சங்க இலக்கிய அருஞ்சொற்களஞ்சியம்

முனைவர் ப.பாண்டியராஜா
(www.tamilconcordance.in)


105

52

77

24

121

13

36

20

5

32

20

1
க்
124
கா
24
கி
12
கீ
2
கு
58
கூ
17
கெ
9
கே
7
கை
23
கொ
48
கோ
28
கௌ
1
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
15
சா
42
சி
51
சீ
7
சு
29
சூ
13
செ
66
சே
17
சை
1
சொ
6
சோ
4
சௌ
ஞ்
3
ஞா
15
ஞி
4
ஞீ ஞு ஞூ ஞெ
17
ஞே ஞை ஞொ
1
ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
113
தா
23
தி
54
தீ
13
து
76
தூ
25
தெ
44
தே
25
தை
6
தொ
44
தோ
16
தௌ
1
ந்
82
நா
44
நி
40
நீ
21
நு
30
நூ
11
நெ
39
நே
12
நை
3
நொ
24
நோ
13
நௌ
1
ப்
245
பா
80
பி
63
பீ
7
பு
173
பூ
19
பெ
48
பே
25
பை
22
பொ
76
போ
37
பௌ
1
ம்
240
மா
85
மி
35
மீ
13
மு
163
மூ
24
மெ
14
மே
30
மை
9
மொ
6
மோ
11
மௌ
1
ய்
2
யா
30
யி யீ யு யூ
2
யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
236
வா
71
வி
120
வீ
15
வு வூ வெ
81
வே
67
வை
18
வொ வோ வௌ
2
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
சகடம்

சகடம் – (பெ) 1. வண்டி, cart
2. உரோகிணி, The lunar asterism, represented by a cart, the fourth star
1.
மாரி குன்றம் மழை சுமந்து அன்ன
ஆரை வேய்ந்த அறை வாய் சகடம் – பெரும் 49,50
மழைக் காலத்து மலை முகிலைச் சுமந்தாற் போன்று,
(தாளிப்பனையோலையால் செய்த)பாய் வேய்ந்த, (வழியை)அறைக்கும் விளிம்புகள் கொண்ட வண்டி
2.
அம் கண் இரு விசும்பு விளங்க திங்கள்
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து – அகம் 136/4,5
அழகிய இடம் அகன்ற பெரிய வானம் களங்கமற விளங்குதலுற, திங்களை
உரோகிணி கூடிய குற்றமற்ற நன்னாள் சேர்க்கையில்

சங்கம்

சங்கம் – (பெ) ஒரு பேரெண், இலட்சம் கோடி, a very large number, Hundred billions
நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மை இல் கமலமும் வெள்ளமும் நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை – பரி 2/13-15
நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம்
குற்றமற்ற தாமரை, வெள்ளம் ஆகிய பேரெண்களால்
குறிக்கப்பட்ட காலங்களின் ஈட்டங்களையும் கடந்த பின்னர்

சடை

சடை – (பெ) சிவபெருமானின் கற்றைத் தலை மயிர், சிவனடியார்கள் வளர்த்துக்கொள்ளும் தலை மயிர்,
Entangled locks of hair- as once worn by Siva as an ascetic, and
now by his devotees in imitation of him
எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை – அகம் 0/10
நெருப்பு அகைந்து எரிவதைப் போன்ற மின்னிப் பிரகாசிக்கும் முறுக்கிய சடைமுடி

தேறு நீர் சடை கரந்து திரிபுரம் தீமடுத்து – கலி 1/2
தெளிந்த நீரைக்கொண்ட கங்கையைத் தன் சடையில் அடக்கிக்கொண்டு, முப்புரங்களையும் தீயூட்டி,

அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும் புகை – பட் 54,55
மினுமினுக்கும் சடையையுடைய துறவிகள் தீயில் யாகம்செய்யும்(போது எழும்பிய)
(நெய் முதலியவற்றின்)மணமுள்ள புகை

சண்பகம்

சண்பகம் – (பெ) ஒரு மரம், பூ, Champak, Michelia champaca
அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த
பெரும் தண் சண்பகம் போல ஒருங்கு அவர்
பொய்யார் ஆகுதல் தெளிந்தனம் – கலி 150/20-22
பெறுவதற்கு அருமையான திருவாதிரைப் பெயரையுடைய சிவபெருமான் அணிந்துகொள்வதற்காக மலர்ந்த
பெரிய குளிர்ந்த சண்பக மலர் பருவம் பொய்க்காமல் மலர்வதைப் போன்று, நாமிருவரும் ஒன்றாக, அவர்
சொன்னசொல் தவறாமல் திரும்பி வருவார் என்பதனை உணர்ந்துள்ளோம்,

சதுக்கம்

சதுக்கம் – (பெ) நாற்சந்தி, Junction where four roads meet
கூகை சேவல் குராலோடு ஏறி
ஆர் இரும் சதுக்கத்து அஞ்சுவர குழறும் – நற் 319/4,5
ஆண்கூகையானது தன் பெடையுடன் சென்று
நடமாட்டமில்லாத பெரிய நாற்சந்தியில் அச்சம்தோன்றக் குழறுகின்ற ஒலியை எழுப்பும்;

சந்தம்

சந்தம் – (பெ) சந்தனம், sandal
சந்தம் பூழிலொடு பொங்கு நுரை சுமந்து
தெண் கடல் முன்னிய வெண் தலை செம் புனல் – பதி 87/2,3
சந்தனம், அகில் ஆகியவற்றின் கட்டைகளோடு பொங்குகின்ற நுரையையும் சுமந்துகொண்டு,
தெளிந்த கடலை நோக்கிச் செல்லும், நுரையால் வெண்மையான தலையைக் கொண்ட சிவந்த புதுவெள்ளம்

சந்து

சந்து – (பெ) 1. பல வழிகள் கூடுமிடம், Crossing of many roads
2. சந்தன மரம், sandalwood tree
3. மயிர்ச்சாந்து, Perfumed unguent for the hair
1.
பண்டு நற்கு அறியா புலம் பெயர் புதுவிர்
சந்து நீவி புல் முடிந்து இடு-மின் – மலை 392,393
(அந்த வழிகள்)முன்பு(எப்படி இருந்தன என்று) நன்றாக அறியாத, நாடு மாறி வரும் புதியவராகிய நீங்கள்
பல வழிகளும் கூடின அந்த சந்திகளைத் தொட்டுத்தடவிப் பார்த்து, அறிகுறியாகப் புற்களை முடிந்து வைப்பீர் –
2.
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை – அகம் 59/12
நல்லந்துவனார் பாடிய சந்தன மரங்கள் நிறைந்த உயர்ந்த மலை
3.
உரைத்த சந்தின் ஊரல் இரும் கதுப்பு – அகம் 102/3
பூசிய மயிர்ச் சாந்தினையுடைய பரந்த கரிய கூந்தல்

சனம்

சனம் – (பெ) மக்கள், people
புனல் மண்டி ஆடல் புரிவான் சனம் மண்டி – பரி 10/9
புதுப்புனலில் திளைத்து ஆடல்புரிவதற்கு மக்கள் கூட்டம் நெருக்கியடித்துக்கொண்டு திரண்டெழ

சமம்

சமம் – (பெ) 1. போர், battle
2. ஏற்றத்தாழ்வின்மை, evenness
1.
செறுநர் தேய்த்து செல் சமம் முருக்கி – திரு 99
கோபமுடையோரை நசுக்கி, மேற்செல்லுகின்ற போரில் கொன்றழித்து
2.
யாழின் இளி குரல் சமம் கொள்வோரும் – பரி 19/42
யாழின்கண் இளிவாய்ப்பாலை, குரல்வாய்ப்பாலை ஆகியவற்றை வலியவும் மெலியவுமாகத் தாக்காது
சமனாகத் தாக்கி அதன் இன்பத்தைக் கொள்வோரும்,

சமழ்ப்பு

சமழ்ப்பு – (பெ) நாணம், shame
கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு
நொந்து அவள் மாற்றாள் இவள் என நோக்க
தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்-மின் – பரி 20/34-36
தலைவியின் காணாமற்போனதாகச் சொல்லப்பட்ட அந்த நகைகளை அந்தப் பரத்தை மேனியில் அணிந்திருப்பதைக் கண்டு,
நொந்துபோய் தலைவியின் மாற்றாள் இவள் என்று அந்தப் பரத்தையைக் கூர்ந்து நோக்க,
அவற்றை இவளுக்குத் தந்த கள்வனாகிய தலைவனின் நாணமிக்க முகத்தைப் பாருங்கள்;

