நகர் |
நகர் – (பெ) 1. கோயில், temple, sacred shrine
2. வீடு, மாளிகை, house, mansion
3. அரண்மனை, palace
4. நகரம், town, city
5. சடங்கு செய்யும் இடம், Dais for performing ceremonies;
6. குடும்பம், மனைவி, மக்கள், family, wife and children
1.
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர்
ஆடு_களம் சிலம்ப பாடி – திரு 244,245
முருகக்கடவுள் வரும்படி வழிப்படுத்தின அச்சம் பொருந்தின அகன்ற கோயிலின்கண்ணே –
வெறியாடுகளம் ஆரவாரிப்பப் பாடி
2.
தொடர் நாய் யாத்த துன் அரும் கடி நகர் – பெரும் 125
சங்கிலிகளால் நாயைக் கட்டிவைத்துள்ள கிட்டுதற்கரிய காவலையும் உடைய வீட்டினையும்;
3.
வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக
குன்று குயின்று அன்ன ஓங்கு நிலை வாயில்
திரு நிலைபெற்ற தீது தீர் சிறப்பின்
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து – நெடு 87-90
வெற்றிகொண்டு உயரும் கொடிகளோடு யானைகள் போய் நுழையும்படி (உயர்ந்த),
பாறைக்குன்றைச் செதுக்கியதைப் போன்ற கோபுரத்தை (மேலே)உடைய வாயில்களையும்;
செல்வம் நிலைபெற்ற குற்றமற்ற சிறப்பினையுடைய,
கொண்டுவந்த மணலைப் பாவி இறுக்கமாக்கப்பட்ட, அழகிய அரண்மனையின் — முற்றத்தில்
4.
உலகம் ஒரு நிறையா தான் ஓர் நிறையா
புலவர் புல கோலால் தூக்க உலகு அனைத்தும்
தான் வாட வாடாத தன்மைத்தே தென்னவன்
நான்மாடக்கூடல் நகர் – பரி 29/1-4
இந்த உலகத்தின் அனைத்து நகர்களின் பெருமையையும் ஒரு பக்கமும்,. மதுரை நகரை ஒரு பக்கமும்
புலவர்கள் தம் அறிவாகிய துலாக்கோலில் இட்டு சீர்தூக்கும்போது, அந்த அனைத்து நகர்களின் பெருமையும்
தாம் வாடிப்போக, வாடிப்போகாத தன்மையையுடையது, பாண்டியனின்
நான்மாடக் கூடலாகிய மதுரை நகரம்.
5.
திங்கள்
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து
கடி நகர் புனைந்து கடவுள் பேணி
படு மண முழவொடு பரூஉ பணை இமிழ
வதுவை மண்ணிய மகளிர் – அகம் 36/4-8
திங்களை உரோகிணி கூடிய குற்றமற்ற நன்னாள் சேர்க்கையில்
மண மேடையை அழகுறுத்தி, கடவுளை வழிபட்டு
ஒலிக்கும் மண முழவுடன் பெரிய முரசம் ஒலிக்க
தலைவிக்கு மணநீராட்டிய மகளிர்
6.
மன்னவன் புறந்தர வரு விருந்து ஓம்பி
தன் நகர் விழைய கூடின்
இன் உறல் வியன் மார்ப அது மனும் பொருளே – கலி 8/21-23
மன்னவன் பேணிப்பாதுகாக்க, வீட்டுக்கு வரும் விருந்தினரை உபசரித்து,
தன் மனைவி மக்கள் விரும்பும்படி, அவருடன் சேர்ந்திருப்பது,
இனிய நெருக்கமான உறவினுக்குரிய அகன்ற மார்பினையுடையவனே! அதுவே நிலைத்த பொருளும் ஆகும்
|
நகில் |
நகில் – (பெ) முலை, women’s breast
நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட – பரி 6/18
முலைகளில் அணிந்த குங்குமக் குழம்பும் மிகுதியாய் வண்டல் போன்று படிந்து தோன்ற
|
நகு |
நகு – (வி) 1. சிரி, laugh, smile
2. மலர், bloom, as flower
3. மகிழ், rejoice
4. ஒலியெழுப்பு, make a sound
5. ஏளனம் செய், mock
1.
உள்ளு-தொறும் நகுவேன் தோழி – நற் 100/1
நினைக்கும்போதெல்லாம் சிரிக்கின்றேன் தோழி!
2.
நகு முல்லை உகு தேறு வீ – பொரு 200
மலர்ந்து சிரிக்கின்ற முல்லையினையும், சிந்துகின்ற தேற்றா மலரினையும்
3.
சிறு முத்தனை பேணி சிறு சோறு மடுத்து நீ
நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ – கலி 59/20,21
ஒரு பாவைப்பிள்ளையைச் செய்து, அதனைப் பேணி, அதற்கு மணமுடிக்க விளையாட்டாகச் சோறு சமைத்து, நீ
நறிய நெற்றியையுடைய தோழியருக்கு மகிழ்ந்து பரிமாறும் நோன்பின் பயன் உனக்கு வந்து பொருந்துமோ
4.
சிலம்பு நக இயலி சென்ற என் மகட்கே – அகம் 117/9
காற்சிலம்புகள் ஒலிக்க நடந்து சென்ற என் மகளுக்கு.
5.
இலங்கு வீங்கு எல் வளை ஆய் நுதல் கவின
பொலம் தேர் கொண்கன் வந்தனன் இனியே
விலங்கு அரி நெடும் கண் ஞெகிழ்-மதி
நலம் கவர் பசலையை நகுகம் நாமே – ஐங் 200/1-4
ஒளிவிட்டுப் பெரிதாக இருக்கும் பளபளத்த வளையல்களை அணிந்தவளே! உன் ஒளி மங்கிய நெற்றி
அழகு பெறும்படியாக
பொன்னாலான தேரினையுடைய தலைவன் வந்துவிட்டான் இப்போது;
குறுக்காக ஓடும் செவ்வரிகளைக் கொண்ட நீண்ட கண்களைத் திறப்பாயாக!
உன் நலத்தையெல்லாம் கவர்ந்துகொண்ட பசலையைப் பார்த்து எள்ளி நகையாடுவோம் நாம்
|
நகை |
நகை – (பெ) 1. சிரிப்பு, புன்னகை, laughter, smile
2. ஒளி, பொலிவு, brightness, splendour
3. மகிழ்ச்சி, cheerfulness
4. மலர்ந்த பூ, blossomed flower
5. பரிகாசம், pleasantry
6. விளையாட்டு, play
7. முத்துவடம், garland of pearls
1.
நகை ஆகின்றே தோழி ————-
—————– ———————
பெரும் கடல் சேர்ப்பன் தொழுது நின்றதுவே – நற் 245/1- 12
சிரிப்பைத் தருகின்றது தோழி! —————
————————– ———————————
பெரிய கடல்பகுதியைச் சேர்ந்தவன் நம்மைத் கைகூப்பித் தொழுது நின்ற காட்சி
இழை அணி வனப்பின் இன் நகை மகளிர் – பொரு 85
இழைகளை அணிந்த இனிய புன்னகையினையுடைய மகளிர்
2.
நகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி – முல் 78
பொலிவு தங்கும் வஞ்சிமாலைக்கு நல்ல வெற்றியை நிலைபெறுத்தி
3.
குறவர் மட மகள் கொடி போல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே – திரு 101,102
குறவரின் இளமகளாகிய, கொடி போன்ற இடையையும்
மடப்பத்தையும் உடைய, வள்ளியோடே மகிழ்ச்சியைப் பொருந்திற்று
4.
எரி நகை இடை இடுபு இழைத்த நறும் தார் – பரி 13/60
நெருப்பினைப் போன்று மலர்ந்த வெட்சிப்பூவை இடையிட்டுத் தொடுத்த நறிய மாலையில்
5.
நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகை ஆக
துனி செய்து நீடினும் துறப்பு அஞ்சி கலுழ்பவள் – கலி 10/14,15
மிகவும் அதிமான மெல்லியல்பு கொண்டவளான இவள், விருப்பத்துடன் நீ விளையாட்டாகப்
பொய்க்கோபம் கொண்டு மறைந்திருந்தாலும், அந்தச் சிறு பிரிவிற்கே அஞ்சி நடுங்குகின்றவளாயிற்றே
6.
அம்ம நாணுதும் நும்மொடு நகையே – நற் 172/6
வெட்கமாயிருக்கிறது உம்மோடு இங்கு சிரித்துவிளையாட!
7.
பொலம் பிறையுள் தாழ்ந்த புனை வினை உருள் கலன்
நலம் பெறு கமழ் சென்னி நகையொடு துயல்வர – கலி 81/3,4
பொன்னால் செய்த பிறையிலிருந்து தொங்கும் சிறந்த வேலைப்பாடு அமைந்த உருண்டையான தலைச்சுட்டி
அழகு ததும்ப மணங்கமழும் தலையில் முத்துவடத்துடன் அசைந்தாட,
|
நகைப்புலவாணர் |
நகைப்புலவாணர் – (பெ) இரவலர், solicitors of gifts, supplicants
நகைப்புலவாணர் நல்குரவு அகற்றி – புறம் 387/13
இன்பச்சுவை நல்கும் அறிவினராகிய இரவலர், நண்பர் ஆகியோரின் வறுமையைப் போக்கி
|
நகைவர் |
நகைவர் – (பெ) நட்பினர், friends
நகைவர் ஆர நன் கலம் சிதறி – பதி 37/4
நீ நகைத்து உறவாடுவோர்க்கு அதிகமான நல்ல அணிகலன்களை அள்ளிக்கொடுத்து
|
நசை |
நசை – 1. (வி) விரும்பு, desire
– 2. (பெ) விருப்பம். desire
1.
இருப்பை
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ
வைகு பனி உழந்த வாவல் – நற் 279/1-3
இருப்பையின்
தேனுள்ள, பால் வற்றிய இனிய பழத்தை விரும்பி,
நிலைகொண்டிருக்கும் பனியில் வருந்திய வௌவாலின்
2.
நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர் – குறு 37/1
(உன்மீது) விருப்பம் மிகவும் உடைய தலைவர் (உன்பால்) அன்புசெய்தலும் செய்வார்
|
நச்சல் |
நச்சல் – (பெ) ஆசைகொள்ளுதல், develope a desire, have a longing for
நச்சல் கூடாது பெரும இ செலவு
ஒழிதல் வேண்டுவல் – கலி 8/19,20
பொருள் மீது ஆசை கூடாது பெருமானே!, இந்தப் பயணத்தைக்
கைவிடும்படி வேண்டுகிறேன்
|
நச்சு |
நச்சு – (வி) விரும்பு, desire, long for
நளி சினை வேங்கை நாள்_மலர் நச்சி
களி சுரும்பு அரற்றும் சுணங்கின் – சிறு 23,24
செறிந்த கிளைகளையுடைய வேங்கை மரத்தின் அன்றைய மலர் (என நினைத்து)விரும்பி,
கிளர்ச்சியுற்ற வண்டுகள் ஒலிக்கும் பூந்தாது போன்ற தேமல்களையும்
|
நடன் |
நடன் – (பெ) நட்டுவன், dance master
துடி சீர் நடத்த வளி நடன்
மெல் இணர் பூ கொடி மேவர நுடங்க – பரி 22/42,43
உடுக்கையின் தாளங்கள் எழும்ப, அதற்கு மாறாக, காற்றாகிய நட்டுவன்
மென்மையான பூங்கொத்துக்களையுடைய பூங்கொடிகளை விரும்புமாறு அசைந்தாடச் செய்ய
|
நடலை |
நடலை – (பெ) சூது, ஏமாற்று, deceit, fraud
விடலை நீ நீத்தலின் நோய் பெரிது ஏய்க்கும்
நடலைப்பட்டு எல்லாம் நின் பூழ் – கலி 95/32,33
விடலையே! நீ கைவிட்டுவிட்டதால் நோயைப் பெரிதாக எதிர்கொள்கின்றன,
உன் சூதில் ஏமாந்த உன்னுடைய அனைத்துக் காடைகளும்
|
நடவை |
நடவை – (பெ) பாதை, வழி, path, road
அகழ் இழிந்து அன்ன கான்யாற்று நடவை
வழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பி – மலை 214,215
அகழியில் இறங்குவது போன்ற, காட்டாற்று வழித்தடம்
வழுக்கும் இடங்களைக் கொண்டிருத்தலால், வழுவாமை காத்து,
|
நடுகல் |
நடுகல் – (பெ) வீரமரணம் அடைந்தவரின் நினைவாக எழுப்பப்படும் கல், hero-stone
1.
இந்த நடுகல்லில் இறந்தவரைப் பற்றிய விபரங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்
பெயர் பயம் படர தோன்று குயில் எழுத்து – அகம் 297/7,8
பக்கம் மெலிந்த அச்சம் மிக்க நடுகல்லில்
பெயரும் பீடும் விரியத் தோன்றுமாறு பொறித்த எழுத்துக்களை
2.
இந்த நடுகல்லுக்கு மயில் இறகு சூட்டுவர்.
உடுக்கு என்னும் கருவியை முழக்கி, கள்ளுடன், செம்மறியாட்டைப் பலியாகக் கொடுப்பர்.
நடுகல் பீலி சூட்டி துடிப்படுத்து
தோப்பி கள்ளொடு துரூஉ பலி கொடுக்கும்
போக்கு அரும் கவலைய புலவு நாறு அரும் சுரம் – அகம் 35/8-10
நடுகல்லில் மயில்தோகைகளை அணிவித்து, உடுக்கு அடித்து,
நெல்லால் ஆக்கிய கள்ளோடு செம்மறியாட்டையும் பலி கொடுக்கும்
செல்வதற்கு இயலாத கவர்த்த வழிகளையுடைய புலால் நாறும் அரிய சுரநெறியில்
3.
இந்த நடுகற்களுக்கு முன்பாக வேலினை ஊன்றி வைத்து, கேடகத்தைச் சார்த்திவைப்பர்.
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் – அகம் 131/10-12
பெயரும் சிறப்பும் பொறித்து, வழிதோறும்
மயில்தோகையினைச் சூட்டிய விளங்கும் நிலையினையுடைய நடுகல்லின்முன்
ஊன்றிய வேலும் அதன்கண் சார்த்திய கேடகமும் பகைவர் போர்முனையையிருப்பை ஒக்கும்.
4.
இந்த நெடுகல்லின் முன் காலையில் மலர்தூவி வணங்குவர்.
சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர்
உயர் பதுக்கு இவர்ந்த ததர்க்கொடி அதிரல்
நெடு நிலை நடுகல் நாள் பலி கூட்டும் – அகம் 289/1-3
வில்லில் கோத்த கணையால் வீழ்ந்து இறந்த வழிச்செல்வோரின் உடலை மூடிய
உயர்ந்த கற்குவியல்களில் ஏறிப்படர்ந்த நெருங்கிய கொடியாகிய காட்டு மல்லிகையின் பூக்கள்
உயர்ந்த நிலையினையுடைய நடுகல்லின் காலைப்பலிக்குக் கூட்டப்பெறும்.
|
நடுக்கு |
நடுக்கு – 1. (வி) நடுங்கு, shiver, tremble
– 2. (பெ) நடுக்கம், trmbling
1.
உள்ளம் உளை எழ ஊக்கத்தான் உள்_உள்
பரப்பி மதர் நடுக்கி பார் அலர் தூற்ற
கரப்பார் களி மதரும் போன்ம் – பரி 10/66-68
உள்ளத்தில் துன்பம் உண்டாக, கள்வெறியை மறைக்க முயலும் முயற்சியால் அதை மேலும் மேலும்
பரப்பி, தம் செருக்குக்காக நடுங்கி, உலகம் பலவாறாய்த் தூற்ற,
தம்முள் மறைக்கும் கள்வெறியைப் போன்றது, முன்னவர் கொண்ட காமவெறி
2.
வெல் புகழ் மன்னவன் விளங்கிய ஒழுக்கத்தால்
நல் ஆற்றின் உயிர் காத்து நடுக்கு அற தான் செய்த
தொல்_வினை பயன் துய்ப்ப துறக்கம் வேட்டு எழுந்தால் போல் – கலி 118/1-3
வெற்றிப்புகழ் மிக்க ஒரு மன்னவன் தான் கைக்கொண்டுள்ள நல்லொழுக்கத்தால்,
நல்ல நெறிகளின்படி ஆட்சிசெய்து உயிர்களைக் காத்து மனத்தினில் நடுக்கமின்றி, தான் செய்த
முந்தைய நல்வினைகளின் பயன்களைத் துய்ப்பதற்கு, சுவர்க்கத்தை விரும்பிப் போவதைப் போல,
|
நடுநாள் |
நடுநாள் – (பெ) நடுயாமம், நள்ளிரவு, midnight
உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள் – நற் 68/8
வலிய இடி முழங்கும் பாதி இரவாகிய நடுயாமத்தில்
|
நடுவண் |
நடுவண் – (பெ.அ/வி.அ) மத்தியில், இடையில், in the centre
பல் மீன் நடுவண் பால் மதி போல – சிறு 219
பல விண்மீன்களுக்கு நடுவிலிருந்த பால்(போலும் ஒளியை உடைய) திங்கள் போன்று
மடி வாய் தண்ணுமை நடுவண் சிலைப்ப – பெரும் 144
(தோலை)மடித்துப் போர்த்த வாயையுடைய மத்தளம் (தங்களுக்கு)நடுவில் முழங்க
|
நடுவு |
நடுவு – (பெ) 1. இடை, middle position
2. நடுநிலை, impartiality
1.
நடுவு நின்று இசைக்கும் அரி குரல் தட்டை – மலை 9
(தாளத்திற்கு)இடைநின்று ஒலிக்கும் (தவளையின்)அரித்தெழும் ஓசையையுடைய தட்டைப்பறையும்
2.
நடுவு நின்ற நன் நெஞ்சினோர் – பட் 207
நடுவுநிலையென்னும் குணம் நிலைபெற்ற நல்ல நெஞ்சினையுடையோர்
|
நடைபயில் |
நடைபயில் – (வி) 1. நடை பழகு, learn to walk
2. நளினமாக நட, walk gracefully
1.
தேர் நடைபயிற்றும் தே மொழி புதல்வன் – நற் 250/3
விளையாட்டுவண்டிகொண்டு நடைபயின்றுகொண்டிருந்த இனிய மொழிபேசும் என் புதல்வனின்
2.
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி
அம் சில் ஓதி இவள் உறும்
பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே – நற் 324/7-9
ஆடும்போது பந்தை உருட்டுபவள் போல ஓடி,
அழகிய சிலவாகிய கூந்தலையுடைய இவளின் மிகுந்த
பஞ்சு போன்ற மென்மையான அடிகளால் நளினமாக நடந்துவருகின்றாள்.
|
நட்டவர் |
நட்டவர் – (பெ) நட்புக்கொண்டவர், friends
நட்டவர் குடி உயர்க்குவை – மது 131
(உன்னுடன்)நட்புக் கொண்டவருடைய குடியை உயர்த்துவாய்
|
நட்டார் |
நட்டார் – (பெ) நட்புக்கொண்டவர், friends
கூற்றம் வரினும் தொலையான் தன் நட்டார்க்கு
தோற்றலை நாணாதோன் குன்று – கலி 43/10,11
கூற்றுவனே வந்தாலும் தோல்வியடையானாய், தன்னிடம் நட்புக்கொண்டவர்க்காகத்
தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கு நாணாதவனாகிய நம் தலைவனின் குன்றினில்
|
நட்டோர் |
நட்டோர் – (பெ) நட்புக்கொண்டவர், friends
நட்டோர் உவப்ப நடை பரிகாரம்
முட்டாது கொடுத்த முனை விளங்கு தட கை – சிறு 104,105
நட்புச் செய்தோர் மனமகிழும்படி, வாழ்க்கையை நடத்த வேண்டுவனவற்றைக்
குறையாமல் கொடுத்த, போர்முனையில் விளங்கும் பெருமையுடைய கை
|
நணி |
நணி – (பெ) நண்மை, அண்மை, சமீபம், nearness, proximity
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப – நற் 364/8
குளிர்ந்த மணிகளின் இனிய ஓசை ஊருக்கு அருகே ஒலிக்க
|
நண்ணு |
நண்ணு – (வி) 1. அணுகு, கிட்டு, come close
2. பொருந்து, ஒன்றிக்கல, be attachd to, united with
1.
அத்தம் நண்ணிய அம் குடி சீறூர் – அகம் 9/10
காட்டுப்பாதை அருகில் செல்லும் அழகிய குடிகளை உடைய சிற்றூரில்,
2.
நாணும் உட்கும் நண்ணு_வழி அடைதர – குறி 184
நாணமும் அச்சமும் (எய்துதற்குரிய இடம்பெற்று)அவ்வழி (வந்து)தோன்றியதால்
|
நண்பு |
நண்பு – (பெ) 1. நட்பு, friendship, amity
2. அன்பு, love, affection
1.
இகழ்வு இலன் இனியன் யாத்த நண்பினன்
புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே – புறம் 216/6,7
அவன் என்னை என்றும் இகழ்ச்சி இலனாய இனிய குணங்களையுடையவன்,பிணித்த நட்பினையுடையவன்
புகழ் அழிய வரும் பொய்ம்மையை விரும்பான்
2.
பாடு இமிழ் பனி நீர் சேர்ப்பனொடு
நாடாது இயைந்த நண்பினது அளவே – நற் 378/11,12
ஒலி முழங்கும் குளிர்ந்த நீர்ப்பெருக்கையுடைய கடற்கரைத்தலைவனோடு
சிந்திக்காமல் உடன்பட்ட அன்பின் அளவு
|
நண்மை |
நண்மை – (பெ) அண்மை, சமீபம், proximity, nearness
நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன் – புறம் 380/10
நட்புக்கொண்டு நேர்படுபவர்க்கு அவரது உள்ளங்கை போல அண்மையானவன்.
|
நத்து |
நத்து – (பெ) சங்கு, நத்தை,
நத்தொடு நள்ளி நடை இறவு வய வாளை – பரி 10/85
சங்கு, நண்டு, நடக்கின்ற இறால், வலிய வாளைமீன்
|
நந்தர் |
நந்தர் – (பெ) மகத நாட்டு மன்னர்,
The kings who ruled the Magadha country in North India during 4th C B.C
நந்தர் வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு அரச மரபினர் ஆவர். இவர்கள் கிமு 4-ஆம் நூற்றாண்டுகளில் மகத நாட்டை
ஆண்டுவந்தனர். நந்த மரபின் கடைசி மன்னன் தன நந்தன் என்பவன் ஆவான்.
கங்கையாற்றின் அடியில் பெரும் செல்வத்தை மறைத்து வைத்ததாக இங்குக் குறிப்பிடும் நந்தன் இவன் ஆகலாம்.
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்
சீர் மிகு பாடலி குழீஇ கங்கை
நீர் முதல் கரந்த நிதியம் கொல்லோ – அகம் 265/4-6
பல்வகைப் புகழும் மிக்க போர் வெல்லும் நந்தர் என்பாரது
சிறப்பு மிக்க பாடலிபுரத்திலே திரண்டிருந்து கங்கையின்
நீர் அடியில் மறைத்துவைத்த செல்வமோ?
|
நந்தி |
நந்தி – (பெ) நந்தியாவட்டம், East Indian rosebay, Taberxmontana coronaria
நந்தி நறவம் நறும் புன்னாகம் – குறி 91
|
நந்து |
நந்து – 1. (வி) 1. கெடு, பொலிவிழ, நலனழி, பதனழி, decay, become spoiled, waste, perish
2. அணை, அவி, be extinguished, put out, as a lamp
3. வளர், பெருகு, grow, increase, wax
4. தழை, flourish, grow well
5. வளமையடை, prosper
6. ஒளிர், பொலிவடை, turn bright, become lustrous
– 2. (பெ) நத்தை, snail
1.1
பொன் செய் பாண்டில் பொலம் கலம் நந்த
தேர் அகல் அல்குல் அம் வரி வாட
இறந்தோர் மன்ற தாமே – ஐங் 316/1-3
பொன்னாற் செய்த வட்டக் காசுகளைக் கோத்த பொன்னணிகள் பொலிவிழக்கத்
தேர் போன்ற அகலமுடைய அல்குலில் உள்ள அழகிய வரிகள் வாடிப்போகச்
சென்றுவிட்டார் தாமே
1.2.
ஐவனம் காவல் பெய் தீ நந்தின்
ஒளி திகழ் திருந்து மணி நளி இருள் அகற்றும் – புறம் 172/6,7
ஐவன நெல்லைக் காப்பார் காவலுக்கு இடப்பட்ட தீ அவ்விடத்து அவிந்துபோனவிடத்து
ஒளி விளங்கும் திருந்தின மாணிக்கம் செறிந்த இருளைத் துரக்கும்
1.3.
தீது இலான் செல்வம் போல் தீம் கரை மரம் நந்த – கலி 27/2
தீதற்றவனின் செல்வம் படிப்படியாக வளர்வது போல் இனிய கரைகளில் மரங்கள் சிறிதுசிறிதாகத் துளிர்க்கவும்
1.4.
கானம் நந்திய செம் நில பெரு வழி – முல் 97
காடு தழைத்த செம்மண் பெருவழியில்
1.5.
நால் வேறு நனம் தலை ஓராங்கு நந்த – பதி 69/16
நான்காக வேறுபட்டு நிற்கும் அகன்ற இடங்களாகிய திசைகள் ஒன்றுபோல ஈட்டம் பெற
1.6.
பெயின் நந்தி வறப்பின் சாம் புலத்திற்கு பெயல் போல் யான்
செலின் நந்தி செறின் சாம்பும் இவள் – கலி 78/19,20
பெய்தால் செழிப்புற்று, பொய்த்தால் உலர்ந்துபோகும் விளைநிலத்திற்கு மழையைப் போல, நான்
சென்றால் பொலிவடைந்து, செல்லாமல் வெறுத்தால் வாடிப்போவாள் இவள்
2.
கதிர் கோட்டு நந்தின் சுரி முக ஏற்றை – புறம் 266/4
கதிர்போலும் கோட்டையுடைய நத்தையினது சுரிமுகத்தையுடைய ஏற்றை
|
நனம் |
நனம் – (பெ) பரப்பு, அகற்சி, wide extent, expansiveness
இந்த நனம் என்ற சொல் கலித்தொகையில் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் நனம் தலை
என்ற தொடராகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
நாள்_அங்காடி நனம் தலை கம்பலை – மது 430
நாளங்காடியையுடைய அகன்ற இடத்தில் (எழுந்த)பெரிய ஆரவாரமும்
நனம் தலை வினைஞர் கலம் கொண்டு மறுக – மது 539
வளம் தலைமயங்கிய நனம் தலை மறுகின் – பட் 193
நாடு காண் நனம் தலை மென்மெல அகன்-மின் – மலை 270
சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க – நற் 7/1
நனம் தலை கானத்து இனம் தலைப்பிரிந்த – குறு 272/3
அழல் அவிர் நனம் தலை நிழல் இடம் பெறாது – ஐங் 326/1
வளம் பல நிகழ்தரு நனம் தலை நன் நாட்டு – பதி 15/17
இனம் தலைமயங்கிய நனம் தலை பெரும் காட்டு – அகம் 39/12
பாழ் செய்தனை அவர் நனம் தலை நல் எயில் – புறம் 15/3
கல் உயர் நனம் சாரல் கலந்து இயலும் நாட கேள் – கலி 52/6
பாறைகள் உயரே நிற்கும் அகன்ற மலைச்சாரலில் கூடித்திரியும் நாடனே கேட்பாயாக!
|
நனி |
நனி – (வி.அ) மிகுதியாக, அதிகமாக, abundantly, excessively
இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி – திரு 286
இனியனவும் நல்லனவும் ஆகிய மிக்க பலவற்றை வாழ்த்தி
நனி சேய்த்து அன்று அவன் பழ விறல் மூதூர் – மலை 487
(இன்னும்)வெகு தூரத்திலிருப்பதன்று; — (அவன் பழமையான சிறப்பியல்புகள் கொண்ட தொன்மையான ஊர்
|
நனை |
நனை – 1. (வி) 1. ஈரமாகு, become wet, be moistened
2. அரும்பு, bud
3. தோன்று, தோற்று, appear, manifest
– 2. (பெ) 1. பூ அரும்பு, flower-bud
2. கள், toddy
1.1
தூவலின் நனைந்த தொடலை ஒள் வாள் – ஐங் 206/3
மழைத் தூறலில் ஈரமாகிப்போன மாலை போன்ற ஒளிவிடும் வாளையும்
1.2
நனைத்த செருந்தி போது வாய் அவிழ – அகம் 150/9
அரும்பிய செருந்தியின் போதுகள் இதழ்விரிய
1.3
மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று – சிறு 67
மகிழ்ச்சியைத் தோற்றுகின்ற தெருவினையுடைய மதுரை(யைத் தரும் கொடை)யும் சிறிதே
2.1
பைம் நனை அவரை பவழம் கோப்பவும் – சிறு 164
பசிய அரும்புகளையுடைய அவரை பவழம்(போல் பூக்களை முறையே) தொடுக்கவும்
2.2
சாறு படு திருவின் நனை மகிழானே – பதி 65/17
திருவிழாக் காலத்து செல்வத்தைப் போன்ற கள்ளுண்ணும் இன்ப இருக்கையின்போது
|
நன்னன் |
நன்னன் – (பெ) வேளிர்குடியைச் சேர்ந்த பல மன்னர்கள், The name of many kings belonging to vELir lineage.
சங்ககாலத்தில் நன்னன் என்னும் பெயருடன் பல மன்னர்கள் ஆங்காங்கே ஆண்டுவந்தனர்.
அவர்கள் வேளிர் குடியைச் சேர்ந்தவர்கள்.
மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த நாடுகளில் அவர்கள் ஆண்ட நாடுகள் அமைந்திருந்தன
1.
பேர் இசை நன்னன் பெரும் பெயர் நன்_நாள் – மது 618
பெரும் புகழைக் கொண்ட இந்த நன்னனின் பிறந்தநாள் மதுரையில் விழாவாகக் கொண்டாடப்பட்டது.
2.
நன்னன் சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு – மலை 64
இவன் மலைபடுகடாம் பாடலின் பாட்டுடைத் தலைவன். இவன் ஆண்ட நாடு பல்குன்றத்துக் கோட்டம்
எனப்படும். அதனால் இவன் பல்குன்றக் கோட்டத்து செங்கண்மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் எனப்படுவான்.
இவன் ஒரு பெரிய கொடை வள்ளல் என்கிறார் இவனைப்பாடிய இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்
பெருங்கௌசிகனார்.
3.
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன் – நற் 270/9
வேந்தர் என்று சிறப்பிக்கப்படுவோர் சேர, சோழ, பாண்டியர்.
அவர்களை முறியடித்து அவர்களது குதிரை மயிரால் கயிறு திரித்துப் பயன்படுத்திக்கொண்டவன் இவன்.
4.
பொன் படு கொண்கான நன்னன் நன் நாட்டு
ஏழிற்குன்றம் பெறினும் பொருள்_வயின்
யாரோ பிரிகிற்பவரே – நற் 391/6-8
இவன் ஏழில்குன்ற அரசன்.
நன்னனின் கொண்கான நாட்டில் ஏழில் குன்றம் இருந்தது. அது பொன் பாதுகாக்கப்பட்ட இடம்.
பொருள் தேடச் சென்றவர் அந்தக் குன்றத்தையே ஈட்டினாலும் அங்குத் தங்கமாட்டார் என்று தோழி
தலைவிக்குச் சொல்கிறாள்.
கொண்கான நன்னன் போர்முனைகள் பலவற்றை வென்றவன். வென்று கொண்டுவந்த பொருளைத்,
தன்னை நாடிப் பாடிவரும் பாணர் கூட்டம் உற்றார் உறவினருடன் நிறைவாக வாழ,
அவர்கள் கேட்காவிட்டாலும், தான் உள்ளப் பெருமிதம் பொங்கி, ஊற்றுப்போல் சுரந்து ஊட்டியவன்.
அத்துடன் ஞெமன்கோல்(எமனின் தராசுக்கோல்) போல் ‘செயிர்தீர் செம்மொழி’ பேசும்படியான வாக்குத் தவறாதவன்.
ஞெமன்ன்
தெரிகோல் அன்ன செயிர் தீர் செம்மொழி
உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே
உரன் மலி உள்ளமொடு முனை பாழ் ஆக
அரும் குறும்பு எறிந்த பெரும் கல் வெறுக்கை
சூழாது சுரக்கும் நன்னன் நன் நாட்டு
ஏழில் குன்றத்து கவாஅன் – அகம் 349/3-9
5.
பெண் கொலை புரிந்த நன்னன் போல – குறு 292/5
இவன் பெண்கொலை புரிந்த நன்னன் எனப்படுவான். இவனது காவல்மரம் – மா மரம்.
இந்த நன்னனது காவல்மரத்து மாம்பழம் ஒன்றை ஆற்றுவெள்ளம் ஆடித்துக்கொண்டுவந்தது.
அது இன்னாருடையது என அறியாமல் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த கோசர்குடிப் பெண் அதனை
எடுத்துத் தின்றுவிட்டாள். இதனை அறிந்த நன்னன் அந்தப் பெண்ணுக்குக் கொலைதண்டனை விதித்தான்.
கோசர்குடியினர் நன்னனிடம் முறையிட்டனர். அவனது மாம்பழத்தைத் தின்ற தவற்றுக்காக அவளது
எடைக்கு எடை பொன்னும், 81 யானைகளும் தண்டமாக ஏற்றுக்கொண்டு அவளை விட்டுவிடும்படி மன்றாடினர்.
நன்னன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்காமல் அவளைக் கொன்றுவிட்டான்.
அதனால் புலவர் இவனைப் ‘பெண்கொலை புரிந்த நன்னன்’ எனப்பட்டான்.
பாழிப்பறந்தலை என்னுமிடத்தில் போர். ஆய் எயினனை மிஞிலி பிழைக்க முடியாத அளவுக்கு வெட்டிப்
புண்ணாக்கினான். ஆய் எயினன் வேளிர்குடி வீரன். நன்னன் வேளிர் குடி அரசன். மிஞிலி கோசர் குடி வீரன்.
மிஞிலியைத் தூண்டியவன் நன்னன். ஆய் எயினன் அதிகனைப் போலப் பறவைகளின் பாதுகாவலன்.
போர்க்களத்தில் தம்மைப் பாதுகாத்த ஆய் எயினன் காயம் பட்டுக் கிடப்பதைப் பார்த்த பறவைகள்
அவனது புண்களைக் கொத்தித் தின்னாமல் வானத்தில் சிறகடித்துப் பறந்து அவனுக்கு நிழல் செய்தன.
இந்தக் காட்சியைக் காணக்கூட நன்னன் வரவில்லை.
இதனைக் கண்ட வேளிர்குடி மகளிர் ஓலமிட்டு அழுதனர். அகுதை பாண்டியன் கால்வழியில் வந்த சிற்றரசன்.
இவன் வேளிர்குடி மகளிரின் துன்பத்தைப் போக்கினான்.
வெண் கோட்டு
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்
அளி இயல் வாழ்க்கை பாழி பறந்தலை
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்து என புள் ஒருங்கு
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
ஒண் கதிர் தெறாமை சிறகரின் கோலி
நிழல் செய்து உழறல் காணேன் யான் என
படு_களம் காண்டல் செல்லான் சினம் சிறந்து
உரு வினை நன்னன் அருளான் கரப்ப
பெரு விதுப்பு உற்ற பல் வேள் மகளிர்
குரூஉ பூ பைம் தார் அருக்கிய பூசல்
வசை விட கடக்கும் வயங்கு பெரும் தானை
அகுதை கிளைதந்து ஆங்கு – அகம் 208/3-18
கொடி தேர்
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்து என
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்
அஞ்சல் என்ற ஆஅய் எயினன்
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி
தன் உயிர் கொடுத்தனன் – அகம் 396/1-6
கோசர் சூழ்ச்சி செய்து நன்னனது மாமரத்தை வெட்டிப் பழிதீர்த்துக்கொண்டனர்.
நன்னன்
நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய
ஒன்றுமொழி கோசர் போல – குறு 73/2-4
6.
சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலோடு போரிட்ட நன்னன்
இவனது தலைநகரான பெருவாயிலில் கடம்ப மரங்கள் மிகுதியாக இருந்தன.
அதனால் இந்த ஊரைக் கடம்பின் பெருவாயில் என்றே குறிப்பிடலாயினர்.
சேரருக்கும் இந்த நன்னனுக்கும் நெடுநாள் பகை.
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் இவனோடு நீண்டநாள் போரிட்டு இந்த நன்னனின் ஆற்றலை அழித்தான்.
அத்துடன் அவனது காவல் மரமான வாகை மரத்தையும் வெட்டி வீழ்த்தினான். [16]
பொன் அம் கண்ணி பொலம் தேர் நன்னன்
சுடர் வீ வாகை கடி முதல் தடிந்த
தார் மிகு மைந்தின் நார்முடிச்சேரல் – பதி 40/14-16
வாகைப்பெருந்துறை என்னுமிடத்தில் போரிட்டு நன்னன் போர்களத்திலேயே மாண்டான்
இரும் பொன் வாகை பெருந்துறை செருவில்
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள்
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் – அகம் 199/19-22
7.
சேரன் இளஞ்சேரல் இரும்பொறையோடு போரிட்ட நன்னன்
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் பெருவாயில் நன்னனை வென்று அவன் காவல்மரத்தை வெட்டி வீழ்த்தி
அவனது பரம்பரைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் நன்னன் பரம்பரை மீண்டும் தலைதூக்கிச் சேரர் ஆட்சிக்கு
இன்னல் விளைவித்துவந்தது. எனவே இளஞ்சேரல் இரும்பொறை அவனது காவல்மரம் வாகையை வெட்டி வீழ்த்தி
அவர்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்தினான்
சுடர் வீ வாகை நன்னன் தேய்த்து – பதி 88/10
8.
பாரத்துத் தலைவன் ஆர நன்னன்
பாரம் என்பது இவன் நாடு. பாழி இவன் தலைநகர். ஆரம் என்னும் சந்தனம் இவனது காவல்மரம்
பாரத்து தலைவன் ஆர நன்னன்
ஏழில் நெடு வரை பாழி சிலம்பில் – அகம் 152/12,13
இயல்தேர் நன்னன் பொன்படு மலையின் கவான் (உச்சிமலைச்சரிவு) பகுதியையும் ஆண்டுவந்தான்.
இன் களி நறவின் இயல் தேர் நன்னன்
விண் பொரு நெடு வரை கவாஅன்
பொன் படு மருங்கின் மலை – அகம் 173/16-18
பாழிநகர நன்னன் சூழி என்னும் முகப்படாம் அணிந்த யானைமேல் செல்லும் பழக்கம் உடையவன்.
இவனது தலைநகர் மிகுந்த கட்டுக்காவலை உடையது.
சூழி யானை சுடர் பூண் நன்னன்
பாழி அன்ன கடி உடை வியல் நகர் – அகம் 15/10,11
கறை அடி யானை நன்னன் பாழி – அகம் 142/9
9.
சோழனோடு போரிட்ட நன்னன்.
இந்த நன்னன் எழுவர் கூட்டணியில் ஒருவனாயிருந்து பெரும்பூட்சென்னியை எதிர்த்தவன்.
கட்டூர்ப் போரில் சோழர்படையின் தலைவன் பழையனை இந்த எழுவர் கூட்டணி கொன்றது.
சென்னி படைக்குத் தலைமை தாங்கிப் போரிட்டபோது திரும்பி ஓடிவந்துவிட்ட ஆறு பேருள் இவனும் ஒருவன்.
நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி
துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர்
பருந்து பட பண்ணி பழையன் பட்டு என
கண்டது நோனான் ஆகி திண் தேர்
கணையன் அகப்பட கழுமலம் தந்த
பிணையல் அம் கண்ணி பெரும் பூண் சென்னி
அழும்பில் அன்ன – அகம் 44/7-15
இவன் ‘கான்அமர் நன்னன்’ என்றும் கூறப்படுபவன்.
சோழன் பெரும்படையுடன் போர்க்களம் புகுந்தபோது அவனை எதிர்த்துப் போரிட முடியாமல் ஏந்திய வேலுடன்
தன் மூங்கில் காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டான்.
வினை தவ பெயர்ந்த வென் வேல் வேந்தன்
முனை கொல் தானையொடு முன் வந்து இறுப்ப
தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை
ஆற்றாமையின் பிடித்த வேல் வலி
தோற்றம் பிழையா தொல் புகழ் பெற்ற
விழை_தக ஓங்கிய கழை துஞ்சு மருங்கின்
கான் அமர் நன்னன் போல – அகம் 392/21-27
10.
நன்னன் வேண்மான்
இவன். வியலூர் அரசன். மாமூலனார் இவனது நாட்டில் சிறந்து விளங்கிய வியலூர் அழகைத்
தன் பாடல்தலைவியின் ஆகத்துக்கு உவமையாகக் காட்டியுள்ளார்
நறவு_மகிழ் இருக்கை நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூர் அன்ன நின்
அலர் முலை ஆகம் – அகம் 97/12-14
11.
நன்னன் ஆய்
புலவர் பரணர் தம் பாடல்தலைவியின் கூந்தல் இவன் நாட்டில் அருவி கொழிக்கும் முன்றுறையில் வளர்ந்துள்ள
பிரம்பு போல் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
இவன் ஆய் வள்ளலின் தந்தை என்பது பெயரமைதியால் உணரக் கிடக்கிறது.
ஆய்நாடு பொதியமலைநாடு என்பதும், அருவி குற்றாலம் அருவி எனபதும் பல்வேறு பாடல்களை இணைத்து
ஒப்புநோக்கும்போது புலனாகும்.
