பிசிர் |
பிசிர் – 1. (வி) துளியாகச் சிதறு, sprinkle, drizzle, சிம்பு சிம்பாக உடைந்துபோ, break with frayed ends
– 2. (பெ) 1. நீர்த்துளி, drop of water, spray
2. தீச்சுவாலையின் நுனி, tip of a flame
3. கசிவு நீர், ஊற்றுநீர், oozing water, spring
4. பஞ்சின் நுனியில் நீட்டிக்கொண்டிருக்கும் இழை, சிம்பு, frayed end in cotton
5. பனங்கிழங்கின் நரம்பு நுனியின் சிம்பு, fibre in the central nerve of palm root
6. ஆந்தை என்ற சங்க காலப் புலவரின் சொந்த ஊர்
1.
தோட்டி நீவாது தொடி சேர்பு நின்று
பாகர் ஏவலின் ஒண் பொறி பிசிர
காடு தலைக்கொண்ட நாடு காண் அவிர் சுடர்
அழல் விடுபு மரீஇய மைந்தின்
தொழில் புகல் யானை நல்குவன் பலவே – பதி 40/27-31
அங்குசம் காட்டும் குறிப்பினை மீறாமல் – தந்தத்தின் பூண்கள் இறுக்க அணியப்பெற்று
பாகரின் ஏவுதலின்படி, கால் மிதித்து எழுகின்ற தூசியின் ஒளிவிடும் துகள்கள் சிதறும்படியாக,
காட்டினில் தோன்றி பரந்து உயர்ந்து நின்று, நாட்டிலுள்ளோர் காணும்படி ஒளிரும் காட்டுத்தீயைப் போன்ற
சினத்தைக் கைவிட்டு – நடக்கின்ற, வலிமையுடைய
வேண்டும் தொழிலை விரும்பிச் செய்யும் யானைகள் பலவற்றைக் கொடுப்பான்.
கொடி விடு குரூஉ புகை பிசிர கால் பொர – பதி 15/6
கொடிவிட்டெழும் நிறங்கொண்ட புகை பிசிராக உடைந்துபோகும்படி காற்று மோத
2.1.
பொங்கு பிசிர்
முழவு இசை புணரி எழுதரும்
உடை கடல் படப்பை எம் உறைவு இன் ஊர்க்கே – நற் 67/10-12
பொங்கிச் சிதறும் துளிகளைக்கொண்டு,
முழவு போல் இசைக்கும் அலைகள் எழுந்து
உடைந்து விழும் கடற்கரையிலுள்ள நிலத்தில் நாங்கள் உறையும் இனிய ஊரில்
வில் எறி பஞ்சி போல மல்கு திரை
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும்
நளி கடல் – நற் 299/7-9
வில்லால் அடிக்கப்பட்ட பஞ்சினைப் போல பெருகும் அலைகளில்
காற்று மோதுவதால் ஒளிறும் நீர்த்துளிகள் மேலெழும்பும்
படர்ந்த கடலை
2.2.
கடும் கால் ஒற்றலின் சுடர் சிறந்து உருத்து
பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின் – பதி 25/6,7
(நீ மூட்டிய தீ – )மிகுந்த காற்று எழுந்து மோதுவதால், சுடர்விட்டு எழுந்து, வெப்பமடைந்து
புதிதாய்த் தோன்றும் பிசிர்களையுடைய ஒளிவிட்டுச் சுட்டெரித்த பக்கங்கள்
2.3.
வையை உடைந்த மடை அடைத்தக்கண்ணும்
பின்னும் மலிரும் பிசிர் போல – பரி 6/82,83
வையையில் உடைந்த மடையை அடைத்தபோதும்,
மீண்டும் ஒழுகும் கசிவுநீர் போல
2.4.
புல் நுகும்பு எடுத்த நல் நெடும் கானத்து
ஊட்டு_உறு பஞ்சி பிசிர் பரந்து அன்ன
வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப – அகம் 283/13-15
புற்கள் குருத்தினை விட்ட நல்ல நீண்ட காட்டில்
செந்நிறம் ஊட்டிய பஞ்சின் சிம்புகள் பரவியது போன்ற
செந்நிறமுடைய தம்பலப்பூச்சிகள் குளிர்ந்த நிலத்தே அழகுறுத்த
2.5
கடையோர் விடு வாய் பிசிரொடு சுடு கிழங்கு நுகர – புறம் 225/3
பின் செல்வோர், நீங்கிய வாயையுடைய சிம்புவுடன் சுடப்பட்ட கிழங்கினை நுகர
2.6
பெரும் கோ கிள்ளி கேட்க இரும் பிசிர்
ஆந்தை அடியுறை எனினே – புறம் 67/11,12
பெருங்கோவாகிய கிள்ளி கேட்க, பெரிய பிசிர் என்னும் ஊரின்கண்
ஆந்தை என்பாருடைய அடிக்கீழ் என்று சொல்லின்
பிசிரோன் என்ப என் உயிர் ஓம்புநனே – புறம் 215/7
பிசிர் என்னும் ஊரைச் சேர்ந்தவன் என்று சொல்லுவர் என் உயிரைப் பாதுகாப்போனை
|
பிடகை |
பிடகை – (பெ) பூந்தட்டு, plate for holding flower
பூ தலை முழவின் நோன் தலை கடுப்ப
பிடகை பெய்த கமழ் நறும் பூவினர் – மது 396,397
பூவைத் தலையில் கொண்ட முழவின் வலிய கண்ணைப் போன்ற
தட்டுகளில் இட்டுவைத்த கமழ்கின்ற நறிய பூவினையுடையவரும்,
|
பிடர் |
பிடர் – (பெ) பின் கழுத்து
பெரும் கை யானை இரும் பிடர் தலை இருந்து – புறம் 3/11
பெரிய கையினையுடைய யானையினது பெரிய கழுத்திடத்தே இருந்து
|
பிடவம் |
பிடவம் – (பெ) பிடா, பிடவு, குட்டிப்பிடவம், ஒரு மரம், அதன் பூ, Bedaly emetic-nut, Randia malabarica;
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம் – நற் 238/3
வண்டுகள் கிளறி முறுக்கவிழ்ப்பதனால் மலர்ந்த பிடவ மலர்கள்
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப – நற் 242/1
இலைகள் அற்ற பிடவமரங்களில் புதிய மலர்கள் அரும்பிநிற்க
தளி பெறு தண் புலத்து தலை பெயற்கு அரும்பு ஈன்று
முளி முதல் பொதுளிய முள் புற பிடவமும்
களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று – கலி 101/1-3
மழை பெற்றுக் குளிர்ந்த காட்டில், முதல் மழைக்கு அரும்பு விட்டு,
உலர்ந்துபோன அடிப்பகுதியில் செழித்து வளர்ந்த முள்ளைப் புறத்திலே கொண்ட பிடவமும்,
கள்ளுண்டு செருக்குற்றவனின் கால்தடுமாறும் நிலையைப் போல வளைந்து, துடுப்புப்போன்ற மொட்டினை ஈன்று
இந்தப்பூவின் மணம் நெடுந்தொலைவுக்கு மணக்கும் என்பர்.
கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில்
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி – முல் 24,25
காட்டாறு சூழ்ந்த அகன்ற நெடிய காட்டினில்,
நெடுந்தொலையும் மணக்கும் பிடவ மலரோடு (ஏனைப்)பசிய தூறுகளையும் வெட்டி
நெருங்கிய கொத்துக்கொத்தாக இதன் பூ இருக்கும்.
புதல் மிசை தளவின் இதல் முள் செம் நனை
நெருங்கு குலை பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ – அகம் 23/3,4
புதரின் மேலுள்ள செம்முல்லையின், காடையின் கால்முள்ளைப் போன்ற சிவந்த அரும்புகள்
நெருக்கமான கொத்துக்களை உடைய பிடாவுடன் ஒன்று சேரத் தளையவிழ
பார்க்க : பிடவு
|
பிடவு |
பிடவு – (பெ) பார்க்க : பிடவம்
இதன் பூ வெண்மை நிறமானது.
வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில் – அகம் 184/7
இந்த வெள்ளைப்பூவின் இதழ்களில் சிவந்த வரிகள் காணப்படும்.
அம் வளை வெரிநின் அரக்கு ஈர்த்து அன்ன
செம் வரி இதழ சேண் நாறு பிடவின் – நற் 25/1,2
அழகிய சங்கின் முதுகில் அரக்கைத் தேய்த்தது போல
சிவந்த வரிகளைக் கொண்ட இதழ்களையுடைய நெடுந்தொலைவுக்கும் மணக்கும் பிடவமலர்களின்
|
பிடவூர் |
பிடவூர் – (பெ) ஒரு சங்க கால ஊர், a city in sangam period
இது பண்டைய சோழ நாட்டைச் சேர்ந்தது.
இந்த ஊரில் பெருஞ்சாத்தன் என்ற ஒரு வள்ளல் இருந்தார். இவர் வேளாண் குடியைச் சேர்ந்தவர்.
இவரை மதுரை நக்கீரர் புகழ்ந்து பாடியுள்ளார் (புறம் 395)
நெடும் கை வேண்மான் அரும் கடி பிடவூர்
அற பெயர் சாத்தன் கிணையேம் பெரும – புறம் 395/20,21
நீண்ட கையையுடைய வேண்மானுக்குரிய அரிய காவல் பொருந்திய பிடவூரிலுள்ள
அறத்தால் உண்டான புகழையுடைய சாத்த்தனுக்குக் கிணைப்பறை கொட்டிப்பாடும் கிணைப்பொருநர் ஆவோம்
|
பிடி |
பிடி – 1. (வி) 1. கையில் பற்று, catch, hold, grasp
2. கையால் ஒரு குறிப்பிட்ட வடிவில் ஒரு பொருளைச் செய், உருவாக்கு, shape
– 2. (பெ) 1. ஒரு உள்ளங்கையில் எடுத்து மூடும் அளவு, handful
2. பெண் யானை, female elephant
3. ஒரு பொருளைக் கையால் பற்றிக்கொள்ள உதவும் பகுதி, handle
4. கையால் பற்றியிருத்தல் hold, clutch
1.1
பைம் கண் ஊகம் பாம்பு பிடித்து அன்ன – சிறு 221
பசிய கண்களையுடைய கரிய குரங்கு பாம்பு(த் தலையைப்) பற்றினாற் போன்று
1.2
அயிர் உருப்புற்ற ஆடு அமை விசயம்
கவவொடு பிடித்த வகை அமை மோதகம் – மது 625,626
கண்டசருக்கரையை வெப்பமேற்றிச் சமைத்தல் அமைந்த பாகினை(க் கூட்டிய)
உள்ளீட்டோடெ கையில் பிடித்துச் செய்த வகுப்பு அமைந்த கொழுக்கட்டைகளையும்,
2.1
கௌவை போகிய கரும் காய் பிடி ஏழ்
நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எள் – மலை 105,106
பிஞ்சுத்தன்மை போன(=முற்றிய) கரிய காய்கள் ஒரு கைப்பிடிக்குள் ஏழு காய்களே கொள்ளத்தக்கனவாய்
நெய் (உள்ளே)கொண்டிருக்க வளர்ந்தன பலவாகக் கிளைத்த ஈரப்பதமான எள்;
2.2
இரும் பிடி தட கையின் செறிந்து திரள் குறங்கின் – பொரு 40
பெரிய பெண் யானையின் பெரிய கை போல நெருங்கி ஒன்றித் திரண்ட துடையினையும்
2.3
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள் – முல் 46
இரவைப் பகலாக்கும், திண்ணிய கைப்பிடியையுடைய ஒளிவிடும் வாளை
2.4
பிடி அமை நூலொடு பெய்ம் மணி கட்டி – கலி 140/6
கையால் பிடிப்பதற்கான கடிவாளத்துடன், சேர்த்துக்கட்டிய மணிகளைக் கழுத்தில் கட்டி,
|
பிட்டன் |
பிட்டன் – (பெ) சங்ககாலக் குறுநில மன்னன், a chieftain of sangam period
இவனது பெயர் பிட்டங்கொற்றன் என்பதாகும், இவனைப் பற்றிய பல செய்திகளைப் புறம் 168 முதல் 172 வரை
உள்ள புறப்பாடல்களில் காணலாம். அப்பாடல்களில் இவனை, கருவூர்க் கதப்பிள்ளை, காவிரிப்பூம்பட்டினத்துக்
காரிக்கண்ணனார், உறையூர் மருத்துவன் தாமோதரனார், வடமவண்ணக்கன் தாமோதரனார் ஆகியோர் வாழ்த்திப்
பாடியுள்ளனர்.