சரணம்

சரணம் – (பெ) பாதம், foot
தாளித நொய் நூல் சரணத்தர் – பரி 10/10
காலுக்கு இதமான மென்மையான நூலினாலான மிதியடிகளைப் பாதத்தில் அணிந்தவராய்,

சருமம்

சருமம் – (பெ) தோல், skin
தொட்டதை, தைப்பு அமை சருமத்தின் தாள் இயை தாமரை – பரி 21/3
நீ அணிந்துகொண்டது, தைப்பதற்காக அமைந்த தோலினால், உன் திருவடிக்குப் பொருந்திய
தாமரை மலர் போன்று செய்யப்பட்டது

சலதாரி

சலதாரி – (பெ) கங்கை நீரைத் தரித்தவன், சிவன், šiva, as having the Ganges in his locks
எரி மலர் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி
விரி சடை பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப
தணிவு_உற தாங்கிய தனி நிலை சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ – பரி 9/4-7
தீயைப் போன்று மலர்ந்திருக்கும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவன் விழச்செய்த பெரு வெள்ளத்தைத்
தன் விரித்த சடையினில் பாரமாக, மலர்ந்து விழும் புதிய மலரைத் தாங்குவது போன்று,
விழுகின்ற வேகம் தணியும்படியாகத் தாங்கிய ஒப்பற்ற நிலையையுடைய சலதாரி என்னும் பெயர்கொண்ட
நீல நிறக் கழுத்தினையுடைய சிவபெருமானுக்கு, மதிப்பு வாய்ந்த கார்த்திகை மகளிரிடத்தில் பிறந்தவனே! நீ

சலம்

சலம் – (பெ) 1. பகைமை, hostility
2. நீர், water
3. சினம், anger
1.
சலம் புகன்று சுறவு கலித்த
புலவு நீர் வியன் பௌவத்து – மது 112,113
பகைமையை விரும்பிச் சுறாமீன்கள் செருக்கித் திரிகின்ற
புலால் (நாறும்)நீரையுடைய அகன்ற கடலிடத்தில்,
2.
தண்ணம் துவர் பல ஊட்டி சலம் குடைவார் – பரி 10/90
குளிர்ச்சியான அழகிய பத்துவகைத் துவர்களையும் தேய்த்துக்கொண்டு நீரில் முழுகுவோர் சிலர்
3.
சலம் புரி தண்டு ஏந்தினவை – பரி 15/58
சினம் பொருந்திய தண்டாகிய படைக்கலத்தைக் கொண்டிருக்கிறாய்;

சவட்டு

சவட்டு – (வி) 1. மெல்லு, masticate
2. மிதித்து அழி, trample
1.
கொடும் கால் மா மலர் கொய்துகொண்டு அவண
பஞ்சாய் கோரை பல்லின் சவட்டி
புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி – பெரும் 216-218
வளைந்த காம்பினையுடைய கரிய பூவைப் பறித்துக்கொண்டு, அங்கு உண்டாகிய
பஞ்சாய்க் கோரையைப் பல்லால் சிதைத்து(க் கிழித்து)
முடிந்த நாரால் கட்டிய உருவாக்கம் இனிதான மாலையை
2.
வம்ப வடுகர் பைம் தலை சவட்டி
கொன்ற யானை கோட்டின் தோன்றும் – அகம் 375/14,15
புதிய வடுகரின் பசிய தலையை மிதித்து அழித்துக்
கொன்ற யானைகளின் கொம்பு போலத் தோன்றும்

சாகாடு

சாகாடு – (பெ) வண்டி, bullock cart
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின்
ஆய் கரும்பு அடுக்கும் – அகம் 116/3,4
கள்ளைக் கொண்டு பலகாலும் திரியும் வண்டி சேற்றில் படிந்தால்
அதனைப் போக்க, சிறந்த கரும்புகளை அடுக்கி வழி செய்துகொடுக்கும்

சாகாட்டாளர்

சாகாட்டாளர் – (பெ) வண்டி ஓட்டுபவர் (சாகாடு = வண்டி), cart driver
சாகாட்டாளர் கம்பலை அல்லது
பூசல் அறியா நன் நாட்டு – பதி 27/14
வண்டியை ஓட்டுபவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியை அன்றி
வேறே போரினால் ஏற்படும் ஆரவார ஒலியை அறியாத நல்ல நாட்டின்

சாடி

சாடி – (பெ) ஒரு பாத்திரம், குடுவை, Jar
கலி மடை கள்ளின் சாடி அன்ன எம்
இள நலம் இல்_கடை ஒழிய – நற் 295/7,8
செருக்குத்தரும் உணவான கள் இருக்கும் சாடியைப் போன்ற எமது
இளமை நலம் வீட்டுக்குள் அடங்கி ஒழிய

சாடு

சாடு – 1. (வி) 1. மேலே விழுந்து அடி, fall on and beat up
2. குத்திக்கிழி, gore
2. (பெ) வண்டி, சாகாடு என்பதன் திரிபு, bullock cart
1.1
கொல் ஏறு சாட இருந்தார்க்கு எம் பல் இரும்
கூந்தல் அணை கொடுப்பேம் யாம் – கலி 101/41,42
கொல்லுகின்ற தன்மையுள்ள காளையை அடக்குபவர்களுக்கு, எமது நிறைந்த கரிய
கூந்தலுடையாளை மணமுடித்துக்கொடுப்போம் நாம்;
1.2
முறம் செவி மறை பாய்பு முரண் செய்த புலி செற்று
———————-
நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை – கலி 52/1-4
தன் முறம் போன்ற செவியின் மறைவிடத்தில் பாய்ந்து தாக்கிய புலியைச் சினந்து,
———————–
மருமத்தைக் கிழித்துத் தன் பகையைத் தீர்த்துக்கொண்ட நீண்ட கொம்புகளையுடைய அழகிய யானை,
2.
குறும் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி – பெரும் 188
சிறிய வண்டியின் சக்கரத்தோடு,கலப்பையையும் சார்த்திவைத்து

சாணம்

சாணம் – (பெ) தழும்பு, scar
சாணம் தின்ற சமம் தாங்கு தட கை – மது 593
(போர்க்கலன்களைப் பலகாலும் கையாளுவதால்) தழும்பேறிப்போன போரைத்தாங்கும் பெரிய கை

சாத்து

சாத்து – 1. (வி) ஏதேனும் ஒன்றன் மேல் சாய்வாக நிறுத்தி வை, rest on something in a slanting position
2. (பெ) 1. சந்தனம், sandal
2. வெளியூர் செல்லும் வணிகர் கூட்டம், trading caravan
1.
பருந்து பட கடக்கு ஒள் வாள் மறவர்
கரும் கடை எஃகம் சாத்திய புதவின் – மலை 489,490
பருந்துகள் (சதைகளைத் தூக்கப்)பாய்ந்திறங்க, கள வெற்றிகொள்ளும் ஒளிரும் வாளையுடைய மறவர்
(தம்)கரிய காம்பினையுடைய வேலைச் சாத்திவைத்திருக்கும் திட்டிவாசல்களையுடைய
2.1
புலர்ந்த சாத்தின் புலரா ஈகை – பதி 61/7
பூசப்பட்டுப் புலர்ந்துபோன சந்தனத்தையும், அப்படிப் புலர்ந்து போகாத ஈகைத்திறத்தையும்
2.2
சாத்து இடை வழங்கா சேண் சிமை அதர – அகம் 291/15
வாணிகக் கூட்டத்தார் வழியில் இயங்குதல் இல்லாத உயர்ந்த மலையுச்சிகளை உடைய

சாந்தம்

சாந்தம் – (பெ) 1. சந்தன மரம், sandalwood tree
2. சந்தனம், sandal paste
1.
குறவர்
அறியாது அறுத்த சிறியிலை சாந்தம்
வறனுற்று ஆர முருக்கி – நற் 64/4-6
குறவர்கள்
அறியாமல் அறுத்த சிறிய இலைகளைக் கொண்ட சந்தனமரம்
காய்ந்துபோய் மிகவும் கெட்டு
2.
இடை சுரத்து எழிலி உறைத்து என மார்பின்
குறும் பொறி கொண்ட சாந்தமொடு
நறும் தண்ணியன்-கொல் நோகோ யானே – நற் 394/7-9
நடுவழியில் மேகங்கள் மழை பெய்ததாக, மார்பிலுள்ள
சிறிய புள்ளிகளைக் கொண்ட சந்தனத்தோடு
நறிய, குளிர்ந்த நெஞ்சத்தினனாய்த் திரும்புகின்றான் போலும். இதற்கு நோவேனோ நான்