தொல் நசை சாலாமை நன்னன் பறம்பில் – அகம் 356/8
அருவி ஆம்பல் கலித்த முன்றுறை
நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன
மின்னீர் ஓதி – அகம் 356/18-20
12.
நன்னன் உதியன்
இவன் மேலே கண்ட பாரத்துத் தலைவன் ஆர நன்னனின் மகன் ஆவான்.
தொன்முதிர் வேளிர் தாம் சேமித்த பொற்குவியல்களை இவனுடைய பாழிநகரில் சேமித்துப் பாதுகாத்துவந்தனர்.
பரணர் பாடிய இந்தப் பாடலின் தலைவன் தன் காதல்தலைவியைப் பற்றி நினைக்கும்போது பாழிநகரில்
வேளிர் பாதுகாக்கும் பொன்னைவிட அரியள் எனக் குறிப்பிடுகிறான்
நன்னன் உதியன் அரும் கடி பாழி
தொன் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன்னினும் அருமை – அகம் 258/1-3
|
நன்னராட்டி |
நன்னராட்டி – (பெ) நல்ல பெண், a girl with good virtues
நாடு பல இறந்த நன்னராட்டிக்கு
ஆயமும் அணி இழந்து அழுங்கின்று – அகம் 165/6,7
பல நாடுகளைக் கடந்து சென்ற அந்த நல்லவளுக்காக
தோழியர் கூட்டம் பொலிவிழந்து வருந்துகின்றது
|
நன்னராளர் |
நன்னராளர் – (பெ) நல்லவர், good people
நனை மகிழ்
நன்னராளர் கூடு கொள் இன் இயம் – அகம் 189/12,13
கள்ளின் களிப்பினையுடைய
நல்ல பாணர்களது ஒன்றுகூடி ஒலிக்கும் இனிய வாச்சியங்கள்
|
நன்னர் |
நன்னர் – (பெ) நன்மை, goodness, that which is good
இன்னே வருகுவர் தாயர் என்போள்
நன்னர் நன் மொழி கேட்டனம் – முல் 16,17
“இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவர் (உம்)தாயர்” என்று கூறுகின்றோளுடைய
நன்மையான நற்சொல் (நாங்கள்)கேட்டோம்,
|
நமர் |
நமர் – (பெ) 1. நம்மவர், நம் தலைவர், our man,
2. நம்முடைய உறவினர், our relations
3. நம்மைச் சார்ந்தவர், persons of our party
1.
குன்று தலைமணந்த கானம்
சென்றனர்-கொல்லோ சே_இழை நமரே – குறு 281/5,6
மலைகள் பொருந்திய காட்டினில்
சென்றுவிட்டாரோ? சிவந்த அணிகலன்கள் அணிந்தவளே! நம்தலைவர்
2.
வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப
நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் அவருடன்
நேர்வர்-கொல் வாழி தோழி – நற் 393/9-11
நம்மை மணம்பேச வந்த வாய்மையான செயலுக்கேற்ப
நம்மவர்கள் பெண்கொடுக்க இசைந்தால், அவருடன்
இசைவாகப் பேசுவார்களோ? வாழ்க, தோழியே
3.
அதனால் நமர் என கோல் கோடாது
பிறர் எனக்குணம் கொல்லாது – புறம் 55/13,14
அதனால், இவர் நம்மைச் சார்ந்தவர் செங்கோல் வளையாது,
இவர் நமக்குப் அயலோர் என்று அவர் நற்குணங்களைக் கெடாது
|
நம்புண்டல் |
நம்புண்டல் – (பெ) நம்புதல், beleiving
நின் இன்றி அமையலேன் யான் என்னும் அவன் ஆயின்
அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிது ஆயின் – கலி 47/9,10
நீ இல்லாமல் உயிர்வாழேன் நான் என்கிறான் அவன், எனினும்
அவனுடைய சொல்லை நம்புவது எவர்க்குமே இங்கு அரிதாகும்,
|
நய |
நய – (வி) 1. விரும்பு, desire, long for
2. பாராட்டு, போற்று, adore, appreciate
1.
நயந்த காதலர் கவவு பிணி துஞ்சி – மது 663
(தாங்கள்)விரும்பின (தம்)கணவருடைய முயக்கத்தின் பிணிப்பால் துயில்கொண்டு
2.
அளியன்தானே முது வாய் இரவலன்
வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து – திரு 284,285
‘அருள்புரியத் தகுந்தவன் (இந்த)அறிவு வாய்க்கப்பெற்றோனாகிய இரவலன்,
வந்துளன் பெருமானே, உன்னுடைய வளவிய புகழினைப் போற்றி’
|
நயனம் |
நயனம் – (பெ) கண், eye
ஐ_இருநூற்று மெய் நயனத்தவன் மகள் மலர் உண்கண் – பரி 9/9
ஆயிரம் கண்களை உடலில் கொண்ட இந்திரனின் மகளாகிய தேவயானியின் மலர் போன்ற மையுண்ட கண்கள்
|
நயன் |
நயன் – (பெ) – பார்க்க – நயம்
1. கனிவு, இனிமை, pleasantness, sweetness,
2. நயப்பாடு, சிறப்பு, வளம், excellence, superiority, fertility
3. பண்பு நலம், நகரிகம், civility
4. அன்பு, பரிவு, love, tenderness
5. நன்மை, goodness
6. அருள், grace
1.
கண்டவர் இல் என உலகத்துள் உணராதார்
தங்காது தகைவு இன்றி தாம் செய்யும் வினைகளுள்
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர்
நெஞ்சத்து குறுகிய கரி இல்லை ஆகலின்
வண் பரி நவின்ற வய_மான் செல்வ
நன்கு அதை அறியினும் நயன் இல்லா நாட்டத்தால்
அன்பு இலை என வந்து கழறுவல் – கலி 125/1-7
தாம் செய்யும் தவறுகளை உலகத்தில் கண்டவர் யாரும் இல்லை என்று எண்ணிக்கொண்டு, அறியாதவர்கள்
அவற்றைச் செய்யக்கூடாது என்று எண்ணாமலும், அவற்றைத் தடுப்பார் யாரும் இன்றியும், செய்கின்ற செயல்களுள்
தாம் நெஞ்சறியச் செய்த கொடிய தீய செயல்களைப் பிறர் அறியாமல் மறைத்தாலும், அதனை அறிந்திருக்கிறவர்களில்
தம்முடைய நெஞ்சத்தைக் காட்டிலும் நேரிடையான சான்று வேறு இல்லையாதலால்,
வளமான ஓட்டத்தில் பயிற்சியையுடைய வலிமை மிக்க குதிரையையுடைய செல்வனே!
அதனை நான் நன்கு அறிந்திருந்தாலும், கனிவற்ற உன் போக்கினால்
அன்பில்லாதவன் நீ என்று உன்னிடமே வந்து கடிந்துரைக்கிறேன்,
2.
கயன் அற வறந்த கோடையொடு நயன் அற
பெரு வரை நிவந்த மருங்கில் – அகம் 291/4,5
குளங்கள் நீர் அற வற்றிய கோடையால் வளம் ஒழிய
பெரிய மலை உயர்ந்த பக்கத்தில்
3.
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட நீ 5
நல்காய் ஆயினும் நயன் இல செய்யினும்
நின் வழி படூஉம் என் தோழி – நற் 247/5-7
உச்சி உயர்ந்த நெடிய மலையில் தவழும் நாடனே! நீ
நீ அன்புசெய்யாவிட்டாலும், பண்புடைமை இல்லாதவற்றைச் செய்தாலும்
உன் வழியில்தான் நடக்கிறாள் என் தோழி;
4.
நம் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு – நற் 165/7
நம்மை மணங்கொள்ளாத அன்பில்லாதவரின் நட்பு
5.
நல் யாழ் நவின்ற நயன் உடை நெஞ்சின் – திரு 141
நல்ல யாழின் இசையில் பயின்ற நன்மையையுடைய நெஞ்சால்
6.
நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்க
கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல – கலி 8/1,2
நடுவுநிலைமையைத் துறந்து, அதனை அகற்றிப்போட்ட அருளற்ற அமைச்சன் வழிகாட்ட,
கொடுமை செய்வதையே மேற்கொண்ட மன்னனின் கொடுங்கோலாட்சியைப் போல
|
நயப்பு |
நயப்பு – (பெ) விருப்பம், desire
பயப்பு என் மேனியதுவே நயப்பு அவர்
நார் இல் நெஞ்சத்து ஆரிடையதுவே – குறு 219/1,2
பசலைநோய் என் மேனியில் இருக்கிறது; விருப்பமோ
தலைவருடைய அன்பில்லாத நெஞ்சமெனும் அடையமுடியாத இடத்தில் உள்ளது.
|
நயம் |
நயம் – (பெ) 1. இனிமை, sweetness
2. நயப்பாடு, சிறப்பு, excellence, superiority
3. கொள்கை, நியதி, policy, priciple
4. அன்பு, பரிவு, love, tenderness
5. நன்மை, goodness
6. அருள், grace
1.
நைவளம் பழுநிய நயம் தெரி பாலை – சிறு 36
நட்டபாடை என்னும் பண் முற்றுப்பெற்ற இனிமை தெரிகின்ற பாலை என்னும் பண்ணை
2.
நரம்பின் முரலும் நயம் வரு முரற்சி
விறலியர் – மது 217,218
(யாழ்)நரம்பைப் போல் பாடும் நயப்பாடு தோன்றும் பாட்டினையுடைய
விறலியர்
3.
ஊர் காப்பாளர் ஊக்கு அரும் கணையினர்
தேர் வழங்கு தெருவில் நீர் திரண்டு ஒழுக
மழை அமைந்து உற்ற அரைநாள் அமயமும்
அசைவு இலர் எழுந்து நயம் வந்து வழங்கலின் – மது 647-650
ஊர்க் காவலர்கள், தப்புதற்கு அரிய அம்பினையுடையவராய்;
தேர் ஓடும் தெருவில் நீர் திரண்டு ஒழுகும்படி
மழை நின்று-பெய்த (இரவின்)நடுநாளாகிய பொழுதினும்,
சோம்பலற்றவராய்ப் புறப்பட்டு நியதி உணர்வு தோன்ற சுற்றிவருதலால்,
4.
தம்மோன் கொடுமை நம்_வயின் எற்றி
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது
கண்ணீர் அருவி ஆக
அழுமே தோழி அவர் பழம் முதிர் குன்றே – நற் 88/6-9
தனது தலைவன் நமக்குச் செய்த கொடுமைக்காக நம்மேல் பரிவுகாட்டி
நம்மீது அன்பு மிகவும் உடையதால், தன் வருத்தத்தைத் தாங்கிக்கொள்ளமாட்டாமல்
கண்ணீர் அருவியாகப் பெருகும்படி
அழுகின்றது தோழி! அவரின் பழங்கள் முதிர்ந்த குன்று –
5.
நகை அச்சாக நல் அமிர்து கலந்த
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை – பரி 3/33,34
அவுணர்களின் மகிழ்ச்சியே அவர்களுக்கு அச்சமாக மாற, தேவர்களுக்கு நல்ல அமிழ்தத்தை வழங்கிய
நடுவுநிலைமையிலிருந்து தவறிய நலமில்லாத ஒரு கை
6.
இனைய நீ செய்தது உதவாய் ஆயின் சே_இழாய்
செய்ததன் பயம் பற்று விடாது
நயம் பற்று விடின் இல்லை நசைஇயோர் திறத்தே – கலி 59/24-26
செய்த கொடுமைக்கு நீ ஓர் உதவியைச் செய்யாது போனால், சிவந்த அணிகலன் அணிந்தவளே!
நீ செய்ததன் பயன் உன்னைப் பற்றாமல் விடாது,
உன்னை விரும்புவோரிடம் காட்டவேண்டிய அருளை நீ கைவிட்டால், அது உனக்குப் பயன்தருதலும் இல்லை.
|
நயவ |
நயவ – (பெ) நியாயத்தை உடையன, those which are just
அதனால் நல்ல போலவும் நயவ போலவும் – புறம் 58/24
அதனால், நல்லன போலே இருக்கவும், நியாயத்தை உடையன போலே இருக்கவும்
|
நயவரு(தல்) |
நயவரு(தல்) – (வி) 1. விருப்பம்கொள், have a desire
2. இனிமை தோன்று, be sweet
1.
தன் மலை பாட நயவந்து கேட்டு அருளி
மெய்ம் மலி உவகையன் புகுதந்தான் – கலி 40/31,32
அவனுடைய மலையை நாம் பாட, அதனை விரும்பிக்கேட்டருளி,
உடல் பூரித்த உவகையனாய் வந்துவிட்டான்
2.
செம் கண் இரும் குயில் நயவர கூஉம் – அகம் 229/19
சிவந்த கண்ணினையுடைய கரிய குயில் இனிமை தோன்றக் கூவும்
|
நயவர் |
நயவர் – (பெ) 1. விரும்பி வந்தவர், those who came with a desire
2. வல்லவர், skilled people
1.
நயவர் பாணர் புன்கண் தீர்த்த பின் – சிறு 248
விரும்பிவந்தவர், பாணர் முதலியோரின் வறுமையையும் போக்கி,
2.
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ் – அகம் 212/6
யாழ் வல்லோன் இயக்கும் நல்ல யாழின் செவ்வழி இசை
|
நயவு |
நயவு – (பெ) அன்பு
வரையா நயவினர் நிரையம் பேணார் – நற் 329/1
அளவில்லாத அன்பினையுடையவர், நரகத்துள் உய்க்கும் தீயநெறிகளைக் கைக்கொள்ளாதவர்,
|
நரந்தம் |
நரந்தம் – (பெ) 1. நாரத்தை, bitter orange, citrus aurantium
2. கஸ்தூரி, musk
3. ஒரு வாசனைப் புல், a fragrant grass
1.
நரந்தம் நாகம் நள்ளிருள்நாறி – குறி 94
2.
நரந்தம் அரைப்ப நறும் சாந்து மறுக – மது 553
கத்தூரியை அரைக்க, நறிய சந்தனத்தைத் தேய்த்துக் கூழாக்க
3.
நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் – பொரு 238
நறைக்கொடியும், நரந்தம் புல்லும், அகிலும், சந்தனமும்
|
நரந்தை |
நரந்தை – (பெ) நரந்தம் – ஒரு வாசனைப் புல், a fragrant grass
நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி – புறம் 132/4
|
நரம்பு |
நரம்பு – (பெ) 1. யாழின் நரம்பு, catgut, string of yaazh
2. மீனவர் கிழிந்த வலையைத் தைக்கப் பயன்படும் உறுதியான நார்,
strong fibre used to mend fishermen’s net
3. தசை நார், nerve
1.
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின்
இன் குரல் சீறியாழ் இட_வயின் தழீஇ – சிறு 34,35
பொன்னை வார்த்த (கம்பியினை)ஒத்த முறுக்கு அடங்கின நரம்பின்
இனிய ஓசையையுடைய சிறிய யாழை இடப்பக்கத்தே தழுவி,
2.
கோள் சுறா எறிந்து என சுருங்கிய நரம்பின்
முடி முதிர் பரதவர் மட மொழி குறு_மகள் – நற் 207/8,9
கொல்ல வல்ல சுறா கிழித்துவிட்டதாக, சுருங்கிய மெல்லிய நார்களைக் கொண்டு
வலையை முடிதலில் திறமைகொண்ட பரதவரின் மடப்பமுள்ள மொழியையுடைய இளமகள்
3.
நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள் – புறம் 278/1
நரம்பு தோன்றி வற்றிய நிரம்பாத மெல்லிய தோள்கள்
|
நரல் |
நரல் – (வி) ஒலியெழுப்பு, கத்து, sound, make a noise
1.
காற்றால் அசைக்கப்படும்போது, மூங்கிலின் அடிப்பிடிப்பு வேர்கள் எழுப்பும் ’நர நர’ என்ற ஓசை
நரலுதல் எனப்படும்..
இது யானை பெருமூச்சுவிடுவதைப் போன்று இருக்கும் என்கிறது நற்றிணை.
வேர் பிணி வெதிரத்து கால் பொரு நரல் இசை
கந்து பிணி யானை அயா உயிர்த்து அன்ன – நற் 62/1,2
வேர்கள் இறுகப் பிணிக்கப்பெற்ற மூங்கில் காற்றினால் மோதப்படும்போது எழும்பும் நரலும் ஓசை
தறியில் கட்டப்பட்ட யானை வருத்தத்துடன் பெருமூச்சு விட்டதைப் போன்றிருக்கும்
2.
சங்குகளை முழக்கும்போது எழும் ஓசை நரலுதல் என்னப்படும்.
வளை நரல வயிர் ஆர்ப்ப – மது 185
சங்கம் முழங்க, கொம்புகள் ஒலிக்க,
3.
குருகு எனப்படும் கொக்கு எழுப்பும் ஓசையும் நரலுதல் என்னப்படும்.
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை
இலங்கு பூ கரும்பின் ஏர் கழை இருந்த
வெண்_குருகு நரல வீசும்
நுண் பல் துவலைய தண் பனி நாளே – அகம் 12/21-24
தனிமைத் துயரைக் கொண்டுவரும், மாலைபொழுதைக் கொண்ட வாடைக் காற்று
மின்னுகின்ற பூக்களைக் கொண்ட கரும்பின் ஓங்கி உயந்த கழையின் மீது இருந்த
வெண்குருகு ஒலி எழுப்பும் அளவுக்கு வீசுகின்ற
நுண்ணிய பல துளிகளைக் கொண்ட குளிர்ந்த பனிக்காலத்து நாட்கள்
4.
துயரத்துடன் இருக்கும் அன்றில் பறவைகள் எழுப்பும் ஓசை நலுதல் எனப்படும்.
மை இரும் பனை மிசை பைதல உயவும்
அன்றிலும் என்பு உற நரலும் – நற் 335/7,8
கரிய பெரிய பனைமரத்தின் மேல் துன்புற்று வருந்தும்
அன்றில் பறவைகளும் தம் எலும்புகள் நடுங்கக் கூவும்
5.
நாரைகள் ஒலியெழுப்பவது நரலுதலெனப்படும்.
ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை
நளி இரும் கங்குல் நம் துயர் அறியாது
அளி இன்று பிணி இன்று விளியாது நரலும் – கலி 128/3-5
அசைகின்ற கிளையில் இருந்த அசைவான நடையைக் கொண்ட நாரை,
நன்றாகச் செறிந்த பெரும் இரவில் நம் துயரை அறியாமல்,
நம்மீது இரக்கமில்லாமல், நம்மைப்போல் துயரமும் இல்லாமல், ஓயாமல் குரலெழுப்பும்
5.
பெட்டை மயில் கூவுவதும் நரலுதல் எனப்படும்.
இது ஊதுகொம்பு ஒலிக்கின்றது போல் இருக்கும் என்கிறது அகநானூறு.
பைம் கொடி பாகல் செம் கனி நசைஇ
கான மஞ்ஞை கமம் சூல் மா பெடை
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும் – அகம் 177/9-11
பசிய பாகற்கொடியின் சிவந்த பழத்தினை விரும்பி
காட்டிலுள்ள மயிலின் நிறைந்த கருவினைக் கொண்ட கரிய பெடை
அயிரி ஆற்றினது அடைகரையின்கண் ஊதுகொம்பு என ஒலிக்கும்.
6.
குடுமியையுடைய கொக்குகள் ஒலியெழுப்புவது நரலுதல் என்னப்படும்.
குடுமிக் கொக்கின் பைங்கால் பேடை
———————————————–
அம் கண் பெண்ணை அன்பு உற நரலும் – அகம் 290/1-8
குடுமியையுடைய கொக்கின் பசிய காலினையுடைய பேடை
————————————————-
அழகிய இடத்தையுடைய பனைமரத்தின்கண் விரைவாக அன்பு தோன்ற ஒலித்திருக்கும்.
|
நற |
நற – (பெ) நறவு, நறா, தேன், கள், honey, toddy
நற உண் வண்டாய் நரம்பு உளர்நரும் – பரி 9/63
தேனை உண்ணும் வண்டுகளாக யாழினை இசைப்போரும்
|
நறவம் |
நறவம் – (பெ) 1. ஒரு வாசனைக் கொடி, பூ,
a fragrant creeper, its flower, Indian lavanga, Luvunga scandens
2. கள், toddy
1.
நந்தி நறவம் நறும் புன்னாகம் – குறி 91
நல் இணர் நாகம் நறவம் சுரபுன்னை – பரி 12/80
உருவம் மிகு தோன்றி ஊழ் இணர் நறவம் – பரி 19/78
2.
நார் அரி நறவம் உகுப்ப – பரி 6/49
நார்க்கூடையால் அரிக்கப்பட்ட கள்ளின் சிந்திய பாகங்களும் வெள்ளத்தில் சேர்ந்துவர
|
நறவு |
நறவு – (பெ) 1. தேன், honey
2. கள், toddy
3. சேரநாட்டிலிருந்த ஒரு ஊர், A city in the cera kingdom.
1.
நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து – சிறு 51
தேனை(ப் பூக்கள் தம்மிடத்திலிருந்து)துளிக்கும் இளமை முதிர்ந்த நுணா மரத்தின்
2.
கேளா மன்னர் கடி புலம் புக்கு
நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி – பெரும் 140,141
(தன் சொல்)கேளாத மன்னருடைய காவலமைந்த நிலத்தே சென்று,
விடியற்காலத்து (அவர்கள்)பசுக்களைப் பற்றிக் கொணர்ந்து, (அவற்றைக்)கள்ளுக்கு விலையாகப் போக்கி,
3.
துவ்வா நறவின் சாய் இனத்தானே – பதி 60/12
நுகரமுடியாத நறவாகிய நறவு என்னும் ஊரில் உள்ள மென்மையான மகளிர் நடுவே
|
நறா |
நறா – (பெ) 1. தேன், கள், honey, toddy
2. நறை, நறவம்பூ, பார்க்க : நறவம்-1
1.
கொழு நிண தடியொடு கூர் நறா பெறுகுவிர் – பெரும் 345
கொழுவிய நிணத்தையுடைய தசையோடு களிப்பு மிக்க கள்ளைப் பெறுவீர்
2.
நறாஅ அவிழ்ந்து அன்ன என் மெல் விரல் போது கொண்டு – கலி 54/9
நறவம் பூ மலர்ந்தது போன்ற என் மென்மையான விரல்களைச் சேர்த்துப்பிடித்து
|
நறு |
நறு – (பெ.அ) நறிய, வாசனையுள்ள, fragrant
வண்ண கடம்பின் நறு மலர் அன்ன – பெரும் 203
(வெண்மையான)நிறத்தையுடைய கடம்பின் நறிய பூவை ஒத்த
|
நறை |
நறை – (பெ) 1. தேன், honey
2. வாசனையுள்ள கொடி, a fragrant creeper
3. நறுமணம், fragrance
4. நறும்புகை, incense
1.
வேனில் பாதிரி கூனி மா மலர்
நறை வாய் வாடல் நாறும் நாள் சுரம் – அகம் 257/1,2
வேனில்காலத்தின் பாதிரியின் வளைவையுடைய சிறந்த பூக்களின்
தேன் பொருந்திய வாடல் மணக்கின்ற பகற்பொழுதில் சுரத்தின்கண்
2.
நறை நார் தொடுத்த வேங்கை அம் கண்ணி – புறம் 168/15
நறைக்கொடியின் நாரால் தொடுக்கப்பட்ட வேங்கைப்பூ மாலையினையும்
3.
நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை – குறு 339/1
வாசனையையுடைய அகிலின் வளமையாகச் செறிந்த தினைப்புனத்தில் எழுந்த நறிய புகை
4.
நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்ப – கலி 101/12
நறும்புகையுடன் புழுதியும் கிளம்ப, நல்ல மகளிர் திரண்டு நிற்க
|
நற்கு |
நற்கு – (வி.அ) நன்றாக, well, adequtely
விருந்து இறைகூடிய பசலைக்கு
மருந்து பிறிது இன்மை நற்கு அறிந்தனை சென்மே – நற் 247/8,9
புதிதாய் வந்து நிலையாய்க் குடியிருக்கும் பசலைக்கு
மருந்து வேறு இல்லை என்பதை நன்கு அறிந்தவனாகச் செல்வாயாக
|
நலன் |
நலன் – (பெ) பார்க்க – நலம்
1. உயர்வு, excellene
2. நல்ல நிலை, well-being
3. அழகு, beauty
4. நன்மை, good
1.
நிண சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இன புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ
புலவு நாறுதும் செல நின்றீமோ – நற் 45/6-8
கொழுப்புள்ள சுறாமீனை அறுத்த துண்டங்களைக் காயவைப்பதற்காக,
கூட்டமாக வரும் பறவைகளை விரட்டும் எமக்கு உயர்ந்த நலன்கள் என்ன வேண்டியுள்ளது?
எம்மிடம் புலால் நாறுகிறது. தள்ளி நில்லுங்கள்,
2.
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி – நற் 56/8
முன்பிருந்த என்னுடைய நல்ல நிலையை இழந்துபோன எனது பசலை பாய்ந்த பொன் நிறத்தைப் பார்த்து
3.
வடி நலன் இழந்த என் கண்ணும் நோக்கி
பெரிது புலம்பினனே சீறியாழ் பாணன் – ஐங் 475/2,3
மாவடு போன்ற தம் அழகை இழந்த என் கண்களையும் நோக்கி,
பெரிதும் வருந்தினான் சீறியாழ்ப் பாணன்
4.
நல்லதன் நலனும் தீயதன் தீமையும் – புறம் 29/11
நல்வினையினது நன்மையும், தீவினையினது தீமையும்
|
நலம் |
நலம் – (பெ) 1. நன்மை, good
2. நல்ல நிலை, well-being
3. அழகு, beauty
4. அன்பு, love
5. சிவந்த நிறம், red colour
1.
நலம் சான்ற கலம் சிதறும்
பல் குட்டுவர் வெல் கோவே – மது 104,105
நன்மை அமைந்த அணிகலன்களைக் கொடுக்கும்
பல குட்ட நாட்டு அரசரை வென்ற வேந்தனே
2.
தொல் கவின் தொலைய தோள் நலம் சாஅய
நல்கார் நீத்தனர் – நற் 14/1,2
எமது பழைய கவின் தொலைய, எமது தோளின் நல்ல நிலையெல்லாம் அழிந்துபோக
எமக்கு அருளாராய் எம்மை விட்டு நீங்கினர்
3.
நாண் அட சாய்ந்த நலம் கிளர் எருத்தின் – பொரு 31
நாணம் (தன்னை)அழுத்த (பிறரை நோக்காது)கவிழ்ந்த அழகு மிகுந்த கழுத்தினையும்
4.
புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு – நெடு 166
தனிமையொடு கிடக்கும் அன்பு மிகுகின்ற இளம்பெண்ணுக்கு
5
நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை – திரு 109
செம்மைநிறம் பெற்ற ஆடையுடைய துடையின் மேலே கிடந்தது ஒரு கை
|
நலி |
நலி – (வி) 1. தாழ்வடை, நிலைகுலை, deteriorate, worsen
2. வருந்து, suffer, be in distress
3. வருத்து, afflict, distress
1.
கார் அதிர் காலை யாம் ஓ இன்று நலிய
நொந்து_நொந்து உயவும் உள்ளமொடு
வந்தனெம் மடந்தை நின் ஏர் தர விரைந்தே – ஐங் 491/1-3
கார்கால மேகங்கள் முழங்குகின்ற பொழுதில், நான் இடையறவின்றி நலிந்துகொண்டிருக்க,
நொந்து நொந்து வருந்தும் உள்ளத்தோடு,
வந்துவிட்டேன் மடந்தையே! உன் அழகு என்னை இழுத்துவர, விரைவாக.
2.
காதலர் பிரிந்தோர் கையற நலியும்
தண் பனி வடந்தை அச்சிரம் – ஐங் 223/3,4
காதலரைப் பிரிந்தவர்கள் செயலற்று வாடிவருந்தும்
குளிர்ந்த பனியோடே சேர்ந்த வாடையுடன் கூடிய முன்பனிக்காலத்தை
2.
மெய் கொள் பெரும் பனி நலிய பலர் உடன்
கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க – நெடு 7,8
(தம்)உடம்பில் கொண்ட மிகுந்த குளிர்ச்சி வருத்துகையினால், பலரும் கூடிக்
கையில் பிடித்த கொள்ளிக்கட்டையராய், கன்னங்களின் உட்புறம்(பற்கள்) அடித்துக்கொண்டு நடுங்க
|
நலிதரு(தல்) |
நலிதரு(தல்) – (வி) 1. வருந்து, suffer, be in distress
2. வருத்து, வாட்டு, cause pain, afflict
1.
கூறும் சொல் கேளான் நலிதரும் பண்டு நாம்
வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால் அவனொடு
மாறு உண்டோ நெஞ்சே நமக்கு – கலி 62/17-19
நாம் கூறுவதை கேளாதவனாய் அவன் வருந்துகிறான், முற்பிறப்பில் நாம்
வேறாக இருந்ததில்லை என்றொரு நிலை இருந்தால், அவனோடு
மாறுபாடு உண்டோ, நெஞ்சே நமக்கு?
2.
நலிதரும் காமமும் கௌவையும் என்று இ
வலிதின் உயிர் காவா தூங்கி ஆங்கு என்னை
நலியும் விழுமம் இரண்டு – கலி 142/56-58
என்னை வருத்தும் காமமும், ஊரார் பழிச்சொல்லும் என்ற இவை
வலிமையான என் உயிரின் இரண்டு பக்கமும் காவடி தொங்குவதைப் போல் என்னை
நலியச்செய்யும் இரண்டு துன்பங்களாக இருக்கின்றன.
|
நல்கல் |
நல்கல் – (பெ) 1. கொடுத்தல், bestowing, granting
2. அன்பு செலுத்தல், show love
3. அருள் செய்தல், show kindness
1.
முரம்பு கண் உடைய ஏகி கரம்பை
புது வழி படுத்த மதி உடை வலவோய்
இன்று தந்தனை தேரோ
நோய் உழந்து உறைவியை நல்கலானே – குறு 400/4-7
பருக்கைக்கற்கள் நிறைந்த மேட்டுநிலப் பரப்பு நொறுங்கிப்போகும்படி சென்று, கரம்பை நிலத்தில்
புதுவழியை உண்டாக்கிய அறிவுடைய பாகனே!
இன்று நீ கொண்டுவந்து சேர்த்தது தேரினையோ?
நோயினால்,வருந்தி வாழும் தலைவியை எனக்குத் தருதலால்!
2.
நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர் – குறு 37/1
(உன்மீது) விருப்பம் மிகவும் உடைய தலைவர் (உன்பால்) அன்புசெய்தலும் செய்வார்
3.
கடு நவை அணங்கும் கடுப்பும் நல்கலும்
கொடுமையும் செம்மையும் வெம்மையும் தண்மையும்
உள்_வழி உடையை இல்_வழி இலையே – பரி 4/49-51
மிகவும் துன்பம் உண்டாகும்படி வருத்தும் சினமும், அருள்புரிதலும்,
கொடுமையும், செம்மையும், வெம்மையும், தண்மையும்
உள்ளவரிடம் நீயும் அக் குணங்களை உடையவன், இவை இல்லாதவரிடம் நீயும் அவற்றை
இல்லாதவனாகவே இருக்கிறாய்
|
நல்கு |
நல்கு – (வி) 1. கொடு, bestow, grant
2. அன்பு செலுத்து, show love
3. அருள் செய், இரக்கம் காட்டு, show grace
1.
கான மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கிய
அரும் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் – சிறு 85,86
காட்டு மயிலுக்குத் தன் போர்வையைத் தந்த
அரிய வலிமையுடைய வடிவமுள்ள ஆவியர் குடியிற் பிறந்த பெருமகன்
2.
நல்குவன் போல கூறி
நல்கான் ஆயினும் தொல் கேளன்னே – ஐங் 167/3,4
முன்னர் விரும்பி அன்புசெய்பவன் போல இனிய மொழிகளைக் கூறி,
இப்போது அன்புசெய்யானாயினும் நெடுங்காலம் நம்மீது நட்புக்கொண்டவனல்லவோ?
3.
பொறுக்கல்லா நோய் செய்தாய் பொறீஇ நிறுக்கல்லேன்
நீ நல்கின் உண்டு என் உயிர் – கலி 94/11,12
பொறுக்க முடியாத காம நோயை ஏற்படுத்தினாய்! நான் பொறுத்திருக்கமாட்டேன்,
நீ இரக்கப்பட்டால் என் உயிர் என்னிடத்தில் உண்டு
|
நல்குரவு |
நல்குரவு – (பெ) வறுமை, poverty
நகைப்புலவாணர் நல்குரவு அகற்றி – புறம் 387/13
இன்பச்சுவை நல்கும் அறிவினராகிய இரவலர், நண்பர் ஆகியோரின் வறுமையைப் போக்கி
|
நல்கூர் |
நல்கூர் – (வி) 1. வறுமைப்படு, be poor
2. மெலிந்திரு, be thin
3. வலிமை குன்றியிரு, become fatigued
4. துன்புறு, be afflicted
5. மெல்லியதாயிரு, be soft
6. வறண்டிரு, be dry
1.
நல்கூர் பெண்டின் சில் வளை குறு_மகள் – நற் 90/9
வறுமைகொண்ட பெண்ணைப்போன்று ஒருசில வளையல்களைக் கொண்ட இளையவளான பரத்தை
2.
நல்கூர் நுசுப்பின் மெல் இயல் குறு_மகள் – நற் 93/8
மெலிந்துபோன இடையையும், மெல்லிய இயல்பினையும் கொண்ட இளமகளின்
3.
பல் சுரம் உழந்த நல்கூர் பரிய
முழங்கு திரை புது மணல் அழுந்த கொட்கும்
வால் உளை பொலிந்த புரவி – நற் 135/6-8
பல காடுகளைக் கடந்த வருத்தத்தினால் வலிகுன்றிய ஓட்டத்தையுடைய,
முழங்குகின்ற கடல் அலைகள் ஒதுக்கிய புது மணலில் அழுந்தியதால் சுழலும்
வெண்மையான தலையாட்டம் பொலிந்த புரவி
4.
நலன் உணப்பட்ட நல்கூர் பேடை – நற் 178/3
இன்பம் நுகரப்பெற்றுக் கைவிடப்பட்ட துயரத்தையுடைய பேடை
5.
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து
ஆன் நுளம்பு உலம்பு-தொறு உளம்பும்
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே – குறு 86/4-6
வாடைக்காற்றினால் தூறல்போடும் குளிர்நிறைந்த நள்ளிரவில்
பசுவானது ஈக்கள் ஒலியெழுப்பும்போதெல்லாம் சத்தமிடும்
நாவு ஒலிக்கும் வளைந்த மணியின் மெல்லிய ஓசையை.
6.
மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுர முதல் – குறு 347/1
நீர் பெருகும் சுனைகள் வற்றிப்போன வறண்ட பாலைநிலத்தின் தொடக்கத்தில்
|
நளி |
நளி – 1. (வி) அடர்ந்திரு, நெருங்கியிரு, be close together, crowded
– 2. (பெ) 1. அடர்த்தி, செறிவு, closeness, denseness
2. உயர்வு, பரப்பு, greatness, vastness
3. அகலம், width, breadth, extent
1.
நளிந்து பலர் வழங்கா செப்பம் துணியின் – மலை 197
கூட்டமாகப் பலர் புழங்காத நேரான பாதைகளில் போகத் துணிந்தால்
2.1.
நன் மரன் நளிய நறும் தண் சாரல் – புறம் 150/15
நல்ல மரச் செறிவையுடைய நறிய குளிர்ந்த மலைச்சரலின்கண்
2.2
நள்ளென் கங்குல் நளி மனை நெடு நகர் – ஐங் 324/3
நள்ளென்னும் நடுயாமத்து இரவில், பரந்த மனையில் உள்ள நீண்ட இல்லத்தில்
2.3
நளி கடல் முகந்து செறி_தக இருளி – நற் 289/4
படர்ந்த கடல்நீரை முகந்துகொண்டு செறிவுற்று இருண்டு
|
நளினம் |
நளினம் – (பெ) தாமரை, Lotus
ஞாயிற்று ஏர் நிற தகை நளினத்து பிறவியை – பரி 5/12
ஞாயிறு எழுகின்ற போதுள்ள நிறம் போன்ற அழகினையும் கொண்ட,
தாமரையின் மேல் பிறப்பினை உடைய, பெருமானே!
|
நளிப்பு |
நளிப்பு – (பெ) செறிவு, overcrowdedness
பழம் தூங்கு நளிப்பின் காந்தள் அம் பொதும்பில் – அகம் 18/15
பழங்கள் தொங்குகின்ற செறிவான மரங்கள் உள்ள காந்தள் பூத்துள்ள சோலையில்
|
நளிர் |
நளிர் – (பெ) குளிர்ச்சி, coolness
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின் – நற் 257/2
மழை முகில்கள் எழுந்து தங்கிய குளிர்ச்சி தவழும் மலைச் சரிவில்
|
நள் |
நள் – 1. (வி) நட்புக்கொள், befriend
2. (பெ.அ) செறிந்த, dense, thick
1.
நள்ளாதார் மிடல் சாய்த்த
வல்லாள – புறம் 125/5,6
உன்னுடன் நட்புக்கொள்ளாதவரது வலிமையைத் தொலைத்த
ஆண்மையையுடையோய்
2.
பெரும் தோள் கணவன் மாய்ந்தென அரும்பு அற
வள் இதழ் அவிழ்ந்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓர் அற்றே – புறம் 246/13-15
பெரிய தோலையுடைய கணவன் இறந்துபட்டானாக, முகை இல்லாத
வளவிய இதழ் மலர்ந்த தாமரையையுடைய (நீர்) செறிந்த பெரிய பொய்கையும் தீயும் ஒரு தன்மைத்து.
|
நள்ளி |
நள்ளி – (பெ) 1. கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவன் பெயர் கண்டீரக்கோ பெருநள்ளி
2. நண்டு, crab
1.
திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின் – குறு 210/1,2
திண்ணிய தேரையுடைய நள்ளியின் புஞ்செய்க்காட்டிலுள்ள இடையர்களின்
கூட்டமான பசுக்கள் கொடுத்த நெய்யோடு
இவனைப்பற்றிய பிற குறிப்புகள்:
நளி மலை நாடன் நள்ளியும் – சிறு 107
வல் வில் இளையர் பெருமகன் நள்ளி – அகம் 152/15,16
கழல் தொடி தட கை கலி_மான் நள்ளி – அகம் 238/14,15
கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி – புறம் 148/1
நளி மலை நாடன் நள்ளி அவன் – புறம் 150/28
2.
நத்தொடு நள்ளி நடை இறவு வய வாளை – பரி 10/85
சங்கு, நண்டு, நடக்கின்ற இறால், வலிய வாளைமீன்
|
நள்ளிருள்நாறி |
நள்ளிருள்நாறி – (பெ) இருள்வாட்சிப்பூ, Jasminum Sambac Var, Tuscan jasmine
நரந்தம் நாகம் நள்ளிருள்நாறி – குறி 94
|
நவ |
நவ – (பெ) ஒன்பது, nine
ஒருவன் நீத்தான் அவனை
அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின் யானும்
நிறை உடையேன் ஆகுவேன் மன்ற – கலி 143/12-14
ஒருவன் என்னை வஞ்சித்து என்னைக் கைவிட்டான், அவனைத்
துண்டு துண்டான ஒன்பது நாடுகளான நவகண்டம் என்ற நாடுகளிலிருந்தேனும் கொண்டுவந்து தந்தால், நானும்
உறுதியான கற்புநெறி உடையவள் ஆகுவேன்
|
நவி |
நவி – (பெ) நவியம், கோடரி, axe
விழு நவி பாய்ந்த மரத்தின்
வாள் மிசை கிடந்த வண்மையோன் திறத்தே – புறம் 270/12,13
பெரிய கோடரியால் வெட்டப்பட்டு
|
நவியம் |
நவியம் – (பெ) நவி, கோடரி, axe
வடி நவில் நவியம் பாய்தலின் ஊர்-தொறும்
கடி மரம் துளங்கிய காவும் – புறம் 23/8,9
வடித்தல் பயின்ற கோடாலி வெட்டுதலால், ஊர்தோறும்
காவல் மரங்கள் நிலை கலங்கிய காவும்
|
நவிரம் |
நவிரம் – (பெ) ஒரு மலை, a mountain
இன்றைய வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி முற்காலத்தில்
‘பல்குன்றக் கோட்டம்’ என்று வழங்கப்பட்டது. பல்குன்றக் கோட்டத்தைச் சிறப்புடன் ஆட்சி செய்தவன்
செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் என்னும் அரசன். இவனது நாட்டிலுள்ள ஒரு மலையே
நவிர மலை. இதனை, இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் என்ற புலவர்
‘மலைபடுகடாம்’ என்ற இலக்கியத்துள் காட்டியிருக்கின்றார்.