அகம் 77-இல் மருதனிள நாகனாரும், அகம் 143-இல் ஆலம்பேரிச் சாத்தனாரும் இவன் சிறப்புகளை
எடுத்தோதியுள்ளனர். இவன் சேரமான் கோதைக்குப் படைத்தலைவன். குதிரை மலைப்பகுதியை ஆண்டவன்.
பேராண்மையும், வள்ளண்மையும் ஒருசேரப் பெற்றவன்.
வானவன் மறவன் வணங்கு வில் தடக்கை
ஆனா நறவின் வண் மகிழ் பிட்டன்
பொருந்தா மன்னர் அரும் சமத்து உயர்த்த
திருந்து இலை எஃகம் போல – அகம் 77/15-18
சேரன் படைத்தலைவனாகிய வளைந்த வில்லைப் பெரிய கையில் கொண்ட
குறையாத கள்ளினது மிக்க மகிழ்ச்சியை உடைய பிட்டன் என்பான்
பகை மன்னரது அரிய போரில் உயர்த்திய
திருந்திய இலைத்தொழிலையுடைய வேல் போல
பொய்யா வாய் வாள் புனை கழல் பிட்டன்
மை தவழ் உயர் சிமை குதிரை கவாஅன் – அகம் 143/12,13
தப்பாது வென்றி வாய்க்கும் வாளினையும் புனைந்த கழலினையும் உடைய பிட்டன் என்பானது
மேகம் தவழும் உயர்ந்த உச்சியினையுடைய குதிரை மலையின் பக்க வரையில்
|
பிட்டை |
பிட்டை – (பெ) பிளவுண்டது, that which is split or cleaved
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள்
பிழிவது போல பிட்டை ஊறு உவப்ப – புறம் 373/6
சொரிகின்ற குருதியோடே கயில் ஏந்திய வாளால்
உடலைப் பிழிந்தெடுப்பதற்குப் பிளந்ததைப் போல பிளத்தலால் உண்டான புண்ணுற்று மகிழ்ச்சி எய்த
|
பிண |
பிண – (பெ) 1. பிணவு என்பதன் கடைக்குறை, நாய், பன்றி, மான்,புலி போன்றவற்றின் பெண்,
Female of the dog, pig, deer, tiger or yak;
2. பிணம் என்பதன் பெயரடை, the adjectival form of ‘piNam’, a dead body
1.
ஈன்று அணி வயவு பிண பசித்து என மற புலி – அகம் 112/5
குட்டியை ஈன்ற அண்மையினையுடைய வேட்கையையுடைய பெண்புலி பசித்ததாக
ஈன்று இளைப்பட்ட வயவு பிண பசித்து என – அகம் 238/2
ஈன்று காவற்பட்ட வேட்கையினுடைய பெண்புலி பசியுற்றதாக
2.
பைம் நிணம் கவரும் படு பிண கவலை – அகம் 327/16
பசிய கொழுப்பினைக் கவர்ந்துண்ணும் இடமாய மிக்க பிணங்கள் கிடக்கும் கவர்த்த நெறிகள்
|
பிணக்கு |
பிணக்கு – (வி) பின்னு, interwine
தார் தார் பிணக்குவார் கண்ணி ஓச்சி தடுமாறுவார் – பரி 9/45
மாலையோடு மாலையை வீசிப் பின்னுவார், தம் தலைமாலையை எடுத்து ஓங்கித் தடுமாறுவார்,
|
பிணங்கு |
பிணங்கு – (வி) பின்னிக்கொள், பிணைந்திரு, interwine
பின்னி அன்ன பிணங்கு அரில் நுழை-தொறும் – மலை 379
பின்னிவைத்ததைப் போன்ற கொடிகள் பிணைந்திருக்கும் புதர்க்காட்டில் நுழையும்போதெல்லாம்,
|
பிணன் |
பிணன் – (பெ) பிணம், dead body
பிணன் உகைத்து சிவந்த பேர் உகிர் பணை தாள்
அண்ணல் யானை – சிறு 199,200
பிணங்களை(க் காலால்) இடறிச் சிவந்த பெரிய நகங்களையும், பெருமையுடைய கால்களையும் உடைய
தலைமைச் சிறப்புடைய யானை
|
பிணர் |
பிணர் – (பெ) சொரசொரப்பு, சருச்சரை, roughness, caorseness, unevenness
கார் பெயல் உருமின் பிளிறி சீர் தக
இரும் பிணர் தட கை இரு நிலம் சேர்த்தி
சினம் திகழ் கடாஅம் செருக்கி மரம் கொல்பு
மையல் வேழம் மடங்கலின் எதிர்தர – குறி 162-165
கார்காலத்து மழையின் இடி போல முழக்கத்தையுண்டாக்கி, தன் தலைமைக்குத் தக்கதாக
கரிய சொரசொரப்பான பெரிய துதிக்கையை(ச் சுருட்டி) பரந்த நிலத்தே எறிந்து,
கோபம் விளங்கும் மதத்தால் மனம் செருக்கி, மரங்களை முறித்து,
மதக்களிப்புடைய (அக்)களிறு எமனைப்போல் (எமக்கு)எதிரே வருகையினால்
|
பிணவல் |
பிணவல் – (பெ) பன்றி, மான், நாய், முதலியவற்றின் பெண். female of the dog, pig, deer or yak;
நால் முலை பிணவல் சொலிய கான் ஒழிந்து
அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற
தறுகண் பன்றி – அகம் 248/4-6
தொங்கும் முலையினையுடைய பெண்பன்றி பெயர, கட்டினின்றும் வெளிவந்து
அரிய வாயிலாகிய முடுக்கிலே ஆட்களை எதிர்நோக்கி நின்ற
அஞ்சாமையையுடைய பன்றி
|
பிணவு |
பிணவு – (பெ) பன்றி, மான், நாய், முதலியவற்றின் பெண். female of the dog, pig, deer or yak
பார்க்க : பிணவல்
பிணவு – மனித இனப்பெண்
ஈத்து இலை வேய்ந்த எய் புற குரம்பை
மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி
ஈன் பிணவு ஒழிய போகி நோன் காழ் – பெரும் 88-90
ஈந்தினுடைய இலையால் வேயப்பட்ட எய்ப்பன்றியின் முதுகு போலும் புறத்தினையுடைய குடிலின்கண்,
மான் தோலாகிய படுக்கையில் பிள்ளையோடு முடங்கிக்கிடக்கும்
மகப்பேறடைந்த எயிற்றியாகிய பெண்ணைத் தவிர (ஏனையோர்)போய்
பிணவு – செந்நாய்ப்பெண்
வள் எயிற்று செந்நாய் வயவு உறு பிணவிற்கு
கள்ளி அம் கடத்து இடை கேழல் பார்க்கும் – ஐங் 323/1,2
கூர்மையான பற்களைக் கொண்ட செந்நாயானது, தன் சூல்கால விருப்பம் கொண்டிருக்கும் பெட்டைக்காகக்
கள்ளிகள் நிறைந்த அழகிய காட்டு வழியிடையே காட்டுப்பன்றியை எதிர்பார்த்திருக்கும்
பிணவு – பெண்புலி
கல் அளை செறிந்த வள் உகிர் பிணவின்
இன் புனிற்று இடும்பை தீர சினம் சிறந்து
செம் கண் இரும் புலி கோள் வல் ஏற்றை
உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும் – நற் 148/7-10
மலைக் குகையில் செறிவாய்க்கிடந்த பெரிய நகங்களைக் கொண்ட பெண்புலியின்
இனிதான குட்டிகளை ஈன்றதனால் ஏற்பட்ட வருத்தம் தீர, சினம் மிக்கு
சிவந்த கண்களையுடைய பெரிய புலியின் இரையைக் கொள்வதில் வல்ல ஆண்
உயர்ந்து நிற்கும் கொம்பினையுடைய தனித்த யானையின் புள்ளிகள் உடைய முகத்தில் பாயும்
பிணவு – பெண்காட்டுப்பூனை (வெருகு = காட்டுப்பூனை)
குவி அடி வெருகின் பைங்கண் ஏற்றை
ஊன் நசை பிணவின் உயங்கு பசி களைஇயர்
——————————- ————————-
நெற்றி சேவல் அற்றம் பார்க்கும் – அகம் 367/8-12
குவிந்த அடியினையுடைய காட்டுப்பூனையின் பசிய கண்களையுடைய ஆண்
ஊனை விரும்பியுள்ள பெண்பூனையின் வருத்தும் பசியினை நீக்குமாறு
பிணவு – பெண்(வேட்டை)நாய்
முளவுமா தொலைச்சிய பைம் நிண பிளவை
பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ – மலை 176,177
முள்ளம்பன்றியைக் கொன்ற மின்னுகின்ற கொழுப்பையுடைய பிளக்கப்பட்ட தசைத்துண்டுகளையும்
பெண் நாயை விரட்டிக் கடிக்கவிட்டுக் கிடைத்த (உடும்பின்)பருமனான தசைத்துண்டோடு கலந்து,
பிணவு – பெண்யானை
மிக வரினும் மீது இனிய வேழ பிணவும்
அகவரும் பாண்டியும் அத்திரியும் ஆய் மா – பரி 10/15,16
மிக விரைவாக வந்தாலும் மேலே அமர்ந்திருக்க இனிதாக இருக்கும் பெண்யானைகள்,
அதட்டி ஓட்டத் தேவையற்ற மாட்டுவண்டிகள், கோவேறு கழுதைகள், தெரிந்தெடுத்த குதிரைகள் பூட்டிய
பிணவு – வீட்டுப்பெண்பன்றி
ஈர் சேறு ஆடிய இரும் பல் குட்டி
பல் மயிர் பிணவொடு பாயம் போகாது
நெல்மா வல்சி தீற்றி பல் நாள்
குழி நிறுத்து ஓம்பிய குறும் தாள் ஏற்றை – பெரும் 341-344
கள்ளைச் சமைக்கின்ற மகளிர் வட்டில் கழுவிக் கவிழ்த்த
ஈரத்தையுடைய சேற்றை அளைத்த கரிய பலவாகிய குட்டிகளையுடைய
பலவாகிய மயிர்களையுடைய பெண் பன்றிகளோடே மனவிருப்பம் கொள்ளாமல்,
நெல்லின் உமியை மாவாக்கிய (தவிட்டு)உணவினை (வயிறு நிறைய)த் தின்னப் பண்ணிப், பலநாளும்
குழியிலே நிறுத்திப் பாதுகாத்த குறிய காலையுடைய ஆண்பன்றியின்
பிணவு – பெண்கரடி
பெரும் கை எண்கின் பேழ் வாய் ஏற்றை
இருள் துணிந்து அன்ன குவவு மயிர் குருளை
தோல் முலை பிணவொடு திளைக்கும் – அகம் 201/16-18
பெரிய கையினையும் பிளந்த வாயினையும் உடைய ஆண்கரடி
இருளைத் துணிந்து வைத்தாற்போன்ற திரண்ட மயிரினையுடைய குட்டியுடன்
திரங்கிய முலையினையுடைய பெண்கரடியுடன் மகிழ்ந்திருக்கும்
|
பிணா |
பிணா – (பெ) பெண், woman
குற_பிணா_கொடியை கூடியோய் வாழ்த்து
சிறப்பு உணா கேட்டி செவி – பரி 19/95,96
குறப்பெண்ணாகிய பூங்கொடிபோன்றவளை மணந்தவனே! எமது வாழ்த்தாகிய
சிறப்பு உணவையும் கேட்பாயாக உன் செவியால்!