சாந்தாற்றி

சாந்தாற்றி – (பெ) விசிறி (பூசிய சாந்தினை ஆற்றுவது), fan
மிசை படு சாந்தாற்றி போல – பரி 21/30
மேலே எடுத்துவைக்கப்பட்ட விசிறியைப் போல

சாந்து

சாந்து – (பெ) 1. சந்தன மரம், சந்தனக் கட்டை, சந்தனக்குழம்பு; பார்க்க: சாந்தம்
sandaleood tree, sandal wood, sandal paste
2. விழுது, மென்கலவை, Paste
1.
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல – நற் 1/4
சந்தனமரத்தில் சேர்த்துக்கட்டிய இனிய தேன்கூடு போல

வேங்கை அம் கவட்டு இடை சாந்தின் செய்த
களிற்று துப்பு அஞ்சா புலி அதள் இதணத்து – நற் 351/6,7
வேங்கை மரத்தின் பிரிகின்ற அழகிய கிளைகளுக்கிடையே சந்தனக் கடைகளால் செய்த
களிற்றின் வலிமைக்கும் அஞ்சாத, புலித்தோல் விரித்த பரணில்

நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின் – திரு 193
நறிய சந்தனத்தைப் பூசின நிறம் விளங்கும் மார்பினையுடைய;
2.
வடு படு மான்_மத_சாந்து ஆர் அகலத்தான் – பரி 16/44
உருக்குலைந்துபோன கத்தூரி மென்கலவை நிறைந்த மார்பினையுடைவன்

சான்ம்

சான்ம் – (வி.மு) சாலும் என்பதன் திரிபு, பார்க்க: சாலும்
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என – மலை 319
திருத்தமாகச்செய்யப்பட்ட வேலையுடைய தலைவனுக்கு(நன்னனுக்கு) புதிய குடியிறையாக அமையும் என்று

சான்ற

சான்ற – (வி.எ) அமைந்த, (சால் என்பதன் இறந்தகால வினையெச்சம்) பார்க்க: சால் (வி)
பாடல் சான்ற நெய்தல் நெடு வழி – சிறு 151
(புலவர்)பாடுதற்கு அமைந்த நெய்தல் நிலத்தே கிடந்த நீண்ட வழியில்,

முலை முகம்_செய்தன, முள் எயிறு இலங்கின,
தலை முடி சான்ற, தண் தழை உடையை – அகம் 7/1,2
முலைகள் கூம்பி நிறைந்த வளர்ச்சியுற்றன. கூரிய பற்கள் மின்னுகின்றன.
தலையில் கூந்தலும் சிறப்பாய் அமைந்துள்ளது. குளிர்ந்த தழையாடையையும் உடுத்தியுள்ளாய்.

சீர் சான்ற விழு சிறப்பின்
சிறு கண் யானை பெறல் அரும் தித்தன் – புறம் 395/17,18
தலைமை அமைந்த செல்வச் சிறப்பும்
சிறியகண்ணையுடைய யானைகளும் உடைய பெறுதற்கு அரிய தித்தன் என்பானின்

சான்றவர்

சான்றவர் – (பெ) சான்றோர், the noble
தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக – கலி 39/48
தகை மிக்கவரும், மணவினைகளின் வகையை அறிந்தவருமான சான்றோர் சூழ்ந்திருக்க,

சான்றவிர்

சான்றவிர் – (பெ) சான்றோர்களே!, term addressing the noble
சான்றவிர் வாழியோ சான்றவிர் என்றும் – கலி 139/1
சான்றோர்களே, சான்றோர்களே! நீர் வாழ்க! எப்பொழுதும்

சான்றாண்மை

சான்றாண்மை – (பெ) மேதகைமை, பெருமை, உயர்வு, nobility, eminence
தகவு உடை மங்கையர் சான்றாண்மை சான்றார்
இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார் – பரி 20/88,89
கற்புடைய மங்கையர் மேதகைமை மிக்க பெரியவர்,
இகழ்ந்தபோதும் கணவரை ஏற்றி வணங்குவர்,

சான்றோர்

சான்றோர் – (பெ) அறிவும் பண்பும் மிக்கவர், men of learning and nobility
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே – நற் 210/7-9
கற்றறிந்த நல்லோர் செல்வம் என்று கூறுவது, தம்மைச் சேர்ந்தோரின்
துயரை நினைத்து அச்சம்கொள்ளும் பண்பினைக்கொண்ட
பரிவுள்ளமாகிய செல்வமே செல்வம் என்பது

சாபம்

சாபம் – (பெ) வில், bow
மாண் வினை சாபம் மார்பு உற வாங்கி – பதி 90/32
சிறந்த வேலைப்பாட்டையுடைய வில்லை மார்பினைத் தொடுமாறு இழுத்து வளைக்கும்போது

சாமனார்

சாமனார் – (பெ) காமனின் தம்பி, Younger brother of Kama ;
காமர் நடக்கும் நடை காண் கவர் கணை
சாமனார் தம்முன் செலவு காண் – கலி 94/33,34
இந்த அழகன் நடக்கும் நடையைப் பார்! ஒருவரையொருவர் வசப்படுத்தும் அம்பினைக்கொண்ட
சாமனுக்கு அண்ணனான மன்மதனின் நடையழகைப் பார்!

சாமரை

சாமரை – (பெ) கன்னச் சாமரை என்னும் குதிரை அணி,
a horse ornament to be worn on the sides of the horse’s face
ஞால் இயல் மென் காதின் புல்லிகை சாமரை – கலி 96/11
தொங்கும் இயல்புடைய மென்மையான காதிலிருக்கும் புல்லிகை என்னும் காதணியே கன்னத்தின் சாமரையாகவும்

சாம்பல்

சாம்பல் – (பெ) வாடிப்போனது (சாம்பிப்போனது), something withered
ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ – குறு 46/1,2
ஆம்பல் பூவின் சாம்பிய இதழ் போன்ற
கூம்பிய சிறகையுடைய வீட்டில் வாழும் குருவி

சாம்பு

சாம்பு – 1. (வி) 1.. வாடு, wither
2. கெட்டுப்போ, perish
3. ஒளிமங்கிப்போ, grow dim
2. (பெ) படுக்கை, bed
1.1.
நீர் செறுவின் நீள் நெய்தல்
பூ சாம்பும் புலத்து ஆங்கண் – பட் 11,12
நீரையுடைய வயலில் உள்ள நீண்ட நெய்தல்
மலர் வாடும் வயல்வெளிகளில்,
1.2
இஃது ஒத்தன் தன்_கண்
பொரு களிறு அன்ன தகை சாம்பி உள்ளுள்
உருகுவான் போலும் உடைந்து – கலி 60/9-11
இவனொருத்தன் தன்னிடத்துள்ள
போரிடும் களிற்றைப் போன்ற தன்மை கெட்டு உள்ளுக்குள்
உருகுவான் போலிருக்கிறான், மனமுடைந்து
1.3
நல்கா ஒருவனை நாடி யான் கொள்வனை
பல் கதிர் சாம்பி பகல் ஒழிய பட்டீமோ
செல் கதிர் ஞாயிறே நீ – கலி 147/33-35
எனக்கு அருள்செய்யாத ஒருவனை நாடி நான் பிடித்துக்கொள்கிறேன், அது வரை
உன்னுடைய பல கதிர்கள் ஒளிமங்கிப்போய் பகல்காலம் முடிய மறைந்துவிடாதே!
சென்று சேரும் கதிர்களையுடைய ஞாயிறே நீ!
2.
கற்றை வேய்ந்த கழி தலை சாம்பின்
அதளோன் துஞ்சும் காப்பின் – பெரும் 150,151
வரகுக்)கற்றை வேய்ந்த கழிகளைத் தலையிலேயும் கொண்ட சேக்கையின்கண், 150
தோல் பாயிலிருப்போன் தூங்கும் பாதுகாப்புள்ள இடத்தையும்

சாயல்

சாயல் – (பெ) 1. மென்மை, tenderness
2. வனப்பு, அழகு, loveliness, gracefulness, beauty
3. மேனி, body
1.
குறும்பொறி கொண்ட நறும் தண் சாயல்
மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன் – திரு 213,214
ஒட்டியாணத்தை(யும்) கொண்டதும், நறிய, குளிர்ந்த, மென்மையுடைய
இடையில் கட்டப்பட்ட, நிலத்தளவும் தொங்குகின்ற துகிலினையுடையன்,
2
மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல் – நெடு 37
மென்மையான வனப்பையும், முத்தை ஒத்த பல்லினையும்,
3
புது நிறை வந்த புனல் அம் சாயல் – மலை 61
புதுப் பெருக்காய் வந்த நீர் (போன்ற)அழகிய மேனியைக்கொண்ட,

