சங்க இலக்கிய அருஞ்சொற்களஞ்சியம்

முனைவர் ப.பாண்டியராஜா
(www.tamilconcordance.in)


105

52

77

24

121

13

36

20

5

32

20

1
க்
124
கா
24
கி
12
கீ
2
கு
58
கூ
17
கெ
9
கே
7
கை
23
கொ
48
கோ
28
கௌ
1
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
15
சா
42
சி
51
சீ
7
சு
29
சூ
13
செ
66
சே
17
சை
1
சொ
6
சோ
4
சௌ
ஞ்
3
ஞா
15
ஞி
4
ஞீ ஞு ஞூ ஞெ
17
ஞே ஞை ஞொ
1
ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
113
தா
23
தி
54
தீ
13
து
76
தூ
25
தெ
44
தே
25
தை
6
தொ
44
தோ
16
தௌ
1
ந்
82
நா
44
நி
40
நீ
21
நு
30
நூ
11
நெ
39
நே
12
நை
3
நொ
24
நோ
13
நௌ
1
ப்
245
பா
80
பி
63
பீ
7
பு
173
பூ
19
பெ
48
பே
25
பை
22
பொ
76
போ
37
பௌ
1
ம்
240
மா
85
மி
35
மீ
13
மு
163
மூ
24
மெ
14
மே
30
மை
9
மொ
6
மோ
11
மௌ
1
ய்
2
யா
30
யி யீ யு யூ
2
யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
236
வா
71
வி
120
வீ
15
வு வூ வெ
81
வே
67
வை
18
வொ வோ வௌ
2
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
ஞமன்

ஞமன் – (பெ) 1. யமன், Yama, the God of Death.
2. துலைக்கோலின் சமன்வாய், Pointer of a balance
1.
தீ செம் கனலியும் கூற்றமும் ஞமனும்
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும் தொகூஉம் – பரி 3/21,22
உலகத்தைத் தீய்த்து அழிக்கும் சிவந்த ஊழித்தீயும், கூற்றுவனும், இயமனும்,
மாசற்ற ஆயிரம் கதிர்களையுடைய பன்னிரண்டு சூரியர்களும் ஆகிய அனைத்தும் ஒன்றுகூடிநிற்கும்
2.
தெரி கோல் ஞமன்ன் போல ஒரு திறம்
பற்றல் இலியரோ நின் திறம் சிறக்க – புறம் 6/9,10
பொருள்களை ஆராயும் துலாக்கோலின்கண் சமன்வாய் போல ஒரு பக்கம்
கோடாது ஒழிக, நினது திறம் சிறக்க

ஞமலி

ஞமலி – (பெ) நாய், dog
முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி – குறி 131
(மூங்கில்)முளை(போலும்) கூர்மையுள்ள பற்களையுடைய, பெரிய நகங்களையுடைய, நாய்

ஞரல்

ஞரல் – (வி) சங்கு எழுப்பும் ஓசை, sound of a conch
தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல
இலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும்
தண் கடல் படப்பை மென்பாலனவும் – பதி 30/6-8
தாழ்வாகப் படர்ந்திருக்கும் அடும்பங்கொடியை மோதிய அலை கொண்டுவந்த சங்கு ஒலிக்க,
ஒளிரும் தன்மையுள்ள முத்துக்களோடு, நீண்ட பவளக்கொடிகளையும் பொறுக்கியெடுக்கும்
குளிர்ந்த கடல் வெளியாகிய மென்மையான நிலமாகிய நெய்தல் நில மக்களும்

