தகடு |
தகடு – (பெ) 1. உலோகத்தட்டு, metal plate
2. பூவின் புறவிதழ், outer petal of a flower
1.
புலி பொறி கொண்ட பூ கேழ் தட்டத்து
தகடு கண் புதைய கொளீஇ துகள் தீர்ந்து – நெடு 126,127
புலியின் உருவம் பொறிக்கப்பட்ட பொலிவு பெற்ற நிறத்தையுடைய தட்டம் போன்ற
தகடுகளால் நடுவுவெளியான இடம் மறையும்படி கோக்கப்பட்டு, குற்றமற்று
2.
முள் சினை
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி – பெரும் 214,215
முள்ளையுடைய கொம்புகளையுடைய
அரும்புகள் சூழ்ந்த இதழ்களையுடைய மறிந்த வாயையுடைய முள்ளியின்
|
தகடூர் |
தகடூர் – (பெ) தருமபுரி, அதியமான் என்னுந் சிற்றரசனுக்குத் தலைநகர்.
Capital of Atiyamāṉ, a Tamilian chieftain of ancient times, now identified with Dharmapuri
வில் பயில் இறும்பின் தகடூர் நூறி – பதி 78/9
விற்படையினர் நிறைந்த காவற்காட்டையுடைய தகடூரைத் தகர்த்து
|
தகரம் |
தகரம் – (பெ) 1. ஒரு வாசனை மரம், Wax-flower dog-bane, Tabernae montana
2. தகர மரக்கட்டையை அரைத்துகு குழைத்துச்செய்த மயிர்ச்சாந்து, Aromatic unguent for the hair
1.
கவரி,
அயல
தகர தண் நிழல் பிணையொடு வதியும் – புறம் 132/4-6
கவரிமா
பக்கத்திலுள்ள
தகரமரத்தின் குளிர்ந்த நிழலின்கண் தனது பிணையுடனே தங்கும்
2.
தகரம் நீவிய துவரா கூந்தல் – பதி 89/16
மணம்வீசும் தகரமயிர்ச்சாந்து பூசிய எண்ணெய்ப்பசை நீங்காத கூந்தல்
|
தகர் |
தகர் – (பெ) 1. மேட்டு நிலம், elevated land
2. ஆட்டுக்கிடா, male of sheep
1.
வேல் தலை அன்ன வை நுதி நெடும் தகர்
ஈத்து இலை வேய்ந்த எய் புற குரம்பை – பெரும் 87,88
வேலின் முனையைப் போன்ற கூர்மையான முனையைக்கொண்ட, நெடிய மேட்டில் உள்ள
ஈந்தினுடைய இலையால் வேயப்பட்ட எய்ப்பன்றியின் முதுகு போலும் புறத்தினையுடைய குடில்
2.
தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇ – மலை 414
கிடாக்கள் கலந்த செம்மறியாடுகள் வெள்ளாடுகளோடு கலந்து
|
தகவு |
தகவு – (பெ) 1. தகுதி, suitability, worthiness
1.
தாழ்ந்தாய் போல் வந்து தகவு இல செய்யாது – கலி 69/22
தாழ்ந்தவன் போல் வந்து தகுதியில்லாதவற்றைச் செய்யாதே!
2.
தகவு உடை மங்கையர் சான்றாண்மை சான்றார் – பரி 20/88
கற்புடைய மங்கையர் சான்றாண்மை மிக்க பெரியவர்
|
தகை |
தகை – 1. (வி) 1. தடுத்து நிறுத்து, stop, resist
2. கட்டு, bind
3. அழகுபடுத்து, make beautiful
4. உள்ளடக்கு, enclose
5. சுற்று, wind round, coil
2. (பெ) 1. மாலை, garland
2. தன்மை, இயல்பு, nature, characteristic
3. உயர்வு, excellence, greatness
4. அழகு, beauty, loveliness
5. பொருத்தம், இயைபு, fitness, suitability
6. நன்மை, நலம், goodness, virtue
1.1.
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க
சென்றி பெரும நின் தகைக்குநர் யாரோ – அகம் 46/15,16
ஒளிரும் வளையணிந்த தலைவியின் அழகு குன்றினும் குன்றுக;
போய்விடு பெருந்தகையே! உன்னைத் தடுப்பவர் யாருமில்லை.
1.2
ஓங்கு நிலை வாயில் தூங்குபு தகைத்த
வில் விசை மாட்டிய விழு சீர் ஐயவி – பதி 22/22,23
உயர்ந்து நிற்கும் வாயில்களில், தொங்கிக்கொண்டிருக்கும்படி கட்டிய,
எந்திர வில்கள் பொருத்தப்பட்ட, மிகுந்த சிறப்பினையுடைய ஐயவித்துலா மரங்களும்
1.3
குவி இணர் எருக்கின் ததர் பூ கண்ணி
ஆடூஉ சென்னி தகைப்ப – அகம் 301/11,12
குவிந்த கொத்துக்களையுடைய எருக்கினது நெருங்கிய பூக்களாலான கண்ணி
ஆடவர் சென்னியை அழகுறுத்த
1.4
தண் கேணி தகை முற்றத்து – பட் 51
குளிர்ந்த சிறிய குளங்களை உள்ளேயடக்கின முற்றத்தையுடைய
1.5
தகை தார்
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண்
கிள்ளிவளவன் படர்குவை ஆயின் – புறம் 69/14-16
சுற்றப்பட்ட மாலையையும்
ஒள்ளிய எரியை ஒக்கும் நிறம் பொருந்திய பசும்பொன்னால் செய்யப்பட்ட பூணினையுமுடைய
கிள்ளி வளவனைடத்தே செல்குவையாயின்
2.1
முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து – திரு 139
மொட்டு வாய் நெகிழ்ந்த மாலை சூழ்ந்த மார்பினையும் (கொண்ட)
2.2
முகிழ் தகை
முரவை போகிய முரியா அரிசி – பொரு 112,113
(முல்லை)அரும்பின் தன்மையையுடைய
(தீட்டப்படாத அரிசியிலுள்ள)வரி நீக்கப்பெற்ற(தீட்டிய) உடையாத(முழு) அரிசியின்
2.3
கரும் கால் வேங்கை நாள் உறு புது பூ
பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப
தகை வனப்பு உற்ற – நற் 313/1-3
கருமையான அடிமரத்தையுடைய வேங்கை மரத்தின் காலையில் பூத்த புதிய பூக்கள்
பொன்வேலை செய்யும் பொற்கொல்லனின் சிறந்த கைவேலைப்பாட்டைப் போல
சிறப்பான வனப்பைப் பெற்றன
2.4
தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே – நற் 370/11
அழகிய மலர் போன்ற மையுண்ட கண்களைத் தன் கைகளினால் மூடிக்கொண்டாள்.
2.5
பொய் வலாளன் மெய் உற மரீஇய
வாய் தகை பொய் கனா மருட்ட ஏற்று எழுந்து
அமளி தைவந்தனனே – குறு 30/2-4
அந்தப் பொய்சொல்வதில் வல்ல தலைவன் என்னை மார்புறத் தழுவிய
வாய்ப்பதற்கேதுவான பொய்க்கனவு மருட்ட, நினைவு பெற்று எழுந்து
படுக்கையைத் தடவிப்பார்த்தேன்!
2.6
எழில் தகை இள முலை பொலிய – ஐங் 347/2
அழகும் நலமும் சேர்ந்த என்னுடைய இளம் முலைகள் பொலிவுபெறும்படியாக
|
தகைபெறு |
தகைபெறு – (வி) அழகுடன் விளங்கு, look beautiful
தகைபெறு கழனி அம் தண் துறை ஊர கேள் – கலி 79/6
அழகுபெற்ற வயல்வெளிகளையுடைய அழகிய குளிர்ந்த துறையையுடைய ஊரனே கேட்பாயாக!
|
தகைப்பு |
தகைப்பு – (பெ) 1. வீட்டின் உள்கட்டு, inner portion of a house
2. படைகளின் அணிவகுப்பு, Battle array of an army
3. கட்டுமானம், built structure
4. அரண்மனைக் கட்டுமானம், Palatial building
1.
கொடும் திண்ணை பல் தகைப்பின்
புழை வாயில் போகு இடைகழி
மழை தோயும் உயர் மாடத்து – பட் 143-145
சுற்றுத் திண்ணையினையும், பல உள்கட்டுக்களையும்,
சிறுவாசலையும், பெரியவாசலையும், நீண்ட நடை(ரேழி)களையும் உடைய
மேகங்களை எட்டித்தொடும்(அளவுக்கு) உயரமான மாடத்தில்
2.
ஆர் அரண் கடந்த தார் அரும் தகைப்பின்
பீடு கொள் மாலை பெரும் படை தலைவ – பதி 24/4,5
கடத்தற்கரிய அரண்களை அழித்துச் செல்லும் முன்னணிப்படையின் அரிய அணிவகுப்பினையுடைய
பெருமை கொள்ளும் இயல்பினையுடைய பெரும் படைக்குத் தலைவனே!
3.
எந்திர தகைப்பின் அம்பு உடை வாயில் – பதி 53/7
(வில் இல்லாமல்) எந்திரக் கட்டுமானத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அம்புகளை உடைய வாயில்
4.
களிறு நிலை முணைஇய தார் அரும் தகைப்பின்
புறஞ்சிறை வயிரியர் காணின் – பதி 64/7,8
களிறுகள் நிற்பதற்கு வெறுத்த, ஒழுங்காக அமைந்த உயர்ந்த கட்டுக்காவலையுடைய அரண்மனையின்
வெளிப்புறத்தில் கூத்தர்கள் வரக் காணும்போது
|
தகைமை |
தகைமை – (பெ) 1. பண்பு, தன்மை, இயல்பு, nature, characteristic
2. அழகு, beauty
3. தகுதிப்பாடு, suitability
1.
பகைமையின் கடிது அவர் தகைமையின் நலியும் நோய் – கலி 137/17
பகைமையிலும் கொடியது அவரது பண்புகளால் நான் நலிகின்ற நோய்;
2.
அடு நறா மகிழ் தட்ப ஆடுவாள் தகைமையின்
நுனை இலங்கு எஃகு என சிவந்த நோக்கமொடு
துணை அணை கேள்வனை துனிப்பவள் நிலையும் – பரி 21/20-22
சமைக்கப்பட்ட கள்ளை உண்டதனாலான களிப்பு தன்னைத் தடுக்க, ஆடுகின்ற விறலியின் அழகு காரணமாக,
நுனி ஒளிரும் வேலினைப்போன்ற சிவந்த பார்வையோடே,
தனக்குத் துணையாக அணைத்துக்கொண்டிருக்கும் தன் கணவனிடம் ஊடல்கொண்டவளின் நிலையும்,
3.
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே
மறப்பல் மாதோ நின் விறல் தகைமையே – நற் 270/9-11
பகைவரை ஓட்டிய ஏந்திய வேற்படையை உடைய நன்னன்
பகைவரின் உரிமைமகளிரின் கூந்தலைக் கயிறாகத் திரித்த கொடுமையினும் கொடியது,
மறந்துவிடுவேன் உன் சிறப்பியல்பின் தகுதிப்பாட்டினை.
|
தகைவு |
தகைவு – (பெ) தடுத்தல், obstruction
கண்டவர் இல் என உலகத்துள் உணராதார்
தங்காது தகைவு இன்றி தாம் செய்யும் வினைகளுள் – கலி 125/1,2
தாம் செய்யும் தவறுகளை உலகத்தில் கண்டவர் யாரும் இல்லை என்று எண்ணிக்கொண்டு, அறியாதவர்கள்
அவற்றைச் செய்யக்கூடாது என்று எண்ணாமலும், அவற்றைத் தடுப்பார் யாரும் இன்றியும், செய்கின்ற செயல்களுள்
|
தசம் |
தசம் – (பெ) பத்து, ten
தசம் நான்கு எய்திய பணை மருள் நோன் தாள்
இகல் மீக்கூறும் ஏந்து எழில் வரி நுதல்
பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து – நெடு 115-117
பத்துக்கள் நான்கு(நாற்பது ஆண்டு)சென்ற, முரசென்று மருளும் வலிய கால்களையும், 115
போரில் புகழ்ந்து போற்றப்படும் உயர்ந்த அழகினையும், புகர்நிறைந்த மத்தகத்தினையுமுடைய,
போரிட்டு வீழ்ந்த யானையின், தானாக வீழ்ந்த கொம்புகளின் இரண்டுபுறங்களையும் சீவி,
|
தசும்பு |
தசும்பு – (பெ) பானை, குடம், pot,
துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதி தேறல் – மலை 463
(வேகும்போது கொதிப்பதால்)குலுங்கும் பானையிலிருந்து வடித்த (நெல்லின்)இளம் முளைகளாலான தெளிந்த கள்ளை
|
தட |
தட – (பெ.அ) 1. அகலமான, விரிந்த, பெரிய, large, broad
2. வளைந்த, bent, curved
1.
வலம்புரி பொறித்த மா தாங்கு தட கை – முல் 2
வலம்புரி(ச் சங்கின்) குறிகள் பொறிக்கப்பட்ட, திருமகளை அணைத்த பெரிய கையில்
2.
தட மருப்பு எருமை தாமரை முனையின் – அகம் 91/15
வளைந்த கொம்பையுடைய எருமை தாமரையை வெறுக்குமாயின்
|
தடம் |
தடம் – (பெ) 1. அகலம், பரப்பு, width, expanse
2. பெருமை, greatness
3. வளைவு, curve, bend
4. குளம், tank
1.
பாடு இமிழ் பனி கடல் துழைஇ பெடையோடு
உடங்கு இரை தேரும் தடம் தாள் நாரை – நற் 91/3,4
ஓசை முழங்குகின்ற குளிர்ந்த கடலில் துழாவித் தன் பெடையோடு
சேர்ந்து இரையைத் தேடும் அகன்ற பாதங்களையுடைய நாரை
தடம் கடல் வாயில் உண்டு சில் நீர் என
——————-
கார் எதிர்ந்தன்றால் – நற் 115/4-7
பரந்த கடலின் நீரை வாயினால் எடுத்துக்கொண்டு அதனைச் சிறிதளவு நீரே என்னும்படி,
—————————-
கார்காலம் எதிர்ப்பட்டது
2.
தன் நாற்றம் மீது தடம் பொழில் தான் யாற்று
வெம் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப – பரி 20/12,13
பெரிய பொழில்களின் மலர்களின் மணத்திற்கும் மேலாக, ஆற்றின்
வெம்மையான மணலில் புதுநீர் பரவுவதால் புதிதாய் புகுந்து பரவும் நாற்றம் குளிர்ந்த வாடையாய் மாற
3.
தடம் கோட்டு ஆமான் மடங்கல் மா நிரை – நற் 57/1
வளைந்த கொம்புகளையுடைய காட்டுப்பசு, சிங்கம் முதலான விலங்குகளின் கூட்டம்
4.
முகை வாய்த்த தடம் போலும் இளமையும் நிலையுமோ – கலி 17/16
மொட்டுக்களைப் பெற்ற குளம் நாளும் வற்றுவதைப் போல இவளின் இளமையும் வற்றாமல் நிற்குமோ?
|
தடவரல் |
தடவரல் – (பெ) வளைவு, bending, curving
ஐய செய்ய மதன் இல சிறிய நின்
அடி நிலன் உறுதல் அஞ்சி பைய
தடவரல் ஒதுக்கம் தகை கொள இயலி
காணிய வம்மோ கற்பு மேம்படுவி – அகம் 323/4-7
அழகிய சிவந்த வலியற்ற சிறிய உன்
அடிகள் நிலத்தில் பொருந்துதலை அஞ்சி, மெல்லென
உடல் வளைந்து நடக்கும் நடை அழகுபெற நடந்து
காணுதற்கு வருவாயாக, கற்பில் மேம்பட்டவளே!
|
தடவரும் |
தடவரும் – (வி-பெ) தடவுதல், வருடுதல், stroking
கன்று உடை மட பிடி களிறொடு தடவரும்
புன் தலை மன்றத்து அம் குடி சீறூர் – அகம் 321/9,10
கன்றினையுடைய இளைய பெண்யானை தன் களிற்றுடன் கூடித் தடவிப்பார்க்கும்
பொலிவற்ற இடத்தினையுடைய மன்றினையும் அழகிய குடியிருப்பினையும் உடைய சீறூரில்
|
தடவு |
தடவு – (பெ) 1. கணப்புச்சட்டி, earthen pot holding fire with cinder
2. மண்சட்டி, earthern pot
3. ஓமகுண்டம், sacrificial pit
4. ஒரு மரம், a tree
5. வளைவு, curve, bend
6. அகலம், breadth
7. பெருமை, greatness
1.
பகு வாய் தடவில் செம் நெருப்பு ஆர – நெடு 66
பிளந்த வாயையுடைய கணப்புச்சட்டியின் சிவந்த நெருப்பின் (வெம்மையை)நுகர;
2.
கள் உடை தடவில் புள் ஒலித்து ஓவா – நற் 227/7
கள்ளையுடைய குடத்தில் வண்டினங்கள் மொய்த்து ஒலியெழுப்புதல் நிற்காத
3.
நீயே வட பால் முனிவன் தடவினுள் தோன்றி – புறம் 201/8
நீதான், வடபக்கத்து முனிவனுடைய ஓமகுண்டத்தில் தோன்றி
4.
அன்றில்
இறவின் அன்ன கொடு வாய் பெடையொடு
தடவின் ஓங்கு சினை கட்சியில் – குறு 160/1-3
ஆண் அன்றில்
இறாமீனைப் போன்ற வளைந்த மூக்கினையுடைய பெண் அன்றிலோடு
தடா மரத்தின் உயர்ந்த கிளையிலுள்ள கூட்டிலிருந்து
5.
தடவு நிலை பலவின் முழு முதல் கொண்ட
சிறு சுளை பெரும் பழம் கடுப்ப – பெரும் 77,78
வளைந்த நிலைமையினையுடைய பலாமரத்தின் அடிப்பகுதியில் குலைகொண்ட
சிறியதாகிய சுளையினையுடைய பெரிய பழத்தை ஒப்ப,
6.
இறவு புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்
சுறவு கோட்டு அன்ன முள் இலை தாழை – நற் 19/1,2
இறாலின் முதுகைப் போன்ற சொரசொரப்பு வாய்ந்த அகன்ற அடியினைக்கொண்ட
சுறாமீனின் கூரிய கொம்பைப் போன்ற முட்களைக் கொண்ட இலையையுடைய தாழையின்
7.
உரவு திரை பொருத பிணர் படு தடவு முதல்
அரவு வாள் வாய முள் இலை தாழை – நற் 235/1,2
வலிமையான அலைகள் மோதுகின்ற சொரசொரப்பான பெரிய அடியையும்,
அரத்தின் வாய்போன்றதாயுள்ள முள்ளாலான இலைகளையும் கொண்ட தாழை
|
தடாகம் |
தடாகம் – (பெ) குளம், pond
தடாகம் ஏற்ற தண் சுனை பாங்கர் – பரி 9/77
தடாகத்தைப் போன்ற குளிர்ந்த சுனையின் பக்கத்தில்
|
தடாரி |
தடாரி – (பெ) 1. உடுக்கை, Drum shaped like an hour-glass
2. கிணைப்பறை, A drum or tabor of the agricultural tract
1.
கை கசடு இருந்த என் கண் அகன் தடாரி – பொரு 70
கை அழுக்கு இருந்த என் கண் அகன்ற உடுக்கையில்
2.
அரி குரல் தடாரியின் யாமை மிளிர – புறம் 249/4
அரித்து எழும் ஓசையையுடைய கிணைப்பறையின் முகமே போலும் யாமை பிறழ
|
தடி |
தடி – 1. (வி) 1. கொல், அழி, kill, destroy
2. வெட்டு, cut down, hew down
2. (பெ) 1. துண்டம், piece
2. தசை, flesh
1.1
சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் – திரு 46
சூரனாகிய தலைவனைக் கொன்ற ஒளிவிடுகின்ற இலைத்தொழிலையுடைய நெடிய வேல்
1.2
மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து – திரு 60
மாமரத்தின் அடியை வெட்டின குற்றம் இல்லாத வெற்றியினையும்
2.1
கரும் கண் வராஅல் பெரும் தடி மிளிர்வையொடு – நற் 60/4
கரிய கண்களையுடைய வரால் மீனின் பெரும் துண்டங்கள் குழம்பிலே இட்டவற்றை
2.2
என்பொடு தடி படு இடம் எல்லாம் எமக்கு ஈயும்-மன்னே – புறம் 235/6
எலும்புடன் தசைத்துண்டங்கள் இருக்கும் வழியெல்லாம் எமக்குக் கொடுப்பான்
|
தடிவு |
தடிவு – (பெ) துண்டாக்குதல், cutting,
தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம் – புறம் 320/13
துண்டு துண்டாக அறுத்து நிறைந்திட்ட இறைச்சியை
|
தடை |
தடை – 1. (வி) 1. தடு, hinder, stop
2. அகன்றிரு, be broad
– 2. (பெ) இடையூறு, hindrance, obstacle
1.1.
நசையுநர் தடையா நன் பெரு வாயில் – பொரு 66
விரும்பி வந்தாரைத் தடுக்காத நல்ல பெரிய (கோபுர)வாயிலினுள்
1.2
தடையின திரண்ட தோள் தகை வாட சிதைத்ததை – கலி 45/15
அகன்று திரண்டு இருக்கும் தோள்களின் அழகு வாட நீ சிதைத்துவிட்டாய்
2.
வேண்டு வழி நடந்து தாங்கு தடை பொருது – பரி 7/19
விருப்பமான வழிகளிலெல்லாம் நடந்து, குறுக்கிடும் இடையூறுகளை மோதித்தாக்கி,
|
தடைஇ |
தடைஇ – (வி.எ) தடவி என்பதன் திரிபு
1. வருடி, stroking
2. மறைத்து, hiding
3. திரண்டு, be rotund
1.
கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ
கரும் கோட்டு சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப – நெடு 69,70
பெரிய எழுகின்ற முலையின் வெப்பத்தால் வருடி,
கரிய தண்டினையுடைய சிறுயாழைப் பண் நிற்கும் முறையிலே நிறுத்த
2.
தழையும் தாரும் தந்தனன் இவன் என
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ
தைஇ திங்கள் தண் கயம் படியும் – நற் 80/5-7
உடுக்கும் தழையும், சூடும் மாலையும் தந்தான் இவன் என்று
அணிகலன் அணிந்த தோழியரோடு தகுந்த நாணத்தை மறைத்துக்கொண்டு
தைத்திங்களில் குளிர்ந்த குளத்துநீரில் நீராடும்
3.
முறம் செவி யானை தட கையின் தடைஇ
இறைஞ்சிய குரல பைம் தாள் செந்தினை – நற் 376/1,2
முறம் போன்ற செவியினைக் கொண்ட யானையின் நீண்ட கையினைப் போல, பருத்து வளர்ந்து
தலைசாய்த்த கதிர்களைக் கொண்ட பசிய தாள்களைக் கொண்ட செந்தினையை
|
தடைஇய |
தடைஇய – (வி.எ/பெ.எ) தடவிய என்பதன் திரிபு, பருத்து வளர்ந்த, திரண்ட, being rotund
அம் பணை தடைஇய மென் தோள் முகிழ் முலை – நெடு 149
அழகான மூங்கில் (போலத்)பருத்து வளர்ந்த மெல்லிய தோளினையும், (மொட்டுப்போல்)குவிந்த முலை
தேம் முதிர் சிலம்பில் தடைஇய
வேய் மருள் பணை தோள் அழியலள்-மன்னே – நற் 188/8,9
தேன் மிக்க மலைச்சரிவில் பருத்து வளர்ந்த
மூங்கில் போன்ற பருத்த தோள்கள் மெலிந்துபோகுமாறு ஆகமாட்டாள்.
|
தட்கு |
தட்கு – (வி) 1. தங்கு, remain,stay
2. தளையிடு, கட்டு, bind, enchain
1.
செற்ற தெவ்வர் கலங்க தலைச்சென்று
அஞ்சுவர தட்கும் அணங்கு உடை துப்பின் – மது 139,140
(தம்மால்)செறப்பட்ட பகைவர் மனம் கலங்கும்படி அவரிடம் சென்று
(அவர்க்கு)அச்சம் தோன்றத் தங்கும், வருத்தத்தை உடைய வலிமையினையும்,
2.
ஓடி உய்தலும் கூடுமன்
ஒக்கல் வாழ்க்கை தட்கும் மா காலே – புறம் 193/3,4
நன்னெறிக்கண்ணே ஒழுகிப் பிழைக்கவும் கூடும்
சுற்றத்தோடு கூடி வாழும் இல்வாழ்க்கை காலைத் தளையிட்டு நிற்கும்.
|
தட்டம் |
தட்டம் – (பெ) கச்சு, broad tape
புலி பொறி கொண்ட பூ கேழ் தட்டத்து
தகடு கண் புதைய கொளீஇ துகள் தீர்ந்து – நெடு 126,127
புலியின் உருவம் பொறிக்கப்பட்ட பொலிவு பெற்ற நிறத்தையுடைய தட்டம் போன்ற
தகடுகளால் நடுவுவெளியான இடம் மறையும்படி கோக்கப்பட்டு, குற்றமற்று
|
தட்டு |
தட்டு – (வி) தளை, கட்டு, பிணி, bind, entangle
நிலன் நெளி மருங்கில் நீர்நிலை பெருக
தட்டோர் அம்ம இவண் தட்டோரே – புறம் 18/28,29
நிலம் குழிந்தவிடத்தில் நீர்நிலை பெருகும்வண்ணம் நீரினைப் பிணித்துவைத்தோர்
தாம் செல்லும் உலகத்துச் செல்வம் முதலாகியவற்றை இவ்வுலகத்துத் தம் பேரோடு பிணித்துக்கொண்டவராவர்.
|
தட்டை |
தட்டை – (பெ) 1. சோளம், கரும்பு, மூங்கில் போன்றவற்றின் நடுப்பகுதி, stalk, stubble
2. கிளிகடிகருவி, A mechanism made of split bamboo for scaring away parrots from grain fields
3. கரடிகை என்னும் பறை,
1.
கண் விடுபு உடையூஉ தட்டை கவின் அழிந்து – மது 305
முங்கிலின் கணுக்கள் திறக்கப்பட்டு உடைவதனால் தட்டை அழகு அழிந்து
2.
ஒலி கழை தட்டை புடையுநர் புனம்-தொறும்
கிளி கடி மகளிர் விளி படு பூசல் – மலை 328,329
ஒலிக்கும் மூங்கில் தட்டைகளை மீண்டும் மீண்டும் அடிப்பவராய், புனங்கள்தோறும்
கிளியை விரட்டுகின்ற பெண்களின் கூச்சலால் எழும் ஆரவாரமும்;
3.
இட்டு வாய் சுனைய பகு வாய் தேரை
தட்டை_பறையின் கறங்கும் நாடன் – குறு 193/2,3
சிறிய வாயையுடைய சுனையில் உள்ள பிளந்த வாயையுடைய தேரைகள்
தட்டைப் பறையைப் போல ஒலிக்கும் நாட்டையுடைய தலைவன்
|
தட்ப |
தட்ப – (வி.எ) 1. தடுக்க, to stop, to prevent
2. தணிய, be alleviated
1.
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்
யானே பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி – நற் 94/2,3
அன்பான மொழிகளைக் கூறுதல் ஆண்மகனுக்குச் சிறந்த பண்பாகும்;
நானோ எனது பெண்மையுணர்வு தடுக்க அந்நோயை வெளிப்படுத்தாதவாறு தாங்குகிறேன்;
2.
ஒளி பூத்த நுதலாரோடு ஓர் அணி பொலிந்த நின்
களி தட்ப வந்த இ கவின் காண இயைந்ததை – கலி 66/19,20
ஒளிவீசும் நெற்றியினராகிய பரத்தையருடன் ஒரே ஆடையில் மகிழ்ந்திருந்த உன்
காம வேட்கை சிறிது தணிய, இங்கு வந்த காட்சியின் அழகைக் காண் நேர்ந்தது.
|
தண |
தண – (வி) அகன்றுசெல், நீங்கு, go away, depart
மணக்கும்_கால் மலர் அன்ன தகையவாய் சிறிது நீர்
தணக்கும்-கால் கலுழ்பு ஆனா கண் எனவும் உள அன்றோ – கலி 25/13,14
ஒன்றாகக் கூடியிருக்கும்போது மலர் போன்ற மலர்ச்சியுள்ளதாய் இருந்துவிட்டு, சிறிதளவு நீர்
விலகியிருக்கும்போது கலங்கி அழுவதை நிறுத்தாத கண்கள் என்றும் இருக்கின்றனவே!
|
தணக்கம் |
தணக்கம் – (பெ) 1. நுணா என்னும் கொடி,பூ, Small ach root, Morinda umbellata
2. தணக்கு, helicopter tree, Gyrocarpus americanus Jacq
பாங்கர் மராஅம் பல் பூ தணக்கம் – குறி 85
ஓமை, மரவம்பூ, பல பூக்களையுடைய தணக்கம்பூ
|
தண் |
தண் – (பெ) குளிர்ச்சி, coolness
தண் பணை தழீஇய தளரா இருக்கை – பொரு 169
தண் பணை தழீஇய தளரா இருக்கை – சிறு 78
தண் பணை தழீஇய தளரா இருக்கை – பெரும் 242
குளிர்ந்த வயலையுடைய மருத நிலம் சூழ்ந்த சோர்வுறாத குடியிருப்புகளில்
|
தண்டம் |
தண்டம் – (பெ) 1. படை, army
2. அனாவசியமாய் ஏற்படும் இழப்பு, Loss; useless expense;
3. தண்டனை, punishment
1.
தண்டம் இரண்டும் தலைஇ தாக்கி நின்றவை – பரி 10/60
படைகள் இரண்டும் ஒருவரையொருவர் தாக்கி நின்றவை
2.
தன் மார்பும் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும் – பரி 20/64
தன்னுடைய தலைவனின் மார்பை உனக்கு வீணாகத் தந்திருக்கும் முத்துமாலையையுடைய இவளின் மார்பும்
3.
வந்து அடி பொருந்தி முந்தை நிற்பின்
தண்டமும் தணிதி நீ பண்டையின் பெரிதே – புறம் 10/5,6
வந்து நின் பாதத்தை அடைந்து முன்னே நிற்பாராயின்
அவரைச் செய்யும் தண்டமும் தணிவை நீ, முன்னைக்காட்டிலும் பெரிதான அருளினால்
|
தண்டலை |
தண்டலை – (பெ) சோலை, grove
பல் வேறு பூ திரள் தண்டலை சுற்றி – மது 341
பலவாய் வேறுபட்ட பூத்திரளையுடைய பூந்தோட்டங்கள் சூழ்ந்த
|
தண்டா |
தண்டா – (பெ.எ) 1. குறைவுபடாத, non decreasing, non diminishing
2. கெடாத, அழியாத, non perishing
3. தடைப்படாத, without hindrance
1.
தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி – பெரும் 460
குறையாத கொடையினையுடைய நின் பெரிய பெயரைப் புகழ்ந்துசொல்லி
2.
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா
வண்டு ஓர் அன்ன அவன் தண்டா காட்சி
கண்டும் கழல் தொடி வலித்த என்
பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே – நற் 25/9-12
தேனை உண்ணும் வேட்கையினால் மலரின் தன்மையை ஆராயாமல் போய் விழுகின்ற
வண்டின் ஒரு தன்மையை ஒத்த அவனது கெடாத தோற்றப்பொலிவைக்
கண்டும் கழன்றுபோன வளையல்களை மீண்டும் செறித்துக்கொண்ட எனது
பண்பற்ற செய்கை என்னில் நினைப்பாகவே இருக்கின்றது.
3.
நெடு மதில் நிரை ஞாயில்
அம்பு உமிழ் அயில் அருப்பம்
தண்டாது தலைச்சென்று – மது 66-68
நெடிய மதிலினையும், வரிசையான ஞாயில்களையும்,
அம்பு விடுகின்ற, வேல் வீசுகின்ற அரண்களையும்,
தடைப்படாமல் மேற்சென்று
|
தண்டு |
தண்டு – 1. (வி) 1. வற்புறுத்து, insist on
2. விருப்பம்கொள், be desirous
3. இறையாகப்பெறு, வசூல்செய், get as share to the king, collect as tax
– 2. (பெ) 1. தடி, staff. stick
2. குறுந்தடி, club
3. பல்லக்கு, காவடி ஆகியவற்றின் கழி, pole of a palanquin, etc.,
4. இலை,பூ ஆகியவற்றின் காம்பு, stalk, stem
1.1
துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின்
பராஅரை வேவை பருகு என தண்டி – பொரு 103,104
அறுகம் புல் கட்டுக்களை கவ்வித்தின்ற செம்மறிக்கிடாயின் அழகிய புழுக்கப்பட்ட(இறைச்சியின்)
பெரிய (மேல்)தொடை நெகிழ வெந்ததனைத் ‘உண்பாயாக’ என்று வற்புறுத்தி,
1.2
தண்டி தண்டின் தாய் செல்வாரும் – பரி 10/100
விருப்பத்துடன் வாழைத்தண்டுகளைத் தழுவிக்கொண்டு தாவித்தாவிச் செல்வார் சிலர்;
1.3
தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ – மலை 425
தசைகளையும் கிழங்குகளையும் இறையாகப்பெற்றவராய் (அவற்றை உமக்குக்)கொடுத்து
2.1
விழு தண்டு ஊன்றிய மழு தின் வன் கை
——————-
ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன் – பெரும் 170-175
விழுமிய தடியை ஊன்றின கோடரித் தழும்பிருந்த வலிய கையினையும்,
————————-
ஒன்றாய்ப் பொருந்தின உடையினையும் உடைய, கூழை உண்ணுகிற இடைமகன்
2.2
தண்டு கால் ஆக தளர்தல் ஓம்பி – மலை 371
(முரசை அடிக்கும்)குறுந்தடியை (மூன்றாவது)காலாக (ஊன்றிக்)கொண்டு, தடுமாறுதலினின்றும் (உம்மைக்)காத்து,
2.3
சகடமும் தண்டு ஆர் சிவிகையும் பண்ணி – பரி 10/17
வண்டிகள், தண்டு மரங்களோடு கூடிய பல்லக்குகள் ஆகியவற்றைத் தயார்செய்துகொண்டு
2.4
குவளை பசும் தண்டு கொண்டு – பரி 11/102
குவளையின் இளம் தண்டினைக் கையில் கொண்டு
|
தண்ணடை |
தண்ணடை – (பெ) 1. தண் அடை, குளிர்ந்த தழை, green leaves
2. மருதநிலம், agricultural tract
3. மருதநிலத்து ஊர்கள், villages in an agricultural tract
1.
மலர் தலை காரான் அகற்றிய தண்ணடை
ஒண் தொடி மகளிர் இழை அணி கூட்டும் – நற் 391/4,5
பருத்த தலையைக் கொண்ட காராம்பசு தின்னாதுவிட்ட குளிர்ந்த தழைகளை
ஒளிரும் வளையணிந்த மகளிர் தம் அணிகலன்களுக்கு அழகுண்டாகச் சேர்த்து அணியும்
2.
தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில் – அகம் 84/14
மருதநிலம் சூழ்ந்த கொடிகள் அசையும் அரிய எயிலை
3.
பிணங்கு கதிர்
அலமரும் கழனி தண்ணடை ஒழிய – புறம் 285/14,15
கதிர்கள் பின்னிக்கொண்டு அசையும் கழனிகளையுடைய மருதநிலத்து ஊர்களை இரவலர்களுக்குக் கொடுத்து ஒழிந்ததைனால்
|
தண்ணம் |
தண்ணம் – (பெ) குளிர்ச்சி, coolness
தண்ணம் துறைவன் சாயல் மார்பே – நற் 327/9
குளிர்ந்த துறைகளைச் சேர்ந்தவனது மென்மையான மார்பு
|
தண்ணுமை |
தண்ணுமை – (பெ) மிருதங்கம் போன்ற ஒரு தோற்கருவி, a kind of drum
1.
தோலை மடித்துப்போர்த்த வாயை உடையது.
மடி வாய் தண்ணுமை நடுவண் சிலைப்ப – பெரும் 144
(தோலை)மடித்துப் போர்த்த வாயையுடைய மத்தளம் (தங்களுக்கு)நடுவில் முழங்க
2.
நெல் அறுவடையின்போது பறவைகளையும், விலங்குகளையும் விரட்ட ஒலிக்கப்படும்.
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
செம் கண் எருமை இனம் பிரி ஒருத்தல் – மலை 471,472
வெண்ணெல்லை அறுப்போரின் முழவு(எழுப்பும் ஓசை)க்குப் பயந்து,
சிவந்த கண்களையுடைய எருமைகளின் கூட்டத்தினைப் பிரிந்த (ஒற்றை)எருமைக்கடா
3.
இதன் ஒலி தழங்கு குரல் எனப்படும், ஒன்றுகூடிய மேகங்கள் உறுமுகின்ற சத்தத்தை ஒக்கும்
மடி வாய் தண்ணுமை தழங்கு குரல் கேட்ட
எருவை சேவல் கிளை_வயின் பெயரும் – நற் 298/3,4
மடித்துவிட்ட வாயையுடைய தண்ணுமைப் பறையின் முழங்குகின்ற ஓசையைக் கேட்ட
பருந்தின் சேவல் தன் சொந்தங்களை நோக்கிப் பறந்து செல்லும்.
கழனி உழவர் தண்ணுமை இசைப்பின்
பழன மஞ்ஞை மழை செத்து ஆலும் – – பதி 90/41,42
வயல்வெளிகளிலிருக்கும் உழவர்கள் தண்ணுமையை முழக்கினால்
நீர்நிலைகளில் வாழும் மயில்கள் மேகங்களின் முழக்கம் என்று எண்ணி ஆடுகின்ற,
4.
இதனுடைய வாய் பெரிதும் அகலமாக இருக்கும். இதன் ஒலி அருவிநீர் விழுவதுபோன்று இருக்கும்.
பேழ் வாய் தண்ணுமை இடம் தொட்டு அன்ன
அருவி இழிதரும் பெரு வரை நாடன் – நற் 347/6,7
அகன்ற வாயையுடைய தண்ணுமைப் பறையின் முகப்பைத் தட்டுவது போன்று
அருவிகள் ஒலித்துக்கொண்டு இறங்கும் பெரிய மலைகளையுடைய நாட்டினன்
5.
ஊர் ஊராகச் செல்லும் வணிகர் கூட்டம், ஓர் ஊருக்குச் சென்றால், முதலில் இதனை ஒலிப்பர்.
சாத்து வந்து இறுத்து என
வளை அணி நெடு வேல் ஏந்தி
மிளை வந்து பெயரும் தண்ணுமை குரலே – குறு 390/3-5
வணிகர்கூட்டம் வந்து சேர்ந்ததாக
வளையை அணிந்த நெடிய வேலை ஏந்தி,
காவற்காட்டில் வந்து மீள்கின்ற தண்ணுமை என்னும் முரசொலி
6
இது கையினால் அடித்து முழக்கப்படும்.
தூ கணை கிழித்த மா கண் தண்ணுமை
கைவல் இளையர் கை அலை அழுங்க – பதி 51/33,34
உன் வலிமையான அம்புகள் பாய்ந்து கிழித்த, பகைவரின் கரிய கண்ணையுடைய தண்ணுமையை,
இசைக்கும் தொழிலில் வல்ல இளையர்கள் கையால் தட்டி இசைப்பதைத் தவிர்க்க,
7.
இது தோலால் போர்த்தப்பட்டிருக்கும். போரின் தொடக்கத்தைக் குறிக்க இது ஒலிக்கப்படும்.
போர்ப்பு_உறு தண்ணுமை ஆர்ப்பு எழுந்து நுவல – பதி 84/15
தோலால் போர்க்கப்பட்ட தண்ணுமையின் மிகுந்த ஓசை எழுந்து போரைத் தெரிவிக்க,
8.
திருமண வீட்டில் இதனை ஒலிப்பர்.
நெருநை
அடல் ஏற்று எருத்து இறுத்தார் கண்டும் மற்று இன்றும்
உடல் ஏறு கோள் சாற்றுவார்
ஆங்கு இனி
தண்ணுமை பாணி தளராது எழூஉக – கலி 102/30-34
இதற்கு முன்பும்
கொலைவெறியுள்ள காளையின் கழுத்தை அணைத்துக்கொண்டவர்களைக் கண்டிருக்கின்றனர்! இன்றும்
சீற்றங்கொண்ட காளையைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று பறை சாற்றுகின்றனரே!
அங்கே இப்பொழுது
மணம்செய்வதற்குத் தண்ணுமையில் தாளம் தவறாமல் எழுப்புவார்களாக,
9.
இதன் முகப்பு வாரினால் இழுத்துக்கட்டப்பட்டிருக்கும். பாலைநிலத்துக் கள்வர் ஊரில் உள்ள மாடுகளைத்
திருடிக்கொண்டு தமது ஊர் திரும்பிய பின்னர் இதனை ஒலித்து மகிழ்வர்.
வேட்ட கள்வர் விசி_உறு கடும் கண்
சே கோள் அறையும் தண்ணுமை – அகம் 63/17,18
வேட்டையாடும் கள்வரின், வாரினை இழுத்துக்கட்டிய கடிய கண்களையுடைய,
காளைகளைப் பிடிக்கும்போது அடிக்கும் பறையின் ஒலி
10.
பாலைநிலத்தில் அரண்களை எழுப்பிக்கொண்டு ஆறலைக் கள்வர் இதனை ஒலிப்பர்.
இதனைக் கேட்டு வழிச்செல்வோர் அஞ்சி நடுங்குவர்
கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின்
எழுந்த தண்ணுமை இடம் கண் பாணி
அரும் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென
குன்று சேர் கவலை இசைக்கும் அத்தம் – அகம் 87/7-10
கொடுமையையுடைய மறவரது கற்கள் பொருந்திய காட்டரண்களில்
எழுந்த தண்ணுமைப் பறையின் அகன்ற கண்ணிலிருந்து எழும் ஒலி
அரும் சுரம் செல்வோர்நெஞ்சு நடுக்குற ஒலிக்கும்
குன்றினைச் சேர்ந்த கவர்த்த நெறிகளையுடைய காட்டில்
11.
ஊருக்குப் பொதுவான மன்றத்தில் இது தொங்கவிடப்பட்டிருக்கும்.
பொதுவில் தூங்கும் விசி_உறு தண்ணுமை
வளி பொரு தெண் கண் கேட்பின் – புறம் 89/7,8
பொதுமன்றத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் இழுத்துக்கட்டப்பட்ட தண்ணுமை
காற்று அடிப்பதால் எழுப்பும் தெளிந்த ஓசையையுடைய கண்ணின்கண் ஒலியைக்கேட்டால்
12.
இந்தத் தண்ணுமையை இயக்குபவர் புலையர் எனப்பட்டனர்.
மடி வாய் தண்ணுமை இழிசினன் குரலே – புறம் 289/10
தோலை மடித்துப் போர்த்த வாயையுடைய தண்ணுமையை ஒலிக்கும் புலையனின் குரல்
|
தண்மை |
தண்மை – (பெ) குளிர்ச்சி, coolness
ஆடல் மகளிர் பாடல் கொள புணர்மார்
தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை
கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ – நெடு 67-69
ஆடல் மகளிர் (தாம் பாடுகின்ற)பாடலுக்குப் பொருந்த (யாழ்)நரம்பைக் கூட்டுதற்கு,
குளிர்ச்சியால் நிலைகுலைந்த இனிய குரலாகிய நரம்பை,
பெரிய எழுகின்ற முலையின் வெப்பத்தால் தடவி,
|
ததரல் |
ததரல் – (பெ) மரப்பட்டை, bark of a tree
களிறு சுவைத்திட்ட கோது உடை ததரல்
கல்லா உமணர்க்கு தீமூட்டு ஆகும் – அகம் 257/16,17
களிற்றியானை சுவைத்துப்போட்ட சக்கையாகிய மரப்பட்டைகள்
கல்லாத உப்பு வாணிகர்க்குத் தீமூட்டுவதற்கு ஆகும்.
|
ததர் |
ததர் – 1. (வி) செறிவுடன் இரு, be dense
2. (பெ) பூங்கொத்து, cluster, bunch
1.
குவி இணர் எருக்கின் ததர் பூ கண்ணி – அகம் 301/11
குவிந்த கொத்துக்களையுடைய எருக்கினது செறிவான பூக்களாலான கண்ணி
2.
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினை
ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல – சிறு 254,255
மழைத்துளியில் நனைந்த முருக்க மரத்தின் மிக்க உயரத்திற்கு வளர்ந்த நீண்ட கொம்பில்
பூங்கொத்து முறுக்கு நெகிழ்ந்த காட்சியைப் போல
|
ததை |
ததை – (வி) 1. அடர்த்தியாய் இரு, நெருக்கமாய் இரு, be dense, be crowded
2. சிதைவடை, உடைபடு, be broken, shattered
3. மிகு, நிறை, be plenty, abundant
1.
வெண் மணல் விரிந்த வீ ததை கானல் – குறு 386/1
வெள்ளை மணல் பரவிய மலர்கள் செறிந்துகிடக்கும் கடற்கரைச்சோலையில் உள்ள,
2.
மட நடை நாரை
பதைப்ப ததைந்த நெய்தல் – ஐங் 155/2,3
இளமையான நடையைக் கொண்ட நாரை
சிறகடித்து அங்குமிங்கும் பறந்துதிரிவதால் சிதைந்துபோன நெய்தல் மலர்
3.
ததைந்து செல் அருவியின் அலர் எழ – அகம் 303/7
மிக்குச் செல்லும் அருவியின் ஒலி போன்று அலராகி வெளிப்பட
|
தத்து |
தத்து – (வி) (தவளை போல்) தாவு, குதி, leap, hop (like a frog)
கை புனை குறும் தொடி தத்த பைபய
முத்த வார் மணல் பொன் கழங்கு ஆடும் – பெரும் 334,335
கையில் புனைந்த குறும் வளையல்கள் தாவிக்குதிக்க, மெல்ல மெல்ல
முத்தை ஒத்த வார்ந்த மணலில் பொன்னாற் செய்த கழங்கைக் கொண்டு விளையாடும்,
|
தனம் |
தனம் – (பெ) செல்வம், பொன், wealth, gold
தனம் தரு நன் கலம் சிதைய தாக்கும்
சிறு வெள் இறவின் குப்பை அன்ன – அகம் 152/7,8
பொன்னைக் கொண்டுவரும் நல்ல மரக்கலம் சிதையுமாறு தாக்குகின்ற
சிறிய வெள்ளிய இறாமீனின் தொகுதி போன்ற
|
தனாது |
தனாது – (பெ) தன்னுடையது, ones own
உறை துறந்து இருந்த புறவில் தனாது
செம்_கதிர்_செல்வன் தெறுதலின் மண் பக – நற் 164/1,2
மழையே முற்றிலும் இல்லாதிருந்த காட்டுப்பகுதியில், (அந்தப் பாலை நிலம்) தனக்குரிய
சிவந்த கதிர்களையுடைய செல்வனான ஞாயிறு சுட்டெரித்தலால், நிலம் பிளந்துபோக
|
தனித்தலை |
தனித்தலை – (பெ) தனியிடம், lonely place
வான் சோறு கொண்டு, தீம் பால் வேண்டும்,
முனித்தலைப் புதல்வர் தந்தை,
தனித்தலைப் பெரும் காடு முன்னிய பின்னே – புறம் 250/7-9
வெள்ளைச் சோற்றை உண்டு இனிய பாலைக் விரும்பிய
குடுமித் தலையையுடைய புதல்வர்களின் தந்தை
தனியிடமாகிய சுடுகாட்டை அடைந்த பின்பு
|
தன்முன் |
தன்முன் – (பெ) தனக்கு முன்னவன், அண்ணன், elder brother
பூ விரி கச்சை புகழோன் தன்முன்
பனி_வரை மார்பன் பயந்த நுண் பொருள் – சிறு 239,240
பூத்தொழில் பரந்த கச்சையினையுடைய புகழ்வாய்ந்தவன்(அருச்சுனன்) அண்ணனும்,
பனி மலை (இமயம்)(போன்ற)மார்பையுடையவனும் ஆகிய வீமசேனனின் நுணுகிய பொருளையுடைய
|
தபு |
தபு – (வி) 1. கெடு(தல்), அழிபடு(தல்), perish, become extinct
2. கெடு(த்தல்), destroy, ruin
1..
சேயரும் நணியரும் நலன் நயந்து வந்த
இளம் பல் செல்வர் வளம் தப வாங்கி – மது 571,572
தொலைவிலுள்ளாரும் அருகிலுள்ளாரும் வடிவழகை விரும்பி வந்த
இளவயதினராகிய பல செல்வந்தரை (அவருடைய)செல்வம்(எல்லாம்) கெடும்படியாகக் கவர்ந்துகொண்டு,
2.
உள்ளம் அழிய ஊக்குநர் மிடல் தபுத்து
உள்ளுநர் பனிக்கும் பாழ் ஆயினவே – பதி 13/18,19
நெஞ்சம் நிலைகுலைய, துணிந்து செல்வோரின் மனவலிமையைக் கெடுத்து,
நினைத்துப்பார்ப்போர் நெஞ்சம் நடுங்கும் பாழிடங்கள் ஆயின;
|
தபுதி |
தபுதி – (பெ) கேடு, அழிவு, ruin, death
தன் அகம் புக்க குறு நடை புறவின்
தபுதி அஞ்சி சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக – புறம் 43/6-8
தன் இடத்தை அடைந்த குறிய நடையை உடைய புறாவினது
அழிவிற்கு அஞ்சி துலாத்தலையுள் புக்க
வரையாத வண்மையைஉடைய வலியோனது மரபினுள்ளாய்
|
தப்பல் |
தப்பல் – (பெ) தவறு, குற்றம், fault, mistake
மை பட்டு அன்ன மா முக முசு கலை
ஆற்ற பாயா தப்பல் ஏற்ற
கோட்டொடு போகி ஆங்கு – குறு 121/2-4
மையை ஊற்றியதைப் போன்ற கரிய முகத்தைக்கொண்ட ஆண்குரங்கு
தாங்கக் கூடிய கிளையில் தாவாத தவறு, அதனை ஏற்றுக்கொண்டு முறிந்த
கிளைக்கு ஆகினாற்போன்று
|
தமனியம் |
தமனியம் – (பெ) பொன், gold
தமனியம் வளைஇய தாவு இல் விளங்கு இழை – மது 704
பொன்னின் ஒளி சூழ்ந்து குற்றமற்றுத் தகதகக்கும் பேரணிகலன்களால்
|
தமர் |
தமர் – (பெ) சுற்றத்தார், தமக்கு வேண்டியோர், relations, well-wishers
தாய் உடை நெடு நகர் தமர் பாராட்ட – அகம் 310/7
தாய்மார் உள்ள பெரிய மனையில் சுற்றத்தார் பாராட்ட
பகைவரும்,
தம் திறை கொடுத்து தமர் ஆயினரே – அகம் 44/1,2
பகைவரும்
தாம் கொடுக்கவேண்டிய கப்பத்தைச் செலுத்தி வேண்டியவர்கள் ஆகிவிட்டனர்;
|
தமாலம் |
தமாலம் – (பெ) பச்சிலை, நறைக்கொடி, a fragrant creeper
நெடும் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த
பசும் கேழ் இலைய நறும் கொடி தமாலம்
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும் – நற் 292/1-3
நெடிதுயர்ந்த குளிர்ச்சியான சந்தனமரத்தின் ஆடுகின்ற கிளைகளில் சுற்றிக்கொண்டிருக்கும்
பசுமை நிறங்கொண்ட இலைகளையுடைய மணமிக்க தமாலக்கொடியை
இனிய தேனை எடுக்கும் குறவர்கள் வளைத்து முறிக்கும்
|
தமி |
தமி – 1. (வி) தனித்திரு, be lonely
2. (பெ) தனிமை, loneliness
1.
நீல் நிற புன்னை தமி ஒண் கைதை – நற் 163/8
கருநிறப் புன்னையின் பக்கத்தில் தனித்திருக்கும் ஒளிபொருந்திய தாழை மடல்
2.
மடை மாண் செப்பில் தமிய வைகிய – குறு 9/2
அழகிய பொருத்துவாய் அமைந்த செம்பினுள் தனிமையுடன் இருக்கும்
|
தமிழ் |
தமிழ் – (பெ) 1. தமிழ் மொழி, the language Tamil
2. தமிழர், the Tamil people
1.
தெரி மாண் தமிழ் மும்மை தென்னம்பொருப்பன் – பரி 26/1
ஆராய்ந்தெடுத்த மாட்சிமைக்குரிய தமிழ் மூன்றினையும் கொண்ட தெற்குமலைக்குத் தலைவனான பாண்டியனின்
2.
சிறியிலை உழிஞை தெரியல் சூடி
கொண்டி மிகைபட தண் தமிழ் செறித்து – பதி 63/8,9
சிறிய இலைகளையுடைய உழிஞைப்பூ மாலையைச் சூடிக்கொண்டு
பகைவர் நாட்டுக் கொள்ளைப்பொருள் மிகுந்திருக்க, அருளுள்ளம் கொண்ட தமிழ்வீரர்களை நிறையக் கொண்டு
|
தம் |
தம் – 1. (வி) தருக, கொணர்க, bring, take in
2. (சு.பெ) தாம் என்பதன் முதற்குறை, his, her, their
1.
மா தாங்கு எறுழ் தோள் மறவர் தம்-மின் – மது 729
குதிரையைச் செலுத்தும் வலியையுடைய தோளினையும் உடைய மறவரைக் கொணர்மின்
2.
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே – நற் 32/8,9
முதலில் ஆராய்ந்து நட்புச் செய்வரே அன்றி,
நட்புச் செய்தபின் அவரைப்பற்றி ஆராயமாட்டார், தம்மைச் சார்ந்தவரிடத்து
|
தம்பலம் |
தம்பலம் – (பெ) வெற்றிலைப்பாக்கு, Betel with areca-nut;
வை காண் முது பகட்டின் பக்கத்தின் போகாது
தையால் தம்பலம் தின்றியோ என்று தன்
பக்கு அழித்து கொண்டீ என தரலும் – கலி 65/12-14
வைக்கோலைப் பார்த்த வயதான மாட்டைப் போல என் பக்கத்திலிருந்து போகாமல்
பெண்ணே, வெற்றிலைபாக்கு போடுகின்றாயோ? என்று தன்
பையினைத் திறந்து எடுத்துக்கொள் என்று தந்தான்;
|
தயக்கு |
தயக்கு – (பெ) தளர்வு, தொய்வு, slackness,looseness
நுண் வினை கச்சை தயக்கு அற கட்டி – குறி 125
நுண்ணிய வேலைப்பாடு கொண்ட கச்சை(க் கட்டின சேலை) தொய்வு இன்றிக் கட்டி,
|
தயங்கு |
தயங்கு – (வி) 1. முன்னும் பின்னும் அசை, move to and fro, sway
2. மனமழி, வாடு, loose heart, be dispirited
3. ஒளிவிடு, ஒளிர், shine, glitter
1.
களிற்று தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி – சிறு 123
யானை(யைச் செலுத்துதலால் உண்டான) தழும்பு கிடந்த, வீரக்கழல் அலையாடும், திருத்தமான அடியினையும்,
2.
தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து – பதி 79/15
தும்பைப் போரின் தன்மை பொருந்திய போரைச் செய்ததால் உடல் சோர்ந்து ஓய்ந்திருக்க,
3.
தயங்கு இரும் பித்தை பொலிய சூடி – புறம் 371/4
ஒளிர்கின்ற தலைமயிர் அழகுறச் சூடிக்கொண்டு
|
தரவு |
தரவு – (பெ) தருகை, giving
வெருவரு செலவின் வெகுளி வேழம்
தரவு_இடை தங்கல் ஓவு இலனே – பொரு 172,173
அச்சம் தரும் ஓட்டத்தையும், சினத்தையும் உடைய யானைகளை
(இவன் பிறர்க்குக் கொடை)தரும்போது(அதில்)நிலைகொள்ளலில் ஒழிதல் இலன்
|
தராய் |
தராய் – (பெ) மேட்டுநிலம், elevated land
ஞெண்டு ஆடு செறுவில் தராய்க்கண் வைத்த
விலங்கல் அன்ன போர் முதல் தொலைஇ – மலை 460,461
நண்டுகள் ஓடித்திரியும் வயல்களின்(அருகே) களத்துமேட்டில் வைத்த, 460
மலை போன்ற (நெற்கதிர்)போர்களின் அடிப்பாகத்தை இழுத்து
|
தரீஇ |
தரீஇ – (வி.எ) தந்து என்பதன் திரிபு, giving
வாள் முக பாண்டில் வலவனொடு தரீஇ
அன்றே விடுக்கும் அவன் பரிசில் மென் தோள் – சிறு 260,261
ஒளியுள்ள முகத்தினையும் உடைய காளையை (அதனைச் செலுத்தும்)பாகனோடு, கொடுத்து,
அன்றே விடுப்பான் அவனுடைய பரிசில்
|
தருக்கு |
தருக்கு – 1. (வி) 1. இறுமாப்புக்கொள், be proud, vain
2. வெற்றிப்பெருமிதம் கொள், be exulted
2. (பெ) செருக்கு, இறுமாப்பு, arrogance, haughtiness
1.1.
தருக்கேம் பெரும நின் நல்கல் விருப்பு_உற்று
தாழ்ந்தாய் போல் வந்து தகவு இல செய்யாது – கலி 69/21,22
இறுமாப்புக்கொள்ளமாட்டோம், பெருமானே! உன் அன்பினால் விருப்பமுற்றுத்
தாழ்ந்தவன் போல் வந்து தகுதியில்லாதவற்றைச் செய்யாதே!
1.2.
தருக்கிய பிற ஆக தன் இலள் இவள் என
செருக்கினால் வந்து ஈங்கு சொல் உகுத்தீவாயோ – கலி 69/17,18
உன்னுடைய வெற்றிப் பெருமிதம் இவ்வாறு வேறு விதமாக இருக்க, இவள் தனக்கெனப் பெருமிதம் இல்லாதவள் என்று
பெருமையினால் வந்து இங்கு பேசிக்கொண்டிருக்கிறாயே!
2.
குரூஉ கண் கொலை ஏறு கொண்டேன் யான் என்னும்
தருக்கு அன்றோ ஆயர்_மகன் – கலி 104/71,72
சிவந்த கண்களைக் கொண்ட கொலைக்குணமுள்ள காளையை அடக்கிவிட்டேன் நான் என்னும்
செருக்கினால் அன்றோ அந்த ஆயர்மகன்?
|
தரூஉ |
தரூஉ – (வி.எ) தந்து என்பதன் திரிபு
குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து – மது 520
சிறியனவும் பெரியனவுமாகிய மடிப்புடைவைகளைக் கொண்டுவந்து விரித்து,
|
தறி |
தறி – (பெ) 1. நடுகழி, கட்டுத்தறி, stake, short wooden pole planted
2. முளைக்கோல், peg
1.
