கொண்டிருக்கிறது;
அங்குச் சென்று தொழுதுகொள்ளுங்கள்! அதனைக் கண்டு பணிந்துகொள்ளுங்கள்!
1.2
ஒன்னார்
பணி திறை தந்த பாடு சால் நன் கலம் – அகம் 127/6,7
பகைவர்
கட்டுப்பட்டு திறையாகத் தந்த பெருமைசான்ற நல்ல அணிகலன்கள்
1.3
நாடுகோள்
அள்ளனை பணித்த அதியன் பின்றை
வள் உயிர் மா கிணை கண் அவிந்தாங்கு – அகம் 325/7-9
நாட்டினைக்கொள்ளுமாறு
அள்ளன் என்பானைப் பணித்த அதியன் என்பான் துஞ்சிய பின்னர்
சிறந்த ஒலியினையுடைய பெரிய கிணையானது ஒலி அடங்கினாற்போல
1.4
பணியார் தேஎம் பணித்து திறை கொள்-மார் – மது 230
(தமக்குப்)பணியாதோர் நாடுகளைப் பணியச்செய்து (அவரின்)திறையைக் கொள்ள,
1.5
மோகூர் மன்னன் முரசம் கொண்டு
நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல் தடிந்து – பதி 44/14,15
பகை மன்னனாகிய மோகூர் மன்னனின் முரசத்தைக் கைப்பற்றி,
அவன் கூறிய வஞ்சினத்தைச் சிதைத்து அவனைப் பணிவித்து, அவனது காவல்மரமாகிய வேம்பினை
அடியோடு வீழ்த்தி
1.6
செல்வ கடுங்கோ வாழியாதன்
என்னா தெவ்வர் உயர் குடை பணித்து – புறம் 387/30,31
செல்வக்கடுங்கோ வாழியாதன்
என்று தன் பெயர் கூறிய அளவில் பகைவர் தம்முடைய உயர்ந்த கொற்றக்குடையைத் தாழ்த்தி
1.7
பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல் – திரு 146
மேகலையை அணிந்த தாழ்ந்தும் உயர்ந்தும் உள்ள அல்குலையும்,
2.1
பணி குறை வருத்தம் வீட – குறு 333/5
வினையின் குறையால் உண்டாகிய உனது துன்பம் கெடும்பொருட்டு
2.2
பணி ஒரீஇ நின் புகழ் ஏத்தி – பரி 17/50
மனிதரைப்பாடும் பணிமொழிகளை ஒழித்து, உன் புகழைப் போற்றி,
2.3
வேற்று அரசு பணி தொடங்கு நின்
ஆற்றலொடு புகழ் ஏத்தி – புறம் 17/31,32
பகைவேந்தர் ஏவல் செய்யத் தொடங்குவதற்குக் காரணமான நினது
வலியுடனே புகழை ஏத்தி
2.4
முன்புற்று அறியா முதல் புணர்ச்சி மொய் குழலை
இன்புற்று அணிந்த இயல் அணியும் வன் பணியும்
நாண் எனும் தொல்லை அணி என்ன நன்_நுதலை – பரி 28/1-3
முன்னர் நுகர்ந்து அறியாத முதல் உறவினைக் கொண்ட திரண்ட கூந்தலினையுடையவளை,
அந்த உறவினால் இன்புற்றதால் ஏற்பட்ட இயற்கை அழகும், செயற்கை அழகூட்டும் அணிகலன்களும்,
நாணம் என்னும் பழைய அணியும் கொண்ட நல்ல நெற்றியையுடையவளை ..
|
பணிபு |
பணிபு – 1. (வி.எ) பணிந்து, தாழ்ந்து, obeying, being submissive
– 2. (பெ) 1. பணிதல், bowing, paying obeisance
2. பணிமொழி, கீழ்ப்படிதலுள்ள பேச்சு, submissive talk
1.
பல் ஒளியர் பணிபு ஒடுங்க – பட் 274
பலராகிய ஒளிநாட்டார் தாழ்ந்து (தம்)வீரம் குறைய,
2.1.
பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே – பதி 63/1
பார்ப்பனரைத் தவிர பிறரைப் பணிதலை அறியாய்;
2.2
பணிபு ஒசி பண்ப பண்டு எல்லாம் நனி உருவத்து – பரி 6/63
பணிமொழியொடு குறுகிநிற்கும் பண்பாளனே! முன்பு நீ கொண்டுவந்ததெல்லாம் சிறந்த உருவத்தைக்
கொண்டிருந்தது,
|
பணியம் |
பணியம் – (பெ) பண்ணியம், பலகாரம், eatables
கூழ் உடை கொழு மஞ்சிகை
தாழ் உடை தண் பணியத்து
வால் அரிசி பலி சிதறி – பட் 163-165
(தானிய மாவுக்)கூழையுடைய நிறைந்த பாத்திரத்தையும்,
வழிபாட்டுடன் (பரப்பிய)குளிர்ந்த பண்ணியங்களையும்(வைத்து)
வெண்மையான அரிசியையும் பலியாகத் தூவி,
|
பணிலம் |
பணிலம் – (பெ) சங்கு, conch
பறை பட பணிலம் ஆர்ப்ப – குறு 15/1
முரசு முழங்க, சங்கு ஒலிக்க,
|
பணீஇயர் |
பணீஇயர் – (வி.எ) பணியச்செய்வதற்காக, in order to humble
கொற்ற சோழர் கொங்கர் பணீஇயர்
வெண் கோட்டு யானை போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்து அன்ன – நற் 10/6-8
வெற்றியையுடைய சோழர்கள் கொங்குநாட்டாரைப் பணியச் செய்வதற்காக
வெண்மையான கொம்புகளையுடைய யானைகளைக் கொண்ட போர் என்ற ஊருக்குரியவனான
பழையன் என்பானை ஏவ, அவனது வேற்படை பொய்க்காமல் வெற்றிபெற்றதுபோல
|
பணை |
பணை – 1. (வி) 1. குறிதப்பு, பிழைத்த, தவறு, miss, err, fail
2. பெருத்திரு, பருத்திரு, be thick, be large
– 2. (பெ) 1. பெரிய தன்மை, largeness, bigness
2. மூங்கில், bamboo
3. விளைநிலம், cultivated fields
4. பெருமை, greatness, excellence
5. முரசம், drum
6. குதிரை இலாயம், stable
7. பருமை, rotundness
1.1
அமர் கண் ஆமான் அரு நிறம் முள்காது
பணைத்த பகழி போக்கு நினைந்து கானவன் – நற் 165/1-2
மருண்ட பார்வையையுடைய காட்டுப்பசுவின் அரிய மார்பினில் பாயாது
குறிதப்பிய அம்பின் போக்கை நினைத்துப்பார்த்த கானவன்,
1.2
நகுவர பணைத்த திரி மருப்பு எருமை – அகம் 206/3
விளங்குதலுறப் பெருத்த முறுக்குண்ட கொம்பினையுடைய எருமையின்
பணைத்து ஏந்து இள முலை அமுதம் ஊற – மது 601
பருத்து உயர்ந்த இளைய முலை பால் சுரக்க,
2.1.
ஆடு அமை பணை தோள் அரி மயிர் முன்கை – பொரு 32
அசைகின்ற மூங்கில் (போன்ற)பெருத்த தோளினையும், ஐம்மை மயிரினையுடைய முன்கையினையும்,
2.2.
அம் பணை தடைஇய மென் தோள் முகிழ் முலை – நெடு 149
அழகான மூங்கில் (போலத்)திரண்ட மெல்லிய தோளினையும், (மொட்டுப்போல்)குவிந்த முலை
2.3
தண் பணை தழீஇய தளரா இருக்கை – பொரு 169
குளிர்ந்த வயலையுடைய மருத நிலம் சூழ்ந்த சோர்வுறாத குடியிருப்பினையுடைய
2.4.
பணை கெழு பெரும் திறல் பல் வேல் மன்னர் – மது 234
பெருமைகொண்ட பெரிய வலிமையுள்ள, பல வேல்களைக் கொண்ட மன்னர்கள்,
2.5.
முழங்கு இசை நன் பணை அறைவனர் நுவல – மது 362
முழங்கும் ஓசையையுடைய நல்ல முரசத்தைச் சாற்றுபவர் செய்திகூற,
2.6.
பணை நிலை புரவி புல் உணா தெவிட்ட – மது 660
கொட்டிலில் நிற்றலையுடைய குதிரைகள் புல்லாகிய உணவை மெதுவாக அசைபோட்டு மெல்ல,
2.7.
மனை அழுது ஒழிந்த புன் தலை சிறாஅர்
துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின்
பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும் – நற் 392/3-5
வீட்டில் அழுது ஓய்ந்த புல்லிய தலையை உடைய சிறுவர்கள்
கூட்டாக முயன்று பெற்ற இனிய கண்ணையுடைய நுங்கைத்
தாயின் பருத்த கதகதப்பான கொங்கையை உண்ணுவதுபோலச் சுவைத்து உண்டு மகிழும்
|
பணையம் |
பணையம் – (பெ) பணயம், ஈடு, pledge
கரும் கோட்டு சீறியாழ் பணையம் – புறம் 316/7
கரிய கோட்டையுடைய சிறிய யாழைப் பணயமாக வைக்கின்றோம்.
|
பண் |
பண் – (பெ) 1. ஏழு சுரமும் உள்ள இசை, Primary melody-type
2. இசை, Melody-type
3. பண்ணுதல், இறுக்கமான கட்டு, tight fittings (of a cart)
1.
மண் அமை முழவின் பண் அமை சீறியாழ்
ஒள் நுதல் விறலியர் பாணி தூங்க – பொரு 109,110
மார்ச்சனை அமைந்த முழவினோடே பண் (நன்கு)அமைந்த சிறிய யாழையுடைய
ஒளிவிடும் நெற்றியையுடைய விறலியர் தாளத்திற்கேற்ப ஆட,
2.
திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின்
விண் அதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்து
திண் வார் விசித்த முழவொடு – மலை 1-3
கருக்கொண்ட மேகங்கள் ஒன்றுகூடிய கருமை நிறங்கொண்ட பரந்த வானில்
விண்ணகமே அதிரும்படி முழங்கும் ஓசையைப் போன்று, தாளங்களைத் தட்டிப்பார்த்து,
உறுதியான வாரால் இறுகக் கட்டிய மத்தளத்துடன்
3.
உவர் விளை உப்பின் குன்று போல் குப்பை
மலை உய்த்து பகரும் நிலையா வாழ்க்கை
கணம்_கொள் உமணர் உயங்கு_வயின் ஒழித்த
பண் அழி பழம் பார் வெண்_குருகு ஈனும் – நற் 138/1-4
உவர் நிலத்தில் விளையும் குன்றுகளைப் போன்ற உப்புக்குவியல்களை
மலைநாட்டில் சென்று விற்கும், ஓரிடத்தில் தங்காத நிலையற்ற வாழ்க்கை வாழும்
கூட்டமான உமணர்கள் தங்கள் வண்டிகள் முறிந்த இடத்தில் விட்டுச்சென்ற
தம் பண்ணுதல் அழிந்தனவாய் உள்ள பழைய பார் எனும் மரக்கட்டையில் வெண்குருகு முட்டையிடும்
|
பண்டம் |
பண்டம் – (பெ) 1. பொருள், சரக்கு, substance, article, provision
2. நறுமணப்பொருள், fragrant substances
1.
பொன் மலிந்த விழு பண்டம்
நாடு ஆர நன்கு இழிதரும்
ஆடு இயல் பெரு நாவாய் – மது 81-83
பொன் மிகுதற்குக் காரணமான சீரிய சரக்குகளை
நாட்டிலுள்ளோர் நுகரும்படி நன்றாக இறக்குதலைச் செய்யும்
அசையும் இயல்பினையுடைய பெரிய மரக்கலங்கள்
2.
பகாஅர்
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால் – அகம் 181/22,23
விற்பாரது
நறுமணப்பொருள்கள் மணக்கின்ற வண்டுகள் மொய்க்கும் ஐம்பகுதியாய கூந்தலினையும்
|
பண்டரங்கம் |
பண்டரங்கம் – (பெ) ஒரு சிவ நடனம், a dance of Lord Siva.
மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து
பண்டரங்கம் ஆடும்-கால் பணை எழில் அணை மென் தோள்
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்கு தருவாளோ – கலி 1/8-10
மிக்குச் செல்கிற போர்கள் பலவற்றையும் வென்று, அதன் வலிமையால் பகைவர் வெந்த சாம்பலை அணிந்து,
பாண்டரங்கம் என்னும் கூத்தினை ஆடும்போது, மூங்கில் போன்ற அழகும், அணை போன்ற மெல்லிய
தோள்களும்,
வண்டுகள் ஒலிக்கும் கூந்தலும் உடைய இறைவி, தாளத்தின் இடையில் அமையும் தூக்கினைத் தருவாளோ
|
பண்டாரம் |
பண்டாரம் – (பெ) கருவூலம், treasury
பண்டாரம் காமன் படை உவள் கண் காண்-மின் – பரி 11/123
காமதேவனின் கருவூலமும், படைக்கலங்களும் ஆகும் இவளின் கண்களைப் பாருங்கள்!
|
பண்டு |
பண்டு – (பெ) 1. முன்னம், முன்பு, முற்காலம், former time, previous time
2. பழங்காலம், ancient times
1.
பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்-மன்-கொலோ – கலி 39/39
முன்னமே ஒருவரையொருவர் பார்த்தறியாதவர் போல் நடந்துகொள்வீர்களோ?
2.
உண் கடன் வழிமொழிந்து இரக்கும்_கால் முகனும் தாம்
கொண்டது கொடுக்கும்_கால் முகனும் வேறு ஆகுதல்
பண்டும் இ உலகத்து இயற்கை – கலி 22/1-3
உண்பதற்குரிய பொருளைப் கடனாகப் பெறப் பணிந்து பேசி, இரந்து கேட்கும்போது இருக்கும் முகமும், தாம்
வாங்கிக் கொண்டதைத் திருப்பிக் கொடுக்கும்போது இருக்கும் முகமும் வேறுபடுதல்
பண்டைக் காலத்திலும் இந்த உலகத்துக்கு இயற்கை,
|
பண்டை |
பண்டை – (பெ) பார்க்க : பண்டு.
1. முன்னம், முன்பு
படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டு
குன்றம் நோக்கினென் தோழி
பண்டை அற்றோ கண்டிசின் நுதலே – குறு 249/3-5
ஒலிக்கின்ற மழை பொழிந்த மலைச்சரிவையுடைய அவரின் நாட்டுக்
குன்றத்தை நோக்கினேன், தோழி!
(பசப்பூர்ந்த என் நெற்றி) முன்பு இருந்ததைப் போல் ஆனதோ, உற்றுப்பார் என் நெற்றியை.
|
பண்ணன் |
பண்ணன் – (பெ) சங்க காலத்தில் புகழ்பெற்ற ஒருவன். a person of fame during sangam age.
சங்க இலக்கியத்தில் பண்ணன் என்று ஆறு குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் பண்ணன் என்ற
மூன்று பேரைப்பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.
1. பாண்டிய நாட்டைச் சேர்ந்த சிறுகுடிக் கிழான் பண்ணன்.
2. சோழநாட்டைச் சேர்ந்த சிறுகுடிக் கிழான் பண்ணன்.
3. சோழநாட்டைச் சேர்ந்த வல்லார் கிழான் பண்ணன்.
1.
தனக்கென வாழா பிறர்க்குரியாளன்
பண்ணன் சிறுகுடி படப்பை நுண் – அகம் 54/14
தனக்கென்றேவாழாத பிறர்க்கெல்லாம் உரியவனாகிய
பண்ணன் என்பானது சிறுகுடியைச் சார்ந்த தோட்டத்திலுள்ள
மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் பாடியது.
இவர் நொச்சி நியமங்கிழார் மகனார் என்றும் குறிக்கப்பெறுகிறார்.
இவன் பாண்டியநாட்டுச் சிறுகுடி கிழான் பண்ணனாக இருத்தல்வேண்டும்.
2.
வென்வேல்
இலை நிறம் பெயர ஓச்சி மாற்றோர்
மலை மருள் யானை மண்டு அமர் ஒழித்த
கழல் கால் பண்ணன் காவிரி வட_வயின்
நிழல் கயம் தழீஇய நெடும் கால் மாவின்- அகம் 177/13-17
வெற்றியையுடைய வேலை
இலையின் முனை நிறம் மாறிச் செந்நிறமடையச் செலுத்தி, பகைவருடைய
மலை போன்ற யானைகளை மிக்க போரின்கண் அழித்த
வீரக்கழல் தரித்த காலினையுடைய பண்ணனது காவிரியின் வடக்கிலுள்ள
குளிர்ந்த குளத்தினை அடுத்துள்ள நெடிய அடிமரத்தினையுடைய மாமரத்தின்
செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார் பாடியது.
இவர் செல்லூர் இளம்பொன் சாத்தன் கொற்றன் என்றும்
உறையூர் இளம்பொன் வாணிகன் சாத்தன் கொற்றன் என்றும் குறிக்கப்பெறுகிறார்.
இவன் சோழநாட்டுச் சிறுகுடிக் கிழான் பண்ணன். கொடைச் சிறப்போடு வீரத்திலும் இவன்
சிறந்து விளங்கினான்.
3.
கைவள் ஈகை பண்ணன் சிறுகுடி – புறம் 70/13
கையான் வள்ளிய கொடையையுடைய பண்ணனது சிறுகுடிக்கண்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது.
இவன் சோழநாட்டுச் சிறுகுடிக் கிழான் பண்ணன்.
4.
யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய – புறம் 173/1
யான் உயிர்வாழும் நாளையும் பெற்று பண்ணன் வாழ்வானாக.
சிறுகுடிக் கிழான் பண்ணனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பாடியது.
இவன் சோழநாட்டுச் சிறுகுடிக் கிழான் பண்ணன்.
5.
வலாஅரோனே வாய் வாள் பண்ணன்
உண்ணா வறும் கடும்பு உய்தல் வேண்டின்
இன்னே செல்-மதி நீயே சென்று அவன்
பகை புலம் படரா அளவை நின்
பசி பகை பரிசில் காட்டினை கொளற்கே – புறம் 181/6-10
வல்லார் என்கிற ஊரிடத்தான், வாய்க்கும் வாளையுடைய பண்ணன்,
உண்ணாத வறிய சுற்றம் உண்டு பிழைத்தல் வேண்டுவையாயின்
இப்பொழுதே செல்வாயாக நீ, போய் அவன்
பகைவர் இடத்திற்குச் செல்லா அளவையில் நினது
பசிக்குப் பகையாகிய பரிசிலை நினது வறுமையாய்க் காட்டினையாய்க் கொள்ளுதற்கு
வல்லார் கிழான் பண்ணனைச் சோழநாட்டு முகையலூர் சிறுகருந்தும்பியார் பாடியது.
இவர் பாடிய இன்னொரு புறப்பாடலில் (புறம் 265) கரந்தைப் போரில் மாய்ந்து நடுகல்லாய் நிற்கும்
ஒருவனைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.அவன் இந்தப் பண்ணனாக இருத்தல் வேண்டும் என்பது உரைவேந்தர்
ஔவை அவர்களின் கருத்து.
6.
பெரும்பெயர்
சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தி – புறம் 388/3,4
பெரிய புகழையுடைய சிறுகுடிக்கு உரியனாகிய பண்ணனைப் பொருந்தி
சிறுகுடி கிழார் பண்ணனை, மதுரை அளக்கர்ஞாழலார் மகனார் மள்ளனார் பாடியது.
இவன் பாண்டியநாட்டுச் சிறுகுடிக் கிழான் பண்ணன்.
|
பண்ணியம் |
பண்ணியம் – (பெ) 1. தின்பண்டம், eatables
2. வணிகப்பொருள்கள், merchandise
1.1
பல் வேறு பண்ணியம் தழீஇ திரி விலைஞர்
மலை புரை மாடத்து கொழு நிழல் இருத்தர – மது 405,406
பல வேறுபட்ட தின்பண்டங்களைத் தம்மிடத்தே சேர்த்துக்கொண்டு திரிந்து விற்பவரும்,
மலை போன்ற மாடங்களின் குளிர்ந்த நிழலில் இருக்க –
1.2
காமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம்
கமழ் நறும் பூவொடு மனை_மனை மறுக – மது 422,423
விருப்பம் மருவிய வடிவினையுடைய நுகர்வோர் விரும்பும் பண்ணியங்களை
கமழ்கின்ற நறிய பூவோடு மனைகள்தோறும் எடுத்துச்செல்ல
1.3
பல் வேறு பண்ணிய கடை மெழுக்கு_உறுப்ப – மது 661
பலவாய் வேறுபட்ட பண்டங்களையுடைய கடைகள் மெழுகுதல் செய்யப்பட,
1.4
பண்ணியம் அட்டியும் பசும் பதம் கொடுத்தும் – பட் 203
(பல)பண்டங்களை ஆக்கியிட்டும், புதிய நல்லுணவு கொடுத்தும்
1.5
குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும் – பரி 19/38
குரங்குகளுக்கு உண்பதற்காகப் பலகாரங்கள் கொடுப்போரும்,
2.1
பெரும் கடல் நீந்திய மரம் வலி_உறுக்கும்
பண்ணிய விலைஞர் போல புண் ஒரீஇ – பதி 76/4,5
பெரிய கடலில் சென்றுவந்த மரக்கலத்தினைப் பழுதுநீக்கி மீண்டும் வலிமைப்படுத்தும்
பொருள்கள் விற்கும் கடல்வாணிகர் போலப் போரில் ஏற்பட்ட புண்களை ஆற்றி,
2.2
மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும்
பல் வேறு திரு மணி முத்தமொடு பொன் கொண்டு
சிறந்த தேஎத்து பண்ணியம் பகர்நரும் – மது 504-506
மலையிடத்தனவும், நிலத்திடத்தனவும், நீரிடத்தனவும் பிற இடத்தனவுமாகிய
பல் வேறான அழகிய மணிகளையும், முத்துக்களையும், பொன்னையும் வாங்கிக்கொண்டு 505
— சிறந்த (அயல்)நாட்டுப் பண்டங்களை விற்போரும்
2.3
வேறு பல் நாட்டில் கால் தர வந்த
பல உறு பண்ணியம் இழிதரு நிலவு மணல் – நற் 31/8,9
வேறு பல நாடுகளினின்றும் காற்றுத் தர வந்துசேர்ந்த
பல வகைப்பட்ட பண்டங்கள் வந்து இறங்கும் நிலாவையொத்த மணற்பரப்பிலுள்ள
2.4
பல் வேறு வகைய நனம் தலை ஈண்டிய
மலையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும் – பதி 59/14,15
பல்வேறு வகைப்பட்ட அகன்ற நாடுகளிலிருந்து வந்து குவிந்த,
மலையில் கிடைப்பனவும், கடலில் கிடைப்பனவும் ஆகிய பொருள்களைப் பகிர்ந்தளிக்கும்
2.5
மண்ணுவ மணி பொன் மலைய கடல்
பண்ணியம் மாசு அறு பயம் தரு காருக
புண்ணிய வணிகர் புனை மறுகு ஒருசார் – பரி 23/23-25
மஞ்சனமாடுதற்குரியவை, மணி, பொன், மலையில் கிடைப்பவை, கடலில்
கிடைக்கும் பொருள்கள், குற்றமற்ற வகையில் பயன்தரக்கூடிய நெசவுப்பொருள்கள் ஆகியவற்றை வணிகம்
செய்யும்
அறவுணர்வுடைய வணிகர்கள் முறையாக அமைந்த தெருக்கள்; ஒருபக்கம்
|
பண்ணு |
பண்ணு – 1. (வி) 1. இசை வாசி, sing in an instrument, as tune
2. ஆயத்தம்செய், make ready
3. அலங்கரி, adorn
4. சமை, cook
5. வெட்டு, cut
6. செய், do
– 2. (பெ) பண், இசை, melody-type
1.1.
சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி
யாழோர் மருதம் பண்ண – மது 657,658
தாள அறுதியை இனிதாக உட்கொண்டு நரம்பை இனிதாகத் தெரித்து,
யாழோர் மருதப்பண்ணை இசைக்க
1.2.
பூ நுதல் யானையோடு புனை தேர் பண்ணவும் – புறம் 12/2
பட்டம் பொலிந்த மத்தகத்தையுடைய யானையுடனே அலங்கரிக்கப்பட்ட தேரினை ஏறுதற்கேற்ப அமைக்கவும்,
1.3.
வய_மா பண்ணுந மத_மா பண்ணவும் – பரி 20/18
குதிரைகளின் அலங்காரக் கலன்களை யானைகளுக்கு ஒப்பனையாக மாட்டவும்
1.4.
புகழ் பட பண்ணிய பேர் ஊன் சோறும் – மது 533
புகழ்ந்து கூறுமாறு சமைத்த பெரிய இறைச்சிகள் கலந்த சோற்றையும்,
1.5.
தொல் நிலை முழு_முதல் துமிய பண்ணிய
நன்னர் மெல் இணர் புன்னை போல – அகம் 145/12,13
பழைமை பொருந்திய பரிய அடியுடன் துணியும்படி வெட்டிய
நன்றாகிய மெல்லிய பூங்கொத்துக்களையுடைய புன்னை போல்
1.6.
கண்ணியர் தாரர் கமழ் நறும் கோதையர்
பண்ணிய ஈகை பயன் கொள்வான் ஆடலால் – பரி 16/50,51
தலையில் கண்ணியையும், கழுத்தில் மாலையையும் சூடிய ஆடவரும், மணங்கமழும் மாலையணிந்த
மகளிரும்,
செய்த ஈகையின் பயனைப் பெறுவதற்காக, நீராடுதலால்
2.
ஏழ் புணர் சிறப்பின் இன் தொடை சீறியாழ்
தாழ்பு அயல் கனை குரல் கடுப்ப பண்ணு பெயர்த்து – மது 559,560
(இசை)ஏழும் தன்னிடத்தே கூடின சிறப்பினையுடைய இனிய நரம்பினையுடைய சிறிய யாழை,
தாழ்ந்து (அதன்)அயலே (பாடும் தம்)மிடற்றுப் பாடல் ஒப்ப, பண்களை மாறிமாறி இசைத்து(சுருதி கூட்டி),
|
பண்ணுந |
பண்ணுந – (பெ) அலங்கார அணிகலன்கள், ornamentals
வய_மா பண்ணுந மத_மா பண்ணவும் – பரி 20/18
குதிரைகளின் அலங்காரக் கலன்களை யானைகளுக்கு ஒப்பனையாக மாட்டவும்
|
பண்ணை |
பண்ணை – (பெ) 1. மகளிர் நீர்விளையாட்டு, girls’ water play
2. இசை, melody-type
3. ஒருவகைக் கீரை, a kind of greens
1.
கரை சேர் மருதம் ஏறி
பண்ணை பாய்வோள் தண் நறும் கதுப்பே – ஐங் 74/3,4
கரையைச் சேர்ந்த மருதமரத்தில் ஏறி,
நீருக்குள் பாய்பவளின் குளிர்ந்த நறிய கூந்தல்.
2.
வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே – பரி 14/4
நிறம் மிக்க வண்டுகள் எழுப்பும் இசை, பண்களைப் போன்றிருந்தனவே!
3.
பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப – அகம் 393/9
பண்ணைக்கீரையின் வெள்ளிய பழத்தின் விதையை ஒப்ப
|
பதடி |
பதடி – (பெ) பயனின்மை, futility
எல்லாம் எவனோ பதடி ———
——————- —————- —————-
அரிவை தோள் அணை துஞ்சி
கழிந்த நாள் இவண் வாழும் நாளே – குறு 323
மற்ற எல்லா நாட்களும் என்ன பயனை உடையன? அவை வெற்று நாட்கள்; ————–
——————- —————- —————-
காதலியின் தோளே அணையாகக் கொண்டு உறங்கிக்
கழிந்த நாட்கள் மட்டுமே இங்கு வாழ்கின்ற நாட்கள்
|
பதணம் |
பதணம் – (பெ) கோட்டை மதிலுள் அமைந்த உயர்ந்த மேடை, raised terrace of a fort, rampart
நெடு மதில் நிரை பதணத்து
அண்ணல் அம் பெரும் கோட்டு அகப்பா எறிந்த – பதி 22/25,26
நெடிய மதிலில் வரிசையாய் அமைந்த உயர்ந்த மேடைகளையும் கொண்ட,
பெருமை மிக்க அழகிய பெரிய சிகரங்களைக் கொண்ட அகப்பா என்னும் கோட்டையை அழித்த
|
பதன் |
பதன் – (பெ) பார்க்க : பதம்
1. பக்குவம்
பழ மழை பொழிந்து என பதன் அழிந்து உருகிய
சிதட்டு காய் எண்ணின் சில் பெயல் கடை நாள் – குறு 261/1,2
பழைய மழை பொழிந்ததாக, சரியான பக்குவம் கெட்டு விழுந்த
உள்ளீடற்ற காயையுடைய எள் பயிருக்கான சிறிதளவு மழைபெய்யும் கார்காலத்து இறுதிநாட்களில்
2. சோறு
தோள் பதன் அமைத்த கரும் கை ஆடவர் – அகம் 79/1
தோளிலே தொங்கவிடும் சோற்று முடியைக் கோத்த வலிய கையினையுடைய ஆடவர்கள்
3. செவ்வி, தக்க தருணம்
அரும் கடி காவலர் சோர் பதன் ஒற்றி – அகம் 2/14
கடும் காவலையுடைய காவலர்கள் சோர்ந்திருக்கும் தக்க சமயத்தை உளவறிந்து கண்டு
|
பதப்பர் |
பதப்பர் – (பெ) வெள்ளத்தைத் தடுக்க இடும் மணற்கோட்டை, Heaped sand to prevent inroads of flood;
வெண் தலை செம் புனல் பரந்து வாய் மிகுக்கும்
பல சூழ் பதப்பர் பரிய வெள்ளத்து
சிறை கொள் பூசலின் புகன்ற ஆயம் – பதி 30/17-19
வெண்மையான நுரையை முகப்பினில் கொண்ட சிவந்த புதுவெள்ளம் பரந்து ஓரங்களை உடைத்துச் செல்லும்
இடங்களில்
பல வைக்கோல் புரிகள் சூழக் கட்டிய மணல் தடுப்புகளும் கரைந்துபோக, அந்த வெள்ளத்தை
அணையிட்டுத் தடுக்கும் ஆரவாரத்தோடு விரும்பிநிற்கும் மக்கள் கூட்டம்,
|
பதம் |
பதம் – (பெ) 1. பக்குவம், பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மை,
required degree of hardness or softness, quality or fitness
2. வேகவைத்த உணவு, சோறு, cooked food, boiled rice
3. செவ்வி, தகுந்த தருணம், opportune moment
4. ஈரம், moisture, dampness
5. தரம், capacity
1.
புலர் பதம் கொண்டன ஏனல் குரலே – நற் 259/10
காய்ந்து புலரும் பக்குவத்தை எய்தின தினையின் கதிர்கள்.
2.
செழும் பல் யாணர் சிறு குடி படினே
இரும் பேர் ஒக்கலொடு பதம் மிக பெறுகுவிர் – மலை 156,157
வளப்பம் மிக்க பல்வித புதுவருவாயையுடைய சிறிய ஊரில் தங்கினால்,
(அலைச்சலால்)கறுத்துப்போன பெரிய சுற்றத்துடன் பக்குவமாக வேகவைத்த அவ்வுணவை நிறையப் பெறுவீர்
அவிழ் பதம் கொள்க என்று இரப்ப – பொரு 112
‘நன்றாக வெந்த சோற்று உணவை(யும்) கொள்வாயாக’ என்று வேண்ட,
3.
ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி – நற் 331/2
ஒன்றன்பின் ஒன்றாக வண்டிகளைச் செலுத்தும் உப்புவணிகர் வருகின்ற வேளையைப் பார்த்து
அரும் கடி காவலர் இகழ் பதம் நோக்கி – அகம் 162/7
அரிய காத்தல் தொழிலையுடைய காவலர் சோம்பியிருக்கும் தகுந்த நேரத்தைப் பார்த்து
4.
மலை இடம்படுத்து கோட்டிய கொல்லை
தளி பதம் பெற்ற கான் உழு குறவர் – நற் 209/1,2
மலைப்பக்கத்தை விசாலமாக்கி உருவாக்கிய கொல்லையில்
மழையால் ஈரப்பதம் பெற்ற காட்டை உழும் குறவர்
5.
இழை அணிந்து
புன் தலை மட பிடி பரிசிலாக
பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் – புறம் 151/3-5
ஆபரணங்களை அணிந்து
புல்லிய தலையையுடைய மெல்லிய பிடியைப் பரிசிலாகக் கொண்டு
அவர் பெண்டிரும் தம் தரத்திலே பரிசில்கொடுக்கும்
|
பதலை |
பதலை – (பெ) மத்தளம், a kind of drum
பதலை ஒரு கண் பையென இயக்கு-மின் – புறம் 152/17
பதலையின் ஒரு முகத்தை மெல்லெனக் கொட்டுமின்
|
பதவு |
பதவு – (பெ) அறுகம்புல், bermuda grass
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை
செறி இலை பதவின் செம் கோல் மென் குரல்
மறி ஆடு மருங்கின் மட பிணை அருத்தி – அகம் 34/4-6
பெரிய முறுக்குண்ட கொம்புகளையுடைய பெருமை தங்கிய ஆண்மான்
செறிவாக அமைந்த இலைகளையுடைய அறுகம்புல்லின் சிவந்த தண்டினோடு மெல்லிய கொத்துக்களை
குட்டிகள் விளையாடும் பக்கத்தினையுடைய இளைய பெண்மானை தின்னச்செய்து
|
பதாகை |
பதாகை – (பெ) பெருங்கொடி, large flag
பலர் புகு மனை பலி புதவின்
நறவு நொடை கொடியொடு
பிறபிறவும் நனி விரைஇ
பல் வேறு உருவின் பதாகை நீழல் – பட் 179-182
(கள்ளுண்போர்)பலரும் செல்லும் மனைகளில் (தெய்வத்திற்குக் கொடுக்கும்)பலிகளுக்கான வாசலில்
கள் விற்பனைக்காகக் கட்டிய கொடியுடன்,
ஏனையவற்றிற்குக் கட்டின கொடிகளும் மிகவும் கலந்துகிடப்பதால்,
பலவாய் வேறுபட்ட வடிவினையுடைய பெருங்கொடிகளின் நிழலில்
|
பதி |
பதி – 1. (வி) 1. அழுந்தக் கிடத்து, insert, ingraft
2. ஆழ்த்து, sink
– 2. (பெ) 1. ஊர், village, town
2. இருப்பிடம், உறைவிடம், dwelling place
1.1
தொடலை வாளர் தொடுதோல் அடியர்
குறங்கு இடை பதித்த கூர் நுனை குறும்பிடி – மது 636,637
தொங்குதல் (உள்ள)வாளையுடையவராய்; செருப்புக்கோத்த அடியினையுடையவராய்;
தொடையில் (தெரியாமற்கிடக்கும்படி)அழுத்தின கூரிய முனையையுடைய குறுகிய பிடியமைந்த
உடைவாளையும்,
1.2
அறு சுனை முற்றி
உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை
கடும் தாம் பதிபு ஆங்கு கை தெறப்பட்டு – கலி 12/3-5
நீர் வற்றிப்போன சுனையைச் சுற்றிநின்று,
ஒருசேர நீர்வேட்கை கொண்டதால், உடல் வருந்திய யானைகள்
விரைவாகத் தம் துதிக்கைகளை நீரில் ஆழ்த்த, அதனால் தம் கைகள் சுடப்பட்டு
2.1
பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி – பெரும் 65
பல எருதுகளையுடைய உப்புவாணிகர் ஊர்களுக்குச் செல்லுகின்ற நெடிய வழி
2.2
விசும்பு ஆடு பறவை வீழ் பதி படர – குறி 46
வானத்தில் அலையும் பறவைகள் தாம் விரும்பும் இருப்பிடங்களுக்குச் செல்லும்படியாக,
|
பதின்மர் |
பதின்மர் – (பெ) பத்துப்பேர், ten persons
ஆ முனியா ஏறு போல் வைகல் பதின்மரை
காமுற்று செல்வாய் ஓர் கண்_குத்தி_கள்வனை – கலி 108/48,49
பசுவை வெறுக்காத காளையைப் போல், நாள் ஒன்றுக்குப் பத்துப்பேரைக்
காமுற்று அவர் பின் செல்பவனான நீ, விழித்திருக்கும்போதே கண்ணைக் குத்தும் கள்வன்!
|
பதிபழகு |
பதிபழகு – (வி) ஓர் ஊரில் நெடுநாள் தங்கியிரு,
stay in a place for a long time, get acquainted with a place
பல் ஆயமொடு பதிபழகி
வேறு_வேறு உயர்ந்த முது வாய் ஒக்கல் – பட் 213,214
பல்வேறுபட்ட மக்கட்கூட்டத்தோடு பல நாடுகளிலும் சென்று பழகி
வெவ்வேறான உயர்ந்த அறிவுகள் நிரம்பப்பெற்ற சுற்றத்தினையுடையவராகிய சான்றோர்
பதி முதல் பழகா பழங்கண் வாழ்க்கை – புறம் 393/1
தொடக்க முதலே ஓரிடத்தில் தங்கி அதனைப் பழகியறியாத துன்ப வாழ்க்கையில்
போது அறியேன் பதி பழகவும் – புறம் 400/14
அவன் ஊர்க்கண்ணே இருந்தேனாகவும் கழிந்த நாட்களை அறியேனாயினன்
|
பதிற்று |
பதிற்று – (பெ) பத்து, ten
பதிற்று கை மதவலி நூற்று கை ஆற்றல் – பரி 3/40
பத்துக் கைகளைக் கொண்ட மிகுந்த வலிமை கொண்டவனே! நூறு கைகளைக் கொண்ட ஆற்றலாளனே!
|
பதிவதம் |
பதிவதம் – (பெ) பதிவிரதம், கணவனுக்காக மனைவியர் மேற்கொள்ளும் நோன்பு,
ceremonial fasting by wives for the welfare of their husbands
பதிவத மாதர் பரத்தையர் பாங்கர் – பரி 10/23
பதிவிரதம் இருக்கும் கற்புடைய மகளிரும், பரத்தையரும், அவருக்குத் தோழியரும்,
|
பதுக்கு |
பதுக்கு – (பெ) பதுக்கை, கற்குவியல், pile of stones
உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல் – அகம் 289/2
உயர்ந்த கற்குவியல்களில் ஏறிப்படர்ந்த நெருங்கிய கொடியாகிய காட்டு மல்லிகை
|
பதுக்கை |
பதுக்கை – (பெ) 1. கற்குவியல், pile of stones
2. இலைக்குவியல், heap of leaves
3. திட்டு, மேடு, raised ground
1.
இரலை சேக்கும் பரல் உயர் பதுக்கை – அகம் 91/10
ஆண்மான்கள் தங்கும் பரலையுடைய உயர்ந்த கற்குவியலில்
2.
வெம் சுரத்து
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை – குறு 77/2,3
வெம்மையான நிலத்தில்
கொல்லப்பட்ட பயணியரின் தழையிட்டு மூடிய குவியல்
3.
பரல் உடை மருங்கின் பதுக்கை சேர்த்தி – புறம் 264/1
பருக்கைக்கற்களையுடைய இடத்து மேட்டைச் சேர்த்தி
|
பதுமம் |
பதுமம் – (பெ) தாமரை, lotus
பதுமத்து பாயல்
பெரும் பெயர் முருக – பரி 5/49,50
தாமரைப்பூவாகிய படுக்கையில்,
பெரிய புகழினை உடைய முருகனே!
|
பதை |
பதை – (வி) பதற்றப்படு, be flurried
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை
பதைப்ப ததைந்த நெய்தல் – ஐங் 155/1-3
வெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக,
அதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை
சிறகடித்து அங்குமிங்கும் பறந்துதிரிவதால் சிதைந்துபோன நெய்தல் மலர்
|
பதைபதைப்பு |
பதைபதைப்பு – (பெ) மோசமான ஒரு நிகழ்வால் ஒருவருக்கு ஏற்படும் பயமும் கலக்கமும் நடுக்கமும்
கூடிய உணர்வு, பதற்றம், throbing through pain, fear or grief, being in anguish
பரு கோட்டு யாழ் பக்கம் பாடலோடு ஆடல்
அருப்பம் அழிப்ப அழிந்த மன கோட்டையர்
ஒன்றோடு இரண்டா முன் தேறார் வென்றியின்
பல் சனம் நாணி பதைபதைப்பு – பரி 10/56-59
பெரிய தண்டினையுடைய யாழின் இசையும், பாடலுடன் ஆடலும்
ஊடியிருந்தவரின் மனவுறுதியை அழிக்க, இவ்வாறு மனம் என்னும் கோட்டை அழிந்துபோன மைந்தரும்,
மகளிரும்,
மனம் ஒன்றுபட்டு, முன்பு இரண்டாக விளங்கிய நிலைமை கெடத் துணியமாட்டார், ஊடலில்
வெல்லவேண்டும் என்ற எண்ணத்தில்,
அவர்கள் அங்குத் திரண்டிருந்த பலவகை மக்களால் வெட்கப்பட்டனர், மனம் பதைபதைத்தனர்,
|
பதைப்பு |
பதைப்பு – (பெ) துடிதுடிப்பு, quivering with extreme pain
பாம்பு பதைப்பு அன்ன பரூஉ கை துமிய – முல் 70
|
பத்தர் |
பத்தர் – (பெ) பார்க்க : பத்தல்
1. தொட்டி, பள்ளம்
பய நிரைக்கு எடுத்த மணி நீர் பத்தர்
புன் தலை மட பிடி கன்றோடு ஆர – நற் 92/6,7
பயன்தரும் ஆநிரைகளுக்காக எடுத்து வைத்த தெளிந்த நீருள்ள தொட்டியில்
புல்லிய தலையையுடைய இளைய பெண்யானை தன் கன்றுடன் வேட்கைதீர
2. குடுவை, யாழின் குடம்
யாழ் பத்தர் புறம் கடுப்ப – புறம் 136/1
யாழின் குடத்தின் வெளிப் பக்கத்தைப் போல
|
பத்தல் |
பத்தல் – (பெ) 1. தொட்டி, trough for watering animals, குழி, பள்ளம், ditch, depression
2. யாழின் குடம், a pot like structure in a yAzh
3. கொப்பரை, cauldron
1.
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி
ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தல்
யானை இன நிரை வௌவும் – நற் 240/7-9
குந்தாலியால் குழிவு ஏற்படுத்திய கிணற்றை அடைந்து
பசுக்களை நடத்திச்செல்பவர்கள் தோண்டிய குழிவான பள்ளத்தின் நீரை
யானைகளின் கூட்டமான திரள் கவர்ந்துண்ணும்
நெடு விளி கோவலர் கூவல் தோண்டிய
கொடு வாய் பத்தல் வார்ந்து உகு சிறு குழி – அகம் 155/8-9
நீண்ட சீழ்க்கை ஒலியையுடைய கோவலர் தோண்டிய கிணற்றினின்றும் முகந்த
வளைந்த வாயினையுடைய பாத்திரத்திலிருந்து நீர் வடிந்து செல்லும் சிறிய குழி
2.
குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல்
விளக்கு அழல் உருவின் விசி_உறு பச்சை – பொரு 4,5
(மானின்)குளம்பு (பதிந்த)இடத்தைப் போன்று பகுக்கப்பட்ட (இரண்டு பக்கமும் தாழ்ந்து நடுவுயர்ந்த)குடத்தையும்;
விளக்குப் பிழம்பின் (நிறத்தை ஒத்த)நிறமுடையதும் விசித்துப் போர்க்கப்பட்டதும் ஆகிய தோல்,
3.
அரிநர் கொய்வாள் மடங்க அறைநர்
தீம் பிழி எந்திரம் பத்தல் வருந்த – பதி 19/23
விளைந்த நெல்லை அறுப்போரின் அரிவாள் மழுங்கிப்போக, கரும்பு ஆட்டுவோரின்
சாறு பிழியும் எந்திரத்தின் கொப்பரை வருந்த,
|
பந்தர் |
பந்தர் – (பெ) 1. பந்தல்,
shed with a flat roofcovered with plaited coconut leaves or other branches with leaves
2. முத்துக்களுக்கு பேர்போன ஒரு சங்ககால ஊர்,
a town in sangam period famous for its pearls.
1.
செழும் கன்று யாத்த சிறு தாள் பந்தர் – பெரும் 297
கொழுத்த கன்றைக் கட்டின சிறிய கால்களையுடைய பந்தல்
குரை இலை போகிய விரவு மணல் பந்தர் – நற் 40/2
ஒலிக்கும் தென்னங்கீற்று வேய்ந்து, பரப்பிய மணலைக் கொண்ட பந்தலில்,
2.
பந்தர் பெயரிய பேர் இசை மூதூர் – பதி 67/2
பந்தல் என்ற பெயரைக் கொண்ட பெரிய புகழ்படைத்த முதிய ஊரைச் சேர்ந்த
பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம் – பதி 74/6
பந்தல் என்ற ஊர் தந்த பலரும் புகழும் முத்துக்களையும்,
|
பனம் |
பனம் – (பெ.அ) பனைமரத்துடன் தொடர்புகொண்ட, adjectival form of palmyra tree
பனங்கிழங்கு, பனம்பழம், பனங்கள், பனங்கற்கண்டு ஆகிய சொற்களில் வரும் பனம் என்ற சொல்
பனைமரத்தைக் குறித்து நிற்கிறது.
1.
இரும் பன தீம் பிழி உண்போர் மகிழும் – நற் 38/3
கரிய பனையின் இனிய கள்ளினை உண்போர் மகிழும்
2.
இரும் பனம் போந்தை தோடும் – பொரு 143
கரிய பனைமரத்துப் போந்தையின் மாலையினையும்
3.
பெரும் கயிறு நாலும் இரும் பனம் பிணையல் – நற் 90/6
பெரிய கயிறாகத் தொங்கும் கனத்த பனைநாரால் பின்னிப்பிணைக்கப்பட்ட ஊஞ்சலில்
4.
இரும் பனம் பசும் குடை பலவுடன் பொதிந்து – குறு 168/2
கரிய பனையின் ஓலையாற்செய்த பசிய குடைக்குள் பலவாக வைத்து மூடி,
5.
இரும் பனம் புடையல் – பதி 42/1
கரிய பனந்தோட்டால் ஆன மாலையையும்
6.
இரும் பனம் செறும்பின் அன்ன பரூஉ மயிர் – அகம் 277/7
கரிய பனையின் சிறாம்பினைப் போன்ற தடித்த மயிரினையும்
|
பனி |
பனி – 1. (வி) 1. குளிர், become cool
2. நடுங்கு, tremble
3. குளிரால் நடுங்கு, shiver
4. நடுங்கச்செய், நடுக்கு, cause to tremble
– 2. (பெ) 1. குளிர்ச்சி, coolness
2. உறைந்த நீர், snow, ice
3. மஞ்சு, mist, fog
4. கண்ணீர், tears
5. குளிர், chill, cold
6. பனிக்காலத்துக்குளிர்ச்சி, coldness is winter / dewy season
7. குளிர்ந்த நீர்த்துளி, dew
1.1
வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ
பொய்யா வானம் புது பெயல் பொழிந்தென – நெடு 1,2
உலகம்(எல்லாம்) குளிரும்படியாக, வலப்புறமாக வளைந்து (எழுந்திருந்து),
(பருவம்)பொய்யாத மேகம் (கார்காலத்து முதல்)மழையைப் பெய்ததாக,
1.2.
அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை – முல் 79
பகையரசு இருந்து நடுங்கும் முரசு முழங்கும் பாசறையில்
1.3.
மட_தகை மா மயில் பனிக்கும் என்று அருளி – புறம் 145/1
மெல்லிய தகைமையுடைய கரிய மயில் குளிரால் நடுங்குமென்றுஅருள்செய்து
1.4.
அஞ்சுவர பனிக்கும் வெம் சுரம் இறந்தோர் – நற் 99/3
அச்சம் தரும்படி நடுக்குகின்ற கொடுமையான பாலைநிலக்காட்டில் சென்றோர்
2.1
பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு – திரு 45
பாறைநிலம் முதிர்வு பெற்ற குளிர்ந்த கடல் நிலைகுலைய உள்ளே சென்று
2.2
பனி_வரை மார்பன் பயந்த நுண் பொருள் – சிறு 240
பனி படர்ந்த மலை (இமயம்)(போன்ற)மார்பையுடையவனும் ஆகிய வீமசேனனின் நுணுகிய பொருளையுடைய,
2.3
கொன்றை மென் சினை பனி தவழ்பவை போல்
பைம் காழ் அல்குல் நுண் துகில் நுடங்க – பெரும் 328,329
கொன்றையின் அரும்புகளையுடைய மெல்லிய கொம்புகளில் பனிப்படலம் தவழ்பவை போல
பசிய மணிகளைக் கோத்த வடங்களையுடைய அல்குலில் கிடக்கின்ற மெல்லிய துகில் அசைய
2.4
ஆகத்து அரி பனி உறைப்ப – குறி 249
மார்பினில் (கண்களிலிருந்து)அரித்துவிழும் நீர் சொட்ட
2.5
நொய் மர விறகின் ஞெகிழி மாட்டி
பனி சேண் நீங்க இனிது உடன் துஞ்சி – மலை 446,447
(உடைப்பதற்கு எளிதான)சுள்ளிக் குச்சிகளைக் கொள்ளியாகத் தீமூட்டி,
குளிர் முற்றிலும் விட்டுப்போக இனிதே சேர்ந்து தூங்கி,
2.6
கடும் பனி அற்சிரம் நடுங்க – நற் 86/4
கடுமையான பனியையுடைய முன்பனிக்காலத்தில் நம்மைப் பிரிந்து நாம் நடுங்கிநிற்க,
2.7
தகை மலர் பழனத்த புள் ஒற்ற ஒசிந்து ஒல்கி
மிக நனி சேர்ந்த அ முகை மிசை அ மலர்
அக இதழ் தண் பனி உறைத்தரும் ஊர கேள் – கலி 77/5-7
அழகுள்ள மலர்களையுடைய நீர்நிலையிலுள்ள பறவை வந்து தாக்க, மிகவும் சாய்ந்து வளைந்து,
மிக மிக அருகிலிருக்கும் அந்த மொட்டுக்களின் மேல் அந்தத் தாமரை மலரின்
உள்ளிதழ்களிலிருந்து குளிர்ந்த நீர்த்துளிகளைச் சொட்டும் ஊரினைச் சேர்ந்தவனே கேட்பாயாக!
|
பனிச்சை |
பனிச்சை – (பெ) பெண்கள் முடியலங்கார வகை, a mode of dressing the hair of women
வாய் இருள் பனிச்சை வரி சிலை புருவத்து
ஒளி இழை ஒதுங்கிய ஒள் நுதலோரும் – பரி 23/36,37
இருள் வாய்ந்த கூந்தலினையும், வரிந்த வில்லினைப் போன்ற புருவங்களையும்
ஒளியையுடைய தலை அணிகலன்கள் ஒதுங்கிக்கிடக்கும் ஒள்ளிய நெற்றியையுடையவரும்,
|
பனிப்பு |
பனிப்பு – (பெ) நடுக்கம், trembling
சூர் பனிப்பு அன்ன தண் வரல் ஆலியொடு
பரூஉ பெயல் அழித்துளி தலைஇ – அகம் 304/3,4
தெய்வம் நடுக்கம் செய்தல் போன்ற குளிர்ச்சி பொருந்திய பனிக்கட்டியோடு
பருத்த பெயலாய மிக்க துளிகளைப் பொருந்தி
|
பனிற்று |
பனிற்று – (வி) தூவு, சிந்து, spill, shed
குருதி பனிற்றும் புலவு களத்தோனே – பதி 57/3
இரத்தம் சிதறித்தெளிக்கும் புலால் நாறும் போர்க்களத்தில் இருக்கிறான்,
|
பனுவல் |
பனுவல் – (பெ) 1. கொட்டையும் கோதும்நீக்கி நூற்பதற்கு ஏற்பத் தூய்மை செய்யப்பட்ட பஞ்சு,
toused cotton, cotton that has been pulled and cleaned
2. சொல், word, speech
3. பாட்டு, musical composition, song
4. நூல், treatise
5. கேள்வி, learning through oral instruction
1.
பருத்தி_பெண்டின் பனுவல் அன்ன
நெர்ப்பு சினம் தணிந்த நிணம் தயங்கு கொழும் குறை – புறம் 125/1,2
பருத்தி நூற்கும் பெண்டினது சுத்தம் செய்யப்பட்ட பஞ்சுபோன்ற
நெருப்பு தன் வெம்மை ஆறுதற்கேதுவாகிய நிணம் அசைந்த கொழுவிய ஊந்தடிகளை
2.
தண்ணம் துறைவன் தூதொடும் வந்த
பயன் தெரி பனுவல் பை தீர் பாண – நற் 167/5,6
குளிர்ச்சியாயுள்ள அழகிய துறையைச் சேர்ந்தவனின் தூதோடும் வந்த
நீ பெறும் பயனுக்குத் தக்கவாறு கூறும் சொற்களையுடைய வருத்தம் தீர்ந்த பாணனே!
3.
கை கவர் நரம்பின் பனுவல் பாணன் – நற் 200/8
கையினால் தடவுதற்குரிய நரம்பினால் இசைக்கும் பாட்டுக்களைக் கொண்ட பாணன்
4.
மாசு இல் பனுவல் புலவர் புகழ் புல
நாவின் புனைந்த நன் கவிதை மாறாமை – பரி 6/7,8
குற்றமில்லாத நூல்களைக் கற்ற புலவர்கள், புகழுடைய அறிவினைக் கொண்ட
தம் நாவால் பாடிய வையை ஆற்றைப் பற்றிய நல்ல கவிதைகள் பொய்படாமல் நிலைநிற்கச் செய்ய,
5.
பொய்த்தல் அறியா உரவோன் செவி முதல்
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று என – புறம் 237/4,5
பொய் கூறுதலை அறியாத அறிவுடையோனது செவியிடத்து
நல்லோர் விதைத்த கேள்வியாகிய பயிர் நன்றாக விளைந்தது என நினைத்து
|
பனைக்கொடியோன் |
பனைக்கொடியோன் – (பெ) பலராமன், Balaraman
புதை இருள் உடுக்கை பொலம் பனைக்கொடியோற்கு
முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும் – பரி 2/22,23
எதனையும் மறைக்கும் இருள் நிற ஆடையை உடைய, பொன்னாலான பனைக்கொடியானாகிய பலதேவனுக்கு
முற்பட்டவன் ஆவாய் என்போர்க்கு முதியவனாக இருப்பதுவும்,
கடல் வளர் புரி வளைபுரையும் மேனி
அடல் வெம் நாஞ்சில் பனைக்கொடியோனும் – புறம் 56/3,4
கடற்கண்ணே வளரும் புரிந்த சங்கைஒத்த திரு நிறத்தையுடைய
கொலையை விரும்பும் கலப்பையையும் பனைக்கொடியை உடையோனும்
பால் நிற உருவின் பனைக்கொடியோனும்
நீல் நிற உருவின் நேமியோனும் என்று – புறம் 58/14,15
பால்போலும் நிறத்தையுடைய பனைக்கொடியை உடையோனும்
நீல நிறம் போலும் திருமேனியைக் கொண்ட ஆழியை உடையோனும் என்று
|
பனைமீன் |
பனைமீன் – (பெ) சுமார் 8 அங்குல நீளமுள்ள கருப்பு மீன்,
Climbing-fish, rifle green, attaining 8 1/2 in. in length, Anabas scandens;
பனை_மீன் வழங்கும் வளை மேய் பரப்பின் – மது 375
பனைமீன்கள் உலாவும் சங்கு மேய்கின்ற கடலிடத்தில்,
|
பனையம் |
பனையம் – (பெ) பனை, palmyrah, 17-ஆவது நட்சத்திரம், அனுஷம், the 17th star anusham
முட பனையத்து வேர் முதலா – புறம் 229/3
முடப்பனை போலும் வடிவையுடைய அனுஷ நாளில் அடியின் வெள்ளி முதலாக
|
பன்னல் |
பன்னல் – (பெ) பருத்தி, cotton
பன்னல் வேலி இ பணை நல் ஊரே – புறம் 345/20
பருத்தி வேலி சூழ்ந்த இந்த வள வயல் சூழ்ந்த நல்ல ஊர்.
|
பன்னு |
பன்னு – (வி) புகழ்ந்துகூறு, praise, extol
பன்னிய
மலை கெழு நாடனொடு நம்மிடை சிறிய
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல – நற் 136/4-6
யாவரும் புகழ்கின்ற
மலையைப் பொருந்திய நாட்டவனுக்கும் நமக்கும் இடையே சிறிதளவு
பிரிவு உள்ளதை அறிந்திருப்பவர் போல,
|
பன்மை |
பன்மை – (பெ) பலவாக/பலராக இருக்கும் நிலை, plurality
நம்
பன்மையது எவனோ இவள் வன்மை தலைப்படினே – நற் 170/8,9
நாம்
பலராயிருந்தும் என்ன பயன், இவள் ஒருத்தியின் வலிமை வெளிப்பட்டால்?
|
பம்பு |
பம்பு – (வி) அடர்ந்திரு, செறிந்திரு, be close, dense, crowded
சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி – பட் 256
சிறிய பூக்களையுடைய நெருஞ்சியோடு அறுகம்புல் அடர்ந்து பரவப்பெற்று,
|
பம்பை |
பம்பை – (பெ) இரண்டு பக்கங்களைக்கொண்ட இரண்டு பறைகளின் இணைப்பு,
a pair of two headed drums joined together
கடும் குரல் பம்பை கத நாய் வடுகர் – நற் 212/5
கடும் ஒலியையுடைய பம்பை எனும் பறையையும் சினங்கொண்ட நாய்களையும் கொண்ட வடுகரின்
|
பய |
பய – 1. (வி) 1. பயன்கொடு, be beneficial
2. கொடு, give
3. பெற்றெடு, beget
4. இயற்று, உருவாக்கு, படை, produce, create, make
5. உண்டாக்கு, விளைவி, cause
6. பலனாக அமை, விளைவுறு, yield, result in
7. பசந்துபோ, காதல்நோயினால் நிறம் மங்கு, turn sallow through affliction;
– 2. (வி.அ) மெல்ல, பைய என்பதன் குறை, slowly
1.1.
நன் மலை நாடன் பிரிதல்
என் பயக்கும்மோ நம் விட்டு துறந்தே – ஐங் 268/4,5
நல்ல மலைநாடன் பிரிந்து செல்வது
என்ன பயனைத் தருமோ? நம்மைத் தனியே விட்டுவிட்டுத் துறந்து –
1.2.
நய_தகு மரபின் விய_தகு குமர
வாழ்த்தினேம் பரவுதும் தாழ்த்து தலை நினை யாம்
நயத்தலின் சிறந்த எம் அடியுறை
பயத்தலின் சிறக்க நாள்-தொறும் பொலிந்தே – பரி 9/82-85
விரும்பத்தகுந்த பண்பினையுடைய வியக்கத்தக்க குமரவேளே!
உன்னை வாழ்த்துகின்றோம்! புகழ்கின்றோம்! தலைகளைத் தாழ்த்தியவராய் உன்னை நாம்
விரும்புதலினால் சிறப்புற்று விழங்கும் எமது அடியுறை வாழ்வானது
நீ எமக்கு அருள்செய்வதனால் சிறந்து விளங்கட்டும் நாள்தோறும் மேலும் மேலும் அழகுபெற்று.
1.3.
அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ – திரு 255
அறுவராலே பெறப்பட்ட ஆறு வடிவு பொருந்தின செல்வனே
1.4.
பூ விரி கச்சை புகழோன் தன்முன்
பனி_வரை மார்பன் பயந்த நுண் பொருள்
பனுவலின் வழாஅ பல் வேறு அடிசில் – சிறு 239-241
பூத்தொழில் பரந்த கச்சையினையுடைய புகழ்வாய்ந்தவன்(அருச்சுனன்) அண்ணனும்,
பனி மலை (இமயம்)(போன்ற)மார்பையுடையவனும் ஆகிய வீமசேனன் இயற்றிய நுணுகிய பொருளையுடைய,
சமையல்நூல் (நெறியில்)தப்பாத பலவிதமான அடிசிலை,
1.5.
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த
பூளை அம் பசும் காய் புடை விரிந்து அன்ன – பெரும் 83,84
நீண்ட தாளினையுடைய இலவமரத்தின் அசைகின்ற கொம்பு காய்த்த
பஞ்சினையுடைய அழகிய பசிய காயின் முதுகு விரிந்து தோன்றினதைப் போன்ற
1.6.
விரவு பூ பலியொடு விரைஇ அன்னை
கடி உடை வியல் நகர் காவல் கண்ணி
முருகு என வேலன் தரூஉம்
பருவம் ஆக பயந்தன்றால் நமக்கே – அகம் 232/12-15
விரவிய பலவகைப் பூக்களாய பலியுடன் பொருந்து, தாயானவள்
காவல் பொருந்திய அகன்ற மலையின்கண் காத்தலைக் கருதி
வேறுபாடு முருகனால் உண்டாயதென்று வேலனை அழைக்கும்
காலமாக நமக்கு விளைந்தது.
1.7.
பயந்தன மாதோ நீ நயந்தோள் கண்ணே – ஐங் 264/4
பசந்துபோயிருக்கின்றன நீ விரும்பியவளின் கண்கள்.
2.