ஞாங்கர்

ஞாங்கர் – (வி.அ) 1. அங்கே, there
2. அப்பால், beyond
3. மேல், on, over
4. அப்பொழுது, at that time
1.
தூங்கு இலை வாழை நளி புக்கு ஞாங்கர்
வருடை மட மறி ஊர்வு இடை துஞ்சும் – கலி 50/3,4
தொங்குகின்ற இலைகளையுடைய வாழை மரங்கள் செறிவாக இருக்குமிடத்தில் புகுந்து, அங்கு
வருடை மானின் இளம் குட்டி திரிகின்ற இடத்தில் துயில்கொள்ளும்
2.
இன் சுவை மூரல் பெறுகுவிர் ஞாங்கர்
குடி நிறை வல்சி செம் சால் உழவர்
நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி – பெரும் 196-198
இனிய சுவையுள்ள பருப்புச்சோறைப் பெறுவீர் – அந்நிலத்திற்கு மேல்,
குடியிருப்பு நிறைந்த, உணவினையுடைய செவ்விய சாலாக உழுகின்ற உழவர்கள்
நடை பயின்ற பெரிய எருதுகளை முற்றத்தே நுகத்தைப் பூட்டிக்கொண்டு சென்று
3
அருவி ஆர்க்கும் அணங்கு உடை நெடும் கோட்டு
ஞாங்கர் இள வெயில் உணீஇய ஓங்கு சினை
பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும் – நற் 288/1-3
அருவி ஆரவாரமாய் ஒலிக்கும் தெய்வ மகளிர் வாழும் நெடிய மலையுச்சியில்
மேலிருந்துவரும் இளவெயிலைப் பெறுவதற்காக, உயர்ந்த கிளைகளிலிருந்து
தோகையையுடைய ஆண்மயில் தன் பெடையோடு ஆடும்
4
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர்
நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி – புறம் 383/2,3
குளிர்ந்த பனி துளிக்கும் புலராத அந்தப் பொழுதில்
நுண்ணிய கோல் கட்டப்பட்ட தடாரிப்பறையைக் கொட்டி

ஞாட்பு

ஞாட்பு – (பெ) 1. போர், battle
2. போர்க்களம், battelfield
3. போர்க்களப்பூசல், loud uproar in a battlefield
1.
நன்னன்
நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய
ஒன்றுமொழி கோசர் போல – குறு 73/2-4
நன்னன் என்பவனின்
மணமுள்ள மா மரத்தை அழித்து, அவனையும் போரில் வீழ்த்திய
சொல்தவறாக் கோசர் போல
2.
படு புலா கமழும் ஞாட்பில் துடி இகுத்து
அரும் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர் – அகம் 89/14,15
மிக்கபுலவு நாறும் போர்க்களத்தே, துடியினைத் தாழக்கொட்டி
அரிய அணிகலன்களைத் திறையாகப் பெற்றுக்குவித்த பெரிய போர் விருப்பினையுடைய வென்றியினர்
3.
வெள்ளத் தானை அதிகன் கொன்று உவந்து
ஒள்_வாள்_அமலை ஆடிய ஞாட்பின் – அகம் 142/13,14
வெள்ளம் போன்ற சேனையினையுடைய அதிகன் என்பானைக் கொன்று மகிழ்ந்து
ஒள்வாள்அமலை என்னும் வெற்றிக்கூத்தை ஆடிய போர்க்களப்பூசலைப் போல

ஞாண்

ஞாண் – (பெ) 1. நூல், கயிறு, thread, string, cord
2. வில்லின் நாண், bowstring
1.
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்
புலரா காழகம் புலர உடீஇ – திரு 183,184
ஒன்பதாகிய நூலைத் தன்னிடத்தே கொண்ட, ஒரு புரி மூன்றாகிய, நுண்ணிய பூணூலையும் உடைய,
ஈரம் காயாத துகில் புலர உடுத்தி
2.
வரி மாண் நோன் ஞாண் வன் சிலை கொளீஇ – அகம் 61/7
மாண்புறு வரியையுடைய வலிய வில்லில் வலிய நாணினைக் கொளுத்தி

ஞான்று

ஞான்று – 1. (வி.எ) ஞால் என்பதன் இறந்தகால வினை எச்சம், தொங்கி, hanging
2. (பெ) நாள், அப்பொழுது, time, day, at the time of
1.
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டு என – அகம் 39/13
தொங்குவது போல் தோன்றிய ஞாயிறு மயங்கி மறைந்திட
2.
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே – புறம் 278/9
பெற்ற நாளில் கொண்ட உவகையிலும் பேருவகை கொண்டாள்

ஞான்றை

ஞான்றை – (பெ) ஞான்று, பார்க்க ஞான்று(பெ)
பசும் பூண் பாண்டியன் வினை வல் அதிகன்
களிறொடு பட்ட ஞான்றை
ஒளிறு வாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே – குறு 393/4-6
பசும்பூண் பாண்டியனின் செயல்திறம் மிக்க அதிகன் என்பான்
தன் யானையோடு இறந்தபோது
ஒளிறும் வாள்களையுடைய கொங்கர் எழுப்பிய கூச்சலினும் பெரியது.