பேர் இசை நவிரம் மேஎய் உறையும்
காரி உண்டி கடவுளது இயற்கையும் – மலை 82,83
பெரும் புகழ்கொண்ட நவிரம் என்னும் மலையில் நிலைகொண்டு வாழுகின்ற,
நஞ்சை உணவாகக் கொண்ட இறைவனது இயல்பையும்
|
நவிரல் |
நவிரல் – (பெ) ஒரு வகை முருங்கை மரம், a type of murungai tree
நார் இல் முருங்கை நவிரல் வான் பூ
சூரல் அம் கடு வளி எடுப்ப ஆர் உற்று
உடை திரை பிதிர்வின் பொங்கி முன்
கடல் போல் தோன்றல – அகம் 1/16-19
நாரற்ற முருங்கையான நவிரலின் வெண்மையான பூக்கள்
சுழற்றி அடிக்கும் கடுமையான காற்று மேலெழும்ப, சிதறலுண்டு,
உடைந்த அலைகளின் சிதறலைப் போன்று நுரைத்தெழ, முன்பகுதிக்
கடல் போன்று தோன்றும்
நார் இல் முருங்கை நவிரல் வான்பூ என்பதற்கு, ’நார் இல்லாத முருங்கையின் குலைந்த வெள்ளிய பூக்கள்’
என்று பொருள் கொள்வார் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள்.
|
நவிற்று |
நவிற்று – (வி) கூறு, சொல், say, tell
பாழ் என கால் என பாகு என ஒன்று என
இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என
நால் வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை – பரி 3/77-80
பாழ் என்ற புருடதத்துவமும், கால் என்ற ஐந்து பூதங்களும், பாகு என்ற தொழிற்கருவிகள் ஐந்தும்,
ஒன்றாவதான ஓசையும்,
இரண்டாவதான தொடுவுணர்ச்சியாகிய ஊறும், மூன்றாவதான ஒளியும், நான்காவதான சுவையும்,
ஐந்தாவதான நாற்றமும்,
ஆறாவதான மனத்தைச் சேர்த்த அறிகருவிகள் ஆறும், ஏழாவதான ஆணவமும், எட்டாவதான புத்தியும்,
ஒன்பதாவதான மூலப்பகுதியும்,
நால்வகை ஊழியின்போதும், இந்த எண்கள் கூறும் பெருமையினையுடையவனே!
|
நவில் |
நவில் – (வி) 1. சொல், கூறு, say, tell
2. பழகு, பயிற்சிபெறு, practise, be trained
3. ஒலியெழுப்பு, make a noise
4. பாடு, sing
5. பயில், கல், learn, study, read
6. மிகு, exceed
உள்ளுவை அல்லையோ ——————
——————————– —————–
நம்மொடு நன் மொழி நவிலும்
பொம்மல் ஓதி புனை_இழை குணனே – அகம் 353/16-23
நினைத்துப்பார்ப்பாய் அல்லையோ! ——————
———————————————- ————
நம்முடன் நல்ல மொழிகளைக் கூறும்
பொலிவுபெற்ற கூந்தலையும் அழகிய அணிகலன்ளையும் உடைய நம் தலைவியின் குணங்களை
2.
ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை – நெடு 169
நெற்றிப்பட்டத்தோடு பொலிவு பெற்ற போர்த்தொழிலில் பயிற்சிபெற்ற யானையின்
3.
பழ மழை பொழிந்த புது நீர் அவல
நா நவில் பல் கிளை கறங்க மாண் வினை
மணி ஒலி கேளாள் வாள்_நுதல் – நற் 42/3-5
தொன்றுதொட்டுப் பெய்யும் வழக்கத்தையுடைய மழை பொழிந்த புது நீர் உள்ள பள்ளங்களிலிருந்து
நாவினால் பன்முறை ஒலியெழுப்பும் பல கூட்டமான தவளைகள் கத்துவதால், சிறப்பாகச் செய்யப்பட்ட
மணிகளின் ஒலியைக் கேட்கமாட்டாள் ஒளிவிடும் நெற்றியையுடையவள்;
4.
பகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர்
நா நவில் பாடல் முழவு எதிர்ந்த அன்ன
சிலம்பின் சிலம்பு இசை ஓவாது – பரி 15/42-44
சுருதியை உணர்த்துகின்ற குழலும் தாளமும் ஒலியெழுப்பும்போது, பாடுவோர்
நாவால் இசைத்துப் பாடும் பாடலானது முழவின் இசையை எதிர்கொண்டது போல
மலைக்குகைகளில் முழங்கி எதிரொலிக்கின்ற இசை முடிவின்றி ஒலிக்கும்
5.
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே – புறம் 1/6
வேதத்தைப் பயிலும் அந்தணரால் புகழவும்படும்
6.
நெய் குய்ய ஊன் நவின்ற
பல் சோற்றான் இன் சுவைய – புறம் 382/8,9
நெய்யால் தாளிதம் செய்யப்பட்ட ஊன் மிகுந்த
பலவகையான சோற்றுடனே இனிய சுவையுடைய
|
நவை |
நவை – 1. (வி) கொல், kill, slay
2. (பெ) 1. குற்றம், fault, blemish
2. தண்டனை, punishment
1.
வாய்மொழி தந்தையை கண் களைந்து அருளாது
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின் – அகம் 262/5,6
வாய்மை மிக்க தந்தையை அருளாமல் கண்ணைப் பிடுங்கி
பழமை வாய்ந்த ஊரிலுள்ள கோசர்கள் கொன்ற கொடுமைபற்றி
2.1
கடு நவை ஆர் ஆற்று அறு சுனை முற்றி
உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை – கலி 12/3,4
கொடுங் குற்றங்கள் நடைபெறும் கடத்தற்கரிய காட்டுவழியில், நீர் வற்றிப்போன சுனையைச் சுற்றிநின்று,
ஒருசேர நீர்வேட்கை கொண்டதால், உடல் வருந்திய யானைகள்
2.2
பெரும் சீர்
அன்னி குறுக்கை பறந்தலை திதியன்
தொல் நுலை முழுமுதல் துமியப்பண்ணிய
நன்னர் மெல் இணர் புன்னை போல
கடு நவை படீஇயர் மாதோ – அகம் 145/10-14
பெரிய புகழையுடைய
அன்னியானவன், குறுக்கைப் பறந்தலை என்னும் போர்க்களத்தில் திதியன் என்பானது
பழைமை பொருந்திய பரிய அடியுடன் துணித்திட்ட
நன்றாகிய மெல்லிய பூங்கொத்துக்களையுடைய புன்னையைப் போல
பெரிய தண்டனையை அடைவனவாக
|
நவ்வி |
நவ்வி – (பெ) பெண்மான், female deer
நவ்வி நோன் குளம்பு அழுந்து என வெள்ளி
உருக்குறு கொள்கலம் கடுப்ப – நற் 124/6,7
நவ்வி எனும் மானின் வலிய குளம்புகள் மிதித்து அழுத்துகையினால், வெள்ளியை
உருக்கும் கொள்கலத்தைப் போல்
|
நா |
நா – (பெ) 1. நாக்கு, tongue
2. மணியின் நாக்கு, clapperof a bell
3. பேச்சுத்திறன், பாடும்திறன், ஓதும்திறன், ability to speak, sing or recite
1.
முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத நாய்
நன் நா புரையும் சீறடி – நற் 252/10,11
முயல் வேட்டைக்காகப் புறப்பட்டு விரைவாகும் வேகங்கொண்ட சினமுள்ள நாயின்
நல்ல நாவினை ஒத்த சிறிய பாதங்களையும்,
2.
நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள் – முல் 50
நெடிய நாக்கினையுடைய ஒள்ளிய மணி ஒலித்துச் சிறிது சிறிதாக அடங்கிய நடுயாமத்தும்
3.
நா வல் அந்தணர் அரு மறை பொருளே – பரி 1/13
ஓதும்திறனில் வன்மை மிக்க அந்தணர்களின் அரிய வேதங்களின் பொருள்
|
நாகன் |
நாகன் – (பெ) நாலை கிழவன் நாகன், a philanthropist of nAlUr in Sangam era, belonging to
Pandiyan kingdom
திரு வீழ் நுண் பூண் பாண்டியன் மறவன்
படை வேண்டுவழி வாள் உதவியும்
வினை வேண்டுவழி அறிவு உதவியும்
————————————————–
தோலா நல் இசை நாலை கிழவன்
————————————— ————
திருந்து வேல் நாகன் கூறினர் பலரே – புறம் 179/5-12
திருமகள் விரும்பிய நுண்ணிய தொழில்பொருந்திய ஆபரணத்தையுடைய பாண்டியன் மறவன்
படை வேண்டியவிடத்து வாட்போரை உதவியும்
கருமச்சூழ்ச்சி வேண்டியவிடத்து அமைச்சியலோடு நின்று உதவியும்
——————————————————————
தோற்காத நல்ல புகழையுடய நாலை கிழவன்
———————————————————-
திருந்திய வேலையுடைய நாகனைப் பலரும் சொன்னார்.
|
நாகம் |
நாகம் – (பெ) 1. பாம்பு, snake
2. சுரபுன்னை, Long leaved two-sepalled gamboge
3. நாகமரம், Iron wood of Ceylon. Mesua ferrea;
4. யானை, elephant
1.
ஒளி திகழ் உத்தி உரு கெழு நாகம் – பரி 12/4
ஒளி விளங்கும் படப்புள்ளிகளைக் கொண்ட, பார்ப்பதற்கு அச்சந்தரக்கூடிய பாம்பின்
பெயரைக்கொண்ட நாகமரமும்
2.
நறு வீ உறைக்கும் நாக நெடு வழி – சிறு 88
நறிய பூக்கள் (தேனைத்)துளிக்கும் சுரபுன்னை(யை உடைத்தாகிய) நெடிய வழியிலிருந்த
3.
நரந்தம் நாகம் நள்ளிருள்நாறி – குறி 94
நாகம் திலகம் நறும் காழ் ஆரம் – மலை 520
நறு வீ நாகமும் அகிலும் ஆரமும் – சிறு 116
4.
பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து – நெடு 117
போரிட்டு வீழ்ந்த யானையின், தானாக வீழ்ந்த கொம்புகளின் இரண்டுபுறங்களையும் சீவி,
|
நாகரிகர் |
நாகரிகர் – (பெ) கண்ணோட்டமுள்ளவர், Persons possessing a kindly feeling for their friends;
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர் – நற் 355/6,7
முன்னதாக இருந்து நண்பர்கள் கொடுத்தால்
நஞ்சையும் உண்பர் மிகுந்த நாகரிகத்தையுடையவர்கள்
|
நாகர் |
நாகர் – (பெ) 1. ஆதிசேடன், AthisEdan, the snake bed of Lord Krishna
2. தேவர், நாகலோகவாசிகள், celestials, the race of serpants in nagaloga
1.
பூ முடி நாகர் நகர் – பரி 23/59
பூமகளையும் தன் திருமுடியில் கொண்டுள்ள ஆதிசேடனின் கோயிலில்;
2.
நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்-மார் – பரி 11/67
நாகர்களைப் போன்று நல்ல வளமையான அறச்செயல்களில் நாட்டம் மிக, நெருங்கிச் சேரும்பொருட்டு
|
நாகு |
நாகு – (பெ) 1. இளமை, youthfulness, tenderness
2. பசுவின் பெண்கன்று, female calf, heifer
3. பெண் மீன், female fish
4. இளம் பசு, இளம் பெண் எருமை, young cow, young female buffallo
1.
நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து – சிறு 51
தேனை(ப் பூக்கள் தம்மிடத்திலிருந்து)துளிக்கும் இளமை முதிர்ந்த நுணா மரத்தின்
2.
எருமை நல் ஆன் கரு நாகு பெறூஉம் – பெரும் 165
எருமையையும், நல்ல ஆன்களையும், (அவற்றின்)கருவாகிய கன்றுகளையும் வாங்குகின்ற
3.
கணை கோட்டு வாளை கமம் சூல் மட நாகு – குறு 164/1
கணைபோன்று திரண்ட கொம்பினையுடைய முதிர்ந்த கருக்கொண்ட பெண் வாளைமீன்
4.
நல் ஏறு தழீஇ நாகு பெயர் காலை – ஐங் 445/3
நல்ல காளையைத் தழுவிக்கொண்டு இளம்பசுக்கள் வீடுதிரும்பும் நேரத்தில்
மட கண் எருமை மாண் நாகு தழீஇ – அகம் 146/3
மடப்பம் வாய்ந்த கண்ணினையுடைய மாண்புற்ற பெண் எருமையினை அணைந்து,
|
நாஞ்சிலான் |
நாஞ்சிலான் – (பெ) கலப்பையை ஆயுதமாகக் கொண்ட பலதேவன்,
Baladev, who has a plough as weapon
இவன் பலராமன் எனப்படுவன். கிருஷ்ணரின் அண்ணன் ஆவான்.
கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல் மராத்து
நெடு மிசை சூழும் மயில் ஆலும் சீர – கலி 36/1,2
கொடிய ஆற்றல் வாய்ந்த கலப்பையை உடைய பலதேவன் மாலை அணிந்தது போல்
வெண்கடம்பமரத்தின் நீண்டுயர்ந்த உச்சியில் சூழ அமர்ந்திருக்கும் மயில்கள் ஆரவாரிக்கும்
அழகு உண்டாகவும்,
|
நாஞ்சிலோன் |
நாஞ்சிலோன் – (பெ) பார்க்க : நாஞ்சிலான்
நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும் – பரி 13/34
பகைவரின் மார்பை உழுகின்ற வளைந்த வாயினையுடைய கலப்பைப் படையையும் உடைய
பலதேவனும்,
|
நாஞ்சில் |
நாஞ்சில் – (பெ) 1. கலப்பை, plough
2. நாஞ்சில் நாடு, The name of a country around the present Nagercoil
1.
உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம்
வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்றி நிலம் சேர – கலி 8/4,5
வண்டுகள் நெருங்கிச் சேர, ஒழுகுகின்ற கமழும் மதநீரையுடைய, இப்பொழுது கெட்டுப்போன
அழகையுடைய யானை,
வறண்ட நிலத்தை உழுகின்ற கலப்பையைப் போல் தன் கொம்புகளை ஊன்றி நிலத்தில் கிடக்க
2.
செம் வரை படப்பை நாஞ்சில் பொருந – புறம் 137/12
செங்குத்தான மலைப்பக்கத்தையுடைய நாஞ்சில் என்னும் மலையையுடைய பொருநனே
|
நாடல் |
நாடல் – (பெ) நாடுதல், விரும்பிவருதல், seeking with a desire
நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின் – நற் 327/1
நம்மை விரும்பி வந்த சான்றோரான நம் தலைவரை நம்புதல் பழியைத் தருமென்றால்
நாடல் சான்ற நயன் உடை நெஞ்சின் – பதி 86/7
அறத்தின் மீதான நாட்டம் மிகுந்த அன்புடைய நெஞ்சினையும்
|
நாடு |
நாடு – 1 (வி) 1. நினை, எண்ணு, think, consider
2. ஆராய், examine, investigate
3. தேடு, seek, pursue
4. விரும்பு, desire
5. அணுகு, செல், approach, seek access
– 2 (பெ) தேசம், ஆளுகைப்பகுதி, country, ruling area, kingdom
1.1
தமவும் பிறவும் ஒப்ப நாடி – பட் 209
தம்முடையவற்றையும் பிறருடையவற்றையும் ஒன்றாக எண்ணி
1.2
பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே – நற் 32/7-9
பெரியவர்கள்
முதலில் ஆராய்ந்து நட்புச் செய்வரே அன்றி,
நட்புச் செய்தபின் அவரைப்பற்றி ஆராயமாட்டார், தம்மைச் சார்ந்தவரிடத்து
1.3
இன் துணை பிரிந்தோர் நாடி
தருவது போலும் இ பெரு மழை குரலே – நற் 208/11,12
இனிய துணையைப் பிரிந்தவரை தேடிச் சென்று
அவரை மீண்டும் கொணர்வது போல் உள்ளது இந்தப் பெரிய மழையின் முழக்கம்
1.4
அன்பு அற சூழாதே ஆற்று இடை நும்மொடு
துன்பம் துணை ஆக நாடின் அது அல்லது
இன்பமும் உண்டோ எமக்கு – கலி 6/9-11
நம்மிடையே உள்ள அன்பு அழிந்துவிட நினையாது, போகும் வழியில் உம்முடன்
துன்பகாலத்தில் துணையாக நான் கூட இருப்பதை விரும்பினால், அதைத் தவிர
இன்பமான செய்தி வேறு உண்டோ எனக்கு
1.5
பாடல் சால் சிறப்பின் சினையவும் சுனையவும்
நாடினர் கொயல் வேண்டா நயந்து தாம் கொடுப்ப போல்
தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார் கண் – கலி 28/1-3
பாடிப் போற்றத்தக்க சிறப்பினையுடைய கிளைகளிலும், சுனைகளிலும்,
மிகுந்த சிரமப்பட்டு அணுகிக் கொய்யவேண்டாத அளவுக்கு விரும்பித் தாமே கொடுப்பவை போல்,
மலர்ந்த பூக்கள் மணக்கும் மாலைகளைக் கட்டிச் சூடிக்கொள்வாருக்காக,
2.
காவிரி புரக்கும் நாடு கிழவோனே – பொரு 248
காவிரியாறு பாதுகாக்கும் நாட்டை உரித்தவன்
|
நாட்டம் |
நாட்டம் – (பெ) 1. சோதிடம், astrology
2. கண், பார்வை, eye, sight
3. ஆராய்ச்சி, examination, investigation
4. நாடுதல், விருப்பம்.நோக்கம், desire, intension, aim
1.
சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று
ஐந்து உடன் போற்றி அவை துணை ஆக
எவ்வம் சூழாது விளங்கிய கொள்கை – பதி 21/1-3
சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், சோதிடம், வேதம், ஆகமம் ஆகிய
ஐந்தினையும் சேர்ந்து கற்று, அவையே துணையாக,
எவ்வுயிருக்கும் துன்பம் சூழாமல் விளங்கும் கொள்கையுடன்,
2.
நுதலது இமையா நாட்டம் – அகம் 0/4
நெற்றியில் உள்ளது இமைக்காத கண்
3.
அறம் புரிந்து அன்ன செங்கோல் நாட்டத்து
முறை வேண்டு பொழுதின் – புறம் 35/14,15
அறக்கடவுள் மேவி ஆராய்ந்தாற்போன்ற
செங்கோலால் ஆராயும் ஆராய்ச்சியையுடைய
நீதியைக் கேட்கவேண்டும்காலத்து
4.
புனிற்று புலால் நெடு வேல்
எழு பொறி நாட்டத்து எழாஅ தாயம்
வழு இன்று எய்தியும் அமையாய் – புறம் 99/6-8
நாள்தோறும் புதிய ஈரம் புலராத புலாலையுடைய நெடிய வேலையுமுடைய
ஏழிலாஞ்சனையும், நாடுதலையுடைய ஒருநாளும் நீங்காத அரசவுரிமையை
தப்பின்றாகப் பெற்றும் அமையாய்
|
நாட்டு |
நாட்டு – (வி) 1. நிறுவு, நிலைநிறுத்து, establish, institute
2. ஊன்று, நடு, விளக்கேற்று, set up, instal
3. ஏற்படுத்து, உண்டாக்கு, form, create
1.
அறன்நிலை திரியா அன்பின் அவையத்து
திறன் இல் ஒருவனை நாட்டி முறை திரிந்து
மெலிகோல் செய்தேன் ஆகுக – புறம் 71/7-9
அறமானது நிலை கலங்காத அன்பினையுடைய அவைக்களத்து
அறத்தின் திறப்பாடு இல்லாத ஒருவனை நிலைநிறுத்தி, முறை கலங்கி
கொடுங்கோல் செய்தேன் ஆகுக
2.
யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர் – அகம் 114/10
இராபொழுதைக் காத்திருப்போர் ஏற்றிய நெருங்கிய விளக்குகள்
3.
மத்தி நாட்டிய கல் கெழு பனி துறை – அகம் 211/15
மத்தி என்பவனால் உருவாக்கப்பட்ட கல் பொருந்திய குளிர்ந்த துறைமுகத்தே
|
நாட்படு |
நாட்படு – (வி) பழமையாகு, நீண்டகாலமாக இரு, become old, be long-standing
தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல் – புறம் 392/16
தேளினது கடுப்புப் போல் பலநாள் இருந்து புளிப்பேறிய கள்ளை
|
நாட்பு |
நாட்பு – (பெ) போர், போர்க்களம், போர்க்களப்பூசல்,
பார்க்க : ஞாட்பு
விழுமியோர் துவன்றிய அகன் கண் நாட்பின் – பதி 45/5
சிறந்த போர்வீரர் சூழ்ந்திருக்கும் அகன்ற இடத்தையுடைய போர்க்களத்தையும் உடைய
|
நாணு |
நாணு – 1. (வி) 1. நாணமடை, கூச்ச உணர்வுகொள், be bashful, be shy
2. வெட்கப்படு, மனம்குன்று, feel ashamed, be abashed
3. அஞ்சு, ஒடுங்கு, fear, shrink back
– 2. (பெ) நாணம், பார்க்க : நாண்
1.1
மறுகில்
நல்லோள் கணவன் இவன் என
பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே – குறு 14/4-6
வீதியில்
நல்லவளின் கணவன் இவன் என்று
பலரும் கூற நான் சிறிதே நாணம்கொண்டேன்.
1.2
வளை கை கிணைமகள் வள் உகிர் குறைத்த
குப்பை வேளை உப்பு இலி வெந்ததை
மடவோர் காட்சி நாணி கடை அடைத்து
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்
அழி பசி வருத்தம் வீட – சிறு 136-140
வளையல்(அணிந்த) கையினையும் உடைய கிணைமகள் பெரிய நகத்தால் கிள்ளின
குப்பை(யில் முளைத்த) கீரை உப்பில்லாமல் வெந்ததை,
புறங்கூறுவோர் காணுதற்கு வெட்கப்பட்டு, தலை வாயிலை அடைத்து,
கரிய பெரிய சுற்றத்துடன் ஒன்றாக இருந்து தின்னும்,
அழிக்கின்ற பசியின் வருத்தங்கள் கெடுமாறு
1.3
அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும்
அறஉணர்வு சிறிதும் இன்றி அயலார் தூற்றும் பழிச்சொற்களைக் கேட்க அஞ்சியும் – கலி 3/1
2.
மையல் வேழம் மடங்கலின் எதிர்தர
உய்விடம் அறியேம் ஆகி ஒய்யென
திருந்து கோல் எல் வளை தெழிப்ப நாணு மறந்து
விதுப்புறு மனத்தேம் விரைந்து அவன் பொருந்தி
சூருறு மஞ்ஞையின் நடுங்க – குறி 165-169
மதக்களிப்புடைய (அக்)களிறு எமனைப்போல் (எமக்கு)எதிரே வருகையினால்,
உயிர்பிழைப்பதற்குரிய இடத்தை (எங்கும்)அறியேமாய், சடுதியாக,
சீரான உருட்சியும் பளபளப்பும் உள்ள வளையல்கள் ஒலிக்குமாறு, வெட்கத்தை விட்டு,
நடுக்கமுற்ற மனத்தினையுடையவராய், விரைந்து (ஓடி)அவனை ஒட்டிநின்று,
தெய்வமகளிரேறின(பேய் பிடித்த) மயிலைப் போல் நடுங்கிநிற்க
|
நாண் |
நாண் – (பெ) 1. நாணம், மளிர்க்குரிய கூச்சம், Bashfulness, modesty
2. மான உணர்வு, sense of honour and dignity
3. வெட்கம் உணர்வு, sense of shame
4. வில்லை வளைத்துக் கட்டியிருக்கும் கயிறு, bowstring
5. தூண்டிலில் கட்டிய கயிறு, rope in a fishing rod
6. நூல், string, thread
1.
நாண் அட சாய்ந்த நலம் கிளர் எருத்தின் – பொரு 31
நாணம் (தன்னை)அழுத்த (பிறரை நோக்காது)கவிழ்ந்த அழகு மிகுந்த கழுத்தினையும்
2.
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்தென
நல் வழி கொடுத்த நாண் உடை மறவர் – மலை 386,387
(தன்னுடன்)ஒத்துப்போகாத பகைவரின் தோல்வியின்போது ஆரவாரித்ததைப் போன்று,
(வெற்றியாகிய)நல்ல தீர்வைக் கொடுத்த (இறந்துபட்ட)மான உணர்வு உள்ள வீரர்களின்
3.
உணர்குவென் அல்லென் உரையல் நின் மாயம்
நாண் இலை மன்ற யாணர் ஊர – அகம் 226/1,2
மெய்ம்மையாகக் கொள்ளமாட்டேன், உன் வஞ்சனை பொதிந்த சொற்களைக் கூறாதே
உனக்கு நிச்சயமாக வெட்கம் இல்லை, புதுவருவாயையுடைய ஊரனே
4.
வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம்
வடி மணி பலகையொடு நிரைஇ முடி நாண்
சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர் – பெரும் 119-121
கூரிய முனை மழுங்கின புலால் நாறும் வாயையுடைய வேல்களை
வார்த்த மணி (கட்டின)பலகைகளோடு வரிசையில் வைத்து, (தலையில்)முடிந்த நாணையுடைய
வில்லைச் சார்த்தி வைத்த அம்புகள் தங்கும் அகன்ற வீடுகளையும்
5.
நெடும் கழை தூண்டில் நடுங்க நாண் கொளீஇ
கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப
பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை – பெரும் 285-287
நெடிய மூங்கில் கோலாகிய தூண்டில் நடுங்கும்படியும், கயிற்றிலே கொளுவப்பட்ட
வளைந்த வாயினையுடைய தூண்டில் முள்ளின் மடித்த தலை (இரையின்றித்)தனிக்கும்படியும்,
பொதிந்த இரையைக் கௌவி (அகப்படாதுபோன)பிளந்த வாயையுடைய வாளை மீன்,
6.
கிள்ளை
வளை வாய் கொண்ட வேப்ப ஒண் பழம்
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்
பொலம் கல ஒரு காசு ஏய்க்கும் – குறு 67/1–4
கிளியானது
தன் வளைந்த அலகில் கொண்டிருக்கும் வேம்பின் ஒளிவிடும் பழம்
புதிய நூலைக் கோக்கும்பொருட்டு முனை சிறந்த நன்றாக வளர்ந்த நகங்களில் கொண்ட
பொன் அணிகலத்தின் ஒரு காசினைப் போன்றிருக்கும்
|
நாதர் |
நாதர் – (பெ) தலைவர்கள், chiefs
ஆதிரை முதல்வனின் கிளந்த
நாதர் பன்னொருவரும் நன் திசை காப்போரும் – பரி 8/6,7
திருவாதிரை மீனுக்குரிய முதல்வனாகிய சிவபெருமானின் பெயரால் சொல்லப்பட்ட
தலைவர்கள் உருத்திரர் பதினொருவரும், நல்ல திசைகளைக் காப்பவராகிய திசைக்காவலர் எண்மரும்
|
நானம் |
நானம் – (பெ) நறுமணப்பொருள், fragrant substance
நறும் தண் தகரமும் நானமும் நாறும்
நெறிந்த குரல் கூந்தல் – கலி 93/21,22
நறிய, குளிர்ச்சியான, மயிரில் தேய்க்கும் நறுமணச் சாந்தும், புழுகும் மணக்கும்
அலையலையான முடித்த கூந்தலில்
|
நானிலம் |
நானிலம் – (பெ) குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் என்னும் நான்கு வகை நிலமுடைய பூமி,
the earth consisting of the four types of lands, mullai, kuRinjci, marutham and neythal
நானிலம் துளக்கு அற முழு_முதல் நாற்றிய
பொலம் புனை இதழ் அணி மணி மடல் பேர் அணி
இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி – பரி 13/35-37
இம் மண்ணுலகத்து மக்களின் நடுக்கம் தீர, பெரிய அடிப்பகுதிவரை சென்று நாட்டிய
பொன்னாலான மலரால் அழகிய மணிகளையுடைய மடலையுடைய பெரிய குமிழ் போன்ற
பூணினைக் கொண்ட
பிரகாசமாய் ஒளிவிடும் கொம்புகளையுடைய ஆண்பன்றியும் ஆகி
|
நான்மறை |
நான்மறை – (பெ) நான்கு வேதங்கள், சதுர்வேதம், the four vedas
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் – புறம் 93/7
அறத்தை விரும்பிய கோட்பாட்டையுடைய நான்கு வேதத்தையுமுடைய அந்தணர்
|
நான்மறையோர் |
நான்மறையோர் – (பெ) அந்தணர், the brahmins
நான்மறையோர் புகழ் பரப்பியும் – பட் 202
அந்தணர்க்குள்ள புகழை அவர்க்கு நிலைநிறுத்தியும்,
|
நான்மாடக்கூடல் |
நான்மாடக்கூடல் – (பெ) மதுரை, the city Madurai
நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும் – கலி 92/65
மதுரைநகரின் பெண்களும் ஆண்களும்
|
நான்முகன் |
நான்முகன் – (பெ) பிரம்மன், Brahma
நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவர் பயந்த பல் இதழ்
தாமரை பொகுட்டின் காண்வர தோன்றி – பெரும் 402-404
நீல நிறத்தையுடைய வடிவினையுடைய திருமாலின் உந்தியாகிய
நான்முகனாகிய ஒருவனைப் பெற்ற பல இதழ்களையுடைய
தாமரையின் பொகுட்டைப் போன்று அழகுவிளங்கத் தோன்றி,
|
நாப்பண் |
நாப்பண் – (பெ) நடு, middle, centre
குண கடல் வரைப்பின் முந்நீர் நாப்பண்
பகல் செய் மண்டிலம் பாரித்து ஆங்கு – பெரும் 441,442
கீழ்கடலை எல்லையாகக்கொண்டு, கடல்(அடிவானத்தின்) நடுவே
பகற்பொழுதைச் செய்யும் ஞாயிறு தன் கதிர்களைப் பரப்பித் தோன்றினாற் போல
பல் மீன் நாப்பண் திங்கள் போல
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை – பதி 90/17,18
பல விண்மீன்களின் நடுவே விளங்கும் திங்களைப் போல
மலர்ந்த சுற்றத்தாரோடு பொலிவுடன் திகழ்கிறாய்;
|
நாமம் |
நாமம் – (பெ) அச்சம், fear, dread
பாடல் சான்ற பயம் கெழு வைப்பின்
நாடு கவின் அழிய நாமம் தோற்றி – பதி 13/9,10
புலவர் பாடும் சிறப்பு மிக்க பயன்களைத் தரும் ஊர்களையுடைய
நாடுகள் தம் அழகு சிதைந்துபோக, அச்சத்தை உண்டாக்கி
|
நாம் |
நாம் – (பெ) 1. தன்மை,பன்மைச் சொல், we
2. அச்சம், fear, dread
1.
இருவேம் ஆய்ந்த மன்றல் இது என
நாம் அறிவுறாலின் பழியும் உண்டோ – குறி 21,22
தலைவனும் யானுமே ஆய்ந்துசெய்த மணம் இது என்று
நானும்,நீயும் (என் தாய்க்கு)அறிவுறுத்தலால் நமக்குப் பழியுமுண்டோ?(இல்லை)
2.
தண் நறும் தொடையல் வெண் போழ் கண்ணி
நலம் பெறு சென்னி நாம் உற மிலைச்சி – குறி 115,116
தண்ணிய நறிய மலர்ச்சரங்களையும், வெண்மையான தாழைமடல் தலைமாலையினையும்,
அழகு பெற்ற தலையில், (முருகனோ என்று)அச்சமுறும்படி சூடி,
|
நாரிகை |
நாரிகை – (பெ) பெண், woman
நாணாள் அவனை இ நாரிகை என்மரும் – பரி 12/56
நாணுகின்றாளில்லை அவனைக்கண்டு இந்த மடந்தை என்று சொல்வோரும்
|
நார்முடிச்சேரல் |
நார்முடிச்சேரல் – (பெ) சங்க காலத்துச் சேர மன்னர்களுள் ஒருவன், a cEra king of sangam period.
இவன் ஒரு சேரநாட்டு மன்னன். இவன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் எனப்படுவான்.
சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து இவனைப் பாடுகிறது.
இதனைப் பாடியவர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்.
இவனது தந்தை சேரலாதன், தாய் வேளாவிக் கோமான் பதுமன் தேவி
இந்தக் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் ஆண்ட நாட்டின் ஒரு பகுதியை பொலம் பூண் நன்னன்
என்பவன் கைப்பற்றிக்கொண்டான். அவனை ப் பெருந்துறை என்னுமிடத்தில் போரிட்டு வென்று
இழந்த தன் தன் நாட்டை இவன் மீட்டுக்கொண்டான் என்று கல்லாடனார் அகநானூற்றின் பாடியுள்ளார்..
குடாஅது
இரும் பொன் வாகை பெருந்துறை செருவில்
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள்
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
இழந்த நாடு தந்து அன்ன – அகம் 199/18-23
இந்தக் கல்லாடனார், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றியும்
பாடியிருப்பதால் இவன் அந்த நெடுஞ்செழியன் காலத்தவன் ஆதல் வேண்டும்.
இவனது வெற்றிகளையும், பெருமைகளையும் பதிற்றுப்பத்துப்பாடல்கள் எடுத்தியம்புகின்றன.
|
நாறு |
நாறு – 1 (வி) 1. மணம் வீசு, emit a smell
2. இனிய மணம்வீசு, emit a sweet smell
3. தீய மணம்வீசு, stink
4. முளை, sprout, shoot forth
5. தோன்று, வெளிப்படு, appear, manifest
6. தோன்று, பிற, come into being, be born
– 2. (பெ) நாற்று, பிடுங்கி நடக்கூடிய இளம்பயிர், Seedlings reared for transplantation
1.1
பசு முகை தாது நாறும் நறு நுதல் – குறு 323/5
பசிய மொட்டின் பூந்தாது மணக்கும் நறிய நெற்றியையுடைய
1.2
நறு மலர் அணிந்த நாறு இரு முச்சி
குறமகள் – மலை 182,183
நல்ல வாசனையுள்ள மலர்களைச் சூடிய இனிய மணம் வீசும் கரிய உச்சிக்கொண்டையையுடைய
குறமகள்
1.3
நரந்தம் நாறும் தன் கையால்
புலவு நாறும் என் தலை தைவரும்-மன்னே – புறம் 235/8,9
நரந்தம்பூ மணக்கும் தன் கையால்
புலால் வீசும் என் தலையைத் தடவுவான்
1.4
பீரை நாறிய சுரை இவர் மருங்கின் – புறம் 116/6
பீர்க்கு முளைத்த சுரை படர்ந்த இடத்தில்
1.5
சுடரும் பாண்டில் திரு நாறு விளக்கத்து – பதி 52/13
ஒளிர்கின்ற பாண்டில் விளக்கின் இறைத்தன்மை இனிமையாக வெளிப்படும் வெளிச்சத்தில்,
1.6
தேன் தூங்கும் உயர் சிமைய
மலை நாறிய வியன் ஞாலத்து – மது 3,4
தேனிறால் தொங்குகின்ற உயர்ந்த உச்சியையுடைய
மலைகள் தோன்றியுள்ள அகன்ற உலகத்தின்கண்
2.
முடி நாறு அழுத்திய நெடு நீர் செறுவில் – பெரும் 212
முடி(யாக வீசிய)நாற்றை அழுத்தி நட்ட நீண்டநாள் நிற்கும் நீரையுடைய வயலில்
|
நாற்பெருங்குழு |
நாற்பெருங்குழு – (பெ) அரசரின் ஆலோசனைக் குழு, the four advisory bodies of a king
தாம் மேஎம் தோன்றிய நாற்பெருங்குழுவும் – மது 510
தாம் தமது ஒழுக்கத்தால் மேலாய் விளங்கிய நால்வகைப்பட்ட பெரிய குழுவினரும்
அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதர், ஒற்றர் என்ற ஐவரைக் கொண்ட குழு ஐம்பேராயம்
எனப்படும். இந்த ஐவரில் அமைச்சரைப் பற்றி ஏற்கனவே கூறிவிட்டதால், அவர் தவிர்த்த
நால்வரையும் இங்கு நாற்பெருங்குழு என்று மாங்குடி மருதனார் குறிப்பிடுகிறார்.
|
நாற்றஉணவு |
நாற்றஉணவு – (பெ) வேள்வித்தீயில் தேவர்க்குக் கொடுக்கும் உணவு,
Offerings made to the gods in sacrificial fire;
நாற்றஉணவின் உரு கெழு பெரியோர்க்கு – மது 458
அவியாகிய உணவினையுமுடைய அச்சம் பொருந்திய தெய்வங்களுக்கு,
|
நாற்றம் |
நாற்றம் – (பெ) 1. மணம், வாசனை, smell, scent, odour
2. நறுமணம், fragrance
3. ஒவ்வாத மணம், offensive smell
1.
அணங்கு வீழ்வு அன்ன பூ தொடி மகளிர்
மணம் கமழ் நாற்றம் தெரு_உடன் கமழ – மது 446,447
தெய்வமகளிர் கீழிறங்கிவந்ததைப் போல, பூத்தொழில் செய்த வளையலினையுடைய மகளிரின்,
மணம் கமழ்கின்ற வாசனை தெருவெங்கும் வீச,
கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம்
மறுகு உடன் கமழும் மதுகை மன்றத்து – புறம் 325/9,10
நெருப்பில்வேகவைத்த கொழுவிய நிணத்தின் மணம்
தெருவெல்லாம் மணக்கும் வலிய மன்றத்தில்
2.
வான் ஆற்றும் மழை தலைஇ மரன் ஆற்றும் மலர் நாற்றம்
தேன் ஆற்றும் மலர் நாற்றம் செறு வெயில் உறு கால
கான் ஆற்றும் கார் நாற்றம் கொம்பு உதிர்த்த கனி நாற்றம்
தான் நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து தரூஉம் வையை – பரி 20/8-11
மேகங்கள் வழங்கும் மழை தொடர்ந்து பெய்து, மரங்கள் தரும் மலர்களின் நறுமணமும்,
தேனைத் தரும் மலர்களின் நறுமணமும், சுடும் வெயிலால் காய்ந்து, மேலெழும் காற்றை உடைய
கானங்கள் எழுப்பும் புதுமழையின் மணமும், மரக்கிளைகள் உதிர்த்த கனிகளின் நறுமணமும்,
தான் இவ்வாறான மணங்களைக் ஒருசேரக் கலந்து கொணர்ந்து வந்து தருகின்றது வையை;
3.
செழும் கோள் வாங்கிய மா சினை கொக்கு_இனம்
மீன் குடை நாற்றம் தாங்கல் செல்லாது
துய் தலை மந்தி தும்மும் – நற் 326/2-4
செழுமையான குலைகளால் வளைந்த கரிய கிளையில், கொக்குகள்
மீனைக் குடைந்து உண்பதால் ஏற்படும் புலவுநாற்றத்தைத் தாங்க மாட்டாத
மெல்லிய பஞ்சுபோன்ற தலையையுடைய மந்தி தும்மும்
|
நாற்று |
நாற்று – 1. (வி) தொங்கவிடு, hang, suspend
2. பிடுங்கி நடக்கூடியைளம்பயிர், Seedlings reared for transplantation
1.
மனை மணல் அடுத்து மாலை நாற்றி
உவந்து இனிது அயரும் என்ப – அகம் 195/4,5
மனையின் முற்றத்தே மணலைப் பெய்து மாலைகளைத் தொங்கவிட்டு
மகிழ்ந்து இனிதே மனையின் கண் கோலம் செய்யும் என்ப
2.
செவ்வி கொள் வரகின் செம் சுவல் கலித்த
கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை – குறு 282/1,2
பருவத்தே வளர்ந்த வரகின் சிவந்த மேட்டுநிலத்தில் தழைத்த
ஒலிக்கின்ற நாற்றின் மிக்க கருநிறமுடைய ஒற்றை இலையை
|
நாலு |
நாலு – (வி) தொங்கு, hang, be suspended
பெரும் கயிறு நாலும் இரும் பனம் பிணையல் – நற் 90/6
பெரிய கயிறாகத் தொங்கும் கனத்த பனைநாரால் பின்னிப்பிணைக்கப்பட்ட ஊஞ்சலில்
|
நாலை கிழவன் |
நாலை கிழவன் – (பெ) பார்க்க : நாகன்
|
நால்கு |
நால்கு – (பெ) நான்கு என்னும் எண், the number four
பால் புரை புரவி நால்கு உடன் பூட்டி – பொரு 165
பாலை ஒத்த (நிறத்தினையுடைய)குதிரைகள் நான்கினைச் சேரப் பூட்டி,
|
நாளும் |
நாளும் – (வி.அ) 1. நாள்தோறும், everyday
2. (அந்த)நாள்கூட, even that day
3. நாட்களாக, for (many) days
1.
மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும்
மகிழ்ந்து இனிது உறை-மதி பெரும – மது 780,781
மணம் நாறுகின்ற கள்தெளிவைத் தர அதனைப் பருகி, நாள்தோறும்
மகிழ்ச்சி எய்தி இனிதாக இருப்பாயாக, பெருமானே,
2.
தோளும் அழியும் நாளும் சென்று என
நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்று
கண்ணும் காட்சி தௌவின – நற் 397/1-3
என் தோள்கள் மெலிவடைந்து தம் நலம் அழிந்தன; குறித்துச் சென்ற நாளும் கடந்துவிட்டதாக,
நீண்ட பாலைநிலத்திடை அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளியிழந்து
கண்களும் பார்வை குன்றிப்போயின
3.
பல் நாளும் படர் அட பசலையால் உணப்பட்டாள்
பொன் உரை மணி அன்ன மாமை கண் பழி உண்டோ – கலி 48/16,17
பலநாட்களாக நினைவு வருத்துவதினால் பசலையால் விழுங்கப்பட்டவளின்
பொன் உரைக்கும் கல்லில் உரைக்கப்பட்ட மணியினைப் போன்ற இவளின் மாநிறத்தின் மேல்
தவறு உண்டோ?
|
நாள் |
நாள் – (பெ) 1. தினம், a day consisting of 24 hours
2. காலை, early morning
3. நேரம், time
4. பகல், daytime
5. அன்றைய நாளுக்குரியது, that belonging to that day
6. முற்பகல், forenoon
7. வாழ்நாள், lifetime
1.
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம் – நற் 129/2
ஒரு தினம் நம்மைவிட்டுப் பிரிந்திருந்தாலும் உயிரின் தன்மை வேறுபடும்
2.