சாய்

சாய் – 1. (வி) 1. தாழ்ந்திரு, கவிழ்ந்திரு, incline, hang down
2. வளை, bend
3. மெலிந்துபோ, grow thin
4. ஊறுபடு, get ruined
5. அழி. கெடு, destroy, mar
6. விழச்செய், வீழ்த்து, முறி, breakoff, fell
7. தாழ்த்து,கவிழ், tilt
8. தோல்வியடை, get defeated
2. (பெ) 1. சிராய், செறும்பு, splinter
2. தண்டான்கோரை, Sedge
3. சாயல், மென்மை, வனப்பு, அழகு, loveliness, gracefulness, beauty
4. நுண்மை, fineness
1.1
திறவா கண்ண சாய் செவி குருளை – சிறு 130
திறக்காத கண்ணையுடைய சாய்ந்த செவியினையுடைய குட்டி,
1.2
புனல் புணை அன்ன சாய் இறை பணை தோள் – குறு 168/5
நீரில் விடும் தெப்பத்தைப்போல் வளைந்து இறங்கிய பருத்த தோள்களை
1.3
வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின் – நெடு 150
கச்சை வலித்துக் கட்டினவாய், வளைந்து மெலிந்த இடையினையும்
1.4
நோன் குறட்டு அன்ன ஊன் சாய் மார்பின்
உயர்ந்த உதவி ஊக்கலர் தம்மின் – மது 742,743
வலிய வண்டிச்சக்கர உருளையை ஒத்த ஊன் கெட்ட மார்போடே
உயர்ந்த உதவியை மேலும் முயலுதல் உடையாரைக் கொணர்மின்;
1.5
மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன் – கலி 134/1
மல்லர்களின் வீரத்தை அழித்துக் கெடுத்த, மலராலான குளிர்ந்த மாலையை அணிந்த மார்பினனாகிய திருமால்
1.6
மென் பிணி வன் தொடர் பேணாது காழ் சாய்த்து
கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும் – மது 382,383
மெல்லிய பிணிப்பையுடைய வலிய சங்கிலிகளைப் பொருட்டாக எண்ணாமல், அவை கட்டின தறியை முறித்து,
கம்பத்தை விட்டுச் சுழலும் கடாத்தையுடைய யானையும்;
1.7
பணிலம் கலி அவிந்து அடங்க காழ் சாய்த்து
நொடை நவில் நெடும் கடை அடைத்து – மது 621,622
சங்குகள் ஆரவாரம் ஒழிந்து அடங்கிக் கிடக்க, சட்டக்காலைத் தாழ்த்திப்
பண்டங்களுக்கு விலைகூறும் நெடிய கடையை அடைத்து,
1.8
இரு பெரு வேந்தரொடு வேளிர் சாய
பொருது அவரை செரு வென்றும் – மது 55,56
இரண்டு பெரிய (முடியுடைய)வேந்தருடன் குறுநிலமன்னர் பலரும் வீழ 55
பொருது அவரைப் போரில் வென்றும்,
2.1
இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன
குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் – திரு 312,313
கரிய பனையின் – (உள்ளே)வெளிற்றினையுடைய – புல்லிய செறும்பை ஒத்த
கரிய நிறத்தையுடைய மயிரினையுடைய உடம்பினையும் வளைந்த அடியினையுமுடைய கரடி
2.2
பைம் சாய் கொன்ற மண் படு மருப்பின்
கார் ஏறு பொருத கண் அகன் செறுவின் – பெரும் 209,210
பசிய கோரையை (அடியில்)குத்தி எடுத்த மண் படிந்த கொம்பினையுடைய
கரிய ஆனேறுகள் பொருத இடமகன்ற வயல்களில்,
2.3
துவ்வா நறவின் சாய் இனத்தானே – பதி 60/12
நுகரமுடியாத நறவாகிய நறவு என்னும் ஊரில் உள்ள மென்மையான மகளிர் நடுவே
2.4
சாய் அறல் கடுக்கும் தாழ் இரும் கூந்தல் – பதி 74/3
நுண்ணிய கருமணலைப் போன்ற, தாழ்ந்து இறங்கும் கரிய கூந்தலைக் கொண்ட

சாரல்

சாரல் – (பெ) மலையின் சரிவான பகுதி, slope of a hill.
இங்கே அருவிகள் பாய்ந்து வீழும்.
பிறங்கு வெள் அருவி வீழும் சாரல் – சிறு 90

மூங்கில்கள் நெருங்கி வளர்ந்திருக்கும்.
கழை வளர் சாரல் களிற்று இனம் நடுங்க – மது 242

குறிஞ்சிப்பூக்கள் கூட்டமாய் வளரும்
சாரல்
கரும் கோல் குறிஞ்சி – குறு 3/2,3

பலாப்பழங்கள் பழுத்துத்தொங்கும்.
சாரல் பலவின் கொழும் துணர் நறும் பழம் – ஐங் 214/1

இதனைச் சீர்ப்படுத்திக் குறவர் தினை விதைத்து வளர்ப்பர்.
தினை விளை சாரல் கிளி கடி பூசல் – மது 291

ஆங்காங்கே குடிசைகள் அமைத்து வாழ்வர்
சாரல் சிறுகுடி ஈங்கு நீ வரலே – நற் 168/11

சாரிகை

சாரிகை – (பெ) முன்னால் நகர்கை, onward movement
வெண் கிடை மிதவையர் நன் கிடை தேரினர்
சாரிகை மறுத்து தண்டா உண்டிகை – பரி 6/35,36
வெண்மையான சாரம் அமைத்த தெப்பத்தினையுடையவரும், நல்ல இருக்கைகள் கொண்ட தேரில் வருபவர்களும்,
முன்னால் செல்வதற்கு இடங்கொடாமல், குறைவில்லாத மக்கள் கூட்டம்,

சார்த்து

சார்த்து – (வி) 1. சாத்து, ஒன்றின் மேல் சாய்ந்த நிலையில் இருத்து, rest something as a slant
2. நிரப்பு, fill, replenish
1.
குறும் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி
நெடும் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில் – பெரும் 188,189
குறிய சகடத்தின் உருளையோடு கலப்பையையும் சாய்த்து வைக்கப்பட்டமையால்
நெடிய சுவரிடத்தே தேய்ந்த புகை சூழ்ந்த கொட்டிலினையும் உடைய
2.
ஓங்கு நிலை தாழி மல்க சார்த்தி
குடை அடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலை – அகம் 275/1-3
உயர்ந்த நிலையினதாகிய சாடியில் நிறைய ஊற்றி நிரப்பி,
பனங்குடையால் முகந்த நீரினைச் சொரிந்து வளர்த்த
பந்தலில் படந்த வயலைக் கொடியை

சாறு

சாறு – (பெ) 1. விழா, festival
2. கரும்பு, பழம் முதலியவற்றின் பிழிவு, Juice
1.
சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி – திரு 283
விழாவெடுத்த களத்தின் பொலிவுபெறத் தோன்றி,
2.
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசை-மின் – பெரும் 262
கரும்பினது இனிய சாற்றை விருப்பமுடையீராய் பருகுவீர்

சாற்று

சாற்று – (வி) 1. பலர் அறியக் கூறு, தெரிவி, அறிவி, declare, announce, proclaim
2. நிரப்பு, நிறை, fill
1.
சில்_பத_உணவின் கொள்ளை சாற்றி
பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி – பெரும் 64,65
உப்பாகிய உணவின் விலையை அறிவித்தவாறு
பல எருதுகளையுடைய உப்புவாணிகர் ஊர்களுக்குச் செல்லுகின்ற நெடிய வழி
2.
நிவந்து செல் நீத்தம் குளம் கொள சாற்றி
களிறு மாய்க்கும் கதிர் கழனி – மது 246,247
ஓங்கிச் செல்லும் வெள்ளம் குளங்கள் கொள்ளும்படி நிறைப்ப,
யானையை மறைக்கும் அளவுள்ள கதிர்களைக் கொண்ட வயல்களிலும்,

சால

சால – (வி.அ) மிக, மிகவும், very, extremely
சாரல் நீள் இடை சால வண்டு ஆர்ப்ப – நற் 344/7
மலைச் சாரலின் இடைவெளியில் மிகவும் வண்டுகள் ஆரவாரிக்க