கை பய பெயர்த்து மை இழுது இழுகி – புறம் 281/3
கையை மெல்ல எடுத்து மையாகிய இழுதினை இட்டு
|
பயந்தோள் |
பயந்தோள் – (பெ) ஈன்றவள், பெற்றெடுத்தவள், தாய், the woman who begot, mother
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை – பரி 3/16
தன்னைப் பெற்ற தாயான விந்தையின் துன்பத்தைக் களைந்த கருடனை ஊர்தியாகக் கொண்டிருக்கிறாய்!
|
பயப்பு |
பயப்பு – (பெ) பசப்பு, காதலர் பிரிவால் பெண்களின் மேனியில் ஏற்படும் நிறமாற்றம்,
Change of hue, as of the skin through love-sickness; turning sallow through affliction;
பயப்பு என் மேனியதுவே – குறு 219/1
பசலைநோய் என் மேனியில் இருக்கிறது; விருப்பமோ
|
பயம் |
பயம் – (பெ) பயன், நன்மை, பலன், profit, gain, advantage
மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம்
அரும் பொருள் அருத்தும் திருந்து தொடை நோன் தாள் – பெரும் 67,68
மலையில் உள்ளனவும், கடலில் உள்ளனவும்(ஆன) சிறந்த பயனைக் கொடுக்கும்
அரிய பொருளை (எல்லாரும்)நுகரச்செய்யும் திருத்தமான தம் வினையில் வலிய முயற்சியினையும்;
கயம் புக்கு அன்ன பயம் படு தண் நிழல் – மலை 47
குளத்தில் மூழ்கியதைப் போன்ற பயனைத் தருகின்ற குளிர்ந்த நிழலில்,
மழையினும் பெரும் பயம் பொழிதி அதனால் – பதி 64/18
மழையைக் காட்டிலும் பெரிதான நன்மையினைப் பொழிகிறாய், அதனால்
|
பயம்பு |
பயம்பு – (பெ) பள்ளம், குழி, depression, pit
மென் பூ வாகை புன் புற கவட்டு இலை
பழம் கன்று கறித்த பயம்பு அமல் அறுகை – அகம் 136/10,11
மெல்லிய பூவையுடைய வாகையின் புல்லிய புறத்தினையுடைய கவர்த்த இலையை
முதிய கன்று கறித்த பள்ளத்தில் படர்ந்த அறுகினது
முரம்பு கண் உடைந்த பரல் அவல் போழ்வில்
கரந்து பாம்பு ஒடுங்கும் பயம்பு-மார் உளவே – மலை 198,199
சரளைமேடுகளில் மேற்பரப்பு வெடித்து(உண்டான),கூழாங்கல்(நிறைந்த) ஆழமற்ற பள்ளங்கள்(உள்ள)பிளவுகளில்
மறைந்து பாம்புகள் சுருண்டுகிடக்கும் குழிகளும் உள்ளன;
|
பயறு |
பயறு – (பெ) 1. பாசிப்பயறு, greengram
பயறு போல் இணர பைம் தாது படீஇயர் – குறு 10/2
பயற்றங்காய் போன்ற கொத்துக்களையுடைய இளம் பூந்தாதுகள் படியும்படி
|
பயலை |
பயலை – (பெ) 1. பசலை, காதலர் பிரிவால் பெண்களின் மேனியில் ஏற்படும் நிறமாற்றம்,
Change of hue, as of the skin through love-sickness; turning sallow through affliction;
2. இளமை, youth
1.
எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழ
துவலை தண் துளி வீசி
பயலை செய்தன பனி படு துறையே – ஐங் 141
மணல் மேட்டினில் உள்ள ஞாழல் மரத்தின் பூ, செருந்திப்பூவுடன் கமழ்ந்திருக்க,
மழைத்தூவலாகக் குளிர்ந்த நீர்த்துளிகளை என் மேல் வீசி,
என்னைப் பசக்கும்படி செய்தன குளிர்ச்சியைத் தோற்றுவிக்கும் நீர்த்துறைகள்.
2.
உயவல் ஊர்தி பயலை பார்ப்பான் – புறம் 305/2
வருத்தத்தால் ஊர்ந்து செல்வதுபோன்ற நடையினையும் இளமையினையும் உடைய பார்ப்பான்
|
பயினி |
பயினி – (பெ) ஒரு குறிஞ்சி நில மரம்,பூ, Indian copal tree, Vateria indica
பயினி வானி பல் இணர் குரவம் – குறி 69
பயின் என்றால் அரக்கு, சாதிலிங்கம் (vermilion) என்றும் கூறுவர்.
இது விளையும் மரம் பயினி எனப்படும் என்பர்.
|
பயின் |
பயின் – (பெ) பிசின், கோந்து, resin, glue
இதையும் கயிறும் பிணையும் இரிய
சிதையும் கலத்தை பயினான் திருத்தும்
திசை அறி நீகானும் போன்ம் – பரி 10/53-55
பாயும், கயிறும், மரங்களும் பிடுங்கிக்கொண்டு சிதறிப்போக,
சிதைந்துபோன பாய்மரக்கப்பலை பிசின்கொண்டு சேர்த்துக்கட்டி சீர்திருத்தும்
திசையறிந்து ஓட்டும் நீகானின் செயலைப் போலிருந்தது;
பயின் என்றால் அரக்கு, சாதிலிங்கம் (vermilion) என்றும் கூறுவர்.
|
பயிர் |
பயிர் – 1. (வி) விலங்கு/பறவை இனங்கள் ஒன்றையொன்று ஒலிக்குறிப்பால் அழை,
call, as beasts or birds
– 2. (பெ) 1. நஞ்சை, புஞ்சை ஆகிய நிலங்களில் விளையும் தாவரம், crop
2. ஓசை, sound
1
மான் கணம் மர முதல் தெவிட்ட ஆன் கணம்
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர – குறி 217,218
மான் கூட்டம் மரத்தடிகளில் வந்து திரள, பசுக்களின் கூட்டம்
(தம்)கன்றுகளை அழைக்கும் குரலையுடையவாய் கொட்டில்கள் நிறையுமாறு நுழைய,
நாரை
ஐய சிறு கண் செம் கடை சிறு மீன்
மேக்கு உயர் சினையின் மீமிசை குடம்பை
தாய் பயிர் பிள்ளை வாய் பட சொரியும் – நற் 91/4-7
நாரை
மெல்லிய சிறுகண்ணில் சிவந்த கடைக்கண்ணையுடைய சிறிய மீன்களைப் பிடித்து
மேலே ஓங்கி உயர்ந்த கிளையின் மீதிருக்கும் கூட்டிலிருந்து
தாயை அழைக்கும் குஞ்சுகளின் வாய்க்குள் கொடுக்கும்
செம் கால் பல்லி தன் துணை பயிரும்
அம் கால் கள்ளி அம் காடு இறந்தோரே – குறு 16/4,5
செம்மையான கால்களையுடைய பல்லி, தன்னுடைய துணையை அழைக்கும்
அழகிய அடியைக் கொண்ட கள்ளிகளை உடைய பாலைநிலத்தைக் கடந்து சென்றோர்.
2.1
தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப
வந்தன்று பெருவிறல் தேரே – நற் 181/11,12
மாலை அணிந்த புரவி, பசுமையான பயிர்களை மிதித்து அழிக்க,
வந்தது தலைவனது தேர்,
2.2
கண் இடை விடுத்த களிற்று உயிர் தூம்பின்
இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு – மலை 6,7
துளைகள் இடையிடையே விடப்பட்ட, யானையின் துதிக்கை போன்ற குழலமைப்புக்கொண்ட,
இளியென்னும் பண்ணின் ஓசையைத் தானொலிக்கும் குறுகிய பாரமான நெடுவங்கியத்துடன்,
|
பயிர்ப்பு |
பயிர்ப்பு – (பெ) பிசின், resin
பல் கோள் பலவின் பயிர்ப்பு உறு தீம் கனி – கலி 50/12
பல குலைகளையுடைய பலாவின் பிசினையுடைய இனிய பழம்
|
பயிற்று |
பயிற்று – (வி) 1. பலமுறை செய், do repeatedly
2. நெருங்கி அடை, கெழுமு, get close, approach
3. கற்பி, கற்றுக்கொடு, teach, instruct
4. பழக்கு, give practice
5. செய், do, perform
6. வாழச்செய், rehabilitate
1.
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற – குறி 222
ஆம்பல் எனும் பண்ணினையுடைய இனிய குழலில் தெளிந்த இசையைப் பலகாலும் எழுப்ப
2.
குருந்து அவிழ் குறும்_பொறை பயிற்ற
பெரும் கலி மூதூர் மரம் தோன்றும்மே – நற் 321/9,10
குருந்த மரங்கள் பூத்து நிற்கும் காட்டை நெருங்கிவர
பெருத்த ஆரவாரத்தையுடைய நமது பழமையான ஊரின் மரங்கள் தெரிகின்றன.
3.
பெரும் தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்ற
திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப
மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்று அற்றா
பெருந்தகாய் கூறு சில – கலி 81/12-15
பெரிய தெருவில் உன்னைச் சீராட்டி உன் செவிலித்தாய்மார் சொல்லிக்கொடுக்க,
திருத்தமாக நீ கற்ற சொற்களை நான் கேட்கும்படி,
மருந்தறியாமல் துயருற்ற என் நெஞ்சிற்கு அமிழ்தம் உண்டதைப் போல
பெருந்தகையே! சிலவற்றைக் கூறுவாயாக!
4.
முற்றத்து
கால் வல் தேர் கையின் இயக்கி நடை பயிற்றா
ஆல்_அமர்_செல்வன் அணி சால் பெரு விறல்
போல வரும் என் உயிர் – கலி 81/7-10
முற்றத்தில்
வலுவான சக்கரங்கள் கொண்ட உருட்டு வண்டியைக் கையினால் தள்ளிக்கொண்டு, நடை பழகுகின்ற
ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் இறைவனின் அழகு அமைந்த மகனான முருகனைப்
போல வருகின்ற என் உயிரே!
5.
புணர்ந்த காதலியின் புதல்வன் தலையும்
அமர்ந்த உள்ளம் பெரிது ஆகின்றே
அகன் பெரும் சிறப்பின் தந்தை_பெயரன்
முறுவலின் இன் நகை பயிற்றி
சிறு_தேர் உருட்டும் தளர் நடை கண்டே – ஐங் 403
தான் மணந்த காதலியின் மேல் மட்டுமல்லாது, தன்னுடைய புதல்வனிடத்தும்
அன்புகொண்ட உள்ளம், விரிந்து நிற்கிறது –
மிகப் பெரிய சிறப்பினைக் கொண்ட தன் தந்தையின் பெயரைத் தாங்கியவன்
முறுவலோடுங் கூடிய இனிய நகைப்பினை எழுப்பியவாறு
நடை வண்டியை உருட்டியபடியே வரும் தளர்ந்த நடையைக் கண்டு
6.
படு பிணம் பிறங்க நூறி பகைவர்
கெடு குடி பயிற்றிய கொற்ற வேந்தே – பதி 69/9,10
வெட்டுப்பட்டு விழுகின்ற பிணங்கள் குவிந்து உயரும்படி பகைவர்களைக் கொன்று, அவரின்
கெட்டுப்போன குடிமக்களை வாழச்செய்த வெற்றி வேந்தனே!
|
பயில் |
பயில் – 1. (வி) 1. அடர்ந்திரு, be thick, dense
2. பழகு, gain acquaintance
3. நடமாடு, move around, roam about
4. கல், கற்றறி, படி, learn by training and practice
– 2. (பெ.அ/வி.அ). பலகாலும், many a times
1.1.
மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து – திரு 42
மந்திகளும் ஏறிஅறியாத மரங்கள் செறிந்த பக்கமலையில்,
1.2.
பயில் நறும் கதுப்பின் பாயலும் உள்ளார்
செய்_பொருள் தரல் நசைஇ சென்றோர் – குறு 254/5,6
தாம் பழகிய மணமுள்ள கூந்தலில் படுத்திருந்ததையும் நினைத்துப்பார்க்காதவராய்,
ஈட்டுவதற்குரிய பொருளைக் கொண்டுவரும்படி விரும்பிச் சென்றோர்
1.3.
மயில்_இனம் பயிலும் மரம் பயில் கானம் – அகம் 344/6
மயில்கள் உவகையுடன் உலாவும் மரங்கள் அடர்ந்த காட்டு நெறியில்
1.4
படு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும் – பரி 16/12
ஓங்கியடிக்கும் கண்களைக் கொண்ட இசைக்கருவிகளின் ஒலியினையும், பாட்டினையும் கற்ற
கூத்துமகளிர் ஆடுகின்ற
2.
ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர்
நீடு இன்று ஆக இழுக்குவர் – அகம் 18/11,12
இடையூறு இல்லாத வழிகளில்கூட, பலகாலும் போய்வருபவர்கள்
நீண்ட நாட்கள் அவ்வாறின்றித் தவறிவிடுவர்,
ஒருநாள் செல்லலம் இரு நாள் செல்லலம்
பல நாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ – புறம் 101/1-3
யாம் ஒருநாள் செல்லேம், இரண்டு நாள் செல்லேம்
பலநாளும் பலகாலும் பலரோடு கூடச்செல்லினும்
முதற்சென்ற நாள் போன்று விருப்பதை உடைய்
|
பயில்வுறு |
பயில்வுறு – (வி) நன்கு துழாவப்படு, stirred well
அவரை வான் புழுக்கு அட்டி பயில்வுற்று
இன் சுவை மூரல் பெறுகுவிர் ஞாங்கர் – பெரும் 195,196
அவரை விதையின் (தோலுரித்த)வெண்மையான பருப்பை வேகவிட்டு, நன்கு கடையப்பட்டு
இனிய சுவையுள்ள பருப்புச்சோறைப் பெறுவீர்
|
பர |
பர – (வி) பரவு, spread
அத்த இருப்பை ஆர் கழல் புது பூ
துய்த்த வாய துகள் நிலம் பரக்க
கொன்றை அம் சினை குழல் பழம் கொழுதி
வன் கை எண்கின் வய நிரை பரக்கும் – அகம் 15/15-18
அரிய சுரத்தில் உள்ள இலுப்பை மரத்தின் ஆர்க்கு கழன்ற புதிய பூக்களைத்
தின்ற வாயையுடைய, தூசி நிலத்தின்மேல் பரவும்படியாகக்
கொன்றை மரத்தின் கிளைகளில் உள்ள குழல் போன்ற பழத்தைத் தடவிக்கொடுத்து-
வலிய கையை உடைய கரடியின் வலிமை உள்ள கூட்டம் பரவலாகச் செல்லும்-
|
பரங்குன்றம் |
பரங்குன்றம் – (பெ) திருப்பரங்குன்றம், thirupparangkundram, a small city near Madurai
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை – அகம் 59/11,12
சினம் மிகு முருகனது குளிர்ந்த திருப்பரங்குன்றத்து
அந்துவன் பாடிய சந்தன மரங்கள் மிக்க உயர்ந்த மலை
|
பரடு |
பரடு – (பெ) கணுக்கால், ankle
பெரும் தோள் தொய்யில் வரித்தும் சிறு பரட்டு
அம் செம் சீறடி பஞ்சி ஊட்டியும் – அகம் 389/6,7
பெரிய தோளில் தொய்யில் எழுதியும், சிறிய கணுக்காலையுடைய
அழகிய சிவந்த சிறிய அடியில் செம்பஞ்சிக்குழம்பினைத் தடவியும்
பல் சில கிண்கிணி சிறு பரடு அலைப்ப – பதி 52/20
பல மணிகளைக் கொண்ட இரண்டு சதங்கைகளும் தன் சிறிய கணுக்காலை வருத்த,
|
பரணன் |
பரணன் – (பெ) பரணர், ஒரு சங்க காலப் பெரும்புலவர், a great poet of the sangam period
சென்று அமர் கடந்து நின் ஆற்றல் தோற்றிய
அன்றும் பாடுநர்க்கு அரியை இன்றும்
பரணன் பாடினன்-மன்-கொல் – புறம் 99/10-12
மேற்சென்று போரின்கண் வென்று நின் வலியைத் தோற்றுவித்த
அற்றை நாளும் பாடுவர்க்குப் பாட அரியை, இன்றும்
பரணன் பாடினன்.
பரணர் பாடிய 85 பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
இவர் தாம் பாடிய அகப்பொருள் பாடல்களிலும் அவர் காலத்தனவும்,
அவரது காலத்துக்கு முன்னர் நிகழ்ந்து தாம் அறிந்தனவுமாகிய
பல வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இவர் வரலாற்றுப் புலவர் எனப் போற்றப்படுகிறார்.
|
பரதர் |
பரதர் – (பெ) மீனவர், fishing tribes
துணை புணர் உவகையர் பரத மாக்கள் – அகம் 30/3
துணையுடன் கூடிய மகிழ்ச்சியுடையோரான மீனவ மக்கள்
|
பரதவர் |
பரதவர் – (பெ) மீனவர், fishing tribes
உரவு கடல் உழந்த பெரு வலை பரதவர்
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண் – நற் 63/1,2
வலிமை மிக்க கடலில் சென்று வருந்திய, பெரிய வலைகளைக் கொண்ட பரதவர்
மிகுதியாகப் பெற்ற மீன்களைக் காயவைத்த புதிய மணற்பரப்பாகிய அவ்விடத்தில்
|
பரத்தன் |
பரத்தன் – (பெ) வேசிகளிடம் செல்பவன், one who goes to prostitutes
பகல் ஆண்டு அல்கினை பரத்த என்று யான்
இகலி இருப்பேன் – கலி 75/22,23
பகற்பொழுதெல்லாம் அங்குத் தங்குகிறாய், பரத்தைமை உடையவனே! என்று நான்
அவனோடு சண்டைபோடுவேன்
|
பரத்தமை |
பரத்தமை – (பெ) பரத்தையருடன் (வேசியருடன்) கூடும் ஒழுக்கம், Consorting with harlots;
தண் துறை ஊரன் தண்டா பரத்தமை
புலவாய் என்றி தோழி புலவேன் – நற் 280/4,5
குளிர்ந்த ஆற்றுத்துறைகளைக் கொண்ட ஊரினனுடைய நீங்காத பரத்தைமை பொருட்டு
அவன் மீது பிணக்குக்கொள்ளவேண்டாம் என்கிறாய் தோழி! அவன் மீது கோபங்கொள்ளேன்
|
பரத்தரு(தல்) |
பரத்தரு(தல்) – (வி) பரவு(தல்), spread(ing)
பழன உழவர் பாய் புனல் பரத்தந்து – பரி 7/39
வயல்களின் உழவர்கள் பாய்கின்ற வெள்ளத்தில் பரவிச் சென்றனர்;
தம் புல ஏறு பரத்தர உய்த்த தம்
அன்பு உறு காதலர் கை பிணைந்து ஆய்ச்சியர்
இன்புற்று அயர்வர் தழூஉ – கலி 106/31-33
தம்முடைய மேய்ச்சல் புலத்தில் காளைகளை மேய்வதற்காக பரவவிட்ட தம்
அன்பான காதலர்களின் கைகளைக் கோத்துக்கொண்டு, இடையர் மகளிர்
மகிழ்ச்சியுடன் ஆடத்தொடங்கினர் தழுவிக்கொண்டு( ஆடும் குரவைக்கூத்து)
பால் என பரத்தரும் நிலவின் மாலை – அகம் 259/9
பால் எனப் பரவிய நிலாவினைக்கொண்ட மாலைப்பொழுது
புல் இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள் மாலை – கலி 130/7
புன்மையான இருள் பரவத்தொடங்கும் வருத்தம் கொள்வதற்குக் காரணமான மயக்கத்தைத் தரும்
மாலை வேளை;
|
பரத்தை |
பரத்தை – (பெ) வேசி, பொதுமகள், Harlot, strumpet, prostitute, courtesan
வேண்டேம் பெரும நின் பரத்தை
ஆண்டு செய் குறியோடு ஈண்டு நீ வரலே – ஐங் 48/4,5
வேண்டவில்லை பெருமானே! உன்னுடைய பரத்தை
அங்கு உன் மேனியில் செய்த குறிகளுடன் இங்கு நீ வருவதை –
|
பரத்தைமை |
பரத்தைமை – (பெ) பார்க்க : பரத்தமை
மாய மகிழ்நன் பரத்தைமை
நோவென் தோழி கடன் நமக்கு எனவே – கலி 75/32,33
மாயம் செய்வதில் வல்லவனான கணவனின் பரத்தைமையை எண்ணி
நொந்திருப்பேன் தோழி! அது நம் தலைவிதி என்று!
|
பரப்பு |
பரப்பு – 1. (வி) 1. குவியலைப் பரவலாக ஆக்கு, பரப்பிவிடு, spread, lay out
2. பரவலாக எங்கும் செலுத்து, spread as water on a surface
3. பரவுமாறு செய், பலரும் அறியச்செய், publicize, spread widely
4. மணம், ஒளி போன்றவை எங்கும் நிறையுமாறுசெய், diffuse fragrance, light etc.,
5. (கை,கால்,சிறகு ஆகியவற்றை)விரி, expand, outstretch as hands, legs or wings
– 2. (பெ) 1. இடவிரிவு, expanse
2. கடலின் மேற்பாகம், the surface of sea
3. பரந்த நிலம், wide area of land
4. பரவியிருத்தல், ovrspreading
1.1
சுற்றிய பிணர சூழ் கழி இறவின்
கணம்_கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி
புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்து பரப்பும்
துறை நணி இருந்த பாக்கமும் – நற் 101/2-5
சுற்றிலும் அமைந்த சொரசொரப்பையுடைய, சூழ்ந்துள்ள கழியில் உள்ள இறாமீனின்
கூட்டமான குவியல் வெயிலில் காயும் வகையை ஆராய்ந்து
புன்னைமரத்தின் அழகிய மிகுதியான நிழலுக்கு முன்பாகப் போட்டுப் பரப்பிவிட்டிருக்கும்
கடற்கரைத் துறைக்கு அண்மையில் இருந்த குடியிருப்பும்
1.2
பொலம் சொரி வழுதியின் புனல் இறை பரப்பி
செய்யில் பொலம் பரப்பும் செய்வினை ஓயற்க – பரி 10/127,128
தங்கத்தைச் சொரிகின்ற பாண்டிய மன்னனைப் போலவே, வையைஆறு நீரை நாடெங்கும் இறைத்துப் பரப்பி,
நாட்டின் வயல்களில் பொன்னைப் பரவலாக்கும் செயலாகிய தொழில் ஓய்ந்துபோகாமல் இருக்கக்கடவது!
1.3
நான்மறையோர் புகழ் பரப்பியும் – பட் 202
அந்தணர்க்குள்ள புகழைப் பரவுமாறு செய்தும்
1.4
விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம் – நெடு 73
விரிந்த கிரணங்களை எங்கும் நிறைத்த அகன்ற இடத்தையுடைய ஞாயிறு
1.5
மணி_வயின் கலாபம் பரப்பி – சிறு 15
(நீல)மணி போன்ற கண்களையுடைய தோகைகளை விரித்து,
2.1
பெரும் கடல் பரப்பில் சே இறா நடுங்க – அகம் 60/1
பெரிய கடல் பரப்பில் சிவந்த இறால் மீன் நடுங்க
2.2
மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர்
நீல் நிற பரப்பில் தயங்கு திரை உதைப்ப – நற் 215/5,6
மீனின் கொழுப்பைச் சேர்த்து உருக்கிய ஊனாகிய நெய்யால் எரியும் ஒள்ளிய விளக்கொளியை
நீல நிறப் பரப்பில் அலையாடும் திரைகள் எற்றித்தள்ள,
2.3
அருவி பரப்பின் ஐவனம் வித்தி – குறு 100/1
அருவி விழும் பரந்த நிலத்தில் மலைநெல்லை விதைத்து
2.4
கடாஅம் சென்னிய கடுங்கண் யானை
இனம் பரந்த புலம் வளம் பரப்பு அறியா – பதி 25/2,3
மதம் சொரியும் தலையைக்கொண்ட கடுமையாய்ப் பார்க்கும் யானைகளின்
கூட்டம் பரந்து சென்ற நிலங்கள் இனி வளம் பரப்புதலை அறியமாட்டா;
|
பரம் |
பரம் – (பெ) பாரம், heavyness, weight
இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு – மலை 7
இளியென்னும் பண்ணின் ஓசையைத் தானொலிக்கும் குறுகிய பாரமான நெடுவங்கியத்துடன்,
|
பரல் |
பரல் – (பெ) பருக்கைக்கல், கூழாங்கல், gravel stone, pebble
பரல் முரம்பு ஆகிய பயம் இல் கானம் – அகம் 5/15
பருக்கைக்கற்களைக் கொண்ட மேட்டுநிலமாகிய பயனற்ற காட்டுநிலத்துவழியில்
பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின் – நற் 333/3
கூழாங்கற்கள் உள்ள பள்ளத்தில் ஊறிய சிறிதளவு நீரின் பக்கத்தில்
|
பரவல் |
பரவல் – (பெ) புகழ்ந்துகூறல், வணங்கித்துதித்தல்
பாடுவார் பாடல் பரவல் பழிச்சுதல் – பரி 10/116
பாடுவோரின் பாடலும், கடவுளைப் பரவுவோரின் துதியும், வையையைப் புகழ்வாரின் புகழ்ச்சியும்,
|
பரவு |
பரவு – (வி) 1. புகழ்ந்துகூறு, praise
2. வணங்கு, துதி, worship, adore
3. சென்றுலாவு, move around
1.
ஒடிவு இல் தெவ்வர் எதிர் நின்று உரைஇ
இடுக திறையே புரவு எதிர்ந்தோற்கு என
அம்பு உடை வலத்தர் உயர்ந்தோர் பரவ – பதி 80/9-11
வணங்காத பகைவர் முன்னே அவருக்கு எதிரே நின்று, இரண்டு பக்கங்களிலும் உலாவி,
செலுத்துவீராக திறையை, உமக்குப் பாதுகாப்பினை வழங்குவதற்காக வந்திருப்பவருக்கு என்று
வலக்கையில் அம்பினை உடைய வீரர்கள் புகழ்ந்து கூற,
2.
பழையர் மகளிர் பனி துறை பரவ
பகலோன் மறைந்த அந்தி ஆரிடை – அகம் 201/7,8
பழையரது பெண்டிர் குளிர்ந்த துறைக்கண் தெய்வத்தினை வணங்கிநிற்க
ஞாயிறு மறைந்த அந்தியாகிய அரிய போழ்திலே
3.
தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவா – பதி 26/1
செல்வர்களின் தேர்கள் சென்று சேறுபட்ட நிலங்களில் ஏர்கள் சென்றுலாவி உழுதலை வேண்டா
|
பரவை |
பரவை – (பெ) நிலப்பரப்பு / நீர்ப்பரப்பு, expanse (land or sea)
பழம் பல் நெல்லின் பல் குடி பரவை – அகம் 44/16
பழமையான பலவான நெல்லையுடைய பல குடிப் பரப்பினை உடையதும்
தெண் கடல்
முழங்கு திரை முழவின் பாணியின் பைபய
பழம் புண் உறுநரின் பரவையின் ஆலும் – நற் 378/2-4
தெளிந்த கடலில்
முழங்கும் அலைகளும் முழவு இசைப்பது போன்று மெல்ல மெல்லப்
நெடுங்காலம் புண் பட்டவர்களைப் போல நீர்ப்பரப்பில் அசைந்துகொண்டிருக்கும்;
|
பராஅம் |
பராஅம் – (வி.எ) பராவும் என்பதன் நீட்டல் விகாரம், that which is worshiped
பராஅம்
அணங்கு உடை நகரின் மணந்த பூவின்
நன்றே கானம் நயம்வரும் அம்ம – அகம் 99/8-10
வணங்கத் தக்க
அணங்குத் தெய்வம் இருக்கும் கோவிலின்கண் கலந்துகிடக்கும் பூக்களைப்போல
இக் காடு பெரிதும் விரும்பத்தக்கதாகின்றது.
|
பராஅய் |
பராஅய் – (வி.எ) பராவி, after worshiping
முறையுளி பராஅய் பாய்ந்தனர் தொழூஉ – கலி 101/14
தெய்வங்களை அவற்றுக்குரிய முறையுடனே வணங்கி வாடிவாசலை நோக்கிப் பாய்ந்தனர்;
|
பராரை |
பராரை – (பெ) பரு + அரை பராரை ஆனது, பருத்த அடிப்பகுதி, large trunk
பராரை பாதிரி குறு மயிர் மா மலர் – நற் 337/4
பருத்த அடிமரத்தைக் கொண்ட பாதிரியின் நுண்ணிய மயிர்களைக் கொண்ட சிறந்த மலரையும்,
துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின்
பராஅரை வேவை பருகு என தண்டி – பொரு 103,104
அறுகம் புல் கட்டுக்களை கவ்வித்தின்ற செம்மறிக்கிடாயின் அழகிய புழுக்கப்பட்ட(இறைச்சியின்)
பெரிய (மேல்)தொடை நெகிழ வெந்ததனைத் ‘உண்பாயாக’ என்று வற்புறுத்தி,
|
பராவு |
பராவு – (வி) பார்க்க : பரவு
1. புகழ்ந்துகூறு
பெரும் களிற்று யானையொடு அரும் கலம் தராஅர்
மெய் பனி கூரா அணங்கு என பராவலின்
பலி கொண்டு பெயரும் பாசம் போல
திறை கொண்டு பெயர்தி – பதி 71/21-24
பெரிய ஆண்யானைகளோடு, அருமையான அணிகலன்களையும் திறையாகத் தந்து,
மேனி மிகவும் நடுக்கமுற்று, தெய்வமேயென்று உன்னைப் புகழ்ந்து நிற்க,
பலியுணவை மட்டும் எடுத்துக்கொண்டு செல்லும் பேய் போல,
பகைவரின் திறையைமட்டும் எடுத்துக்கொண்டு மீளுகின்றாய்
2. வணங்கு, துதி
பராவு அரு மரபின் கடவுள் காணின் – மலை 230
மிகவும் அரிதாகப் போற்றி வணங்கப்படும் வழக்கினையுடைய கடவுளைப் பார்த்தால்,
|
பரி |
பரி – 1. (வி) 1. வருந்து, be troubled, distressed;
2. பரவு, spread over
3. சூழ், surround
4. ஓடு, run
5. செலுத்து, drive
6. பொறு, சும, bear, sustain
7. ஒடி,முறி, break off
8. அறு, snap, severe
9. பறி, tear off
– 2. (பெ.அ) பரிய, பருத்த, large, rotund
– 3. (பெ) 1. குதிரை, horse
2. ஓட்டம், குதிரைக்கதி, pace of a horse
3. நடை, செலவு, motion, gait
4. பருமை, largeness
– 4. (இ.சொ) மிகுதிப்பொருளை உணர்த்தும் ஓர் இடைச்சொல், Particle denoting intenseness;
1.1
ஈன் பிணவு ஒடுக்கிய இரும் கேழ் வய புலி
இரை நசைஇ பரிக்கும் மலை முதல் சிறு நெறி – நற் 332/6,7
குட்டியீன்ற பெண்புலியை இருக்கவைத்த பெரிய, நிறத்தையுடைய வலிய புலி
இரையை விரும்பித்தேடி வருந்தியலையும் மலையடிவாரத்துச் சிறிய வழியில்
1.2
பெரும் கடல் பரதவர் கோள்_மீன் உணங்கலின்
இரும் கழி கொண்ட இறவின் வாடலொடு
நிலவு நிற வெண் மணல் புலவ பலவுடன்
எக்கர்-தொறும் பரிக்கும் – குறு 320/1-4
பெரிய கடலில் பரதவர் கொண்ட மீன்களின் உலர்ந்த வற்றல்,
இருண்ட கழியில் கொண்ட இறாவின் வற்றலோடு
நிலவொளி போன்ற வெள்ளை மணற்பரப்பு புலால்நாறும்படி பலவும் சேர்ந்து
மணல்மேடுகள்தோறும் பரவிக்கிடக்கும்
1.3
கூனல் எண்கின் குறு நடை தொழுதி
சிதலை செய்த செம் நிலை புற்றின்
மண் புனை நெடும் கோடு உடைய வாங்கி
இரை நசைஇ பரிக்கும் அரைநாள் கங்குல் – அகம் 112/1-4
கூனிய முதுகினையும் குறுகக்குறுக அடியிட்டு நடக்கும் நடையினையும் உடைய கரடிக்கூட்டம்
கறையான் எடுத்த சிவந்த நிலையினையுடைய புற்றினது
மண்ணால் புனைந்த நீண்ட உச்சி உடையுமாறு பெயர்த்து
புற்றாஞ்சோறான இரையினை விரும்பிச் சூழ்ந்துகொண்டிருக்கும் நடுநாள் இரவில்
1.4
ஓரை_மகளிர் அஞ்சி ஈர் ஞெண்டு
கடலில் பரிக்கும் – குறு 401/3,4
விளையாட்டு மகளிரைக் கண்டு அஞ்சி, நீரமுள்ள நண்டு
கடலைநோக்கி ஓடும்
1.5
விலங்கு இரும் சிமைய குன்றத்து உம்பர்
வேறு பன் மொழிய தேஎம் முன்னி
வினை நசைஇ பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடு – அகம் 215/1-3
குறுக்காகவுள்ள பெரிய உச்சியினையுடைய மலைக்கு அப்பாலுள்ள
வேறுபட்ட பல மொழிகள் வழங்கும் தேயத்தைக் கொள்ளக் கருதி
போர்த்தொழிலை விரும்பிச் செலுத்தும் துணிவுமிக்க உள்ளத்துடன்
1.6
மண்டு அமர் பரிக்கும் மதன் உடை நோன் தாள் – புறம் 75/6
அடுத்துப் பொரும் போரைப் பொறுக்கும் மனவெழுச்சியையுடைத்தாகிய வலிய முயற்சியையுடைய
1.7
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉ பழிச்சிய
வள் உயிர் வணர் மருப்பு அன்ன ஒள் இணர்
சுடர் பூ கொன்றை ஊழ்_உறு விளை நெற்று – அகம் 115/8-11
எவ்வி என்பான் வீழ்ந்த போர்க்களத்தே, பாணர்கள்
கையால் தொழும் முறைமையோடு முன்பு, ஒடித்துப்போட்டுப் பராவிய
வளம் பொருந்திய ஒலியினையுடைய வளைந்த கோட்டினை ஒத்த ஒளி பொருந்திய கொத்துக்களையுடைய
சுடரும் பூக்களையுடைய கொன்றையினது முற்றி விளைந்த நெற்றுக்கள்
1.8
மாண் இழை மகளிர் புலந்தனர் பரிந்த
பரூஉ காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு – மது 680,681
மாட்சிமைப்பட்ட அணிகலன்களையுடைய மகளிர் (கணவரோடு)புலந்தனராய், அறுத்த
பரிய வடமாகிய ஆரம் சொரிந்த முத்தோடு,
1.9
ஐய எம் காதில் கனம் குழை வாங்கி பெயர்-தொறும்
போது இல் வறும் கூந்தல் கொள்வதை நின்னை யாம்
ஏதிலார் கண் சாய நுந்தை வியல் மார்பில்
தாது தேர் வண்டின் கிளை பட தைஇய
கோதை பரிபு ஆட காண்கும் – கலி 80/22-26
ஐயனே! என் காதில் உள்ள பொன்னாலான குழைகளைக் கழற்றிக்கொண்டு நீ ஓடும்போதெல்லாம்
மலர் சூட்டிக்கொள்ளாத என் வெறுங்கூந்தலின் மீது தூக்கிவைத்துக்கொள்வது, உன்னை நான்,
உன் தந்தை அந்தப் பரத்தையர் மீது வைத்த அன்பு குறையும்படியாக, அவர்கள் அவரின் அகன்ற மார்பில்
பூந்தாதுக்களைத் தேடியலையும் வண்டுகளின் கூட்டம் மொய்க்கும்படியாகக் கட்டின
மாலையை நீ பறித்து விளையாடும் காட்சியில் காண்பதற்காத்தான்.
2.
பரி அரை கமுகின் பாளை அம் பசும் பூ – பெரும் 7
பருத்த அடிமரத்தையுடைய கமுகின் பாளையாகிய அழகினையுடைய இளம் பூ
3.1
துனை பரி துரக்கும் செலவினர் – முல் 102
விரைந்து செல்லும் குதிரையைக் கடிதாகச் செலுத்தும் செலவினையுடையவரின்
3.2
தேஎம் தேறா கடும் பரி கடும்பொடு – மலை 364
திக்குத் தெரியாத மிக விரைவான ஓட்டத்தையுடைய சுற்றத்தோடே,
குரூஉ மயிர் புரவி உராலின் பரி நிமிர்ந்து
கால் என கடுக்கும் கவின் பெறு தேரும் – மது 387,388
நிறமிக்க மயிரினையுடைய குதிரைகள் ஓடுதலாலே, ஓட்டம் மிக்கு,
காற்றுப்போல் விரையும் அழகிய தேரும்,
3.3
காலே பரி தப்பினவே – குறு 44/1
கால்களோ நடை இழந்தன
3.4
மார்பும் அல்குலும் மனத்தொடு பரியை – பரி 13/55
நின் திருமார்பும், பின்புறமும், நின் திருவுள்ளத்தோடு பருமையுடையனவாய்க் கொண்டிருக்கிறாய்
4.
பரி புலம்பு அலைத்த நும் வருத்தம் வீட – மலை 497
(சொந்த ஊரைவிட்டு வந்த)மிகுந்த ஏக்கத்தால் அலைக்கப்பட்ட உம் வருத்தம் குறைந்துபோக –
|
பரிகாரம் |
பரிகாரம் – (பெ) கூலம், பொருள், store, provisions
நட்டோர் உவப்ப நடை பரிகாரம்
முட்டாது கொடுத்த முனை விளங்கு தட கை – சிறு 104,105
நட்புச் செய்தோர் மனமகிழும்படி, வாழ்க்கையை நடத்த வேண்டுவனவற்றைக்
குறையாமல் கொடுத்த, போர்முனையில் விளங்கும் பெருமையுடைய கை
|
பரிசம் |
பரிசம் – (பெ) பணம், ஆபரணங்கள், money and jewels
கலம் தந்த பொன் பரிசம்
கழி தோணியான் கரை சேர்க்குந்து – புறம் 343/5,6
கலங்கள் கொணர்ந்த பொன்னாலான பணமும் ஆபரணமும்
கழிகளில் இயங்கும் தோணிகளால் கரை சேர்க்கப்படும்.
|
பரிசிலர் |
பரிசிலர் – (பெ) பரிசில் வேண்டி இரப்போர், solicitors of gift
ஆடுக விறலியர் பாடுக பரிசிலர் – பதி 58/1
ஆடுவீர்களாக விறலியர்களே! பாடுவீர்களாக பரிசில் மாக்களே!
|
பரிசில் |
பரிசில் – (பெ) கொடை, gift, donation, present
பாணர்
பரிசில் பெற்ற விரி உளை நன் மான் – நற் 185/3,4
பாணர்கள்
பரிசிலாகப் பெற்ற விரிந்த பிடரி மயிரையுடைய நல்ல குதிரைகள்
|
பரிசு |
பரிசு – (பெ) இயல்பு, nature
அரி மதர் உண்கண்ணார் ஆரா கவவின்
பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு யானும்
செரு ஒழிந்தேன் சென்றீ இனி – கலி 91/13-15
செவ்வரி படர்ந்த செழுமையான மைதீட்டிய கண்ணையுடைய பரத்தையரின் ஆசை குறையாத தழுவலால்
உன் இயல்பான நிலை அழிந்துநிற்கும் உன் மேனியைக் கண்டு, நானும்
கோபம் தீர்ந்தேன்! செல்வாயாக அந்தப் பரத்தையரிடமே இப்போது;
|
பரிதி |
பரிதி – (பெ) ஞாயிறு, sun
விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த
தண் கமழ் அலர் இறால் சிதைய – திரு 299,300
விண்ணைத் தொடுகின்ற நெடிய மலையிடத்தே ஞாயிற்றைப் போல் (தேனீக்கள்)செய்த
தண்ணியவாய் மணக்கின்ற விரிந்த தேன்கூடு கெட
|
பரிப்பு |
பரிப்பு – (பெ) இயக்கம், ஓட்டம், movement, motion
செம் ஞாயிற்று செலவும்
அ ஞாயிற்று பரிப்பும்
பரிப்பு சூழ்ந்த மண்டிலமும் – புறம் 30/1-3
செஞ்ஞாயிறு செல்கின்ற பாதையும்
அந்த ஞாயிற்றின் இயக்கமும்
அந்த இயக்கத்தால் சூழப்படும் பார் மண்டிலமும்
|
பரிமா |
பரிமா – (பெ) குதிரை, horse
பரிமா நிரையின் பரந்தன்று வையை – பரி 26/2
குதிரைகள் வரிசையாக பரந்து வருவதைப் போன்று பரவி வருகிறது வையை
|
பரியரை |
பரியரை – (பெ) பருத்த அடிப்பகுதி, large trunk (of a tree)
பரியரை பெண்ணை அன்றில் குரலே – நற் 218/11
பருத்த அடியைக் கொண்ட பனைமரத்திலிருந்து கூவும் அன்றிலின் குரலை
|
பரியல் |
பரியல் – 1. (வி.மு) வருந்தவேண்டாம், don’t get distressed
2. (பெ) விரைவான ஓட்டம்
3. (பெ) வருந்துதல், getting distressed
1.
வேய் வனப்பு இழந்த தோளும் வெயில் தெற
ஆய் கவின் தொலைந்த நுதலும் நோக்கி
பரியல் வாழி தோழி – ஐங் 392/1-3
மூங்கிலின் வனப்பை இழந்த தோள்களையும், வெயில் பொசுக்கியதால்
அழகிய நலம் தொலைந்த நெற்றியையும் பார்த்து
வருந்தவேண்டாம், வாழ்க, தோழி!
2.
பரியல் நாயொடு பன் மலை படரும்
வேட்டுவன் பெறலொடு அமைந்தனை – அகம் 28/7,8
விரைவான ஓட்டத்தையுடைய வேட்டை நாயுடன் பல மலைகளையும் கடந்து செல்லும்
வேட்டைக்காரனைப் பெறுவது ஒன்றே போதுமென்று இருக்கிறாய்
3.
என்னதூஉம்
பரியல் வேண்டா – புறம் 172/4,5
சிறிதளவும்
இரங்குதல் வேண்டா.
|
பரியூஉ |
பரியூஉ – (வி.எ) பரிய, அறுத்தெறிய,
பகை தொடர்ந்து கோதை பரியூஉ நனி வெகுண்டு – பரி 7/72
பகைமை மிக்கு தன் மாலையினை அறுத்தெறிந்து மிகவும் சினந்து
|
பரிவு |
பரிவு – (பெ) 1. அனுதாபம், இரக்கம், sympathy, compassion
2. அன்பு, love, affection
3. அவா, ஆசை, desire
1.
பரிவு தர தொட்ட பணிமொழி நம்பி
பாடு இமிழ் பனி நீர் சேர்ப்பனொடு
நாடாது இயைந்த நண்பினது அளவே – நற் 378/10-12
நமக்கு அவன்மேல் அனுதாபம் உண்டாகும்படி அவன் சொன்ன பணிவான சொற்களை நம்பி,
ஒலி முழங்கும் குளிர்ந்த நீர்ப்பெருக்கையுடைய கடற்கரைத்தலைவனோடு
சிந்திக்காமல் உடன்பட்ட நட்பின் அளவு
2.
வரிசை அறியா கல்லென் சுற்றமொடு
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போல
தானும் உண்ணான் உலகமும் கெடுமே – புறம் 184/8-11
தரம் அறியாத ஆரவாரத்தையுடைய சுற்றத்தோடு கூடி
அன்பு கெடக் கொள்ளும் பொருள் தொகுதியை விரும்பின்
யானை புகுந்த வயல் போலத்
தானும் உண்ணப்பெறான், உலகமும் கெடும்.
3.
வதுவை நாள் அணி புதுவோர் புணரிய
பரிவொடு வரூஉம் பாணன் – அகம் 56/9,10
திருமணக் காலத்து ஒப்பனையையுடைய புதிய பரத்தையரைச் சேர்விக்க
அவாவுடன் வந்த பாணன்
|
பரிவேட்பு |
பரிவேட்பு – (பெ) பறவை வட்டமிடுகை, Circling, hovering, as of a bird;
பறவை இரையைப் பிடிக்க விரையும் கடுமை,
the intensity of the pounce of a bird on its prey
நீர் அறல் மருங்கு வழிப்படா பாகுடி
பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா – பதி 21/26,27
நீர் ஒழுகும் பக்கத்தில் செல்லாமல், நீண்ட தொலைவிலிருந்து
உன்னிப்பாகப் பார்க்கும் கொக்கின் விரைவான கொத்தலுக்கு அஞ்சாத,
|
பரீஇ |
பரீஇ – 1. (வி.எ) 1. அறுத்து, cutting off
2. அறுபட்டு, having cut off
– 2. (பெ) 1. பருவி, பருத்தி, cotton plant
2. பரி, கதி, குதிரை நடை, pace of a horse
1.1
கள்ளி
மீமிசை கலித்த வீ நறு முல்லை
———————— ——————————
வன் கை இடையன் எல்லி பரீஇ
வெண் போழ் தைஇய அலங்கல் அம் தொடலை – நற் 169/4-8
கள்ளிச் செடியின்
உச்சியில் வெகுவாய்ப் பூத்திருக்கும் பூக்களைக் கொண்ட முல்லையின் கொடிகளை
————————————- ————————————–
வலிமையான கையையுடைய இடையன் மாலைவேளையில் அறுத்து,
வெண்மையான பனங்குருத்துடன் சேர்த்துத் தைத்த, மார்பில் அசைகின்ற அழகிய மாலை
1.2.
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க
இரியல் பிணவல் தீண்டலின் பரீஇ
செம் காய் உதிர்ந்த பைம் குலை ஈந்தின் – அகம் 21/18-20
ஆண் செந்நாய் ஆண் காட்டுப்பன்றியைத் தாக்க,
பதறியோடும் பெண்பன்றி உராய்தலால் அறுபட்டு,
செங்காய்கள் உதிரும் பசுங்குலைகளைக் கொண்ட ஈந்தின்
2.1
பரீஇ வித்திய ஏனல்
குரீஇ ஓப்புவாள் பெரு மழை கண்ணே – குறு 72/4,5
பருத்தி விதைத்த தினைப்புனத்தில்
குருவிகளை ஓட்டுவாளின் பெரிய குளிர்ந்த கண்கள்
2.2
நீயே அலங்கு உளை பரீஇ இவுளி
பொலம் தேர் மீமிசை பொலிவு தோன்றி
மா கடல்நிவந்து எழுதரும்
செஞ்ஞாயிற்று கவினை மாதோ- புறம் 4/13-16
நீதான், அசைந்த தலையாட்டம் அணிந்த கதியையுடைய குதிரையால் பூட்டப்பட்ட
பொன் தேரின் மேலே பொலிவோடு தோன்றுதலால்
கரிய கடலின்கண்ணே ஓங்கி எழுகிற
சிவந்த ஞாயிற்றினது ஒளியையுடையை.
|
பருதி |
பருதி – (பெ) 1. பரிதி, ஞாயிறு, sun
2. தேர்ச்சக்கரம், wheel of a chariot or car
3. திருமாலின் கையிலுள்ள சக்கராயுதம், the discus in Lord Vishnu’s hand
4. வட்டத்தின் சுற்றளவு, the circumference of a circle
1.
பகல் கான்று எழுதரு பல் கதிர் பருதி
காய் சினம் திருகிய கடும் திறல் வேனில் – பெரும் 2,3
பகற்பொழுதைத் தோற்றுவித்து, எழுதலைச்செய்யும் பல கதிர்களையுடைய ஞாயிறு
சுடுகின்ற தீ(யின் வெப்பம்) தீவிரமாகிய கடுமையான வீரியமுடைய (முது)வேனில் காலத்தில்,
2.
சுரம் பல கடவும் கரை வாய் பருதி – பதி 46/8
பாலைவழிகள் பலவற்றைக் கடந்துசெலுத்தப்படும், தேய்ந்துபோன விளிம்புகளைக் கொண்ட தேர்ச்சக்கரங்கள்
3.
பருதி வலவ பொரு திறல் மல்ல
திருவின் கணவ பெரு விறல் மள்ள – பரி 3/89,90
சக்கரத்தை வலக்கையில் ஏந்தியிருப்பவனே! மற்போரில் ஆற்றலுள்ள மல்லனே!
திருமகளின் கணவனே! பேராற்றல் கொண்ட மள்ளனே!
4.
புள்ளி_இரலை தோல் ஊன் உதிர்த்து
தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டில்
பருதி போகிய புடை கிளை கட்டி – பதி 74/10-12
புள்ளி மானின் தோலை உரித்து, அதினின்றும் ஊனை நீக்கி,
தீய பாகங்களைக் களைந்துபோட்டு, எஞ்சிய வட்டமாக அறுத்த ஒளிவிடும் தோலின்
சுற்றளவாய் அமைந்த விளிம்பில் வகை வகையாகக் கட்டி,
|
பருதிஅம்செல்வன் |
பருதிஅம்செல்வன் – (பெ) ஞாயிறு, sun
பருதிஅம்செல்வன் போல் நனை ஊழ்த்த செருந்தியும் – கலி 26/2
ஒளிவட்டமுள்ள செல்வனான ஞாயிற்றின் நிறம் போன்ற அரும்புகள் மலர்ந்த செருந்தியும்
|
பருந்து |
பருந்து – (பெ) 1. கழுகு வகை, common kite
2. குருகு, கைவளை, bracelet
1.1.
இது தெளிந்த குரலில் கத்தும். இதன் ஒலி சீழ்க்கை ஒலி (சீட்டியடிப்பது) போல் இருக்கும்.
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி – குறு 207/3
நெடு விளி பருந்தின் வெறி எழுந்து ஆங்கு – அகம் 299/6
வீளை பருந்தின் கோள் வல் சேவல் – அகம் 33/5
1.2.
இதன் தலை உலர்ந்திருக்கும்.
உலறு தலை பருந்தின் உளி வாய் பேடை – ஐங் 321/1
1.3.
பெரிய சிறகுகளை உடையது.
நீர்ப்படு பருந்தின் இரும் சிறகு அன்ன – பதி 12/19
1.4.
மிக உயரத்தில் பறக்கும்
உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடி – பதி 77/9
1.5.
விலங்குகளின் மாமிசத்தை உண்ணும்.
ஏறு தம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரி குடர்
ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ – கலி 106/26,27
படு முடை பருந்து பார்த்து இருக்கும் – குறு 283/7
1.6.
இதன் அலகு(மூக்கு) வளைவாக இருக்கும். கால் நகங்கள் பெரிதாகவும் கூர்மையாகவும் இருக்கும்.
வளை வாய் பருந்தின் வள் உகிர் சேவல் – அகம் 363/13
கூர் உகிர் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇ – புறம் 43/5
1.7.
பெட்டைப் பருந்தின் கண்கள் வெண்மையாக இருக்கும்.
வளை வாய் பருந்தின் வான் கண் பேடை – அகம் 79/12
1.8.
உயரமான மரக்கிளைகளில் கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும்.
ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடும் சினை – நற் 3/1
இதன் ஒலியைக் கேட்க இங்கே சொடுக்கவும்.
2.
பறாஅ பருந்தின் கண் பற்றி புணர்ந்தான் – கலி 147/37
பறக்காத பருந்தாகிய குருகு என்னும் கைவளை இருக்குமிடத்தைப் பிடித்து என்னோடு சேர்ந்திருந்தவன்
|
பருமம் |
பருமம் – (பெ) 1. மேகலை, அரைப்பட்டிகை,
Women’s waist-band consisting of 18 strings of beads and gems
2. குதிரைகளின் சேணம், saddle
3. யானைக்கான அலங்காரக் கழுத்து மெத்தை, ornamental cushion on elephant’s neck
1.
பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல் – திரு 146
மேகலையை அணிந்த தாழ்ந்தும் உயர்ந்தும் உள்ள அல்குலையும்
2
பருமம் களையா பாய் பரி கலி_மா – நெடு 179
சேணம் களையப்பெறாத பாயும் ஓட்டத்தையுடைய செருக்கின குதிரைகள்
3.
பரும யானை அயா உயிர்த்து ஆஅங்கு – நற் 89/8
மேல் அலங்காரம் கொண்ட யானை அயர்ந்து பெருமூச்சு விட்டதைப் போன்று
|
பருவரல் |
பருவரல் – (பெ) துன்பம், suffering, affliction
பருவரல் எவ்வம் களை மாயோய் என – முல் 21
துன்பத்தைத் தரும் வருத்தத்தைக் களைவாய், மாமைநிறத்தவளே என்று
பருவரல் – எவ்வாற்றானும் பொறுக்கமுடியாத துன்பம்
எவ்வம் – எதனினும் தீராத வருத்தம்.
|
பருவரு(தல்) |
பருவரு(தல்) – (வி) வருந்து, grieve, be distressed
வாரார்-கொல் என பருவரும்
தார் ஆர் மார்ப நீ தணந்த ஞான்றே – அகம் 150/13,14
நம் தலைவர் வாராரோ எனத் தலைவி வருந்துவள்
மாலை பொருந்திய மார்பனே, நீ பிரிந்திருக்கும்போது
|
பருவூர் |
பருவூர் – (பெ) போர்க்களம் உள்ள ஓர் ஊர்,
a city in sangam period, where a vast area in it was used as a battlefield.
வெண்ணெல் வைப்பின் பருவூர் பறந்தலை – அகம் 96/14
வெண்ணெல் விளையும் இடங்களையுடைய பருவூர் என்னுமிடத்தில் உள்ள போர்க்களத்தில்
|
பரூஉ |
பரூஉ – (பெ) பரு, பருமை, thickness, rotundity
பரூஉ என்பதனை மனக்காட்சியாய்க் காணப் பல்வேறு எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
வெரூஉ பறை நுவலும் பரூஉ பெரும் தட கை – பொரு 171
வெருட்டும் பறைகள் (போன்று)முழங்கும், பருத்த பெரிய வளைவினையுடைய கையினையும்,
எழூஉ புணர்ந்து அன்ன பரூஉ கை நோன் பார் – பெரும் 48
(இரண்டு)கணைய மரங்களையும் சேர்த்தாற் போன்ற பருத்த கைகளையுடைய, வலிய, கோக்கும் சட்டத்தையும்,
பாவை_விளக்கில் பரூஉ சுடர் அழல – முல் 85
பாவை (ஏந்திநின்ற)தகளியில் பரிய தீக்கொழுந்து நின்றெரிய,
பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி – நெடு 103
பருத்த திரிகளைக் கொளுத்தி, (செந்)நிறமான தழல் மேல்நோக்கி எரிகின்ற சுடரை,
பரூஉ காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு – மது 681
பரிய வடமாகிய ஆரம் சொரிந்த முத்தோடு,
பரூஉ குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு – மலை 168
பெரிய பெரிய தசைகள் மிகுதியாகப்போட்ட நெய்யின்கண் வெந்த பொரியலுடன்,
பரூஉ கொடி வலந்த மதலை பற்றி – மலை 216
பருத்த கொடிகள் பின்னியவற்றை ஆதரவாகப் பிடித்துக்கொண்டு,
பரூஉ பளிங்கு உதிர்த்த பல உறு திரு மணி – மலை 516
பருமனான பளிங்குக்கல்லை (உடைத்து)உதிர்த்துவிட்டதைப்போன்ற பலவித அழகிய மணிகளும்,
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின் – நற் 98/1
முள்ளம்பன்றியின் முள்ளைப்போன்ற பருத்த மயிருள்ள பிடரியைக் கொண்ட,
பரூஉ பகடு உதிர்த்த மென் செந்நெல்லின் – பதி 71/4
பெருத்த எருதுகள் போரடிக்குபோது மிதித்து உதிர்த்த மென்மையான செந்நெல்லின்
பதி எதிர் சென்று பரூஉ கரை நண்ணி – பரி 10/26
ஊரார் அனைவரும் ஆற்றுக்கு எதிரே சென்று, ஆற்றின் பெரிய கரைகளை அடைந்து,
பசு நனை நறு வீ பரூஉ பரல் உறைப்ப – அகம் 107/20
புதிய தேனையுடைய நறிய பூக்கள் பெரிய பாறைக்கற்களில் உதிர்ந்து கிடக்க
பரூஉ உறை பல் துளி சிதறி வான் நவின்று – அகம் 218/4
பரிய பலவாகிய மழைத்துளிகளைச் சிதறி
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன – அகம் 224/6
பால் கடையும்போது எழும் வெண்ணெயின் பெரிய உருண்டையான மிதப்பினை ஒத்த
பள்ளி யானை பரூஉபுறம் தைவரும் – அகம் 302/3
துயில் கொள்ளும் யானையின் பரிய உடம்பினைத் தடவும்
இருள் திணிந்து அன்ன குரூஉ திரள் பரூஉ புகை – புறம் 228/2
இருள் ஓரிடத்தே செறிந்து நின்றாற் போன்ற நிறமுடைத்தாய் திரண்ட பருமைமிக்க புகை
தொடி மாண் உலக்கை பரூஉ குற்று அரிசி – புறம் 399/2
பூணிட்டு மாட்சியுறுவித்த பருத்த உலக்கையால் குற்றப்பட்ட அரிசி
|
பரேர் |
பரேர் – (பெ) பரு + ஏர், மிக்க அழகு, much beauty
படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் – பெரும் 60, நெடு 31
தழை விரவின மாலையையும், மிக்க அழகினையும், வலிமையினையும் உடைய இறுகின தோளினையும்
|
பரைஇ |
பரைஇ – (வி.எ) பரவி, புகழ்ந்து, துதித்து, praising, worshiping
உரு கெழு மரபின் அயிரை பரைஇ
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணிய – பதி 88/12,13
அச்சத்தை உண்டாக்கும் முறைமையினையுடைய அயிரை மலையிலுள்ள கொற்றவையைப் புகழ்ந்து
சோழ,பாண்டியரும், குறுநில மன்னரும் வணங்கி வழிபட்டு நிற்கவும்
|
பறந்தலை |
பறந்தலை – (பெ) 1. பாழிடம், waste land, desert
2. போர்க்களம், battelfield
3. பாசறை, war camp
1.
சிறு மறி தழீஇய தெறி நடை மடப்பிணை
பூளை நீடிய வெருவரு பறந்தலை
வேளை வெண் பூ கறிக்கும்
ஆள் இல் அத்தம் ஆகிய காடே – புறம் 23/19-22
சிறிய மறியை அணைத்துக்கொண்ட துள்ளிய நடையையுடைய மெல்லிய பெண்மான்
பூளை ஓங்கி வளர்ந்த அஞ்சத்தக்க பாழிடத்து
வேளையினது வெளிய பூவைத் தின்னும்
ஆளற்ற அருஞ்சுரமாகிய காட்டுவழியில்
2.
கூகை கோழி வாகை பறந்தலை
பசும் பூண் பாண்டியன் வினை வல் அதிகன்
களிறொடு பட்ட ஞான்றை – குறு 393/3-5
கோட்டான்களாகிய கோழிகளையுடைய வாகை என்னும் போர்க்களத்தில்
பசும்பூண் பாண்டியனின் செயல்திறம் மிக்க அதிகன் என்பான்
தன் யானையோடு இறந்தபோது
3.
களிற்று கணம் பொருத கண் அகன் பறந்தலை
விசும்பு ஆடு எருவை பசும் தடி தடுப்ப – புறம் 64/3,4
யானைக் கூட்டம் பொருத இடம் அகன்ற பாசறைக்கண்
ஆகாயத்தின்கண்ணே பறக்கும் பருந்தினைப் பசிய ஊன் தடி தடுப்ப
|
பறம்பு |
பறம்பு – (பெ) 1. பாரியின் பறம்பு நாடு, மலை, the country/hill of chieftain Paari
2. நன்னனின் பறம்பு என்ற மலை/ஊர், a hill/city belonging to Nannan
1
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன் நாடு – புறம் 110/3
முந்நூறு ஊர்களை உடையது குளிர்ந்த நல்ல பறம்பு நாடு
பாரி பறம்பில் பனி சுனை தெண் நீர் – குறு 196/3
பாரியின் பறம்பு மலையில் குளிர்ந்த சுனையில் உள்ள தெளிந்த நீரை
2.
நன்னன் பறம்பில் சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய
கல்போல் – அகம் 356/8-10
நன்னனது பறம்பு மலையில்
சிறிய பனைசெய்வோன் அரக்கோடு சேர்த்து இயற்றிய
சாணைக்கல்லினைப் போலும்
அருவி ஆம்பல் கலித்த முன் துறை
நன்னன் ஆய் பறம்பு அன்ன
மின் ஈர் ஓதி – அகம் 356/18-20
அருவிநீர் பெருகுமிடத்து ஆம்பல் தழைத்துள்ள முன் துறையினையுடைய
நன்னந்து அழகிய பறம்பு என்னும் ஊரைப்போன்ற
மின்னுகின்ற குளிர்ந்த கூந்தலையுடையவளே!
(ஆய் பறம்பு என்பது சில பதிப்புகளில் ஆஅய் பிரம்பு எனக் காணப்படுகிறது)
|
பறழ் |
பறழ் – (பெ) சில விலங்குகளின் இளமைப் பெயர், the young ones of certain animals
1.
பறழ் பன்றி பல் கோழி – பட் 75
குட்டிகளையுடைய பன்றிகளையும், பலவிதமான கோழிகளையும்,
2.
துய் தலை மந்தி வன் பறழ் தூங்க – நற் 95/4
பஞ்சுத்தலையைக் கொண்ட குரங்கின் வலிய குட்டி தொங்க,
3
ஆண்டலைக்கு ஈன்ற பறழ்_மகனே – கலி 94/6
ஆந்தைக்குப் பிறந்த நாய்க்குட்டியே
4.
முயல் பறழ் உகளும் முல்லை அம் புறவில் – அகம் 384/5
முயல்குட்டிகள் குதிக்கும் முல்லைய்யாய அழகிய காட்டில்
5.
பாசி பரப்பில் பறழொடு வதிந்த
————————- ————————-
நாளிரை தரீஇய எழுந்த நீர்நாய் – அகம் 336/2-4
பாசியினையுடைய நீர்ப்பரப்பில் குட்டியுடன் கூடியிருக்கும்
——————– —————————–
காலைப்பொழுதில் இரையினைக் கொணர்தற்கு எழுந்த நீர்நாய்
|
பறி |
பறி – 1. (வி) 1. துண்டி, துண்டித்து நீக்கு, pluck (as flowers)
2. பிடுங்கு, pull out
3. கூசவை, be dazzled (as eyes bythe brilliance of light)
– 2. (பெ) 1. மீன் பிடிக்கும் கூடை, basket like contrivance for catching fish
2. தலையிலிருந்து முதுகுப்பக்கம் (மழைக்கு) மறைத்துக்கொள்ளும் பனையோலையால்
ஆன மறைப்பு
a covering made of palm leaf to cover head and the back during rain
1.1
கோவலர்
வீ ததை முல்லை பூ பறிக்குந்து – புறம் 339/2,3
கோவலர்கள்
பூக்கள் நெருங்கிய முல்லையினுடைய பூவைப் பறிப்பர்
1.2
ஏனல் காவலர் மா வீழ்த்து பறித்த
பகழி அன்ன சே அரி மழை கண் – நற் 13/3,4
தினைப் புனக் காவலர் காட்டுப்பன்றியை வீழ்த்திவிட்டுப் பிடுங்கிய
அம்பினைப் போன்ற சிவந்த வரிகளையுடைய குளிர்ச்சியான கண்களையும்
1.3
வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலை – அகம் 337/16
வெள்ளிய பரல்கற்கள் மின்னும் கண்களைக் கூசவைக்கும் கவர்த்த நெறியின்கண்
2.1
குறி இறை குரம்பை பறி உடை முன்றில் – பெரும் 265
குறுகிய இறப்பையுடைய குடிலின், (மீன்பிடிக்கும்)பறியினையுடைய முற்றத்தில்
2.2
வான் இகுபு சொரிந்த வயங்கு பெயல் கடை நாள்
பாணி கொண்ட பல் கால் மெல் உறி
ஞெலி_கோல் கல பை அதளொடு சுருக்கி
பறி புறத்து இட்ட பால் நொடை இடையன் – நற் 142/1-4
வானமே இறங்கியதைப் போன்று பொழிந்த மின்னுகின்ற மழையின் கடைசி நாளில்
கையில் கொண்ட பல கால்களைக் கொண்ட மென்மையான உறியுடன்,
தீக்கடைகோல் வைக்கும் பையினைத் தோலுடன் சுருட்டி,
பனையோலைப் பாயை முதுகுப்பக்கம் போட்டிருக்கும் பால் விற்கும் இடையனை
|
பறிமுறை |
பறிமுறை – (பெ) பல் விழுந்து முளைத்தல், cutting of second teeth
செறி முறை வெண் பலும் பறிமுறை நிரம்பின – குறு 337/3
செறிவாக அமைந்த வெள்ளைப் பற்களும் விழுந்தெழுந்து நிற்கின்றன;
|
பறை |
பறை – 1. (வி) 1. சேதப்படு, தேய்வடை, பழுதாகு, be worn out, impaired, wasted away
2. அழிந்துபோ, காணாமற்போ, vanish, dippear
3. பற, fly
– 2. (பெ) 1. வட்டமான தோற்கருவி, முரசு,
drum, a round musical instrument made of animal skin
2. பறத்தல், flying
3. சிறகு, wings
1.1
குறும் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி
நெடும் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில் – பெரும் 188,189
குறிய சகடத்தின் உருளையோடு கலப்பையையும் சார்த்தி வைக்கப்பட்டமையால்
நெடிய சுவரிடத்தே தேய்ந்த புகை சூழ்ந்த கொட்டிலினையும் உடைய
1.2
உறை துறந்து எழிலி நீங்கலின் பறைபு உடன்
மரம் புல்லென்ற முரம்பு உயர் நனந்தலை – அகம் 67/3,4
மேகங்கள் துளிபெய்தலை நீத்து அகன்று போதலின், இலைகள் யாவும் கெட்டொழிதலின்
மரங்கள் பொலிவற்றிருக்கும் கற்குவியல்கள் உயர்ந்துள்ள அகன்ற இடம்
1.3
தண் தாது ஊதிய வண்டுஇனம் களி சிறந்து
பறைஇய தளரும் துறைவனை நீயே – அகம் 170/6,7
குளிர்ந்த தாதினை உண்ட வண்டின் கூட்டம் களிப்பு மிக்கு
பறத்தற்கு இயலாது சோரும் துறையையுடைய தலைவனுக்கு
2.1
பறை என்பது தோலினால் ஆன ஓர் இசைக்கருவி.