நெடும் தாம்பு தொடுத்த குறும் தறி முன்றில்
கொடு முக துருவையொடு வெள்ளை சேக்கும் – பெரும் 152,153
நெடிய தாம்புகள் கட்டப்பட்ட குறிய முளைகளையும் உடைய முற்றத்தில்,
வளைந்த முகத்தையுடைய செம்மறியாட்டுடன் வெள்ளாடும் கிடக்கும்
2.
செம் கேழ் வட்டம் சுருக்கி கொடும் தறி
சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க – நெடு 58,59
சிவந்த நிறத்தையுடைய விசிறி (மூடிச்)சுருக்கிடப்பட்டு, வளைந்த முளைக்கோலில்,
சிலந்தியின் வெள்ளிய நூலால் சூழப்பட்டனவாய் தொங்கிக்கொண்டிருக்க
|
தறுகணாளர் |
தறுகணாளர் – (பெ) அஞ்சாமையுடைய வீரர், valiant soldiers
செறி சுரை வெள் வேல் மழவர் தாங்கிய
தறுகணாளர் நல் இசை நிறும்-மார் – அகம் 269/4,5
திணிந்த சுரையையுடைய வெள்ளிய வேலையுடைய வெட்சி வீரரைத் தடுத்துப் பொருதுபட்ட
அஞ்சாமையையுடைய கரந்தை வீரரது நல்ல புகழை நிலைநிறுத்துமாறு
|
தறுகண் |
தறுகண் – (பெ) 1. கொல்லுதல், killing
2. அஞ்சாமை, fearlessness
1.
தறுகண் பூட்கை தயங்கு மணி மருங்கின்
சிறு கண் யானையொடு பெரும் தேர் எய்தி – சிறு 141,142
கடுகக் கொல்லுதலை மேற்கோளாகக் கொண்டதும், அலையாடும் மணியை உடைய பக்கத்தினையும்
சிறிய கண்ணையும் உடைய யானையுடன் பெரிய தேரையும் பெற்று
2.
மென் தினை மேய்ந்த தறுகண் பன்றி – ஐங் 261/1
மென்மையான தினைப் பயிரை மேய்ந்த எதற்கும் அஞ்சாத காட்டுப்பன்றி
|
தறை |
தறை – (வி) தட்டையாகு, become flat, be flattened
தீர தறைந்த தலையும் தன் கம்பலும் – கலி 65/6
முற்றிலும் மொட்டையான தலையும், மேலே பொத்திய துணியும் உடையவனாய்
|
தலை |
தலை – 1. (வி) 1. மழை பெய், rain
2. சேர், கூடு, join, unite
2. (வி.அ) அத்துடன், in addition to, besides
3. (பெ) 1. சிரம், head
2. முதல், origin, beginning
3. இடம், place
4. நுனி, முனை, end, tip
5. உச்சி, மேற்பரப்பு, top
1.1.
சிறு பல் கருவித்து ஆகி வலன் ஏர்பு
பெரும் பெயல் தலைக புனனே – நற் 328/6,7
சிறிய பலவான மின்னல், இடி போன்றவற்றைக் கொண்டு வலமாக ஏறி
பெரும் மழை பெய்வதாக, இங்கே
1.2
வண்டல் ஆயமொடு உண்துறை தலைஇ
புனல் ஆடு மகளிர் இட்ட பொலம் குழை – பெரும் 311,312
(சிறு வீடு கட்டும்)விளையாட்டுடைய தோழியருடன் நீருண்ணும் துறையில் கூடி
நீராடுகின்ற மகளிர் (நீரில்)நழுவவிட்டுச்சென்ற பொன்னாற் செய்த மகரக்குழையினை
2.
தளி பொழி கானம் தலை தவ பலவே – மலை 385
மழைத்துளிகள் நிறைய விழும் காடுகளும் கூட(அத்துடன்)மிகப் பலவாம்
3.1.
கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை
ஒண் தொடி தட கையின் ஏந்தி – திரு 53,54
கண்களைத் தோண்டி உண்ணப்பட்ட மிக்க முடை நாற்றத்தையுடைய கரிய தலையை
ஒள்ளிய தொடியையுடைய பெரிய கையில் ஏந்தி
3.2.
தலை பெயல் தலைஇய தண் நறும் கானத்து – திரு 9
முதல்மழை பொழிந்த தண்ணிய நறிய காட்டில்
3.3.
அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர் – பொரு 1
இடையறாத (செல்வ)வருவாயினையுடைய அகன்ற இடத்தையுடைய பெரிய ஊர்களிடத்து
3.4.
வேல் தலை அன்ன வை நுதி நெடும் தகர்
ஈத்து இலை வேய்ந்த எய் புற குரம்பை – பெரும் 87,88
வேலின் முனையைப் போன்ற கூர்மையான முனையைக்கொண்ட, நெடிய மேட்டில் உள்ள
ஈந்தினுடைய இலையால் வேயப்பட்ட எய்ப்பன்றியின் முதுகு போலும் புறத்தினையுடைய குடிலின்கண்,
3.5.
இயங்கு புனல் கொழித்த வெண் தலை குவவு மணல் – மது 336
ஓடுகின்ற நீர் கொழித்துக்கொணர்ந்த வெள்ளிய மேற்பரப்பையுடைய திரண்ட மணலையுடைய
|
தலைக்கூடு |
தலைக்கூடு – (வி) ஒன்றுசேர், assemble, come together
முன் பகல் தலைக்கூடி நன் பகல் அவள் நீத்து
பின்பகல் பிறர் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய் – கலி 74/10,11
முற்பகலில் ஒருத்தியிடம் சேர்ந்திருந்து, உச்சிவேளையில் அவளை விட்டுப் பிரிந்து
பிற்பகலில் வேறொருத்தியை நாடிச் செல்லும் உன் நெஞ்சமும் பைத்தியம்பிடித்தது;
|
தலைக்கை |
தலைக்கை தா – (வி) அன்பு மிகுதியால் கையால் தழுவு, clasp a person in the arms with exceeding love
எல் வளை மகளிர் தலைக்கை தரூஉந்து – புறம் 24/9
விளங்கிய வளையையுடைய மகளிர்க்கு முதற்கை கொடுக்கும் (அவர்களை இறுகத் தழுவும்).
|
தலைக்கொள் |
தலைக்கொள் – (வி) 1. கைப்பற்று, capture, seize
2. கெடு,அழி, destroy
3. மேற்கொள், observe, undertake
4. தொடங்கு, commence
1.
மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில்
கரும் கண் எயிற்றி காதல் மகனொடு
கான இரும் பிடி கன்று தலைக்கொள்ளும் – புறம் 181/1-3
மன்றத்தின்கண் நிற்கும் விளாமரத்தின் மனையில் வீழ்ந்த விளாம்பழத்தைக்
கரிய கண்ணை உடைய மறத்தியின் காதல் மகனுடனே
காட்டில்வாழும் கரிய பிடியின் கன்று வந்து எடுக்கும்.
2.
ஒண் படை கடும் தார் முன்பு தலைக்கொள்-மார்
நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய – புறம் 15/14,15
ஒள்ளிய படைக்கலங்களையுடைய உன் விரைந்த தூசிப்படையின் வலிமையினைக் கெடுத்தல்வேண்டி
தம் ஆசை கொடுவர வந்தோர் அந்த ஆசை பின்னொழிய
3.
அதனால் அகறல் அறியா அணி இழை நல்லார்
இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர் இ – பரி 9/23,24
அதனால், தம் துணைவர் தம்மைவிட்டு அகன்றிருத்தலையே அறியாத அழகிய அணிகலன் அணிந்த மகளிர்
தம் கணவருடன் மனவேறுபாடு மேற்கொண்டு அவரை வருத்தும் தவறினைச் செய்யமாட்டார்;
4.
மலை பரந்து தலைக்கொண்டு முழங்கிய முழங்கு அழல்
மயங்கு அதர் மறுகலின் மலை தலைக்கொண்டு என
விசும்பு உற நிவந்து அழலும் விலங்கு அரு வெம் சுரம் – கலி 150/4-6
மலைகளில் பரவி அவ்விடங்களையெல்லாம் மேற்கொண்டு, முழங்கிய முழக்கத்தையுடைய தீக்கொழுந்துகள்
குழப்பத்தைத்தரும் குறுக்குநெடுக்கான வழிகளே பாதைகளாய்க் கொண்ட மலைகளைத் தொடக்கமாகக் கொண்டு
வானத்தில் தோயும்படியாக உயர்ந்து வெம்மையைச் செய்யும் கடப்பதற்கு அரிய கொடுமையான காட்டுவழியை
|
தலைக்கோல் |
தலைக்கோல் – (பெ) காவுமரம்,
மண் கனை முழவின் தலைக்கோல் கொண்டு – மலை 370
(தோலில் பூசப்பட்ட கரிய)சாந்து நிறைந்த முரசின் (அதை எடுத்துச்செல்லக் கட்டிய)காவுமரத்தைக் கையில் பிடித்து
|
தலைச்செல் |
தலைச்செல் – (வி) எதிர், take on, attack, confront
அம்பு உமிழ் அயில் அருப்பம்
தண்டாது தலைச்சென்று
கொண்டு நீங்கிய விழு சிறப்பின் – மது 67-69
அம்பு விடுகின்ற, வேல் வீசுகின்ற அரண்களையும்,
தடைப்படாமல் மேற்சென்று,
கைக்கொண்டு போந்த சீரிய தலைமையோடு
|
தலைத்தலை |
தலைத்தலை – 1. (வி.அ) 1. மேலும் மேலும், more and more
2. இடந்தோறும், in all places
– 2. (பெ) ஒவ்வொருவரும், every one
1.1
வருநர் வரையா செழும் பல் தாரம்
கொளக்கொள குறையாது தலைத்தலை சிறப்ப – பதி 88/26,27
– பெருங்கூட்டமான இரவலருக்கும் – வரையாது வழங்கும் செழுமையான, பலவாகிய செல்வம்,
அந்த இரவலர் வாங்கிக்கொண்டேயிருக்கவும் குறைந்துபோகாமல் மேலும் மேலும் மிகுந்திருக்க,
1.2.
தத்தம் துணையோடு ஒருங்கு உடன் ஆடும்
தத்து அரி கண்ணார் தலைத்தலை வருமே – பரி 16/9,10
தத்தம் காதல் துணைவரோடு ஒன்றுகூடி நீராடுகின்ற
செவ்வரியும், கருவரியும் படர்ந்த கண்களையுடைய மகளிர் நீர்த்துறைதோறும் வருவர்;
2.
மகிழ்நன்
மருது உயர்ந்து ஓங்கிய விரி பூ பெரும் துறை
பெண்டிரோடு ஆடும் என்ப தன்
தண் தார் அகலம் தலைத்தலை கொளவே – ஐங் 33/1-4
நம் தலைவன்
மருதமரங்கள் உயர்ந்து ஓங்கி வளர்ந்திருக்கும் மலர்ந்த பூக்களைக் கொண்ட பெரிய துறையில்
தன் காதற்பெண்டிரோடு நீராடி இன்புறுவன் என்று சொல்கின்றனர், அவனது
குளிர்ந்த மாலையணிந்த மார்பினை ஒவ்வொருவராகப் பற்றிக்கொண்டு
|
தலைத்தா |
தலைத்தா – (வி) உருவாக்கு, ஏற்படுத்து, விளைவி, create, cause to occur,
அகல் நகர் கொள்ளா அலர் தலைத்தந்து
பகல் முனி வெம் சுரம் உள்ளல் அறிந்தேன் – கலி 19/4,5
இந்தப் பெரிய ஊரே கொள்ளாத அளவுக்குப் பழிச்சொற்கள் உருவாகச் செய்து,
ஞாயிறு காயும் கொடிய காட்டுவழியில் செல்ல எண்ணிக்கொண்டிருப்பதை அறிந்தேன்,
|
தலைப்படு |
தலைப்படு – (வி) 1. காணப்படு, தோன்று, appear
2. சேர், ஐக்கியமாகு, unite
3. தொடங்கு, ஒன்றைச்செய்ய முற்படு, commence, set about
4. எதிர்ப்படு, meet, encounter
5. அடை, பெறு, obtain, attain
1.
சுரம் தலைப்பட்ட நெல்லி அம் பசும் காய் – குறு 209/1
பாலைநிலைத்து வழியில் காணப்படும் நெல்லியின் அழகிய பசிய காய்கள்
2.
மாய பொதுவன் உரைத்த உரை எல்லாம்
வாய் ஆவது ஆயின் தலைப்பட்டாம் – கலி 112/21,22
இந்த மாய்மால இடையன் சொன்ன சொல் எல்லாம்
உண்மையாக வாய்த்தால் இவனோடு சேர்ந்து வாழலாம்
3.
கண்ணியது உணரா அளவை ஒண்_நுதல்
வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன் – அகம் 5/6,7
(நாம்)எண்ணியதை முழுதும் உணர்வதற்கு முன்னரேயே, ஒள்நுதல் தலைவி,
(நாம்) பொருள்தேட முற்படுதலை ஏற்றுக்கொள்ளா எண்ணத்துடன் –
4.
அத்த கள்வர் ஆ தொழு அறுத்து என
பிற்படு பூசலின் வழிவழி ஓடி
மெய் தலைப்படுதல் செல்லேன் – அகம் 7/14-16
வழிப்பறிக் கள்வர்கள் பசுக்களைத் தொழுவை உடைத்துக் கொண்டுசென்றனராக,
அவர்களின் பின்னே துரத்திச்செல்வோர் ஆரவாரிப்பது போல, அங்குமிங்கும் ஓடி,
அவளின் மேனியை எதிர்ப்பட்டிலேன்
5.
தன் நலம் கரந்தாளை தலைப்படும் ஆறு எவன்-கொலோ – கலி 138/7
தன்னுடைய நலத்தை நான் காணாதவாறு மறைத்துக்கொண்டவளை அடைகின்ற வழிதான் எதுவோ?
|
தலைப்பாடு |
தலைப்பாடு – (பெ) தற்செயல் நிகழ்வு, chance occurrence
விறகு ஒய் மாக்கள் பொன் பெற்று அன்னது ஓர்
தலைப்பாடு அன்று அவன் ஈகை – புறம் 70/17,18
விறகைக் காட்டிலிருந்து ஊரகத்துக்குச் செலுத்தும் மாந்தர் அக் காட்டகத்து விழுப்பொருள் எடுத்துக்கொண்டாற் போல்வதொரு
எதிர்பாரா நிகழ்வு அன்று அவன் ஈகை
|
தலைப்பிரி |
தலைப்பிரி – (வி) நீங்கு, விலகு, பிரிந்துசெல், separate,part, depart
நனம் தலை கானத்து இனம் தலைப்பிரிந்த
புன்கண் மட மான் நேர்பட – குறு 272/3,4
பரந்த பரப்பையுடைய காட்டில், தன் இனத்தைவிட்டுப் பிரிந்த
துன்பத்தைக் கொண்ட இளையமான் நேரே இருக்க
|
தலைப்பெயர் |
தலைப்பெயர் – (வி) 1. மீளச்செய், திரும்பப்பெறு, redeem, get back
2. தலைகீழாகப்புரட்டு, turn upside down, invert
3. கழி, கடந்துபோ, pass by
1.
ஆடு தலை துருவின் தோடு தலைப்பெயர்க்கும்
வன் கை இடையன் – நற் 169/6,7
ஆடுகின்ற தலையையுடைய செம்மறியாட்டின் கூட்டத்தை ஓட்டிக்கொண்டு திரும்பும்
வலிமையான கையையுடைய இடையன்
2.
அண்ணல் யானை எண்ணின் கொங்கர்
குட கடல் ஓட்டிய ஞான்றை
தலைப்பெயர்த்து இட்ட வேலினும் பலவே – புறம் 130/5-7
தலைமையை உடைத்தாகிய யானையை எண்ணின நீ கொங்கரை
மேல்கடற்கண்ணே ஓட்டிய நாளில்
அவர் புறங்கொடுத்தலால் தலைகீழாகச் சாய்த்துப்பிடித்த வேலினும் பல
3.
யாண்டு தலைப்பெயர வேண்டு புலத்து இறுத்து – பதி 15/1
ஆண்டுகள் கழிந்துபோக, நீ வேண்டிய நாட்டில் தங்கி,
|
தலைப்பெய் |
தலைப்பெய் – (வி) 1. கூடு, join
2. ஒன்றுசேர், come together
1.
உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை – அகம் 86/1
உழுத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த செவ்விய குழைதலையுடைய பொங்கலோடு
2.
நல்லாய் பொய் எல்லாம் ஏற்றி தவறு தலைப்பெய்து
கையொடு கண்டாய் பிழைத்தேன் அருள் இனி – கலி 95/27,28
நல்லவளே! பெய்யையெல்லாம் என் தலையில் ஏற்றி, தவறுகளையெல்லாம் ஒன்றுசேர்த்து,
என்னைக் கையோடு பிடித்துவிட்டாய், தவறிழைத்தேன்! அருள்செய்வாயாக!
|
தலைப்போகு |
தலைப்போகு – (வி) முடிவு போதல், reach the very end
பலர்க்கு நிழல் ஆகி உலகம் மீக்கூறி
தலைப்போகு அன்மையின் சிறு வழி மடங்கி – புறம் 223/1,2
பலருக்கும் உன் அருளால் நிழலாக இருந்து, உலகத்தாஉ புகழ்ந்து சொல்ல,
மறுமையை நினைத்தால் முடிவு போதலென்பது இல்லாததினால் சிறிய இடத்தில் இருந்து
|
தலைமடங்கு |
தலைமடங்கு – (வி) தலைவணங்கு, be submissive
ஆன் பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்க – பதி 71/17
பசுக்களின் பயனைக் கொண்டு வாழும் இடையர்களின் கழுவுள் என்னும் தலைவன் தலைவணங்கி நிற்க,
|
தலைமண |
தலைமண – (வி) 1. ஒன்றோடொன்று பின்னி, பின்னிப்பிணை, be interwined, entangled
2. நெருங்கிக்கல, crowd, throng
1.
தேறு நீர் புணரியோடு யாறு தலைமணக்கும்
மலி ஓதத்து ஒலி கூடல் – பட் 97,98
தெளிந்த கடலின் அலைகளுடன் காவிரியாறு கலக்கும்
மிகுந்த அலைஆரவாரம் ஒலிக்கும் புகார்முகத்தில்,
2.
குன்று தலைமணந்த புன்_புல வைப்பும் – பதி 30/13
குன்றுகள் கூடிக்கிடக்கும் புன்புலமாகிய பாலைநில ஊர்களின் மக்களும்
சினை தலைமணந்த சுரும்பு படு செம் தீ
ஒண் பூ பிண்டி அவிழ்ந்த காவில் – மது 700,701
மரக்கிளைகளில் நெருக்கமாய்க்கூடின சுரும்புகள் உண்டாக்குகின்ற செந்தீ(ப்போன்ற)
ஒளிரும் பூக்களையுடைய அசோக மரங்கள் மலர்ந்துள்ள பொழிலில்
|
தலைமயக்கு |
தலைமயக்கு – (வி) பின்னிக்கிட, entagled
வெண் பூ வேளையொடு சுரை தலைமயக்கிய
விரவு மொழி கட்டூர் வயவர் வேந்தே – பதி 90/29,30
வெள்ளையான பூவைக்கொண்ட வேளைக் கொடியுடன் சுரைக்கொடியும் பின்னிக்கிடக்கும்
பல்வேறு மொழிகளைப் பேசுவோர் கலந்திருக்கும் பாடிவீடுகளில் இருக்கும் வீரர்களுக்கு வேந்தனே!
|
தலைமயங்கு |
தலைமயங்கு – (வி) 1. பிரிந்துசெல், go astray as a deer from the herd
2. கலந்திரு, be mixed up
3. மிகு, பெருகு, increase, multiply
4. கைகல, நெருங்கிச் சண்டையிடு, fight at close quarters
1.
எல் படு பொழுதின் இனம் தலைமயங்கி
கட்சி காணா கடமான் நல் ஏறு – புறம் 157/9,10
ஞாயிறு மறைகின்ற காலத்தில் இனத்திலிருந்து பிரிந்து
தான் சேரும் இருப்பிடத்தைக் காணாத காட்டின்கண் உள்ள மானின் நல்ல ஆண்மான்
2.
கங்கை வாரியும் காவிரி பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளம் தலைமயங்கிய நனம் தலை மறுகின் – பட் 190-193
கங்கையாற்றின் விளைச்சலும், காவிரியாற்றின் செல்வங்களும்,
ஈழத்தின் உணவுப்பொருளும், கடாரத்தின் ஈட்டமும்,
அரிதானவும், பெரிதானவும், (நிலத்தின் முதுகு)நெளியும்படி திரண்டு,
செல்வங்கள் (ஒன்றோடொன்று)கலந்துகிடக்கும் அகன்ற இடங்களுடைய தெருக்களும்
3.
பொன் செய் காசின் ஒண் பழம் தாஅம்
குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம் – நற் 274/4,5
பொன்னால் செய்யப்பட்ட மேகலைக்காசு போன்று ஒள்ளிய பழங்கள் உதிரும்
குமிழமரங்கள் நிறைந்துவளர்ந்த, சிறிதானவும் பலவானதுமான வழிகளில்
4.
தமிழ் தலைமயங்கிய தலையாலம்கானத்து – புறம் 19/2
தமிழ்ப்படை கைகலந்த தலையாலங்கானத்துக்கண்
|
தலைமிகு |
தலைமிகு – (வி) மிகுந்த மேன்மைபெறு, excell in
போர் தலைமிகுத்த ஈர்_ஐம்பதின்மரொடு – பதி 14/5
போர் செய்வதில் மிகுந்த மேன்மை பெற்ற நூறு பேர்களுடன்,
|
தலையளி |
தலையளி – 1. (வி) 1. கருணையுடன் நோக்கு, view compassionately
2. வரிசைசெய், சீர்செய், gift
2. (பெ) உயர்ந்த அன்பு, ideal love
1.1
நாடு தலையளிக்கும் ஒண் முகம் போல – புறம் 67/3
தன் நாட்டைக் கருணையுடன் நோக்கும் ஒள்ளிய முகத்தைப் போல
1.2
இன்னா செயினும் இனிது தலையளிப்பினும்
நின் வரைப்பினள் என் தோழி – குறு 397/6,7
இன்னாதவற்றைச் செய்தாலும், இனியவற்றை அளித்தாலும்
உன் எல்லைக்குட்பட்டவளே என் தோழி!
2.
மறு அற்ற மைந்தர் தோள் எய்தார் மணந்தார்
முறுவல் தலையளி எய்தார் நின் குன்றம் – பரி 19/92,93
குறைவற்ற தம் காதலரின் அணைப்பினைப் பெறமாட்டார், தம்மை மணந்தாரின்
புன்முறுவலுடன் கூடிய அன்பைப் பெறமாட்டார்,
|
தலைவரு(தல்) |
தலைவரு(தல்) – (வி) 1. அறைகூவலாக முன்தோன்று. appear as challenge
2. அழைப்பாக முன்தோன்று, appear on request
3. ஒன்றுகூடு, ஒன்றுசேர், unite, join together
4. நிகழ், சம்பவி, happen, occur
1.
அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா
நிரை காழ் எஃகம் நீரின் மூழ்க
புரையோர் சேர்ந்து என – புறம் 354/1-3
முடிவேந்தர் நேர் நின்று போரிடவரினும் அடங்குதல் அமையாத
நிரைத்த காம்பு அணிந்த வேலை நீர்ப்படை செய்யும்பொருட்டு
சான்றோர்களாகிய உயர்ந்த வீரர்கள் வந்து கூடினராக
2.
எந்தையும் யாயும் உணர காட்டி
ஒளித்த செய்தி வெளிப்பட கிளந்த பின்
மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப
நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே – குறு 374/1-4
நம் தந்தையும் தாயும் உணரும்படி அறிவித்து
மறைத்து வைத்திருந்த செய்தியை வெளிப்படையாகப் பேசிய பின்னர்
மலைகள் பொருந்திய இடத்தைச் சேர்ந்த நம் தலைவன் நம்மிடம் வந்து வேண்ட
நல்லதையே விரும்பும் கொள்கையினால் கருத்துகள் ஒன்றுபட்டன;
3.
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழு புகழ் நாள் தலைவந்து என – அகம் 86/6,7
தீய கோள்களின் தொடர்பு நீங்கப்பெற்ற வளைந்த வெள்ளிய திங்களை
குற்றமற்ற சிறந்த புகழினையுடைய உரோகணி என்னும் நாள்மீன் வந்து அடைந்ததாக
4.
மா என மடலொடு மறுகில் தோன்றி
தெற்றென தூற்றலும் பழியே
வாழ்தலும் பழியே பிரிவு தலைவரினே – குறு 32/4-6
பனைமடலைக் குதிரை மா என்று கொண்டு தெருவில் தோன்றி
பலர் அறியத் தூற்றலும் தலைவிக்குப் பழிதருவதே!
அப் பழிக்கு அஞ்சி வாழ்தலும் பழிதருவதே பிரிவு நிகழுமாயின்.
|
தலைவாய் |
தலைவாய் – (பெ) முதல் மதகு, main sluice of a tank
துனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும் – மலை 475
வேகமான நீரோட்டத்தையுடைய முதல் மதகில் ஒழிவின்றி ஓடும்
|
தளம்பு |
தளம்பு – (பெ) சேறுகுத்தி, உழவர் சேற்றிலுள்ள கட்டிகளையுடைக்கும் கருவி, an instrument to break lumps in mud by ploughmen
மலங்கு மிளிர் செறுவின் தளம்பு தடிந்திட்ட
பழன வாளை – புறம் 61/3,4
விலாங்கு மீன்கள் பிறழ்கின்ற வயலில் தளம்பு துண்டித்துப்போட்ட
பொய்கையின் வாளைமீன்
|
தளவம் |
தளவம் – (பெ) செம்முல்லை, golden jasmine, jasminum polyanthum Franch
புதல் இவர் தளவம் பூ கொடி அவிழ – நற் 242/2
புதர்கள் மேல் ஏறிப்படர்கின்ற செம்முல்லைக் கொடியின் பூக்கள் மலர
|
தளவு |
தளவு – (பெ) செம்முல்லை, பார்க்க : தளவம்
பனி வளர் தளவின் சிரல் வாய் செம் முகை – ஐங் 447/2
பனியினால் வளரும் செம்முல்லையின் மீன்கொத்தியின் மூக்கு போன்ற சிவந்த அரும்புகளைச்
|
தளி |
தளி – 1. (வி) துளி, சொட்டு, drip, trickle
2. (பெ) 1. மழைத்துளி, rain drop
2. முதல் மழை, first shower of rain in a season
3. மேகம், cloud
1.
நுண் மழை தளித்து என நறு மலர் தாஅய் – ஐங் 328/1
நுண்ணிதான மழைத்துளிகள் வீழ்ந்ததால் நறிய மலர்கள் உதிர்ந்து பரவி
2.1.
தன் பாடிய தளி உணவின்
புள் தேம்ப புயல் மாறி – பட் 3,4
தன்னை(மேகத்தை)ப் பாடிய, மழைத்துளியையே உணவாகக்கொண்ட
வானம்பாடி வருந்த மழை பெய்யாமற்போக
2.2.
தான் வந்தன்றே தளி தரு தண் கார் – குறு 65/3
தான் வந்தது முதல்மழையைத் தரும் குளிர்ந்த கார்ப்பருவம்
2.3.
தளியின் சிறந்தனை வந்த புலவர்க்கு – கலி 50/16
மேகத்தினும் சிறந்தவனாக, உன்னை நாடி வந்த புலவர்க்கு
|
தளிர் |
தளிர் – 1. (வி) 1. துளிர்விடு, sprout, shoot forth
2. மனமகிழ், rejoice
3. செழி, வளம்பெறு, prosper, flourish
– 2. (பெ) இளம் இலை, tender shoot, sprout
1.1
ஆஅம் தளிர்க்கும் இடை சென்றார் மீள்தரின்
யாஅம் தளிர்க்குவேம்-மன் – கலி 143/29,30
ஆச்சாமரம் தளிர்க்கும் காட்டிடையே சென்றவர் மீண்டு வந்தால்
நானும் அவர்களைப் போல் மனம் மகிழ்வேன்;
1.2
ஆஅம் தளிர்க்கும் இடை சென்றார் மீள்தரின்
யாஅம் தளிர்க்குவேம்-மன் – கலி 143/29,30
ஆச்சாமரம் தளிர்க்கும் காட்டிடையே சென்றவர் மீண்டு வந்தால்
நானும் அவர்களைப் போல் மனம் மகிழ்வேன்;
1.3
வறந்த ஞாலம் தளிர்ப்ப வீசி – ஐங் 452/1
வறண்டுகிடந்த நிலம் வளம்பெறுமாறு பெருமழை பெய்து
2.
செயலை தண் தளிர் துயல்வரும் காதினன் – திரு 207
அசோகின் குளிர்ந்த தளிர் அசைகின்ற செவியை உடையவன்
|
தளை |
தளை – (பெ) 1. கட்டு, பிணிப்பு, fastening
2. மலரும் நிலையிலுள்ள பூ, மொட்டு, a bud in a flowering stage
3. கயிறு, cord, rope
1.
தளை அவிழ் அலரி தண் நறும் கோதை – நற் 367/9
கட்டு அவிழும் மலராலாகிய குளிர்ந்த, மணங்கமழும் மாலையை
நாணு தளை ஆக வைகி மாண் வினைக்கு
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே – அகம் 29/21-23
மான உணர்வு கட்டிப்போட்டதனால் தங்கி, மாண்புள்ள வினை காரணமாக
(என்)உடம்பு அங்கு இருந்ததே ஒழிய
பேதைமை உள்ள (என்) நெஞ்சம் உன் அருகிலேயேதான் இருந்தது.
2.
இளையர் ஆடும் தளை அவிழ் கானல் – ஐங் 198/2
இளம்பெண்கள் விளையாடும் மொட்டுகள் கட்டவிழ்ந்த கடற்கரைச் சோலை
3.
சேற்று நிலை முனைஇய செம் கண் காரான்
ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து – அகம் 46/1,2
சேற்றில் நிற்பதை வெறுத்த சிவந்த கண்களையுடைய எருமை
ஊரார் உறங்கும் இருளில் தனது வலுவுள்ள கயிறை அறுத்துக்கொண்டு
|
தளைவிடு |
தளைவிடு – (வி) மலர், முறுக்கவிழ், unfold, blossom
போது அவிழ் பனி பொய்கை புதுவது தளைவிட்ட
தாது சூழ் தாமரை தனி மலர் புறம் சேர்பு – கலி 69/1,2
மலரும் தருவாயிலிருக்கும் மொட்டுக்கள் கட்டவிழும் குளிர்ச்சியான பொய்கையில் புதிதாக முறுக்கவிழ்ந்த
பூந்தாதுக்கள் சூழ்ந்த தாமரையின் தனித்த மலரைப் புறத்தே சேர்ந்து,
|
தழங்கு |
தழங்கு – (வி) 1. குழறுகின்ற பேச்சு போல ஒலி எழுப்பு, make a sound as of a drunkard
2. முரசடிப்பது போன்ற ஒலி எழுப்பு, make a rattling sound, make short successive sounds
3. மழை பெய்யும்போது வானில் எழும் உறுமுகின்ற முழக்கம் போன்று ஒலித்தல்
4.ஆபத்து நேரிடும்போது யானை எழுப்பும் பிளிறல் போன்று ஒலித்தல்
1.
பெரிதாகக் குடித்தவர்களின் குழறுகின்ற நாக்கு போல் ஒலி எழுப்புதல்.
உண்டு மகிழ் தட்ட மழலை நாவின்
பழம்_செருக்காளர் தழங்கு குரல் தோன்ற – மது 668,669
(கள்ளை முந்தின இரவில்)உண்டு களிப்பின் ஆழத்தைத் தொட்ட, குழறும் வார்த்தையுடைய,
பழைய களிப்பினையுடையாருடைய உறுமுகின்ற குரல்கள் தோன்றி நிற்க,
2.
‘டம டம’ என்று முரசு பெரிதாக எழுப்பும் ஓசைபோல் ஒலித்தல்.
2.1 ஆறலைக்களவர், வழிப்போக்கர் வரவை அறிவிக்க முரசடிப்பது போன்று ஒலித்தல்
வம்ப மாக்கள் வரு_திறம் நோக்கி
செம் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர்
மடி வாய் தண்ணுமை தழங்கு குரல் – நற் 298/1-3
பாலை வழியில், புதிய மக்கள் வருகின்ற தன்மையைப் பார்த்து,
செம்மையான அம்பினை அவர்மீது தொடுக்கும் சினந்த பார்வையினரான ஆடவர் எழுப்பும்
மடித்துவிட்ட வாயையுடைய தண்ணுமைப் பறையின் முழங்குகின்ற ஓசை
2.2 மணவிழாவின்போது முரசு அடிப்பது போன்று ஒலித்தல்.
நல்கூர் நுசுப்பின் மெல் இயல் குறு_மகள்
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய
பழங்கண் மாமையும் உடைய தழங்கு குரல்
மயிர் கண் முரசினோரும் முன்
உயிர் குறியெதிர்ப்பை பெறல் அரும்-குரைத்தே – நற் 93/8-12
மெலிந்துபோன இடையையும், மெல்லிய இயல்பினையும் கொண்ட இளமகளின்
பூண்கள் தாழ்ந்த மார்பு நாணம் துன்புறுத்துவதால் வருத்தமுற்ற
மெலிவடைந்து நிறமாற்றம் பெற்றன; ஆதலால் ஒலிக்கின்ற குரலையுடைய
மயிர்சீவாத தோல் போர்த்த கண்ணையுடைய மணமுரசின் ஒலியைக் கேட்பதற்கு முன்
இவளிடம் உயிர் இருக்கும்படியான ஒரு குறிப்புத் தோன்றக் காணப்பெறுதல் அரிதே!
2.3 விடிந்துவிட்டதைத் தெரிவிக்க முரசு அடிப்பது போன்று ஒலித்தல்
தழங்கு குரல் முரசம் காலை இயம்ப
கடும் சின வேந்தன் தொழில் எதிர்ந்தனனே – ஐங் 448/1,2
முழங்குகின்ற குரலில் முரசம் காலையில் ஒலிக்க,
கடும் சினத்தையுடைய வேந்தன் போரை எதிர்கொண்டான்;
2.4 போர் மறவர்க்கு உணவு படைக்க அழைக்கும் முரசு அடிப்பது போன்று ஒலித்தல்
பெரும் சமம் ததைந்த செரு புகல் மறவர்
உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு கொளை புணர்ந்து
பெரும் சோறு உகுத்தற்கு எறியும்
கடும் சின வேந்தே நின் தழங்கு குரல் முரசே – பதி 30/41-44
பகைவரின் பெரிய போரினைச் சிதைத்துக் கெடுத்த போரை விரும்பும் மறவர்களால்,
இடி போன்ற நிலத்தை அதிரச் செய்யும் குரலோடு, யாழிசை சேர்ந்தொலிக்க,
போர்வீரருக்குப் பெரிய விருந்துணவு படைப்பதற்கு அறையப்பெறுகின்றது –
கடும் சினமுள்ள வேந்தனே! உன்னுடைய முழங்குகின்ற ஒலியையுடைய முரசம்
2.5 போர்ப்பாசறையில் தங்கியிருப்போருக்கு அறிவிப்புக்கொடுக்க முரசு அடிப்பது போன்று ஒலித்தல்.
இது காற்றால் அலைப்புண்ட கடலின் ஆர்ப்பரிப்பு போல் இருக்கும்.
கால் கடிப்பு ஆக கடல் ஒலித்து ஆங்கு
வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண்
கடும் சிலை கடவும் தழங்கு குரல் முரசம் – பதி 68/1-3
காற்றே குறுந்தடியாய் மோதியடிக்க, கடல் பேரொலி எழுப்புவதைப் போல
பகைவர் நாட்டினில் எழுப்பித் தங்கியிருக்கும் பாசறையின் நடுவே
மிகுந்த முழக்கத்தைச் செய்யும் ஒலிக்கின்ற ஓசையையுடைய முரசமானது
2.6 பாசறையில் இரவுக்காவலர் நடுயாமத்தை அறிவிக்க முரசு அடிப்பது போன்று ஒலித்தல்.
சிறு கண் யானை நெடு நா ஒண் மணி
கழி பிணி கறை தோல் பொழி கணை உதைப்பு
தழங்கு குரல் முரசமொடு முழங்கும் யாமத்து – அகம் 24/13-15
சிறு கண் யானையின் நெடு நா ஒள் மணியோசையும்,
கழியில் பிணித்த கரிய தோல் கேடகத்தில் வந்து தைக்கும் அம்புகளின் ஓசையும்,
முழங்கும் ஓசையை உடைய முரசின் ஒலியுடன் சேர்ந்து ஒலிக்கும் யாமத்தில்
இங்கு காட்டப்பட்டுள்ள முரசொலிகள் அறிவிப்பு சார்ந்தவையாகவே இருப்பதால், முரசினை
‘டம டம டம’என்று அடிக்கும்போது எழும் ஓசையே தழங்கு குரல் என்று ஆகும்.
3.
மழை பெய்வதற்குச் சற்று முன் வானத்தில் எழும் உறுமுகின்ற இடிமுழக்கம்.
3.1 தழங்கு குரல் ஏறொடு முழங்கி வானம்
இன்னே பெய்ய மின்னுமால் தோழி – நற் 7/5,6
மிக்கு ஒலிக்கின்ற இடியோடு முழக்கமிட்டு வானம்
இதோ பெய்வதற்கு மின்னுகின்றது தோழி!
3.2 மா மலை விடர்_அகம் விளங்க மின்னி
மாயோள் இருந்த தேஎம் நோக்கி
வியல் இரு விசும்பு அகம் புதைய பாஅய்
பெயல் தொடங்கினவே பெய்யா வானம்
——————————-
தழங்கு குரல் உருமின் கங்குலானே – நற் 371/2-9
காயா மரங்களைக் கொண்ட குன்றினில் கொன்றைப் பூக்களைப் போலப்
பெரிய மலையின் பிளவிடங்கள் விளங்கித் தோன்றும்படி மின்னி
மாமை நிறத்தவள் இருந்த இடத்தை நோக்கி
அகன்ற கரிய விசும்பிடம் எல்லாம் மறையும்படி பரவி
மழை பெய்யத் தொடங்கின, இதுவரை பெய்யாத மேகங்கள்
———————————
முழங்குகின்ற ஓசையுடன் இடி இடிக்கும் இரவுப்பொழுதில்
3.3 தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணு மணி அன்ன மா இதழ் பாவை – அகம் 136/12,13
ஒலிக்கும் குரலையுடைய மேகத்தின் முதல்மழையால் ஈன்ற
கழுவிய நீலமணியை ஒத்த கரிய இதழையுடைய பாவை போன்ற கிழங்கு
4. ஆபத்து நேரிடும்போது யானை எழுப்பும் பிளிறல் போன்று ஒலித்தல்
கன்று அரைப்பட்ட கயந்தலை மடப்பிடி
வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின்
ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தென கிளையொடு
நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல் – மலை 307-310
கன்றை வயிற்றுக்குக் கீழே(கால்களுக்கிடையே) கொண்ட இளந் தலையுடைய பேதைமையுள்ள பெண்யானை,
வலிமைக்கு ஓர் எல்லை என்று கூறத்தக்க அதன் கணவன் பாதுகாத்துநிற்பதினால்,
ஒளிரும் நிறமுள்ள வலிமையுள்ள புலி பாய்ந்ததினால், (தன்)சுற்றத்தோடு,
உயர்ந்த மலையில் (மற்றவரை உதவிக்குக்)கூப்பிடும் இடியோசை போன்று முழங்கும் குரலும்;
இந்தப் பிளிறல் ஓசையைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்.
|
தழல் |
தழல் – (பெ) கிளிகடிகருவி, A mechanism for scaring away parrots in a corn field
சாரல் சூரல் தகை பெற வலந்த
தழலும் தட்டையும் குளிரும் பிறவும்
கிளி கடி மரபின ஊழூழ் வாங்கி – குறி 42-44
மலைச்சரிவில்(விளைந்த) பிரம்பினால் அழகுபெறப் பின்னிய,
கவணும், தட்டையும், குளிரும், ஏனையவும்(ஆகிய)
கிளிகளை விரட்டும் இயல்புடையவற்றை அடுத்தடுத்து கையில் எடுத்து
|
தழிஞ்சி |
தழிஞ்சி – (பெ) புறத்துறைகளில் ஒன்று, one of the themes in the thiNai puRam.
விரல் கவர் பேரியாழ் பாலை பண்ணி
குரல் புணர் இன் இசை தழிஞ்சி பாடி – பதி 57/8,9
விரலால் வாசிக்கப்படும் பேரியாழில், பாலைப் பண்ணை அமைத்து,
குரல் என்ற நரம்போடு சேர்த்த இனிய இசையில் தழிஞ்சி என்னும் துறையைப் பாடி
|
தழீஇ |
தழீஇ – (வி.எ) தழுவி என்ற வினையெச்சத்தின் மரூஉ, the twisted form the word ‘thazhuvi’
குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇ
கொடு வரி இரும் புலி காக்கும் – குறு 215/5,6
சிறிய மலையின் பக்கத்தில் தான் விரும்பிய துணையைத் தழுவி
வளைந்த வரிகளையுஇடைய பெரிய புலியினின்றும் காக்கும்
|
தழீஇய |
தழீஇய – (வி.எ) தழுவிய என்ற வினையெச்சத்தின் மரூஉ, the twisted form the word ‘thazhuviya’
தண் பணை தழீஇய தளரா இருக்கை – பொரு 169
தண் பணை தழீஇய தளரா இருக்கை – சிறு 78
தண் பணை தழீஇய தளரா இருக்கை – பெரும் 242
குளிர்ந்த வயலையுடைய மருத நிலம் சூழ்ந்த சோர்வுறாத குடியிருப்பினையுடைய
|
தழும்பன் |
தழும்பன் – (பெ) ஒரு வள்ளலான சிற்றரசன், An ancient chief of the Tamil land, noted for his liberality;
பிடி மிதி வழுதுணை பெரும் பெயர் தழும்பன்
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர் – அகம் 227/17,18
பெண்யானை மிதித்த வழுதுணங்காய் போன்ற தழும்பினையுடையதால் வழுதுணைத் தழும்பன் என்னும் பெயர் கொண்டவனின்
காவல் பொருந்திய மதில் எல்லையையுடைய ஊணூருக்கு அப்பால்
|
தழூஉ |
தழூஉ – (பெ) தழுவிக்கொள்ளுதல், embracing, uniting, clasping
சீர் மிகு நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉ – மது 614
புகழ் மிக்க முருகனை வழிபடுதலால், தழுவிக் கைகோத்து,
|
தழூஉ_அணி |
தழூஉ_அணி – (பெ) தழுவணி, குரவைக் கூத்து, dancing round clasping hands
தொடலை ஆயமொடு தழூஉ_அணி அயர்ந்தும் – குறு 294/2
மாலையையுடைய மகளிர் கூட்டத்தோடு தழுவிக்கொண்ட ஆட்டம் ஆடியும் இருக்கும்போது
|
தழை |
தழை – (பெ) 1. தழையுடை, A waist garment of strung leaves and flowers
2. மயிலிறகுக் கொத்து, bunch of peacock’s feathers
1.
சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ – திரு 203,204
சுரும்பு (தேன்)உண்ணும்படி தொடுத்த பெரிய குளிர்ந்த அழகினையுடைய தழையுடையை
திருந்திய வடங்களையுடைய அல்குலிடத்தே அசையும்படி உடுத்தி
2.
மின் இரும் பீலி அணி தழை கோட்டொடு – மலை 5
மின்னுகின்ற கரிய மயில் இறகுகளின் அழகிய கொத்து(கட்டப்பட்ட) கொம்பு வாத்தியமும் சேர்த்து,
|
தவ |
தவ – (வி.அ) மிகவும், much, intensely
தளி பொழி கானம் தலை தவ பலவே – மலை 385
மழைத்துளிகள் நிறைய விழும் காடுகளும் கூட(அத்துடன்)மிகப் பலவாம்;
|
தவசி |
தவசி – (பெ) தவம் செய்பவர், துறவி, முனிவர், ascetic, hermit
நீடிய சடையோடு ஆடா மேனி
குன்று உறை தவசியர் போல – நற் 141/4,5
நீண்ட சடையும் நீராடாத மேனியுமுடைய
குன்றுகளில் வாழும் தவசிமாரைப் போல
|
தவல் |
தவல் – (பெ) 1. குறைதல், diminishing, decreasing
2. குற்றம், கேடு, fault, blemish
3. மரணம், death
1.
தவல் இல் அரு நோய் தலைத்தந்தோரே – ஐங் 320/5
கொஞ்சமும் குறையாத பொறுக்கமுடியாத பிரிவுத் துயரத்தைத் தந்தவர்.
2.
என் திறம் யாதும் வினவல் வினவின்
பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய
தவல் அரும் செய்_வினை முற்றாமல் ஆண்டு ஓர்
அவலம் படுதலும் உண்டு – கலி 19/10-13
என்னுடைய நிலைமை பற்றி ஒன்றும் கேட்கவேண்டாம்; அப்படிக் கேட்டால்,
ஞாயிற்றைப் போல விளங்கும் உன் தலைமைச் சிறப்பெல்லாம் அழிந்துபோகுமாறு
உன்னுடைய குற்றமற்ற அருமையான பணிகள் முற்றுப்பெறாமல், அங்கு ஓர்
அவலநிலை உருவாகக் கூடும்.
3.
வரை அளந்து அறியா திரை அரு நீத்தத்து
அவல மறு சுழி மறுகலின்
தவலே நன்று-மன் தகுதியும் அதுவே – புறம் 238/17-19
எல்லை அளந்து அறியாத திரை அரிதாகிய வெள்ளத்தின்கண்
துன்பமாகிய மறுசுழியின்கண் பட்டு சுழலுவதனிலும்
இறந்துபடுதலே நன்று, நமக்குத் தக்க செய்கையும் அதுவே.
|
தவா |
தவா – (பெ.அ) குறையாத, nin diminishing
உண்டு என தவாஅ கள்ளின்
வண் கை வேந்தே – பதி 43/35,36
உண்டபோதும் குறையாத, கள்ளினையுடைய
வளமையான கொடையினையுடைய வேந்தனே!
|
தவாலியர் |
தவாலியர் – (வி) தாழ்வின்றி இரு, be prosperous
முன் திணை முதல்வர் போல நின்று நீ
கெடாஅ நல் இசை நிலைஇ
தவாஅலியரோ இ உலகமோடு உடனே – பதி 14/20-22
சேரர் குலத்து முன்னோர்களைப் போல, நிலையான புகழுடன், நீ
கெடாத நல்ல புகழை நிலைபெறச் செய்து
தாழ்வின்றி வாழ்க! இந்த உலகத்தில்.
|
தவிர் |
தவிர் – (வி) 1. ஒழி, இல்லாமல்போ, cease, become extinct
2. விலக்கு, ஒதுக்கு, shun, exclude
3. விலகு, abstain, refrain
4. தணி, subside, abate
5. தடு, தடைசெய், hinder, obstruct
1.
கதிர் பகா ஞாயிறே கல் சேர்தி ஆயின்
அவரை நினைத்து நிறுத்து என் கை நீட்டி
தருகுவை ஆயின் தவிரும் என் நெஞ்சத்து
உயிர் திரியா மாட்டிய தீ – கலி 142/37-40
கதிர்களை யாருக்கும் பகிர்ந்தளிக்காத ஞாயிறே! நீ மலையில் மறைவாயானால்,
அவரை நினைத்து, அவருள்ள இடத்தில் அவரை நிறுத்திப்பிடித்து, என் கைவரை நீட்டி
உன் கதிர்களைத் தருவாயானால், அணைந்துபோகும், என் நெஞ்சத்தில்
என் உயிரையே திரியாகக் கொண்டு கொளுத்திய காமத்தீ;
2.
அன்பினர் வாழி தோழி நன் புகழ்
உலப்பு இன்று பெறினும் தவிரலர் – நற் 115/9,10
அன்புடையவர், வாழ்க தோழியே! பெரிய புகழைக்
குறைவின்றிப் பெற்றாலும் நம்மை விலக்கமாட்டார்;
3.
இவன் இவள் ஐம்பால் பற்றவும் இவள் இவன்
புன் தலை ஓரி வாங்குநள் பரியவும்
காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது – குறு 229/1-3
இவன் இவளின் பின்னிய கூந்தலைப் பற்றி இழுக்கவும், இவள் இவனது
சீவப்படாத தலையின் மயிரைப் பற்றி வளைத்துவிட்டு ஓடவும்,
அன்புமிக்க செவிலித்தாயர் விலக்கிவிடவும் விலகாது
4.
கொலை சினம் தவிரா மதன் உடை முன்பின் – அகம் 148/2
கொல்லும் சினம் குறையாத செருக்குப் பொருந்திய வலிமையினையும்
5.
ஒழிய சூழ்ந்தனை ஆயின் தவிராது
செல் இனி சிறக்க நின் உள்ளம் – அகம் 19/7,8
(திரும்பிச்) செல்ல நினைத்தால், தடையின்றிப்
போகலாம் இனியே – சிறப்புறட்டும் உன் உள்ளம்!
|
தா |
தா – 1. (வி) 1. கொடு,வழங்கு,அளி, give, offer
2. பர, spread
3. தாவு, பாய், rush, jump
2. (பெ) 1. குற்றம், fault, blemish
2. துன்பம், வருத்தம், distress, pain
3. வலிமை, power, might
1.1
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய
கொடுத்து அவை தா என கூறலின்
இன்னாதோ நம் இன் உயிர் இழப்பே – குறு 349/5-7
தமக்கு இன்னல் வருமே என்று அஞ்சி, கேட்பவர் வேண்டியவற்றைக்
கொடுத்துவிட்டு, பின்னர் அவற்றைத் தா என்று கூறுவதனிலும்
இன்னாததோ நம் இனிய உயிரை இழத்தல்?
1.2
நூல் கால் யாத்த மாலை வெண்குடை
தவ்வென்று அசைஇ தா துளி மறைப்ப – நெடு 184,185
நூலால் சட்டத்தே கட்டின முத்துமாலையை உடைய கொற்றக்குடை
தவ்வென்னும் ஓசைபட்டு அசைந்து, பரக்கின்ற துளியை மறைக்க
கிழங்கு அகழ் நெடும் குழி மல்க வேங்கை
பொன் மலி புது வீ தாஅம் அவர் நாட்டு – ஐங் 208/2,3
கிழங்கிற்காகத் தோண்டிய ஆழமான குழி நிறைய, வேங்கை மரத்தின்
பொன்னிற மிக்க புதிய மலர்கள் பரவிக்கிடக்கும் அவருடைய நாட்டின்
1.3
கரும் கண் தா கலை பெரும்பிறிது உற்று என – குறு 69/1
கரிய கண்ணையுடைய தாவித்திரியும் ஆண்குரங்கு இறந்துபோனதாக
2.1.
தா இல் கொள்கை தம் தொழில் முடி-மார்
மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே – திரு 89,90
குற்றம் இல்லாத நோன்புகளையுடைய தமது தவத்தொழிலை முடிப்பாருடைய
நெஞ்சில் பொருந்தித் தோன்றுகின்ற ஒளி மிக்க நிறத்தையுடைய திருமுகங்களில்
2.2
வெம் சுடர் கரந்த கமம் சூல் வானம்
நெடும் பல் குன்றத்து குறும் பல மறுகி
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து – நற் 261/3-5
வெம்மையான ஞாயிற்றை மறைத்த நிறைந்த சூல்கொண்ட மேகங்கள்
நெடிய பலவான குன்றுகளில் சிறியதாகவும் பலவாகவும் அலைந்துதிரிந்து,
துன்பமில்லாத பெரும் மழையாகப் பெய்யத்தொடங்கிய நடுயாமத்தில்,
2.3
மா இரும் தாழி கவிப்ப
தா இன்று கழிக என் கொள்ளா கூற்றே – நற் 271/11,12
பெரிய கரிய தாழியிலிட்டுக் கவித்து மூடும்படி
வலிமையற்று இறந்தொழிக என் உயிரை எடுத்துக்கொள்ளாத கூற்றம்.
|
தாது |
தாது – (பெ) 1. மகரந்தம், pollen
2. தேன், honey
3. தூள்,பொடி, நீறு, powder, dust
1.
நறும் தாது ஆடிய தும்பி பசும் கேழ்
பொன் உரை கல்லின் நன் நிறம் பெறூஉம் – நற் 25/3,4
மணமிக்க மகரந்தத்தூளில் அளைந்து ஆடிய தும்பி, பசிய நிறத்தையுடைய
பொன்னை உரைத்துப்பார்க்கும் கல்லைப் போன்று நல்ல நிறத்தைப் பெறும்
2.
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா
வண்டு ஓர் அன்ன அவன் தண்டா காட்சி – நற் 25/9,10
தேனை உண்ணும் வேட்கையினால் மலரின் தன்மையை ஆராயாமல் போய் விழுகின்ற
வண்டின் ஒரு தன்மையை ஒத்த அவனது கெடாத காட்சியை
3.
பலர் தொகுபு இடித்த தாது உகு சுண்ணத்தர் – மது 399
பலர் கூடி இடித்த துகள் பறக்கும் சுண்ணாம்பு உடையவரும்
|
தாதை |
தாதை – (பெ) தந்தை, father
இருவர் தாதை இலங்கு பூண் மாஅல் – பரி 1/31
காமன், சாமன் ஆகிய இருவருக்குத் தந்தையே! ஒளிவிடும் பூண்களை அணிந்த திருமாலே!
|
தானை |
தானை – (பெ) 1.சேனை, army
2. ஆடை, முந்தானை, cloth, the front end of a saree
1.
தெறல் அரும் தானை பொறையன் பாசறை
நெஞ்சு நடுக்கு_உறூஉம் துஞ்சா மறவர் – நற் 18/5,6
கடத்தற்கரிய சேனையையுடைய பொறையன் என்பானின் பாசறையில் இருக்கும்
நெஞ்சு நடுக்கங்கொண்டதினால் தூங்காத வீரர்கள்
2.
இரும் துகில் தானையின் ஒற்றி – பரி 16/23
நீண்ட துகிலின் முந்தானையால் நீத்துளிகளை ஒற்றியெடுக்க
|
தாமம் |
தாமம் – (பெ) 1. கழுத்தணி, necklace
2. பூமாலை, wreath, garland
1.
திருமருத முன்துறை சேர் புனல்-கண் துய்ப்பார்
தாமம் தலை புனை பேஎம் நீர் வையை – பரி 7/83,84
திருமருத முன்துறை என்ற பெயர்கொண்ட துறையைச் சேரும் வையை நீரில் குளித்து இன்புறுவாரின்
கழுத்தணிகளைத் தன் தலைமேல் சூட்டிக்கொள்ளும் அச்சந்தரும் ஆழமான நீரைக்கொண்ட வையையே!
2.
சூடு நறவொடு தாமம் முகிழ் விரிய – பரி 23/55
சூடியுள்ள நறவத்தின் மொட்டுடன் பூமாலையின் மொட்டுக்களும் மலர,
|
தாம்பு |
தாம்பு – (பெ) தாமணிக்கயிறு, Rope to tie cattle, tether
சிறு தாம்பு தொடுத்த பசலை கன்றின்
உறு துயர் அலமரல் நோக்கி – முல் 12,13
சிறிய தாம்புக்கயிற்றால் (காலில்)கட்டப்பட்ட பச்சிளம் கன் றின்
மிக்க துயரால் மனம் கலங்கிநின்ற நிலையைப் பார்த்து
|
தாயம் |
தாயம் – (பெ) 1. தந்தை வழிச் சொத்து, patrimony
2. உரிமைப்பொருள், rightful possession
1.
உரு கெழு தாயம் ஊழின் எய்தி – பட் 227
அச்சம் பொருந்தின தன் அரசவுரிமையை முறையாலே பெற்று
2.
தாயம் ஆகலும் உரித்தே போது அவிழ்
புன்னை ஓங்கிய கானல்
தண்ணம் துறைவன் சாயல் மார்பே – நற் 327/7-9
உரிமைப்பொருள் ஆகுதலும் உரியதேயாகும் – அரும்புகள் மலர்கின்ற
புன்னை மரங்கள் உயர்ந்து வளர்ந்த கடற்கரைச் சோலையின்
குளிர்ந்த அழகிய துறைகளைச் சேர்ந்தவனது மென்மையான மார்பு.
|
தாரகை |
தாரகை – (பெ) விண்மீன், star
சுடரொடு சூழ்வரு தாரகை மேரு
புடை வரு சூழல் – பரி 19/19,20
திங்கள் தன்னோடு சூழ்ந்துவரும் விண்மீன்களோடு மேருவின்
பக்கத்தே சுற்றிவரும் சூழலானது
|
தாரம் |
தாரம் – (பெ) 1. அரிய பண்டம், rare / valuable thing or article
2. மந்தாரம், தேவதாருமரம், A celestial tree
1.
இடி கலப்பு அன்ன நறு வடி மாவின்
வடி சேறு விளைந்த தீம் பழ தாரம் – மலை 512,513
(தானியங்களை)இடித்துக் கலந்துசெய்த(பொரிவிளங்காய்)உருண்டை போன்ற,(ஆனால்) மணம்மிக்க வடு மாங்காயின்
தேன் போன்ற சதைப்பற்று முதிர்ந்த இனிய பழங்களாகிய அரும்பண்டங்களும்,
2.
தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி – பரி 12/6
தகர மரம், ஞாழல் மரம், தேவதாரு மரம் ஆகியவற்றைச் சாய்த்துச் சுமந்துகொண்டு,
|
தார் |
தார் – (பெ) 1. மாலை, wreath,chaplet, garland
2. கிளியின் கழுத்தில் இருக்கும் பட்டையான அமைப்பு, Neck-stripes of parrots
3. ஒழுங்கு, orderliness
4. முன்னணிப்படை, van of the army
5. பிடரி மயிர், mane
6. உபாயம், tactical move, trick
1.
உருள் பூ தண் தார் புரளும் மார்பினன் – திரு 11
தேர்உருள் போலும் பூவால் செய்யப்பட்ட குளிர்ந்த மாலை அசையும் மார்பினையுடையவனும்
2.