நளி சினை வேங்கை நாள் மலர் நச்சி – சிறு 23
செறிந்த கிளைகளையுடைய வேங்கை மரத்தின் (அன்றைய)காலை பூத்த மலர் (என நினைத்து)விரும்பி
3.
அரைநாள் வேட்டம் அழுங்கின் பகல் நாள்
பகு வாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி – பெரும் 111,112
நடுயாமத்து வேட்டையைச் செய்யாதுவிட்டால், பகற்பொழுதில்
பிளந்த வாயையுடைய நாய்களுடன் பசிய புதர்களை அடித்து,
4.
நாள் தர வந்த விழு கலம் அனைத்தும் – மது 695
நாட்காலத்தே (திறையாகக் கொண்டு)வந்த சீரிய கலங்களும், பிறவும்
5.
நாள்_மீன் விராய கோள்_மீன் போல – பட் 68
(அன்றைய)நாளுக்குரிய விண்மீனுடன் கலந்த கோள்களாகிய மீன்கள் போல
6.
வீயாது சுரக்கும் அவன் நாள்_மகிழ் இருக்கையும் – மலை 76
நிற்காமல் கொடுக்கும் அவனது நாளோலக்கத்தையும் (முற்பகல் நேர அரசு வீற்றிருப்பு)
7.
வேண்டுவ அளவையுள் யாண்டு பல கழிய
பெய்து புறந்தந்து பொங்கல் ஆடி
விண்டு சேர்ந்த வெண் மழை போல
சென்றாலியரோ பெரும
———————————————–
ஓங்கல் உள்ளத்து குருசில் நின் நாளே – பதி 55/14- 21
– நீ வேண்டும் கால அளவுக்கு, ஆண்டுகள் பல கழிய,
மழையைப் பெய்து உலகைக் காத்த பின்பு, பஞ்சுப் பிசிறுகளாய்ப் பொங்கி மேலெழுந்து,
மலை உச்சியை அடையும் வெண் மேகத்தைப் போல,
சென்று கெடாமல் இருப்பதாக, பெருமானே!
—————————————————————————-
எழுச்சிமிக்க உள்ளத்தினையும் கொண்ட வேந்தனே! உனது வாழ்நாள் –
|
நாழி |
நாழி – (பெ) 1. ஒரு முகத்தல் அளவைக் கருவி, 8 உழக்கு, a measure of capacity = eight uzhakku
2. ஆவநாழிகை, அம்பறாத்தூணி
3. நாழிகை, indian hour = 24 minutes
1.
நாழி கொண்ட நறு வீ முல்லை – முல் 9
பெரிய உழக்கில் கொண்டுபோன நறிய பூக்களையுடைய முல்லை
ஆழாக்கு, உழக்கு, நாழி, படி, குறுணி, பதக்கு, மரக்கால், கலம் போன்றவை பல்வேறு
முகத்தல் அளவுகள்.இவற்றுக்கிடையே உள்ள வாய்பாடு இடங்கள்தோறும் மாறுபடும்.
மாதிரிக்கு ஒன்று.
5 செவிடு – 1 ஆழாக்கு
2 ஆழாக்கு – 1 உழக்கு
2 உழக்கு – 1 உரி
2 உரி – 1 படி
8 படி – 1 மரக்கால் (குறுணி)
12 மரக்கால் – 1 கலம்
2 குறுணி – 1 பதக்கு
2 பதக்கு – 1 தூணி
2.
ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை நாழி
சூர் ததும்பு வரைய காவால் – பரி 18/30,31
அழகு ததும்பும் கூர்மையான அம்புகள் நிறைந்த அம்பறாத்தூணி யாக இருக்கிறது
தெய்வமகளிர் நிறைந்த மலையிலிருக்கும் சோலை
3.
அன்னையோ காண் தகை இல்லா குறள் நாழி போழ்தினான்
ஆண்டலைக்கு ஈன்ற பறழ்_மகனே – கலி 94/5,6
அம்மாடியோ? காணச் சகிக்காத குள்ளனாய்ப் பிறப்பதற்குரிய நாழிகையான நல்லநேரத்தில்
ஆந்தைக்குப் பிறந்த நாய்க்குட்டியே!
|
நாழிகை |
நாழிகை – (பெ) 24 நிமிடங்கள் கொண்ட ஒரு கால அளவு, indian hour = 24 minutes
சூதர் வாழ்த்த மாகதர் நுவல
வேதாளிகரொடு நாழிகை இசைப்ப – மது 670,671
நின்றேத்துவார் வாழ்த்த, இருந்தேத்துவார் புகழைச் சொல்ல,
வைதாளிகர் (தத்தம் துறைக்குரியனவற்றைப்)பாட, நாழிகை (அறிவிப்பு)இசைப்ப,
முன் நாட்களில் நாழிகை வட்டில் போன்ற கருவிகளை வைத்து, ஒரு நாளின்
பொழுதுகளை அளப்பர். அவ்வாறு அளந்து சொல்வோர் மன்னனின் அரண்மனையில் இருந்து
அவ்வப்போது மன்னனுக்கு நாழிகைக் கணக்கைத் தெரிவிப்பர்.
|
நாவல் |
நாவல் – (பெ) ஒரு மரம்,அதன் கனி, Jaumoon-plum, Eugenia jambolana
காலின் உதிர்ந்தன கரும் கனி நாவல் – மலை 135
காற்றால் உதிர்ந்தன, கரிய கனிகளான நாவல்பழங்கள்
|
நாவல் அம் தண் பொழில் |
நாவல் அம் தண் பொழில் – (பெ) நாவலந்தீவு, ஜம்புத்தீவு, one of the seven islands
பண்டைக்காலத்தில், இந்த அண்டம் ஏழு தீவுகளைக் கொண்டது என்றும், அவை ஒவ்வொன்றும்
ஒவ்வொரு வகை நீர்மப் பொருளால் சூழப்பட்டது என்றும் நம்பினர். அவற்றுள் உப்புநீரால்
சூழப்பட்ட தீவு ஜம்புத்தீவு எனப்பட்டது. ஜம்பு என்பதற்கு நாவல் என்று பெயர். எனவே இது தமிழில்
நாவலந்தீவு எனப்பட்டது. ”தீங்கனி நாவல் ஓங்கும் இத் தீவினில்”என்று
மணிமேகலை (9:17) குறிப்பிடுகிறது.
எனவே நாவலந்தீவைத் தமிழ் இலக்கியங்கள் நாவல் அம் தண் பொழில் என்று கூறுகின்றன.
இச் சொற்றொடரே நமது நாடான இந்தியாவையும் குறிக்கப் பயன்பட்டது.
நாவல் அம் தண் பொழில் வீவு இன்று விளங்க – பெரும் 465
நாவலால் பெயர்பெற்ற அழகிய குளிர்ந்த உலகமெல்லாம் கேடில்லாமல் விளங்கும்படி
நாவல் அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை
குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து – பரி 5/8,9
இந்த நாவலந்தீவு எனப்பட்ட குளிர்ந்த சோலைகளைக் கொண்ட நிலப்பகுதியின் வடக்கிலிருக்கும்
பொழிலில் உள்ள கிரவுஞ்சம் என்கிற பறவையின் பெயர்கொண்ட பெரிய மலையை உடைத்து
|
நாவாய் |
நாவாய் – (பெ) மரக்கலம், ship
1.
பெரும் கடலில் பயணம்செய்து, வெளிநாட்டிலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்ய உதவும்
பெரும் கப்பல் இது. எனவே நாவாய் என்பது ஒரு பெரிய பாய்மரக்கப்பல் ஆதல் வேண்டும்.
பால்கேழ்
வால்உளைப் புரவியொடு வடவளம் தரூஉம்
நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை – பெரும் 319-321
பாலின் நிறமான
வெண்மையான தலைச்சிறகுகளையுடைய குதிரைகளுடன் வடதிசையின் வளங்களைக் கொணரும்
மரக்கலங்கள் சூழ்ந்த பெருமையையுடைய கடற்பக்கத்தினையும்,
பெரும்பாணாற்றுப்படை என்னும் நூல் தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர்
உருத்திரங்கண்ணனார் பாடியது. இங்கு குறிப்பிடப்படும் துறைமுகம் பாடலில் நீர்ப்பாயல்துறை
எனப்படுகிறது. எனவே இது தொண்டை நாட்டில் உள்ள மாமல்லபுரம் எனப்படும் கடல் மல்லை
என்னும் பட்டினத்தைக் குறிக்கும் எனலாம்.
2.
வான் இயைந்த இரு முந்நீர்
பேஎம் நிலைஇய இரும் பௌவத்து
கொடும் புணரி விலங்கு போழ
கடும் காலொடு கரை சேர
நெடும் கொடி மிசை இதை எடுத்து
இன் இசைய முரசம் முழங்க
பொன் மலிந்த விழு பண்டம்
நாடு ஆர நன்கு இழிதரும்ஆடு இயல் பெரு நாவாய்
மழை முற்றிய மலை புரைய
துறை முற்றிய துளங்கு இருக்கை
தெண் கடல் குண்டு அகழி
சீர் சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ – மது 75-88
வானவெளியோடு ஒன்றுபட்டுத் தோன்றும் பெரிய மூன்று நீர்மையுடைய
அச்சம் நிலைபெற்ற கரிய கடலில்,
வளையும் திரை குறுக்கே பிளவுபடுமாறு,
வேகமான காற்றால் (ஓடித்)துறையைச் சேரும்பொருட்டு,
நெடிய கொடியை உச்சியில் உடையவாய், பாய் விரித்து
இனிய இசையை உடைய முரசம் முழங்க,
பொன் மிகுதற்குக் காரணமான சீரிய சரக்குகளை
நாட்டிலுள்ளோர் நுகரும்படி நன்றாக இறக்குதலைச் செய்யும்
அசையும் இயல்பினையுடைய பெரிய மரக்கலங்கள் –
மேகங்கள் சூழ்ந்த மலையைப் போல
துறைகள் சூழ்ந்த – அசைகின்ற இருக்கையினையும்,
தெளிந்த கடலாகிய ஆழ்ந்த அகழியினையும்,
சிறப்புக்கள் அமைந்த உயர்ந்த நெல்லின் (பெயரைப்பெற்ற)
(சாலியூர் என்ற)ஊரைக் கொண்ட உயர்ந்த வெற்றியை உடையவனே
இந்த மதுரைக்காஞ்சி, பாண்டியன் தலையாலங்கானதுச் செருவென்ற நெடுஞ்செழியனை,
மாங்குடி மருதனார் பாடியது. இங்கு குறிப்பிடப்படும் சாலியூர் என்பது நெற்குன்றம்
எனப்படும் மேற்குக்கடற்கரைப் பட்டினம் என்ற கருத்து உள்ளது. தனது மேலைநாட்டு
வணிகத்துக்காகப் பாண்டியன் இப்பகுதியைக் கைப்பற்றி ஆண்டான் என்பதை மேலைநாட்டு
வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலைநாட்டுச் சரக்குகளை இறக்குமதி செய்யும்
நாவாய்கள் இங்கு வந்து சென்றன என்ற கிறிப்பினின்றும், நாவாய் என்பது நீண்ட கடற்பயணம்
மேற்கொள்ளும் பெரிய பாய்மரக்கப்பல் என்பது பெறப்படும்.
விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்
நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்மார்
புணர்ந்து உடன் கொணர்ந்த புரவியோடு அனைத்தும் – மது 321- 323
சீரிய மரக்கலங்களைக் கடலில் இயக்கும் மாலுமிகள்
அகன்ற இடத்தையுடைய நாடுகளினின்றும் நல்ல அணிகலன்களை எடுத்துச்செல்ல
பலருடன் கூடி, தம்முடன் கொண்டுவந்த குதிரைகளோடே முழுவதும்
என்ற மதுரைக்காஞ்சி அடிகள் இதனை உறுதிப்படுத்தும்.
பனைமீன் வழங்கும் வளை மேய் பரப்பின்
வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூ
கூம்பு முதல் முருங்க எற்றி காய்ந்து உடன்
கடும் காற்று எடுப்ப கல் பொருது உரைஇ
நெடும் சுழி பட்ட நாவாய் போல – மது 375 – 379
பனைமீன்கள் உலாவும் சங்கு மேய்கின்ற கடலிடத்தில்,
இறுகும் பிணிப்பினையுடைய வலிமையான (பாய் கட்டின)கயிற்றை அறுத்துப், பாயையும் பீறிப்
பாய்மரம் அடியில் முறியும்படி மோதி வெகுண்டு ஒருசேரக்
கடிய காற்று எடுக்கையினால் பாறைக் கற்களில் மோதி உராய்ந்து,
நெடிய சுழற்காற்றில் அகப்பட்ட மரக்கலத்தைப் போல
என்ற மதுரைக்காஞ்சி அடிகள் ஒரு நாவாயைப் பற்றி விளக்கமாக உரைப்பதைக் காணலாம்.
3.
மேலைநாடுகளுக்கு நாவாய் ஓட்டி, தமிழர் வாணிபம் செய்தனர் என்பதை நற்றிணை குறிப்பிடுகிறது.
எந்தை
வேறு பல் நாட்டு கால் தர வந்த 5
பல வினை நாவாய் தோன்றும் பெரும் துறை
கலி மடை கள்ளின் சாடி அன்ன – நற் 295/4-7
எமது தந்தையின்,
வேறுபட்ட பல நாடுகளிலிருந்து காற்றால் உந்தித்தள்ளப்பட்டு வந்த
பலவாறான வேலைப்பாடுகள் கொண்ட நாவாய்கள் வந்து நிற்கும், பெரிய துறைமுகத்தில் இருக்கும்
செருக்குத்தரும் உணவான கள் இருக்கும் சாடியைப் போன்ற.
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களி இயல் யானைக் கரிகால் வளவ – புறம் 66-68
என்ற புறப்பாட்டு இதனை உறுதிப்படுத்தும்.
|
நிகர் |
நிகர் – 1. (வி) ஒத்திரு, resemble
– 2. (பெ) ஒளி, brightness, splendour
1
மடவள் அம்ம நீ இனி கொண்டோளே
தன்னொடு நிகரா என்னொடு நிகரி
பெரு நலம் தருக்கும் என்ப – ஐங் 67/1-3
அறியாமையுடையவள், நீ இப்பொழுது கொண்டிருப்பவள்;
தன்னோடு ஒப்பிடமுடியாத என்னைத் தனக்கு ஒப்பாகக் கூறிக்கொண்டு
தன்னுடைய பெண்மைநலம் பெரிது என்று பெருமைபேசிக்கொண்டிருக்கிறாள் என்கிறார்கள்
2
தாது சேர் நிகர் மலர் கொய்யும்
ஆயம் எல்லாம் உடன் கண்டன்றே – குறு 311/6,7
பூந்தாதுக்கள் சேர்ந்த ஒளிபொருந்திய மலர்களைக் கொய்துகொண்டிருந்த
தோழிகள் எல்லாரும் சேர்ந்து பார்த்தார்களே!
|
நிச்சம் |
நிச்சம் – (பெ) நித்தமும், எப்பொழுதும், daily, always
அச்சத்தான் மாறி அசைவினான் போத்தந்து
நிச்சம் தடுமாறும் மெல் இயல் ஆய்_மகள்
மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம்
சுற்றி சுழலும் என் நெஞ்சு – கலி 110/8-11
உன் மீதுள்ள அச்சத்தால் உன்னை விட்டு என்னிடம் வந்து, இங்கும் இருக்கமாட்டாத வருத்தத்தால்
உன்னிடம் சென்று,
இவ்வாறாக நித்தமும் தடுமாறுகின்றது, மென்மையான இயல்பினையுடைய ஆயர்மகளே!
தயிர் கடையும் மத்தில் கட்டிய கயிற்றினைப்போல் உன் அழகைச்
சுற்றிச் சுற்றிச் சுழலும் என் நெஞ்சு;
|
நிணன் |
நிணன் – (வி) பார்க்க : நிணம்
கருமறி காதின் கவை அடி பேய்மகள்
நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல – சிறு 197,198
வெள்ளாட்டு(க் காதினைப்போன்ற) காதுகளையும், பிளந்த பாதங்களையும் உடைய பேய்மகள்
நிணத்தை தின்று சிரிக்கின்ற தோற்றத்தைப் போன்று,
|
நிணம் |
நிணம் – (பெ) 1. கொழுப்பு, fat
2. ஊன், தசை, மாமிசம், flesh
1.
இழுதின் அன்ன வால் நிணம் செருக்கி – மலை 244
வெண்ணெய் போன்ற வெண்மையான கொழுப்பு (அம்பு தைத்த இடத்தில்)மிகுதியாய் வெளிவர,
2.
நிணம் படு குருதி பெரும் பாட்டு ஈரத்து
அணங்குடை மரபின் இரும் களம்தோறும் – புறம் 392/7,8
தசையும் குருதியும் தோய்ந்த பெருக்கால் உண்டாகிய ஈரம் பொருந்திய,
துன்பம் தரும் தெய்வங்கள் உறையும் முறைமையினையுடைய பெரிய போர்க்களந்தோறும்
|
நிதி |
நிதி – (பெ) பணம், செல்வம், money, wealth
வாணன் வைத்த விழு நிதி பெறினும்
பழி நமக்கு எழுக என்னாய் விழு நிதி
ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே – மது 203-205
வாணன் எனும் சூரன் வைத்த சீரிய பெரும்செல்வத்தைப் பெற்றாலும்,
பழி நமக்கு வரட்டும் என்றுகூறாய், (மாறாக)சீரிய செல்வப் பெருக்கை
வழங்கும் எண்ணத்துடன் புகழைமட்டும் விரும்புவாய்;
|
நிதியம் |
நிதியம் – (பெ) பொருள் தொகுதி, finance, treasure
நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின்
வதுவை மகளிர் கூந்தல் கமழ்கொள – அகம் 378/1,2
மிக்க பொருள் தங்கும் உயர்ந்தோங்கும் மனையகத்தே
கலியாணம் செய்த மகளிர்தம் கூந்தல் போல மணம் பொருந்துமாறு
|
நித்தம் |
நித்தம் – (பெ) நடனம், dancing
ஒத்து அளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார்
நித்தம் திகழும் நேர் இறை முன்கையால்
அ தக அரிவையர் அளத்தல் காண்-மின் – பரி 12/42-44
தாளத்தை அளந்து சீரின் கூறுபாட்டை அறிந்து, ஒருவருக்கொருவர் பின்னிடாத தகுதியுடையவராய்
நடன அசைவுகள் நன்கு விளங்கும் நேராக இறங்கும் தம் முன்கையால்
அழகுமிக்கதாய் ஆடல்மகளிர் அந்தத் தாளத்தை அளத்தலைப் பாருங்கள்;
|
நித்திலம் |
நித்திலம் – (பெ) முத்து, pearl
நெடும் கால் புன்னை நித்திலம் வைப்பவும் – சிறு 149
நெடிய தாளையுடைய புன்னை முத்துக்கள் (போல அரும்புகள்) வைக்கவும்
|
நின |
நின – (பெ) உன்னுடையது, yours
நின யானை சென்னி நிறம் குங்குமத்தால்
புனையா பூ நீர் ஊட்டி புனை கவரி சார்த்தா – பரி 19/85,86
உனது யானையின் நெற்றியின் நிறத்தைக் குங்குமத்தால்
கோலம் செய்து, மலருடன் நீரையும் ஊட்டி, காதுகளில் ஒப்பனை செய்வதற்குக் கவரிகளைச் சார்த்தி
|
நினவ |
நினவ – (பெ) உன்னுடையன, yours (plural)
நினவ கூறுவல் எனவ கேள்-மதி – புறம் 35/13
நின்னுடையன சில காரியம் சொல்லுவேன், என்னுடைய சில வார்த்தைகளைக் கேட்பாயாக
|
நிமிரல் |
நிமிரல் – (பெ) விறைப்பான பருக்கைகள் உள்ள சோறு, stiff boiled rice
இந்த நிமிரல் என்ற சொல் சங்க இலக்கியத்தில் மூன்று முறை வந்துள்ளது.
அந்த மூன்று முறையும் அது கொக்கு உகிர் நிமிரல் என்றே சொல்லப்படுகிறது.
கொக்கின் கால் நகத்தைப் போன்று விறைப்பாக உள்ள பருக்கைகளை நிமிரல் எனலாம்.
1.
கதிர் கால் வெம்ப கல் காய் ஞாயிற்று
திரு உடை வியல் நகர் வரு விருந்து அயர்-மார்
பொன் தொடி மகளிர் புறங்கடை உகுத்த
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட
அகல் அங்காடி அசை நிழல் குவித்த
பச்சிறா கவர்ந்த பசும் கண் காக்கை – நற் 258/3-8
கதிர்கள் கால்களை வெம்பிப்போகச்செய்ய, பாறைகளைச் சூடேற்றும் ஞாயிற்றுப் பகலில்
செல்வம் மிக்க தம் பெரிய வீட்டில், வந்திருக்கின்ற விருந்தினரை உபசரிக்க,
பொன் வளையல் அணிந்த மகளிர் வீட்டுக் கொல்லைப்புறத்தில் உதிர்த்துவிட்ட,
கொக்கின் நகம் போன்ற சோற்றை விரும்பி உண்டு, பொழுது மறைய
அகன்ற மீன்கடையில் நீண்டுசெல்லும் நிழலில் குவித்த
பசிய இறாமீனைக் கவர்ந்த பசுமையான கண்களைக்கொண்ட காக்கை,
2.
பெரும் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல்
பசும் கண் கருனை சூட்டொடு மாந்தி – புறம் 395/36,37
3.
கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர – புறம் 398/25
|
நிமிர் |
நிமிர் – (வி) 1. நேராகு, உயர், stand upright, become erect
2. வளையாமல் நேராகு, be straight
3. விறைப்பாக இரு, be stiff
4. முன் நோக்கிப் புடைத்துக்கொண்டிரு, projecting forward
5. அதிகமாகு, எல்லை மிகு, exceed the limit
6. நீட்டி உயர்த்து, be outstretched
7. இடையிடு, interpose
8. பரவு, spread out, expand
1.
பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி
அறுஅறு காலைதோறு அமைவர பண்ணி – நெடு 103,104
பருத்த திரிகளைக் கொளுத்தி, (செந்)நிறமான தழல் மேல்நோக்கி எரிகின்ற சுடரை,
(நெய்)வற்றிப்போகும்போதெல்லாம் (நெய்வார்த்துத் திரிகளைத்) தூண்டி(ச் சரிப்படுத்தி),
2.
குழையன் கோதையன் குறும் பைம் தொடியன்
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல
நெடு நிமிர் தெருவில் கை புகு கொடு மிடை
நொதுமலாளன் கதுமென தாக்கலின் – நற் 50/2-5
நம் தலைவன் இளந்தளிர்களையும், மாலையையும், குறிய சிறிய வளையல்களையும்
கொண்டவனாய்
(சேரி)விழாவில் கொண்டாடும் துணங்கைக் கூத்தில் (பரத்தையரைத்)தழுவிக்கொள்ளுதலை
கையகப்படுத்தச் சென்றபோது
நெடிய நேரான தெருவில் வேறொரு வழியில் வந்து புகுந்து அந்த வளைந்த இடத்தில்
நமக்கு அயலானாகிய அவன் திடீரென எதிர்ப்பட
3.
முரவை போகிய முரியா அரிசி
விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல் – பொரு 113,114
(தீட்டப்படாத அரிசியிலுள்ள)வரி நீக்கப்பெற்ற(தீட்டிய) உடையாத(முழு) அரிசியின்
விரல் என்னும்படி விறைப்பான, ஒரே அளவு அமைந்த, (பருக்கை பருக்கையான)சோற்றையும்
4.
சிலை உலாய் நிமிர்ந்த சாந்து படு மார்பின் – புறம் 394/1
வில் பயிற்சியால் முன்னோக்கிப் புடைத்துக்கொண்டிருக்கும் சந்தனம் பூசப்பட்ட மார்பினையுடைய
5.
குரூஉ மயிர் புரவி உராலின் பரி நிமிர்ந்து
கால் என கடுக்கும் கவின் பெறு தேரும் – மது 387,388
நிறமிக்க மயிரினையுடைய குதிரைகள் ஓடுதலாலே, ஓட்டம் மிக்கு,
காற்றுப்போல் விரையும் அழகிய தேரும்,
6.
நிலம் பூத்த மரம் மிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள – கலி 27/9
நிலத்திற்கு அழகுசெய்யும் மரத்தின் மேலிருந்து ((கழுத்தை) நீட்டி உயர்த்தி கூவும் குயில்கள்
என்னை எள்ளி நகையாட,
7.
உருவம் மிகு தோன்றி ஊழ் இணர் நறவம்
பருவம் இல் கோங்கம் பகை மலர் இலவம்
நிணந்தவை கோத்தவை நெய்தவை தூக்க
மணந்தவை போல வரை மலை எல்லாம்
நிறைந்தும் உறழ்ந்தும் நிமிர்ந்தும் தொடர்ந்தும்
விடியல் வியல் வானம் போல பொலியும்
நெடியாய் – பரி 19/78-84
நிறம் மிகுந்த தோன்றியும், மலர்ந்த பூங்கொத்துக்களையுடைய நறவமும்,
பருவம் பாராமல் எப்போதும் பூக்கும் கோங்கமும், அதனோடு மாறுபட்ட நிறத்தையுடைய
இலவமலர்களும்,
செறிவாகக்கட்டியவை, கோத்தவை, நெய்யப்பட்டவை, தூக்கிக்
கட்டப்பட்டவை ஆகிய மாலைகளைப் போல மலைப்பக்கம் எங்கும்
நிறைந்தும், கலந்தும், இடையிட்டும், நெருங்கியும்
விடியற்காலத்து அகன்ற வானத்தைப் போன்று பொலிவுற்றுத் திகழும்
நெடியவனே!
8.
கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர
பாடல் சான்ற நெய்தல் நெடு வழி – சிறு 150,151
கரையிடத்துள்ள வெண்மையான மணற்பரப்பில் கடல் பரந்து ஏறிப்பரவ,
(புலவர்)பாடுதற்கு அமைந்த நெய்தல் நிலத்தே கிடந்த நீண்ட வழியில்,
|
நியமம் |
நியமம் – (பெ) 1. கடைத்தெரு, bazaar street
2. ஓர் ஊரின் பெயர், the name of a city
1.
திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து
மாடம் மலி மறுகின் கூடல் குட வயின் – திரு 70,71
திருமகள் வீற்றிருந்த குற்றம் தீர்ந்த அங்காடித் தெருவினையும்,
மாடங்கள் மிகுந்திருக்கும் (ஏனைத்)தெருக்களையும் உடைய மதுரையின் மேற்றிசையில்
2.
கரும் கண் கோசர் நியமம் ஆயினும்
உறும் எனக் கொள்ளுநர் இல்லை – அகம் 90/12,13
கரிய கண்களையுடைய கோசர்கள் வாழும் நியமம் என்னும் ஊரினைக் கொடுப்பினும்
அமையும் எனக் கொள்வார் அல்லர்
|
நிர |
நிர – (வி) 1. வரிசையாக அமை, arrange in order
2. பரவு, spread, expand
1.
நிரந்து இலங்கு வெண் பல் மடந்தை – குறு 52/4
வரிசையாக அமைந்த மின்னுகின்ற வெள்ளைப் பற்களையும் உடையவளே!
2.
நீர் நிரந்து ஏற்ற நிலம் தாங்கு அழுவத்து
சூர் நிரந்து சுற்றிய மா தபுத்த வேலோய்
சீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேர்நிரந்து
ஏறுமாறு ஏற்கும் இ குன்று – பரி 18/3-6
நீரைப் பரந்து ஏற்ற நிலம் தாங்குகின்ற கடற்பரப்பில்
கொடுமையுடன் பரந்து சுற்றிய சூரபன்மாவை அழித்த வேலினையுடையவனே! உன்னுடைய
புகழைப் பரந்து பெற்று விளங்கும் இமயமலையுடன் நேர்நின்று
மாறுபடுதலை ஏற்கும் இந்தத் திருப்பரங்குன்றம்;
|
நிரப்பம் |
நிரப்பம் – (பெ) முழுமை, பூரணம், fullness
போ சீத்தை மக்கள் முரியே நீ மாறு இனி தொக்க
மர கோட்டம் சேர்ந்து எழுந்த பூ கொடி போல
நிரப்பம் இல் யாக்கை தழீஇயினர் எம்மை
புரப்பேம் என்பாரும் பலரால் – கலி 94/22-25
போ! சீச்சீ! அரை மனிதனே! இனி நீ இந்நிலையைக் கைவிடு! திரண்ட
மரத்தின் வளைவான இடத்தைப் பற்றி எழுந்த பூங்கொடியைப் போல
முழு வளர்ச்சி இல்லாத தம் வடிவால் என்னைத் தழுவி, என்னைக்
காப்பாற்றுவோம் என்று கூறுபவர் பலர்
|
நிரப்பல் |
நிரப்பல் – (பெ) நிரப்புதல், முழுமையாக்கல், make full
பரிசில்
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்பு-மதி – புறம் 360/13,14
உன்பால் பொருளை
நச்சி வருவார் வர அவர்கட்கு வேண்டும் பொருளை நிரம்ப நல்குதலைப் பாதுகாப்பாயாக
|
நிரப்பு |
நிரப்பு – 1. (வி) 1. ஓர் இடத்தில் இட்டு நிறைவாக்கு, fill up, replenish
2. இல்லை என்று கூறு, இன்மையைக் கூறு, say ‘No’, express poverty
– 2. (பெ) வறுமை, poverty, destitution
1.1
வெண் தோடு நிரைஇய வேந்து உடை அரும் சமம்
கொன்று புறம்பெற்று மன்பதை நிரப்பி
வென்றி ஆடிய தொடி தோள் – பதி 40/10-12
வெண்மையான பனந்தோட்டினை வரிசையாகத் தொடுத்து அணிந்தவராய் வரும்
வேந்தர்களையுடைய அரிய போரினை
அழித்து, அவரைப் புறமிடச் செய்து, அவ்விடங்களில் மக்களைக் குடியேறச் செய்த
(மக்களால் நிரப்பிய),
வெற்றிக் குரவை ஆடிய தொடி விளங்கும் தோள்களையும்,
1.2
நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே – புறம் 180/1
’இலன்’ என்னும் எவ்வம் உரையாவாறு கொடுக்கும் செல்வமும் உடையான் அல்லன்
2.
இரப்ப சிந்தியேன் நிரப்பு அடு புணையின் – புறம் 376/18
பிறர்பால் சென்று இரத்தலை நினையேனாயினேன், வறுமையாகிய கடலைக் கடக்கும்
தெப்பமாக அவன் இருத்தலால்
|
நிரம்பு |
நிரம்பு – 1. (வி) 1. நிறை, முழுமையடை, become full, complete
2. முடிவுறு, end, terminate
3. நன்கு வளர்ச்சியடை, become fully grown
4. மிகுந்திரு, be copius, abundant
– 2. (பெ). நிரம்புதல், முழுதும் பொருந்துதல், being full
1.1.
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர் – புறம் 191/3
என்னுடைய மாண்புமிக்க மனைவியுடனே புதல்வரும் அறிவு நிறையப்பெற்றிருக்கின்றனர்
1.2.
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை – நற் 99/1
ஈரப்பசை இல்லாமல் முற்றிலும் வறண்டுபோன முடிவே இல்லாத நீண்ட வெளியில்
1.3.
அன்னாய் இவன் ஓர் இள மாணாக்கன்
தன் ஊர் மன்றத்து என்னன்-கொல்லோ
இரந்தூண் நிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெரும் செம்மலனே – குறு 33/1-4
தோழியே! இந்தப் பாணன் ஓர் இளம் மாணாக்கன் போல் இருக்கிறான்.
தன் ஊர் மன்றத்தில் எப்படி இருப்பானோ?
இரந்து உண்ணும் உணவினையுடைய நன்கு வளர்ச்சி பெறாத மேனியோடு
இந்தப் புது ஊரிலும் பெரும் சிறப்புடையவனாயிருக்கிறான்.
1.4.
ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற – மலை 284
தீமைகள் மிகுந்த பாதையில் அவர் முன்னேசெல்ல
2.
நிரம்பு அகல்பு அறியா ஏறா ஏணி
நிறைந்து நெடிது இரா தசும்பின் வயிரியர்
உண்டு என தவாஅ கள்ளின்
வண் கை வேந்தே – பதி 43/33-36
முழுதும் பொருந்துதலும், இடைவெளி மிக விடுதலும் இல்லாத, கோக்காலியின் மேல்
வைக்கப்பட்டுள்ள
நீண்ட நேரம் நிறைந்து இருப்பதை அறியாத குடங்களிலிருக்கும், கூத்தரும் பாடகரும்
உண்டபோதும் குறையாத, கள்ளினையுடைய
வளமையான கொடையினையுடைய வேந்தனே! (பார்க்க: ஔவை – உரை விளக்கம்)
|
நிரயம் |
நிரயம் – (பெ) நரகம், hell
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது – புறம் 5/5,6
அருளையும் அன்பையும் நீக்கி, பாவம் செய்தாரை நீங்காத
நரகத்தைத் தமக்கு இடமாகக் கொள்பவரோடு பொருந்தாமல்
|
நிரல் |
நிரல் – (பெ) 1. வரிசை, row
2. ஒப்பு, ஒரே தன்மையில் இருத்தல், similarity, equality
1.
நிரல் இயைந்து ஒன்றிய செலவின் – அகம் 400/8
வரிசையாகப் பொருந்தி ஒரே மாதிரி செல்லும் (நான்கு குதிரைகள்)
2.
கொடுப்பின் நன்கு உடைமையும் குடி நிரல் உடைமையும் – குறி 30
(நாமாக)மணந்தால் நன்கு அமையுமோ என்பதையும்,(தலைவனின்)குடும்பம் ஒத்ததாக
இருக்குமோ என்பதையும்
|
நிரவு |
நிரவு – (வி) சமனாக்கு, level
கார் ஏறு பொருத கண் அகன் செறுவின்
உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர் – பெரும் 210,211
கரிய ஆனேறுகள் பொருத இடமகன்ற வயல்களில்,
(தம்மால்)உழப்படாத (அந்த)நுண்ணிய சேற்றை(க் காலால்) சமப்படுத்திய உழவர்
|
நிரை |
நிரை – 1. (வி) 1. வரிசையாகு, be in a row
2. ஒழுங்குபடு, முறைப்படு, be orderly
– 2. (பெ) 1. வரிசை, row
2. கூட்டம், திரள், herd, collection
3. பசுக்கூட்டம், herd of cows
1.1
நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை – மது 116
வரிசையாக வருகின்ற படகின் மீன்பிடிப்போர் கரையில் இறங்கும் ஓசையும்,
1.2
சில் நிரை ஓதி என் நுதல் பசப்பதுவே – ஐங் 222/4
சிலவாய் ஒழுங்குபட்ட கூந்தலையுடைய என் நெற்றியில் பசலை பாய்ந்தது
2.1
நீர் அயல் கலித்த நெரி முகை காந்தள்
வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரைதொறும்
விடு கொடி பிறந்த மென் தகை தோன்றி பரி 14/13-15
நீர்நிலையின் அருகே தழைத்திருக்கும் சுருக்கங்களையுடைய அரும்புகளையுடைய காந்தளின்
நெடிய பூங்கொத்துக்கள் மலர்ந்த வளமையான இதழ்களின் வரிசைகள்தோறும்
கொழுந்துவிட்டுப் படர்ந்த கொடியில் தோன்றிய மென்மையான அழகுடைய தோன்றி
2.2
நிவந்த யானை கண நிரை கவர்ந்த – மது 744
உயரமான யானைகளின் திரண்ட கூட்டத்தைக் கவர்ந்த
2.3
பாடு இன் தெண் மணி பயம் கெழு பெரு நிரை – அகம் 399/8,9
இனிய தெளிந்த ஓசையையுடைய மணிகளைப் பூண்ட பயன் மிக்க பெரிய பசுக்கூட்டம்
|
நிரையம் |
நிரையம் – (பெ) நரகம், பார்க்க : நிரயம்
வரையா நயவினர் நிரையம் பேணார் – நற் 329/1
அளவில்லாத அன்பினையுடையவர், நரகத்துள் உய்க்கும் தீயநெறிகளைக் கைக்கொள்ளாதவர்,
|
நிறன் |
நிறன் – (பெ) பார்க்க : நிறம்
1.
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி – நற் 309/2
மாந்தளிர் போன்ற அழகினை இழந்த என் மேனி நிறத்தையும் நோக்கி
2.
நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும் – பரி 13/34
பகைவரின் மார்பை உழுகின்ற வளைந்த வாயினையுடைய கலப்பைப் படையையும் உடைய
பலதேவனும்,
|
நிறப்படை |
நிறப்படை – (பெ) குத்துக்கோல், அங்குசம், elephant goad
நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன் – புறம் 293/1
குத்துக்கோலுக்கு அடங்காத யானையின் மேல் இருப்போனாகிய வள்ளுவன்
|
நிறம் |
நிறம் – (பெ) 1. வண்ணம், colour
2. மார்பு, bosom, breast
1.
கான குமிழின் கனி நிறம் கடுப்ப
புகழ் வினை பொலிந்த பச்சையொடு – சிறு 225,226
காட்டுக் குமிழின் பழத்தின் நிறத்தை ஒப்ப,
புகழப்படும் தொழில்வினை சிறந்து விளங்கும் போர்வையோடு
2.
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டி
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது – அகம் 71/11,12
மிக்க துன்பத்தை அடைந்திருப்பார் ஒருவரின் அரிய மார்பினைக் குறித்து
கூரிய வேலை எறிவார் போல வருந்துதலை ஒழியாது
|
நிறு |
நிறு – (வி) 1. நிலைநிறுத்து, establish
2. ஆற்றியிரு, be preserved with patience
3. அறுதிசெய், தீர்மானி, decide, determine
4. படை, உருவாக்கு, create, construct
5. நிறுத்து, போட்டியிடச்செய், field (as a candidate)
6. வை, place, put
7. முழக்கு, (வாச்சியங்களை) வாசிக்கச்செய், play (the musical instrument)
1.
அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா
மெல்லியான் பருவம் போல் மயங்கு இருள் தலை வர – கலி 129/5,6
நல்லன அல்லாதவற்றை மேற்கொண்டு அற நெறிகளை நிலைநிறுத்தாத
ஆற்றல் குறைந்த மன்னனின் அரசாட்சியைப் போல மயக்கும் இருள் கவிய
2.
பொறுக்கல்லா நோய் செய்தாய் பொறீஇ நிறுக்கல்லேன்
நீ நல்கின் உண்டு என் உயிர் – கலி 94/11,12
பொறுக்க முடியாத காம நோயை ஏற்படுத்தினாய்! நான் பொறுத்துக்கொண்டு ஆற்றியிருக்கமாட்டேன்,
நீ இரக்கப்பட்டால் என் உயிர் என்னிடத்தில் உண்டு
3.
நாள் வரை நிறுத்து தாம் சொல்லிய பொய் அன்றி
மாலை தாழ் வியன் மார்பர் துனைதந்தார் – கலி 33/29,30
தாம் குறித்த நாளின் எல்லையை அறுதிசெய்து, தாம் சொல்லியது பொய்யாகிப்போகாமல்
மாலை தொங்கும் அகன்ற மார்பினையுடைய அவர் விரைந்து வருகிறார்
4.
இரும் புலி கொள்-மார் நிறுத்த வலையுள் ஓர்
ஏதில் குறு நரி பட்டு அற்றால் – கலி 65/24,25
பெரிய புலியைப் பிடிப்பதற்கு உண்டாக்கிய வலையினில், ஒரு
ஒன்றிற்கும் உதவாத குள்ள நரி மாட்டிக்கொண்டதைப் போல்
5.
நேர்_இழாய் கோள் அரிது ஆக நிறுத்த கொலை ஏற்று
காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே
ஆர்வு_உற்று எமர் கொடை நேர்ந்தார் – கலி 104/73-75
அழகிய அணிகளை அணிந்தவளே! யாராலும் அணைக்கமுடியாது என்று நிறுத்தப்பட்ட
கொலைகாரக் காளையான
காரியின் சீற்றத்துக்கு அஞ்சாதவனாய்ப் பாய்ந்து அதை அடக்கிய அந்த இளைஞனுக்கே
மகிழ்ச்சியுடன் எம் வீட்டார் உன்னைக் கொடுப்பது என்று முடிவுசெய்தார்,
6.
வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ் பசும் குடை – அகம் 37/10
வெயிலில் குப்புற வைத்த மிக்க இதழ்களையுடைய பசிய (பனையோலைக்)குடையில்
7.
இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க
உருவ பல் பூ தூஉய் வெருவர
குருதி செம் தினை பரப்பி குறமகள்
முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர் – திரு 240-244
முழங்குகின்ற ஓசையினையுடைய அருவியோடு இனிய இசைக்கருவிகளும் ஒலிக்க,
சிவந்த நிறத்தையுடைய பல பூக்களையும் தூவி, அச்சம் வரும்படி
குருதி அளைந்த சிவந்த தினையினையும் பரப்பி, குறமகள்
முருகன் உவக்கும் வாச்சியங்களை வாசிக்கச்செய்து, முரண்பட்டோர் அஞ்சும்படியாக,
முருகக்கடவுள் வரும்படி வழிப்படுத்தின அச்சம் பொருந்தின அகன்ற நகரின்கண்ணே –
வெ
|
நிறை |
நிறை – 1. (வி) 1. நிரம்பு, become full
2. நிரப்பு, make full
3. மிகு, be plenty, copious
4. முழுமையடை, be complete, full
– 2. (பெ) 1. எடை, weight
2. முழுமை, completeness
3. உறுதிப்பாடு, திண்மை, firmness of mind
4. மிகுதி, பெருக்கு, abundance
5. வெள்ளம், flood
6. மறைத்துக் காக்கவேண்டிவற்றைப் பிறர் அறியாமல் காத்தல், maintain secrecy
1.1
ஆன் கணம்
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர – குறி 217,218
பசுக்களின் கூட்டம்
(தம்)கன்றுகளை அழைக்கும் குரலையுடையவாய் கொட்டில்கள் நிரம்புமாறு நுழைய
1.2
கயன் அகைய வயல் நிறைக்கும்
மென் தொடை வன் கிழாஅர் – மது 92,93
குளத்தின் நீர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய(நீரை முகந்து) வயலை நிரப்பும்
மென்மையான கட்டுக்களையுடைய வன்மையான ஏற்றப்பொறியின் ஓசையும்
1.3
நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி – பதி 30/37
இரத்தம் தூவிய மிகுந்த கள்ளுடனான பெரிய பலியானது
1.4
பிறை வளர் நிறை மதி உண்டி – பரி 3/52
பிறைகளாகி வளர்கின்ற முழுமையடைந்த திங்களான உணவினையும்
2.1
செம்பு நிறை கொண்மரும் வம்பு நிறை முடிநரும் – மது 514
செம்பின் எடையை நிறுத்துக் கொள்வாரும், கச்சுக்களை நிறைவாக முடிவாரும்,
2.2
செம்பு நிறை கொண்மரும் வம்பு நிறை முடிநரும் – மது 514
செம்பை நிறுத்துக் கொள்வாரும், கச்சுக்களை முழுமையாக முடிவாரும்,
2.3
அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை
இன் துயில் வதியுநன் காணாள் துயர் உழந்து
நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு
நீடு நினைந்து தேற்றியும் ஓடு வளை திருத்தியும்
மையல் கொண்டும் ஒய்யென உயிர்த்தும்
ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி – முல் 79-84
பகையரசு இருந்து நடுங்கும் முரசு முழங்கும் பாசறையில்
இனிய துயில்கொண்டு தங்குயிருப்பவனைக் காணாளாய், வருத்தமுற்று
நெஞ்சம் (ஆற்றியிரு என்று தலைவன் கூறியபடி)பொறுத்திருக்க, (தன்)உறுதியைக் கெடுத்த
தனிமையோடு,
நீண்ட பிரிவினை நினைந்து தேற்றியும், கழலுகின்ற வளையை(க் கழலாமற்)செறித்தும்,
மயக்கம் கொண்டும், நெடிய பெருமூச்சுவிட்டும்,
அம்பு தைத்த மயில் போல நடுங்கி,
2.4
இசை நுவல் வித்தின் நசை ஏர் உழவர்க்கு
புது நிறை வந்த புனல் அம் சாயல்
—————————- ———————————–
நன்னன் சேய் நன்னன் – மலை 60- 64
புகழ் பாடுதல்(என்ற) விதையினையும் (பரிசில்மீது)விருப்பம் (என்ற)ஏரினையும் (கொண்ட)
உழவர்க்கு(=பரிசிலர்க்கு)
புதுப் பெருக்காய் வந்த நீர் (போன்ற)அழகிய மேனியைக்கொண்ட,
——————————- —————————–
நன்னன் மகனான நன்னனை
2.5
நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை
இறைத்து உண சென்று அற்று ஆங்கு – குறு 99/4,5
உயர்ந்த மரத்தின் உச்சிக் கிளைகளைத் தொட்டுக்கொண்டு சென்ற பெருவெள்ளம்
இறைத்து உண்ணும் அளவுக்குக் குறைந்து அற்றுப்போய்விடுவது போல
2.6
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை – கலி 133/12
நிறை எனப்படுவது மறைத்துக் காக்கவேண்டிவற்றைப் பிறர் அறியாமல் காத்தல்
|
நிலம்தருதிருவின்நெடியோன் |
நிலம்தருதிருவின்நெடியோன் – (பெ) 1. ஒரு பாண்டிய மன்னன், a Pandiya king
2. ஒரு சேர மன்னன், a cEra king
1.
தொல் ஆணை நல் ஆசிரியர்
புணர் கூட்டுண்ட புகழ் சால் சிறப்பின்
நிலம்தருதிருவின்நெடியோன் போல – மது 761-763
தொன்மையான மரபுகளையுடைய நல்ல ஆசிரியர்கள்
சேரும் சேர்க்கையை நுகர்ந்த புகழ் நிறைந்த சிறப்பினையுடைய
நிலந்தரு திருவில் பாண்டியன் என்னும் உயர்ந்தோனைப் போன்று
’செந்தமிழ் வழங்கும் காலமெல்லாம் தன் புகழ் நிறைந்து விளங்குவதற்குக் காரணமான தமிழ்ச்சங்கம்
நிறீஇ அதன்கண் மெய்ந்நூல் புலப்படுத்த சிறப்பினையுடைய மாகீர்த்தியாகிய’ என்று இவனைச்
சிறப்பித்துக் கூறுவார் பெருமழைப்புலவர்.
இந்த நிலந்தரு திருவில் பாண்டியன் அவைக்களத்தில் தொல்காப்பியம் அரங்கேறியது
என்பார் அந்நூலுக்குப் பாயிரம் எழுதிய பனம்பாரனார்.
’எல்லா நிலங்களையும் தன்னிடத்தே கட்டின பெருஞ்செல்வத்தையுடைய மாயோனைப் போல’
என்று பொருள்கொள்வார் நச்சினார்க்கினியர்.
2.
வண்மையும் செம்மையும் சால்பும் மறனும்
புகன்று புகழ்ந்து அசையா நல் இசை
நிலம்தருதிருவின்நெடியோய் – பதி 82/14-16
உனது கொடை, செங்கோன்மை, நற்பண்புகள், வீரம் ஆகிய இவற்றை
விரும்பிப் புகழ்வதால் கிடைக்கும் குன்றாத நல்ல புகழையும்
மாற்றார் நிலத்தைப் போரிட்டுச் சேர்த்துக்கொள்ளும் செல்வத்தையும் உடைய நெடியவனான சேரமானே
இந்தச் சேர மன்னன் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை எனப்படுவான். இவனை பதிற்றுப்பத்தில்
ஒன்பதாம் பத்தில் புலவர் பெருங்குன்றூர்க்கிழார் பாடியுள்ளார்.
|
நிலவரை |
நிலவரை – (பெ) நிலத்தின் எல்லை, the boundaries of a region/country
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக என் நிலவரை – புறம் 72/15,16
உலகத்தோடு நிலைபெற்ற பலரும் புகழும் தலைமையையுடைய
புலவர் பாடாமல் நீங்குக என் நில எல்லையை.
|
நிலவர் |
நிலவர் – (பெ) நிலத்தில் வாழ்வோர், residents of a land
குடி கெழீஇய நால் நிலவரொடு – மது 123
குடிகள் மிக்க நான்கு நிலங்களிலும் வாழ்வாரோடு
|
நிலவு |
நிலவு – 1. (வி) நிலைத்திரு, be permanent
– 2. (பெ) நிலா, moon
1.
நீர் ஒலித்து அன்ன நிலவு வேல் தானையொடு – மது 369
கடல் ஒலித்ததைப் போன்ற நிலைபெற்ற வேல் படையோடே
2.
நிலவு பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து – நெடு 95
நிலாவின் பயனை (அரசன்) நுகரும் நெடிய வெள்ளிய நிலாமுற்றத்திலுள்ள
|
நிலியர் |
நிலியர் – (வி.மு) நிற்பாயாக, நிலைத்திருப்பாயாக, be steadfast
திரியா சுற்றமொடு முழுது சேண் விளங்கி
நடுக்கு இன்றி நிலியரோ அத்தை – புறம் 2/19,20
வேறுபாடில்லாத சூழ்ச்சியையுடைய மந்திரிச் சுற்றத்தோடு, ஒழியாது நெடுங்காலம் விளங்கி
மனக்கலக்கமின்றி நிற்பாயாக.
|
நிலீஇயர் |
நிலீஇயர் – (வி.மு) நிலியர் என்பதன் நீட்டம், பார்க்க : நிலியர், the extendd form of நிலியர்.
கழை வளர் இமயம் போல
நிலீஇயர் அத்தை நீ நிலம் மிசையானே – புறம் 166/33,34
மூங்கில் வளரும் இமயமலை போல
நிலைபெறுவாயாக நீ நிலத்தின் மேலே.
|
நிழத்து |
நிழத்து – (வி) 1. சிறிது சிறிதாகத் தேய்ந்து இல்லையாகு, diminish gradually and vanish
2. சிறிது சிறிதாகத் தேய்த்து இல்லையாக்கு, diminish gradually and vanish
1.
நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள் – முல் 50
நெடிய நாக்கினையுடைய ஒள்ளிய மணி ஒலித்துச் சிறிது சிறிதாக அடங்கிய நடுயாமத்து
2.
விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி – மலை 193
விளைந்த (தினைப்)புனத்தை (பன்றிகள்)சிறிது சிறிதாக அழித்து இல்லாமலாக்கிவிடுவதால்,
(அப்)பன்றிகளுக்குப் பயந்து,
|
நிழற்று |
நிழற்று – (வி) 1. நிழல்செய், shade
2. காத்தளி, protect
3. ஒளிவீசு, shed radiance
1.
கொல் களிற்று மீமிசை கொடி விசும்பு நிழற்றும்
எம் கோ வாழிய குடுமி – புறம் 9/7,8
கொல் யானை மேலே ஏற்றிய கொடிகள் ஆகாயத்தை நிழல்செய்யும்
எம்முடைய வேந்தனாகிய குடுமி வாழ்வானாக
2.
நீர் மிகின் சிறையும் இல்லை தீ மிகின்
மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை – புறம் 51/1,2
நீர் மிகுமாயின் அதனைத் தாங்கும் அரணும் இல்லை, நெருப்பு மிகுமாயின்
உலகத்து நிலைபெற்ற உயிர்களைக் காக்கும் புகலிடமும் இல்லை
3
விசும்பு இழி தோகை சீர் போன்றிசினே
பசும்_பொன் அவிர் இழை பைய நிழற்ற
கரை சேர் மருதம் ஏறி
பண்ணை பாய்வோள் தண் நறும் கதுப்பே – ஐங் 74
வானத்திலிருந்து இறங்கும் மயிலின் தோகை அழகைப் போல இருந்தது
பைம்பொன்னாலான ஒளிவிடும் அணிகலன்கள் மெல்லென ஒளிவீச,
கரையைச் சேர்ந்த மருதமரத்தில் ஏறி,
நீருக்குள் பாய்பவளின் குளிர்ந்த நறிய கூந்தல்
|
நிழல் |
நிழல் – 1. (வி) ஆதரவளி, புகலிடம் அளி, shelter, protect
– 2. (பெ) 1. ஒளிமறைவு, shade
2. ஒளிமறைப்பினால் ஏற்படும் உருவம், பிம்பம், shadow
3. பிரதி பிம்பம், image, reflection
4. அருள், grace, favour, benignity
5. ஒளி, lustre
ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும் – சிறு 233,234
‘உழவர்க்குப் புலகிடம் அளித்த செங்கோலையுடையோய்’ எனவும்,
‘தேரினையுடையோர்க்கு வெம்மைசெய்த வேலினையுடையோய்’ எனவும்
2.1
மனை நொச்சி நிழல் ஆங்கண்
ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும் – பொரு 185,186
மனை(யைச் சூழ்ந்த) நொச்சியின் நிழலில்,
(மணலுக்குள் முட்டை)பொரித்து வந்த ஆமையின் குஞ்சைப் பாதுகாத்து வைப்பவும்
2.2
இலை இல் மராத்த எவ்வம் தாங்கி
வலை வலந்து அன்ன மென் நிழல் மருங்கில் – பொரு 50,51
இலையில்லாத மரத்தின் அடியில், (ஆறுசெல்) வருத்தம் தாங்கி,
வலையைப் போர்த்தியது போன்ற மெல்லிய நிழலில்
2.3
பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை
நீர் நணி பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம் – பெரும் 287,288
பொதிந்த இரையைக் கௌவி (அகப்படாதுபோன)பிளந்த வாயையுடைய வாளை மீன்,
நீர் அருகிலுள்ள பிரம்பின் (நீரலையால்)நடுங்கு(வது போல் தோன்று)ம் நிழலைக் கண்டு அஞ்சும்,
2.4
கண் ஆர் கண்ணி கரிகால்வளவன்
தாள் நிழல் மருங்கின் அணுகுபு குறுகி – பொரு 148,149
கண்-நிறைந்த ஆத்தி மாலையினை உடைய கரிகாற்சோழனின்,
(திருவடி நிழலின்)அருள் நிறைந்த பக்கத்தை அணுகிக் கிட்டே நெருங்கி
2.5
மன் உயிர் முதல்வனை ஆதலின்
நின்னோர் அனையை நின் புகழோடும் பொலிந்தே
நின் ஒக்கும் புகழ் நிழலவை – பரி 1/56-58
உலகத்து உயிர்களுக்கு முதல்வனாக இருப்பதனால்
உனக்கு நீயே ஒப்பாவாய்! உன் புகழோடும் பொலிவுற்று –
உன்னையே ஒக்கும் புகழாகிய ஒளியைக் கொண்டுள்ளாய்!
|
நிழல்காண்மண்டிலம் |
நிழல்காண்மண்டிலம் – (பெ) உருவம் காணும் கண்ணாடி, mirror
எள் அற இயற்றிய நிழல்காண்மண்டிலத்து
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி – அகம் 71/13,14
இகழ்ச்சி அற இயற்றப்பெற்ற உருவம் காணும் கண்ணாடியின்
அகத்த்தே ஊதிய ஆவி முதலில் பரந்து பின்னர் சுருங்கினாற் போன்று சிறிது சிறிதாகக் குறைந்து
|
நிவ |
நிவ – (வி) 1. உயர், மேலெழும்பு, rise, ascend vertically
2. நிமிர், be erect, hold head erect
3. நெடுக, உயரமான வளர், grow vertically high
4. வெள்ளம் உயர்ந்து கரைபுரளு, flood flow high and overflow
1.
மா கடல் நிவந்து எழுதரும்
செஞ்ஞாயிற்று கவினை மாதோ – புறம் 4/15,16
கரிய கடலின்கண்ணே ஓங்கி எழுகின்ற
செய்ய ஞாயிற்றினது ஒளியை உடையை
2.
கழி சுரம் நிவக்கும் இரும் சிறை இவுளி – நற் 63/9
கழியிடமாகிய சேர்ப்பின்கண் தலை நிமிர்ந்துசெல்லும் விரைந்த செலவினையுடைய குதிரை
3.
மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் – திரு 12
பெரிய மூங்கில் உயர்ந்து வளர்ந்துள்ள வானளாவிய மலையிடத்தே,
4.
சிதரல் பெரும் பெயல் சிறத்தலின் தாங்காது
குண கடற்கு இவர்தரும் குரூஉ புனல் உந்தி
நிவந்து செல் நீத்தம் குளம் கொள சாற்றி – மது 244-246
சிதறுதலையுடைய பெரு மழை மிகுதலால், பெருக்கெடுத்து,
கீழ்க்கடலுக்குப் பாயும் (கலங்கல்)நிறத்தையுடைய மழைநீர், முனைந்து
ஓங்கிச் செல்லும் வெள்ளம் குளங்கள் கொள்ளும்படி நிறைப்ப
|
நிவப்பு |
நிவப்பு – (பெ) உயர்ச்சி, உயரம், height, elevation
வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி – மலை 92
மலையை ஒத்த உயர்ச்சியோடு வானை எட்டித் தொடும் மதிலினையுமுடைய
|
நீ |
நீ – 1. (வி) 1. விலகு, நீங்கு, அகலு, part from
2. நீங்கு, be removed
3. கைவிடு, துற, give up, renounce
– 2. (பெ) முன்னிலை ஒருமைப்பெயர், second person singular pronoun, you
1.1.
கீழும் மேலும் காப்போர் நீத்த
வறும் தலை பெரும் களிறு போல – நற் 182/8,9
கீழும் மேலும் நடத்திச் செல்வோர் விட்டகன்ற
வறிய தலையையுடைய பெருங்களிற்றைப் போல
1.2.
நன் நுதல் நீத்த திலகத்தள் – கலி 143/3
நல்ல நெற்றியினின்றும் திலகம் நீங்கியவள்
1.3.
ஈன்றோள் நீத்த குழவி போல – புறம் 230/7
பெற்ற தாய்கைவிட்ட குழவியைப் போல
2.
நீர் நீத்த மலர் போல நீ நீப்பின் வாழ்வாளோ – கலி 5/15
நீரை விட்டு நீங்கிய மலரைப் போல, நீ பிரிந்து சென்றால் இவள் வாழ்வாளோ?
|
நீகான் |
நீகான் – (பெ) மீகான், மாலுமி, pilot of a ship
கோடு உயர் திணி மணல் அகன் துறை நீகான்
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய – அகம் 255/5,6
கரை உயர்ந்த செறிந்த மணலையுடைய அகன்ற துறையில், நாவாய் ஓட்டுவான்
மாடத்தின் மீது உள்ள ஒள்ளிய விளக்கினால் இடம் அறிந்து செலுத்த
|
நீடல் |
நீடல் – (பெ) 1. மிகுதல், increase
2. நீட்டித்தல், extending
1.
கோடை நீடலின் வாடு புலத்து உக்க
சிறு புல் உணவு நெறிபட மறுகி
நுண் பல் எறும்பு கொண்டு அளைச் செறித்த
வித்தா வல்சி – அகம் 377/1-4
கோடையின் வெம்மை மிக்கமையால், வறண்ட நிலத்தே உதிர்ந்த
சிறிய புல்லரிசியை ஒழுங்குபட சென்று
சிறிய பலவாய எறும்புகள் கொண்டுவந்து தம் வளையில் தொகுத்து வைத்த
விதைத்து விளைவிக்காத உணவினை
2.
செரு செய் முன்பின் குருசில் முன்னிய
பரிசில் மறப்ப நீடலும் உரியிர் – மலை 186,187
போர் செய்யும் மிக்க வலிமையையுடைய மன்னனைக் கருதிச்செல்லும்
பரிசிலை(யும்) மறக்குமளவுக்கு (உமது இருப்பை)நீட்டித்தலுக்கு உரித்தாவீர்
|
நீடு |
நீடு – 1. (வி) 1. நீளு, அதிகரி, grow long
2. நீட்டு, extend
3. மிகு, பெருகு, abound
– 2. (பெ.அ) 1. நிலைத்திருக்கிற, lasting long
2. நெடிய, நீளமான, long
– 3. (பெ) 1. நெடுங்காலம், long time
2. நீட்டித்தல், extending
1.1
வாராது அவண் உறை நீடின் நேர் வளை
இணை_ஈர்_ஓதி நீ அழ
துணை நனி இழக்குவென் – ஐங் 269/3-5
திரும்பி வராமல் அங்கேயே தங்கியிருப்பது நீண்டுசென்றால், செம்மையான வளைகளை அணிந்த
இரு பிரிவுகளையுடைய வழவழப்பான கூந்தலையுடையவளே! நீ அழும்படி
உனக்குத் துணையாக இருப்பதை மிகவும் நான் இழப்பேன்
1.2
நீடினம் என்று கொடுமை தூற்றி – ஐங் 478/1
பிரிவுக்காலத்தை நீட்டித்துக்கொண்டே செல்கிறேன் என்பதைக் கொடும் செயலாகத் தூற்றி
1.3
விசும்பு கண் அழிய வேனில் நீடி
கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின் – அகம் 189/2,3
மேகம் வானிடத்திலிருந்து ஒழிதலினால் வேனில் வெப்பம் மிக
குளங்கள் தம்மிடத்தே நீர் அற்றிருக்கும் கற்கள் உயர்ந்த இடங்களில்
2.1
நீடு பசி ஒராஅல் வேண்டின் நீடு இன்று
எழுமதி வாழி ஏழின் கிழவ – பொரு 62,63
நீடித்த நாட்களாய் இருக்கும் பசி (உன்னை)விட்டு நீங்குதலை விரும்பினால், கால நீட்டித்தல் இன்றி
எழுவாயாக, நீ வாழ்வாயாக, (நரம்பு)ஏழின் கண்ணும் உரிமை உடையோய்,
2.2
நீடு அமை விளைந்த தே கள் தேறல் – திரு 195
நெடிய மூங்கிலில் இருந்து முற்றின தேனால் செய்த கள்தெளிவை
3.1
ஈண்டு நீடு விளங்கும் நீ எய்திய புகழே – புறம் 359/18
இவ்வுலகில் நெடுங்காலம் நிலைநிற்கும் உன் ஈகையால் எய்திய புகழ்
3.2
நீடு பசி ஒராஅல் வேண்டின் நீடு இன்று
எழுமதி வாழி ஏழின் கிழவ – பொரு 62,63
நீடித்த நாட்களாய் இருக்கும் பசி (உன்னை)விட்டு நீங்குதலை விரும்பினால், கால நீட்டித்தல் இன்றி
எழுவாயாக, நீ வாழ்வாயாக, (நரம்பு)ஏழின் கண்ணும் உரிமை உடையோய்,
|
நீடூர் |
நீடூர் – (பெ) ஓர் ஊர், the name of a city
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன் – அகம் 266/10
யாழ் ஒலிக்கும் தெருக்களையுடைய நீடூர் என்ற ஊரின் தலைவன்
|
நீத்தம் |
நீத்தம் – (பெ) 1. வெள்ளம், flood
2. ஆழம், depth
1.
கழை நிலை பெறாஅ காவிரி நீத்தம் – அகம் 6/6
ஓடக்கோலும் நிலைத்து நில்லாத காவிரி ஆற்றின் நீர்ப்பெருக்கில்
2.
புள் ஏர் புரவி பொலம் படை கைம்_மாவை
வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு_ஊர்பு உழக்குநரும் – பரி 11/52,53
பறவை போல் விரையும் குதிரைகளையும், பொன்னாலான முகபடாம் அணிந்திருக்கும் யானைகளையும்
வெள்ள நீர் ஆழத்தினுள் மேலும் மேலும் செலுத்தி நீரைக் கலக்குவோரும்,
|
நீத்து |
நீத்து – (பெ) நீந்தக்கூடிய ஆழம், swimming depth of water
நீத்து உடை நெடும் கயம் தீ பட மலர்ந்த
கடவுள் ஒண் பூ அடைதல் ஓம்பி – பெரும் 289,290
நீந்திக்கடக்க வேண்டிய ஆழத்தையுடைய நெடிய குளத்தின்கண் நெருப்பின் தன்மையுண்டாகப் பூத்த
கடவுள் (விரும்புதற்குரிய)ஒளிரும் (தாமரைப்)பூவைப் பறித்துச் சூடுதலைச் செய்யாமல் தவிர்த்து,
|
நீந்து |
நீந்து – (வி) 1. நீச்சலடி, swim
2. நடந்து கட, across over
3. பறந்து செல், fly across
4. பொழுதைக்கழி, pass the time
1.
அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான்யாற்று
கரை அரும் குட்டம் தமியர் நீந்தி – நற் 144/7,8
ஓளிவிடும் நீர் நிறைந்து விரைந்து ஓடும் காட்டாற்றின்
கரை தெரியாத ஆழமான மடுக்களைத் தன்னந்தனியே நீந்தி
2.
இலங்கு அருவிய வரை நீந்தி – மது 57
விளங்குகின்ற அருவிகளையுடைய மலைகளைக் கடந்து
3.
சிறு பைம் தூவி செம் கால் பேடை
நெடு நீர் வானத்து வாவு பறை நீந்தி
வெயில் அவிர் உருப்பொடு வந்து கனி பெறாஅது – அகம் 57/1-3
சிறிய மெல்லிய சிறகுகளையும் சிவந்த கால்களையும் உடைய வௌவால் பேடை
நீண்ட தன்மையையுடைய வானத்தில் தாவித்தாவிப் பறந்து கடந்து,
வெயில் தகதகக்கும் வெம்மையோடு வந்து, (மரத்தில்) கனி பெறாது
4.
எல்லை கழிய முல்லை மலர
கதிர் சினம் தணிந்த கையறு மாலை
உயிர் வரம்பு ஆக நீந்தினம் ஆயின்
எவன்-கொல் வாழி தோழி
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே – குறு 387
பகற்பொழுது கழிய, முல்லை மலர,
ஞாயிறு தன் சினம் தணிந்த செயலற்ற இந்த மாலைப்பொழுதை
உயிரை எல்லையாகக் கொண்டு நீந்திக்கழித்தேனென்றால்,
என்ன பயன்? வாழ்க தோழியே!
இரவாகிய வெள்ளம் கடலைக்காட்டிலும் பெரியதாக இருக்குமே!
|
நீர |
நீர – (பெ) 1. தன்மையைக் கொண்டுள்ளது/கொண்டுள்ளவர்/கொண்டுள்ளவள்,
that which has the property or nature
2. நீரிலுள்ளது / நீரைக்கொண்டது, that which is in water, which has water
மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும்
பல் வேறு திரு மணி முத்தமொடு பொன் கொண்டு – மது 504,505
மலையிடத்தனவும், நிலத்திடத்தனவும், நீரிடத்தனவும் பிற இடத்தனவுமாகிய
பல் வேறான அழகிய மணிகளையும், முத்துக்களையும், பொன்னையும் வாங்கிக்கொண்டு
1.2
அன்பு பெரிது உடைமையின் அளித்தல் வேண்டி
பகலும் வருதி பல் பூ கானல்
இ நீர ஆகலோ இனிதால் – நற் 223/2-4
அன்பு பெரிதாக உடைமையினாலே இவளுக்குக் கருணைகாட்டல் வேண்டி
பகலிலும் வருகிறாய்; பலவான பூக்களைக் கொண்ட இந்தக் கடற்கரைச் சோலையில்
இத்தன்மையராக இருத்தல் இனிதே
1.3
நறும் தண் நீரள் ஆர் அணங்கினளே – குறு 70/2
நறிய மணமும் குளிர்ச்சியும் உடைய தன்மையள்; நிறைந்த வருத்தத்தைச் செய்பவள்;
2.1
நீர
நீல பைம் போது உளரி – குறு 110/2,3
நீரிலுள்ள
நீலக்குவளையின் இளம் மொட்டைத் தடவிக்கொடுத்து
2.2
மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப – கலி 35/5
மலர்கள் நிறைந்த பூஞ்சோலையை அடுத்துப் பளிங்கு போன்ற நீரைக்கொண்ட குளங்கள் நிறைந்திருக்க,
|
நீர் |
நீர் – (பெ) 1. தண்ணீர், water
2. கடல், sea
3. அருவிநீர், water of the falls
4. கண்ணீர், tears
5. தன்மை, இயல்பு, nature
6. இரத்தினத்தின் ஒளி, water in a gem
1.
நறு நீர் பொய்கை அடைகரை நிவந்த
துறு நீர் கடம்பின் துணை ஆர் கோதை – சிறு 68,69
நறிய நீரையுடைய பொய்கையின் (இட்டு)அடைத்த கரையில் நின்று வளர்ந்த
செறிந்த நீர்மையையுடைய கடம்பின் இணைதல் நிறைந்த மாலை,
2.
நீர் ஒலித்து அன்ன நிலவு வேல் தானையொடு – மது 369
கடல் ஒலித்ததைப் போன்ற நிலைபெற்ற வேல் படையோடே
3.
தலை நாள் விடுவிக்கும் பரிசில் மலை நீர்
வென்று எழு கொடியின் தோன்றும்
குன்று சூழ் இருக்கை நாடு கிழவோனே – மலை 580-582
(போவோம் என்ற)முதல்நாளிலேயே(தாமதிக்காமல்)வழியனுப்புவான் (தன்)பரிசிலோடே – மலையின் (அருவி)நீர்
வென்று உயரும் கொடியைப்போலத் தோன்றும்
மலைகள் சூழ்ந்த குடியிருப்புகளைக்கொண்ட நாட்டிற்கு உரிமையுடையவன்.
4.
நீர் தொடங்கினவால் நெடும் கண் – ஐங் 453/4
கண்ணீர் வரத் தொடங்கிவிட்டது என் நெடும் கண்ணில்
5.
நறு நீர் பொய்கை அடைகரை நிவந்த – சிறு 68
துறு நீர் கடம்பின் துணை ஆர் கோதை – சிறு 69
நறிய நீரையுடைய பொய்கையின் (இட்டு)அடைத்த கரையில் நின்று வளர்ந்த
செறிந்த நீர்மையையுடைய கடம்பின் இணைதல் நிறைந்த மாலை,
6.
நெடு நீர் வார் குழை களைந்தென – நெடு 139
மிகுதியாக ஒளி சிந்தும் காதணி(குண்டலங்)களை நீக்கிட
|
நீர்க்கோழி |
நீர்க்கோழி – (பெ) வெள்ளை நெஞ்சு நீர்க்கோழி, கம்புள் கோழி, சம்புக்கோழி
white-breasted waterhen, Amaurornis phoenicurus
கானக்கோழி கவர் குரலோடு
நீர்க்கோழி கூய் பெயர்க்குந்து – புறம் 395/10,11
காட்டுக்கோழி தன் கவர்த்த குரலை எடுத்தும்
நீரில் வாழும் நீர்க்கோழி தன் குரலை எடுத்தும் கூப்பிடுதலைச் செய்யும்.
|
நீர்நாய் |
நீர்நாய் – (பெ) நீரில் வாழும் ஒருவகைப் பாலூட்டி விலங்கு, otter
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்
முள் அரை பிரம்பின் மூதரில் செறியும் – அகம் 6/18,19
வாளைமீனைத் தின்ற கூரிய பற்களை உடைய நீர்நாய்
முட்கள் கொண்ட தண்டினை உடைய பிரம்பின் பழைய புதரில் தங்கும்,
|
நீர்ப்பெயற்று |
நீர்ப்பெயற்று – (பெ) நீரின் பெயரைக்கொண்டது, a port city
நீர்ப்பெயற்று எல்லை போகி – பெரும் 319
நீரின் பெயர்கொண்ட நீர்ப்பாயல்துறை என்னும் ஊரின் எல்லையிலே சென்று
இதனைக் கடல்மல்லைத் தல சயனம் என்று வைணவர் வழங்குவர். சல சயனம் என்பதே தல சயனம்
என்றானது என்பர். சல சயனம் என்பதற்கு நீர்ப்பாயல் என்பது நேரான தமிழ்ச்சொல் ஆகும். இந்தக் கடல் மல்லை
என்பதுவே மல்லை, மாமல்லை, மாமல்லபுரம் என படிப்படியாய் மருவி இன்றைய மகாபலிபுரம் என்று ஆயிற்று
என்பர்.
|
நீர்மை |
நீர்மை – (பெ) 1. தன்மை, இயல்பு, nature, inherent quality
2. இன்சொல், affability
3. இனிய குணம், goodness
4. நிலைமை, state, condition
1.
கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை
மயில் எருத்து வண்ணத்து மாயோய் – கலி 108/37,38
கண்களைக் கூசவைக்கும் பேரழகு பெற்ற பெண்ணியல்பையும்,
மயில் கழுத்தின் நிறத்தையுமுடைய மாநிறத்தவளே
2.
நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி நேர்_இழாய் – பரி 8/73
நீர் சொல்வது இன்சொல் இல்லாத சூள்’ என்கிறாய்! நேரிய இழைகளை அணிந்தவளே!
3.
கடும் தேர் இளையரொடு நீக்கி நின்ற
நெடுந்தகை நீர்மையை – அகம் 310/1,2
விரைந்து செல்லும் தேரினை ஏவலாளருடன் சேய்மைக்கண் நிறுத்தி இங்கு வந்து நிற்கும்
பெருந்தன்மையாகிய இனிய குணத்தினை உடையவன் ஆகின்றாய்
4.
விழவின்
கோடியர் நீர்மை போல முறை_முறை
ஆடுநர் கழியும் இவ் உலகத்துக் கூடிய
நகைப்புறனாக நின் கொற்றம் – புறம் 29/22-25
விழவின்கண் ஆடும் கூத்தரது கோலத்தைப் போல, அடைவடைவே தோன்றி
இயங்கி இறந்துபோகின்ற இவ்வுலகத்தின்கண் பொருந்திய
மகிழ்ச்சியிடத்ததாக நின்னுடைய கிளை
|
நீறு |
நீறு – (பெ) 1. புழுதி, dust
2. சாம்பல், ashes
3. துகள், பொடி, powder
1.
நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் – சிறு 201
புழுதி அடங்கின தெருவினையுடைய, அவ்வள்ளலின் விழா நடக்கின்ற பழைய ஊர்தானும்
2.
மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து – கலி 1/8
மிக்குச் செல்கிற போர்கள் பலவற்றையும் வென்று, அதன் வலிமையால் பகைவர் வெந்த சாம்பலை அணிந்து
3.
அ யானை தான் சுண்ண நீறு ஆடி நறு நறா நீர் உண்டு – கலி 97/10
அந்த யானைதான் சுண்ணப்பொடி பூசி நறுமணமிக்க மதுநீர் உண்டு,
|
நீலம் |
நீலம் – (பெ) 1. நீல நிறம், Blue colour
2. கருப்பு நிறம், black
3. நீலப்பூ, கருங்குவளை, Blue nelumbo
4. நீலமணி, sapphire
1.
நிறம் கவர்பு புனைந்த நீல கச்சினர் – மது 639
நிறத்தை வாங்கிப் புனைந்த(தைப் போன்ற) நீலநிறக் கச்சினையும் உடையவராய்;
2.
நெறி மருப்பு எருமை நீல இரும் போத்து – ஐங் 91/1
அலையலையாய் வளைந்திருக்கும் கொம்பினையுடைய எருமையின் கரிய பெரிய கடாவானது
3.
அரக்கு இதழ் குவளையொடு நீலம் நீடி – பெரும் 293
சாதிலிங்கம் (போன்ற)இதழையுடைய குவளைப் பூவோடே நீலப்பூவும் வளர்ந்து
4.
நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின் – அகம் 358/1
நீல மணியைப் போன்ற நிறம் விளங்கும் கழுத்தினையும்
|
நீல் |
நீல் – (பெ) 1. நீலம், Blue
2. கருப்பு, black
3. கருங்குவளை மலர், Blue nelumbo
1.
நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண் – புறம் 144/4
நீல நறு நெய்தல் போன்று பொலிந்த மையுண்ட கண்கள்
2.
நீல் நிற விசும்பின் மீனொடு புரைய – நற் 199/9
கருநிற விசும்பின் விண்மீன்களைப் போல்
3.
நீல் இதழ் உண்கணாய் – கலி 33/28
கருங்குவளை மலரின் இதழ் போன்று மைதீட்டிய கண்களையுடையவளே!
|
நீல்நிறவண்ணன் |
நீல்நிறவண்ணன் – (பெ) திருமால், Lord Krishna
பால் மதி சேர்ந்த அரவினை கோள் விடுக்கும்
நீல்நிறவண்ணனும் போன்ம் – கலி 104/37,38
பால் போன்ற திங்களைக் கவ்விய பாம்பினை, அதன் பிடியிலிருந்து விடுவிக்கும்
நீல நிறத்தவனான திருமாலைப் போன்றிருக்கிறது;
|
நீள்மொழி |
நீள்மொழி – (பெ) நெடுமொழி, சூளுரை, வஞ்சினம், vow
நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
வாள் மின் ஆக – புறம் 369/3,4
வஞ்சின உரைகளையுடைய வீரர்கள் பகைவர்மேல் எறிவதற்காக ஏந்திய
வாள் மின்னலாக
|
நீழல் |
நீழல் – (பெ) 1. பார்க்க : நிழல்-(பெ)
1. ஒளிமறைவு, shade
2. ஒளிமறைப்பினால் ஏற்படும் உருவம், பிம்பம், shadow
3. பிரதி பிம்பம், image, reflection
4. அருள், grace, favour, benignity
2. எவ்வி என்ற மன்னனின் ஊர், a city belonging to the monarch Evvi.
1.1.
பைம் கறி நிவந்த பலவின் நீழல் – சிறு 43
பசிய மிளகுக் கொடி படர்ந்த பலாமரத்தின் நிழலில்
1.2.
கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி – புறம் 260/5
கள்ளி மரத்தின் நிழலில் உள்ள தெய்வத்தை ஏத்தி
1.3.
புழல் கால் ஆம்பல் அகல் அடை நீழல்
கதிர் கோட்டு நந்தின் கரி முக ஏற்றை
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம் – புறம் 266/3-5
துளையுள்ள தாளையுடைய ஆம்பலின் அகன்ற இலையின் நிழலில்
கதிர் போலும் கோட்டையுடைய நத்தையி சுரி முகத்தையுடைய ஏற்றை
நாகாகிய இளைய சங்குடனே பகற்காலத்தின் மணம் கூடும்
1.4.
பண்பு உடை நன் நாட்டு பகை தலை வந்து என
அது கைவிட்டு அகன்று ஒரீஇ காக்கிற்பான் குடை நீழல்
பதி படர்ந்து இறைகொள்ளும் குடி போல – கலி 78/4-6
பண்பட்ட நல்ல நாட்டில் பகைவரின் படை நுழைந்ததாக,
அந்நாட்டைக் கைவிட்டு அகன்றுபோய் தம்மைக் காக்கின்றவனுடைய ஆட்சியின் அருளையுடைய
வேற்று நாட்டில் குடியேறி வசிக்கும் குடிமக்களைப் போல
2.
பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன – அகம் 366/12
பொன்னாலான பூண் அணிந்த எவ்வி என்பானது நீழல் என்னும் ஊர் போன்ற
|
நீவு |
நீவு – (வி) 1. தடவிக்கொடு, gently rub
2. கோதிவிடு, run the fingers through
3. பூசு, smear
4. மீறிச்செல், transgress
5. அடங்காமல் செல், breach
6. அறுத்துக்கொண்டு / உடைத்துக்கொண்டு செல், break, cut off
7. நிறுத்திக்கொள், cease, discontinue
8. மேலே செல், go beyond
1.
உண்ணு நீர் விக்கினான் என்றேனா அன்னையும்
தன்னை புறம்பு அழித்து நீவ மற்று என்னை
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகை கூட்டம்
செய்தான் அ கள்வன் மகன் – கலி 51/13-16
நீர் உண்ணும்போது விக்கினான் என்று சொல்ல, அன்னையும்
அவனது முதுகைத் தடவிக்கொடுக்க, என்னைக்
கடைக்கண்ணால் கொல்வது போல் பார்க்க, இவ்வாறு மகிழ்ச்சியான குறும்புச் செயலைச்
செய்தான் அந்த திருட்டுப்பயல்.
2.
எம் இல் வருகுவை நீ என
பொம்மல் ஓதி நீவியோனே – குறு 379/5,6
எமது இல்லத்துக்கு வருவாய் நீ என்று
பொங்கிவரும் கூந்தலைக் கோதிவிட்டவன்.
3.
பாறு மயிர் குடுமி எண்ணெய் நீவி
ஒரு மகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கி செல்கென விடுமே – புறம் 279/9-11
உலறிய மயிர் பொருந்திய குடுமியில் எண்ணெயைப் பூசி
இந்த ஒரு மகனை அல்லது இல்லாதவளேயாயினும்
போர்க்களம் நோக்கிச் செல்வாயாக எனச் சொல்லித் தன் மகனை விடுக்கின்றாள்
4.
நெடும் தேர் எந்தை அரும் கடி நீவி
இருவேம் ஆய்ந்த மன்றல் இது என – குறி 20,21
நெடிய தேரையுடைய என் தந்தையின் அரிய காவலை(யும்) மீறி,
தலைவனும் யானுமே ஆய்ந்துசெய்த மணம் இது என்று
5.
ஏந்து கை சுருட்டி தோட்டி நீவி
மேம்படு வெல் கொடி நுடங்க
தாங்கல் ஆகா ஆங்கு நின் களிறே – பதி 53/19-21
ஏந்திய கையைச் சுருட்டிக்கொண்டு, மேலிருப்போர் வழிநடத்தும் அங்குசத்திற்கும் அடங்காமல்,
உயர்ந்து நிற்கும் வெற்றிக்கொடிஅசைந்தாட,
அடக்கமாட்டாமற் செல்லும் அங்கு உன் களிறு
6.
கார் மழை முழக்கினும் வெளில் பிணி நீவி
நுதல் அணந்து எழுதரும் தொழில் நவில் யானை – பதி 84/3,4
கார்காலத்து மேகங்களின் முழக்கத்தைக் கேட்டாலும், கட்டிவைக்கப்பட்டிருக்கும் தறியின் பிணிப்பினை
அறுத்துக்கொண்டு
நெற்றியை மேலே தூக்கி அண்ணாந்து பார்த்து நடக்கத்தொடங்கும் போர்த்தொழிலில் நல்ல
பயிற்சியையுடைய யானை
7.
செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி இன நாரை – கலி 126/3
செக்கர் வானத்தைக் கொண்ட அந்திக் காலத்தில் ஒலித்தலை நிறுத்திக்கொண்ட கூட்டமான நாரைகள்,
8.
நீர் நீவி கஞன்ற பூ கமழும்_கால் நின் மார்பில்
தார் நாற்றம் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/10,11
நீர் மட்டத்திற்கும் மேலே நெருக்கமாய் மலர்ந்திருக்கும் பூக்கள் மணம் பரப்பும் போது, அதை உன் மார்பின்
மாலையிலிருந்து வரும் மணம் என்று இவள் நினைப்பாள்
|
நுகம் |
நுகம் – (பெ) 1. மாட்டுவண்டியில் காளைகள் பூட்டும் இடம், நுகத்தடி, Yoke
2. வண்டியின் பாரம், சுமை, burden, load
3. பொறுப்பு, stress, pressure
4. கணையமரம், protecting bar of the door
5. முன்னணிப்படை, தூசிப்படை, van of the army
6. வலிமை, power, strength
1.