சாலகம்

சாலகம் – (பெ) சாளரம், பலகணி, latticed window
நீல நிரை போது உறு காற்கு உலைவன போல்
சாலகத்து ஒல்கிய கண்ணர் – கலி 83/12,13
நீல நிறத்தில் வரிசையாக நிற்கும் மலர்கள், மோதுகின்ற காற்றால் முன்னும் பின்னும் அசைவது போல்
சாளரங்களின் வழியே உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கும் மகளிர்

சாலா

சாலா – (வி.எ) அமையாத, be not suitable, inappropriate
உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து – கலி 77/10
இருக்கிறது என்பதற்கு அமையாத என் உயிர் ஒரேயடியாகப் பிரிந்துவிடும் என்று உணர்ந்தும்

சாலாமை

சாலாமை – (பெ) முடிவடையாமை, முற்றுப்பெறாமை, being unfinished
அவன் கை விட்டனனே
தொல் நசை சாலாமை – அகம் 356/7,8
அவன் என் கையை விட்டுவிட்டான்,
நீண்ட நாளாக வரும் விருப்பம் முற்றுப்பெறாமலேயே

சாலார்

சாலார் – (பெ) சான்றோர் என்பதன் எதிர்ச்சொல், ignoble
சான்றோர்
சான்றோர்_பாலர் ஆப
சாலார் சாலார்_பாலர் ஆகுபவே – புறம் 218/5-7
சிறந்த பண்புடையோர்
சிறந்த பண்புடையோர் பக்கத்தவர் ஆவர்
சிறந்த பண்பு அற்றவர், சிறந்த பண்பு அற்றவர் பக்கத்தவர் ஆவர்

சாலி

சாலி – (பெ) செந்நெல், a superior quality of paddy
சாலி நெல்லின் சிறை கொள் வேலி – பொரு 246
செந்நெல் விளைந்துநின்ற, வரம்பு கட்டின ஒரு வேலி அளவுள்ள நிலம்,

சாலினி

சாலினி – (பெ) 1. ஆவி பிடித்த நிலையில் இறைவாக்கு உரைக்கும் பெண்,
woman who pronounces oracles under the influence of sprit
2. அருந்ததி, Wife of Vasiṣṭha
1.
கடும் சூல் மகளிர் பேணி கைதொழுது
பெரும் தோள் சாலினி மடுப்ப – மது 609,610
முதிர்ந்த சூல்கொண்ட மகளிரைக் காத்து, கைகுவித்துத் தொழுது,
பெரிய தோளினையுடைய இறைவாக்குப்பெண் மடைகொடுக்க
2.
வட_வயின் விளங்கு ஆல் உறை எழு_மகளிருள்
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய
அறுவர் மற்றையோரும் அ நிலை அயின்றனர் – பரி 5/43-45
வானத்தில் வடக்குத்திசையில் ஒளிவிட்டுத் திகழும் கார்த்திகை மீனாய் இருக்கும் ஏழு மகளிருள்
கடவுள் கற்பினையுடைய ஒரு மீனாகிய அருந்ததி ஒழிய
அறுவராகிய ஏனையோரும் அப்பொழுதே உண்டனர்;

சாலியர்

சாலியர் – (வி) நிறைந்திருப்பதாக, let it be full
அறம் சாலியரோ அறம் சாலியரோ – ஐங் 312/1
அறத்தால் நிறைந்திருப்பதாக! அறத்தால் நிறைந்திருப்பதாக!

சாலும்

சாலும் – (வி.மு) 1. போதுமானது, it is enough
2. அமைந்திருக்கிறது, It so happens to be
1.
நசை தர
வந்தது சாலும் வருத்தமும் பெரிது என – மலை 545,546
(என்மீதான)விருப்பம் (உம்மைக்)கொண்டுவந்துசேர்க்க
(நீர்)வந்ததே போதும், (வேறு புகழ்மொழி வேண்டாம்)(வழிவந்த)வருத்தமும் பெரியது’ என,
2.
நகை அமர் காதலரை நாள்_அணி கூட்டும்
வகை சாலும் வையை வரவு – பரி 6/12,13
மகிழ்ச்சி பொருந்திய தம் காதலரை நீர் விளையாட்டுக்குரிய நாளணிகளை அணியச்செய்விக்கும்
வகையில் அமைந்திருக்கிறது வையையில் நீர் வரவு;

சாலேகம்

சாலேகம் – (பெ) சாளரம், பலகணி, பார்க்க : சாலகம்
முத்து உடை சாலேகம் நாற்றி – நெடு 125
முத்துக்களை உடைய (தொடர் மாலைகளைப்)பலகணிகள்(போன்று) தொங்கவிட்டு

சாலை

சாலை – (பெ) 1. வேள்விச்சாலை, sacrificial hall
2. கூடம், கொட்டில், cow shed
1.
பல்_சாலை_முதுகுடுமியின் – மது 759
(பலவாகிய வேள்விச் சாலைகளைக் கண்ட பாண்டியன்)பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று
2.
பகட்டு எருத்தின் பல சாலை – பட் 52
பெரிய எருதுகளுக்கான (அவற்றிற்கு வைக்கோல் இடும்)பல சாலைகளையும்

சால்

சால் – 1 (வி) 1. பொருந்தியிரு, அமைந்திரு, be constituted, comprise
2. மிகு, நிறைந்திரு, be abundant, full
3. சிறப்புடன் அல்லது பெருமையுடன் இரு, be great, noble
2. (பெ) உழும்போது கொழு நிலத்தில் ஏற்படுத்தும் நீண்ட பள்ளம், furrow in ploughing
1.1.
திறல் சால் வென்றியொடு தெவ்வு புலம் அகற்றி – சிறு 246
வலிமை பொருந்திய வெற்றியோடே பகைவரின் நிலத்தைக் காலிசெய்து,
1.2
நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவி – மலை 554
உயர்ந்த மலையிலிருந்து கீழேவிழுகின்ற நீர்ப்பெருக்கு நிறைந்த அருவியின்
1.3
அணங்கு சால் அரிவையை காண்குவம் – அகம் 114/15
தெய்வம் போல் சிறந்த நம் தலைவியைக் காண்போம்
2.
குடி நிறை வல்சி செம் சால் உழவர் – பெரும் 197
குடியிருப்பு நிறைந்த, உணவினையுடைய செவ்விய சாலாக உழுகின்ற உழவர்கள்

சால்பு

சால்பு – (பெ) உயர்வு, சிறப்பு, மேன்மை, நற்பண்பு, பெருந்தன்மை, excellence of character and conduct, nobility
சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்
மாசு அற கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல் – குறி 15,16
(தமக்குரிய)நற்குணங்களின் தன்மையும், உயர்ந்த நிலையும், ஒழுக்கமும் சீர்குலைந்தால், 15
கறை போகும்படி கழுவி பொலிவுள்ள புகழை (மீண்டும்)நிறுவுதல்,

சாவகர்

சாவகர் – (பெ) சமணரில் விரதம் காக்கும் இல்லறத்தார், jains in domestic life following holy practices
வண்டு பட பழுநிய தேன் ஆர் தோற்றத்து
பூவும் புகையும் சாவகர் பழிச்ச – மது 475,476
வண்டுகள் படியும்படி பருவம் முதிர்ந்த தேன் நிறைந்த தோற்றத்தையுடைய
பூக்களையும், புகையினையும் (ஏந்தி)விரதங்கொண்டோர் வாழ்த்திநிற்ப

சாவம்

சாவம் – (பெ) சாபம், வில், பார்க்க: சாபம்
சாவம் தாங்கிய சாந்து புலர் திணி தோள் – சிறு 98
வில்லை எடுத்த சந்தனம் பூசிப் புலரும் திண்ணிய தோளினையும்,

சிகழிகை

சிகழிகை – (பெ) 1. தலைமயிர் முடிப்பு, hair knot
2. தலைமாலை, Arched wreaths of flowers over the head of an idol or a great person
1.
பொலம் புனை மகர_வாய் நுங்கிய சிகழிகை
நலம்பெற சுற்றிய குரல் அமை ஒரு காழ் – கலி 54/6,7
பொன்னால் செய்யப்பட்ட மகரமீன் வடிவான தலைக்கோலத்தை விழுங்கிய கூந்தல் முடிப்பை
அழகுபெறச் சுற்றிய பூங்கொத்துக்கள் அமைந்த ஒரு பூச்சரத்தை
2.
பால் பிரியா ஐம்_கூந்தல் பல் மயிர் கொய் சுவல்
மேல் விரித்து யாத்த சிகழிகை செ உளை – கலி 96/9
ஐந்து வகையாகப் பிரித்துவிட்ட கூந்தலே பல மயிர்களைக் கொய்துவிட்ட பிடரி மயிராகவும்,
அதற்குமேல் விரித்துக் கட்டிய தலைமாலையே சிவந்த தலையாட்டமாகவும்,