இன்று தோளில் இதனை மாட்டிக்கொண்டு இரண்டு நீண்ட குச்சிகளைக் கைக்கு ஒன்றாக வைத்து இதனை
அடித்து ஒலி எழுப்புவர்.
மலைவாழ் மக்கள் மான் தோலினால் ஆன ஒரு பறையை வைத்திருப்பர் என மலைபடுகடாம் கூறுகிறது.
நறவு நாள்செய்த குறவர் தம் பெண்டிரொடு
மான் தோல் சிறு பறை கறங்க கல்லென
வான் தோய் மீமிசை அயரும் குரவை – மலை 320-322
மருதநில மக்கள் தோலைப் போர்வையாகப் போர்த்துள்ள ஒரு பறையை வைத்திருந்தனர் எனப்பதிற்றுப்பத்து
கூறுகிறது.
போர்த்து எறிந்த பறையால் புனல் செறுக்குநரும் – பதி 22/28
தோல் போர்த்துள்ள பறையை முழக்கி வெள்ளம் வரும்போது கரையை அடைக்க அழைப்பவர் ஒலியும்,
வாரைக்கொண்டு இழுத்துக்கட்டப்பட்ட ஒரு பறையும் உண்டு என அகநானூறு கூறுகிறது.
வறும் சுனை முகந்த கோடை தெள்விளி
விசித்து வாங்கு பறையின் விடர்_அகத்து இயம்ப – அகம் 321/2,3
நீரற்ற சுனையுள் புகுந்துவரும் மேல்காற்றின் தெளிந்த ஒலி
தோலினை இழுத்துக்கட்டிய பறை ஒலி போல மலைப் பிளப்பில் ஒலிக்க
பறையைப் பற்றிக் கூறும் சங்க இலக்கியங்கள் மிகப்பெரும்பாலும் பொதுவாகப் பறை என்ற சொல்லையே
பயன்படுத்துகின்றன.
எனினும் தட்டைப்பறை என்ற ஒரு வகைப் பறையைப் பற்றிக் குறுந்தொகை கூறுகிறது.
இட்டு வாய் சுனைய பகு வாய் தேரை
தட்டைப்பறையின் கறங்கும் நாடன் – குறு 193/2,3
சிறிய வாயையுடைய சுனையில் உள்ள பிளந்த வாயையுடைய தேரைகள்
தட்டைப் பறையைப் போல ஒலிக்கும் நாட்டையுடைய தலைவன்
பன்றிப்பறை என்ற ஒருவகைப் பறையைப் பற்றி மலைபடுகடாம் கூறுகிறது.
பன்றி_பறையும் குன்றக சிலம்பும் – மலை 344
பன்றிகள் (வராதிருக்கக் கொட்டும்) பறையொலியும்; (இவற்றின்)குன்றிடத்து எதிரொலியும்;
தொண்டகப்பறை என்று ஒருவகைப் பறைஇருந்ததாகவும் அறிகிறோம்.
தொண்டக_பறை சீர் பெண்டிரொடு விரைஇ
மறுகில் தூங்கும் சிறுகுடி பாக்கத்து – அகம் 118/3,4
தொண்டகம் என்னும் பறையின் தாளத்திற்கு இசைய பெண்டிரோடு கலந்து
தெருக்களில் ஆடும் சிறுகுடிப்பாக்கத்தின்கண்ணே
தவளைகளைப் போல அரித்த ஓசையை எழுப்பும் பறை அரிப்பறை என்னப்பட்டது.
அரி பறையால் புள் ஓப்பி – புறம் 395/7
அரித்த ஓசையையுடைய கிணைப்பறையைக் கொட்டி வயலில் விளைந்த
கதிர்களை உண்டற்கு வந்து படியும் புள்ளினங்களை ஓட்டி
சற்றுப்பெரிய பறை கிணை அல்லது தடாரி எனப்பட்டது.
இரும் பறை கிணைமகன் – புறம் 388/3
பெரிய பறையாகிய தடாரியை இசைக்கும் பொருநன்
இந்தப் பறை வட்டவடிவமானது என்றும் பல இலக்கியங்கள் கூறுகின்றன.
மயில் தோகையில் உள்ள வட்டமான கண்களைப் போன்றது பறை என அகம் கூறுகிறது.
பாகல் ஆர்கை பறை கண் பீலி
தோகை – அகம் 15/4,5
பாகல்பழங்களை விரும்பி உண்ணும், பறை போன்ற கண்ணையுடைய பீலிகளையுடைய
மயில்கள்
மலையில் இருக்கும் நிறைந்த சுனைகள் போன்று இந்தப் பறை இருப்பதாகவும் அகம் கூறுகிறது.
பறை கண் அன்ன நிறை சுனை பருகி – அகம் 178/3
பறையின் கண்ணினை ஒத்த நிறைந்த சுனையின் நீரைப் பருகி
யானையின் பாதங்களைப் போன்று வட்டமாக இந்தப் பறை இருப்பதாகவும் அகம் கூறுகிறது.
பறை கண்டு அன்ன பா அடி நோன் தாள்
திண்ணிலை பருப்பின் வய களிறு – அகம் 211/3,4
பறையினை ஒத்த வட்டமாகிய பரந்த அடியினையுடைய வலிய தாளினையும்
திண்ணிய நிலை வாய்ந்த கோட்டினையுமுடைய வலிய களிறு
இந்தப் பறைகள் நுனியில் வளைவாக இருப்பதாக மதுரைக்காஞ்சி கூறுகிறது.
கொடும் பறை கோடியர் கடும்பு உடன் வாழ்த்தும் – மது 523
வளைந்த பறையினையுடைய கூத்தரின் சுற்றம் சேர வாழ்த்தும்,
இந்தப் பறைகள் எழுப்பும் ஒலி யானையின் பிளிறலைப் போல் இருப்பதாகப் பொருநராற்றுப்படை கூறுகிறது.
வெரூஉ பறை நுவலும் பரூஉ பெரும் தட கை
வெருவரு செலவின் வெகுளி வேழம் – பொரு 171,172
வெருட்டும் பறைகள் (போன்று)முழங்கும், பருத்த பெரிய வளைவினையுடைய கையினையும்,
அச்சம் தரும் ஓட்டத்தையும், சினத்தையும் உடைய யானைகளை
வாகை மரத்து நெற்றுகள் காற்றில் ஆடி சலசலக்கும் ஓசை பறையின் ஓசையைப் போல் இருப்பதாகக்
குறுந்தொகை கூறுகிறது.
ஆரியர்
கயிறு ஆடு பறையின் கால் பொர கலங்கி
வாகை வெண் நெற்று ஒலிக்கும் – குறு 7/3-5
ஆரியக் கூத்தர்
கயிற்றில் ஆடும்போது ஒலிக்கும் பறையினைப்போல், காற்று மோதுவதால் கலங்கி
வாகைமரத்தின் வெண் நெற்று ஒலிக்கின்ற
உயரமான இடத்திலிருந்து ‘திடும்’ என விழும் அருவியின் ஓசை பரையின் ஓசையைப்போல் இருப்பதாகப்
பதிற்றுப்பத்து கூறுகிறது.
இழுமென இழிதரும் பறை குரல் அருவி – பதி 70/24
இழும் என்ற ஒலியுடன் விழுகின்ற பறை முழக்கத்தைக் கொண்ட அருவியோசை
மாசுணம் என்ற ஒரு விலங்கு யாழின் இசையைப் போன்ற இனிமையான இசையைக் கேட்டு மயங்கி நிற்குமாம்.
ஆனால் கேட்பதற்குக் கடுமையான ஓசையைக் கேட்டால் அது இறந்துவிடுமாம். அத்தகைய மாசுணம்
பறை ஒலியைக் கேட்டு இறந்துபடும் என்று தெரிவிக்கிறது கலித்தொகை தெரிவிக்கிறது.
மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது
அறை கொன்று மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச
பறை அறைந்து ஆங்கு ஒருவன் நீத்தான் – கலி 143/10-12
வஞ்சனையாக யாழ்வாசித்து, அந்த யாழிசையைக் கேட்டு மயங்கிநின்ற அசுணமாவை, இரக்கமில்லாமல்,
வஞ்சனையால் அதனைக் கொல்லும்படியாக, அதன் அருமையான உயிர் போகும்படி
பறையால் மிகுந்த ஒலியை எழுப்பியது போன்று, ஒருவன் என்னை வஞ்சித்து என்னைக் கைவிட்டான்,
கடலின் அலைகள் எழுப்பும் ஆரவார ஒலியைப் போன்றது பறை எழுப்பும் ஓசை என்கிறது கலித்தொகை..
நிரை திமில் களிறு ஆக திரை ஒலி பறை ஆக – கலி 149/1
வரிசையாக மிதக்கும் மீன்படகுகளே யானைகளாக, அலைகள் எழுப்பும் ஒலியே போர்ப்பறை ஒலி ஆக,
ஓங்கிப்பெய்த மழை அடங்கிப்போகும்போது மேகக்கூட்டங்கள் உறுமுகின்ற ஒலியை எழுப்புமே அவ்வாறானது
பறை ஓசை என்கிறது அகம்.
மண் கண் குளிர்ப்ப வீசி தண் பெயல்
பாடு உலந்தன்றே பறை குரல் எழிலி – அகம் 23/1,2
சில்லென்ற மழையினை – நிலத்து இடமெல்லாம் குளிரும்படி பெய்து,
முழக்கம் அடங்கிப்போயிற்றே முரசுக் குரல் மேகம்;
சிலவகைப் பறைகள் இனிய ஓசையையும் எழுப்புவன என்கிறது புறநானூறு.
இன் இசை பறையொடு வென்றி நுவல – புறம் 225/10
இனிய ஓசையையுடைய முரசுடனே வெற்றியைச் சொல்ல
மக்களின் வாழ்வில் இந்தப் பறைகள் பலவாறு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
நெல்லறுக்கும் நேரத்தில் அறுப்போரின் களைப்புத்தீர பறைகள் இசைக்கப்பட்டிருக்கின்றன.
வன் கை வினைஞர் அரி_பறை – மது 262
வலிய கைகளைக் கொண்ட நெல்லறுப்போரின் அரிபறை ஓசையும்
கோடியர் எனப்படும் கூத்தர் தங்களின் கழைக்கூத்தின்போது இந்தப் பறையை ஒலித்திருக்கின்றனர்.
கடும் பறை கோடியர் மகாஅர் அன்ன
நெடும் கழை கொம்பர் கடுவன் உகளினும் – மலை 235,236
தீவிரமாய்ப் பறையடிக்கும் கழைக்கூத்தாடிகளின் பிள்ளைகளைப் போன்று,
நீண்ட மூங்கிலின் உச்சிக்கொம்பில் குரங்குகள் (நழுவியும் ஏறியும்) ஆடிக்கொண்டிருப்பினும்,
ஆரியர்
கயிறு ஆடு பறையின் கால் பொர கலங்கி
வாகை வெண் நெற்று ஒலிக்கும் – குறு 7/3-5
ஆரியக் கூத்தர்
கயிற்றில் ஆடும்போது ஒலிக்கும் பறையினைப்போல், காற்று மோதுவதால் கலங்கி
வாகைமரத்தின் வெண் நெற்று ஒலிக்கின்ற
அபாயகரமான சம்பவங்கள் நேரலாம் என்று கூறுவதற்காகத் தெருக்களில் இந்தப் பறையை ஒலித்துக்கொண்டு
செல்வர் என கலித்தொகை கூறுகிறது. தன் சுய நிலையிலில்லாத யானையைக் குளிப்பாட்டுவதற்கு ஆற்றுக்கு
ஓட்டிச் செல்லும்போது அதன் முன்னர் எச்சரிக்கையாகப் பறையை ஒலித்திருக்கின்றனர்.
நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டு ஆங்கு
பறை அறைந்து அல்லது செல்லற்க – கலி 56/32,33
தன் நிலையில் நிற்காத, கொல்லக்கூடிய யானையைக் குளிப்பாட்டச் செல்லும்போது செய்வதைப் போல்
பறை அறிவித்துச் செல்வது இல்லாமல் வெளியே செல்லவேண்டாம்
இறைவன் கொடுங்கொட்டி என்ற கூத்தினை ஆடும்போது பல பறைகள் முழங்கின என்கிறது கலித்தொகை.
படு பறை பல இயம்ப பல் உருவம் பெயர்த்து நீ
கொடுகொட்டி ஆடும்-கால் – கலி 1/5,6
ஒலிக்கின்ற பறைகள் பல முழங்க, பல்வேறு உருவங்களையும் உன்னுள்ளே அடக்கிக்கொண்டு நீ
கொடுங்கொட்டி என்னும் கூத்தினை ஆடும்போது,
ஏறுதழுவுதல் நிகழ்ச்சியின்போது இன்றும் பறைகள் இசைக்கப்படுவதைப் பார்க்கிறோம். அன்றும் அவ்வாறே
நடந்ததாகக் கலித்தொகை மூலம் அறிகிறோம்.
அ வழி பறை எழுந்து இசைப்ப பல்லவர் ஆர்ப்ப
குறையா மைந்தர் கோள் எதிர் எடுத்த
நறை வலம் செய விடா இறுத்தன ஏறு – கலி 104/29-31
அவ்விடத்தில், பறை மிகுந்து ஒலிக்க, பலதரப்பட்டவரும் ஆரவாரிக்க,
வலிமையில் குறையாத இளைஞர்களின் ஏறுதழுவதலை எதிர்கொண்டு பாய்ந்தன,
நறும்புகை வலமாக எழ, விடுவதற்காக நிறுத்தப்பட்ட காளைகள்;
வரகங்கொல்லையில் களை எடுக்கும்போது, இந்தப் பறை இசைக்கப்பட்டிருக்கிறது.
கறங்கு பறை சீரின் இரங்க வாங்கி
களை கால் கழீஇய பெரும் புன வரகின் – அகம் 194/8,9
ஒலிக்கும் பறையின் ஒலியோடு பயிர்கள் வளையும்படி ஒதுக்கிக்
களையைப் பறித்துத் தூய்மை செய்த பெரிய கொல்லையில் விளைந்த வரகின்
விளைந்த பயிர்களின் மேல் வந்து படியும் பறவைகளை ஓட்ட பறையை ஒலித்திருக்கின்றனர்.
அரி பறையால் புள் ஓப்பி – புறம் 395/7
அரித்த ஓசையையுடைய கிணைப்பறையைக் கொட்டி வயலில் விளைந்த
கதிர்களை உண்டற்கு வந்து படியும் புள்ளினங்களை ஓட்டி
ஊர்களில் அறிவிப்புச் செய்ய பறைகள் இசைக்கப்பட்டிருக்கின்றன.
அறை இறந்து அவரோ சென்றனர்
பறை அறைந்து அன்ன அலர் நமக்கு ஒழித்தே – அகம் 281/12,13
பாறைகளைக் கடந்து நம் தலைவர் போய்விட்டார்
பறை அறைந்தது போன்ற அலரினை நம்பால் விடுத்து
மலைவாழ் குறவர்கள் குரவைக்கூத்தின்போது பறைகள் இசைக்கப்பட்டிருக்கின்றன.
நறவு நாள்செய்த குறவர் தம் பெண்டிரொடு
மான் தோல் சிறு பறை கறங்க கல்லென
வான் தோய் மீமிசை அயரும் குரவை – மலை 320-322
சிற்றூர்களில் விழாக்காலத்தில் பெண்டிரோடு ஆடவரும் சேர்ந்து தெருவில் ஆடும்போது பறை
இசைக்கப்பட்டிருக்கிறது.
தொண்டக_பறை சீர் பெண்டிரொடு விரைஇ
மறுகில் தூங்கும் சிறுகுடி பாக்கத்து – அகம் 118/3,4
தொண்டகம் என்னும் பறையின் தாளத்திற்கு இசைய பெண்டிரோடு கலந்து
தெருக்களில் ஆடும் சிறுகுடிப்பாக்கத்தின்கண்ணே
போர்க்காலங்களில் போருக்கு ஆள் எடுக்கும் அறிவிப்பினைச் செய்ய ஊர்கள்தோறும் பறையறைந்து
செய்தி அறிவித்திருக்கின்றனர்.
இன்றும் செரு பறை கேட்டு விருப்பு_உற்று மயங்கி
வேல் கை கொடுத்து ———
—————————–
ஒரு மகன் அல்லது இல்லோள்
செரு முகம் நோக்கி செல்க என விடுமே – புறம் 279/7-11
இன்றும் போர்க்கு எழுமாறு வீரரை
அழைக்கும் பறையொலி கேட்டு மறப்புகழ்பால் விருப்புற்று அறிவு மயங்கி
வேலைக் கையிலே தந்து ————–
——————————
இந்த ஒரு மகனை அல்லது வேறு மகன் இல்லாதவளேயாயினும்
போர்க்களம் நோக்கிச் செல்வாயாக எனச் சொல்லித் தன் மகனை விடுக்கின்றாள்
இந்தப் பறையை உரத்து இசைக்காமல், மந்தமான ஓசையில் அடித்தால் பேய்களும் நடனமாடும் எனப்
புறம் கூறுகிறது.
நிறம் கிளர் உருவின் பேஎய் பெண்டிர்
எடுத்து எறி அனந்தல் பறை சீர் தூங்க – புறம் 62/4,5
நிறம் மிக்க வடிவினையுடையபேய் மகளிர்
மேன்மேலும் கொட்டுகின்ற மந்தமான ஓசையையுடைய பறையினது தாளத்தே ஆட
இந்தப் பறையை நன்கு இசைக்கக்கூடியவர்கள் தாம் மனத்தில் நினைத்ததை அப்படியே ஒலித்துக்காட்டுவர்
என்கிறது கலித்தொகை..
ஓர்த்தது இசைக்கும் பறை போல் நின் நெஞ்சத்து
வேட்டதே கண்டாய் கனா – கலி 92/21,22
பறைகொட்டுபவன் தன் மனத்தில் நினைத்ததை அப்படியே ஒலித்துக்காட்டும் பறையைப் போல்
உன் நெஞ்சத்தில்
விரும்பினதையே கனாவாகக் கண்டாய்!”
செல்வர்களின் புதல்வர்கள் இந்தப் பறையைத் தம் தோளில் கோத்துக்கொண்டு, அதன் முகப்பைக்
கோலால் தட்டி ஒலியெழுப்பி மகிழ்வர் என்கிறது நற்றிணை. அவர்களின் அந்தப் பறையின் முகப்பில்
குருவிகள் போன்ற ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கும் என்றும் அறிகிறோம்.
பெரு முது செல்வர் பொன் உடை புதல்வர்
சிறு தோள் கோத்த செ அரி_பறையின்
கண்_அகத்து எழுதிய குரீஇ போல
கோல் கொண்டு அலைப்ப படீஇயர் மாதோ – நற் 58/1-4
நிறைந்த பழமையான செல்வத்தைப் பெற்றவரின் பொன்தாலி அணிந்த புதல்வர்
தமது சிறிய தோளில் சேர்த்துக்கட்டிய செவ்வையாக அரித்து ஒலிக்கும் பறையின்
முகப்பில் எழுதப்பட்ட குருவி அடிக்கப்படுவதைப் போல
சாட்டைக் குச்சியால் அடிக்கப்படுவதாக –
பறை இசையைக் கேட்க இங்கே சொடுக்கவும்
2.2
பைம் கால் கொக்கின் மென் பறை தொழுதி – நெடு 15
இளமையான காலையுடைய கொக்கின் (அங்குமிங்கும்)மெதுவாகப் பறந்துதிரியும் கூட்டம்
2.3
தண் கடல் படு திரை பெயர்த்தலின் வெண் பறை
நாரை நிரை பெயர்த்து அயிரை ஆரும் – குறு 166/1,2
குளிர்ந்த கடலில் உண்டான அலைகள் மோதித்தள்ளியதால், வெள்ளைச் சிறகுகளைக் கொண்ட
நாரைக்கூட்டம் இடம்பெயர்ந்து வேறிடத்தில் அயிரை மீனை நிறைய உண்ணும்
|
பறையன் |
பறையன் – (பெ) தமிழரின் தொல்குடியினருள் ஒருவன், one of four ancient tribes in tamilnadu
துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
இந்நான்கு அல்லது குடியும் இல்லை – புறம் 335/7,8
துடியன் குடி, பாணன் குடி, பறையன் குடி, கடம்பன்குடி என்று சொல்லப்பட்ட
இந்நால்வகைக் குடிகளன்றி வேறு குடிகள் இல்லை.
|
பலகை |
பலகை – (பெ) கிடுகு, நீண்ட கேடயம், long shield, buckler
விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடு
நிழல் படு நெடு வேல் ஏந்தி – புறம் 15/12,13
விளங்கிய இரும்பால் செய்யப்பட்ட ஆணியும் பட்டமும் அறைந்த அழகுமிக்க கேடகத்துடனே
ஒளி உண்டாகும் நெடிய வேலை எடுத்து
|
பலம் |
பலம் – 1. (பெ) 1. பயன், benefit, fruit
– 2. (வி.மு) பலர் இருக்கின்றோம், we are many
1.
பலம் பெறு நசையொடு பதி வயின் தீர்ந்த நும்
புலம்பு சேண் அகல புதுவிர் ஆகுவிர் – மலை 411,412
பரிசிலாகிய பயனைப் பெறும் ஆசையோடு ஊரிலிருந்து வந்த உம்முடைய
வருத்தம் வெகுதூரம் போய்விட(முற்றிலும் நீங்க), புத்துணர்வுபெற்றவர் ஆவீர்;
2.
பலம் என்று இகழ்தல் ஓம்பு-மின் – புறம் 301/11
நாங்கள் பலர் இருக்கின்றோம் எனத் தருக்கி இகழ்வதை ஒழிவீராக.
|
பலவு |
பலவு – (பெ) பலா, jack tree
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவு கனி – குறு 90/4
ஆண்குரங்கு தொட்டவுடன் வீழ்ந்த பூ மணக்கும் பலாப்பழத்தை
|
பலாசம் |
பலாசம் – (பெ) புரசமரம், பூ, Palas-tree, Butea frondosa;
பகன்றை பலாசம் பல் பூ பிண்டி – குறி 88
|
பலி |
பலி – (பெ) 1. கடவுள், முன்னோர் ஆகியோருக்குப் படைக்கப்படும் படையல்,
offering given to god, manes etc.,
2. காக்கைக்கு இடும் இரத்தம் கலந்த சோறு, food mixed with blood offered to crows
3. நெற்களத்தில் பிச்சைக்காரர்களுக்கு வழங்கும் பிச்சையாகிய நெல்
4. இறைப்படைப்பாகச் செய்யப்படும் விலங்குக்கொலை, அந்த விலங்கு,
sacrificial offering of an animal, the offered animal
5. போர்மேல் செல்லும் வேந்தர் முரசுக்குப் படைக்கும் படையல்
1.
மத வலி நிலைஇய மா தாள் கொழு விடை
குருதியொடு விரைஇய தூ வெள் அரிசி
சில் பலி செய்து பல் பிரப்பு இரீஇ – திரு 232-234
மிகுந்த வலிமை நிலைபெற்ற பெரிய காலையுடைய கொழுவிய கிடாயின்
உதிரத்தோடு பிசைந்த தூய வெள்ளரிசியை
சிறு பலியாக இட்டு, பல குறுணிப் படையல்களையும் வைத்து,
2.
செம் சோற்ற பலி மாந்திய
கரும் காக்கை – பொரு 183,184
(உதிரத்தால்)சிவந்த சோற்றையுடைய படையலை விழுங்கின
கரிய காக்கை
3.
பைது அற விளைந்த பெரும் செந்நெல்லின்
தூம்பு உடை திரள் தாள் துமித்த வினைஞர்
பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல்
பலி பெறு வியன் களம் மலிய ஏற்றி
கணம் கொள் சுற்றமொடு கை புணர்ந்து ஆடும்
துணங்கை – பெரும் 230-235
பசுமை அறும்படி முற்றின பெரிய செந்நெல்லின்
உள்துளை உடைய திரண்ட தாளை அறுத்த வினைஞர்,
பாம்பு கிடக்கின்ற மருதமரத்தின் உயர்ந்த கிளையால் உண்டாகிய நிழலில்(உள்ள)
பிச்சை பெறும் அகன்ற களங்களில் நிறைய ஏற்றி,
கூட்டம் கொண்ட (தம்)சுற்றத்தோடு கைகோர்த்து ஆடுகின்ற
துணங்கைக் கூத்தில்
4.
தோப்பி கள்ளொடு துரூஉ பலி கொடுக்கும் – அகம் 35/9
நெல்லால் ஆக்கிய கள்ளோடு செம்மறிக்குட்டியைப் பலி கொடுக்கும்
5.
பலி பெறு முரசம் பாசறை சிலைப்ப – புறம் 362/3
பலி செலுத்தப்பட்ட முரசம் பாசறைக்கண் ஒலிக்க
இந்தப் பலியில் அரிசி, கள், குருதிதோய்ந்த சோறு, விலங்குகள்
முதலிய பலவகைப் பொருள்கள் படைக்கப்படுவதுண்டு
வால் அரிசி பலி சிதறி – பட் 165
மல்லல் மூதூர் மலர் பலி உணீஇய – நற் 73/3
பலி கள் ஆர்கை பார் முது குயவன் – நற் 293/2
நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி – பதி 30/37 (நெய்த்தோர் = இரத்தம்)
நனை முதிர் நறவின் நாள் பலி கொடுக்கும் – அகம் 213/7 (நறவு = கள்)
போகு பலி வெண் சோறு போல – புறம் 331/12
பன் மலர் சிதறி பரவு_உறு பலிக்கே – நற் 322/12
குருதி பலிய முரசு முழக்கு ஆக – புறம் 369/5
|
பல் |
பல் – (பெ) 1. பல, many
2. எயிறு, tooth
1.
பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் – திரு 16
பல பொற்காசுகளை வரிசையாக அமைத்த சில வடங்களை அணிந்த அல்குலினையும்,
2.
முகை நிரைத்து அன்ன மா வீழ் வெண் பல்
நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய் – அகம் 162/12,13
முல்லை அரும்பினை வரிசையாக நிறுத்தினாலொத்த வண்டுகள் விரும்பும் வெண்மையான பல்லினையும்
புன்னகையால் மாண்புற்று விளங்கும் நன்மை வாய்ந்த பவளம் போன்ற வாயினையும் உடையளாய்
|
பல்கதிர்ச்செல்வன் |
பல்கதிர்ச்செல்வன் – (பெ) ஞாயிறு, sun
படுபு அறியலனே பல்கதிர்ச்செல்வன் – புறம் 34/18
தோன்றுதலை அறியான் வாழ்நாட்கு அலகாகிய பல கதிரையுடைய செல்வனாகிய ஞாயிறு
|
பல்கால்பறவை |
பல்கால்பறவை – (பெ) வண்டு, bee
வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி
பல்கால்பறவை கிளை செத்து ஓர்க்கும் – பெரும் 182,183
வில்யாழ் இசைக்கும் விரலாலே எறிந்து எழுப்பப்பட்ட குறிஞ்சிப்பண்ணை,
பல கால்களையுடைய வண்டுகள் தம் சுற்றத்தின் ஓசையாகக் கருதிக் கேட்கும்,
|
பல்கு |
பல்கு – (வி) 1. அதிகமாகு, பெருகு, increae, expand
2. பலவாகு, multiply
1.
கை கவர் நரம்பின் பனுவல் பாணன்
செய்த அல்லல் பல்குவ – நற் 200/8,9
கையினால் தடவுதற்குரிய நரம்பினால் இசைக்கும் பாட்டுக்களைக் கொண்ட பாணன்
செய்த துன்பங்கள் நாளுக்குநாள் பெரிதாகின்றன
2.
பசும் பிசிர் ஒள் அழல்
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு – பதி 62/5,6
கைப்புலத்தைச் சுட்டெரித்த பசிய பிசிர்களுடன் ஒளிவிடும் நெருப்பானது
ஞாயிறு பலவாகியதைப் போன்ற மாயத்தோற்றத்துடன் சுடர்விட்டுத் திகழ,
|
பல்சாலைமுதுகுடுமி |
பல்சாலைமுதுகுடுமி – (பெ) ஒரு முற்காலப் பாண்டிய மன்னன், an ancient Pandiya king
பல்சாலைமுதுகுடுமியின்
நல் வேள்வி துறைபோகிய – மது 759,760
(பலவாகிய வேள்விச் சாலைகளைக் கண்ட பாண்டியன்)பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று,
நல்ல வேள்வித்துறைளில் முற்றும் தேர்வாயாக,
|
பல்லவம் |
பல்லவம் – (பெ) இளந்தளிர், sprout, shoot
சினை போழ் பல்லவம் தீம் சுனை உதிர்ப்ப – பரி 19/68
அந்தக் மரக் கொம்பினைப் பிளந்துகொண்டுவரும் இளந்தளிர்களை மரத்தின் மீதேறிய மங்கையர் பறித்து
நீரில் உதிர்த்துவிட
|
பல்லவர் |
பல்லவர் – (பெ) பலதரப்பட்டவர், different kinds of people
அ வழி பறை எழுந்து இசைப்ப பல்லவர் ஆர்ப்ப – கலி 104/29
அவ்விடத்தில், பறை மிகுந்து ஒலிக்க, பலதரப்பட்டவரும் ஆரவாரிக்க,
|
பல்லான்குன்று |
பல்லான்குன்று – (பெ) ஒரு மலையின் பெயர், the name of a hill
பல்லான்குன்றில் படு நிழல் சேர்ந்த
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண் – அகம் 168/4,5
பல்லான்குன்று என்னும் மலையில் பொருந்தும் நிழலின்கண் சேர்ந்த
நல்ல ஆன் நிரையின் பரப்பினைக் கொண்ட குழுமூரிடத்தே
|
பல்லியம் |
பல்லியம் – (பெ) பல இன்னிசைக்கருவிகளின் தொகுதி, group of musical instruments, orchestra
1.
கழைக்கூத்தாடிகளின் ஆட்டத்தில், உயரத்தில் நீளவாக்கில் கட்டிய கயிற்றின்மேல் ஒருவர் நடக்கும்போது
கீழிருப்போர் பலவித இசைக்கருவிகளை முழக்குவர். அது பல்லியம் எனப்படும்.
கழை பாடு இரங்க பல்லியம் கறங்க
ஆடு_மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று – நற் 95/1,2
குழல்கள் பக்கத்தே இசைக்க, பலவகை இன்னிசைக் கருவிகள் முழங்க,
ஆட்டக்காரியான கழைக்கூத்தி நடந்த வளைந்த முறுக்கேறிய வலிய கயிற்றில்
2.
பருவப்பெண்கள் காதல்வயப்பட்டுச் சுணங்கியிருக்கும்போது, அவரின் தாயர், அவர்களைப்
பேய்பிடித்துவிட்டதாக எண்ணி, வேலனை அழைத்து வெறியாட்டு அயரச்செய்வர். அப்பொழுது
பலவித இசைக்கருவிகளை முழக்குவர். அது பல்லியம் எனப்படும்.
மறி குரல் அறுத்து தினை பிரப்பு இரீஇ
செல் ஆற்று கவலை பல்லியம் கறங்க
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்று பெரும் தெய்வம் பல் உடன் வாழ்த்தி
பேஎய் கொளீஇயள் இவள் எனப்படுதல்
நோ_தக்கன்றே தோழி – குறு 263/1-6
ஆட்டின் கழுத்தை அறுத்தும், தினையின் பலியரிசியைப் படைத்தும்,
மக்கள் செல்லும் பாதையின் கவர்த்த வழிகளில் பல் வித இசைக்கருவிகள் முழங்க
தாம் வெளிப்படுதல் அன்றி நமது நோய்க்கு வேறு மருந்தாக ஆகாத
வேறான பெரிய தெய்வங்கள் பலவற்றைச் சேர வாழ்த்தி,
பேய் பிடித்துவிட்டது இவளுக்கு என்று ஊரார் சொல்லுவது
வருந்துவதற்கு உரியதாகும் தோழி!,
3.
போரில் காயம்பட்டு வீட்டுக்குக் கொண்டுவரப்பட்ட மறவரைக் காத்தல்வேண்டி, இறைவனைத் தொழும்போது
பலவித இசைக்கருவிகளை முழக்குவர். அது பல்லியம் எனப்படும்.
தீம் கனி இரவமொடு வேம்பு மனை செரீஇ
வாங்கு மருப்பு யாழொடு பல்லியம் கறங்க
கை பய பெயர்த்து மை இழுது இழுகி
ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
இசை மணி எறிந்து காஞ்சி பாடி
நெடு நகர் வரைப்பின் கடி நறை புகைஇ
காக்கம் வம்மோ காதல் அம் தோழீ
வேந்து உறு விழுமம் தாங்கிய
பூம் பொறி கழல் கால் நெடுந்தகை புண்ணே – புறம் 281
இனிய கனிகளைத் தரும் இரவமரத்தின் தழையுடனே, வேப்பிலையும் சேர்த்து மனையின் கூரை இறைப்பில்
செருகி
வளைந்த கோட்டையுடைய யாழும் பலவாகிய வாச்சியங்களும் இயம்ப
கையை மெல்ல எடுத்து மையாகிய மெழுகினை இட்டு
வென்சிறுகடுகைத் தூவி, ஆம்பல்குழலை ஊதி
ஓசையைச் செய்யும் மணியை இயக்கி காஞ்சிப்பண்ணைப் பாடி
நெடிய மனையின்கண் நறுமணம் கமழும் அகில் முதலியவற்றைப் புகைத்து
காப்போமாக வருக! அன்புடைய தோழியே!
வேந்தனைக் குறித்து ச் செய்யப்பெற்ற இடுக்கனைத் தான் ஏற்றுக் காத்த
பூத்தொழில் பொறிக்கப்பட்ட கழலையணிந்த காலையுடைய நெடுந்தகையாகிய தலைவனுக்கு உண்டாகிய
புண்களை.
4.
மன்னர்களிடம் பரிசில்வேண்டிச் செல்லும் இரவலர்கள்,பாணர்கள்,கூத்தர்கள் ஆகியோர் மன்னனை
மகிழ்விக்கப் பலவித இசைக்கருவிகளை முழக்குவர்.
பல்லிய கோடியர் புரவலன் பேர் இசை
நல்லியக்கோடனை – சிறு 125,126
பல்வேறு இசைக்கருவிகளையுடைய கூத்தரின் புரவலனும் ஆகிய பெரிய புகழையுடைய
நல்லியக்கோடனை
5.
மழைக்காலத்தில் மழைபெய்து ஓய்ந்த பின்னர், நீர்நிலைகளிலுள்ள தவளைகள் எல்லாம் ஒன்றுசேரக் கத்தும்.
அவ்வொலி பல்லியம் முழங்கும் ஒலிபோல் இருப்பதாக அகநானூறு கூறுகிறது.
படு மழை பொழிந்த பயம் மிகு புறவின்
நெடு நீர் அவல பகு வாய் தேரை
சிறு பல்லியத்தின் நெடு நெறி கறங்க – அகம் 154/1-3
மிக்க மழை சொரிந்தமையால் பயன் மிக்க முல்லைநிலத்தே
ஆழமாகிய நிரினையுடைய பள்ளங்களிலுள்ள பிளந்த வாயினையுடைய தேரைகள்
சிறிய பலவாகிய வாச்சியங்களைப் போல நீண்ட வழியெல்லாம் ஒலிக்கவும்
6.
திருமுருகாற்றுப்படியில் முருகன் பல்லியத்தன் எனப்படுகிறான்.
குழலன் கோட்டன் குறும் பல்லியத்தன் – திரு 209
குழலை ஊதுபவன், கொம்பைக் குறிப்பவன், சிறிய இசைக்கருவிகளை இசைப்பவன்.
எனவே இந்தப் பல்லியத்தில் குழலும், கொம்புகளுமாகிய ஊதுகருவிகள் சேரா.
எனவே பல்லியத்தில் பெரும்பாலும் பெரிதும் சிறிதுமாகிய தோற்கருவிகளே வாச்சியங்களாக அமையும்
எனத் தெளியலாம்.
|
பளிங்கம் |
பளிங்கம் – (பெ) பளிங்கு, சிறுவர் உருட்டி விளையாடும் பளிங்குக்குண்டு, marble
பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி – அகம் 5/9
பளிங்கைப் போன்று பல காய்களைக் காய்க்கும் நெல்லிமரங்கள்
|
பளிங்கு |
பளிங்கு – (பெ) 1. படிகம், மெருகூட்டப்பட்ட சலவைக்கல், crystal, marble
2. உருண்டையான பளபளப்பான கல், polished globular marble
1.
களிறு பொர கரைந்த கய வாய் குண்டு கரை
ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும் – நற் 292/5,6
களிறுகள் சண்டையிட்டுக்கொள்வதால் கரைந்துபோன, பெரிய பள்ளங்கள் உள்ள குழிவான கரையில்
ஒளிறுகின்ற வெள்ளைப் பளிங்குக்கற்களோடு, செம்பொன்னும் மின்னும்
பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவு_உழி – குறி 57
பளிங்கை (க் கரைத்துக்)கொட்டியதைப் போன்ற பரந்த சுனையில் மூழ்கி விளையாடுகின்றபொழுது,
2.
அறு நூல் பளிங்கின் துளை காசு கடுப்ப – அகம் 315/12
நூல் அற்று உதிர்ந்த துளையினையுடைய பளிங்குக் காசுகளை ஒப்ப
மை இல் பளிங்கின் அன்ன தோற்ற
பல்கோள் நெல்லி பைங்காய் – அகம் 399/13,14
குற்றமற்ற பளிங்கினைப் போன்ற தோற்றத்தையுடைய
பலவாகக் காய்த்த நெல்லியின் பசிய காய்கள்
|
பளிதம் |
பளிதம் – (பெ) கர்ப்பூரம், camphor
பங்கம் செய் அகில் பல பளிதம்
மறுகுபட அறை புரை அறு குழவியின்
அவி அமர் அழல் என அரைக்குநர் – பரி 10/82-84
நறுக்கப்பட்ட அகில் துண்டுகளையும், பலவகைப் பச்சைக்கர்ப்பூரத்தையும்,
ஒன்றாகக் கலக்குமாறு குற்றமற்ற குழவிக்கல்லால்
அவியாக பலியுணவை இட்ட வேள்வித்தீயின் நிறத்தைப் போன்று அரைப்பார் சிலர்;
|
பள்ளி |
பள்ளி – (பெ) 1. துயிலிடம், sleeping place, bed
2. துறவி மடம், hermitage
3. தூக்கம், sleep
4. சாலை, அடைப்பு, enclosure
5. பௌத்தர்களின் கோயில், temple of Bhuddhists
6. அந்தணர்கள் தொழும் இடம், worship place of Brahmins
1.
கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை
—————- ——————-
குளவி பள்ளி பாயல்கொள்ளும் – சிறு 42-46
செங்கழுநீர்ப்பூவைத் தின்ற பெரிய வாயையுடைய எருமை
—————— ——————
காட்டு மல்லிகையாகிய படுக்கையில் துயில்கொள்ளும்
2.
தவ பள்ளி தாழ் காவின்
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம்
மா இரும் பெடையோடு இரியல் போகி – பட் 53-56
தவஞ்செய்யும் பள்ளிகள் இருக்கும் தாழ்வான மரங்கள் கொண்ட சோலைகளில்
மினுமினுக்கும் சடையையுடைய துறவிகள் தீயில் யாகம்செய்யும்(போது எழும்பிய)
(நெய் முதலியவற்றின்)மணமுள்ள புகையை வெறுத்து, குயில்கள் தம்முடைய
கரிய பெரிய பேடைகளுடன் விரைவாக(விழுந்தடித்து)ப் பறந்தோடி,
3.
சிலம்பில் போகிய செம்முக வாழை
——————— ——————-
பள்ளி யானை பரூஉ புறம் தைவரும் – அகம் 302/3
மலையில் நீண்டு வளர்ந்த செவ்வாழை
——————— ——————-
துயில்கொள்ளும் யானையின் பரிய உடம்பினைத் தடவும்
4.
ஒதுக்கு இன் திணி மணல் புது பூம் பள்ளி
வாயில் மாடம்-தொறும் மை விடை வீழ்ப்ப – புறம் 33/20,21
இயங்குதற்கு இனிய செறிந்த மனலையுடைய புதிய பூவையுடைய சாலையினது
வாயிலின்கண் மாடங்கள்தோறும் செம்மறிக்கிடாயைக் கொல்ல
5.
காமர் கவினிய பேரிளம் பெண்டிர்
பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சி
சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும் – மது 465-467
ஆசைப்படும்படி அழகுபெற்ற இளமை முதிர்ந்த மகளிர்,
பூவையுடையவராய், புகையையுடையவராய், வணங்கியவராய் புகழ்ந்து வாழ்த்தி
சிறப்பாக (அவர்களாற்)பாதுகாக்கப்படும் கடவுளின் (பௌத்தப்)பள்ளியும் –
6.
குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளியும் – மது 474
மலையைக் குடைந்ததைப் போன்ற அந்தணர்கள் இருக்கைகளும்
|
பள்ளிகொள்(ளல்) |
பள்ளிகொள்(ளல்) – (வி) துயில்கொள், sleep
நள்ளென் யாமத்தும் பள்ளிகொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன் – நெடு 186,187
நள்ளென்னும் ஓசையையுடைய நடுயாமத்திலும் துயிலாதவனாய்,
ஒருசில வீரரோடு திரிதலைச் செய்யும் அரசன்,
|
பள்ளிபுகு(தல்) |
பள்ளிபுகு(தல்) – (வி) தூங்கப்போ(தல்), go to sleep
வள் இதழ் கூம்பிய மணி மருள் இரும் கழி
பள்ளிபுக்கது போலும் பரப்பு நீர் தண் சேர்ப்ப – கலி 121/5,6
வளமையான இதழ்கள் குவிந்து நிற்கும் நீல மணியைப் போன்ற பெரிய கழி
தூங்கப் போனதைப் போன்ற கடலையுடைய குளிர்ந்த நெய்தல் நிலத் தலைவனே!
|
பழங்கண் |
பழங்கண் – (பெ) 1. துன்பம், distress, affliction
2. மெலிவு, loss of strength or power
1.
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு
வெளிறு இல் காழ வேலம் நீடிய
பழங்கண் முது நெறி மறைக்கும் – நற் 302/7-9
களிறு உதைத்து உழப்புவதால் கவிழ்க்கப்பட்ட மண்ணினால் எழுந்த நுண்ணிய மண்துகள்,
உட்புழல் இல்லாமல் நன்கு வயிரமேறிய வேலமரங்கள் உயர்ந்து வளர்ந்த
துன்பம் நிறைந்த பழைய பாதைகளை மறைக்கும்
2.
மருங்கு மறைத்த திருந்து இழை பணை தோள்
நல்கூர் நுசுப்பின் மெல் இயல் குறு_மகள்
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய
பழங்கண் மாமையும் உடைய தழங்கு குரல் – நற் 93/7-10
பக்கங்களை மறைத்த திருந்திய அணிகலன்களால் பெரிதாய்த் தோன்றும் தோள்களையும்,
மெலிந்துபோன இடையையும், மெல்லிய இயல்பினையும் கொண்ட இளமகளின்
பூண்கள் தாழ்ந்த மார்பு நாணம் துன்புறுத்துவதால் வருத்தமுற்ற
மெலிவடைந்து நிறமாற்றம் பெற்றன;
|
பழனம் |
பழனம் – (பெ) 1. வயல், paddy field
2. வயல்வெளி, agricultural land
3. பொய்கை, நீர்நிலை, tank
1.
பழன மஞ்ஞை உகுத்த பீலி – புறம் 13/10
வயலிடத்து மயில் உதிர்த்த பீலி
2.
கண்பு மலி பழனம் கமழ துழைஇ
வலையோர் தந்த இரும் சுவல் வாளை – மலை 454,455
சம்பங்கோரை நெருங்கிவளர்ந்த வயல்வெளிகள் (சேற்று)மணம்வீச (கைகளினால்)துழாவி,
வலைகொண்டு மீன்பிடிப்போர் கொண்டுவந்த பெரிய கழுத்தையுடைய வாளைமீன்
3.
கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்
பழன வாளை கதூஉம் ஊரன் – குறு 8/1,2
வயல்வெளியிலுள்ள மா மரத்தில் விளைந்து உதிர்ந்த இனிய பழத்தை
பொய்கையின் வாளைமீன் கவ்வும் ஊரையுடைய தலைவன்
|
பழன் |
பழன் – (பெ) பழம், fruit
பழன் உடை பெரு மரம் தீர்ந்து என கையற்று
பெறாது பெயரும் புள் இனம் போல – புறம் 209/9,10
பழமுடைய பெரிய மரம் பழுத்துத் தீர்ந்தது என வருந்தி
பழம் பெறாமல் மீளும் பறவைக்கூட்டத்தைப் போல
|
பழமொழி |
பழமொழி – (பெ) முதுசொல், proverb, maxim
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்று-கொல் – அகம் 101/3
தொன்றுதொட்டு வழங்கும் பழமொழி இன்று பொய்யானதோ?
|
பழம் |
பழம் – 1. (பெ) காயின் முதிர்வு, கனி, fruit
– 2. (பெ.அ) பழமையான, கடந்தகால, ancient, old, olden
1.
பழம் தேர் வாழ்க்கை பறவை போல – மது 576
பழத்தைத் தேடியலையும் வாழ்க்கையையுடைய பறவைகளைப் போல,
2.
பழம் திமில் கொன்ற புது வலை பரதவர் – அகம் 10/10
பழைய கட்டுமரத்தை அழித்துவிட்டுப் புதிய வலையைக் கொண்ட பரதவர்
|
பழம்படு(தல்) |
பழம்படு(தல்) – (வி) பழையதாகிப்போ(தல்), grow old
பழம்படு தேறல் பரதவர் மடுப்ப – சிறு 159
பழையதாகிய (களிப்பு மிகுகின்ற)கள்ளின் தெளிவினைப் பரதவர் (கொணர்ந்து உம்மை)ஊட்ட,
|
பழிச்சு |
பழிச்சு – (வி) 1. வாழ்த்து, greet, bless
2. வணங்கு, worship
3. புகழ், praise
1.
பூவும் புகையும் சாவகர் பழிச்ச – மது 476
பூக்களையும், புகையினையும் (ஏந்தி)விரதங்கொண்டோர் வாழ்த்திநிற்ப,
2.
செறி தொடி விறலியர் கைதொழூஉ பழிச்ச – மலை 201
நெருக்கமாக வளையல் (அணிந்த) விறலியர் கைகூப்பி வணங்க
3.
நாள்-தொறும் விளங்க கைதொழூஉ பழிச்சி
நாள் தர வந்த விழு கலம் அனைத்தும் – மது 694,695
நாள்தோறும் (தமக்குச் செல்வம்)மிகும்படியாகக் கையால் தொழுது புகழ்ந்து,
நாட்காலத்தே (திறையாகக் கொண்டு)வந்த சீரிய கலங்களும்,
|
பழு |
பழு – (பெ) பேய், devil
பழுவும் பாந்தளும் உளப்பட பிறவும் – குறி 259
பேயும், மலைப்பாம்பும், (இவற்றை)உள்ளிட்ட பிறவும்
|
பழுது |
பழுது – (பெ) 1. குற்றம், குறை, fault, flaw
2. பயனின்மை, unprofitableness, uselessness
3. வறுமை, poverty
4. பொய், falsehood
1.
பழுது அன்று அம்ம இ ஆய்_இழை துணிவே – குறு 366/7
குற்றமற்றது, இந்த ஆய்ந்த அணிகலன்களை அணிந்தவள் எடுத்த முடிவு
2.
சுரந்த என் மென் முலை பால் பழுது ஆக நீ – கலி 84/4
சுரந்த என் மென்மையான முலையின் பால் பயனற்றுப் போகும்படி
3.
கரிகால்வளவன்
தாள் நிழல் மருங்கின் அணுகுபு குறுகி
தொழுது முன் நிற்குவிர் ஆயின் பழுது இன்று
ஈற்று ஆ விருப்பின் போற்றுபு நோக்கி நும்
கையது கேளா அளவை ஒய்யென
பாசி வேரின் மாசொடு குறைந்த
துன்னல் சிதாஅர் நீக்கி தூய
கொட்டை கரைய பட்டு உடை நல்கி
பெறல் அரும் கலத்தில் பெட்டாங்கு உண்க என
பூ கமழ் தேறல் வாக்குபு தரத்தர – பொரு 148-157
கரிகாற்சோழனின்,
திருவடி நிழலின் பக்கத்தை அணுகிக் கிட்டே நெருங்கி
வணங்கி (அவன்)முன்னே நிற்பீராயின், (உம்)வறுமை நீங்க
ஈன்ற பசு (அதன் கன்றை நோக்கும்)விருப்பம் போன்ற விருப்பத்தோடு உம்மை விரும்பிப் பார்த்து, உம்
கைத்திறனை(கலையை)(த் தான்) கேட்டு முடிவதற்கு முன்னரே, விரைந்து
பாசியின் வேர் போல் அழுக்குடன் சுருங்கிப்போன,
தையலையுடைய துணிகளை நீக்கி, தூய
(பட்டுக்)குஞ்சம் (உள்ள)கரையையுடைய பட்டு உடைகளைத் தந்து,
‘பெறுதற்கரிய (பொற்)கலத்தில் விரும்பியபடி உண்பாயாக’ என்று,
பூ மணக்கின்ற கள்தெளிவை (மேலும்மேலும்)வார்த்துத் தரத்தர,
4.
அல்கலும்
அகலுள் ஆங்கண் அச்சற கூறிய
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது – அகம் 281/1-3
நாள்தோறும்
அகன்ற மனையினுள் இருந்து நமக்கு அச்சம் இன்றாகக் கூறிய
சொல் பொய்யாகப்போய்விடும் என்று அஞ்சாமல்
|
பழுதுளி |
பழுதுளி – (பெ) பழுது உள்ளவை, those which have flaw or defect
சிறு கண் பன்றி பழுதுளி போக்கி – மலை 153
சிறிய கண்ணையுடைய பன்றியின் (தசைகளில்)பழுதுள்ளவற்றை நீக்கி
|
பழுநு |
பழுநு – (வி) 1. நிறைவடை, be full or perfect
2. முதிர்வடை, mature
3. முற்றுப்பெறு, be fully grown or developed
1.
வளம் பிழைப்பு அறியாது வாய் வளம் பழுநி
கழை வளர் நவிரத்து மீமிசை – மலை 578,579
வளம் குன்றுதல் இல்லாது, வாய்த்த வளமும் செழித்துமிகுந்து(உள்ள),
மூங்கில் வளரும் நவிரமலையின் உச்சியில்
2.
இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல்
நெடும் கண் ஆடு அமை பழுநி – அகம் 348/5,6
தேனுடன் கூட்டியாக்கியவண்டு மொய்க்கும் அரியலாகிய
அசையும் மூங்கிலின் நீண்ட கணுவிடையுள்ள குழாயில் நெடிது இருந்து முதிர்தலின்
3.
நைவளம் பழுநிய நயம் தெரி பாலை – சிறு 36
நட்டபாடை என்னும் பண் முற்றுப்பெற்ற இனிமை தெரிகின்ற பாலை என்னும் பண்ணை
|
பழுனு |
பழுனு – (வி) பார்க்க : பழுநு
1. நிறைவடை
பெட்டு ஆங்கு ஈயும் பெரு வளம் பழுனி
நட்டனை-மன்னோ முன்னே இனியே – புறம் 113/3,4
விரும்பியபடியே தரும் மிக்க செல்வம் நிறைவுபெற்று
எம்மோடு நட்புச்செய்தாய் முன்பு, இப்பொழுது
2. முதிர்வடை
வாங்கு அமை பழுனிய நறவு உண்டு – நற் 276/9
வளைந்த மூங்கிலாலான குப்பிகளில் முதிர்ந்து விளைந்த கள்ளினை உண்டு
3. முற்றுப்பெறு
புணர் புரி நரம்பின் தீம் தொடை பழுனிய
வணர் அமை நல் யாழ் இளையர் பொறுப்ப – பதி 41/1,2
முறுக்கேற்றிய நரம்பினையுடைய, இனிய இசை முற்றுப்பெற்ற
வளைந்த அமைப்பினையுடைய நல்ல யாழினை ஏவல்இளையவர்கள் தாங்கிநிற்க,
|
பழுப்பு |
பழுப்பு – (பெ) மங்கலான மஞ்சள் நிறம், pale yellow colour of fruits
சிறு தலை துருவின் பழுப்பு உறு விளை தயிர் – அகம் 394/2
சிறிய தலையை உடைய செம்மறியாட்டின் பழுப்பு நிறம் வாய்ந்த முற்றிய தயிர்
|
பழூஉ |
பழூஉ – (பெ) பழு, பேய், devil
பழூஉ பல் அன்ன பரு உகிர் பா அடி
இரும் களிற்று இன நிரை ஏந்தல் – குறு 180/1,2
பேயின் பல்லைப் போன்ற பருத்த நகங்களையும், பரந்த அடியினையும் கொண்ட
பெரிய களிற்றுயானைகளின் கூட்டத்துக்குத் தலைவனாகிய களிறு
|
பழையன் |
பழையன் – (பெ) சங்க காலச் சிற்றரசன், a chieftain of sangam period
1.
பழையன் என்பவன் மோகூர் மன்னன். வேம்பு இவனது காவல்மரம். எனவே, இவன் பாண்டியர் குடிச்
சிற்றரசன் எனலாம். செங்குட்டுவன் இவனது காவல்மரத்தை வெட்டி இவனை ஒடுக்கினான் எனப்
பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்து பதிகம் கூறுகிறது.
பழையன் மோகூர் அவை_அகம் விளங்க
நான் மொழி கோசர் தோன்றி அன்ன – மது 508,509
பழையன் (என்னும் மன்னனின்)மோகூரிடத்து அரசவை திகழுமாறு
நான்மொழிக்கோசர் வீற்றிருந்தாற் போன்று,
2.
பழையன் என்ற போரூர் மன்னன் ஒருவனும் இருந்தான். இவன் சோழநாட்டைச் சேர்ந்தவன்.
இவன் போர் கிழவோன் பழையன் எனப்பட்டான். இவன் சோழன் பெரும்பூண் சென்னியின்
படைத்தலைவன். இவன் சோழரை எதிர்த்த கொங்குநாட்டாரைப் பணியச்செய்தான்.
கொற்ற சோழர் கொங்கர் பணீஇயர்
வெண் கோட்டு யானை போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்து அன்ன – நற் 10/6-8
வெற்றியையுடைய சோழர்கள் கொங்குநாட்டாரைப் பணியச் செய்வதற்காக
வெண்மையான கொம்புகளையுடைய யானைகளைக் கொண்ட போர் என்ற ஊருக்குரியவனான
பழையன் என்பானை ஏவ, அவனது வேற்படை பொய்க்காமல் வெற்றிபெற்றதுபோல
இந்தப் பழையன் கட்டூர் என்ற இடத்தில் ஏழு பேரால் தாக்கிக் கொல்லப்பட்டான்.
நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி
துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர்
பருந்து பட பண்ணி பழையன் பட்டு என – அகம் 44/7-11
நன்னனும், ஏற்றை என்பவனும், நறிய பூண்களை அணிந்த அத்தியும்,
(பகைவர்) நெருங்குதற்கரிய மிக்க வலிமையுடைய கங்கனும், கட்டியும்,
பொன் அணிகலன்கள் அணிந்த வலிய வில்லையுடைய புன்றுறையும், என்பதாக
முன்பு அவர்கள் ஒன்றுகூடியிருந்த அளத்தற்கரிய சிறப்பு வாய்ந்த கட்டூரில்,
பருந்துகள் மேலே சுற்றுமாறு போரிட்டுப் பழையன் இறந்தானாக,
வென்வேல்
மாரி அம்பின் மழை தோல் பழையன்
காவிரி வைப்பின் போஒர் அன்ன- அகம் 186/14-16
வெற்றி பொருந்திய வேலையும்,
மழைத்துளி போன்ற மிக்க அம்பினையும், மேகம் போலும் கரிய கேடகத்தினையும் உடைய பழையனின்
காவிரிநாட்டிலுள்ள போர் என்னும் ஊரினை ஒத்த
வென்வேல்
இழை அணி யானை சோழன் மறவன்
கழை அளந்து அறியா காவிரி படப்பை
புனல் மலி புதவின் போஒர் கிழவன்
பழையன் ஓக்கிய வேல் போல் – அகம் 326/9-12
இந்தப் பழையன் சோழன் மறவன் எனப்படுவதால் இவன் சோழனின் படைத்தளபதி என்பது பெறப்படும்.
|
பழையன்மாறன் |
பழையன்மாறன் – (பெ) பாண்டிய மன்னன், a Pandiya king
நெடும் தேர்
இழை அணி யானை பழையன்மாறன்
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண்
வெள்ள தானையொடு வேறு புலத்து இறுத்த
கிள்ளிவளவன் நல் அமர் சாஅய் – அகம் 346/18-22
நீண்ட தேரினையும் இழையை அணிந்த யானையினையுமுடைய பழையன் மாறன் என்பானை
மாடங்கள் மிக்க தெருக்கலையுடைய கூடலாகிய ஆங்கே
மிக்க சேனையுடன் வேற்றுப்புலத்தே போர் செய வந்து தங்கியிருந்த
கிள்ளிவளவன் நல்ல போரின்கண் சாய்த்து
கூடல் என்பது மதுரைக்கு இன்னொரு பெயர். மாறன் என்பது பாண்டியர்களின் பெயர்.
கிள்ளிவளவன் பெரும் படையுடன் மதுரைக்குப் படையெடுத்து வந்து
மதுரைக்கு வெளியில் தங்கி, போரிட்டு, பழையன் மாறனை வென்றான். இதுகேட்டு அப்போதிருந்த
சேர மன்னன் கோதை மார்பன் மகிழ்ந்தான் என்று இதே பாடல் குறிப்பிடுகிறது.
|
பழையர் |
பழையர் – (பெ) கள்விற்போர், toddy-sellers
பழையர் என்போர் தமிழ்நாட்டுப் பழங்குடிமக்கள். தமிழ்நாட்டின் பலபகுதிகளிலும் அவர்கள்வாழ்ந்து வந்தனர்.
மலைபடுகடாம் வயல்வெளிகளில் வேலைபார்க்கும் பழையர் மகளிரைப் பற்றிக் கூறுகிறது.
அகம் – பாடல் 201-இல் இந்தப் பழையர் கொற்கைத்துறையில் வாழ்பவராகக் கட்டப்படுகின்றனர்.
அகம் -பாடல் 331 – இல் இவர்கள் தமிழ்நாட்டு எல்லையோரச் சிற்றூர்களில் வாழ்பவராகக் காட்டப்படுகின்ரார்.
1.
வயலில் நெல்லறுத்துக் கதிரடித்த பின்னர் மீந்துபோன வைக்கோலைக் களத்துமேட்டில் அடுக்கிவைக்கும்
வேலையைச் செய்பவராக மலைபடுகடாம் பழையர் மகளிரைப் பற்றிக் கூறுகிறது.. இந்த மகளிர்
பகன்றை மலரால் தொடுக்கப்பட்ட மாலையைத் தலையில் கண்ணியாகச் சூடிக்கொள்வர்.
பகன்றை கண்ணி பழையர் மகளிர்
ஞெண்டு ஆடு செறுவில் தராய்க்கண் வைத்த
விலங்கல் அன்ன போர் முதல் தொலைஇ – மலை 459-461
பகன்றைப்பூ மாலை(சூடிய) கள்விற்கும் பழையர்வீட்டுப் பெண்கள்
நண்டுகள் ஓடித்திரியும் வயல்களின்(அருகே) களத்துமேட்டில் வைத்த,
மலை போன்ற (நெற்கதிர்)போர்களின் அடிப்பாகத்தை இழுத்து (அவற்றைச்)சரித்து,
2.
புகழ்பெற்ற கொற்கைத் துறையில் அந்தி வேளையில் முத்துக்களையும் சங்குகளையும் சொரிந்து, இந்தப்
பழையர் மகளிர் தெய்வத்தை வணங்கினர் என்று அகம் 201 கூறுகிறது.
புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை
அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து
தழை அணி பொலிந்த கோடு ஏந்து அல்குல்
பழையர் மகளிர் பனி துறை பரவ
பகலோன் மறைந்த அந்தி ஆரிடை – அகம் 201/4-8
புகழ்மிக்க சிறப்பினையுடைய கொற்கைப்பதியின் கடல் துறையிலே
விளங்கும் ஒளியினையுடைய முத்துக்களுடன் வலம்புரிச் சங்கினையும் சொரிந்து
தழையுடை அணிதலால் பொலிவுற்ற பக்கம் உயர்ந்த அல்குலினையுடைய
பழையரது மகளிர் குளிர்ந்த துறைக்கண் தெய்வத்தினைப் பராவி நிற்க
ஞாயிறு மறைந்த அந்தியாகிய அரியபோழ்திலே
3.