மயில் ஓர் அன்ன சாயல் செம் தார்
கிளி ஓர் அன்ன கிளவி பணை தோள் – நற் 301/4,5
மயிலோடு ஒத்த தன்மையையுடைய சாயலையும், செந்நிறக் கழுத்துப்பட்டையைக் கொண்ட
கிளியின் தன்மையை ஒத்த சொற்களையும், பருத்த தோள்களையும்,
3.
களிறு நிலை முணைஇய தார் அரும் தகைப்பின் – பதி 64/7
களிறுகள் நிற்பதற்கு வெறுத்த, ஒழுங்காக அமைந்த உயர்ந்த கட்டுக்காவலையுடைய
4.
நனம் தலை வேந்தர் தார் அழிந்து அலற – பதி 55/17
அகன்ற இடத்தையுடைய வேந்தரின் முன்னணிப்படையினர் அழிந்து அலறும்படியாக,
5.
தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர்
அரி மான் வழங்கும் சாரல் – பதி 12/4,5
பிடரி மயிர் அழகுசெய்யும் கழுத்தினையும், நீண்ட கூரிய நகங்களையும் கொண்ட,
சிங்கங்கள் நடமாடும் மலைச்சாரலில்
6.
மைந்து உடை மல்லன் மத வலி முருக்கி
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே ஒரு கால்
வரு தார் தாங்கி பின் ஒதுங்கின்றே – புறம் 80/2-4
வலிமையுடைய மல்லனது மிக்க வலிமையைக் கெடுத்து
ஒரு கால் மண்டியாகமார்பிலேமடித்துவைத்து, ஒரு கால்
அவன் செய்கின்ற உபாயத்தை விலக்கி,முதுகின்கண் வளைத்து
|
தாறு |
தாறு – (பெ) 1. அங்குசம், தார்க்கோல், goad
2. பூ அல்லது காய்களின் கொத்து, குலை, cluster of flowers or vegetables
தாறு அடு களிற்றின் வீறு பெற ஓச்சி – குறி 150
(பாகன்)அங்குசம் அழுத்திய ஆண்யானை போல எழுச்சியுண்டாகக் கைகளை உயர்த்தி
2.
தாறு படு பீரம் ஊதி – நற் 277/7
கொத்துக்கொத்தாய்ப் பூக்கும் பீர்க்கின் மஞ்சள் நிறப் பூவில் தேன்குடித்து,
|
தாலம் |
தாலம் – (பெ) உண்கலம், eating plate
நறு நெய் கடலை விசைப்ப சோறு அட்டு
பெரும் தோள் தாலம் பூசல் மேவர – புறம் 120/14,15
நறிய நெய்யிலே கடலை துள்ள, சோற்றைச் சமைத்து,
பெரிய தோளையுடைய மனையாள் சாப்பாட்டுத்தட்டைக் கழுவுதலைப் பொருந்த
|
தாலி |
தாலி – (பெ) 1. சிறுவர் கழுத்தில் அணியும் தாயத்து, Amulet tied on a child’s neck
2. சோழி, cowree
1.
புலி பல் தாலி புதல்வன் புல்லி – குறு 161/3
புலிப்பல் தாலியுடைய மகனைத் தழுவிக்கொண்டு
2.
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை
வரி வெண் தாலி வலை செத்து வெரூஉம் – ஐங் 166/1,2
பெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
வரிகளையுடைய வெண்மையான சோழிகளைக் கண்டு வலையோ என்று எண்ணி வெருளும்
|
தாளாண்மை |
தாளாண்மை – (பெ) விடாமுயற்சி, perseverance
கோளாளர் என் ஒப்பார் இல் என நம் ஆனுள்
தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கு ஒரு நாள்
கேளாளன் ஆகாமை இல்லை – கலி 101/43-45
காளையை அடக்குபவரில் என்னைப் போன்றவர் யாரும் இல்லை என்று நம் மாடுகளுக்குள்
தன் முயற்சியை எடுத்துக்கூறும் தலைவன் நமக்கு என்றேனும் ஒருநாள்
உறவினன் ஆவான்.
|
தாளி |
தாளி – (பெ) ஒரு கொடி, Hedge bind-weed, Ipomaca sepiaria
தாளி தண் பவர் நாள் ஆ மேயும் – குறு 104/3
தாளியின் குளிர்ந்த படர்கொடியைக் காலையில் பசுக்கள் மேயும்
|
தாள் |
தாள் – (பெ) 1. கால்,leg, foot
2. பூ போன்றவற்றின் அடித்தண்டு, stem, pedicle
3. முயற்சி, effort
4. மரம் போன்றவற்றின் அடிப்பகுதி, foot of a tree
5. படி, stairs
6. மூட்டுவாயின் ஊடுருவச் செறிக்கும் கடையாணி, Pin that holds a tenon in a mortise
7. வால்மீன், comet
1.
உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள் – திரு 4
தன்னைச்சேர்ந்தவர்களைத் தாங்குகின்ற செருக்குடைய, வலிமையான திருவடிகளையும்
2.
பைம் தாள் குவளை தூ இதழ் கிள்ளி – திரு 22
பசிய தண்டினையுடைய குவளையின் தூய இதழ்களைக் கிள்ளி இட்டு
3.
பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள்
முரசு முழங்கு தானை மூவரும் கூடி – பொரு 53,54
பெருமை பொருந்தின செல்வத்தையும், பெரும் புகழையும், வலிய முயற்சியினையும்,
முரசு முழங்கும் படையினையும் உடைய மூவேந்தர்களும் சேர்ந்து
4.
பார்வை யாத்த பறை தாள் விளவின் – பெரும் 95
பார்வை மான் கட்டிய தேய்ந்த அடிப்பகுதியையுடைய விளாமரத்தின்
5.
குண்டு கண் அகழிய குறும் தாள் ஞாயில் – பதி 71/12
ஆழமான இடத்தையுடைய அகழியையும், குறுகிய படிகளையும் கொண்ட கோட்டை முகப்பினையுடைய
6.
தனி மணி இரட்டும் தாள் உடை கடிகை
நுழை நுதி நெடு வேல் குறும் படை மழவர்
முனை ஆ தந்து – அகம் 35/3-5
தனித்த ஒரு மணி மாறிமாறி ஒலிக்கும், பொருத்துதல் உள்ள கழுத்துப்பட்டை உடைய –
கூரிய முனை கொண்ட நீண்ட வேலை உடைய சிற்றரண் மழவர்கள் (ஓட்டிச் சென்ற) –
போரிட்டு மீட்ட – பசுக்களைக் கொணர்ந்து,
7.
குள_மீனோடும் தாள் புகையினும் – புறம் 395/35
குளமீன் என்னும் விண்மீனோடு, வால்மீன்களும் புகைந்து தோன்றினும்
|
தாழி |
தாழி – (பெ) 1. வாய் அகன்ற பெரிய மண் பானை
2. இறந்தோரை அடக்கஞ்செய்துவைக்கும் பாண்டம், burial urn
1.
கல்சேர்பு இருந்த கதுவாய் குரம்பை
தாழி முதல் கலித்த கோழ் இலை பருத்தி – அகம் 129/6,7
பாறையைச் சேர்ந்திருந்த சிதைவுற்ற குடிசையில்
தாழியில் தழைத்துவளர்ந்த கொழுவிய இலையையுடைய பருத்திச்செடி
2.
வியல் மலர் அகன் பொழில் ஈம தாழி
அகலிது ஆக வனைமோ – புறம் 256/5,6
பெரிய பரப்பினையுடைய அகன்ற பூமியிடத்துக் காட்டின்கண் முதுமக்கள் தாழியை
அகலம் அதிகமுடையதாகச் செய்வாயாக
|
தாழை |
தாழை – (பெ) 1. தெங்கு, தென்னை மரம், coconut tree
2. மணங்கமழும் நீண்ட மடல்களையுடைய ஒரு தாவரம், fragrant screw pine, Pandanus odoratissimus
3. தாழை மடலிலிருந்து உரிக்கப்படும் நார், fibre made from the leavs of screw pine
1.
வாழை முழு_முதல் துமிய தாழை
இளநீர் விழு குலை உதிர தாக்கி – திரு 307,308
வாழையின் பெரிய முதல் துணியத், தெங்கின்
இளநீரையுடைய சீரிய குலை உதிர, (அவ்விரண்டையும்)மோதி
2.
அலை நீர் தாழை அன்னம் பூப்பவும் – சிறு 146
அலையும் நீர்(கடற்கரையில் இருக்கும்)தாழை அன்னம்(போலே) பூக்கவும்
3.
வேழம் நிரைத்து வெண் கோடு விரைஇ
தாழை முடித்து தருப்பை வேய்ந்த
குறி இறை குரம்பை – பெரும் 263-265
மூங்கில்கோலை நெடு வரிசையாகச் சார்த்தி, வெண்மையான மரக்கொம்புகளை குறுக்காகப் பரப்பி,
தாழைநாரால் (இரண்டையும்)முடித்துத் தருப்பைப்புல்லை (அதன் மேல்)வேய்ந்த
குறுகிய இறப்பையுடைய குடிலின்
|
தாழ் |
தாழ் – 1. (வி) 1. நீண்டு தொங்கு, hang down
2. கீழ்நோக்கிவா, be low
3. அமிழ், sink, drown
4. தங்கு, stay, rest
5. ஆழமாக இரு, be deep
6. மேலிருந்து விழு, flow down
7. வளை, droop, bend
8. தாமதி, delay
9. பணி, be submissive
– 2. (பெ) தாழ்ப்பாள், bolt,latch
1.1
ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை
தாழ் பெரும் தட கை உயர்த்த யானை – திரு 157,158
நான்கு ஏந்திய கொம்புகளையும், அழகிய நடையினையும்,
(நிலம் வரை)தாழ்ந்த பெரிய வளைவினையுடைய கையினையும் உடைய புகழ்பெற்ற யானையின்
1.2
தளிர் புன்கின் தாழ் காவின் – பொரு 196
தளிரையுடைய புன்கினையும், தாழ்ந்த சோலைகளும்
1.3
கோடை நீடினும் குறைபடல் அறியா
தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும் – பெரும் 272,273
கோடைக்காலம் நீட்டித்து நின்றதாயினும் வற்றுதலை அறியாத,
தோள்களும் அமிழும் குளங்களினுடைய கரையைக் காத்திருக்கும்,
1.4
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல்
நிழல் தாழ் வார் மணல் நீர் முகத்து உறைப்ப – பெரும் 378,379
நூல் போலச் சூழ்ந்துகிடக்கின்ற அப்பம் பாலிலே கிடந்தவை போல்,
நிழல் கிடந்த வார்ந்த மணலிடத்துக் குழிகளில் நின்ற நீரிடத்தே மிக விழும்படி
1.5
குறும் கை இரும் புலி கோள் வல் ஏற்றை
பூ நுதல் இரும் பிடி புலம்ப தாக்கி
தாழ் நீர் நனம் தலை பெரும் களிறு அடூஉம் – நற் 36/1-3
குட்டையான கைகளையுடைய பெரிய புலியின் கொல்லுதலில் வல்ல ஆண்புலி
அழகிய நெற்றியையுடைய பெரிய பெண்யானை புலம்பும்படி தாக்கி
ஆழமான நீரையுடைய அகன்ற இடத்தில் பெரிய களிற்றினைக் கொல்லும்
1.6
தண் தாழ் அருவி அர_மகளிர் ஆடுபவே – கலி 40/23
குளிர்ச்சியாய் விழுகின்ற அருவியில் தேவ மகளிர் ஆடுகின்றனரே!
1.7
நறு வீ தாழ் புன்னை கீழ் நயந்து நீ அளித்த_கால் – கலி 136/13
நறிய மலர்கள் வளைந்துதொங்கும் புன்னை மரத்தின் கீழ் விருப்பத்துடன் நீ இவளிடம் அன்புசெய்தபோது
1.8
புனை புணை ஏற தாழ்த்ததை தளிர் இவை
நீரின் துவண்ட – பரி 6/68,69
அழகாகச் செய்யப்பட்ட தெப்பத்தில் ஏறி வரும்போது தாமதமானதால் தளிரான இவை
வையையின் நீர் காரணமாகத் துவண்டன
1.9
தாழ்ந்தாய் போல் வந்து தகவு இல செய்யாது – கலி 69/22
பணிந்தவன் போல் வந்து தகுதியில்லாதவற்றைச் செய்யாதே!
2.
போர் வாய் கதவம் தாழொடு துறப்ப – நெடு 63
பொருதுகின்ற வாயுடைய(இரட்டைக்)கதவுகள் தாழிட்டுக் கிடக்க
|
தாழ்ப்பி |
தாழ்ப்பி – (வி) தாமதப்படுத்து, cause to delay
அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும் – பரி 6/75
அருகில் உன் ஊர் இருந்தும், வைகையின் நீர்ப்பெருக்கினால் தெப்பத்தில் வருவதனால்
அது உன்னைத் தாமதப்படுத்துகின்றது,
|
தாவன |
தாவன – (பெ) பரந்தன, spreading
தண் கார் ஆலியின் தாவன உதிரும் – அகம் 101/16
குளிர்ந்த கார்காலத்து ஆலங்கட்டி போலப் பரந்தனவாய் உதிரும்
|
தாவல் |
தாவல் – (பெ) வருத்தம், distress
தாவல் உய்யுமோ மற்றே தாவாது
வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர் – பதி 41/17,18
வருந்துவதிலிருந்து உய்வு பெறுமோ? – தவறாமல்
தமது சூளுரையைச் செய்து முடிக்கும் பேச்சு மாறாத வீரர்கள்
|
தாவு |
தாவு – (வி) 1. (பெரும்பாலும் எதிர்மறைத் தொடர்களில்) கெடு, சிதைவுறு, perish, decay
2. பாய், leap
1
தாவா விருப்பொடு கன்று யாத்து_உழி செல்லும்
ஆ போல் படர் தக நாம் – கலி 81/36,37
குன்றாத விருப்புடன், கன்று கட்டப்பட்டிருக்கும் இடத்துக்கு விரைந்தோடும்
பசுவைப் போல், இனி நம்மைத் தேடி வரும்படியாக.
2.
தண்டு தழுவா தாவு நீர் வையையுள் – பரி 11/106
வாழைத்தண்டைத் தழுவிக்கொண்டு பாய்ந்து வரும் நீரைக் கொண்ட வையை ஆற்றில்
|
திகழ் |
திகழ் – (வி) 1.விளங்கு, ஒளிர், பிரகாசி, shine, glimmer, be lustrous
2. ஒன்றை வாய்க்கப்பெற்றிரு, be endowed with a distinguished trait
1
உரவு சினம் கனலும் ஒளி திகழ் நெடு வேல் – சிறு 102
எப்பொழுதும் மாறாத சினம் நின்றெரியும், ஒளியால் விளங்கும் நெடிய வேலினையும்,
2.
வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில் – அகம் 172/1
யானை முழங்கும் தன்மை வாய்ந்த பக்க மலையில்
|
திகிரி |
திகிரி – (பெ) 1. வட்டம், வட்ட வடிவம், circle, circular form
2. உருளை, சக்கரம், wheel
3. சக்கராயுதம், the discuss weapon
4. அரசாணை என்ற அரச சக்கரம்,royal authority
5. சூரியன், the sun
6. குயவர் சக்கரம், potter’s wheel
1.
செக்கர் அம் புள்ளி திகிரி அலவனொடு யான் – கலி 146/23
சிவந்த அழகிய புள்ளியைக் கொண்டு வட்டமாக இருக்கிற நண்டுகள் திரிகிற இடத்தில் நான்
2.
நெடும் தேர் திகிரி தாய வியன் களத்து – பதி 35/4
நெடிய தேர்களின் சக்கரங்கள் சிதறிப் பரவும் அகன்ற போர்க்களத்தில்,
3.
கண் பொரு திகிரி கமழ் குரல் துழாஅய்
அலங்கல் செல்வன் சேவடி பரவி – பதி 31/8,9
கண்ணைக் கூசவைக்கும் சக்கரப்படையினையும், கமழ்கின்ற துளசிக் கொத்தினைக்கொண்ட
மாலையினையும் உடைய திருமாலின் திருவடிகளைப் புகழ்ந்து வணங்கி,
4.
இலங்கு மணி மிடைந்த பொலம் கல திகிரி
கடல்_அக வரைப்பின் இ பொழில் முழுது ஆண்ட நின் – பதி 14/18,19
ஒளிர்கின்ற மணிகள் செறிந்த பொன்னால் செய்யப்பட்ட அரசாணையாகிய அரச சக்கரத்தைக் கொண்டு
கடல் சூழ்ந்த இந்த நிலவுலகின் இந்தத் தமிழகம் முழுவதையும் ஆண்ட உன்
5.
விசும்பு உடன் விளங்கும் விரை செலல் திகிரி
கடும் கதிர் எறித்த விடுவாய் நிறைய – அகம் 53/2,3
வானம் முழுவதிலும் ஒளிவிட்டு, வேகமாகச் செல்லும் ஞாயிற்றின்
கடுமையான கதிர்கள் எறித்து உண்டாக்கிய வெடிப்புகள் நிறையும்படியாக,
6.
வனை கல திகிரியின் குமிழி சுழலும் – மலை 474
குயவர்)வனையப் பயன்படுத்தும் கருவியின் சக்கரத்தைப் போல நீர்க்குமிழி சுழலும்
|
திகை |
திகை – 1. (வி) செயலற்று நில், bewildered
2. (பெ) திசை, direction
1.
வாய் வாளா நின்றாள்
செறி நகை சித்தம் திகைத்து – பரி 20/46,47
வாய்பேச முடியாமல் நின்றாள்,
செறிவான பற்களைக் கொண்ட தலைவி, அதைக் கேட்டுச் சித்தம் திகைத்து
2.
திகை முழுது கமழ முகில் அகடு கழி மதியின் – பரி 10/74
திசைகள் முழுதும் கமழ, முகிலின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளிவரும் திங்களைப் போல்
|
திங்கள் |
திங்கள் – (பெ) 1. சந்திரன், moon
2. மாதம், month
1.
பன் மீன் நடுவண் திங்கள் போலவும் – மது 769
பல விண்மீன்களுக்கு நடுவே சந்திரனைப் போன்றும்
2.
நின் நாள் திங்கள் அனைய ஆக திங்கள்
யாண்டு ஓர் அனைய ஆக – பதி 90/51,52
உனது ஒருநாள் ஒரு மாதத்தைப் போல் இருப்பதாக, உனது ஒரு மாதம்
ஓர் ஆண்டைப் போல் இருப்பதாக
|
திடன் |
|
திட்டை |
திட்டை – (பெ) திட்டு, மேட்டு நிலம், raised ground
வரி மணல் அகன் திட்டை
இரும் கிளை இனன் ஒக்கல்
கரும் தொழில் கலி மாக்கள்
கடல் இறவின் சூடு தின்றும் – பட் 60-63
அறல் சேர்ந்த மணல் கொண்ட அகன்ற திட்டுகளில்,
பெரும்குடும்பத்தவரும், ஓரே இனத்துச் சுற்றத்தவருமான,
வலிய தொழில் செய்யும் செருக்குள்ள ஆடவர்
கடல் இறால்களின் (தசை)சுடப்பட்டதைத் தின்றும்,
|
திட்பம் |
திட்பம் – (பெ) திடம், உண்மை, உறுதி, solidity, substantiality, certainty
ஆகுவது அறியும் முதுவாய் வேல
கூறுக மாதோ நின் கழங்கின் திட்பம் – அகம் 195/14,15
நடக்கப்போவதை அறிந்து கூறும் அறிவு வாய்ந்த வேலனே,
கூறுவாயாக, உனது கழங்கின் திண்ணிய குறியை
|
திணி |
திணி – 1. (வி) செறிவாகு, be dense
– 2.(பெ) திட்பம், திண்மை, Solidity, strength, firmness
1.
திணி மணல் அடைகரை அலவன் ஆட்டி – அகம் 280/3
செறிவான மணலையுடைய கடற்கரையில் நண்டினை ஓட்டி விளையாடி
2.
வல வயின் உயரிய பலர் புகழ் திணி தோள் – திரு 152
வலப்பக்கத்தே (வெற்றிக்கொடியாக)உயர்த்திய, பலரும் புகழ்கின்ற திண்மையுடைய தோள்களையும்,
|
திணை |
திணை – (பெ) 1. இடம், சூழல், place, region
2. குலம், tribe, race, clan
3. ஒழுக்கம், conduct, custom
4. வீடு, house
5. பூமி, earth
6. திண்ணை என்ற சொல்லின் இடைக்குறை, reduced form of the word ‘thiNNai’
1.
கானவர் மருதம் பாட அகவர்
நீல் நிற முல்லை பல் திணை நுவல – பொரு 220,221
முல்லை நிலத்து மக்கள் மருதப்பண்ணைப் பாட, உழவர்கள்
நீல நிறமுடைய முல்லைக்கொடி படர்ந்த பலவாகிய காட்டுநிலத்தைக் கொண்டாடவும்
தெறுவது அம்ம இ திணை பிறத்தல்லே – குறு 45/5
துயரத்தருவது இந்த மருத நிலத்தில் பிறப்பது
ஐம் பால் திணையும் கவினி அமைவர – மது 326
ஐந்துவகை நிலங்களும் அழகுபெறப் பொருந்துதல் தோன்ற
2.
வசை இல் வான் திணை புரையோர் கடும்பொடு
விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் – குறி 205,206
குற்றமில்லாத உயர்குடிப்பிறந்த உயர்ந்தோர் (தம்)சுற்றத்தோடு
விருந்தினராக உண்டு மீந்துபோன உணவை
3
மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர் – மலை 401
நலம்சிறந்து மிகுகின்ற அவனுடைய தொன்றுதொட்ட ஒழுங்குமுறைப்பட்ட தொன்மையான ஊர்களுக்கு
4.
திணை பிரி புதல்வர்
கயம் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ – பரி 16/7,8
வீட்டைவிட்டுத் தனியே வந்து நீராடும் சிறுவரின்
மெல்லிய தலையுச்சியில் இருக்கும் முஞ்சம் என்னும் அணிகலனோடு சேர்ந்துகொள்ள
5.
அளக்கர் திணை விளக்கு ஆக – புறம் 229/10
கடலால் சூழப்பட்ட பூமிக்கு விளக்காக
6.
ஒண் சுவர் நல் இல் உயர் திணை இருந்து – பட் 263
(சாந்து பூசி)அழகுமிக்க சுவர்களையுடைய நல்ல இல்லங்களின் உயர்ந்த திண்ணைகளிலேயிருந்து
|
திண் |
திண் – (பெ.அ) 1. உறுதியான, hard, compact, firm
2. வலிமையான, strong, robust
1.
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள் – முல் 46
இரவைப் பகலாக்கும், திண்ணிய கைப்பிடியையுடைய ஒளிவிடும் வாளை
2.
திண் தேர் பிரம்பின் புரளும் தானை – மது 435
திண்ணிய தேரின் பிரம்பின்கண் புரளுகின்ற முன்றானையினையும்,
|
திண்ணை |
திண்ணை – (பெ) வீட்டின் வேதிகை, a raised platform or veranda in a house
குறும் தொடை நெடும் படிக்கால்
கொடும் திண்ணை – பட் 142,143
ஒன்றற்கொன்று)நெருக்கமாய் அமைந்த படிகளையுடைய நீண்ட ஏணிச்சட்டங்கள்(சார்த்தின)
சுற்றுத் திண்ணையினையும்
|
திதலை |
திதலை – (பெ)
1.முதலில் திதலை என்றால் என்னவென்று பார்ப்போம்.
வேப்பு நனை அன்ன நெடும் கண் நீர் ஞெண்டு
இரை தேர் வெண்_குருகு அஞ்சி அயலது
ஒலித்த பகன்றை இரும் சேற்று அள்ளல்
திதலையின் வரிப்ப ஓடி விரைந்து தன்
நீர் மலி மண் அளை செறியும் – அகம் 8-12
வேம்பின் அரும்பினைப் போன்ற நீண்ட கண்ணினையுடைய நீர் நண்டானது
இரையினைத் தேடித்திரியும் வெள்ளைக் கொக்குக்கு அஞ்சி, அருகிலிருக்கும்
தழைத்த பகன்றையினை உடைய கரிய சேறும் சகதியுமாய் இருக்கும் தரையில்
திதலையைப் போன்று வரிகள் உண்டாக ஓடி, விரைவாகச் சென்று, தன்
ஈரம் மிக்க மண் வளையுள் பதுங்கிக்கொள்ளும்.
இங்குள்ள ஒவ்வொரு சொல்லையும் உற்றுப்பார்க்கவேண்டும்.
நண்டுக்கு ஒரு பக்கத்துக்கு நான்கு என மொத்தம் எட்டுக்கால்கள் உண்டு. அவற்றைத்தவிர
இரண்டு கவட்டைபாய்ந்த முன்னங்கைகளும் உண்டு. இவற்றின் நுனியில் கூரான நகங்கள் உண்டு.
இந்த நண்டு, முன்னால், பின்னால், பக்கவாட்டில் என்று எத்திசையிலும் செல்லக்கூடியது.
இது நடப்பதோ சேற்று அள்ளல், அதாவது குழைசேறு. வைத்தவுடன் கூரான நகங்கள் பொதக்கென்று
ஆழ்ந்துவிடும். இது ஒரு இரைதேடும் கொக்கைக்கண்டு அஞ்சி ஓடுகிறது. எனவே வளைந்து வளைந்து
செல்லாமல் நேராக ஓடித் தன் வளைக்குள் புகுந்துவிடும். அப்போது அந்தக்கால்கள் ஏற்படுத்தும் தடத்தைக்
கற்பனை செய்து பாருங்கள். நகங்கள் சேற்றில் ஆழும்போது அவை ஏற்படுத்தும் பலவான புள்ளிகள். அந்த
நகங்களை விரைவாக எடுத்து முன்னே வைக்கும்போது ஏற்படும் சிறிய நேர்கோடுகள், அந்தப் புள்ளிகளை
இணைத்தவாறு செல்லும். அதுவே திதலை. இந்தப் படம் இதனை ஓரளவு விளக்கும்.
2. இத்தகைய புள்ளிகளாகிய வரி போன்ற அமைப்பு பெண்களின் மேனியில் அரும்புகின்றது என்று
சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை
வார்ந்து இலங்கு வால் எயிற்று பொலிந்த தாஅர்
சில் வளை பல் கூந்தலளே அவளே – நற் 198/6-8
வரிகள் பொருந்திய உயர்ந்துநிற்கும் அல்குலில் அரும்பிய திதலையும்
நேராக விளங்கும் வெண்மையான பற்களும், அழகுள்ள மாலையும்,
ஒருசில வளையல்களும், நிறைந்த கூந்தலும் உடையவள் அவள்;
அரும்புதல் என்பது முகிழ்த்து உருவாதல்.
3. இந்தத் திதலை பெண்களின் மேனியில் எவ்வாறு தோற்றமளிக்கிறது என்று பார்ப்போம்.
3.1
பொன் உரை கடுக்கும் திதலையர் – திரு 145
பொன்னை உரைத்துப்பார்க்குபோது ஏற்படும் தடம் போன்ற திதலையையுடையவர்;
பொன்னை எவரும் நேர்கோட்டில்தான் உரைத்துப்பார்ப்பர். அந்த உரைகல் சொரசொரப்பானது. அதில்
பொன்னைத் தேய்க்குப்போது புள்ளிகளாலாகிய ஒரு நேர்கோடு உருவாகும். மேலும் உண்மையான
தங்கமாயிருந்தால் மினுமினுக்கும். எனவே மினுமினுப்புடன் கூடிய புள்ளிகளாலான கோடுகளின்
அமைப்பே திதலை என்றாகிறது.
3.2
மாவின்
தளிர் ஏர் அன்ன மேனி, தளிர் புறத்து
ஈர்க்கின் அரும்பிய திதலையர் – மது 706-708
மாமரத்தின்
தளிரினது அழகை ஒத்த நிறத்தினையும், தளிரினது புறத்தில்
ஈர்க்குப்போலத் தோன்றிய திதலையையும் உடையர்
வெற்றிலையை நீளவாக்கில் மடித்தால் வெளிப்புறத்தில் ஒரு நீண்ட காம்பு தெரியுமல்லவா! அதுதான் ஈர்க்கு.
அதைப்போன்ற மாந்தளிரின் ஈர்க்குப் போன்றதாம் இந்தத் திதலை. பொதுவாக மாந்தளிரின் நிறத்தைப்
பெண்களின் மேனி நிறத்துக்கு ஒப்பிடுவர். அந்தத் தளிரின் ஈர்க்குப் போன்றதாம் பெண்களின் தளிர் மேனியில்
தோன்றும் திதலை. இந்த ஈர்க்கு, பொன்னிறத்தில் நீண்டு இருப்பதைப் படத்தில் பாருங்கள்.
3.3
மா ஈன்ற தளிர் மிசை மாயவள் திதலை போல்
ஆய் இதழ் பன் மலர் ஐய கொங்கு உறைத்தர – கலி 29/7,8
மா மரம் துளிர்விட்ட தளிரின் மேல், மாமை நிற மகளிரின் அழகுத் தேமல் போல,
அழகிய இதழ்களைக் கொண்ட பலவான மலர்களின் மென்மையான மகரந்தப்பொடிகள் படிந்திருக்க,
மாநிற மகளிரின் மேனியில் திதலையானது, மாந்தளிரின் மேல் மாம்பூக்களின் மரந்தப்பொடிகள் உதிர்ந்துகிடப்பது
போன்று இருப்பதாகக் கலித்தொகை குறிப்பிடுகிறது.
எந்த மரத்தின் பூவாக இருந்தாலும் அதன் தாது பொன்னிறத்தில்தான் இருக்கும்.
இந்த மாந்தளிர்கள் தொங்கியபடி இருப்பதை மேலுள்ள படம் காண்பிக்கிறது. அதன் மீது உதிர்ந்த பூந்தாதுக்கள்
சரிந்து துகள்களாலான ஒரு நேர்கோடாகப் பொன்னிறத்தில் மின்னிக்கொண்டிருக்கும் அல்லவா! அதுவே திதலை.
4.
இந்தத் திதலை பெண்களின் மேனியில் எங்கெங்கு தோன்றுகின்றன என்பதையும் சங்க இலக்கியங்கள்
குறிப்பிடுகின்றன.
4.1
திதலையைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் 29 இடங்களில் காணப்படுகின்றன.
அவற்றில் 15 இடங்களில் திதலை என்பது அல்குலில் காணப்படுவதாகக் குறிப்புகள் உள்ளன.
அவற்றில் 13 இடங்களில் திதலை அல்குல் என்ற தொடர் இடம்பெற்றுள்ளது.
அவற்றில் சில.
திதலை அல்குல் முது பெண்டு ஆகி – நற் 370/6
திதலை அல்குல் என் மாமை கவினே – குறு 27/5
திதலை அல்குல் நின் மகள் – ஐங் 29/4
திதலை அல்குல் துயல்வரும் கூந்தல் – ஐங் 72/2
திதலை அல்குல் எம் காதலி – அகம் 54/21
இங்கே அல்குல் என்பது பெண்குறி என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. அல்குல்
என்பது இடுப்புக்குச் சற்றே கீழ் உள்ள பகுதி.
அது இடுப்பைச் சுற்றி எந்த இடமாகவேண்டுமானாலும் இருக்கலாம்.
கொள்வீர் அல்குல் ஓர் கோவணம் – தேவா-சம்:582/2
(அரையிற் கோவணம் உடுத்தியவராய் விளங்கும் கள்வரே)
என்கிற சம்பந்தர் தேவாரத்தில் அல்குலில் கோவணம் அணிந்தவராக இறைவனை விளிக்கிறார் சம்பந்தர்.
இடுப்பில் கயிறுகட்டி, அதில் கோவணத்தைச் செருகி, முன்பக்க மானத்தை மறைத்துப் பின்பக்கமாக இழுத்துப்
புட்டத்திற்கு மேலே செருகியிருப்பர். எனவே, அல்குல் என்பது அடிவயிறு, அல்லது அடிமுதுகு என்றாகிறது.
திதலை அல்குல் துயல்வரும் கூந்தல் – ஐங் 72/2
என்ற அடி, அல்குலில் கூந்தல் கிடந்து அசையும் என்கிறது.
குட்டையான கூந்தல் முதுகில் கிடந்து அசைவதைப் பற்றி யாரும் பாராட்டிப்பேசமாட்டார்கள். நீண்ட கூந்தல்
முதுகுக்கும் கீழே தொங்கி, இடுப்புக்கும் கீழே எழுந்துநிற்கும் புட்டத்தின் மேல் பட்டு, நடக்கும்போது
முன்னும் பின்னும், பக்கவாட்டிலும் அசைவதே துயல்வருதல். இதைத்தான்
கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை – நற் 198/6
என்கிறது நற்றிணை.
எனவே அல்குல் பெரும்பாலும் பெண்களின் இடுப்புக்குக்கீழான பின்பிறம் என்பதே சரி எனப்படுகிறது.
எனவே, மிகப்பெரும்பாலும் பெண்களின் அடிஇடுப்பைச் சுற்றி அல்குல் அரும்புவதாக அறிகிறோம்.
4.2
அடுத்து, திதலை என்பது பெண்களின் மார்புப்பகுதியிலும் காணப்படும் என்கின்றன இலக்கியங்கள்.
திதலை மென் முலை தீம் பால் பிலிற்ற
புதல்வன் புல்லி புனிறு நாறும்மே – நற் 380/3,4
தேமல் படிந்த மென்மையான கொங்கைகளின் இனிய பால் சுரந்து வழிய
புதல்வனை அணைத்துக்கொள்வதால் புனிற்றுப் புலவு நாறுகின்றது;
புதல்வன் தடுத்த பாலொடு தடைஇ
திதலை அணிந்த தேம் கொள் மென் முலை – அகம் 26/12,13
புதல்வனுக்கே திகட்டும் பாலுடன் சரிந்து
அழகுத் தேமலை அணிந்த இனிமை கொண்ட மெல்லிய கொங்கைகள்
என்ற அடிகளால், பிள்ளைபெற்ற பெண்களின் மார்புப்பகுதியில் திதலை அரும்புவதாக அறிகிறோம்.
திதலை செய் பூண் முலை மங்கை_பங்கா என் சிவகதியே – திருவா:6 41/4
என்ற திருவாசக அடியும் இதனை உறுதிப்படுத்தும்.
4.3
அடுத்து, பெண்களின் வயிற்றுப்பகுதியிலும் திதலை அரும்புவதாக அறிகிறோம்.
புதல்வன் பயந்த திதலை அம் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி – அகம் 86/11,12
மகனைப் பெற்ற திதலையையுடைய அழகிய வயிற்றினையுடைய
தூய அணிகலன்களையுடைய மகளிர் நால்வர் கூடிநின்று
வரி கிளர் பணை தோள் வயிறு அணி திதலை
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில் – அகம் 245/8,9
வரி விளங்கும் பருத்த தோளினையும், வயிற்றில் அணிந்த திதலையையும் உடைய
கள்விற்கும் மகளிர், இருக்கின்ற மனையகத்தில்
என்ற அகநானூற்று அடிகள் இதற்குச் சான்று பகர்கின்றன. இந்த மகளிர் பிள்ளைபெற்று பலநாட்கள்
ஆனவர்கள்.
பசலை பாய்ந்த திதலை தித்தி
அசைந்த அம் வயிறு அடைய தாழ்ந்த – உஞ்ஞை 43/128,129
திதலை அம் வயிறு அங்கையின் அதுக்கி – உஞ்ஞை 44/25
என்ற பெருங்கதை அடிகளும் இதனை மெய்ப்பிக்கின்றன.
5.
அடுத்து எவ்வகைப் பெண்களுக்கு இந்தத் திதலை அரும்பும் என்று காண்போம்.
5.1
முதலாவதாக, பேறுகாலத்துக்குச் சற்றுப்பிந்திய பெண்களுக்கு மார்பில் இந்தத்
திதலை அரும்பும் என்று முன்னர்க் கண்டோம்.
5.1
அடுத்து, பிள்ளை பெற்றுச் சில ஆண்டுகளான பெண்களுக்கு வயிற்றில் இந்தத்
திதலை அரும்பும் என்றும் முன்னர்க் கண்டோம்.
5.3
புதல்வன் ஈன்று என பெயர் பெயர்த்து அம் வரி
திதலை அல்குல் முது பெண்டு ஆகி – நற் 370/5,6
புதல்வனை ஈன்றதனால் தாய் என்னும் வேறொரு பெயரைப் பெற்று, அழகிய வரிகளையுடைய
திதலையை உடைய அல்குலுடன் முதும்பெண் ஆகி
என்ற அடிகள் ஈன்று அண்மைத்தான பெண்களுக்கு அல்குலிலும் திதலை தோன்றும் என்று
உணர்த்துகின்றன. இங்கு, அம் வரி திதலை என்ற சொற்கள், திதலை என்பது (பொன்னைத் தேய்த்த)
அழகிய கோடு போன்றது என்று நாம் கண்டதை உறுதிசெய்கின்றது.
5.4
திதலை அல்குல் பெரும் தோள் குறு_மகட்கு – நற் 6/4
திதலை அல்குல் குறு_மகள் – நற் 77/11
திதலை அல்குல் குறு_மகள் அவனொடு
சென்று பிறள் ஆகிய அளவை – அகம் 189/9,10
இங்கு, குறுமகள் என்பது இளம்பெண்ணைக் குறிக்கும். இவள் திருமணப்பருவத்து இளம்பெண்.
இவளது அல்குலிலும் திதலை தோன்றும் என அறிகிறோம்.
6.
அடுத்து, இந்தத் திதலை என்பது மகளிரின் மேனிக்கு அழகுசேர்ப்பது என்றும், பாராட்டப்படுவது என்றும்
இலக்கியங்கள் பகர்கின்றன.
கண்ணும் தோளும் தண் நறும் கதுப்பும்
திதலை அல்குலும் பல பாராட்டி
நெருநலும் இவணர்-மன்னே – நற் 84/1-3
என் கண்ணையும், தோளையும், குளிர்ச்சியான நறிய கூந்தலையும்
திதலை படர்ந்த அல்குலையும் பலவாறு பாராட்டி
நேற்றுக்கூட இவ்விடம் இருந்தார், நிச்சயமாக
கடல் ஆடு வியல் இடை பேர் அணி பொலிந்த
திதலை அல்குல் நலம் பாராட்டிய
வருமே தோழி வார் மணல் சேர்ப்பன் – நற் 307/3-5
கடலாட்டுவிழா நடைபெறும் அகன்ற இடத்தில், பெருமைமிக்க அணிகளால் பொலிவுபெற்ற
உன் தேமல் படர்ந்த அல்குலின் அழகைப் பாராட்டுவதற்கு
வருகின்றான் தோழி! நீண்ட மணல் பரந்த நெய்தல்நிலத் தலைவன்!
காதல்கொண்ட தலைவர்களால், இந்தத் திதலை பாராட்டப்படுவது மட்டுமன்று. காதல்வயப்பட்டு,
பிரிவுத்துன்பத்தால் வாடும் தலைவிகளும் பிரிவால் வாடும் தம் கவின்பெறு திதலையை எண்ணிப்
பெருமூச்சு விடுவதும் உண்டு எனக் காண்கிறோம்.
கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கு ஆங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமை கவினே – குறு 27
கன்றும் உண்ணாமல், பாத்திரத்திலும் வீழாமல்
நல்ல பசுவின் இனிய பால் நிலத்தில் சிந்தியதைப் போல்
எனக்கும் பயன்படாமல், என் தலைவனுக்கும் இன்பம் செய்யாமல்,
பசலைநோய் உண்பதை விரும்பும்
திதலை படர்ந்த என் அழகிய பின்புறத்தின் மாந்தளிர் போன்ற அழகினை.
7.
அடுத்து, திதலை என்பது ஆகுபெயராகவோ, ஒப்புப்பொருளாகவோ பெண்களின் மேனி சார்ந்ததாக இல்லாமலும்
சங்க இலக்கியத்தில் ஓரிடத்தில் வருவதைக் காண்கிறோம்.
திதலை எஃகின் சேந்தன் தந்தை
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி – நற் 190/3,4
புள்ளிகள் படர்ந்த வேலையுமுடைய சேந்தன் என்பானின் தந்தையாகிய,
தேன் கமழ்கின்ற விரிந்த மலராலான மாலையையும், சிறப்பாகச் செய்யப்பட்ட தேரையும் உடைய அழிசி
பற்பல காரணங்களால், பெண்களின் மேனியில் காணப்படும் பொன்னிற மாற்றம்தான் திதலை என்றிருக்க,
ஒரு வேலுக்கு எவ்வாறு திதலை அரும்பும்?
இங்கே, திதலை எஃகின் என்ற தொடரை தீத்தலை எஃகின் என்றுபாடம் கொள்வார் ஔவை துரைசாமியார்.
ஆனால், மிகப் பல ஆசிரியர்கள் திதலை எஃகின் என்றே பாடம் கொண்டு தேமல் படர்ந்த வேல் என்று பொருள்
கொள்கின்றனர். சிலவகை இரும்புகளைத் தேய்க்கும்போது புள்ளிகளோடு கூடிய வரிகள் தோன்றலாம். ஆனால்
அதனைப் புலவர் விதந்து குறிப்பிடுவது ஏன்? பகைவரைக் குத்தியதால் வேலில் பட்ட குருதி வழிந்த தடம்
துடைக்கப்படாமல் காய்ந்துபோய், பொன் உரை போலத் தோன்றுவதால் அதனையும் திதலை எஃகு என்கிறார்
புலவர் என்று ஓர் அருமையான விளக்கம் தருகிறார் புலியூர்க்கேசிகனார்.
இதுகாறும் கண்டவற்றால், திதலை என்பது பெண்களின் மேனியில் சின்னஞ்சிறு பொன்னிறப் புள்ளிகளால்
ஏற்பட்ட வரிவரியான அமைப்பு என்பது தெரிய வருகிறது.
இதனை,
1. தேமல்., Yellow spots on the skin, considered beautiful in women;
2. ஈன்ற பெண்களுக்குள்ள வெளுப்பு நிறம். Pale complexion of women after confinement;
என்கிறது தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon).
|
திதி |
திதி – (பெ) காசியபன் என்பவனின் மனைவி, அசுரர், மருத்துக்கள் இவர்களின் தாய்
The wife of Kāšyapa and mother of Asuras and Maruts;
திதியின் சிறாரும் விதியின் மக்களும் – பரி 3/6
திதியின் சிறுவர்களாகிய அசுரர்களும், விதியின் மக்களாகிய சூரியன் பன்னிருவரும்
|
தித்தன் |
தித்தன் – (பெ) ஒரு சோழ மன்னன், a chozha king
இவன் உறந்தை எனப்படும் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்த சோழமன்னன்.
இவனது மகன் வெளியன். இவனைத் தித்தன் வெளியன் என்பர்.
இவனுக்கு ஐயை என்ற ஓர் மகள் உண்டு.
இழை அணி பணைத்தோள் ஐயை தந்தை
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன்
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்
கழை நிலை பெறாஅ காவிரி நீத்தம்
குழை மாண் ஒள்_இழை நீ வெய்யோளொடு
வேழ வெண் புணை தழீஇ பூழியர்
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்து ஆங்கு
ஏந்து எழில் ஆகத்து பூ தார் குழைய
நெருநல் ஆடினை புனலே – அகம் 6/3-11
நகைகள் அணிந்த, மூங்கில் போன்ற தோள் உடைய, ஐயை-இன் தந்தையாகிய,
மழை போன்று வளம்தரும் மிக்க வண்மையுடைய தித்தனின்,
குவியல் நெல்லையுடைய உறந்தை நகரில்
ஓடக்கோலும் நிலைத்து நில்லாத காவிரி ஆற்றின் நீர்ப்பெருக்கில்,
குழை முதலான சிறந்த அணிகளையுடைய நீ விரும்பியவளுடன்
வேழக் கரும்பினாலான வெண்மையான தெப்பத்தில் ஏறி, பூழியரின்
குளத்தை நாடிச் செல்லும் யானையைப் போன்று முகமலர்ச்சியுற்று,
உயர்ந்த அழகிய மார்பிலுள்ள மாலை குழைந்துபோகும்படி,
நேற்று புனலாடினாய்
என்ற அடிகளால், இவன் காலத்தில் உறையூர்க் காவிரியாற்றுத் துறையில் நீராட்டுவிழா
சீரும் சிறப்புமாக நடைபெற்றது என அறிகிறோம்.
|
தித்தன் வெளியன் |
தித்தன் வெளியன் – (பெ) தித்தன் என்ற சோழ மன்னனின் மகனான வெளியன்.
a son of the chozha king thiththan.
சினம் கெழு தானை தித்தன் வெளியன்
இரங்கு நீர் பரப்பின் கானல் அம் பெருந்துறை – அகம் 152/5,6
சினம் மிக்க படையினையுடைய தித்தன் வெளியன் என்பானது
ஒலிக்கும் நீர்ப்பரப்பினையுடைய கானல் அம் பெருந்துறை என்னும் பட்டினத்தில்,
என்ற அடிகளிலிருந்து, இவன் தன் தந்தையின் காலத்தில் கானலம் பெருந்துறையில் ஆட்சி செய்தான்
என அறியலாம். கானலம் பெருந்துறை என்பது ஒரு கடற்கரைப்பட்டினம். இதனைப் புகார் என்பர்.
|
தித்தி |
தித்தி – (பெ) அழகுத்தேமல், நுண்ணிய மஞ்சள் நிறப் புள்ளிகள், fine yellow spots on the skin of the body
1.
குறும் பொறை அயல நெடும் தாள் வேங்கை
அம் பூ தாது உக்கு அன்ன
நுண் பல் தித்தி மாஅயோளே – நற் 157/8-10
சிறிய குன்றுகளை அடுத்து இருக்கும் நீண்ட அடிமரத்தையுடைய வேங்கைமரத்தின்
அழகிய பூந்தாதுக்கள் உதிர்ந்ததைப் போல
நுண்ணிய பலவான தேமற்புள்ளிகள் பரந்த மாநிறத்தவளான நம் தலைவி
பெண்களின் மார்புப்பகுதியில் தோன்றும் சுணங்கு என்ற புள்ளிகள் வேங்கை மரத்துப் பூக்களைப்
போன்று சற்று பெரிதானவை.
தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய் – கலி 57/17
என்ற அடி இதனை அறிவுறுத்தும். ஆனால் தித்தி என்ற புள்ளிகள் வேங்கை மலரின் நுண்ணிய
தாதுக்கள் போன்றவை என்பதை
வேங்கை
அம் பூ தாது உக்கு அன்ன
நுண் பல் தித்தி
என்ற சொற்கள் விளக்குகின்றன.
பார்க்க சுணங்கு
2.
கம்மென
எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை
விதிர்த்து விட்டு அன்ன அம் நுண் சுணங்கின் – நற் 160/3-5
மென்மையாக
மேன்மேலே தோன்றிய தித்தியையும், எழுச்சியையுடைய இளைய அழகிய கொங்கைகளின் மேலே
அள்ளித்தெளித்தாற்போன்ற அழகிய நுண்ணிய தேமலையும்
தித்தி என்பது வயிற்றின்மேலே தோன்றுவது என்பர் பின்னத்தூரார்.
ஆனால், ஔவை.துரைசாமி அவர்கள், இதற்கு
மெல்லென
முற்பட மேலே பரந்த தித்திபொருந்திய எழுகின்ற இளைய அழகிய முலைகளையும்
விரலால் தெறித்தாற் போல் பரவிய பொன் போலும் தேமலையும்
என்று உரை கூறுவார்.
இவர் தித்தி என்பது வரிவரியாகத் தோன்றுவது என்றும், சந்தனக் குழம்பைக் கைவிரலால்
தெறித்தாற்போலத் தோன்றுவது சுணங்கு என்றும் கூறுவார்.
எதிர்த்த தித்தி முற்றா முலையள் – நற் 312/7
என்ற நற்றிணை அடியும் எதிர்த்த தித்தி என்பதால், இது மேலேறிப் படரும் தன்மையுள்ளது
என்பது தெளிவாகிறது. எனவே தித்தி என்பது வயிற்றின் அடிப்பாகத்தில் சிலவாகவும்,
மேலே படர்ந்து விரிந்து பலவாகவும் இருக்கும் என்பது தெளிவாகிறது.
3.
அய வெள்ளாம்பல் அம் பகை நெறி தழை
தித்தி குறங்கின் ஊழ் மாறு அலைப்ப – குறு 293/5,6
நீரில் வளர்ந்த வெள்ளாம்பலின் அழகுக்குப் பகையாகிய முழு நெறிப்பையுடைய தழையுடை
தேமலையுடைய தொடையில் மாறிமாறி அலைக்க
தித்தி என்ற இவ்வகைத் தேமல், தொடைப்பகுதியிலும் காணப்படும் என்பதை மேலே கண்ட
அடிகள் நிறுவுகின்றன. குறங்கு என்பது தொடை.
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்
தித்தி குறங்கில் திருந்த உரிஞ – அகம் 385/9,10
வழியிலுள்ள ஆலமரத்தின் ஆடி அசைகின்ற நெடிய விழுது
தேமல் பொருந்திய தனது துடையில் நன்கு உராய்ந்திட
என்ற அடிகளும், தித்தி தொடைப்பகுதியிலும் படர்ந்திருக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
4.
குண்டு நீர் தாமரை கொங்கின் அன்ன
நுண் பல் தித்தி மாஅயோயே – குறு 300/3,4
ஆழமான நீரில் உள்ள தாமரைமலரின் பூந்தாது போன்ற
நுண்ணிய பல தேமல் – இவற்றையுடைய மாநிறத்தவளே!
இந்தத் தித்தி என்பது வேங்கை மலரின் நுண்ணிய தாதுக்கள் போல் இருக்கும் என்று முன்பு கண்டோம்.
மேலே கண்ட இந்தக் குறுந்தொகை அடிகள், தித்தி என்பது தாமரைமலரின் பூந்தாதுக்கள் போன்று
நுண்ணியதாகவும்,பலவாகவும் இருக்கும் என்று தெரிவிக்கின்றன. மேலும் இவை மேனியில் எந்தவோர்
இடத்திலும் காணப்படும் என்றும் உணர்த்துகின்றன.
5.
உயவும் கோதை ஊரல் அம் தித்தி
ஈர் இதழ் மழை கண் பேர் இயல் அரிவை – பதி 52/17,18
அங்குமிங்கும் அலைப்பதால் வருந்தும் மாலையினையும், மேனியில் ஊர்ந்துநிற்கும் அழகிய தேமலையும்,
ஈரப்பசையுள்ள இதழ்களைக் கொண்ட குளிர்ந்த கண்களையும், பெருமை பொருந்திய இயல்பினையும்
உடைய உன் மனைவி
ஊரல் அம் வாய் உருத்த தித்தி – அகம் 326/1
ஊரலாகிய அழகுவாய்ந்த உருப்பெற்ற தேமல்.
என்ற அகநானூற்று அடிக்கு ஊரலாகிய தித்தி என்று பொருள்கொள்வர் வேங்கடசாமி நாட்டார்.
இவர் ஊரல் என்பதுவும் இரு தேமல் வகை என்பார்.
6.
நுணங்கு எழில் ஒண் தித்தி நுழை நொசி மட மருங்குல் – கலி 60/3
நுட்பமான அழகிய ஒளிவிடும் புள்ளிகளைக் கொண்ட மிகவும் சிறியதாக மெலிந்திருக்கும் இளமை ததும்பும்
இடையினையும்
என்ற கலித்தொகை அடி, தித்தி என்பது ஒளிவிடும் புள்ளி என்கிறது. இது இடைப்பகுதியிலும் காணப்படும்.
7.
மென் சிறை வண்டின் தண் கமழ் பூ துணர்
தாது இன் துவலை தளிர் வார்ந்து அன்ன
அம் கலுழ் மாமை கிளைஇய
நுண் பல் தித்தி மாஅயோளே – அகம் 41/13-16
மென் சிறகுடைய வண்டுகள் உள்ள குளிர்ந்த மணங்கமழும் பூங்கொத்துகளில் உள்ள
தாதுடன் கூடிய தேன்துளி தளிரில் ஒழுகியது போல
அழகு ததும்பும் மாநிறமேனியில் கிளைத்துத்தோன்றும்
நுண்ணிய பல தேமல் புள்ளிகளையுடைய நம் தலைவி
என்ற அகநானூற்று அடிகள் தித்தியைப் பற்றிய விளக்கமான குறிப்புகளைத் தருகின்றன.
பூங்கொத்துக்களில் உள்ள பூக்களின் மேல் வண்டுகள் மொய்க்கின்றன. அதனால், அந்தக்கொத்துக்களில்
உள்ள பூந்தாதுக்கள், தேனுடன் கலந்து கீழேயுள்ள செடியின் தளிர்களில் தெறித்துவிழுகின்றன. அதைப் போல
இருக்கிறதாம் பெண்களின் தளிர்மேனியில் பரவலாய்க் காணப்படும் நுண்ணிய பல தேமல் புள்ளிகளான தித்தி.
8.
வடித்து என உருத்த தித்தி – அகம் 176/23
என்கிற அகநானூற்று அடிக்கு, ‘பொன்னை உருக்கி வார்த்தாலொப்ப உருக்கொண்ட தேமலையும்’ என்று
பொருள்கொள்வார் வேங்கடசாமி நாட்டர்.
எனவே இது பொன்னிறம் கொண்டது என்பது தெளிவாகிறது.
மேலும்,
தித்தி ஒழுகிய மெத்தென் அல்குலர் – உஞ்ஞை 41/97
என்ற பெருங்கதை அடியால் தித்தி என்ற தேமல், இடுப்பைச் சுற்றி, இடுப்பிற்கும் சற்றுக் கீழான
அல்குல் பகுதியிலும் படர்ந்திருக்கும் எனத் தெரியவருகிறது.
எனவே, பெண்களின், இடைப்பகுதி, தொடைப்பகுதி மற்றும் மேனியின் பல பகுதிகளிலும்,
மிக நுண்ணியவாகவும், பலவாகவும் பொன் நிறத்தில் தோன்றும் ஒளிர்வுள்ள புள்ளிகளே தித்தி எனப்படும்.
|
தித்தியம் |
தித்தியம் – (பெ) வேள்விக்குண்டம், sacrificial pit
கரியாப் பூவின் பெரியோர் ஆர
அழல் எழு தித்தியம் மடுத்த யாமை
நிழல் உடை நெடும் கயம் புகல் வேட்டாங்கு – அகம் 361/9-11
வாடாத பூவினையுடைய தேவர்கள் உண்ணுவதற்காக
அழல் ஓங்கிய வேள்விக்குண்டத்தின்கண் இடப்பெற்ற யாமை
தான் முன்பிருந்த நிழல் பொருந்திய பெரிய பொய்கையின்கண் போதலை வைரும்புவது போல
|
தினை |
தினை – (பெ) கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானிய வகை, foxtail millet
கரும் கால் வரகே இரும் கதிர் தினையே
சிறு கொடி கொள்ளே பொறி கிளர் அவரையொடு – புறம் 335/4,5
கரிய காலையுடைய வரகும், பெரிய கதிரையுடைய தினையும்
சிறிய கொடியாகிய கொள்ளும் பொறிகளையுடைய அவரையும்
|
தின் |
தின் – (வி) 1. உண்ணு, சாப்பிடு, eat
2. தழும்பு ஏற்படுத்து, make a scar
3. தேய்வை ஏற்படுத்து, abrase
4. வற்றிப்போகச்செய், make dry
5. இற்றுப்போகச்செய், corrode
6. அராவு, file
7. எரி, burn, consume as fire
8. சிதைத்து அழி, impair, damage
9. அரி, eat away as white ants
10. வருத்து, afflict
11. மெல்லு, chew
1.
ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர் – நற் 322/5
ஊனைத் தின்னுகின்ற பெண்புலியின் வருத்துகின்ற பசியைப் போக்குவதற்கு
2.
விழு தண்டு ஊன்றிய மழு தின் வன் கை – பெரும் 170
விழுமிய தடியை ஊன்றின கோடரித் தழும்பிருந்த வலிய கையினையும்
3
நிற புண் கூர்ந்த நிலம் தின் மருப்பின்
நெறி கெட கிடந்த இரும் பிணர் எருத்தின்
இருள் துணிந்து அன்ன ஏனம் – மலை 245-247
மார்பில் புண் ஏற்பட்டு, மண் தின்ற (மண்ணைத்தோண்டியதால் தேய்ந்துபோன)கொம்போடு,
வழியை விட்டு விலகிக் கிடக்கின்ற, கரிய சொரசொரப்புள்ள கழுத்தினையுடைய,
இருட்டை வெட்டிப்போட்டதைப் போன்ற காட்டுப்பன்றி
4.
அத்த பலவின் வெயில் தின் சிறு காய் – ஐங் 351/1
காட்டு வழியிலுள்ள பலாமரத்தின், வெயில் வற்றிப்போகச் செய்ததால் வெம்பிப்போன சிறிய காயை
5.
நிலம் தின் சிதாஅர் களைந்த பின்றை – பதி 12/20
மண்படிந்த கிழிந்த உடையைக் களைந்த பின்னால்
6.
அரம் தின் ஊசி திரள் நுதி அன்ன – அகம் 199/8
அரத்தால் அராவப்பட்டுத் தேய்ந்துபோன ஊசியின் திரண்ட முனைடைப் போல
7.
எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல் – அகம் 288/5
தீயானது எரித்த கொல்லையில் விளைந்து கதிர் வளைந்த தினைப்புனத்தில்
8.
நிணம் தின்று செருக்கிய நெருப்பு தலை நெடு வேல் – புறம் 200/6
உடலைக் குத்தி நிணத்தைச் சிதைத்து அழித்துச் செருக்குக்கொண்ட நெருப்புப்போன்ற தலையைக் கொண்ட
நீண்ட வேல்
9.
நிலம் தின கிடந்த நிதியமோடு அனைத்தும் – மலை 575
மண் அரிக்கக் கிடக்கும் பொருள்குவியலுடன், அனைத்தையும்
10.
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை
பசி தின அல்கும் பனி நீர் சேர்ப்ப – ஐங் 159/1-3
வெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக
அதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை
பசி தன்னை வாட்டவும் அங்கேயே தங்கியிருக்கும் குளிர்ந்த கடல்நீர்ப்பரப்பின் தலைவனே
11.