|
பிணி |
பிணி – 1. (வி) 1. சேர்த்துக்கட்டு, tie, fasten with ropes, fetter, link
2. தன்வயப்படுத்து, win-over, keep one spell-bound
-2. (பெ) 1. இறுகிய முறுக்கு, tight twisting
2. மாட்டு, fix, attach, let hang
3. கட்டு, tie
4. முயக்கம், அணைப்பு, embracing
5. சேர்த்துப்பிடித்தல், holding together
6. கட்டுகை, fastening, binding
7. பற்று, attachment
8. நோய், Disease, malady, sickness
1.1
கயிறு பிணி குழிசி ஓலை கொள்-மார்
பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின் – அகம் 77/7,8
கயிற்றால் சேர்த்துக்கட்டிய குடத்திலுள்ள ஓலையை எடுத்துக்கோடற்கு
அக்குடத்தின் மேலிட்ட இலச்சினையை ஆய்ந்து நீக்கும் அவ்வோலையைத் தேரும் மாக்களைப் போல
1.2
புலவோர்க்கு சுரக்கும் அவன் ஈகை மாரியும்
இகழுநர் பிணிக்கும் ஆற்றலும் – மலை 72,73
புலவர்க்கு வழங்கும் அவன் கொடைமழையையும்,
இகழுவோரைத் தன்வயப்படுத்தும் ஆற்றலும்,
2.1
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினை
ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல – சிறு 254,255
மழைத்துளியில் நனைந்த முருக்க மரத்தின் மிக்க உயரத்திற்கு வளர்ந்த நீண்ட கொம்பில்
பூங்கொத்து முறுக்கு நெகிழ்ந்த காட்சியைப் போல,
2.2
பச்சூன் பெய்த சுவல் பிணி பைம் தோல்
கோள் வல் பாண்மகன் – பெரும் 283,284
(வாடூனன்றி)பச்சை இறைச்சியை வைத்த, தோளில் மாட்டிய, பதப்படுத்தாத தோலினால் செய்த பையையுடைய
(மீனைக்)கொள்ளுதலில் வல்ல பாண்மகனுடைய
2.3
வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ – மது 376
இறுக்கமான கட்டினையுடைய வலிமையான (பாய் கட்டின)கயிற்றை அறுத்து
2.4
நயந்த காதலர் கவவு பிணி துஞ்சி – மது 663
(தாங்கள்)விரும்பின (தம்)கணவருடைய முயக்கத்தின் பிணிப்பால் துயில்கொண்டு
2.5
துணை அறை மாலையின் கை பிணி விடேஎம் – குறி 177
இறுக்கக் கட்டிச் சார்த்தப்பட்ட மாலையைப் போன்று, (நாங்கள்)கைகோத்தலை விடாதவர்களாய்,
2.6
விசி பிணி முழவின் குட்டுவன் காப்ப – அகம் 91/13
இறுக்கமான கட்டுதலையுடைய முழவினையுடைய குட்டுவன் என்பான் புரத்தலால்
2.7
நில்லா பொருள்_பிணி சேறி – நற் 126/11
நிலையில்லாத இந்த பொருளீட்டலின் ஆசையினால் செல்லுகின்றாய்,
2.8
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய்
துனி கூர் மனத்தள் – நற் 262/4,5
நடுங்கவைக்கும் காதல்நோய் வருத்த, நல்ல அழகெல்லாம் தொலைந்து,
கசந்துபோன மனத்தினளாய்,
|
பிணிமுகம் |
பிணிமுகம் – (பெ) 1. முருகனின் யானை, the elephant of Lord Murugan
2. முருகனின் வாகனமாகிய மயில், the peacock, Murugan’s bird for riding
1.
பாய் இரும் பனி கடல் பார் துகள் பட புக்கு
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கி – பரி 5/1,2
பரந்த பெரிய குளிர்ந்த கடலில் உள்ள பாறைகள் தூள்தூளாகும்படி புகுந்து,
மிகவும் உயர்ந்த பிணிமுகம் என்னும் யானையின் மீதேறிப் போர்செய்து,
2.
மணி மயில் உயரிய மாறா வென்றி
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும் என – புறம் 56/7,8
நீலமணி போலும் நிறத்தையுடைய மயிற்கொடியை எடுத்த மாறாத வெற்றியினையுடைய
அம் மயிலாகிய ஊர்தியினையுடைய ஒள்ளிய செய்யோனும் என்று
|
பிணை |
பிணை – 1. (வி) 1. ஒன்றோடொன்று நெருக்கமாகச் சேர்ந்திரு, interwine, entwine
2. இணைந்திரு, join
3. செறிந்திரு, be close together
4. கட்டு, fasten, tie
5. தழுவு, hold by both arms
– 2. (பெ) 1. பிடிப்பு, holding
2. விருப்பம், love, desire
3. பாய்மரக்கப்பலில் பாயைச் சேர்த்துக்கட்டும் மரங்கள், poles tied with the sails in a ship
4. பெண்மான், female deer
5. காப்பு, உத்தரவாதம், ஈடு, pledge, guarentee, security
1.1
அன்பு உறு காதலர் கை பிணைந்து ஆய்ச்சியர்
இன்புற்று அயர்வர் – கலி 106/32,33
அன்பான காதலர்களின் கைகளைக் கோத்துக்கொண்டு, இடையர் மகளிர்
மகிழ்ச்சியுடன் ஆடத்தொடங்கினர்
1.2
ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்து அன்ன கண்ணாய் – கலி 96/5
உயர்ந்து எதிர் எதிராக நீலமலர்கள் இணைந்திருப்பது போன்ற கண்களையுடையவளே!
1.3
பிணை யூபம் எழுந்து ஆட – மது 27
ஒன்றனோடு ஒன்று நெருங்க குறைத்தலைப்பிணங்கள் எழுந்து ஆட,
1.4
மை கூர்ந்து
மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண் – நற் 252/8,9
மையிட்டு
மலர்களைக் கட்டிவைத்தது போன்ற கரிய இமைகளைக் கொண்ட குளிர்ச்சியான கண்களையும்,
1.5
அவருள் மலர் மலி புகல் எழ அலர் மலி மணி புரை நிமிர் தோள் பிணைஇ
எருத்தோடு இமில் இடை தோன்றினன் தோன்றி – கலி 102/25,26
அவர்களுள், ஊறிடும் மிகுந்த காதலுணர்வு பெருக, பூக்கள் நிறைந்த நீலமணியைப் போன்ற நெடிய தோள்களால்
தழுவி வளைத்து
காளையின் திமிலுக்கிடையே அவன் தோன்றினான்,
2.1
பரிந்து அவளை கை பிணை நீக்குவான் பாய்வாள் – பரி 7/57
இரக்கங்கொண்டு, அவளைக் கைப்பிடிப்பிலிருந்து நீக்குவதற்காகப் பாய்ந்தாள்;
2.2
பெற்றோன் பெட்கும் பிணையை ஆக என – அகம் 86/14
நின்னை எய்திய கணவனை விரும்பிப்பேணும் விருப்பத்தை உடையை ஆக என்று வாழ்த்தி
2.3
இதையும் கயிறும் பிணையும் இரிய
சிதையும் கலத்தை பயினான் திருத்தும்
திசை அறி நீகானும் போன்ம் – பரி 10/53-55
இது, பாயும், கயிறும், மரங்களும் பிடுங்கிக்கொண்டு சிதறிப்போக,
சிதைந்துபோன பாய்மரக்கப்பலை சேர்த்துக்கட்டி சீர்திருத்தும்
திசையறிந்து ஓட்டும் நீகானின் செயலைப் போலிருந்தது;
2.4
மட பிணை தழீஇய மா எருத்து இரலை – நற் 256/8
தன்னுடைய இளம் பெண்மானைத் தழுவிய பெரிய பிடரியைக் கொண்ட ஆண்மான்
2.5
மாய பொய் கூட்டி மயக்கும் விலை கணிகை
பெண்மை பொதுமை பிணையிலி – பரி 20/49,50
மாயப் பொய்யுடன் சேர்த்து வந்தவரை மயக்கும் விலைமாதே!
உன் பெண்மை யாவர்க்கும் பொதுவாகிப்போனதால் காப்பு என்று ஒருவரும் இல்லாதவளே!
|
பிணையல் |
பிணையல் – (பெ) 1. மலர்மாலை, garland of flowers
2. பின்னிப் பிணைக்கப்பட்டது, that which is interwinedand joined together
1.
குரூஉ கண் பிணையல் கோதை மகளிர் – மலை 349
(பல)நிறங்கொண்ட காம்புகளையுடைய மலர்களைப் பிணைத்த மாலை (அணிந்த)பெண்கள்
2.