இருப்பை மரத்துப்பூக்களைச் சேகரித்து, மூங்கில் குழாய்களில் அடைத்துவைத்து சிற்றூர்களின் தெருக்களில்
இந்தப் பழையர் மகளிர் கூவி விற்பர் என்று அகம் 331 கூறுகிறது. இவர்கள் அவ்வேளையில் தங்கள்
இடுப்பு ஆடையின் மேல் தழையாடைகளையும் உடுத்தியிருந்ததாக அப்பாடல் குறிப்பிடுகிறது.
நீடு நிலை அரைய செம் குழை இருப்பை
கோடு கடைந்து அன்ன கொள்ளை வான் பூ
ஆடு பரந்து அன்ன ஈனல் எண்கின்
தோடு சினை உரீஇ உண்ட மிச்சில்
பைம் குழை தழையர் பழையர் மகளிர்
கண் திரள் நீள் அமை கடிப்பின் தொகுத்து
குன்றக சிறுகுடி மறுகு-தொறும் மறுகும் – அகம் 331/1-7
நீண்ட நிலையாகிய அடிமரத்தினையுடைய சிவந்த தளிர்களையுடைய இருப்பை மரங்களின்
தந்தத்தினைக் கடைந்தாற்போன்ற மிகுதியான வெள்ளிய பூக்களில்
ஆடுகள் பரந்தால் ஒத்த ஈன்ற பெண்கரடிகளின்
கூட்டம், கிளைகளில் பரந்து சென்று உண்ட மிச்சிலாயவற்றை
பசிய தளிர்களாலாய தழையுடையராகிய எயினர் மகளிர்
கணுக்கள் திரண்டு நீண்ட மூங்கில் குழாயில் திரட்டி
குன்றின் கண்ணவாகிய சீறூரின் தெருக்கள்தோறும் சுழன்று விற்றுத்திரியும்
|
பழையோள் |
பழையோள் – (பெ) ஆதி இல்லாதவள், most ancient mlady
இழை அணி சிறப்பின் பழையோள் குழவி – திரு 259
பூண் அணிந்த தலைமையினையுடைய காடுகிழாளின் மகனே,
முருகன் இவ்வாறு பழையோள் குழவி என்று வருணிக்கப்படுகிறான். ”காடுகிழாள் என்பது இக்காலத்துக்
காடுகாள் என மருவிற்று. அவளும் இறைவனுடைய சத்தியாதலின் அவளுடைய குழவி என்றார்” என்பார்
நச்சினார்க்கினியர்.
|
பவத்திரி |
பவத்திரி – (பெ) ஓர் ஊர், the name of a place
செல்லா நல் இசை பொலம் பூண் திரையன்
பல் பூ கானல் பவத்திரி அன இவள்
நல் எழில் இள நலம் தொலைய – அகம் 340/6-8
என்றும் கெடாத நல்ல கீர்த்தியினையும் பொற்பூணினையுமுடைய திரையன் என்பானது
பல பூக்களையுடைய சோலையினையுடைய பவத்திரி என்னும் ஊர் போன்ற இவள்
தனது நல்ல அழகு வாய்ந்த இலமைச் செவ்வி தொலையுமாறு.
சங்ககாலத்தில் தொண்டை நாட்டில் இருந்த ஊர் பவத்திரி.
அக்காலத்தில் அதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசன் பொலம்பூண் திரையன்.
இந்த ஊர் ‘பல்பூங் கானல்’ எனச் சிறப்பிக்கப்படுவதால் கானல் இருக்கும் கடற்கரைப் பகுதியில் இருந்தது
என்பது தெளிவாகிறது. தலைவியின் அழகு இந்த ஊர்போல் பொலிவுடன் திகழ்ந்தது எனப் பாடல் கூறுவதால்
இந்த ஊரின் அழகை உணரமுடிகிறது
|
பவர் |
பவர் – (பெ) 1. நெருக்கம், denseness, thickness
2. படர்ந்து பரவியிருத்தல், pervasiveness
3. அடர்ந்த கொடி, dense clustered creeper
1.
அரில் பவர் பிரம்பின் வரி புற நீர்நாய் – குறு 364/1
இறுகப் பின்னிய நெருக்கமான கொடிப்பிரம்பினைப் போல் வரிவரியான முதுகினைக் கொண்ட நீர்நாய்
2.
தாளி தண் பவர் நாள் ஆ மேயும் – குறு 104/3
தாளிப் புல்லின் குளிர்ந்த படர்கொடியைக் காலையில் பசுக்கள் மேயும்
3.
குறுவிழி கண்ண கூரல் அம் குறு முயல்
——————— ———————–
குடந்தை அம் செவிய கோள் பவர் ஒடுங்கி – அகம் 284/2-4
குறிய விழி பொருந்திய கண்களையும் கூரிய மயிரினையுமுடைய குறிய முயல்கள்
—————— —————————-
வளைந்த அழகிய செவியினவாகிய காய்களைக் கொண்ட அடர்ந்த கொடிகளுட் புகுந்து கிடந்து உறங்கி
|
பவளம் |
பவளம் – (பெ) நவமணிகளுள் ஒன்று, பவழம், red coral
தோடு தலை வாங்கிய நீடு குரல் பைம் தினை
பவள செம் வாய் பைம் கிளி கவரும் – நற் 317/3,4
தோகை நுனி பிரிந்து வளைந்த நீண்ட கதிர்களையுடைய பசிய தினையைப்
பவளம் போன்ற சிவந்த வாயையுடைய பச்சைக் கிளிகள் கவர்ந்துண்ணும்
|
பவழம் |
பவழம் – (பெ) பவளம், red coral
பைம் நனை அவரை பவழம் கோப்பவும் – சிறு 164
பசிய அரும்புகளையுடைய அவரை பவழம்(போல் பூக்களை முறையே) தொடுக்கவும்,
|
பவ்வம் |
பவ்வம் – (பெ) கடல், sea, ocean
பவ்வ மீமிசை பகல் கதிர் பரப்பி – பொரு 135
கடல் மேற்பரப்பு முழுக்கப் பகலைச் செய்யும் தன் கதிர்களைப் பரப்பி,
|
பா |
பா – (பெ) 1. பரப்பு, expanse, பரவுதல், spreading out
2. நெசவுப்பா, பாவு நூல், warp
1.
பருவ வானத்து பா மழை கடுப்ப – பெரும் 190
மாரிக்காலத்து விசும்பிடத்தே பரவிய முகிலை ஒப்ப
பா அமை இதணம் ஏறி பாசினம்
வணர் குரல் சிறுதினை கடிய – நற் 373/7,8
பரப்பு அமைந்த பரண் மீது ஏறி, பச்சைக் கிளிகளின் கூட்டத்தை
வளைந்த கதிர்களைக் கொண்ட சிறுதினையில் படியாதவாறு ஓட்டுவதற்கு
படு மணி இரட்டும் பா அடி பணை தாள்
நெடு நல் யானையும் தேரும் மாவும் – புறம் 72/3,4
ஒலிக்கும் மணி இரு மருங்கும் ஒன்றோடொன்று மாறி இசைக்கும் பரந்த அடியினையும் பெரிய காலினையுமுடைய
உயர்ந்த நல்ல யானையினையும்தேரையும் குதிரையையும்
2.
துகில் ஆய் செய்கை பா விரிந்து அன்ன – அகம் 293/4
ஆடை ஆய்ந்து நெய்யுங்கால் பாவானது விரிந்தது போல
|
பாஅய் |
பாஅய் – (வி) 1. பரப்பு, get spread
2. பரவு, spead
1.
சுடர் பூ கொன்றை தாஅய நீழல்
பாஅய் அன்ன பாறை அணிந்து – மது 277,278
ஒளிவிடும் பூக்களுடைய கொன்றை பரந்த நிழலில்,
பரப்பினாற் போன்ற பாறை அழகுபெற்று,
செல்லிய முயலி பாஅய சிறகர்
வாவல் – ஐங் 378/1,2
பறந்து செல்வதற்கு முயன்று விரித்துப் பரப்பிய சிறகினையுடைய
வௌவால்
2.
மா கடல் முகந்து மணி நிறத்து அருவி
தாழ் நீர் நனம் தலை அழுந்துபட பாஅய் – நற் 112/6,7
கரிய கடலின் நீரை முகந்துகொண்டு, நீலமணியின் நிறத்தைக் கொண்ட அருவியிலிருந்து
கீழே விழும் நீர் அகன்ற இடமெல்லாம் புதைபடுமாறு பரவி,
அம் கலுழ் மேனி பாஅய பசப்பே – குறு 143/7
அழகு ஒழுகும் மேனியில் பரவிய பசலைநோய்
|
பாஅர் |
பாஅர் – (பெ) பாறை, rock
சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபய
பாஅர் மலி சிறு கூவலின் தணியும் – நற் 41/3,4
காட்டுவழியின் தொடக்கத்தில் வருந்திய வருத்தம் மெல்ல மெல்ல
பாறைகள் மலிந்த சிறிய கிணற்று நீரில் தணிந்திட,
|
பாஅல் |
பாஅல் – (பெ) 1. பக்கம், side
2. கவர்ந்துகொள்ளுதல், seizing
3. பகுதி, உறுப்பு, part
4. தாய் முலையிலிருந்து சுரக்கும் வெண்மையான திரவம், milk
1.
இரு மருப்பு எருமை ஈன்றணி காரான்
உழவன் யாத்த குழவியின் அகலாது
பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன் – குறு 181/3-5
பெரிய கொம்பினையுடைய எருமையாகிய அண்மையில் ஈன்ற கரிய பெண்ணெருமை
உழவனால் கட்டப்பட்டுள்ள தன் கன்றைவிட்டு அகலாமல்
பக்கத்தேயுள்ள பசிய பயிர்களை மேயும் ஊரையுடைய நம் தலைவனின்
2.
முழா இமிழ் துணங்கைக்கு தழூஉ புணை ஆக
சிலைப்பு வல் ஏற்றின் தலைக்கை தந்து நீ
நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகி
—————————- ———————————-
கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று நின்
எறியர் ஓக்கிய சிறு செங்குவளை
ஈ என இரப்பவும் ஒல்லாள் நீ எமக்கு
யாரையோ என பெயர்வோள் கையதை
கதுமென உருத்த நோக்கமோடு அது நீ
பாஅல் வல்லாய் ஆயினை பாஅல்
யாங்கு வல்லுநையோ வாழ்க நின் கண்ணி – பதி 52/14-27
முழவு ஒலிக்கும் துணங்கைக் கூத்தில் தழுவியாடுவோருக்குத் துணையாக,
முழங்குகின்ற வலிமையான காளையினைப் போல, முதல்கை கொடுத்து, நீ
பெண்களுடன் நெருக்கமாக நின்று சுற்றிவருவதைக் கண்டு, ஊடல்கொண்டவளாய்,
————————- —————————————
கரையை இடிக்கும் காட்டாற்று வெள்ளத்தில் நடுங்கும் தளிரைப் போல, கோபத்தால் மேனி நடுங்க நின்று, உன்மீது
எறிவதற்காக ஓங்கிய சிறிய செங்குவளை மலரை,
எனக்குத் தா என்று இரு கை நீட்டி வேண்டவும், சினம் குறையாதவளாய், நீ எமக்கு
இனி யாரோ? என்று அந்த இடத்தை விட்டு நீங்கிச் செல்பவளின் கையினில் இருந்த குவளை மலரைச்
சட்டென்று வெகுண்ட பார்வையுடன் அதனை நீ
கவர்ந்துகொள்ளுவதற்கு இயலாதவனாய் ஆகிவிட்டாய்; ஆனால் (பகைவர் மதில்களைக்) கவர்ந்துகொள்ள
எவ்வாறு உன்னால் முடிந்தது? வாழ்க! உன் தலைமாலை!
3.
பாஅல் அம் செவி பணை தாள் மா நிரை
மாஅல் யானையொடு மறவர் மயங்கி – கலி 5/1,2
பெரிய உறுப்புக்களாகிய அழகிய செவிகளையும், பருத்த கால்களையும் உடைய விலங்குக் கூட்டமான
மதம்பிடித்து மயங்கித்திரியும் யானைகளோடு, பாலைநில வேட்டுவர்களும் நெருக்கமாகத் திரிதலால்
4.
பாஅல் புளிப்பினும் பகல் இருளினும் – புறம் 2/17
பால் தன் இனிமை ஒழிந்து புளிப்பினும், ஞாயிறு தன் விளக்கம் ஒழிந்து இருளினும்
|
பாகன் |
பாகன் – (பெ) 1. தேர்ப்பாகன், charioteer
2. விலங்கின் மீது ஊர்பவன், a rider on an animal
3. யானைப்பாகன், elephant rider, mahout
1.
இன மணி நெடும் தேர் பாகன் இயக்க – நற் 19/6
வரிசையான மணிகள் கொண்ட நெடிய தேரினை அதன் பாகன் இயக்க
2.
செல் விடை பாகன் திரிபுரம் செற்று_உழி – பரி 23/82
விரைந்து செல்லும் எருதாகிய ஊர்தியையுடையோன் முப்புரத்தை அழித்தபோது
3.
பெரும் களிறு இழந்த பைதல் பாகன் – புறம் 220/2
பெரிய களிற்றை இழந்த வருத்தத்தினையுடைய பாகன்
|
பாகம் |
பாகம் – (பெ) சமையல், உணவு, cooking, cooked food
மாதிரம் அழல எய்து அமரர் வேள்வி
பாகம் உண்ட பைம் கண் பார்ப்பான் – பரி 5/27
திக்கெல்லாம் பற்றியெரியும்படியும் எய்து, அமரர்கள் எழுப்பிய வேள்வியின்
அவியுணவை உண்ட பசிய கண்ணையுடைய சிவபெருமான்
|
பாகர் |
பாகர் – (பெ) 1. (யானைப்)பாகன் என்பதன் பன்மை, elephant drivers, mahouts
2. குழம்பு, thickened broth, thick liquid
3. பாகு, Treacle, sweet syrup
4. தேர், car
1.
நெடும் சுழி பட்ட கடுங்கண் வேழத்து
உரவு சினம் தணித்து பெரு வெளில் பிணிமார்
விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை – மலை 325-327
பெரிய நீர்ச்சுழலில் அகப்பட்ட கொடுங்குணமுள்ள யானையின்
மிகுகின்ற சினத்தைத் தணித்து, பெரிய கம்பங்களில் கட்டுவதற்கு,
(விலங்குமொழி கலந்த)கலப்பு மொழியால் பழக்கும் யானைப்பாகருடைய ஆரவாரமும்
2.
தான் துழந்து அட்ட தீம் புளி பாகர்
இனிது என கணவன் உண்டலின் – குறு 167/4,5
தானே முயன்று துழாவிச் சமைத்த சுவையான புளித்த மோர்க்குழம்பினை
“இனிது” என்று கணவன் உண்டலின்
3.
பாகர் இறை வழை மது நுகர்பு- பரி 11/66
பாகு தங்கிய இளம் கள்ளைப் பருகி
4.
ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடை பாகரொடு – சிறு 258
ஏறிப் பார்த்து (நல்லதெனக்கண்ட)பெயர்பெற்ற, அழகிய நடையை உடைய தேரோடு,
|
பாகல் |
பாகல் – (பெ) 1. கசப்புச்சுவைக் காய், அதையுடைய ஒருவகைக் கொடி, bitter gourd creeper
2. பலா, jackfruit tree
1.
பாகல் ஆய் கொடி பகன்றையொடு பரீஇ – அகம் 156/5
பாகலின் சிறந்த கொடியைப் பகன்றைக் கொடியுடன் அறுத்து
2.
பைம் பாகல் பழம் துணரிய
செம் சுளைய கனி மாந்தி – பொரு 191,192
பசிய பாகலான பலாப்பழத்தினுள் கொத்தாகவுள்ள,
சிவந்த சுளைகளைக் கொண்ட பழத்தைத் தின்று
|
பாகு |
பாகு – (பெ) 1. காய்ச்சிய கரும்புச்சாறு,பதநீர் அல்லது வெல்லம், treacle, sweet syrup
2. பாக்கு, areca nut
3. பகுதி, portion
1.
பாலின் பெய்தவும் பாகின் கொண்டவும் – புறம் 381/2
பால் கலந்து செய்தனவும், வெல்லப்பாகு கொண்டு செய்தனவுமாகிய பண்ணியங்களை
2.
வால் அரிசி பலி சிதறி
பாகு உகுத்த பசு மெழுக்கின்
காழ் ஊன்றிய கவி கிடுகின்
மேல் ஊன்றிய துகில் கொடியும் – பட் 165-168
வெண்மையான அரிசியையும் பலியாகத் தூவி,
பாக்கு(வெற்றிலை) சொரிந்த, புது மெழுக்கினையுடைய,
கால்கள் நட்டு (அதன் மேல்)வைத்த கவிந்த மேற்கூரையின்
மேலே நட்டுவைத்த (வீர வணக்க)துகில் கொடிகளும்
3.
பாழ் என கால் என பாகு என ஒன்று என – பரி 3/77
பாழ் என்ற புருடதத்துவமும், கால் என்ற ஐந்து பூதங்களும், பாகு என்ற தொழிற்கருவிகள் ஐந்தும்,
ஒன்றாவதான ஓசையும்
(பாழ் = 0, zero ; கால் = 1/4, quarter; பாகு = 1/2, half)
|
பாகுடி |
பாகுடி – (பெ) வெகுதூரம், long distance
நீர் அறல் மருங்கு வழிப்படா பாகுடி
பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா – பதி 21/26,27
நீர் ஒழுகும் பக்கத்தில் செல்லாமல், நீண்ட தொலைவிலிருந்து
உன்னிப்பாகப் பார்க்கும் கொக்கின் விரைவான கொத்தலுக்கு அஞ்சாத
|
பாக்கம் |
பாக்கம் – (பெ) 1. கடற்கரை சார்ந்த ஊர், coastal village
2. ஊர், village
1.
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென
நெடும் தேர் பண்ணி வரல் ஆனாதே – நற் 207/3,4
நிறைய மீன்களைக் கொள்பவர்கள் வசிக்கும் பாக்கம் முழுதும் ஆரவாரிக்க,
நெடிய தேரினைச் செய்துகொண்டு நம் காதலர் வருவது தடுக்கப்படமுடியாதது;
2.
நீ சிவந்து இறுத்த நீர் அழி பாக்கம்
விரி பூ கரும்பின் கழனி புல்லென – பதி 13/12,13
நீ வெகுண்டு முற்றுகையிட்டுத் தங்கிய, தம் சிறப்பு அழிக்கபெற்ற பேரூர்கள் –
விரிந்த பூக்களைக் கொண்ட கரும்பு வயல்கள் புல்லென்று தோன்ற,
|
பாங்கர் |
பாங்கர் – (பெ) 1. உகா, ஓமை, Tooth-brush tree, s. tr., Salvadora persica
2. பக்கம், அணிமை, side, neighbourhood
3. தோழமையுள்ளவர், companion
1.
பாங்கர் மராஅம் பல் பூ தணக்கம் – குறி 85
ஓமை, மரவம்பூ, பல பூக்களையுடைய தணக்கம்பூ,
குல்லையும் குருந்தும் கோடலும் பாங்கரும்
கல்லவும் கடத்தவும் கமழ் கண்ணி மலைந்தனர் – கலி 103/3,4
கஞ்சங்குல்லைப் பூவும், குருந்தம்பூவும், செங்காந்தளும், பாங்கர்ப்பூவும் ஆகிய
மலையிலுள்ளவையும், காட்டிலுள்ளவையும் உள்ள மலர்கள் கொண்டு கட்டிய பூச்சரங்களைச் சூடியவராய்,
2.
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து
பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர்
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில – நற் 186/5-7
வேனில்காலத்து பச்சோந்தியின், தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் முதிய ஆணானது
பாணர்கள் யாழினை இசைக்க, அதனைக் கேட்டு, அருகிலிருக்கும்
நெடியதாய் நிற்கும் யா மரத்தில் ஏறும் தொழிலையுடையது –
தடாகம் ஏற்ற தண் சுனை பாங்கர்
படாகை நின்றன்று – பரி 9/77,78
தடாகத்தைப் போன்ற குளிர்ந்த சுனையின் பக்கத்தில்
கொடி உயர்ந்து நின்றது;
3.
பதிவத_மாதர் பரத்தையர் பாங்கர்
அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாள
விதி கூட்டிய இய மென் நடை போல – பரி 10/23-25
பதிவிரதம் இருக்கும் கற்புடைய மகளிரும், பரத்தையரும், அவருக்குத் தோழியரும்,
அதிரும் குரலையுடைய, இசைவல்லுநர்கள் ஆக்கிய தாள
விதியால் கூட்டப்பட்ட, பல்வேறு இசைக்கருவிகளின் இசையும் மென்மையான நடையில் சென்றாற்போல
|
பாங்கு |
பாங்கு – (பெ) 1. அழகு, beauty, fairness
2. இடம், place, location
3. பக்கம், அணிமை, side, neighbourhood
4. இணக்கம், agreeableness
5. நலம், நன்மை, goodness
1.
பனி துறை பகன்றை பாங்கு உடை தெரியல் – பதி 76/12
குளிர்ந்த நீர்த்துறையில் மலர்ந்துள்ள பகன்றை மலரால் தொடுத்த அழகான மாலையை
2.
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன – கலி 11/21
பல்லியும் நல்ல இடத்தில் இருந்து ஒலித்து நல்வாக்குச் சொல்கிறது;
3.
பாங்கு அரும் கானத்து ஒளித்தேன் – கலி 115/15
பக்கத்திலுள்ள அழகான பூஞ்சோலைக்குள் ஓடி ஒளிந்துகொண்டேன்
4.
ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம்
மட பிடி கண்டு வய கரி மால்_உற்று – பரி 10/41,42
அவ்விடத்தில், அழகிய நீரணிமாடத்தின் அருகாமையில் நின்ற இணக்கமான
இளைய பெண்யானையைக் கண்டு, இளங்களிறு ஒன்று மையல்கொண்டு,
5.
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின – அகம் 141/3
புனையப்பெற்ற தொழில்களையுடைய நல்ல மனையிலே புள் நிமித்தங்கள் நல்லனவாகின்றன.
|
பாசடகு |
பாசடகு – (பெ) பச்சை இலை, வெற்றிலை-பாக்கு, green leaf, betel leaf – arecanut
பாசடகு மிசையார் பனி நீர் மூழ்கார் – புறம் 62/14
பச்சை இலையைத் தின்னாராய், குளிர்ந்த நீரின்கண் மூழ்காராய்
|
பாசடும்பு |
பாசடும்பு – (பெ) பசிய அடும்பு, green hareleaf
ஏர் கொடி பாசடும்பு பரிய ஊர்பு இழிபு – ஐங் 101/2
அழகிய கொடிகளையுடைய பசுமையான அடும்பு அற்றுப்போகும்படி ஏறி இறங்கி
பார்க்க: அடும்பு
|
பாசடை |
பாசடை – (பெ) பசிய இலை, green leaf
பாசடை நிவந்த கணை கால் நெய்தல் – குறு 9/4
பசிய இலைகளுக்கு மேல் உயர்ந்த திரண்ட காம்பையுடைய நெய்தல்பூ
|
பாசம் |
பாசம் – (பெ) 1. கயிறு, rope, cord
2. பேய், demon, vampire
1.
பாசம் தின்ற தேய் கால் மத்தம் – நற் 12/2
தயிறு கடையும் கயிறு உராய்வதால் தேய்வுற்ற தண்டினையுடைய மத்தின்
2.
பலி கொண்டு பெயரும் பாசம் போல – பதி 71/23
பலியுணவை மட்டும் எடுத்துக்கொண்டு செல்லும் பேய் போல,
|
பாசரும்பு |
பாசரும்பு – (பெ) இளம் மொட்டு, young tender flower bud
குளன் அணி தாமரை பாசரும்பு ஏய்க்கும் – கலி 22/15
குளத்திற்கு அழகுசெய்யும் தாமரையின் இளம் மொட்டைப் போன்ற
|
பாசறை |
பாசறை – (பெ) பகைமேற்சென்ற படை தங்குமிடம், warcamp
பருந்து பறக்கல்லா பார்வல் பாசறை
படு கண் முரசம் காலை இயம்ப – மது 231,232
பருந்துகளும் பறக்கமுடியாத பார்வையைக் கொண்ட பாசறைகளில்
ஒலிக்கின்ற கண்ணையுடைய முரசுகள் காலையில் ஒலிப்ப
|
பாசவர் |
பாசவர் – (பெ) இறைச்சி விற்போர், dealers in meat
விருந்து கண்மாறாது உணீஇய பாசவர்
ஊனத்து அழித்த வால் நிண கொழும் குறை – பதி 21/9,10
விருந்தினர் வேறு இடங்களுக்கு மாறிப்போகாமல் உண்ணவேண்டியும், இறைச்சி விற்போர்
இறைச்சி கொத்தும் பட்டைமரத்தில் வைத்துக் கொத்திய வெள்ளை நிற நிணத்தோடு சேர்ந்த கொழுத்த இறைச்சியை
|
பாசவல் |
பாசவல் – (பெ) 1. பசிய அவல், பச்சை அவல், A preparation of rice obtained by pestling fresh paddy;
2. பசிய விளைநிலம், green field
1.
பாசவல் இடித்த கரும் காழ் உலக்கை – குறு 238/1
பச்சை அவலை இடித்த கரிய வைரம்பாய்ந்த உலக்கைகளை
பாசவல் – நெல்லை வறுத்து இடிக்காமல் பச்சையாக இடித்து இயற்றிய அவல் – பொ.வே.சோ – உரை விளக்கம்
2.
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து – புறம் 6/14
பசிய விளைநிலப் பக்கத்தையுடைய அரிய மதிலரண் பலவற்றையும் கொண்டு
|
பாசி |
பாசி – (பெ) 1. நீர்ப்பாசி, moss, duckweed
2. கிழக்கு, east
1.
வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி
அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய – மலை 221,222
வழுவழுப்பான மெல்லிய ஏட்டால் (கீழுள்ள)தரையை மறைக்கும் நுண்ணிய தன்மையுள்ள பாசி
(ஊன்றிய)காலின் உறுதியைக் குலைக்கும் (=வழுக்கும்) வழுக்குநிலங்களும் உள்ளன,
2.
பாசி செல்லாது ஊசி துன்னாது – புறம் 229/9
கிழக்குத்திசையில் போகாது, வட திசையில் செல்லாது
|
பாசினம் |
பாசினம் – (பெ) கிளிக்கூட்டம், flock of parrots
பா அமை இதணம் ஏறி பாசினம்
வணர் குரல் சிறுதினை கடிய – நற் 373/7,8
பரப்பு அமைந்த பரண் மீது ஏறி, பச்சைக் கிளிகளின் கூட்டத்தை
வளைந்த கதிர்களைக் கொண்ட சிறுதினையில் படியாதவாறு ஓட்டுவதற்கு
|
பாசிலை |
பாசிலை – (பெ) பசிய இலை, green leaf
பாசிலை ஒழித்த பராஅரை பாதிரி – பெரும் 4
பசிய இலைகளை உதிர்த்த பெருத்த அடிமரத்தையுடைய பாதிரியின்
|
பாசிழை |
பாசிழை – (பெ) 1. புதிய அணிகலன், fresh jewels
ஆய் பொன் அவிர் தொடி பாசிழை மகளிர் – மது 579
ஆராய்ந்த பொன்னாலான ஒளிரும் தொடியினையும் பசிய(புதிய) அணியையும் (உடைய)மகளிர்
|
பாசுவல் |
பாசுவல் – (பெ) பசிய இலை,தழை, green foliage
பாசுவல் இட்ட புன் கால் பந்தர் – புறம் 262/2
பசிய தழையாலே வேயப்பட்ட புல்லிய காலையுடைய பந்தலின்கண்
|
பாடலி |
பாடலி – (பெ) பாடலிபுத்திரம் என்னும் பண்டைய நகரம், the ancient city of Pataliputra
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்
சீர் மிகு பாடலி குழீஇ கங்கை
நீர் முதல் கரந்த நிதியம்கொல்லோ – அகம் 265/4-6
பல்வகைப்புகழும் மிக்க போரினை வெல்லும் நந்தர் என்பாரது
சிறப்பு மிக்க பாடலிபுரத்திலே திரண்டிருந்து கங்கையின்
நீரின் அடியில் மறைவுற்ற செல்வமோ
|
பாடித்தை |
பாடித்தை – (ஏவல் வினைமுற்று) பாடு, sing
வேய் நரல் விடர்_அகம் நீ ஒன்று பாடித்தை – கலி 40/10
மூங்கில்கள் ஒலிக்கும் மலைப் பிளவுகள் கொண்ட அவனது மலையைப் பற்றிய பாட்டை நீ பின்னர் பாடு!
|
பாடினி |
பாடினி – (பெ) பாண்குல மகளிர், Songstress, woman of the PANar caste;
சென்மோ பாடினி நன் கலம் பெறுகுவை – பதி 87/1
செல்வாயாக பாண்மகளே! நல்ல அணிகலன்களைப் பெறுவாய்
|
பாடு |
பாடு – 1. (வி) 1. பாடலை இசையுடன் வெளிப்படுத்து, sing, chant
2. பறவை, வண்டு முதலியன இனிமையாக ஒலியெழுப்பு, warbleas birds, hum as bees
3. புகழ், பாராட்டு, praise, speak endearingly
– 2. (பெ) 1. ஒலி, ஓசை, sound, noise
2. பூசுதல், smearing
3. வருத்தம், துன்பம், hardship, suffering
4. பக்கம், side
5. பெருமை, உயர்வு, Dignity, honour, greatness, eminence
6. உலக ஒழுக்கம், Etiquette; conventional rules of social behaviour
7. தூக்கம், sleep
8. அனுபவம், Experience; endurance; feeling; bearing
9. விழுதல், fall
10. படுக்கை நிலை, Recumbency, lying prostrate;
11. கேடு, Ruin, injury, damage, disaster, detriment;
12. கூறு, division
13. பாடுதல், singing
14. நிகழ்தல், occcurrence, happening
1.1
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி
கூடு கொள் இன் இயம் – சிறு 228,229
பாடும் துறைகளெல்லாம் முடியப் பாடுதற்கு, பயன் விளங்குகின்ற இசைகளைத்
சுதிசேர்த்தல் கொண்ட இனிய யாழை
1.2
தன் பாடிய தளி உணவின்
புள் தேம்ப புயல் மாறி – பட் 3,4
தன்னை(மேகத்தை)ப் பாடிய, நீர்த்துளியையே உணவாகக்கொண்ட
வானம்பாடி வருந்த மழை பெய்யாமற்போக
1.3
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு – நற் 373/3,4
முகில் தவழும் பெரிய மலையைப் புகழ்ந்து பாடியவளாய்க் குறமகள்
ஐவனம் என்னும் மலைநெல்லைக் குற்றும் நாட்டைச் சேர்ந்த தலைவனோடு
2.1
ஒரு கை
பாடு இன் படு மணி இரட்ட – திரு 114,115
ஒரு கை
ஓசை இனிதாக ஒலிக்கின்ற மணியை மாறி மாறி ஒலிக்கப்பண்ண
பாடு இன் தெண் கிணை பாடு கேட்டு அஞ்சி – அகம் 226/15
ஓசை இனிய தெளிந்த கிணையினது ஒலியைக் கேட்டு அவனது பெருமையை உணர்ந்து அஞ்சி
2.2
பாடு புலர்ந்த நறும் சாந்தின் – மது 226
பூசினபடியே புலர்ந்த நறிய சந்தனத்தையுமுடைய
2.3
வேனில் ஓதி பாடு நடை வழலை – நற் 92/2
வேனிற்காலத்து ஓந்தியின் வருத்தமான நடையைக்கொண்ட ஆண் ஓந்தி
2.4
கழை பாடு இரங்க பல் இயம் கறங்க
ஆடு_மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று – நற் 95/1,2
குழல்கள் பக்கத்தே இசைக்க, பலவகை இன்னிசைக் கருவிகள் முழங்க,
ஆட்டக்காரியான கழைக்கூத்தி நடந்த வளைந்த முறுக்கேறிய வலிய கயிற்றில்
2.5
யாணர் ஊர நின் மாண் இழை மகளிரை
எம் மனை தந்து நீ தழீஇயினும் அவர்_தம்
புன் மனத்து உண்மையோ அரிதே அவரும்
பைம் தொடி மகளிரொடு சிறுவர் பயந்து
நன்றி சான்ற கற்பொடு
எம் பாடு ஆதல் அதனினும் அரிதே – நற் 330/6-11
புதிய வருவாயையுடைய ஊரினைச் சேர்ந்தவனே! உன்னுடைய மாண்புமிக்க அணிகலன்களை அணிந்த மகளிரை
எம்முடைய வீட்டுக்கே அழைத்து வந்து நீ அவருடன் கூடியிருந்தாலும், அவர்களின்
புல்லிய மனத்தில் இடம்பிடித்திருப்பது அரிது, அந்த மகளிரும்
பசிய தொடியணிந்த புதல்வியரொடு, புதல்வரையும் பெற்றுத்தந்து
நன்மை மிகுந்த கற்போடு
எம்மைப்போல் குலமகளிரின் பெருமையை அடைதல் அதனினும் அரிது.
2.6
நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும்
பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும்
நும்மினும் அறிகுவென்-மன்னே – நற் 160/1-3
நடுவுநிலைமை, நட்பைப் போற்றல், நாணவுணர்வு நன்றாக உடைமை,
ஈத்து உவத்தல், நற்பண்பு, உலகவழக்கை அறிந்து ஒழுகுதல் ஆகிய நற்குணங்களை
உன்னைக்காட்டிலும் நன்கு அறிவேன் உறுதியாக
2.7
நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்
சாதலும் இனிதே – நற் 327/1-3
நம்மை விரும்பி வந்த சான்றோரான நம் தலைவரை நம்புதல் பழியைத் தருமென்றால்,
உறக்கமில்லாதனவாய்க் கண்ணீர் சொரியும் கண்களோடு மெலிவுற்று
இறந்துபோதலும் நமக்கு இனிதாகும்
2.8
கடும் சுறா எறிந்த கொடும் தாள் தந்தை
புள் இமிழ் பெரும் கடல் கொள்ளான் சென்று என
மனை அழுது ஒழிந்த புன் தலை சிறாஅர்
துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின்
பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும் – நற் 392/1-5
கொடிய சுறாமினை எறிந்து கொன்ற கடிய முயற்சியைக் கொண்ட தந்தை
பறவைகள் ஒலிக்கும் பெரிய கடலுக்குக் கூட்டிச் செல்லாமல் சென்றுவிட்டான் என்று
வீட்டில் அழுது ஓய்ந்த புல்லிய தலையை உடைய சிறுவர்கள்
கூட்டாக முயன்று பெற்ற இனிய கண்ணையுடைய நுங்கைத்
தாயின் பருத்த கதகதப்பான கொங்கையை உண்ணுவதுபோலச் சுவைத்து உண்டு மகிழும்
2.9
மயில் அடி இலைய மா குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே – குறு 138/3-5
மயிலின் அடியைப் போன்ற இலையையுடைய கரிய பூங்கொத்துக்களையுடைய நொச்சியின்
அழகுமிக்க மெல்லிய கிளைகளில் மலர்ந்த
நீல மணி போன்ற பூக்கள் உதிர்வதால் உண்டாகும் ஓசையை மிகவும் கேட்டு
2.10
அவரே கேடு இல் விழு பொருள் தரும்-மார் பாசிலை
வாடா வள்ளி அம் காடு இறந்தோரே
யானே தோடு ஆர் எல் வளை ஞெகிழ நாளும்
பாடு அமை சேக்கையில் படர் கூர்ந்திசினே – குறு 216/1-4
தலைவர், கேடில்லாத சிறந்த பொருளைக் கொணருவதற்காக, பசிய இலைகளையுடைய
வாடாத வள்ளிக்கொடி படர்ந்த அழகிய காட்டைக் கடந்துசென்றார்;
நானோ, தொகுதியான ஒளியையுடைய வளையல்கள் நெகிழ்ந்துவீழ, ஒவ்வொருநாளும்
படுத்தலுக்குரிய கட்டிலில் வருத்தமுற்று இருக்கிறேன்;
2.11
பாடு ஏற்று கொள்பவர் பாய்ந்து மேல் ஊர்பவர் – கலி 104/55
ஏறுகளின் குத்துக்களைத் தாங்கிக்கொள்பவரும், அவற்றின் மேல் பாய்ந்து ஏறிக்கொள்பவரும்
ஆடு_உறு குழிசி பாடு இன்று தூக்கி – புறம் 371/6
சமைத்தற்கு அமைந்த பானையைக் கெடாதபடி மெல்ல எடுத்துவைத்து
2.12
கடல் பாடு அழிய இன மீன் முகந்து
——————- ——————————-
இரந்தோர் வறும் கலம் மல்க வீசி
பாடு பல அமைத்து கொள்ளை சாற்றி – அகம் 30/2-10
கடலின் பெருமை அழிய மீன்களை முகந்து
——————- ——————————-
இரப்போரின் வெறும் கலன்களில் நிறையச் சொரிந்து
பல கூறுகளாகச் செய்து தாம் கொண்டவற்றை விலைகூறி விற்று
2.13
ஒள் இழை
பாடு வல் விறலியர் கோதையும் புனைக – புறம் 172/2,3
விளங்கிய அணிகலத்தையுடைய
பாடுதல் வல்ல விறலியர் மாலையும் சூடுக
2.14
பாஅல் இன்மையின் பல் பாடு சுவைத்து
முலைக்கோள் மறந்த புதல்வனொடு – புறம் 211/20,21
பால் இல்லாமையால் பல முறை சுவைத்து
முலையுண்டலை வெறுத்த பிள்ளையுடனே
|
பாடுகம் |
பாடுகம் – (வி.மு) பாடுவோம், let us sing or praise
பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே – புறம் 393/25
பெருமை பொருந்திய நின் வலிய தாளைப் பலபடியும் பாடுவோம்
|
பாடுகோ |
பாடுகோ – (வி.மு) பாடுவேனோ, won’t I sing?
என்னானும் பாடு எனில் பாடவும் வல்லேன் சிறிது ஆங்கே
ஆடு எனில் ஆடலும் ஆற்றுகேன் பாடுகோ
என் உள் இடும்பை தணிக்கும் மருந்தாக
நன்_நுதல் ஈத்த இ மா – கலி 140/13-16
பாடு என்று நீங்கள் சொன்னால், எப்படியாயினும் என்னால் பாட முடியும், இங்கேயே சிறிது
ஆடு என்று சொன்னால் சிறிது ஆடவும் செய்வேன், பாடுவேனோ,
உன் உள்ளத்தில் இருக்கும் காமநோயைத் தணிக்கும் மருந்தாக
அந்த அழகிய நெற்றியையுடையவள் எனக்குத் தந்த இந்த மடல்மாவை;
|
பாடுதும் |
பாடுதும் – (வி.மு) பாடுவோம், we shall sing
அவன் பாடுதும் அவன் தாள் வாழிய என – புறம் 382/7
அவனையே பாடுவோம், அவனது முயர்சியால் நடைபெறும் அர்சியல் வாழ்வதாக என்று
|
பாடுநர் |
பாடுநர் – (பெ) பாடுபவர், those who sing
இனி பாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை – புறம் 235/17
இனிமேல் பாடுவாரும் இல்லை, பாடுவார்க்கு ஒன்று ஈவாரும் இல்லை
|
பாடுவல் |
பாடுவல் – (வி.மு) பாடுவேன், I will sing
பாடுவல் விறலி ஓர் வண்ணம் – புறம் 152/13
யான் பாடுவேன், விறலி, ஒரு வண்ணம்
|
பாடுவி |
பாடுவி – (பெ) பாடுபவள், one who sings
இஃது ஒன்று என் ஒத்து காண்க பிறரும் இவற்கு என்னும்
தன் நலம் பாடுவி தந்தாளா நின்னை
இது தொடுக என்றவர் யார் – கலி 84/33-35
இதைப் பார்! இவனுக்கு நானும் ஒத்தவள்தான் என்று பிறரும் கண்டுகொள்க என்று
தற்பெருமை பீற்றிக்கொள்பவள் தந்தாளோ? உன்னை
இதனை அணிந்துகொள்ளச் சொன்னவர் யார்?
|
பாட்டம் |
பாட்டம் – (பெ) 1. மேகம், மழை, cloud, rain
2. தோட்டம், garden
1.
வேட்டம் பொய்யாது வலை_வளம் சிறப்ப
பாட்டம் பொய்யாது பரதவர் பகர – நற் 38/1,2
மீன்வேட்டை பொய்க்காமல், வலையினால் கிடைக்கும் வளம் சிறந்து விளங்க,
மழை காலம் தப்பாமையால் பரதவர் விலைகூறி விற்க,
2.
பாங்கு அரும் பாட்டம்-கால் கன்றொடு செல்வேம்- கலி 116/1
பக்கத்தில் இருக்கும் உள்ளே எளிதில் போகமுடியாத தோட்டத்திற்குக் கன்றோடு செல்கின்றபோது
|
பாட்டி |
பாட்டி – (பெ) 1. பாணர் மகளிர், Woman of the class of strolling singers
2. பெற்றோரின் தாய், grandmother
1.
வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்கு பாட்டி
ஆம்பல் அகல் இலை அமலை வெம் சோறு
—————————————- ——————————-
விடியல் வைகறை இடூஉம் ஊர – அகம் 196/4-7
வேட்டம் போதலை மறந்து உறங்கிக்கிடக்கும் கணவன்மார்க்கு, அவரவர் மனைவியரான பாண் மகளிர்
ஆம்பலது அகன்ற இலையில் திரண்ட விருப்பம்தரும் சோற்றை
—————————— ——————
இருள் புலரும் விடியற்காலத்தே இடும் ஊரனே
பாணர் வருக பாட்டியர் வருக – மது 749
பாணர் வருவாராக, பாணிச்சியர் வருவாராக,
2.
மட நடை பாட்டியர் தப்பி தடை இறந்து
தாம் வேண்டும் பட்டினம் எய்தி – பரி 10/37,38
தளர்நடைப் பாட்டியரிடமிருந்து தப்பித்து, தடைகளை மீறிக் காதலரை எதிர்கொள்ள,
தாம் நினைக்கும் பட்டினத்தை நோக்கி வந்து
|
பாணர் |
பாணர் – (பெ) யாழ் முதலியவற்றை இசைத்துப்பாடும் குலத்தவர்,
An ancient class of Tamil bards and minstrels;
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர் – நற் 172/7,8
புதியதாய் வந்த பாணரின் மெல்லிய இசைப்பாட்டுப் போல
வலம்புரியாக வெண்சங்கு ஒலிக்கும் ஒளிர்கின்ற நீரையுடைய
பாணர் நரம்பினும் இன் கிளவியளே – ஐங் 100/4
பாணரின் யாழ்நரம்பு எழுப்பும் இசையிலும் இனிய சொற்களையுடையவள்.
பாணர் முல்லை பாட சுடர் இழை
வாள் நுதல் அரிவை முல்லை மலைய
இனிது இருந்தனனே நெடுந்தகை – ஐங் 408/1-3
பாணர்கள் முல்லைப் பண்ணை யாழில் வாசிக்க, ஒளிரும் அணிகலன்களைக் கொண்ட
ஒளிபொருந்திய நெற்றியையுடைய மனைவி முல்லை மலரைச் சூடியிருக்க,
இனிமையாக இருந்தான் நெடுந்தகையாளன்
|
பாணி |
பாணி – 1. (வி) 1. தாமதி, நிறுத்திவை, delay, stop for a while
2. தாமதப்படு, wait
– 2. (பெ) 1. சமயம், காலம், occassion, time
2. தாளம், measure of time in music
3. இசைப்பாட்டு, song, melody
4. கை, hand, arm
5. தாமதம், delay
6. செயற்பாங்கு, style, manner
1.1
என் பாணி நில் நில் எலாஅ பாணி நீ நின் சூள் – பரி 8/56
இது என்னுடைய சமயம்! கொஞ்சம் பொறு! ஏடா! நிறுத்திவை, நீ உன்னுடைய சூளுரைகளை!
1.2
சொல்லுக பாணியேம் என்றார் அறைக என்றார் பாரித்தார் – கலி 102/13
அந்த ஏறுதழுவலை நடத்தச் சொல்லுங்கள்; இனி காலம் தாழ்த்தமாட்டோம் என்றனர்;
பறையை முழக்குங்கள் என்றனர்; பரப்பினர்
2.1
என் பாணி நில் நில் எலாஅ பாணி நீ நின் சூள் – பரி 8/56
இது என்னுடைய சமயம்! கொஞ்சம் பொறு! ஏடா! நிறுத்திவை, நீ உன்னுடைய சூளுரைகளை!
2.2
ஒண் நுதல் விறலியர் பாணி தூங்க – பொரு 110
ஒளிவிடும் நெற்றியையுடைய விறலியர் தாளத்திற்கேற்ப ஆட
2.3
அரும் திறல் கடவுள் பழிச்சிய பின்றை
விருந்தின் பாணி கழிப்பி – மலை 538,539
அளவற்ற வலிமைகொண்ட கடவுளை வாழ்த்திய பின்னர்,
(உமக்கே உரித்தான)புதிய பாடல்களைப் பாடி
2.4
பாணி கொண்ட பல் கால் மெல் உறி
ஞெலி_கோல் கல பை அதளொடு சுருக்கி
பறி புறத்து இட்ட பால் நொடை இடையன் – நற் 142/2-4
கையில் கொண்ட பல கால்களைக் கொண்ட மென்மையான உறியுடன்,
தீக்கடைகோல் வைக்கும் பையினைத் தோலுடன் சுருட்டி,
பனையோலைப் பாயை முதுகுப்பக்கம் போட்டிருக்கும் பால் விற்கும் இடையனை
2.5
மாண் இழை நெடும் தேர் பாணி நிற்ப – அகம் 50/4
நன்கு அலங்கரிக்கப்பட்ட நீண்ட தேர் காத்துநிற்க
2.6
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல்
நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர்
சாறு கொள் ஆங்கண் விழவுக்களம் நந்தி
அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடுமகள்
கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல் – குறி 190-194
(நன்கு பழுத்து)கட்டு விட்டு உதிர்ந்த நறிய பழத்தில் உண்டான தெளிந்த கள்ளை
நீரென்று கருதிப் பருகிய மயில் — அகன்ற ஊர்களில்
விழாக் கொள்ளுதற்குரிய அவ்விடங்களில் விழாக்களத்தில் மிகுதியாக
அரித்தெழும் ஓசையைக் கூட்டி ஒலிக்கும் இனிய இசைக்கருவிகள் ஒலிக்க, (கழைக்கூத்து)ஆடுகின்ற பெண்
கயிற்றில் நடக்கும் செயற்பாங்கைப் போல் — தளர்ந்த நடை நடக்கும் மலைச்சாரல்களில்
|
பாண் |
பாண் – (பெ) பாணன்(ர்), an ancient class of bards and minstrels
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து
பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர்
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில – நற் 186/5-7
வேனில்காலத்து பச்சோந்தியின், தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் முதிய ஆணானது
பாணர்கள் யாழினை இசைக்க, அதனைக் கேட்டு, அருகிலிருக்கும்
நெடியதாய் நிற்கும் யா மரத்தில் ஏறும் தொழிலையுடையது –
|
பாண்டி |
பாண்டி – (பெ) 1. மாட்டுவண்டி, bullock cart
2. எருது, மாடு, bull
1.
அகவு அரும் பாண்டியும் அத்திரியும் ஆய் மா
சகடமும் தண்டு ஆர் சிவிகையும் பண்ணி – பரி 10/16,17
அதட்டி ஓட்டத் தேவையற்ற மாட்டுவண்டிகள், கோவேறு கழுதைகள், தெரிந்தெடுத்த குதிரைகள் பூட்டிய
வண்டிகள், தண்டு மரங்களோடு கூடிய பல்லக்குகள் ஆகியவற்றைத் தயார்செய்துகொண்டு
2.
திண் தேர் புரவி வங்கம் பூட்டவும்
வங்க பாண்டியில் திண் தேர் ஊரவும் – பரி 20/16,17
அவசரத்தில் திண்ணிய தேருக்குரிய குதிரைகளை வண்டியில் பூட்டவும்,
வண்டிக்குரிய மாடுகளைப் பூட்டிக்கொண்டு திண்ணிய தேரில் செல்லவும்
|
பாண்டியம் |
பாண்டியம் – (பெ) உழவு, agriculture
பாண்டியம் செய்வான் பொருளினும்
ஈண்டுக இவள் நலம் – கலி 136/20,21
உழவுத்தொழில் செய்கின்றவன் ஈட்டுகின்ற பொருளைக் காட்டிலும்
இவள் நலம் சிறந்து விளங்கட்டும்
|
பாண்டில் |
பாண்டில் – (பெ) 1. எருது, காளை, bull, bullock
2. வட்ட வடிவக் கட்டில், Circular bedstead or cot
3. வட்ட வடிவமான விளக்குத் தகழி, வட்ட அகல், dish like bowl of a lamp
4. கஞ்சதாளம், cymbals
5. வள்ளம், வட்டில், கிண்ணி, a dish for use in eating and drinking, a large cup
6. வட்டம், வட்ட வடிவப்பொருள், circle, circular object
7. தேர், chariot
8. வட்டத்தோல், Circular piece of hide used in making a shield;
9. குதிரைச்சேணம், saddle
10, வட்டக்கண்ணாடி, circular mirror or glass
1.
மா செலவு ஒழிக்கும் மதன் உடை நோன் தாள்
வாள் முக பாண்டில் வலவனொடு தரீஇ – சிறு 259,260
குதிரையின் செலவினைப் பின்னே நிறுத்தும் வலிமையுள்ள கால்களையும்,
ஒளியுள்ள முகத்தினையும் உடைய காளையை (அதனைச் செலுத்தும்)பாகனோடு, கொடுத்து,
2.
தசம் நான்கு எய்திய பணை மருள் நோன் தாள்
இகல் மீக்கூறும் ஏந்து எழில் வரி நுதல்
பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து
சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன்
கூர் உளி குயின்ற ஈர் இலை இடை இடுபு
தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்ப
புடை திரண்டு இருந்த குடத்த இடை திரண்டு
உள்ளி நோன் முதல் பொருத்தி அடி அமைத்து
பேர் அளவு எய்திய பெரும் பெயர் பாண்டில் – நெடு 115-123
பத்துக்கள் நான்கு(நாற்பது ஆண்டு)சென்ற, முரசென்று மருளும் வலிய கால்களையும்,
போரில் புகழ்ந்து போற்றப்படும் உயர்ந்த அழகினையும், புகர்நிறைந்த மத்தகத்தினையுமுடைய,
போரிட்டு வீழ்ந்த யானையின், தானாக வீழ்ந்த கொம்புகளின் இரண்டுபுறங்களையும் சீவி,
கனமும் செம்மையும் ஒப்ப, திறமையான தச்சன்
கூரிய சிற்றுளியால் குடைந்து செதுக்கிய, பெரிய இலைத்தொழிலை இடையே இட்டு,
தூங்கும் நிலையிலுள்ள மகளிரது புடைத்து நிற்கும் முலையை ஒப்பப்
பக்கம் உருண்டிருந்த குடத்தையுடையவாய், (குடத்திற்கும் கட்டிலுக்கும்)நடுவாகிய இடம் ஒழுக மெல்லிதாய் திரண்டு,
உள்ளியின் கெட்டியான பூண்டு(போன்ற உறுப்புக்களை)அமைத்த கால்களைத் தைத்துச் சமைத்து
அகன்ற அளவுகளைக் கொண்ட பெரும் புகழ்(பெற்ற) வட்டக்கட்டில்
3.
பாண்டில் விளக்கில் பரூஉ சுடர் அழல – நெடு 175
வட்டமான தகழியையுடைய விளக்கில் பருத்த தீக்கொழுந்து எரிய
அகல் போல் இடம் விரிந்து, ஒரு பக்கத்தே குவிந்து, சுரைபுடைத்தாய்
உள்ளே திரி செறிக்கப்பட்ட கால் விளக்கு பாண்டில் விளக்கு எனப்படும்.
இவ்விளக்கு சேலம் மாவட்டத்திலும், வட ஆற்காடு மாவட்டத்திலும்
இக்காலத்து மண்ணெண்ணெய் எரிக்கும் பேரொளி விளக்குகள் வருவதற்கு முன்
வழக்கில் இருந்தன.
மூங்கில்களை உயரமாக நட்டு அவற்றின் தலையை மூன்று வரிச்சல்களாகப் பகுத்து
அவற்றின் இடையே மட்பாண்டிலைச் செறித்துப் பருத்த திரியிட்டு எண்ணெய் பெய்து எரிப்பர்.
கூத்தாடும் களரியின் வலப்பக்கத் தொன்றும் இடப்பக்கத்து ஒன்றுமாக இரண்டு பாண்டில்கள்
நிறுத்தப்படும். திரி முழுவதும் எரிந்து போகா வண்ணம் தடுத்தற்கே கரை பயன்படும்.
நன்றி : முத்துக்கமலம் – சங்க இலக்கியத்தில் பல்வேறு வகை விளக்குகள் – முனைவர் தி. கல்பனாதேவி
நன்றி: https://dosa365.wordpress.com/tag/பாண்டில்-விளக்கு/
4.
நுண் உருக்கு_உற்ற விளங்கு அடர் பாண்டில் – மலை 4
நன்றாக உருக்கப்பட்டு ஒளிர்கின்ற தகடாகத் தட்டப்பட்ட கஞ்சதாளமும்,
5.
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் – நற் 86/3
வள்ளம் போன்ற பகன்றை மலரும்
6.
பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல் – ஐங் 310/1
பொன்னாற் செய்த புதிய வட்டவடிவக் காசுக்களை வரிசையாகக் கோத்த வடம் தவழும் அல்குலையும்
பொன் செய் பாண்டில் பொலம் கலம் நந்த
தேர் அகல் அல்குல் – ஐங் 316/1,2
பொன்னாற் செய்த வட்டக் காசுகளைக் கோத்த பொன்னணிகள் பொலிவிழக்கத்
தேர் போன்ற அகலமுடைய அல்குலில்
7.
எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவி
அலங்கும் பாண்டில் இழை அணிந்து ஈம் என – பதி 64/9,10
வேற்படையைக் கொன்று கொணரப்பட்ட, கொய்யப்பட்ட பிடரியினைக் கொண்ட குதிரைகளையும்,
அசைகின்ற தேர்களையும், அவற்றுக்குரிய அணிகளை அணிந்து கொடுங்கள் என்று கூறும்
8.
புள்ளி_இரலை தோல் ஊன் உதிர்த்து
தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டில் – பதி 74/10,11
புள்ளி மானின் தோலை உரித்து, அதினின்றும் ஊனை நீக்கி,
தீய பாகங்களைக் களைந்துபோட்டு, எஞ்சிய வட்டமாக அறுத்த ஒளிவிடும் தோலின்
9.
மீன் பூத்து அன்ன விளங்கு மணி பாண்டில்
ஆய் மயிர் கவரி பாய்_மா மேல்கொண்டு – பதி 90/35,36
விண்மீன் பூத்திருப்பதைப் போன்ற ஒளி விளங்கும் மணிகள் தைக்கபெற்ற சேணத்தையும்,
அழகிய கவரி மயிராலாகிய தலையாட்டத்தையும் உடைய பாய்ந்து செல்லும் குதிரையின் மேலேறி
10
பாசிலை பொதுளிய புதல்-தொறும் பகன்றை
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர – அகம் 217/6-8
பசிய இலை நெருங்கிய புதல்தோறும், பகன்றையானது
நீலம் ஊட்டப்பட்ட தோலினது நிறம்மறையும்படி பதித்த
தோல்கேடகத்தில் பதித்த வட்டக்கண்ணாடி போல வெள்ளியனவாக மலர
|
பாதிரி |
பாதிரி – (பெ) 1. சிவப்புப்பூ மரவகை, Purple-flowered fragrant trumpet-flower tree, Stereospermum suaveolens;
2. வெள்ளைப்பூ மரவகை, White-flowred trumpet-flower tree, Stereospermum xylocarpum
3. பொன் நிறப்பூ மரவகை, Yellow-flowered fragrant trumpet-flower tree, Stereospermum chelonoides;
1.
பாசிலை ஒழித்த பராஅரை பாதிரி
வள் இதழ் மா மலர் வயிற்று_இடை வகுத்ததன்
உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை – பெரும் 4-6
பசிய இலைகளை உதிர்த்த பெருத்த அடிமரத்தையுடைய பாதிரியின்
வளமையான இதழையுடைய பெரிய பூவின் வயிற்றை நடுவே பிளந்ததனுடைய
உள்ளிடத்தைப் போன்ற நிறமூட்டப்பெற்ற தோலினையும்;
2.
துகிலிகை அன்ன துய் தலை பாதிரி
வால் இதழ் அலரி – நற் 118/8,9
வண்ணக்கோலின் தலையைப் போன்ற பஞ்சினைத் தலையில் கொண்ட பாதிரியின்
வெண்மையான இதழ்களையுடைய மலர்களில்
3.
மா கொடி அதிரல் பூவொடு பாதிரி
தூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல் – நற் 52/1,2
கரிய கொடியையுடைய காட்டுமல்லிகைப்பூவுடனே பாதிரியின்
தூய பொன் தகடு போன்ற மலரையும் சேர எதிரெதிர் வைத்துத்தொடுத்துக்கட்டிய மலர்மாலையைச் சூடிய கூந்தலின்
அ. இந்தப் பாதிரி மலர் மிகுந்த மணமுடையது.
போங்கம் திலகம் தேம் கமழ் பாதிரி – குறி 74
கோங்கப்பூ, மஞ்சாடி மரத்தின் பூ, தேன் மணக்கும் பாதிரிப்பூ
ஆ. பாதிரி மரம் பருத்த அடிமரத்தைக்கொண்டது.
பராரை பாதிரி குறு மயிர் மா மலர் – நற் 337/4
பருத்த அடிமரத்தைக் கொண்ட பாதிரியின் நுண்ணிய மயிர்களைக் கொண்ட சிறந்த மலரையும்,
இ. பாதிரிப்பூ இளவேனில் காலத்தில் பூக்கும்.
வேனில் பாதிரி கூன் மலர் அன்ன – குறு 147/1
வேனில்காலத்துப் பாதிரியின் வளைந்த மலரைப் போன்று
வேனில் பாதிரி விரி மலர் குவைஇ – ஐங் 361/2
வேனில் பாதிரி கூனி மா மலர் – அகம் 257/1
ஈ. இதன் காம்பு சிறியதாக இருக்கும்.
புன் கால் பாதிரி அரி நிற திரள் வீ – அகம் 237/1
புல்லிய காம்பினையுடைய பாதிரியின் வரிகள்பொருந்திய நிறமுடைய திரண்ட மலர்
உ. பாதிரிப்பூ பஞ்சுபோன்ற துய்யினை உச்சியில் கொண்டிருக்கும்.
அத்த பாதிரி துய் தலை புது வீ – அகம் 191/1
பாலையிலுள்ள துய்யினை உச்சியில் கொண்ட புதிய பாதிரிப்பூவை
துகிலிகை அன்ன துய் தலை பாதிரி – நற் 118/8,9
வண்ணக்கோலின் தலையைப் போன்ற பஞ்சினைத் தலையில் கொண்ட பாதிரி
ஊ. இதன் புறவிதழ்கள் கருமையாக இருக்கும்.
கான பாதிரி கரும் தகட்டு ஒள் வீ – அகம் 261/1
காட்டிலுள்ள பாதிரியின் கரிய புறவிதழையுடைய ஒளிபொருந்திய மலர்களை
|
பாத்தரு(தல்) |
பாத்தரு(தல்) – (வி) படி(தல்), பரவு(தல்)
பல் குரல் ஏனல் பாத்தரும் கிளியே – ஐங் 288/4
பல கதிர்களைக் கொண்ட தினைப்புனத்தின் மேல் பரவித்திரியும் இக் கிளிகள்
|
பாத்தி |
பாத்தி – (பெ) நீர் தேங்கி நிற்பதற்காக வயலில் வரப்பு கட்டி அமைக்கப்படும் சிறிய பிரிவு, garden bed, pan
கரும்பின் பாத்தி பூத்த நெய்தல் – பதி 13/3
கரும்புப் பாத்திகளில் பூத்த நெய்தல்
|
பாந்தள் |
பாந்தள் – (பெ) 1. மலைப்பாம்பு, python
2. நல்ல பாம்பு, cobra
1.
மா மடல் அவிழ்ந்த காந்தள் அம் சாரல்
இனம் சால் வய களிறு பாந்தள் பட்டு என – நற் 14/7,8
பெரிதான மடல்கள் விரிந்த காந்தள் செடிகளையுடைய அழகிய சாரலில்
தம் இனத்தில் உயர்ந்த வலிமையான ஆண்யானை மலைப்பாம்பின் வாயில் சிக்கியதாக
2.
துத்தி பாந்தள் பைத்து அகல் அல்குல் – குறு 294/5
புள்ளிகளையுடைய பாம்பின் படத்தைப் போன்ற அகன்ற அல்குலில்
|
பானம் |
பானம் – (பெ) குடிப்பதற்கான சுவைப்பொருள், beverages
அரிவையர் அமிர்த பானம்
உரிமை_மாக்கள் உவகை அமிர்து உய்ப்ப – பரி 8/120,121
அரிவையரின் இதழமுதமான பானத்தை
அவரின் உரிமைமக்களாகிய கணவன்மார் மகிழ்ச்சியோடு அமுதமாகக் கருதி உண்டு களிக்க,
|
பானாள் |
பானாள் – (பெ) நள்ளிரவு, midnight
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல் – குறு 355/4
பலரும் துயிலும் நள்ளிரவின் இருளில்
|
பாப்பு |
பாப்பு – (பெ) பாம்பு என்பதன் போலி, snake
படர் சிறை பல் நிற பாப்பு பகையை
கொடி என கொண்ட கோடா செல்வனை – பரி 13/39,40
விரிந்த சிறகுகளைப் பல நிறங்களில் கொண்டதும், பாம்பின் பகையுமான கருடனைக்
கொடியாகக் கொண்ட மனக்கோட்டமில்லாத செல்வனாவாய்
|
பாயம் |
பாயம் – (பெ) 1. பாலியல் வேட்கை, sexual desire
2. மனத்துக்கு உகந்தது, that which is pleasing to mind
1.
ஈர் சேறு ஆடிய இரும் பல் குட்டி
பல் மயிர் பிணவொடு பாயம் போகாது
நெல்மா வல்சி தீற்றி பல் நாள்
குழி நிறுத்து ஓம்பிய குறும் தாள் ஏற்றை – பெரும் 341-344
ஈரத்தையுடைய சேற்றை அளைத்த கரிய பலவாகிய குட்டிகளையுடைய
பலவாகிய மயிர்களையுடைய பெண் பன்றிகளோடே மனவிருப்பம் கொள்ளாமல்,
நெல்லின் உமியை மாவாக்கிய (தவிட்டு)உணவினை (வயிறு நிறைய)த் தின்னப் பண்ணிப், பலநாளும்
குழியிலே நிறுத்திப் பாதுகாத்த குறிய காலையுடைய ஆண்பன்றியின்
2.