தெண் கழி விளைந்த வெண்கல் உப்பின்
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை – அகம் 159/1,2
தெளிந்த கழியின்கண் விளைந்த வெண்மையான கல் உப்பின்
விலையைக் கூறி விற்ற வளைந்த நுகத்தையுடைய வண்டிகளின் வரிசை
2.
எருதே இளைய நுகம் உணராவே – புறம் 102/1
காளைகள் இளையன, வண்டியின் பாரத்தை உணரமாட்டா.
3.
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்
எழுவர் பூண்ட ஈகை செம் நுகம்
விரி கடல் வேலி வியல்_அகம் விளங்க
ஒருதான் தாங்கிய உரன் உடை நோன் தாள் – சிறு 112-115
(தம்)மேலே வருகின்ற போர்களைக் கடந்த கணையத்துக்கு ஒப்பான திணிந்த தோளினையுடைய
எழுவரும், மேற்கொண்ட கொடையாகிய செவ்விய பாரமாகிய பொறுப்பைப்
பரந்த கடலாகிய வேலியை உடைய உலகம் (எல்லாம்)விளங்கும்படி
ஒருவனாகத் தானே(தனியொருவனாகப்) பொறுத்த வலிமையையுடைய முயற்சியினையுடையவனும்
4.
வாழ் முள் வேலி சூழ் மிளை படப்பை
கொடு நுகம் தழீஇய புதவின் செம் நிலை
நெடு நுதி வய கழு நிரைத்த வாயில் – பெரும் 126-128
உயிருள்ள முள்செடியாலான வேலியையும், சூழ்ந்த காவற்காட்டினையும் உடைய ஊர்ப்புறத்தையும்,
உருண்ட கணையமரம் குறுக்கிலிடப்பட்ட ஒட்டுக்கதவினையும், செம்மையான நிலையினையும்(கொண்ட),
நெடிய முனையினையுடைய வலிமையான கழுக்களை நிரைத்த ஊர்வாயிலையும் உடைய,
5.
இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம்
நுகம் பட கடந்து நூழிலாட்டி – மலை 86,87
வெகுதூரத்தில் உள்ளனவாயினும், பகைவர் நாட்டின்
(வண்டிக்கு நுகத்தடி போன்ற)முன்னணிப்படை வீழுமாறு மேற்சென்று (படையினரைக்)கொன்று குவித்து
6.
நும் நுகம் கொண்டு இனும் வென்றோய் – பதி 63/15
உன் வலிமையைக் கொண்டு மேலும் பல போர்களை வென்றாய்!
|
நுகர் |
நுகர் – (வி) 1. புலன்களால் உணர்ந்து அனுபவி, துய், enjoy through the senses, experience
2. அருந்து, eat and drink
1.
அஞ்சிலோதி அசையல் யாவதும்
அஞ்சல் ஓம்பு நின் அணி நலம் நுகர்கு என – குறி 180,181
“அழகிய நுண்மையான கூந்தலையுடையவளே, கலங்கவேண்டாம், சிறிதளவுகூட
அஞ்சுவதை விலக்கவும், (நான்)உன் பேரழகைத் துய்த்து மகிழ்வேன்” என்று சொல்லி
2.
வசை இல் செல்வ வானவரம்ப
இனியவை பெறினே தனித்தனி நுகர்கேம்
தருக என விழையா தா இல் நெஞ்சத்து
பகுத்தூண் தொகுத்த ஆண்மை
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 38/12-16
உன்னிடமிருந்து இனியவற்றைப் பெறும்போது, ‘அவற்றைத் தனித்தனியே அருந்துவோம்,
கொண்டுவாருங்கள்’ என்று பெறுவோர் விரும்பாமல், மாசற்ற மனத்தினராய்
பகிர்ந்து உண்ணுவதற்காக உணவைத் திரளாகத் தருகின்ற ஆண்மைச் சிறப்பொடு
பிறர்க்கென்று வாழ்பவனாக நீ இருப்பதால்.
|
நுகர்ச்சி |
நுகர்ச்சி – (பெ) 1. அனுபவம், அனுபவிப்பு, experience, enjoyment
2. வேண்டியதை வேண்டிய அளவு பெற்றுக்கொள்ளுதல்,
receiving as much as you require
3. உண்ணுகை, eating, feeding
1.
தண் பத வேனில் இன்ப நுகர்ச்சி
எம்மொடு கொண்மோ பெரும நின் – ஐங் 368/3,4
குளிர்ச்சியான பக்குவம் கொண்ட வேனில் காலத்தின் இன்பத்தின் அனுபவிப்பை
எம்மோடும் கொள்வாயாக, பெருமானே!
2.
அரும் தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல் அணி கொள
விரிந்து ஆனா சினை-தொறூஉம் வேண்டும் தாது அமர்ந்து ஆடி
புரிந்து ஆர்க்கும் வண்டொடு – கலி 30/1-3
அரிய தவத்தைச் செய்தவர்கள் வேண்டியதை வேண்டிய அளவு பெற்றுக்கொள்வது போல, அழகாக
மலர்ந்து கொள்ளாத கிளைகள்தோறும் வேண்டிய அளவு தேனை அமர்ந்து உண்டு
களித்து ஆரவாரிக்கும் வண்டுகளோடு
3.
பருதி உருவின் பல் படை புரிசை
எருவை நுகர்ச்சி யூப நெடும் தூண்
வேத வேள்வி தொழில் முடித்ததூஉம் – புறம் 224/7-9
வட்டமாகிய வடிவினையுடைய பல படையாகச் செய்யப்பட்ட மதிலால் சூழப்பட்ட வேள்விச்சாலையுள்
பருந்து உண்பதற்காகச் செய்யப்பட்ட இடத்தில் நாட்டிய யூபமாகிய நெடிய கம்பத்து
வேதத்தில் சொல்லப்பட்ட வேள்வியினைச் செய்து முடித்ததுவும்
|
நுகும்பு |
நுகும்பு – (பெ) பனை, வாழை முதலியவற்றின் மடல்விரியாத குருத்து,
Unexpanded tender leaf of palmyra, plantain, etc.,
சோலை வாழை சுரி நுகும்பு – குறு 308/1
சோலை வாழையின் சுருண்ட குருத்து
புல் நுகும்பு எடுத்த நன் நெடும் கானத்து – அகம் 283/13
புற்கள் குருத்தினை விட்ட நல்ல நீண்ட காட்டில்
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு – புறம் 249/5
பனையின் குருத்தை ஒத்த சினை முற்றிய வரால் மீனொடு
வேனில் ஓதி பாடு நடை வழலை
வரி மரல் நுகும்பின் வாடி – நற் 92/2,3
வேனிற்காலத்து ஓந்தியின் வருத்தமான நடையைக்கொண்ட ஆண் ஓந்தி
வரிகள் உள்ள பெருங்குரும்பையின் குருத்துப்போல வாடி
|
நுங்கு |
நுங்கு – 1. (வி) விழுங்கு, swallow
– 2. (பெ) பனங்காய்க்குள் இருக்கும் இனிய மென்மையான சதைப்பகுதி
pulpy tender kernel of palmyra unriped fruit
1.
அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆக
பகல் நுங்கியது போல படு_சுடர் கல் சேர – கலி 119/1,2
அகன்ற உலகத்தை வெளிச்சமாக்கும் தன் பல கதிர்களையே வாயாகக்கொண்டு
பகலை விழுங்கியது போல, மறைகின்ற ஞாயிறு மலையைச் சேர,
2.
வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின்
இன் சேறு இகுதரும் எயிற்றின் – சிறு 27,28
பெரிய குலையினையுடைய பனை வளர்த்த நுங்கில் உள்ள
இனிய சுவைநீர் (தன் சுவையால்)தாழ்ந்துபோகும் (ஊறலையுடைய)பற்களையும்
|
நுங்கை |
நுங்கை – (பெ) உன் தங்கை, your younger sister
நுங்கை ஆகுவென் நினக்கு என- அகம் 386/12
உன் தங்கை ஆகுவேன் உனக்கு என்று
|
நுசுப்பு |
நுசுப்பு – (பெ) பெண்களின் இடுப்பு, waist of women
ஒரு முகம்
குறவர் மட மகள் கொடி போல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே – திரு 100-102
ஒரு முகம்
குறவரின் இளமகளாகிய, கொடி போன்ற இடையையும்
மடப்பத்தையும் உடைய, வள்ளியோடே மகிழ்ச்சியைப் பொருந்திற்று;
|
நுடக்கம் |
நுடக்கம் – (பெ) 1. வளைவு, bending, curving
2. வளைந்து வளைந்து ஆடும் ஆட்டம், dancing by bending
3. வளைந்தும் நெளிந்ததுமான அசைவுகள்,
short writhing movements by swaying and wriggling
1.
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்
நுணங்கு துகில் நுடக்கம் போல கணம்_கொள – நற் 15/1,2
முழங்குகின்ற கடலலைகள் கொழித்துக் கொணர்ந்த பெரிதான மணல்மேடு
காற்றால் ஆடும் துகிலின் வளைவுகள் போலப் பெருமளவில் உருவாகும்படி
2.
நல்லவர் நுடக்கம் போல் நயம் வந்த கொம்பொடும் – கலி 32/10
நல்ல கூத்தாடுபவரின் ஆட்டம் போன்று நயமாக ஆடும் மலர்க்கொடிகளோடும்,
3.
சூது ஆர் குறும் தொடி சூர் அமை நுடக்கத்து
நின் வெம் காதலி தழீஇ நெருநை
ஆடினை என்ப புனலே – ஐங் 71/1-3
வஞ்சனை நிறைந்தவளும், குறிய வளையல்களை அணிந்தவளும், அஞ்சும்படியான அசைவுகளையுடையவளுமான
உனது விருப்பத்திற்குரிய காதலியைத் தழுவியவாறு நேற்று
மகிழ்ந்தாடியிருக்கிறாய் என்கிறார்கள் ஆற்றுவெள்ளத்தில்
|
நுடக்கு |
நுடக்கு – 1. (வி) 1. மடக்கு, fold
2. கவிழ்த்து, turn upside down
-2. (பெ) மடிப்பு, fold
1.1.
உண்ட நன் கலம் பெய்து நுடக்கவும் – புறம் 384/20
உணவுண்ட நல்ல இலைகளில் உண்ணமாட்டாது ஒழித்த மிக்கவற்றை இலையிடையே வைத்து மடக்கவும்
1.2.
கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய
வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின் – பெரும் 339,340
கள்ளைச் சமைக்கின்ற மகளிர் வட்டில் கழுவிக் கவிழ்த்த
வழிந்து சிந்தின கழுநீர் வழிந்த குழம்பிடத்து
2.
ஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடலே
பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே – பரி 2/50,51
பகைவரை ஒருசேர அழிக்கும் கூற்றுவனைப் போன்றது உன் சக்கரப்படையின் உடல்;
பொன்னைப் போல ஒளிவிடும் நெருப்பின் (மடிப்பான)கொழுந்துதான் அதன் நிறம்
|
நுடங்கு |
நுடங்கு – (வி) 1. வளை, மடங்கு, bend, fold
2. அசை, ஆடு, அலை, wave, flutter
1.
வடந்தை தண் வளி எறி-தொறும் நுடங்கி
தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல்
பாண்டில் விளக்கில் பரூஉ சுடர் அழல – நெடு 173-175
வாடையின் குளிர்ந்த காற்று அடிக்குந்தோறும் நெளிந்து வளைந்து,
தெற்கு நோக்கி எழுந்து சாய்ந்த தீச்சுடரையுடையவாய், நன்றாகிய பலவான
பாண்டில் விளக்கில் பருத்த தீக்கொழுந்து எரிய
2.
நெடும் கொடி நுடங்கும் நியம மூதூர் – நற் 45/4
நெடிய கொடிகள் மடங்கி அசையும் கடைத்தெருக்களைக் கொண்ட பழைய ஊரின்
|
நுட்பம் |
நுட்பம் – (பெ) அறிவுநுட்பம், Subtlety, acuteness
அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து
இலம் என மலர்ந்த கையர் ஆகி
தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர் – மலை 551-553
அகன்ற நாட்டினையும் குறைந்த அறிவினையும் உடையோராய்,
“எம்மிடம் இல்லை” என்று விரித்த கையினராய்,
தம் பெயரைத் தம்முடனேயே எடுத்துச்சென்று மாண்டோர்
|
நுணக்கம் |
நுணக்கம் – (பெ) நுண்மை, minuteness, நுரை, foam
கால் கடுப்பு அன்ன கடும் செலல் இவுளி
பால கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன
வால் வெண் தெவிட்டல் வழி வார் நுணக்கம்
சிலம்பி நூலின் நுணங்குவன பாறி – அகம் 224/5-8
காற்றின் வேகத்தை ஒத்த விரைந்த ஓட்டத்தினையுடைய குதிரைகளின்
பால் கடையுங்கால் எழும் நுரையின் பெரிய மிதப்பினை ஒத்த
மிக்க வெண்மையான வாயின் தெவிட்டலாய பின்னே வழிந்திடும் மெல்லிய நுரை
சிலம்பியின் நூல் போல் நுணுகுவனவாய்ச் சிதறி
|
நுணங்கு |
நுணங்கு – (வி) 1. நுண்ணிதாகு, be subtle
2. சிறுத்துப்போ, be thin
3. மெல்லியதாகு, be fine
4. நுட்பமாகு, sharp
5. நுட்பமாகு, minute
6. நுட்பமாகு, Difficult to detect or grasp by the mind or analyze
1.
காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கி
கடுத்தலும் தணிதலும் இன்றே – குறு 136/1-3
காமம் காமம் என்கிறார்களே; அந்தக் காமம்
வருத்தமும் நோயும் அன்று; நுண்ணிதாகி
மிகுவதும் குறைவதும் அன்று
2.
யாற்று அறல் நுணங்கிய நாள் பத வேனில் – நற் 157/4
ஆற்றில் அரித்தோடும் நீரோட்டம் சிறுத்துப்போன பதமான இளவேனில் காலத்தில்
3.
செக்கர் அன்ன சிவந்து நுணங்கு உருவின்
கண் பொருபு உகூஉம் ஒண் பூ கலிங்கம் – மது 432,433
செவ்வானத்தை ஒத்த, சிவந்து மெல்லிய வடிவில்,
கண்களை மயக்கி தெறித்துவிழப்பண்ணும் ஒள்ளிய பூவேலைப்பாடமைந்த ஆடைகளை
4.
நூல் வழி பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி
ஊர் காப்பாளர் ஊக்கு அரும் கணையினர் – மது 646,647
நூற்கள் (கூறும்)வழிமுறையைத் தப்பாத நுட்பமான நுணுகிய ஆராய்ச்சியின்)தெளிவினையுடையவராய்;(உள்ள)
ஊர்க் காவலர்கள், தப்புதற்கு அரிய அம்பினையுடையவராய்;
5.
நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை – மலை 35
நுட்பமான அரத்தால் அராவின நுண்ணிய தன்மையும்
6.
நுணங்கு நுண் பனுவல் புலவன் பாடிய
இனமழை தவழும் ஏழில்குன்றத்து – அகம் 345/6,7
நுட்பமான, நுண்ணிய செய்யுட்களை இயற்றிய புலவனால் பாடப்பெற்ற
கூட்டமான மேகங்கள் தவழும் எழில்குன்றத்து
|
நுணல் |
நுணல் – (பெ) 1. தேரை, toad
2. தவளை, frog
1.
உடும்பு கொலீஇ வரி நுணல் அகழ்ந்து – நற் 59/1
உடும்பைக் கொன்று எடுத்துக்கொண்டு, வரிகளையுடைய தேரையை மணலைத் தோண்டி எடுத்துக்கொண்டு
2.
வரி நுணல் கறங்க தேரை தெவிட்ட – ஐங் 468/1
வரிகளைக் கொண்ட தவளைகள் மிக்கு ஒலிக்க, தேரைகள் ஒன்றாய் ஒலிக்க
|
நுணவம் |
நுணவம் – (பெ) மஞ்சணத்தி, மஞ்சள்நாறி மரம். Indian mulberry, Morinda citrifolia;
நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து – சிறு 51
தேனை(ப் பூக்கள் தம்மிடத்திலிருந்து)துளிக்கும் இளமை முதிர்ந்த நுணா மரத்தின்
இது கரிய அடிப்பகுதியையும், பெரிய கிளைகளைகளையும், மிக்க நறுமணத்தையும் உடையது.
அவரோ வாரார் தான் வந்தன்றே
சுரும்பு களித்து ஆலும் இரும் சினை
கரும் கால் நுணவம் கமழும் பொழுதே – ஐங் 342
அவரோ வரவில்லை, ஆனால் இது வந்து நிற்கிறது –
வண்டினங்கள் களிப்புடன் பாடிக்கொண்டு சுற்றித்திரிகின்ற, பெரிய கிளைகளையும்
கரிய அடிப்பகுதியையும் கொண்ட நுணா மரங்கள் நறுமணத்தைப் பரப்புகின்ற இனிய பருவம்
இதன் பூக்கள்வெள்ளைநிறத்தில் இருக்கும்.
சிறு வெள் அருவி துவலையின் மலர்ந்த
கரும் கால் நுணவின் பெரும் சினை வான் பூ – அகம் 345/15,16
|
நுணவு |
நுணவு – (பெ) பார்க்க : நுணவம்
கரும் கால் நுணவின் பெரும் சினை வான் பூ – அகம் 345/16
|
நுதல் |
நுதல் – 1. (வி) சொல், பேசு, குறிப்பிடு, tell, speak, denote
2. (பெ) நெற்றி, forehead
1.
மை இல் கமலமும் வெள்ளமும் நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை – பரி 2/14,15
குற்றமற்ற தாமரை, வெள்ளம் ஆகிய பேரெண்களால் சொல்லப்பட்ட
குறிக்கப்பட்ட காலங்களின் ஈட்டங்களையும் கடந்த பின்னர்
2.
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – திரு 24
திலகம் இட்ட மணம் நாறுகின்ற அழகிய நெற்றியில்
|
நுதால் |
நுதால் – (வி.வே) விளிவேற்றுமை – நுதலையுடையவளே – vocative case – Oh, the lady with (a beautiful) forehead
நடை செல்லாய் நனி ஏங்கி நடுங்கல் காண் நறு_நுதால் – கலி 17/4
அவரின் போக்குப்படி நடந்துகொள்ளாமல் மிகவும் ஏங்கி நடுங்குகிறாயே, நறிய நெற்றியையுடையவளே
|
நுதி |
நுதி – (பெ) நுனி, முனை, tip
வை_நுதி பொருத வடு ஆழ் வரி நுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வர – திரு 78,79
கூரிய நுனி(யையுடைய தோட்டி) வெட்டின வடு அழுந்தின புகரையுடைய நெற்றியில்
வாடாத மாலையான பொன்னரிமாலை நெற்றிப்பட்டத்தோடு கிடந்து அசைய,
|
நுந்தை |
நுந்தை – (பெ) நும் தந்தை, your father
எந்தை திமில் இது நுந்தை திமில் என – நற் 331/6
என் தந்தையின் படகு இது, உனது தந்தையின் படகு என்று சொல்லிக்கொண்டு
|
நுனை |
நுனை – (பெ) முனை, point, tip, end
அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை – அகம் 9/3
அம்பின் குப்பி முனையைப் போன்று அரும்பிய இலுப்பையின்
|
நுமர் |
நுமர் – (பெ) உன்னைச்சேர்ந்தவர்கள், உன்னுடைய உறவினர், your well-wishers, your relatives
நேர் இறை முன்கை பற்றி நுமர் தர
நாடு அறி நன் மணம் அயர்கம் சில் நாள் – குறி 231,232
“நேர்த்தியாக (தோளின்)இருபக்கங்களிலும் அமைந்த கைகளின் முன்பக்கத்தைப் பிடித்து உன்வீட்டார் (எனக்குத்)தர
நாட்டில் உள்ளார் (எல்லாம்)அறியும் நன்மையுடைய திருமணத்தை நிகழ்த்துவேன், சில நாட்களில்,
|
நுளம்பு |
நுளம்பு – (பெ) கொசு, mosquito, ஈ, fly
ஆன் நுளம்பு உலம்பு-தொறு உளம்பும்
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே – குறு 86/5,6
பசுக்களின் (கழுத்திலணிந்த), ஈக்கள் ஒலியெழுப்பும்போதெல்லாம் சத்தமிடும்
நாவு ஒலிக்கும் வளைந்த மணியின் மெல்லிய ஓசையை
|
நுளைமகள் |
நுளைமகள் – (பெ) மீனவப்பெண், fishermen lady
நுதி வேல் நோக்கின் நுளைமகள் அரித்த
பழம்படு தேறல் பரதவர் மடுப்ப – சிறு 158,159
(கூர்)முனையுள்ள வேல்(போன்ற) பார்வையினையும் உடைய மீனவமகளால் அரிக்கப்பட்ட,
பழையதாகிய (களிப்பு மிகுகின்ற)கள்ளின் தெளிவினைப் பரதவர் (கொணர்ந்து உம்மை)ஊட்ட
|
நுளையர் |
நுளையர் – (பெ) பரதவர், fishermen
நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்
பொலம் பூண் எவ்வி – அகம் 366/11,12
முற்றிய தேனாகிய கள்ளின் தெளிவை பரதவர்க்கு அளிக்கும்
பொற்பூண் அணிந்த எவ்வி என்பானின்
|
நுவணை |
நுவணை – (பெ) இடித்த மாவு, flour
குற_மகள்
மென் தினை நுவணை உண்டு தட்டையின்
ஐவன சிறு கிளி கடியும் நாட – ஐங் 285/1-3
குறமகள்
மென்மையான் தினையின் மாவினை உண்டபடியே தட்டை என்னும் கருவியை ஓங்கி முழக்கி,
ஐவன நெல் கதிரை உண்ணும் சிறிய கிளிகளை விரட்டிவிடும் நாட்டினனே!
|
நுவறல் |
நுவறல் – (பெ) சொல்லுதல், saying, uttering
அவனே பெறுக என் நா இசை நுவறல் – புறம் 379/2
அவன் ஒருவனே பெறுவானாக, என் நாவால் புகழ்ந்து சொல்லப்படுவதை
|
நுவறு |
நுவறு – (வி) – அராவு, file
நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் – மலை 35
நுட்பமான அரத்தால் அராவின நுண்ணிய தன்மையும்
|
நுவல் |
நுவல் – (வி) சொல், say, speak, utter
இசை நுவல் வித்தின் நசை ஏர் உழவர்க்கு – மலை 60
புகழ் பாடுதல்(என்ற) விதையினையும் (பரிசில்மீது)விருப்பம் (என்ற)ஏரினையும் (கொண்ட)உழவர்க்கு(=பரிசிலர்க்கு)
சாறு என நுவலும் முது வாய் குயவ
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ – நற் 200/4,5
திருவிழா பற்றிய செய்திகளைக் கூறும் முதுமை வாய்க்கபெற்ற குயவனே!
இதனையும் அங்கு தெரிவிப்பாயாக
|
நுவ்வை |
நுவ்வை – (பெ) உன் தங்கை, your younger sister
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே – நற் 172/3-5
நெய் கலந்த இனிய பாலை ஊற்றி இனிதாக வளர்க்க,
உம்மைக்காட்டிலும் சிறந்தது இந்த உமது தங்கையானவள் என்று
அன்னை கூறினாள் இந்தப் புன்னையது சிறப்பைப்பற்றி;
|
நூக்கு |
நூக்கு – (வி) 1. தள்ளு, push,thrust aside
2. முறி, cut down
1.
எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்க
தொடுத்த தேன் சோரும் வரை போலும் தோற்றம் – பரி 16/45,46
காற்றால் எடுக்கப்பெற்ற மூங்கில் மேலே கிளர்ந்து, அக்காற்றின் தள்ளுதலால் உயர்ந்து தாக்குதலால்
தேன் சோர்ந்து விழும் வரையை ஒக்கும் தோற்றம்
2.
ஊழ் ஆரத்து ஓய் கரை நூக்கி புனல் தந்த
காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பில் – பரி 9/27,28
சந்தன மரங்களையுடைய ஊழால் மெலிந்த கரையை முறித்து வையைப்புனல் கொண்டுவந்த
வயிரம்பாய்ந்த சந்தனத்தினது புகை சூழ்ந்த மாலையையுடைய மார்பில்
|
நூபுரம் |
நூபுரம் – (பெ) சிலம்பு, கிண்கிணி, tinkling anklet
திருந்து அடி நூபுரம் ஆர்ப்ப இயலி- கலி 83/16
தமது திருத்தமான காலடிகளில் சிலம்புகள் ஆரவாரிக்க, ஓடிவந்து
|
நூறு |
நூறு – 1. (வி) 1. அழி, destroy, kill
2. வெட்டு, cut down, butcher
3. (மார்பில்)அடித்துக்கொள், strike, beat (as one’s breast)
2. (பெ) 1. நூறு என்னும் எண், hundred
2. நீறு, சுண்ணாம்புப்பொடி, lime powder
1.1
அம்பு உடை கையர் அரண் பல நூறி – அகம் 69/16
அம்பினையுடைய கையினராய் பகைவர் அரண்கள் பலவற்றை அழித்து
1.2
வேல் கோல் ஆக ஆள் செல நூறி – மது 690
வேலினை (ஆனோட்டும்)கோலாகக்கொண்டு வீரரை மாள வெட்டி
1.3
முலை பொலி ஆகம் உருப்ப நூறி
மெய்ம்மறந்து பட்ட வரையா பூசல்
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர – புறம் 25/10-12
முலை பொலிந்த மார்பகம் அழல்பட அறைந்துகொண்டு
அறிவு மயங்கி உற்ற அளவற்ற அழுகை ஆரவாரத்தையுடைய
ஒளிரும் நெற்றியையுடைய மகளிர் கைம்மை நோன்பிலே மிக
2.1
காய் நெல் அறுத்து கவளம் கொளினே
மா நிறைவு இல்லதும் பன் நாட்கு ஆகும்
நூறு செறு ஆயினும் தமித்து புக்கு உணினே
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும் – புறம் 184/1-4
காய்த்த நெல்லை அறுத்துக் கவளமாகக் கொடுத்தால்
ஒரு மாவுக்குக் குறைந்த நிலத்தின் கதிரும் பல நாளைக்கு ஆகும்
நூறு செய் ஆயினும் யானை தனித்துப் புகுந்து உண்ணுமாயின்
அதன் வாயினுள்புகுந்த நெல்லைக் காட்டிலும் கால் மிகவும்கெடுக்கும்.
2.2
நீடு கொடி இலையினர் கோடு சுடு நூற்றினர் – மது 401
நீண்ட கொடி(யில் விளையும்) வெற்றிலையை உடையவரும், சங்கு சுட்டு(ப் பொடித்த) சுண்ணாம்பையுடையவரும்,
|
நூறை |
நூறை – (பெ) ஒரு கிழங்கு, a root vegetable, Fiji yam, Dioscorea pentaphylla
காஅய் கொண்ட நுகம் மருள் நூறை – மலை 515
தோளில் சுமந்துவந்த, நுகத்தடியோ என நினைக்கத்தோன்றும் நூறைக்கிழங்கும்
|
நூற்றுவர் |
நூற்றுவர் – (பெ) கௌரவர்கள், kaurava princes
மறம் தலைக்கொண்ட நூற்றுவர்_தலைவனை – கலி 52/2
அறத்தை விட்டு மறத்தை மேற்கொண்ட நூற்றுவர் தலைவனான துரியோதனனின்
|
நூலேணி |
நூலேணி – (பெ) நூல்கயிற்றால் அமைந்த ஏணி., Ladder made of threads;
மெல் நூல்_ஏணி பன் மாண் சுற்றினர் – மது 640
மெல்லிய நூலாற் செய்த ஏணியை (இடுப்பைச்சுற்றிப்)பல முறை சுற்றிய சுற்றினையுடையவராய்
|
நூலோர் |
நூலோர் – (பெ) பலநூல்களைக் கற்றுத்தேறியவர்கள், those who have learnt treatises on many subjects
நூலோர் புகழ்ந்த மாட்சிய மால் கடல்
வளை கண்டு அன்ன வால் உளை புரவி – பெரும் 487,488
(குதிரை இலக்கண)நூல்கற்றோர் புகழ்ந்த மாண்புடையனவாய், திருமாலின் பாற்கடலில்
சங்கைக் கண்டாற் போன்ற வெண்மையான தலையிறகுகளை உடைய குதிரைகள்,
|
நூல் |
நூல் – 1. (வி) (பஞ்சை) இழையாக்கு, make yarn from cotton, spin
2. (பெ) 1. பஞ்சு இழை, yarn, thread
2. பூணூல், sacred thread
3. ஆகமங்கள், சாத்திரங்கள், agama, Systematic treatise
4. இசை, கட்டிடக்கலை ஆகியன பற்றிய புத்தகங்கள், treatise on music, architecture etc.,
1.
நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்று அன்ன
வயலை – ஐங் 211/1,2
நெய்யுடன் கலந்து பிசைந்த உழுந்தின் மாவைக் கம்பியாக நூற்றால் போன்ற
வயலைக் கொடிகள்
2.1.
நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப – குறு 104/2
நூலினின்றும் அறுபட்ட முத்துக்களைப் போல குளிர்ந்த துளிகள் உதிர
2.2.
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப – பரி 11/79
முப்புரியாக பூணுலை அணிந்த அந்தணர் பொன்னாலான கலன்களை ஏந்தி நிற்க
2.3.
மாலை மார்ப நூல் அறி புலவ – திரு 261
மாலை அணிந்த மார்பினனே, வேதாகமங்கள் முதலிய பல சாத்திரங்களையும் ஓதாது உணர்த்தும் பண்டிதனே
2.4.
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக
நூல் நெறி மரபின் பண்ணி – சிறு 230,231
சுதிசேர்த்தல் கொண்ட இனிய யாழை, (பாலை யாழின்)குரலையே(செம்பாலையை) குரலாகக் கொண்டு
இசைநூல் கூறுகின்ற முறையால் இயக்கி
நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி – நெடு 76,77
(கட்டிடக்கலை)நூலை அறிந்த கலைஞர் மிகச்சரியாக நூலை நேரே பிடித்து,
திசைகளைக் குறித்துக்கொண்டு, தெய்வங்களை (ஏறிட்டுப்)பார்த்து(த் தொழுது),
நூல் அமை பிறப்பின் நீல உத்தி – அகம் 400/5
புரவி நூல் கூறும் இலக்கணம் அமைந்த பிறப்பினையும், நீலமணியாகிய நெற்றிச்சுட்டியினையும்
|
நூழிலாட்டு |
நூழிலாட்டு – 1. (வி) கொன்றுகுவி, slay in heaps
2. (பெ) கொன்று குவித்தல், killing in heaps
1.
இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம்
நுகம் பட கடந்து நூழிலாட்டி
புரை தோல் வரைப்பின் வேல் நிழல் புலவோர்க்கு – மலை 87,88
வெகுதூரத்தில் உள்ளனவாயினும், பகைவர் நாட்டின்
(வண்டிக்கு நுகத்தடி போன்ற)முன்னணிப்படை வீழுமாறு மேற்சென்று (படையினரைக்)கொன்று குவித்து,
சிறந்த கேடகங்களைக்கொண்ட கோட்டைமதிலில் இருக்கும் வேல் படையின் பாதுகாப்பில் இருக்கும் அறிஞர்க்கு
2.
வள்ளை நீக்கி வய மீன் முகந்து
கொள்ளை சாற்றிய கொடு முடி வலைஞர்
வேழ பழனத்து நூழிலாட்டு – மது 255-257
வள்ளைக்கொடிகளை ஒதுக்கிவிட்டு வலிமையுடைய மீன்களை முகந்துகொண்டு, 255
(தாம்)கொண்டவற்றைக் கூவிவிற்கும் கொடிய முடிச்சுக்களையுடைய வலைகளையுடையோர்,
கொறுக்கைச்சிப் புல்லையுடைய வயல்மீன்களைக் கொன்றுகுவிக்கும் ஓசையும்
|
நூழில் |
நூழில் – (பெ) கொன்றுகுவித்தல், slaughter, massacre
நூழிலும் இழுக்கும் ஊழ் அடி முட்டமும்
பழுவும் பாந்தளும் உளப்பட பிறவும்
வழுவின் வழாஅ விழுமம் அவர்
குழு மலை விடரகம் உடையவால் எனவே – குறி 258-261
(வழிப்பறி செய்வோர்)கொன்று குவிக்கும் இடங்களும், வழுக்கு நிலமும், புழங்கின தடங்களுள்ள முட்டுப்பாதைகளும்
பேயும், மலைப்பாம்பும், (இவற்றை)உள்ளிட்ட பிறவும்,
(நாம் சிறிது)தவறினாலும் (அவை உடனே கொல்லத்)தவறாத இடர்ப்பாடுகளை — (அவரின்
கூட்டமான மலைகளில் உள்ள பிளவுகள் உள்ள இடம்) — உடையன’ என்றாள் தோழி
|
நூழை |
நூழை – (பெ) சிறுவாயில், துவாரம், Postern, hole
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின்
செய்ம்ம் மேவல் சிறு கண் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில் – நற் 98/1-4
முள்ளம்பன்றியின் முள்ளைப்போன்ற பருத்த மயிருள்ள பிடரியைக் கொண்ட,
வயலில் மேயும் விருப்பமுள்ள, சிறிய கண்கள் உள்ள, பன்றியானது,
உயர்ந்த மலையிலுள்ள அகன்ற கொல்லையில் சென்று மேயும்பொருட்டு, விலங்குகளைப் பிடிக்கும் பெரிய பொறியின்
சிறிய வாசலில் நுழையும் பொழுதில்
|
நெகிழ் |
நெகிழ் – (வி) 1. நழுவு, slip off as a garment
2. இறுக்கம் தளர், loosen, unfasten
3. மெலி, grow lean, get weaken
4. சேதப்படு, (அழகு) குன்று, be impaired, wear away, wither
5. இளகு, மனமிரங்கு, melt, grow tender, to relent
1.
சிறு வெள்ளாங்குருகே சிறு வெள்ளாங்குருகே
————— —————— —————–
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே – நற் 70/1-9
சிறிய வெள்ளைக் குருகே! சிறிய வெள்ளைக் குருகே!
—————- —————– ——————
வயல்களையுடைய நல்ல ஊரினையுடைய எனது காதலரிடம் சென்று என்னுடைய
அணிகலன்கள் கழன்று நழுவிப்போகும் துன்பத்தை இதுவரை சொல்லாதிருக்கின்றாய்
2.
பிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ வெறி கொள – கலி 32/5
கட்டுகள் தளர்ந்து மலர்ந்த வேங்கையின் விரிந்த பூக்கள் உதிர்ந்து மணம் பரப்ப
3.
ஆர் இருள் கங்குல் அணையொடு பொருந்தி
ஓர் யான் ஆகுவது எவன்கொல்
நீர் வார் கண்ணொடு நெகிழ் தோளேனே – அகம் 82/16-18
அரிய இருள் செறிந்த இரவில் தலையணையின்கண் சேர்ந்து,
நான் ஒருத்தி மட்டுமே இப்படி ஆகிப்போனது என்னவோ,
நீர் சொரியும் கண்களோடு மெலிந்துபோன தோளையுடையவளாக
4.
மா மலர் வண்ணம் இழந்த கண்ணும்
பூ நெகிழ் அணையின் சாஅய தோளும் – அகம் 197/1,2
கரிய குவளை மலரின் அழகினை இழந்த கண்களும்
அழகு குன்றி திரைந்துபோன தலையணை போன்ற மெலிந்த தோள்களும்
5.
நெஞ்சு நெகிழ்_தகுந கூறி அன்பு கலந்து
அறாஅ வஞ்சினம் செய்தோர் – அகம் 267/1,2
நம் நெஞ்சம் இளகத்தக்கனவற்றைக் கூறி அன்பினால் உள்ளம் கலந்து
தாம் என்றும் பிரியாமைக்குரிய சூளுறவு செய்தோராகிய நம் தலைவர்
|
நெக்கு |
நெக்கு – (வி) நெகிழ், get soaked as ground after rain
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை
மிதிப்ப நக்க கண் போல் நெய்தல்
கள் கமழ்ந்து ஆனா துறைவற்கு
நெக்க நெஞ்சம் நேர்கல்லேனே – ஐங் 151
வெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக
அதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை
மிதித்துவிட, சிரிக்கின்ற கண்போல் மலர்ந்த நெய்தல்
தேன் மணத்தை ஒழியாமல் பரப்பும் துறையைச் சேர்ந்தவனுக்காக
நெகிழ்ந்துபோன என் நெஞ்சத்துடன் அவனை ஏற்றுக்கொள்ளமாட்டேன்
|
நெஞ்சம் |
நெஞ்சம் – (பெ) 1. மனம், mind
2. இருதயம், heart
3. ஆகமம், Agamas
1.
செம் புல பெயல் நீர் போல
அன்பு உடை நெஞ்சம் தாம் கலந்தனவே – குறு 40/4,5
செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல
அன்புடைய நம் மனங்கள் தாமாக ஒன்றுபட்டனவே
2.
ஏற்று எருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு – கலி 103/43
எருமைக்கடாவில் வருகின்ற கூற்றுவனின் இருதயத்தைக் கால்நுனியால் பிளந்திட்டு
3
சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று
ஐந்து உடன் போற்றி – பதி 21/1,2
சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், சோதிடம், வேதம், ஆகமம் ஆகிய
ஐந்தினையும் சேர்ந்து கற்று,
|
நெஞ்சு |
நெஞ்சு – (பெ) நெஞ்சம், பார்க்க – நெஞ்சம்
1. மனம், mind
2. இருதயம், நடுப்பகுதி, centre, the heart of a thing
1.
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே – குறு 49/5
நானே உன் மனத்தில் நிறைந்தவளாய் இருக்கவேண்டும்.
2.
குன்றின்
நெஞ்சு பக எறிந்த அம் சுடர் நெடு வேல் – குறு 0/3,4
குன்றின்
நடுப்பகுதி பிளக்கும்படியாக எறிந்த அழகிய சுடர்விடும் நீண்ட வேலையும்,
|
நெடி |
நெடி – (பெ.அ) நெடிய என்பதன் குறுக்கம், long
நெடி இடை பின் பட கடவு-மதி என்று – அகம் 254/17
நீண்ட வழி பின்னுற செலுத்துவாய் என்று
கொடியோர் குறுகும் நெடி இரும் குன்றத்து – அகம் 288/9
ஆறலைப்போர் பொருந்தி நெருங்கியிருக்கும் நீண்ட பெரிய குன்றின்
|
நெடிது |
நெடிது – 1. (பெ) 1. நீண்ட நேரம், long time
2. நீண்ட காலம், long number of years
2. (வி.அ) 1. நீண்டதாக, long
2. நெடுநேரம் தாமதமாக, after a long delay
3. (வி.மு) நீளமானது, is long
1.1.
குறும் கால் காஞ்சி கொம்பர் ஏறி
நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து
புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல் – சிறு 179-181
குறிய தாளினையும் உடைய காஞ்சிமரத்தின் கொம்பில் ஏறி,
(தான்)நிலையாக இருத்தல் அரிதாகிய குளத்தை(க் கூர்ந்து) பார்த்து, நெடும்பொழுதிருந்து
புலால் நாறும் கயலை(முழுகி) எடுத்த பொன்(னிறம் போலும்) வாயையுடைய (நீல)மணி(போன்ற) மீன்கொத்தியின்
1.2.
தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி
வந்தேன் பெரும வாழிய நெடிது – பெரும் 460,461
குறையாத கொடையினையுடைய நின் பெரிய பெயரைப் புகழ்ந்துசொல்லி,
வந்தேன் பெருமானே, நீ நெடுங்காலம் வாழ்வாயாக’
2.1
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிரா – நெடு 163
உரோகிணியை நினைத்தவளாய்(அவற்றைப்) பார்த்து நெடியதாக மூச்சுவிட்டு,
2.2
நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே – புறம் 296/5
நீண்ட நேரம் தாழ்த்து வந்தது நெடுந்தகையாகிய இவனது தேர்
3.
நாள் இடை சேப்பின் ஊழியின் நெடிதே – ஐங் 482/4
ஒருநாளேனும் இடைவழியில் தங்கினால், அது ஊழிக்கால அளவிலும் நெடியது.
|
நெடிய |
நெடிய – 1. (பெ) 1. நெடுநேரம், long time
2. நெடுந்தொலைவு, long distance
3. நெடுங்காலம், long period
4. பெரியன, big
5. நீண்டன, lenghthy
6. பெருமொழி, வீராப்பு, boasting
– 2. (பெ.அ) நீண்ட, long
– 3. (வி.உ) 1. நீண்ட தூரத்தன, are very distant
2. நீண்டு செல்வன, are very long
1.1.
நிழல் காண்-தோறும் நெடிய வைகி – நற் 9/7
நிழல் கண்ட இடமெல்லாம் நெடுநேரம் தங்கி
1.2.
அரும் பொருள் வேட்கையம் ஆகி நின் துறந்து
பெரும் கல் அதர் இடை பிரிந்த_காலை
தவ நனி நெடிய ஆயின – ஐங் 359/1-3
கிட்டுவதற்கரிய பொருள்மீது பற்றுடையவனாகி, உன்னைத் துறந்து
பெரிய பாறைகளின் வழியே செல்லும் பாதையினிடையே பிரிந்து சென்றபோது
மிக மிக நெடுந்தொலைவாக இருந்தது
1.3
நெடிய நீடினம் நேர்_இழை மறந்தே – ஐங் 484/4
மிகவும் நீண்ட காலம் தங்கிவிட்டோம், அழகிய அணிகலன்களை அணிந்தவளை மறந்து
1.4
குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து – மது 520
சிறியனவும் பெரியனவுமாகிய மடிப்புடைவைகளைக் கொண்டுவந்து விரித்து
1.5
குறியவும் நெடியவும் உரை பல பயிற்றி – நெடு 154
சிற்சில சொற்களாலும், நீண்ட மொழிகளாலும் (ஆறுதல்)உரைகள் பலவற்றையும் திரும்பத்திரும்பக் கூறி,
1.6
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்று தன் செய்_வினை பயனே – நற் 210/5,6
பெருமொழி பேசுவதும், விரைவாகத் தேர்களில் வலம்வருவதும்
செல்வம் இல்லை; அது முன்செய்த நல்வினைப்பயன்;
2.
நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த – குறு 252/1
நீண்ட திரண்ட தோள்களில் உள்ள வளைகளை நெகிழும்படி செய்த
3.1
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது – அகம் 89/17
கொல்லையினையுடைய பெரிய காடுகளை நீண்ட தூரத்தன என்று எண்ணாது
3.2
நெடிய என்னாது சுரம் பல கடந்து – புறம் 47/2
நீண்டு செல்வன என்று கருதாது அரிய வழி பலவற்றையும் கடந்து
|
நெடியோன் |
நெடியோன் – (பெ) 1. திருமால், Lord Vishnu
2. நிலந்தரு திருவிற் பாண்டியன் என்னும் மன்னன், a Pandiya king
3. சிவபெருமான், Lord Siva
4. முருகன், Lord Muruga
5. உயர்ந்தோன், great person
6. இந்திரன், Lord Indra
1.
நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ் – பெரும் 402
நீல நிறத்தையுடைய வடிவினையுடைய திருமாலின் உந்தி
2
பொலம் தார் மார்பின் நெடியோன் உம்பல் – மது 61
பொன்னால் செய்த மாலையை அணிந்த நிலந்தரு திருவிற் பாண்டியன் என்னும் புகழால் நீண்டவனுடைய
வழியில் வந்தவனே
3
மழு வாள் நெடியோன் தலைவன் ஆக – மது 455
மழுவாகிய வாளையுடைய பெரியோனாகிய சிவபெருமான் தலைவனாய் இருக்க
4.
ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து – அகம் 149/16
இடையறாத விழாக்களையுடைய முருகனது திருப்பரங்குன்றத்தே
5.
தேர் வீசு இருக்கை நெடியோன் குன்றே – புறம் 114/6
தேர் வழங்கும் இருப்பையுடைய உயர்ந்தோனுடைய மலை.
6.
வச்சிர தட கை நெடியோன் கோயிலுள் – புறம் 241/3
வச்சிராயுதத்தையுடைய விசாலமாகிய கையையுடைய இந்திரனது கோயிலினுள்ளே
|
நெடுங்கணக்கு |
நெடுங்கணக்கு neḍuṅgaṇakku, பெ. (n.)
1. அரிச்சுவடி (தொல்.எழுத்து.94, உரை);; alphabet.
ஒவறு நெடுங்கணக் கோதிடுஞ்சிறார் (சேதுபு.கந்தமா.75);. நெடுங்கணக்குப் பொத்தகம் ஒன்று வாங்கி வா.
2. நெடுநாட்கணக்கு (வின்.);; a long account or reckoning.
அவன் கணக்கு நெடுங்கணக்கு.
3. வாராக் கடன் (வின்.);; bad debt.
அவன் கடனை நெடுங்கணக்கில் வை.
[நெடும் + கணக்கு. கணக்கு = எழுத்து.]
|
நெடுங்கதை |
நெடுங்கதை neḍuṅgadai, பெ. (n.)
1. பழங்கதை (யாழ்.அக.);; ancient story.
அவனுடைய நெடுங்கதையைக் கேட்கவா வந்தேன்.
2. புதினம்(நாவல்);; novel.
3. நீண்டகதை; long story or short novel.
[நெடு → நெடும் + கதை]
|
நெடுங்கல்நின்றமன்றம் |
நெடுங்கல்நின்றமன்றம் neḍuṅgalniṉṟamaṉṟam, பெ. (n.)
காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள ஐந்து மன்றங்களில் ஒன்று; one among the five halls at Kaviripöm-pattinamin Tamilnadu.
“நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்” (சிலப்.51.27);.
[நெடுங்கல் + நின்ற + மன்றம்]
ஐந்து மன்றங்கள் காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்த வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் நின்ற மன்றம், பூதசதுக்கம், பாவை மன்றம்
|
நெடுங்கிள்ளி |
நெடுங்கிள்ளி neḍuṅgiḷḷi, பெ. (n.)
கழகச் காலச் சோழ மன்னன்; a Chola king ir Šangam age.
கோவூர்க்கிழாரால் பாடப்பட்டவன் (புறநா 44,45,47);. இவன் தம்பி (எதிரி); உரையூரிலிருந்த நலங்கிள்ளி என்னும் சோழன். நெடுங் கிள்ளிக்கு ஆவூரும் உறையூரும் சொந்தமாக இருந்தன நலங்கிள்ளி ஆவூரை முற்றுகையிட்ட போது நெடுங்கிள்ளி அவனுடன் போரிடவியலா தென்று மதிலை அடைத்துப் பதுங்கிக் கிடந்தான். இந்நிலை நெடுங்கிள்ளிக்கு இழிவெனக் கூறிக்கோவூர் கிழா இவனை இடித்துரைத்தார் (புறநா.44);. இவனுக்குக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியெனவும் பெயரிருப்பதால் இவன் காரியாறு என்னும் இடத்தில் இறந்திருக்கவேண்டும்.
“இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மதி பெறாஅ
திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி
நிலமிசைப் புரளுங் கைய வெய்து உயிர்த்து
அலமரல் யானை உரும்என முழங்கவும்
பாலில் குழவி அலறவும் மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவும் நீரில்
வினைபுனை நல்லில் இணைகூஉக் கேட்பவும்
இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்
துன்னருந் துப்பின் வயமான் தோன்றல்
அறவை ஆயின் நினதுஎனத் திறத்தல்
மறவை ஆயின் போரொடு திறத்தல்
அறவையும் மறவையும் அல்லையாகத்
திறவாது அடைத்த திண் நிலைக் கதவின்
நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல்
நானுத்தக உடைத்து இது காணுங்காலே” (புறநா.44);
|
நெடுங்கைவேண்மான் |
நெடுங்கைவேண்மான் neḍuṅgaivēṇmāṉ, பெ. (n.)
சோழ நாட்டு மன்னன் பெருஞ்சாத்தன் என்பானின் பட்டப்பெயர்; title, honorific name to Chola king perujñ-såttan.
“நெடுங்கை வேண்மானருங்கடிப் பிடவூர்” (புறநா. 395:20);.
[நெடுங்கை + வேண்மான்]
|
நெடுஞ்சேரலாதன் |
நெடுஞ்சேரலாதன் – (பெ) ஒரு சேர மன்னன், a cEra king
கடம்பு முதல்தடிந்த கடும் சின முன்பின்
நெடுஞ்சேரலாதன் வாழ்க அவன் கண்ணி – பதி 20/4,5
(பகைவரின் காவல்மரமாகிய) கடம்பினை அடியோடு வெட்டி வீழ்த்தி அவரையும் வென்றழித்த மிக்க சினமும்
மெய்வன்மையுமுடைய
நெடுஞ்சேரலாதனாவான். அவன் சூடிய கண்ணி வாழ்வதாக
பதிற்றுப்பத்து என்னும் நூலுள், இரண்டாம் பத்துப் பாடல்கள் இவனைப் பற்றியன.
குமட்டூர்க் கண்ணனார் இவனைப் பாடியுள்ளார்.
இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்று சிறப்பித்துக் கூறப்படுகிறான்.
|
நெடுந்தகை |
நெடுந்தகை – (பெ) மேம்பாடுள்ளவன், person of great worth
வசை இல் நெடுந்தகை காண்கு வந்திசினே – பதி 41/16
பழிச்சொல் அற்ற நெடுந்தகையாகிய உன்னைக் காண்பதற்கு வந்திருக்கிறேன்!
|
நெடுமான்அஞ்சி |
நெடுமான்அஞ்சி – (பெ) ஒரு சிற்றரசன், a chieftain
கடு மான் தோன்றல் நெடுமான்_அஞ்சி
தன் அறியலன்-கொல் என் அறியலன்-கொல் – புறம் 206/6,7
விரைந்த குதிரையையுடைய குருசிலாகிய நெடுமான் அஞ்சி
தன் தரத்தை அறியாதவன்போலும், என் தரத்தையும் அறியான் போலும்
இவன் அதியமான் நெடுமான் அஞ்சி, அதிகன் என்றும் அழைக்கப்படுகிறான்.
கொங்குநாட்டில் தருமபுரி எனப்படும் தகடூரிலிருந்து ஆட்சிபுரிந்து வந்தான்.
தன்னைத் தேடிவந்த புலவர் ஔவையாருக்கு உடனே பரிசில் தந்தால், அவர் உடனே
சென்றுவிடுவார் என்றெண்ணி, பரில் கொடுக்கத் தாமதித்தான். இதனைத் தவறாகப்
புரிந்துகொண்ட ஔவையார் சினந்து இவ்வாறு பாடுகிறார். பின்னர் இருவரும் நெருங்கிய
நண்பராயினர்.
|
நெடுமாவளவன் |
நெடுமாவளவன் – (பெ) ஒரு சோழ மன்னன், a chOzha king
கொடி நுடங்கு யானை நெடுமாவளவன்
தேவர்_உலகம் எய்தினன் ஆதலின் – புறம் 228/10,11
கொடிகள் மடங்கியாடும் யானையினுடைய நெடுமாவளவன்
தேவருடைய விண்ணுலகத்தை அடைந்தானாகலான்
இவன் பெயர் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனை ஐயூர் முடவனார் பாடியுள்ளார்.
|
நெடுமிடல் |
நெடுமிடல் – (பெ) ஒரு சிற்றரசன், a chieftain
நெடுமிடல் சாய கொடு மிடல் துமிய – பதி 32/10
தான் செய்த கொடிய போர்த்தொழில் பயன்படாது கெடவே, நெடுமிடல் அஞ்சி என்பான் இறந்தானாக
இவன் அதியமான் நெடுமான் அஞ்சியின் குலத்தவன். இவனது நாடு மிக்க வளம் சிறந்ததாகும்
|
நெடுமொழி |
நெடுமொழி – (பெ) 1. புகழ்ச்சொல், Eulogy, encomium, praise;
2. வஞ்சினம், vow
3. தன்மேம்பாட்டுரை, boast
1.
நெடுமொழி தந்தை அரும் கடி நீவி – அகம் 17/7
மிக்க புகழையுடைய (தன்) தந்தையின் கடுமையான கட்டுக்காவலையும் மீறி,
2.
மோகூர் மன்னன் முரசம் கொண்டு
நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல் தடிந்து – பதி 44/14,15
பகை மன்னனாகிய மோகூர் மன்னனின் முரசத்தைக் கைப்பற்றி,
அவன் கூறிய வஞ்சினத்தை முறித்து அவனைப் பணிவித்து, அவனது காவல்மரமாகிய வேம்பினை அடியோடு வீழ்த்தி
3.
கள்ளுடை கலத்தர் உள்ளூர் கூறிய
நெடுமொழி மறந்த சிறு பேராளர்
அஞ்சி நீங்கும்காலை
ஏமமாக தாம் முந்துறும் – புறம் 178/8-11
கள்ளையுடைய கலத்தினராய், ஊருக்குள்ளேயிருந்து சொல்லிய
வீரம் மேம்பட்ட வார்த்தையைப் போரின்கண் மறந்த சிறிய பேராண்மையுடையவர்
போர்க்களத்தில் அஞ்சி ஓடும்போது
அவர்க்கு அரணாகத் தான் முந்திவந்து நிற்பான்
|
நெடுவேள் |
நெடுவேள் – (பெ) 1. முருகன், Lord Muruga
2. பெரிய வேளிர்குலத்தான், magnificient king belonging to the vELir tribe
1.
கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி – பெரும் 75
கடம்பிடத்தே இருந்த நெடிய முருகனை ஒத்த தலைமைச்சிறப்பையும்;
2.1
முழவு உறழ் திணி தோள் நெடுவேள் ஆவி – அகம் 61/15
முழவினை ஒத்த வலிய தோளினையுடைய பெரிய வேளாகிய ஆவி என்பானின்
2.2
நெடுவேள் ஆதன் போந்தை அன்ன – புறம் 338/4
புகழ்பெற்ற வேளிர் குடியிற் பிறந்த ஆதன் என்பானின் போந்தை என்னும் ஊரைப் போன்று
|
நெட்டு |
நெட்டு – (பெ) நெடுமை, lenghthiness
பானாள்
துஞ்சாது உறைநரொடு உசாவா
துயில் கண் மாக்களொடு நெட்டு இரா உடைத்தே – குறு 145/3-5
நள்ளிரவில்
துயிலாமல் இருப்போரை ஏனென்று கேட்காமல்
துயிலுகின்ற கண்களையுடைய மக்களோடு, நீண்ட இரவையும் உடையது
|
நெதி |
நெதி – (பெ) செல்வம், wealth
விழு நீர் வியல்_அகம் தூணி ஆக
எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும் – நற் 16/7,8
விழுமிய கடல்சூழ்ந்த இந்த அகன்ற உலகத்தையே அளக்கும் கருவியாகக் கொண்டு
அந்த அளவில் ஏழு அளவு பெறுமான விழுமிய நிதியைப் பெற்றாலும்
|
நென்னல் |
நென்னல் – (பெ) நேற்று, yesterday
அம்ம வாழி தோழி நென்னல்
ஓங்கு திரை வெண் மணல் உடைக்கும் துறைவற்கு
ஊரார் பெண்டு என மொழிய – ஐங் 113/1-3
கேட்பாயாக, தோழியே! நேற்று,
உயர்ந்தெழும் கடலலைகள் வெள்ளிய மணல் மீது மோதி உடைக்கும் துறையைச் சேர்ந்தவனுக்கு
இந்த ஊரார் நான் காதலி என்று கூற
|
நெய் |
நெய் – (பெ) 1. எண்ணெய், oil
2. வெண்ணெயை உருக்கி எடுப்பது, ghee
3. தேன், honey
1.
கௌவை போகிய கரும் காய் பிடி ஏழ்
நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எள் – மலை 105,106
பிஞ்சுத்தன்மை போன(=முற்றிய) கரிய காய்கள் ஒரு கைப்பிடிக்குள் ஏழு காய்களே கொள்ளத்தக்கனவாய்
எண்ணெய் (உள்ளே)கொண்டிருக்க வளர்ந்தன பலவாகக் கிளைத்த ஈரப்பதமான எள்
2.
ஆய்மகள்
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி
நெய் விலை கட்டி பசும்_பொன் கொள்ளாள் – பெரும் 162-164
இடைமகள்,
மோரை விற்றதனாலுண்டான உணவால் சுற்றத்தாரைச் சேர்த்து உண்ணப்பண்ணி,
நெய்யின் விலைக்குக் கட்டியாகிய பசும்பொன்னையும் வாங்காதவளாய்,
3.
நேமியின் செல்லும் நெய் கண் இறாஅல் – மலை 525
சக்கரம் போன்று ஒழுகும் தேனைத் தன்னிடத்தேகொண்ட தேனடைகளும்,
|
நெய்தல் |
நெய்தல் – (பெ) 1. பெரும்பாலும் கடற்கரைக் கழிகளில் வளரும் தாவரம், அதன் பூ,
a plant andiys flower, prodominantly found in seashore backwaters
2. கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல் எனப்படும், maritime tract
3. நெய்தல் திணைக்குரிய ஒழுக்கம், இரங்கல்
Sorrow of lovers due to separation, assigned by poetic convention to the maritime tract
4. சாவுப்பறை, funeral drum
5. ஒரு பேரெண், a very large number
1.
ஆம்பல், குவளை, கொட்டி, நீலம், நெய்தல், செங்கழுநீர், குமுதம் என்னும் பெயர் கொண்ட மலர்கள்
ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவை. இருப்பினும் இவை வெவ்வாறனவை என்பது இலக்கிய வழக்குகளினின்றும்
உணரப்படும்.
1.1
பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் – ஐங் 2/4
இதனால், நீலம், நெய்தல் ஆகியவை வெவ்வேறானவை என்பது பெறப்படும்.
1.2
மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் – ஐங் 96/2
இதனால், ஆம்பல், நெய்தல் ஆகியவை வெவ்வேறானவை என்பது பெறப்படும்.
1.3
மா இதழ் குவளையொடு நெய்தலும் மயங்கி – பட் 241
இதனால், குவளை, நெய்தல் ஆகியவை வெவ்வேறானவை என்பது பெறப்படும்.
1.4
நெய்தல் மலர் வெண்மையாகவும், கருநீலமாகவும் இருக்கும் என்பர்.
வெள்ளை நெய்தலை வெள்ளாம்பல் (White Indian waterlily Nymphaen lotus alba)என்றும்
கருநீல நெய்தலைக் கருங்குவளை (Blue nelumbo) என்றும் கூறுவர்.
இதனைக் குறிஞ்சிப்பாட்டு வெவ்வேறு அடிகளில் குறிப்பிடும்.
வாழை வள்ளி நீள் நறு நெய்தல் – குறி 79
காஞ்சி மணி குலை கள் கமழ் நெய்தல் – குறி 84
இவற்றில் மணிக்குலை நெய்தல் மணிநிறமான கருநீல நிறத்ததால் இது கருங்குவளையைக் குறிக்கும் என்றும்,
எனவே முன்னது வெள்ளாம்பலைக் குறிக்கும் என்றும் சொல்வர்.
1.5
நெய்தல் மலர் நிறையத் தேன் கொண்டது. நறுமணம் மிக்கது.
கள் கமழும் நறு நெய்தல் – மது 250
1.6
நெய்தல் மலரின் தண்டு நீண்டும் பருத்தும் இருக்கும்.
களைஞர் தந்த கணை கால் நெய்தல்
கள் கமழ் புது பூ முனையின் – பெரும் 213,214
கொடும் கழி நிவந்த நெடும் கால் நெய்தல்
அம் பகை நெறி தழை அணி பெற தைஇ – நற் 96/7,8
1.7
நெய்தல் மலர் பெண்களின் கண்களுக்கு ஒப்புமையாகக் கூறப்படும்.
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும் – நற் 8/8
நெய்தல் உண்கண் ஏர் இறை பணை தோள் – ஐங் 181/1
1.8
நெய்தல் மலரை அதன் இலைகளுடன் பறித்துத் தைத்து மகளிர் தழையணியாக அணிவர்.
பாசடை கலித்த கணை கால் நெய்தல்
விழவு அணி மகளிர் தழை அணி கூட்டும் – அகம் 70/11,12
1.9
நெய்தல் மலர்களைப் பறித்து மாலையாகத் தொடுத்து, ஆண்கள் தலையணியாகவும்,
பெண்கள் கூந்தலிலும் சூடிக்கொள்வர்.
குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்
நறும் பூ கண்ணி குறவர் சூட – பொரு 218,219
அடும்பின் ஆய் மலர் விரைஇ நெய்தல்
நெடும் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல் – குறு 401/1,2
1.10
நெய்தல் மலர் விடியலில் மலரும். மாலையில் கூம்பும்
வைகறை மலரும் நெய்தல் போல – ஐங் 188/3
நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுக – நற் 187/1
நெய்தல் மலர்கள் கூம்பிப்போக, நிழல்கள் கிழக்குத் திசையில் நீண்டுவிழ
1.11
நெய்தல் மலர் சிறிய இலைகளை உடையது.
சிறு பாசடைய நெய்தல்
குறுமோ சென்று என கூறாதோளே – நற் 27/11,12
1.12
இதன் இலை யானைக் கன்றின் செவியைப்போல் இருக்கும்.
பெரும் களிறு உழுவை அட்டு என இரும் பிடி
உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது
நெய்தல் பாசடை புரையும் அம் செவி
பைதல் அம் குழவி தழீஇ ஒய்யென
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் – நற் 47/1-6
பெரிய ஆண்யானையைப் புலி கொன்றதாக, அதன் பெரிய பெண்யானை
உடல் வாட்டமுற்று உள்ளத்தை வருத்தும் துயரத்தோடு இயங்க இயலாமல்
நெய்தலின் பசிய இலை போன்ற அழகிய செவியையுடைய
இளமையான தன் அழகிய கன்றினைத் தழுவிக்கொண்டு, சட்டென
ஆற்றுதற்கரிய புண்ணைப் பெற்றவர் போல வருந்தி இருக்கும்
1.13
இது கழிகளிலும், நெல்வயல்களிலும், கரும்புப்பாத்திகளிலும் கலித்து வளரும்,
இரும் கழி நெய்தல் போல – குறு 336/5
வண்டு மூசு நெய்தல் நெல் இடை மலரும் – நற் 190/5
கரும்பின் பாத்தி பூத்த நெய்தல் – பதி 13/3
2.
பாடல் சான்ற நெய்தல் நெடு வழி – சிறு 151
(புலவர்)பாடுதற்கு அமைந்த நெய்தல் நிலத்தே கிடந்த நீண்ட வழியில்
3.
நெய்தல் சான்ற வளம் பல பயின்று ஆங்கு – மது 325
நெய்தல் ஒழுக்கம் அமைந்த வளம் பலவும் நெருங்கப்பட்டு
4.
ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல்
ஈர்ம் தண் முழவின் பாணி ததும்ப – புறம் 194/1,2
ஒரு வீட்டில் சாவினை அறிவிக்கும் பறை ஒலிக்க, ஒரு வீட்டில்
திருமணத்திற்குக் கொட்டப்படும் மிகக் குளிர்ந்த முழவின் ஓசை மிக ஒலிக்க
5.
நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மை இல் கமலமும் வெள்ளமும் நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை – பரி 2/13-15
நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம்
குற்றமற்ற தாமரை, வெள்ளம் ஆகிய பேரெண்களால்
குறிக்கப்பட்ட காலங்களின் ஈட்டங்களையும் கடந்த பின்னர்
|
நெய்த்தோர் |
நெய்த்தோர் – (பெ) இரத்தம், blood
நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி – பதி 30/37
இரத்தம் தூவிய நிறைந்த கள்ளுடனான பெரிய பலியானது
|
நெய்ம்மிதி |
நெய்ம்மிதி – (பெ) நெய்கலந்து மிதித்துத் திரட்டப்பட்ட உணவு,
Food for elephants and horses, rolled into balls after mixing it with ghee
and trampling it with foot;
1.
இரும் பிடி தொழுதியொடு பெரும் கயம் படியா
நெல் உடை கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ – புறம் 44/1,2
கரிய பெண்யானையின் கூட்டத்தோடு, பெரிய கயத்தின்கண் படியாதனவாய்
நெல்லையுடைய கவளத்துடனே நெய்யால் மிதித்துத் திரட்டப்பட்ட கவளமும் பெறாமல்
2.
நெய்ம்மிதி அருந்திய கொய் சுவல் எருத்தின்
தண் நடை மன்னர் தாருடை புரவி – புறம் 299/4,5
நெய் பெய்து மிதித்து அமைத்த உணவை உண்ட ஒழுங்குறக் கத்திரிக்கப்பட்ட பிடரியினையுடைய
மருத நிலத்து ஊர்களையுடைய பெருவேந்தரின் தார் அணிந்த குதிரைகள்
|
நெய்யாட்டு |
நெய்யாட்டு – (பெ) திருநாள்களில் மங்களமாக ஆடும் எண்ணெய் முழுக்கு, Oil-bath taken on festive occasions;
நெடு நா ஒண் மணி கடி மனை இரட்ட
குரை இலை போகிய விரவு மணல் பந்தர்
பெரும்பாண் காவல் பூண்டு என ஒருசார்
திருந்து இழை மகளிர் விரிச்சி நிற்ப
வெறி_உற விரிந்த அறுவை மெல் அணை
புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈர் அணி
பசு_நெய் கூர்ந்த மென்மை யாக்கை
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த – நற் 40/1-9
நீண்ட நாவினைக்கொண்ட ஒள்ளிய மணி, காவலுள்ள மனையில் ஒலிக்க,
ஒலிக்கும் தென்னங்கீற்று வேய்ந்து, பரப்பிய மணலைக் கொண்ட பந்தலில்,
பெரும்பாணர்கள் காவலிருக்க, ஒரு பக்கத்தில்
திருந்திய இழை அணிந்த மகளிர் நற்சொல் கேட்டு நிற்க,
நறுமணம் கமழ விரிக்கப்பட்ட விரிப்பினைக் கொண்ட மென்மையான அணையில்
ஈன்றணிமையின் மணம் மணக்க, செவிலி துயில்விக்க, புதல்வன் தூங்க,
வெண்சிறுகடுகை அரைத்து அப்பி, எண்ணெய்பூசிக் குளித்த, ஈருடை தரித்த,
பசுநெய் தடவிய மென்மையான உடம்பினையுடைய,
சிறப்புப் பொருந்திய தலைவி இரு இமைகளையும் மூடிப் படுத்திருக்க,
|
நெரி |
நெரி – (வி) 1. நொறுங்கு, நசுங்கு, be crushed, broken, smashed; to crack;
2. கைவிரலை சுடக்கு, creak, as the fingers
3. நெருக்கமாக இரு, be crowded
4. நெருங்கு, approach
5. நசுக்கு, squeeze, crush
6. வளை, arch, curve, bend;
1.
பொரு களிறு மிதித்த நெரி தாள் வேங்கை – குறு 208/2
சண்டையிடும் ஆண்யானைகள் மிதித்து நொறுங்கிப்போன அடிமரத்தையுடைய வேங்கைமரம்
2.
வெதிர்படு வெண்ணெல் வெவ்வறை தாஅய
உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும் – அகம் 267/11,12
மூங்கிலில் விளைந்த வெள்ளிய நெற்கள் வெப்பம் மிக்க பாறையில் உதிர்ந்து பரந்து
நகத்தை நெரிப்பது போன்ற ஓசையுடன் பொங்கிப் பொரிந்திடும்
3.
நீர் அயல் கலித்த நெரி முகை காந்தள் – பரி 14/13
நீர்நிலையின் அருகே தழைத்திருக்கும் நெருக்கமான அரும்புகளையுடைய காந்தளின்
4.
எரி பூ பழனம் நெரித்து – புறம் 249/3
எரிபோலும் நிறத்தவாகிய பூவையுடைய பொய்கைகளை நெருங்கி
5.
தண் தும்பி இனம் காண்-மின் தான் வீழ் பூ நெரித்தாளை
முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து – பரி 11/130,131
குளிர்ந்த தும்பிக்கூட்டங்களைப் பாருங்கள்! தான் விரும்பி மொய்த்த பூவினை நசுக்கியவளை
போர்முனையிடத்தில் பொருந்திய சினத்தைக் கொண்ட நெஞ்சினையுடையதாய் முதலில் தாக்கி
6.
நீரின் வந்த நிமிர் பரி புரவியும்
காலின் வந்த கரும் கறி மூடையும்
வடமலை பிறந்த மணியும் பொன்னும்
குட மலை பிறந்த ஆரமும் அகிலும்
தென் கடல் முத்தும் குண கடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரி பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி – பட் 185-192
கடலில் (மரக்கலங்களில்)வந்த நிமிர்ந்த நடையினையுடைய குதிரைகளும்,
(நிலத்தில்)வண்டிகளில் வந்த கரிய மிளகுப் பொதிகளும்,
இமயமலையில் பிறந்த மாணிக்கமும், பொன்னும்,
பொதிகை மலையில் பிறந்த சந்தனமும், அகிலும்,
தென்திசைக் கடலில் (பிறந்த)முத்தும், கீழ்த்திசைக் கடலில் (பிறந்த)பவளமும்,
கங்கையாற்றின் விளைச்சலும், காவிரியாற்றின் செல்வங்களும்,
ஈழத்தின் உணவுப்பொருளும், கடாரத்தின் ஈட்டமும்,
அரிதானவும், பெரிதானவும், (நிலத்தின் முதுகு)வளையும்படி திரண்டு
|
நெரிதரு(தல்) |
நெரிதரு(தல்) – (வி) 1. நொறுக்கு, உடை, break to pieces
2. செறிவாக இரு, be dense and crowded
3. நெருங்கிவா, approach closely
1.
வரு புனல் நெரிதரும் இகு கரை பேரியாற்று – அகம் 137/7
வரும் நீர் உடைத்திடும் கரைந்து மெலிந்த கரையினையுடைய பெரிய ஆறாகிய காவிரியின்
2.
இடை நிலம் நெரிதரு நெடும் கதிர் பல் சூட்டு – அகம் 236/5
இடைநிலத்தில் செறிந்துள்ள நீண்ட கதிரினையுடைய பல நெற்கட்டுகளை
3.
முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி
திளையா கண்ண வளைகுபு நெரிதர
நடுங்குவனம் எழுந்து நல் அடி தளர்ந்து யாம் – குறி 131-133
மூங்கில்)முளை(போலும்) கூர்மையுள்ள பற்களையுடைய, பெரிய நகங்களையுடைய, நாய்
இமையாத கண்களையுடையவாய் (எம்மை)வளைத்துக்கொண்டு மேலேமேலே நெருங்கிவருகையினால்,
அஞ்சிநடுங்கியவராய் (இருப்பை விட்டு)எழுந்து, (எம்)நல்ல கால்கள் தள்ளாட
|
நெருஞ்சி |
நெருஞ்சி – (பெ) ஒரு முள்செடி, Cow’s thorn, a small prostrate herb, Tribulus terrestris;
1. இது வறண்ட நிலத்தில் நெருக்கமாய் வளரும், மிகச் சிறிய இலைகளைக் கொண்டது.
இதன் பூ காண்பதற்கு இனிமையானது. மிகச் சிறியது.
புன்_புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சி
கட்கு இன் புது மலர் முள் பயந்து ஆங்கு – குறு 202/2,3
சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி – பட் 256
2.
இது முட்களையுடையதாதலால், பார்ப்பவர் பிடுங்கி எறிவர். எனவே இது பாழடைந்த இடங்களில்
படர்ந்து வளரும்.
பீர் இவர் வேலி பாழ் மனை நெருஞ்சி – பதி 26/10
பாழ் ஊர் நெருஞ்சி பசலை வான் பூ – புறம் 155/4
|
நெருநல் |
நெருநல் – (பெ) நேற்று, yesterday
பெரு மலை அரும் சுரம் நெருநல் சென்றனள் – நற் 184/3
பெரிய மலைகளினூடே செல்லும் அரிய வழியில் நேற்றுச் சென்றுவிட்டாள்;
|
நெருநை |
நெருநை – (பெ) நேற்று, yesterday
நின் வெம் காதலி தழீஇ நெருநை
ஆடினை என்ப புனலே- ஐங் 71/2,3
உனது விருப்பத்திற்குரிய காதலியைத் தழுவியவாறு நேற்று
மகிழ்ந்தாடியிருக்கிறாய் என்கிறார்கள் ஆற்றுவெள்ளத்தில்
|
நெறி |
நெறி -1. (வி) 1. சுருண்டிரு, அலையலையாகு, be curly, wavy as one’s hair
2. பூவின் புறவிதழை ஒடி, strip a flower of its calyx;
3. செறிந்திரு, செறித்துவை, be dense, pack closely
– 2. (பெ) 1. வளைவு, சுருள், curl
2. பாதை, way, path, road
3. கோட்பாடு, ஒழுக்கநியதி, principle, code of conduct
4. வழிமுறை, means, method
5. நல்லொழுக்கம், path of virtue, righteousness
1.1
அறல் என நெறிந்த கூந்தல் – அகம் 213/23
கருமணல் போல் நெளிநெளியாக வளைந்த கூந்தலையும்
வயங்கு ஒளி
நிழல்_பால் அறலின் நெறித்த கூந்தல் – அகம் 265/7,8
விளங்கும் ஒளி வாய்ந்த
நிழற்கண்ணுள்ள அறல் போல நெளிந்த கூந்தலினையும்
1.2
நெய்தல் நெறிக்கவும் வல்லன் நெடு மென் தோள்
பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன் – கலி 143/31,32
நெய்தல் பூவின் புறவிதழை நீக்கி மாலை கட்டுவதில் அவன் வல்லவன், நீண்ட மென்மையான தோள்களின் மேல்
எய்யக்கூடிய கரும்புவில்லை எழுதுவதிலும் அவன் வல்லவன்
1.3
விசும்பு உற நிவந்த மா தாள் இகணை
பசும் கேழ் மெல் இலை அருகு நெறித்து அன்ன – அகம் 131/1,2
வானளாவ உயர்ந்த கரிய அடியினையுடைய இகணை மரத்தின்
பசிய நிறமுடைய மெல்லிய இலைகளை நெருங்கச் செறித்து வைத்தாற்போன்ற
2.1
குறு நெறி கொண்ட கூந்தல் ஆய்_மகள் – பெரும் 162
குறிதாகிய சுருளைக்கொண்ட கொண்ட மயிரினையும் உடைய, இடைமகள்
2.2
வரை சேர் சிறு நெறி வாராதீமே – நற் 336/11
மலையை அடுத்த சிறிய வழியில் வராமலிருப்பீராக!
2.3
அற நெறி பிழையாது ஆற்றின் ஒழுகி – மது 500
அறக்கோட்பாடுகளினின்றும் தவறாது, நல்வழியே நடந்து
2.4
அறிவு உடை வேந்தன் நெறி அறிந்து கொளினே
கோடி யாத்து நாடு பெரிது நந்தும் – புறம் 184/5,6
அறிவுடைய அரசன் இறைகொள்ளும் வழிமுறைகளை அறிந்து கொள்ளின்
கோடிப் பொருளினை ஈட்டிக்கொடுத்து அவன் நாடு மிகவும் தழைக்கும்
2.5
அறம் அற கண்ட நெறி மாண் அவையத்து – புறம் 224/4
அறத்தைத் தெளிய உணர்ந்த ஒழுக்கம் மாட்சிமைப்பட்ட அவைக்களத்தின்கண்
|
நெறிசெய் |
நெறிசெய் – (வி) ஒழுங்குபடுத்து, put in order
எறி சுறா வான் மருப்பு கோத்து நெறிசெய்த
நெய்தல் நெடு நார் பிணித்து யாத்து – கலி 131/7,8
அறைகின்ற சுறாமீனின் வெண்மையான கொம்புகளை இருப்பிடமாகக் கோத்து, ஒழுங்குபடுத்திய
நெய்தல் மலர்களை நீண்ட நாரால் கட்டிச் சேர்த்து,
|
நெற்றம் |
நெற்றம் – (பெ) நெற்று, A dried, mature seed or nut
கொடிறு போல் காய வால் இணர் பாலை
செல் வளி தூக்கலின் இலை தீர் நெற்றம்
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும் – நற் 107/4-6
பற்றுக்குறடு போன்ற காய்களையுடைய வெள்ளிய பூங்கொத்துகளையுடைய பாலை மரத்தின்,
வீசுகின்ற காற்று தூக்கி அசைத்ததால் இலையெல்லாம் உதிர்ந்துபோன நெற்றுக்கள்
பாறையிலிருந்து வீழ்கின்ற அருவியைப் போல ஒல்லென்று ஒலிக்கும்
|
நெற்று |
நெற்று – (பெ) முதிர்ந்து, காய்ந்த காய், A dried, mature seed or nut,
வாகை, உழிஞ்சில், கொன்றை ஆகியவற்றின் காய்கள் காய்ந்து வற்றலாகி நெற்றுகள் ஆகும்.
வாகை வெண் நெற்று ஒலிக்கும் – குறு 7/5
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் – குறு 39/2
சுடர் பூ கொன்றை ஊழ்_உறு விளை நெற்று – அகம் 115/11
|
நெல்மா |
நெல்மா – (பெ) தவிடு, bran
நெல்மா வல்சி தீற்றி பல் நாள்
குழி நிறுத்து ஓம்பிய குறும் தாள் ஏற்றை – பெரும் 343,344
நெல்லின் உமியை மாவாக்கிய (தவிட்டு)உணவினை (வயிறு நிறைய)த் தின்னப் பண்ணிப், பலநாளும்
குழியிலே நிறுத்திப் பாதுகாத்த குறிய காலையுடைய ஆண்பன்றியின்
|
நெல்லி |
நெல்லி – (பெ) ஒரு மரம், அதன் காய், Emblic myrobalan, phyllanthusemblica;
1.
இதன் இலை மிகச் சிறியதாக இருக்கும்.
சிறியிலை நெல்லி தீம் சுவை திரள் காய் – அகம் 291/16
2.
இதன் காய்கள் இலேசான புளிப்புச் சுவை உள்ளவை.
நெல்லி அம் புளி மாந்தி அயலது – குறு 201/4
3.
இதன் காயைத் தின்ற பின் நீர் குடித்தால் சுவையாக இருக்கும் என்பர்.
புன் காழ் நெல்லி பைம் காய் தின்றவர்
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி – அகம் 54/15,16
புல்லிய விதைகளையும் கொண்ட நெல்லியின் பசுங்காயைத் தின்றவர்
நீர் குடிக்கும்போது பெறும் சுவையைப் போல, இனிய மொழிகளைக் கூறி,
4
சிறுவர்கள் விளையாடும் பளிங்கு உருண்டைகள் போல் இதன் காய்கள் இருக்கும்.
பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி – அகம் 5/9
5.
இந்த நெல்லிக்காய்களை வைத்து சிறுவர் உருட்டி விளையாடுவர்.
கல்லா சிறாஅர் நெல்லி வட்டு ஆடும் – நற் 3/4
6.
இந்த நெல்லி சடைசடையாகக் காய்க்கும்.
பல் கோள் நெல்லி பைம் காய் அருந்தி – அகம் 399/14
7.
புறாக்கள் இதன் காய்களைக் கொத்தித் தின்னும்.
புறவு குயின்று உண்ட புன் காய் நெல்லி – அகம் 315/10,11
8.
இதன் காய்கள் மேற்புறத்தில் புள்ளிகள் இன்றி வழுவழுப்பாகவும் பச்சையாகவும் இருக்கும்.
புல் இலை நெல்லி புகர் இல் பசும் காய் – அகம் 363/6
|
நே |
நே – (பெ) ஈரம், கருணை, mercy, gracev
நேமி உய்த்த நேஎ நெஞ்சின் – புறம் 3/4
சக்கரத்தைச் செலுத்திய ஈரமுடைய நெஞ்சினையும்
|
நேடு |
நேடு – (வி) தேடு, seek, look out for
வையை மடுத்தால் கடல் என தெய்ய
நெறி மணல் நேடினர் செல்ல சொல் ஏற்று – பரி 20/42,43
வையை கடலில் சென்று புகுந்தாற்போல
அலையலையாய்க் கிடந்த அந்த மணற்பரப்பில் தேடியவராகச் செல்ல
|
நேமி |
நேமி – (பெ) 1. தேர் உருளை, wheel of a chariot
2. திருமால் கையிலுள்ள சக்கராயுதம், the discuss in the hands of Lord Vishnu
3. ஆணைச் சக்கரம், Wheel of sovereignty
1.
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடும் தேர்
வன் பரல் முரம்பின் நேமி அதிர
சென்றிசின் வாழியோ பனி கடு நாளே – நற் 394/4-6
கட்டப்பட்ட மணிகள் பெரிதாய் ஒலிக்கும் அணிகளால் புனையப்பட்ட நெடிய தேரில்,
வன்மையான பரல்கற்களைக் கொண்ட சரளைக்கல் பூமியில் சக்கரங்கள் அதிரும்படியாகச்
சென்றான், வாழ்க! அந்த பனிமிக்க நாளில்;
2.
நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தட கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல – முல் 1-3
சக்கரத்துடன்
வலம்புரி(ச் சங்கின்) குறிகள் பொறிக்கப்பட்ட, திருமகளை அணைத்த பெரிய கையில்
(மாவலி வார்த்த)நீர் (தன் கையில்)சென்றதாக உயர்ந்த திருமாலைப் போல,
3.