ஞாயர்

ஞாயர் – (பெ) (உன்)செவிலித்தாயர், foster mothers
பெரும் தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்ற – கலி 81/12
பெரிய தெருவில் உன்னைச் சீராட்டி உன் செவிலித்தாய்மார் சொல்லிக்கொடுக்க

ஞாயிறு

ஞாயிறு – (பெ) சூரியன், Sun
பகல் செய்யும் செம் ஞாயிறும்
இரவு செய்யும் வெண் திங்களும் – மது 7,8
பகலை உண்டாக்கும் சிவந்த கதிரவனும்
இரவில் (ஒளி)செய்யும் வெண்மையான திங்களும்

ஞாயில்

ஞாயில் – (பெ) கோட்டையின் ஏவறை, bastion of a fortress
நெடு மதில் நிரை ஞாயில்
அம்பு உமிழ் அயில் அருப்பம் – மது 66,67
நெடிய மதிலினையும், வரிசையான ஏவறைகளையும்,
அம்பு விடுகின்ற, வேல் வீசுகின்ற அரண்களையும்,

ஞாய்

ஞாய் – (பெ) (உன்)தாய், (your)mother
யாயும் ஞாயும் யார் ஆகியரோ – குறு 40/1
என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் யார் யாரோ

ஞாறு

ஞாறு – (வி) தோன்று, appear
மணி புரை மா மலை ஞாறிய ஞாலம் – பரி 23/80
மணியை நிறத்தால் ஒத்த பெரிய மலைகள் தோன்றிய இந்த மண்ணுலகத்தை

ஞால

ஞால – (வி.அ) மிகவும், very much
சுடு நீர் வினை குழையின் ஞால சிவந்த
கடி மலர் பிண்டி தன் காதில் செரீஇ – பரி 12/87,88
நெருப்பிலிட்டுச் சுடுகின்ற தன்மையுள்ள வேலைப்பாடு அமைந்த குழையினைப் போல, மிகவும் சிவந்த
வாசமுள்ள மலரான அசோகமலரைத் தன் காதில் செருகிக்கொண்டு

ஞாலம்

ஞாலம் – (பெ) 1. பூமி, earth
2. உலகம், world
1.
இரு முந்நீர் குட்டமும்
வியன் ஞாலத்து அகலமும் – புறம் 20/1,2
பெரிய கடலினது ஆழமும்,
அகன்ற பூமியின் பரப்பும்,
2.
ஞாலம் நின் வழி ஒழுக பாடல் சான்று – பதி 24/9
உலகமோ உன் வழியில் நடக்க, புலவர் பாடும் புகழைப் பெற்று

ஞால்

ஞால் – (வி) தொங்கு, hang
ஞால் இயல் மென் காதின் புல்லிகை சாமரை – கலி 96/11
தொங்கும் இயல்புடைய மென்மையான காதிலிருக்கும் புல்லிகை என்னும் காதணியே கன்னத்தின் சாமரையாகவும்

ஞான்ற ஞாயிறு குட மலை மறைய – நற் 239/1
மேலை அடிவானத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஞாயிறு மேற்கு மலையில் சென்று மறைய

ஞாளி

ஞாளி – (பெ) நாய், dog
வை எயிற்று
வலம் சுரி தோகை ஞாளி மகிழும் – அகம் 122/7,8
கூரிய பல்லினையும்
வலமாகச் சுரிதலுடைய வாலினையும் உடைய நாய் குரைக்கும்

ஞாழல்

ஞாழல் – (பெ) புலிநகக்கொன்றை, Orange cup-calyxed brasiletto-climber wagaty, caesalpinia cucullata Roxb
சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர் – நற் 191/1
சிறிய பூக்களைக் கொண்ட ஞாழலின் தேன் செறிந்திருந்த ஒளிரும் பூங்கொத்துக்கள்

ஞாழல் என்பது ஒரு கடற்கரைத் தாவரம். இது உயரமான புதர்வகைச் செடி என்றும், ஒரு வகைக் கொன்றை மரம்
என்றும், கொடி வகை என்றும் பல வகை விளக்கங்கள் கிடைக்கின்றன.
சங்க இலக்கியங்களை அலசியதில் கிடைத்த விபரங்கள் இதோ.
1. இது கடற்கரையில் வளரக்கூடியது.
(எக்கர் ஞாழல் இணர் படு பொதும்பர் – ஐங் 144/1)

2. இது சிறிய இலைகளையும், பெரிய கிளைகளையும் கொண்டது.
(எக்கர் ஞாழல் சிறியிலை பெரும் சினை – ஐங் 145/1)

3. இதன் கிளைகள் மிகவும் உயரமாக நீண்டிருக்கும்.
(ஞாழல் ஓங்கு சினை தொடுத்த கொடும் கழி – அகம் 20/5.)