நளி படு சிலம்பில் பாயம் பாடி – குறி 58
அடர்த்தி மிக்க மலைச்சாரலில் மனவிருப்பப்படி பாடி,
|
பாயல் |
பாயல் – (பெ) 1. உறக்கம், sleep
2. படுக்கை, bedding
1.
கண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு
முன்னத்தின் காட்டுதல் அல்லது தான் உற்ற
நோய் உரைக்கல்லான் பெயரும்-மன் பல் நாளும்
பாயல் பெறேஎன் – கலி 37/3-6
தலைமாலையினை அணிந்து, ஒரு வில்லுடன் வருவான், என்னை நோக்கி
முகக்குறிப்பால் ஏதோ கேட்பதை அன்றி, தான் கொண்டுள்ள
காதலை என்னிடம் சொல்லாமல் சென்றுவிடுவான், இவ்வாறு பலநாளும் நடந்தது,
அவனை எண்ணி உறக்கம் கொள்ளேன்
2.
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்
மலர்ந்த மார்பின் பாயல்
துஞ்சிய வெய்யள் – ஐங் 205/3-5
ஒலிக்கின்ற வெள்ளிய அருவிகளையுடைய உயர்ந்த மலை நாடனின்
அகன்ற மார்பையே படுக்கையாகக் கொண்டு
தூங்குவதில் நாட்டங்கொண்டுள்ளாள்
|
பாய் |
பாய் – 1. (வி) 1. பரவு, spread, extend as light darkness etc.,
2. பரப்பப்படு, get spread
3. பரப்பு, spread, lay out
4. தாவு, குதி, jump, spring
5. தாவி ஓடு, gallop
6. மேலிருந்து குதி, jump down, dive
7. நீர் முதலியன வேகமாய்ச் செல், flow, rush, gush out
8. தாக்கு, attack
9. வெட்டு, cut
10. முட்டு, butt
11. பட்டு உள்ளேசெல், strike, pierce
12. தாக்கி மோது, charge, pounce upon
– 2. (பெ) 1. பாய்தல், leaping
2. காற்றின் விசை கப்பலைச் செலுத்தும் வகையில் கட்டப்படும் உறுதியான துணி, sail
3. கோரைப்புல், ஓலை முதலியவற்றால் முடைந்த விரிப்பு, mat
1.1
அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி
பகல் கான்று எழுதரு பல் கதிர் பருதி – பெரும் 1,2
அகன்ற பெரிய வானில் பரவிக்கிடந்த இருளை விழுங்கி,
பகற்பொழுதைத் தோற்றுவித்து, எழுதலைச்செய்யும் பல கதிர்களையுடைய ஞாயிறு
1.2
பைம் காய் தூங்கும் பாய் மணல் பந்தர் – பெரும் 267
(படர்ந்த கொடியில்)பச்சைக் காய்கள் தொங்கும், பரப்பப்பட்ட மணலையுடைய பந்தலில்
1.3
மை பட்டு அன்ன மா முக முசுகலை
பைது அறு நெடும் கழை பாய்தலின் – அகம் 267/9,10
மை பூசினாலொத்த கரிய முகத்தினையுடைய ஆண்குரங்கு
பசுமை அற்ற நீண்ட மூங்கிலின்மேல் தாவுதலினால்
1.4
துணை புணர் அன்ன தூ நிற தூவி
இணை அணை மேம்பட பாய் அணை இட்டு – நெடு 132,133
தம் துணையைப் புணர்ந்த அன்னச் சேவலின் தூய நிறத்தையுடைய (சூட்டாகிய)மயிரால்
இணைத்த மெத்தையை மேலாகப் பரப்பி, (அத்தூவிகளுக்கு மேலாக)தலையணைகளும் இட்டு
1.5
பகை புலம் கவர்ந்த பாய் பரி புரவி – மது 689
பகைவர் நாட்டில் கைக்கொண்ட பாய்ந்து செல்லும் குதிரைகளும்
1.6
கழை நிலை பெறாஅ குட்டத்து ஆயினும்
புனல் பாய் மகளிர் ஆட ஒழிந்த
பொன் செய் பூம் குழை மீமிசை தோன்றும் – பதி 86/9-11
ஓடக்கோல் ஊன்ற முடியாத அளவுக்கு ஆழமானது என்றாலும்,
அந்த நீரில் பாய்ந்து மகளிர் நீர்விளையாட்டு ஆட, அவர் காதிலிருந்தி விழுந்த
பொன்னாற் செய்த அழகிய குழையானது மேலே நன்றாகத் தெரியும்
1.7
பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி – கலி 34/2
பெரும் வெள்ளமாய்ப் பாய்கின்ற நீரை எங்கும் பரப்பி உயிர்களை வாழச்செய்து,
1.8
குணில் பாய் முரசின் இரங்கும் அருவி – புறம் 143/9
குறுந்தடி தாக்கும் முரசினது ஒலிக்கும் அருவி
1.9
எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண் கூர்ந்து
பிடி கணம் மறந்த வேழம் – முல் 68,69
ஓங்கி வீசிய வாள் வெட்டுதலினால், புண் மிக்குப்
பிடித் திரளை மறந்த வேழத்தையும்; வேழத்தின்
1.10
கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து
நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு
சிறு கண் யானை நெடு நா ஒண் மணி – அகம் 24/11-13
காவலை உடைய கதவை முட்டுவதால் பூண் பிளந்து
கூரிய முனை மழுங்கிப்போன மொண்ணையான வெள்ளிய தந்தத்தை உடைய
சிறு கண் யானையின் நெடு நா ஒள் மணியோசையும்,
1.11
நெடு வேல் பாய்ந்த நாண் உடை நெஞ்சத்து – புறம் 288/6
மாற்றார் எறிந்த நெடிய வேல் வந்து பட்டு ஊடுறுவியதால் நாணம் உண்டாகிய நெஞ்சுடனே
1.12
கன்று அரைப்பட்ட கயம் தலை மட பிடி
வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின்
ஒண் கேழ் வய புலி பாய்ந்தென கிளையொடு
நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல் – மலை 307-310
கன்றை வயிற்றுக்குக் கீழே(கால்களுக்கிடையே) கொண்ட இளந் தலையுடைய பேதைமையுள்ள பெண்யானை,
வலிமைக்கு ஓர் எல்லை என்று கூறத்தக்க அதன் கணவன் பாதுகாத்துநிற்பதினால்,
ஒளிரும் நிறமுள்ள வலிமையுள்ள புலி பாய்ந்ததினால், (தன்)சுற்றத்தோடு,
உயர்ந்த மலையில் (மற்றவரை உதவிக்குக்)கூப்பிடும் இடியோசை போன்று முழங்கும் குரலும்;
2.1
பாய் கொள்பு
உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரி குருளை – அகம் 329/9,10
பாய்தல் கொண்டு
நேர்மை பொருந்திய முதுகினை நெளிக்கும் குறுகிய வரிகளையுடைய புலிக்குட்டி
2.2
மீ பாய் களையாது மிசை பரம் தோண்டாது
புகாஅர் புகுந்த பெரும்கலம் – புறம் 30/12,13
மேல் பூரிக்கப்பட்ட பாயை மாற்றாமல், அதன் மேல் பாரத்தையும் பறியாமல்
ஆற்றுமுகத்துப் புகுந்த பெரிய மரக்கலத்தை
2.3
பரல் பெய் பள்ளி பாய் இன்று வதியும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் – புறம் 246/9,10
பருக்கைக்கற்களால் படுக்கப்பட்ட படுக்கையின்கண் பாயும் இன்றிக் கிடக்கும்
கைம்மை நோன்பால் வருந்தும் பெண்டிருள்ளேம் அல்லேம்
|
பாய்க்குநர் |
பாய்க்குநர் – (பெ) குத்துவோர், one who pierces
வடி மணி நெடும் தேர் மா முள் பாய்க்குநரும் – பரி 12/29
நன்கு வடிக்கப்பட்ட மணிகளைக் கொண்ட நெடிய தேரின் குதிரைகளை முள்கோலால் குத்தி ஓட்டுவோரும்
|
பாரம் |
பாரம் – (பெ) 1. பொறுப்பு, கடமை, responsibility
2. பெரும் குடும்பம், large family
3. சங்க கால ஊர், நன்னன் என்பானது தலைநகரம்
4. சங்க கால ஊர், மிஞிலி என்பான் காவல்காத்து நின்றது
5. பருத்தி, indian cotton plant, Gossypium herbaceum
1.
குடி புறந்தருநர் பாரம் ஓம்பி – பதி 13/24
குடிமக்களைக் காக்கும் காணியாளர்களின் பொறுப்புகளையும் பேணிக்காத்து
2.
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி – புறம் 35/32
ஏரைப் பாதுகாப்போருடைய குடும்பங்களைப் பாதுகாத்து
பசித்தும் வாரோம் பாரமும் இலமே – புறம் 145/4
யாம் பசித்தும் வருவேம் அல்லேம், எம்மால் பரிக்கப்படும் சுற்றமும் உடையேம் அல்லேம்
3.
பாரத்து தலைவன் ஆர நன்னன் – அகம் 152/12
பாரம் என்னுமூர்க்குத் தலைவனாகிய ஆரம் பூண்ட நன்னன் என்பானது
4.
பூ தோள் யாப்பின் மிஞிலி காக்கும்
பாரத்து அன்ன – நற் 265/4,5
பொலிவுள்ள தோளில் கச்சு மாட்டிய மிஞிலி என்பான் காவல்காக்கும்
பாரம் என்னும் ஊரைப் போன்ற
5.
பாரம் பீரம் பைம் குருக்கத்தி – குறி 92
பருத்திப்பூ, பீர்க்கம்பூ, பச்சையான குருக்கத்திப்பூ
|
பாராட்டு |
பாராட்டு – 1. (வி) 1. புகழ்ந்துபேசு, மெச்சு, applaud, praise
2. கொஞ்சு, சீராட்டு, caress, fondle
3. மிகுத்துரை, exaggerate, magnify
4. கொண்டாடு, celebrate
5. நலம் கூறு, commend, apprecitae
6. உரிமை கொண்டாடு, claim
– 2. (பெ) புகழ்ச்சி, praise, laudation
1.1
கண்ணும் தோளும் தண் நறும் கதுப்பும்
திதலை அல்குலும் பல பாராட்டி
நெருநலும் இவணர்-மன்னே – நற் 84/1-3
என் கண்ணையும், தோளையும், குளிர்ச்சியான நறிய கூந்தலையும்
அழகுத்தேமல் படர்ந்த அல்குலையும் பலவாறு புகழ்ந்து
நேற்றுக்கூட இவ்விடம் இருந்தார், நிச்சயமாக!
1.2
கிளி ஓர் அன்ன கிளவி பணை தோள் 5
பாவை அன்ன வனப்பினள் இவள் என
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி
யாய் மறப்பு அறியா மடந்தை – நற் 301/5-8
கிளியின் தன்மையை ஒத்த சொற்களையும், பருத்த தோள்களையும்,
கொல்லிப்பாவை போன்ற வனப்பையும் கொண்டவள் என் மகள் என்று
அன்புடைய நெஞ்சத்தோடு பலவாறாகக் கொஞ்சிப் பாராட்ட,
எமது தாயின் கவனத்தைவிட்டுச் சிறிதும் அகலாத மடந்தை,
1.3
மாலை நீ தகை மிக்க தாழ் சினை பதி சேர்ந்து புள் ஆர்ப்ப
பகை மிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய் – கலி 118/17,18
ஏ மாலையே! அழகு மிக்க தாழ்ந்த கிளைகளில் இருக்கும் தமது இருப்பிடத்தைச் சேர்ந்து, பறவைகள் ஆரவாரிக்க,
அவற்றைக் கண்டு பொறாமைப்படும் நெஞ்சத்தினையுடைய எங்களின் சிறுமைத்தனத்தை மிகுத்துப்பேசுகிறாய்!
1.4
துணை மலர் கோதையார் வைகலும் பாராட்ட
மண மனை ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே – கலி 70/9,10
துணை மாலை கொண்ட மலர் மாலை அணிந்த பரத்தையர் கொண்டாட, ஒவ்வொருநாளும் ,
மணவீடுகளில் முழங்கும் உன் மண முழவின் ஓசை வந்து அத் தூக்கத்தைக் கலைக்கும்;
1.5
மடல்_மா ஊர்ந்து மாலை சூடி
கண் அகன் வைப்பின் நாடும் ஊரும்
ஒண் நுதல் அரிவை நலம் பாராட்டி – நற் 377/1-3
பனைமடலால் செய்த குதிரையில் ஏறி வந்தும், எருக்கம்பூ மாலையைச் சூடியும்
இடம் அகன்ற உலகத்தின் நாடுகள்தோறும், ஊர்கள்தோறும்,
ஒளிரும் நெற்றியையுடை அரிவையின் அழகினைச் சிறப்பித்துக்கூறியும்,
1.6
கண்ண் தண்ண் என கண்டும் கேட்டும்
உண்டற்கு இனிய பல பாராட்டியும் – மலை 352,353
கண் குளிரக் கண்டும் (செவி குளிரக்)கேட்டும்,
உண்ணுவதற்கு இனியவை பலவற்றை உரிமையுடன் கொண்டும்,
2.
என் பால் அல் பாராட்டு உவந்தோய் குடி உண்டீத்தை என்
பாராட்டை பாலோ சில – கலி 85/32,33
எனக்குரிய பாலைக் குடிக்காமல், என் பாராட்டைக் கேட்டு உவந்தவனே! குடித்து உண்பாய் என்
பாராட்டை! அந்தப் பாலும் கொஞ்சமே!
|
பாரி |
பாரி – 1. (வி) 1. பரப்பு, spread
2. பரவு, expand, spread
3. கா, guard, protect
– 2. (பெ) சங்ககால வேளிர் எனப்படும் குறுநில மன்னர்களில் ஒருவர், a sangam period chieftain
1.1
சொல்லுக பாணியேம் என்றார் அறைக என்றார் பாரித்தார்
மாண்_இழை ஆறு ஆக சாறு – கலி 102/13,14
அந்த ஏறுதழுவலை நடத்தச் சொல்லுங்கள்; இனி காலம் தாழ்த்தமாட்டோம் என்றனர்;
பறையை முழக்குங்கள் என்றனர்; பரப்பினர்
சிறந்த அணிகலன்களையணிந்தவளின் சார்பாக ஏறுகோள் விழா நடக்கும் செய்தியை;
1.2
பாரிய
பராரை வேம்பின் படு சினை இருந்த
குராஅல் கூகையும் இராஅ இசைக்கும் – நற் 218/6-8
நிழல் நீண்டு பரவிய
பருத்த அடியினைக் கொண்ட வேம்பின் பெரிய கிளைகளிருந்த
கபில நிறங்கொண்ட கூகையும் இரவில் ஒலியெழுப்பும்;
1.3
பகல் செய் மண்டிலம் பாரித்து ஆங்கு
முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும்
வேண்டுபவேண்டுப வேண்டினர்க்கு அருளி – பெரும் 442-444
பகற்பொழுதைச் செய்யும் ஞாயிறு உயிர்களைக் காப்பது போல,
(வருத்தப்பட்டு)நீதி கேட்டுவந்தவர்க்கும், (வறுமைப்பட்டுத் தம்)குறை தீர்க்கக் கேட்டோர்க்கும்
வேண்டியவற்றை எல்லாம் வேண்டினர்க்கு அருள்செய்து
2.
கடையெழு வள்ளல்களில் ஒருவர்.
பறம்பு மலையைக் கொண்ட பறம்பு நாட்டை ஆண்டவர்.
கபிலர் என்ற சங்கப் புலவருக்கு நெருங்கிய நண்பர்.
பல் குடை கள்ளின் வண் மகிழ் பாரி
பலவு உறு குன்றம் போல – நற் 253/7,8
பாரி பறம்பில் பனி சுனை தெண் நீர் – குறு 196/3
புலர்ந்த சாத்தின் புலரா ஈகை
மலர்ந்த மார்பின் மா வண் பாரி – பதி 61/8,9
|
பார் |
பார் – 1. (வி) 1. கண்களால் நோக்கு, see
2. கவனி, உற்று நோக்கு, watch, observe
3. எதிர்பார், look for, expect
4. பரிவுடன் நோக்கு, look with compassion
-2. (பெ) 1. உலகம், பூமி, world, earth
2. கடினமான நிலம், hard soil
3. பாறை, rock, rocky layer
4. வண்டியின் அடிப்பாகத்திலுள்ள நெடும் சட்டம், long bar of the body of a cart
1.1
அமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்ப
கமழ் கோதை கோலா புடைத்து தன் மார்பில்
இழையினை கை யாத்து இறுகிறுக்கி வாங்கி
பிழையினை என்ன – பரி 12/57-60
அமிழ்தத்தைப் போன்ற இனிய பார்வையால் பெண் ஒருத்தி (தன் கணவனை)நோக்க,
மணங்கமழும் தன் மாலையைக் கழற்றி அதனைக் கோலாகக்கொண்டு அவனைப் புடைத்து, தன் மார்பின்
வடத்தைக் கழற்றி அவனது கைகளைக் கட்டி, அவனை மிகவும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டு
தவறிழைத்தாய் என்று சொல்ல
1.2
வய களிறு பார்க்கும் வய புலி போல – மது 643
வலிய களிற்றை (இரைகொள்ளக் கவனித்து)ப் பார்க்கும் வலிய புலியைப் போல,
1.3
பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை
பெரு நீர் போகும் இரியல் மாக்கள்
ஒரு மர பாணியில் தூங்கி ஆங்கு
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ
செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து – பெரும் 431-435
பொன்னைக் கொழித்துக்கொண்டு குதிக்கும் கடத்தற்கரிய கங்கையாற்றின்
பெரிய நீரைக் கடந்துபோகும் மனக்கலக்கமுள்ள மாக்கள்
ஒரேயொரு தோணி வரும் காலத்திற்காகக் காத்திருத்தலைப் போல –
கெடாத திரைப்பொருளோடு நெருங்கித் திரண்டு,
(பொருந்திய)நேரத்தை எதிர்பார்க்கும் வளவிய முற்றத்தினையுடைய;
1.4
குழவியை பார்த்து உறூஉம் தாய் போல் உலகத்து
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி – கலி 99/4,5
குழந்தையைப் பரிவுடன் நோக்கி அதற்குப் பாலூட்டும் தாயைப் போல, இந்த உலகத்தில்
மழையைப் பொழிந்து அருள்செய்து பாதுகாக்கும் நல்ல ஊழான விதியை
2.1
பலி கள் ஆர்கை பார் முது குயவன் – நற் 293/2
பலியாக இடப்பட்ட கள்ளைக் குடிக்கும் இவ் உலகத்து முதுகுடியைச் சேர்ந்த குயவன்
2.2
பார் பக வீழ்ந்த வேர் உடை விழு கோட்டு – நற் 24/1
நிலம் பிளவுபட கீழ்ச்சென்ற வேர்களையுடைய பெரிய கிளைகளையும்
2.3
பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு
சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் – திரு 45,46
பாறைநிலம் முதிர்வு பெற்ற குளிர்ந்த கடல் நிலைகுலைய உள்ளே சென்று
சூரனாகிய தலைவனைக் கொன்ற ஒளிவிடுகின்ற இலைத்தொழிலையுடைய நெடிய வேல்
2.4
எழூஉ புணர்ந்து அன்ன பரூஉ கை நோன் பார் – பெரும் 48
(இரண்டு)கணைய மரங்களையும் சேர்த்தாற் போன்ற பருத்த கைகளையுடைய, வலிய, கோக்கும் சட்டத்தை
|
பார்ப்பனன் |
பார்ப்பனன் – (பெ) பிராமணன், a brahmin
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
—————- ————————–
படிவ உண்டி பார்ப்பன மகனே – குறு 156/1-4
பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
—————— ————————
நோன்பு உணவு உண்ணும் பார்ப்பன மகனே!
|
பார்ப்பான் |
பார்ப்பான் – (பெ) பிராமணன், a brahmin
கல் தோய்த்து உடுத்த படிவ பார்ப்பான் – முல் 37
(ஆடையைக்)காவிக்கல்லைத் தோய்த்து உடுத்திய, விரதங்களையுடைய அந்தணன்
|
பார்ப்பார் |
பார்ப்பார் – (பெ) பிராமணர், Brahmins
பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக – ஐங் 4/2
பகைவர் தோற்றுப் புல்லரிசியை உண்க; பார்ப்பனர் தம் மறைகளை விடாமல் ஓதுக
|
பார்ப்பு |
பார்ப்பு – (பெ) 1. ஊர்ந்து செல்லும் உயிரினங்களின் இளமை, youth of the tortoise, frog, toad etc.,
2. பறக்கும் உயிரினங்களின் இளமை, fledgling
1.
ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும் – பொரு 186
இரும் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன – பெரும் 167
கரு விரல் மந்தி கல்லா வன் பார்ப்பு
இரு வெதிர் ஈர்ம் கழை ஏறி – ஐங் 280/1,2
தன் பார்ப்பு தின்னும் அன்பு இல் முதலையொடு – ஐங் 41/1
ஐம் தலை அவிர் பொறி அரவம் மூத்த
மைந்தன் அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு என
ஆங்கு இள மகளிர் மருள – பரி 19/72-74 (அரவம் = பாம்பு)
2.
நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த
விலங்கு மென் தூவி செம் கால் அன்னம்
பொன் படு நெடும் கோட்டு இமயத்து உச்சி
வான் அர_மகளிர்க்கு மேவல் ஆகும்
வளரா பார்ப்பிற்கு அல்கு_இரை ஒய்யும் – நற் 356/1-5
பறவை பார்ப்பு_வயின் அடைய – நற் 69/3
மேல் கவட்டு இருந்த பார்ப்பு_இனங்கட்கு
கல் உடை குறும்பின் வயவர் வில் இட
நிண வரி குறைந்த நிறத்த அதர்-தொறும்
கணவிர மாலை இடூஉ கழிந்து அன்ன
புண் உமிழ் குருதி பரிப்ப கிடந்தோர்
கண் உமிழ் கழுகின் கானம் – அகம் 31/6-11
தனி பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை – அகம் 240/2
|
பார்வல் |
பார்வல் – (பெ) 1.கண்காணிப்பு, காவல், watch
2. பார்த்தல், பார்வை, looking, look
1.
நுதல் அணந்து எழுதரும் தொழில் நவில் யானை
பார்வல் பாசறை தரூஉம் பல் வேல்
பூழியர் கோவே – பதி 84/4-6
நெற்றியை மேலே தூக்கி அண்ணாந்து பார்த்து நடக்கத்தொடங்கும் போர்த்தொழிலில் நல்ல பயிற்சியையுடைய
யானைப்படை
கண்காணிப்புக் கூடாரத்துக்கு வந்து சேருகின்ற, பல வேற்படையினைக் கொண்ட
பூழிநாட்டவர்க்கு வேந்தனே
2.
மாரி ஆம்பல் அன்ன கொக்கின்
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு – குறு 117/1-2
மழைக்காலத்து ஆம்பல் பூவைப்போன்ற கொக்கின்
பார்வைக்கு அஞ்சிய துன்பத்தையுடைய ஈரமான நண்டு
|
பார்வை |
பார்வை – (பெ) மிருகங்களைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பழக்கிய விலங்கு, trained animal used as a decoy
பார்வை யாத்த பறை தாள் விளவின் – பெரும் 95
பார்வை மான் கட்டிய தேய்ந்த தாளினையுடைய விளாமரத்தின்
பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ
நெடும் கால் கணந்துள் அம் புலம்பு கொள் தெள் விளி – நற் 212/1,2
பழக்கிய பறவைகளைக்கொண்டு வேடன் சிக்கவைக்க விரித்திருக்கும் வலையைக் கண்டு அஞ்சி
நீண்ட கால்களையுடைய கணந்துள் பறவை தனித்துக் கத்தும் தெளிந்த அழைப்பு
|
பாறு |
பாறு – 1. (வி) 1. கலைந்துகிட, be in disorder
2. பரட்டையாயிரு, be unkempt, saggy, untidy
3. கிழிபடு, be torn into pieces
4. சிதறிக்கிட, be scattered
5. அழிந்துபோ, be ruined, destroyed
– 2. (பெ) 1. பருந்து, கழுகு, kite, falcon, eagle
2. கேடு, அழிவு, ruin, damage
1.1
குண்டு நீர் நெடும் சுனை நோக்கி கவிழ்ந்து தன்
புன் தலை பாறு மயிர் திருத்தும்
குன்ற நாடன் இரவினானே – நற் 151/10-12
ஆழமான நீரையுடைய நெடிய சுனையைப் பார்த்துத் தலையைக் கவிழ்த்துத் தன்
புல்லிய தலையில் குலைந்துபோன மயிரைத் திருத்தும்
மலைநாட்டினன் இரவினில் –
1.2
பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை – அகம் 21/15
பருந்து அடைகாக்கும் பரட்டைத்தலை ஓமை மரங்களையுடைய
1.3
கூதிர் பருந்தின் இரும் சிறகு அன்ன
பாறிய சிதாரேன் – புறம் 150/1,2
கூதிர்காலத்துப் பருந்தின் கரிய சிறகை ஒத்த
கிழிந்துபோன ஆடையை உடையேனாய்
1.4
கூன் முள் முண்டக கூர்ம் பனி மா மலர்
நூல் அறு முத்தின் காலொடு பாறி
துறை-தொறும் பரக்கும் பன் மணல் சேர்ப்பனை – குறு 51/1-3
வளைந்த முட்களையுடைய கழிமுள்ளியின் நடுக்கும் பனிக்காலத்து கரும் மலர்
நூல் அற்றுச் சிதறிய முத்துக்களைப் போன்று காற்றால் சிதறி
நீர்த்துறைகள்தோறும் பரவிக்கிடக்கும் நிறைந்த மணலையுடைய கடற்கரைத்தலைவனை
1.5
இரு நிலம் கூலம் பாற – புறம் 381/17
பெரிய இந்நிலவுலகத்தில் தானியங்கள் அழிந்துபோக
2.1
புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு
இறகு புடைத்து இற்ற பறை புன் தூவி – நற் 329/4,5
அண்மையில் குஞ்சு பொரித்ததால் வரிசையாகப் பருத்த புள்ளிகளையுடைய முதிய பருந்தானது
இறகுகளைத் தீவிரமாக அடித்துக்கொள்வதால் இற்று விழுந்த காற்றில் பறக்கும் புல்லிய அடி இறகுகளைத்
2.2
அச்சுவர
பாறு இறைகொண்ட பறந்தலை – புறம் 360/14,15
கண்டார்க்கு அச்சம் உண்டாகுமாறு
கேடு பொருந்தியிருத்தலால் பாழிடமாகிய
|
பாறுபடு |
பாறுபடு – (வி) அழிந்துபோ, கெட்டுப்போ, be destroyed
பாறுபட பறைந்த பன் மாறு மருங்கின் – புறம் 359/1
முற்றவும் தேய்ந்து அழிந்த பலமுட்கள் கிடக்கின்ற பக்கத்தில்
|
பாற்படு |
பாற்படு – (வி) ஒழுங்குடன் இரு, be well arranged
ஆங்கு அ பன்னிரு கையும் பாற்பட இயற்றி – திரு 118
அப்படியே, அந்தப் பன்னிரண்டு கையும் (ஆறு முகங்களின்)பகுதியில் பொருந்தத் தொழில்செய்து
|
பாற்று |
பாற்று – (வி.மு) 1. வழிப்படு, be on the way
2. ஊழினையுடையது, has a (good) fortune
1.
ஆறு அல்ல மொழி தோற்றி அற வினை கலக்கிய
தேறு கள் நறவு உண்டார் மயக்கம் போல் காமம்
வேறு ஒரு பாற்று ஆனது-கொல்லோ – கலி 147/1-3
நன்னெறிகளிலுட்படாத சொற்களைச் சொல்லும்படி செய்து, அறச் செயல்களைக் கெடுக்கும்
தெளிந்த கள்ளையும், மதுவையும் உண்டவரின் மயக்கத்தைப் போல, நன்றான காம உணர்வு
வேறொரு பாதையில் சென்றுவிட்டதோ?
2.
முன்_நாள் போகிய துறைவன் நெருநை
அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த
கனி கவின் சிதைய வாங்கி கொண்டு தன்
தாழை வேர் அளை வீழ் துணைக்கு இடூஉம்
அலவன் காட்டி நல் பாற்று இது என
நினைந்த நெஞ்சமொடு நெடிது பெயர்ந்தோனே – அகம் 380/3-8
முன்னாளில் சென்ற தலைவன், நேற்று
அகன்ற இலையினையுடைய நாவல்மரம் நீர் உண்ணும் துறையில் சொரிந்த
கனியினை அதன் அழகு கெட இழுத்துக்கொண்டு சென்று, தன்னுடைய
தாழையின் வேர்ப்பக்கம் உள்ள வளையிலுள்ள அன்பு பொருந்திய பெண்ஞெண்டிற்குத் தரும்
ஆண் ஞெண்டினைக் காட்டி, இது நல்ல ஊழினையுடையது என்று கூறி
|
பாலை |
பாலை – (பெ) 1. வறட்சி, aridity, barrenness
2. நீடித்த வறட்சிப்பகுதி, arid tract
3. ஒரு வகை யாழ், a kind of lute
4. ஒரு வகைப் பண், a melody type
5. குடசப்பாலை, வெட்பாலை, கருடப்பாலை போன்ற ஒரு வகை மரம், அதன் பூ,
various species of a flowering tree such as Conessi-bark, rosebay, India-rubber vine
1.
பாலை நின்ற பாலை நெடு வழி – சிறு 11
பாலைத் தன்மையாகிய வறட்சி நிலைபெற்றமையால் தோன்றிய பாலையாகிய, நீண்ட வழியையுடைய
2.
பாலை நின்ற பாலை நெடு வழி – சிறு 11
பாலைத் தன்மையாகிய வறட்சி நிலைபெற்றமையால் தோன்றிய பாலையாகிய, நீண்ட வழியையுடைய
3.
ஆறலை கள்வர் படை விட அருளின்
மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை – பொரு 21,22
வழி(ப்போவாரை) அலைக்கின்ற கள்வர் (தம்)படைக்கலங்களைக் கைவிடும்படி செய்து, அருளின்
மாறாகிய மறப்பண்பினை (அவரிடத்திலிருந்து)அகற்றுகின்ற மருவுதல் இனிய பாலை யாழை
4.
நைவளம் பழுநிய நயம் தெரி பாலை
கைவல் பாண்_மகன் கடன் அறிந்து இயக்க – சிறு 36,37
நட்டபாடை என்னும் பண் முற்றுப்பெற்ற இனிமை தெரிகின்ற பாலை என்னும் பண்ணை
இயக்குதல் வல்ல பாணனாகிய மகன் முறைமையை அறிந்து இயக்க,
5.
தில்லை பாலை கல் இவர் முல்லை – குறி 77
தில்லைப்பூ, பாலை, கல்லிலே படர்ந்த முல்லைப்பூ,
கொடிறு போல் காய வால் இணர் பாலை – நற் 107/3
பற்றுக்குறடு போன்ற காய்களையுடைய வெள்ளிய பூங்கொத்துகளையுடைய பாலை
நிரை ஏழ் அடுக்கிய நீள் இலை பாலை – பரி 21/13
நிரைபட ஏழு ஏழாக அடுக்கிய நீண்ட இலைகளையுடைய பாலை
|
பால் |
பால் – 1. (பெ) 1. குழவி குட்டி முதலியவற்றை ஊட்டத்தாய் முலையினின்று சுரக்கும்
வெண்மையான திரவப் பொருள். milk
2. வகை, class, kind
3. தானிய மணிகளில் ஆரம்ப நிலையில் காணப்படும் குழைவான திரவப்பொருள், fluid in grains
4. பக்கம், side
5. ஊழ், விதி, fate, destiny
6. ஆண், பெண் என்ற பகுப்பு, sex
7. பகுத்தல் dividing
8. தன்மை, இயல்பு, quality, nature
9. குலம், social hierarchy, caste
– 2. (இ.சொ) மீது, மேல், இடம், on, upon,over, towards
1.1.
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கு ஆங்கு – குறு 27/2
நல்ல பசுவின் இனிய பால் நிலத்தில் சிந்தியதைப் போல்
திதலை மென் முலை தீம் பால் பிலிற்ற
புதல்வன் புல்லி புனிறு நாறும்மே – நற் 380/3,4
தேமல் படிந்த மென்மையான கொங்கைகளின் இனிய பால் சுரந்து வழிய
புதல்வனை அணைத்துக்கொள்வதால் புனிற்றுப் புலவு நாறுகின்றது;
1.2.
ஐம் பால் திணையும் கவினி அமைவர
முழவு இமிழும் அகல் ஆங்கண் – மது 326,327
ஐந்துவகை நிலங்களும் அழகுபெறப் பொருந்துதல் தோன்ற –
முழவு முழங்கும் அகன்ற ஊரில்,
1.3
பால் வார்பு கெழீஇ பல் கவர் வளி போழ்பு
வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல் – மலை 114,115
பால் பிடித்து முற்றி, பலவிதமாய்க் கிளைத்து (அடிக்கும்)காற்றால் ஊடறுக்கப்பட்டு,
மிகுதியாக விளைந்தன ஐவனம் என்னும் மலைநெல்;
1.4
காமம் கடையின் காதலர் படர்ந்து
நாம் அவர் புலம்பின் நம்மோடு ஆகி
ஒரு பால் படுதல் செல்லாது ஆயிடை
———————– ——————————-
வருந்தும் தோழி அவர் இருந்த என் நெஞ்சே – குறு 340
காதல் மிகும்போது காதலரை நினைத்துச் சென்று,
நாம் அவரிடத்தே வருந்தும்போது நம்மோடு ஆகி,
ஒரு பக்கமாகச் சேர்தல் இல்லாது, இரண்டு பக்கமுமாக,
—————————————– ——————————-
வருந்தும் தோழி! தலைவர் இருந்த என் நெஞ்சம்.
1.5
பால் வரைந்து அமைத்தல் அல்லது அவர்_வயின்
சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ – குறு 366/1,2
விதியால்தான் அவளின் காதல் அமைந்தது என்பதன்றி, அவரின்
இயல்பை அளந்து அறிவதற்கு நாம் யாரோ?
1.6
புலி கொல் பெண் பால் பூ வரி குருளை – ஐங் 265/1
புலியால் கொல்லப்பட்ட பெண் இனத்தைச் சேர்ந்த பன்றியின் அழகிய வரிகள் கொண்ட குட்டியை,
1.7
பால் பிரியா ஐம்_கூந்தல் பல் மயிர் கொய் சுவல் – கலி 96/8
ஐந்து பகுப்பாகப் பிரித்துவிட்ட கூந்தலே பல மயிர்களைக் கொய்துவிட்ட பிடரி மயிராகவும்
1.8
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும் – புறம் 183/3,4
பிறப்பு ஒரு தன்மையாகிய ஒரு வயிற்றுப் பிறந்தோருள்ளும்
சிறப்பான தன்மையினால் தாயும் மனம் வேறுபடும்
1.9
கீழ் பால் ஒருவன் கற்பின்
மேல் பால் ஒருவனும் அவன்கண் படுமே – புறம் 183/9,10
கீழ்க்குலத்துள் ஒருவன் கற்றால்
மேற்குலத்துள் ஒருவனும் அவனிடத்தே சென்று வழிபடுவான்
2.
குட காற்று எறிந்த குப்பை வட பால்
செம்பொன்_மலையின் சிறப்ப தோன்றும் – பெரும் 240,241
மேற்காற்றில் (தூவித்)தூற்றின நெற்பொலி, வட திசைக்கண்(உள்ள)
சிவந்த பொன்(போன்ற மேரு) மலையினும் மாண்புடையதாகத் தோன்றும்
|
பால்நிறவண்ணன் |
பால்நிறவண்ணன் – (பெ) வெள்ளை நிறத்த பலராமன், Balaraman who is white in colour
பால்நிறவண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும் – கலி 104/8
பால் நிற வண்ணனாகிய பலராமன் போல் குற்றமற்ற வெள்ளைநிறக் காளையும்,
|
பாளை |
பாளை – (பெ) 1. தெங்கு முதலியவற்றின் பூவை உள்ளடக்கிய மடல், Spathe of palms
1.
கமுகின் பாளை
பரி அரை கமுகின் பாளை அம் பசும் பூ – பெரும் 7
பருத்த அடிமரத்தையுடைய கமுகின் பாளையாகிய அழகினையுடைய இளம் பூ
பனம்பாளை
பாளை தந்த பஞ்சி அம் குறும் காய்
ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும் – குறு 293/2,3
பாளை ஈன்ற நாரினைக் கொண்ட அழகிய சிறிய காயையுடைய
உயர்ந்த கரிய பனையின் நுங்கினை உண்டு திரும்பும்
மூங்கில்பாளை
நுண் பொறி மான் செவி போல வெதிர் முளை
கண் பொதி பாளை கழன்று உகும் பண்பிற்றே – கலி 43/16,17
நுண்ணிய புள்ளிகளைக் கொண்ட மானின் காதினைப் போல மூங்கில் முளையின்
கணுவை மூடியிருக்கும் தோடு கழன்று உகுந்துகிடக்கும் தன்மையது,
|
பாழி |
பாழி – (பெ) சங்க காலத்து ஓர் ஊர், a city in sangam period
1.
பாழி என்பது ஏழில்மலைப்பகுதியை ஆண்ட கொண்கான நன்னன் என்பானது ஊரில் இருந்த நகரம்.
ஏழில் நெடு வரை பாழி சிலம்பில் என்ற அடியால், இது ஏழில்மலையில் இருந்த ஒரு கோட்டை நகரம்
என்பது பெறப்படும்.
பாழி அன்ன கடி உடை வியல் நகர் – அகம் 15/11
கறை அடி யானை நன்னன் பாழி – அகம் 142/9,10
ஏழில் நெடு வரை பாழி சிலம்பில் – அகம் 152/13
அளி இயல் வாழ்க்கை பாழி பறந்தலை – அகம் 208/6
நன்னன் உதியன் அரும் கடி பாழி – அகம் 258/1
அணங்கு உடை வரைப்பின் பாழி ஆங்கண் – அகம் 372/3
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்
அஞ்சல் என்ற ஆஅய் எயினன்
இகல் அடு கற்பின் மிஞ்லியொடு தாக்கி
தன் உயிர் கொடுத்தனன் சொல்லியது அமையாது – அகம் 396/3-6
நன்னன் என்பானுக்காக ஆஅய் எயியன் பாழியின்கண் மினிலியொடு பொருது உயிர் துறந்தான் என்பது
இதனால் பெறப்படும்.
எழாஅ திணி தோள் சோழர் பெருமகன்
விளங்கு புகழ் நிறுத்த இளம்பெரும் சென்னி
——————- ———————
செம்பு உறழ் புரிசை பாழி நூறி – அகம் 375/10- 13
என்ற அடிகளால் இந்தக் கோட்டை நகரம் சோழன் இளம்பெரும் சென்னியால் வென்று அழிக்கப்பட்டது
என்பது பெறப்படும்.
|
பாழ் |
பாழ் – 1. (வி) அழிவடை, go to ruin
– 2. (பெ) 1. அழிவு, சீர்குலைந்த நிலை, ruin, dilapidated condition
2. அழிபாடு அடைந்த இடம், place in ruins
1.
ஊர் பாழ்த்து அன்ன ஓமை அம் பெரும் காடு – குறு 124/2
ஊர் பாழ்பட்டுப்போனதைப் போன்ற ஓமை மரங்களையும் கொண்ட பெரிய பாலைநிலம்
2.1
அரும் கடி வரைப்பின் ஊர் கவின் அழிய
பெரும் பாழ் செய்தும் அமையான் – பட் 269,270
அரிய காவலையுடைய மதிலையுடைய பகைவரின் படைவீடுகள் அழகு அழியவும்,
பெரும் அழிவைச் செய்தும் மனநிறைவடையானாய்
2.2.
வாழ்வோர் போகிய பேர் ஊர்
பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே – நற் 153/9,10
குடிமக்கள் விட்டு ஓடிப்போன பெரிய ஊரில்
பாழ்பட்ட இடங்களைக் காவல்புரிந்து நிற்கும் தனி மகனைப் போல
|
பாழ்படு |
பாழ்படு – (வி) 1. அழிவுறு, கேடுறு, be ruined, become dilapidated
2. ஒளி மங்கு, lose lustre
1.
மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட
நயந்தோர் தேஎம் நன் பொன் பூப்ப – பெரும் 423,424
(தன்னை)எதிர்ப்போரின் ஊர்களிலுள்ள (மக்கள் கூடும்)பொதுவிடங்கள் கேடுறவும்,
(தன்னிடம்)நயந்துகொண்டவர் நாடுகள் நல்ல பொன் பூத்துத் திகழவும்,
2.
ஆள்பவர் கலக்கு_உற அலைபெற்ற நாடு போல்
பாழ்பட்ட முகத்தோடு பைதல் கொண்டு அமைவாளோ – கலி 5/12,13
நாட்டை ஆள்பவர் அழிவு பல செய்ய, அவரால் அலைக்கழிக்கப்பட்ட நாட்டு மக்கள் போல
ஒளியிழந்த முகத்தோடு பரிதவித்து இருப்பாளோ
|
பாவல் |
பாவல் – (பெ) நீராளம், (நீர் அதிகமானதால்) பரவுதல், spreading
கிணைமகள் அட்ட பாவல் புளிங்கூழ் – புறம் 399/16
கிணைமகள் சமைத்த நீர்த்துப்போய்ப் பரந்த புளிங்கூழை
|
பாவு |
பாவு – (வி) பரவு, spread
பால் மருள் மருப்பின் உரல் புரை பாவு அடி
ஈர் நறும் கமழ் கடாஅத்து இனம் பிரி ஒருத்தல் – கலி 21/1,2
பாலைப் போன்ற வெண்மையான கொம்புகளையும், உரலைப் போன்ற பரந்த அடிகளையும்,
ஈரத்துடன் நறுமணம் கமழும் மதநீரினையும் உடைய, தன் இனத்தை விட்டுப் பிரிந்த ஒற்றையானை
|
பாவை |
பாவை – (பெ) 1. பதுமை, உருவ பொம்மை, puppet, doll
2. பெண்சிலை, statue or image of a lady
3. பிம்பம், reflected image
4. சிறு பெண், girl
1.
செம் நீர் பசும்_பொன் புனைந்த பாவை
செல் சுடர் பசு வெயில் தோன்றி அன்ன – மது 410,411
{சிவந்த தன்மையினையுடைய பசும்பொன்னால் செய்த பதுமை
வீழ்கின்ற ஞாயிற்றின் மாலைவெயிலில் காட்சியளித்தது போன்ற
2.
யவனர் இயற்றிய வினை மாண் பாவை
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து – நெடு 101,102
யவனர் செய்த தொழில் திறத்தில் உயர்ந்த பெண்சிலையின்
கைகளில் ஏந்தியிருக்கின்ற வியப்பைத்தரும் அழகுடைய தகளி நிறைய நெய் சொரிந்து
3.
கையும் காலும் தூக்க தூக்கும்
ஆடி பாவை போல – குறு 8/4,5
கையையும் காலையும் தூக்கத் தானும் தூக்கும்
கண்ணாடிப் பிம்பம் போல
விரும்பியவற்றைச் செய்வான் தன் மகனுடைய தாய்க்கே!
4.
இது என் பாவைக்கு இனிய நன் பாவை – ஐங் 375/1
இது என் பாவை போன்ற மகளுக்குப் பிடித்த பதுமை
|
பாவைவிளக்கு |
பாவைவிளக்கு – (பெ) ஒரு வகை அகல் விளக்கு, a kind of lamp
பாவைவிளக்கில் பரூஉ சுடர் அழல – முல் 85
பாவை (ஏந்திநின்ற)தகளியில் பரிய விளக்கு நின்றெரிய
யவனர் இயற்றிய வினை மாண் பாவை
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து – நெடு 101,102
யவனர் செய்த தொழில் திறத்தில் உயர்ந்த பெண்சிலையின்
கைகளில் ஏந்தியிருக்கின்ற வியப்பைத்தரும் அழகுடைய தகளி நிறைய நெய் சொரிந்து
|
பிசிர் |
பிசிர் – 1. (வி) துளியாகச் சிதறு, sprinkle, drizzle, சிம்பு சிம்பாக உடைந்துபோ, break with frayed ends
– 2. (பெ) 1. நீர்த்துளி, drop of water, spray
2. தீச்சுவாலையின் நுனி, tip of a flame
3. கசிவு நீர், ஊற்றுநீர், oozing water, spring
4. பஞ்சின் நுனியில் நீட்டிக்கொண்டிருக்கும் இழை, சிம்பு, frayed end in cotton
5. பனங்கிழங்கின் நரம்பு நுனியின் சிம்பு, fibre in the central nerve of palm root
6. ஆந்தை என்ற சங்க காலப் புலவரின் சொந்த ஊர்
1.
தோட்டி நீவாது தொடி சேர்பு நின்று
பாகர் ஏவலின் ஒண் பொறி பிசிர
காடு தலைக்கொண்ட நாடு காண் அவிர் சுடர்
அழல் விடுபு மரீஇய மைந்தின்
தொழில் புகல் யானை நல்குவன் பலவே – பதி 40/27-31
அங்குசம் காட்டும் குறிப்பினை மீறாமல் – தந்தத்தின் பூண்கள் இறுக்க அணியப்பெற்று
பாகரின் ஏவுதலின்படி, கால் மிதித்து எழுகின்ற தூசியின் ஒளிவிடும் துகள்கள் சிதறும்படியாக,
காட்டினில் தோன்றி பரந்து உயர்ந்து நின்று, நாட்டிலுள்ளோர் காணும்படி ஒளிரும் காட்டுத்தீயைப் போன்ற
சினத்தைக் கைவிட்டு – நடக்கின்ற, வலிமையுடைய
வேண்டும் தொழிலை விரும்பிச் செய்யும் யானைகள் பலவற்றைக் கொடுப்பான்.
கொடி விடு குரூஉ புகை பிசிர கால் பொர – பதி 15/6
கொடிவிட்டெழும் நிறங்கொண்ட புகை பிசிராக உடைந்துபோகும்படி காற்று மோத
2.1.
பொங்கு பிசிர்
முழவு இசை புணரி எழுதரும்
உடை கடல் படப்பை எம் உறைவு இன் ஊர்க்கே – நற் 67/10-12
பொங்கிச் சிதறும் துளிகளைக்கொண்டு,
முழவு போல் இசைக்கும் அலைகள் எழுந்து
உடைந்து விழும் கடற்கரையிலுள்ள நிலத்தில் நாங்கள் உறையும் இனிய ஊரில்
வில் எறி பஞ்சி போல மல்கு திரை
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும்
நளி கடல் – நற் 299/7-9
வில்லால் அடிக்கப்பட்ட பஞ்சினைப் போல பெருகும் அலைகளில்
காற்று மோதுவதால் ஒளிறும் நீர்த்துளிகள் மேலெழும்பும்
படர்ந்த கடலை
2.2.
கடும் கால் ஒற்றலின் சுடர் சிறந்து உருத்து
பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின் – பதி 25/6,7
(நீ மூட்டிய தீ – )மிகுந்த காற்று எழுந்து மோதுவதால், சுடர்விட்டு எழுந்து, வெப்பமடைந்து
புதிதாய்த் தோன்றும் பிசிர்களையுடைய ஒளிவிட்டுச் சுட்டெரித்த பக்கங்கள்
2.3.
வையை உடைந்த மடை அடைத்தக்கண்ணும்
பின்னும் மலிரும் பிசிர் போல – பரி 6/82,83
வையையில் உடைந்த மடையை அடைத்தபோதும்,
மீண்டும் ஒழுகும் கசிவுநீர் போல
2.4.
புல் நுகும்பு எடுத்த நல் நெடும் கானத்து
ஊட்டு_உறு பஞ்சி பிசிர் பரந்து அன்ன
வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப – அகம் 283/13-15
புற்கள் குருத்தினை விட்ட நல்ல நீண்ட காட்டில்
செந்நிறம் ஊட்டிய பஞ்சின் சிம்புகள் பரவியது போன்ற
செந்நிறமுடைய தம்பலப்பூச்சிகள் குளிர்ந்த நிலத்தே அழகுறுத்த
2.5
கடையோர் விடு வாய் பிசிரொடு சுடு கிழங்கு நுகர – புறம் 225/3
பின் செல்வோர், நீங்கிய வாயையுடைய சிம்புவுடன் சுடப்பட்ட கிழங்கினை நுகர
2.6
பெரும் கோ கிள்ளி கேட்க இரும் பிசிர்
ஆந்தை அடியுறை எனினே – புறம் 67/11,12
பெருங்கோவாகிய கிள்ளி கேட்க, பெரிய பிசிர் என்னும் ஊரின்கண்
ஆந்தை என்பாருடைய அடிக்கீழ் என்று சொல்லின்
பிசிரோன் என்ப என் உயிர் ஓம்புநனே – புறம் 215/7
பிசிர் என்னும் ஊரைச் சேர்ந்தவன் என்று சொல்லுவர் என் உயிரைப் பாதுகாப்போனை
|
பிடகை |
பிடகை – (பெ) பூந்தட்டு, plate for holding flower
பூ தலை முழவின் நோன் தலை கடுப்ப
பிடகை பெய்த கமழ் நறும் பூவினர் – மது 396,397
பூவைத் தலையில் கொண்ட முழவின் வலிய கண்ணைப் போன்ற
தட்டுகளில் இட்டுவைத்த கமழ்கின்ற நறிய பூவினையுடையவரும்,
|
பிடர் |
பிடர் – (பெ) பின் கழுத்து
பெரும் கை யானை இரும் பிடர் தலை இருந்து – புறம் 3/11
பெரிய கையினையுடைய யானையினது பெரிய கழுத்திடத்தே இருந்து
|
பிடவம் |
பிடவம் – (பெ) பிடா, பிடவு, குட்டிப்பிடவம், ஒரு மரம், அதன் பூ, Bedaly emetic-nut, Randia malabarica;
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம் – நற் 238/3
வண்டுகள் கிளறி முறுக்கவிழ்ப்பதனால் மலர்ந்த பிடவ மலர்கள்
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப – நற் 242/1
இலைகள் அற்ற பிடவமரங்களில் புதிய மலர்கள் அரும்பிநிற்க
தளி பெறு தண் புலத்து தலை பெயற்கு அரும்பு ஈன்று
முளி முதல் பொதுளிய முள் புற பிடவமும்
களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று – கலி 101/1-3
மழை பெற்றுக் குளிர்ந்த காட்டில், முதல் மழைக்கு அரும்பு விட்டு,
உலர்ந்துபோன அடிப்பகுதியில் செழித்து வளர்ந்த முள்ளைப் புறத்திலே கொண்ட பிடவமும்,
கள்ளுண்டு செருக்குற்றவனின் கால்தடுமாறும் நிலையைப் போல வளைந்து, துடுப்புப்போன்ற மொட்டினை ஈன்று
இந்தப்பூவின் மணம் நெடுந்தொலைவுக்கு மணக்கும் என்பர்.
கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில்
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி – முல் 24,25
காட்டாறு சூழ்ந்த அகன்ற நெடிய காட்டினில்,
நெடுந்தொலையும் மணக்கும் பிடவ மலரோடு (ஏனைப்)பசிய தூறுகளையும் வெட்டி
நெருங்கிய கொத்துக்கொத்தாக இதன் பூ இருக்கும்.
புதல் மிசை தளவின் இதல் முள் செம் நனை
நெருங்கு குலை பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ – அகம் 23/3,4
புதரின் மேலுள்ள செம்முல்லையின், காடையின் கால்முள்ளைப் போன்ற சிவந்த அரும்புகள்
நெருக்கமான கொத்துக்களை உடைய பிடாவுடன் ஒன்று சேரத் தளையவிழ
பார்க்க : பிடவு
|
பிடவு |
பிடவு – (பெ) பார்க்க : பிடவம்
இதன் பூ வெண்மை நிறமானது.
வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில் – அகம் 184/7
இந்த வெள்ளைப்பூவின் இதழ்களில் சிவந்த வரிகள் காணப்படும்.
அம் வளை வெரிநின் அரக்கு ஈர்த்து அன்ன
செம் வரி இதழ சேண் நாறு பிடவின் – நற் 25/1,2
அழகிய சங்கின் முதுகில் அரக்கைத் தேய்த்தது போல
சிவந்த வரிகளைக் கொண்ட இதழ்களையுடைய நெடுந்தொலைவுக்கும் மணக்கும் பிடவமலர்களின்
|
பிடவூர் |
பிடவூர் – (பெ) ஒரு சங்க கால ஊர், a city in sangam period
இது பண்டைய சோழ நாட்டைச் சேர்ந்தது.
இந்த ஊரில் பெருஞ்சாத்தன் என்ற ஒரு வள்ளல் இருந்தார். இவர் வேளாண் குடியைச் சேர்ந்தவர்.
இவரை மதுரை நக்கீரர் புகழ்ந்து பாடியுள்ளார் (புறம் 395)
நெடும் கை வேண்மான் அரும் கடி பிடவூர்
அற பெயர் சாத்தன் கிணையேம் பெரும – புறம் 395/20,21
நீண்ட கையையுடைய வேண்மானுக்குரிய அரிய காவல் பொருந்திய பிடவூரிலுள்ள
அறத்தால் உண்டான புகழையுடைய சாத்த்தனுக்குக் கிணைப்பறை கொட்டிப்பாடும் கிணைப்பொருநர் ஆவோம்
|
பிடி |
பிடி – 1. (வி) 1. கையில் பற்று, catch, hold, grasp
2. கையால் ஒரு குறிப்பிட்ட வடிவில் ஒரு பொருளைச் செய், உருவாக்கு, shape
– 2. (பெ) 1. ஒரு உள்ளங்கையில் எடுத்து மூடும் அளவு, handful
2. பெண் யானை, female elephant
3. ஒரு பொருளைக் கையால் பற்றிக்கொள்ள உதவும் பகுதி, handle
4. கையால் பற்றியிருத்தல் hold, clutch
1.1
பைம் கண் ஊகம் பாம்பு பிடித்து அன்ன – சிறு 221
பசிய கண்களையுடைய கரிய குரங்கு பாம்பு(த் தலையைப்) பற்றினாற் போன்று
1.2
அயிர் உருப்புற்ற ஆடு அமை விசயம்
கவவொடு பிடித்த வகை அமை மோதகம் – மது 625,626
கண்டசருக்கரையை வெப்பமேற்றிச் சமைத்தல் அமைந்த பாகினை(க் கூட்டிய)
உள்ளீட்டோடெ கையில் பிடித்துச் செய்த வகுப்பு அமைந்த கொழுக்கட்டைகளையும்,
2.1
கௌவை போகிய கரும் காய் பிடி ஏழ்
நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எள் – மலை 105,106
பிஞ்சுத்தன்மை போன(=முற்றிய) கரிய காய்கள் ஒரு கைப்பிடிக்குள் ஏழு காய்களே கொள்ளத்தக்கனவாய்
நெய் (உள்ளே)கொண்டிருக்க வளர்ந்தன பலவாகக் கிளைத்த ஈரப்பதமான எள்;
2.2
இரும் பிடி தட கையின் செறிந்து திரள் குறங்கின் – பொரு 40
பெரிய பெண் யானையின் பெரிய கை போல நெருங்கி ஒன்றித் திரண்ட துடையினையும்
2.3
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள் – முல் 46
இரவைப் பகலாக்கும், திண்ணிய கைப்பிடியையுடைய ஒளிவிடும் வாளை
2.4
பிடி அமை நூலொடு பெய்ம் மணி கட்டி – கலி 140/6
கையால் பிடிப்பதற்கான கடிவாளத்துடன், சேர்த்துக்கட்டிய மணிகளைக் கழுத்தில் கட்டி,
|
பிட்டன் |
பிட்டன் – (பெ) சங்ககாலக் குறுநில மன்னன், a chieftain of sangam period
இவனது பெயர் பிட்டங்கொற்றன் என்பதாகும், இவனைப் பற்றிய பல செய்திகளைப் புறம் 168 முதல் 172 வரை
உள்ள புறப்பாடல்களில் காணலாம். அப்பாடல்களில் இவனை, கருவூர்க் கதப்பிள்ளை, காவிரிப்பூம்பட்டினத்துக்
காரிக்கண்ணனார், உறையூர் மருத்துவன் தாமோதரனார், வடமவண்ணக்கன் தாமோதரனார் ஆகியோர் வாழ்த்திப்
பாடியுள்ளனர்.
அகம் 77-இல் மருதனிள நாகனாரும், அகம் 143-இல் ஆலம்பேரிச் சாத்தனாரும் இவன் சிறப்புகளை
எடுத்தோதியுள்ளனர். இவன் சேரமான் கோதைக்குப் படைத்தலைவன். குதிரை மலைப்பகுதியை ஆண்டவன்.
பேராண்மையும், வள்ளண்மையும் ஒருசேரப் பெற்றவன்.
வானவன் மறவன் வணங்கு வில் தடக்கை
ஆனா நறவின் வண் மகிழ் பிட்டன்
பொருந்தா மன்னர் அரும் சமத்து உயர்த்த
திருந்து இலை எஃகம் போல – அகம் 77/15-18
சேரன் படைத்தலைவனாகிய வளைந்த வில்லைப் பெரிய கையில் கொண்ட
குறையாத கள்ளினது மிக்க மகிழ்ச்சியை உடைய பிட்டன் என்பான்
பகை மன்னரது அரிய போரில் உயர்த்திய
திருந்திய இலைத்தொழிலையுடைய வேல் போல
பொய்யா வாய் வாள் புனை கழல் பிட்டன்
மை தவழ் உயர் சிமை குதிரை கவாஅன் – அகம் 143/12,13
தப்பாது வென்றி வாய்க்கும் வாளினையும் புனைந்த கழலினையும் உடைய பிட்டன் என்பானது
மேகம் தவழும் உயர்ந்த உச்சியினையுடைய குதிரை மலையின் பக்க வரையில்
|
பிட்டை |
பிட்டை – (பெ) பிளவுண்டது, that which is split or cleaved
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள்
பிழிவது போல பிட்டை ஊறு உவப்ப – புறம் 373/6
சொரிகின்ற குருதியோடே கயில் ஏந்திய வாளால்
உடலைப் பிழிந்தெடுப்பதற்குப் பிளந்ததைப் போல பிளத்தலால் உண்டான புண்ணுற்று மகிழ்ச்சி எய்த
|
பிண |
பிண – (பெ) 1. பிணவு என்பதன் கடைக்குறை, நாய், பன்றி, மான்,புலி போன்றவற்றின் பெண்,
Female of the dog, pig, deer, tiger or yak;
2. பிணம் என்பதன் பெயரடை, the adjectival form of ‘piNam’, a dead body
1.
ஈன்று அணி வயவு பிண பசித்து என மற புலி – அகம் 112/5
குட்டியை ஈன்ற அண்மையினையுடைய வேட்கையையுடைய பெண்புலி பசித்ததாக
ஈன்று இளைப்பட்ட வயவு பிண பசித்து என – அகம் 238/2
ஈன்று காவற்பட்ட வேட்கையினுடைய பெண்புலி பசியுற்றதாக
2.