சிதடன்

சிதடன் – (பெ) குருடன், blind
துஞ்சு புலி இடறிய சிதடன் போல – புறம் 73/7
துயில்கின்ற புலியை இடறிய குருடன் போல

சிதடி

சிதடி – (பெ) சிள்வண்டு, சுவர்க்கோழி, cricket
சிதடி கரைய பெரு வறம் கூர்ந்து – பதி 23/2
சிள்வண்டு ஒலிக்கும் அளவுக்குப் பெரிய வறட்சி உண்டாகி

சிதடு

சிதடு – (பெ) 1. உள்ளீடற்றது, hollow
2. குருடு, blind
1.
சிதட்டு காய் எண்ணின் சில் பெயல் கடை நாள் – குறு 261/2
உள்ளீடற்ற காயையுடைய எள் பயிருக்கான சிறிதளவு மழைபெய்யும் கார்காலத்து இறுதிநாட்களில்
2.
சிறப்பு இல் சிதடும் உறுப்பு இல் பிண்டமும் – புறம் 28/1
சிறப்பில்லாத குருடும், வடிவில்லாத தசைத் திரளும்

சிதரல்

சிதரல் – (பெ) சிதறுதல், splashing
தளை பிணி அவிழா சுரி முக பகன்றை
சிதரல் அம் துவலை தூவலின் மலரும் – அகம் 24/3,4
கட்டுண்ட பிணிப்பு அவிழாத சுரிந்த முகத்தையுடைய பகன்றையின் போதுகள்
சிதறியடிக்கின்ற அழகிய மழைத்துளிகள் வீசுதலால் மலர்கின்ற

சிதர்

சிதர் – 1. (வி) 1. சிந்து, சிதறு, scatter, strew
2. பிரி, விலக்கு, split
3. கிளறு, scratch
4. நைந்துபோ, be worn out
2. (பெ) 1. மழைத்துளி, rain drop
2. வண்டு, beetle
1.1.
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினை – சிறு 254
சிந்துகின்ற அரும்புகளையுடைய முருக்கினுடைய மிகவும் வளர்ந்த நெடிய கிளையினில்
1.2
மிளகு பெய்து அனைய சுவைய புன் காய்
உலறு தலை உகாஅய் சிதர் சிதர்ந்து உண்ட – நற் 66/1,2
மிளகினைப் பெய்து சமைத்தது போன்ற சுவையை உடைய புல்லிய காய்களை,
உலர்ந்த உச்சிக்கிளைகளைக் கொண்ட உகாய் மரத்தில், வண்டுகளை விலக்கிவிட்டு உண்டு,
1.3
சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம் – நற் 297/7
வண்டுகள் மொய்க்கும் அரும்புகளைக் கொத்தித் தூக்கியெறிந்த, கிளறுகின்ற கால்களையுடைய கோழி
1.4
சிதாஅர் வள்பின் சிதர் புற தடாரி – புறம் 381/12
துண்டித்த வார்களால் கட்டப்பட்ட நைந்துபோன வெளிப்பக்கத்தையுடைய தடாரிப்பறை
2.1
சிதர் வரல் அசை வளிக்கு அசைவந்து ஆங்கு – முல் 52
துவலைத் தூறலுடன் மெல்ல வரும் காற்றிற்கு அசைந்தாற்போல
2.2
மிளகு பெய்து அனைய சுவைய புன் காய்
உலறு தலை உகாஅய் சிதர் சிதர்ந்து உண்ட – நற் 66/1,2
மிளகினைப் பெய்து சமைத்தது போன்ற சுவையை உடைய புல்லிய காய்களை,
உலர்ந்த உச்சிக்கிளைகளைக் கொண்ட உகாய் மரத்தில், வண்டுகளை விலக்கிவிட்டு உண்டு,

சிதர்வை

சிதர்வை – (பெ) நைந்துபோன துணி, worn out cloth
பாசி அன்ன சிதர்வை நீக்கி – பெரும் 468
பாசியின் வேரை ஒத்த நைந்துபோன கந்தையை அகற்றி,

சிதலை

சிதலை – (பெ) சிதல், கறையான், பார்க்க: சிதல்
சிதலை செய்த செம் நிலை புற்றின் – அகம் 112/2
கறையான் எடுத்த சிவந்த நிலையினையுடைய புற்றினது

சிதல்

சிதல் – (பெ) கறையான், termite
காழ் சோர் முது சுவர் கண சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி – சிறு 133,134
(ஊடு)கழிகள் (ஆக்கையற்று)விழுகின்ற பழைய சுவரிடத்தெழுந்த திரளான கறையான் அரித்துக் குவித்த
மண்துகள்களில் பூத்தன – உட்துளை(கொண்ட) காளான்:

சிதவலர்

சிதவலர் – (பெ) கிழிந்த ஆடையை அணிந்திருப்போர், சிதவல் = கிழிந்த ஆடை, rag
தண்டு உடை கையர் வெண் தலை சிதவலர் – குறு 146/3
தண்டினைப் பிடித்த கையினரும், நரைத்த தலையில் துகில்முடித்திருப்போரும்

சிதார்

சிதார் – (பெ) கிழிந்துபோன துணி, ஆடை, worn out cloth
தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கி – புறம் 393/16
மிகவும்பழையதாகிப்போன கிழிந்த ஆடையை முற்றிலும் நீக்கி

சித்தம்

சித்தம் – (பெ) மனம். mind
செறி நகை சித்தம் திகைத்து – பரி 20/47
செறிவான பற்களைக் கொண்ட தலைவி, அதைக் கேட்டு மனம் திகைத்து

சிந்துவாரம்

சிந்துவாரம் – (பெ) கருநொச்சி, five-leaved chaste tree, vitex negundo
வஞ்சி பித்திகம் சிந்துவாரம் – குறி 89

சினவு

சினவு – 1. (வி) கொதித்தெழு, rise in fury
2. (பெ) கோபித்தல், getting angry
1.
இருளும் உண்டோ ஞாயிறு சினவின் – புறம் 90/5
இருளும் தங்கியிருக்குமோ, ஞாயிறு சினந்தெழுந்தால்
2.
சினவு கொள் ஞமலி செயிர்த்து புடை ஆட – அகம் 388/14
கோபித்தலைக் கொண்ட நாய் கறுவித் தன் பக்கலிலே தொடர

சினை

சினை – (பெ) 1. கிளை, branch
2. கருக்கொண்ட நிலை, சூல், pregnancy in animals
3. சிலந்தி வாயினால் செய்யும் வலை, cobweb
4. முட்டை, egg
1.
நளி சினை வேங்கை நாள்_மலர் நச்சி – சிறு 23
செறிந்த கிளைகளையுடைய வேங்கை மரத்தின் அன்றைய மலர்களை விரும்பி
2.
சினை சுறவின் கோடு நட்டு – பட் 86
சினைப்பட்ட சுறா மீனின் கொம்பை நட்டு,
3.
கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய
கான புறவின் சேவல் வாய் நூல்
சிலம்பி அம் சினை வெரூஉம் – நற் 189/7-9
கொலைத்தொழிலில் வல்ல வேட்டுவன் விரித்த வலையினின்றும் தப்பிப் பறந்துபோன
காட்டுப்புறாவின் சேவல், வாயில் நூலைக்கொண்டு பின்னும்
சிலந்தியின் அழகிய வலையைக் கண்டு வெருண்டோடும்
4.
உகாஅத்து
இறவு சினை அன்ன நளி கனி உதிர – குறு 274/1,2
உகாய் மரத்தின்
இறால்மீனின் முட்டைகளைப் போன்ற செறிந்த பழங்கள் உதிரும்படியாக

சினைஇ

சினைஇ – (வி.எ) சினந்து என்பதன் திரிபு, being angry
அரசு பகை தணிய முரசு பட சினைஇ
ஆர் குரல் எழிலி கார் தொடங்கின்றே – ஐங் 455/1,2
அரசனின் பகையுணர்வு தணியும்படியும், முரசின் ஒலிகள் ஓயும்படியும், சினங்கொண்டு
மிகுந்த முழக்கத்தோடு மேகங்கள் கார்காலத்தைத் தொடங்கிவிட்டன;

சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்ப
துனைஇய மாலை துன்னுதல் காணூஉ – குறி 229,230
சினங்கொண்ட மன்னன் படையெடுத்துச் செல்லும் போரைப் போன்று
விரைந்துவரும் மாலை நெருங்கிவருதலைக் கண்டு

சிமயம்

சிமயம் – (பெ) உச்சி, top
தேம் படு சிமய பாங்கர் பம்பிய
குவை இலை முசுண்டை வெண்பூ – அகம் 94/1,2
தேன் அடை பொருந்திய உச்சி மலையின் பக்கத்தில் செறிந்த
குவிந்த இலைகளையுடைய முசுண்டையின் வெண்மையான பூக்கள்

சிமிலி

சிமிலி – (பெ) உறி, Rope-loop for suspending pots
கல் பொளிந்து அன்ன இட்டு வாய் கரண்டை
பல் புரி சிமிலி நாற்றி – மது 482,483
கல்லைப் பொளிந்தாற் போன்று ஒடுங்கிய வாயை உடைய குண்டிகையைப்
பல வடங்களையுடைய நூலுறியில் தூக்கி

சிமை

சிமை – (பெ) உச்சி, top (of a mountain)
வரை ஓங்கு உயர் சிமை கேழல் உறங்கும் – ஐங் 268/3
மலையில் ஓங்கியெழும் உயர்ந்த உச்சியில் காட்டுப்பன்றி உறங்கும்

சிமையம்

சிமையம் – (பெ) சிமை, உச்சி, பார்க்க : சிமை
வான் தோய் சிமையம் தோன்றலானே – அகம் 378/24
வானை அளாவிய உச்சி மலை காணப்பெறுதலின்

சிரகம்

சிரகம் – (பெ) தண்ணீர்ச்செம்பு, water-pot
உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு அன்னை
அடர் பொன் சிரகத்தால் வாக்கி – கலி 51/6,7
உண்பதற்கு நீர் வேண்டிவந்துள்ளேன் என்று சொல்லி வந்தவனுக்கு, அன்னை
பொன்னாலான கலத்தில் ஊற்றிக்கொடுத்து

சிரறு

சிரறு – (வி) 1. பிணக்கம் கொள், feign anger
2. சிதறு, scatter
1.
ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும் நல்லார்
சிரறுபு சீற சிவந்த நின் மார்பும் – கலி 88/12,13
ஒளிரும் மலர்கள் வாடிநிற்கும் உன் தலைமாலையும், நல்ல அந்த பரத்தையர்
பிணக்கம் கொண்டு சீற்றத்துடன் அடித்ததால் சிவந்துபோன உன் மார்பும்
2.
வரை_அகம் நண்ணி குறும் பொறை நாடி
தெரியுநர் கொண்ட சிரறு உடை பைம் பொறி
கவை மரம் கடுக்கும் கவலைய மருப்பின்
புள்ளி_இரலை – பதி 74/7-10
பெரிய மலைகளின் சென்று, சிறிய குன்றுகளில் தேடி,
அலைந்துதிரிவோர் பிடித்துக்கொண்டு வந்த பரவலான பளிச்சென்ற புள்ளிகளையுடைய,
கிளைத்துப் பிரிந்த கோலைப் போன்ற பிளவுபட்ட கொம்பினையுடைய,
புள்ளி மானின்

சிரல்

சிரல் – (பெ) மீன்கொத்திப்பறவை, kingfisher
புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல் – சிறு 181
புலால் நாறும் கயலை(முழுகி) எடுத்த பொன்(னிறம் போலும்) வாயையுடைய (நீல)மணி(போன்ற) மீன்கொத்தியின்

சிறகர்

சிறகர் – (பெ) சிறகு, wing
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ – குறு 46/2
கூம்பிய சிறகையுடைய வீட்டில் வாழும் குருவி

சிறார்

சிறார் – (பெ) சிறுவர், children
புலிப்பல்தாலி புன் தலை சிறாஅர் – புறம் 374/9
புலிப்பல் கோத்த சங்கிலியை(க் கழுத்தில்) அணிந்த புல்லிய தலையை உடைய சிறுவர்கள்

சிறுகாரோடன்

சிறுகாரோடன் – (பெ) பார்க்க: காரோடன்
சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய
கல் போல் – அகம் 356/9,10
சிறிய பணை செய்வான் அரக்கோடு சேர்த்து இயற்றிய
சாணைக் கல்லினைப் போல

சிறுகாலை

சிறுகாலை – (பெ) அதிகாலை, dawn
சிறுகாலை இல் கடை வந்து – கலி 97/3
விடியற்காலையில் எம் வாயிலில் வந்து

சிறுகு

சிறுகு – (வி) சிறிதாக ஆகு, சுருங்கு, become small, shrink
நுதல் அடி நுசுப்பு என மூ வழி சிறுகி
கவலையால் காமனும் படை விடு வனப்பினோடு – கலி 108/3,4
நெற்றி, அடி, இடை ஆகிய மூன்றும் சிறுத்து,
தனக்கு வேலை இல்லை என்ற கவலையால் காமனும் காமக்கணை வீசுவதை விட்டுவிட்ட வனப்பினோடு,

சிறுகுடி

சிறுகுடி – (பெ) 1. குறிஞ்சிநிலத்து ஊர், Village in a hilly tract
2. சிற்றூர், a small village
1.
கொடும் தொழில் வல் வில் கொலைஇய கானவர்
நீடு அமை விளைந்த தேம் கள் தேறல்
குன்றக சிறுகுடி கிளையுடன் மகிழ்ந்து
தொண்டக சிறுபறை குரவை அயர – திரு 194-197
கொடிய தொழிலையுடைய வலிய வில்லால் கொல்லுதலைச் செய்த குறவர்
நெடிய மூங்கிலில் இருந்து முற்றின தேனால் செய்த கள்தெளிவை
மலையிடத்தேயுள்ள தம் ஊரில் இருக்கின்ற தம் சுற்றத்தோடு உண்டு மகிழ்ந்து
தொண்டகமாகிய சிறுபறை(யின் தாளத்திற்கேற்ப)க் குரவைக்கூத்தைப் பாட,
2.
கானல் அம் சிறுகுடி கடல் மேம் பரதவர் – நற் 4/1
கடற்கரைச் சோலையிடத்தே அமைந்த அழகான சிறிய ஊரில் வாழும் கடல்மேற்செல்லும் பரதவர்கள்

சிறுசெங்குரலி

சிறுசெங்குரலி – (பெ) ஒரு பூ, கருந்தாமக்கொடி, A mountain creeper, water chest nut, trapa bispinosa roxb
சேடல் செம்மல் சிறுசெங்குரலி – குறி 82

சிறுபுறம்

சிறுபுறம் – (பெ) முதுகு, back
துளி தலை தலைஇய மணி ஏர் ஐம்பால்
சிறுபுறம் புதைய வாரி குரல் பிழியூஉ – அகம் 8/15-16
மழைத்துளிகளைக் கொண்ட நீலமணி போன்ற அழகிய கூந்தலைப்
பின்புறம் மறையப் பின்னே கோதிவிட்டு. கூந்தலைக் கொத்தாகப் பிழிந்து

சிறுமாரோடம்

சிறுமாரோடம் – (பெ) செங்கருங்காலி, Red catechu, Acaria catechu-sundra;
குல்லை பிடவம் சிறுமாரோடம் – குறி 78

சிறுவித்தம்

சிறுவித்தம் – (பெ) சிறுதாயம், A cast with small value in dice play;
சிறுவித்தம் இட்டான் போல் செறி துயர் உழப்பவோ – கலி 136/16
பெரிய எண் பெறவேண்டிய இடத்தில் சிறிய தாயம் இட்டவனைப் போல் மிகுந்த துயரில் வருந்தமாட்டாளோ?