மருங்கில் கொண்ட பல்குறு மாக்கள்
பிசைந்து தின வாடிய முலையள் பெரிது அழிந்து – புறம் 159/7,8
இடுப்பில் வைத்திருந்த பல சிறு பிள்ளைகள்
பிசைந்து மெல்லுதலால் உலர்ந்த முலையினையுடையவளாய்
|
திமிர் |
திமிர் – (வி) பூசு, தடவு, அப்பு, smear, rub, apply to
அவரோ வாரார் தான் வந்தன்றே
எழில் தகை இள முலை பொலிய
பொரி பூ புன்கின் முறி திமிர் பொழுதே – ஐங் 347/3
அவரோ வரவில்லை, ஆனால் இது வந்து நிற்கிறது –
அழகும் நலமும் சேர்ந்த என்னுடைய இளம் முலைகள் பொலிவுபெறும்படியாக
பொரியைப் போன்ற பூக்களைக் கொண்ட புன்கமரத்தின் இளந்தளிர்களை அரைத்துப் பூசிக்கொள்ளும் பொழுது
|
திமில் |
திமில் – (பெ) மீன் படகு, Catamaran, small boat
பழம் திமில் கொன்ற புது வலை பரதவர் – அகம் 10/10
பழைய கட்டுமரத்தை அழித்துவிட்டுப் புதிய வலையைக் கொண்ட பரதவர்
|
திரங்கு |
திரங்கு – (வி) 1. வற்றிச் சுருங்கு, be wrinkled, get shrunk
2. உலர்ந்துபோ, get dried up
3. தளர்ந்து வாடு, நலிவுறு, be fatigued, wearied
1.
கான வேம்பின் காய் திரங்க
கயம் களியும் கோடை ஆயினும் – புறம் 389/2,3
காட்டிலுள்ள வேம்பினுடைய காய்கள் வற்றிச் சுருங்கிப்போக
ஆழ்ந்த நீர்நிலை வற்றிப் பிளவுபட்டுக்கிடக்கும் கோடக்காலமாயினும்
2.
தளிரொடு மிடைந்த காமரு கண்ணி
திரங்கு மரல் நாரில் பொலிய சூடி – மலை 430,431
தளிர்களோடே இறுகக்கலந்த கட்டழகான மாலையை,
நன்கு காய்ந்த கற்றாழை நாரில் (கட்டி)அழகுபெறச் சூடி,
3.
பசி தின திரங்கிய இரும் பேர் ஒக்கற்கு – புறம் 370/3
பசி நின்று வருத்த நலிவுற்ற மிகப்பெரிய சுற்றத்தாருக்கு
|
திரி |
திரி – 1. (வி) 1. அலைந்துதிரி, wander
2. திருக்குறு, be twisted
3. வேறுபடு, change, vary
4. முறுக்கேற்று, twist as yarn
5. சுழல், go round, whirl
– 2. (பெ) 1. திரிகை, grinding tool
2. விளக்குத்திரி, Roll or twist of cloth or thread for a wick
3. முறுக்கு, twist
1.1
பல் வேறு பண்ணியம் தழீஇ திரி விலைஞர் – மது 405
பல வேறுபட்ட பண்டங்களைத் தம்மிடத்தே சேர்த்துக்கொண்டு அலைந்து விற்பவரும்
1.2
இரலை
மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி – கலி 15/6
கலைமானின்
கொம்பு போல திருக்குண்டும் முறுக்குண்டதுமாய் விழுகின்ற தாடியையும்,
1.3
வசை இல் புகழ் வயங்கு வெண் மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும் – பட் 1,2
பழிச்சொல் இல்லாத புகழையுடைய, சுடர் வீசும் வெள்ளியாகிய மீன்
(தான் நிற்பதற்குரிய)வடதிசையினின்றும் மாறி தென்திசையில் சென்றாலும்
1.4
வடி கதிர் திரித்த வல் ஞாண் பெரு வலை – நற் 74/1
செம்மையாகச் செய்யப்பட்ட கதிர் என்னும் கருவியால் முறுக்கேற்றப்பட்ட வலிய கயிற்றால் பின்னிய
2:33 PM 12/2/2018பெரிய வலையை
1.5
அதரி திரித்த ஆள் உகு கடாவின் – புறம் 370/17
கடாவிடும்போது சுற்றிவந்த காலாட்கள் வீழ்ந்த கடாவிடுமிடத்தில்
2.1
களிற்று தாள் புரையும் திரி மர பந்தர் – பெரும் 187
யானையினது காலை ஒக்கும் (தானியங்கள் திரிக்கும்)திரிகை மரம் நிற்கும் பந்தலினையும்
2.2
நெய் உமிழ் சுரையர் நெடும் திரி கொளீஇ – முல் 48
நெய்யைக் காலுகின்ற திரிக்குழாயையுடையோராய் நெடிய திரியை (எங்கும்)கொளுத்தி
2.3
திரி மருப்பு இரலையொடு மட மான் உகள – முல் 99
முறுக்குள்ள கொம்பினையுடைய புல்வாய்க்கலையோடே மடப்பத்தையுடைய மான் துள்ள,
|
திரிதரு(தல்) |
திரிதரு(தல்) – (வி) 1. அலைந்துதிரி, roam about, wander
2. சுழல், whirl, go round
3. சுற்று, rotate
4. நடமாடு, வழங்கு, be in use
1.
இரு கோட்டு அறுவையர் வேண்டு வயின் திரிதர – நெடு 35
முன்னும் பின்னும் தொங்கவிட்ட துகிலினையுடையராய்(த் தாம்) விரும்பியவாறு அலைந்துதிரிய
2.
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டு ஆஅங்கு – திரு 1,2
உயிர்கள் மகிழும் பொருட்டு வலமாக எழுந்து சுற்றிவரும்
பலரும் புகழும் ஞாயிறு கடலில் எழக் கண்டதைப் போன்று,
3.
மோரியர்
பொன் புனை திகிரி திரிதர குறைத்த
அறை இறந்து – அகம் 69/10-12
மோரியரின்
பொன்னால் செய்யப்பட்ட சக்கரங்கள் உருள்வதற்காக வெட்டிப் பாதையாக்கப்பட்ட
குன்றங்களைக் கடந்து
4.
நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார் – கலி 35/17
நிலத்தின் பெருமை உலகோர் நாவில் நடமாடும் நீண்ட மாடங்களைக் கொண்ட கூடல்மாநகரத்தவர்
|
திரிபு |
திரிபு – (பெ) வேறுபாடு, change, alteration
நன்று அல் காலையும் நட்பில் கோடார்
சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின் – அகம் 113/1,2
கேடுற்ற போதும் நட்பில் திரியாதவராய்
அந்த நண்பரிடம் சென்று அவர் குறிப்பில்படும் மாறுபாடு இல்லாத அறிவுடைமையால்
|
திரிபுரம் |
திரிபுரம் – (பெ) பொன் வெள்ளி இரும்புகளால் செய்யப்பட்டு, விண்ணிற் சஞ்சரித்த
சிவபிரானால் எரிக்கப்பட்ட மூன்று நகரங்கள்
The three aerial cities of gold, silver and iron burnt by šiva;
தேறு நீர் சடை கரந்து திரிபுரம் தீமடுத்து – கலி 1/2
தெளிந்த நீரைக்கொண்ட கங்கையைத் தன் சடையில் அடக்கிக்கொண்டு, முப்புரங்களையும் தீயூட்டி,
|
திரிமரம் |
திரிமரம் – (பெ) திரிகை, grinding tool
திரிமர குரல் இசை கடுப்ப வரி மணல்
அலங்கு கதிர்த் திகிரி ஆழி போழ – அகம் 224/13,14
சுழலும் திரிகையின் குரலொலியைப் போல, வரிப்பட்ட மணலில்
சுழலும் கதிரினையுடைய வட்டச் சக்கரம் அறுத்துக்கொண்டு செல்ல
பார்க்க : சுழல்மரம்
|
திரிவு |
திரிவு – (பெ) 1. திருக்கு, முறுக்கு, twist
2. மாறுதல், வேறாகுதல், change, variation
1.
தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின் – மலை 21
(கையில் சுற்றியுள்ள)தொடியின் திருக்கினைப்போன்ற ஒன்பது என்னும் எண் உண்டான வார்க்கட்டினையும்,
2.
திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி – பரி 23/20
திறத்தால் சிறிதும் பிறழ்தல் இல்லாத அந்தணர் மிகுந்து வாழ்தலால்
|
திரீஇ |
திரீஇ – (வி.எ) திரிந்து என்பதன் திரிபு, the changed form of the word ‘tirindhu’
ஓர் இயவு உறுத்தர ஊர்_ஊர்பு இடம் திரீஇ
சேரி இளையர் செல அரு நிலையர் – பரி 6/37,38
ஒரே ஒரு வழியில் நெருக்கியடித்துக்கொண்டு, ஊர்ந்து ஊர்ந்து இடமெல்லாம் திரிந்து,
புறச்சேரியிலிருக்கும் இளையர் வெளியே செல்வதற்கு முடியாத நிலையினராக,
|
திரு |
திரு – (பெ) 1.அழகு, beauty
2. இலக்குமி, Lakshmi, the Goddess of Wealth and Prosperity
3. செல்வம், wealth
4. பொலிவு, ஒளிர்வு, lustre, brilliance
5. சீர், சிறப்பு, eminence
6. தெய்வத்தன்மை, divinity
1.
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – திரு 24
திலகம் இட்ட மணம் நாறுகின்ற அழகிய நெற்றியில்
2.
திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து – திரு 70
திருமகள் வீற்றிருந்த குற்றம் தீர்ந்த அங்காடித் தெருவினையும்
3.
திரு நிலைபெற்ற தீது தீர் சிறப்பின்
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து – நெடு 89, 90
செல்வம் நிலைபெற்ற குற்றமற்ற சிறப்பினையுடைய,
கொண்டுவந்த மணலைப் பாவி இறுக்கமாக்கப்பட்ட, அழகிய வீட்டின் — முற்றத்தில்
4.
கோடு போழ் கடைநரும் திரு மணி குயினரும் – மது 511
சங்கினை அறுத்துக் கடைவாரும், ஓளிர்வுள்ள மணிகளைத் துளையிடுவாரும்
5.
திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திரு தகும் அ திரு
புறங்கூற்று தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல் உரைத்தை காண் – கலி 38/20,21
நல்லொழுக்கமுடையவனின் செல்வம் போல் நாளும் சீர்பெற்றுச் சிறப்புறுவாள், அந்தச் சீரினால்
அயலார் கூறும் இழிப்புரைகளை மாற்றத்தக்க ஒரு வழி இருந்தால் அதை உரைப்பாயாக
6.
திகழ் மலர் புன்னை கீழ் திரு நலம் தோற்றாளை – கலி 135/12
ஒளிவீசும் மலர்களையுடைய புன்னை மரத்தடியில் உன்னிடம் தன் தெய்வத் திருவழகை இழந்தவளை
|
திருகு |
திருகு – (வி) 1. முறுகு, be intense, severe
2. பின்னிப்பிணை, be close together, interwine
3. இறுக்கக் கடி, bite hard
1.
காய் சினம் திருகிய கடும் திறல் வேனில் – பெரும் 3
சுடுகின்ற தீ(யின் வெப்பம்) தீவிரமாகிய கடுமையான வீரியமுடைய (முது)வேனில் காலத்தில்,
2.
பருகு அன்ன காதலொடு திருகி
மெய் புகு அன்ன கை கவர் முயக்கத்து – அகம் 305/6,7
ஒருவரையொருவர் பருகுவது போன்ற காதலுடன் பின்னிப்பிணைந்து
ஒருவர் மெய்க்குள் ஒருவர் புகுந்துவிடுவதைப் போன்ற கைகளினால் அணைத்துக்கொள்ளும் தழுவலில்
3.
பல் ஊழ்
நொடித்து என சிவந்த மெல் விரல் திருகுபு
கூர் நுனை மழுகிய எயிற்றள் – அகம் 176/23-25
பல முறை
முறித்துக்கொள்வதால் சிவந்த மெல்லிய விரலினையும், திருகிக் கடித்தலால்
கூரிய முனை மழுங்கிய பற்களையும் உடையளாய்
|
திருத்து |
திருத்து – (வி) 1. மேன்மைப்படுத்து, improve, elevate
2. சீர்ப்படுத்து, correct, rectify
3. செவ்விதாக்கு, reform
4. நன்கு அமை, order properly
1.
துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும் – பதி 32/7
வருந்துகின்ற குடிமக்களை மேன்மைப்படுத்திய சிறந்த வெற்றியும்
2.
நீடு நினைந்து தேற்றியும் ஓடு வளை திருத்தியும் – முல் 82
நீண்ட பிரிவினை நினைந்து தேற்றியும், கழலுகின்ற வளையை(க் கழலாமற்)செறித்தும்
3.
வளம் தலைமயங்கிய பைதிரம் திருத்திய
களங்காய்க்கண்ணி நார்முடி சேரல் – பதி 38/3,4
பலவகையான வளங்கள் ஒன்றுகூடிக் கலக்கும் வகையில் நாட்டைச் செம்மை செய்த
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேர வேந்தனே!
4.
இவள் தான் திருத்தா சுமட்டினள் – கலி 109/13
இவள்தான், நன்கு அமைக்கப்படாத சும்மாட்டினை உடையவள்
|
திருந்த |
திருந்த – (வி.அ) நன்றாக, செம்மையாக, thoroughly
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்
தித்தி குறங்கில் திருந்த உரிஞ – அகம் 385/9,10
வழியிலுள்ள ஆலமரத்தின் ஆடி அசைகின்ற நெடிய விழுது
தேமல் பொருந்திய தனது துடையில் நன்கு உராய்ந்திட
|
திருந்து |
திருந்து – (வி) 1. அழகுபெறு, be beautiful, lovely
2. சிறப்படை, செம்மையாகு, become perfect
3. நன்றாக அமை, be well completed
4. நன்கு செய்யப்படு, be finished artistically
5. மேன்மையடை, be worthy, honourable
1.
சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ – திரு 203,204
சுரும்பு (தேன்)உண்ணும்படி தொடுத்த பெரிய குளிர்ந்த அழகினையுடைய தழையை
அழகுபெற்ற வடங்களையுடைய அல்குலிடத்தே அசையும்படி உடுத்தி,
2.
பொருந்து மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப
வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி – பொரு 41,42
பொருந்தின மயிர் ஒழுங்குபட்ட செம்மையான கணைக்காலுக்குப் பொருந்த அமைந்த
ஓடியிளைத்த நாயின் நாவைப்போன்ற பெருமை தக்கிருக்கும் சிறிய பாதங்களை
3.
கோதையின் பொலிந்த சேக்கை துஞ்சி
திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்து – மது 713,714
தூக்கு மாலைகளால் பொலிவுபெற்ற படுக்கையில் துயில் கொண்டு –
நன்றாக அமைந்த உறக்கத்தை (சூதர் இசை பாடி)த் துயிலுணர்த்த, இனிதாக எழுந்து,
4.
திருந்து இழை மகளிர் விரிச்சி நிற்ப – நற் 40/4
நன்குசெய்யப்பட்ட இழை அணிந்த மகளிர் நற்சொல் கேட்டு நிற்க
5.
திறன் மாண்டு
திருந்துக மாதோ நும் செலவு என வெய்து_உயிரா – அகம் 299/18,19
செய்திறத்தில் மாட்சியுற்று
மேன்மையுறுக உமது பயணம் என்று கூறி, வெப்பமாகப் பெருமூச்சுவிட்டு
|
திருமருதமுன்துறை |
திருமருதமுன்துறை – (பெ) சங்ககால மதுரையின் வையை ஆற்றுப் படித்துறை
திருமருதமுன்துறை சேர் புனல் கண் துய்ப்பார் – பரி 7/83
திருமருதமுன்துறை என்ற பெயர்கொண்ட துறையைச் சேரும் வையை நீரில் குளித்து இன்புறுவாரின்
|
திருமாவளவன் |
திருமாவளவன் – (பெ) சங்க காலச் சோழ மன்னன் கரிகாலனின் பட்டப்பெயர்,
nick name of chozha king Karikalan
திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய
வேலினும் வெய்ய கானம் – பட் 299,300
திருமாவளவவன் பகைவரைக் கொல்லுதற்கு உயர்த்தி ஓங்கிய
வேலினும் கொடியவாயிருந்தன, (தலைவியைப் பிரிந்து செல்லும் வழியிலுள்ள)காடு
|
திருமாவுண்ணி |
திருமாவுண்ணி – (பெ) ஒரு சங்ககாலப் பெண்ணின் பெயர், name of a woman of sangam period
இந்தப் பெண் கண்ணகி என்பார். இப்பாடலின் ஆசிரியர் மதுரை மருதன் இளநாகனார், சிலப்பதிகாரக்
காலத்துக்குப் பல நூறு ஆண்டுகட்கு முந்தையவர் என்பதால் இவள் கண்ணகி அல்ல என்றும் கூறுவர்.
கண்ணகியைப் பற்றிய காப்பியமான சிலப்பதிகாரத்தில், கண்ணகி ஒருமுறைகூட இப்பெயரால்
அழைக்கப்படவில்லை.
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி
கேட்டோர் அனையர் ஆயினும்
வேட்டோர் அல்லது பிறர் இன்னாரே – நற் 216/9-11
ஒரு முலையை அறுத்த திருமாவுண்ணியின் கதையைக்
கேட்டவர்கள் அத் தன்மையராக ஆயினும்
நாம் விரும்புவோரைத் தவிர பிறர் நமக்கு இன்னாதரே ஆவர்.
|
திருவில் |
திருவில் – (பெ) இந்திரவில், வானவில், rainbow
திருவில் அல்லது கொலை வில் அறியார் – புறம் 20/10
வானத்தில் தோன்றும் இந்திரவில் அல்லது பகைவரது கொலை வில்லை அறியார்
|
திரை |
திரை – 1. (வி) தன்னுள் அடக்கு, cover, contain
2. (பெ) 1. அலை, wave
2. சுருக்கம், Wrinkle, as in the skin through age
1
நிலம் திரைக்கும் கடல் தானை – புறம் 97/14
நிலத்தைத் தன்னுள்ளே அடக்கும் கடல் போன்ற படையுடன்
2.1.
வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின் – சிறு 155
மிகுகின்ற அலை கொண்டுவந்த மணத்தையுடைய (அகில்)மர விறகால்
2.2.
கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள் – புறம் 195/2
மீனின் முள் போன்ற நரை முதிர்ந்த சுருங்கிப்போன கன்னத்தினையும்
|
திரைப்பு |
திரைப்பு – (பெ) 1. திரையால் மறைத்த இடம், Place screened by a curtain
2. தன்னுள் அடக்குதல், covering, containing
1.
வரைப்பில் மணல் தாழ பெய்து திரைப்பில்
வதுவையும் ஈங்கே அயர்ப அதுவேயாம் – கலி 115/19,20
முற்றத்தில் புது மணலைப் பரப்பி, திரைமறைவில்
திருமணமும் இங்கே நடத்துவர்,
2.
நிலம் திரைப்பு அன்ன தானையோய் நினக்கே – பதி 91/10
நிலத்தைத் தன்னுள் அடக்கியதைப் போன்ற படையினையுடையவனாகிய உனக்கே.
|
திரையன் |
திரையன் – (பெ) தொண்டைநாட்டு மன்னன், இளந்திரையன், An ancient chief of Toṇṭaināṭu
பல் வேல் திரையன் படர்குவிர் ஆயின் – பெரும் 37
பல வேற்படையினையும் உடைய தொண்டைமான் இளந்திரையனிடம் செல்ல எண்ணுவீராயின்
|
திறன் |
திறன் – (பெ) 1. சார்பு, side, party
2. இயல்பு, nature
3. நற்பண்பு, moral conduct
4. திறமை, ஆற்றல், சக்தி, skill, efficiency, power, strength
5. வழிமுறை, means
1.
அறனொடு புணர்ந்த திறன் அறி செங்கோல் – பொரு 230
அறத்தோடு பொருந்திய சார்பினை அறிந்த செங்கோலையும் உடைய
2.
சூழ் கழி இறவின்
கணம்_கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி – நற் 101/2,3
சூழ்ந்துள்ள கழியில் உள்ள இறாமீனின்
கூட்டமான குவியல் வெயிலில் காயும் தன்மையை ஆராய்ந்து
3.
திறன் இலோர் திருத்திய தீது தீர் கொள்கை
மறனும் மாற்றலர்க்கு அணங்கும் நீ – பரி 1/42,43
நற்பண்பு இல்லாதவர்களைத் திருத்திய தீமை பயக்காத கொள்கையையுடைய
மறப்பண்பும், உன்னை மறுதலிப்போருக்கு அச்சத்தை உண்டாக்கும் அணங்கும் நீ!
4.
மறம் மிகு மலி ஒலி மாறு அடு தானையால்
திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும்
விறல் மிகு வலி – பரி 13/31-33
வீரம் மிக்கு மிகுந்த முழக்கத்தோடு பகைவரைக் கொல்லுகின்ற படைகளுடன்,
தம் ஆற்றலையும் மீறி தன் மேல் படையெடுத்து வரும் பகைவரின் உயிரைப் போக்கும்
வெற்றி மிகுந்த ஆற்றலும்
5.
கார் பெற்ற புலமே போல் கவின் பெறும் அ கவின்
தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண் – கலி 38/12,13
மழையைப் பெற்ற நிலத்தைப் போல வனப்புறுவாள்; அந்த வனப்பு
இவளை விட்டு அகன்று போகாமல் காப்பதற்கு ஒரு வழிமுறை இருந்தால் அதை உரைப்பாயாக
|
திறம் |
திறம் – (பெ) 1. சார்பு, பக்கம், side, party
2. வகை, விதம், kind, sort
3. சிறப்பு, மேன்மை, greatness, excellence
4. ஆற்றல், சக்தி, power, strength
5. திறமை, skill, efficiency
6. தன்மை, இயல்பு, nature, quality
7. வழிமுறை, means, method
8. நல்லொழுக்கம், moral conduct, goodness of behaviour
9. வழி, way, path
10, காரணம், cause
1.
விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்
இரு கோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு
ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து – நெடு 73-75
விரிந்த கிரணங்களைப் பரப்பின அகன்ற இடத்தையுடைய ஞாயிறு,
(நாட்டப்பட்ட)இரண்டு கோல்களின் நிழல்கள் ஒன்றும்வகையில், (கிழக்கிலிருந்து)மேற்கே செல்வதற்காக,
ஒரு பக்கத்தைச் சாராத (உச்சியில் இருக்கும்)நண்பகல் நேரத்தில்,
2.
நோக்கினும் பனிக்கும் நோய் கூர் அடுக்கத்து
அலர் தாய வரி நிழல் அசையினிர் இருப்பின்
பல திறம் பெயர்பவை கேட்குவிர்_மாதோ – மலை 289-291
பார்த்தாலே நடுங்கும் பயம் மிக்க மலைச்சரிவுகளில்,
மலர்ந்த பூக்கள் பரவிக்கிடக்கும் பட்டை பட்டையான நிழலில் களைப்பாறி இருப்பின்,
பலவிதமான நடமாட்டங்களை(உற்றுக்கேட்டால்) கேட்பீர்
3.
திண் தேர் பொறையன் தொண்டி
தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாயே – நற் 8/9,10
திண்ணிய தேரைக்கொண்ட பொறையனின் தொண்டிப் பட்டினத்துச்
சிறப்பெல்லாம் பெறுக இவளை ஈன்ற தாய்
4.
செம் கோல் வாளி கொடு வில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்து என – நற் 164/6,7
செம்மையான கோல் வடிவிலான அம்புகளையும், வளைந்த வில்லையும் உடைய ஆடவர்
புதிதான வழிப்போக்கரின் உயிராற்றலைப் போக்கியதால்
5.
உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம்
திறம் புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லது
அரும் பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல் என – நற் 252/1-4
கிளைகள் பரந்த ஓமை மரத்தின் காய்ந்த நிலையில் அதனை ஒட்டிக்கொண்டு
சில்வண்டு ஓயாது ஒலிக்கும், தொலைவான நாட்டுக்குச் செல்லும் வழியில்
திறமையுடன் செயலாற்றும் கொள்கையுடன் சென்று பொருள்சேர்த்தால் அன்றி
அரிய பொருளைச் சேர்ப்பது சோம்பியிருப்போர்க்கு இல்லை என்று,
6.
வம்ப மாக்கள் வரு திறம் நோக்கி
செம் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் – நற் 298/1,2
பாலை வழியில், புதிய மக்கள் வருகின்ற தன்மையைப் பார்த்து,
செம்மையான அம்பினை அவர்மீது தொடுக்கும் சினந்த பார்வையினரான ஆடவர்
7.
அறம் புரி அரு மறை நவின்ற நாவின்
திறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று – ஐங் 387/1,2
அறத்தைச் சொல்லும் அரிய மறைகளைப் பலமுறை ஓதிப்பயின்ற நாவினையும்,
அந்த வேத முறைகளைக் கடைப்பிடிக்கும் ஒழுக்கங்களையும் உடைய அந்தணர்களே!
உங்களைத் தொழுகிறேன் என்று
8.
திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திரு தகும் – கலி 38/20
நல்லொழுக்கமுடையவனின் செல்வம் போல் நாளும் சீர்பெற்றுச் சிறப்புறுவாள்
9.
கடவுள் வாழ்த்தி பையுள் மெய் நிறுத்து
அவர் திறம் செல்வேன் – அகம் 14/16,17
கடவுளை வாழ்த்தி, துயரத்தை வெளிக்காட்டி,
அவர் வரும்வழியே சென்றேனாக,
10.
பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு
நனி பசந்தனள் என வினவுதி அதன் திறம்
யானும் தெற்றென உணரேன் – அகம் 48/2-4
பாலையும் பருகாள், துன்பம் கொண்டு
மிகவும் மெலிவடைந்துள்ளாள்’ என்று (காரணம்)கேட்கிறாய், அதன் காரணத்தை
நானும் தெளிவாக அறியேன்
|
திறம்பு |
திறம்பு – (வி) மாறுபடு, பிறழ், change, deviate from, swerve from
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை – பரி 3/34
நடுவுநிலைமையிலிருந்து தவறிய நலமில்லாத ஒரு கை
|
திறல் |
திறல் – (பெ) 1. வலிமை, வீரியம், strength, vigour
2. ஓளி, பிரகாசம், Lustre, as of precious stones
1.
அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல் – திரு 149
நெருப்பென்னும்படி நெட்டுயிர்ப்புக்கொள்ளும் அச்சம் தோன்றும் கடிய வலிமையினையும் உடைய
2.
திறல் விடு திரு மணி இலங்கு மார்பின் – பதி 46/3
மிகுந்த ஒளியை விடுகின்ற அழகிய மணிமாலை பளிச்சிடும் மார்பினையும்
|
திறை |
திறை – (பெ) கப்பம், tribute
பகை வென்று திறை கொண்ட பாய் திண் தேர் மிசையவர் – கலி 31/17
பகைவரை வென்று, அவரின் திறைப்பொருளைக் கைக்கொண்டு, பாய்ந்துவரும் திண்ணிய தேரில் வருபவரின்
|
திற்றி |
திற்றி – (பெ) 1. கடித்துத் தின்பதற்குரிய உணவு,
Eatables that must be masticated before being swallowed
2. இறைச்சி, meat
1.
விழவு அயர்ந்து அன்ன கொழும் பல் திற்றி – அகம் 113/16
விழா கொண்டாடியது போன்ற கொழுமையான பலவகை உணவுகளையும்
2.
நாகு ஆ வீழ்த்து திற்றி தின்ற – அகம் 249/13
இளைய பசுவினைக் கொன்று அதன் ஊனைத் தின்ற
|
திலகம் |
திலகம் – (பெ) 1. நெற்றிப்பொட்டு, a small circular mark on forehead
2. மஞ்சாடி மரம், Barbados pride, Caesalpinia gilliesii
1.
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – திரு 24
நெற்றிப்பொட்டு இட்ட மணம் நாறுகின்ற அழகிய நெற்றியில்
2.
போங்கம் திலகம் தேம் கமழ் பாதிரி – குறி 74
கோங்கப்பூ, மஞ்சாடி மரத்தின் பூ, தேன் மணக்கும் பாதிரிப்பூ
|
தில் |
தில் – (இ.சொ) 1.விருப்பம், 2.காலம், 3.குறிப்பு என்னும் பொருள்களில் வரும் ஓர் இடைச்சொல்.
particle signifying a desire, time or a suggestion
1.
வார்ந்திலங்கு வை எயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுக தில் அம்ம யானே – குறு 14/2,3
நேராக வளர்ந்து ஒளிரும் கூரிய பற்களையுடைய, சில சொல் சொல்லும் பெண்ணைப்
பெறுவேனாக நானே!
2.
பெற்றாங்கு
அறிக தில் அம்ம இ ஊரே – குறு 14/3,4
பெற்ற பின்பு
அறியட்டும் இந்த ஊரே!
3.
வருக தில் அம்ம எம் சேரி சேர- அகம் 276/7
வருவானாக, எம் சேரிக்கண் பொருந்த
|
தில்ல |
தில்ல – (இ.சொ) தில் என்ற இடைச்சொல்லின் நீட்சி, an elongated form of the word ’til’
1.விருப்பம், 2.காலம், 3.குறிப்பு என்னும் பொருள்களில் வரும் ஓர் இடைச்சொல்.
particle signifying a desire, time or a suggestion
1.
இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று-மன் தில்ல – குறு 58/1,2
என்னைக் கடிந்துரைக்கும் நண்பர்களே! உங்கள் கடிந்துரையானது என் உடம்பைக்
குலைந்துபோவதினின்றும் நிறுத்த முடிந்தால் அதைப் போன்று நல்லது வேறில்லை.
2.
நன் நுதல் பசப்பினும் பெரும் தோள் நெகிழினும்
கொல் முரண் இரும் புலி அரும் புழை தாக்கி
செம் மறு கொண்ட வெண் கோட்டு யானை
கல் மிசை அருவியின் கழூஉம் சாரல்
வாரற்க தில்ல தோழி- நற் 151/1-5
நல்ல நெற்றியில் பசலை பாய்ந்தாலும், பெருத்த தோள்கள் மெலிந்துபோனாலும்
கொல்லக்கூடிய பகையுணர்வுகொண்ட பெரிய புலியின் சேரற்கரிய சிறிய நுழைவிடத்தைத் தாக்கி
சிவந்த கறையினைக் கொண்ட வெண்மையான கொம்பினையுடைய யானை
அந்தக் கறையை மலைமேலிருந்து விழும் அருவிநீரில் கழுவும் மலைச்சாரல் நெறியில்
வராமலிருப்பானாக, தோழியே!
3.
நம் உறு துயரம் நோக்கி அன்னை
வேலன் தந்தாள் ஆயின் அ வேலன்
வெறி கமழ் நாடன் கேண்மை
அறியுமோ தில்ல செறி எயிற்றோயே – ஐங் 241/1-4
நாம் படும் பாட்டைப் பார்த்து, அன்னை
வெறியாடும் வேலனை அழைத்து வந்தால், அந்த வேலன்
நறுமணம் கமழும் நாட்டினையுடைவனோடு நாம் கொண்டுள்ள நட்பை
அறிந்து சொல்வானோ? செறிவான பற்களைக் கொண்டவளே!
|
தில்லை |
தில்லை – (பெ) Blinding tree, Excoecaria agallocha
குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி
தில்லை அம் பொதும்பில் பள்ளிகொள்ளும் – நற் 195/2,3
குட்டியான நீர்நாய் கொழுமையான மீன்களை நிறைய உண்டு
தில்லை மரப் பொந்தினில் படுத்துறங்கும்
|
திளை |
திளை – (வி) 1. களித்திரு, மகிழ்ச்சியில் மூழ்கு, be immersed in joy, rejoice
2. அசை, ஆடு, swing to and fro; move
3. மூழ்கு, be immersed
4. துய்,அனுபவி, enjoy, experience
5. விளையாடி மகிழ், play, disport
6. துளை, to perforate, bore
1.
கரு விரல் மந்தி செம் முக பெரும் கிளை
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி
————– —————- —————- ———–
கலையொடு திளைக்கும் வரை_அக நாடன் – நற் 334/1-5
கரிய விரல்களையுடைய மந்தியின், சிவந்த முகங்களையுடைய பெரிய கூட்டமானது,
————– —————- —————- ———–
பெரிய மலைகளின் சரிவில் அருவியில் குளித்து,
தம் ஆண்குரங்குகளோடு களித்திருக்கும் மலையக நாடன்,
2.
முது நீர்
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல் – குறு 299/1,2
முதுமையான நீரையுடைய
அலைகள் வந்து தவழும் பறவைகள் ஒலிக்கின்ற கடற்கரைச் சோலையிலுள்ள
3.
எக்கர் ஞாழல் நறு மலர் பெரும் சினை
புணரி திளைக்கும் துறைவன் – ஐங் 150/1,2
மணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தின் நறிய மலரைகொண்ட பெரிய கிளையில்
ஆரவாரிக்கும் கடலைகள் மூழ்கியெழும் துறையைச் சேர்ந்தவன்
4.
தொடுதர
துன்னி தந்து ஆங்கே நகை குறித்து எம்மை
திளைத்தற்கு எளியமா கண்டை – கலி 110/3-5
என் மேனியைத் தொட
உன் கிட்டே வந்து உனக்கு இடங்கொடுத்தது ஒரு விளையாட்டுக்காக, நீ உடனே என்னைத்
துய்ப்பதற்கு எளியவளாய்க் கருதிவிட்டாய்!
5.
பெரும் கை எண்கின் பேழ் வாய் ஏற்றை
இருள் துணிந்து அன்ன குவவு மயிர் குருளை
தோல் முலை பிணவொடு திளைக்கும் – அகம் 201/16-18
பெரிய கையினையும், பிளந்த வாயினையும் உடைய ஆண் கரடி
இருளை வெட்டிவைத்தாற் போன்ற திரண்ட மயிரினையுடைய குட்டியுடனும்
வற்றிய முலையினையுடைய பெண்கரடியுடனும் விளையாடி மகிழ்ந்திருக்கும்.
6.
வேழம் வீழ்த்த விழு தொடை பகழி
பேழ் வாய் உழுவையை பெரும்பிறிது உறீஇ
புழல் தலை புகர் கலை உருட்டி உரல் தலை
கேழல் பன்றி வீழ அயலது
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும்
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன்
புகழ் சால் சிறப்பின் அம்பு மிக திளைக்கும்
கொலைவன் யார்-கொலோ கொலைவன் – புறம் 152/1-8
யானையைக் கொன்ற சிறந்த தொடையினைக்கொண்ட அம்பு
பெரிய வாயையுடைய புலியை சாகச்செய்து
துளையுள்ள கொம்புள்ள தலையையுடைய புள்ளிமான் கலையை உருட்டி, உரல் போன்ற தலையையுடைய
கேழலாகிய பன்றியை வீழ்த்தி, அதற்கு அயலதாகிய
ஆழமான புற்றில்கிடக்கின்ற உடும்பின்கண் சென்று செறியும்
வலிய வில்லாலுண்டான வேட்டையை வெற்றிப்படுத்தியிருந்தவன்
புகழ் அமைந்த சிறப்பினையுடைய அம்பு எய்தல் தொழிலில் சிறப்புற்று துளைத்துச் செல்கின்ற
கொலைவன் யாரோ அவன்தான் கொலைவன்
|
திவலை |
திவலை – (பெ) துவலை, சிதறிவிழும் துளி, spray
சிறு_வெண்_காக்கை செ வாய் பெரும் தோடு
எறி திரை திவலை ஈர்ம் புறம் நனைப்ப – குறு 334/1,2
சிறிய வெள்ளையான கடற்காக்கையின் சிவந்த வாயையுடைய பெரிய கூட்டம்
வீசுகின்ற அலைகளின் துளிகள் தம்முடைய ஈரமான முதுகை நனைப்பதால்
|
திவவு |
திவவு – (பெ) யாழ்த்தண்டிலுள்ள நரம்புக்கட்டு, Bands of catgut in a yAzh
நெடும் பணை திரள் தோள் மடந்தை முன்கை
குறும் தொடி ஏய்க்கும் மெலிந்து வீங்கு திவவின் – பெரும் 12,13
நீண்ட மூங்கில் (போன்ற)திரண்ட தோளினையுடைய பெண்ணின் முன்கையில்(உள்ள)
குறிய வளையல்களைப் போன்ற, நெகிழ்ந்தும் இறுகியும் உள்ள வார்க்கட்டினையும்;
|
தீ |
தீ – 1. (வி) (பயிர் முதலியன) கருகு, வாடு, be withered or blighted, as growing crops in times of drought;
– 2. (பெ) 1. நெருப்பு, fire
2. தீமை, evil
1.
இன்பத்தின் இகந்து ஒரீஇ இலை தீந்த உலவையால்
துன்புறூஉம் தகையவே காடு என்றார் – கலி 11/10,11
வீட்டின் இன்பமான சூழ்நிலையைக் கைவிட்டுப் பிரிந்துசென்று, இலைகள் தீய்ந்துபோன உலர்ந்த மரக் கிளைகளால்
நிழலின்றித் துன்புறும் தன்மை கொண்டது பாலைக்காடு என்றார்
2.1.
மெய் உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளி
தீ துணை ஆக சேந்தனிர் கழி-மின் – மலை 419,420
(ஆடுகளின்)உடலை உரித்துச் செய்த (வார்)மிதித்த தோலாலான படுக்கையில்,
நெருப்பே துணையாக தங்கிப் போவீர்
2.2.
அலர் வாய் பெண்டிர் அம்பலொடு ஒன்றி
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து – நற் 36/6,7
புறங்கூறும் வாயையுடைய மகளிரின் வம்புமொழிகளோடு சேர்ந்து
உயர்வற்ற தீய சொற்களை கூறுவதற்குரிய பேச்சுக்களை மேற்கொண்டு,
|
தீமடு |
தீமடு – (வி) நெருப்புமூட்டு, ignite fire
ஐயர் அவிர் அழல் எடுப்ப அரோ என்
கையறு நெஞ்சம் கனன்று தீமடுக்கும்
இ மாலை – கலி 130/9-11
அந்தணர் செந்தழல் வளர்க்க, என்
செயலற்ற நெஞ்சம் கொதித்துக் காமத்தீயை மூட்டும்
இந்த மாலை;
|
தீமூட்டு |
தீமூட்டு – (பெ) தீ மூட்டுவதற்குரிய பொருள், lighting material
களிறு சுவைத்திட்ட கோது உடை ததரல்
கல்லா உமணர்க்கு தீமூட்டு ஆகும் – அகம் 257/16,17
களிற்றியானை சுவைத்துப்போட்ட சக்கையாகிய மரப்பட்டைகள்
கல்லாத உப்பு வாணிகர்க்குத் தீமூட்டுவதற்கு ஆகும்.
|
தீய் |
தீய் – (வி) (பயிர் முதலியன) கருகு, வாடு,
be withered or blighted, as growing crops in times of drought
எஞ்சாது
தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெம் சினை
வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி – குறு 211/3-5
மீதமின்றி முற்றிலுமாகத்
கருகிப்போன மராமரத்தின் ஓங்கிய வெம்பிப்போன கிளையில்
வேனிற்காலத்து ஒற்றைப் பூங்கொத்தினைத் தேனுடன் ஊதி
|
தீய்ப்பு |
தீய்ப்பு – (பெ) கருக்குவது, getting scorched
இமை தீய்ப்பு அன்ன கண்ணீர் தாங்கி – குறு 4/2
கண்ணிமைகளைக் கருக்குவது போன்ற கண்ணீரைத் தாங்கிக்கொண்டு
|
தீர |
தீர – (வி.அ) முற்றிலும், entirelu, absolutely
தீர தறைந்த தலையும் தன் கம்பலும் – கலி 65/6
முற்றிலும் மொட்டையான தலையும், மேலே பொத்திய துணியும் உடையவனாய்
|
தீரம் |
தீரம் – (பெ) கரை, shore, bank
தீரமும் வையையும் சேர்கின்ற கண் கவின் – பரி 22/35
கரையிலும் வையையிலும் சேர்கின்ற கண்ணுக்குப்புலனாகும் அழகு
|
தீர் |
தீர் – (வி) 1. செலவாகிப்போ,கரைந்துவிடு, be used up, exhausted
2. இல்லாமல்போ, be non existent, absent
3. முடிவுக்கு வா, முற்றுப்பெறு, be completed
4. கழி, be spent, pass
5. (பசி,களைப்பு முதலியன) நீங்கு, freed of
6. விட்டுச்செல், அகல், leave, quit
7. அறுதிசெய், நிச்சயி, be decided, determined
8. போக்கு, clear, remove
9. முடிவுக்கு வரச்செய், finish, complete
1.
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
இரவல் மாக்கள் உண கொள தீர்ந்து என – புறம் 333/9,10
வரகும், தினையுமாகத் தன் மனையில் உள்ளவற்றை எல்லாம்
இரவலர் உண்டதனாலும், கொண்டதனாலும் செலவாகிப்போய்விட்டனவாக
2.
திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து – திரு 70
திருமகள் வீற்றிருந்த குறைகள் இல்லாமற்போன அங்காடித் தெருவினையும்
3.
துறை பல முற்றிய பை தீர் பாணரொடு – மலை 40
துறைகள் பலவற்றையும் கற்றுத்தேர்ந்த இளநிலை முடிந்த (=அனுபவமிக்க) பாணர்களோடு
4.
கலப்போடு இயைந்த இரவு தீர் எல்லை – பரி 19/9
புணர்ச்சியின்பத்தோடு பொருந்திய இரவு முடிந்த எல்லையாகிய அதிகாலையிலே
5.
கண்ணின் நோக்கி
முனியாது ஆட பெறின் இவள்
பனியும் தீர்குவள் செல்க என்றோளே – நற் 53/9-11
கண்ணுக்கினிய காட்சிகளைக் கண்டு
வெறுப்பின்றி நீராடினால், இவளின்
நடுக்கமும் நீங்கும், செல்வீர்களாக என்ற நம் அன்னை
6.
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி – குறு 207/3
தன் இனத்திடமிருந்து பிரிந்துவந்த பருந்தின் தனிமைத்துயரைக் காட்டும் தெளிந்த அழைப்பொலி
7.
ஈர நன் மொழி தீர கூறி – குறி 234
கனிவான நல்ல மொழிகளை நிச்சயித்துக் கூறி,
8.
துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்
இனிதே – நற் 216/1,2
ஊடலைப் போக்கிக் கூடலுடன் பொருந்தி என்னை நெருங்காராயினும்,
இனியதே
9.
அரும் துயர் அவலம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – நற் 140/10,11
நமது நீக்கமுடியாத அரிய துயரத்தின் அவலத்தை முடிக்கும்
மருந்து வேறு இல்லை, நான் உற்ற நோய்க்கு
|
தீர்கை |
தீர்கை – (பெ) நீங்குதல், leaving
ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேரொக்கல்
தீர்கை விடுக்கும் பண்பின – புறம் 391/8,9
இங்கே வந்து தங்கிய என் மிகப்பெரிய சுற்றம்
இந்நாட்டினின்றும் நீங்குதலைக் கைவிடும் பண்பினையுடையவராய்
|
தீர்வு |
தீர்வு – (பெ) (பிணக்கு போன்றவை) முடிவுக்கு வருதல், be settled as quarrel
அன்பன்
சேறு ஆடு மேனி திரு நிலத்து உய்ப்ப சிரம் மிதித்து
தீர்வு இலது ஆக செரு உற்றாள் செம் புனல் – பரி 7/73-75
தலைவன்
சந்தனம் பூசிய தன் மேனியை அழகிய நிலத்தில் கிடத்தி வணங்க, அவனுடைய தலையை மிதித்து
(தன் சினம்) முடியப்பெறாதவளாக ஊடல் கொண்டாள்
|
தீர்வை |
தீர்வை – (பெ) கீரி, Mongoose
அரவு குறும்பு எறிந்த சிறு கண் தீர்வை – மலை 504
பாம்பின் வலிமையை அழித்த சிறிய கண்களையுடைய கீரியும்
|
தீற்று |
தீற்று – (வி) உண்பி, feed
ஈர் சேறு ஆடிய இரும் பல் குட்டி
பல் மயிர் பிணவொடு பாயம் போகாது
நெல்மா வல்சி தீற்றி
குழி நிறுத்து ஓம்பிய குறும் தாள் ஏற்றை – பெரும் 341-344
ஈரத்தையுடைய சேற்றை அளைத்த கரிய பலவாகிய குட்டிகளையுடைய
பலவாகிய மயிர்களையுடைய பெண் பன்றிகளோடே மனவிருப்பம் கொள்ளாமல்,
நெல்லின் உமியை மாவாக்கிய (தவிட்டு)உணவினை (வயிறு நிறைய)த் தின்னப் பண்ணிப், பலநாளும்
குழியிலே நிறுத்திப் பாதுகாத்த குறிய காலையுடைய ஆண்பன்றியின்
|
தீவிய |
தீவிய – (பெ) இனிமையானவை(பெரும்பாலும் சொற்கள்), sweet (words)
புன் காழ் நெல்லி பைம் காய் தின்றவர்
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி – அகம் 54/15,16
புல்லிய விதைகளையும் கொண்ட நெல்லியின் பசுங்காயைத் தின்றவர்
நீர் குடிக்கும்போது பெறும் சுவையைப் போல, இனிய மொழிகளைக் கூறி,
|
துகள் |
துகள் – (பெ) 1. குற்றம், fault
2. தூசி, dust
3. பூந்தாது, pollen
1.
துவர முடித்த துகள் அறும் முச்சி – திரு 26
முற்ற முடித்த குற்றம் இல்லாத கொண்டையில்
2.
அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப
நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் – சிறு 200,201
தலைமைச் சிறப்புடைய யானைகளின் (மத)அருவி (எழுந்த)தூசியை அணைத்துவிடுவதால்
புழுதி அடங்கின தெருவினையுடைய, அவ்வள்ளலின் விழா நடக்கின்ற பழைய ஊர்தானும்
3.
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி – நற் 270/2,3
பூஞ்சோலை மலர்களின் மணங்கமழும், வண்டுகள் மொய்க்கின்ற நறிய மணத்தையுடைய,
இருளைப் போன்ற கூந்தல்களில் உள்ள மிகுதியான பூந்துகள்களில் மூழ்கியெழுந்து
|
துகிர் |
துகிர் – (பெ) பவளம், red coral
சே அடி செறி குறங்கின்
பாசிழை பகட்டு அல்குல்
தூசு உடை துகிர் மேனி
மயில் இயல் மான் நோக்கின்
கிளி மழலை மென் சாயலோர் – பட் 146-150
சிவந்த பாதங்களும், செறிந்த தொடைகளும்,
புத்தம் புதிய நகைகளும், பெரிய அல்குலும்,
தூய்மையான பஞ்சினால் நெய்த ஆடையும், பவளம் போலும் நிறமும்,
மயில்(போன்ற) மென்னயமும், மான்(போன்ற) பார்வையும்,
கிளி(போன்ற) மழலைமொழியும், மென்மையான சாயலும் உடைய மகளிர்
|
துகிலிகை |
துகிலிகை – (பெ) வண்ணம்தீட்டும் கோல், painter’sbrush
துகிலிகை அன்ன துய் தலை பாதிரி – நற் 118/8
வண்ணக்கோலின் தலையைப் போன்ற பஞ்சினைத் தலையில் கொண்ட பாதிரியின்
|
துகில் |
துகில் – (பெ) நல்லாடை, fine cloth
அவிர் துகில் புரையும் அம் வெள் அருவி – குறி 55
ஒளிவிடும் (வெண்மையான)ஆடையைப் போலிருக்கும் — அழகிய வெண்ணிற அருவியில்
|
துச்சில் |
துச்சில் – (பெ) ஓய்விடம், ஒதுக்கிடம், temporary abode, place of retreat
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம்
மா இரும் பெடையோடு இரியல் போகி
பூதம் காக்கும் புகல் அரும் கடி நகர்
தூதுணம்புறவொடு துச்சில் சேக்கும் – பட் 54-58
மினுமினுக்கும் சடையையுடைய துறவிகள் தீயில் யாகம்செய்யும்(போது எழும்பிய)
(நெய் முதலியவற்றின்)மணமுள்ள புகையை வெறுத்து, குயில்கள் தம்முடைய
கரிய பெரிய பேடைகளுடன் விரைவாக(விழுந்தடித்து)ப் பறந்தோடி,
பூதங்கள் (வாசலில்)காத்துநிற்கும் நுழைவதற்கு அரிய காவல் உள்ள (காளி)கோட்டத்தில்,
கல்லைத் தின்னும் அழகிய புறாக்களுடன் ஒதுக்குப்புறமாகத் தங்கும்
|
துஞ்சு |
துஞ்சு – (வி) 1. தூங்கு, sleep
2. தலைகவிழ்ந்திரு, hang head down
3. நிலைகொண்டிரு, abide,settle down
4. தங்கு, stay
5. செயலற்று இரு, be inactive
6. சோம்பியிரு, indolent, be idle, lazy
1.
துஞ்சு புலி இடறிய சிதடன் போல – புறம் 73/7
தூங்குகின்ற புலியை இடறிய பார்வையற்றவன் போல
2.
தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச – கலி 119/6
தம் புகழைக் கேட்டவர் தலை நாணி நிற்பது போல் தலையைச் சாய்த்து மரங்கள் தூங்க
3.
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடும் கோட்டு – சிறு 106
சொட்டும் மழை (எப்போதும்)பெய்யும் (உயர்ச்சியால்)காற்று நிலைகொண்டிருக்கும் நெடிய சிகரங்களையுடைய
4.
சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர் – பெரும் 121
வில்லைச் சார்த்தி வைத்த அம்புகள் தங்கும் அகன்ற வீடுகளையும்
5.
நாடு வறம் கூர நாஞ்சில் துஞ்ச
கோடை நீடிய பைது அறு காலை – அகம் 42/5,6
நாட்டில் வறுமை மிக, கலப்பைகள் செயலற்று இருக்க
கோடை நீண்ட பசுமையற்ற காலத்தில்
6.
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சி – புறம் 182/4
சோம்பியிருத்தலுமிலர், பிறர் அஞ்சத்தகும் துன்பத்திற்குத் தாமும் அஞ்சி
|
துஞ்சுமரம் |
துஞ்சுமரம் – (பெ) கணையமரம், Wooden bar to fasten a door
துஞ்சுமரம் கடுக்கும் மாசுணம் விலங்கி – மலை 261
கணையமரத்தைப் போன்ற மலைப்பாம்பினின்றும் ஒதுங்கி
|
துடக்கல் |
துடக்கல் – (பெ) சிக்கவைத்தல், entangling
செறி அரில் துடக்கலின் பரீஇ புரி அவிழ்ந்து
ஏந்து குவவு மொய்ம்பில் பூ சோர் மாலை – அகம் 248/11,12
நெருங்கிய புதர்கள் சிக்கவைத்தலால் அறுபட்டு, புரிகள் அவிழ்ந்து வீழ்தலால்
உயர்ந்துதிரண்ட தோளிடத்தே பூக்கள் உதிரப்பெறும் மாலையானது
|
துடக்கு |
துடக்கு – (வி) 1. சிக்கவை, அகப்படுத்து, entangle, entrap
2. பிணி, கட்டு, bind, tie
1.
பொய் போர்த்து பாண் தலை இட்ட பல வல் புலையனை
தூண்டிலா விட்டு துடக்கி தான் வேண்டியார்
நெஞ்சம் பிணித்தல் தொழிலா திரிதரும்
நுந்தை பால் உண்டி சில – கலி 85/22-25
பொய்யாகப் போர்த்துக்கொண்ட பாணர் தொழிலை மேற்கொண்ட அந்தச் சகல கலா வல்ல இழிஞனைத்
தூண்டிலாகப் பயன்படுத்திச் சிக்கவைத்துத் தான் விரும்பியவரின்
நெஞ்சத்தைக் கவர்வதையே தொழிலாகக் கொண்டு திரியும்
உன் தந்தைக்குரிய பாலையும் கொஞ்சம் உண்பாய்!
2.
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணி பொலிந்து
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கை
குறும் தொடி துடக்கிய நெடும் தொடர் விடுத்தது
உடன்றனள் போலும் நின் காதலி – அகம் 176/15-18
விழாவில் ஆடும் மகளிரொடு தழுவிஆடும் அணியால் பொலிவுற்று
மலரைப் போன்ற மையுண்ட கண்ணினையும் மண்புற்ற அணியினையும் உடைய நின் பரத்தை
தனது குறிய வளை அணிந்த முன்கையினால் பிணித்த நெடிய பிணிப்பினை விடுத்துச் சென்ற அளவுக்கே
வெகுண்டனள் போலும் உன் காதலி
|
துடரி |
துடரி – (பெ) தொடரி, காட்டு இலந்தை, Ziziphus rugosa
புளி சுவை வேட்ட செம் கண் ஆடவர்
தீம் புளி களாவொடு துடரி முனையின் – புறம் 177/8,9
புளிச்சுவையை விரும்பிய சிவந்த கண்ணையுடைய ஆடவர்
இனிய புளிப்பையுடைய களாப்பழத்துடனே துடரிப்பழத்தைத் தின்று வெறுப்பின்
|
துடவை |
துடவை – (பெ) 1. தோட்டம், விளைநிலம், garden, cultivated land
தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை – பெரும் 201
வளைவாக, விதைத்தவாறே, உழுத, (பின்னர் வளர்ந்த களைகளைக்)களைக்கொட்டுச் செத்திய தோட்டத்தை
|
துடி |
துடி – (பெ) உடுக்கை, A small drum shaped like an hour-glass
கடும் துடி தூங்கும் கணை கால் பந்தர் – பெரும் 124
(ஓசை)கடிதான உடுக்கையும் தொங்கும் திரண்ட காலையுடைய பந்தலையும்,
|
துடியன் |
துடியன் – (பெ) உடுக்கடிப்பவன், the person who plays the drum ‘udukku’
துடியன் கையது வேலே – புறம் 285/2
துடிப்பறைகொட்டுவோன் கையின் உளதாயிற்று வேல்
|
துடுப்பு |
துடுப்பு – (பெ) 1. காந்தள் பூவின் மடல், a petal of the flower ‘kAnthaL’
2. குழைவான சோறு அல்லது களி போன்றவற்றைக் கிண்டுவதற்குப் பயன்படும் தட்டையான அகப்பை
a flat, narrow, long piece of wood used for stirring rice or ragi pudding
1.
காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி – மலை 336
காந்தளின், துடுப்பைப்போன்ற, கமழுகின்ற (வெட்டுவதற்குக்கூரான விளிம்புள்ள)மடலை ஓங்கிப்பாய்ச்சி
2.
துடுப்பொடு சிவணிய களி கொள் வெண் சோறு – புறம் 328/11
துடுப்பால் துழாவப்பட்ட களி அமைப்பைத் தன்னுள்கொண்ட வெண்மையான சோறு
|
துணங்கை |
துணங்கை – (பெ) கைகளை முடக்கி விலாப்பக்கங்களில் சேர்த்து அடித்துக்கொண்டு அசைந்தாடும் ஒருவகைக் கூத்து,
A kind of dance in which the arms bent at the elbows are made to strike against the sides
அடுத்து ஆடிக்கொண்டு வருவோரைத் தழுவிக்கொள்ளுதலும் உண்டு.
குழையன் கோதையன் குறும் பைம் தொடியன்
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல – நற் 50/2,3
நம் தலைவன் இளந்தளிர்களையும், மாலையையும், குறிய சிறிய வளையல்களையும் கொண்டவனாய்
(சேரி)விழாவில் கொண்டாடும் துணங்கைக் கூத்தில் (பரத்தையரைத்)தழுவிக்கொள்ளுதலை கையகப்படுத்தச் சென்றபோது
முழா இமிழ் துணங்கைக்கு தழூஉ புணை ஆக – பதி 52/14
முழவு ஒலிக்கும் துணங்கைக் கூத்தில் தழுவியாடுவோருக்குத் துணையாக
பெரும்பாலும் மகளிர் ஆடுவது.
மள்ளர் குழீஇய விழவினானும்
மகளிர் தழீஇய துணங்கையானும்
யாண்டும் காணேன் மாண் தக்கோனை – – குறு 31/1-3
மறவர்கள் கூடியுள்ள சேரி விழாக்களிலும்,
மகளிர் தழுவியாடும் துணங்கைக்கூத்திலும்,
எங்குமே கண்டேனில்லை மாண்புக்குரிய தலைவனை!
ஆடும்போது பாடல் இசைப்பதும் உண்டு.
தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே – கலி 70/14
சுற்றத்தார் பாடும் துணங்கைக் கூத்துப் பாடலின் ஆரவாரம் வந்து அத் தூக்கத்தைக் கலைக்கும்;
|
துணர் |
துணர் – 1. (வி) கொத்தாகு, cluster (as in flowers)
– 2. (பெ) 1. பூங்கொத்து, cluster of flowers
2. காய்,பழம் இவற்றின் குலை, bunch
1.
விரி சினை துணர்ந்த நாகு இள வேங்கையின் – புறம் 352/12
விரிந்த கிளையினில் கொத்துக்கொத்தாகப் பூத்துள்ள இளைய வேங்கை மரத்தைப்போல
மணி துணர்ந்து அன்ன மா குரல் நொச்சி – புறம் 272/1
மணிகளைக் குலையாகத் தொடுத்தது போன்ற கரிய கொத்துக்களையுடைய நொச்சியே!
2.1
வாங்கு சினை மருத தூங்கு துணர் உதிரும் – நற் 350/3
வளைந்த கிளைகளைக் கொண்ட மருதமரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் பூங்கொத்துக்கள் உதிர்கின்ற
2.2
1.வாகை நெற்றின் குலை
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்
ஆடு_கள பறையின் அரிப்பன ஒலிப்ப – அகம் 45/1,2
உலர்ந்த வாகைமரத்திலுள்ள விளைந்த நெற்றுக்களின் குலை
ஆடுகளத்தில் (ஒலிக்கும் கழைக் கூத்தர்களின்) பறையினைப் போல் விட்டுவிட்டு ஒலிக்கும்
2. மாங்காய்களின் குலை
நறு வடி மாவின் பைம் துணர் உழக்கி – கலி 41/14
நறிய பிஞ்சுகளைக் கொண்ட மாமரத்தின் பசிய குலைகளை உலுக்கிவிட்டு
3. பலாக்குலை
சாரல் பலவின் கொழும் துணர் நறும் பழம் – ஐங் 214/1
மலைச் சாரலிலுள்ள பலாவின் கொழுத்த குலையான நறும் பழம்
4. கொன்றைப்பழங்களின் குலை
துணர் காய் கொன்றை குழல் பழம் ஊழ்த்தன – ஐங் 458/1
குலை குலையான காய்களைக் கொண்ட கொன்றையின் குழல் போன்ற பழங்கள் பழுத்து முதிர்ந்தன
5. முருங்கைக் காய்களின் குலை
வேனில் முருக்கின் விளை துணர் அன்ன – நற் 73/1
வேனில்காலத்து முருக்க மரத்தில் நன்கு விளைந்து முற்றிய காய்களின் கொத்தினைப் போன்ற
6. மிளகுக்காய்களின் குலை
கரும் கொடி மிளகின் காய் துணர் பசும் கறி – மலை 521
கரிய கொடிகளையுடைய மிளகின் காய்க்குலைகளின் (காய்ந்துபோகாத)பச்சை மிளகும்
7. சங்குகளின் கொத்து
கோடு துணர்ந்து அன்ன குருகு ஒழுக்கு எண்ணி – நற் 159/4
சங்குகளைக் குலையாகத் தொடுத்தது போன்ற குருகுகளின் வரிசையை எண்ணி
மேற்கண்ட எடுத்துக்காட்டுகள், படங்கள் மூலம்,’இணர்’ என்பது தனித்தனியாக நீண்ட காம்புகள் கொண்ட
பூக்கள் அல்லது காய்,பழங்களின் தொகுதி என்பது பெறப்படும். இந்தக் காம்புகள் தனித்தனியாக இல்லாமல்,
ஒன்றாகச் சேர்ந்திருந்தால் அது இணர் எனப்படும்.