பைம் நிணம் கவரும் படு பிண கவலை – அகம் 327/16
பசிய கொழுப்பினைக் கவர்ந்துண்ணும் இடமாய மிக்க பிணங்கள் கிடக்கும் கவர்த்த நெறிகள்
|
பிணக்கு |
பிணக்கு – (வி) பின்னு, interwine
தார் தார் பிணக்குவார் கண்ணி ஓச்சி தடுமாறுவார் – பரி 9/45
மாலையோடு மாலையை வீசிப் பின்னுவார், தம் தலைமாலையை எடுத்து ஓங்கித் தடுமாறுவார்,
|
பிணங்கு |
பிணங்கு – (வி) பின்னிக்கொள், பிணைந்திரு, interwine
பின்னி அன்ன பிணங்கு அரில் நுழை-தொறும் – மலை 379
பின்னிவைத்ததைப் போன்ற கொடிகள் பிணைந்திருக்கும் புதர்க்காட்டில் நுழையும்போதெல்லாம்,
|
பிணன் |
பிணன் – (பெ) பிணம், dead body
பிணன் உகைத்து சிவந்த பேர் உகிர் பணை தாள்
அண்ணல் யானை – சிறு 199,200
பிணங்களை(க் காலால்) இடறிச் சிவந்த பெரிய நகங்களையும், பெருமையுடைய கால்களையும் உடைய
தலைமைச் சிறப்புடைய யானை
|
பிணர் |
பிணர் – (பெ) சொரசொரப்பு, சருச்சரை, roughness, caorseness, unevenness
கார் பெயல் உருமின் பிளிறி சீர் தக
இரும் பிணர் தட கை இரு நிலம் சேர்த்தி
சினம் திகழ் கடாஅம் செருக்கி மரம் கொல்பு
மையல் வேழம் மடங்கலின் எதிர்தர – குறி 162-165
கார்காலத்து மழையின் இடி போல முழக்கத்தையுண்டாக்கி, தன் தலைமைக்குத் தக்கதாக
கரிய சொரசொரப்பான பெரிய துதிக்கையை(ச் சுருட்டி) பரந்த நிலத்தே எறிந்து,
கோபம் விளங்கும் மதத்தால் மனம் செருக்கி, மரங்களை முறித்து,
மதக்களிப்புடைய (அக்)களிறு எமனைப்போல் (எமக்கு)எதிரே வருகையினால்
|
பிணவல் |
பிணவல் – (பெ) பன்றி, மான், நாய், முதலியவற்றின் பெண். female of the dog, pig, deer or yak;
நால் முலை பிணவல் சொலிய கான் ஒழிந்து
அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற
தறுகண் பன்றி – அகம் 248/4-6
தொங்கும் முலையினையுடைய பெண்பன்றி பெயர, கட்டினின்றும் வெளிவந்து
அரிய வாயிலாகிய முடுக்கிலே ஆட்களை எதிர்நோக்கி நின்ற
அஞ்சாமையையுடைய பன்றி
|
பிணவு |
பிணவு – (பெ) பன்றி, மான், நாய், முதலியவற்றின் பெண். female of the dog, pig, deer or yak
பார்க்க : பிணவல்
பிணவு – மனித இனப்பெண்
ஈத்து இலை வேய்ந்த எய் புற குரம்பை
மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி
ஈன் பிணவு ஒழிய போகி நோன் காழ் – பெரும் 88-90
ஈந்தினுடைய இலையால் வேயப்பட்ட எய்ப்பன்றியின் முதுகு போலும் புறத்தினையுடைய குடிலின்கண்,
மான் தோலாகிய படுக்கையில் பிள்ளையோடு முடங்கிக்கிடக்கும்
மகப்பேறடைந்த எயிற்றியாகிய பெண்ணைத் தவிர (ஏனையோர்)போய்
பிணவு – செந்நாய்ப்பெண்
வள் எயிற்று செந்நாய் வயவு உறு பிணவிற்கு
கள்ளி அம் கடத்து இடை கேழல் பார்க்கும் – ஐங் 323/1,2
கூர்மையான பற்களைக் கொண்ட செந்நாயானது, தன் சூல்கால விருப்பம் கொண்டிருக்கும் பெட்டைக்காகக்
கள்ளிகள் நிறைந்த அழகிய காட்டு வழியிடையே காட்டுப்பன்றியை எதிர்பார்த்திருக்கும்
பிணவு – பெண்புலி
கல் அளை செறிந்த வள் உகிர் பிணவின்
இன் புனிற்று இடும்பை தீர சினம் சிறந்து
செம் கண் இரும் புலி கோள் வல் ஏற்றை
உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும் – நற் 148/7-10
மலைக் குகையில் செறிவாய்க்கிடந்த பெரிய நகங்களைக் கொண்ட பெண்புலியின்
இனிதான குட்டிகளை ஈன்றதனால் ஏற்பட்ட வருத்தம் தீர, சினம் மிக்கு
சிவந்த கண்களையுடைய பெரிய புலியின் இரையைக் கொள்வதில் வல்ல ஆண்
உயர்ந்து நிற்கும் கொம்பினையுடைய தனித்த யானையின் புள்ளிகள் உடைய முகத்தில் பாயும்
பிணவு – பெண்காட்டுப்பூனை (வெருகு = காட்டுப்பூனை)
குவி அடி வெருகின் பைங்கண் ஏற்றை
ஊன் நசை பிணவின் உயங்கு பசி களைஇயர்
——————————- ————————-
நெற்றி சேவல் அற்றம் பார்க்கும் – அகம் 367/8-12
குவிந்த அடியினையுடைய காட்டுப்பூனையின் பசிய கண்களையுடைய ஆண்
ஊனை விரும்பியுள்ள பெண்பூனையின் வருத்தும் பசியினை நீக்குமாறு
பிணவு – பெண்(வேட்டை)நாய்
முளவுமா தொலைச்சிய பைம் நிண பிளவை
பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ – மலை 176,177
முள்ளம்பன்றியைக் கொன்ற மின்னுகின்ற கொழுப்பையுடைய பிளக்கப்பட்ட தசைத்துண்டுகளையும்
பெண் நாயை விரட்டிக் கடிக்கவிட்டுக் கிடைத்த (உடும்பின்)பருமனான தசைத்துண்டோடு கலந்து,
பிணவு – பெண்யானை
மிக வரினும் மீது இனிய வேழ பிணவும்
அகவரும் பாண்டியும் அத்திரியும் ஆய் மா – பரி 10/15,16
மிக விரைவாக வந்தாலும் மேலே அமர்ந்திருக்க இனிதாக இருக்கும் பெண்யானைகள்,
அதட்டி ஓட்டத் தேவையற்ற மாட்டுவண்டிகள், கோவேறு கழுதைகள், தெரிந்தெடுத்த குதிரைகள் பூட்டிய
பிணவு – வீட்டுப்பெண்பன்றி
ஈர் சேறு ஆடிய இரும் பல் குட்டி
பல் மயிர் பிணவொடு பாயம் போகாது
நெல்மா வல்சி தீற்றி பல் நாள்
குழி நிறுத்து ஓம்பிய குறும் தாள் ஏற்றை – பெரும் 341-344
கள்ளைச் சமைக்கின்ற மகளிர் வட்டில் கழுவிக் கவிழ்த்த
ஈரத்தையுடைய சேற்றை அளைத்த கரிய பலவாகிய குட்டிகளையுடைய
பலவாகிய மயிர்களையுடைய பெண் பன்றிகளோடே மனவிருப்பம் கொள்ளாமல்,
நெல்லின் உமியை மாவாக்கிய (தவிட்டு)உணவினை (வயிறு நிறைய)த் தின்னப் பண்ணிப், பலநாளும்
குழியிலே நிறுத்திப் பாதுகாத்த குறிய காலையுடைய ஆண்பன்றியின்
பிணவு – பெண்கரடி
பெரும் கை எண்கின் பேழ் வாய் ஏற்றை
இருள் துணிந்து அன்ன குவவு மயிர் குருளை
தோல் முலை பிணவொடு திளைக்கும் – அகம் 201/16-18
பெரிய கையினையும் பிளந்த வாயினையும் உடைய ஆண்கரடி
இருளைத் துணிந்து வைத்தாற்போன்ற திரண்ட மயிரினையுடைய குட்டியுடன்
திரங்கிய முலையினையுடைய பெண்கரடியுடன் மகிழ்ந்திருக்கும்
|
பிணா |
பிணா – (பெ) பெண், woman
குற_பிணா_கொடியை கூடியோய் வாழ்த்து
சிறப்பு உணா கேட்டி செவி – பரி 19/95,96
குறப்பெண்ணாகிய பூங்கொடிபோன்றவளை மணந்தவனே! எமது வாழ்த்தாகிய
சிறப்பு உணவையும் கேட்பாயாக உன் செவியால்!
|
பிணி |
பிணி – 1. (வி) 1. சேர்த்துக்கட்டு, tie, fasten with ropes, fetter, link
2. தன்வயப்படுத்து, win-over, keep one spell-bound
-2. (பெ) 1. இறுகிய முறுக்கு, tight twisting
2. மாட்டு, fix, attach, let hang
3. கட்டு, tie
4. முயக்கம், அணைப்பு, embracing
5. சேர்த்துப்பிடித்தல், holding together
6. கட்டுகை, fastening, binding
7. பற்று, attachment
8. நோய், Disease, malady, sickness
1.1
கயிறு பிணி குழிசி ஓலை கொள்-மார்
பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின் – அகம் 77/7,8
கயிற்றால் சேர்த்துக்கட்டிய குடத்திலுள்ள ஓலையை எடுத்துக்கோடற்கு
அக்குடத்தின் மேலிட்ட இலச்சினையை ஆய்ந்து நீக்கும் அவ்வோலையைத் தேரும் மாக்களைப் போல
1.2
புலவோர்க்கு சுரக்கும் அவன் ஈகை மாரியும்
இகழுநர் பிணிக்கும் ஆற்றலும் – மலை 72,73
புலவர்க்கு வழங்கும் அவன் கொடைமழையையும்,
இகழுவோரைத் தன்வயப்படுத்தும் ஆற்றலும்,
2.1
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினை
ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல – சிறு 254,255
மழைத்துளியில் நனைந்த முருக்க மரத்தின் மிக்க உயரத்திற்கு வளர்ந்த நீண்ட கொம்பில்
பூங்கொத்து முறுக்கு நெகிழ்ந்த காட்சியைப் போல,
2.2
பச்சூன் பெய்த சுவல் பிணி பைம் தோல்
கோள் வல் பாண்மகன் – பெரும் 283,284
(வாடூனன்றி)பச்சை இறைச்சியை வைத்த, தோளில் மாட்டிய, பதப்படுத்தாத தோலினால் செய்த பையையுடைய
(மீனைக்)கொள்ளுதலில் வல்ல பாண்மகனுடைய
2.3
வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ – மது 376
இறுக்கமான கட்டினையுடைய வலிமையான (பாய் கட்டின)கயிற்றை அறுத்து
2.4
நயந்த காதலர் கவவு பிணி துஞ்சி – மது 663
(தாங்கள்)விரும்பின (தம்)கணவருடைய முயக்கத்தின் பிணிப்பால் துயில்கொண்டு
2.5
துணை அறை மாலையின் கை பிணி விடேஎம் – குறி 177
இறுக்கக் கட்டிச் சார்த்தப்பட்ட மாலையைப் போன்று, (நாங்கள்)கைகோத்தலை விடாதவர்களாய்,
2.6
விசி பிணி முழவின் குட்டுவன் காப்ப – அகம் 91/13
இறுக்கமான கட்டுதலையுடைய முழவினையுடைய குட்டுவன் என்பான் புரத்தலால்
2.7
நில்லா பொருள்_பிணி சேறி – நற் 126/11
நிலையில்லாத இந்த பொருளீட்டலின் ஆசையினால் செல்லுகின்றாய்,
2.8
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய்
துனி கூர் மனத்தள் – நற் 262/4,5
நடுங்கவைக்கும் காதல்நோய் வருத்த, நல்ல அழகெல்லாம் தொலைந்து,
கசந்துபோன மனத்தினளாய்,
|
பிணிமுகம் |
பிணிமுகம் – (பெ) 1. முருகனின் யானை, the elephant of Lord Murugan
2. முருகனின் வாகனமாகிய மயில், the peacock, Murugan’s bird for riding
1.
பாய் இரும் பனி கடல் பார் துகள் பட புக்கு
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கி – பரி 5/1,2
பரந்த பெரிய குளிர்ந்த கடலில் உள்ள பாறைகள் தூள்தூளாகும்படி புகுந்து,
மிகவும் உயர்ந்த பிணிமுகம் என்னும் யானையின் மீதேறிப் போர்செய்து,
2.
மணி மயில் உயரிய மாறா வென்றி
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும் என – புறம் 56/7,8
நீலமணி போலும் நிறத்தையுடைய மயிற்கொடியை எடுத்த மாறாத வெற்றியினையுடைய
அம் மயிலாகிய ஊர்தியினையுடைய ஒள்ளிய செய்யோனும் என்று
|
பிணை |
பிணை – 1. (வி) 1. ஒன்றோடொன்று நெருக்கமாகச் சேர்ந்திரு, interwine, entwine
2. இணைந்திரு, join
3. செறிந்திரு, be close together
4. கட்டு, fasten, tie
5. தழுவு, hold by both arms
– 2. (பெ) 1. பிடிப்பு, holding
2. விருப்பம், love, desire
3. பாய்மரக்கப்பலில் பாயைச் சேர்த்துக்கட்டும் மரங்கள், poles tied with the sails in a ship
4. பெண்மான், female deer
5. காப்பு, உத்தரவாதம், ஈடு, pledge, guarentee, security
1.1
அன்பு உறு காதலர் கை பிணைந்து ஆய்ச்சியர்
இன்புற்று அயர்வர் – கலி 106/32,33
அன்பான காதலர்களின் கைகளைக் கோத்துக்கொண்டு, இடையர் மகளிர்
மகிழ்ச்சியுடன் ஆடத்தொடங்கினர்
1.2
ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்து அன்ன கண்ணாய் – கலி 96/5
உயர்ந்து எதிர் எதிராக நீலமலர்கள் இணைந்திருப்பது போன்ற கண்களையுடையவளே!
1.3
பிணை யூபம் எழுந்து ஆட – மது 27
ஒன்றனோடு ஒன்று நெருங்க குறைத்தலைப்பிணங்கள் எழுந்து ஆட,
1.4
மை கூர்ந்து
மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண் – நற் 252/8,9
மையிட்டு
மலர்களைக் கட்டிவைத்தது போன்ற கரிய இமைகளைக் கொண்ட குளிர்ச்சியான கண்களையும்,
1.5
அவருள் மலர் மலி புகல் எழ அலர் மலி மணி புரை நிமிர் தோள் பிணைஇ
எருத்தோடு இமில் இடை தோன்றினன் தோன்றி – கலி 102/25,26
அவர்களுள், ஊறிடும் மிகுந்த காதலுணர்வு பெருக, பூக்கள் நிறைந்த நீலமணியைப் போன்ற நெடிய தோள்களால்
தழுவி வளைத்து
காளையின் திமிலுக்கிடையே அவன் தோன்றினான்,
2.1
பரிந்து அவளை கை பிணை நீக்குவான் பாய்வாள் – பரி 7/57
இரக்கங்கொண்டு, அவளைக் கைப்பிடிப்பிலிருந்து நீக்குவதற்காகப் பாய்ந்தாள்;
2.2
பெற்றோன் பெட்கும் பிணையை ஆக என – அகம் 86/14
நின்னை எய்திய கணவனை விரும்பிப்பேணும் விருப்பத்தை உடையை ஆக என்று வாழ்த்தி
2.3
இதையும் கயிறும் பிணையும் இரிய
சிதையும் கலத்தை பயினான் திருத்தும்
திசை அறி நீகானும் போன்ம் – பரி 10/53-55
இது, பாயும், கயிறும், மரங்களும் பிடுங்கிக்கொண்டு சிதறிப்போக,
சிதைந்துபோன பாய்மரக்கப்பலை சேர்த்துக்கட்டி சீர்திருத்தும்
திசையறிந்து ஓட்டும் நீகானின் செயலைப் போலிருந்தது;
2.4
மட பிணை தழீஇய மா எருத்து இரலை – நற் 256/8
தன்னுடைய இளம் பெண்மானைத் தழுவிய பெரிய பிடரியைக் கொண்ட ஆண்மான்
2.5
மாய பொய் கூட்டி மயக்கும் விலை கணிகை
பெண்மை பொதுமை பிணையிலி – பரி 20/49,50
மாயப் பொய்யுடன் சேர்த்து வந்தவரை மயக்கும் விலைமாதே!
உன் பெண்மை யாவர்க்கும் பொதுவாகிப்போனதால் காப்பு என்று ஒருவரும் இல்லாதவளே!
|
பிணையல் |
பிணையல் – (பெ) 1. மலர்மாலை, garland of flowers
2. பின்னிப் பிணைக்கப்பட்டது, that which is interwinedand joined together
1.
குரூஉ கண் பிணையல் கோதை மகளிர் – மலை 349
(பல)நிறங்கொண்ட காம்புகளையுடைய மலர்களைப் பிணைத்த மாலை (அணிந்த)பெண்கள்
2.
பெரும் கயிறு நாலும் இரும் பனம் பிணையல்
பூ கண் ஆயம் ஊக்க ஊங்காள் – நற் 90/6,7
பெரிய கயிறாகத் தொங்கும் கனத்த பனைநாரால் பின்னிப்பிணைக்கப்பட்ட ஊஞ்சலில்
பூப்போன்ற கண்களையுடைய தோழியர் ஆட்டிவிட ஆடாள்,
பிணையல் அம் தழை தைஇ துணையிலள் – நற் 170/3
பிணைத்த அழகிய தழைகளால் தைக்கப்பட்ட உடையை அணிந்து, தனியாக வந்திருக்கும் இவள்
வயலை செம் கொடி பிணையல் தைஇ
செ விரல் சிவந்த சே அரி மழை கண்
செ வாய் குறு_மகள் – ஐங் 52/1-3
வயலையின் சிவந்த கொடியைப் பிணைத்து மாலையாகக் கட்டியதால்
சிவந்த இவளின் விரல்கள் மேலும் சிவந்துபோனவளும், சிவந்த வரிகளைக் கொண்ட குளிர்ந்த கண்களையும்,
சிவந்த வாயையும் உடையவளுமான இந்த இளைய மகள்
|
பிண்டன் |
பிண்டன் – (பெ) ஒரு சங்க காலக் குறுநில மன்னன், a chieftain in sangam period
இந்த மன்னனின் வேற்படையை நன்னன் என்பான் போர்க்களத்தில் அழித்து வெற்றிகொண்டான்.
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன்
முனை முரண் உடைய கடந்த வென் வேல்
இசை நல் ஈகை களிறு வீசு வண் மகிழ்
பாரத்து தலைவன் ஆர நன்னன் – அகம் 152/9-12
மிக்க பகையைத் தரும் வலிமை மிக்க பிண்டன் என்பானது
போர்செய்யும் மாறுபாடு சிதைய வென்ற வெற்றி வேலையும்
புகழ் மேவிய நல்ல ஈகையினையும் களிறுகளை வழங்கும் வண்மையால் ஆகிய களிப்பினையும் உடைய
பாரம் என்னும் ஊர்க்குத் தலைவனாகிய ஆரம் பூண்ட நன்னன் என்பானது
|
பிண்டம் |
பிண்டம் – (பெ) 1. தொகுதி, திரள், collection, mass, multitude
2. இறைவனுக்குப் படைக்கப்படும் பெரும் சோற்றுத்திரள்
3. உருண்டை, Anything globular or round, lump or mass
4. உடல், உடம்பு, body
5. நீத்தாருக்குப் படைக்கப்படும் சோற்று உருண்டை,
Ball of cooked rice, offered to the manes at a funeral ceremony
6. உருவம் பெறாத கரு, Embryo, foetus
1.
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க – அகம் 46/14,15
திரண்ட நெல்பொலி கொண்ட அள்ளூர் நகரைப் போன்ற, எனது
ஒளிரும் வளையணிந்த தலைவியின் அழகு குன்றினும் குன்றுக;
2.
பண்டைத் தமிழகத்துப் பெரு வீரர்கள் போர்க்களம் புகுவதன் முன்னர்ப் போரில் தங்களுக்கு வெற்றி தருமாறு,
வெற்றித் திருமகளாம் கொற்றவையை வேண்டி வழிபாடாற்றிச் செல்வதும்,
வெற்றி கொண்டு மீண்டபின்னர், அவ்வெற்றித் திருமகள் கோயில் புகுந்து, தம் விழுப்புண் சோரும் குருதி கலந்த
செஞ்சோற்றுப் படையல் இட்டு வழிபாடாற்றி வணங்குவதும் செய்வர். அவ்வாறு, வெற்றி கொண்ட வீரர்கள்
கொற்றவை கோயிலில் பலியாகப் படையல் இடும் பெருஞ் சோற்றுத் திரளையே இது குறிக்கும்.
முழங்கும் மந்திரத்து
அரும் திறல் மரபின் கடவுள் பேணியர்
உயர்ந்தோன் ஏந்திய அரும் பெறல் பிண்டம்
கரும் கண் பேய்_மகள் கை புடையூஉ நடுங்க – பதி 30/33-36
முழங்குகின்ற மந்திரவொலியால்
அரிய திறல் படைத்த மரபினையுடைய கடவுளை வாழ்த்தும்பொருட்டு,
வழிபாட்டினைச் செய்யும் உயர்ந்தோன் படைத்த பெறுவதற்கரிய பலியினைக் கண்டு,
கரிய கண்களையுடைய பேய்மகள் கைகளை அடித்துக்கொண்டு நடுங்க,
3.
நீலத்து அன்ன அகல் இலை சேம்பின்
பிண்டம் அன்ன கொழும் கிழங்கு மாந்தி – அகம் 178/4,5
நீலமணியை ஒத்த நிறத்தினையுடைய அகன்ற இலையினையுடைய சேம்பின்
உருண்டையாகிவைத்தாற் போன்ற வளவிய கிழங்கினை நிறையத் தின்று
4.
உண்டி முதற்றே உணவின் பிண்டம் – புறம் 18/20
உணவை முதலாக உடையது அவ் உணவால் உளதாகிய உடம்பு
5.
தன் அமர் காதலி புல் மேல் வைத்த
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்-கொல் – புறம் 234/3,4
தன்னால் விரும்பப்பட்ட காதலி புல்லின் மேல் வைத்த
இனிய சிறிய சோற்றுருண்டையை எவ்வாறு உண்டானோ?
6.
வழுவ பிண்டம் நாப்பண் ஏமுற்று
இரு வெதிர் ஈன்ற வேல் தலை கொழு முளை
சூல் முதிர் மட பிடி நாள்_மேயல் ஆரும் – நற் 116/3-5
தன் வயிற்றிலுள்ள கருவாகிய பிண்டம் அழிந்து வெளியேவந்து விழும்படியாக
பெரிய மூங்கிலில் முளைத்த வேல்முனையைப் போன்ற தலையைக் கொண்ட கொழுத்த முளைகளை
சூல் முதிர்ந்த இளம்பெண்யானை காலையில் மேய்ந்துண்ணும்
|
பிண்டி |
பிண்டி – (பெ) அசோக மரம், பூ, asoka tree, flower, Saraca indica
இப் பூவினைக் காதில் செருகிக்கொள்வர்
வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர் – திரு 31
ஒண் பூம் பிண்டி ஒரு காது செரீஇ – குறி 119
சாய் குழை பிண்டி தளிர் காதில் தையினாள் – பரி 11/95
கடி மலர் பிண்டி தன் காதில் செரீஇ – பரி 12/88
பல பூக்கள் சேர்ந்த கொத்தாக இது காணப்படும்.
பகன்றை பலாசம் பல் பூ பிண்டி – குறி 88
பகன்றை, பலாசம், பல பூக்களையுடைய அசோகப்பூ,
|
பிதிர் |
பிதிர் – 1. (வி) 1. உதிர், fall to pieces or powder
2. (நீர்)தெறித்துச் சிதறு, splash and scatter
– 2. (பெ) சிறுதுளிகளாகிய புகைப்படலம், drift as of smoke, dust or minute water particles
(நீர்த்துளிகளின்) சிதறல், scattering (of minute particles)
1.1
களி சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து
யாணர் கோங்கின் அவிர் முகை எள்ளி
பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை – சிறு 24-26
கிளர்ச்சியுற்ற வண்டுகள் ஒலிக்கும் பூந்தாது போன்ற தேமல்களையும்; அப் பூந்தாதுகள் உதிர்ந்துகிடக்கும்
புதிதாய்ப் பூத்தலையுடைய கோங்கின் ஒளிரும் மொட்டுக்களை இகழ்ந்து,
அணிகளுக்குள் ஒடுங்கிக்கிடக்கும் வெம்மையான முலைகளையும்;
1.2
கரையவர் மருள திரை_அகம் பிதிர
நெடு நீர் குட்டத்து துடுமென பாய்ந்து – புறம் 243/8,9
கரையில் நிற்போர் வியப்ப, திரையிடத்துத் திவலை தெறித்துச் சிதற
ஆழமான நீரையுடைய மடுவின்கண் ’துடும்’ என்று ஒலிப்பக் குதித்து
2.
கொண்டல் ஆற்றி விண் தலை செறீஇயர்
திரை பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி
நிரைத்து நிறை கொண்ட கமம் சூல் மா மழை – நற் 89/1-3
கீழைக் காற்றினால் செலுத்தப்பட்டு, விண்ணிடத்து ஒன்றுகூடிச் செறிந்து
அலைகள் தம்மில் மோதி உடைதலால் எழும் நீர்த்துளிப் புகைப்படலம் போல மலைமுகடுகளில் மகிழ்ந்து ஏறி
ஒழுங்காக அமைந்து நிறைவுகொண்ட முற்றிய கருக்கொண்ட கரிய மேகங்கள்
|
பிதிர்வு |
பிதிர்வு – (பெ) சிதறல், scattering
விளை தயிர் பிதிர்வின் வீ உக்கு இருவி-தொறும்
குளிர் புரை கொடும் காய் கொண்டன அவரை – மலை 109,110
முற்றிய தயிர் (கீழே விழுந்து ஏற்பட்ட)சிதறலைப்போல் பூக்கள் உதிர்ந்து, (கதிர்கொய்யப்பட்ட)அரிதாள்கள்தோறும்
அரிவாள் போன்ற வளைந்த காய்களைக் கொண்டன அவரை;
|
பிதிர்வை |
பிதிர்வை – (பெ) சுற்றித்திரிதல், playfully wandering
பந்தர் வயலை பந்து எறிந்து ஆடி
இளமை தகையை வள மனை கிழத்தி
பிதிர்வை நீரை பெண் நீறு ஆக என – அகம் 275/3-5
வயலைக் கொடி படர்ந்த பந்தலில் பந்தினை எறிந்து விளையாடி
இளமைத் தன்மையை உடையவளாய் இருக்கிறாய், வளம் பொருந்திய மனைக்கு உரியவளாகிய செல்வியே
சுற்றித்திரியும் தன்மையினை உடைத்திருக்கிறாய், உன் பெண்மை அழிவதாக
|
பித்திகம் |
பித்திகம் – (பெ) 1. பித்திகை, சாதி மல்லிகை, large flowered jasmine, Jasminum angustifolium
1. இது மாலை நேரத்தில் மலரும். பொழுது தெரியாத மழைக்காலத்தில், இது மலர்வதை வைத்து
மாலை நேரத்தை அறிவர்.
செவ்வி அரும்பின் பைம் கால் பித்திகத்து
அ இதழ் அவிழ் பதம் கமழ பொழுது அறிந்து
இரும்பு செய் விளக்கின் ஈர் திரி கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய் கைதொழுது
மல்லல் ஆவணம் மாலை அயர – நெடு 40-44
(மலரும்)பக்குவத்திலுள்ள மொட்டுக்களின் பசிய காலினையுடைய பிச்சியின்
அழகிய இதழ்கள் கூம்புவிடும் நிலையில் மணக்கையினால், (அந்திப்)பொழுது (என)அறிந்து,
இரும்பினால் செய்த (அகல்)விளக்குகளில் (நெய் தோய்ந்த)ஈரமான திரியைக் கொளுத்தி,
நெல்லையும் மலரையும் சிதறி, (இல்லுறை தெய்வத்தை)கைகூப்பி(வணங்கி),
— வளப்பமுள்ள அங்காடித் தெரு(வெல்லாம்) மாலைக் காலத்தைக் கொண்டாட –
இது மாரிக்காலத்தில் பூக்கும்.
மாரி பித்திகத்து ஈர் இதழ் அலரி – நற் 314/3
மாரிக்காலத்துப் பித்திகத்தின் ஈரமான இதழையுடைய பூவை,
|
பித்திகை |
பித்திகை – (பெ) 1. பார்க்க : பித்திகம்
2. சிறு சண்பகம், Cananga-flower tree, Magnolia champaca
துய் தலை இதழ பைம் குருக்கத்தியொடு
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ என – நற் 97/6,7
பஞ்சினை உச்சியில் கொண்ட இதழ்களைக் கொண்ட பைங்குருக்கத்தி மலருடன்
சிறு சண்பகமலரையும் கலந்த மலரை விலைக்கு வேண்டுமா என்று கூவிக்கொண்டு
|
பித்தை |
பித்தை – (பெ) மக்களின் தலைமயிர், lock of hair
சுவல் மாய் பித்தை செம் கண் மழவர் – அகம் 101/5
பிடரியை மறைக்கும் தலைமயிரினையும் சிவந்த கண்ணினையும் உடைய மழவர்கள்
|
பின்னிலை |
பின்னிலை – (பெ) 1. குறைதீர்க்க வேண்டுதல், seeking a redress
2. பின்னடைவு, பின்தங்கல், lagging behind
1.
பந்தொடு பெயரும் பரிவு இலாட்டி
அருளினும் அருளாள் ஆயினும் பெரிது அழிந்து
பின்னிலை முனியல் மா நெஞ்சே – நற் 140/7-9
பந்தோடு ஓடியாடும் நம்மீது பரிவில்லாத தலைவி
நம்மீது இரக்கங்கொண்டாலும், கொள்ளாவிட்டாலும், பெரிதும் துவண்டுபோய்
இரந்து அவள் பின் நிற்றலை வெறுக்காதே! பெரிய நெஞ்சே!
2.
நின் தேர்
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது
ஊர்க பாக ஒருவினை கழிய – அகம் 44/4-6
உனது தேர்
முன்னிடத்தில் செயல்படுகின்ற ஊர்தி – அதற்குப் பின்னடைவு ஏற்படுத்தாமல்
(விரைந்து)செலுத்துக, பாகனே! (ஏனையோரை) விட்டு விலகியவனாய்க் கடந்துசெல்ல;
|
பின்னு |
பின்னு – (பெ) பின்னல், braid, plait
பிடி கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்து – சிறு 191
பெண்யானையின் தும்பிக்கையை ஒத்த பின்னல் வீழ்ந்து கிடக்கின்ற சிறிய முதுகினையும்
|
பின்பனி |
பின்பனி – (பெ) தமிழரின் ஓராண்டுக்குரிய ஆறு பருவங்களில் ஒரு பருவம்.
மாசி பங்குனி மாதங்கள். இரவின் பிற்பகுதியில் பனி மிகுதியுடையது
The months of mAci and pangkuni , being the season in which
dew falls during the latter part of the night.
பின்பனி அமையம் வரும் என முன்பனி
கொழுந்து முந்துறீஇ குரவு அரும்பினவே – நற் 224/2,3
பின்பனிக் காலம் வரப்போகிறது என்று முன்பனிக்காலத்தில்
தளிர்களை முதலில் விட்டு, குராமரங்கள் அரும்புவிடுகின்றனவே!
|
பின்றை |
பின்றை – (பெ) அடுத்த பொழுது, பின்னால், afterwards
ஆடிய இள மழை பின்றை
வாடையும் கண்டிரோ வந்து நின்றதுவே – நற் 229/10,11
அசைந்துவரும் இலேசான மழைக்குப் பின்னால்
வாடைக்காற்றும் கண்டீரன்றோ வந்து நிற்பதை
|
பிரசம் |
பிரசம் – (பெ) 1. வண்டு, தேனீ, beetle, bee
2. தேனடை, தேனிறால், honeycomb
3. தேன், honey
1.
வரி கடை பிரசம் மூசுவன மொய்ப்ப
எருத்தம் தாழ்ந்த விரவு பூ தெரியல் – மது 717,718
வரிகளுள்ள பின்பகுதியையுடைய தேனினம் சூழ்வனவாய் மொய்ப்ப,
கழுத்திலிருந்து தாழ்ந்த (பல்விதமாய்)கலந்த பூக்களைத் தெரிவுசெய்து கட்டிய மாலை
2.
சூர் புகல் அடுக்கத்து பிரசம் காணினும் – மலை 239
தெய்வமகளிர் விரும்பும் அடுக்கடுக்காய் அமைந்த சரிவுகளில், தேனடையைக் கண்டாலும்
3.
பிரசம் கலந்த வெண் சுவை தீம் பால் – நற் 110/1
தேன் கலந்த நல்ல சுவையையுடைய இனிய பாலை
|
பிரண்டை |
பிரண்டை – (பெ) ஒரு கொடி, Square-stalked vine, Vitis quadrangularis;
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை
ஏறு பெறு பாம்பின் பைம் துணி கடுப்ப
நெறி அயல் வறிது திரங்கும் அத்தம் – அகம் 119/5-7
நெறியில் செல்லும் மக்கள் அறுத்துப்போட்ட பிரண்டைக்கொடி
இடியால் தாக்குதல் பெற்ற பாம்பின் பசிய துண்டு போல
வழியின் பக்கத்தே பயனின்றி வதங்கிக் கிடக்கும்
|
பிரப்பு |
பிரப்பு – (பெ) 1. குறுணி வீதம் கொள்கலங்களில் பரப்பிவைக்கும் நிவேதனப் பொருள்,
Food of various kinds or rice placed before a deity in receptacles of the capacity of a kuruNi
2. குறுணியளவான பொருளைக் கொள்ளும் பாத்திரம், A vessel of the capacity of a kuruNi
1.
என் மகள் துயர் மருங்கு
அறிதல் வேண்டும் என பல் பிரப்பு இரீஇ
அறியா வேலன் தரீஇ அன்னை
வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி
மறி உயிர் வழங்கா அளவை – அகம் 242/8-12
என் மகளது துயர் வந்த காரணத்தை
அறிதல் வேண்டும் என்று பல குறுணி நிவேதனப்பொருள்களைப் பலியாக வைத்து
வெறியாடும் பெரிய களம் பொலிவுறுமாறு துதித்து
ஆட்டுக்குட்டியின் உயிரைப் பலியிடா முன்னரே
2.
மறி குரல் அறுத்து தினை பிரப்பு இரீஇ – குறு 263/1
ஆட்டின் கழுத்தை அறுத்தும், தினையைக் குறுணியளவு படைத்தும்
|
பிரமம் |
பிரமம் – (பெ) ஒரு வீணை வகை, a kind of lute
தெய்வ பிரமம் செய்குவோரும் – பரி 19/40
தெய்வத்தன்மையுள்ள பிரமவீணையினை இசைப்போரும்,
|
பிரம்பு |
பிரம்பு – (பெ) 1. கொடிவகை, கெட்டியான, மெல்லிதான மூங்கில், rattan, Calamus rotang, Calamus viminalis
2. வெட்டிய பிரம்புத்துண்டால் (cane) செய்யப்பட்ட, தேரின் ஒரு பகுதி, a part of a chariot made of cane
3. ஒரு மலை, a hill
1.
பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை
நீர் நணி பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம் – பெரும் 287,288
பொதிந்த இரையைக் கௌவி (அகப்படாதுபோன)பிளந்த வாயையுடைய வாளை மீன்,
நீர் அருகிலுள்ள பிரம்பின் (நீரலையால்)நடுங்கு(வது போல் தோன்று)ம் நிழலைக் கண்டு அஞ்சும்,
2.
திண் தேர் பிரம்பின் புரளும் தானை – மது 435
திண்ணிய தேரின் பிரம்பின்கண் புரளுகின்ற முன்றானையினையும்
இந்தப் பிரம்பு அரம் போன்ற முட்களையுடையது.
பழன பொய்கை அடைகரை பிரம்பின்
அர வாய் அன்ன அம் முள் நெடும் கொடி – அகம் 96/3,4
மருதநிலத்துப் பொய்கையின் அடைகரையிலுள்ள பிரம்பினது
அரத்தின் வாய் போன்ற அழகிய முட்களைக் கொண்ட நீண்ட கொடி
புளிப்பான பழத்தையுடையது.
தீம் புளி பிரம்பின் திரள் கனி பெய்து – அகம் 196/6
இனிப்புடன் கூடிய புளிப்பினையுடைய பிரம்பின் திரண்ட பழத்தினைப் பெய்து
இதன் கொடி ஒன்றோடொன்று பின்னிக்கிடக்கும்.
அரில் பவர் பிரம்பின் வரி புற விளை கனி – குறு 91/1
ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருக்கிற கொடியாகிய பிரம்பின், புறத்தில் வரிகொண்ட விளைந்த கனியை,
3.
அருவி ஆம்பல்கலித்த முன்துறை
நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன
மின் நீர் ஓதி – அகம் 356/18-20
அருவிநீர் வீழ்ந்துகொண்டிருக்கும் நீர்த்துறையின் முன் பக்கத்தே ஆம்பல் பூக்கள் தழைத்திருக்கும்
நன்னனது அழகிய பிரம்பு மலையைப் போன்று
மின்னுகின்ற கருமையான கூந்தலை உடையவளே!
|
பிரிபு |
பிரிபு – (பெ) பிரிதல், பிரிவு, separation
என்றும் என் தோள் பிரிபு அறியலரே – நற் 1/2
என்றைக்கும் எனது தோளினைப் பிரிதலை அறியார்,
|
பிரியலன் |
பிரியலன் – (வி.மு) பிரிந்து செல்ல மாட்டேன், I won’t depart
நின்னின் பிரியலன் அஞ்சல் ஓம்பு என்னும்
நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே – கலி 21/7,8
உன்னைவிட்டுப் பிரியேன், அஞ்சுவதை விலக்கு என்ற
நலமிக்க மொழிகளையும் நீ சொன்னாயே!
|
பிரியலம் |
பிரியலம் – (வி.மு) பிரிந்து செல்ல மாட்டோம், I won’t depart
தையல் நின்வயின் பிரியலம் யாம் என
பொய் வல் உள்ளமொடு புர்வுண கூறி – அகம் 205/3,4
பெண்ணே! நின்னிடத்தினின்றும் யாம் பிரியேம் என்று
பொய் மிக்க உள்ளத்தால்யாம் விரும்புமாறு கூறி
|
பிரியலர் |
பிரியலர் – (பெ) பிரிந்து செல்லாதவர், one who won’t depart
நம்வயின்
பிரியலர் போல புணர்ந்தோர் மன்ற – ஐங் 336/1,2
நம்மைவிட்டுப்
பிரிந்து செல்லாதவர் போல நம்மைச் சேர்ந்திருந்தவர்தான்
|
பிரியல் |
பிரியல் – (பெ) பிரிந்து செல்லுதல், departing
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின் – நற் 243/10
பிரிந்து செல்லுதல் ஆடவர்க்கு இயல்பு எனின்
|
பிருங்கலாதன் |
பிருங்கலாதன் – (பெ) இரணியன் மகன் பிரகலாதன், Prahalathan, the son of King HiraNyan
பிருங்கலாதன் பல_பல பிணி பட
வலந்து_உழி – பரி 4/12,13
(இரணியன் அந்தப்) பிரகலாதனைப் பலவாறு பிணிபடுமாறு
கட்டிப்போட்ட பொழுது
|
பிறக்கிடு |
பிறக்கிடு – (வி) பின்னிடு, பின்னே செல், go back
நிலம் பிறக்கிடுவது போல குளம்பு கடையூஉ
உள்ளம் ஒழிக்கும் கொட்பின் மான் – புறம் 303/1,2
நிலம் பின்னிடுவது போல் கால் குளம்பை ஊன்றி
காண்போர் ஊக்கத்தைக் கெடுக்கும் விரைந்த செலவினையுடைய குதிரை
|
பிறக்கு |
பிறக்கு – 1. (வி) குவி, அடுக்கு, heap, pile up
– 2. (பெ) 1. பின்பக்கம், back, rear
2. பின் நாள், இனிமேல், hereafter
1.
கூனி குயத்தின் வாய் நெல் அரிந்து
சூடு கோடு ஆக பிறக்கி நாள்தொறும்
குன்று என குவைஇய குன்றா குப்பை – பொரு 242-244
குனிந்துநின்று, அரிவாளின் வாயால் நெல்லை அறுத்துச்,
சூட்டை மலையாக அடுக்கி, நாள்தோறும்
மலை என்னும்படி குவித்த குறையாத நெற்பொலி
2.1
முதிர் காய் வள்ளி அம் காடு பிறக்கு ஒழிய
துனை பரி துரக்கும் செலவினர் – முல் 101,102
முதிர்ந்த காயையுடைய வள்ளியங்காடு பின்னாக மறைய,
விரைந்து செல்லும் பரியைக் கடிதாகச் செலுத்தும் செலவினையுடையவரின்
2.2
தந்தை வித்திய மென் தினை பைபய
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ – நற் 306/1,2
தந்தை விதைத்த மென்மையான தினைப்பயிரைக் காக்க, மெல்லமெல்ல வரும்
சிறிய கிளைகளை ஓட்டுதல் இனிமேல் என்ன ஆகுமோ?
|
பிறங்கடை |
பிறங்கடை – (பெ) வழித்தோன்றல், Descendant
இரு நிலம் கடந்த திரு மறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை – பெரும் 29,30
பெரிய நிலத்தை அளந்துகொண்ட திருவாகிய மறுவை அணிந்த
கடல் (போலும்) நிறத்தையுடையவன் பின்னிடத்தோனாய்
அந்தரத்து
அரும் பெறல் அமிழ்தம் அன்ன
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே – புறம் 392/19-21
கடற்கு அப்புறத்தாயுள்ள நாட்டிலுள்ள
பெறற்கரிய அமுதம்போன்ற
கரும்பை இந்நாட்டிற்குக் கொண்டுவந்தவனுடைய பெரிய வழித்தோன்றலே
(அதியமான் மகன் பொகுட்டெழினியை ஔவையார் பாடியது)
|
பிறங்கல் |
பிறங்கல் – (பெ) 1. மலை, mountain
2. பாறை, rock
3. குவியல், திரள், mass, heap
4. ஒளி, விளக்கம், light, brightness
5. மலைத்தொடர், mountain range
பிறங்கல் என்ற சொல் பெரும்பாலும் மலை என்ற சொல்லுக்கு அடைச்சொல்லாகவே வருகிறது. அவற்றைத் தவிர
பிறங்கல் என்று முழுச்சொல்லாக வரும் இடங்களைப் பார்ப்போம்.
1.1
எண்ணரும் பிறங்கல் மான் அதர் மயங்காது – அகம் 8/13
எண்ணற்கரிய குன்றுகளின் பக்கமாகச் செல்லும் மான்களின் நெறிகளில் மயங்கித் திரியாது
1.2
தலையாற்று நிலைஇய சேய் உயர் பிறங்கல்
வேய் அமை கண் இடை புரைஇ – அகம் 152/22,23
தலையாறு என்னுமிடத்து நிலைபெற்ற மிக உயர்ந்த மலையிடத்திலுள்ள
மூங்கிலிற் பொருந்திய கணுக்களின் நடுவிடத்தை ஒத்து
1.3
வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவிய – பரி 21/46
வண்டுகள் ஆரவாரித்தற்கிடமான மாலையணிந்த தமது மலையை ஒத்த மார்பின்கண் பூசிய
1.4
கடும் கதிர் திருகிய வேய் பயில் பிறங்கல் – அகம் 17/15
கடுமை மிக்க ஞாயிற்றின் கதிர்கள் முறுகிய மூங்கில் அடர்ந்த பக்கமலை
2.1
பிறங்கல் இடையிடை புக்கு பிறழ்ந்து – பரி 19/59
விளங்கும் பாறைகளின் இடையே இடையே நெறிதவறி புகுந்து திகைத்து
2.2
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல்
வேய் கண் உடைந்த சிமைய – அகம் 399/16,17
காயும் ஞாயிறு முடுகிய அழகு ஒழிந்த பாறைகளையும்
மூங்கில் கணுக்கல் உடைந்த சிகரங்களையும்
3.1
தண் துளி பல பொழிந்து எழிலி இசைக்கும்
விண்டு அனைய விண் தோய் பிறங்கல்
முகடு உற உயர்ந்த நெல்லின் – புறம் 391/1-3
தண்ணிய நீர்த்துளிகள் பலவற்றையும் சொரிந்து மேகங்கள் முழங்கும்
மலை போன்ற வானளாவிய குவியலாய்
உச்சி உண்டாக உயர்வுறக் குவ்இத்த நெல்லாகிய
4. கீழ்க்கண்ட இடங்களில் பிறங்கல் என்ற சொல் மலை என்ற சொல்லுக்கு அடைமொழியாக வருவதைக் காணலாம்.
சில உரையாசிரியர்கள் இந்தச் சொல்லுக்கு, ‘பிறங்குதலையுடைய’ எனப் பொருள் கொள்கின்றனர். பிறங்குதல் என்பது
விளங்குதல் என்றும் விளக்குகின்றனர். இவை எல்லாவற்றிலும் ‘உயர்’என்ற அடைமொழியும் இருக்கக் காண்கிறோம்.
எனவே, மிக உயரமான மலைகளே பிறங்கல் மலை எனப்படுகின்றன. உச்சியில் பெரிய கற்பாறைகளைக் கொண்ட
மலைகள் வெயிலடிக்கும்போது ‘பளிச்’ என்று இருக்கும். அவற்றைப் பிறங்கல் மலை என்று கொண்டனர் எனலாம்.
பிறங்கல் என்ற தனிச்சொல்லுக்குப்பாறை என்ற பொருள் அமைகிறது என்பதனை இங்கு பொருத்திப் பார்க்கவேண்டும்.
5.
மேலும், ’பிறங்கல் மலை இறந்தோரே’ என்று மலையைக் கடந்துசெல்வதைப் பற்றிப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.
எனவே, இது தனி மலையாக இருக்கமுடியாது. ஒரு நீண்ட மலையாகவோ, அல்லது மலைகளின் அடுக்காகவோ
இருக்கவேண்டும். எனவே, பிறங்கல் மலை என்பதற்கு அடுக்கடுக்கான நீண்ட மலைத்தொடர் (mountain range) என்று
பொருள் கொள்வது பொருத்தம் எனத் தோன்றுகிறது. கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி – அகம் 393/1
என்ற அகநானூற்று அடி இதனை உறுதிப்படுத்துகிறது.
கோடு உயர் பிறங்கல் மலை கிழவோனே – நற் 28/9
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே – குறு 144/7
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – குறு 253/8
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே – குறு 285/8
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – ஐங் 318/5
குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே – ஐங் 387/6
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 111/15
நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 185/13
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 247/13
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 249/19
கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 313/17
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே – அகம் 321/17
கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி – அகம் 393/1
|
பிறங்கு |
பிறங்கு – (வி) 1. ஒளிர், சுடர்விடு, பிரகாசி, shine, glitter, glisten
2. உயர், be high, lofty
3. பெருகு, வழிந்தோடு, overflow
4. பெருத்திரு, மிகுதியாயிரு, be plenty
5. செறிவாயிரு, be dense
6. சிறந்திரு, be great, eminent, exalted
1.
திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை மார்பில்
தெரி மணி பிறங்கும் பூணினை – பரி 1/8,9
திருமகள் நிறைந்து உறையும் மார்பினையுடையவன்! அந்த மார்பில்
தெரிந்தெடுத்துத் தொடுத்த மணிகள் ஒளிவீசும் பூணை அணிந்திருப்பவன்!
2.
பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி – பட் 285
உயரமான நிலைகளையுடைய மாடங்கள் அமைந்த உறையூரை விரிவுரச்செய்து
3.
பிறங்கு வெள் அருவி வீழும் சாரல் – சிறு 90
மிகுகின்ற வெள்ளிய அருவிநீர் வீழும் பக்கத்தினையுடைய
4.
மேதி அன்ன கல் பிறங்கு இயவின் – மலை 111
எருமை கிடந்தாற்போன்ற கல் பெருத்த வழியிடத்திலே
5.
மரம் பிறங்கிய நளி சிலம்பின் – புறம் 136/12
மரங்கள் செறிந்த குளிர்ந்த மலையில்
6.
அறம் கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய
உரை சால் வேள்வி முடித்த கேள்வி – பதி 64/3,4
அறநூல்களை ஓதிப் பயின்று விளங்கிய நாவினையும், உயர்ந்த
புகழமைந்த வேள்விகள் பல செய்துமுடித்தற்கேதுவாகிய கேள்வியினையுமுடைய
|
பிறன் |
பிறன் – (பெ) வேறொருவன், அன்னியன், some other man, stranger
அறன்கடைப்படா வாழ்க்கையும் என்றும்
பிறன் கடை செலாஅ செல்வமும் இரண்டும்
பொருளின் ஆகும் புனையிழை – அகம் 155/1-3
அறத்தினின்றும் நீக்கப்படாத வாழ்க்கையும், என்றும்
அடுத்தவன் மனைவாசலில் சென்று நில்லாத மேம்பாடும் ஆகிய இரண்டும்
பொருளால்தான் ஆகும் அழகிய அணியுடையவளே
|
பிறள் |
பிறள் – (பெ) மற்றவள், அன்னியள், some other woman, strange woman
என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும்
தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர் – கலி 9/6,7
என் மகள் ஒருத்தியும், வேறொருத்தியின் மகன் ஒருவனும்
தமக்குத்தாமே காதல் கொண்டு, இப்போது பிறர் அறியும்படி ஒன்றுசேர்ந்தனர்,
|
பிறழ் |
பிறழ் – (வி) 1. முறையின்றி இரு, be irregular, misplaced, out of order
2. மறி, மடி, திரும்பு, பின்னோக்கி வா, return, recede
3. மாறுபட்டுக்கிட, lie in disorder
4. இறந்துபோ, die
5. வழிதவறு, lose the way
6. துள்ளு, leap, jump as fish
7. தலைகீழாய் மாறு, முற்றிலும் தன்மை மாறு, complete change in form, aspect, colour or quality
8. அசை, புடைபெயர், move
9. திகை, மருள், get confused, shocked
1.
உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய்
சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின்
—————– ——————————-
உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் – திரு 47-51
காய்ந்து போன மயிரினையும், நிரை ஒவ்வாத பல்லினைக் கொண்ட பெரிய வாயினையும்,
சுழலும் விழியையுடைய பசிய கண்ணினையும், கொடிய பார்வையினையும்,
————— ——————————-
(கண்டோர்)அஞ்சுதல் பொருந்திய நடையினையும் உடைய அச்சம் தோன்றுகின்ற பேயாகிய மகள்
2.
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி – பெரும் 215
அரும்புகள் சூழ்ந்த இதழ்களையுடையவாகி மறிந்த வாயினையுடைய முள்ளி
3.
கழுதை
குறை குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின் – அகம் 207/5,6
கழுதைகளின்
தேய்ந்த குளம்பு உதைத்தலால் பரல்கற்கள் மாறுபட்டுக்கிடக்கும் வழியாய
4.
பிணிபு நீ விடல் சூழின் பிறழ்தரும் இவள் என
பணிபு வந்து இரப்பவும் பல சூழ்வாய் ஆயினை – கலி 3/14,15
இவளுடன் சேர்ந்திருப்பதை நீ விட்டுவிட எண்ணினால், இறந்துவிடுவாள் இவள் என்று
மிகவும் பணிந்து நின்று வேண்டிக்கொள்ளவும், பிரிவதற்குரிய பல வழிகளை ஆராய்ந்து பார்க்கிறாய்
5.
பிறந்த தமரின் பெயர்ந்து ஒரு பேதை
பிறங்கல் இடையிடை புக்கு பிறழ்ந்து யான்
வந்த நெறியும் மறந்தேன் சிறந்தவர்
ஏஎ ஓஒ என விளி ஏற்பிக்க – பரி 19/58-61
தான் பிறந்த சுற்றத்தாரினின்றும் பிரிந்து ஓர் அறியா இளம்பெண்
செறிவான பாறைக்கற்களுக்கு இடையிடையே புகுந்து, வழிதவறி, நான்
வந்த வழியை மறந்துவிட்டேன் என்று தன் பெற்றோரை,
ஏஎ ஓஒ என்று தன் அவர் கேட்கும்படி செய்ய,
6.
தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும் – பதி 13/1,2
பசுக்கூட்டங்கள் கிடைபோட்ட வயல்வெளிகளில் ஆரல்மீன்கள் துள்ளிவிளையாடவும்
7.
வட திசையதுவே வான் தோய் இமயம்
தென் திசை ஆஅய் குடி இன்று ஆயின்
பிறழ்வது-மன்னோ இ மலர் தலை உலகே – புறம் 132/7-9
வட திசைக்கண்ணதாகிய வானைப் பொருந்தும் இமய மலையும்
தென் திசைக்கண் ஆய் குடியும் இல்லையாயின்
கீழ் மேலதாகிக் கெடும் இந்தப் பரந்த இடத்தையுடைய உலகம்
8.
கொல் களிற்று உரவு திரை பிறழ அ வில் பிசிர
புரை தோல் வரைப்பின் எஃகு மீன் அவிர்வர – பதி 50/8,9
கொல்லுகின்ற களிறுகள் வலிமையுள்ள கடலலைகளாய் நடந்துவர, அழகிய வில்கள் பிசிர் போல் விளங்க,
உயர்ந்த தோலாகிய கேடகங்களுக்கு மேல்பக்கத்தில் வேல்முனைகள் மீன்களாய் மின்னியொளிர,
9.
பேஎ மன்ற பிறழ நோக்கு இயவர் – பதி 78/10
கண்டார்க்கு அச்சத்தை உண்டுபண்ணும் பகைவரை மருண்டு நோக்கும் பார்வையினையும் பல இயங்களையும்
உடைய பகைவீரர்
|
பிறிது |
பிறிது – (பெ) வேறு, மற்றது, some other thing
பெரும் தோள் குறு_மகள் அல்லது
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – நற் 80/8,9
பெரிய தோள்களைக் கொண்ட இளையோளே அன்றி
மருந்து வேறு இல்லை நான் அடைந்த இந்த நோய்க்கு
|
பிற்படு |
பிற்படு – (வி) 1.பின்னே செல், go behind
2. பின்னே வா, come behind
3. பின்தங்கு, lag behind
1.
மான் ஏறு உகளும் கானம் பிற்பட
வினை நலம் படீஇ வருதும் அ வரை – குறு 256/3,4
ஆண்மான் துள்ளிவிளையாடும் காடு பின்னே செல்ல,
நாம் மேற்கொண்ட தொழிலின் பயனைப் பெற்றுக்கொண்டு வருவோம்; அந்நாள் வரை
2.
இயல் முருகு ஒப்பினை வய நாய் பிற்பட
பகல் வரின் கவ்வை அஞ்சுதும் – அகம் 118/5,6
இயங்கும் முருகனை ஒப்பாகிய வலிய நாய் பின்னேவர
பகலில் நீ வந்தால் ஊரார் கூறும் பழிச்சொல்லுக்கு அஞ்சுகிறோம்
3.
மத்தரி தடாரி தண்ணுமை மகுளி
ஒத்து அளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார்
நித்தம் திகழும் நேர் இறை முன்கையால்
அ தக அரிவையர் அளத்தல் காண்-மின் – பரி 12/41-44
மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி ஆகிய இசைக்கருவிகளின்
தாளத்தை அளந்து சீரின் கூறுபாட்டை அறிந்து, ஒருவருக்கொருவர் பின்னிடாத தகுதியுடையவராய்
நடன அசைவுகள் நன்கு விளங்கும் நேராக இறங்கும் தம் முன்கையால்
அழகுமிக்கதாய் ஆடல்மகளிர் அந்தத் தாளத்தை அளத்தலைப் பாருங்கள்;
|
பிற்றை |
பிற்றை – (பெ) 1. பின்னர், afterwards
2. பின் பக்கம், back side
1.
பிற்றை
அணங்கும் அணங்கும் போலும் – நற் 376/9,10
இதன் பின்னர்
முருகவேளும் என்னை வருத்தும் போலும்?
2.
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே – புறம் 183/1,2
தன் ஆசிரியர்க்கு ஓர் ஊறுபாடுற்றவிடத்து அது தீர்தற்கு உதவியும், மிக்க பொருளைக் கொடுத்தும்
பின் நின்று கற்கும் நிலையையும் வெறுக்காமல் கற்பது நன்று.
|
பிலிற்று |
பிலிற்று – (வி) வெளிவிடு, let out, as milk from the udder; to spill;
திதலை மென் முலை தீம் பால் பிலிற்ற
புதல்வன் புல்லி புனிறு நாறும்மே – நற் 380/3,4
தேமல் படிந்த மென்மையான கொங்கைகளின் இனிய பால் சுரந்து வழிய
புதல்வனை அணைத்துக்கொள்வதால் புனிற்றுப் புலவு நாறுகின்றது;
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன்
வீங்கு மாண் செருத்தல் தீம் பால் பிலிற்ற
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும் – அகம் 14/9-11
அறுகம்புல் மேய்ச்சலில் உணவருந்திய செருக்கிய நடையுடைய நல்ல ஆனினங்கள்
பருத்த மாண்புடைய மடி இனிய பாலைப் பொழிய,
கன்றை நினைத்து அழைக்கும் குரலையுடையவாய் மன்றத்தில் கூட்டமாய்ப் புகுகின்ற
|
பிளவை |
பிளவை – (பெ) பிளக்கப்பட்ட துண்டு, slice, piece
முளவு_மா தொலைச்சிய பைம் நிண பிளவை
பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ – மலை 176,177
முள்ளம்பன்றியைக் கொன்ற மின்னுகின்ற கொழுப்பையுடைய பிளக்கப்பட்ட தசைத்துண்டுகளையும்,
பெண் நாயை விரட்டிக் கடிக்கவிட்டுக்கிடைத்த (உடும்பின்)பருமனான தசைத்துண்டோடு கலந்து,
|
பிளிறு |
பிளிறு – (வி) 1. (யானை) பேரொலி எழுப்பு, trumpet
2. யானையைப் போல் முழக்கமிடு, make a loud noise like the roar ofan elephant
1.
பெரும் களிறு பிளிறும் சோலை – நற் 222/9
பெரிய ஆண்யானை முழக்கமிடும் சோலை
2.1
வெண்ணெல் அரிநர் பின்றை ததும்பும்
தண்ணுமை வெரீஇய தடம் தாள் நாரை
செறி மடை வயிரின் பிளிற்றி – அகம் 40/13-15
வெண்ணெல்லை அரிவோரின் பின்னே நிறைந்து ஒலிக்கும்
தண்ணுமைப் பறையின் ஓசைக்கு அஞ்சிய நீண்ட கால்களையுடைய நாரை
செறிந்த மூட்டுவாயினை உடைய கொம்புவாத்தியம் போல் பிளிற்றி
2.2
கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும்
தேர் வண் கோமான் தேனூர் – ஐங் 55/1,2
கரும்பினைப் பிழியும் எந்திரமானது களிறு பிளிறும் குரலுக்கு எதிராக ஒலிக்கும்
தேரினையும், வள்ளண்மையையும் கொண்ட பாண்டியனின் தேனூர்
2.3
கார் பெயல் உருமின் பிளிறி சீர் தக – குறி 162
கார்காலத்து மழையின் இடி போல முழக்கத்தையுண்டாக்கி
2.4
பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம் – பட் 236
பேயின் கண்ணை ஒத்த, முழங்குகின்ற காவலையுடைய முரசம்
|
பிழா |
பிழா – (பெ) வட்டமான பிரம்புத்தட்டு, கூடை, round wicker plate, basket
அவையா அரிசி அம் களி துழவை
மலர் வாய் பிழாவில் புலர ஆற்றி – பெரும் 275,276
அவிக்காத(நெல்லின்) அரிசி(பச்சரிசி)யை அழகிய களி(யாகத் துழாவி அட்ட) குழைசோற்றை
அகன்ற வாயையுடைய தட்டுப் பிழாவில் உலரும்படி ஆறவைத்து,
|
பிழி |
பிழி – 1. (வி) கையால் முறுக்கி/இறுக்கி நீர்/சாறு/பால் வெளியேறச் செய், squeeze, express, press out with the hands;
– 2. (பெ) கள், toddy
1
பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவுழி
நளி படு சிலம்பில் பாயம் பாடி
பொன் எறி மணியின் சிறு புறம் தாழ்ந்த எம்
பின் இரும் கூந்தல் பிழிவனம் துவரி – குறி 57-60
பளிங்கை (க் கரைத்துக்)கொட்டியதைப் போன்ற பரந்த சுனையில் மூழ்கி விளையாடுகின்றபொழுது,
அடர்த்தி மிக்க மலைச்சாரலில் மனவிருப்பப்படி பாடி,
தங்கத்தில் பதிக்கப்பட்ட (நீல)மணியைப் போல சிறிய முதுகில் தாழ்ந்து கிடந்த எம்
பின்னப்பட்ட கரிய கூந்தலைப் பிழிந்து ஈரத்தைப் புலர்த்தி,
தடம் கோட்டு ஆமான் மடங்கல் மா நிரை
குன்ற வேங்கை கன்றொடு வதிந்து என
துஞ்சு பதம் பெற்ற துய் தலை மந்தி
கல்லென் சுற்றம் கை கவியா குறுகி
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி தீம் பால்
கல்லா வன் பறழ் கை நிறை பிழியும் – நற் 57/1-6
வளைந்த கொம்புகளையுடைய காட்டுப்பசு, சிங்கம் முதலான விலங்குகளின் கூட்டம் உள்ள
குன்றிலுள்ள வேங்கை மரத்தடியில் தன் கன்றுடன் படுத்திருந்ததாக,
அது தூங்கும் நேரத்தில், பஞ்சுபோன்ற தலையையுடைய குரங்கு
கல்லென ஒலிக்கும் தன் சுற்றத்தைக் கையமர்த்தி, கிட்டே சென்று
பருத்த பால்மடியை அமுக்கிப் பற்றி இழுத்து, இனிய பாலை
தன் இளைய வலிய குட்டியின் கை நிறையப் பிழிந்துகொடுக்கும்
கரும்பின்
விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு – அகம் 237/11,12
கரும்பின்
முற்றிய தண்டினைப் பிழிந்த அழகிய இனிய சாறு அட்ட பாகுடன்
களிறு மென்றிட்ட கவளம் போல
நறவு பிழிந்து இட்ட கோது உடை சிதறல் – புறம் 114/3,4
யானை மென்று துப்பிய கவளத்தின் சக்கை போல
மதுவைப் பிழிந்து போட்ட சக்கையாகிய சிதறியவற்றினின்றும்
2.
வல் வாய் சாடியின் வழைச்சு அற விளைந்த
வெம் நீர் அரியல் விரல் அலை நறும் பிழி
தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் – பெரும் 280-282
கெட்டியான வாயினையுடைய சாடியில் இளங்கள்ளின் நாற்றம் அறும்படி முற்றின(பின்),
வெந்நீரில்(போட்டு) இறுத்ததை விரலிடுக்கில் அலைத்துப்(பின் விரல்மூடிப்) பிழிந்த நறிய கள்ளை,
பச்சை மீனைச் சுட்டதனோடு, (பசியால்)தளர்ந்தவிடத்தே பெறுவீர் –
|
பிழை |
பிழை – 1. (வி) 1. ஆபத்திலிருந்து தப்பு, survive a danger, escape from an evil or danger
2. இலக்குத் தவறு, miss the target
3. தவறுசெய், குற்றம்புரி, err, do wrong
4. தீங்குசெய், do harm
5. நேர்வழியினின்றும் விலகிச்செல், deflect, deviate from a straight path
6. நடவாது போ, பொய்த்துப்போ, fail, be unsuccessful
7. உயிர் வாழ், உயிரோடிரு, live
– 2. (பெ) 1. (தெய்வ)குற்றம், (devine) fault
2. தவறு, mistake
3. பொய்த்துப்போனது, a failed event
1.1
புலி கோள் பிழைத்த கவை கோட்டு முது கலை – ஐங் 373/2
புலியின் பிடியிலிருந்து தப்பித்த கிளைப்பட்ட கொம்புகளையுடைய முதிய கலைமான்,
1.2
களிறு கோள் பிழைத்த கதம் சிறந்து எழு புலி – ஐங் 218/3
களிற்றைக் கொல்வதில் தவறிவிட்ட சினம் மிகுந்து எழுந்துவரும் புலி
1.3
குவளை உண்கண் இவளும் யானும்
கழனி ஆம்பல் முழு_நெறி பைம் தழை
காயா ஞாயிற்று ஆக தலைப்பெய
பொய்தல் ஆடி பொலிக என வந்து
நின் நகா பிழைத்த தவறோ பெரும – அகம் 156/7-12
நீலப்பூ போலும் மையுண்ட கண்ணினையுடைய இத் தலைவியும் நானும்
வயலில் மலர்ந்த ஆம்பல் மலரின் அகவிதழ் ஒடிக்கப்படாத முழுப்பூவின் தழைகளை
ஞாயிறு காயாத விடியற்காலத்தில் தலையிலே செருகிக்கொண்டு,
சிற்றில் விளையாட்டு விளையாடி சிறந்திடுக என்று தாய் கூற, இங்கு வந்து
உன்னுடன் நகைத்து அளவளாவிப் பேசிய குற்றம்புரிந்தமையால் உண்டான தவறோ, பெருமானே
1.4
நலம்பெறு பணை தோள் நல்நுதல் அரிவையொடு
மணம் கமழ் தண் பொழில் அல்கி நெருநை
நீ தன் பிழைத்தமை அறிந்து
கலுழ்ந்த கண்ணள் எம் அணங்கு அன்னாளே – அகம் 366/13-16
அழகுபெற்ற மூங்கில் போலும் தோளும் நல்ல நெற்றியும் உடைய பரத்தையோடு
மணம் கமழும் குளிர்ந்த சோலையிலே தங்கி, நேற்று
நீ தனக்கு தீங்குசெய்ததை உணர்ந்து
அழுத கண்ணினையுடையவள் ஆனாள், எம் தெய்வம் போன்றவளான தலைவி
1.5
உயர் நிலை உலகம் இவணின்று எய்தும்
அற நெறி பிழையா அன்பு உடை நெஞ்சின்
பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளியும் – மது 471-474
உயர்ந்த நிலையையுடைய வீடுபேற்றை இவ்வுலகிலேயே நின்று சேரும்
அறத்தின் வழி (ஒருக் காலமும்)தப்பாது அருள் நிரம்பிய நெஞ்சினையுடைய
பெரியோர் பொருந்தி இன்புற்று வதியும்
மலையைக் குடைந்ததைப் போன்ற அந்தணர்கள் இருக்கைகளும் –
1.6
மழை ஒழுக்கு அறாஅ பிழையா விளையுள் – மது 507
மழை பெய்தல் அற்றுப்போகாத பொய்க்காத விளைச்சலையுடைய
1.7
பிழையலள் மாதோ பிரிதும் நாம் எனினே – அகம் 5/28
உயிரோடிருக்கமாட்டாள் அல்லவா பிரிந்துசென்றோம் நாம் எனின்.