பெரும் கயிறு நாலும் இரும் பனம் பிணையல்
பூ கண் ஆயம் ஊக்க ஊங்காள் – நற் 90/6,7
பெரிய கயிறாகத் தொங்கும் கனத்த பனைநாரால் பின்னிப்பிணைக்கப்பட்ட ஊஞ்சலில்
பூப்போன்ற கண்களையுடைய தோழியர் ஆட்டிவிட ஆடாள்,
பிணையல் அம் தழை தைஇ துணையிலள் – நற் 170/3
பிணைத்த அழகிய தழைகளால் தைக்கப்பட்ட உடையை அணிந்து, தனியாக வந்திருக்கும் இவள்
வயலை செம் கொடி பிணையல் தைஇ
செ விரல் சிவந்த சே அரி மழை கண்
செ வாய் குறு_மகள் – ஐங் 52/1-3
வயலையின் சிவந்த கொடியைப் பிணைத்து மாலையாகக் கட்டியதால்
சிவந்த இவளின் விரல்கள் மேலும் சிவந்துபோனவளும், சிவந்த வரிகளைக் கொண்ட குளிர்ந்த கண்களையும்,
சிவந்த வாயையும் உடையவளுமான இந்த இளைய மகள்
|
பிண்டன் |
பிண்டன் – (பெ) ஒரு சங்க காலக் குறுநில மன்னன், a chieftain in sangam period
இந்த மன்னனின் வேற்படையை நன்னன் என்பான் போர்க்களத்தில் அழித்து வெற்றிகொண்டான்.
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன்
முனை முரண் உடைய கடந்த வென் வேல்
இசை நல் ஈகை களிறு வீசு வண் மகிழ்
பாரத்து தலைவன் ஆர நன்னன் – அகம் 152/9-12
மிக்க பகையைத் தரும் வலிமை மிக்க பிண்டன் என்பானது
போர்செய்யும் மாறுபாடு சிதைய வென்ற வெற்றி வேலையும்
புகழ் மேவிய நல்ல ஈகையினையும் களிறுகளை வழங்கும் வண்மையால் ஆகிய களிப்பினையும் உடைய
பாரம் என்னும் ஊர்க்குத் தலைவனாகிய ஆரம் பூண்ட நன்னன் என்பானது
|
பிண்டம் |
பிண்டம் – (பெ) 1. தொகுதி, திரள், collection, mass, multitude
2. இறைவனுக்குப் படைக்கப்படும் பெரும் சோற்றுத்திரள்
3. உருண்டை, Anything globular or round, lump or mass
4. உடல், உடம்பு, body
5. நீத்தாருக்குப் படைக்கப்படும் சோற்று உருண்டை,
Ball of cooked rice, offered to the manes at a funeral ceremony
6. உருவம் பெறாத கரு, Embryo, foetus
1.
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க – அகம் 46/14,15
திரண்ட நெல்பொலி கொண்ட அள்ளூர் நகரைப் போன்ற, எனது
ஒளிரும் வளையணிந்த தலைவியின் அழகு குன்றினும் குன்றுக;
2.
பண்டைத் தமிழகத்துப் பெரு வீரர்கள் போர்க்களம் புகுவதன் முன்னர்ப் போரில் தங்களுக்கு வெற்றி தருமாறு,
வெற்றித் திருமகளாம் கொற்றவையை வேண்டி வழிபாடாற்றிச் செல்வதும்,
வெற்றி கொண்டு மீண்டபின்னர், அவ்வெற்றித் திருமகள் கோயில் புகுந்து, தம் விழுப்புண் சோரும் குருதி கலந்த
செஞ்சோற்றுப் படையல் இட்டு வழிபாடாற்றி வணங்குவதும் செய்வர். அவ்வாறு, வெற்றி கொண்ட வீரர்கள்
கொற்றவை கோயிலில் பலியாகப் படையல் இடும் பெருஞ் சோற்றுத் திரளையே இது குறிக்கும்.
முழங்கும் மந்திரத்து
அரும் திறல் மரபின் கடவுள் பேணியர்
உயர்ந்தோன் ஏந்திய அரும் பெறல் பிண்டம்
கரும் கண் பேய்_மகள் கை புடையூஉ நடுங்க – பதி 30/33-36
முழங்குகின்ற மந்திரவொலியால்
அரிய திறல் படைத்த மரபினையுடைய கடவுளை வாழ்த்தும்பொருட்டு,
வழிபாட்டினைச் செய்யும் உயர்ந்தோன் படைத்த பெறுவதற்கரிய பலியினைக் கண்டு,
கரிய கண்களையுடைய பேய்மகள் கைகளை அடித்துக்கொண்டு நடுங்க,
3.
நீலத்து அன்ன அகல் இலை சேம்பின்
பிண்டம் அன்ன கொழும் கிழங்கு மாந்தி – அகம் 178/4,5
நீலமணியை ஒத்த நிறத்தினையுடைய அகன்ற இலையினையுடைய சேம்பின்
உருண்டையாகிவைத்தாற் போன்ற வளவிய கிழங்கினை நிறையத் தின்று
4.
உண்டி முதற்றே உணவின் பிண்டம் – புறம் 18/20
உணவை முதலாக உடையது அவ் உணவால் உளதாகிய உடம்பு
5.
தன் அமர் காதலி புல் மேல் வைத்த
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்-கொல் – புறம் 234/3,4
தன்னால் விரும்பப்பட்ட காதலி புல்லின் மேல் வைத்த
இனிய சிறிய சோற்றுருண்டையை எவ்வாறு உண்டானோ?
6.
வழுவ பிண்டம் நாப்பண் ஏமுற்று
இரு வெதிர் ஈன்ற வேல் தலை கொழு முளை
சூல் முதிர் மட பிடி நாள்_மேயல் ஆரும் – நற் 116/3-5
தன் வயிற்றிலுள்ள கருவாகிய பிண்டம் அழிந்து வெளியேவந்து விழும்படியாக
பெரிய மூங்கிலில் முளைத்த வேல்முனையைப் போன்ற தலையைக் கொண்ட கொழுத்த முளைகளை
சூல் முதிர்ந்த இளம்பெண்யானை காலையில் மேய்ந்துண்ணும்
|
பிண்டி |
பிண்டி – (பெ) அசோக மரம், பூ, asoka tree, flower, Saraca indica
இப் பூவினைக் காதில் செருகிக்கொள்வர்
வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர் – திரு 31
ஒண் பூம் பிண்டி ஒரு காது செரீஇ – குறி 119
சாய் குழை பிண்டி தளிர் காதில் தையினாள் – பரி 11/95
கடி மலர் பிண்டி தன் காதில் செரீஇ – பரி 12/88
பல பூக்கள் சேர்ந்த கொத்தாக இது காணப்படும்.
பகன்றை பலாசம் பல் பூ பிண்டி – குறி 88
பகன்றை, பலாசம், பல பூக்களையுடைய அசோகப்பூ,
|
பிதிர் |
பிதிர் – 1. (வி) 1. உதிர், fall to pieces or powder
2. (நீர்)தெறித்துச் சிதறு, splash and scatter
– 2. (பெ) சிறுதுளிகளாகிய புகைப்படலம், drift as of smoke, dust or minute water particles
(நீர்த்துளிகளின்) சிதறல், scattering (of minute particles)
1.1
களி சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து
யாணர் கோங்கின் அவிர் முகை எள்ளி
பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை – சிறு 24-26
கிளர்ச்சியுற்ற வண்டுகள் ஒலிக்கும் பூந்தாது போன்ற தேமல்களையும்; அப் பூந்தாதுகள் உதிர்ந்துகிடக்கும்
புதிதாய்ப் பூத்தலையுடைய கோங்கின் ஒளிரும் மொட்டுக்களை இகழ்ந்து,
அணிகளுக்குள் ஒடுங்கிக்கிடக்கும் வெம்மையான முலைகளையும்;
1.2
கரையவர் மருள திரை_அகம் பிதிர
நெடு நீர் குட்டத்து துடுமென பாய்ந்து – புறம் 243/8,9
கரையில் நிற்போர் வியப்ப, திரையிடத்துத் திவலை தெறித்துச் சிதற
ஆழமான நீரையுடைய மடுவின்கண் ’துடும்’ என்று ஒலிப்பக் குதித்து
2.
கொண்டல் ஆற்றி விண் தலை செறீஇயர்
திரை பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி
நிரைத்து நிறை கொண்ட கமம் சூல் மா மழை – நற் 89/1-3
கீழைக் காற்றினால் செலுத்தப்பட்டு, விண்ணிடத்து ஒன்றுகூடிச் செறிந்து
அலைகள் தம்மில் மோதி உடைதலால் எழும் நீர்த்துளிப் புகைப்படலம் போல மலைமுகடுகளில் மகிழ்ந்து ஏறி
ஒழுங்காக அமைந்து நிறைவுகொண்ட முற்றிய கருக்கொண்ட கரிய மேகங்கள்
|
பிதிர்வு |
பிதிர்வு – (பெ) சிதறல், scattering
விளை தயிர் பிதிர்வின் வீ உக்கு இருவி-தொறும்
குளிர் புரை கொடும் காய் கொண்டன அவரை – மலை 109,110
முற்றிய தயிர் (கீழே விழுந்து ஏற்பட்ட)சிதறலைப்போல் பூக்கள் உதிர்ந்து, (கதிர்கொய்யப்பட்ட)அரிதாள்கள்தோறும்
அரிவாள் போன்ற வளைந்த காய்களைக் கொண்டன அவரை;
|
பிதிர்வை |
பிதிர்வை – (பெ) சுற்றித்திரிதல், playfully wandering
பந்தர் வயலை பந்து எறிந்து ஆடி
இளமை தகையை வள மனை கிழத்தி
பிதிர்வை நீரை பெண் நீறு ஆக என – அகம் 275/3-5
வயலைக் கொடி படர்ந்த பந்தலில் பந்தினை எறிந்து விளையாடி
இளமைத் தன்மையை உடையவளாய் இருக்கிறாய், வளம் பொருந்திய மனைக்கு உரியவளாகிய செல்வியே
சுற்றித்திரியும் தன்மையினை உடைத்திருக்கிறாய், உன் பெண்மை அழிவதாக
|
பித்திகம் |
பித்திகம் – (பெ) 1. பித்திகை, சாதி மல்லிகை, large flowered jasmine, Jasminum angustifolium
1. இது மாலை நேரத்தில் மலரும். பொழுது தெரியாத மழைக்காலத்தில், இது மலர்வதை வைத்து
மாலை நேரத்தை அறிவர்.
செவ்வி அரும்பின் பைம் கால் பித்திகத்து
அ இதழ் அவிழ் பதம் கமழ பொழுது அறிந்து
இரும்பு செய் விளக்கின் ஈர் திரி கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய் கைதொழுது
மல்லல் ஆவணம் மாலை அயர – நெடு 40-44
(மலரும்)பக்குவத்திலுள்ள மொட்டுக்களின் பசிய காலினையுடைய பிச்சியின்
அழகிய இதழ்கள் கூம்புவிடும் நிலையில் மணக்கையினால், (அந்திப்)பொழுது (என)அறிந்து,
இரும்பினால் செய்த (அகல்)விளக்குகளில் (நெய் தோய்ந்த)ஈரமான திரியைக் கொளுத்தி,
நெல்லையும் மலரையும் சிதறி, (இல்லுறை தெய்வத்தை)கைகூப்பி(வணங்கி),
— வளப்பமுள்ள அங்காடித் தெரு(வெல்லாம்) மாலைக் காலத்தைக் கொண்டாட –
இது மாரிக்காலத்தில் பூக்கும்.