கொடிது கடிந்து கோல் திருத்தி
படுவது உண்டு பகல் ஆற்றி
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல – புறம் 17/5-8
தீயன போகவும் கோல் செங்கோலாகவும்
உரிய இறைப்பொருளுண்டு நடுவுநிலையுடன்
தம்சுடர்விளங்கும் ஆணைச் சக்கரத்தை இனிதாகச் செலுத்தவும்
வல்லவராய் வாழ்ந்தோர்தம் மரபினைக் காத்தவனே!
|
நேமிஅம்செல்வன் |
நேமிஅம்செல்வன் – (பெ) திருமால், Lord Vishnu
நேர் கதிர் நிரைத்த நேமிஅம்செல்வன்
போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல் – அகம் 175/14,15
நிரம்பிய கதிர்களின் ஒழுங்கினைக் கொண்ட ஆழியையுடைய திருமாலின்
பகைவர் போரொழிவதற்குக் காரணமான மார்பினிடத்தே தங்கிய மாலை போல
|
நேமியான் |
நேமியான் – (பெ) திருமால், Lord Vishnu
வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போல – கலி 105/9
வளம்செறிந்த உருண்டையான சக்கரப்படையையுடைய திருமால் வாய் வைத்து ஊதிய வெண்சங்கு போன்ற
|
நேரார் |
நேரார் – (பெ) பகைவர், foes
நேரார்
நாடு படு நன் கலம் தரீஇயர்
நீடினர் தோழி நம் காதலோரே – ஐங் 463/3-5
பகைவரின்
நாட்டில் கிடைக்கும் நல்ல அணிகலன்களைக் கொண்டுவருவதற்காகவே
தம் வரவை நீட்டித்துள்ளார், தோழி, நம் காதலர்
|
நேரி |
நேரி – (பெ) சேரநாட்டிலுள்ள ஒரு மலை, a hill in the cEra country
கல் உயர் நேரி பொருநன்
செல்வக்கோமான் பாடினை செலினே – பதி 67/22,23
பாறைகளால் உயர்ந்த நேரி என்னும் மலைக்கு உரியவனான,
செல்வக் கோனுமாகிய வாழியாதனைப் பாடினவனாகச் சென்றால்
|
நேர் |
நேர் – 1. (வி) 1. வளைவு இல்லாமலிரு, செவ்வையாக இரு, be straight and perfect
2. ஒத்திரு, resemble, match
3. இளகு, மென்மையாகு, become soft
4. உடன்படு, agree, consent
5. உறுதிகொள், நிச்சயி, resolve, determine
6. எதிர், சந்தி, come in opposition, encounter
7. பொருந்தியிரு, இசைவாக இரு, be fit
– 2. (பெ) 1. வளைவு இல்லாதது, செவ்வையானது, being straight, perfect
2. செம்மை, செப்பம், refinement, nicety
3. ஒப்புமை, நிகர், similarity, equality
4. செங்குத்து, verticality
1.1
அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை – மது 316
அரம் கீறியறுத்த இடம் செவ்வையாகிய விளங்கும் வளைகளும்,
1.2
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த
நன் நெடும் கூந்தல் நரையொடு முடிப்பினும் – நற் 10/2,3
பொன்னை ஒத்திருக்கும் மேனியில் நீலமணி போலும் தாழ்ந்த
நல்ல நெடிய கூந்தல் நரையோடு முடியப்பெற்றாலும்
1.3
நெக்க நெஞ்சம் நேர்கல்லேனே – ஐங் 151/5
உடைந்துபோன என் நெஞ்சத்துடன் அவனுக்காக மனமிளகமாட்டேன்
1.4
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும்
வாடிய வரியும் நோக்கி நீடாது – நற் 130/7,8
அவருக்கு உடன்பட்ட என் நெஞ்சினையும், அவர் பிரிவால் நெகிழ்ந்துபோன தோள்களையும்
வாடிப்போன மேனியின் வரிகளையும் பார்த்தாவது தனது பிரிவை நீட்டிக்காது
1.5
நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் அவருடன்
நேர்வர்-கொல் வாழி தோழி நம் காதலர் – நற் 393/10,11
நம்மவர்கள் பெண்கொடுக்க நிச்சயித்தால், அவருடன்
இசைவாகப் பேசுவார்களோ? வாழ்க, தோழியே!, நம் காதலர்
1.6
குழவி திங்கள் கோள் நேர்ந்து ஆங்கு – பெரும் 384
இளைய திங்களைச் செம்பாம்பு எதிர்கொண்டாற் போன்று
1.7
இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகியர் எம் கணவனை
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே – குறு 49/3-5
இப் பிறவி போய் இனி எத்தனை பிறவியெடுத்தாலும்
நீயே என் கணவனாக இருக்கவேண்டும்,
நானே உன் நெஞ்சுக்கு இசைவானவளாய் இருக்கவேண்டும்.
2.1
நேர் வாய் கட்டளை திரியாது திண் நிலை
போர் வாய் கதவம் தாழொடு துறப்ப – நெடு 62,63
நேருக்கு நேராக அமைந்த சாளரங்கள் திறக்கப்படாமல், சிக்கென்ற நிலையினையுடைய
பொருதுகின்ற வாயுடைய(இரட்டைக்)கதவுகள் தாழிட்டுக் கிடக்க;
2.2
நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும்
கோழி எறிந்த கொடும் கால் கனம் குழை – பட் 22,23
நேர்த்தியான நகைகளை அணிந்த பெண்கள், உலருகின்ற நெல்லைத் தின்னும்
கோழியை (விரட்ட)எறிந்த வளைவான அடிப்பகுதியையுடைய பொன்னாற்செய்த காதணி,
2.3
நேர் சீர் சுருக்கி காய கலப்பையிர் – மலை 13
சமமாய் எடைகட்டி(பைகளில் இட்டு வாயின் சுருக்கை)இறுக்கித் தோளின்(இருபுறமும்) தொங்கவிட்ட
பைகளை உடையவராய்
2.4
நேர்_கொள் நெடு வரை நேமியின் தொடுத்த
சூர் புகல் அடுக்கத்து பிரசம் காணினும் – மலை 238,239
செங்குத்தைக் கொண்ட(=செங்குத்தான) உயர்ந்த மலையில், தேர்ச்சக்கரம் போன்று (தேனீக்கள்)கட்டிய,
தெய்வமகளிர் விரும்பும் அடுக்கடுக்காய் அமைந்த சரிவுகளில், தேனடையைக் கண்டாலும்,
|
நேர்கோல் |
நேர்கோல் – (பெ) துலாக்கோல், weighing rod
ஓர்வு_உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல்
அறம் புரி நெஞ்சத்தவன் – கலி 42/14,15
நன்கு ஆராய்ந்து, ஒரு பக்கம் சாயாத துலாக்கோல் போல,
அறத்தைச் செய்கின்ற உள்ளம்படைத்தவன்!
|
நேர்தல் |
நேர்தல் – (பெ) 1. எதிர்ப்படுதல், meeting, encountering
2. முற்றுவித்தல், making complete
1.
பைதலம் அல்லேம் பாண பணை தோள்
ஐது அமைந்து அகன்ற அல்குல்
நெய்தல் அம் கண்ணியை நேர்தல் நாம் பெறினே – ஐங் 135
வருத்தப்படமாட்டேன் பாணனே! மூங்கில் போன்ற தோள்களையும்,
மென்மையாக அமைந்து அகன்றிருக்கும் அல்குலையும் கொண்ட
நெய்தல் போன்ற அழகிய கண்களையுடையவளை நேரிலே காண நேர்ந்தாலும் –
2.
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி – அகம் 125/2
முற்றுப்பெறாத இல்வாழ்க்கையை முற்றுவிக்க வேண்டி
|
நேர்நிறுத்து |
நேர்நிறுத்து – (வி) முன்னிலையாக்கு, keep in the forefront
அரி கூடு இன் இயம் கறங்க நேர்நிறுத்து
கார் மலர் குறிஞ்சி சூடி கடம்பின்
சீர் மிகு நெடுவேள் பேணி – மது 612-614
அரித்தெழும் ஓசையையுடைய இனிய இசைக்கருவிகள் முழங்க, (முருகனை)முன்னிலையாக்கி,
கார் (காலத்தில் மலரும்)குறிஞ்சிப் பூவைச் சூடி, கடப்பமரத்தின்கண்
புகழ் மிக்க முருகனை வழிபடுதலால்
|
நேர்படு |
நேர்படு – (வி) எதிரெதிராகு, be face in face
இனம் தலைப்பிரிந்த
புன்கண் மட மான் நேர்பட தன் ஐயர்
சிலை மாண் கடு விசை கலை நிறத்து அழுத்தி
குருதியொடு பறித்த செம் கோல் வாளி – குறு 272/3-6
தன் இனத்தைவிட்டுப் பிரிந்த
துன்பத்தைக் கொண்ட இளையமான் நேரே இருக்க, தன் தமையன்மார்
முழக்கமிடும், மிகுந்த வேகத்தையுடைய ஆண்மானின் மேல் அழுந்துமாறு எய்த,
குருதியோடு பிடுங்கிய சிவந்த கோலையுடைய அம்பானது
|
நை |
நை – (வி) 1. அழி, ruin, destroy
2. வருந்து, be distressed
3. (துணி) இற்றுப்போ, இழை இழையாகப்பிரி, (cloth) be worn out
4. சுட்டுப்பொசுக்கு, சுட்டு வதக்கு, roast and make dwindle
1.
நனம் தலை பேரூர் எரியும் நைக்க – புறம் 57/7
அகன்ற இடம் அமைந்த பெரிய ஊரினைத் தீ எரிப்பதானாலும் எரித்து அழிக்கட்டும்
2.
நொந்து நகுவன போல் நந்தின கொம்பு நைந்து உள்ளி
உகுவது போலும் என் நெஞ்சு – கலி 33/16,17
இதுகாறும் நொந்திருந்த மரக்கிளைகள் இப்போது நம்மைப்பார்த்துச் சிரிப்பது போல் மலர்களால் நிறைந்துள்ளன,
வருந்தி அதை நினைந்து
உடைந்து சிதறுவது போல் ஆனது என் நெஞ்சம்
3.
நைந்து கரை பறைந்த என் உடையும் நோக்கி – புறம் 376/11
இற்றுப்போய் கரைகிழிந்து கிடந்த எனது உடையையும் பார்த்து
4.
இரு வெதிர் பைம் தூறு கூர் எரி நைப்ப – மது 302
பெரிய மூங்கிலின் பசிய புதரினை மிக்க நெருப்பு சுட்டுவதக்க,
|
நைவரு(தல்) |
நைவரு(தல்) – (வி) 1. இரங்கு, pity, be compassionate
2. வருந்து, be distressed
3. இற்றுப்போ, become threadbare
1.
நல்காமையின் நைவர சாஅய் – புறம் 146/6
நீ அருளாமையால் கண்டார் இரங்க மெலிந்து
2.
ஐ_வாய்_அரவின் இடைப்பட்டு நைவாரா
மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை – கலி 62/13,14
ஐந்து வாய்களைக் கொண்ட பாம்பின் பார்வையில் அகப்பட்டு வருந்தி,
மாசற்ற திங்கள் போன்று விளங்கும் முகத்தையுடையவரை
3.
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து
நைவாரா ஆய_மகள் தோள் – கலி 103/65-67
அஞ்சாதவராய்க் கொலைத்தொழிலையுடைய காளையை அடக்குபவரை அன்றி
உள்ளத்தில் உரம் இல்லாதவர்கள் அணைத்துக்கொள்வதற்கு அரியது, உயிரைத் துறந்து
நைந்துபோகும் நிலையிலிருந்தாலும், ஆயர் மகளிரின் தோள்கள் என்றும்
|
நைவளம் |
நைவளம் – (பெ) பாலைநிலப் பண்வகை. a melody type of the desert-tract
நைவளம் பழுநிய நயம் தெரி பாலை – சிறு 36
நட்டபாடை என்னும் பண் முற்றுப்பெற்ற இனிமை தெரிகின்ற பாலை என்னும் பண்ணை
|
நொ |
நொ – (பெ) நொய்ம்மை, மென்மை, softness, tenderness
தாஅல் அம் சிறை நொ பறை வாவல் – குறு 172/1
வலிமையான அழகிய சிறகுகளையும், மென்மையான பறத்தலையும் கொண்ட வௌவால்
|
நொசி |
நொசி – (வி) மெலி, சிறுமையாகு, நுண்ணிதாகு, be thin, slender, minute
நுடங்கு நொசி நுசுப்பார் நூழில் தலைக்கொள்ள – பரி 9/49
வளைந்து மடங்கும் நுண்ணிய இடுப்பினையுடையவர் போரினை மேற்கொள்ள
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர் – அகம் 229/11
வருத்தம் மிக்கு உதிர்த்த நுண்ணிதாக வரும் சிறிதளவாகிய கண்ணீர்
|
நொசிப்பு |
நொசிப்பு – (பெ) ஆழ்ந்த தியானம், சமாதி, intense contemplation
கரு பெற்று கொண்டோர் கழிந்த சேய் யாக்கை
நொசிப்பின் ஏழ் உறு முனிவர் நனி உணர்ந்து
வசித்ததை கண்டம் ஆக மாதவர்
மனைவியர் நிறை_வயின் வசி தடி சமைப்பின்
சாலார் தானே தரிக்க என அவர் அவி
உடன் பெய்தோரே அழல் வேட்டு – பரி 5/36-41
இந்திரனிடமிருந்து இந்தக் கருவினைப் பெற்றுக்கொண்டோர், சிதைக்கப்பட்ட கருவாகிய குழந்தை உடலை,
ஆழ்ந்த தியானத்தினால் ஏழு என்ற எண்ணை அடையாகக் கொண்ட முனிவர்கள் நன்றாகத் தெளிந்து,
பிளவுபட்டதைத் துண்டங்களாக, அம் முனிவர்களின்
மனைவியர், தம் கற்புடைமையில், அந்தப் பிளக்கப்பட்ட துண்டுகளைத் தாங்கி வளர்த்தால்
அமைவுடையவராகமாட்டார் என்று எண்ணி, ‘தீயே அவற்றைத் தாங்குவதாக’ என்று அந்த முனிவர்கள்
வேள்வியுணவாக,
ஒன்றாகச் சேர்த்துப் போட்டார் தீயினால் வேள்வி செய்து
|
நொசிவு |
நொசிவு – (பெ) வளைவு, bend
நொசிவு உடை வில்லின் ஒசியா நெஞ்சின் – பதி 45/3
வளைந்த வில்லினையும், வளைந்து முரியாத நெஞ்சினையும்
|
நொச்சி |
நொச்சி – (பெ) ஒரு சிறு மரம், a multi-leaved chaste tree
1.
இது இன்றைக்கும் காட்டுநிலங்களின் வேலியோரம் வளர்ந்திருக்கும்.
சங்ககாலத்தில் இது வீடுகளில் வளர்க்கப்பட்டது.
மனை நொச்சி நிழல் ஆங்கண் – பொரு 185
மனை மா நொச்சி மீமிசை மா சினை – நற் 246/3
மனை இள நொச்சி மௌவல் வால் முகை – அகம் 21/1
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய – அகம் 367/4
2.
இதன் இலைகள் முன்பகுதியில் மூன்று பிரிவாகப் பிரிந்திருப்பதால் இது மயிலின் கால்களைப்போன்றது
என்று புலவர்களால் பாடப்பெற்றுள்ளது.
மயில் அடி இலைய மா குரல் நொச்சி
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ – நற் 115/5,6
மயில் அடி இலைய மா குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த – குறு 138/3,4
மயில் அடி அன்ன மா குரல் நொச்சியும்
கடி உடை வியல் நகர் காண்வர தோன்ற – நற் 305/2,3
3.
நொச்சிப்பூவைக் குயவர்கள் சூடிக்கொள்வர்.
ஒண் குரல் நொச்சி தெரியல் சூடி
யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில்
சாறு என நுவலும் முது வாய் குயவ – நற் 200/2-4
ஒளிவிடும் கொத்தினைக் கொண்ட நொச்சி மாலையைச் சூடிக்கொண்டு
ஆறு நீளக் கிடந்ததைப் போன்ற அகன்ற நெடிய தெருவில்
திருவிழா பற்றிய செய்திகளைக் கூறும் முதுமை வாய்க்கபெற்ற குயவனே!
மணி குரல் நொச்சி தெரியல் சூடி
பலி கள் ஆர்கை பார் முது குயவன் – நற் 293/1,2
நீலமணி போன்ற பூங்கொத்துக்களையுடைய நொச்சியின் பூமாலையைச் சூடிக்கொண்டு
பலியாக இடப்பட்ட கள்ளைக் குடிக்கும் இந் நிலத்து முதுகுடியைச் சேர்ந்த குயவன்
4.
நொச்சியின் அரும்புகள் நண்டுக்கண்களைப் போல் இருக்கும் என்பர்.
நொச்சி மா அரும்பு அன்ன கண்ண
எக்கர் ஞெண்டின் இரும் கிளை தொழுதி – நற் 267/1,2
நொச்சியின் கரிய மொட்டுக்களைப் போன்ற கண்களையுடைய
மணல்மேட்டு நண்டின் பெரிய சுற்றத்தோடு கூடிய கூட்டம்,
5. நொச்சியின் பூக்கள் மணிகளைக் கொத்துக்கொத்தாய்க் கட்டித் தொங்கவிட்டதைப் போல் இருக்கும் என்பர்.
மணி துணர்ந்து அன்ன மா குரல் நொச்சி – புறம் 272/1
மணிகள் கொத்துக்கொத்தாய் அமைந்தாற்போன்ற கரிய கொத்துக்களையுடைய நொச்சி
|
நொடி |
நொடி – 1. (வி) 1. சொல், கூறு, say, tell
2. சொடுக்குப்போடு, snap by joining the thumb with the middle finger
3. குறிசொல், say unknown and wise things
4. சைகையால் அழை, call by signs
– 2. (பெ) 1. இசையில் காலவரை காட்டும் ஒலி, Instant, as the time-measure of the snap of the finger
2. ஓசை, noise
1.1.
வென்றி பல் புகழ் விறலோடு ஏத்தி
சென்றது நொடியவும் விடாஅன் நசை தர – மலை 544,545
அவனது வெற்றியாலுண்டான பல புகழ்களை அவனது சிறப்பியல்புகளோடு புகழ்ந்து
நீர் அவனிடம் சென்ற காரணத்தையும் முற்றக் கூறவும் பொறாதவனாய்
1.2
செம் கோல் அம்பினர் கை நொடியா பெயர – அகம் 337/13
குருதியால் சிவந்த கோலாகிய அம்பினையுடைய அவர்கள் கையை சொடுக்குப்போட்டுக்கொண்டு புறம்போக
1.3
துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்து ஆங்கு
தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி – பெரும் 459,460
துணங்கைக்கூத்துடைய அழகிய இறைவிக்குப் பேய்மகள் குறிசொன்னாற் போன்று,
குறையாத கொடையினையுடைய நின் பெரிய பெயரைப் புகழ்ந்துசொல்லி,
1.4
அலையா உலவை ஓச்சி சில கிளையா
குன்ற குறவனொடு குறு நொடி பயிற்றும்
துணை நன்கு உடையள் மடந்தை – நற் 341/4-6
அங்குமிங்கும் ஓடி, காய்ந்த குச்சியை எடுத்து அடிக்க ஓங்கிக்கொண்டு, சில சொற்களைக் கூறிக்கொண்டு இருக்கும்
குன்றக் குறவனின் மகனைச் சிறிய சைகையால் அழைக்கும்
நல்ல துணையை உடையவள் தலைவி!
2.1
கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி
நொடி தரு பாணிய பதலையும் பிறவும் – மலை 10,11
அடிக்குரல் ஓசையில் (தாளத்துடன்)ஒத்து ஒலிக்கும் வலிமையான விளிம்புப் பகுதியையுடைய சல்லியும்,
காலவரை காட்டுவதற்கு ஒலிக்கும் ஒருகண் பறையும், இன்னும் பிற இசைக்கருவிகளும்
2.2
கவை முட கள்ளி காய் விடு கடு நொடி
துதை மென் தூவி துணை புறவு இரிக்கும் – குறு 174/2,3
கவைத்த முள்ளையுடைய கள்ளியின் காய் வெடிக்கும் கடிய ஒலிக்கு
நெருக்கமான மெல்லிய சிறகுகளையுடைய ஆணும் பெண்ணுமாகிய புறாக்கள் அஞ்சியோடும்
|
நொடிவிடுவு |
நொடிவிடுவு – (பெ) சொடுக்குப்போடுதல், snapping of the thumb with the middle finger
நொடிவிடுவு அன்ன காய் விடு கள்ளி – நற் 314/9
விரல்களைச் சொடுக்குப்போட்டாற்போன்று காய்கள் வெடிக்கும் கள்ளியின்
|
நொடு |
நொடு – (வி) விற்பனைசெய், sell
பசு மீன் நொடுத்த வெண்ணெல் மாஅ – அகம் 340/14
பசிய மீனை விற்று மாற்றிய வெண்ணெல்லின் மா
|
நொடை |
நொடை – (பெ) 1. விலை, price
2. விற்பனை, sale
3. பண்டமாற்றுப்பொருள், item of exchange
1.
நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி – பெரும் 141
விடியற்காலத்து (அவர்கள்)பசுக்களைப் பற்றிக் கொணர்ந்து, (அவற்றைக்)கள்ளுக்கு விலையாகப் போக்கி
2.
நறவு நொடை கொடியொடு
பிறபிறவும் நனி விரைஇ – பட் 180,181
கள் விற்பனைக்காகக் கட்டிய கொடியுடன், 180
ஏனையவற்றிற்குக் கட்டின கொடிகளும் மிகவும் கலந்துகிடப்பதால்
3.
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின் – நற் 254/6
உப்பு விற்பவர்கள் கொண்டுவந்த உப்புக்கு மாற்றான நெல்லை
|
நொடைமை |
நொடைமை – (பெ) விலையாகத் தருதல், paying towards the cost
வேந்து ஊர் யானை வெண் கோடு கொண்டு
கள் கொடி நுடங்கும் ஆவணம் புக்கு உடன்
அரும் கள் நொடைமை தீர்ந்த பின் மகிழ் சிறந்து – பதி 68/9-11
பகை மன்னர் ஏறிவரும் யானையைக் கொன்று அதன் வெண்மையான கொம்பினைத் தோண்டியெடுத்து,
கள்ளுக்கடையின் கொடி அசைந்தாடும் கடைத்தெருவில் நுழைந்து உடனே
அரிய கள்ளுக்கு விலையாகத் தந்து கள்ளைப் பெற்று, பின் அதனைக் குடித்து மகிழ்ந்து
|
நொண்டு |
நொண்டு – (வி.எ) முகந்து, baling out (as water), measuring out (as grain)
நொள் என்ற வினையின் இறந்தகால எச்சம்.
கல் ஊற்று ஈண்டல கயன் அற வாங்கி
இரும் பிணர் தட கை நீட்டி நீர் நொண்டு
பெரும் கை யானை பிடி எதிர் ஓடும் – நற் 186/1-3
கல்லில் ஊறும் ஊற்றில் சேர்ந்துள்ள நீரைக் குழியிலிருந்து முற்றிலும் அற்றுப்போகுமாறு உறிஞ்சி,
கரிய சொரசொரப்பான நீண்ட கையை நீட்டி நீரை முகந்துகொண்டு
பெரிய கையையுடைய யானை தன் பிடியை எதிர்கொண்டு ஓடும்
விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த
புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு
மனை புறந்தருதி ஆயின் – அகம் 230/7,8
கூடி விளையாடும் உன் தோழியருடன், வெள்ளிய மணலில் உதிர்த்த
புன்னைமரத்தின் நுண்ணிய பொடியினை பொன்னாகக்கொண்டு முகந்து
இல்லறம் நடத்துவாயாயின்
|
நொதுமலர் |
நொதுமலர் – (பெ) அயலார், strangers
காண் இனி வாழி தோழி யாணர்
கடும் புனல் அடைகரை நெடும் கயத்து இட்ட
மீன் வலை மா பட்டு ஆங்கு
இது மற்று எவனோ நொதுமலர் தலையே – குறு 171
இதனைக் காண்பாயாக, வாழ்க தோழியே! புதிதாய்
விரைந்துவரும் நீரை அடைக்கும் கரையையுடைய நீண்ட குளத்தில் இட்ட
மீன் வலையில் வேறு விலங்கு சிக்கியதைப் போல்
இது என்ன கூத்து? அயலாரிடத்தான (மணத்துக்கான இம் ) முயற்சி
|
நொதுமலாட்டி |
நொதுமலாட்டி – (பெ) ஒரு அயல் பெண், some stranger woman
துகிலிகை அன்ன துய் தலை பாதிரி
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி
புது மலர் தெருவு-தொறு நுவலும்
நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சே – நற் 118/8-11
வண்ணக்கோலின் தலையைப் போன்ற பஞ்சினைத் தலையில் கொண்ட பாதிரியின்
வெண்மையான இதழ்களையுடைய மலர்களில் வண்டுகள் மொய்க்கும்படி ஏந்திக்கொண்டு
புதிய மலர்களைத் தெருக்கள்தோறும் கூவிவிற்கும்
யாரோ ஒரு பெண்ணுக்காக நோகின்றது என் நெஞ்சம்.
|
நொதுமலாளன் |
நொதுமலாளன் – (பெ) அன்னியன், a stranger
நெடு_மொழி தந்தை அரும் கடி நீவி
நொதுமலாளன் நெஞ்சு அற பெற்ற என்
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி
வல்ல-கொல் செல்ல தாமே கல்லென – அகம் 17/7-10
மிக்க புகழையுடைய (தன்) தந்தையின் கடுமையான கட்டுக்காவலையும் மீறி,
(ஓர்)அன்னியனின் உள்ளத்தை முழுவதுவாய்ப் பெற்ற என்
சிறிய அறிவுசான்ற மகளின் சிலம்பு ஒலிக்கும் சிறிய அடிகள்
வலிமை கொண்டனவோ? – நடந்துசெல்வதற்கு
|
நொதுமலாளர் |
நொதுமலாளர் – (பெ) அயலார், neighbours
நொதுமலாளர் கொள்ளார் இவையே – ஐங் 187/1
(நாங்கள் உம் தழையுடைகளை அணிந்தால்) அயலார் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் இவற்றை
|
நொதுமல் |
நொதுமல் – (பெ) 1. பற்றின்மை, அக்கறையின்மை, indifference
2. அன்புகலவாத சொல், words of an indifferent person
1.
பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை 5
அது நீ அறியின் அன்பு-மார் உடையை
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என் குறை
இற்று ஆங்கு உணர உரை-மதி தழையோர் – நற் 54/5-8
பெரும் தனிமைத்துயரத்தைத் தருகின்றது இந்தச் சிறிய புல்லிய மாலைப்பொழுது;
அதனை நீ அறிந்தால் என்மீது அன்புகொள்வாய்;
என் மீது ஓர் அக்கறையற்ற இதயம் கொள்ளாமல், எனது குறையை
இங்கே இருப்பது போல அவர் உணரும்படி சொல்வாயாக
2.
நொதுமல் கழறும் இ அழுங்கல் ஊரே – குறு 12/6
அன்பற்ற மொழிகளைக் கூறும் இந்த ஆரவாரமுடைய ஊர்
|
நொந்தீவார் |
நொந்தீவார் – (பெ) நொந்துகொள்வார், a person to be blamed
நோ_தக்காய் என நின்னை நொந்தீவார் இல்_வழி
தீது இலேன் யான் என தேற்றிய வருதி-மன் – கலி 73/6,7
மனம் புண்படச் செய்பவன் என்று உன்னை நொந்துகொள்வார் இல்லாதபோது
நான் தீது இல்லாதவன் என்று தெளிவிப்பதற்கு வருவாய் –
|
நொய் |
நொய் – (பெ) 1. நொறுங்கிப்போனது, that can be easily broken
2. மென்மையானது, that which is very soft
1.
நொய் மர விறகின் ஞெகிழி மாட்டி – மலை 446
(உடைப்பதற்கு எளிதான)சுள்ளிக் குச்சிகளைக் கொள்ளியாகத் தீமூட்டி,
2.
தாள் இத நொய் நூல் சரணத்தர் மேகலை – பரி 10/10
காலுக்கு இதமான மென்மையான நூலினாலான மிதியடிகளை அணிந்தவராய்
|
நொய்து |
நொய்து – (வி.மு) ஒடிப்பதற்கு எளிதானது, brittle, சுமப்பதற்கு எளிதானது, very light to carry
தாழ் நீர்
அறு கயம் மருங்கில் சிறு கோல் வெண் கிடை
என்றூழ் வாடு வறல் போல நன்றும்
நொய்தால் அம்ம தானே – புறம் 75/7-10
தாழ்ந்த நீரையுடைய
வற்றிய குளத்தில் சிறிய தண்டாகிய வெளிய நெட்டியின்
கோடையில் உலர்ந்த சுள்ளியைப் போலப் பெரிதும்
மெல்லியது ஆகும்.
|
நொய்யார் |
நொய்யார் – (பெ) அறிவற்றவர், those who lack understanding
தொய்யில் துறந்தார் அவர் என தம்_வயின்
நொய்யார் நுவலும் பழி நிற்ப தம்மொடு
போயின்று சொல் என் உயிர் – கலி 24/15-17
என் தோளின் கோலத்தைத் துறந்து சென்றார் அவர் என்று அவரைப் பார்த்து
அறிவிலார் சொல்கின்ற பழி அவரோடே கூட நிற்க, அவரோடே
போய்விடும் என் உயிர் என்பதை அவரிடம் சொல்லிவிடு
|
நொள்ளை |
நொள்ளை – (பெ) நத்தை, snail
உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின் – அகம் 53/8,9
உள்ளிருக்கும் ஊன் வாடப்பெற்ற சுரிந்த மூக்கினையுடைய நத்தைகள்
பொரியரையுடையது போலாக மூடிக்கொண்டிருக்கும் தனிமைகொண்ட நெறியில்
|
நொவ்வல் |
நொவ்வல் – (பெ) வருத்தம், துயரம், anguish, distress
மயங்கிய
மையல் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக
ஆடிய பின்னும் வாடிய மேனி
பண்டையில் சிறவாதாயின் – அகம் 98/21-24
வெறியாடும்களத்தில் கூடிய
மயக்கம் பொருந்திய பெண்டிர்க்கு துன்பம் உண்டாக
வேலன் ஆடிய பின்னும் எனது வாடிய மேனி
முன்பு போலச் சிறந்திடாதாயின்
|
நொவ்விதின் |
நொவ்விதின் – (வி.அ) எளிதாக, easily3
விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின்
தவறும் நன்கு அறியாய் – நற் 315/9,10
சிறப்பைக்கொண்டதாகக் கருதப்பட்ட உறவு எளிதில்
தவறாகத் துன்பம் தருவதை நன்கு அறியாதிருக்கின்றாய்
|
நொவ்வு |
நொவ்வு – (வி) மெலிவாக இரு, be thin and lean
நொவ்வு இயல் பகழி பாய்ந்து என புண் கூர்ந்து
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் – அகம் 388/11,12
மெல்லிதான இயல்பையுடைய அம்பு பாய்ந்ததாக புண் மிக்கு
துன்பத்துடன் வந்த உயர்ந்த கோட்டினையுடைய களிறு
|
நோ |
நோ – (வி) 1. துன்புறு, be grieved
2. வருந்து, be anguished
3. நொந்துபோ, வேதனைப்படு, feel pain, pain struck
1.
நோ இனி வாழிய நெஞ்சே
———————— ————– ———
வலை மான் மழை கண் குறு_மகள்
சில் மொழி துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே – நற் 190
துன்புற்று நலிந்துபோவாய்! வாழ்க! நெஞ்சமே
———————- —————- ————
வலைப்பட்ட மானைப்போன்ற, குளிர்ச்சியான கண்களையுடைய சிறுமகளின்
சில சொற்களே பேசும் பவளம் போன்ற வாயினில் தோன்றும் சிரிப்பினால் மகிழ்ந்துபோன நீ! –
2.
நோ_தக்கன்றே காமம் யாவதும்
நன்று என உணரார் மாட்டும்
சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே – குறு 78/4-6
வருந்தத்தக்கது காமம், ஒருசிறிதும்
நன்று என உணராதவரிடத்தும்
வலிந்து சென்று நிற்கும் பெரும் மடமையை உடையது.
3.
நோகோ யானே நோம் என் நெஞ்சே – நற் 312/1
நொந்துபோயிருக்கின்றேன் நான்! என்னை நொந்துகொள்ளும் என் நெஞ்சமே!
|
நோக்கம் |
நோக்கம் – (பெ) 1. கண்கள், eyes
2. பார்வை, sight, look
3. முகத்தோற்றம், தோற்றம், countenance, expression
1.
பிணி நெகிழ பைம் துகில் நோக்கம் சிவப்பு ஊர
பூ கொடி போல நுடங்குவாள் – பரி 21/58,59
அழகிய ஆடையின் இறுக்கம் நெகிழ, கண்களில் சிவப்பு ஊர,
பூங்கொடியைப் போல வளைந்து ஆடுவாள்
2.
மான் அமர் நோக்கம் கலங்கி கையற்று – குறி 25
மான் போல் அமர்ந்த பார்வை(கொண்ட கண்கள்)கண்ணீர் மல்கி, ஒன்றும் செய்ய இயலாமல்
3.
அரசு முழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு
தூ துளி பொழிந்த பொய்யா வானின்
வீயாது சுரக்கும் அவன் நாள் மகிழ் இருக்கையும் – மலை 74-76
தன் ஆட்சி முழுதையும் கொடுத்தாலும் மனநிறைவடையாத தோற்றத்துடன்,
தூய்மையான துளிகளை மிகுதியாகப் பெய்கின்ற பருவம் தவறாத வானத்தைப் போன்று,
நிற்காமல் கொடுக்கும் அவனது நாளோலக்கத்தையும் (முற்பகல் நேர அரசு வீற்றிருப்பு),
|
நோக்கல் |
நோக்கல் – (பெ) பார்த்தல், seeing
சூர் புகல் அடுக்கத்து பிரசம் காணினும்
ஞெரேரென நோக்கல் ஓம்பு-மின் உரித்து அன்று – மலை 239,240
தெய்வமகளிர் விரும்பும் அடுக்கடுக்காய் அமைந்த சரிவுகளில், தேனடையைக் கண்டாலும்,
‘படக்’என்று (அவற்றைத் திரும்பிப்) பார்ப்பதைத் தவிருங்கள், (அது உமக்கு)உரித்தான செயல் அன்று
|
நோக்கு |
நோக்கு – 1. (வி) 1. பார், see, look at
2. கனிவுடன் பார், look at kindly
3. எண்ணிப்பார், ஆராய், look into, consider
4. கவனத்தில் கொள், take to mind
– 2. (பெ) 1. பார்வை, sight
2. தோற்றப்பொலிவு, countenance
3. அறிவு, knowledge
1.1.
செறுவர் நோக்கிய கண் தன்
சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே – புறம் 100/10,11
பகைவரை வெகுண்டு பார்த்த கண் தன்னுடைய
புதல்வனைப் பார்த்தும் சிவப்பு அமையாவாயின
1.2.
அறம் புரி செங்கோல் மன்னனின் தாம் நனி
சிறந்தன போலும் கிள்ளை பிறங்கிய
பூ கமழ் கூந்தல் கொடிச்சி
நோக்கவும் படும் அவள் ஒப்பவும் படுமே – ஐங் 290
அறத்தைப் புரியும் செங்கோல் ஆட்சியையுடைய மன்னனைக் காட்டிலும், தாம் மிகவும்
சிறந்தன போலும் இந்தக் கிளிகள், சுடர்விடும்
பூக்கள் மணக்கும் கூந்தலையுடைய இந்தக் குறிஞ்சிப்பெண்ணால்
கனிவுடன் பார்க்கவும் படும், அவளால் கடிந்து ஓட்டவும் படுமே!
1.3.
புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க்கு
அருகாது ஈயும் வண்மை – புறம் 329/7,8
வேந்தராகிய செல்வர்கட்கு உண்டான துன்பத்தை எண்ணிப்பாராமல், இரவலர்க்கு
குறைவறக் கொடுக்கும் வள்ளன்மை
1.4.
அருள் தீர்ந்த காட்சியான் அறன் நோக்கான் நயம் செய்யான் – கலி 120/1
அருள் முற்றிலும் அற்றுப்போன தோற்றமுடையவன், அறநெறியைக் கவனத்தில் கொள்ளாதவன், நல்லவற்றைச் செய்யாதவன்,
2.1
நோக்கு நுழைகல்லா நுண்மைய பூ கனிந்து
அரவு உரி அன்ன அறுவை நல்கி – பொரு 82,83
பார்வை நுழைய முடியாத நுண்மையை உடையதும், பூத்தொழில் நன்கமைந்ததும்,
(மென்மையால்)பாம்பின் தோலை ஒத்ததும் ஆன துகிலை நல்கி,
2.2
நோய் இகந்து நோக்கு விளங்க – மது 13
பிணிகள் நீங்கி அழகு விளங்க
2.3
எ வகை செய்தியும் உவமம் காட்டி
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்
கண்ணுள்_வினைஞரும் பிறரும் கூடி – மது 516-518
பல வகைப்பட்ட தொழில்களையும் ஒப்புக்காட்டிக்
கூரிதாக உணர்ந்த கூரிய அறிவினையுடைய
ஓவியரும், பிறரும் கூடி,
|
நோதல் |
நோதல் – (பெ) வருந்துதல், grieving
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்று ஓர் அன்ன – புறம் 192/1-3
எமக்கு எல்லாம் ஊர், எல்லாரும் சுற்றத்தார்
கேடும் ஆக்கமும் தாமே வரின் அல்லது பிறர் தருவதால் வருவன அல்ல,
வருந்துதலும் அது தீர்தலும் அவற்றை ஒப்பத் தாமே வருவன
|
நோனார் |
நோனார் – (பெ) பகைவர், foes
நோனார் உயிரொடு முரணிய நேமியை – பரி 4/9
பகைவருடைய உயிரோடு மாறுபட்ட சக்கரப்படையையுடையவனே!
|
நோன் |
நோன் – 1. (வி) பொறுமைகாட்டு, endure
2. (பெ.அ) வலிய, strong, mighty
1.
நோனா செருவின் வலம் படு நோன் தாள் – மலை 163
(பகைவர் மேல்)பொறுமைகாட்டாத போர்களையும் (அவற்றில்)வெற்றிபெறும் தீவிர முனைப்பினையுமுடைய
2.1
உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள் – திரு 4
தன்னைச்சேர்ந்தவர்களைத் தாங்குகின்ற செருக்குடைய, வலிமையான திருவடிகளையும்,
2.2
நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த – சிறு 55
வலிமையுள்ள எருதுகளையுடைய உப்பு வாணிகரின் வண்டி ஒழுங்கோடு வந்த
2.3
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு – சிறு 252
கூரிய சிற்றுளிகள் சென்று செத்திய உருவங்கள் அழுந்தின, வலிமையான, அச்சுக்குடத்தில்
2.4
வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு – நெடு 176
வேப்பம் பூ மாலையைத் தலையிலே கட்டின வலிய காம்பினையுடைய வேலோடே
2.5
ஆடு_மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று – நற் 95/2
ஆட்டக்காரியான கழைக்கூத்தி நடந்த வளைந்த முறுக்கேறிய வலிய கயிற்றில்
2.6
வரி மாண் நோன் ஞாண் வன் சிலை கொளீஇ – அகம் 61/7
வரியும் கொண்டு மாண்புற்று விளங்கும் வலிய நாண் பூட்டிய வலிய வில்லை ஏற்றி
|
நோன்மை |
நோன்மை – (பெ) 1. பொறுமை, endurance
2. வலிமை, strength, vigour
1.
வாய்மை வயங்கிய வைகல் சிறந்த
நோன்மை நாடின் இரு நிலம் – பரி 2/54,55
வாய்மையோ தப்பாமல் ஒளிவிட்டு வரும் விடியற்காலை; உன் சிறந்த
பொறுமையை நோக்கினால் அது இந்த பெரிய நிலவுலகம்
2.
பொருநர்க்கு
இரு நிலத்து அன்ன நோன்மை
செரு மிகு சேஎய் – புறம் 14/17-19
போரிடுவோர்க்கு
நடுக்கமுறாத பெரிய நிலம் போன்ற வலிமையையும் கொண்டவனாய்
போரில் முருகவேளை ஒத்துத் தோன்றுவாய்
|
நோன்றல் |
நோன்றல் – (பெ) பொறுத்துக்கொள்ளுதல், enduring
அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் – கலி 133/10
அறிவு எனப்படுவது பேதைகளின் சொற்களைப் பொறுத்துக்கொள்ளுதல்,
|
நோற்றோர் |
நோற்றோர் – (பெ) தவம் செய்தவர், those who did penance
நோற்றோர் மன்ற தோழி – குறு 344
——————- ———————–
பிரிந்து உறை காதலர் வர காண்போரே
தவம் செய்தவர் ஆவர், நிச்சயமாக, தோழி!
——————- ———————–
பிரிந்து வாழும் காதலர் திரும்பிவரக் காண்போர் –
|
நோல் |
நோல் – (வி) 1. பொறுத்துக்கொள், endure
2. தவம்செய், practise austerities
1.
நோலா இரும் புள் போல நெஞ்சு அமர்ந்து
காதல் மாறா காமர் புணர்ச்சியின் – அகம் 220/14,15
ஒன்றையொன்று பிரிந்திருத்தலைப் பொறுத்துக்கொள்ளமுடியாத பெரிய பறவையாகிய மகன்றிலைப் போல
ஒருவர் நெஞ்சிலே ஒருவர் பொருந்தி
காதல் நீங்காத அழகிய புணர்ச்சியினாலே
2.
ஆற்று எதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே – பொரு 59
இவ்வழிக்கண் (என்னை நீ)சந்தித்ததுவும் (நீ முற்பிறப்பில்)தவம்செய்ததன் பயனே,
|
நோவல் |
நோவல் – (வி.மு) 1. வருந்தவேண்டாம், don’t be sad
2. வருந்துகிறேன், I am grieved
1.
வாராமையின் புலந்த நெஞ்சமொடு
நோவல் குறு_மகள் நோயியர் என் உயிர் என – அகம் 25/15,16
(தலைவன்) “வராததினால் வெறுத்துப்போன நெஞ்சத்துடன்
வருந்த வேண்டாம், இளையோளே! வருந்துவதாக என் உயிர்” என
2.
நீர் இல் நீள் இடை
மடத்தகை மெலிய சாஅய்
நடக்கும்-கொல் என நோவல் யானே – அகம் 219/16-18
நீர் இல்லாத நீண்ட நெறியில்
தனது மடப்பத்தையுடைய அழகு கெட மெலிந்து
நடப்பாளோ என்று நான் வருந்துகின்றேன்
|
நோவு |
நோவு – (பெ) வலி, pain
விருந்தின் புன்கண் நோவு உடையர் – புறம் 46/7
முன்பு அறியாத புதியதொரு துன்பத்தின் வலியை உடையவர்
|
நௌவி |
நௌவி – (பெ) ஒரு மான் வகை, a kind of deer
பெரும் கவின் பெற்ற சிறு தலை நௌவி
மட கண் பிணையொடு மறுகுவன உகள – மது 275,276
பெரும் அழகைப் பெற்ற சிறிய தலையையுடைய நௌவிமான்
மடப்பத்தையுடைய கண்ணையுடைய பிணையோடே சுழல்வனவாய் துள்ள,
|