பார்க்க: இணர்
|
துணி |
துணி – 1. (வி) 1. அஞ்சாமல் செயலில் ஈடுபடு, dare, venture
2. வெட்டு, கூறுபடுத்து, cut, sever
2. (பெ) 1. துண்டம், piece, slice
2. தெளிவு, clarity
1.1
தோள் வலி துணி பிணி துறந்து இறந்து எய்தி மெய் சாய்ந்து – கலி 104/46
தன் தோள் வலிமையினால் துணிந்த பிடிப்பு நெகிழ, காளையின் கழுத்தை விட்டுக் கைகள் தள்ளப்பட உடல் தளர்ந்து
1.2
கல்லும் மரனும் துணிக்கும் கூர்மை
தொடலை வாளர் தொடுதோல் அடியர் – மது 635,636
கல்லையும் மரத்தையும் வெட்டும் கூர்மையுடைய
தொங்குதல் (உள்ள)வாளையுடையவராய்; செருப்புக்கோத்த அடியினையுடையவராய்;
2.1.
கொழு இல் பைம் துணி
வைத்தலை மறந்த துய் தலை கூகை – பதி 44/17,18
திரட்சி இல்லாத பசிய இறைச்சித் துண்டத்தை
வைத்த இடத்தை மறந்த பஞ்சுபோன்ற கொண்டையையுடைய ஆண்கூகையை
2.2
துணி நீர் அருவி நம்மோடு ஆடல் – ஐங் 224/3
தெளிவுள்ள நீரை உடைய அருவியில் நம்மோடு நீராடுதல்
|
துணியல் |
துணியல் – (பெ) துண்டம், small piece as of flesh
கொழு மீன் குறைஇய துடி கண் துணியல் – மது 320
கொழுவிய மீன்களை அறுத்த உடுக்கையின் கண் போன்ற (மீன்)துண்டங்களும்
|
துதி |
துதி – (பெ) 1. தோல் உறை, sheath, scabbard
2. நுனி, point, sharp edge
1.
துதி கால் அன்னம் துணை செத்து மிதிக்கும் – ஐங் 106/2
தோலுறை போன்ற கால்களையுடைய அன்னமானது தன் துணை என எண்ணி மேலேறும்
2.
குரும்பி வல்சி பெரும் கை ஏற்றை
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின் – அகம் 8/2,3
புற்றாஞ்சோறை உணவாகக் கொண்ட பெரிய கையை உடைய ஆண்கரடியின்
தொங்கும் தோலின் நுனியில் உள்ள பெரிய நகம் கவ்விப் பிடிப்பதால்
|
துதை |
துதை – (வி) 1. தோய், படி, be steeped saturated
2. செறிந்திரு, அடர்ந்திரு, be dense, thick
3. நெருங்கியிரு, be close
4. கூட்டமாயிரு, be crowded
1.
தூது_உண்_அம்_புறவு என துதைந்த நின் எழில் நலம் – கலி 56/16
கல்லுண்டு வாழும் புறா என்று கூறும்படியாகத் தோய்ந்து படிந்திருக்கும் உன் எழில் நலம்
2
துதைந்த தூவி அம் புதாஅம் சேக்கும் – புறம் 391/16
செறிந்திருக்கும் தூவியையுடைய அழகிய புதா என்னும் பறவை தங்கும்
3
மருப்பில் கொண்டும் மார்பு உற தழீஇயும்
எருத்து இடை அடங்கியும் இமில் இற புல்லியும்
தோள் இடை புகுதந்தும் துதைந்து பாடு ஏற்றும் – கலி 105/30-32
கொம்புகளைப் பிடித்துக்கொண்டும், மார்பில் ஏந்தித்தாங்கிக்கொண்டும்,
கழுத்தைக் கட்டிக்கொண்டும், திமில் இற்றுப்போய்விடுமோ என்னும்படி தழுவிக்கொண்டும்,
தோள்களுக்கு நடுவே கழுத்தைப் புகவிட்டுப் பிடித்துக்கொண்டும், நெருங்கி நின்று குத்துக்களைத் தாங்கியும்,
4
துணி கய நிழல் நோக்கி துதைபு உடன் வண்டு ஆர்ப்ப – கலி 33/5
தெளிந்த குளத்து நீருக்குள் தெரியும் பூக்களின் உருவத்தைக் கண்டு, அவற்றைச் சுற்றிக் கூட்டமாய் வண்டுகள்
ஒலியெழுப்ப,
|
துத்தி |
துத்தி – (பெ) பாம்பின் படப்பொறி, Spots on the hood of a cobra;
பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப
கை கசடு இருந்த என் கண் அகன் தடாரி – பொரு 69,70
படம் விரித்த பாம்பினது பொறியை ஒப்ப,
கை அழுக்கு இருந்த என் கண் அகன்ற உடுக்கையில்
|
துனி |
துனி – 1. (வி) 1. வெறு, abhor
2 வருத்து, cauise distress
3. புலவி கொள், be sulky, variant in love-quarrel
– 2. (பெ) 1. வெறுப்பு, abhorrence
2. துன்பம், suffering
3. புலவி, extended love-quarrel
1.1
காதல் செய்து அருளாது துறந்தார் மாட்டு ஏது இன்றி
சிறிய துனித்தனை துன்னா செய்து அமர்ந்தனை – கலி 122/3,4
காதலித்துப் பின்னர் இரக்கமில்லாமல் நம்மைப் பிரிந்துசென்றவருக்காகக் காரணமின்றி
முதலில் சிறிதளவு சலித்துக்கொண்டாய்! அவரின் பொருந்தாத செயல்களில் ஆழ்ந்துபோனவளாய்
1.2
அகறல் அறியா அணி இழை நல்லார்
இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர் – பரி 9/23,24
தம் துணைவர் தம்மைவிட்டு அகன்றிருத்தலையே அறியாத அழகிய அணிகலன் அணிந்த மகளிர்
தம் கணவருடன் மனவேறுபாடு கொண்டு அவரை வருத்தும் தவறினைச் செய்யமாட்டார்
1.3
ஒண் நுதல் மகளிர் துனித்த கண்ணினும் – பதி 57/13
ஒளிவிடும் நெற்றியைக் கொண்ட மகளிர் புலவியால் கோபங்கொண்டு பார்க்கும் பார்வையைக் காட்டிலும்
2.1.
துனி இல் காட்சி முனிவர் முன் புக – திரு 137
வெறுப்பு அற்ற காட்சியையுடையரும் ஆகிய முனிவர், முன்னே செல்ல
2.2.
துனி தீர் காதலின் இனிது அமர்ந்து உறையும்
பனி வார் காவின் பல் வண்டு இமிரும் – மலை 485,486
(மக்கள் தம்)துன்பம் தீர்க்கும் விருப்புடன் இன்புற்று அமர்ந்து தங்கியிருக்கும்,
குளுமை பொழியும் சோலைகளில் பல்வித வண்டுகள் ரீங்காரம்செய்யும் —
2.3.
இது மற்று எவனோ தோழி துனி இடை
இன்னர் என்னும் இன்னா கிளவி – குறு 181/1,2
இது என்ன பயனை உடையது, தோழி? புலவிக்காலத்தில்
தலைவர் இப்படிப்பட்டவர் என்னும் இனிமையற்ற சொற்கள்-
|
துனை |
துனை – (வி) விரை, hasten, hurry
தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்து துனை-மின் – மலை 391
தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கும் வழக்கத்தில் உம்முடைய கொம்பை(யும்) வாசித்து விரைவீராக
|
துனைதரு(தல்) |
துனைதரு(தல்) – (வி) விரைந்து வரு(தல்), coming fast
மாலை தாழ் வியன் மார்பர் துனைதந்தார்
கால் உறழ் கடும் திண் தேர் கடவினர் விரைந்தே – கலி 33/30,31
மாலை தொங்கும் அகன்ற மார்பினையுடைய அவர் விரைந்து வருகிறார்,
காற்றைப் போன்று கடுமையாய் விரையும் தன் திண்ணிய தேரினைச் செலுத்திக்கொண்டு
இடன் இன்று அலைத்தரும் இன்னா செய் மாலை
துனி கொள் துயர் தீர காதலர் துனைதர
——————————————————————-
இல் ஆகின்றால் இருள் அகத்து ஒளித்தே – கலி 120/ 20-25
ஓடி ஒளிந்துகொள்வதற்கு ஓர் இடம் இல்லாதபடி அலைத்துத் துன்பமே செய்கின்ற இந்த மாலைக் காலம்,
வெறுப்பால் வந்த துயரம் தீரும்படி, காதலன் விரைந்து வந்துசேர,
——————————————————————–
இல்லாமல் போய்விட்டது இருளிடையே மறைந்து
|
துன் |
துன் – (வி) துன்னு, அணுகு, approach
தொடர் நாய் யாத்த துன் அரும் கடிநகர் – பெரும் 125
சங்கிலிகளால் நாயைக் கட்டிவைத்துள்ள அணுகமுடியாத காவலையும் உடைய வீட்டினையும்
|
துன்னம் |
துன்னம் – (பெ) தையல், seam, sewing
இழை வலந்த பல் துன்னத்து
இடை புரை பற்றி பிணி விடாஅ – புறம் 136/2,3
இழை சூழ்ந்த பல தையலினது
இடைக்கண் உளவாகிய புரைகளைப் பற்றி
|
துன்னல் |
துன்னல் – (பெ) 1. தையல், seam, sewing
2. நெருங்குதல், being nearor close
1.
வேரொடு நனைந்து வேற்று இழை நுழைந்த
துன்னல் சிதாஅர் துவர நீக்கி – பொரு 80,81
வேர்வையால் நனைந்து, பிற (நூல்)இழைகள் உள்ளே ஒடுமாறு
தைத்தல் (உடைய)கந்தையை முழுதும் போக்கி
2.
இரை தேர் வெண்_குருகு அல்லது யாவதும்
துன்னல் போகின்றால் பொழிலே – குறு 113/3,4
இரையைத் தேடும் வெள்ளைக் கொக்கு அன்றி, வேறு யாரும்
நெருங்கி வருதல் இல்லை அங்குள்ள சோலைக்கு
|
துப்பு |
துப்பு – (பெ) 1. வலி, vigour, strength, valour
2. பவளம், red coral
3. பகைமை, enmity
4. போர்த்துறை, warfare
1.
நட்பு கொளல் வேண்டி நயந்திசினோரும்
துப்பு கொளல் வேண்டிய துணையிலோரும் – பெரும் 425,426
நட்புக் கொள்ளுதலை வேண்டி விரும்பினவர்களும்,
(அவன்)வலியை(த் துணையாக)க்கொள்ளக் கருதிய வேறோர் உதவியில்லாதவர்களும்
2.
அத்த செயலை துப்பு உறழ் ஒண் தளிர் – ஐங் 273/1
நெடுவழியில் உள்ள அசோகின் பவளம் போன்ற ஒளிவிடும் தளிரை
3
அறியாமையான் மறந்து துப்பு எதிர்ந்த நின்
பகைவர் நாடும் கண்டு வந்திசினே – பதி 15/14,15
தமது அறியாமையால் மறந்து உன் பகைமையினை எதிர்கொண்ட உன்
பகைவரின் நாடுகளையும் பார்த்துவிட்டு இங்கே வந்திருக்கிறேன்
4.
துப்பு துறைபோகிய கொற்ற வேந்தே – பதி 62/9
போர்த்துறையில் சிறப்பெய்திய வெற்றியையுடைய வேந்தனே
|
துமி |
துமி – (வி) 1. வெட்டு, துண்டாக்கு, cut off
2. அரத்தால் அறு, cut with a file
3. வெட்டுப்படு, துண்டிக்கப்படு, be cut off, severed
4. அழி, நசுக்கு, destroy, crush
5. விலக்கு, keep off, obstruct
1.
கொடும் கால் புன்னை கோடு துமித்து இயற்றிய
பைம் காய் தூங்கும் பாய் மணல் பந்தர் – பெரும் 266,267
வளைந்த காலையுடைய புன்னைகளின் கொம்புகளை வெட்டி(க் கால்களாகக்கொண்டு) உருவாக்கிய,
(படர்ந்த கொடியில்)பச்சைக் காய்கள் தொங்கும், பரப்பப்பட்ட மணலையுடைய பந்தலில்,
2.
வேளா பார்ப்பான் வாள் அரம் துமித்த
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன – அகம் 24/1,2
வேள்வி செய்யாத பார்ப்பான் அறுக்கும் அரத்தால் துண்டாக்கி எடுத்த
வளையல்கள் போக எஞ்சிய சங்கின் தலைப்பகுதியைப் போன்ற
3.
தலை துமிந்து எஞ்சிய மெய் ஆடு பறந்தலை – பதி 35/6
தலைகள் துண்டிக்கப்பட்டதால் குறைந்துபோன முண்டங்கள் எழுந்தாடும் பாழிடமாகிய
4.
தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப
வந்தன்று பெருவிறல் தேரே – நற் 181/11,12
மாலை அணிந்த புரவி, பசுமையான பயிர்களை மிதித்து அழிக்க,
வந்தது தலைவனது தேர்,
5.
தொடீஇய செல்வார் துமித்து எதிர் மண்டும்
கடு வய நாகு போல் நோக்கி தொழு வாயில்
நீங்கி சினவுவாய் – கலி 116/5-7
தொடுவதற்காகக் கிட்டே செல்வாரை விலக்கி உக்கிரமாக எதிர்த்து நிற்கும்
மிகுந்த வலிமை கொண்ட இளம் பசுவினைப் போல என்னப் பார்த்து, தொழுவின் வாசலிலிருந்து
நீங்கிச் சென்று என்னைச் சீறுகின்றாயே!
|
தும்பி |
தும்பி – (பெ) வண்டு, bee
கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறை தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ – குறு 2/1,2
பூந்துகளைத் தேர்கின்ற வாழ்க்கையையும் அழகிய சிறகுகளையும் உடைய தும்பியே!
உன் விருப்பத்தைச் சொல்லாமல் நீ கண்டதனை மொழிவாயாக!
|
தும்பை |
தும்பை – (பெ) 1. ஒரு செடி/பூ, white dead nettle, Leucas aspera
2. வீரச் செயல்புரிவதன் குறியாக வீரர் போரில் அணியும் அடையாளப்பூ,
A garland of flowers worn by warriors when engaged in battle, as a mark of their valour
3. புறத்திணை வகைகளுள் ஒன்றான தும்பைத்திணை
Major theme of a king or warrior heroically fighting against his enemy;
1.
அலர் பூ தும்பை அம் பகட்டு மார்பின் – புறம் 96/1
மலர்ந்த பூவையுடைய தும்பை மாலையை அணிந்த அழகிய வலிய மார்பினையும்
2.
அமர் கடந்து மலைந்த தும்பை பகைவர் – பதி 14/8
போர்க்களங்களில் எதிர்சென்று போரிடும் தும்பைப் பூ சூடிய பகைவரின்
3.
பெருவீரச்செயல் காட்டிப் பகைவரோடு போர்செய்தலைக் கூறும் புறத்திணை வகைகளுள் ஒன்றான தும்பைத்திணை.
துப்பு துறைபோகிய வெப்பு உடை தும்பை
கறுத்த தெவ்வர் கடி முனை அலற – பதி 39/3,4
போர்த்துறை எல்லாம் முற்றவும் கடைபோகிய, வெம்மையையுடைய தும்பை சூடிப் பொரும் போரின்கண்
சினங்கொண்டு வந்த பகைவர்கள், அச்சந்தரும் போர்முனையில் அலறியோடும்படி
தன் வீரம் ஒன்றனையே பெரிது எனக் கருதி, பகைமைகொண்டு படையெடுத்துவந்த வேந்தனை,
எதிர்கொண்டு சென்று அவனுடன் போரிட்டு அவனை அழிக்கும் மன்னம் செய்யும் போர்
தும்பைப்போர் எனப்படும். இப்போர் நிகழும்போது வீரர்கள் தும்பைப் பூவைச் சூடுவர்.
இப்போர் பற்றிய பாடல்கள் தும்பைத்திணையைச் சார்ந்தவை எனப்படும். இது அகத்திணையில் உள்ள
நெய்தல்திணைக்குப் புறம் என்று கொள்வர் தொல்காப்பியர்.
தும்பை-தானே நெய்தலது புறனே
மைந்து பொருளாக வந்த வேந்தனை
சென்று தலை அழிக்கும் சிறப்பிற்று என்ப – தொல் – புறத் – 14,15
என்பது தொல்காப்பியம்.
வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சியாம் ; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை – அதிரப்
பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்
என்னும் புறப்பொருள் வெண்பாமாலைப் பாடலும் இதனை வலியுறுத்தும்
பார்க்க: உழிஞை
|
துயல் |
துயல் – (வி) அலை, அசை, ஊசலாடு, swing, sway
துணி மழை தவழும் துயல் கழை நெடும் கோட்டு – சிறு 265
தெளிந்த முகில் தவழும் அசைகின்ற மூங்கிலையுடைய நெடிய மலையின் சிகரத்தில்
|
துயல்வரு(தல்) |
துயல்வரு(தல்) – (வி) முன்னும் பின்னுமாக ஆடுதல், swing
1. ஓர் ஆதாரத்தைப் பற்றிக்கொண்டு கீழே தொங்குகின்ற ஒரு பொருள்,
அசைவின்போது முன்னும் பின்னுமாக ஆடுதல்
சிறு குழை துயல்வரும் காதின் – பெரும் 161
சிறிய குழை அசைகின்ற காதினையும்
யானை வேகமாக நடக்கும்போது, அதன் முகத்தில் அணியப்பெற்றிருக்கும் முகபடாம்
எழுந்தும் வீழ்ந்தும் அசைதல்.
வாடா மாலை ஓடையொடு துயல்வர
படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை
——————————————
கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு – திரு 79-82
வாடாத மாலையான பொன்னரிமாலை நெற்றிப்பட்டத்தோடு கிடந்து அசைய,
தாழ்கின்ற மணி மாறிமறி ஒலிக்கின்ற பக்கத்தினையும், கடிய நடையினையும்,
————————————————————
காற்று எழுந்ததைப் போன்ற (ஓட்டத்தையும் உடைய)களிற்றில் ஏறி
2. ஓர் ஆதாரத்தைப் பற்றிக்கொண்டு மேலே நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு பொருள்,
அசைவின்போது முன்னும் பின்னுமாக ஆடுதல்
வளி பொர துயல்வரும் தளி பொழி மலரின் – அகம் 146/10
காற்று மோதுதலால் அசையும் மழை பெய்யப்பட்ட மலரைப் போல
நோன் கழை துயல்வரும் வெதிரத்து – புறம் 277/5
வலிய கழை அசைந்தாடும் மூங்கிற் புதரின் கண்
|
துயிற்று |
துயிற்று – (வி) தூங்கச்செய், put to sleep
தோள் துணை ஆக துயிற்ற துஞ்சாள் – அகம் 63/16
தோளை ஆதாரமாகக்கொண்டு தூங்குவிக்க, தூங்கமாட்டாள்
|
துய் |
துய் – 1. (வி) 1. புலன்களால் நுகர், enjoy by means of the senses;
2. அனுபவி, experience as the fruits of actions
3. உண்ணு, தின்னு, eat
2. (பெ) 1. கதிர் பூவிதழ் முதலியவற்றின் மெல்லிய பகுதி
A soft part in the ears of corn, in the petals of flowers, etc.;
2. புளியம்பழத்தின் ஆர்க்கு, Fibre covering the tamarind pulp;
3. மென்மை, softness
4. பஞ்சுப்பிசிர், cotton fibres
5. சிம்பு, fibre
1.1
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் என – குறு 63/1
இரப்போருக்கு ஈதலும், இன்பத்தை நுகர்தலும், இல்லாதவருக்கு இல்லை என எண்ணி
1.2
தொல் வினை பயன் துய்ப்ப துறக்கம் வேட்டு எழுந்தால் போல் – கலி 118/3
முந்தைய நல்வினைகளின் பயன்களை அனுபவிப்பதற்கு, சுவர்க்கத்தை விரும்பிப் போவதைப் போல
1.3
அத்த இருப்பை ஆர் கழல் புது பூ
துய்த்த வாய ————————
————————————-
வன் கை எண்கின் வய நிரை – அகம் 15/13-16
அரிய சுரத்தில் உள்ள இலுப்பை மரத்தின் ஆர்க்கு கழன்ற புதிய பூக்களைத்
தின்ற வாயையுடைய ————————–
—————————————–
வலிய கையை உடைய கரடியின் வலிமை உள்ள கூட்டம்
2.1.
துய் தலை வாங்கிய புனிறு தீர் பெரும் குரல் – குறி 37
மெல்லிய பஞ்சை நுனியில் உடைய வளைந்த பிஞ்சுத்தன்மை நீங்கிய(முற்றிய) பெரிய கதிர்களை
கடவுள் வாகை துய் வீ ஏய்ப்ப – பதி 66/15
கொற்றவை வாழும் வாகை மரத்தின் பஞ்சினைக் கொண்ட பூவைப் போல
2.2.
வெண் புடை கொண்ட துய் தலை பழனின் – மலை 178
வெண்மையான புடைத்த பக்கங்களைக்கொண்ட, நாரை உச்சியில் கொண்ட (புளியம்)பழத்தின்
2.3.
துய் மயிர் அடக்கிய சேக்கை அன்ன – மலை 418
மென்மையான உரோமத்தை உள்ளடக்கிய மெத்தை விரிப்பைக்கொண்ட கட்டில் போன்ற
2.4.
துய் தலை மந்தி வன் பறழ் தூங்க – நற் 95/4
பஞ்சுப்பிசிர் போன்ற தலையைக் கொண்ட குரங்கின் வலிய குட்டி தொங்க
2.5.
நெய் வார்ந்து அன்ன துய் அடங்கு நரம்பின்
இரும் பாண் ஒக்கல் தலைவன் – நற் 300/8,9
நெய்யை ஊற்றிவிட்டாற் போன்ற சிம்பு அடங்கிய நரம்புகளைக் கொண்ட யாழை இசைக்கும்
பெரிய பாணர் சுற்றத்தாருக்குத் தலைவனே
|
துர |
துர – (வி) 1. ஓட்டிச்செலுத்து, drive with greater speed
2. ஊக்கு, தூண்டு, urge, encourage
3. ஆழமாக எய், எறி, shoot deeply as an arrow, spear
4. முன்னால் தள்ளு, push forward
5. செயல் முனைப்புக்கொள், endeavour, make efforts
1.
துனை பரி துரக்கும் செலவினர் – முல் 102
விரைந்து செல்லும் பரியைக் கடிதாகச் செலுத்தும் செலவினையுடையவரின்
2.
கலம் தரல் உள்ளமொடு கழிய காட்டி
பின் நின்று துரக்கும் நெஞ்சம் – அகம் 3/12,13
அணிகலன்கள் ஈட்டவேண்டும் என்ற எண்ணத்துடன் கடந்துசெல்வதாகக் காட்டி
பின்னால் இருந்து ஊக்கும் நெஞ்சமே!
3.
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல்வரும் களிற்றொடு வேல் துரந்து – புறம் 274/2,3
மயில்பீலியால் தொடுக்கப்பட்ட கண்ணியினையுடைய பெருந்தகையாகிய மறவன்
தன் மேல்கொலைகுறித்து வந்த களிற்றின் நெற்றியிலே வேலைச் செலுத்திப் போக்கி
4.
அருவி சொரிந்த திரையின் துரந்து
நெடு மால் கருங்கை நடு வழி போந்து – பரி 20/103,104
அருவி சொரிந்த பூக்களை வையையாறு தன் நீரலைகளினால் தள்ளிக்கொண்டுவந்து,
நீண்ட பெரிய நிலத்தடி வழியாக நீரின் நடுவழியே கொண்டு சென்று
5.
குன்று பின் ஒழிய போகி உரம் துரந்து
ஞாயிறு படினும் ஊர் சேய்த்து எனாது
துனை பரி துரக்கும் துஞ்சா செலவின் – அகம் 9/14-16
குன்றுகள் பின்னிட முன்னே செல்ல, மனஉறுதியுடன் முனைப்புக்கொண்டு,
ஞாயிறு மறைந்தாலும், ஊர் வெகுதொலைவில் உள்ளது என்று சொல்லாமல்,
வேகமாக ஓடும் குதிரைகளை மேலும் முடுக்கிவிட்டுச் சோர்வின்றிப் பயணம்செய்யும்
|
துரப்பு |
துரப்பு – (பெ) முடுக்கி உட்செலுத்துதல், driving in, hammer down, as a nail;
துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி – பொரு 10
(பத்தலிரண்டும் சேர்த்தற்குத் திறந்த)துளைகளின் வாய் மறைய முடுக்குதலமைந்த ஆணியினையும்
|
துராய் |
துராய் – (பெ) அறுகம்புல்லால் திரித்த பழுதை, twisted quitch grass;
துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் – பொரு 103
அறுகம் புல் கட்டுக்களை கவ்வித்தின்ற செம்மறிக்கிடாயின் அழகிய புழுக்கப்பட்ட(இறைச்சியின்)
|
துரு |
துரு – (பெ) செம்மறியாடு, sheep
ஆடு தலை துருவின் தோடு தலைப்பெயர்க்கும் – நற் 169/6
ஆடுகின்ற தலையையுடைய செம்மறியாட்டின் கூட்டத்தை ஓட்டிக்கொண்டு திரும்பும்
|
துருத்தி |
துருத்தி – (பெ) 1. ஆற்றிடைக்குறை, ஆற்றின் நடுவில் சிறு மேடு, islet in a river
2. கடல் நடுவே உள்ள சிறு தீவு
3. கொல்லன் பட்டறையின் தோலால் ஆன ஊதுலைக் கருவி, bellows
1.
வீ மலி கான்யாற்றின் துருத்தி குறுகி – பரி 10/30
பூக்கள் நிறைந்த காட்டாற்றின் நடுவேயுள்ள திட்டுக்களை அடைந்து
2.
இரு முந்நீர் துருத்தியுள்
முரணியோர் தலைச்சென்று – பதி 20/2,3
கரிய கடலிலுள்ள தீவினுள் வாழ்ந்த,
அவனுடன் முரண்பட்டோரை எதிர்த்துச் சென்று
3.
கொல்லன்
விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா – அகம் 224/2,3
கொல்லன்
வலித்து இழுக்கும் துருத்தியினைப் போல வெப்பமாகப் பெருமூச்சுவிட்டு
|
துருவை |
துருவை – (பெ) துரு, செம்மறியாடு, sheep
கொடு முக துருவையொடு வெள்ளை சேக்கும் – பெரும் 153
வளைந்த முகத்தையுடைய செம்மறியாட்டுடன் வெள்ளாடும் கிடக்கும்
|
துரூஉ |
துரூஉ – (பெ) துரு, துருவை என்பதன் மரூஉ, corrupt form of the word ‘turuvai’
தோப்பி கள்ளொடு துரூஉ பலி கொடுக்கும் – அகம் 35/9
நெல்லால் ஆக்கிய கள்ளோடு செம்மறியாட்டையும் பலி கொடுக்கும்
|
துறக்கம் |
துறக்கம் – (பெ) சுவர்க்கம், heaven
பெறற்கு அரும் தொல் சீர் துறக்கம் ஏய்க்கும் – பட் 104
பெறுவதற்கு அரிய தொன்றுதொட்ட மேன்மையுடைய சுவர்க்கத்தைப் போன்ற
|
துறப்பு |
துறப்பு – (பெ) நீங்குதல், பிரிவு, parting, separation
துனி செய்து நீடினும் துறப்பு அஞ்சி கலுழ்பவள் – கலி 10/15
பொய்க்கோபம் கொண்டு மறைந்திருந்தாலும், அந்தச் சிறு பிரிவிற்கே அஞ்சி நடுங்குகின்றவளாயிற்றே
|
துறு |
துறு – (வி) அடர்ந்திரு, செறிவாயிரு, be thick, crowded, full
துறு நீர் கடம்பின் துணை ஆர் கோதை – சிறு 69
செறிந்த நீர்மையையுடைய கடம்பின் இணைதல் நிறைந்த மாலை
|
துறுகல் |
துறுகல் – (பெ) குத்துப்பாறை, erect rock
கரும் கால் வேங்கை வீ உகு துறுகல்
இரும் புலி குருளையின் தோன்றும் காட்டு இடை – குறு 47/1,2
கரிய அடிமரத்தை உடைய வேங்கை மரத்தின் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் குத்துப்பாறை
பெரிய புலியின் குட்டியைப் போலத் தோன்றும் காட்டுவழியில்
|
துறை |
துறை – (பெ) 1. ஆற்றில்/கடலில் இறங்கும் இடம், place where one gets into a river/sea
2. ஆற்றில்/கடலில் இறங்கி நீராடும் இடம், நீர்த்துறை, bathing ghat
3. பகுதி, பிரிவு, வகைமை, branch, field, catagory
4. துறைமுகம், port
5. சலவைசெய்வோர் ஆற்றில் துவைக்கும் இடம், riverside where washermen wash the clothes
6. ஆடல்துறை, faculty of dance
1.
நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும்
துறை_துறை-தோறும் பொறை உயிர்த்து ஒழுகி – பொரு 238,239
நறைக்கொடியும், நரந்தம் புல்லும், அகிலும், சந்தனமும்,
துறைகள்தோறும் துறைகள்தோறும், (தனக்குச்)சுமையானவற்றை ஒதுக்கி, இளைப்பாற நடந்து –
2.
துறை ஆடு மகளிர்க்கு தோள் புணை ஆகிய – சிறு 117
(நீராடும்)துறையில் குளிக்கும் மகளிருடைய தோள்களுக்குத் தெப்பமாகும்படி
3.
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி
கூடு கொள் இன் இயம் – சிறு 228,229
பாடும் துறைகளெல்லாம் முடியப் பாடுதற்கு, பயன் விளங்குகின்ற இசைகளைத்
சுதிசேர்த்தல் கொண்ட இனிய யாழை
4.
இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி
உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும்
துறை பிறக்கு ஒழிய போகி – பெரும் 349-351
இரவில் கொளுத்தின விளங்குகின்ற விளக்கு நெகிழ்ந்து
பெருநீர்ப்பரப்பாகிய கடலில் ஓடும் மரக்கலங்களை அழைக்கும் 350
துறை பின்னே கிடக்க (கடந்து) போய்
5.
துறை செல்லாள் ஊரவர்
ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி – கலி 72/13,14
துறைக்குச் செல்லாதவளாய், ஊரினரின்
ஆடைகளை சேர்த்துக்கொண்டு வெளுக்கின்ற உன் வண்ணாத்தி
6.
காவில் தகைத்த துறை கூடு கலப்பையர் – பதி 41/5
காவடியின் இரு பக்கங்களிலும் சரியாகக் கட்டப்பட்ட, ஆடல்துறைக்கு வேண்டிய கலங்களைக் கொண்ட பையினராய்
|
துறைபோ(தல்) |
துறைபோ(தல்) – (வி) 1. முழுமையாகக் கற்றறி, learn thoroughly
2. முழுமை பெறு, be complete
1.
நல் வேள்வி துறைபோகிய
தொல் ஆணை நல் ஆசிரியர் – மது 760,761
நல்ல வேள்வித்துறைகளில் முற்றும் தேர்ச்சியடைந்த
2.
துப்பு துறைபோகிய துணிவு உடை ஆண்மை – பதி 14/6
வலிமைபெற்றுத் திகழ்வதில் முழுமை பெற்ற அஞ்சாமை பொருந்திய ஆண்மையினையுடைய
|
துறைப்படு |
துறைப்படு – (வி) கடல் துறையில் அகப்படு, caught in a fishing ghat
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல் – அகம் 196/2
விடியற்காலை வேட்டையில் துறையில் அகப்பட்ட பெரிய அகட்டினையுடைய வரால் மீனின்
|
துறைவன் |
துறைவன் – (பெ) நெய்தனிலத் தலைவன், Chief of a maritime tract;
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு
அலரே அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை
அரிய ஆகும் நமக்கு என கூறின்
கொண்டும் செல்வர்-கொல் தோழி – நற் 4/4-7
அழகிய கண்களையுடைய முறுக்கேறிய வலைகளைக் காயவைக்கும் துறையைச் சேர்ந்த தலைவனிடம் சென்று
ஊராரின் பழிச்சொற்களை அன்னை அறிந்தால் இங்கு சந்தித்துக்கொள்ளும் நம் வாழ்க்கை
இனி அரிதாகிப்போய்விடும் என்று கூறினால்
நம்மை அழைத்துக்கொண்டு செல்வாரோ?
|
துற்று |
துற்று – (வி) 1. குவி, நிறை, heap, fill
2. கவ்விப்பிடி, seize with the mouth
3. உண், தின், eat
4. நெருங்கு, come near
1
கூவை துற்ற நால் கால் பந்தர்
சிறு மனை வாழ்க்கை – புறம் 29/19,20
கூவை இலைகள் குவித்துவைக்கப்பட்ட நான்கு கால்களையுடைய பந்தலாகிய
சிறிய இல்லின்கண் வாழும் வாழ்க்கை
2
பகு வாய் வராஅல் பல் வரி இரும் போத்து
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி – அகம் 36/1,2
பிளந்த வாயையுடைய வராலின், பல வரிகளைக் கொண்ட ஆண்மீன்
வளைந்த வாயையுடைய தூண்டில்முள்ளில் மாட்டிய இரையைக் கவ்வி,
3
துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் – பொரு 103
அறுகம் புல் கட்டுக்களைத் தின்ற செம்மறிக்கிடாயின் அழகிய புழுக்கப்பட்ட(இறைச்சியின்)
4
வெம் கதிர் கனலி துற்றவும் – புறம் 41/6
வெய்ய சுடரையுடைய ஞாயிறு நெருங்கிவரவும் (சுட்டெரிக்கவும்)
|
துலங்குமான் |
துலங்குமான் – (பெ) (சிறந்த விலங்காகிய) சிங்கம், lion
துலங்குமான் மேல் ஊர்தி துயில் ஏற்பாய் – கலி 13/16
சிறந்த விலங்காகிய சிங்கத்தின் அமைப்பினைக் கால்களாகக் கொண்ட கட்டிலின்மேல் படுத்துத் துயில்பவளே
|
துலாம் |
துலாம் – (பெ) தராசு, நிறைகோல், balance, scales
கோல் நிறை துலாஅம்_புக்கோன் மருக – புறம் 39/3
கோலாகிய நிறுக்கப்படும் தராசின்கண்ணே துலை புக்க செம்பியனது மரபினுள்ளாயாதலால்
|
துளக்கு |
துளக்கு – 1. (வி) 1. வருத்து, cause pain, afflict
2. அசை, move, shake
– 2. (பெ) வருத்தம், pain, affliction
1.1.
மன் உயிர் அழிய யாண்டு பல துளக்கி
மண் உடை ஞாலம் புரவு எதிர்கொண்ட
தண் இயல் எழிலி தலையாது மாறி – பதி 18/8-10
உலகத்து உயிர்கள் அழிய, பல ஆண்டுகள் வருத்தி,
மண் திணிந்த நிலவுலகத்தைக் காப்பதை மேற்கொண்ட
குளிர்ந்த இயல்பினையுடைய மேகங்கள் மழைபெய்யாமல் மாறிப்போய்,
1.2
இமயமும் துளக்கும் பண்பினை – குறு 158/5
இமயமலையையும் அசைக்கின்ற தன்மையையுடையாய்
2.
நானிலம் துளக்கு அற முழு_முதல் நாற்றிய
பொலம் புனை இதழ் அணி மணி மடல் பேர் அணி
இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி – பரி 13/35-37
இம் மண்ணுலகத்து மக்களின் நடுக்கம் தீர, பெரிய அடிப்பகுதிவரை சென்று நாட்டிய
பொன்னாலான மலரால் அழகிய மணிகளையுடைய மடலையுடைய பெரிய குமிழ் போன்ற பூணினைக் கொண்ட
பிரகாசமாய் ஒளிவிடும் கொம்புகளையுடைய ஆண்பன்றியும் ஆகி
|
துளங்கு |
துளங்கு – (வி) 1. அசை. அசைந்தாடு, move, shake, sway from side to side
2. வருந்து, கலங்கு, be perturbed,
3. நிலைகலங்கு, be uprooted
4. சோர்வடை,தளர்வடை, be wearied
1.
இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு – மலை 330
(தன்)கூட்டத்தைவிட்டுப் பிரிந்துபோன (வலம் இடமாக)அசைந்தாடும் திமிலைக்கொண்ட காளையும்
துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதி தேறல் – மலை 463
(வேகும்போது கொதிப்பதால்)
பக்கவாட்டில் குலுங்கும் பானையிலிருந்து வடித்த (நெல்லின்)இளம் முளைகளாலான தெளிந்த கள்ளை
2.
துளங்கு குடி விழு திணை திருத்தி முரசு கொண்டு
ஆண் கடன் நிறுத்த நின் பூண் கிளர் வியன் மார்பு – பதி 31/13,14
வருந்துகின்ற குடிமக்களைச் சிறந்த நிலையில் நிலைநிறுத்தி, பகைவரின் முரசுகளைக் கைப்பற்றி,
வெற்றி வீரர்களுக்குப் பரிசளித்து ஆண்கடனைச் செய்துமுடித்த உன் பூண் அணிந்த பரந்த மார்பு,
3.
மணி கண்டு அன்ன துணி கயம் துளங்க
இரும்பு இயன்று அன்ன கரும் கோட்டு எருமை
ஆம்பல் மெல் அடை கிழிய – அகம் 56/2-4
பளிங்கைப் போன்ற தெளிந்த நீருள்ள குளம் அலையடித்துக் கலங்க
இரும்பினால் செய்தது போன்ற கரிய கொம்பை உடைய எருமை
ஆம்பலின் மெல்லிய இலைகள் கிழியுமாறு,
4.
தொல்லோர் மாய்ந்து என துளங்கல் செல்லாது – புறம் 58/4
தனக்கு முன்னுள்ளோர் இறந்தாராக, தான் தளராது
|
துளர் |
துளர் – 1. (வி) களைக்கொட்டால் கொத்து, strike with a weeding hook
2. (பெ) 1. பயிர்களின் ஊடேயுள்ள களை., weed
2. களைக்கொட்டு, weeding hook
1.
மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய
பிறங்கு குரல் இறடி காக்கும் – குறு 214/1,2
மரங்களை வெட்டிய குறவன், அந்த நிலத்தைக் களைக்கொட்டால் கொத்தி விதைத்த
ஒளிரும் கதிரையுடைய தினையைக் காக்கின்ற
2.1.
கோடு உடை கையர் துளர் எறி வினைஞர் – அகம் 184/13
களைக்கொட்டினையுடைய கையராய், களையினை வெட்டி எறியும் தொழிலாளிகள்
2.2.
தொய்யாது வித்திய துளர் படு துடவை – மலை 122
உழாமல் விதைக்கப்பட்டு, களைக்கொட்டுகளால் கொத்தப்பட்ட தோட்டங்களில்
|
துளவம் |
துளவம் – (பெ) துளசி, sacred basil
துளவம் சூடிய அறிதுயிலோனும் – பரி 13/30
துளசி மாலை அணிந்த யோகநித்திரையில் இருப்பவனும்
|
துளவு |
துளவு – (பெ) துளசி, sacred basil
கள் அணி பசும் துளவினவை கரும் குன்று அனையவை – பரி 15/54
தேன் துளிக்கும் பசிய துளசிமாலையை அணிந்துள்ளாய்; கரிய மலையைப் போன்றிருக்கின்றாய்
|
துளி |
துளி – 1. (வி) மழைபெய், rain
– 2. (பெ) 1. சொட்டு, நீர்த்திவலை, rain drop, globule of water
2. மழை, rain
1.
விண்டு முன்னிய கொண்டல் மா மழை
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப – அகம் 235/5,6
மலையைச் சேர்ந்த கொண்டலாகிய கரிய மேகம்
இரவில் தங்குதலுற்றுப் பொங்கி மழையினைப் பெய்ய
2.1
துவலை தண் துளி பேணார் பகல் இறந்து
இரு கோட்டு அறுவையர் வேண்டு வயின் திரிதர – – நெடு 34,35
தூரலாக விழும் குளிர்ந்த துளியைப் பொருட்படுத்தாமல், பகற்பொழுதைக் கடந்து,
முன்னும் பின்னும் தொங்கவிட்ட துகிலினையுடையராய்(த் தாம்) விரும்பியவாறு திரிந்துவர
2.2
இன் இசை உருமொடு கனை துளி தலைஇ – அகம் 58/1
இனிய ஓசையுடன் கூடிய இடியுடன் பெரிய மழை பெய்ய,
|
துளுநாடு |
துளுநாடு – (பெ) தெற்குக் கன்னட நாடு, The Tulu country on the West Coast in south Karnataka
தோகை காவின் துளுநாட்டு அன்ன
வறும் கை வம்பலர் தாங்கும் பண்பின் – அகம் 15/5,6
மயில்கள் வாழும் சோலைகளையுடைய – துளுநாட்டைப் போன்று,
வெறுங்கையுடன் வரும் அயலவர்களை நன்கு உபசரிக்கும் பண்புடைய
|
துளும்பு |
துளும்பு – (வி) ததும்பு, brim over, overflow; to fill, as tears in the eyes
நிறை கடல் முகந்து உராய் நிறைந்து நீர் துளும்பும் தம்
பொறை தவிர்பு அசைவிட பொழிந்தன்று வானம் – பரி 6/1,2
நீர் நிறைந்த கடலில் நீரை முகந்து வானத்தில் பரவி, நிறைவாக நீர் ததும்பும் தம்
பாரத்தை இறக்கிவைத்து இளைப்பாறும்பொருட்டு பொழிந்தன மேகங்கள்;
|
துழ |
துழ – (வி) 1. துழாவு, கிளறு, அளை, stir well, as with a ladle
2. அளாவு, mix and stir
3. ஒன்றைக் கண்டுபிடிக்க பார்வையை அங்குமிங்கும் செலுத்து, cast a searching look into, seek
1.
கூவல் துழந்த தடம் தாள் நாரை – பதி 51/4
பள்ளங்களில் மீனைத் தேடித் துழாவிய பெரிய கால்களையுடைய நாரை
2.
கிளர் இழை அரிவை நெய் துழந்து அட்ட
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி – நற் 41/7,8
பொலிவுடைய அணிகலன்களை அணிந்த பெண்ணே! நெய்யை அளாவவிட்டுச் சமைத்த
கொழுத்த தசையிலிருந்து எழும் மணமுள்ள புகை படிந்த நெற்றியில்
3.
ஆறு கொள் மருங்கின் மாதிரம் துழவும்
கவலை நெஞ்சத்து அவலம் தீர
நீ தோன்றினையே – புறம் 174/21-23
நல்ல நெறியினைக் கொண்ட பக்கத்தினையுடைய திசையெங்கும் பார்வையைச் செலுத்தும்
கவலையுற்ற மனத்தின்கண் வருத்தம்கெட
நீ வந்து தோன்றினாய்
|
துழவை |
துழவை – (பெ) துழாவிச் சமைத்த கூழ், Porridge, as stirred with a ladle
அவையா அரிசி அம் களி துழவை
மலர் வாய் பிழாவில் புலர ஆற்றி – பெரும் 275,276
அவிக்காத(நெல்லின்) அரிசி(பச்சரிசி)யை அழகிய களி(யாகத் துழாவி அட்ட) குழைசோற்றை
அகன்ற வாயையுடைய தட்டுப் பிழாவில் உலரும்படி ஆற்றி
|
துழாய் |
துழாய் – (பெ) துளசி, Sacred basil
மண் மிசை அவிழ் துழாய் மலர் தரு செல்வத்து
புள் மிசை கொடியோனும் புங்கவம் ஊர்வோனும்
மலர் மிசை முதல்வனும் – பரி 8/1-3
இந்த மண்ணுலகத்தில் – மலர்ந்த துளசி மாலையினையும், உயிர்களுக்கு அளிக்கும் செல்வத்தினையும்,
மேலே கருடப்பறவை வரையப்பெற்ற கொடியினையும் உடைய திருமாலும், காளையின் மேல் ஏறிவரும் சிவபெருமானும்,
தாமரை மலர் மேல் அமர்ந்திருக்கும் பிரமனும்
|
துழைஇ |
துழைஇ – (வி.எ) துழவி, துழாவி என்பதன் திரிபு, the changed form of the word ‘tuzaavi’
வழை அமை சாரல் கமழ துழைஇ – மலை 181
சுரபுன்னை மரங்கள் வளர்ந்துநிற்கும் மலைச்சாரல் கமகமக்கும்படி கிளறி
பார்க்க : துழ
|
துழைஇய |
துழைஇய – (வி.எ) துழவிய, துழாவிய என்பதன் திரிபு, the changed form of the word ‘tuzaaviya’
இரும் கழி துழைஇய ஈர்ம் புற நாரை – நற் 127/1
கரிய கழியினைத் துழாவித்தேடிய ஈரமான முதுகைக் கொண்ட நாரை
பார்க்க : துழ
|
துவன்று |
துவன்று – (வி) 1. கூடிநில், be united, join
2. குவி, be heaped
3. அடர்ந்திரு, be dense
4. நிறை, fill up
1,2
கணம் கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇ
பிணம் தின் யாக்கை பேய்_மகள் துவன்றவும்
கொடும் கால் மாடத்து நெடும் கடை துவன்றி
விருந்து உண்டு ஆனா பெரும் சோற்று அட்டில் – பட் 259-262
திரட்சிகொண்ட ஆண்பேய்களுடன் மயிரைத் தாழ்த்து மெல்லநடந்து,
பிணந்தின்னும் வடிவையுடைய பேய்மகள் ஒன்றுகூடவும்;
உருண்ட(வளைவான) தூண்களையுடைய மாடத்தின் உயரமான தலைவாசலில் குவிந்து,
(இடையறாது)விருந்தினர் உண்டு(ம்) குறையாத நிறைந்த சோற்றையுடைய அடுக்களை
3.
தூ மலர் துவன்றிய கரை பொரு நிவப்பின்
மீமிசை நல் யாறு – மலை 51,52
தூய பூக்கள் அடர்ந்துகிடக்கும் கரை(யின் உச்சி)யை மோதுகின்ற (அளவுக்கு)உயர்ச்சியினையுடைய
பெரும் பெருக்குள்ள நல்ல ஆறு
4.
துவன்றிய
கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது – புறம் 137/4,5
நீர் நிறைந்த
பள்ளத்தின்கண் விதைத்த வித்து நீரின்மையால் சாவாது
|
துவர |
துவர – (வி.அ) முழுவதும், entirely
வேரொடு நனைந்து வேற்று இழை நுழைந்த
துன்னல் சிதாஅர் துவர நீக்கி – பொரு 80,81
வேர்வையால் நனைந்து, பிற (நூல்)இழைகள் உள்ளே ஒடுமாறு
தைத்தல் (உடைய)கந்தையை முழுதும் போக்கி
|
துவரை |
துவரை – (பெ) கண்ணபிரான் ஆண்ட துவாரகை, The city Dwaraka of Lord Krishna.
உவரா ஈகை துவரை ஆண்டு – புறம் 201/10
வெறுப்பில்லாத கொடையினையுடையராய், துவராபதி என்னும்படைவீட்டை ஆண்டு
|
துவர் |
துவர் – 1. (வி) 1. முழுதுமாகு, be complete
2. புலர்த்து, dry, wipe off moisture
3. சிவ, சிவப்பாயிரு, be red
2 (பெ) 1. சிவப்பு, red, scrlet
2. காவி நிறம், red ochre
3. நாவல் அல்லது பூவந்தி, கடு, நெல்லி, தான்றி, ஆல், அரசு, அத்தி, இத்தி,
முத்தக்காசு அல்லது கருங்காலி, மாந்தளிர் என்ற பத்துத் துவர்ப்பு மருந்துப்பொருள்,
Medical astringents, numbering ten
4. துவர்ப்புச்சுவை. Astringency;
1.1
மிக்கு எழு கடும் தார் துய் தலை சென்று
துப்பு துவர் போக பெரும் கிளை உவப்ப
ஈத்து ஆன்று ஆனா இடன் உடை வளனும் – பதி 32/4,5
போர்வேட்கை மிகுந்து எழுகின்ற கடுமையான முன்னணிப்படையினர் பகைவர் நாட்டின் இறுதியெல்லை வரை சென்று
வலிமை முழுவதையும் காட்டிப் போரிட்டு, பெருங்கூட்டமான பாணரும் கூத்தருமாகிய சுற்றத்தார் மகிழும்படி,
கொடுத்து நிறைந்தும் அழியாத செல்வத்தையுடைய வளமும்
1.2
பின் இரும் கூந்தல் பிழிவனம் துவரி
உள்ளகம் சிவந்த கண்ணேம் – குறி 60,61
பின்னப்பட்ட கரிய கூந்தலைப் பிழிந்து ஈரத்தைப் புலர்த்தி,
உட்புறமெல்லாம் சிவந்த கண்ணையுடையோமாய்
1.3
அவரை ஆய் மலர் உதிர துவரின
வாங்கு துளை துகிரின் ஈங்கை பூப்ப – அகம் 243/1,2
அவரையின் அழகிய மலர் உதிரவும், சிவப்பாயிருக்கும்
வளைந்த துளையினையுடைய பவளம் போல இண்டையானது பூக்கவும்
2.1.
இலவு இதழ் புரையும் இன் மொழி துவர் வாய் – பொரு 27
இலவின் இதழை ஒக்கும் இனிய சொல்லையுடைய சிவந்த வாயினையும்,
2.2.
நிறை பெயல் அறியா குறைத்து ஊண் அல்லில்
துவர் செய் ஆடை செம் தொடை மறவர் – நற் 33/5,6
நிறைந்த மழையை அறியாத, குறைந்த உணவையுடைய இரவினில்
பழுப்பேறிய ஆடையையுடைய, செம்மையாக அம்பினைத் தொடுத்திருக்கும் மறவர்கள்
2.3.
தண்ணம் துவர் பல ஊட்டி சலம் குடைவார் – பரி 10/90
குளிர்ச்சியான அழகிய பத்துவகைத் துவர்களையும் தேய்த்துக்கொண்டு நீரில் முழுகுவோர் சிலர்
2.4
தொட்டதை தைப்பு அமை சருமத்தின் தாள் இயை தாமரை
துப்பு அமை துவர் நீர் துறை மறை அழுத்திய – பரி 21/3,4
நீ அணிந்துகொண்டது,
தைப்பதற்காக அமைந்த தோலினால், உன் திருவடிக்குப் பொருந்திய தாமரை மலர் போன்று செய்யப்பட்டது;
செம்பவளம் போன்ற துவர்நீர்த் துறையில் முழுதும் மறையும்படி அழுத்திப் பதனிடப்பட்டது
|
துவற்று |
துவற்று – (வி) தூவு, spray, sprinkle
தோள் அதிர்பு அகம் சேர துவற்றும் இ சில் மழை – கலி 31/16
தோள்கள் நடுங்கி மார்பில் குறுக்காக அணைத்துக்கொள்ள தூவுகின்ற இந்தத் தூறல்
|
துவலை |
துவலை – (பெ) 1. நீர்த்திவலை, Watery particle, drop, spray
2. மழைத்தூவல், drizzle
3. தேன்துளி, drop of honey
1.
நுண் பல துவலை புதல் மிசை நனைக்கும் – அகம் 262/15
நுண்ணியவான பல நீர்த்துளிகள் மலை மீது உள்ள புதர்களை எல்லாம் நனைக்கும்
2.
கல்லென் துவலை தூவலின் யாவரும்
தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார் – நெடு 64,65
‘கல்’லென்கிற ஓசையுடன் தூறல் (நீர்த்திவலைகளைத்)தூவுவதால், ஒருவருமே
குவிந்த வாயையுடைய செம்புகளில் தண்ணீரைக் குடியாராய்ப்
3.
மென் சிறை வண்டின் தண் கமழ் பூ துணர்
தாது இன் துவலை தளிர் வார்ந்து அன்ன – அகம் 41/13,14
மென் சிறகுடைய வண்டுகள் உள்ள குளிர்ந்த மணங்கமழும் பூங்கொத்துகளில் உள்ள
தாதுடன் கூடிய தேன்துளி தளிரில் ஒழுகியது போல
|
துவை |
துவை – 1. (வி) 1. ஒலி, sound
2. ஓங்கி அடி, beat harsh
3. புகழப்படு, be praised
4. முழக்கமிடு, roar
5. குழை, become soft
– 2. (பெ) துவையல், a kind of strong pasty relish
1.1.
கறங்கு மணி துவைக்கும் ஏறு உடை பெரு நிரை – மலை 573
(கழுத்தைச் சூழ்ந்த)மணிகள் ஒலிக்கும் காளைகளையுடைய பெரிய பசுக்கூட்டங்களையும்,
1.2.
வலம் படு முரசம் துவைப்ப வாள் உயர்த்து
——————————
போர்_களத்து ஆடும் கோவே – பதி 56/4-8
வெற்றியையுடைய முரசத்தை ஓங்கி அறைய, வாளினை உயர்த்திக்கொண்டு
—————————————–
போர்க்களத்தில் ஆடுகின்ற அரசன்
1.3
துவைத்த தும்பை நனவு_உற்று வினவும் – பதி 88/23
எல்லாராலும் புகழ்ந்து சொல்லப்பட்ட , தும்பைப் போரில், மெய்யான வெற்றியை வேண்டிக்கொண்டு
1.4.
துவைத்து எழு குருதி நில மிசை பரப்ப – புறம் 370/13
முழங்கிவரும் குருதி வெள்ளம் நிலத்தின் மேல்பரவிச் செல்ல
1.5.
சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில் – பதி 45/13
சோறு வேறு ஊன் வேறு என்று பிரிக்கமுடியாதபடி ஊன் குழையச் சமைத்த உணவினை
2.
செ ஊன் தோன்றா வெண் துவை முதிரை – பதி 55/7
தன்னில் கலந்த சிவந்த இறைச்சி வெளியில் தெரியாதவாறு அரைத்த வெண்மையான துவரைச் துவையலை
அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில் – புறம் 390/17
அமிழ்து போல் சுவையுடைய ஊன் துவையலோடு கூடிய சோற்றை
|
துவைப்பு |
துவைப்பு – (பெ) திரும்பத்திரும்ப அடித்து மோதுதல், hitting hard repeatedly
வேல் ஈண்டு தொழுதி இரிவுற்று என்ன
கால் உறு துவைப்பின் கவிழ் கனைத்து இறைஞ்சி
குறை அறை வாரா நிவப்பின் அறையுற்று
ஆலைக்கு அலமரும் தீம் கழை கரும்பே – மலை 116 -119
வேல்களோடு நெருக்கமாக (வந்த வேற்படையாகிய)கூட்டம் தோற்றோடியதைப் போன்று,
காற்று மிகவும் அடித்து மோதுகையினால், சாய்ந்து ஆரவாரமாக ஒலித்து, தலைவணங்கி,
குட்டையாதலும் சூம்பிப்போதலும் உண்டாகாத வளர்ச்சியுடன், வெட்டப்பட்டு,
ஆலைக்காக (அறைபடுவதற்காக)வாடியிருக்கும் இனிக்கும் கோலாகிய கரும்பு;
|
துவ்வாமை |
துவ்வாமை – (பெ) நுகராமை, non-enjoyment
சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எம்_கண்
படர் கூற நின்றதும் உண்டோ தொடர் கூர
துவ்வாமை வந்த கடை – கலி 22/20-22
ஞாயிறு காய்கின்ற காட்டுவழியைக் கடந்து போக எண்ணும் உம்மை, நான் என்னிடத்துள்ள
துன்பத்தைக் கூறி தடுத்து நிறுத்தியதும் உண்டோ? உம்முடன் கொண்ட பிணிப்பு வலிமை பெறுங்காலத்தில்
அதனை நுகரமுடியாதிருக்கும் காலம் வந்து சேர்ந்த பொழுது –
|
துவ்வு |
துவ்வு – (வி) நுகர், உண், enjoy, eat
வறுமை கூரிய மண் நீர் சிறு குள
தொடு குழி மருங்கில் துவ்வா கலங்கல் – அகம் 121/3,4
வறுமை மிக, குளிக்கும் நீராகிய சிறிய குளத்தில்
தோண்டப்பட்ட குழியின்கண் உண்ணற்கு ஆகாத கலங்கிய நீரால்
|
தூ |
தூ – (பெ) 1. தூய்மை, purity
2. வலிமை, strength
3. வெண்மை, brightness, whiteness
1.
புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை – திரு 138
புகையை முகந்துகொண்டதைப் போன்ற அழுக்கேறாத தூய உடையினையும்
2.
பீடு அழிய கடந்து அட்டு அவர்
நாடு அழிய எயில் வௌவி
சுற்றமொடு தூ அறுத்தலின் – மது 186-188
பெருமை அழியும்படி வென்று கொன்று, பகைவரின்
நாடுகள் அழியும்படி (அவரின்)அரண்களைக் கைக்கொண்டு,
(பகைவரைச்)சேர்ந்தாருடைய வலியைப் போக்குதலின்,
3.