மாரி பித்திகத்து ஈர் இதழ் அலரி – நற் 314/3
மாரிக்காலத்துப் பித்திகத்தின் ஈரமான இதழையுடைய பூவை,
|
பித்திகை |
பித்திகை – (பெ) 1. பார்க்க : பித்திகம்
2. சிறு சண்பகம், Cananga-flower tree, Magnolia champaca
துய் தலை இதழ பைம் குருக்கத்தியொடு
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ என – நற் 97/6,7
பஞ்சினை உச்சியில் கொண்ட இதழ்களைக் கொண்ட பைங்குருக்கத்தி மலருடன்
சிறு சண்பகமலரையும் கலந்த மலரை விலைக்கு வேண்டுமா என்று கூவிக்கொண்டு
|
பித்தை |
பித்தை – (பெ) மக்களின் தலைமயிர், lock of hair
சுவல் மாய் பித்தை செம் கண் மழவர் – அகம் 101/5
பிடரியை மறைக்கும் தலைமயிரினையும் சிவந்த கண்ணினையும் உடைய மழவர்கள்
|
பின்னிலை |
பின்னிலை – (பெ) 1. குறைதீர்க்க வேண்டுதல், seeking a redress
2. பின்னடைவு, பின்தங்கல், lagging behind
1.
பந்தொடு பெயரும் பரிவு இலாட்டி
அருளினும் அருளாள் ஆயினும் பெரிது அழிந்து
பின்னிலை முனியல் மா நெஞ்சே – நற் 140/7-9
பந்தோடு ஓடியாடும் நம்மீது பரிவில்லாத தலைவி
நம்மீது இரக்கங்கொண்டாலும், கொள்ளாவிட்டாலும், பெரிதும் துவண்டுபோய்
இரந்து அவள் பின் நிற்றலை வெறுக்காதே! பெரிய நெஞ்சே!
2.
நின் தேர்
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது
ஊர்க பாக ஒருவினை கழிய – அகம் 44/4-6
உனது தேர்
முன்னிடத்தில் செயல்படுகின்ற ஊர்தி – அதற்குப் பின்னடைவு ஏற்படுத்தாமல்
(விரைந்து)செலுத்துக, பாகனே! (ஏனையோரை) விட்டு விலகியவனாய்க் கடந்துசெல்ல;
|
பின்னு |
பின்னு – (பெ) பின்னல், braid, plait
பிடி கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்து – சிறு 191
பெண்யானையின் தும்பிக்கையை ஒத்த பின்னல் வீழ்ந்து கிடக்கின்ற சிறிய முதுகினையும்
|
பின்பனி |
பின்பனி – (பெ) தமிழரின் ஓராண்டுக்குரிய ஆறு பருவங்களில் ஒரு பருவம்.
மாசி பங்குனி மாதங்கள். இரவின் பிற்பகுதியில் பனி மிகுதியுடையது
The months of mAci and pangkuni , being the season in which
dew falls during the latter part of the night.
பின்பனி அமையம் வரும் என முன்பனி
கொழுந்து முந்துறீஇ குரவு அரும்பினவே – நற் 224/2,3
பின்பனிக் காலம் வரப்போகிறது என்று முன்பனிக்காலத்தில்
தளிர்களை முதலில் விட்டு, குராமரங்கள் அரும்புவிடுகின்றனவே!
|
பின்றை |
பின்றை – (பெ) அடுத்த பொழுது, பின்னால், afterwards
ஆடிய இள மழை பின்றை
வாடையும் கண்டிரோ வந்து நின்றதுவே – நற் 229/10,11
அசைந்துவரும் இலேசான மழைக்குப் பின்னால்
வாடைக்காற்றும் கண்டீரன்றோ வந்து நிற்பதை
|
பிரசம் |
பிரசம் – (பெ) 1. வண்டு, தேனீ, beetle, bee
2. தேனடை, தேனிறால், honeycomb
3. தேன், honey
1.
வரி கடை பிரசம் மூசுவன மொய்ப்ப
எருத்தம் தாழ்ந்த விரவு பூ தெரியல் – மது 717,718
வரிகளுள்ள பின்பகுதியையுடைய தேனினம் சூழ்வனவாய் மொய்ப்ப,
கழுத்திலிருந்து தாழ்ந்த (பல்விதமாய்)கலந்த பூக்களைத் தெரிவுசெய்து கட்டிய மாலை
2.
சூர் புகல் அடுக்கத்து பிரசம் காணினும் – மலை 239
தெய்வமகளிர் விரும்பும் அடுக்கடுக்காய் அமைந்த சரிவுகளில், தேனடையைக் கண்டாலும்
3.
பிரசம் கலந்த வெண் சுவை தீம் பால் – நற் 110/1
தேன் கலந்த நல்ல சுவையையுடைய இனிய பாலை
|
பிரண்டை |
பிரண்டை – (பெ) ஒரு கொடி, Square-stalked vine, Vitis quadrangularis;
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை
ஏறு பெறு பாம்பின் பைம் துணி கடுப்ப
நெறி அயல் வறிது திரங்கும் அத்தம் – அகம் 119/5-7
நெறியில் செல்லும் மக்கள் அறுத்துப்போட்ட பிரண்டைக்கொடி
இடியால் தாக்குதல் பெற்ற பாம்பின் பசிய துண்டு போல
வழியின் பக்கத்தே பயனின்றி வதங்கிக் கிடக்கும்
|
பிரப்பு |
பிரப்பு – (பெ) 1. குறுணி வீதம் கொள்கலங்களில் பரப்பிவைக்கும் நிவேதனப் பொருள்,
Food of various kinds or rice placed before a deity in receptacles of the capacity of a kuruNi
2. குறுணியளவான பொருளைக் கொள்ளும் பாத்திரம், A vessel of the capacity of a kuruNi
1.
என் மகள் துயர் மருங்கு
அறிதல் வேண்டும் என பல் பிரப்பு இரீஇ
அறியா வேலன் தரீஇ அன்னை
வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி
மறி உயிர் வழங்கா அளவை – அகம் 242/8-12
என் மகளது துயர் வந்த காரணத்தை
அறிதல் வேண்டும் என்று பல குறுணி நிவேதனப்பொருள்களைப் பலியாக வைத்து
வெறியாடும் பெரிய களம் பொலிவுறுமாறு துதித்து
ஆட்டுக்குட்டியின் உயிரைப் பலியிடா முன்னரே
2.
மறி குரல் அறுத்து தினை பிரப்பு இரீஇ – குறு 263/1
ஆட்டின் கழுத்தை அறுத்தும், தினையைக் குறுணியளவு படைத்தும்
|
பிரமம் |
பிரமம் – (பெ) ஒரு வீணை வகை, a kind of lute
தெய்வ பிரமம் செய்குவோரும் – பரி 19/40
தெய்வத்தன்மையுள்ள பிரமவீணையினை இசைப்போரும்,
|
பிரம்பு |
பிரம்பு – (பெ) 1. கொடிவகை, கெட்டியான, மெல்லிதான மூங்கில், rattan, Calamus rotang, Calamus viminalis
2. வெட்டிய பிரம்புத்துண்டால் (cane) செய்யப்பட்ட, தேரின் ஒரு பகுதி, a part of a chariot made of cane
3. ஒரு மலை, a hill
1.
பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை
நீர் நணி பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம் – பெரும் 287,288
பொதிந்த இரையைக் கௌவி (அகப்படாதுபோன)பிளந்த வாயையுடைய வாளை மீன்,
நீர் அருகிலுள்ள பிரம்பின் (நீரலையால்)நடுங்கு(வது போல் தோன்று)ம் நிழலைக் கண்டு அஞ்சும்,
2.
திண் தேர் பிரம்பின் புரளும் தானை – மது 435
திண்ணிய தேரின் பிரம்பின்கண் புரளுகின்ற முன்றானையினையும்
இந்தப் பிரம்பு அரம் போன்ற முட்களையுடையது.
பழன பொய்கை அடைகரை பிரம்பின்
அர வாய் அன்ன அம் முள் நெடும் கொடி – அகம் 96/3,4
மருதநிலத்துப் பொய்கையின் அடைகரையிலுள்ள பிரம்பினது
அரத்தின் வாய் போன்ற அழகிய முட்களைக் கொண்ட நீண்ட கொடி
புளிப்பான பழத்தையுடையது.
தீம் புளி பிரம்பின் திரள் கனி பெய்து – அகம் 196/6
இனிப்புடன் கூடிய புளிப்பினையுடைய பிரம்பின் திரண்ட பழத்தினைப் பெய்து
இதன் கொடி ஒன்றோடொன்று பின்னிக்கிடக்கும்.
அரில் பவர் பிரம்பின் வரி புற விளை கனி – குறு 91/1
ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருக்கிற கொடியாகிய பிரம்பின், புறத்தில் வரிகொண்ட விளைந்த கனியை,
3.
அருவி ஆம்பல்கலித்த முன்துறை
நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன
மின் நீர் ஓதி – அகம் 356/18-20
அருவிநீர் வீழ்ந்துகொண்டிருக்கும் நீர்த்துறையின் முன் பக்கத்தே ஆம்பல் பூக்கள் தழைத்திருக்கும்
நன்னனது அழகிய பிரம்பு மலையைப் போன்று
மின்னுகின்ற கருமையான கூந்தலை உடையவளே!
|
பிரிபு |
பிரிபு – (பெ) பிரிதல், பிரிவு, separation
என்றும் என் தோள் பிரிபு அறியலரே – நற் 1/2
என்றைக்கும் எனது தோளினைப் பிரிதலை அறியார்,
|
பிரியலன் |
பிரியலன் – (வி.மு) பிரிந்து செல்ல மாட்டேன், I won’t depart
நின்னின் பிரியலன் அஞ்சல் ஓம்பு என்னும்
நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே – கலி 21/7,8
உன்னைவிட்டுப் பிரியேன், அஞ்சுவதை விலக்கு என்ற
நலமிக்க மொழிகளையும் நீ சொன்னாயே!