4. பெண்கள் எட்டி மலர்களைப் பறிக்கும் அளவுக்குக் கிளைகள்தாழ்ந்திருக்கும்.
(கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும் – அகம் 216/8)

5. இதன் பூக்கள் சிறியனவாய் இருக்கும்.
(சிறு வீ ஞாழல் – நற். 31/5)

6. இதன் மலர்கள்கொத்துக்கொத்தாக இருக்கும்.
(தெரி இணர் ஞாழலும் – கலி. 127/1)

7. இதன் மலர்கள் நறுமணம் மிக்கவை.
(இதுவே நறு வீ ஞாழல் மா மலர் தாஅய் – நற் 96/1.)

8. இதன் மொட்டுக்கள் பசுமையாக இருக்கும்.
(பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறை – குறு 81/3.)

9. நன்கு மலர்ந்த மலர்கள் தினையைப் போன்று இருக்கும்.
(நனை முதிர் ஞாழல் தினை மருள் திரள் வீ – குறு 397/1.)

10. இதன் சிறிய பூக்கள் வெண்சிறுகடுகினைப் போன்று இருக்கும்.
(ஐயவி அன்ன சிறு வீ ஞாழல் – குறு 50/1)

11. இதன் மலர்கள் பொன் நிறத்தில் இருக்கும்.
(பொன் இணர் ஞாழல் முனையின் பொதி அவிழ் – ஐங் 169/2)

12. இதன் மலர்கள் சிவப்பாகவும், கிளைகள் கரிய நிறத்திலும் இருக்கும்.
(செம் வீ ஞாழல் கரும் கோட்டு இரும் சினை – அகம் 240/1)

சில பண்புகள் முரண்பாடாக இருப்பதைக் காணலாம். எனவே ஞாழலில் பல வகை உண்டு என்பது தெளிவாகிறது.

தமிழ்ப் பேரகராதி (Tamil lexicon) இதைப் பலவிதங்களில் பொருள்கொள்ளுகிறது.

1. Orange cup-calyxed brasiletto-climber wagaty. புலிநகக்கொன்றை.
2. Peacock’s crest. மயிற்கொன்றை.
3. Fetid cassia. பொன்னாவிரை
4. False tragacanth. கோங்கு.
5. Jasmine, Jasminum; மல்லிகைவகை.
6. Cinnamon, cinnamomum; கொடிவகை.
7. Saffron, bulbous-rooted plant. குங்குமம்.
8. Heart-wood; மரவயிரம்
9. Hard, solid wood; ஆண்மரம்.

ஞிணம்

ஞிணம் – (பெ) நிணம், கொழுப்பு, மாமிசம், fat, flesh
பைம் ஞிணம் பெருத்த பசு வெள் அமலை – புறம் 177/14
செவ்வியையுடைய நிணம் மிக்க புதிய வெண்சோற்றுக் கட்டியை

ஞிமிறு

ஞிமிறு – (பெ) தேனீ, honeybee
அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஓப்பும் – பதி 12/12
பெருமை பொருந்திய இளங்களிறு, தன்னை மொய்க்கும் வண்டு, ஞிமிறு ஆகியவற்றை ஓட்டுகின்ற,

ஞிமிலி

ஞிமிலி – (பெ) மிஞிலி என்ற சிற்றரசன், A war hero called minjili.
கடும் பரி குதிரை ஆஅய் எயினன்
நெடும் தேர் ஞிமிலியொடு பொருது களம் பட்டு என – அகம் 148/7,8
கடிய செலவினையுடைய குதிரையினையுடைய ஆய் எயினன் என்பான்
நெடிய தேரைக்கொண்ட மிஞிலி என்பானொடு போர்புரிந்து களத்தில் இறந்தானாக

ஞிமிலி என்று பாடல்களில் குறிப்பிடப்படும் இவனது பெயர் மிஞிலி.
மிஞிலி என்பவன் அரசன் நன்னனின் படைத்தலைவன். இவன் பாரம் என்னும் நகரைக் காவல்புரிந்துவந்தான்.
வில்லோர் பெருமகன் என்று போற்றப்படுகிறான். நன்னன் மீது பகைமை கொண்ட ஆய் எயினன் என்பவனைப்
பாழி என்ற இடத்தில் போரிட்டு வென்றான்.