துணை புணர் அன்ன தூ நிற தூவி – நெடு 132
தம் துணையைப் புணர்ந்த அன்னச் சேவலின் வெண்மையான நிறத்தையுடைய (சூட்டாகிய)மயிரால்
|
தூக்கணம்குரீஇ |
தூக்கணம்குரீஇ – (பெ) தூக்கணாங்குருவி, தொங்குங்கூடு கட்டுங் குருவிவகை.,
Weaver bird, Ploceus baya, as building hanging nests;
தூக்கணம்குரீஇ தூங்கு கூடு ஏய்ப்ப – புறம் 225/11
தூக்கணக்குருவியின் தொங்குகின்ற கூட்டினைப் போன்ற
|
தூக்கு |
தூக்கு – 1. (வி) 1. அசை, shake, agitate, cause motion
2. ஆராய்ந்து பார், consider, reflect, investigate
3. தொங்கவிடு, hang, suspend
4. உயர்த்து, raise
5. உயர்த்திப்பிடி, hold up
6. நிமிர்த்துவை, make something stand erect
– 2. (பெ) 1. தாள காலத்தில் முதல், இடை, கடை நிலைகளைக் குறிக்கும்
பாணி, தூக்கு, சீர் ஆகியவற்றில் இடை நிலை.
the middle order of a musical mode, called tALam
2. ஏழுவகைத் தூக்குகளில் ஒரு தூக்கு, one of the seven kinds of tALam.
3. ஆராய்ந்து பார்த்தல், examination
1.1.
செல் வளி தூக்கலின் இலை தீர் நெற்றம் – நற் 107/4
வீசுகின்ற காற்று தூக்கி அசைத்ததால் இலையெல்லாம் உதிர்ந்துபோன நெற்றுக்கள்
1.2.
நில்லா உலகத்து நிலைமை தூக்கி
செல்க என விடுக்குவன் அல்லன் – பொரு 176,177
(ஒன்றும் நிலைத்து)நில்லாத (இவ்)உலகத்தின் நிலைமையை ஆராய்ந்து பார்த்து,
‘(நீயிர்)செல்வீராக’ என விடுவான் அல்லன்
1.3.
ஆய் பொன் அவிர் இழை தூக்கி அன்ன
நீடு இணர் கொன்றை கவின் பெற – அகம் 364/4,5
சிறந்த பொன்னாலான விளங்கும் அணிகளைத் தொங்கவிட்டாற் போன்ற
நீண்ட பூங்கொத்துக்களையுடைய கொன்றை அழகுபெற
1.4.
கையும் காலும் தூக்க தூக்கும்
ஆடி பாவை போல – குறு 8/4,5
கையையும் காலையும் தூக்கத் தானும் தூக்கும்
கண்ணாடிப் பிம்பம் போல
1.5.
பொய்யா மரபின் ஊர் முது வேலன்
கழங்கு மெய்ப்படுத்து கன்னம் தூக்கி – ஐங் 245/1,2
பொய் உரைக்காத மரபினையுடைய நம் ஊரின் வயதான வேலன்
கழங்கினைப் போட்டுப்பார்த்து, நோய்தணிவதற்காக நேர்ந்த பொருளைத் தூக்கிப்பிடித்து
1.6.
முரசு உடை செல்வர் புரவி சூட்டு
மூட்டு_உறு கவரி தூக்கி அன்ன – அகம் 156/1,2
முரசங்களையுடைய செல்வரது குதிரையின் தலை உச்சியில்
இணைத்துத் தைத்த கவரியை நிமிர்த்து வைத்ததைப் போன்ற
2.1
தாளத்தை மூன்று கூறுகளாகப் பிரிப்பதுண்டு. எடுத்தல், விடுத்தல், தொடுத்தல் என்ற மூன்று காலப் பிரிவு
அவை. தாளத்தை முதலில் கொட்டுதலும், பிறகு இடையே கையை விடுத்தலும், மீட்டும் தொடுத்துக்
கொட்டுதலும் ஆகிய அந்த மூன்றையும் முறையே பாணி, தூக்கு, சீர் என்பார்கள்
மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து
பண்டரங்கம் ஆடும்-கால் பணை எழில் அணை மென் தோள்
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்கு தருவாளோ – கலி 1/8-10
மிக்குச் செல்கிற போர்கள் பலவற்றையும் வென்று, அதன் வலிமையால் பகைவர் வெந்த சாம்பலை அணிந்து,
பாண்டரங்கம் என்னும் கூத்தினை ஆடும்போது, மூங்கில் போன்ற அழகும், அணை போன்ற மெல்லிய தோள்களும்
வண்டுகள் ஒலிக்கும் கூந்தலும் உடைய இறைவி, தாளத்தின் இடையில் அமையும் தூக்கினைத் தருவாளோ?
2.2
செந்தூக்கு, மதலைத்தூக்கு, துணிபுத்தூக்கு, கோயில் தூக்கு, நிவப்புத்தூக்கு, கழால் தூக்கு, நெடுந்தூக்கு
என்ற ஏழு வகைப்படும் தாளவகை
வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம் – அகம் 382/4
பல்வேறு குரலை உடையனவாகிய தாளத்தின் வழிப்படும் ஒரு தூக்கினையுடைய இனிய வாச்சியங்களைக் கொண்டு
2.3
நோக்கும்_கால் நோக்கி தொழூஉம் பிறர் காண்பார்
தூக்கு இலி – கலி 63/1,2
பார்க்கும்போது நம்மைப் பார்த்துத் தொழுகின்றான், அதனைப் பிறர் காண்பாரே
என்று சற்றும் ஆராய்ந்துபாராதவன்
|
தூங்கணம்குரீஇ |
தூங்கணம்குரீஇ – (பெ) பார்க்க : தூக்கணம்குரீஇ
முடங்கல் இறைய தூங்கணம்குரீஇ
நீடு இரும் பெண்ணை தொடுத்த
கூடினும் மயங்கிய மையல் ஊரே – குறு 374/5-7
வளைந்த சிறகுகளையுடைய தூக்கணங்குருவி
உயரமான கருத்த பனைமரத்தில் கட்டிய
கூட்டைப் பார்க்கிலும் கதைபின்னிக்கொண்டிருந்த இந்த ஊரும் நம்மோடு ஒன்றிப்போயிற்று.
|
தூங்கல் |
தூங்கல் – (பெ) 1. தொங்குதல், suspension
2. தூக்கக் கலக்கம், drowsiness
3. வாளாவிருத்தல், சோம்பியிருத்தல், being idle
4. ஆடுதல், dancing
5. ஒரு சங்க காலப் புலவர், a poet of sangam age
1.
தூங்கல் ஓலை ஓங்கு மடல் பெண்ணை – நற் 135/1
தொங்குதலையுடைய ஓலைகளையும், உயர்ந்து நீண்ட மடல்களையும் கொண்ட பனைமரத்தின்
2.
துகில் முடித்து போர்த்த தூங்கல் ஓங்கு நடை
பெரு மூதாளர் ஏமம் சூழ – முல் 53,54
(தலைமயிரைத்)துணியால் கட்டிச் சட்டையிட்ட, தூக்கக்கலக்கத்திலும் விரைப்பான நடையுடைய
மிக்க அனுபவமுடையோர் (மெய்க்காப்பாளராகக்)காவலாகச் சூழ்ந்து திரிய
3
பச்சிறா கவர்ந்த பசும் கண் காக்கை
தூங்கல் வங்கத்து கூம்பில் சேக்கும் – நற் 258/8,9
பசிய இறாமீனைக் கவர்ந்த பசுமையான கண்களைக்கொண்ட காக்கை,
கடலில் செல்லாது வாளாவிருக்கும் தோணியின் பாய்மரக்கூம்பினில் சென்றுதங்கும்
4.
வல்லோன்
பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின் – அகம் 98/19,20
வல்லோன்
ஆட்டும் பொறி அமைந்த பாவையைப்போல ஆடுதலை விரும்பின்
5.
தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசை – அகம் 227/16
தூங்கல் என்னும் புலவரால் பாடப்பெற்ற மிக உயர்ந்த நல்ல புகழ்
|
தூங்கு |
தூங்கு – (வி) 1. தொங்கு, hang, be suspended
2. ஊசலாடு, swing
3. பக்கவாட்டில் அசை, sway from side to side, as an elephant
4. நிலையாகத் தங்கு, remain, abide
5. தூங்கல் ஓசையைக் கொண்டிரு, have the pattern of sound ‘thUngal’
6. தாமதி, delay
7. நடனமாடு, dance
8. மெதுவாக நட, walk slowly
9. இடையறாது விழு, pour, rain, fall unceasingly;
1.
ஈங்கை இலவம் தூங்கு இணர் கொன்றை – குறி 86
இண்டம்பூ, இலவம்பூ, தொங்குகின்ற பூங்கொத்தினையுடைய கொன்றைப்பூ
2.
தாழாது உறைக்கும் தட மலர் தண் தாழை
வீழ் ஊசல் தூங்க பெறின் – கலி 131/11
இடைவிடாமல் தேன் துளிர்க்கும் பெரிய மலர்களையுடைய குளிர்ந்த தாழையின்
விழுதைக் கயிறாகத் திரித்துச் செய்த ஊஞ்சலில் நீ வந்து ஆடினால்;
3.
துடி அடி அன்ன தூங்கு நடை குழவியொடு
பிடி புணர் வேழம் – பொரு 125,126
உடுக்கை போலும் அடிகளையும் அசைந்த நடைனையும் உடைய கன்றுகளுடன்,
பிடிகளைக் கூடின களிற்றியானைகளையும்
4.
சுனை வறந்து அன்ன இருள் தூங்கு வறு வாய் – பெரும் 10
சுனை வற்றியதைப் போன்ற இருள் நிறைந்திருக்கும் உள்நாக்கில்லாத வாயினையும்
5.
தாங்காது புகழ்ந்த தூங்கு கொளை முழவின் – பதி 43/30
மனம் அடங்காமல் புகழ்ந்த, தூங்கல் ஓசையினைக் கொண்ட பாட்டிற்கேற்ப முழங்கும் முழவினையுடைய
6.
பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை
பெரு நீர் போகும் இரியல் மாக்கள்
ஒரு மர பாணியில் தூங்கி ஆங்கு – பெரும் 431-433
பொன்னைக் கொழித்துக்கொண்டு குதிக்கும் கடத்தற்கரிய கங்கையாற்றின்
பெரிய நீரைக் கடந்துபோகும் மனக்கலக்கமுள்ள மாக்கள்
ஒரேயொரு தோணி வரும் காலத்திற்காகக் காத்திருத்தலைப் போல
7.
கனை குரல் கடும் துடி பாணி தூங்கி
உவலை கண்ணியர் ஊன் புழுக்கு அயரும் – அகம் 159/9,10
மிக்கா குரலையுடைய விரைவான உடுக்கின் ஒலிக்கு ஒத்த தாளத்தோடு ஆடி
தழையுடன் கூடிய கண்ணியைச் சூடியவராய் ஊனைப் புழுக்கி உண்ணும்
8.
கொன்றை அம் குழலர் பின்றை தூங்க
மனை_மனை படரும் நனை நகு மாலை – அகம் 54/11,12
கொன்றக்கனியால் குழலிசைப்பவராய்ப் பின்னால் மெதுவே நடந்துவர,
வீடுகள்தோறும் செல்லும், மொட்டுகள் மலரும், மாலை நேரத்தில்
9.
கண்ணீர்
நோன் கழை துயல்வரும் வெதிரத்து
வான் பெய தூங்கிய சிதரினும் பலவே – புறம் 277/4-6
கண்கள் சொரிந்த நீர்
வலிய கழையாகிய மூங்கிலிடத்து அசையும் மூங்கில் புதரின்கண்
மழை பெய்த வழித் தங்கி விழும் நீர்த்துளியினும் பலவாகும்.
|
தூங்குந்து |
தூங்குந்து – (வி.மு) ஆடும், will dance
திண் திமில் வன் பரதவர்
வெப்பு உடைய மட்டு உண்டு
தண் குரவை சீர் தூங்குந்து – புறம் 24/4-6
திண்ணிய திமிலையுடைய வலிய பரதவர்
வெம்மையை உடைய மதுவை உண்டு
மெல்லிய குரவைக் கூத்திற்கு ஏற்ற தாளத்திற்கு ஏற்ப ஆடும்.
|
தூசு |
தூசு – (பெ) ஒரு வகை மெல்லிய ஆடை, a light dress
தூசு உடை துகிர் மேனி – பட் 148
தூசாகிய ஆடையும், பவளம் போலும் நிறமும்
|
தூணம் |
தூணம் – (பெ) தூண், pillar
கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த
வேள்வி தூணத்து அசைஇ – பெரும் 315,316
நூற்கேள்வியையுடைய அந்தணர் செய்தற்கரிய கடனாகச் செய்து முடித்த
வேள்விச்சாலையின் வேள்வித்தூணின்மேல் இருக்க
|
தூணி |
தூணி – (பெ அம்பறாத்தூணி, அம்புக்கூடு, quiver
வில்லோர் தூணி வீங்க பெய்த
அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை – அகம் 9/2,3
வில்வீரர் அம்புக்கூட்டில் நிறைய வைத்திருக்கும்
அம்பின் குப்பி நுனையைப் போன்று அரும்பிய இலுப்பையின்
|
தூண்டு |
தூண்டு – (வி) 1. (உலக்கையால்) குற்று, pound as with a pestle
2. செலுத்து, spur, goad
1.
தொடி மாண் உலக்கை தூண்டு உரல் பாணி – அகம் 9/12
ணால் சிறந்த உலக்கையால் குற்றும் உரலிலிருந்து எழும் தாளஒலி
2.
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ – புறம் 82/3,4
கட்டிலைப் பிணிக்கும் புலைமகன் கையிலுள்ள
வாரைச் செலுத்தும் ஊசியினும் விரைந்தது.
|
தூது |
தூது – (பெ) 1. கூழாங்கல், pebble
2. ஒருவரிடமிருந்து மற்றவருக்குக் கொண்டுசெல்லும் செய்தி, message
1.
தூது_உண்_அம்_புறவொடு துச்சில் சேக்கும் – பட் 58
கூழாங்கல்லை உண்பதாகக் கருதப்படும் தூதுணம்பறவையுடன் ஒழிவிடத்தில் தங்கும்
2.
தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு அவர்
காதல் மூதூர் மதில் கம்பலைத்தன்று – பரி 8/36,37
தலைவியரால் தூதாக ஏவிவிடப்பட்ட வண்டுக் கூட்டத்தின் இனிய இசை, அவர்களின்
காதல் பெருக்கத்தைப் பழமையான மதுரையின் மதிலோரத்து மக்கள் அறிந்துகொள்ளும் ஆரவாரமாயிற்று
|
தூதை |
தூதை – (பெ) விளையாட்டுக்கு உதவும் சிறிய மரப்பானை, Toy utensils of wood;
துடுப்பு என புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கை
சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும்
விளையாட – கலி 59/4-6
துடுப்பு என்று ஒப்புமை கூறும்படியாக உன் திரண்ட, தம்மில் ஒன்றாக அமைந்த, மென்மையான முன்கையினால்
ஒளி படரும் வேலைப்பாடு மிக்க மரத்தால் செய்த சிறு பானையாலும், பாவையாலும்
விளையாடுவதற்கு
|
தூமம் |
தூமம் – (பெ) 1. புகை, smoke
2. தூமகேது, புகைக்கொடி, வால்நட்சத்திரம், comet
1.
வாடா வெகுளி எழில் ஏறு கண்டை இஃது ஒன்று
வெரு வரு தூமம் எடுப்ப வெகுண்டு
திரிதரும் கொல் களிறும் போன்ம் – கலி 104/42-44
குன்றாத சினங்கொண்ட அழகையுடைய காளையைப் பார்! இது ஒன்று!
அச்சம்தரும் மருந்துப்புகை எழுப்ப, வெகுண்டு
சுற்றித்திரியும் கொலைவெறியுள்ள களிற்றினைப் போல் இருக்கிறது
2.
மைம்_மீன் புகையினும் தூமம் தோன்றினும் – புறம் 117/1
சனிமீன் புகைகளோடு கூடிப் புகையினும், தூமகேது தோன்றினாலும்
|
தூம்பு |
தூம்பு – (பெ) 1. உள்துளை, tubularity
2. உள்துளையுள்ள ஒரு பொருள், மூங்கில் குழாய், any tube like a bamboo tube
3. முங்கிலினாலான நெடுவங்கியம் என்னும் இசைக்கருவி, A flute made of bamboo ;
1.
கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று
அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல்
பாம்பு – திரு 148-150
நஞ்சுடன் மறைந்திருக்கும் உள்துளையுடைய வெண்மையான பல்லினையும்,
நெருப்பென்னும்படி நெட்டுயிர்ப்புக்கொள்ளும் அச்சம் தோன்றும் கடிய வலிமையினையும் உடைய,
பாம்புகள்
2.
தூம்பு அகம் பழுனிய தீம் பிழி மாந்தி – பதி 81/21
மூங்கில் குழாயினுள்ளே முதிர்வடைந்த இனிய கள்ளினை நிறைய அருந்தி,
3.
இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு – மலை 7
இளியென்னும் பண்ணின் ஓசையைத் தானொலிக்கும் குறுகிய பாரமான நெடுவங்கியத்துடன்
|
தூய |
தூய – 1. (பெ.அ) சுத்தமான, pure
– 2. (வி.எ) தூவிய, sprinkled
1.
துன்னல் சிதாஅர் நீக்கி தூய
கொட்டை கரைய பட்டு உடை நல்கி – பொரு 154,155
தையலையுடைய துணிகளை நீக்கி, தூயவாகிய
(பட்டுக்)குஞ்சம் (உள்ள)கரையையுடைய பட்டு உடைகளைத் தந்து
2.
செம் பூ தூய செதுக்கு உடை முன்றில் – பெரும் 338
சிவந்த பூக்கள் தூவப்பட்ட (புல் முதலியவற்றைச்)செதுக்கிய முற்றத்தில்,
|
தூய் |
தூய் – (வி.எ) தூவி, sprinkling
நெல்லும் மலரும் தூஉய் கைதொழுது
மல்லல் ஆவணம் மாலை அயர – நெடு 43,44
நெல்லையும் மலரையும் சிதறி, (இல்லுறை தெய்வத்தை)கைகூப்பி(வணங்கி),
— வளப்பமுள்ள அங்காடித் தெரு(வெல்லாம்) மாலைக் காலத்தைக் கொண்டாட
|
தூரியம் |
தூரியம் – (பெ) இசைக்கருவி, musical ins
அந்தி விழவில் தூரியம் கறங்க – மது 460
அந்திப் பொழுதின் விழாவில் இசைக்கருவிகள் முழங்க
|
தூர் |
தூர் – 1. (வி) 1. மூடு, அடை, மேடாக்கு, fill up, close up as a well
2. அடைபடு, be blocked, closed
3. மிகுதியாகப் பொழி, To pour forth in showers, as arrows;
4. நிரம்பு, be filled up
– 2. (பெ) பனையின் வேர்ப்பற்றுள்ள அடிப்பகுதி, Root-like formation about the stump of palmyras
1.1
வல் வாய் கணிச்சி கூழ் ஆர் கோவலர்
ஊறாது இட்ட உவலை கூவல்
வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர்
இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து
இரும் களிற்று இன நிரை தூர்க்கும் – அகம் 21/22-26
வலிய வாயையுடைய கோடலியையுடைய கூழ் குடிக்கும் கிணறுதோண்டுவோர்
(நீர்) ஊறாமையால் விட்டுவிட்டுச் சென்ற சருகுகள் நிறைந்த பள்ளங்களை,
தந்தங்களை விரும்பிய கடின மனம் படைத்த கானவர்
எளிதாக எண்ணி நடக்கும் வழிகளில் தோண்டிய குழிகள் என்று எண்ணி
பெரிய ஆண்யானையைக் கொண்ட யானைக்கூட்டம் மூடி மேடாக்கும்
1.2
இல்லி தூர்த்த பொல்லா வறு முலை – புறம் 164/4
துளை அடைத்துப்போன பொல்லாத வறிய முலையை
1.3
முன்றில் பலவின் படு சுளை மரீஇ
புன் தலை மந்தி தூர்ப்ப – நற் 373/1,2
வீட்டு முற்றத்தில் உள்ள பலாமரத்தின் பழுத்துள்ள சுளைகளைக் கையால் வளைத்து,
புல்லிய தலையைக் கொண்ட மந்தி உண்டபின் கொட்டைகளைக் கீழே உதிர்க்க
1.4
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள் – நற் 228/3
கண்கள் தூர்ந்துபோகுமாறு பரந்த, மிக்க இருள் பரவிய நள்ளிரவில்
2.
நிலை தொலைபு வேர் தூர் மடல்
குருகு பறியா நீள் இரும் பனை மிசை – பரி 2/42,43
தமது நிலை கெட்டு, வேரும் தூரும் மடலும்
குருத்தும் பறிக்கப்படாத உயர்ந்த கரிய பனைகளின் உச்சியிலிருக்கும்
|
தூறு |
தூறு – (பெ) புதர், bushes, thick underwood
இரு வெதிர் பைம் தூறு கூர் எரி நைப்ப – மது 302
பெரிய மூங்கிலின் பசிய புதரினை மிக்க நெருப்பு சுட்டுவதக்க,
|
தூற்று |
தூற்று – (வி) 1. தூவிவிடு, இறை, அள்ளிவீசு, throw up
2. நிந்தி, பழிகூறு, defame, slander
1.
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்
நுணங்கு துகில் நுடக்கம் போல கணம்_கொள
ஊதை தூற்றும் உரவு நீர் சேர்ப்ப – நற் 15/1-3
முழங்குகின்ற கடலலைகள் கொழித்துக் கொணர்ந்த பெரிதான மணல்மேடு
காற்றால் ஆடும் துகிலின் வளைவுகள் போலப் பெருமளவில் உருவாகும்படி
ஊதைக்காற்று தூவிவிடும் ஓயாது இயங்கும் கடற்கரைத் தலைவனே!
2.
அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும் – கலி 3/1
அறஉணர்வு சிறிதும் இன்றி அயலார் நிந்திக்கும் பழிச்சொற்களைக் கேட்க நாணியும்
|
தூவல் |
தூவல் – (பெ) 1. தூவுதல், sprinkling
2. தூறல் மழை, drizzle
3. துவலை, நீர்த்துளி, little drops of water
1.
கல்லென் துவலை தூவலின் யாவரும்
தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார் – நெடு 64,65
‘கல்’லென்கிற ஓசையுடன் தூறலின் (நீர்த்திவலைகளைத்)தூவுகையினால், ஒருவருமே
குவிந்த வாயையுடைய செம்புகளில் தண்ணீரைக் குடியாராய்ப்
2.
தூவல் கலித்த இவர் நனை வளர் கொடி – மலை 514
தூறலால் செழுப்புற்றுத் தழைத்து உயர்ந்த, அரும்புகள் முதிருகின்ற (மணம்வீசும்)நறைக் கொடியும்,
3.
தூங்கல் அம்பி தூவல் அம் சேர்ப்பின் – நற் 354/7
காற்றால் அசையும் தோணியையுடைய நீர்த்துவலைகள் தெறித்துவிழும் கடற்கரையில்
|
தூவா |
தூவா – (வி.எ) நிறுத்தாமல் (அழு), (cry) without ceasing
தாய் இல் தூவா குழவி போல
ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே – புறம் 4/18,19
தாய் இல்லாமல் ஓயாமல் அழும் குழவியைப் போல
ஒழியாது கூப்பிடும் உன்னைச் சினப்பித்தவருடைய நாடு.
|
தூவி |
தூவி – (பெ) பறவைகளின் மென்மையான இறகு, the soft feather of a bird
இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள்
துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇ – கலி 72/1,2
பல அடுக்குகளால் உயர்ந்த நீலப் பட்டு விரித்த மென்மையான மெத்தையில்
துணையோடு சேர்ந்த அன்னத்தின் தூவியால் செய்த மென்மையான தலையணையில் சாய்ந்துகொண்டு
புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு
இறகு புடைத்து இற்ற பறை புன் தூவி
செம் கணை செறித்த வன்கண் ஆடவர் – நற் 329/4-6
அண்மையில் குஞ்சு பொரித்ததால் வரிசையாகப் பருத்த புள்ளிகளையுடைய முதிய பருந்தானது
இறகுகளைத் தீவிரமாக அடித்துக்கொள்வதால் இற்று விழுந்த காற்றில் பறக்கும் புல்லிய அடி இறகுகளைத்
தம்முடைய செம்மையான அம்புகளில் இறுகக்கட்டிய கொடுமையான ஆண்கள்
|
தூவு |
தூவு – (வி) 1. தெளி, sprinkle
2. மிகுதியாகச் சொரி, shower, pour forth
1.
பையென
வடந்தை துவலை தூவ – நற் 152/5,6
மெல்லென
வாடைக்காற்று மழைத்துளிகளைத் தெளிக்க
2.
தூவவும் வல்லன் அவன் தூவும்_காலே – புறம் 331/13
அள்ளி வழங்கவும் வல்லவனாவான் அவன், பலரும்கொள்ளுமாறு தரக்கூடிய செல்வக் காலத்தில்
|
தெங்கு |
தெங்கு – (பெ) தென்னை, Coconut-palm, Cocos nucifera
தெங்கின்
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நன் நாடு – புறம் 29/15,16
தென்னையின்
இளநீரை உதிர்க்கும் செல்வம் மிக்க நல்ல நாடு
|
தெடாரி |
தெடாரி – (பெ) தடாரி, பார்க்க : தடாரி
தெடாரி தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி – புறம் 368/15
தடாரியினது தெளிந்த கண் ஒலிக்க இசைத்து
|
தெண் |
தெண் – (பெ.அ) தெளிந்த, Clear, transparent, only in combin. for தெள், as in
தெள் + கடல் > தெண் கடல்
வல்லின, மெல்லின மெய்கள் முன்னால் வரும்போது தெள் என்பது தெண் என்றாகிறது.
தெள் என்பது தெளிவு.
தெண் கடல் குண்டு அகழி – மது 86
செருப்பு உடை அடியர் தெண் சுனை மண்டும் – அகம் 129/13
தெண் திரை அவிர் அறல் கடுப்ப ஒண் பல் – மது 519
தெண் நீர் பசும் காய் சேறு கொள முற்ற – நெடு 26
ஆய் மலர் மழை கண் தெண் பனி உறைப்பவும் – நற் 85/1
அதரி கொள்பவர் பகடு பூண் தெண் மணி – மது 94
|
தெனாஅது |
தெனாஅது – (பெ) தெற்கிலுள்ளது, that which is in the south
தெனாஅது
வெல் போர் கவுரியர் நன் நாட்டு உள்ளதை – அகம் 342/3,4
தெற்கின்கண் உள்ளதாகிய
போர் வெல்லும் பாண்டியரின் நல்ல நாட்டில் உள்ளதாய
|
தென்னன் |
தென்னன் – (பெ) பாண்டியன், Pandiyan, the ruler of the South
கெடாஅ நல் இசை தென்னன் தொடாஅ
நீர் இழி மருங்கில் கல் அளை கரத்த அ
வரையரமகளிரின் அரியள் – அகம் 342/10-12
கெடாத நல்ல கீர்த்தியினைய்டையோனாகிய பாண்டியனது தோண்டப்படாத
அருவி வீழும் பொய்கையினையுடைய மலையின் குகையில் மறைந்த அந்த
வரையரமகளிர் போல அரியவள்
|
தென்னம்பொருப்பன் |
தென்னம்பொருப்பன் – (பெ) தெற்குமலைக்குத் தலைவனான பாண்டியன்,
King Pandiyan, ruler of the mountain in the south
தெரி மாண் தமிழ் மும்மை தென்னம்பொருப்பன்
பரி_மா நிரையின் பரந்தன்று வையை – பரி 26/1,2
ஆராய்ந்தெடுத்த மாட்சிமைக்குரிய தமிழ் மூன்றினையும் கொண்ட தெற்குமலைக்குத் தலைவனான
பாண்டியனின்
குதிரைகள் வரிசையாக பரந்து வருவதைப் போன்று பரவி வருகிறது வையை
|
தென்னர் |
தென்னர் – (பெ) பாண்டியர், the Pandiyan kings
பொன் அணி நெடும் தேர் தென்னர் கோமான்
எழு உறழ் திணி தோ இயல் தேர் செழியன் – அகம் 209/3,4
பொன்னால் அணியப்பெற்ற நீண்ட தேரினையுடைய பாண்டியர் பெருமானாகிய
கணைய மரத்தை ஒத்த திண்ணிய தோளினையும் நன்கு இயன்ற தேரினையும் உடைய பாண்டியன்
நெடுஞ்செழியன்
|
தென்னவன் |
தென்னவன் – (பெ) பாண்டியன், Pandiyan, the ruler of the South
உலகம் ஒரு நிறையா தான் ஓர் நிறையா
புலவர் புல கோலால் தூக்க உலகு அனைத்தும்
தான் வாட வாடாத தன்மைத்தே தென்னவன்
நான்மாடக்கூடல் நகர் – பரி 29/1,4
இந்த உலகத்தின் அனைத்து நகர்களின் பெருமையையும் ஒரு பக்கமும்,. மதுரை நகரை ஒரு பக்கமும்
புலவர்கள் தம் அறிவாகிய துலாக்கோலில் இட்டு சீர்தூக்கும்போது, அந்த அனைத்து நகர்களின் பெருமையும்
தாம் வாடிப்போக, வாடிப்போகாத தன்மையையுடையது, பாண்டியனின்
நான்மாடக் கூடலாகிய மதுரை.
|
தென்னவர் |
தென்னவர் – (பெ) பாண்டியர், the Pandiyan kings
வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய
நிலன் உற நிமிர் தானை நெடு நிரை நிவப்பு அன்ன – பரி 7/6,7
வெற்றியுண்டாக முழங்கும் முரசினையுடைய பாண்டிய மன்னர் கொள்ளக் கருதிய
நாட்டைச் சேர்வதற்கு நிமிர்ந்து செல்லும் படையின் நீண்ட அணியின் எழுச்சியைப் போல
|
தெம் |
தெம் – (பெ) பகை, பகைவர், enmity, enemy
தெவ் முனை என்பது தெம் முனை என்றானது. தெவ் என்பது பகை அல்லது பகைவரைக் குறிக்கும்.
தெம் முனை சிதைத்த கடும் பரி புரவி – அகம் 187/6
தெவ் முனை சிதைத்த கடும் பரி புரவி
பகைப்புலத்தைத் தொலைத்த கடிய செலவினையுடைய குதிரைகள்
|
தெய்ய |
தெய்ய – (இ.சொ) ஓர் அசைநிலை, A poetic expletive;
புது வறம் கூர்ந்த செறுவில் தண்ணென
மலி புனல் பரத்தந்து ஆஅங்கு
இனிதே தெய்ய நின் காணும்_காலே – நற் 230/8-10
புதிதாய் வற்றிக்காய்ந்த வயலுக்குள், மிகவும் குளிர்ச்சியுண்டாக
மிகுந்த புனல் பாய்ந்து பரவினாற்போன்று
இன்பமாகவே இருக்கின்றது உன்னைப் பார்க்கும்பொழுதெல்லாம்
|
தெய்யோ |
தெய்யோ – (இ.சொ) ஓர் அசைநிலை, A poetic expletive
யாங்கு வல்லுநையோ ஓங்கல் வெற்ப
இரும் பல் கூந்தல் திருந்து இழை அரிவை
திதலை மாமை தேய
பசலை பாய பிரிவு தெய்யோ – ஐங் 231/1-4
எப்படி உன்னால்முடிகிறது? உயர்ந்த மலைகளுக்குரியவனே!
கரிய, பலவான கூந்தலும், திருத்தமான அணிகலன்களும் உடைய இந்தப் பெண்
தன் அழகுத்தேமல் படர்ந்த மாநிற மேனிய மெலிந்துவாடவும்,
பசலை பாயவும் இவளைப் பிரிந்துசெல்வதற்கு
|
தெய்வம் |
தெய்வம் – (பெ) 1. இறைவன், கடவுள், God, deity
2. தெய்வத்தன்மை, divine nature
1.
வெருவரு கடும் திறல் இரு பெரும் தெய்வத்து
உரு உடன் இயைந்த தோற்றம் போல – அகம் 360/6,7
அஞ்சத்தகும் மிக்க வலியுடைய இரு பெரும் தெய்வங்களான சிவன், திருமால் இவர்களது
செந்நிறமும் கருநிறமும் ஒருங்கு பொருந்திய தோற்றத்தைப் போல
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்
புனை இரும் கதுப்பின் நீ கடுத்தோள்_வயின்
அனையே ஆயின் அணங்குக என் என – அகம் 166/7-9
உயர்ந்த பலிகளையே பெறும் அச்சம்தரும் தெய்வம்
அணிந்த கரிய கூந்தலையுடையவளாகிய உன்னால் ஐயுறப்பெற்றாளுடன்
யான் புனலாடி வந்தேனாயின் என்னை வருத்துக என்று
2.
திரு முகம் அவிழ்ந்த தெய்வ தாமரை – சிறு 73
அழகிய முகம் (போல)மலர்ந்த தெய்வத் (தன்மையுடைய)தாமரையிடத்து
|
தெரியல் |
தெரியல் – (பெ) பூமாலை, garland of flowers
பனி துறை பகன்றை பாங்கு உடை தெரியல்
கழுவு_உறு கலிங்கம் கடுப்ப சூடி – பதி 76/12,13
குளிர்ந்த நீர்த்துறையில் மலர்ந்துள்ள பகன்றை மலரால் தொடுத்த அழகான மாலையை
வெளுக்கப்பட்ட வெள்ளை ஆடையைப் போல் தலையில் சூடிக்கொண்டு
|
தெரிவை |
தெரிவை – (பெ) பெண், woman
நீர் விலங்கு அழுதல் ஆனா
தேர் விலங்கினவால் தெரிவை கண்ணே – குறு 256/7,8
நீரைத் துடைக்கத் துடைக்க வரும் அழுகையைக் கொண்டு
தேரைத் தடுத்துநிறுத்தின என் தலைவியின் கண்கள்
|
தெரீஇய |
தெரீஇய – (வி.எ) தெரிந்துகொள்ள என்பதன் மரூஉ, to know
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
ஒளித்து இயங்கும் மரபின் வய புலி போல – அகம் 22/14,15
களிறாகிய இரையைத் தெரிந்துகொள்ளப் பார்வையினாலே ஒதுங்கி,
மறைவாக இயங்கும் வழக்கத்தை உடைய வலிய புலியைப் போல,
|
தெருமரல் |
தெருமரல் – 1 (வி.மு) கலங்கவேண்டாம், do not be perturbed
– 2. (பெ) மயக்கம், மனக்கலக்கம், giddiness, perplexity
1.
தெருமரல் வாழி தோழி நம் காதலர்
பொரு முரண் யானையர் போர் மலைந்து எழுந்தவர்
செரு மேம்பட்ட வென்றியர்
வரும் என வந்தன்று அவர் வாய்மொழி தூதே – கலி 26/22-25
கலங்கவேண்டாம், வாழ்க, தோழியே!, நம் காதலர்
போரிட்டு எதிர்த்து நிற்கும் யானைப்படையுடன் போரினை எதிர்கொண்டு எழுந்துவந்த பகைவருடனான
போரில் மேலான ஆற்றல்காட்டி வெற்றிசூடியவராய்த்
திரும்பி வருகிறார் என்று வந்து கூறுகின்றனர் அவர் செய்தியைத் தாங்கிவரும் தூதுவர்.
2.
தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின்_வயின்
நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகோ – அகம் 90/7,8
மனக்கலக்கமுள்ள உள்ளத்தோடு வருந்தும் உன்னிடத்தில்
நீங்குவாயாக என்று யான் எங்ஙனம் மொழிவேன்?
|
தெருமரு |
தெருமரு – (வி) மனம் கலங்கு, மருட்சியடை, be perplexed, be unnerved
பேர் அஞர் கண்ணள் பெரும் காடு நோக்கி
தெருமரும் அம்ம தானே – புறம் 247/6,7
பெரிய துன்பம் மேவிய கண்ணை உடையவளாய் புறங்காட்டைப் பார்த்து
தான் மனம்கலங்கும்
வளை முன்கை பற்றி நலிய தெருமந்திட்டு
அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா – கலி 51/10,11
வளையணிந்த முன்கையைப் பற்றி அழுத்த, மருண்டுபோய்
அன்னையே! இவன் செய்வதைப் பாரேன் என்று கூவிவிட,
|
தெருள் |
தெருள் – 1. (வி) அறிந்து தெளி, be clear,lucid
– 2. (பெ) அறிவுத்தெளிவு, knowledge, clarity of thought
1.
இருள் உறழ் இரும் கூந்தல் மகளிரோடு அமைந்து அவன்
தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் – கலி 122/12,13
இருள் போன்ற கரிய கூந்தலையுடைய தன் மனைவியருடன் மனம் விரும்பி வாழும் அவன்
நம் வருத்தத்தை அறிந்து தெளியும் குணம் இல்லாதவனாயிருப்பதை அறிவேன்.
2.
வினவுவார்க்கு ஏதில சொல்லி கனவு போல்
தெருளும் மருளும் மயங்கி வருபவள் – கலி 144/6,7
கேட்பாருக்குத் தொடர்பில்லாத பதில்களைச் சொல்லி, கனவு காண்பவள் போல் காணப்பட்டு,
சிலநேரம் தெளிந்த அறிவோடும், சிலநேரம் குழம்பிய அறிவோடும் மாறிமாறித் தோன்றுபவளிடம்,
|
தெருவம் |
தெருவம் – (பெ) தெரு, street
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை
பூவொடு புரையும் சீர் ஊர் பூவின்
இதழ்_அகத்து அனைய தெருவம் – பரி 30/1-3
திருமாலின் தொப்புளில் தோன்றி மலர்ந்த தாமரைப்
பூவோடு ஒத்தது அழகிய ஊர், அந்தப் பூவின்
அக இதழ்களை ஒத்தன தெருக்கள்
|
தெறல் |
தெறல் – (பெ) 1. வருத்துதல், தண்டித்தல், affliction, punishing
2. அழித்தல், ruining
3. சினத்தல், being angry
4. வெம்மை, heat
1.
சினனே காமம் கழி கண்ணோட்டம்
அச்சம் பொய் சொல் அன்பு மிக உடைமை
தெறல் கடுமையொடு பிறவும் இ உலகத்து
அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும் – பதி 22/1-4
கோபம், காமம், மிகுந்த உவகை,
அச்சம், பொய்சொல்லல், பொருளின் மீது மிகுந்த பற்றுக்கொள்ளல்,
தண்டிப்பதில் கடுமை ஆகிய இவற்றோடு இவை போன்ற பிறவும் இந்த உலகத்தில்
அறவழியிலான ஆட்சிக்குத் தடைக்கற்கள் ஆகும்
2.
அரும் தெறல் மரபின் கடவுள் காப்ப – அகம் 372/1
பிறரால் அழிப்பதற்கு அரிய முறைமையினையுடைய கடவுள் காத்தலின்
3.
வெம் தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும் – பெரும் 17
வெம்மையான சினத்தலைக் கொண்ட ஞாயிற்றுடன் திங்களும் வலமாகத் திரிதலைச் செய்யும்
4.
தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ – பரி 3/63
தீயினுள் சுடுகின்ற வெம்மை நீ! பூவினுள் கமழ்கின்ற மணம் நீ!
|
தெறி |
தெறி – (வி) 1. துள்ளு, spring, leap, hop
2. விரலால் உந்து, twang, as a bow-string with the finger and thumb
3. துளி அல்லது பொறியாகச் சிதறு, splash
4. (விரலால்) சுண்டிவிடு, shoot as with the finger and thumb
5. ஒன்றில் பட்டுச் சிதறி விழு, strike and fly off
1.
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை – அகம் 304/8
சிறிய குட்டியைத் தழுவிக்கொண்ட துள்ளிய நடையினையுடைய இளைய பெண்மான்
2.
தினை கள் உண்ட தெறி கோல் மறவர் – அகம் 284/8
தினையினால் ஆக்கிய கள்ளினை உண்ட நாணினைத் தெறித்துவிடுக்கும் அம்பினையுடைய மறவர்கள்
3.
அம் பணை நெடு வேய்
கண் விட தெறிக்கும் மண்ணா முத்தம் – அகம் 173/13,14
அழகிய பெரிய நெடிய மூங்கிலின்
கணுக்கள் பிளக்கத் தெறித்து விழும் கழுவப்பெறாத முத்துக்கள்
4.
மட பால் ஆய்_மகள் வள் உகிர் தெறித்த
குட பால் சில் உறை போல – புறம் 276/4,5
இளமைப்பான்மையையுடைய ஆயர்குல மகள் தன் செழுமையான நகத்தினால் சுண்டிவிட்ட
ஒரு குடம் பாலில் விழுந்த சிலவாகிய பிரைமோர் போல
5.
அரி மதர் மழை கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல் – கலி 77/4
சிவந்த வரிகளும், செருக்கும், குளிர்ச்சியும் கொண்ட கண்ணின் நீர், பரந்த முலையின் மேல்
விழுந்து சிதறுவது போல்
|
தெறீஇ |
தெறீஇ – (வி.எ) தெறு = குவி என்பதன் வினை எச்சத்தின் மரூஉ
கவட்டு அடி பொருத பல் சினை உதிர்வை
அகன் கண் பாறை செம் வயின் தெறீஇ – அகம் 393/6,7
மாடுகளின் கவர்த்த குளம்பால் துவைக்கப்பட்ட பல கிளைகளினின்றும் உதிர்ந்த வரகினை
அகன்ற இடமுள்ள பாறையில் செவ்விய இடத்தில் குவித்து
|
தெறு |
தெறு – (வி) 1. வருத்து, cause distress
2. சுட்டுப்பொசுக்கு, burn, scorch
3. வாட்டு, cause to dry, wither
4. குவி, heap
1.
எய் தெற இழுக்கிய கானவர் அழுகை – மலை 301
முள்ளம்பன்றி வருத்தும்படி தவறுசெய்த குறவருடைய அழுகையும்
2.
வேய் வனப்பு இழந்த தோளும் வெயில் தெற
ஆய் கவின் தொலைந்த நுதலும் நோக்கி – ஐங் 392/1,2
மூங்கிலின் வனப்பை இழந்த தோள்களையும், வெயில் பொசுக்கியதால்
அழகிய நலம் தொலைந்த நெற்றியையும் பார்த்து
3.
வறம் தெற மாற்றிய வானமும் போலும் – கலி 146/14
வறட்சி வாட்டும்படியாகப் பெய்யாமற்போன மேகத்தைப் போலவும்
4.
துடி இகுத்து
அரும் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர் – அகம் 89/14,15
உடுக்கையினைத் தாழக் கொட்டி
அரிய அணிகலன்களைத் திறையாகப்பெற்றுக் குவித்த பெரிய போர் விருப்பினையுடைய வென்றியினர்
|
தெறுழ் |
தெறுழ் – (பெ) ஒரு வகைக் காட்டு மரம், a jungle tree
வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல்
நரை நிறம் படுத்த நல் இணர் தெறுழ் வீ 5
தாஅம் தேரலர்-கொல்லோ – நற் 302/4-6
வருகின்ற மழையை எதிரேற்று நிற்கும் நீல மணியின் நிறங்கொண்ட பெரிய புதரில்
வெள்ளை நிறத்தில் பூத்த நல்ல பூங்கொத்துக்களையுடைய தெறுழமரத்தின் பூக்களைக் கண்டும்
இது கார்காலம் என்று தாம் தெளிந்தாரில்லை போலும்;
இந்தத் தெறுழம்பூ யானையின் முகத்தில் இருக்கும் புள்ளிகளைப் போல் இருக்கும்.
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப – புறம் 119/2
களிற்று முகத்தின்கண் புகர் போல தெறுழினது மலர் பூக்க
|
தெறுவர |
தெறுவர – (வி.எ) 1. வருத்த, causing distress
2. அச்சம் உண்டாக, causing fear
3. சினம் உண்டாக, causing anger
1.
தமியே கண்ட தண்டலையும் தெறுவர
நோய் ஆகின்றே மகளை நின் தோழி – நற் 305/4,5
என் மகளின்றி நான் மட்டும் தனியே சென்று பார்த்த சோலையும் வருத்திநிற்க,
எனக்கு வருத்தம் உண்டாக்குகிறது மகளே
2.
தந்தை
கண் கவின் அழித்ததன் தப்பல் தெறுவர
ஒன்றுமொழி கோசர் கொன்று முரண் போகிய – அகம் 196/8-10
தன் தந்தையின் கண்ணின் அழகைக் கெடுத்ததாகிய தவற்றிற்காக, அச்சம் உண்டாக
நெடுமொழியினையுடைய கோசர்களை கொல்வித்து தன் மாறுபாடு தீர்ந்த
3.
நுரை முகந்து அன்ன மென் பூம் சேக்கை
அறியாது ஏறிய என்னை தெறுவர
இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை – புறம் 50/7-9
நுரையை முகந்தாற் போன்ற மெல்லிய பூவையுடைய கட்டிலின்கண்ணே
அதனை முரசு கட்டில் என்று அறியாது ஏறிப் படுத்த என்னை, சினம் உண்டாக
இரு துண்டுகள் ஆக்கும் உன்னுடைய வாளின் வீச்சை மாற்றியதாக
|
தெறுவர் |
தெறுவர் – (பெ) பகைவர், foes, enemies
தெறுவர்
பேர் உயிர் கொள்ளும் மாதோ – புறம் 307/9,10
பகைவருடைய
மிக்க உயிர்களைக் கவர்வான்
|
தெற்றி |
தெற்றி – (பெ) 1. மேடை, திண்ணை, raised verandah, pial
2. மேட்டு இடம், elevated ground, mound
3. ஒரு மகளிர் விளையாட்டு
4. ஒரு மரம், a tree
1.
தெற்றி உலறினும் வயலை வாடினும் – அகம் 259/13
மேடையிலுள்ள பூஞ்செடிகள் காய்ந்தாலும், வயலைக்கொடி வாடிப்போனாலும்
2.
செறி அரி சிலம்பின் குறும் தொடி மகளிர்
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும்
தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய – புறம் 36/3-5
செறிந்த உள்ளிடு பருக்கையையுடைய சிலம்பினையும், குறிய வளையினையுமுடைய மகளிர்
பொன்னால் செய்யப்பட்ட கழங்கினால் மேடை போல உயர்ந்த மணல்மேட்டின்மேல் இருந்து விளையாடும்
குளிர்ந்த ஆன்பொருநை நதியின் வெள்ளிய மணல் சிதற.
3.
தெற்றி என்பது மகளிர் விளையாடும் ஒருவகை விளையாட்டு என்றும் கொள்வர்
செறி அரி சிலம்பின் குறும் தொடி மகளிர்
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும்
தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய – புறம் 36/3-5
செறிந்த உள்ளிடு பருக்கையையுடைய சிலம்பினையும், குறிய வளையினையுமுடைய மகளிர்
பொன்னால் செய்யப்பட்ட கழங்கினால் தெற்றி என்ற விளையாட்டை ஆடும்
குளிர்ந்த ஆன்பொருநை நதியின் வெள்ளிய மணல் சிதற.
ஒரு மகள் உடையேன்-மன்னே அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு
பெரு மலை அரும் சுரம் நெருநல் சென்றனள்
இனியே தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே
உள்ளின் உள்ளம் வேமே உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்று அன்ன என்
அணி இயல் குறு_மகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே – நற் 184
ஒரே ஒரு மகளை உடையவள் நான்; அவளும்
போர்க்களத்தில் மிக்குச் செல்லும் வலிமையையுடைய கூரிய வேலையுடைய காளையோடு
பெரிய மலைகளினூடே செல்லும் அரிய வழியில் நேற்றுச் சென்றுவிட்டாள்;
இப்பொழுது தாங்கிக்கொள் உன் வருத்தத்தை என்று சொல்கிறீர்! அது
எப்படிச் சாத்தியமாகும்? அறிவுள்ள மக்களே!
நினைத்துப்பார்த்தால் நெஞ்சம் கொதிக்கிறது – மையுண்ட கண்களின்
மணிகளில் வாழும் பாவையானது வெளியில் வந்து நடக்கக் கற்றுக்கொண்டதைப் போல என்
அழகிய சாயலையுடைய சிறுமகள் விளையாடிய
நீல மணி போன்ற நொச்சியையும் தெற்றிக்காயையும் கண்டு
(இது இக்காலத்துப் பாண்டி விளையாட்டு எனப்படும் என்பர்- பொன் கழங்குக்குப் பதிலாக, இன்று
மண் ஓட்டாலான சில்லுவைப் பயன்படுத்துவர்)
இந்தத் தெற்றி விளையாட்டை, மகளிர் மாடத்திலும் விளையாடுவர்.
கதிர்விடு மணியின் கண் பொரு மாடத்து
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும் – புறம் 53/2,3
ஒளிவிடுகின்ற மணிகளால் கண்ணைக்கூசவைக்கும் மாடத்தில்
விளங்கிய வளையையுடைய மகளிர் தெற்றி என்னும் விளையாட்டை ஆடும்
இந்தத் தெற்றியை, சிறுவர் விளையாடும் கிச்சுக்கிச்சுத் தாம்பாளம் என்ற விளையாட்டு என்றும் கூறுவர்.
முதலில் மணலை நீளமாகக் குவிக்கவேண்டும், ஒருவர். ஒரு சிறுகயிற்றுத்துண்டை முடிச்சுப்போட்டு,
வலதுகை இருவிரல்களுக்குள் அதைப் பிடித்துக்கொண்டு, இடது கை விரல்களையும் வெறுமனே
அதேபோல் பிடித்து, மணல் குவியலின் இரு பக்கங்களிலும் நுழைத்து நுழைத்துச் செல்வார். அப்போது,
மணலுக்குள் ஓரிடத்தில் அந்த முடிச்சை ஒளித்து வைத்துவிட்டு, விரல்களை வெளியே எடுப்பார்.
அடுத்தவர், இரு கைகளையும் கோர்த்து மணல் குவியலில் ஏதாவது ஓரிடத்தில் கைகளை வைத்து
மூடுவார். முதலாமவர், சிறிது சிறிதாக அந்த மணலைத் தோண்டி அந்த முடிச்சினை எடுக்கவேண்டும்.
எடுத்தால் அவருக்கு வெற்றி. இல்லாவிட்டால் மூடியவருக்கு வெற்றி.
இத்தகைய விளையாட்டும் மணல் பரப்பில் விளையாடப்படும்.
தெறுவர
தெற்றி பாவை திணி மணல் அயரும்
மென் தோள் மகளிர் – புறம் 283/9-11
வெகுட்சி தோன்ற தெற்றிப்பாவையைத் திணிந்த மணலில் வைத்து விளையாடும்
மெல்லிய தோளையுடைய மகளிர்
என்ற அடிகள் இந்த விளையாட்டைக் குறிக்கும் எனலாம். கிச்சுக்கிச்சுத்தாம்பாளத்தின் முடிச்சு,
இங்கே பாவை எனப்படுகிறது எனலாம்.
இப்படி, ஒரு புன்னைக்காயைக் கொண்டு விளையாடிய ஒரு சிறுமி, பின்னர் அதை மறந்துவிட,
அந்தக் காய் வளர்ந்து பெரிய மரம் ஆகி,அவளுக்குத் தங்கை ஆனது என நற்றிணைப்பாடல் 172 குறிக்கிறது.
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே – நற் 172/1-5
4.
தெற்றி உலறினும் வயலை வாடினும் – அகம் 259/13 என்ற அடியில் காணப்படும் தெற்றி
ஒருவகை மரம் என்று தமிழ்ப் பேரகராதி கூறும்.
|
தெற்று |
தெற்று – 1. (வி) 1. அலை, உலுக்கு, shake, disturb
2. தடைப்படுத்து, obstruct
– 2. (பெ) தேற்றம், உறுதி, certainty
1.1.
குன்று என குவைஇய குன்றா குப்பை
கடும் தெற்று மூடையின் இடம் கெட கிடக்கும்
சாலி நெல்லின் – பொரு 244-246
மலை என்னும்படி குவித்த குறையாத நெற்பொலி
உலுக்கிக் குலுக்கிக் கட்டிய மூடைகள் வெற்றிடம் இல்லையாகும்படி (எங்கும்)கிடக்கும்,
செந்நெல் விளைந்துநின்ற
1.2
இமையாது
இரை நசைஇ கிடந்த முது வாய் பல்லி
சிறிய தெற்றுவது ஆயின் பெரிய
ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும்
நின்று ஆங்கு பெயரும் கானம் – அகம் 387/15-19
கண்ணிமையாது
உணவை வேட்டுக்கிடந்த முதுமை வாய்ந்த பல்லி
சிறிய அளவில் தடைப்படுத்துவதாயின், பெரிய
நெற்றிப்பட்டம் அணிந்த யானையில் செல்லும் அரசராயிருப்பினும்
மேற்செல்லாமல் திரும்பிச் செல்லும் கானம்
2.
இனிதின் இயைந்த நண்பு அவர் முனிதல்
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின் – அகம் 328/7,8
இனிமையாகப் பொருந்திய நட்பினை அவர் பின் வெறுத்தல்
உறுதியாவதை நாம் நன்கு உணர்வேமாயின்
|
தெற்றென |
தெற்றென – (வி.அ) 1. தெளிவாக, clearly, distinctly
2. விரைவாக, speedily, swiftly
1.
நனி பசந்தனள் என வினவுதி அதன் திறம்
யானும் தெற்றென உணரேன் – அகம் 48/3,4
மிகவும் மெலிவடைந்துள்ளாள்’ என்று (காரணம்)கேட்கிறாய், அதன் காரணத்தை
நானும் தெளிவாக அறியேன்
2.
பெற்றவை பிறர்_பிறர்க்கு ஆர்த்தி தெற்றென
செலவு கடைக்கூட்டுதிர் ஆயின் பல புலந்து – பொரு 174,175
பெற்ற பொருளை மற்ற ஒவ்வொருவருக்கும் நிறையத் தந்து, விரைவாக
(உமது இந்த)பயணத்தை முடிவுக்குக் கொண்டுவருவீராயின்
|
தெளி |
தெளி – 1. (வி) 1. தூவு, sprinkle as water
2. நீர் போன்றவை கலங்கிய நிலையில் மாறி சுத்தமாகு,
become clear, limpid, transparent, as water by the settling of sediment
3. நம்பு, trust
4. ஐயம் தீர், clear up
5. அறி, understand, perceive
6. உறுதியாகத் தெரிவி, affirm clearly, cause to believe
7. தெளிவுபடுத்து, make known
– 2. (பெ.அ) தெளிவான, clear
– 3. (பெ) தெளிவு, clearness
1.1
நறு விரை தெளித்த நாறு இணர் மாலை – அகம் 166/5
நறுமண நீர் தூவப்பெற்ற நாறும் கொத்துக்களாலான பூமாலை
1.2
கடி சுனை தெளிந்த மணி மருள் தீம் நீர் – அகம் 368/10
விளக்கம் பொருந்திய சுனையில் உள்ள கலங்காமல் தெளிந்த, பளிங்கினைப் போன்ற இனிய நீரில்
1.3
விளிந்தன்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே – நற் 178/10
நிலைகெட்டுப்போகிறது அவரை முற்றிலும் நம்பியிருந்த என் நெஞ்சம்.
1.4
சின்_மொழி தெளி என தேற்றிய சிறப்பு அன்றோ – கலி 132/13
கொஞ்சமாய்ப் பேசுபவளே! உன் ஐயம் தீர்வாயாக என்று அவளைத் தேற்றியதன் விளைவு அல்லவா,
1.5
இனை வனப்பின் மாயோய் நின்னின் சிறந்தார்
நில உலகத்து இன்மை தெளி நீ வருதி – கலி 108/53,54
இத்தகைய வனப்புகளைக் கொண்ட கருப்பழகியே! உன்னிலும் சிறந்தவர்கள் இந்த
உலகத்தில் இல்லை! அறிந்துகொள்! கிட்டே வா!
1.6
தாம் வர தெளித்த பருவம் காண்வர
இதுவோ என்றிசின் மடந்தை – நற் 99/4,5
தான் திரும்பி வருவேன் என்று உறுதியாகக் கூறிய பருவம் மிக்க அழகிதாக
வந்திருக்கும் இதுவோ என்று கேட்கிறாய் மடந்தையே!
1.7
ஆனா சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை
தேன் ஆர்க்கும் பொழுது என தெளிக்குநர் உளர் ஆயின் – கலி 30/11,12
குன்றாத புகழையுடைய கூடல்மா நகரில் அரும்புகள் மலரும் நறிய முல்லைப் பூக்களில்
தேனீக்கள் களிப்புடன் ஆரவாரிக்கும் இன்பமான பொழுது என்று அவரிடம் தெளிவுபடுத்துவார் இருந்தால்?
2.
தெளி தீம் கிளவி யாரையோ – நற் 245/6
தெளிவான இனிய சொற்களும் உடையவளே! யாரோ
3.
குருதி கோட்டு அழி கறை தெளி பெற கழீஇயின்று – பரி 20/5
குருதி படிந்த கொம்பிலிருக்கும் மிக்க கறை தெளிவுபெற அந்த மழை கழுவிவிட்டது;
|
தெளிர் |
தெளிர் – 1. (வி) 1. தெளிவாக ஒலி, sound clearly
2. ஒளிபெறு, shine, sparkle
– 2. (பெ) தெளிவான ஓசை, clear sound
1.1.
நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை – அகம் 257/10
நுண்ணிய திரண்ட ஒளி பொருந்திய வளை ஒலிக்கும் முன்கை
1.2
ஒண்_தொடியார்
வண்ணம் தெளிர முகமும் வளர் முலை
கண்ணும் கழிய சிவந்தன – பரி 10/94-96
ஒளிரும் வளையலையுடைய அம் மகளிர்,
நீர்விளையாட்டினால் தம் நிறம் மேலும் ஒளிபெற்று விளங்க, அவரின் முகமும், முலைகளின்
கண்களும் மிகவும் சிவந்தன;
2.
தெண் கடல் அடைகரை தெளிர் மணி ஒலிப்ப – குறு 212/2
தெளிந்த நீரையுடைய கடலின் அடைந்தகரையில் தெளிவான ஓசையுள்ள மணிகள் ஒலிக்க
|
தெள் |
தெள் – (பெ.அ) தெளிந்த, தெளிவான, clear, fine
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி – குறு 207/3
தன் இனத்திடமிருந்து பிரிந்துவந்த பருந்தின் தனிமைத்துயரைக் காட்டும் தெளிவாகக் கேட்கும் அழைப்பொலி
வன் பரல் தெள் அறல் பருகிய இரலை – குறு 65/1
கெட்டியான பரல்கற்களிடையே தெளிவாய் ஓடும் நீரைப் பருகிய ஆண்மான்
|
தெள்ளிதின் |
தெள்ளிதின் – (வி.அ) 1. நிச்சயமாக, definitely
2. தெளிவாக, clearly
3. எல்லாரும் அறியும்படியாக
1.