|
பிரியலம் |
பிரியலம் – (வி.மு) பிரிந்து செல்ல மாட்டோம், I won’t depart
தையல் நின்வயின் பிரியலம் யாம் என
பொய் வல் உள்ளமொடு புர்வுண கூறி – அகம் 205/3,4
பெண்ணே! நின்னிடத்தினின்றும் யாம் பிரியேம் என்று
பொய் மிக்க உள்ளத்தால்யாம் விரும்புமாறு கூறி
|
பிரியலர் |
பிரியலர் – (பெ) பிரிந்து செல்லாதவர், one who won’t depart
நம்வயின்
பிரியலர் போல புணர்ந்தோர் மன்ற – ஐங் 336/1,2
நம்மைவிட்டுப்
பிரிந்து செல்லாதவர் போல நம்மைச் சேர்ந்திருந்தவர்தான்
|
பிரியல் |
பிரியல் – (பெ) பிரிந்து செல்லுதல், departing
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின் – நற் 243/10
பிரிந்து செல்லுதல் ஆடவர்க்கு இயல்பு எனின்
|
பிருங்கலாதன் |
பிருங்கலாதன் – (பெ) இரணியன் மகன் பிரகலாதன், Prahalathan, the son of King HiraNyan
பிருங்கலாதன் பல_பல பிணி பட
வலந்து_உழி – பரி 4/12,13
(இரணியன் அந்தப்) பிரகலாதனைப் பலவாறு பிணிபடுமாறு
கட்டிப்போட்ட பொழுது
|
பிறக்கிடு |
பிறக்கிடு – (வி) பின்னிடு, பின்னே செல், go back
நிலம் பிறக்கிடுவது போல குளம்பு கடையூஉ
உள்ளம் ஒழிக்கும் கொட்பின் மான் – புறம் 303/1,2
நிலம் பின்னிடுவது போல் கால் குளம்பை ஊன்றி
காண்போர் ஊக்கத்தைக் கெடுக்கும் விரைந்த செலவினையுடைய குதிரை
|
பிறக்கு |
பிறக்கு – 1. (வி) குவி, அடுக்கு, heap, pile up
– 2. (பெ) 1. பின்பக்கம், back, rear
2. பின் நாள், இனிமேல், hereafter
1.
கூனி குயத்தின் வாய் நெல் அரிந்து
சூடு கோடு ஆக பிறக்கி நாள்தொறும்
குன்று என குவைஇய குன்றா குப்பை – பொரு 242-244
குனிந்துநின்று, அரிவாளின் வாயால் நெல்லை அறுத்துச்,
சூட்டை மலையாக அடுக்கி, நாள்தோறும்
மலை என்னும்படி குவித்த குறையாத நெற்பொலி
2.1
முதிர் காய் வள்ளி அம் காடு பிறக்கு ஒழிய
துனை பரி துரக்கும் செலவினர் – முல் 101,102
முதிர்ந்த காயையுடைய வள்ளியங்காடு பின்னாக மறைய,
விரைந்து செல்லும் பரியைக் கடிதாகச் செலுத்தும் செலவினையுடையவரின்
2.2
தந்தை வித்திய மென் தினை பைபய
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ – நற் 306/1,2
தந்தை விதைத்த மென்மையான தினைப்பயிரைக் காக்க, மெல்லமெல்ல வரும்
சிறிய கிளைகளை ஓட்டுதல் இனிமேல் என்ன ஆகுமோ?
|
பிறங்கடை |
பிறங்கடை – (பெ) வழித்தோன்றல், Descendant
இரு நிலம் கடந்த திரு மறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை – பெரும் 29,30
பெரிய நிலத்தை அளந்துகொண்ட திருவாகிய மறுவை அணிந்த
கடல் (போலும்) நிறத்தையுடையவன் பின்னிடத்தோனாய்
அந்தரத்து
அரும் பெறல் அமிழ்தம் அன்ன
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே – புறம் 392/19-21
கடற்கு அப்புறத்தாயுள்ள நாட்டிலுள்ள
பெறற்கரிய அமுதம்போன்ற
கரும்பை இந்நாட்டிற்குக் கொண்டுவந்தவனுடைய பெரிய வழித்தோன்றலே
(அதியமான் மகன் பொகுட்டெழினியை ஔவையார் பாடியது)
|
பிறங்கல் |
பிறங்கல் – (பெ) 1. மலை, mountain
2. பாறை, rock
3. குவியல், திரள், mass, heap
4. ஒளி, விளக்கம், light, brightness
5. மலைத்தொடர், mountain range
பிறங்கல் என்ற சொல் பெரும்பாலும் மலை என்ற சொல்லுக்கு அடைச்சொல்லாகவே வருகிறது. அவற்றைத் தவிர
பிறங்கல் என்று முழுச்சொல்லாக வரும் இடங்களைப் பார்ப்போம்.
1.1
எண்ணரும் பிறங்கல் மான் அதர் மயங்காது – அகம் 8/13
எண்ணற்கரிய குன்றுகளின் பக்கமாகச் செல்லும் மான்களின் நெறிகளில் மயங்கித் திரியாது
1.2
தலையாற்று நிலைஇய சேய் உயர் பிறங்கல்
வேய் அமை கண் இடை புரைஇ – அகம் 152/22,23
தலையாறு என்னுமிடத்து நிலைபெற்ற மிக உயர்ந்த மலையிடத்திலுள்ள
மூங்கிலிற் பொருந்திய கணுக்களின் நடுவிடத்தை ஒத்து
1.3
வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவிய – பரி 21/46
வண்டுகள் ஆரவாரித்தற்கிடமான மாலையணிந்த தமது மலையை ஒத்த மார்பின்கண் பூசிய
1.4
கடும் கதிர் திருகிய வேய் பயில் பிறங்கல் – அகம் 17/15
கடுமை மிக்க ஞாயிற்றின் கதிர்கள் முறுகிய மூங்கில் அடர்ந்த பக்கமலை
2.1
பிறங்கல் இடையிடை புக்கு பிறழ்ந்து – பரி 19/59
விளங்கும் பாறைகளின் இடையே இடையே நெறிதவறி புகுந்து திகைத்து
2.2
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல்
வேய் கண் உடைந்த சிமைய – அகம் 399/16,17
காயும் ஞாயிறு முடுகிய அழகு ஒழிந்த பாறைகளையும்
மூங்கில் கணுக்கல் உடைந்த சிகரங்களையும்
3.1
தண் துளி பல பொழிந்து எழிலி இசைக்கும்
விண்டு அனைய விண் தோய் பிறங்கல்
முகடு உற உயர்ந்த நெல்லின் – புறம் 391/1-3
தண்ணிய நீர்த்துளிகள் பலவற்றையும் சொரிந்து மேகங்கள் முழங்கும்
மலை போன்ற வானளாவிய குவியலாய்
உச்சி உண்டாக உயர்வுறக் குவ்இத்த நெல்லாகிய
4. கீழ்க்கண்ட இடங்களில் பிறங்கல் என்ற சொல் மலை என்ற சொல்லுக்கு அடைமொழியாக வருவதைக் காணலாம்.
சில உரையாசிரியர்கள் இந்தச் சொல்லுக்கு, ‘பிறங்குதலையுடைய’ எனப் பொருள் கொள்கின்றனர். பிறங்குதல் என்பது
விளங்குதல் என்றும் விளக்குகின்றனர். இவை எல்லாவற்றிலும் ‘உயர்’என்ற அடைமொழியும் இருக்கக் காண்கிறோம்.
எனவே, மிக உயரமான மலைகளே பிறங்கல் மலை எனப்படுகின்றன. உச்சியில் பெரிய கற்பாறைகளைக் கொண்ட
மலைகள் வெயிலடிக்கும்போது ‘பளிச்’ என்று இருக்கும். அவற்றைப் பிறங்கல் மலை என்று கொண்டனர் எனலாம்.
பிறங்கல் என்ற தனிச்சொல்லுக்குப்பாறை என்ற பொருள் அமைகிறது என்பதனை இங்கு பொருத்திப் பார்க்கவேண்டும்.
5.
மேலும், ’பிறங்கல் மலை இறந்தோரே’ என்று மலையைக் கடந்துசெல்வதைப் பற்றிப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.
எனவே, இது தனி மலையாக இருக்கமுடியாது. ஒரு நீண்ட மலையாகவோ, அல்லது மலைகளின் அடுக்காகவோ
இருக்கவேண்டும். எனவே, பிறங்கல் மலை என்பதற்கு அடுக்கடுக்கான நீண்ட மலைத்தொடர் (mountain range) என்று
பொருள் கொள்வது பொருத்தம் எனத் தோன்றுகிறது. கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி – அகம் 393/1
என்ற அகநானூற்று அடி இதனை உறுதிப்படுத்துகிறது.
கோடு உயர் பிறங்கல் மலை கிழவோனே – நற் 28/9
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே – குறு 144/7
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – குறு 253/8
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே – குறு 285/8
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – ஐங் 318/5
குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே – ஐங் 387/6
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 111/15
நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 185/13
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 247/13
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 249/19
கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 313/17
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே – அகம் 321/17
கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி – அகம் 393/1
|
பிறங்கு |
பிறங்கு – (வி) 1. ஒளிர், சுடர்விடு, பிரகாசி, shine, glitter, glisten
2. உயர், be high, lofty
3. பெருகு, வழிந்தோடு, overflow
4. பெருத்திரு, மிகுதியாயிரு, be plenty
5. செறிவாயிரு, be dense
6. சிறந்திரு, be great, eminent, exalted
1.
திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை மார்பில்
தெரி மணி பிறங்கும் பூணினை – பரி 1/8,9
திருமகள் நிறைந்து உறையும் மார்பினையுடையவன்! அந்த மார்பில்
தெரிந்தெடுத்துத் தொடுத்த மணிகள் ஒளிவீசும் பூணை அணிந்திருப்பவன்!
2.
பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி – பட் 285
உயரமான நிலைகளையுடைய மாடங்கள் அமைந்த உறையூரை விரிவுரச்செய்து
3.
பிறங்கு வெள் அருவி வீழும் சாரல் – சிறு 90
மிகுகின்ற வெள்ளிய அருவிநீர் வீழும் பக்கத்தினையுடைய
4.
மேதி அன்ன கல் பிறங்கு இயவின் – மலை 111
எருமை கிடந்தாற்போன்ற கல் பெருத்த வழியிடத்திலே
5.
மரம் பிறங்கிய நளி சிலம்பின் – புறம் 136/12
மரங்கள் செறிந்த குளிர்ந்த மலையில்
6.