ஞிலம்

ஞிலம் – (பெ) நிலம், land, people in the land
பன் நூறு அடுக்கிய வேறு படு பைம் ஞிலம்
இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறை – புறம் 62/10,11
பல நூறாக அடுக்கப்பட்ட பதினெண் மொழி மாக்களாகிய படைத் தொகுதி
இடம் இல்லை என்னும்படியான தொக்க அகன்ற பாடிவீட்டின்கண்

ஞெகிழம்

ஞெகிழம் – (பெ) காற்சிலம்பு, tinkling anklet
ஆரா கவவின் ஒருத்தி வந்து அல்கல் தன்
சீர் ஆர் ஞெகிழம் சிலம்ப சிவந்து நின்
போர் ஆர் கதவம் மிதித்தது அமையுமோ – கலி 90/10-12
நிறைவு கொள்ளாத தழுவுதலைக் கொண்ட ஒருத்தி வந்து காலில் படிந்த தன்
சிறப்பு நிறைந்த சிலம்பு ஒலிக்க, கோபித்து உன்
இரு பக்கமும் பொருதின நிறைந்த கதவைத் தட்டியது ஒன்று போதாதோ?

ஞெகிழி

ஞெகிழி – (பெ) 1. தீக்கொள்ளி, firebrand
2. தீக்கடைகோல், Piece of wood used for kindling fire by friction
1.
அம் நுண் அவிர் புகை கமழ கை முயன்று
ஞெலி_கோல் கொண்ட பெரு விறல் ஞெகிழி
செம் தீ தோட்ட கரும் துளை குழலின் – பெரும் 177-179
அழகிய நுண்ணிதாய் விளங்கும் புகை முற்படப் பிறக்கும்படி கையாலே கடைந்து,
தீக்கடையப்படும் கோலால் உண்டாக்கிக்கொண்ட பெரிய திறலுடைய கொள்ளிக்கட்டையின்
சிவந்த நெருப்புத் துளைத்த கரிய துளையினையுடைய குழலில்
2.
கானவர்
விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த – குறி 225,226
காட்டில் வாழ்வோர்
வானத்தைத் தீண்டுகின்ற (தம்)பரணில் தீக்கடைகோலை மூட்ட

ஞெகிழ்

ஞெகிழ் – (வி) நெகிழ், 1. மெலிவடை, become thin
2. மலர், blossom
3. திற, open, unfasten, unfold
4. நழுவு, slip off
5. இறுக்கம் தளர், loosen
6. இளகு, grow tender
7. உருகு, melt
1.
ஞெகிழ் தோள் கலுழ்ந்த கண்ணர் – நற் 315/11
மெலிவடைந்த தோளும், கலங்கிய கண்ணையும் உடையவராய்
2.
ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ் கோடலும் – கலி 101/4
தீயைக் கடைந்த நெருப்பைச் சேர்த்து வரிசையாக வைத்ததைப் போன்ற மலர்ந்த இதழ்களையுடைய செங்காந்தளும்
3.
விலங்கு அரி நெடும் கண் ஞெகிழ்-மதி – ஐங் 200/3
குறுக்காக ஓடும் செவ்வரிகளைக் கொண்ட நீண்ட கண்களைத் திறப்பாயாக
4.
பணை தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர் – நற் 193/6
பருத்த என் தோள்களில் செறித்த என் ஒளிமிக்க தோள்வளைகள் நெகிழும்படி செய்த என் காதலர்
5.
உழையின் போகாது அளிப்பினும் சிறிய
ஞெகிழ்ந்த கவின் நலம்-கொல்லோ – நற் 35/9,10
பக்கத்திலிருந்து நீங்காமல் அருள்செய்தாலும், சிறிதளவு
கைதளர்ந்ததால் குறைந்த மேனியழகின் வேறுபாடோ?
6.
இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு அஞர் உற்ற என்
உள் அவன் அறிதல் அஞ்சி – அகம் 32/10,11
கொட்டும் மழை பெய்த மண்ணைப்போல நெகிழ்ந்து வருந்திய என்
உள்ளத்தை அவன் அறிதலை அஞ்சி
7.
தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே – ஐங் 32/4
தீயில் பட்ட மெழுகைப் போல வெகு விரைவாக உள்ளம் உருகிப்போய்