2.1
காமர்
பெருக்கு அன்றோ வையை வரவு
ஆம் ஆம் அது ஒக்கும் காதல் அம் காமம்
ஒருக்க ஒருதன்மை நிற்குமோ ஒல்லை
சுருக்கமும் ஆக்கமும் சூள் உறல் வையை
பெருக்கு அன்றோ பெற்றாய் பிழை – பரி 6/70-74
அழகிய
நீர்ப்பெருக்கு அன்றோ இந்த வையையின் புதுப்புனல் வரவு
ஆமாம், அது சரிதான் காதலையுடைய அழகிய காமமும்
ஒருமிக்க ஒரே தன்மையுடையதாய் இருப்பதுண்டோ? விரைவாகச்
சுருங்கிப்போவதும், பின்பு பெருகுவதும் – இதற்காக நீ சூளுரைக்கவேண்டாம் – வையையின்
பெருக்கினைப் போலத்தானே அதுவும்! பெற்றாய் தெய்வ குற்றம்!
2.2
மகள் இவன்
அல்லா நெஞ்சம் உற பூட்ட காய்ந்தே
வல் இருள் நீயல் அது பிழை ஆகும் என – பரி 6/98-100
மகளே! இவன்
துன்புற்ற நெஞ்சம் இறுகப் பூட்டிக்கொள்ளும்படி அவன் மீது சினந்துவிட்டுப்
பின்னர் அவனைத் தேடிச் செறிந்த இருளில் செல்லவேண்டாம், அது தவறாகும்
2.3
கனவின் தொட்டது கை பிழை ஆகாது
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை
வரு புனல் அணிக என வரம் கொள்வோரும் – பரி 8/103-105
கனவில் காதலரின் கையைத் தொட்டது பொய்த்துப்போனது ஆகாமல்
நனவினிலும் கிட்டும்படி, ‘உனக்குரிய செறிந்த நீரையுடைய வையை ஆறு
புதிதாய் வரும் புனலை அணிவதாக’ என்று வரம் கேட்போரும்,
|
பிழைப்பு |
பிழைப்பு – (பெ) 1. பொய்த்துப்போதல், failure to happen
2. (இகழ்ச்சி அல்லது வருத்தக்குறிப்பு) வாழ்க்கை, உயிர்வாழ்தல்,
life, existence (with a slight or contempt)
3. இழத்தல், losing
1.
வளம் பிழைப்பு அறியாது வாய் வளம் பழுநி – மலை 578
வளம் பொய்த்துப்போதல் இல்லாது, வாய்த்த வளமும் செழித்துமிகுந்து(உள்ள
2.
நின் இன்று அமைகுவென் ஆயின் இவண் நின்று
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ – நற் 400/5,6
நீயின்றி வாழ்தல் எனக்குக் கூடுமாயின், இவ்விடத்திலிருந்து
இனிமையைத் தராத நோக்கத்துடன் எனக்கு என்ன பிழைப்புத்தான் உண்டு
3.
செய்த மேவல் அமர்ந்த சுற்றமோடு
ஒன்றுமொழிந்து அடங்கிய கொள்கை என்றும்
பதி பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி
நிரையம் ஒரீஇய வேட்கை புரையோர் – பதி 15/28-31
சான்றோர் செய்த நல்லறங்களைத் தாமும் விரும்பிச் செய்து சூழ இருக்கும் சுற்றத்தாருடன்,
உண்மையே உரைத்துப் புலனடங்கிய ஒழுக்கத்தோடு, எப்பொழுதும்
வாழுமிடங்களை இழப்பதை அறியாது, இனியவற்றை நுகர்வதை அடைந்து,
நரகத்தை வெறுத்த அறவேட்கையுடைய சான்றோர்
|
பீடர் |
பீடர் – (பெ) பெருமையுடையவர், Persons of eminence
சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில்
ஓடா பீடர் உள்_வழி இறுத்து – பதி 45/13,14
சோறு வேறு ஊன் வேறு என்று பிரிக்கமுடியாதபடி ஊன் குழையச் சமைத்த உணவினை
பகைவருக்குப் புறங்கொடுத்து ஓடாத பெருமையையுடைவர்களுக்கு அவர்கள் இருக்குமிடங்களில் அளித்து,
|
பீடு |
பீடு – (பெ) பெருமை, greatness, honour
பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது
ஆடவர் குறுகா அரும் கடி வரைப்பின் – நெடு 106,107
பெருமை பொருந்தின தலைமையினையுடைய மன்னனைத் தவிர
(மற்ற)ஆண்கள் கிட்டே(யும்)வராத கடும் காவலையுடைய மனைக்கட்டுக்களின்
|
பீரம் |
பீரம் – (பெ) பார்க்க : பீர்
புன் கொடி முசுண்டை பொறி புற வான் பூ
பொன் போல் பீரமொடு புதல்_புதல் மலர – நெடு 13,14
புல்லிய கொடியையுடைய முசுட்டையில் திரண்ட புறத்தையுடைய வெண்ணிறப் பூ
பொன் போன்ற (நிறமுள்ள)பீர்க்குடன் புதர்கள்தோறும் மலர,
|
பீரை |
பீரை – (பெ) பார்க்க : பீர், பீரம்
பீரை நாறிய சுரை இவர் மருங்கின் – புறம் 116/6
பீர்க்கு முளைத்த சுரை படர்ந்த இடத்தில்
|
பீர் |
பீர் – (பெ) பீர்க்கங்கொடி, sponge-gourd
தோளே தொடி நெகிழ்ந்தனவே நுதலே
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே – நற் 197/1,2
தோள்கள் தம் தோள்வளைகள் நெகிழ்ந்துபோகுபடி ஆயின; நெற்றியும்
பற்றியேறும் பீர்க்கங்கொடியின் மலரைப் போன்று பசலை படர்வதாயிற்று
|
பீலி |
பீலி – (பெ) மயில்தோகை, Peacock’s feather
ஒலி நெடும் பீலி துயல்வர இயலி
ஆடு மயில் அகவும் நாடன் – குறு 264/2,3
தழைத்த நெடிதான தோகை அசையுமாறு வேகமாக நடந்து
ஆடுகின்ற மயில்கள் அகவும் நாட்டினன்
பழன மஞ்ஞை உகுத்த பீலி
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும் – புறம் 13/10,11
வயலிடத்து மயில் உதிர்த்த அதன் தோகையை
அங்குள்ள உழவர் நெல் சூட்டுடன் திரட்டும்
|
பீள் |
பீள் – (பெ) இளங்கதிர்கள், tender ears of paddy or corn
மாரிக்கு அவா_உற்று பீள் வாடும் நெல்லிற்கு ஆங்கு
ஆரா துவலை அளித்தது போலும் நீ
ஓர் யாட்டு ஒரு கால் வரவு – கலி 71/24-26
மழைக்காக ஏங்கிக் கதிர்விட்டு வாடிக்கிடக்கும் நெல்லுக்கு, அங்கே
போதாத சிறு தூரல் தூவியது போன்றிருக்கிறது நீ
ஓராண்டுக்கு ஒருமுறை இங்கு வருகின்ற வருகை.
|
புகரி |
புகரி – (பெ) புள்ளியையுடைய மான்கள், spotted deer
புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில் – குறு 391/2
புள்ளிமான்கள் வெப்பத்தால் புழுங்கிய மழை நீங்கிய முல்லைநிலத்தில்
|
புகர் |
புகர் – (பெ) 1. குற்றம், fault, blemisg, defect
2. புள்ளி, spot
3. கஞ்சி, rice-water used as starch
4. கபில நிற காளை, tawny coloured bull
1.
தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவல் அம்
கொடியன் நெடியன் தொடி அணி தோளன் – திரு 210,211
கிடாயையும், மயிலையும் உடையவன், குற்றமில்லாத கோழிக்
கொடியை உடையவன், நெடுக வளர்ந்தவன், தொடியை அணிந்த தோளையுடையவன்,
2.
புகர் வாய் குழிசி பூ சுமட்டு இரீஇ – பெரும் 159
(தயிர்)புள்ளிபுள்ளியாகத் தெரிந்த வாயையுடைய மோர்ப்பானையை மெல்லிய சுமட்டின் மேல் வைத்து
3.
புகா புகர் கொண்ட புன் பூ கலிங்கமொடு – நற் 90/4
சோற்றுக் கஞ்சி தோய்க்கப்பெற்ற சிறிய பூவேலைப்பாடு கொண்ட ஆடையோடு
4.
கணம்_கொள் பல் பொறி கடும் சின புகரும் – கலி 105/16
பேரளவிலான பலவித புள்ளிகளைக் கொண்ட பெருங்கோபமுள்ள புகர்நிறக் காளையும்
|
புகர்படு |
புகர்படு – (வி) 1. கெட்டுப்போ, அழிந்துபோ, perish, get ruined
2. குற்றப்படு, find fault
1.
காமம் புகர்பட
வேற்றுமை கொண்டு பொருள்_வயின் போகுவாய் – கலி 12/16,17
காம இன்பம் கெட்டுப்போகும்படி
அதனுடன் மாறுபட்டு பொருளைத் தேடிச் செல்கின்றவனே!
2.
அரசியல் பிழையாது செரு மேந்தோன்றி
நோய் இலை ஆகியர் நீயே நின்_மாட்டு
அடங்கிய நெஞ்சம் புகர்படுபு அறியாது
கனவினும் பிரியா உறையுளொடு
—————————– —————-
வாள் நுதல் அரிவையொடு காண்வர பொலிந்தே – பதி 89/12-20
– அரசுமுறையில் பிழையாமல், போரில் வெற்றியால் மேம்பட்டு,
நோயின்றி இருப்பாயாக நீயே! உன்னிடத்தில்
அன்புகொண்டு அடங்கிய நெஞ்சம் குற்றப்படுதலை அறியாமல்,
கனவிலும் பிரியாத வாழ்க்கையோடு,
—————————– ————————–
ஒளிபொருந்திய நெற்றியையுடைய உன் மனைவியுடன் அழகுற விளங்கி
|
புகர்ப்பு |
புகர்ப்பு – (பெ) புள்ளிகள் அமைந்த தன்மை, nature of having beautiful spots
குறும்பொறி கொண்ட கொம்மை அம் புகர்ப்பின்
கரும் கண் வெம் முலை – நற் 314/5,6
மார்க்கச்சு அணிந்த இளைய அழகிய நிறமுள்ள புள்ளிகள் அமைந்த
கரிய கண்கள் அமைந்த விருப்பமிகு முலைகள்
|
புகர்முகம் |
புகர்முகம் – (பெ) (புள்ளிகளைக்கொண்ட முகத்தினையுடைய) யானை, elephant
பொறி வரி புகர்முகம் தாக்கிய வய_மான் – பெரும் 448
ஆழமாய்ப்பதிந்த இரேகைகளும், புள்ளிகளும் உள்ள முகத்தினையுடைய யானையைப் பாய்ந்த அரிமா
|
புகர்வை |
புகர்வை – (பெ) உண்பதற்கு ஏற்றது, that which is suitable for consumption
புகர்வை அரிசி பொம்மல் பெரும் சோறு – நற் 60/5
உண்ணுதற்கு ஏற்ப தீட்டப்பெற்ற அரிசியை வேகவைத்த மிக்க சோற்றை
|
புகற்சி |
புகற்சி – (பெ) விருப்பம், ஆர்வம், desire, fervour
குற குறு_மாக்கள் புகற்சியின் எறிந்த
தொண்டக_சிறுபறை பாணி – நற் 104/4,5
குறவர்களின் சிறுவர்கள் ஆர்வத்தோடு முழக்கிய
தொண்டகச் சிறுபறையின் தாள ஓசை
|
புகல் |
புகல் – 1. (வி) 1. விரும்பு, desire
2. மகிழ், rejoice
3. புகழ்ந்து கூறு, praise
– 2. (பெ) 1. துணை, ஆதரவு, பற்றுக்கோடு, support, prop
2. விருப்பம், desire
3. புகுதல், entering
4. வசிப்பிடம், இருப்பிடம், dwelling, residence
5. வெற்றிச்செருக்கு, elation over victory
1.1
வெ வரி நிலைஇய எயில் எறிந்து அல்லது
உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய
நெஞ்சு புகல் ஊக்கத்தர் – பதி 68/5-7
கண்டோர் விரும்பும் அழகிய கோலங்கள் நிலையாய் அமைந்த பகைவர் மதிலை அழித்தாலொழிய
உண்பதில்லை என்று அடுக்கிக்கொண்டே சென்ற நாள்கள் பல கழிய,
நெஞ்சம் போரையே விரும்பும் ஊக்கத்தையுடையவராய்,
1.2
காதலர் உழையர் ஆக பெரிது உவந்து
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற – குறு 41/1,2
காதலர் அருகிலிருப்பவராய் இருக்கும்போது பெரிதும் மகிழ்ந்து
திருவிழாக்காணும் ஊரைப்போல மகிழ்வேன், உறுதியாக
1.3
செரு மிக்கு புகலும் திரு ஆர் மார்பன் – மலை 356
போர்த்தொழில் மிக்கு நடத்தலால் உலகம் புகழும் திருமகள் நிறைந்த மார்பினன்
2.1
மை அணல் காளை பொய் புகல் ஆக
அரும் சுரம் இறந்தனள் என்ப – நற் 179/8,9
கரிய மீசையும் தாடியையுமுடைய காளையொருவனின் பொய்மொழிகளை ஆதரவாகக் கொண்டு
கடப்பதற்கரிய பாலைவழியில் சென்றுவிட்டாள் என்கின்றனர்
2.2
ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடு
படு பிணம் பிறங்க நூறி – பதி 69/8,9
பகைவரைத் தேடிப்பிடித்துப் போரிடும் போரவா மிகுந்த வீரர்களும் ஆகிய படையுடன் சென்று,
வெட்டுப்பட்டு விழுகின்ற பிணங்கள் குவிந்து உயரும்படி பகைவர்களைக் கொன்று,
2.3
ஒடுங்கி யாம் புகல் ஒல்லேம் பெயர்தர அவன் கண்டு
நெடும் கய மலர் வாங்கி நெறித்து தந்தனைத்தற்கோ – கலி 76/10,11
உடலை ஒடுக்கிக்கொண்டு நான் உள்ளே புகுந்து மலர் பறிக்கமாட்டாமல் பின்னேவர, அவன் அதனைக் கண்டு
ஆழமான குளத்து நீரில் இருந்த மலரைப் பறித்துப் புறவிதழை ஒடித்துத் தந்ததற்காகவோ
2.4
புள்_இனம் இரை மாந்தி புகல் சேர ஒலி ஆன்று
வள் இதழ் கூம்பிய மணி மருள் இரும் கழி – கலி 121/4,5
பறவை இனங்கள் தம் இரையை ஆர உண்டு தம் வசிப்பிடங்களைச் சேர, ஒலி அடங்கி,
வளமையான இதழ்கள் குவிந்து நிற்கும் நீல மணியைப் போன்ற பெரிய கழி
2.5
மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை
வாயுள் தப்பிய அரும் கேழ் வய புலி
மா நிலம் நெளிய குத்தி புகலொடு
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை – அகம் 251/15-18
குற்றமற்ற வெள்ளிய கொம்பினையுடைய பெருமை வாய்ந்த யானையானது
தன்வாயினின்றும் தப்பிய அரிய நிறத்தையுடைய வலிய புலியை
பெரிய நிலம் குழியக் குத்திக்கொன்று செருக்குடன் பாதுகாவல் இன்றித் தங்கியிருக்கும் தேக்குமரங்கள்
நிறைந்த காடாகிய
|
புகல்வரு(தல்) |
புகல்வரு(தல்) – (வி) விருப்பம்கொள், desire
வாள் வரி நடுங்க புகல்வந்து ஆளி
உயர் நுதல் யானை புகர் முகம் தொற்றி – அகம் 252/2,3
புலி நடுங்கிட, விருப்பங்கொண்டு பாய்ந்து, ஆளியானது
உயர்ந்த நெற்றியினையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி
|
புகல்வி |
புகல்வி – (பெ) விலங்கின் ஆண், male of an animal
புழல் கோட்டு ஆமான் புகல்வியும் களிறும் – குறி 253
உள்ளீடற்ற கொம்பையுடைய ஆமான் ஏறும், யானையும்
|
புகல்வு |
புகல்வு – (பெ) 1. மனச்செருக்கு, pride, arrogance
2. விருப்பம், desire
1.
மாறு பொருது ஓட்டிய புகல்வின் வேறு புலத்து
ஆ காண் விடையின் அணி பெற வந்து – குறி 135,136
(தன்னுடன்)மாறுபட்ட காளைகளைப் பொருது விரட்டியடிக்கும் செருக்குடைய — (தானறியாத)வேறு நிலத்தில்
(புதிய)பசுவைக் காணும் — காளையைப் போல அழகுபெற வந்து
2.
முனை புகல் புகல்வின் மாறா மைந்தரொடு
——————————— ———————-
காஞ்சி சான்ற செரு பல செய்து – பதி 84/17-19
போரை விரும்பும் விருப்பத்தில் மாறா வீரருடன்,
———————— ———————————-
நிலையாமை உணர்வே நிறைந்த போர்கள் பலவற்றைச் செய்து
|
புகழது |
புகழது – (வி.மு) புகழினைக் கொண்டது, has fame
இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே
பெரும் கலி ஞாலத்து தொன்று இயல் புகழது – பரி 15/35,36
இருங்குன்றம் என்ற பெயர் பரந்த அந்த மலை
கடல்சூழ்ந்த நிலவுலகில் தொன்மையான இயல்பையுடைய புகழினைக் கொண்டது;
|
புகழ்மை |
புகழ்மை – (பெ) புகழுடைமை, Praise-worthiness
திகழ் மலர் புன்னை கீழ் திரு நலம் தோற்றாளை
இகழ் மலர் கண்ணளா துறப்பாயால் மற்று நின்
புகழ்மை கண் பெரியது ஓர் புகர் ஆகி கிடவாதோ – கலி 135/12-14
ஒளிவீசும் மலர்களையுடைய புன்னை மரத்தடியில் உன்னிடம் தன் தெய்வத் திருவழகை இழந்தவளை
மலர்கள் இகழும் கண்ணையுடையவளாக மாற்றிவிட்டு அவளைக் துறப்பாயேல், அது உன்
புகழுடைமைக்கு நேர்ந்த பெரிய கரும் புள்ளியாய் ஆகிவிடாதா?
|
புகவு |
புகவு – (பெ) உணவு, food
வால் நிண புகவின் கானவர் தங்கை – அகம் 132/5
வெள்ளிய நிணத்துடன் கூடிய உணவினையுடைய வேடவர்களின் தங்கை
|
புகா |
புகா – (பெ) உணவு, food
மரல் புகா அருந்திய மா எருத்து இரலை – குறு 232/3
மரல்கொடியை உணவாக அருந்திய பெரிய கழுத்தைக் கொண்ட இரலை மான்
|
புகார் |
புகார் – (பெ) ஆற்றுமுகம், Mouth of a river, காவிரியின் ஆற்றுமுகப் பட்டினமான பூம்புகார்,
The town of Kāviri-p-pUm-paTTiNam, as situated at the mouth of the river Kāvēri;
தீம் புகார் திரை முன்துறை – பட் 173
(கண்ணுக்கு)இனிதான புகாரிடத்து அலைகளையுடைய துறையின் முன்னே,
|
புக்கில் |
புக்கில் – (பெ) 1. புகுவதற்குரிய இல்லம், places one can reside
2. புகலிடம், place of refuge, asylum
1.
பண்டைய அல்ல நின் பொய் சூள் நினக்கு எல்லா
நின்றாய் நின் புக்கில் பல – கலி 90/24,25
இது ஒன்றும் பழைய காலம் அல்ல, நீ உரைக்கும் பொய்ச்சூள் உனக்குப் பயன்படுவதற்கு, ஏடா!
இங்கு நில்லாதே! உனக்குப் போவதற்குப் பல வீடுகள் உள்ளனவே!
2.
துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில் – புறம் 221/6
குற்றமற்ற கேள்வியினையுடைய அந்தணர்க்குப் புகலிடம்
|
புக்கீமோ |
புக்கீமோ – (ஏவல் வி.மு) (அங்கு) புகுந்துகொள், go (there)
தீரா முயக்கம் பெறுநர் புலப்பவர்
யார் நீ வரு நாள் போல் அமைகுவம் யாம் புக்கீமோ – கலி 71/22,23
அன்பிற் குறையாத முயக்கத்தைப் பெறுகின்ற பரத்தையரைக் கோபித்துக்கொள்பவர்
யார்? நீ வராத நாட்களையும் வந்த நாட்களாகவே கருதி அமைதி கொள்வேன்! நீ அங்குச் செல்வாயாக!
|
புங்கவம் |
புங்கவம் – (பெ) காளை, bull
புள் மிசை கொடியோனும் புங்கவம் ஊர்வோனும் – பரி 8/2
மேலே கருடப்பறவை வரையப்பெற்ற கொடியினையும் உடைய திருமாலும், காளையின் மேல் ஏறிவரும்
சிவபெருமானும்
|
புடை |
புடை – 1. (வி) 1. அடி, strike, beat
2. மோதித்தாக்கு, hit, attack
3. அடித்து ஒலியெழுப்பு, கொட்டு, beat, as a drum; to tap, as on a tambourine;
4. அடித்துப்பூசு, smear
5. (பறவை) சிறகுகளை அடித்துக்கொள், (birds) flap or flutter the wings
6. (கைகளைக்) கொட்டிப்பிசை, tap and rub hands
7. கன்னம் குளிரினால் அடித்துக்கொள், (cheeks) flutter or quiver due to extreme cold
8. (கைகளைத்)தட்டு, clap the hands
9. தானியங்களிலுள்ள தூசு, வேண்டாதவை ஆகியவற்றை நீக்க, முறம், சுளகு ஆகியவற்றில் இட்டு
மேலும் கீழும் அசைத்துத் தட்டு, sift, winnow
– 2. (பெ) 1. அடித்து உண்டாக்கும் ஒலி, sound from a stroke
2. பக்கம், side
3. புடைப்பு, பருமை, Protuberance
1.1
பாம்பு பட புடைக்கும் பல் வரி கொடும் சிறை
புள் அணி நீள் கொடி செல்வனும் – திரு 150,151
பாம்புகள் மாளும்படி அடிக்கின்ற பல வரியினையுடைய வளைந்த சிறகினையுடைய
கருடனை அணிந்த நீண்ட கொடியினையுடைய திருமாலும்
1.2
பூட்டு மான் திண் தேர் புடைத்த மறுகு எல்லாம் – கலி 98/5
எந்நேரமும் பூட்டியபடியே இருக்கும் உன் திண்ணிய தேர்ச்சக்கரங்கள் மோதித்தாக்கிய தெருக்களிலெல்லாம்
1.3
தட்டையும் புடைத்தனை கவணையும் தொடுக்க என – நற் 206/5
தட்டை எனும் கருவியை அடித்து ஒலித்து, கவண்கல்லும் வீசுக என்று
1.4
பொன் காண் கட்டளை கடுப்ப கண்பின்
புன் காய் சுண்ணம் புடைத்த மார்பின் – பெரும் 220,221
பொன்னை(உரைத்து)க் காணும் கட்டளைக்கல்லை ஒப்ப, சம்பங்கோரையின்
புல்லிய காயில் தோன்றின தாதை அடித்துக்கொண்ட மார்பினையும்,
1.5
புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு
இறகு புடைத்து இற்ற பறை புன் தூவி – நற் 329/4,5
அண்மையில் குஞ்சு பொரித்ததால் வரிசையாகப் பருத்த புள்ளிகளையுடைய முதிய பருந்தானது
இறகுகளைத் தீவிரமாக அடித்துக்கொள்வதால் இற்று விழுந்த காற்றில் பறக்கும் புல்லிய அடி இறகுகளைத்
1.6
இன்றோ அன்றோ தொன்று ஓர் காலை
நல்ல-மன் அளியதாம் என சொல்லி
காணுநர் கை புடைத்து இரங்க – பதி 19/24-26
இன்றல்ல, நேற்றல்ல, தொன்றுதொட்டு
இந்த நாடுகள் நல்லனவாய் இருந்தன, இப்போது இரங்கத்தக்கன என்று சொல்லி
காண்போர் கைகளைக் கொட்டிப்பிசைந்து வருந்திநிற்க,
1.7
மெய் கொள் பெரும் பனி நலிய பலர் உடன்
கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க – நெடு 7,8
(தம்)உடம்பில் கொண்ட மிகுந்த குளிர்ச்சி வருத்துகையினால், பலரும் கூடிக்
கையில் பிடித்த கொள்ளிக்கட்டையராய், கன்னங்கள் அடித்துக்கொண்டு நடுங்க
1.8
உயர் நிலை இதணம் ஏறி கை புடையூஉ
அகல் மலை இறும்பில் துவன்றிய யானை
பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடும் கல் – மலை 204-206
உயரமான இடத்திலுள்ள பரணில் ஏறி, கைகளைத் தட்டி,
பரந்துபட்டுக்கிடக்கும் மலைகளின் புதர்க்காடுகளில் கூட்டமாகத்திரியும் யானைகள்
பகலில் (வந்து)நிற்கும் நிலையைக் குலைக்கின்ற கவண்கள் விடும் மூர்க்கத்தனமான கற்கள்
1.9
சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த
பருத்தி பெண்டின் சிறு தீ விளக்கத்து – புறம் 326/4,5
பஞ்சுக்கொட்டையின் புறத்தோல்களையும், கொட்டை, தூசி ஆகிய குப்பைகளையும் புடைத்து நீக்குவாளாய்
எழுந்திருந்த
பருத்தி நூற்கும் பெண்டினுடைய சிறிய விளக்கொளியில்
2.1
அரி மான் இடித்து அன்ன அம் சிலை வல் வில்
புரி நாண் புடையின் புறங்காண்டல் அல்லால் – கலி 15/1,2
சிங்கம் முழங்குவதைப் போன்று முழங்கும், அழகிய சிலைமரத்தால் செய்யப்பட்ட வலிய வில்லின்
முறுக்குடைய நாணைச் சுண்டிவிட்டு ஒலியெழுப்பினாலே பகைவர் தோற்றோடக் காண்பது அன்றி,
2.2
விரவு வரி கச்சின் வெண் கை ஒள் வாள்
வரை ஊர் பாம்பின் பூண்டு புடை தூங்க – பெரும் 71,72
(மார்பில்)விரவிய, வரியுடைய கச்சையில், வெண்மையான கைப்பிடியையுடைய ஒள்ளிய வாள்
மலையில் ஊர்கின்ற பாம்புபோலப் பூணப்பட்டு ஒருபக்கத்தே தொங்கிநிற்க,
2.3
மழை வீழ்ந்து அன்ன மா தாள் கமுகின்
புடை சூழ் தெங்கின் மு புடை திரள் காய் – பெரும் 363,364
மேகங்கள் விழுந்ததைப் போன்ற பெரிய தண்டினையுடைய கமுகுகளின்
பக்கத்தே சூழ்ந்த தெங்கினுடைய மூன்று புடைப்பினையுடைய திரண்ட காய்,
|
புடைபெயர் |
புடைபெயர் – (வி) 1. இடம் மாறு, change position
2. நிலை மாறு, வாக்கு மாறு, change in stand,
1.
நிலம் புடைபெயர்வது ஆயினும் கூறிய
சொல் புடைபெயர்தலோ இலரே – நற் 289/2,3
நிலம் இடம்பெயர்ந்தாலும், தான் சொன்ன
சொல்லினின்றும் மாறுபடுகிறவர் இல்லை
2.
நிலம் புடைபெயர்வது ஆயினும் கூறிய
சொல் புடைபெயர்தலோ இலரே – நற் 289/2,3
நிலம் இடம்பெயர்ந்தாலும், தான் சொன்ன
சொல்லினின்றும் மாறுபடுகிறவர் இல்லை
|
புடைப்பு |
புடைப்பு – (பெ) அடிக்கை, striking
நிலம் புடைப்பு அன்ன ஆர்ப்பொடு விசும்பு துடையூ
வான் தோய் வெல் கொடி தேர் மிசை நுடங்க – பதி 44/1,2
நிலத்தையே உடைப்பது போன்ற முழக்கத்துடன், விசும்பினைத் துடைப்பது போல்
வானத்தில் தோயும்படியாக, வெற்றிக்கொடி, தேர் மீது அசைந்தாட,
|
புடையல் |
புடையல் – (பெ) மாலை, garland
இரும் பனம் புடையல் ஈகை வான் கழல் – பதி 42/1
கரிய பனந்தோட்டால் ஆன மாலையையும், பொன்னால் செய்த பெரிய வீரக் கழலினையும் உடையோராய்
|
புட்டகம் |
புட்டகம் – (பெ) புடைவை, saree. cloth
புட்டகம் பொருந்துவ புனைகுவோரும் – பரி 12/17
புடவைகளில் தமக்குப் பொருத்தமானவற்றை உடுத்திக்கொள்வோரும்
|
புட்டில் |
புட்டில் – (பெ) 1. தக்கோலக்காய், 1. வால்மிளகு, cubeb, 2. பாக்கு, arecanut
2. குதிரையின் கெச்சை, Tinkling anklet of a horse
3. கால் கொலுசு,கால் சிலம்பு, tinkling anklet of a woman
4. கூடை, basket
1.பைம் கொடி நறை காய் இடை இடுபு வேலன்
அம் பொதி புட்டில் விரைஇ – திரு 190,191
பச்சிலைக்கொடியுடன் சாதிக்காயை நடுவே இட்டு, வேலன்,
அழகினையுடைய பொதிதலுள்ள தக்கோலக்காயைக் கலந்து
2.
நூபுர_புட்டில் அடியொடு அமைத்து யாத்த
வார் பொலம் கிண்கிணி ஆர்ப்ப இயற்றி – கலி 96/16,17
ஒலிக்கின்ற கெச்சையைக் காலின் அடியில் அமைத்துக் கட்டியது
ஒழுங்குபட்ட பொன்னாலான சதங்கையாக ஒலிக்கவும் கொண்ட அந்தக் குதிரையை ஓட்டி,
3.
அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து ஈங்கே
வருக எம் பாக_மகன் – கலி 80/8,9
பரல்கள் இட்ட உன் காற்கொலுசின் மணிகள் ஒலிக்க அங்கிருந்து இழுத்துக்கொண்டே இங்கே
வருக என் பாகனாகிய மகனே!
4.
மாதர் புலைத்தி விலை ஆக செய்தது ஓர்
போழில் புனைந்த வரி புட்டில் புட்டிலுள் என் உள – கலி 117/7,8
அழகிய புலைத்தி விலையாகக் கொடுத்த ஒரு
பனங்குருத்து நாரால் முடைந்து கட்டப்பட்ட கூடை; கூடையினுள்ளே என்ன இருக்கிறது?
|
புணரி |
புணரி – (பெ) 1. அலை, wave
2. கடல், sea
1.
புணரி பொருத பூ மணல் அடைகரை – நற் 11/6
அலைகள் மோதிய குறுமணல் அடைந்துகிடக்கும் கரையினில்
2.
கழி சுரம் நிவக்கும் இரும் சிறை இவுளி
திரை தரு புணரியின் கழூஉம் – நற் 63/9-10
கழியின் வழியாக நிமிர்ந்து செல்லும் இறுகிய பிணிப்பை உடைய குதிரைகளை
அலைகள் தருகின்ற கடல்நீர் கழுவிவிடும்
|
புணர் |
புணர் – (வி) 1. கூடு, உடலுறவுகொள், cohabit, copulate
2. சேர், இணை, join, unite
3. பொருந்து, அமை, be fitted with
4. ஒத்ததாகு, ஏற்புடையதாகு, be suitable
5. கட்டு, tie, fasten
6. அளவளாவு, be associated with, keep company with;
7. உருவாக்கு, படை, create
8. சேர், இணை, combine, connect, link
1.
துடி அடி அன்ன தூங்கு நடை குழவியொடு
பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க என – பொரு 125,126
துடி போலும் அடிகளையும் அசைந்த நடையினையும் உடைய கன்றுகளுடன்,
பிடிகளைக் கூடின களிற்றியானைகளையும், (நீவிர்)விரும்பிய ஏனையவற்றையும் கொள்வீராக என்று
2.
கன்று புணர் பிடிய குன்று பல நீந்தி – பதி 12/13
கன்றுகளுடன் சேர்ந்த பெண்யானைகளைக் கொண்ட குன்றுகள் பலவற்றைக் கடந்து
3.
வலம் பட நடக்கும் வலி புணர் எருத்தின்
உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை – சிறு 189,190
வெற்றியுண்டாக நடக்கும், (இழுத்தற்குரிய)வலி பொருந்திய கழுத்தினால்
மனஉறுதி கொண்ட வலிமையான எருத்தினையுடைய உழவரின் தங்கையாகிய,
4.
தடவு நிலை பலவின் முழு முதல் கொண்ட
சிறு சுளை பெரும் பழம் கடுப்ப மிரியல்
புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து
அணர் செவி கழுதை சாத்தொடு – பெரும் 77-80
வளைந்த நிலைமையினையுடைய பலாமரத்தின் அடிப்பகுதியில் குலைகொண்ட
சிறியதாகிய சுளையினையுடைய பெரிய பழத்தை ஒப்ப, மிளகின்
ஒத்த கனமாகச் சேர்ந்த சுமையைத் தாங்கிய, வடு அழுந்தின வலிமையான முதுகினையும்,
உயர்த்திய செவியினையும் உடைய கழுதைகளுடைய திரளோடே
5.
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி
கொடும் கால் மா மலர் கொய்துகொண்டு அவண
பஞ்சாய் கோரை பல்லின் சவட்டி
புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி – பெரும் 215-218
அரும்புகள் சூழ்ந்த இதழ்களையுடைய மறிந்த வாயையுடைய முள்ளியின்
வளைந்த காம்பினையுடைய கரிய பூவைப் பறித்துக்கொண்டு, அங்கு உண்டாகிய
பஞ்சாய்க் கோரையைப் பல்லால் சிதைத்து(க் கிழித்து)
முடிந்த நாரால் கட்டிய உருவாக்கம் இனிதான மாலையை
6.
தொல் ஆணை நல் ஆசிரியர்
புணர் கூட்டுண்ட புகழ் சால் சிறப்பின்
நிலம்தருதிருவில் நெடியோன் போல – மது 761-763
தொன்மையான மரபுகளையுடைய நல்ல ஆசிரியர்கள்
அளவளாவும் சேர்க்கையை நுகர்ந்த புகழ் நிறைந்த சிறப்பினையுடைய
நிலந்தரு திருவில் பாண்டியன் என்னும் உயர்ந்தோனைப் போன்று
7.
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை – நற் 192/9
பூதமாகிய தெய்வங்கள் உருவாக்கிய புதிதாகச் செய்யப்பட்ட பாவை
8.
துறைவன்
தன்னொடு புணர்த்த இன் அமர் கானல் – நற் 267/5,6
துறையைச் சேர்ந்தவன்
தன்னோடு தலைவியைச் சேர்த்த இனிமை பொருந்திய கடற்கரைச் சோலை
|
புணர்ச்சி |
புணர்ச்சி – (பெ) 1. சேர்க்கை, இணைப்பு, தொடர்பு, உறவு, association, union
2. உடலுறவு, கலவி, coition, sexual union
1.
அரு விடர் அமைந்த களிறு தரு புணர்ச்சி – குறி 212
பயங்கரமான பிளவுகள் நிறைந்த மலையில் நேர்ந்த களிறு தந்த (இந்த)இணைப்பு
2.
புரிவு உண்ட புணர்ச்சியுள் புல் ஆரா மாத்திரை
அருகுவித்து ஒருவரை அகற்றலின் தெரிவார்_கண்
செய நின்ற பண்ணினுள் செவி சுவை கொள்ளாது
நயம் நின்ற பொருள் கெட புரி அறு நரம்பினும்
பயன் இன்று மன்று அம்ம காமம் – கலி 142/1-5
மனம் விரும்பிய உறவுக்காலத்தில், அதற்குரிய தழுவுதல் நிறைவுபெறாத அளவில்,
இருவருள் ஒருவரை அந்த உறவுக்கு அரிதானவராகப் பிரித்துவிடுவதால், ஆராய்ந்து பார்க்கும்போது,
நரம்பை இயக்க, அதில் நின்ற பண்ணினுள் தோன்றிய இனிமையைச் செவி சுவைப்பதற்கு முன்னே,
அந்த இசைப்பயன் கெட்டுப்போகும்படி, முறுக்கு அறுந்துபோகும் நரம்பைக்காட்டிலும்
பயனற்றதாகும் காமம்
|
புணர்த்து |
புணர்த்து – (வி) ஒன்றுசேர், இணை, combine, unite, connect
நோதலே செய்யேன் நுணங்கு இழையாய் இ செவ்வி
போதல் உண்டாம்-கொல் அறிந்து புனல் புணர்த்தது
ஓஓ பெரிதும் வியப்பு – பரி 24/38-40
வருந்தமாட்டேன், நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகலன்களையுடையவளே! இத்தகைய தருணத்தில்
நீ இங்கு இருப்பாய் என அறிந்து அந்த மாலையை நீர் கொண்டுவந்து சேர்த்தது
ஓஓ இது பெரிதும் வியப்பிற்குரியது
|
புணர்ப்பு |
புணர்ப்பு – (பெ) 1. சேர்க்கை, joining
2. (தோழியர்)கூட்டம், ஆயம்
3. வஞ்சனை, சூது, plot, scheme, conspiracy
1.
தாழொடு குயின்ற போர் அமை புணர்ப்பின் – நெடு 84
தாழ்ப்பாழோடு சேரப்பண்ணின, பொருத்துவாய் (நன்றாக)அமைந்த சேர்க்கையுடன்,
2.
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர் – பரி 11/89
பொய்யாக ஆட்டத்தை ஆடுகின்ற தோழியர் கூட்டத்தைக் கொண்ட அந்தக் கன்னி மகளிர்
3.
வயக்கு_உறு மண்டிலம் வட_மொழி பெயர் பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்
ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா
கை புனை அரக்கு இல்லை கதழ் எரி சூழ்ந்து ஆங்கு – கலி 25/1-4
ஒளிமிக்க ஞாயிற்று மண்டிலத்துக்குரிய வடமொழிப் பெயரான பகன் என்ற கண்ணற்றவனின்
முகத்தைக்கொண்டவனான திருதராட்டிரனின் மக்களுள் மூத்தவனின் சூழ்ச்சியால்
ஐவர் என்று உலகம் போற்றும் அரசர்கள் உள்ளேயிருக்க,
வேலைப்பாடு மிக்க அரக்கு மாளிகையைக் கட்டுக்கடங்காத நெருப்பு சூழ்ந்துகொண்டதைப் போல்,
|
புணர்வி |
புணர்வி – (வி) சேர்த்துவை, unite
தாம் அமர் காதலரொடு ஆட புணர்வித்தல்
பூ மலி வையைக்கு இயல்பு – பரி 20/110,111
தாம் விரும்பும் காதலரோடு புனலாட அவர்களைச் சேர்த்துவைத்தல்
பூக்கள் மலிந்த வையை ஆற்றின் இயல்பு.
|
புணர்வு |
புணர்வு – (பெ) சேர்தல், uniting
நம் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு – நற் 165/7
நம்மை மணங்கொண்டு சேர்தல் இல்லாத அன்பில்லாதவரின் நட்பு
|
புணை |
புணை – (பெ) 1. தெப்பம், மிதவை, raft, float
2. உதவி, ஆதரவு, support, prop, help
1.
புனல் புணை அன்ன சாய் இறை பணை தோள்
மணத்தலும் தணத்தலும் இலமே – குறு 168/5,6
நீரில் விடும் தெப்பத்தைப்போல் வளைந்து இறங்கிய பருத்த தோள்களை
தழுவுதலும், பிரிதலும் இல்லையாயினோம்;
2.
முழா இமிழ் துணங்கைக்கு தழூஉ புணை ஆக – பதி 52/14
முழவு ஒலிக்கும் துணங்கைக் கூத்தில் தழுவியாடுவோருக்குத் துணையாக
|
புணைவன் |
புணைவன் – (பெ) புகலிடமானவன், refuge
பணை எழில் மென் தோள் அணைஇய அ நாள்
பிழையா வஞ்சினம் செய்த
கள்வனும் கடவனும் புணைவனும் தானே – குறு 318/6-8
மூங்கில் போன்ற அழகுடைய மென்மையான தோள்களை அணைத்த அந்த நாளில்
தவறாத வஞ்சினம் கூறிய
வஞ்சகனும், அதை வாய்க்கச் செய்பவனும், நமக்குப் புகலிடமானவனும் அவன்தானே!
|
புண்ணியம் |
புண்ணியம் – (பெ) நற்செயல், good and morally correct deed
பண்ணியம் அட்டியும் பசும் பதம் கொடுத்தும்
புண்ணியம் முட்டா தண் நிழல் வாழ்க்கை
கொடு மேழி நசை உழவர் – பட் 203-205
(பல)பண்டங்களை ஆக்கியிட்டும், புதிய நல்லுணவு கொடுத்தும்,
அறத்தொழில்கள் முட்டுப்படாத குளிர்ந்த அருளுடனே வாழும் இல்வாழ்க்கையையுடைய,
வளைந்த மேழி(யால் உழவுத்தொழிலை) விரும்பும் உழவரும்
|
புதல் |
புதல் – (பெ) புதர், சிறுதூறு, bush, thicket
நீர் வார் பைம் புதல் கலித்த
மாரி பீரத்து அலர் சில கொண்டே – குறு 98/4,5
நீர் ஒழுகி வளர்ந்த புதரின்மேல் செழித்துப் படர்ந்த
கார்காலத்து பீர்க்கின் மலர்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு சென்று
|
புதவம் |
புதவம் – (பெ) அறுகு, bermuda grass
கொழும் கால் புதவமொடு செருந்தி நீடி – பட் 243
தடித்த தண்டுகளையுடைய அறுகுடன் கோரைகளும் வளர்ந்து,
|
புதவு |
புதவு – (பெ) 1. வாயில், entrance, gate
2. வாயிற்கதவு, door of the entrance
3. மதகு, sluice
1.
குடி நிறை வல்சி செம் சால் உழவர்
நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி – பெரும் 197,198
குடியிருப்பு நிறைந்த, உணவினையுடைய செவ்விய சாலாக உழுகின்ற உழவர்கள்
நடை பயின்ற பெரிய எருதுகளை வாயிலிலே நுகத்தைப் பூட்டிக்கொண்டு சென்று,
2.
நல் எழில் நெடும் புதவு முருக்கி கொல்லுபு
ஏனம் ஆகிய நுனை முரி மருப்பின்
கடாஅம் வார்ந்து கடும் சினம் பொத்தி
மரம் கொல் மழ களிறு முழங்கும் பாசறை – பதி 16/5-8
நல்ல அழகிய நெடிய கதவுகளைத் தாக்கிச் சிதைத்ததால்
பன்றியைப் போலாகிய நுனி முறிந்துபோன கொம்புகளையுடைய,
மதநீர் சொரிந்து, மிக்க சினம் கொண்டு
கணைய மரங்களை ஒடித்துப்போடும் இளம் களிறுகள் முழங்கும் பாசறையில்
3.
புல் அரை காஞ்சி புனல் பொரு புதவின்
மெல் அவல் இருந்த ஊர்-தொறும் – மலை 449,450
அழகில்லாத அடிப்பகுதியையுடைய காஞ்சி மரங்களும், நீர் மோதுகின்ற மதகுகளும்,
(உழுது உழுது)மென்மையாகிப்போன விளைநிலங்களும், இருக்கும் ஊர்கள்தோறும்
|
புதா |
புதா – (பெ) நாரை, crane
துதைந்த தூவி அம் புதாஅம் சேக்கும் – புறம் 391/16
நெருங்கிய தூவியையுடைய புதா என்னும் நாரை தங்கும்
|
புதுவ |
புதுவ – (பெ) புதியன, new (things)
1.
அலர்வது அன்று-கொல் இது என்று நன்றும்
புலரா நெஞ்சமொடு புதுவ கூறி
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம்
அறிந்தனள் போலும் அன்னை – நற் 339/2-5
ஊராரின் பழிச்சொல்லை விளைவிக்கிறது இல்லையா இந்த உறவு என்று மிகவும்
அன்பு புலராத நெஞ்சத்துடனே புதிய புதிய காரணங்களைக் கூறிக்கொண்டு
இருவரும் வருந்தும் துன்பப் பெருக்கை
அறிந்துகொண்டாள் போலும் நம் அன்னை!
2.
புதுவ மலர் தேரும் வண்டே போல் யாழ – கலி 98/2
புதிய மலரைத் தேடியலையும் வண்டினைப் போல,
3
புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும்
அரும் பொருள்வேட்டம் எண்ணி – அகம் 389/12,13
வருத்தம் இல்லாத உள்ளத்துடன் புதிய பொருள்களைத் தந்து மகிழுவதற்குரிய
அரிய பொருளை ஈட்டிவரலை விரும்பி
|
புதுவது |
புதுவது – (பெ) புதிது, anything that is new
நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டி புதுவதின்
இயன்ற அணியன் – அகம் 66/7-9
வரிசையாலாய மாலையைத் தரித்த மார்பனாகிய நம் தலைவன், நேற்று ஒருத்தியை
மணம்செய்துகொள்ள விரும்பி, புதிதாக
இயன்ற ஒப்பனையுடையனாகி
ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்று இ உலகத்து இயற்கை – புறம் 76/1,2
ஒருவனையொருவன் கொல்லுதலும் ஒருவற்கொருவன் தோற்றலும்
புதிது அன்று, இந்த உலகத்தின்கண் இயல்பு
|
புதுவர் |
புதுவர் – (பெ) புதியவர், a stranger
நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் அவருடன்
நேர்வர்-கொல் வாழி தோழி நம் காதலர்
புதுவர் ஆகிய வரவும் நின்
வதுவை நாண் ஒடுக்கமும் காணும்_காலே – நற் 393/10-13
நம்மவர்கள் பெண்கொடுக்க இசைந்தால், அவருடன்
இசைவாகப் பேசுவார்களோ? வாழ்க, தோழியே!, நம் காதலர்
உனக்குப் புதியவரைப் போல் வந்து நின்றதையும், உன்னுடைய
மணநாளுக்கான நாணமுடைய அடக்கத்தையும் காணும்போது –
|
புதுவிர் |
புதுவிர் – (பெ) 1. புதியவர் (முன்னிலை), strangers (second person-plural)
2. புத்துணர்ச்சிபெற்றவர், fresh people (second person-plural)
1.
பண்டு நற்கு அறியா புலம் பெயர் புதுவிர்
சந்து நீவி புல் முடிந்து இடு-மின் – மலை 392,393
(அந்த வழிகள்)முன்பு(எப்படி இருந்தன என்று) நன்றாக அறியாத, நாடு மாறி வரும் புதியவராகிய நீங்கள்
(புல்,புதர் வளர்ந்து)குறுகலான வழிகளைத் தொட்டுத்தடவிப் பார்த்து, புற்களை முடிந்து (வழியுண்டாக்கி)வைப்பீர்
2.
வளை ஆன் தீம் பால் மிளை சூழ் கோவலர்
வளையோர் உவப்ப தருவனர் சொரிதலின்
பலம் பெறு நசையொடு பதி வயின் தீர்ந்த நும்
புலம்பு சேண் அகல புதுவிர் ஆகுவிர் – மலை 409-412
சங்கு (போன்ற வெண்மையான)பசுக்களின் இனிய பாலை, கிடையைச் சுற்றிக்காவல்புரியும் இடையர்களின்,
வளையல்கள் அணிந்த பெண்கள், (நீவிர்)மகிழும்படி கொண்டுவந்து (உள்ளங்கையில்)ஊற்றுகையினால், 410
(அதைக்குடித்து)பரிசில் பெறும் ஆசையோடு ஊரிலிருந்து வந்த உம்முடைய
வருத்தம் வெகுதூரம் போய்விட(முற்றிலும் நீங்க), புத்துணர்வுபெற்றவர் ஆவீர்;
|
புதுவை |
புதுவை – (பெ) புதியவன்/ள், a stranger (second person singular)
பொதி அவிழ் வைகறை வந்து நீ குறைகூறி
வதுவை அயர்தல் வேண்டுவல் ஆங்கு
புதுவை போலும் நின் வரவும் இவள்
வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே – கலி 52/22-25
அரும்புகள் மலரும் அதிகாலையில் வந்து நீ உன் விருப்பத்தைக் கூறி
மணம் பேசி முடிக்க வேண்டும், அப்போது
புதியவன் போல் வருகின்ற உன்னுடைய வரவையும், இவளின்
திருமண வெட்கம் கொண்ட அடக்கத்தையும் நான் பார்க்கவேண்டும்.
|
புதுவோர் |
புதுவோர் – (பெ) புதியவர்கள், strangers
குறியவும் நெடியவும் ஊழ் இழிபு புதுவோர்
நோக்கினும் பனிக்கும் நோய் கூர் அடுக்கத்து
அலர் தாய வரி நிழல் அசையினிர் இருப்பின் – மலை 288-290
சிறிதும் பெரிதுமான(ஏற்ற இறக்கங்களில்) முறையாக(ஏறி) இறங்கி, புதியவர்கள்
பார்த்தாலே நடுங்கும் பயம் மிக்க மலைச்சரிவுகளில்,
மலர்ந்த பூக்கள் பரவிக்கிடக்கும் பட்டை பட்டையான நிழலில் களைப்பாறி இருப்பின்
|
புதை |
புதை – 1. (வி) 1. மறை, மூடு, conceal, cover
2. மண்ணில் அழுத்தில் உட்செலுத்து, bury, intern
– 2. (பெ) அம்புக்கட்டு, bundle of arrows
1.1
அடி புதை அரணம் எய்தி படம் புக்கு – பெரும் 69
பாதங்களை மறைக்கின்ற செருப்பைக் கோத்து, சட்டை அணிந்து
1.2
நிலம் புதை பழுனிய மட்டின் தேறல் – புறம் 120/12
நிலத்தின்கண் புதைக்கப்பட்ட முற்றிய மதுவாகிய தேறலை
2
வாயிலொடு புழை அமைத்து
ஞாயில்-தொறும் புதை நிறீஇ – பட் 287,288
பெரிய வாயில்களுடன் சிறு வாசல்களையும் உண்டாக்கி,
கோட்டை முகப்புத்தோறும் (மறைந்தெறியும்)அம்புக்கட்டுக்களைக் கட்டிவைத்து
|
புத்தி |
புத்தி – (பெ) புதியது, new
புத்தி யானை வந்தது காண்பான் யான் தங்கினேன் – கலி 97/7
புதிய யானை இங்கு வந்தது, அதனை ஏறிப் பார்ப்பதற்கு நான் தங்கினேன்.
|
புத்து |
புத்து – (பெ.அ) புதிய, new
உச்சி குடத்தர் புத்து அகல் மண்டையர் – அகம் 86/8
தலை உச்சியில் குடத்தினை உடையவரும், கையினில் புதிய அகன்ற மண்டை என்னும்கலத்தினை உடையவரும்
|
புத்தேளிர் |
புத்தேளிர் – (பெ) தேவர், மேலுகத்தார், celestial beings
புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு
புக்க_வழி எல்லாம் கூறு – கலி 82/4,5
தேவர்களின் கோவிலை வலம்வந்து பின்னர் என் மகனாகிய இவனோடு
நீ சென்ற இடங்களையெல்லாம் சொல்வாயாக;
|
புத்தேள் |
புத்தேள் – (பெ) 1. தெய்வம், god, deity
2. புதியவர், stranger
1.
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும் – குறு 101/2
மிகவும் அரிதில் பெறக்கூடிய சிறப்புமிக்க தேவருலகமும்,
2.
தலை கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர்
புல தகை புத்தேள் இல் புக்கான் – கலி 82/23,24
தலைக்கர்வம் கொண்டு நம்மோடு வெறுப்புக்கொண்டிருக்கும், மேலும் அருகிலிருக்கும் அந்தக்
கெடுகெட்ட புதியவள் வீட்டுக்குள் புகுந்தான்
|
புந்தி |
புந்தி – (பெ) புத்தி, புதன் என்னும் கோள், the planet jupiter
புந்தி மிதுனம் பொருந்த – பரி 11/6
புத்தி எனப்படும் புதன் மிதுன ராசியில் நிற்க
|
புனனாடு |
புனனாடு – (பெ) மேற்குக்கடற்கரைப்பகுதியிலுள்ள ஓர் நாடு, a country on the western coast
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்து என – அகம் 396/2
பொன்னாலான பூண்களையுடைய நன்னன் என்பான் புன்னாடு என்னும் நாட்டிலுள்ளாரை வெகுண்டெழுந்தானாக
இது புன்னாடு என்றும் சொல்லப்படுகிறது. புள்ளுநாடு என்பது புண்ணாடு என்றாகிப் பின்னர் புன்னாடு ஆகி, புனனாடு
ஆகியது என்பர்.
|
புனன் |
புனன் – (பெ) புனம், பார்க்க : புனம்
பெரும் பெயல் தலைக புனனே – நற் 328/7
பெரும் மழை பெய்வதாக தினைப்புனத்தில்,
|
புனம் |
புனம் – (பெ) மலைச்சார்பான கொல்லை, வானம்பார்த்த பூமி, upland fit for dry cultivation
புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர் – மலை 203
காய்ந்து, பிஞ்சுத்தன்மை நீங்கிய(பிஞ்சுத்தன்மை நீங்கிக் காய்ந்த) தினைப்புனத்தைச் சுற்றிவந்த குறவர்கள்,
சிறுதினை விளைந்த வியன் கண் இரும் புனத்து – குறு 375/3
சிறுதினை விளைந்த அகன்ற இடமுடைய பெரிய தினைப்புனத்தில்
இரும்பு கவர்வு_உற்றன பெரும் புன வரகே – மலை 113
(இரும்பாலாகிய)அரிவாள் வசப்பட்டன(=அரிதலுற்றன) பெரிய கொல்லைக்காட்டின் வரகுகள்;
|
புனல் |
புனல் – (பெ) 1. நீர், water
2. நீர்ப்பெருக்கு, ஆறு, flood, river, stream
1.
தீது நீங்க கடல் ஆடியும்
மாசு போக புனல் படிந்தும் – பட் 99,100
தீவினை போகக் கடலாடியும்,
(பின்னர்)உப்புப் போக (நல்ல)நீரிலே குளித்தும்,
2.
மழை கொள குறையாது புனல் புக மிகாது – மது 424
முகில்கள் முகக்கக் குறையாது, (ஆற்று)வெள்ளம் உட்புக நிரம்பிவழியாது,
|
புனவன் |
புனவன் – (பெ) புனத்திற்கு உரியவன், owner of dry land ; பார்க்க : புனம்
குறிஞ்சிநில மக்கள், inhabitants of the hilly tracts
தினை உண் கேழல் இரிய புனவன்
சிறு பொறி மாட்டிய பெரும் கல் அடாஅர் – நற் 119/1,2
தினையை உண்ணும் காட்டுப்பன்றி வெருண்டு ஓட, தினைப்புனத்தான்
சிறிய பொறியைப் பொருத்தி வைத்த பெரிய கல்லிலான சாய்வுப்பலகையில்
புன் புலம் வித்திய புனவர் – ஐங் 246/3
புன்செய் நிலமாகிய கொல்லையில் தினையை விதைத்த குறவர்
|
புனிறு |
புனிறு – (பெ) 1. ஈன்றணிமை, Recency of delivery, as of a woman
2. அண்மையில் மழை பெய்தது, (place) that had rains recently
3. அண்மையில் கதிர்விட்டது, பிஞ்சுத்தன்மை,
recently formed ear of grain, greenness as of unripe fruit
4. புதியது, raw, fresh
5. கசடு, rubbish
1.
புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போல – புறம் 68/8
ஈன்றணிமை பொருந்தி அது தீர்ந்த குழந்தைக்குச் சுரக்கும் முலை போல
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில் – சிறு 132
ஈன்றணிமையையுடைய நாய் ஒலியெழுப்பும் புன்மையுடைய அடுக்களையில்,
இரும் புனிற்று எருமை பெரும் செவி குழவி – நற் 271/1
கரிய, அண்மையில் ஈன்ற, எருமையின் பெரிய செவியினையுடைய கன்று,
வய புனிற்று இரும் பிண பசித்து என வய புலி
புகர் முகம் சிதைய தாக்கி களிறு அட்டு – நற் 383/3,4
மசக்கை நோயால் வாடிய ஈன்றணிமையான பெரிய பெண்புலிக்குப் பசித்ததாக, வலிய ஆண்புலி
புள்ளிகளையுடைய முகம் உருக்குலைந்துபோகத் தாக்கிக் களிற்றினைக் கொன்று
கன்று உடை புனிற்று ஆ தின்ற மிச்சில் – நற் 290/2
கன்றை உடைய அண்மையில் ஈன்ற பசு தின்றுவிட்டுப்போன மிச்சத்தை
மென் புனிற்று அம் பிணவு பசித்து என பைம் கண்
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க – அகம் 21/17,18
மெலிந்த, அண்மையில் ஈன்ற, அழகிய பெண்நாய் பசியுற்றது என, பசிய கண்ணை உடைய
ஆண் செந்நாய் ஆண் காட்டுப்பன்றியைத் தாக்க,
மென் மயில் புனிற்று பெடை கடுப்ப – புறம் 120/6
மெல்லிய மயிலினது ஈன்றணிய பேடையை ஒப்ப
புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு – நற் 329/4
அண்மையில் குஞ்சு பொரித்ததால் வரிசையாகப் பருத்த புள்ளிகளையுடைய முதிய பருந்தானது
2.
நிறை நீர் புனிற்று புலம் துழைஇ ஆனாய்
இரும் புறம் தழூஉம் பெரும் தண் வாடை – நற் 193/3,4
நிறைந்த நீருள்ள புதிதாய் மழைபெய்த நிலங்களில் புகுந்து, அத்துடன் நிற்காமல்
எமது பெரிய ஊர்ப்புறத்தையும் சூழவரும் பெரிய குளிர்ந்த வாடைக்காற்றே!
3.
துய் தலை புனிற்று குரல் பால் வார்பு இறைஞ்சி – நற் 206/1
மெல்லிய பஞ்சினைத் தலையிலே கொண்டு பிஞ்சுவிட்டிருக்கும் கதிர்கள் பால்பிடித்துத் தலைசாய்க்க
புயல் புறந்தந்த புனிற்று வளர் பைம் காய்
வயலை செம் கொடி – ஐங் 25/1,2
மழையினால் பேணி வளர்க்கப்பட்ட இளமையான வளர்கின்ற பச்சையான காயையுடைய
வயலையின் சிவந்த கொடியை
செழும் செய் நெல்லின் சேய் அரி புனிற்று கதிர் – அகம் 156/3
செழுமை வாய்ந்த வயலிலுள்ள நெல்லின் சிவந்த அரிகளையுடைய இளமையான கதிரை
4.
பூ ஆர் காவின் புனிற்று புலால் நெடு வேல் – புறம் 99/6
பூ நிறைந்த காவினையும், புதிய ஈரம் புலராத புலாலையுடைய நெடிய வேலினையுமுடைய
புலம்பு விட்டு இருந்த புனிறு இல் காட்சி
கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ – மலை 49,50
(நடந்துவந்த)வருத்தத்தைக் கைவிட்டு அமர்ந்திருந்த புதுமைப்பொலிவு இல்லாத(தளர்ந்த) தோற்றத்தையுடைய,
அணிகலன்களைப் பெறும் கூத்தர் குடும்பத்திற்குத் தலைவனே,
5.
புயல் புனிறு போகிய பூ மலி புறவின் – மலை 120
மழையால் கசடுகள் நீக்கப்பட்ட, பூக்கள் நிறைந்த காட்டுநிலத்தில்,
|
புனை |
புனை – (வி) 1. (உடை, மாலை,ஆபரணம் முதலியவை) அணி, தரி, உடுத்து, put on (as clothes, garland, jewels)
2. சூடு, wear
3. அலங்கரி, decorate, adorn
4. செய், படை, உருவாக்கு, make, create
5. ஓவியம் தீட்டு, paint, draw
6. செய்யுள் அமை, கவிதை, கதை ஆகியவை இயற்று, compose a poetry, write fiction
7. கட்டு, string, bind
8. முடை, பின்னு, plait, as an ola basket
9. (பூக்கள் போன்றவற்றைத்)தொடு, link together; to string, as beads;
10. உண்டாகு, ஏற்படு, come into existence
1.
மகளிர் கோதை மைந்தர் புனையவும்
மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும் – பரி 20/20,21
மகளிர் அணிதற்குரிய மாலைகளை மைந்தர் அணிந்துகொள்ளவும்,
மைந்தர்களின் குளிர்ச்சியான மாலைகளை மகளிர் சூடிக்கொள்ளவும்,
2.
நெறி இரும் கதுப்பின் கோதையும் புனைக – அகம் 269/2
நெளிந்த கரிய கூந்தலில் மாலையையும் நீ சூடிக்கொள்க
3.
வேலன் புனைந்த வெறி அயர் களம்-தொறும் – குறு 53/3
வேலன் ஒப்பனைசெய்த வெறியாடும் களங்கள்தோறும்
4.
கைவல் கம்மியன் கவின் பெற புனைந்த
செம் கேழ் வட்டம் சுருக்கி – நெடு 57,58
கை(வேலைப்பாட்டில்) சிறந்த கைவினைக்கலைஞன் அழகுபெறச் செய்த
சிவந்த நிறத்தையுடைய விசிறி (மூடிச்)சுருக்கிடப்பட்டு,
5.
புனையா ஓவியம் கடுப்ப – நெடு 147
முற்றிலும் தீட்டப்பெறாத கோட்டுச் சித்திரத்தை ஒப்ப(தலைவி அமர்ந்திருக்க)
6.
நாவின் புனைந்த நன் கவிதை மாறாமை – பரி 6/8
தம் நாவால் இயற்றிய(பாடிய) வையை ஆற்றைப் பற்றிய நல்ல கவிதைகள் பொய்படாமல் நிலைநிற்கச் செய்ய,
7.
கணையர் கிணையர் கை புனை கவணர் – நற் 108/4
அம்புகளோடும், கிணைப்பறையோடும், கையில் கட்டப்பட்ட கவண்களோடும்
8.
போழில் புனைந்த வரி புட்டில் – கலி 117/8
பனங்குருத்து நாரால் முடைந்து கட்டப்பட்ட கூடை
9.
வள் இதழ் நெய்தல் தொடலையும் புனையாய் – நற் 155/2
பெரிய இதழ்களையுடைய நெய்தல் பூக்களாம் மாலையையும் தொடுக்கமாட்டாய்;
10.