அறம் கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய
உரை சால் வேள்வி முடித்த கேள்வி – பதி 64/3,4
அறநூல்களை ஓதிப் பயின்று விளங்கிய நாவினையும், உயர்ந்த
புகழமைந்த வேள்விகள் பல செய்துமுடித்தற்கேதுவாகிய கேள்வியினையுமுடைய
|
பிறன் |
பிறன் – (பெ) வேறொருவன், அன்னியன், some other man, stranger
அறன்கடைப்படா வாழ்க்கையும் என்றும்
பிறன் கடை செலாஅ செல்வமும் இரண்டும்
பொருளின் ஆகும் புனையிழை – அகம் 155/1-3
அறத்தினின்றும் நீக்கப்படாத வாழ்க்கையும், என்றும்
அடுத்தவன் மனைவாசலில் சென்று நில்லாத மேம்பாடும் ஆகிய இரண்டும்
பொருளால்தான் ஆகும் அழகிய அணியுடையவளே
|
பிறள் |
பிறள் – (பெ) மற்றவள், அன்னியள், some other woman, strange woman
என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும்
தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர் – கலி 9/6,7
என் மகள் ஒருத்தியும், வேறொருத்தியின் மகன் ஒருவனும்
தமக்குத்தாமே காதல் கொண்டு, இப்போது பிறர் அறியும்படி ஒன்றுசேர்ந்தனர்,
|
பிறழ் |
பிறழ் – (வி) 1. முறையின்றி இரு, be irregular, misplaced, out of order
2. மறி, மடி, திரும்பு, பின்னோக்கி வா, return, recede
3. மாறுபட்டுக்கிட, lie in disorder
4. இறந்துபோ, die
5. வழிதவறு, lose the way
6. துள்ளு, leap, jump as fish
7. தலைகீழாய் மாறு, முற்றிலும் தன்மை மாறு, complete change in form, aspect, colour or quality
8. அசை, புடைபெயர், move
9. திகை, மருள், get confused, shocked
1.
உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய்
சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின்
—————– ——————————-
உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் – திரு 47-51
காய்ந்து போன மயிரினையும், நிரை ஒவ்வாத பல்லினைக் கொண்ட பெரிய வாயினையும்,
சுழலும் விழியையுடைய பசிய கண்ணினையும், கொடிய பார்வையினையும்,
————— ——————————-
(கண்டோர்)அஞ்சுதல் பொருந்திய நடையினையும் உடைய அச்சம் தோன்றுகின்ற பேயாகிய மகள்
2.
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி – பெரும் 215
அரும்புகள் சூழ்ந்த இதழ்களையுடையவாகி மறிந்த வாயினையுடைய முள்ளி
3.
கழுதை
குறை குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின் – அகம் 207/5,6
கழுதைகளின்
தேய்ந்த குளம்பு உதைத்தலால் பரல்கற்கள் மாறுபட்டுக்கிடக்கும் வழியாய
4.
பிணிபு நீ விடல் சூழின் பிறழ்தரும் இவள் என
பணிபு வந்து இரப்பவும் பல சூழ்வாய் ஆயினை – கலி 3/14,15
இவளுடன் சேர்ந்திருப்பதை நீ விட்டுவிட எண்ணினால், இறந்துவிடுவாள் இவள் என்று
மிகவும் பணிந்து நின்று வேண்டிக்கொள்ளவும், பிரிவதற்குரிய பல வழிகளை ஆராய்ந்து பார்க்கிறாய்
5.
பிறந்த தமரின் பெயர்ந்து ஒரு பேதை
பிறங்கல் இடையிடை புக்கு பிறழ்ந்து யான்
வந்த நெறியும் மறந்தேன் சிறந்தவர்
ஏஎ ஓஒ என விளி ஏற்பிக்க – பரி 19/58-61
தான் பிறந்த சுற்றத்தாரினின்றும் பிரிந்து ஓர் அறியா இளம்பெண்
செறிவான பாறைக்கற்களுக்கு இடையிடையே புகுந்து, வழிதவறி, நான்
வந்த வழியை மறந்துவிட்டேன் என்று தன் பெற்றோரை,
ஏஎ ஓஒ என்று தன் அவர் கேட்கும்படி செய்ய,
6.
தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும் – பதி 13/1,2
பசுக்கூட்டங்கள் கிடைபோட்ட வயல்வெளிகளில் ஆரல்மீன்கள் துள்ளிவிளையாடவும்
7.
வட திசையதுவே வான் தோய் இமயம்
தென் திசை ஆஅய் குடி இன்று ஆயின்
பிறழ்வது-மன்னோ இ மலர் தலை உலகே – புறம் 132/7-9
வட திசைக்கண்ணதாகிய வானைப் பொருந்தும் இமய மலையும்
தென் திசைக்கண் ஆய் குடியும் இல்லையாயின்
கீழ் மேலதாகிக் கெடும் இந்தப் பரந்த இடத்தையுடைய உலகம்
8.
கொல் களிற்று உரவு திரை பிறழ அ வில் பிசிர
புரை தோல் வரைப்பின் எஃகு மீன் அவிர்வர – பதி 50/8,9
கொல்லுகின்ற களிறுகள் வலிமையுள்ள கடலலைகளாய் நடந்துவர, அழகிய வில்கள் பிசிர் போல் விளங்க,
உயர்ந்த தோலாகிய கேடகங்களுக்கு மேல்பக்கத்தில் வேல்முனைகள் மீன்களாய் மின்னியொளிர,
9.
பேஎ மன்ற பிறழ நோக்கு இயவர் – பதி 78/10
கண்டார்க்கு அச்சத்தை உண்டுபண்ணும் பகைவரை மருண்டு நோக்கும் பார்வையினையும் பல இயங்களையும்
உடைய பகைவீரர்
|
பிறிது |
பிறிது – (பெ) வேறு, மற்றது, some other thing
பெரும் தோள் குறு_மகள் அல்லது
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – நற் 80/8,9
பெரிய தோள்களைக் கொண்ட இளையோளே அன்றி
மருந்து வேறு இல்லை நான் அடைந்த இந்த நோய்க்கு
|
பிற்படு |
பிற்படு – (வி) 1.பின்னே செல், go behind
2. பின்னே வா, come behind
3. பின்தங்கு, lag behind
1.
மான் ஏறு உகளும் கானம் பிற்பட
வினை நலம் படீஇ வருதும் அ வரை – குறு 256/3,4
ஆண்மான் துள்ளிவிளையாடும் காடு பின்னே செல்ல,
நாம் மேற்கொண்ட தொழிலின் பயனைப் பெற்றுக்கொண்டு வருவோம்; அந்நாள் வரை
2.
இயல் முருகு ஒப்பினை வய நாய் பிற்பட
பகல் வரின் கவ்வை அஞ்சுதும் – அகம் 118/5,6
இயங்கும் முருகனை ஒப்பாகிய வலிய நாய் பின்னேவர
பகலில் நீ வந்தால் ஊரார் கூறும் பழிச்சொல்லுக்கு அஞ்சுகிறோம்
3.
மத்தரி தடாரி தண்ணுமை மகுளி
ஒத்து அளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார்
நித்தம் திகழும் நேர் இறை முன்கையால்
அ தக அரிவையர் அளத்தல் காண்-மின் – பரி 12/41-44
மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி ஆகிய இசைக்கருவிகளின்
தாளத்தை அளந்து சீரின் கூறுபாட்டை அறிந்து, ஒருவருக்கொருவர் பின்னிடாத தகுதியுடையவராய்
நடன அசைவுகள் நன்கு விளங்கும் நேராக இறங்கும் தம் முன்கையால்
அழகுமிக்கதாய் ஆடல்மகளிர் அந்தத் தாளத்தை அளத்தலைப் பாருங்கள்;
|
பிற்றை |
பிற்றை – (பெ) 1. பின்னர், afterwards
2. பின் பக்கம், back side
1.
பிற்றை
அணங்கும் அணங்கும் போலும் – நற் 376/9,10
இதன் பின்னர்
முருகவேளும் என்னை வருத்தும் போலும்?
2.
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே – புறம் 183/1,2
தன் ஆசிரியர்க்கு ஓர் ஊறுபாடுற்றவிடத்து அது தீர்தற்கு உதவியும், மிக்க பொருளைக் கொடுத்தும்
பின் நின்று கற்கும் நிலையையும் வெறுக்காமல் கற்பது நன்று.
|
பிலிற்று |
பிலிற்று – (வி) வெளிவிடு, let out, as milk from the udder; to spill;
திதலை மென் முலை தீம் பால் பிலிற்ற
புதல்வன் புல்லி புனிறு நாறும்மே – நற் 380/3,4
தேமல் படிந்த மென்மையான கொங்கைகளின் இனிய பால் சுரந்து வழிய
புதல்வனை அணைத்துக்கொள்வதால் புனிற்றுப் புலவு நாறுகின்றது;
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன்
வீங்கு மாண் செருத்தல் தீம் பால் பிலிற்ற
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும் – அகம் 14/9-11
அறுகம்புல் மேய்ச்சலில் உணவருந்திய செருக்கிய நடையுடைய நல்ல ஆனினங்கள்
பருத்த மாண்புடைய மடி இனிய பாலைப் பொழிய,
கன்றை நினைத்து அழைக்கும் குரலையுடையவாய் மன்றத்தில் கூட்டமாய்ப் புகுகின்ற
|
பிளவை |
பிளவை – (பெ) பிளக்கப்பட்ட துண்டு, slice, piece
முளவு_மா தொலைச்சிய பைம் நிண பிளவை
பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ – மலை 176,177
முள்ளம்பன்றியைக் கொன்ற மின்னுகின்ற கொழுப்பையுடைய பிளக்கப்பட்ட தசைத்துண்டுகளையும்,
பெண் நாயை விரட்டிக் கடிக்கவிட்டுக்கிடைத்த (உடும்பின்)பருமனான தசைத்துண்டோடு கலந்து,
|
பிளிறு |
பிளிறு – (வி) 1. (யானை) பேரொலி எழுப்பு, trumpet
2. யானையைப் போல் முழக்கமிடு, make a loud noise like the roar ofan elephant
1.