ஞெண்டு

ஞெண்டு – (பெ) நண்டு, crab
வேப்பு நனை அன்ன நெடும் கண் நீர் ஞெண்டு
இரை தேர் வெண்_குருகு அஞ்சி – அகம் 176/8,9
வேம்பின் அரும்பினை ஒத்த நீண்ட கண்ணினையுடைய நீர் நண்டு
இரையினை ஆராய்ந்து பார்த்திருந்த வெள்ளிய நாரையினைக் கண்டு அஞ்சி

ஞெமன்

ஞெமன் – (பெ) பொருள்களின் அளவு, the weight of things
ஞெமன்ன்
தெரிகோல் அன்ன செயிர் தீர் செம்மொழி – அகம் 349/3,4
பொருளின் அளவை
அறியும் கருவியாகிய துலாக்கோலை ஒத்த குற்றமற்ற மெய்ம்மொழியினை உடையனாகிய

ஞெமன்கோல்

ஞெமன்கோல் – (பெ) துலாக்கோல், balance
செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன்கோல் அன்ன செம்மைத்து ஆகி – மது 490,491
பகைமையையும், மகிழ்ச்சியையும் கொள்ளாமல் (தம்மைப்)பாதுகாத்து, 490
துலாக்கோலைப் போன்ற நடுவுநிலைமை உடையதாய்,

ஞெமர்

ஞெமர் – (வி) 1. பர, விரிவடை, spread, extend
2. நிறை, be full
1.
மருதம் நளி மணல் ஞெமர்ந்த
நனி மலர் பெரு வழி – பரி 8/94,95
மருத நிலங்களினூடே செறிந்த மணல் பரந்திருக்கும்
மிகுந்த மலர்களைக் கொண்டிருக்கும் பெருவழியில்
2.
இலம்படு புலவர் ஏற்ற கை ஞெமர
பொலம் சொரி வழுதியின் புனல் இறை பரப்பி – பரி 10/126,127
இல்லாத புலவர்கள் ஏந்திநின்ற கைகள் நிரம்பும்படி
தங்கத்தைச் சொரிகின்ற பாண்டிய மன்னனைப் போலவே, வையைஆறு நீரை நாடெங்கும் இறைத்துப் பரப்பி,

ஞெமல்

ஞெமல் – 1 – (வி) அலை, திரி, roam about, wander
2 – (பெ) சருகு, dry leaf
1.
அலர் ஞெமல் மகன்றில் நன்னர் புணர்ச்சி – பரி 8/44
மலர்களினூடே திரியும் மகன்றில் பறவைகளின் நல்ல புணர்ச்சியைப் போன்ற
2.
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி
படு ஞெமல் புதைய பொத்தி – அகம் 39/6,7
தழைத்த மூங்கில்கள் உரசிக்கொண்டதால், மூங்கில்கழை சொரிந்த ஒள்ளிய தீப்பொறி
மிகுந்த சருகுகளுக்குள் விழுந்து தீ மூள

ஞெமி

ஞெமி – (வி) கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்வுறு, இறு, give way (as under a weight)
வயங்கு வெயில் ஞெமிய பாஅய் மின்னு வசிபு
மயங்கு துளி பொழிந்த பானாள் கங்குல் – அகம் 322/1,2
ஒளிர்கின்ற வெயில் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்படி (மேகம்) பரந்து, மின்னல் பிளந்திட
மிக்க மழையைப் பொழிந்த நடு இரவில்