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின்
வாரார் என்னும் புலவி உட்கொளல்
ஒழிக – நற் 11/3-5
அயலார் கூறும் அலர் உரைகளை நினைத்து, நிச்சயமாக
அவர் வரமாட்டார் என்ற பிணக்கத்தைக் கொள்வதை
ஒழிப்பாயாக
2.
நம் வரவினை
புள் அறிவுறீஇயின-கொல்லோ தெள்ளிதின்
———————————————–
திதலை அல்குல் தே மொழியாட்கே – நற் 161/8-12
நம் வரவினை
புள்ளினங்கள் கரைந்து அறியும்படி தெரிவித்தனவோ? – தெளிவாக
——————————————————————————
மஞ்சள் புள்ளித் தேமல் படர்ந்த அல்குலையும், இனிய மொழியையும் உடைய நம் காதலிக்கு –
3.
தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல – புறம் 73/6,7
யாவரும் காணும்படியாகத் துயில்கின்ற புலியை இடறிய குருடன் போல
|
தெழி |
தெழி – 1. (வி) 1. அதட்டு, drive or control by shouting; to bluster, utter threats;
2. அணிகலன்கள் உரசிக்கொள்ளும்போது கலகலவென்று ஒலியெழுப்பல்,
make sound as jewels rub against themselves
– 2 (பெ) வெண்ணெய் கடையும்போது ஏற்படும் ஒலிபோன்ற ஒலி
1.1.
கொடும் கோல் உமணர் பகடு தெழி தெள் விளி – அகம் 17/13
கடிய தார்க்குச்சிகளையுடைய, உப்புவணிகர் தம் காளைகளை அதட்டும் தெளிந்த குரல்கள்
1.2.
ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி – மது 666
ஒளிரும் பொன்னாலான மின்னுகின்ற (காலில் அணியும்)நகைகள் ஒலிக்க (வெளியே)வந்து
திருந்து கோல் எல் வளை தெழிப்ப நாணு மறந்து
விதுப்புறு மனத்தேம் விரைந்து அவன் பொருந்தி – குறி 167,168
சீரான உருட்சியும் பளபளப்பும் உள்ள வளையல்கள் ஒலிக்குமாறு, வெட்கத்தை விட்டு,
நடுக்கமுற்ற மனத்தினையுடையவராய், விரைந்து (ஓடி)அவனை ஒட்டிநின்று,
2.
வெண்ணெய் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி
அண்ண அணித்து ஊராயின் – கலி 108/35,36
வெண்ணெய் கடையும் ஓசை கேட்கும் அளவுக்கு, வெகு தூரம் இல்லாமல்
மிகவும் அருகிலிருக்கிறது ஊர்
|
தெவிட்டல் |
தெவிட்டல் – (பெ) 1. வாய் குதட்டுதலால் உண்டாகும் விலாழி(வாய்நுரை) நீர்,
Foam from a horse’s mouth
2. ஒலியெழுப்புதல், making noise
1.
கால் கடுப்பு அன்ன கடும்செலல் இவுளி
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன
வால் வெண் தெவிட்டல் வழி வார் நுணக்கம்
சிலம்பி நூலின் உணங்குவன – அகம் 224/5-8
காற்றின் வேகத்தை ஒத்த விரைந்த ஓட்டத்தினை உடைய குதிரைகளின்
பாலைக் கடையும்போது எழும் வெண்ணெயின் பெரிய மிதப்பினைப் போன்ற
மிக வெண்மையான வாயின் தெவிட்டலாய் பின்னே வழிந்திடும் மெல்லிய நுரை
சிலந்தியின் நூல் போல நுணுகுவனவாய்ச் சிதறி
2.
பாணி பிழையா மாண் வினை கலிமா
துஞ்சு ஊர் யாமத்து தெவிட்டல் ஓம்பி
நெடும் தேர் அகல நீக்கி – அகம் 360/11-13
தாளத்தை ஒத்து நடத்தல் தப்பாத மாண்புற்ற வினை வல்ல செருக்குறும் குதிரை
ஊர் துயிலும் யாமத்தில் ஒலித்தலைத் தவிர்த்து,
நீண்ட தேரினைத் தூரத்தே நீக்கி நிறுத்தி
|
தெவிட்டு |
தெவிட்டு – (வி) 1. உவட்டு, திகட்டு, cloy, sate
2. திரளு, assemble, collect together
3. ஒலியெழுப்பு, make noise
1.
பணை நிலை புரவி புல் உணா தெவிட்ட – மது 660
கொட்டிலில் நிற்றலையுடைய குதிரைகள் புல்லாகிய உணவை உண்டு திகட்டி நிற்க
2.
மான் கணம் மர முதல் தெவிட்ட ஆன் கணம்
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர – குறி 217,218
மான் கூட்டம் மரத்தடிகளில் வந்து திரள, பசுக்களின் கூட்டம்
(தம்)கன்றுகளை அழைக்கும் குரலையுடையவாய் கொட்டில்கள் நிறையுமாறு நுழைய,
3.
அவல்-தொறும் தேரை தெவிட்ட – ஐங் 453/1
பள்ளங்கள்தோறும் தவளைகள் ஆரவாரிக்க,
|
தெவிள் |
தெவிள் – (வி) திரளு, பெருகு, fill to the brim
முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்
கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை
நுண் நீர் தெவிள வீங்கி புடை திரண்டு
தெண் நீர் பசும் காய் சேறு கொள முற்ற – நெடு 23-26
பெரிய அடிப்பகுதியையுடைய பாக்கு மரத்தின் (நீல)மணியைப் போன்ற கழுத்தின்
கொழுத்த மடல்களில் (பாளை)விரிந்த திரட்சியைக் கொண்ட கொத்துக்களில்
நுண்ணிய நீர் திரளும்படியாக வீங்கிப் பக்கம் திரண்டு
|
தெவு |
தெவு – (வி) கொள், take, receive
சீர் அமை பாடல் பயத்தால் கிளர் செவி தெவி – பரி 11/69
தாளம் அமைந்த பாடல் இன்பத்தால் தமது கிளர்ச்சியையுடைய செவி தெவிட்டும்படியாக நிறைத்துக்கொள்ள
|
தெவுட்டு |
தெவுட்டு – (வி) தெவிட்டு, பார்க்க : தெவிட்டு
சீறூர் பெண்டிர்
திரி வயின் தெவுட்டும் சேண் புல குடிஞை – அகம் 283/5,6
சிறிய ஊர்களிலுள்ள பெண்கள்
திரியுமிடத்தே ஒலியெழுப்பும் சேய்மையிடத்தே இருக்கும் பேராந்தை
|
தெவ் |
தெவ் – (பெ) பகை, பகைவர், enmity, enemy
தொலையா தும்பை தெவ்_வழி விளங்க – பதி 52/8
தோற்காத நிலையுள்ள தும்பைப்பூ மாலை, பகைவர் நடுவே விளங்கித் தோன்ற
|
தெவ்வர் |
தெவ்வர் – (பெ) பகைவர், enemy
தெவ்வர் தேய்த்த செ வேல் வயவன் – நற் 260/6
பகைவரை அழித்த சிவந்த வேற்படையையுடைய வலிமையுள்ள வீரனுடைய
|
தெவ்விர் |
தெவ்விர் – (விளி) தெவ்வர்களே! பகைவர்களே! – விளிவடிவம், vocative form of ‘tevvar’
களம் புகல் ஓம்பு-மின் தெவ்விர் – புறம் 87/1
போர்க்களத்தின்கண் புகுதலைத் தவிர்ப்பீர், பகைவர்களே!
|
தெவ்வு |
தெவ்வு – 1. (வி) கொள், get, take, obtain
– 2. (பெ) பகை, பகைவர், enmity, enemy
1
நீர் தெவ்வு நிரை தொழுவர் – மது 89
நீரினை முகக்கும் (ஏற்றத்தில்)வரிசையாய் நிற்கும் தொழிலாளர்கள்
2.
தெவ்வு குன்றத்து திருந்து வேல் அழுத்தி – பரி 19/102
பகைமை பொருந்திய கிரவுஞ்ச மலையில் உன் திருத்தமான வேலினைப் பாய்ச்சி
திறல் சால் வென்றியொடு தெவ்வு புலம் அகற்றி – சிறு 246
வலிமை பொருந்திய வெற்றியோடே பகைவரின் நிலத்தைக் காலிசெய்து,
|
தே |
தே – (பெ) தேம், தேன் ஆகியவற்றின் கடைக்குறை, இனிமை, sweet
வேய் பெயல் விளையுள் தே கள் தேறல் – மலை 171
வேய் பெயல் விளையுள் தேன் கள் தேறல்
மூங்கில் குழாய்க்குள்ளே பெய்தலையுடைய முற்றிய தேனால் செய்த கள்ளின் தெளிவை
தே கொக்கு அருந்தும் முள் எயிற்று துவர் வாய் – குறு 26/6
தேம் கொக்கு அருந்தும் முள் எயிற்று துவர் வாய்
தேமாவின் கனியை உண்ணும் முள் போன்ற கூரிய எயிற்றினையும் செவ்விய வாயினையும்
தேர் நடைபயிற்றும் தே மொழி புதல்வன் – நற் 250/3
சிறுதேர் உருட்டி விளையாடும் இனிய மொழிகளைப் பேசும் புதல்வன்
|
தேஎத்த |
தேஎத்த – (பெ) தேசத்தில் உள்ளவை, those which are in the country
மொழிபெயர் தேஎத்த பன் மலை இறந்தே – அகம் 31/15
தமிழ் மொழியின் வேறான மொழிவழங்கும் தேசங்களில் உள்ள பல மலைகளையும் கடந்து
|
தேஎத்தர் |
தேஎத்தர் – (பெ) தேசத்தைச் சேர்ந்தவர், person belonging to a country
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவர்_உடை நாட்டே – குறு 11/7,8
மொழி வேறுபட்ட நாட்டில் உள்ளவராயினும்
(அங்குச்)செல்வதை எண்ணினேன் அவருடைய நாட்டினிடத்துக்கு
|
தேஎம் |
தேஎம் – (பெ) 1. தேசம், நாடு, land, country
2. திசை, திக்கு, direction
1.
மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட – பெரும் 423
(தன்னை)எதிர்ப்போரின் நாட்டிலுள்ள (மக்கள் கூடும்)பொதுவிடங்கள் பாழ்படவும்
2.
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி – நெடு 77
திசைகளைக் குறித்துக்கொண்டு, தெய்வங்களை (ஏறிட்டுப்)பார்த்து(த் தொழுது),
|
தேசு |
தேசு – (பெ) அழகு, beauty
மாசு அற கண்ணடி வயக்கி வண்ணமும்
தேசும் ஒளியும் திகழ நோக்கி – பரி 12/20,21
அழுக்கு நீங்க கண்ணாடியைப் பளபளப்பாக்கி, அதில் தம் இயற்கையழகும்,
செயற்கையழகும், மேனியெழிலும் தோன்ற, அவற்றைக் கண்டு மகிழ்ந்து
|
தேடூஉ |
தேடூஉ – (வி.எ) தேடிக்கொண்டே, keep looking for
கழி பெயர் களரில் போகிய மட மான்
விழி கண் பேதையொடு இனன் இரிந்து ஓட
காமர் நெஞ்சமொடு அகலா
தேடூஉ நின்ற இரலை ஏறே – நற் 242/7-10
கழிநீர் பெருகிப் பரவுகின்ற களர்நிலத்தில் கால்வைத்த இளைய மான்
கண்களை அகலவைத்துப் பார்க்கும் தன் அறியாக் குட்டியோடு தன் கூட்டத்தை விட்டு வெருண்டு ஓட,
விருப்பங்கொண்ட நெஞ்சத்தோடு இருக்கின்ற இடத்தைவிட்டு அகலாமல்
பார்வையால் தேடிக்கொண்டே நிற்கும் ஆண்மானை
|
தேன் |
தேன் – (பெ) 1. பூக்களிலிருந்து தேனீக்கள்திரட்டும் இனிமையான திரவம், honey
2. தேனிறால், தேன்கூடு, honey-comb
3. இனிய சாறு, sweet juice
4. தேனீ, honey-bee
5. மலர் மணம், இனிய நறுமணம், fragrance,
1.
பசும் கேழ் இலைய நறும் கொடி தமாலம்
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும் – நற் 292/2,3
பசுமை நிறங்கொண்ட இலைகளையுடைய மணமிக்க தமாலக்கொடியை
இனிய தேனை எடுக்கும் குறவர்கள் வளைத்து முறிக்கும்
2.
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல – நற் 1/4
சந்தனமரத்தில் சேர்த்துக்கட்டிய இனிய தேன்கூடு போல
3.
கானல் பெண்ணை தேன் உடை அளி பழம் – நற் 372/2
கடற்கரைச் சோலையின் பனையின் இனிய சாறினையுடைய மிக முதிர்ந்த பழம்
4.
மயில்கள் ஆல பெரும் தேன் இமிர – ஐங் 292/1
மயில்கள் களித்தாட, கூட்டமான வண்டினங்கள் ஒலிக்க,
5.
தேன் நாறு கதுப்பினாய் யானும் ஒன்று ஏத்துகு – கலி 40/9
மலர் மணம் கமழும் தலைமயிரையும் கொண்டவளே! நானும் ஒரு பாட்டு வாழ்த்திப்பாடுவேன்
|
தேமா |
தேமா – (பெ) இனிமையான மாம்பழம் (தரும் மரம்), sweet mango (tree, flower)
தேமா மேனி சில் வளை ஆயமொடு – சிறு 176
தேமாவின் தளிர்(போலும்) மேனி(யையும்), சிலவாகிய வளை(யினையும் உடைய நும்)மகளிரின் திரளோடு
|
தேம் |
தேம் – (பெ) 1. இனிய மணம், வாசனை
2. தேன், honey
3. யானையின் மதநீர், must of an elephant
4. இனிமை, sweetness
5. நெய், oil
6. தேனீ, honey bee
1.
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – திரு 24
திலகம் இட்ட இனிய மணம் நாறுகின்ற அழகிய நெற்றியில்
2.
தேம் பாய் கண்ணி தேர் வீசு கவி கை – மலை 399
தேன் சொரிகின்ற தலையிற் சூடும் மாலையினையும், தேர்களை (அள்ளி)வீசும் கவிந்த கையினையும் உடைய
3.
தேம் படு கவுள சிறு கண் யானை – முல் 31
மதம் பாய்கின்ற கதுப்பினையும் சிறிய கண்ணையும் உடைய யானை
4.
வேறு பட கவினிய தேம் மா கனியும் – மது 528
ஒன்றற்கொன்று வேறுபட்ட இனிய மாவின் பழங்களையும்
5.
தேம் மறப்பு அறியா கமழ் கூந்தலளே – நற் 301/9
அகிலின் நெய்ப்பூச்சு நீங்குதல் இல்லாத மணங்கமழ்கின்ற கூந்தலையுடையவள்
6.
தேம் ஊர் ஒண்_நுதல் நின்னோடும் செலவே – குறு 22/5
வண்டுகள் மொய்க்கும் ஒளிபொருந்திய நெற்றியையுடைய உன்னோடும்தான் பயணம்
|
தேம்பு |
தேம்பு – (வி) 1. வலிமைகுன்று, loose strength; become weak
1.
களிறு தன்
வரி நுதல் வைத்த வலி தேம்பு தட கை
கல் ஊர் பாம்பின் தோன்றும் – அகம் 349/11-13
ஆண்யானை தன்
வரிகள் தங்கிய நெற்றியில் வைத்த வலிமை குன்றிய பெரிய கை
குன்றில் ஏறும் பாம்பு போலத் தோன்றும்
|
தேயம் |
தேயம் – (பெ) தேசம், country
காடும் காவும் அவனொடு துணிந்து
நாடும் தேயமும் நனி பல இறந்த
சிறு வன்கண்ணிக்கு – அகம் 383/3-5
காடும் சோலையும் அத் தலைவனோடு போகத் துணிந்து
மிகப் பலவான நாடுகளையும் தேசங்களையும் கடந்த
இளைய வன்கண்மையுடைவளுக்கு
|
தேய் |
தேய் – (வி) 1. மெலிவடை, grow thin
2. இல்லாது போ, obliterated
3. குறை, grow less,
4. அழி, கொல், kill, destroy
1.
விளம்பழம் கமழும் கமம் சூல் குழிசி
பாசம் தின்ற தேய் கால் மத்தம் – நற் 12/1,2
விளாம்பழம் கமழும், நிறைசூலியைப் போன்ற தயிர்ப்பானையில்
தயிறு கடையும் கயிறு உராய்வதால் தேய்வுற்ற தண்டினையுடைய மத்தின்
2.
நோகோ யானே தேய்கமா காலை – புறம் 116/9
நோவேன் யான், கெடுவதாக என் வாழ்நாள்
3.
ஐ தேய்ந்தன்று பிறையும் அன்று
மை தீர்ந்தன்று மதியும் அன்று – கலி 55/9,10
நெற்றி மிகவும் தேய்ந்திருக்கிறது, ஆனால் அதும் பிறையும் இல்லை;
முகம் மாசற்று விளங்குகிறது, ஆனால் அது முழுமதியும் இல்லை;
4.
செறுநர் தேய்த்த செல் உறழ் தட கை – திரு 5
தான்கோபங்கொண்டாரை அழித்த இடியின் மாற்றான பெரிய கையினை உடையவனும்,
|
தேய்வை |
தேய்வை – (பெ) தேய்த்து அரைக்கப்படும் குழம்பு, paste formed by rubbing something on a stone
நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை – திரு 33
நறிய சந்தனக்கட்டையை உரைத்த பொலிவுள்ள நிறத்தையுடைய குழம்பை,
|
தேரை |
தேரை – (பெ) தவளை, தவளைவகை, frog, indian toad
இட்டு வாய் சுனைய பகு வாய் தேரை
தட்டை_பறையின் கறங்கும் நாடன் – குறு 193/2,3
சிறிய வாயையுடைய சுனையில் உள்ள பிளந்த வாயையுடைய தேரைகள்
தட்டைப் பறையைப் போல ஒலிக்கும் நாட்டையுடைய தலைவன்
வரி நுணல் கறங்க தேரை தெவிட்ட
கார் தொடங்கின்றே காலை – ஐங் 468/1,2
வரிகளைக் கொண்ட தவளைகள் மிக்கு ஒலிக்க, தேரைகள் ஒன்றாய் ஒலிக்க,
கார்காலம் தொடங்கிவிட்டது குறித்த பருவத்தில்
|
தேர் |
தேர் – 1. (வி) 1. தேடு, search for
2. நாடிச்செல், seek
3. ஆராய், examine
4. எண்ணிப்பார், சிந்தி, ponder, deliberate
5. தெளிவுகொள், உறுதிப்படுத்து, ascertain
– 2. (பெ) 1. இரதம், chariot
2. சிறு பிள்ளைகள் இழுத்து விளையாடும் விளையாட்டு வண்டி
3. கானல், mirage
1.1
இரை தேர் மணி சிரல் இரை செத்து எறிந்து என – பெரும் 313
இரையைத் தேடுகின்ற (நீல)மணி(போலும்) மீன்கொத்தி (தனக்கு)இரை என எண்ணிப் பாய்ந்தெடுத்து
1.2
முன் பகல் தலைக்கூடி நன் பகல் அவள் நீத்து
பின்பகல் பிறர் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய் – கலி 74/10,11
முற்பகலில் ஒருத்தியிடம் சேர்ந்திருந்து, உச்சிவேளையில் அவளை விட்டுப் பிரிந்து
பிற்பகலில் வேறொருத்தியை நாடிச் செல்லும் உன் நெஞ்சமும் பைத்தியம்பிடித்தது
1.3
சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும்
தேரும்_கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – கலி 9/15-17
சிறப்புப் பொருந்திய வெண்மையான முத்துக்கள் அவற்றை அணிபவர்க்கன்றி,
அவை நீருக்குள்ளே பிறந்தாலும் நீருக்கு அவை தாம் என்ன செய்யும்?
ஆராய்ந்துபார்த்தால் உமது மகள் உமக்கும் அதனைப் போன்றவள்தான்;
1.4
ஏர் அணி இலங்கு எயிற்று இன் நகையவர்
சீர் அணி வையைக்கு அணி-கொல்லோ வையை_தன்
நீர் அணி நீத்தம் இவர்க்கு அணி-கொல் என
தேருநர் தேரும்_கால் தேர்தற்கு அரிது காண் – பரி 22/31-34
அழகிய வரிசையாய் ஒளிரும் பற்களையும், இனிய புன்முறுவலையும் உடைய மகளிரும்,
இயற்கை அழகினையுடைய வையைக்கு அழகாய் அமைந்தாரோ? வையையின்
நீரால் அழகுற்ற வெள்ளம் இவருக்கு அழகு தந்ததோ? என்று
தெளிந்தறிய முயல்வோர் எண்ணிப்பார்த்தால் தெளிந்துகொள்வதற்கு அரிதாகும்,
1.5
ஏர் அணி இலங்கு எயிற்று இன் நகையவர்
சீர் அணி வையைக்கு அணி-கொல்லோ வையை_தன்
நீர் அணி நீத்தம் இவர்க்கு அணி-கொல் என
தேருநர் தேரும்_கால் தேர்தற்கு அரிது காண் – பரி 22/31-34
அழகிய வரிசையாய் ஒளிரும் பற்களையும், இனிய புன்முறுவலையும் உடைய மகளிரும்,
இயற்கை அழகினையுடைய வையைக்கு அழகாய் அமைந்தாரோ? வையையின்
நீரால் அழகுற்ற வெள்ளம் இவருக்கு அழகு தந்ததோ? என்று
தெளிந்தறிய முயல்வோர் எண்ணிப்பார்த்தால் தெளிந்துகொள்வதற்கு அரிதாகும்,
2.1
வண் பரி நெடும் தேர் கடவு-மதி விரைந்தே – ஐங் 489/5
வளமையான குதிரைகள் பூட்டிய நெடிய தேரினைச் செலுத்துவாயாக, விரைந்து.
2.2
ஊரா நல் தேர் உருட்டிய புதல்வர் – பெரும் 249
(ஏறி)ஊரப்படாத நல்ல சிறு தேரை உருட்டிக்கொண்டு திரிந்த பிள்ளைகள்
2.3
இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும் – கலி 24/10
குத்தும் கொம்புகளையுடைய யானை தூரத்தே ஒளிர்கின்ற கானல்நீருக்காக ஓடும்
|
தேர்ச்சி |
தேர்ச்சி – (பெ) ஒரு துறையில் ஆழ்ந்த அறிவு, proficiency
நூல் வழி பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி
ஊர் காப்பாளர் ஊக்கு அரும் கணையினர் – மது 646,647
நூற்கள் (கூறும்)வழிமுறையைத் தப்பாத நுட்பமான நுணுகிய ஆழ்ந்த அறிவினையுடையவராய்;(உள்ள)
ஊர்க் காவலர்கள், தப்புதற்கு அரிய அம்பினையுடையவராய்
|
தேர்வு |
தேர்வு – (பெ) தேர்ந்தறியும் அறிவு, the discerning faculty
மறந்து கடல் முகந்த கமம் சூல் மா மழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வு இல
பிடவமும் கொன்றையும் கோடலும்
மடவ ஆகலின் மலர்ந்தன பலவே – நற் 99/6-10
கார்காலமென்பதனை மறந்து, கடல் நீரை முகந்த நிறைவான சூல்கொண்ட கரிய மேகங்கள்,
அதனைத் தாங்கமாட்டாது கொட்டித்தீர்த்த பெருமழையைக்
கார்காலத்து மழை என்று பிறழக்கருதிய உள்ளத்தோடு, தேர்ந்தறியும் அறிவு இல்லாதனவான
பிடவமும், கொன்றையும், காந்தளும்
மடமையுடையனவாதலால் மலர்ந்துவிட்டன பலவாக
|
தேறலர் |
தேறலர் – (பெ) 1. தெளியாதவர், one who is not convinced
2. தேறலை அளிப்பவர், one who gives pure liquor
1.
ஒறுப்ப ஓவலர் மறுப்ப தேறலர் – குறு 34/1
தமர் ஒறுக்கவும் வருத்தம் நீங்காதவர், தோழியர் மறுத்துக்கூறவும் மனம் தெளியார்.
2.
கலுழ் நனையால் தண் தேறலர் – புறம் 360/4
கலங்கிய கள்ளுடன் குளிர்ந்த தேறலை அளிப்பவர்.
|
தேறல் |
தேறல் – (பெ) 1. தெளிவு, clearness and transparency by settling of sediments
2. தெளிந்த மது, pure and clarified liquor
3. கள்ளின் தெளிவு, clarified toddy
4. நொதித்துப்போன பழச்சாறு, fermented fruit juice
1.
கடும் கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர – மது 599
கடிய கள்ளினது தெளிவை உண்டு களிப்பு மிக்குத் திரிதலைச் செய்ய
2.
யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல் – புறம் 56/18
யவனர் நல்ல மரக்கலத்தில் கொணர்ந்த குளிர்ந்த நறு நாற்றத்தையுடைய மதுவை
3.
தேம் பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து – குறி 155
இனிமையான, பனை மடலைப் பிழிந்தெடுத்த தெளிவான கள்ளை நிறையக் குடித்து, மகிழ்ச்சி மிக்கு
4.
முழு முதல் கொக்கின் தீம் கனி உதிர்ந்தென
புள் எறி பிரசமொடு ஈண்டி பலவின்
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல்
நீர் செத்து அயின்ற தோகை – குறி 188-191
பருத்த அடிமரத்தைக்கொண்ட மாமரத்தின் இனிய பழங்கள் உதிர்ந்தனவாக,
(அது கேட்ட)வண்டுகள் (திடுக்கிட்டுப் பறக்க, அதனால்)சிதறிய தேன் கலந்த, பலாமரத்தின்
(நன்கு பழுத்து)கட்டு விட்டு உதிர்ந்த நறிய பழத்தில் உண்டான தெளிந்த கள்ளை
நீரென்று கருதிப் பருகிய மயில்
மேற்கண்ட குறிப்புகளால், தேறல் என்பது போதைதரும் ஒரு தெளிந்த பானத்துக்குரிய
பொதுச்சொல்லாக இருந்திருக்கிறது எனத் தெரியவரும்.
அது இயற்கையாகக் கிடைக்கும் பனங்கள், அல்லது தென்னங்கள்ளாகவோ, செயற்கை முறையில் காய்ச்சி
வடிகட்டிய பானமாகவோ இருக்கலாம்.
இயற்கையாகக் கிடைக்கும் கள்ளை, ஒரு மூங்கில் குழாயினுள் ஊற்றிப் பல நாள் ஊறவைத்துப் பின்னர்
கிடைக்கும் தெளிவு தேக்கள் தேறல் எனப்பட்டது.
நீடு அமை விளைந்த தே கள் தேறல் – திரு 195
வேய் பெயல் விளையுள் தே கள் தேறல் – மலை 171
திருந்து அமை விளைந்த தே கள் தேறல் – மலை 522
அம் பணை விளைந்த தே கள் தேறல் – அகம் 368/14
வாங்கு அமை பழுனிய தேறல் மகிழ்ந்து – புறம் 129/2
அமை, வேய், பணை ஆகியவை மூங்கிலைக் குறிப்பன.
மட்டு எனப்படும் ஒருவகை மதுவை, ஒரு மண்கலத்தில் இட்டு, மண்ணுக்குள் புதைத்து நொதிக்க வைத்து
அதினின்றும் கிடைக்கும் தெளிவும் தேறல் எனப்பட்டது.
நிலம் புதை பழுனிய மட்டின் தேறல்
புல் வேய் குரம்பை குடி-தொறும் பகர்ந்து – புறம் 120/12,13
என்ற புறநானூற்று அடிகளால் இதனைத் தெரியலாம்.
போதை தரக்கூடிய சில பொருள்களைச் சேர்த்து ஊறவத்துப் பானையிலிட்டுக் காய்ச்சி வடித்த தெளிவும்
தேறல் எனப்பட்டது.
துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதி தேறல்
இளம் கதிர் ஞாயிற்று களங்கள்-தொறும் பெறுகுவிர் – மலை 463,464
(வேகும்போது கொதிப்பதால்)குலுங்கும் பானையிலிருந்து வடித்த (நெல்லின்)இளம் முளைகளாலான
தெளிந்த கள்ளை,
இள வெயில் சூரியனையுடைய(காலைவேளையில்) (நெற்)களங்கள்தோறும் பெறுவீர்
காட்டில், பலாப்பழங்கள் பழுத்துக் கனிந்து அவற்றினின்றும் வெடித்து ஒழுகும் நொதித்துப்போன பழச்சாறு,
கள்ளின் தன்மையை அடைவதால் அதுவும் தேறல் எனப்பட்டது.
பலவின்
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல் – குறி 188-189
பலாமரத்தின்
(நன்கு பழுத்து)கட்டு விட்டு உதிர்ந்த நறிய பழத்தில் உண்டான தெளிந்த கள்ளை
கோழ் இலை வாழை கோள் முதிர் பெரும் குலை
ஊழ்_உறு தீம் கனி உண்ணுநர் தடுத்த
சாரல் பலவின் சுளையொடு ஊழ் படு
பாறை நெடும் சுனை விளைந்த தேறல் – அகம் 2/1-4
கொழுத்த இலைகளைக் கொண்ட வாழையின், அடுக்குகள் முற்றிய பெரிய குலையின்
நன்கு பழுத்த இனிய கனிகள், (மிக்க இனிமையால்)உண்பவருக்குத் திகட்டும்,
மலைச்சரிவின் பலாச் சுளைகளுடன் (கலந்ததால்), நாட்பட்டு,
பாறையின் குழிந்த பகுதியில் சுனை போல் உண்டாகிய தெளிந்த சாறை
தீம் பழ பலவின் சுளை விளை தேறல் – அகம் 182/3
மரக்கலங்களில் வந்த வெளிநாட்டு மதுவகைகளும் தேறல் எனப்பட்டன.
யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல்
பொன் செய் புனை கலத்து ஏந்தி – புறம் 56/18,19
தேனைப் பதப்படுத்தி அதினின்றும் கிடைக்கும் மதுவும் தேறல் எனப்பட்டது.
இரும் கடற்கு ஊங்கு இவரும் யாறு என தங்கான்
மகிழ களி பட்ட தேன் தேறல் மாற்றி – பரி 16/27,28
பெரிய கடலை நோக்கி விரைந்து செல்லும் ஆற்றினைப் போல சிறிதும் தங்காமல் விரைந்து கரையேற
அவன் மகிழும்படி, களிப்பு மிக்க தேனால் சமைக்கப்பட்ட தேறலை அவனுக்குத் தர, அவன் அதனை மறுத்து
நொதிக்கவைக்கப்பட்ட கள்ளில் இஞ்சிப்பூ முதலியவற்றின் அரும்புகளை இட்டுப் பக்குவம் செய்து
தெளிவிக்கப்பட்டதும் தேறல் எனப்பட்டது.
நனை விளை நறவின் தேறல் மாந்தி – அகம் 221/1
நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும் – அகம் 366/11
நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி – பதி 12/18
பூ கமழ் தேறல் வாக்குபு தர_தர – பொரு 157
நனை என்பது பூவின் அரும்பு.
கள்ளினை நெடுநாட்கள் நொதிக்கவைத்தால் அதன் கடுப்பு மிகும் என்பதால் நெடுநாள்பட்ட கள்
தேறல் எனப்பட்டது.
பழம்படு தேறல் பரதவர் மடுப்ப – சிறு 159
தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல்
கோள்_மீன் அன்ன பொலம் கலத்து அளைஇ – புறம் 392/16,17
பாம்பு வெகுண்டு அன்ன தேறல் நல்கி – சிறு 237
அரவு வெகுண்டு அன்ன தேறலொடு சூடு தருபு – புறம் 376/14
கள்ளில் இருக்கும் கசடுகளை அகற்ற, நார்க்கூடையால் வடிகட்டித் தெளியவைத்திருக்கின்றனர்.
நார் பிழி கொண்ட வெம் கள் தேறல் – புறம் 170/12,13
நார் அரி தேறல் மாந்தி மகிழ் சிறந்து – புறம் 367/7
|
தேறு |
தேறு – 1. (வி) 1. தெளிவடை, be clarified, made clear as water
2. மனம் தெளிவாகு, உறுதிப்படு, be convinced, accept as true
3. நம்பு, trust,believe, confide in
4. தெளிவாகச் சிந்தி, think clearly
5. தெளிவாக அறிந்துகொள், know clearly
– 2. (பெ) 1. தெளிவு, clarity, clearness
2. கொட்டுதல், sting as of a bee
3. தேற்றா என்னும் மரம், a tree called ‘thERRA’
1.1.
தேறு நீர் புணரியோடு யாறு தலைமணக்கும் – பட் 97
தெளிந்த கடலின் அலைகளுடன் காவிரியாறு கலக்கும்
1.2.
தேறு நீ தீயேன் அலேன் என்று மற்று அவள்
சீறடி தோயா இறுத்தது அமையுமோ – கலி 90/17,18
‘தெளிவாயாக நீ! நான் தீயவன் அல்லன்’ என்று அவளின்
சிறிய பாதங்களைத் தொட்டு வீழ்ந்துகிடந்தது ஒன்று போதாதோ?
1.3
கல்_அக வெற்பன் சொல்லின் தேறி
யாம் எம் நலன் இழந்தனமே – நற் 36/4,5
மலைநாட்டுத் தலைவனின் சொல்லை நம்பி
நாம் எம் பெண்மைநலத்தை இழந்தோம்!
1.4
தேறின் பிறவும் தவறு இலேன் யான் – கலி 90/20
தெளிவாக யோசித்துப்பார்த்தால், நீ கூறுவது மட்டும் அல்ல, பிற குற்றங்களையும் நான் செய்யவில்லை
1.5
நின்னை
வெறி கொள் வியன் மார்பு வேறு ஆக செய்து
குறி கொள செய்தார் யார் செப்பு மற்று யாரும்
சிறு வரை தங்கின் வெகுள்வர் செறு தக்காய்
தேறினேன் சென்றீ – கலி 93/30-33
உன்னுடைய
மணங்கமழும் அகன்ற மார்பினைச் சிதைத்து
அதில் வடுக்களை உண்டாக்கியவர் யார்? சொல், அவர்களுள் எவரும்
சிறிதுநேரம்கூட நீ இங்குத் தங்கினால் கோபித்துக்கொள்வர், வெறுக்கத்தக்கவனே!
உன்னை நன்றாகத் தெரிந்துகொண்டேன்! நீ செல்வாயாக!
2.1
யாறு நீர் கழிந்து அன்ன இளமை நும் நெஞ்சு என்னும்
தேறு நீர் உடையேன் யான் தெருமந்து ஈங்கு ஒழிவலோ – கலி 20/13,14
ஆற்று நீர் சென்றுவிட்டால் அதனை மீண்டும் பெறமுடியாதது போன்ற இந்த இளமைக்காலத்தில்,
உம் நிலைத்த அன்பு என்னும்
தெளிவான தன்மையைக் கொண்டுள்ள நான் மனத்தடுமாற்றத்தோடு மாண்டுபோகவோ?
2.2
கடும் தேறு உறு கிளை மொசிந்தன துஞ்சும் – பதி 71/6
கடுமையாகக் கொட்டுதலைச் செய்யும் கூட்டமான குளவிகள் மொய்த்தவாறு தங்கியிருக்கும்
2.3
நகு முல்லை உகு தேறு வீ – பொரு 200
மலர்ந்து சிரிக்கின்ற முல்லையினையும், சிந்துகின்ற தேற்றா மலரினையும்,
|
தேற்றம் |
தேற்றம் – (பெ) தெளிவு, clearness
ஊரன்
தேற்றம் செய்து நம் புணர்ந்து இனி
தாக்கு அணங்கு ஆவது எவன்-கொல் அன்னாய் – ஐங் 23/2-4
தலைவன்
நல்லவற்றைக் கூறி நம்மைத் தெளிவித்துக் கூடிய பின்னர் இப்போது
தீண்டி வருத்தும் தெய்வமாக மாறிவிட்டது எதனால்? அன்னையே!
|
தேற்றல் |
தேற்றல் – (பெ) தெளிவுபடுத்தல், making clear
அரிது இனி ஆய்_இழாய் அது தேற்றல் – கலி 76/19
மிக அரிது, ஆராய்ந்தெடுத்த அணிகலன் அணிந்தவளே! இதனைத் தெளிவித்தல்
|
தேற்று |
தேற்று – (வி) 1. ஆறுதல் கூறு, console
2. தெளிவி, make clear
3. அறி, தெரிந்துகொள், புரிந்துகொள், know, understand
4. சூளுரை, swear, take an oath
1.
நீடு நினைந்து தேற்றியும் ஓடு வளை திருத்தியும் – முல் 82
நீண்ட பிரிவினை நினைந்து, அது நன்மைக்கே என்று தனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டும்,
கழலுகின்ற வளையை(க் கழலாமற்)செறித்தும்,
2.
என்னும் உள்ளினள்-கொல்லோ தன்னை
நெஞ்சு உண தேற்றிய வஞ்சின காளையொடு
அழுங்கல் மூதூர் அலர் எழ
செழும் பல் குன்றம் இறந்த என் மகளே – ஐங் 371-374
என்னையும் நினைத்துப்பார்த்தாளோ? தன்னைத்
தன் மனம் ஏற்றுக்கொள்ளும்படி தெளிவித்த உறுதிமொழிகளைக் கூறிய இளைஞனோடு
ஆரவாரப்பேச்சுள்ள இந்த பழமையான ஊரில் பழிச்சொற்கள் உண்டாகுமாறு
செழித்த பலவான குன்றுகளைக் கடந்து சென்ற என் மகள்தான்
3.
அளிய தாமே செ வாய் பைம் கிளி
குன்ற குறவர் கொய் தினை பைம் கால்
இருவி நீள் புனம் கண்டும்
பிரிதல் தேற்றா பேர் அன்பினவே – ஐங் 281-284
இரங்கத்தக்கனவாம், சிவந்த வாயினையுடைய பசிய கிளிகள்!
குன்றத்தின் குறவர்கள் கொய்துவிட்ட தினைப் பயிரின் பசிய தண்டுகளையுடைய
கதிரறுத்த வெறும் தட்டைகள் நீண்டிருக்கும் புனத்தைக் கண்டபின்னரும்
அப் புனத்தைவிட்டுப் பிரிந்துபோதலைத் தெரிந்துகொள்ளாத அளவுக்குப் பெரிய அன்பினை உடையவை.
4.
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்
புனை இரும் கதுப்பின் நீ கடுத்தோள்_வயின்
அனையேன் ஆயின் அணங்குக என் என
மனையோள் தேற்றும் மகிழ்நன் ஆயின் – அகம் 166/7-10
உயர்ந்த பலிகளைப் பெறும் அச்சம்தரும் தெய்வம்
அணிந்த கரிய கூந்தலையுடையவளான நீ சந்தேகப்படுபவளுடன்
நான் உறவுகோண்டவனாயின் என்னை வருத்துக என்று
தன் மனைவியை அவள் கணவன் சூளுரைத்துத் தெளியவைப்பானாயின்
|
தேள் |
தேள் – (பெ) ஒரு விஷப்பூச்சி, scorpion
தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல் – புறம் 392/16
தேளின் நஞ்சினைப் போன்று கடுக்கும் நாள்பட்ட கள்
|
தேவர் |
தேவர் – (பெ) 1. கடவுளர், deities
2. முனிவர், hermits
1,2
ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து
நால் எண் தேவரும் நயந்து நின் பாடுவோர் – பரி 3/27,28
இந்த ஞாலத்தில் வாழ்கின்ற முனிவர்களும், வானுலகின்
நால்வகை எண்ணிக்கையான மொத்தம் முப்பத்திமூன்று தேவர்களும் விரும்பி உன்னைப் பாடுவார்,
|
தை |
தை – 1. (வி) 1. குத்து, ஊடுருவு, துளைத்துச்செல், prick, pierce, penetrate
2. பூக்களைச் சேர்த்து மாலையாகக் கட்டு, tie, weave as wreath
3. அணி, அலங்கரி, wear, put on, adorn
4. மணிகளை வரிசையாகக் கோத்தல், string as beads
– 2. (பெ) 1. தமிழ் ஆண்டில் பத்தாவது மாதம், the tenth month in Tamil year
2. ஓர் இசை ஒலிக்குறிப்பு, a way of expressing sound in music
1.1.
கால மாரியின் அம்பு தைப்பினும் – புறம் 287/3
கார்காலத்து மழைத்தாரை போல் அம்புகள் வந்து உடம்பில்பட்டுத் துளைக்குமாயினும்
1.2.
தாரும் தையின தழையும் தொடுத்தன – அகம் 259/2
மாலைகளும் கட்டப்பெற்றன, தழையுடைகளும் தொடுக்கப்பட்டன
1.3.
சாய் குழை பிண்டி தளிர் காதில் தையினாள்
பாய் குழை நீலம் பகல் ஆக தையினாள் – பரி 11/95,96
சாய்ந்து குழைந்த அசோகின் தளிரைத் தன் காதில் செருகியிருந்தவள்,
ஒளிபாயும் குழையையுடையவள் அணிந்திருந்த நீலமலர் இளவெயில் படர்ந்தது போன்று ஆகும்படி சூடிக்கொண்டாள்
1.4
கைவல் வினைவன் தையுபு சொரிந்த
சுரிதக உருவின ஆகி – நற் 86/5,6
கைவேலைப்பாட்டில் வல்லவனான கம்மியன் மணிகளைக் கோத்துச் செய்த
சுரிதகம் என்னும் அணியைப் போன்ற உருவத்தைக்கொண்டனவாகி
2.1
தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ – கலி 59/13
தை மாதத்தில் நீராடிய நோன்பின் பயனை அடைவாயோ?
2.2
மாலை நீ தையென கோவலர் தனி குழல் இசை கேட்டு
பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய் – கலி 118/13,14
ஏ மாலையே! ‘தை’யென்று வரும் கோவலரின் தனித்த குழலோசையைக் கேட்டுக்
குமுறுகின்ற நெஞ்சத்தினையுடைய எங்களின் பக்கம் வந்து எம்மைப் பழித்துப்பாராட்டுகிறாய்
|
தைஇ |
தைஇ – 1. (வி.எ) தைத்து என்பதன் மரூஉ, பார்க்க – தை – 1. (வி)
– 2. (பெ) தை என்ற மாதம் – பார்க்க – தை – 2. (பெ) 1.
1.
தைஇ – உடுத்தி
பை விரி அல்குல் கொய் தழை தைஇ – குறி 102
பாம்பின் படத்தைப் போல பரந்த அல்குலுக்கு நறுக்கின தழையைக் கட்டி உடுத்தி
தைஇ – (மணல்வீடு)கட்டி, செய்து, உருவாக்கி
மணல் காண்-தோறும் வண்டல் தைஇ
வருந்தாது ஏகு-மதி வால் எயிற்றோயே – நற் 9/8,9
மணல் கண்டவிடமெல்லாம் சிறுவீடுகட்டி (மகிழ்ந்து விளையாடி)
வருத்தமில்லாமல் செல்வாய், வெண்மையான பற்களையுடையவளே!
தைஇ – (மாலை)தொடுத்து
பூவுடன் நெறிதரு தொடலை தைஇ – நற் 138/7
பூவுடன் அலையலையாய் அமைந்த மாலையைத் தொடுத்துச் சூட்டியதை
தைஇ – அணிந்துகொண்டு
அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை
மணி மருள் ஐம்பால் வண்டு பட தைஇ – நற் 245/2,3
அழகிய மலரான கழிமுள்ளியின் ஆய்ந்தெடுத்த பூக்களைக் கொண்ட மாலையை
நீலமணி போன்ற கூந்தலில் வண்டுகள் மொய்க்கும்படி அணிந்து,
தைஇ – சேர்த்துக்கொண்டு, பொருத்திக்கொண்டு
மா கழி மணி பூ கூம்ப தூ திரை
பொங்கு பிதிர் துவலையொடு மங்குல் தைஇ
கையற வந்த தைவரல் ஊதையொடு – குறு 55/1-3
பெரிய கழியின் நீலமணி போன்ற பூக்கள் கூம்ப, தூவுகின்ற அலைகளினின்றும்
பொங்கி வரும் சிதறல்கள் கொண்ட துவலையோடு, தாழ்ந்த முகில்களையும் சேர்த்துக்கொண்டு
செயலற்றுப்போக வந்த தடவிச்செல்லும் வாடைக்காற்றோடு
தைஇ – தடவிக்கொடுத்து
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை
பெரும் களிற்று செவியின் மான தைஇ
தண் வரல் வாடை தூக்கும் – குறு 76/3-5
மலைச் சரிவில் உள்ள சேம்பின் ஆடுகின்ற வளப்பமிக்க இலை
பெரிய களிற்றின் செவியை ஒக்கும்படி தடவிச்செல்லும்
குளிர்ந்த வாடைக்காற்று அசைக்கும்
தைஇ – சேர்த்துக்கட்டி
சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின்
இலங்கு மணி மிடைந்த பசும்_பொன் படலத்து
அவிர் இழை தைஇ மின் உமிழ்பு இலங்க – பதி 39/13-15
சிலந்தி பின்னிய ஆடுகின்ற வலையைப் போல,
மின்னுகின்ற மணிகள் இடையிடையே கலந்த பசும்பொன்னாலான உட்குழிவுள்ள கூட்டின் ஓரத்தை.
ஒளிருகின்ற இழைகளால் தைத்து, மின்னலைப் போல பளிச்சிட,
தைஇ – போர்த்திக்கொண்டு
மன்பதை எல்லாம் மடிந்த இரும் கங்குல்
அம் துகில் போர்வை அணி பெற தைஇ நம்
இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக – கலி 65/3-5
உலகம் எல்லாம் உறங்கிவிட்ட இருட்டான நள்ளிரவில்,
அழகிய துகிலால் போர்த்திய போர்வையை அழகுபெறப் போர்த்திக்கொண்டு, நம்முடைய
இனிய வனப்புள்ள மார்பினனாகிய தலைவனின் சமிக்கையை எதிர்பார்த்து நான் நின்றிருக்க
தைஇ – பதித்து
திகழ் ஒளி முத்து அங்கு அரும்பு ஆக தைஇ
பவழம் புனைந்த பருதி சுமப்ப – கலி 80/4,5
பிரகாசமான ஒளியையுடைய முத்துக்களை விளிம்பினில் அரும்பு போலப் பதித்து
பவழத்தால் செய்த சக்கரங்கள் சுமக்க,
தைஇ – சூட்டி
புதுவ மலர் தைஇ எமர் என் பெயரால்
வதுவை அயர்வாரை கண்டு மதி அறியா
ஏழையை என்று அகல நக்கு வந்தீயாய் நீ – கலி 114/3-5
புதிய மலர்களைச் சூட்டி, எம் சுற்றத்தார் என் பெயரைச் சொல்லி,
திருமண ஏற்பாடுகளைச் செய்வாரைக் கண்டு? ‘அறிவு கெட்ட
கோழையே’ என்று பெரிதாகச் சிரித்துவிட்டு வருவாய் நீ
2.
தைஇ – தைமாதம்
தைஇ திங்கள் தண் கயம் படியும்
பெரும் தோள் குறு_மகள் – நற் 80/7,8
தைத்திங்களில் குளிர்ந்த குளத்துநீரில் நீராடும்
பெரிய தோள்களைக் கொண்ட இளையோளே
|
தைஇய |
தைஇய – (வி.எ) தைத்த – செய்யிய எனும் வாய்பாட்டு வினையெச்சம் – பார்க்க – தை – 1. (வி)
தைஇய – இட்ட
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – திரு 24
திலகம் இட்ட மணம் நாறுகின்ற அழகிய நெற்றியில்
தைஇய – போர்த்த
உரிவை தைஇய ஊன் கெடு மார்பின் – திரு 129
தோல் போர்த்த தசை கெடுகின்ற மார்பின்
தைஇய – உருவாக்கிய
வேலன் தைஇய வெறி அயர் களனும் – திரு 222
வேலன் இழைத்த வெறியாடு களத்திலும்
தைஇய – சேர்த்துத்தொடுத்த
வெண் போழ் தைஇய அலங்கல் அம் தொடலை – நற் 169/8
வெண்மையான பனங்குருத்துடன் சேர்த்துத் தைத்த, மார்பில் அசைகின்ற அழகிய மாலை
தைஇய – உடுத்திய
தைஇய பூ துகில் ஐது கழல் ஒரு திரை – கலி 85/5
உடுத்தின மென்மையான துகில், மென்மையாய் விலகுகின்ற ஒரு மடிப்புடன்
தைஇய – பதிக்கப்பெற்ற
சீர் மிகு முத்தம் தைஇய
நார்முடிச்சேரல் நின் போர் நிழல் புகன்றே – பதி 39/16,17
சிறப்பு மிகுந்த முத்துக்கள் தைக்கப்பெற்ற
நார்முடிச் சேரலே! உனது போரினைப் புகலிடமாக விரும்பி –
தைஇய – தடவிய
தண் கமழ் சாந்தம் தைஇய வளியும் – பரி 21/47
ளிர்ச்சி பொருந்திய கமழ்கின்ற சந்தனத்தைத் தடவி ஏற்றுவரும் காற்றையும்
தைஇய – அலங்கரித்துக்கொண்ட
தைஇய மகளிர் தம் ஆயமோடு அமர்ந்து ஆடும்
வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்-கொல் – கலி 27/19,20
அழகு செய்துகொண்ட மகளிர் தம் தோழியருடன் சேர்ந்து ஆடுகின்ற,
வையையில் நீண்டுயர்ந்த மணல்மேட்டு இன்ப நுகர்ச்சியையும் அவர் நினைத்துப்பாராரோ?
|
தைப்பு |
தைப்பு – (பெ) தைத்தல், stitching
தொட்டதை தைப்பு அமை சருமத்தின் தாள் இயை தாமரை – பரி 21/3
நீ அணிந்துகொண்டது,
தைப்பதற்காக அமைந்த தோலினால், உன் திருவடிக்குப் பொருந்திய தாமரை மலர் போன்று செய்யப்பட்டது
|
தையல் |
தையல் – (பெ) 1. பெண், woman
2. ஒப்பனை செய்யப்பட்டது, that which is decorated
1.
பையுள் நெஞ்சின் தையல் உவப்ப – ஐங் 489/3
மிகுந்த துன்பமுள்ள நெஞ்சத்தைக் கொண்ட பெண்மணி மகிழும்படியாக
2.
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர – பரி 11/86
ஒப்பனையையுடைய அந்தக் கன்னியர், தம் ஈர உடையை அந்தத் தீயில் உலர்த்திநிற்க,
|
தைவரு(தல்) |
தைவரு(தல்) – (வி) 1. வருடு, உருவிவிடு, தேய், massage, shampoo, rub
2. தடவிக்கொடு, stroke
3. தடவிப்பார், grope
4. சுருதியேற்று, harmonise with the key-note
1.
மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர்
நடை மெலிந்து அசைஇய நன் மென் சீறடி
கல்லா இளையர் மெல்ல தைவர – சிறு 31-33
மடப்பத்தையுடைய மான்(போலும்) பார்வையையும்; ஒளியுள்ள நெற்றியையும் (உடைய)விறலியரின்
நடையால் இளைத்து ஓய்ந்த நல்ல மெல்லிய சிறிய அடியினை
கல்வி நிரம்பாத இளைஞர் மெத்தென்று வருடிநிற்க
2.
விசும்பு தைவரு வளியும் – புறம் 2/3
ஆகாயத்தைத் தடவிவரும் காற்றும்
3.
அல்கல்
பொய் வலாளன் மெய் உற மரீஇய
வாய் தகை பொய் கனா மருட்ட ஏற்று எழுந்து
அமளி தைவந்தனனே – குறு 30/1-4
நேற்று இரவில்
அந்தப் பொய்சொல்வதில் வல்ல தலைவன் என்னை மார்புறத் தழுவிய
வாய்ப்பதற்கேதுவான பொய்க்கனவு மருட்ட, நினைவு பெற்று எழுந்து
படுக்கையைத் தடவிப்பார்த்தேன்!
4.
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ் – அகம் 212/6
யாழ்வல்லோன் சுருதியேற்றும் நல்ல யாழின் செவ்வழிப்பண்ணை
|
தொகல் |
தொகல் – (பெ) ஒன்றாகச் சேர்தல், coming together
தொல் ஊழி தடுமாறி தொகல் வேண்டும் பருவத்தால் – கலி 129/1
பழைய ஊழிக்காலத்தில் உயிர்கள் தோன்றி, பின் முறைகெட்டு, ஒன்றாகச் சேர்ந்து ஒடுங்கக்கூடிய
ஊழி முடிவில்
|
தொகு |
தொகு – (வி) 1. கூடு, சேர், collect, accumulate
2. குவிந்திரு, சுருங்கு, be narrow, be contracted
3. திரட்டு, சேகரி, collect, gather
4. ஒன்றாக்கு, மொத்தமாக்கு, be summed up
1.
ஊர் உண் கேணி உண்துறை தொக்க
பாசி அற்றே பசலை – குறு 399/1,2
ஊரினர் உண்ணும் சிறிய குளத்தில் உண்ணும் துறையில் ஒன்றுகூடிய
பாசியைப் போன்றது பசலைநோய்
2.
தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார் – நெடு 65
குவிந்த வாயையுடைய செம்புகளில் தண்ணீரைக் குடியாராய்
3.
எறி திரை தொகுத்த எக்கர் நெடும் கோட்டு – நற் 211/6
மோதுகின்ற அலைகள் திரட்டிச் சேர்த்த மணல் மேட்டின் நீண்ட கரையில்
4.
விரிப்பின் அகலும் தொகுப்பின் எஞ்சும் – புறம் 53/6
விரித்துச் சொன்னால் பரக்கும், மொத்தமாகச் சொன்னால் பொருள் மிஞ்சிப்போகுமாதலால்
|
தொகுதி |
தொகுதி – (பெ) கூட்டம், assembly
ஒண் படை தொகுதியின் இலங்கி தோன்றும் – நற் 291/4
ஒள்ளிய காலாட்படையின் கூட்டம் போல விளங்கித் தோன்றும்
|
தொகூஉம் |
தொகூஉம் – (வி.எ) தொகும் என்பதன் நீட்டல் விகாரம் – ஒன்றுகூடும், collecting together
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும் தொகூஉம்
ஊழி ஆழி_கண் இரு நிலம் – பரி 3/22,23
மாசற்ற ஆயிரம் கதிர்களையுடைய பன்னிரண்டு சூரியர்களும் ஆகிய அனைத்தும் ஒன்றுகூடிநிற்கும்
ஊழிக் காலத்துக் கடலின்கண் மூழ்கிய பெரிய நிலத்தை
|
தொகை |
தொகை – (பெ) 1. கூட்டம், collection
2. மொத்தம், total, aggregate
1.
துய் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர் – நற் 111/2
மென்மையான நார்களைத் தலையில் கொண்ட இறால் மீனோடு கூட்டமான மீன்களையும் பிடித்துவர
2.
நெறி அறி செறி குறி புரி திரிபு அறியா அறிவனை முந்துறீஇ
தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக – கலி 39/47,48
நூல்நெறி அறிந்தவனும், நன்னாளைக் குறித்து, அது தப்புதலை அறியாதவனுமாகிய கணியனை
முன் நிறுத்தி,
தகை மிக்கவரும், மணவினைகளின் மொத்தத்தையும் அறிந்தவருமான சான்றோர் சூழ்ந்திருக்க,
|
தொடங்கல் |
தொடங்கல் – (பெ) 1. ஆரம்பித்தல், beginning
2. ஆதிசிருஷ்டி, first creation
1.
தொய்யல் மா மழை தொடங்கலின் அவர் நாட்டு
பூசல் ஆயம் புகன்று இழி அருவி – குறு 367/4,5
இறங்கிவரும் பெரிய மழை பெய்ய ஆரம்பித்ததால், அவர் நாட்டிலுள்ள
ஆரவாரத்தையுடைய மகளிர்கூட்டம் விரும்பி இறங்கும் அருவியினால்
2.
தொடங்கல்_கண் தோன்றிய முதியவன் முதலாக – கலி 2/1
உலகம் உருவாகும் காலத்தில் தோன்றிய முதியோனாகிய நான்முகன் முதலாக,
|
தொடரி |
தொடரி – 1. (வி.எ) 1. தொடர்ந்து, continuosly
2. தொடுத்து, fastening
– 2 (பெ) ஒரு முட்செடி வகை, அதன்பழம், a thorny straggling shrub, its fruit
1.1.
வேரும் முதலும் கோடும் ஓராங்கு
தொடுத்த போல தூங்குபு தொடரி
கீழ் தாழ்வு அன்ன வீழ் கோள் பலவின் – குறு 257/1-3
வேரிலும், அடிமரத்திலும், கிளையிலும் ஒன்றுபோல்
தொடுத்து வைத்தைதைப் போன்று தொங்கித் தொடர்ந்து
கீழே தாழ்ந்தாற்போன்ற தணிந்த குலைகளைக் கொண்ட பலாமரங்களையுடைய
1.2.
புதல் மிசை நறு மலர் கவின் பெற தொடரி நின்
நலம் மிகு கூந்தல் தகை கொள புனைய – ஐங் 463/1,2
புதரின் மேல் பூக்கும் நறிய மலர்களை அழகுபெறத் தொடுத்து, உன்
வனப்பு மிகுந்த கூந்தல் பொலிவுபெறுமாறு சூட்டிவிட
2.