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும் – நற் 330/5
இருள் உண்டாகக் கிளைத்திருக்கும் மருதமரத்தின் இனிய நிழலில் படுத்திருக்கும்
|
புனைஇழை |
புனைஇழை – (பெ) அன்மொழித்தொகை, transferred epithet
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க
வினவல் ஆனா புனை_இழை கேள் இனி – அகம் 29/13,14
பற்கள் சிறந்து விளங்கும் பவள வாயில் இனிய புன்னகை கெடும்படியாகக்
கேட்டுக்கொண்டே இருக்கிறாயே, அழகிய அணிகளை உடையவளே! கேட்பாயாக, இப்போது
புனைஇழாய் என் பழி நினக்கு உரைக்கும் தான் என்ப – கலி 46/19
அணிகலன்களால் அலங்கரித்துக்கொண்டவளே! என்னுடைய குற்றத்தை உன்மேல் ஏற்றிச் சொல்கிறான்
அவன் என்றால்,
|
புனைவு |
புனைவு – (பெ) 1. வேலைப்பாடு, உருவாக்கம், workmanship, making
2. ஒப்பனை, அலங்காரம், ornamentation, decoration
1.
புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி – பெரும் 218
முடிந்த நாரால் கட்டிய உருவாக்கம் இனிதான மாலையை
2.
புனையா ஓவியம் கடுப்ப புனைவு இல்
தளிர் ஏர் மேனி தாய சுணங்கின்
———————– ———————— —————–
செம் முக செவிலியர் கைம்மிக குழீஇ – நெடு 147-153
முற்றுப்பெறாத கோட்டுச் சித்திரத்தை ஒப்ப(தலைவி அமர்ந்திருக்க) – ஒப்பனை இல்லாத,
மாந்தளிரைப் போன்ற நிறத்தினையும், பரந்த அழகுத் தேமலையும்,
——————— ——————————- ——————————-
சிவந்த முகத்தையுடைய செவிலித்தாயர் அளவுக்குமீறித் திரண்டு,
|
புன் |
புன் – (பெ.அ) புல்லிய, புன்மையான, இழிவான, சிறுமையான, சிறிய, அசுத்தமான, mean, low, small, unclean
இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன
குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் – திரு 312,313
கரிய பனையின் – (உள்ளே)வெளிற்றினையுடைய – புல்லிய செறும்பை ஒத்த
கரிய நிறத்தையுடைய மயிரினையுடைய உடம்பினையும் வளைந்த அடியினையுமுடைய கரடி
புன் கொடி முசுண்டை பொறி புற வான் பூ – நெடு 13
புல்லிய கொடியையுடைய முசுட்டையில் திரண்ட புறத்தையுடைய வெண்ணிறப் பூ
புன் தலை இரும் பரதவர் – பட் 90
பரட்டைபாய்ந்த தலையினையுடைய கரிய பரதவர்
புன் கால் நாவல் பொதி புற இரும் கனி – நற் 35/2
புல்லிய அடிமரத்தையுடைய நாவல் மரத்தின் பொதியைப் போன்ற வெளிப்பகுதியையுடைய பெரிய பழத்தை
|
புன்கண் |
புன்கண் – (பெ) 1. துன்பம், Sorrow, distress, trouble, affliction, sadness
2. இழிவு, கீழ்மை, lowness, meanness
1.
இல்லோர் புன்கண் தீர நல்கும்
நாடல் சான்ற நயன் உடை நெஞ்சின் – பதி 86/6,7
பொருளில்லாதவரின் துன்பம் நீங்குமாறு அள்ளிக்கொடுக்கும்
அறத்தின் மீதான நாட்டம் மிகுந்த அன்புடைய நெஞ்சினையும்,
2.
புலம்பொடு வந்த புன்கண் மாலை – நற் 117/7
தனிமைத் துயரோடு வந்த இழிந்த மாலைப்பொழுது,
|
புன்கம் |
புன்கம் – (பெ) சோறு, cooked rice
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி – புறம் 34/10
பாலின்கண் பெய்து சமைக்கப்பட்ட சோற்றைத் தேனொடு கலந்துண்டு
|
புன்கு |
புன்கு – (பெ) புங்கமரம், indian beech, Pongamia glabra;
1.
இதன் பூ பொரிப்பொரியாக இருக்கும். தளிர்கள் செந்நிறத்திலிருக்கும்.
பொரி பூ புன்கின் அழல் தகை ஒண் முறி – நற் 9/5
பொரிப்பொரியான பூக்களைக்கொண்ட புன்கமரத்தின் நெருப்பின் தன்மைத்தான ஒள்ளிய தளிரை
2.
பெண்கள் தங்கள் மார்பில் தோன்றும் சுணங்கு என்ற அழகுத்தேமலை நீக்க, இதன் தளிரைப் பூசிக்கொள்வர்.
பொரி பூ புன்கின் அழல் தகை ஒண் முறி
சுணங்கு அணி வன முலை அணங்கு கொள திமிரி – நற் 9/5,6
பொரிப்பொரியான பூக்களைக்கொண்ட புன்கமரத்தின் நெருப்பின் தன்மைத்தான ஒள்ளிய தளிரை
அழகுத்தேமல் பரந்த அழகிய முலைகளில் பொருந்தத் தேய்த்து
சோரியாஸிஸ்ஸை குணப்படுத்தும் புங்கம் மரம்
சுத்தமான காற்றை கொடுக்கக் கூடியதும், தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதும்,
மூட்டு வலியை போக்கவல்லதும் உடலில் ஏற்படும் அரிப்பை குணப்படுத்த கூடியதும்,
பசியின்மை, ஈரல் நோய்களை போக்கும் தன்மை கொண்டதுமானது புங்கமரம்,
புங்க இலை தோலுக்கு ஆரோக்கியம் கொடுக்கிறது. தோல் மென்மை தன்மை அடைகிறது.
அக்கி புண்கள், அம்மை கொப்பளங்கள் சரியாகிறது
என்ற இன்றைய மருத்துவக் குறிப்புகள் இதனை மெய்ப்பிக்கின்றன.
|
புன்னாகம் |
புன்னாகம் – (பெ) ஒரு மரம்/ பூ, a tree/flower
நந்தி நறவம் நறும் புன்னாகம் – குறி 91
நந்தியாவட்டை, நறைக்கொடி, நறிய புன்னாகம்
குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிடும் 99 பூக்களில் இது 87-ஆவது பூ ஆகும்.
வரையன புன்னாகமும்
கரையன சுரபுன்னையும் – பரி 11/16,17
என்ற பரிபாடல் அடிகளால் இது குறிஞ்சி நிலப் பூ என்பது உறுதியாகின்றது.
சிலர் இதனை நாகம் என்றும், புன்னை என்றும் கூறுகின்றனர்.
ஆனால், அதே குறிஞ்சிப்பாட்டில், கபிலர்,
ஆரம் காழ்வை கடி இரும் புன்னை
நரந்தம் நாகம் நல்லிருள்நாறி – குறி. 93,94
என்று, புன்னை, நாகம் ஆகிய மலர்களைத் தனியே குறித்திருப்பதால், புன்னாகம் என்பது இவற்றினும்
வேறுபட்டது என அறியலாம்.
karkanirka.org என்ற இணையதளம் இதனை calophyllum elatum bedd என்கிறது.
|
புன்னை |
புன்னை – (பெ) ஒரு மரம்/பூ, Mastwood, Calophyllum inophyllum
1.
இறவு அருந்திய இன நாரை
பூ புன்னை சினை சேப்பின் – பொரு 204,205
என்ற அடிகளால் இது ஒரு கடற்கரைப்பகுதியில் வளரும் மரம் என்பது தெரியவருகிறது.
2.
நெடும் கால் புன்னை நித்திலம் வைப்பவும் – சிறு 149
நெடிய தாளையுடைய புன்னை நித்திலம் (போல அரும்புகள்) வைக்கவும்,
என்ற அடியால், இது நீண்ட அடிப்பகுதியைக் கொண்டது என்றும் இதன் பூ, முத்துப்போல் வெண்மையாக
உருண்டு இருக்கும் என்றும் தெரியவருகிறது. பார்க்க : படம்.
3.
கொடும் கால் புன்னை கோடு துமித்து இயற்றிய
பைம் காய் தூங்கும் பாய் மணல் பந்தர் – பெரும் 266,267
வளைந்த காலையுடைய புன்னைகளின் கொம்புகளை வெட்டி(க் கால்களாகக்கொண்டு) உருவாக்கிய,
(படர்ந்த கொடியில்)பச்சைக் காய்கள் தொங்கும், பரப்பப்பட்ட மணலையுடைய பந்தலில்,
இதன் அடிமரம் நீண்டிருந்தாலும், வளைந்து இருக்கும் என்றும், அதனை வெட்டி பந்தல்காலாக நடுவர்
என்றும் தெரிய வருகிறது.
4.
ஆரம் காழ்வை கடி இரும் புன்னை – குறி 93
சந்தனப்பூ, அகிற்பூ, மணத்தையுடைய பெரிய புன்னைப்பூ
இதன் பூ மிக்க மணமுள்ளதாகவும் பெரியதாகவும் இருக்கும் என அறிய முடிகிறது.
5.
கானல் அம் சிறுகுடி கடல் மேம் பரதவர்
நீல் நிற புன்னை கொழு நிழல் அசைஇ – நற் 4/1,2
கடற்கரைச் சோலையிடத்தே அமைந்த அழகான சிறுகுடியில் வாழும் கடல்மேற்செல்லும் பரதவர்கள்
நீல நிறப் புன்னையின் கொழுவிய நிழலில் தங்கி,
இந்த மரம் நீல நிறத்தை உடையது என்றும், இலைதழைகள் மிகுந்திருப்பதால் மிகுதியான நிழலைத் தரும்
எனவும் அறிகிறோம். இங்கே நீலம் என்பது கருமையைக் குறிக்கும் என்பது,
கரும் கோட்டு புன்னை இறைகொண்டனவே – நற் 67/5
பெரும் போது அவிழ்ந்த கரும் தாள் புன்னை – நற் 231/7
என்பதால் தெளிவாகும்.
6.
நெடும் சினை புன்னை கடும் சூல் வெண்_குருகு – நற் 31/10
இதன் அடிமரம் மட்டுமல்லாமல்,இதன் கிளைகளும் நீண்டதாக இருக்கும் என அறிகிறோம்.
7.
மன்ற புன்னை மா சினை நறு வீ
முன்றில் தாழையொடு கமழும் – நற் 49/8,9
மன்றத்துப் புன்னையின் பெரிய கிளையில் உள்ள நறு மலர்கள்
வீட்டு முற்றத்தில் இருக்கும் தாழையோடு சேர்ந்து மணங்கமழும்
கடற்கரை ஓரத்தில்மட்டுமன்றி, ஊருக்குள் தெருக்களிலும் இது காணப்படும்.
8.
கல்லென் சேரி புலவர் புன்னை
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும் – நற் 63/3,4
மிகுந்த ஆரவாரமுள்ள சேரியை அடுத்த புலால்நாறும் இடத்திலுள்ள புன்னையின்
விழாவுக்குரிய மணம் விளங்கும் பூங்கொத்துகள் உடன் மலர்ந்து மணங்கமழும்
இதன் பூ மிகுந்த மணமுள்ளதால் விழாக்கொண்டாட இதனைப் பயன்படுத்துவர்.
9.
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம் – நற் 78/3
பொன் போன்ற நுண்ணிய தாதினைப் புன்னை மரங்கள் தூவும்,
இதன் பூவிலிருக்கும் மகரந்தம் பொன் நிறத்தது.
|
புன்புலம் |
புன்புலம் – (பெ) 1. தரிசு நிலம், waste land
2. புன்செய் நிலம், dry land
1.
புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சி – குறு 202/2
தரிசு நிலத்தில் அடர்ந்து படர்ந்த சிறிய இலையைக் கொண்ட நெருஞ்சியின்
2.
புன்புல வரகின் சொன்றியொடு பெறூஉம் – புறம் 197/12
புன்செய்நிலத்தில் விளைந்த வரகினது சோற்றுடனே பெறுகின்ற
|
புன்மை |
புன்மை – (பெ) அற்பம், இழிவு, கீழ்த்தரம், meanness, lowness, vileness
பிரிவு அரிது ஆகிய தண்டா காமமொடு
உடன் உயிர் போகுக தில்ல கடன் அறிந்து
இருவேம் ஆகிய உலகத்து
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே – குறு 57/3-6
பிரிவு என்பது அரிதாகிய துய்த்து அமையாத காமத்தோடே
பிரிவு ஏற்பட்டவுடனேயே உயிர் போவதாக; இல்லறக் கடமைகளை அறிந்து
இருவராய் வாழும் இவ்வுலகில்
ஒருவராய் வாழும் சிறுமையினின்றும் தப்புவதற்காக
|
புன்றுறை |
புன்றுறை – (பெ) சேரன் படைத்தலைவர்களில் ஒருவன், one of the army chiefs of King cEran
நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி
துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர் – அகம் 44/7-10
நன்னனும், ஏற்றை என்பவனும், நறிய பூண்களை அணிந்த அத்தியும்,
(பகைவர்) நெருங்குதற்கரிய மிக்க வலிமையுடைய கங்கனும், கட்டியும்,
பொன் அணிகலன்கள் அணிந்த வலிய வில்லையுடைய புன்றுறையும், என்பதாக
முன்பு அவர்கள் ஒன்றுகூடியிருந்த அளத்தற்கரிய சிறப்பு வாய்ந்த பாசறையில்,
இந்தப் புன்றுறை என்பவன் நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன் கட்டி, ஆகிய மற்ற சேரன் படைத்தலைவர்களுடன்
பாசறையில் இருந்தபோது, சோழன் பெரும்பூட் சென்னியின் படைத்தலைவனான பழையன் என்பான்,
அவருடன் போர்செய்து இறந்தான்.
|
புயலேறு |
புயலேறு – (பெ) இடி, thunder
அஞ்சுவரு மரபின் வெம் சின புயலேறு
அணங்கு உடை அரவின் அரும் தலை துமிய – புறம் 211/1,2
அஞ்சத்தக்க முறைமையுடைய வெய்ய சினத்தையுடைய இடியேறு
அச்சமுடைய பாம்பினது அணுகுதற்கரிய தலை துணிய
|
புயல் |
புயல் – (பெ) 1. மேகம், cloud
2. மழை, rain
1.
புயல் என ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் – அகம் 225/15
மேகம் போலத் தழைத்த தாழ்ந்த கரிய கூந்தல்
2.
புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில் – குறு 391/2
புள்ளிமான்கள் வெப்பத்தால் புழுங்கிய மழை நீங்கிய முல்லைநிலத்தில்
|
புய் |
புய் – (வி) 1. உருவு, வெளியேஇழு, pull out, extract
2. பறி, பிடுங்கு, pluck out, uproot
1.
புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல – கலி 53/4
மற்ற யானைகளைக் குத்தி உருவிய (இரத்தக்கரை படிந்த) கொம்பினைப் போல
2.
அகத்தோர்
புய்த்து எறி கரும்பின் விடு கழை – புறம் 28/11,12
அகத்துள்ளோர்
தாம் பிடுங்கி எறியும் கரும்பாகிய போகப்பட்ட கழை
|
புர |
புர – (வி) பாதுகா, பேணு, ஆதரி, keep, preserve, protect, cherish, tend, govern
மன்பதை புரக்கும் நன் நாட்டு பொருநன் – புறம் 68/10
உலகத்து உயிர்களைப் பாதுகாக்கும் நல்ல சோழநாட்டையுடைய வேந்தன்
பாணர் வருக பாட்டியர் வருக
யாணர் புலவரொடு வயிரியர் வருக என
இரும் கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்
கொடுஞ்சி நெடும் தேர் களிற்றொடும் வீசி – மது 749-752
பாணர் வருவாராக, பாணிச்சியர் வருவாராக,
புது வருவாயினையுடைய புலவரோடு கூத்தரும் வருவாராக’, என்று அழைத்து
(தம்)பெரிய சுற்றத்தாரைப் பேணி ஆதரிக்கும் பரிசிலர்க்கெல்லாம்
கொடுஞ்சியையுடைய நெடிய தேர்களை யானைகளோடும் வழங்கி,
புலி கொல் பெண்_பால் பூ வரி குருளை
வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும் – ஐங் 265/1,2
புலியால் கொல்லப்பட்ட பெண் பன்றியின் அழகிய வரிகள் கொண்ட குட்டியை,
வளைந்த வெண்மையான கொம்பினையுடைய ஆண்பன்றி காத்துவளர்க்கும்
ஒரு பிடி படியும் சீறிடம்
எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே – புறம் 40/10,11
ஒரு பெண்யானை படுக்கும் சிறிய இடம்
ஏழு களிற்றியானைகட்கு வேண்டும் உணவினை விளைவிக்கும் நாட்டை உடையோய்.
பூ விரி புது நீர் காவிரி புரக்கும்
தண் புனல் படப்பை எம் ஊர் ஆங்கண் – புறம் 166/28,29
பூப் பரந்த புதுநீரையுடைய காவிரி தன் நீரால் உலகத்தைக் காக்கும்
குளிர்ந்த புனல் பக்கத்தையுடைய எம்மூரிடத்தின்கண்
தன் புரந்து எடுத்த என் துறந்து உள்ளாள் – அகம் 383/1
தன்னை வளர்த்தெடுத்த என்னையும் நினையாளாய்த் துறந்து
|
புரந்தரன் |
புரந்தரன் – (பெ) இந்திரன், Indra
ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய
போரால் வறும் கைக்கு புரந்தரன் உடைய – பரி 5/55,56
வளராத உடம்பினையுடைய நீ விரும்பி விளையாட்டாகச் செய்த அந்தப்
போரில் உன்னுடைய வெறும் கைகளுக்கே அந்த இந்திரன் தோற்றோட,
|
புரவலன் |
புரவலன் – (பெ) 1. காப்பாளன், ஆதரிப்பவன், patron, benefactor
2. அரசன், king
1.
பாடுநர் புரவலன் ஆடு நடை அண்ணல் – பதி 86/8
பாடிவரும் பாணர், புலவர் ஆகியோரின் பாதுகாவலன் இந்த அசைந்த நடையையுடைய அண்ணல்
2.
நெருநல் எல்லை ஏனல் தோன்றி
திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து
புரவலன் போலும் தோற்றம் உறழ் கொள
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி – அகம் 32/1-4
நேற்றுப் பகலில் தினைப்புனத்தில் தோன்றி,
அழகிய மணிகள் ஒளிரும் அணிகளைப் பூண்டவனாய் வந்து,
அரசன் போன்ற (தனது)தோற்றத்துக்கு மாறாக
இரத்தல் செய்யும் மக்களைப் போல பணிவான சொற்களைப் பலமுறை கூறி,
|
புரவலை |
புரவலை – (பெ) காப்பவர் (முன்னிலை), protector (second person)
இரவலர் புரவலை நீயும் அல்லை – புறம் 162/1
இரப்போர்க்கு ஈந்து பாதுகாப்பாய் நீயும் அல்லை
|
புரவி |
புரவி – (பெ) குதிரை, horse
பணை நிலை முனைஇய பல் உளை புரவி
புல் உணா தெவிட்டும் புலம்பு விடு குரலொடு – நெடு 93,94
கொட்டிலில் நிற்பதை வெறுத்த நிறைந்த பிடரிமயிரையுடைய குதிரைகள்
புல்லாகிய உணவை வாய் நிறைய மெல்லும்(போது ஏற்படும்) தனிமை (அமைதியைக்)கெடுக்கும் ஓசையோடு
|
புரவு |
புரவு – (பெ) 1. விளைநிலம், field
2. அரசு இறை, வரி, tax
3. கொடை, பரிசு, gift, grant
4. காத்தல், care, protection
5. அரசனால் அளிக்கப்பட்ட இறையிலி நிலம், Land given free of rent by a king;
1.
நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன் – புறம் 379/6
நெற்பயிர் நெருங்கிய விளைவயல்களையுடைய மா இலங்கை என்னும் ஊர்க்குத் தலைவன்
2.
வாரி
புரவிற்கு ஆற்றா சீறூர் – புறம் 330/5,6
வருவாய்
புரவு வரி செலுத்துவதற்கும் ஆற்றாததாய் உள்ள சீறூர்
3.
இரவலர் வரூஉம் அளவை அண்டிரன்
புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல – நற் 237/7,8
இரவலர்கள் வரும்வரை, அண்டிரன் என்போன்
அவர்களுக்குக் கொடை கொடுப்பதற்காகச் சேர்த்துவைத்த யானைகள் போல
4.
மண் உடை ஞாலம் புரவு எதிர்கொண்ட
தண் இயல் எழிலி தலையாது மாறி – பதி 18/9,10
மண் திணிந்த நிலவுலகத்தைக் காப்பதை மேற்கொண்ட
குளிர்ந்த இயல்பினையுடைய மேகங்கள் மழைபெய்யாமல் மாறிப்போய்
5.
சீறூர்
கோள் இவண் வேண்டேம் புரவே – புறம் 297/4,5
சிறிய ஊர்களை
இறையிலி நிலங்களாகக் கொள்வதை இவ்விடத்து வேண்டேம்
|
புரி |
புரி – 1. (வி) 1. செய், do, make
2. விரும்பு, desire
3. மிகுந்திரு, abound
4. ஆக்கு, படை, create
– 2. (பெ) 1. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கயிறு, நூல் போன்றவற்றைத் திரித்து உருவாக்கியதில்
ஒரு பகுதி, one part of a twisted twines or ropes
2. முறுக்கு, Strand, twist, as of straw
1.1
எய்யா நல் இசை செ வேல் சேஎய்
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம் புரி கொள்கை புலம் பிரிந்து உறையும்
செலவு நீ நயந்தனை ஆயின் – திரு 61-64
அளந்தறியமுடியாத நல்ல புகழினையும், செவ்விய வேலையும் உடைய முருகக்கடவுளின் –
திருவடியில் செல்லுதற்குரிய பெருமைகொண்ட உள்ளத்தோடு,
நன்மைகளையே செய்யும் மேற்கோளுடன், (இருக்கும்)இடத்தை விட்டு (வேறிடத்தில்) தங்கும்
பயணத்தை நீ விரும்பியவனாய் இருந்தால்
1.2
நால் பெரும் தெய்வத்து நல் நகர் நிலைஇய
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை
பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக – திரு 160-162
நான்கு பெரும் தெய்வங்களுள் வைத்து நல்ல நகரங்கள் நிலைபெற்றுள்ள
உலகத்தை ஓம்புதல் தொழில் ஒன்றையே விரும்பும் கோட்பாட்டையுடைய
பலராலும் புகழப்படுகின்ற (அயனை ஒழிந்த ஏனை)மூவரும் தலைவராக வேண்டி
1.3
நெடும் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை – நற் 148/4
நெடிய காய்ந்துபோன நீர்நிலைகள் மிகுந்த நீரற்ற நீண்ட பாலைவழியில்
1.4
அழல் புரிந்த அடர் தாமரை – புறம் 29/1
எரியால் ஆக்கப்பட்ட தகடாகச் செய்த தாமரைப்பூ
2.1
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண் – திரு 183
ஒன்பதாகிய நூலைத் தன்னிடத்தே கொண்ட, ஒரு புரி மூன்றாகிய, நுண்ணிய பூணூலையும் உடைய,
2.2
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் – சிறு 34
பொன்னை வார்த்த (கம்பியினை)ஒத்த முறுக்கு அடங்கின நரம்பின்
|
புரிசை |
புரிசை – (பெ) காப்பு மதில், fortification, wall
இடு முள் புரிசை ஏமுற வளைஇ – முல் 27
இடுமுள்ளாலான மதிலைக் காவலுறும்படி வளைத்து,
விண் உற ஓங்கிய பல் படை புரிசை – மது 352
விண்ணைத் தொடுமளவு உயர்ந்த பல படைகளையுடைய மதிலினையும்,
|
புரிநூல் |
புரிநூல் – (பெ) பூணூல், Sacred thread worn by the twiceborn, consisting of three strands
புரிநூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப – பரி 11/79
முப்புரியாக பூணூலை அணிந்த அந்தணர் பொன்னாலான கலன்களை ஏந்தி நிற்க’
|
புரிவு |
புரிவு – (பெ) 1. அன்பு, பரிவு, kindness, love
2. விருப்பம், desire
1.
புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும் என – கலி 11/3
அன்பும் ஆசையும் கொண்ட காதலினால் வாழ்வில் ஒன்றுபட்டிருப்பதுவும் பொருளினால் ஆகும் என்று
2.
புரிவுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற – பரி 23/54
யாவராலும் விரும்பப்படும் பாடலோடு ஆடலும் தோன்ற,
|
புரீஇ |
புரீஇ – (வி.எ) புரிந்து என்பதன் விகாரம், change in form allowed in poetry
நலம் புரீஇ – பரி 15/63
தனக்கு நன்மை விளைவதை விரும்பி
|
புருவை |
புருவை – (பெ) 1. ஒரு வகை ஆடு, a kind of sheep
2. இளமை, youthfulness
1.
செம் நில புறவின் புன் மயிர் புருவை
பாடு இன் தெண் மணி தோடு தலைப்பெயர – நற் 321/1,2
செம்மண் நிலமான முல்லைக்காட்டில், புல்லிய மயிரைக்கொண்ட செம்மறியாடுகளின்
ஓசை இனிய தெளிந்த மணி கட்டப்பட்ட கூட்டம், மேயும் இடத்தைவிட்டு தொழுவத்துக்குத் திரும்ப,
2.
புருவை பன்றி வருதிறம் நோக்கி
கடும் கை கானவன் கழுது மிசை கொளீஇய
நெடும் சுடர் விளக்கம் நோக்கி – அகம் 88/4-6
இளமை பொருந்திய பன்றியின் வரும்வகையினை நோக்கி
வலிய கையினையுடைய தினைப்புனங்காப்போன் பரண் மேல் கொளுத்திவைத்த
நீண்ட சுடரின் ஒளியினை நோக்கி
|
புரை |
புரை – 1. (வி) 1. ஒத்திரு, போன்றிரு, resemble
– 2. (பெ) 1. குற்றம், defect, fault, blemish
2. சிறப்பு, உயர்வு, greatness, eminence
3. உள்துளை, tubular hollow
4. இடுக்கு, இடைவெளி, gap, narrow space
1.1
மலை புரை மாடத்து கொழு நிழல் இருத்தர – மது 406
மலையை ஒத்திருக்கும் மாடங்களின் குளிர்ந்த நிழலில் இருக்க
2.1
கைவல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து
ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை – நெடு 85,86
கைத்தொழில் வல்ல தச்சன் (ஆணிகளை நன்றாக)முடுக்கியதனால் குறைபாடில்லாமல்
வெண்சிறுகடுகு அப்பிவைத்த நெய்யணிந்த நெடிய நிலையினையுடைய
2.2
புரை தவ உயரிய மழை மருள் பல் தோல் – மலை 377
சிறப்புக்களில் மிக உயர்ந்த, மேகக்கூட்டங்களோ என்று நினைக்கத்தோன்றும் பல யானைகள்
2.3
மண் புரை பெருகிய மரம் முளி கானம் – ஐங் 319/2
நிலத்தில் பொந்துகள் பெருகியுள்ள, மரங்கள் கருகிப்போன காட்டினைக்
2.4
பெரும் தெரு உதிர்தரு பெயல் உறு தண் வளி
போர் அமை கதவ புரை-தொறும் தூவ – நற் 132/3,4
பெரிய தெருவில் உதிர்ந்துவிழும் மழைத்தூறலைக் குளிர்ந்த காற்று
ஒன்றற்கொன்று பொருதியிருக்கும் கதவுகளின் இடைவெளிகள்தோறும் தூவிவிட
|
புரைஇ |
புரைஇ – (வி.எ) 1. புரந்து, பாதுகாத்து, protecting
2. ஒத்து, being similar
1.
வளம் கெழு சிறப்பின் உலகம் புரைஇ – பதி 50/4
வளம் பொருந்திய சிறப்பினையுடைய உலகத்தைப் பேணிப் பாதுகாத்து
மன் உயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும்
கொண்டல் தண் தளி கமம் சூல் மா மழை – பதி 24/27,28
உலகத்து உயிர்களைக் காக்கும்பொருட்டு வலப்பக்கமாய் எழுந்து முழங்கும்
கீழ்க்காற்றால் கொணரப்பட்ட குளிர்ச்சியான நீர்த்துளிகளைக் கொண்ட நிறைசூலைக்கொண்ட கரிய மேகங்கள்
2.
வேய் அமை கண் இடை புரைஇ
சேய ஆயினும் நடுங்கு துயர் தருமே – அகம் 152/23,24
மூங்கிலில் பொருந்திய கணுக்களின் நடுவிடத்தை ஒத்து
சேய்மைக்கண் உள்ளனவாயினும் நாம் நடுங்கத்தக்க துயரினைத் தரும்.
மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே – நற் 317/10
கரிய இதழையுடைய அழகிய மலரைப் போன்ற கண்கள்
|
புரைபடல் |
புரைபடல் – (பெ) வருந்துதல், getting distressed
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு
புள்ளி நிலனும் புரைபடல் அரிது என
உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று – பரி 2/33-35
கூரிய வெண்மையான கொம்புகளால் பன்றிவடிவ வராகத்தில் நிலவுலகை எடுத்து அவளை மணம் செய்து
ஒரு புள்ளி அளவு நிலம்கூட வருந்துவதில்லை என்று
எண்ணிப்பார்த்து உரைப்போரின் புகழுரைகளோடு உன் செயலும் சிறந்து விளங்கும்.
|
புரைமை |
புரைமை – (பெ) உயர்வு, excellence
நீ அளந்து அறிவை நின் புரைமை – குறு 259/6
நீ அளந்து அறிவாய் உன் உயர்வினை
|
புரைய |
புரைய – 1. (இ.சொ) ஓர் உவம உருபு, a particle of comparison
– 2. (பெ) உயர்வானது, an object with excellence
– 3 (வி.அ) மேன்மையுற, to be excellent
1.
ஆடு இயல் பெரு நாவாய்
மழை முற்றிய மலை புரைய
துறை முற்றிய துளங்கு இருக்கை – மது 83-85
அசையும் இயல்பினையுடைய பெரிய மரக்கலங்கள் –
மேகங்கள் சூழ்ந்த மலையைப் போல
துறைகள் சூழ்ந்த – அசைகின்ற இருக்கையினையும்
2.
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல
புரைய மன்ற புரையோர் கேண்மை – நற் 1/4,5
சந்தனமரத்தில் சேர்த்துக்கட்டிய இனிய தேன்கூடு போல
மேன்மையானது சிறந்தவர்களின் நட்பு
3.
அரையுற்று அமைந்த ஆரம் நீவி
புரைய பூண்ட கோதை மார்பினை – அகம் 100/1,2
நறுமணம் கூட்டி அரைக்கப்பெற்று முடிந்த சந்தனத்தைப் பூசி
உயர்வுற மாலையினைப் பூண்ட மார்பினையுடையையாய்
|
புரையர் |
புரையர் – (பெ) தக்காரும் மிக்காரும், those who are equal or greater
நலம் சால் விழு பொருள் பணிந்து வந்து கொடுப்பினும்
புரையர் அல்லோர் வரையலள் இவள் என – புறம் 343/11,12
நலம் சான்ற உயர்ந்த பொருள்களைக்கொண்டுவந்து உவகையுடன் கொடுத்தாலும்
ஒப்போரும் உயர்ந்தோரும் அல்லாதாரை மணந்துகொள்ளாளிவண் என்று
|
புரையுநர் |
புரையுநர் – (பெ) ஒப்பார், those who are alike
நின் அடி உள்ளி வந்தனென் நின்னொடு
புரையுநர் இல்லா புலமையோய் என – திரு 279,280
உன் திருவடியை நினைத்து வந்தேன், உன்னோடு
ஒப்பாரில்லாத மெய்யறிவுடையோனே’, என
|
புரையோர் |
புரையோர் – (பெ) 1. பெரியோர், சான்றோர், great or eminent persons
2. மெய்ப்பொருளுணர்ந்தோர், men of wisdom
3. கற்புடை காதல்மகளிர், loving women of chastity
1.
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல
புரைய மன்ற புரையோர் கேண்மை – நற் 1/4,5
சந்தனமரத்தில் சேர்த்துக்கட்டிய இனிய தேன்கூடு போல
மேன்மையானது சிறந்தவர்களின் நட்பு
2.
செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம் அ நலம்
பயலையால் உணப்பட்டு பண்டை நீர் ஒழிந்த_கால்
பொய் அற்ற கேள்வியால் புரையோரை படர்ந்து நீ
மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ – கலி 15/12-15
அசோக மரத்தின் அழகிய தளிரைப் போன்றது இவளின் எழில் நலம், அந்த நலம்
பசலை நோயால் பாழடிக்கப்பட்டு அதன் பண்டைய இயல்பு அழிந்தபோது –
பொய்யற்ற கேள்வியறிவால் உயர்ந்த மெய்ப்பொருளுணர்ந்தோரைச் சார்ந்து நீ பெறப்பொகும்
மாசற்ற நோன்புநெறிகளால் திருப்பித்தர முடியுமா
3.
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து
புரையோர் உண்கண் துயில் இன் பாயல்
பாலும் கொளாலும் வல்லோய் – பதி 16/17-19
எழுவரது மணிமுடியினால் செய்துகொண்ட ஆரத்தை அணிந்த – வெற்றித்திருமகள் நிறைந்த – உன் மார்பினை,
உன் காதல் மகளிரின் மையுண்ட கண்கள் உறங்குவதற்கு இனிய படுக்கையாக ஆக,
போர்மேற் செல்லும்போது நீங்குவதும், இல்லத்திலிருக்கும்போது கொள்ளுவதும் ஆகிய இரண்டுக்கும் வல்லவனே!
|
புரைவது |
புரைவது – (பெ) 1. ஒப்பானது, that which is similar
2. சிறப்பானது, that which is excellent
1,2
புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே – பதி 17/1
உனக்கு ஒப்பானது ஏதேனும் உள்ளதோ என்று எண்ணிப்பார்த்தால், சிறப்பானது ஒன்றும் இல்லை;
|
புறக்கு |
புறக்கு – (பெ) வெளிப்பக்கம், outer side
வெண் புறக்கு உடைய திரி மருப்பு இரலை – அகம் 139/10
வெள்ளிய புறத்தினையுடைய திரிந்த கொம்பினையுடைய ஆண்மான்
|
புறக்குடி |
புறக்குடி – (பெ) பார்க்க : புறச்சேரி, குடியிருப்பின் வெளிப்பக்கம், outside the colony
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை
அணைய கண்ட அம் குடி குறவர்
கணையர் கிணையர் கை புனை கவணர்
விளியர் புறக்குடி ஆர்க்கும் நாட – நற் 108/2-5
தன் துணையினின்றும் பிரிந்த கொடிய யானை
அணுகுவதைக் கண்ட அழகிய குடியிருப்பின் கானவர்
அம்புகளோடும், கிணைப்பறையோடும், கையில் கட்டப்பட்ட கவண்களோடும்
பிறரை உரக்க அழைப்பவராய் தமது குடியிருப்பின் புறமெல்லாம் சென்று ஆரவாரிக்கும் நாட்டினனே
|
புறக்கொடு |
புறக்கொடு – (வி) 1. புறமுதுகிடு, தோற்றோடு, turn back and flee after defeat
2. திரும்பி ஓடு, turn back and flee
1.
பொருவேம் என பெயர் கொடுத்து
ஒருவேம் என புறக்கொடாது – பட் 289,290
போரிடுவோம் எனச் சூள் உரைத்து,
(பின்னர் போரைக்)கைவிடுவோம் என்று கருதிப் புறமுதுகிட்டு ஓடாமல்
2.
செம் கோல் வாளி கொடு வில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்து என
வெம் கடற்று அடை முதல் படு முடை தழீஇ
உறு பசி குறுநரி குறுகல் செல்லாது
மாறு புறக்கொடுக்கும் அத்தம் – நற் 164/6-10
செம்மையான கோல் வடிவிலான அம்புகளையும், வளைந்த வில்லையும் உடைய ஆடவர்
புதிதான வழிப்போக்கரின் உயிராற்றலைப் போக்கியதால்
வெம்மையான பாலைவழியின் உலர்ந்த சருகுகளின் மேல் மிக்க முடைநாற்றம் சூழ்ந்திருக்க,
மிக்க பசியையுடைய குள்ளநரி அருகில் செல்லாமல்
பின்னே திரும்பி ஓடும் பாலைவழியில்
|
புறக்கொடை |
புறக்கொடை – (பெ) 1. தோற்று ஓடுகை, turning the back in the battle field
2. திரும்பிச்செல்லுதல், going back
1.
ஒடுங்கா தெவ்வர் ஊக்கு அற கடைஇ
புறக்கொடை எறியார் நின் மற படை கொள்ளுநர் – பதி 31/32,33
அடங்காத பகைவரின் ஊக்கம் கெடும்படியாக விரட்டி
அவர் தோற்றோடுகையில் (அவரின் முதுகினில்) வேல்களை வீசியெறியமாட்டார் –
உன் வீரம் மிக்க சேனைக்குத் தலைமைகொள்பவர்
2.
சிறப்பு செய்து உழையரா புகழ்பு ஏத்தி மற்று அவர்
புறக்கொடையே பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல் – கலி 25/15,16
சிறப்புகள் பல செய்து அருகிலிருந்து புகழ்ந்து பாராட்டிவிட்டு, அவர்
புறத்தே அகன்று செல்லுகையில் பழி தூற்றுகின்ற புன்மையாளர் போல
|
புறங்கடை |
புறங்கடை – (பெ) வீட்டு வாசலுக்கு வெளியே, outside the front entrance of a house
நீயும் தவறு இலை நின்னை புறங்கடை
போதர விட்ட நுமரும் தவறு இலர் – கலி 56/30,31
உன்மீதும் தவறில்லை; உன்னை வாசலுக்கு வெளியே
போகவிட்ட உன் வீட்டார் மீதும் தவறில்லை;
|
புறங்கா |
புறங்கா – (வி) பாதுகா, பேணு, guard, protect, save
காமர் கவினிய பேரிளம் பெண்டிர்
பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சி
சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும் – மது 465-467
ஆசைப்படும்படி அழகுபெற்ற இளமை முதிர்ந்த மகளிர்,
பூவையுடையவராய், புகையையுடையவராய், வணங்கியவராய் புகழ்ந்து வாழ்த்தி
சிறப்பாக (அவர்களாற்)பாதுகாக்கப்படும் கடவுளின் (பௌத்தப்)பள்ளியும்
|
புறங்காடு |
புறங்காடு – (பெ) 1. சுடுகாடு, இடுகாடு, Place of cremation or burial
2. காவற்காடு, Jungle or forest serving as defence
1.
கள்ளி ஏய்ந்த முள்ளி அம் புறங்காட்டு
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்
உப்பு இலா அவி புழுக்கல்
கைக்கொண்டு பிறக்கு நோக்காது
இழிபிறப்பினோன் ஈயப்பெற்று
நிலம் கலனாக இலங்கு பலி மிசையும்
இன்னா வைகல் வாரா முன்னே – புறம் 363/10-16
கள்ளிகள் பரந்து மூடிய முட்செடிகள் நிறைந்த சுடுகாட்டிற்குப்
பாடையில் கொண்டு போய், பின் அந்த அகன்ற இடத்தின்கண்
உப்பு இல்லாமல் வேகவைத்தசோற்றைக்
கையில்கொண்டு, பின்பக்கம் பார்க்காமல்
புலையனால் கொடுக்கப்பெற்று
நிலத்தையே உண்கலனாகக் கொண்டுவைத்து விளங்குகின்ற பலியுணவை ஏற்கும்
துன்பம் பொருந்திய இறுதிநாள் வருவதற்கு முன்னர்
2.
நொச்சி வேலி தித்தன் உறந்தை
கல் முதிர் புறங்காட்டு அன்ன
பல்முட்டின்றால் தோழி நம் களவே – அகம் 122/21-23
மதிலாகிய வேலியையுடைய தித்தன் என்பானது உறையூரைச் சூழ்ந்துள்ள
கற்கள் நிறைந்த காவல்புறங்காடு போன்ற
பல தடைகளையுடையது நமது இந்தக் களவொழுக்கம்.
|
புறங்காண் |
புறங்காண் – (வி) 1. புறமுதுகிடச்செய், தோற்றோடச்செய், put to flight, defeat
2. பின்னே சென்று காண், go behind and see
1.
அரி மான் இடித்து அன்ன அம் சிலை வல் வில்
புரி நாண் புடையின் புறங்காண்டல் அல்லால் – கலி 15/1,2
சிங்கம் முழங்குவதைப் போன்று முழங்கும், அழகிய சிலைமரத்தால் செய்யப்பட்ட வலிய வில்லின்
முறுக்குடைய நாணைச் சுண்டிவிட்டு ஒலியெழுப்பினாலே பகைவர் தோற்றோடக் காண்பது அன்றி,
2.
செழும் தண் மனையோடு எம் இவண் ஒழிய
செல் பெரும் காளை பொய்ம்மருண்டு சேய் நாட்டு
சுவை காய் நெல்லி போக்கு அரும் பொங்கர்
வீழ் கடை திரள் காய் ஒருங்கு உடன் தின்று
வீ சுனை சிறு நீர் குடியினள் கழிந்த
குவளை உண்கண் என் மகள் ஓர் அன்ன
செய் போழ் வெட்டிய பெய்தல் ஆயம்
மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு
மா இரும் தாழி கவிப்ப
தா இன்று கழிக என் கொள்ளா கூற்றே – நற் 271/3-12
செழுமையும் குளிர்ச்சியும் உள்ள வீட்டோடு நான் இங்கே தனித்திருக்க,
தன்னுடன் வருகின்ற பெரிய காளைபோன்றவனின் பொய்மொழிகளில் மயங்கி, தொலை நாட்டு,
சுவையுள்ள காயைக்கொண்ட நெல்லியின், வழிச்செல்வோரைப் போகவிடாமல் தடுக்கும் தோப்பில்
விழுந்துகிடக்கின்ற முற்றிலும் திரண்ட காய்களை இருவரும் சேர்ந்து தின்று,
வற்றியுள்ள சுனையிலுள்ள சிறிதளவு நீரைக் குடித்துவிட்டுக் கடந்து சென்ற
குவளை மலர்போன்ற மையுண்ட கண்களையுடைய என் மகளை, ஒன்றுபோலிருக்கும்
சிவந்த பனங்குருத்தைக் கீண்டு பதனிடுமாறு போடுதலாய
மாலைக் காலத்து விரிந்த நிலவில் சென்று பின்னே போய்க் காணும்படியாக விட்ட இதற்கு
முன்னாலேயே பெரிய கரிய தாழியிலிட்டுக் கவித்து மூடும்படி
வலிமையற்று இறந்தொழிக என் உயிரை எடுத்துக்கொள்ளாத கூற்றம்.
|
புறங்கால் |
புறங்கால் – (பெ) பாதத்தின் மேல்பக்கம், Upper part of the foot, instep
பேணான் துறந்தானை நாடும் இடம் விடாய் ஆயின்
பிறங்கு இரு முந்நீர் வெறு மணல் ஆக
புறங்காலின் போக இறைப்பேன் முயலின்
அறம் புணை ஆகலும் உண்டு – கலி 144/45-48
என்னைக் காக்காமல் கைவிட்டவனை நான் தேடிக் கண்டுபிடிக்கும் இடத்தை நீ எனக்கு விட்டுத்தராமலிருந்தால்
பெருகி வரும் கரிய கடலே! நீ வெறும் மணல்வெளியாய்ப் போகும்படி
என் புறங்காலால் உன் நீரை எல்லாம் இறைத்துவிடுவேன், அவ்வாறு முயன்றால்
அதற்கு அறமே துணையாகவும் இருக்கும்;
|
புறங்கூறு |
புறங்கூறு – (வி) காணாவிடத்துப் பிறர்மேல் அலர்தூற்று, backbite, slander;
அரில் பவர் பிரம்பின் வரி புற நீர்நாய்
வாளை நாள் இரை பெறூஉம் ஊரன்
பொன் கோல் அவிர் தொடி தன் கெழு தகுவி
என் புறங்கூறும் என்ப – குறு 364/1-4
இறுகப் பின்னிய கொடிப்பிரம்பினைப் போல் வரிவரியான முதுகினைக் கொண்ட நீர்நாய்
வாளை மீனை அன்றைய ஊணவாகப் பெறும் ஊரினனான தலைவனின்
பொன்னாலான திரண்ட ஒளிவிடும் வளையல் அணிந்த, தனக்குத்தான் தகுதியைக் கொண்ட பரத்தை
என்னைப்பற்றிப் பழித்துப்பேசுகிறாள் என்று சொல்வர்;
|
புறங்கூற்று |
புறங்கூற்று – (பெ) காணாவிடத்து பிறர்மேல் பழிதூற்றுகை, Slander, backbiting
மறம் திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்த_கால்
அறம் சாரான் மூப்பே போல் அழி_தக்காள் வைகறை
திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திரு தகும் அ திரு
புறங்கூற்று தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல் உரைத்தை காண் – கலி 38/18-21
வழியில் கொள்ளையர்கள் கொடுஞ்செயலினின்றும் மாறவில்லை என்று கருதாமல், நீ மலைவெளியில் வந்தபோது
அறநெறியைக் கைவிட்டவன் முதுமையில் சீரழிவது போல், மனம் அழிந்துபோய்க் கிடந்தவள், விடியற்காலையில்
நல்லொழுக்கமுடையவனின் செல்வம் போல் நாளும் சீர்பெற்றுச் சிறப்புறுவாள், அந்தச் சீரினால்
அயலார் கூறும் இழிப்புரைகளை மாற்றத்தக்க ஒரு வழி இருந்தால் அதை உரைப்பாயாக,
|
புறங்கொடு |
புறங்கொடு – (வி) முதுகுகாட்டு, தோற்று ஓடு, turn one’s back, show one’s back, in defeat
உடு உறும் பகழி வாங்கி கடு விசை
அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின்
புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழிதர
புள்ளி வரி நுதல் சிதைய நில்லாது
அயர்ந்து புறங்கொடுத்த பின்னர் – குறி 170-174
இறகு சேர்ந்த அம்பினை வலிந்திழுத்து, கடும் வேகத்துடன்,
தலைமை யானையின் அழகிய முகத்தில் ஆழச்செலுத்துதலினால்,
(அப்)புண் உமிழ்ந்த செந்நீர் (அதன்)முகத்தில் பரவி வழிந்துநிற்க,
புள்ளிபுள்ளியானதும் வரிகளையுடையதுமான நெற்றியின் (அழகு)அழிந்து, (அங்கே)நிற்கமாட்டாமல்,
(அக் களிறு)தளர்ந்து திரும்பி ஓடிய பின்னர்
|
புறச்சேரி |
புறச்சேரி – (பெ) புறஞ்சேரி, நகர்க்குப் புறம்பே மக்கள் வாழும் பிரதேசம், Outskirts of a city; suburb;
பறழ் பன்றி பல் கோழி
உறை_கிணற்று புறச்சேரி
மேழக தகரொடு சிவல் விளையாட – பட் 75-77
குட்டிகளையுடைய பன்றிகளையும், பலவிதமான கோழிகளையும்,
உறைக் கிணறுகளையும் உடைய (ஊருக்குப்)புறம்பேயுள்ள சேரிகளில்
செம்மறி ஆட்டுக்கிடாயோடே கௌதாரிப் பறவை விளையாட – (இருக்கும் பட்டினம்),
|
புறஞ்சாய் |
புறஞ்சாய் – (வி) தோற்றுப்போ, be defeated
மாண மறந்து உள்ளா நாண் இலிக்கு இ போர்
புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே – கலி 89/12,13
நாம் சிறந்திருப்பதை மறந்தும் நினைக்காத இந்த வெட்கமில்லாதவனுக்கு, இந்த ஊடல் சண்டையில்
தோற்பதுபோல் காட்டிக்கொள்வாய்! நெஞ்சே!
|
புறஞ்சாய் |
புறஞ்சாய் – (வி) தோற்றுப்போ, be defeated
மாண மறந்து உள்ளா நாண் இலிக்கு இ போர்
புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே – கலி 89/12,13
நாம் சிறந்திருப்பதை மறந்தும் நினைக்காத இந்த வெட்கமில்லாதவனுக்கு, இந்த ஊடல் சண்டையில்
தோற்பதுபோல் காட்டிக்கொள்வாய்! நெஞ்சே!
|
புறஞ்சிறை |
புறஞ்சிறை – (பெ) 1. மாளிகைக்கு வெளியே அருகிலுள்ள இடம், Premises in the neighbourhood of a palace or castle;
2. வேலி அல்லது எல்லைக்கு வெளியே உள்ள இடம், Place outside the fence, as of a field
3. அருகிலுள்ள இடம், vicinity
1.
களிறு நிலை முணைஇய தார் அரும் தகைப்பின்
புறஞ்சிறை வயிரியர் காணின் – பதி 64/7,8
களிறுகள் நிற்பதற்கு வெறுத்த, ஒழுங்காக அமைந்த உயர்ந்த கட்டுக்காவலையுடைய
அரண்மனையின் வெளிப்புறத்தில் கூத்தர்கள் வரக் காணும்போது
2.
புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து அகத்தோர்
புய்த்து எறி கரும்பின் விடுகழை – புறம் 28/1112
வேலிப்புறத்து நின்று வேண்டிய மாக்கட்கு, அறத்தைக் கருதி, அகத்துள்ளோர்
பிடுங்கி எறியும் கரும்பாகிய போகப்பட்ட கழை
3.
யாமே புறஞ்சிறை இருந்தும் பொன் அன்னம்மே – புறம் 84/2
யான் மன்னனுக்கு அருகேயுள்ள இடத்தில் இருந்தும் வருந்திப் பொன் போலும் நிறைத்தை உடையவரானோம்
|
புறஞ்சொல் |
புறஞ்சொல் – (பெ) வீண் பழிச்சொல், gossip, slander
நகையினும் பொய்யா வாய்மை பகைவர்
புறஞ்சொல் கேளா புரை தீர் ஒண்மை
பெண்மை சான்று பெரு மடம் நிலைஇ
கற்பு இறைகொண்ட கமழும் சுடர் நுதல்
புரையோள் கணவ பூண் கிளர் மார்ப – பதி 70/12-16
விளையாட்டுக்கும் பொய்கூறாத வாய்மையினையும், பகைவரின்
ஒளிவுமறைவான இகழ்ச்சிப்பேச்சையும் கேளாத குற்றம் நீங்கிய அறிவினையும் கொண்ட –
நாணம் நிறைந்து, பெருமளவு கபடமின்மை நிலைபெற்று,
கற்பு நிலையாகத் தங்கின, மணங்கமழும் ஒளிபொருந்திய நெற்றியையுடைய,
சிறந்தவளுக்குக் கணவனே! – பூண்கள் அணிந்த மார்பினையுடையவனே!
|
புறநிலை |
புறநிலை – (பெ) 1. குறை இரந்து நிற்கும் நிலை, உதவி வேண்டிப் பிறர் புறங்கடையில் நிற்றல்,
Standing in the back-yard of one’s house, seeking one’s favour
2. வேறுபட்ட நிலை, மாறுபட்ட சூழல், changed condition or situation
1.
சேரி சேர மெல்ல வந்து_வந்து
அரிது வாய்விட்டு இனிய கூறி
வைகல்-தோறும் நிறம் பெயர்ந்து உறையும் அவன்
பைதல் நோக்கம் நினையாய் தோழி
———————- ———————– —————
பிறிது ஒன்று குறித்தது அவன் நெடும் புறநிலையே – குறு 298/1-8
நமது தெருவினை அடைய மெல்ல வந்து வந்து
அரிதாக வாயைத்திறந்து இனிய சொற்களைக் கூறி
ஒவ்வொருநாளும் தன் மேனியின் நிறம் வேறுபட்டுத் தங்கும் தலைவனின்
வருத்தம் தேங்கிய பார்வையினை நினைத்துப்பார் தோழி!
————————– ——————————- ——————–
(குறை இரத்தலை அன்றியும்)வேறொன்றைக் குறித்தது அவன் நீளப் பின்னிற்றல்.
2.
முன் நாள்
கை உள்ளது போல்காட்டி வழிநாள்
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம் – புறம் 211/10-12
முதல்நாள்
பரிசில் கையிலே புகுந்தது போல் காட்டி, அடுத்தநாள்
பொய்யைப் பெற்றுநின்ற உனது அன்பு இடம் மாறிய நிலைமைக்கு யான் வருந்திய வருத்தத்திற்கு
|
புறந்தா |
புறந்தா – (வி) 1. பாதுகா, பேணு, protect, take care of, look after
2. போற்று, புகழ், extol, adore
3. ஒளிர், பொலிவுபெறு, become shiny
1.
மன்னவன் புறந்தர வரு விருந்து ஓம்பி
தன் நகர் விழைய கூடின்
இன் உறல் வியன் மார்ப அது மனும் பொருளே – கலி 8/21-23
மன்னவன் பேணிப்பாதுகாக்க, வீட்டுக்கு வரும் விருந்தினரை உபசரித்து,
தன் மனைவி மக்கள் விரும்பும்படி, அவருடன் சேர்ந்திருப்பது,
இனிய நெருக்கமான உறவினுக்குரிய அகன்ற மார்பினையுடையவனே! அதுவே நிலைத்த பொருளும் ஆகும்.
பெயல் புறந்தந்த பூ கொடி முல்லை – குறு 126/3
மழையால் வாழ்விக்கப்பட்ட பூங்கொடியையுடைய முல்லையின்
இனிது புறந்தந்து அவர்க்கு இன் மகிழ் சுரத்தலின் – பதி 46/7
அவர்களை நன்கு உபசரித்து, அவர்க்கு இனிய கள்ளினை மிகுதியாகக் கொடுப்பதால் –
எழூஉ புறந்தரீஇ பொன் பிணி பலகை
குழூஉ நிலை புதவின் கதவு மெய் காணின் – பதி 53/15,16
கணைய மரம் காக்கின்ற, இரும்பு ஆணிகள் தைத்த பலகைகளால் ஆன
பற்பல நிலைகளையுடைய சிறிய நுழைவாயில்களையுடைய கதவுகளின் உருவத்தைக் கண்டாலே,
2.
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி
குடி புறந்தருகுவை ஆயின் நின்
அடி புறந்தருகுவர் அடங்காதோரே – புறம் 35/32-34
ஏர் மாடுகளைப் பாதுகாப்போருடைய குடியைப் பாதுகாத்து
ஏனைக் குடிமக்கலையும் பாதுகாப்பாயாயின்
நின் அடியைப் போற்றுவர் நின் பகைவர்
3.
பொடி அழல் புறந்தந்த செய்வு_உறு கிண்கிணி – கலி 85/2
பொன் தூளால் பொடிவைத்து பொலிவுற அழகாகச் செய்த சதங்கை
|
புறந்தை |
புறந்தை – (பெ) புறையாறு என்பதன் மரூஉ, a city by the name poRaiyARu.
புன்னை அம் கானல் புறந்தை முன்துறை – அகம் 100/13
புன்னை மரங்களையுடைய அழகிய சோலை சூழ்ந்த புறையாற்றின் கடல்துறையின்கண் உள்ள
நறவு_மகிழ் இருக்கை நல் தேர் பெரியன்
கள் கமழ் பொறையாறு அன்ன – நற் 131/7,8
நறவுண்டு மகிழும் அரச அமர்வையுடைய நல்ல தேரினைக்கொண்ட பெரியன் என்பானின்
தேன் மணக்கும் பொறையாறு என்ற ஊரைப் போன்ற
என்று இங்கு குறிப்படப்படும் பொறையாறு என்பதே புறந்தை என்ற இந்த ஊர் என்பர்.
|
புறனிலை |
புறனிலை – (பெ) பார்க்க : புறநிலை, குறை இரந்து நிற்கும் நிலை, உதவி வேண்டிப் பிறர் புறங்கடையில் நிற்றல்,
Standing in the back-yard of one’s house, seeking one’s favour
என் குறை புறனிலை முயலும்
அண்கணாளனை நகுகம் யாமே – அகம் 32/20,21
என் தேவையை (என்னிடமே) இரந்து நிற்க முயலும்
(என்)கண் முன்னே வந்து நிற்பவனை நகையாடுவோம் யாம்.
|
புறன் |
புறன் – (பெ) பார்க்க : புறம்
முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின்
புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல்
ஆயமும் அழுங்கின்று யாயும் அஃது அறிந்தனள் – நற் 295/1-3
உச்சி சரிந்து விழுந்த மலைப்பக்கத்தில் நசுங்கிப்போன வள்ளிக்கொடி போல
புற அழகெல்லாம் அழிந்துபோய், தழைத்துத் தாழ்ந்த கரிய கூந்தலையுடைய
தோழியர் கூட்டமும் மனம்வருந்தினர்; எம் தாயும் அதனை அறிந்துகொண்டாள்;
|
புறப்புண் |
புறப்புண் – (பெ) முதுகில் பட்ட புண், Wound on the back of a person;
களி இயல் யானை கரிகால்வளவ
சென்று அமர் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
—————————- —————————
புறப்புண் நாணி வடக்கிருந்தோனே – புறம் 66/3-8
மதம் பொருந்திய யானையையுடைய கரிகால் வளவனே!
நேற்சென்று போரை எதிர்நின்று கொன்ற நினது வலிமை தோன்ற
வென்றவனே! உன்னைக்காட்டிலும் நல்லவன் அல்லவா!
————————————– ——————-
(உன்னிடம்தோற்று முதுகிலே புண்பட்டு)
அந்த முதுகில் பட்டபுண்ணுக்கு நாணி வடக்கிருந்து உயிர்விட்டவன்.
|
புறமாறு |
புறமாறு – (வி) பார்க்க : புறம்மாறு
1.
நன்று புறமாறி அகறல் யாழ நின்
குன்று கெழு நாடற்கு என்னெனப்படுமோ – அகம் 398/9,10
அறத்தினைக் கைவிட்டு நீங்குதல் உன்னுடைய
குன்று பொருந்திய நாட்டினையுடைய தலைவன்க்கு யாதெனப்படுமோ?
|
புறம் |
புறம் – (பெ) 1. வெளிப்பக்கம், outside
2. பின்பக்கம், backside
3. முதுகு, back
4. ஒட்டியுள்ள பகுதி, adjoining place
5. பக்கம், side, surface
6. இடம், place
7. உடம்பு, body
1.
களிறு களம் படுத்த பெரும் செய் ஆடவர்
ஒளிறு வாள் விழுப்புண் காணிய புறம் போந்து – நெடு 171,172
யானையை (முன்னர்)க் கொன்ற பெரும் செயலையுடைய வீரரின்,
சுடர்விடும் வாளினால் ஏற்பட்ட விழுப்புண்ணைக் காண்பதற்காக (பாசறையைவிட்டு)வெளியில் வந்து,
2.
இலங்கு வளை விறலியர் நின் புறம் சுற்ற – மலை 46
ஒளிர்கின்ற வளையல்களையும் கொண்ட விறலியர் உமக்குப் பின்னால் சூழ்ந்து வர
3.
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் – நற் 96/5
முதுகில் தாழ்ந்து கருத்த ஒளிரும் திரண்ட கூந்தலை
4.
சாரல் புறத்த பெரும் குரல் சிறுதினை – ஐங் 282/1
மலைச் சாரலை அடுத்த பெரிய கதிர்களைக் கொண்ட சிறுதினையைக் காத்து
5.
மணி புறத்து இட்ட மா தாள் பிடியொடு – நெடு 178
மணிகளைப் பக்கங்களில் இட்ட பெரிய கால்களையுடைய பெண்யானைகளோடு,
6.
புல்லார் இன நிரை செல் புறம் நோக்கி – புறம் 257/8
பொருந்தாதாரது இனமாகிய நிரை போகின்ற இடத்தைப் பார்த்து
7.
நிறம் படு குருதி புறம் படின் அல்லது
மடை எதிர்கொள்ளா அஞ்சுவரு மரபின்
கடவுள் அயிரையின் நிலைஇ – பதி 79/16-18
மார்பினைக் கிழித்து வரும் குருதி உடம்பின் மேலே பட்டாலல்லது
பலியுணவை ஏற்றுக்கொள்ளாத அச்சம்தரும் இயல்பினையுடைய
கடவுளான கொற்றவை இருக்கும் அயிரை மலையைப் போல நிலைபெற்று
|
புறம்பு |
புறம்பு – (பெ) முதுகு, back of a person
உண்ணு நீர் விக்கினான் என்றேனா அன்னையும்
தன்னை புறம்பு அழித்து நீவ – கலி 51/13,14
நீர் உண்ணும்போது விக்கினான் என்று சொல்ல, அன்னையும்
அவனது முதுகைத் தடவிக்கொடுக்க,
|
புறம்பெறு |
புறம்பெறு – (வி) புறக்கொடையைப் பெறு, பகைவரை வெற்றிகொள், gain victory over one’s enemies;
கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே – புறம் 373/8
கொங்குநாட்டவரை புறம்தந்து ஓடச்செய்த வெற்றியையுடைய வேந்தனே
இரவு புறம்பெற்ற ஏம வைகறை – புறம் 398/6
இரவுப்பொழுதை விரட்டியடித்த இன்பமான விடியற்காலத்தில்
|
புறம்மாறு |
புறம்மாறு – (வி) 1. கைவிடு, abandon
2. வலிமை இழ, lose vigour or strength
1.
மரீஇ தாம் கொண்டாரை கொண்ட_கால் போலாது
பிரியும்_கால் பிறர் எள்ள பீடு இன்றி புறம்மாறும்
திருவினும் நிலை இல்லா பொருளையும் நச்சுபவோ – கலி 8/12-14
விரும்பித் தான் சேர்ந்தாரைச் சேர்ந்திருக்கும்போது இன்புறச் செய்வதைப் போலல்லாமல்,
அவரை விட்டுச் செல்லும்போது மற்றவர் அவரை இகழ்ந்துபேசும்படி, தமக்கும் ஒரு பெருமையின்றிக்
கைவிட்டுச் செல்லும்
செல்வத்தைக்காட்டிலும் விரைந்து அழியும் நிலையற்ற பொருளையா விரும்பிச் செல்கிறாய்?
2.
உரவு தகை மழுங்கி தன் இடும்பையால் ஒருவனை
இரப்பவன் நெஞ்சம் போல் புல்லென்று புறம்மாறி
கரப்பவன் நெஞ்சம் போல் மரம் எல்லாம் இலை கூம்ப – கலி 120/4-6
தன் உள்ள உறுதியின் மேன்மை தேயும்படியாக, தனக்கு வந்த வறுமையினால் ஒருவனை
இரந்துகேட்பவனின் நெஞ்சம் போல பொலிவிழந்து வலிமைகுன்றி
இரப்பவனைக் கண்டு மறைந்துகொள்பவன் நெஞ்சம் போல மரம் எல்லாம் இலைகள் எல்லாம் குவிந்துபோக
|
புறவு |
புறமாறு – (வி) பார்க்க : புறம்மாறு
1.
நன்று புறமாறி அகறல் யாழ நின்
குன்று கெழு நாடற் |