ஞெமிடு

ஞெமிடு – (வி) பிசை, கசக்கு. press out with the hands, crush
கொடிச்சி காக்கும் அடுக்கல் பைம் தினை
முந்து விளை பெரும் குரல் கொண்ட மந்தி
கல்லா கடுவனொடு நல் வரை ஏறி
அங்கை நிறைய ஞெமிடி கொண்டு – நற் 22/1-4
குறமகள் காக்கும் மலைச் சரிவிலுள்ள பசிய தினையின்
முதலில் விளைந்த பெரிய கதிரினைக் கவர்ந்துகொண்ட பெண்குரங்கு
அவ்வாறு பறிப்பதை அறியாத ஆண்குரங்கோடு நல்ல மலையில் ஏறி
உள்ளங்கை நிறையக் கசக்கித் தன் கையிலே கொண்டு

ஞெமிர்

ஞெமிர் – (வி) 1. நெரிவுறு, be crushed, be pressed out as pulp
2. பரவு, spread
3. பரப்பு, spread over
1.
மார்பு உறு முயக்கு இடை ஞெமிர்ந்த சோர் குழை – நற் 20/9
மார்பு முயக்குதலால் நெரிப்புண்டு உதிர்ந்த பூந்தளிர்களையுடைய
2.
வரை முதல் இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து
சிதரல் பெரும் பெயல் சிறத்தலின் தாங்காது – மது 243,244
மலை அடிவாரத்தில் முழங்கும் இடிகளோடே முகில்கள் பரவி,
சிதறுதலையுடைய பெரு மழை மிகுதலால், பெருக்கெடுத்து,
3
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து – நெடு 90
கொண்டுவந்த மணலைப் பாவப்பட்ட, அழகிய வீட்டின் முற்றத்தில்

ஞெமுக்கு

ஞெமுக்கு – (வி) நெருக்கிவருத்து, press hard
ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய – அகம் 60/8
ஒளிவிடும் தோள்வளையை அமுக்கவேண்டாம்

ஞெமுங்கு

ஞெமுங்கு – (வி) அழுந்து, get squeezed
கரும் கண் வெம் முலை ஞெமுங்க புல்லி – நற் 314/6
கரிய கண்கள் அமைந்த வெம்மையான மார்பகங்கள் அமுங்குமாறு அணைத்தபடியே

ஞெமை

ஞெமை – (பெ) ஒரு மரம், நமை, வெள்ளை நாகை, a tree, anogeissus latifolia
1.
இந்த மரங்கள் இமயமலைப் பகுதியிலும் வளரும். உயரமாய் வளரக்கூடியவை
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி – நற் 369/7
ஞெமை மரங்கள் ஓங்கி வளர்ந்த உயர்ந்த மலையான இமையத்தின் உச்சியில்
2.
மரத்தின் உச்சியில்பருந்துகள் உட்கார்ந்திருக்கும்.
ஞெமை தலை
ஊன் நசைஇ பருந்து இருந்து உகக்கும் – குறு 285/6,7
ஞெமை மரத்தின் உச்சியில்
ஊனை விரும்பி பருந்து அமர்திருந்து உயரே எழும்
3.
இவை மலையின் உயரம் குறைவான சரிந்த பகுதிகளில் வளர்ந்திருக்கும்.
தளி பொழி சாரல் ததர் மலர் தாஅய்
ஒளி திகழ் உத்தி உரு கெழு நாகம்
அகரு வழை ஞெமை ஆரம் இனைய
தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி
நளி கடல் முன்னியது போலும் தீம் நீர்
வளி வரல் வையை வரவு – பரி 12/2-7
மழையைப் பொழிகின்ற மலைச்சாரலில், தன்மேல் உதிர்கின்ற மலர்களைப் பரப்பிக்கொண்டு,
ஒளி விளங்கும் படப்புள்ளிகளைக் கொண்ட, பார்ப்பதற்கு அச்சந்தரக்கூடிய பாம்பின் பெயரைக்கொண்ட நாகமரமும்,
அகிலும், சுரபுன்னையும், ஞெமை மரமும், சந்தன மரமும் ஆகிய இவை வருந்தும்படியாக,
தகர மரம், ஞாழல் மரம், தேவதாரு மரம் ஆகியவற்றைச் சாய்த்துச் சுமந்துகொண்டு,
செறிந்த நீரையுடைய கடல் பொங்கி வருவதைப் போன்றிருக்கிறது – இனிய நீரையுடைய
காற்றோடு கலந்து வரும் வையையின் வரவு;
4.
கோடைகாலத்தில் இவை காய்ந்துபோய் துளைகொண்ட அடியினவாய் வற்றலாகி நிற்கும்.
வேர் முழுது உலறி நின்ற புழல் கால்
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்
வற்றல் மரத்த பொன் தலை ஓதி
வெயில் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு – அகம் 145/1-5
வேர் முதல் முழு மரமும் வற்றி நின்ற துளைபட்ட அடியினைக் கொண்டதும்,
தேரின் மணி ஒலிபோல் சிள்வீடு என்னும் வண்டுகளொலிப்பதும் ஆகிய
காய்ந்துபோன மரங்களில் உள்ள பொன்னிறம் வாய்ந்த ஓந்தி
வெய்யிலால் அழகு இழந்த ஊர்களில் வருத்தம் கொள்வதால்
மெல்லெனத்தாவுகின்ற, வெள்ளிய ஞெமை மரங்களையுடைய அகன்றகாட்டகத்தே
5.
கோடைகாலத்தில் இவற்றின் இலைகள் உதிர்ந்து, காற்றால் அலைக்கழிக்கப்பட்டுப் பேரொலி எழுப்பும்.
கல்லென
ஞெமை இலை உதிர்த்த எரி வாய் கோடை – அகம் 353/8
கல்லென்னும் ஒலி உண்டாக
ஞெமை மரத்தில் இலைகளை உதிர்த்த வெப்பம் பொருந்திய கோடக்காற்று
6.
இவற்றின் அடி மரங்கள் திருத்தமாக வளைவு நெளிவு இன்றி இருக்கும்.
திருந்து அரை ஞெமைய பெரும் புன குன்றத்து – அகம் 395/13
செவ்விய அடி பொருந்திய ஞெமைமரங்களையுடைய பெரிய கொல்லைகளையுடைய குன்றில்