வள்ளத்து இடும் பால் உள் உறை தொடரியொடு – புறம் 328/7
வள்ளத்தில் பெய்து உண்ணப்படும் பாலினது உள்ளே உறைந்த தயிரும் தொடரிப்பழமும்
|
தொடர் |
தொடர் – 1. (வி) 1. தொடு, கட்டு, bind, tie
2. பின்செல், follow, pursue
3. தொங்கவிடு, hang
– 2. (பெ) 1. சங்கிலி, chain
2. வரிசை, row, series
3. நட்பு, friendship, connection
4. மாலை, garland
1.1
கழி பூ தொடர்ந்த இரும் பல் கூந்தல் – ஐங் 191/2
கழியிலுள்ள பூக்கள் தொடுத்த மலர்ச் சரத்தை அணிந்த கரிய பலவான கூந்தலையும் கொண்ட
1.2
வம்பலர்
துள்ளுநர் காண்-மார் தொடர்ந்து உயிர் வௌவலின் – கலி 4/4,5
அவ்வழி வரும் புதியவர்
துடித்து வருந்துவதைக் கண்டு மகிழ்வதற்காக, அவரை விரட்டி அவரின் உயிரைக் கவர்வதால்,
1.3
கடிப்பு இகு காதில் கனம் குழை தொடர
மிளிர் மின் வாய்ந்த விளங்கு ஒளி நுதலார் – பரி 23/33,34
கடிப்பு என்னும் அணியினால் தாழ்ந்து விழுந்த காதில் பொன்னாலாகிய குழை தொங்க
மிளிருகின்ற ஒளிச்சுடர் பாய்தலால் பளிச்சிடும் ஒளியினையுடைய நெற்றியையுடைய பெண்டிரும்,
2.1
தொடர் நாய் யாத்த துன் அரும் கடி நகர் – பெரும் 125
சங்கிலிகளால் நாயைக் கட்டிவைத்துள்ள கிட்டுதற்கரிய காவலையும் உடைய வீட்டினையும்
2.2
நெடும் தொடர் குவளை வடிம்பு உற அடைச்சி – மது 588
நெடிய வரிசையாகவுள்ள குவளை மலர்களை வடிம்பிலே விழும்படி செருகி
2.3
தீம் கதிர் மதி ஏய்க்கும் திரு முகம் அம் முகம்
பாம்பு சேர் மதி போல பசப்பு ஊர்ந்து தொலைந்த_கால்
பின்னிய தொடர் நீவி பிறர் நாட்டு படர்ந்து நீ
மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ – கலி 15/16-19
தண்ணொளி வீசும் முழுத்திங்களைப் போன்றது இவளின் அழகிய முகம், அந்த முகம்
பாம்பின் வாய்ப்பட்ட மதியினைப் போல பசலை படர்ந்து தொலைந்துபோகும்போது –
நெருக்கமான அன்புத்தொடர்பை அறுத்துக்கொண்டு, பிறர் நாட்டுக்குச் சென்று நீ அங்கே பெறும்
நிலையான புதிய தொடர்புகளால் திருப்பித்தர முடியுமா?
2.4
மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி – அகம் 188/9
மலர்ந்த வேங்கைப்பூக்களாலாய நிறைந்த மாலையைத் தரித்து
|
தொடலை |
தொடலை – (பெ) 1. தொங்கவிடுதல், hanging, suspension
2. பூக்கள் அல்லது இலைகள் தொடுத்த மாலை, garland of flowers or leaves
3. மணிகளைக் கோத்துச்செய்த மேகலை
1.
தொடலை வாளர் தொடுதோல் அடியர் – மது 636
தொங்குதல் (உள்ள)வாளையுடையவராய்; செருப்புக்கோத்த அடியினையுடையவராய்;
2.
சுனை பூ குற்றும் தொடலை தைஇயும் – நற் 173/1
சுனையிலுள்ள மலர்களைக் கொய்தும், அவற்றை மாலையாகத் தொடுத்தும்
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை
ஒள் இலை தொடலை தைஇ – அகம் 105/1,2
அகன்ற பாறையில் அரும்பு முதிர்ந்து மலர்ந்த வேங்கையின்
ஒள்ளிய இலைகளிலாலான மாலையினை அணிந்து
3.
தொடலை அல்குல் தொடி தோள் மகளிர் – புறம் 339/6
மேகலை அணிந்த அல்குலையும் தொடி அணிந்த தோளையுமுடைய பெண்கள்
|
தொடி |
தொடி – (பெ) 1. கைவளை, bracelet
2. மகளிர் தோள்வளை, Armlet of women
3. ஆண்கள் தோளில் அணியும் வீரவளை, Armlet of warriors
4. உலக்கை, கைத்தடி, யானையின் தந்தம் ஆகியவற்றில் அணியப்படும் பூண்,
Ring, ferrule, knob of an elephant’s tusk
1.
ஒண் தொடி முன்கை யாம் அழ பிரிந்தே – ஐங் 38/4
ஒளிவிடும் வளையல்களை அணிந்த முன்கையையும் உடைய நாம் அழும்படி பிரிந்து செல்வதால் –
2.
தோளே தொடி நெகிழ்ந்தனவே – நற் 197/1
தோள்கள் தம் தோள்வளைகள் நெகிழ்ந்துபோகுபடி ஆயின
3.
கடிப்பு கண் உறூஉம் தொடி தோள் இயவர் – பதி 17/7
குறுந்தடியால் முரசின் கண்ணில் அறைந்து முழக்கும் தொடி அணிந்த தோள்களையுடைய இயவர்கள்
4.
குரை தொடி மழுகிய உலக்கை – பதி 24/19
ஒலிக்கின்ற பூண் மழுங்கிப்போன உலக்கை
தொடி தலை விழு தண்டு ஊன்றி நடுக்கு_உற்று – புறம் 243/12
பூண் செறிந்த தலையையுடைய பெரிய தண்டுக்கோலை ஊன்றி தளர்ந்து
நீள் மதில் அரணம் பாய்ந்து என தொடி பிளந்து
வை நுதி மழுகிய தடம் கோட்டு யானை – ஐங் 444/2,3
நெடிய மதில்களையுடைய அரணைத் தாக்கியதால் கொம்பில் இறுக்கிய வளையம் பிளந்துபோக,
கூர்மையான நுனியும் மழுங்கிவிட்ட பெரிய கொம்பினைக் கொண்ட யானைப்படையையுடைய
|
தொடு |
தொடு – (வி) 1. கை படு, தீண்டு, touch
2. தோண்டு, dig, scoop out
3. செறித்துக்கட்டு, அணி, wear tightly
4. இசைக்கருவி வாசி, play musical instruments
5. செலுத்து, discharg
6. ஒவ்வொன்றாய்ச்சேர்த்துக்கட்டு, fasten, string together
7. ஒவ்வொன்றாகச் சேர்த்துச்செய், block together, build up
8. கயிற்றினால் கட்டு, tie with a rope
9. வில்லில் அம்பினைப் பூட்டு, fix or set as the arrowin a bow
10. தன்வசப்படுத்து, bind with love or liberality
11. தொடர்புற்று விழு, flow continuosly
12. வளை, சூழ், surround, hem in
13. பற்றிக்கொள், grasp
1.
ஊர் உண் கேணி உண்துறை தொக்க
பாசி அற்றே பசலை காதலர்
தொடு_உழி தொடு_உழி நீங்கி
விடு_உழி விடு_உழி பரத்தலானே – குறு 399
ஊரினர் உண்ணும் சிறிய குளத்தில் உண்ணும் துறையில் கூடிய
பாசியைப் போன்றது பசலைநோய்; காதலர்
கை படும்பொழுதெல்லாம் நீங்கி,
அவர் விடும்பொழுதெல்லாம் மீண்டும் பரந்துவிடுகிறது.
2.
கலை தொடு பெரும் பழம் புண் கூர்ந்து ஊறலின் – மலை 292
ஆண் கருங்குரங்கு தோண்டின பெரிய பலாப்பழம் காயம் மிகுந்து ஊற்றெடுப்பதால்
3
இடு புணர் வளையொடு தொடு தோள் வளையர் – பரி 12/23
ஆணியிட்டுச் சேர்க்கப்படும் வளையல்களோடு, செறிக்கப்பட்ட தோள்வளையினை உடையவரும்,
4.
இயங்கல் ஓம்பி நும் இயங்கள் தொடு-மின் – மலை 277
மேற்செல்லுதலைத் தவிர்த்து உமது இசைக்கருவிகளை இசைப்பீராக
5.
தட்டையும் புடைத்தனை கவணையும் தொடுக்க என – நற் 206/5
தட்டை எனும் கருவியை அடித்து ஒலித்து, கவண்கல்லும் வீசுக என்று
6.
குளவியொடு
வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன் – திரு 191,192
காட்டு மல்லிகையுடன்
வெண்டாளியையும் கட்டின தலைமாலையை உடைய
7.
விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த
தண் கமழ் அலர் இறால் சிதைய நன் பல – திரு 299,300
விண்ணைத் தொடுகின்ற நெடிய மலையிடத்தே ஞாயிற்றைப் போல் (தேனீக்கள்)செய்த
தண்ணியவாய் மணக்கின்ற விரிந்த தேன்கூடு கெட
8.
உதள
நெடும் தாம்பு தொடுத்த குறும் தறி முன்றில் – பெரும் 151,152
ஆட்டுக்கிடாயின்
நெடிய கயிறுகள் கட்டப்பட்ட குறிய முளைகளையும் உடைய முற்றத்தில்
9.
தொடுத்த வாளியர் துணை புணர் கானவர் – மலை 17
தொடுக்கப்பட்ட அம்பினை உடையவராய்த் தம் துணைவியரோடே சேர்ந்திருக்கும் கானவர்,
10
பாடுநர் தொடுத்த கைவண் கோமான்
பரி உடை நல் தேர் பெரியன் – அகம் 100/11,12
பாடிவருவோரை தன்வசப்படுத்தி வளைத்துக்கொள்ளும் கைவண்மை வாய்ந்த கோமானாகிய
குதிரைகள் பூண்ட சிறந்த தேரினையுடைய பெரியன் என்பானது
11.
மலை மிசை தொடுத்த மலிந்து செலல் நீத்தம் – அகம் 126/3
மலை உச்சியினின்று தொடர்புற்று வீழ்ந்த மிக்குச் செல்லுதலையுடைய வெள்ளத்தால்,
12.
தொடுத்தும் கொள்ளாது அமையலென் – புறம் 164/10
வளைத்தாயினும் பரிசில்கொள்ளாது விடேன்
13.
தொடுத்தேன் மகிழ்ந செல்லல் – அகம் 396/1
நின்னை யான் பற்றிக்கொண்டே தலைவனே! செல்லாதே!
|
தொடுதோல் |
தொடுதோல் – (பெ) காலில் கட்டப்பட்ட தோல், செருப்பு, sandals
தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி – பெரும் 169
செருப்பு (விடாமல்)கிடந்த வடு அழுந்தின வலிய அடியினையும்
|
தொடுப்பு |
தொடுப்பு – (பெ) விதைப்பு, sowing
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய – மது 11
(ஒரே)விதைப்பில் ஆயிரமாக வித்திய விதை விளைய
|
தொடை |
தொடை – (பெ) 1. கட்டுதல், fastening, tying
2. செயலைத் தொடங்குதல், starting of an action
3. யாழ் நரம்பு, string of ‘yAzh’
4. படிக்கட்டு, step, stairs
5. கட்டுதல் உள்ள யாழின் இசை, the music from the yAzh with tight strings
6. வில்லில் அம்பினைத் தொடுத்தல், setting the arrow in a bow
7. பல பொருட்களை ஒன்றாகக் கட்டுதல், கொத்து, bunch, cluster
8. பூக்களின் கட்டுகை, பூமாலை, flower garland
9. நல்ல கட்டுதல் அமைந்த உடம்பு, well-built body
10. (முத்து)கோக்கப்பட்ட மாலை, string of pearls
11. துடை, thigh
1.
தொடை அமை மாலை விறலியர் மலைய – பெரும் 486
கட்டுதல் நன்றாக அமைந்த மாலையை ஆடும் மகளிர் சூடி நிற்ப
2.
மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம்
அரும் பொருள் அருத்தும் திருந்து தொடை நோன் தாள் – பெரும் 67,68
மலையில் உள்ளனவும், கடலில் உள்ளனவும்(ஆன) சிறந்த பயனைக் கொடுக்கும்
அரிய பொருளை (எல்லாரும்)நுகரச்செய்யும் திருத்தமான தம் வினையில் வலிய முயற்சியினையும்
3.
தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை
கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ – நெடு 68,69
குளிர்ச்சியால் நிலைகுலைந்த இனிய குரலாகிய நரம்பை,
பெரிய எழுகின்ற முலையின் வெப்பத்தால் தடவி,
4.
குறும் தொடை நெடும் படிக்கால் – பட் 142
(ஒன்றற்கொன்று)நெருக்கமாய் அமைந்த படிகளையுடைய நீண்ட ஏணிச்சட்டங்கள்
5.
திரி புரி நரம்பின் தீம் தொடை ஓர்க்கும் – பட் 254
முறுக்குதல் புரிந்த நரம்பின் இனிதாகிய கட்டினையுடைய யாழின் இசையைக் கேட்டற்குக் காரணமான
6.
துவர் செய் ஆடை செம் தொடை மறவர் – நற் 33/6
பழுப்பேறிய ஆடையையுடைய, செம்மையாக அம்பினைத் தொடுத்திருக்கும் மறவர்கள்
7.
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல
பல் வேறு பண்ட தொடை மறந்து – நற் 59/3,4
பகல்நேரத்து முயலைத் தடியால் எறிந்து பிடித்துக்கொண்டு, வரும் வேட்டுவன் தன் தோள்களில்
சுமந்துவந்த
பல்வேறு பண்டங்களின் தொகுதியை மறந்து,
8.
கணம் நாறு பெரும் தொடை புரளும் மார்பின் – நற் 254/8
கூட்டமாய் மணக்கின்ற பெரிய பூமாலை புரளுகின்ற மார்புக்கு
9
காணிலியரோ நின் புகழ்ந்த யாக்கை
முழு வலி துஞ்சும் நோய் தபு நோன் தொடை – பதி 44/8,9
– காணாமலேபோகட்டும் – உன்னைப் புகழ்ந்த யாக்கையாகிய,
மிக்க வலிமை பொருந்திய, நோயில்லாத, வலிமையாக முறுக்கேறக் கட்டப்பட்ட உடம்பினை
10.
தொகு கதிர் முத்து தொடை கலிழ்பு மழுக – பரி 6/16
திரண்ட ஒளியினையுடைய முத்து வடங்கள் சந்தனப்பூச்சால் கலங்கி ஒளிமங்கித் தெரிய,
11.
கொடும் தொடை குழவியொடு வயின் மரத்து யாத்த
கடுங்கண் கறவையின் சிறுபுறம் நோக்கி – அகம் 49/4,5
வளைந்த தொடையினை உடைய கன்றுடன் மரத்தில் கட்டப்பெற்ற
ஆசைமிக்க பசுவைப் போல, (அவள்) முதுகினைப் பார்த்து,
|
தொடையல் |
தொடையல் – (பெ) 1. தொடர்ச்சி, continuation
2. (பூச்)சரம், string (of flowers)
1.
ஆய் தினை அரிசி அவையல் அன்ன
கேள்வி போகிய நீள் விசி தொடையல்
மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன – பொரு 17-19
ஆய்ந்தெடுத்த தினை அரிசியின் குற்றலைப் போன்ற
(யாழ் நரம்பின் குற்றமாகிய)வேய்வை போக விரலால் அசைக்கும் நரம்பின்
இசை முற்றுப்பெறுமாறு இழுத்துக்கட்டிய விசித்தலையுடைய தொடர்ச்சியையும்
2.
தண் நறும் தொடையல் வெண் போழ் கண்ணி – குறி 115
தண்ணிய நறிய மலர்ச்சரங்களையும், வெண்மையான தாழைமடல் தலைமாலையினையும்,
|
தொட்ட |
தொட்ட – (வி.எ) தொடு என்பதன் பெயரெச்சம்
1. தொட்ட – தீண்டிய, touched
நெய்த்தோர் தொட்ட செம் கை மறவர் – பதி 49/10
இரத்தத்தைத் தொட்டதால் சிவந்த கையையுடைய மறவர்களின்
2. தொட்ட – தோண்டிய, dug, scooped out
கலை கை தொட்ட கமழ் சுளை பெரும் பழம் – குறு 342/1
ஆண்குரங்கு கையால் தோண்டிய கமழ்கின்ற சுளையைக் கொண்ட பெரிய பலாப்பழத்தை
3. தொட்ட – வெட்டிய, கத்தரித்த, scissored
எஃகு இடை தொட்ட கார் கவின் பெற்ற ஐம்பால் போல் – கலி 32/1
கத்தரிக்கோலால் இடையிடையே வெட்டப்பட்ட கார்மேகத்தின் அழகினைப் பெற்ற கூந்தலைப் போல்
4. தொட்ட – தரித்த, அணிந்த, put on as a ring or dress
சிறு பட்டி ஏதிலார் கை எம்மை எள்ளுபு நீ தொட்ட
மோதிரம் யாவோ யாம் காண்கு – கலி 84/20,21
விருப்பம்போல் திரிபவனே! அந்தப் பரத்தையரின் கையிலுள்ளதை, என்னை இகழும்படியாக நீ
அணிந்திருக்கும்
மோதிரங்கள் எவை? நான் பார்க்கிறேன்!
5. தொட்ட – துளைத்த, pierced
தொட்ட தம் புண் வார் குருதியால் கை பிசைந்து மெய் திமிரி
தங்கார் பொதுவர் – கலி 106/23,24
துளைபட்ட தம் புண்ணிலிருந்து ஒழுகுகின்ற குருதியைக் கையால் துடைத்து, உடம்பிலும்
தடவிக்கொண்டு,
சற்றும் தாமதிக்காமல் அந்த இடையர்,
6. தொட்ட – தொடுத்த, செலுத்திய , discharged
நகை வல்லேன் யான் என்று என் உயிரோடு படை தொட்ட
இகலாட்டி நின்னை எவன் பிழைத்தேன் எல்லா யான் – கலி 108/6,7
எள்ளி நகைக்கத்தக்கவன் நான் என்று என் உயிர்போகும்படி காமக்கணைகளைத் தொடுத்த
கொடுமையுடையவளே! உனக்கு என்ன பிழைசெய்தேன், பெண்ணே! நான்?
7. தொட்ட – ஆணையிட்ட, swore
பரிவு தர தொட்ட பணிமொழி நம்பி – நற் 378/10
அன்பு மிகும்படி ஆணையிட்டுக்கூறிய மெல்லிய சூளுரையை மெய்யென விரும்பிக்கொண்டு
|
தொட்டு |
தொட்டு – 1. (வி.எ) தொடு என்பதன் இறந்த கால வினையெச்சம்
– 2 (இ.சொ) தொடங்கி, முதலாக, beginning with
1.1. தொட்டு – தோண்டி, digging
கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை – திரு 53
கண்களைத் தோண்டி உண்ணப்பட்ட மிக்க முடை நாற்றத்தையுடைய கரிய தலையை
1.2 தொட்டு – வாத்தியங்களை வாசித்து, – playing musical instruments
கயம் குடைந்து அன்ன இயம் தொட்டு இமிழ் இசை – மது 363
குளத்தைக் கையால் குடைந்தது போன்று இசைக்கருவியங்களை இயக்க எழும் இசைகேட்டு
1.3 தொட்டு – கட்டி, பிணித்து, fastening
மட மதர் உண்கண் கயிறு ஆக வைத்து
தட மென் தோள் தொட்டு தகைத்து – பரி 20/55,56
இணக்கமுள்ள செழித்த மையுண்ட கண்களைக் கயிறாகக் கொண்டு,
தன் பெரிய மென்மையான தோள்களாகிய கட்டுத்தறியிலே கட்டி, நிறுத்தி
1.4 தொட்டு – தீண்டி, touching
தலையினால் தொட்டு உற்றேன் சூள் – கலி 108/56
தலையினால் தொட்டு உறுதியாகச் சொல்கிறேன்
2.
பிறந்து தவழ் கற்றதன் தொட்டு சிறந்த நன்
நாடு செகில் கொண்டு நாள்தொறும் வளர்ப்ப – பொரு 137,138
பிறந்து தவழ்தலைக் கற்ற நாள் தொடங்கி, சிறந்த நல்ல
நாட்டை(த் தன்) தோளில் வைத்துக்கொண்டு, (அதனை)நாள்தோறும் வளர்த்தலால்,
|
தொண்டகச்சிறுபறை |
தொண்டகச்சிறுபறை – (பெ) தொண்டகப்பறையின் சிறிய வடிவம், a minor version of ‘tondakappaRai’
சிறுதினை விளைந்த வியன் கண் இரும் புனத்து
இரவு அரிவாரின் தொண்டக_சிறுபறை
பானாள் யாமத்தும் கறங்கும் – குறு 375/3-5
சிறுதினை விளைந்த அகன்ற இடமுடைய பெரிய தினைப்புனத்தில்
இரவில் கதிரறுப்பாரைப் போன்று தொண்டகச் சிறுபறை
நள்ளிரவான நடுச்சாமத்திலும் ஒலித்துக்கொண்டிருக்கும்
|
தொண்டகப்பறை |
தொண்டகப்பறை – (பெ) குறிஞ்சிநிலப் பறை, a drum used by kuRinjci tract people
தொண்டக_பறை சீர் பெண்டிரொடு விரைஇ
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து – அகம் 118/3,4
தொண்டகம் என்னும் பறையின் தாளத்திற்கு இசைய பெண்டிரோடு கலந்து
தெருக்களில் ஆடும் எமது சிறுகுடிப்பாக்கத்தின்கண்ணே
|
தொண்டி |
தொண்டி – (பெ) சேரர் துறைமுகப்பட்டினம், An ancient sea-port of the cheras
திண் தேர் பொறையன் தொண்டி – நற் 8/9
திண்ணிய தேரைக்கொண்ட பொறையனாகிய சேரமானின் தொண்டிப் பட்டினத்து
|
தொண்டு |
தொண்டு – (பெ) ஒன்பது, nine
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என – பரி 3/79
ஆறாவதான மனத்தைச் சேர்த்த அறிகருவிகள் ஆறும், ஏழாவதான ஆணவமும்,
எட்டாவதான புத்தியும், ஒன்பதாவதான மூலப்பகுதியும்,
|
தொத்து |
தொத்து – (பெ) பூ முதலியவற்றின் கொத்து, Cluster, bunch, as of flowers
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் கூவிளம் – குறி 65
(தனக்கே)உரித்தாக மணக்கும் விரிந்த கொத்தினையுடைய பெருமூங்கிற்பூ, வில்லப்பூ
|
தொன்று |
தொன்று – 1. (வி.அ) நெடுங்காலமாக, வழிவழியாக, for a long time, from the ancient times
2. (பெ) பழமை, antiquity, ancientness
1.
இன்று என் நெஞ்சம் போல தொன்று நனி
வருந்து-மன் அளிய தாமே
———————————————————
துறைவன் மாவே – நற் 163/6-12
இப்பொழுது என்னுடைய நெஞ்சம் போல, நெடுங்காலமாக மிகவும்
வருந்தின; மிகவும் இரங்கத்தக்கன அவை;
—————————————————–
தலைவனுடைய தேர்க்குதிரைகள்
குட முதல் தோன்றிய தொன்று தொழு பிறையின் – மது 193
மேல் அடிவானத்தில் காணப்படும் வழிவழியாகத் தொழுதுவரும் பிறையைப் போல
2.
தொன்று மொழிந்து தொழில் கேட்ப – மது 72
(தத்தம்)பழைமையான தொடர்புகளைக் கூறி, ஏவிய வழி ஒழுக
|
தொன்றுபடு |
தொன்றுபடு – (பெ.அ) பழமையான, நெடுங்காலமாக இருந்து வருகின்ற, நாட்பட்ட,
ancient, belonging to times long past
உயிர் கலந்து ஒன்றிய தொன்றுபடு நட்பின் – அகம் 205/1
உயிருடன் கலந்துபொருந்திய பல பிறவிகளிலும் தொடர்ந்து வருகின்ற நட்பினால்
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்று-கொல் – அகம் 101/3
தொன்றுதொட்டு வழங்கும் பழமொழி இன்று பொய்யாகியதோ?
தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கி – புறம் 393/16
பழமையுற்றுக் கிழிந்து பிளவுபட்ட என் பீறிய உடையை முற்றவும் நீக்கி
|
தொய் |
தொய் – (வி) 1. கெடு, அழி, perish, be ruined
2. சோர்வடை, தளர்ந்துபோ, be weary, fatigued
3. உழு, plough
1.
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ
செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து – பெரும் 434,435
கெடாத திரைப்பொருளோடு நெருங்கித் திரண்டு,
(பொருந்திய)நேரம் பார்க்கும் வளவிய முற்றத்தினையுடைய;
2.
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே – அகம் 246/14
அழுந்தூர்க்கண் எழுந்த சோர்வடையாத ஆரவாரத்திலும் பெரிது.
3.
தொய்யாது வித்திய துளர் படு துடவை – மலை 122
உழாமல் விதைக்கப்பட்டு, களைக்கொட்டுகளால் கொத்தப்பட்ட தோட்டங்களில்
|
தொய்யகம் |
தொய்யகம் – (பெ) தலையில் அணியும் ஓர் ஆபரணம், A part of head ornament
தொய்யகம் தாழ்ந்த கதுப்பு போல் – கலி 28/6
தலைக்கோலம் என்ற அணியைத் தாழ்வாக அணிந்த கூந்தலைப் போல்
|
தொய்யல் |
தொய்யல் – (பெ) தொய்வு, நெகிழ்வு, laxity, looseness
தொய்யல் அம் தட கையின் வீழ் பிடி அளிக்கும்
மையல் யானையின் மருட்டலும் மருட்டினன் – கலி 54/13,14
நெகிழ்வுற்ற தன் அழகிய பருத்த கைகளால், தான் விரும்பும் பெண்யானையைத் தடவிக்கொடுக்கும்
மையல் கொண்ட யானையைப் போல் எனக்கு மயக்கத்தையும் ஊட்டினான்;
|
தொய்யில் |
தொய்யில் – (பெ) 1. பெண்களின் மார்பிலும்,தோளிலும் கோலம் எழுதும் சந்தனக்குழம்பு,
Solution of sandal for drawing figures on the breast and shoulders of women
2. பெண்களின் மார்பிலும்,தோளிலும் சந்தனக்குழம்பினால் எழுதும் கோலம் ,
figures drawn on the breast and shoulders of women with a sandal solution
3. ஒரு நீர்க்கொடி, a water spinach
1.
தொய்யில் பொறித்த சுணங்கு எதிர் இள முலை – மது 416
தொய்யிலால் பொறிக்கப்பட்ட சுணங்கு தோன்றின இளைய முலைகளையும்
2.
தொய்யில் இள முலை இனிய தைவந்து – கலி 54/12
தொய்யில் வரைந்த என் இளமையான முலைகளை இனிதாகத் தடவிக்கொடுத்து
3.
துணி நீர் மெல் அவல் தொய்யிலொடு மலர – மது 283
தெளிந்த நீரையுடைய நெகிழ்ந்த பள்ளத்தில் தொய்யில் கொடியோடே மலர
|
தொறு |
தொறு – (பெ) பசுக்கூட்டம், herd of cows
தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும் – பதி 13/1
பசுக்கூட்டங்கள் கிடைபோட்ட வயல்வெளிகளில் ஆரல்மீன்கள் துள்ளிவிளையாடவும்
|
தொலை |
தொலை – (வி) 1. அழி, இற, perish, die
2. காணாமல் போ, be lost
3. தீர்ந்துபோ, be exhausted
4. வருந்து, suffer
5. தோல்வியடை, be defeated
6. அழி, இல்லாமல் செய், destroy
7. கொல், kill
8. காணாமற்போக்கு, cause tobe lost
9. தோல்வியடையச் செய், defeat, vanquish
1.
பொருது தொலை யானை கோடு சீர் ஆக – மலை 154
(தம்மில்)போர்செய்து இறந்த யானைகளின் தந்தங்கள் காவுத்தண்டாக,
2.
தொல் கவின் தொலையினும் தொலைக – நற் 350/5
பழைய அழகு காணாமற்போனாலும் போகட்டும்;
3.
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
இரவல் மாக்களுக்கு ஈய தொலைந்தன – புறம் 328/3,4
வரகும் தினையும் என உள்ளவை எல்லாம்
இரவலர்க்குக் கொடுத்ததனால் தீர்ந்து போயின
4.
பாஅல் இன்மையின் பல் பாடு சுவைத்து
முலை கோள் மறந்த புதல்வனொடு
மனை தொலைந்திருந்த என் வாள்_நுதல் படர்ந்தே – புறம் 211/20-22
பால் இல்லாமையால் பலமுறை சுவைத்து
மார்பின்கண் உண்ணுதலை வெறுத்த பிள்ளையோடு
வீட்டில் வறுமையினால் வருந்தியிருக்கும் ஒளிபொருந்திய நெற்றியையுடைய என் மனைவியை நினைந்து
5.
போர் தொலைந்து இருந்தாரை பாடு எள்ளி நகுவார் போல் – கலி 120/14
போரில் தோற்றுப்போனவர்களைப் பார்த்து அவரின் தோல்வியைக் குறிப்பிட்டு எள்ளி நகையாடுவார் போல
6.
கடி அரண் தொலைத்த கதவு கொல் மருப்பின் – பட் 229
காவலையுடைய அரண்களை அழித்த (கோட்டைக்)கதவை முறிக்கும் கொம்பினையும்
7.
இரும் புலி தொலைத்த பெரும் கை யானை – நற் 353/9
பெரிய புலியைக் கொன்ற பெரிய துதிக்கையையுடைய யானை
8.
பொன் போல் விறல் கவின் தொலைத்த
குன்ற நாடற்கு அயர்வர் நன் மணனே – ஐங் 230/4,5
பொன்னைப் போன்ற வெற்றிசிறந்த உன் அழகைக் காணாமற்போக்கிய
குன்றினையுடைய நாடனுக்கே உன்னைக் கொடுப்பர், நல்மணம் முடித்து
9.
அரி தேர் நல்கியும் அமையான் செரு தொலைத்து
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஒழித்த
விசும்பு செல் இவுளியொடு பசும் படை தரீஇ – பெரும் 490-492
பொன் (வேய்ந்த)தேரைத் தந்தும் மனநிறைவு கொள்ளானாய், போர்களை மாளப்பண்ணி
(தன் ஏவலைப்)பொருந்தாத பகைவர் புறமுதுகிட்டவிடத்தே விட்டுப்போன
விண்(ணுக்குச்) செல்(வது போல் முன் கால்களைத் தூக்கும்)குதிரைகளுடன் பசிய சேணமும் தந்து,
|
தொலைச்சு |
தொலைச்சு – (வி)
1. செலுத்து, pay as debt or price
2. தீர்த்துவிடு, exhaust
3. அழி, இல்லாமல்செய், cause to perish
4. கொல், kill
1.
கேளா மன்னர் கடி புலம் புக்கு
நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி
இல் அடு கள் இன் தோப்பி பருகி – பெரும் 140-142
(தன் சொல்)கேளாத மன்னருடைய காவலமைந்த நிலத்தே சென்று,
விடியற்காலத்து (அவர்கள்)பசுக்களைப் பற்றிக் கொணர்ந்து, (அவற்றைக்)கள்ளுக்கு விலையாகச் செலுத்தி
(தமது)இல்லில் சமைத்த கள்ளுக்களில் இனிதாகிய நெல்லால் செய்த கள்ளை உண்டு,
2.
நீல பைம் குடம் தொலைச்சி நாளும் – பெரும் 382
நீலநிறம் அமைந்த தோல் பையிலுள்ள கள்ளை முற்றாக உண்டு தீர்த்து
3
கடி காவின் நிலை தொலைச்சி – மது 153
காவலையுடைய பொழில்களின் நிலையை அழித்து
4.
ஓய் பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி – நற் 43/3
மிகுந்த பசியையுடைய செந்நாய் மெலிந்த மரை என்னும் மானைக் கொன்று
|
தொலைபு |
தொலைபு – 1. (வி.எ) செய்பு எனும் வாய்பாட்டு வினையெச்சம், verbal partciple
– 2. (பெ) தோல்வியடைதல், getting defeated
1.
தொல் நலம் தொலைபு ஈங்கு யாம் துயர் உழப்ப துறந்து உள்ளார் – கலி 16/5
என்னுடைய பண்டை அழகெல்லாம் தொலைய, இங்கு நான் துயர்ப்படும்படி, நம்மைத் துறந்து சென்றவர்
2.
படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ் – பெரும் 398
(பகைவரின்)படையின்கண் தோல்வியடைதலை அறியாத வலிமை மிகுகின்ற பெரிய புகழின்
|
தொலைவு |
தொலைவு – (பெ) 1. தீர்ந்துவிடல், becoming exhausted
2. தோல்வியடைதல் getting defeated
3. சிதைந்துவிடல், getting perished
1.
தொலைவு ஆகி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – கலி 2/11
இருக்கும் செல்வம் தீர்ந்துவிட்டதால், இனி கேட்பவர்க்கு ஒன்றுமே கொடுக்க முடியாதிருப்பது
இழிவு என்று எண்ணி
2.
தொலைவு இல் வெள் வேல் விடலையொடு என் மகள்
இ சுரம் படர்தந்தோளே – அகம் 7/12,13
தோல்வியையே அறியாத வெள்ளிய வேலை உடைய இளங்காளையொடு என் மகள்
இந்த வழியே சென்றுவிட்டாள்;
3.
மா மலை நாட மருட்கை உடைத்தே
செம் கோல் கொடும் குரல் சிறுதினை வியன் புனம்
கொய் பதம் குறுகும்_காலை எம்
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே – நற் 57/7-10
பெரிய மலைநாடனே! என் மனம் மருட்சியடைகின்றது,
நிமிர்ந்த தண்டினையும் வளைந்த கதிர்களையும் கொண்ட சிறுதினையின் அகன்ற கொல்லைக்காடு
கதிர் அறுக்கும் பருவத்தை அடையும் இந்த நேரத்தில், எமது
கருத்த நெய்ப்பசையுள்ள கூந்தலைக்கொண்டவளின் சிறப்பு மிக்க நலம் சிதைந்துவிடுமே என்று
|
தொல்லை |
தொல்லை – (பெ) பழையது, that which is old
வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை
முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி – பெரும் 98,99
சில்லூற்றாகிய உவரிநீரை முகந்துகொண்டு, பழைய
விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான வாயையுடைய பானையில் வார்த்த உலையை
முரிந்த அடுப்பிலே ஏற்றி,
|
தொல்லோர் |
தொல்லோர் – (பெ) முன்னோர், forefathers
கொடை கடன் இறுத்த அவன் தொல்லோர் வரவும் – மலை 89
கொடை என்னும் தம் கடமையை ஆற்றிய அவனது முன்னோர் வரலாற்றையும்
|
தொளி |
தொளி – (பெ) சேறு, mud
உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர் – பெரும் 211
(தம்மால்)உழப்படாத (அந்த)நுண்ணிய சேற்றை(க் காலால் சமப்படுத்திய)உழவர்
|
தொள்ளை |
தொள்ளை – (பெ) 1. துளை, hole, perforation
2. சிறு குழி, pit
1.
புல் அரை இருப்பை தொள்ளை வான் பூ – அகம் 149/3
புல்லிய அடிமரத்தைக்கொண்ட இருப்பை மரத்தில் துளை பொருந்திய வெள்ளிய பூவை
2.
தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின் – புறம் 333/5
குழிகள் பொருந்திய மன்றத்துக்குச் சென்றால்
|
தொழு |
தொழு -1. (வி) கடவுளை வழிபடு, வணங்கு, pray, worship
-2. (பெ) தொழுவம், மாடுகளை அடைக்கும் இடம், cattle-stall
1.
குட முதல் தோன்றிய தொன்று தொழு பிறையின் – மது 193
மேல் அடிவானத்தில் காணப்படும் வழிவழியாகத் வழிபட்டுவரும் பிறையைப் போல
மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும் – பட் 160
மலர் அணிந்த (கோயில்)வாசலில் (கட்டின) பலரும் வணங்கும் கொடிகளும்
2.
அத்த கள்வர் ஆ தொழு அறுத்து என
பிற்படு பூசலின் வழிவழி ஓடி – அகம் 7/14,15
வழிப்பறிக் கள்வர்கள் பசுக்கள் தொழுவை உடைத்துக் கொண்டுசென்றனவாக,
அவற்றின் பின்னே துரத்திச்செல்வோர் ஆரவாரிப்பது போல, அங்குமிங்கும் ஓடி
|
தொழுதி |
தொழுதி – (பெ) 1. மனிதக் கூட்டம், crowd, multitude
2. விலங்குகளின் கூட்டம், மந்தை, herds
3. பறவைகளின் கூட்டம், flock of birds
4. பொருள்களின் கூட்டம், collection
1.
வேல் ஈண்டு தொழுதி இரிவு_உற்று என்ன – மலை 116
வேல்களோடு நெருக்கமாக (வந்த வேற்படையாகிய)கூட்டம் தோற்றோடியதைப் போன்று,
2.
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டி – அகம் 109/4
தம் கொம்பால் பகையானவற்றைக் குத்தி உழும் களிற்றியானைகளின் கூட்டம் கூட
3.
பைம் கால் கொக்கின் மென் பறை தொழுதி – நெடு 15
இளமையான காலையுடைய கொக்கின் (அங்குமிங்கும்)மெதுவாகப் பறந்துதிரியும் கூட்டம்
4.
கை தோய்வு அன்ன கார் மழை தொழுதி
தூஉ அன்ன துவலை துவற்றலின் – மலை 362,363
கையால் எட்டித்தொடமுடியும் என்பதைப் போன்ற கார்காலத்து மேகக் கூட்டம்,
தூவுவதைப் போன்று நீர்த் திவலைகளை வீசியடிப்பதால்,
தீம் சுளை பலவின் தொழுதி உம்பல்
பெரும் காடு இறந்தனராயினும் – அகம் 357/9,10
இனிய சுளைகளையுடைய பலா மரத்தின் கூட்டத்தையுடைய உம்பல்
பெரும் காட்டை கடந்து சென்றுளாராயினும்
|
தொழுநை |
தொழுநை – (பெ) யமுனை ஆறு, the river Jamuna
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை – அகம் 59/4
வளமிக்க நீருள்ள யமுனை ஆற்றின் நீண்ட மணலையுடைய அகன்ற துறையில்
|
தொழுமகளிர் |
தொழுமகளிர் – (பெ) ஏவல்மகளிர், servant maids
சிறு தொழுமகளிர் அஞ்சனம் பெய்யும் – ஐங் 16/2
சிறுமியரான ஏவல் மகளிர் கண்மையையை இட்டுவைத்திருக்கும்
|
தொழுவம் |
தொழுவம் – (பெ) பார்க்க தொழு – 2. (பெ) தொழு
பல் ஆன் தொழுவத்து ஒரு மணி குரலே – குறு 190/7
பல பசுக்கள் கொண்ட கொட்டிலிலுள்ள ஒரு மணியின் குரலை
|
தொழுவர் |
தொழுவர் – (பெ) 1. வீட்டு வேலை செய்பவர், servants
2. தொழிலாளிகள், labourers
1.
கடி உடை வியல் நகர் சிறு குறும் தொழுவர்
கொள் உறழ் நறும் கல் பல கூட்டு மறுக – நெடு 49,50
காவலையுடைய அகன்ற மனைகளில் சிறியராகிய குற்றேவல் வினைஞர்,
கருங்கொள்ளின் நிறத்தை ஒத்த நறுமண அம்மியில் பலவித நறுமணப்பெருள்களை அரைக்க;
2.
நீர் தெவ்வு நிரை தொழுவர்
பாடு சிலம்பும் இசை ஏற்றத்தோடு – மது 89,90
நீரினை முகக்கும் (ஏற்றத்தில்)வரிசையாய் நிற்கும் தொழிலாளர்கள்
பாடுதலால் ஒலிக்கும் இசையும், ஏற்றத்(தோடு)
நெல் அரி தொழுவர் கூர் வாள்_உற்று என – நற் 195/6
நெற்கதிர் அறுக்கும் தொழிலாளர்களின் கூரிய அரிவாளால் அறுபட்டதனால்
|
தொழுவை |
தொழுவை – (பெ) சுனை, பொய்கை, mountain spring, pond, pool
துயில் இன்றி யாம் நீந்த தொழுவை அம் புனல் ஆடி – கலி 30/5
துயில் இன்றி நான் இரவைக் கழிக்க, நீர்நிலைகளில் இனிமையாக நீர்விளையாட்டு ஆடி
|
தோகை |
தோகை – (பெ) 1. மயில்பீலி, tail of a peacock
2. மயில், peacock
3. நெல், கரும்பு ஆகியவற்றின் தாள், Sheath, as of paddy or sugarcane
4. விலங்கின் வால், Tail of an animal
1.
விசும்பு இழி தோகைசீர் போன்றிசினே
—————————————————————–
பண்ணை பாய்வோள் தண் நறும் கதுப்பே – ஐங் 74/1-4
வானத்திலிருந்து இறங்கும் மயிலின் தோகை அழகைப் போல இருந்தது
——————————————————————-
நீருக்குள் பாய்பவளின் குளிர்ந்த நறிய கூந்தல்
2.
மேக்கு எழு பெரும் சினை இருந்த தோகை
பூ கொய் மகளிரின் தோன்றும் நாடன் – குறு 26/2,3
மேலே எழும் பெரிய கிளையில் இருந்த மயில்
பூக் கொய்யும் மகளிரைப் போல் தோன்றும் நாட்டையுடைய தலைவன்
3.
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல் ஈன் கவை முதல் அலங்கல் – அகம் 13/18,19
தீக்கொழுந்துகளைப் போன்ற தோடுகள் ஈன்ற
வயற்காட்டு நெல்லின் கவைத்த அடியைக் கொண்ட நெற்கதிர்
4.
வை எயிற்று
வலம் சுரி தோகை ஞாளி மகிழும் – அகம் 122/7,8
கூரிய பல்லினையும்
வலமாகச் சுரிதலுடைய வாலினையுமுடைய நாய் குரைக்கும்
|
தோடு |
தோடு – (பெ) 1. தென்னை,பனை ஆகியவற்றின் இலை, coconut tree pr palm leaf
2. நெல், கரும்பு ஆகியவற்றின் தாள், sheath of paddy, sugarcane etc.,
3. பூவிதழ்கள், flower petals
4. தொகுதி, கூட்டம், திரள், collection. assemlage, multitude
5. பூ, flower
6. காதணி, ear stud for women
1.
வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை – பெரும் 353,354
வளவிய தோட்டினையுடைய தென்னை மரத்தின் வற்றிய மடலினை வேய்ந்த,
மஞ்சளையுடைய முற்றத்தினையும் மணல் கமழ்கின்ற சுற்றுப்புறங்களையும் உடைய
2.
வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க – நெடு 22
வளப்பமான தாள்களையுடைய நெல்லிலிருந்து மேலெழுந்த கதிர் (முற்றி)வளைய;
3.
தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப – முல் 96
இதழ்கள் நிறைந்த தோன்றி உதிரம் போல பூப்பவும்
4.
நோன் சினை இருந்த இரும் தோட்டு புள்_இனம் – குறு 191/2
வலிய கிளையில் இருந்த பெரிய கூட்டமான பறவையினம்
5, 6
தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார்க்கண்
தோடு உற தாழ்ந்து துறை_துறை கவின் பெற – கலி 28/3,4
மலர்ந்த பூக்கள் மணக்கும் மாலைகளைக் கட்டிச் சூடிக்கொள்வாருக்காக,
அவர்களின் காதணிகளைத் தொடுமாறு மலர்க்கொத்துக்கள் தாழ்ந்து துறைகள்தோறும் அழகு செய்ய
|
தோட்டி |
தோட்டி – (பெ) 1. கதவு, door
2. காப்பு, காவல், watch, guard
3. அங்குசம், Elephant hook or goad
4. ஆணை, authority
5. வனப்பு, அழகு, loveliness, beauty
1.
நாடு உடை நல் எயில் அணங்கு உடை தோட்டி – மது 693
அகநாட்டைச் சூழவுடைத்தாகிய நன்றாகிய அரண்களில் இட்ட வருத்தத்தையுடைய கதவுகளும்
2.
நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா – பதி 25/5
நீ பகைத்து மேற்சென்றவரின் பெரிய மதில்கள் காப்புகளை இழந்தன
3, 4.
எயில் முகம் சிதைய தோட்டி ஏவலின்
தோட்டி தந்த தொடி மருப்பு யானை – பதி 38/5,6
பகைவரின் கோட்டை மதிலின் முகப்பு சிதையும்படியாக அங்குசத்தால் குத்தி ஏவுதலினால்,
அந்த நாட்டின் ஆளுமையை உனக்கே பெற்றுத்தந்த பூண் அணிந்த தந்தங்களைக் கொண்ட யானைப்படையையும்
5
வண்டு பொரேரென எழும்
கடி புகு வேரி கதவம் இல் தோட்டி- பரி 23/31,32
வண்டுகள் திடுமென மேலே எழும் –
மணம் பொருந்திய தேன் நிரம்பிய மலர்மாலைகளில் மறைவின்றி மொய்த்திருந்த அழகு மிக்க (அந்த வண்டுகள்)
|
தோண்டு |
தோண்டு – (வி) 1. அகழ், குழி பறி, dig, excavate
2. குடைந்தெடு, scoop out
3. பாரத்தை இறக்கு, to unload, as a ship
1.
ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தல் – நற் 240/8
பசுக்களை நடத்திச்செல்பவர்கள் பறித்த குழிவான பள்ளத்தின் நீரை
2.
ஏறு தம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரி குடர் – கலி 106/26
காளைகள், தம்முடைய அலங்கரிக்கப்பட்ட கொம்புகளால் குத்திக்குடைந்தெடுத்த கொத்தான குடல்களை
3.
மீ பாய் களையாது மிசை பரம் தோண்டாது
புகாஅர் புகுந்த பெரும் கலம் – புறம் 30/12,13
மேலே இருக்கும் பாயை மடக்காமல், மேல் பாரத்தையும் இறக்காமல்
ஆற்றுமுகத்தில் புகுந்த பெரிய மரக்கலத்தை
|
தோன்றல் |
தோன்றல் – (பெ) 1. தோன்றுதல், தோற்றம், appearance
2. தலைவன், chief, great person
3. முல்லைநில(க் காதல்)தலைவன், chief of the jungle tract
1.
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே – அகம் 1/19
கடலின் கரையகம் போலத் தோன்றுதலையுடைய காட்டினைக் கடந்துசென்ற நம் தலைவர்.
2.
கனவு என மருள வல்லே நனவின்
நல்கியோனே நசை சால் தோன்றல்
ஊழி வாழி பூழியர் பெருமகன் – புறம் 387/26-28
கனவென்று மயங்குமாறு விரைவாக நனவின்கண்
நல்கினான் அன்பு நிறைந்த தலைவன்
பூழி நாட்டார்க்குப் பெருந்தலைவன்
3.
பாலுடை அடிசில் தொடீஇய ஒருநாள்
மா வண் தோன்றல் வந்தனை சென்மோ – அகம் 394/11,12
பால் பெய்த உணவினை உண்ணுதற்கு ஒருநாள்
மிக்க வண்மையையுடைய தலைவனே, நீ வந்துவிட்டுச் செல்வாயாக!
|
தோன்றி |
தோன்றி – 1. (வி.எ) தோன்று என்ற வினைச்சொல்லின் வினையெச்சம், appear
2. செங்காந்தள், malabar glory lily
3. ஒரு மலை, a mountain
1.
தொழுது காண் பிறையின் தோன்றி யாம் நுமக்கு
அரியம் ஆகிய_காலை
பெரிய நோன்றனீர் நோகோ யானே – குறு 178/5-7
தொழுது காணும் பிறையைப் போல உமக்குத் தோன்றி, நாம் உமக்கு
அரியவளாய் இருந்த பொழுதில்
பெரிதான வருத்தத்தைப் பொறுத்துக்கொண்டிருந்தீரோ? வருந்துகிறேன் நான்
2.
குவி இணர் தோன்றி ஒண் பூ அன்ன – குறு 107/1
குவிந்த கொத்தான செங்காந்தளின் ஒளிவிடும் பூவைப் போல
3.
வான் தோய் உயர் சிமை தோன்றி கோவே – புறம் 399/3
வானளாவ உயர்ந்த உச்சியையுடைய தோன்றிமலைக்குத் தலைவனே!
|
தோப்பி |
தோப்பி – (பெ) நெல்லிலிருந்து தயாரிக்கப்பட்ட மது, beer
இல் அடு கள் இன் தோப்பி பருகி – பெரும் 142
(தமது)இல்லில் சமைத்த கள்ளுக்களில் இனிதாகிய நெல்லால் செய்த கள்ளை உண்டு,
|
தோமரம் |
தோமரம் – (பெ) தண்டாயுதம், a large club
தோமர வலத்தர் நாமம் செய்ம்-மார் – பதி 54/14
வலக்கையில் தண்டினை ஏந்தியவராய், போரினைச் செய்வதற்காக,
|
தோயல் |
தோயல் – (பெ) தொடுதல், touching
கை தோயல் மாத்திரை அல்லது செய்தி
அறியாது அளித்து என் உயிர் – கலி 110/18,19
உன்னைத் தொட்டது மட்டுமேயன்றி, வேறு ஒரு செயலையும்
அறியாது இந்த இரங்கத்தக்க எனது உயிர்;
|
தோய் |
தோய் – (வி) 1. எட்டு, கிட்டு, reach, approach
2. நனை, dip, soak
3. பொருந்து, படிந்திரு, come in contact with
4. செறிந்திரு, be dense
5. அணை, embrace, unite
6. ஆடையை வெளு, wash, cleanse the cloth
7. நனை, ஈரமாகு, become wet, be soaked
8. மூழ்கு, get immersed
1.
வான் தோய் மாடத்து வரி பந்து அசைஇ – பெரும் 333
வானத்தை எட்டுகின்ற மாடத்திகண், நூலால் வரிதலையுடைய பந்தையடித்து இளைத்து,
2.
இரும்பு செய் கொல்லன் வெம் உலை தெளித்த
தோய் மடல் சில் நீர் போல – நற் 133/9,10
இரும்புவேலை செய்கின்ற கொல்லனின் வெப்பமான உலையில் தெளித்த
பனைமடலில் தோய்த்த சிறிதளவு நீரைப் போல
3.
படு நீர் சிலம்பில் கலித்த வாழை
கொடு மடல் ஈன்ற கூர் வாய் குவி முகை
ஒள் இழை மகளிர் இலங்கு வளை தொடூஉம்
மெல் விரல் மோசை போல காந்தள்
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப – நற் 188/1-5
நீர் வளமுடைய மலைச்சரிவில் செழித்து வளர்ந்த வாழையின்
வளைந்த மடல்கள் ஈன்ற கூரிய வாயையுடைய குவிந்த மொட்டு
ஒளிரும் இழையணிந்த மகளிரின் ஒளிவிடும் வளையல்களைத் தொடுகின்ற
மெல்லிய விரல்களிலுள்ள மோதிரம் போல, காந்தளின்
வளமையான இதழ்களில் படிந்திருக்கும், வானத்தை எட்டும் மலைநாட்டினனே
4.
சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர் – நற் 191/1
சிறிய பூக்களைக் கொண்ட ஞாழலின் தேன் செறிந்திருந்த ஒளிரும் பூங்கொத்துக்கள்
5.
துறைவன்
மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே – நற் 199/10,11
தலைவனின்
உடம்பை அணைத்து முயங்கும் முயக்கத்தைப் பெறாதபோது –
6.
வறன் இல் புலைத்தி எல்லி தோய்த்த
புகா புகர் கொண்ட புன் பூ கலிங்கமொடு – நற் 90/3,4
வறுமை இல்லாத சலவைப்பெண், பகலில் வெளுத்த
சோற்றின் பழுப்புநிறக் கஞ்சி இட்ட சிறிய பூக்களைக் கொண்ட ஆடையுடன்
7.
பெரும் கடல் பரப்பின் இரும் புறம் தோய
சிறு_வெண்_காக்கை பல உடன் ஆடும் – நற் 231/3,4
பெரிய கடற் பரப்பில் தமது அகன்ற முதுகு நனையுமாறு
சிறிய வெண்ணிறக் கடற்காக்கைகள் பலவும் சேர்ந்து நீராடும்
8.
தெளிந்த கழியில்
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும்
புள்ளு நிமிர்ந்து அன்ன பொலம் படை கலி_மா – நற் 78/7-9
தெளிந்த கழியில்
பெரிதாக அமையப்பெற்ற சக்கரப் பட்டையின் மேல் விளிம்பு அமுங்கப்பெறினும்
பறவைகள் எழுந்து பறந்தாற்போன்ற பொன்னால் செய்யப்பட்ட கலன்களைக் கொண்ட செருக்குள்ள குதிரை
|
தோய்வு |
தோய்வு – (பெ) எட்டித்தொடுதல், reaching and touching
கை தோய்வு அன்ன கார் மழை தொழுதி – மலை 362
கையால் எட்டித்தொடமுடியும் என்பதைப் போன்ற கார்காலத்து மேகக் கூட்டம்,
|
தோரை |
தோரை – (பெ) ஒருவகை மலைநெல், A kind of paddy raised in hilly tracts
புயல் புனிறு போகிய பூ மலி புறவின்
அவல் பதம் கொண்டன அம் பொதி தோரை – மலை 120,121
மழையால் கசடுகள் நீக்கப்பட்ட, பூக்கள் நிறைந்த காட்டுநிலத்தில், 120
அவல் இடிக்கும் பக்குவம் பெற்றன, அழகிய கொத்துக்கொத்தான மலைநெல்
|
தோற்று |
தோற்று – (வி) 1. தோன்றச்செய், காட்டு, cause to appear, show
2. உருவாக்கு, பிறப்பி, make, create
1.
முகை நாண் முறுவல் தோற்றி
தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே – நற் 370/10,11
மலரும் மொட்டு போன்ற நாணமுடைய முறுவலைக் காட்டி,
அழகிய மலர் போன்ற மையுண்ட கண்களைத் தன் கைகளினால் மூடிக்கொண்டாள்
2.
போர் தோற்று கட்டுண்டார் கை போல்வ கார் தோற்றும்
காந்தள் செறிந்த கவின் – பரி 18/34,35
போரில் தோற்றுக் கட்டப்பட்டவரின் கைகளைப் போன்று இருக்கும், கார்காலம் பிறப்பித்த
காந்தள்கள் செறிந்த கவின்;
|
தோல் |
தோல் – 1. (வி) தோல்வியடை, be defeated
– 2. (பெ) 1. சருமம், skin
2. விலங்குகளின் தோலினால் செய்யப்பட்ட கேடயம், leather shield
3. தோலினால் செய்யப்பட்ட பை, leather bag
4. தோலினால் செய்யப்பட்ட சேணம், saddle
5. யானை, elephant
6. மரப்பட்டை, bark of a tree
7. கொல்லனின் துருத்தி, bellows of the ironsmith
8. பழம், விதை ஆகியவற்றின் மேல் தோடு, peel of fruits or husk of seeds
1.
தோலா காதலர் துறந்து நம் அருளார் – நற் 339/1
எக்காலத்தும் தோல்வியையே அறியாத நம் காதலர் நம்மைத் துறந்து இரக்கமில்லாதவராயினார்;
2.1.
இரும் பிடி மேஎம் தோல் அன்ன இருள் சேர்பு – மது 634
கரிய பிடியின்கண் மேவின தோலை ஒத்த கருமையுடைய இருளைச் சேர்ந்து,
2.2.
புரை தோல் வரைப்பின் வேல் நிழல் புலவோர்க்கு – மலை 88
சிறந்த கேடகங்களைக்கொண்ட கோட்டைமதிலில் இருக்கும் வேல் படையின் பாதுகாப்பில் இருக்கும் அறிஞர்க்கு
2.3.
பச்சூன் பெய்த சுவல் பிணி பைம் தோல் – பெரும் 283
(வாடூனன்றி)பச்சை இறைச்சியை வைத்த, தோளில் மாட்டிய, பதப்படுத்தாத தோலினால் செய்த பையையுடைய
2.4.
தோல் துமிபு
வை நுனை பகழி மூழ்கலின் செவி சாய்த்து – பட் 72,73
சேணங்களை அறுத்துக்
கூரிய முனைகளையுடைய அம்புகள் (வந்து)அழுத்துகையினால் செவி சாய்த்துப்
2.5.
புரை தவ உயரிய மழை மருள் பல் தோல் – மலை 377
சிறப்புக்களில் மிக உயர்ந்த, மேகக்கூட்டங்களோ என்று நினைக்கத்தோன்றும் பல யானைகள்(
2.6.
கான யானை தோல் நயந்து உண்ட
பொரி தாள் ஓமை வளி பொரு நெடும் சினை – குறு 79/1,2
காட்டு யானை பட்டையை விரும்பி உண்ட
பொரிந்த அடிமரத்தையுடைய ஓமையின் காற்றால் புடைக்கப்பட்ட நீண்ட கிளையின்
2.7.
உலை வாங்கு மிதி தோல் போல
தலை வரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே – குறு 172/6,7
உலையில் மாட்டிய துருத்தியைப் போல
எல்லை அறியாமல் வருந்தும் என் நெஞ்சே!
2.8
மேம் தோல் களைந்த தீம் கொள் வெள் எள் – புறம் 321/2
மேலுள்ள தோல்நீக்கப்பட்ட இனிமை பொருந்திய வெள்ளிய எள்
|
தோள் |
தோள் – 1. (வி) துளையிடு, bore
– 2 (பெ) புயம், shoulder
1.
தோளா முத்தின் தெண் கடல் பொருநன் – அகம் 137/13
துளையிடாத புதிய முத்துக்கள் விளையும் தெளிந்த கடலையுடைய வீரன்
2.
தாழ் மென் கூந்தல் தட மென் பணை தோள்
மடந்தை மாண் நலம் புலம்ப – அகம் 21/4,5
தாழ்ந்த மெல்லிய கூந்தல், பருத்த மெல்லிய மூங்கில்(போன்ற)தோள்கள்(கொண்ட)
தலைவியின் மாட்சிமையுடைய பெண்மைநலம் தனிமையில் வருந்த,
படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள்
முடலை யாக்கை முழு வலி மாக்கள் – நெடு 31,32
பச்சிலை கலந்த தலை மாலையினையும், பருத்த அழகினையும் வலியினையும் உடைய இறுகின தோளினையும்,
முறுக்குண்ட உடம்பினையும், மிகுந்த உடற்பலமும் உடைய மிலேச்சர்
|
தோழம் |
தோழம் – (பெ) ஒரு பேரெண், a large number
புகழ் சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும்
அமுது கடைய இரு வயின் நாண் ஆகி
மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க
உகாஅ வலியின் ஒரு தோழம் காலம்
அறாஅது அணிந்தாரும் தாம் – பரி 23/73-77
புகழ்மிக்க சிறப்பினையுடைய தேவரும் அசுரரும் ஆகிய இருதிறத்தோரும்
அமுது கடைய இரு பக்கமும் நாணாக இருந்து,
எஞ்சிய பெரிய நாணை திருமாலே பற்றி இழுக்க,
தமது அழியாத ஆற்றலாலே, ஒரு தோழம் என்னும் கால அளவுக்கு
அற்றுப்போகாமல் நாணாகி கிடந்து அழகுசெய்தவரும் ஆதிசேடனே!
|
தௌவு |
தௌவு – (வி) குன்றிப்போ, lessen, decrease, shrink;
நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்று
கண்ணும் காட்சி தௌவின – நற் 397/2,3
நீண்ட பாலைநிலத்திடை அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளியிழந்து
கண்களும் காணும்திறம் குன்றிப்போயின.
இது தவ்வு என்றும் சில பதிப்புகளில் காணப்படுகிறது.
|