பெரும் களிறு பிளிறும் சோலை – நற் 222/9
பெரிய ஆண்யானை முழக்கமிடும் சோலை
2.1
வெண்ணெல் அரிநர் பின்றை ததும்பும்
தண்ணுமை வெரீஇய தடம் தாள் நாரை
செறி மடை வயிரின் பிளிற்றி – அகம் 40/13-15
வெண்ணெல்லை அரிவோரின் பின்னே நிறைந்து ஒலிக்கும்
தண்ணுமைப் பறையின் ஓசைக்கு அஞ்சிய நீண்ட கால்களையுடைய நாரை
செறிந்த மூட்டுவாயினை உடைய கொம்புவாத்தியம் போல் பிளிற்றி
2.2
கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும்
தேர் வண் கோமான் தேனூர் – ஐங் 55/1,2
கரும்பினைப் பிழியும் எந்திரமானது களிறு பிளிறும் குரலுக்கு எதிராக ஒலிக்கும்
தேரினையும், வள்ளண்மையையும் கொண்ட பாண்டியனின் தேனூர்
2.3
கார் பெயல் உருமின் பிளிறி சீர் தக – குறி 162
கார்காலத்து மழையின் இடி போல முழக்கத்தையுண்டாக்கி
2.4
பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம் – பட் 236
பேயின் கண்ணை ஒத்த, முழங்குகின்ற காவலையுடைய முரசம்
|
பிழா |
பிழா – (பெ) வட்டமான பிரம்புத்தட்டு, கூடை, round wicker plate, basket
அவையா அரிசி அம் களி துழவை
மலர் வாய் பிழாவில் புலர ஆற்றி – பெரும் 275,276
அவிக்காத(நெல்லின்) அரிசி(பச்சரிசி)யை அழகிய களி(யாகத் துழாவி அட்ட) குழைசோற்றை
அகன்ற வாயையுடைய தட்டுப் பிழாவில் உலரும்படி ஆறவைத்து,
|
பிழி |
பிழி – 1. (வி) கையால் முறுக்கி/இறுக்கி நீர்/சாறு/பால் வெளியேறச் செய், squeeze, express, press out with the hands;
– 2. (பெ) கள், toddy
1
பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவுழி
நளி படு சிலம்பில் பாயம் பாடி
பொன் எறி மணியின் சிறு புறம் தாழ்ந்த எம்
பின் இரும் கூந்தல் பிழிவனம் துவரி – குறி 57-60
பளிங்கை (க் கரைத்துக்)கொட்டியதைப் போன்ற பரந்த சுனையில் மூழ்கி விளையாடுகின்றபொழுது,
அடர்த்தி மிக்க மலைச்சாரலில் மனவிருப்பப்படி பாடி,
தங்கத்தில் பதிக்கப்பட்ட (நீல)மணியைப் போல சிறிய முதுகில் தாழ்ந்து கிடந்த எம்
பின்னப்பட்ட கரிய கூந்தலைப் பிழிந்து ஈரத்தைப் புலர்த்தி,
தடம் கோட்டு ஆமான் மடங்கல் மா நிரை
குன்ற வேங்கை கன்றொடு வதிந்து என
துஞ்சு பதம் பெற்ற துய் தலை மந்தி
கல்லென் சுற்றம் கை கவியா குறுகி
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி தீம் பால்
கல்லா வன் பறழ் கை நிறை பிழியும் – நற் 57/1-6
வளைந்த கொம்புகளையுடைய காட்டுப்பசு, சிங்கம் முதலான விலங்குகளின் கூட்டம் உள்ள
குன்றிலுள்ள வேங்கை மரத்தடியில் தன் கன்றுடன் படுத்திருந்ததாக,
அது தூங்கும் நேரத்தில், பஞ்சுபோன்ற தலையையுடைய குரங்கு
கல்லென ஒலிக்கும் தன் சுற்றத்தைக் கையமர்த்தி, கிட்டே சென்று
பருத்த பால்மடியை அமுக்கிப் பற்றி இழுத்து, இனிய பாலை
தன் இளைய வலிய குட்டியின் கை நிறையப் பிழிந்துகொடுக்கும்
கரும்பின்
விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு – அகம் 237/11,12
கரும்பின்
முற்றிய தண்டினைப் பிழிந்த அழகிய இனிய சாறு அட்ட பாகுடன்
களிறு மென்றிட்ட கவளம் போல
நறவு பிழிந்து இட்ட கோது உடை சிதறல் – புறம் 114/3,4
யானை மென்று துப்பிய கவளத்தின் சக்கை போல
மதுவைப் பிழிந்து போட்ட சக்கையாகிய சிதறியவற்றினின்றும்
2.
வல் வாய் சாடியின் வழைச்சு அற விளைந்த
வெம் நீர் அரியல் விரல் அலை நறும் பிழி
தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் – பெரும் 280-282
கெட்டியான வாயினையுடைய சாடியில் இளங்கள்ளின் நாற்றம் அறும்படி முற்றின(பின்),
வெந்நீரில்(போட்டு) இறுத்ததை விரலிடுக்கில் அலைத்துப்(பின் விரல்மூடிப்) பிழிந்த நறிய கள்ளை,
பச்சை மீனைச் சுட்டதனோடு, (பசியால்)தளர்ந்தவிடத்தே பெறுவீர் –
|
பிழை |
பிழை – 1. (வி) 1. ஆபத்திலிருந்து தப்பு, survive a danger, escape from an evil or danger
2. இலக்குத் தவறு, miss the target
3. தவறுசெய், குற்றம்புரி, err, do wrong
4. தீங்குசெய், do harm
5. நேர்வழியினின்றும் விலகிச்செல், deflect, deviate from a straight path
6. நடவாது போ, பொய்த்துப்போ, fail, be unsuccessful
7. உயிர் வாழ், உயிரோடிரு, live
– 2. (பெ) 1. (தெய்வ)குற்றம், (devine) fault
2. தவறு, mistake
3. பொய்த்துப்போனது, a failed event
1.1
புலி கோள் பிழைத்த கவை கோட்டு முது கலை – ஐங் 373/2
புலியின் பிடியிலிருந்து தப்பித்த கிளைப்பட்ட கொம்புகளையுடைய முதிய கலைமான்,
1.2
களிறு கோள் பிழைத்த கதம் சிறந்து எழு புலி – ஐங் 218/3
களிற்றைக் கொல்வதில் தவறிவிட்ட சினம் மிகுந்து எழுந்துவரும் புலி
1.3
குவளை உண்கண் இவளும் யானும்
கழனி ஆம்பல் முழு_நெறி பைம் தழை
காயா ஞாயிற்று ஆக தலைப்பெய
பொய்தல் ஆடி பொலிக என வந்து
நின் நகா பிழைத்த தவறோ பெரும – அகம் 156/7-12
நீலப்பூ போலும் மையுண்ட கண்ணினையுடைய இத் தலைவியும் நானும்
வயலில் மலர்ந்த ஆம்பல் மலரின் அகவிதழ் ஒடிக்கப்படாத முழுப்பூவின் தழைகளை
ஞாயிறு காயாத விடியற்காலத்தில் தலையிலே செருகிக்கொண்டு,
சிற்றில் விளையாட்டு விளையாடி சிறந்திடுக என்று தாய் கூற, இங்கு வந்து
உன்னுடன் நகைத்து அளவளாவிப் பேசிய குற்றம்புரிந்தமையால் உண்டான தவறோ, பெருமானே
1.4
நலம்பெறு பணை தோள் நல்நுதல் அரிவையொடு
மணம் கமழ் தண் பொழில் அல்கி நெருநை
நீ தன் பிழைத்தமை அறிந்து
கலுழ்ந்த கண்ணள் எம் அணங்கு அன்னாளே – அகம் 366/13-16
அழகுபெற்ற மூங்கில் போலும் தோளும் நல்ல நெற்றியும் உடைய பரத்தையோடு
மணம் கமழும் குளிர்ந்த சோலையிலே தங்கி, நேற்று
நீ தனக்கு தீங்குசெய்ததை உணர்ந்து
அழுத கண்ணினையுடையவள் ஆனாள், எம் தெய்வம் போன்றவளான தலைவி
1.5
உயர் நிலை உலகம் இவணின்று எய்தும்
அற நெறி பிழையா அன்பு உடை நெஞ்சின்
பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளியும் – மது 471-474
உயர்ந்த நிலையையுடைய வீடுபேற்றை இவ்வுலகிலேயே நின்று சேரும்
அறத்தின் வழி (ஒருக் காலமும்)தப்பாது அருள் நிரம்பிய நெஞ்சினையுடைய
பெரியோர் பொருந்தி இன்புற்று வதியும்
மலையைக் குடைந்ததைப் போன்ற அந்தணர்கள் இருக்கைகளும் –
1.6
மழை ஒழுக்கு அறாஅ பிழையா விளையுள் – மது 507
மழை பெய்தல் அற்றுப்போகாத பொய்க்காத விளைச்சலையுடைய
1.7
பிழையலள் மாதோ பிரிதும் நாம் எனினே – அகம் 5/28
உயிரோடிருக்கமாட்டாள் அல்லவா பிரிந்துசென்றோம் நாம் எனின்.
2.1
காமர்
பெருக்கு அன்றோ வையை வரவு
ஆம் ஆம் அது ஒக்கும் காதல் அம் காமம்
ஒருக்க ஒருதன்மை நிற்குமோ ஒல்லை
சுருக்கமும் ஆக்கமும் சூள் உறல் வையை
பெருக்கு அன்றோ பெற்றாய் பிழை – பரி 6/70-74
அழகிய
நீர்ப்பெருக்கு அன்றோ இந்த வையையின் புதுப்புனல் வரவு
ஆமாம், அது சரிதான் காதலையுடைய அழகிய காமமும்
ஒருமிக்க ஒரே தன்மையுடையதாய் இருப்பதுண்டோ? விரைவாகச்
சுருங்கிப்போவதும், பின்பு பெருகுவதும் – இதற்காக நீ சூளுரைக்கவேண்டாம் – வையையின்
பெருக்கினைப் போலத்தானே அதுவும்! பெற்றாய் தெய்வ குற்றம்!
2.2
மகள் இவன்
அல்லா நெஞ்சம் உற பூட்ட காய்ந்தே
வல் இருள் நீயல் அது பிழை ஆகும் என – பரி 6/98-100
மகளே! இவன்
துன்புற்ற நெஞ்சம் இறுகப் பூட்டிக்கொள்ளும்படி அவன் மீது சினந்துவிட்டுப்
பின்னர் அவனைத் தேடிச் செறிந்த இருளில் செல்லவேண்டாம், அது தவறாகும்
2.3
கனவின் தொட்டது கை பிழை ஆகாது
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை
வரு புனல் அணிக என வரம் கொள்வோரும் – பரி 8/103-105
கனவில் காதலரின் கையைத் தொட்டது பொய்த்துப்போனது ஆகாமல்
நனவினிலும் கிட்டும்படி, ‘உனக்குரிய செறிந்த நீரையுடைய வையை ஆறு
புதிதாய் வரும் புனலை அணிவதாக’ என்று வரம் கேட்போரும்,
|
பிழைப்பு |
பிழைப்பு – (பெ) 1. பொய்த்துப்போதல், failure to happen
2. (இகழ்ச்சி அல்லது வருத்தக்குறிப்பு) வாழ்க்கை, உயிர்வாழ்தல்,
life, existence (with a slight or contempt)
3. இழத்தல், losing
1.
வளம் பிழைப்பு அறியாது வாய் வளம் பழுநி – மலை 578
வளம் பொய்த்துப்போதல் இல்லாது, வாய்த்த வளமும் செழித்துமிகுந்து(உள்ள
2.
நின் இன்று அமைகுவென் ஆயின் இவண் நின்று
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ – நற் 400/5,6
நீயின்றி வாழ்தல் எனக்குக் கூடுமாயின், இவ்விடத்திலிருந்து
இனிமையைத் தராத நோக்கத்துடன் எனக்கு என்ன பிழைப்புத்தான் உண்டு
3.
செய்த மேவல் அமர்ந்த சுற்றமோடு
ஒன்றுமொழிந்து அடங்கிய கொள்கை என்றும்
பதி பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி
நிரையம் ஒரீஇய வேட்கை புரையோர் – பதி 15/28-31
சான்றோர் செய்த நல்லறங்களைத் தாமும் விரும்பிச் செய்து சூழ இருக்கும் சுற்றத்தாருடன்,
உண்மையே உரைத்துப் புலனடங்கிய ஒழுக்கத்தோடு, எப்பொழுதும்
வாழுமிடங்களை இழப்பதை அறியாது, இனியவற்றை நுகர்வதை அடைந்து,
நரகத்தை வெறுத்த அறவேட்கையுடைய சான்றோர்
|