மேல்

ஞெலி

ஞெலி – 1. (வி) கடைந்து தீயை உண்டாக்கு, rub one stick on another for producing fire by friction
2. (பெ) தீயை உண்டாக்கக் கடையப்படும் மூங்கில், grating bamboo
3. தீக்கொள்ளி, stick with fire
1.
புல்லென் மாலை சிறு தீ ஞெலியும்
கல்லா இடையன் போல – புறம் 331/4,5
புல்லென்ற மாலைப்போதில் சிறிய தீக்கடைகோலைக் கடைந்து தீயுண்டாக்கும்
கல்லாத இடையன் போல
2.
ஞெலி கழை முழங்கு அழல் வய_மா வெரூஉம் – ஐங் 307/1
ஒன்றையொன்று உரசிக்கொண்ட காய்ந்துபோன மூங்லிலில் பிடித்துக்கொண்ட நெருப்பைக் கண்டு வலிய புலி வெருளும்
3
ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர் – அகம் 239/4
தீக்கொள்ளியுடன் பிடித்துள்ள நீண்ட திரண்ட அம்பினராகி

ஞெலிகோல்

ஞெலிகோல் – (பெ) தீக்கடைகோல், Piece of wood for producing fire by friction
இல் இறை செரீஇய ஞெலிகோல் போல
தோன்றாதிருக்கவும் வல்லன் – புறம் 315/4
மனையின் உள்கூரையில் செருகப்பட்ட தீக்கடைகோலைப் போல
தன் வலிமையை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஒடுங்கியிருக்கவும் வல்லவன்

ஞெள்ளல்

ஞெள்ளல் – (பெ) வழி, சாலை, road, path
கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண் – புறம் 15/1
விரைந்த தேர் குழித்த தெருவின்கண்ணே

ஞொள்கு

ஞொள்கு – (வி) குறைவுபடு, சுருங்கிப்போ, இளை, diminish, be abated
நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் மண்டிலம்
புலம்_கடை மடங்க தெறுதலின் ஞொள்கி
நிலம் புடைபெயர்வது அன்று-கொல் இன்று என
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து – அகம் 31/1-4
தீயைப்போலச் சினந்து விளங்கும் வெம்மை ஒளிரும் ஞாயிறு
விளைநிலங்களின் கடைசிமட்டும் கருகிப்போகத் தக்கதாகச் சுட்டுப்பொசுக்குவதால் சுருங்கிப்போய்
நிலம் (வெடித்து) நிலைபெயருமோ இன்று என
உலகத்து உயிர்கள் மடிந்துபோக மழை அற்றுப்போன இக் காலத்தில்