சிறுவெண்காக்கை

சிறுவெண்காக்கை – (பெ) ஒரு கடற்கரைப் பறவை, ஆலா, tern
பெரும் கடற்கரையது சிறுவெண்காக்கை
இரும் கழி துவலை ஒலியின் துஞ்சும் – ஐங் 163/1,2
பெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
கரிய கழியில் அலைகள் நீர்திவலைகளைத் தெறிக்கும் ஒலியைக் கேட்டுத் தூங்கும்

சிறை

சிறை – 1. (வி) சிறைப்பட்டிரு, மூடியிரு, confine, restrain
2. (பெ) 1. சிறகு, wing
2. வரப்பு, boundary
3. பிணிப்பு, holding
4. அடக்குதல், restraint
5. பக்கம், ஓரம், side, edge
6. அணை, தடுப்பு, dam, block
7. இரண்டு பக்கங்களிலும் வீடுகளைக் கொண்ட தெருவின் ஒரு பக்கம், one side of a street
8. சிறைச்சலை, prison
9 காவல், guard, watch
1.
சிறை நாள் ஈங்கை உறை நனி திரள் வீ – நற் 79/1
மூடியிருக்கின்ற, ஈங்கை மரத்தின் தேன்துளி மிகவும் திரண்டுள்ள அன்றைய மலர்கள்
2.1.
அம் சிறை வண்டின் அரி கணம் ஒலிக்கும் – திரு 76
அழகிய சிறகையுடைய வண்டின் அழகிய திரள் ஆரவாரிக்கும்
2.2.
சாலி நெல்லின் சிறை கொள் வேலி – பொரு 246
செந்நெல் விளைந்துநின்ற, வரம்பு கட்டின ஒரு வேலி அளவுள்ள நிலம்,
2.3.
அள்ளல்
கழி சுரம் நிவக்கும் இரும் சிறை இவுளி – நற் 63/8,9
சேறு நிரம்பிய
கழியின் வழியாக நிமிர்ந்து செல்லும் இறுகிய பிணிப்பை உடைய குதிரைகளை
2.4.
நிறைய பெய்த அம்பி காழோர்
சிறை அரும் களிற்றின் பரதவர் ஒய்யும் – நற் 74/3,4
நிறைய ஏற்றப்பட்ட தோணியை, தாற்றுக்கோல் வைத்திருப்பவர்கள்
அடக்குதற்கு அரிய களிற்றினை பிணித்துச் செலுத்துவதைப் போல, பரதவர்கள் செலுத்தும்
2.5.
யாரும் இல் ஒரு சிறை இருந்து
பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே – நற் 193/8,9
யாருமில்லாமல் ஒரு ஓரத்தில் கிடந்து
பெரிய துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருப்பவளை வருத்தவேண்டாம்.
2.6
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும்
சிறை அடு கடும் புனல் அன்ன – நற் 369/9,10
கங்கை எனும் பெரிய ஆற்றின் கரையைக் கடந்து இறங்கிவரும்
அணையை உடைத்துச் செல்லும் விரைவான வெள்ளப்பெருக்கைப் போல
2.7
மன்றம் போந்து மறுகு சிறை பாடும் – பதி 23/5
ஊர்ப்பொதுவிடத்துக்குப் போய் தெருவின் இரண்டு பக்கங்களிலும் பாடுகின்ற
2.8
பிணி கோள் அரும் சிறை அன்னை துஞ்சின் – அகம் 122/5
பிணித்தலைக் கொண்ட அரிய சிறையினைப் போன்ற அன்னை உறங்கினும்
2.9
வீங்கு சிறை வியல் அருப்பம் – புறம் 17/28
மிகுந்த காவலையுடைய அகன்ற அரணினையும்

சிற்றடிசில்

சிற்றடிசில் – (பெ) விளையாட்டுச் சோறு, faked boiled rice used during play
மென் பாவையர்
செய்த பூ சிற்றடிசில் இட்டு உண்ண ஏற்பார்
இடுவார் மறுப்பார் – பரி 10/104-106
மென்மை வாய்ந்த மகளிர்
தாம் செய்த அழகிய சிறுசோற்றைக் கைகளில் இடுவதுபோன்று வைக்க அதனை உண்பது போன்று ஏற்பாருக்கு
இடுவார் சிலர்; இட மறுப்பார் சிலர்;

சிற்றினம்

சிற்றினம் – (பெ) நல்லறிவில்லாத தாழ்ந்தோர் சேர்க்கை, Company of low people;
செய்ந்நன்றி அறிதலும் சிற்றினம் இன்மையும் – சிறு 207

சிற்றில்

சிற்றில் – (பெ) 1. சிறிய வீடு, small house
2. சிறுமியர் கட்டி விளையாடும் மணல்வீடு, Toy house of sand built by little girls in play
1.
சிற்றில் நல் தூண் பற்றி நின் மகன்
யாண்டு உளனோ என்று வினவுதி – புறம் 86/1,2
சிறிய இல்லின்கண் நல்ல தூணைப் பற்றிக்கொண்டு, உன் மகன்
எவ்விடத்து உள்ளானோ என்று கேட்கிறாய்
2.
கானல்
தொடலை ஆயமொடு கடலுடன் ஆடியும்
சிற்றில் இழைத்தும் சிறு சோறு குவைஇயும் – அகம் 110/5-7
கடற்கரைச் சோலையில்
மாலை போன்ற விளையாட்டுத் தோழியருடன் கடலில் சேர்ந்து விளையாடியும்,
சிறுவீடு கட்டியும், சிறுசோற்றை அட்டுக் குவித்தும்

சிலதர்

சிலதர் – (பெ) ஏவல்செய்வோர், subordinates
சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின் – பெரும் 324
ஏவல் செய்வோர் காக்கும் மிகவும் உயரமான பண்டசாலைகளையும்,

சிலம்பி

சிலம்பி – (பெ) சிலந்தி, spider
சிலம்பி வலந்த வறும் சினை வற்றல்
அலங்கல் உலவை – அகம் 199/5,6
சிலந்தி தன் நூலால் பின்னிய இலையற்ற கிளைகளையுடைய காய்ந்துபோன
ஆடுகின்ற மரங்கள்

சிலம்பு

சிலம்பு – 1. (வி) 1. ஒலி எழுப்பு, make a tinkling sound
2. எதிரொலி, echo, resound
2. (பெ) 1. தண்டை போல் காலில் அணியும் அணி, anklet
2. மலைச் சரிவில் இருக்கும் ஏறக்குறைய சமதளமான பகுதி, mountain side with an almost plain land
1.1
நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி – புறம் 383/3
நுண்ணிய கோல் கட்டப்பட்ட தடாரிப்பறை ஒலிக்குமாறு கொட்டி
1.2
வழை அமல் வியன் காடு சிலம்ப பிளிறும் – பதி 41/13
சுரபுன்னைகள் செறிந்து இருக்கின்ற அகன்ற காடு எதிரொலிக்கப் பிளிறுகின்ற
2.1
சேவடி
சிலம்பு நக இயலி சென்ற என் மகட்கே – அகம் 117/8,9
சிவந்த அடிகளில் சிலம்புகள் விளங்க நடந்து சென்ற என் மகளுக்கு
2.2
கடு கலித்து எழுந்த கண் அகன் சிலம்பில்
படுத்து வைத்து அன்ன பாறை மருங்கின் – மலை 14,15
கடுக்காய் மரம் நெருங்கி வளர்ந்த இடம் பெரிதான மலைவெளியில்
பரப்பி வைத்ததைப் போன்றிருக்கும் பாறைகளின் பக்கத்தே,

இந்த மலைவெளியில் ஊர்கள் இருக்கும்.
நளி மலை சிலம்பில் நன் நகர் வாழ்த்தி – திரு 238
செறிந்த மலைப்பக்கத்திலுள்ள நல்ல ஊர்களை வாழ்த்தி,

மயில்கள் களித்து ஆடிக்கொண்டிருக்கும்.
மால் வரை சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும்
பீலி மஞ்ஞையின் இயலி – பெரும் 330,331
பெருமையையுடைய மலையின் வெளிகளில் மனவெழுச்சி மிக்கு ஆரவாரிக்கும்
தோகையையுடைய மயில் போல் உலாவி

யானைகள் படுத்துக்கிடக்கும்.
காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்து ஆங்கு – பெரும் 372
காந்தளையுடைய அழகிய பக்கமலையில் யானை கிடந்தாற் போன்று

ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் நீர் தேங்கியிருப்பதால் வாழைகள் செழித்து வளரும்.
படு நீர் சிலம்பில் கலித்த வாழை – நற் 188/1

குறவர்கள் மலைநெல்லைப் பயிரிடுவர்.
மை படு சிலம்பின் ஐவனம் வித்தி – குறு 371/2
மேகங்கள் படியும் மலைவெளியில் மலைநெல்லை விதைத்து

மேற்கண்ட காரணங்களால், சிலம்பு என்பது ஒரு மலைச்சரிவில் அமைந்த
ஏறக்குறைய ஒரு சமவெளிப் பகுதி என்பது பெறப்படும்.

இருப்பினும், இது மலைப்பகுதியாதலால், சிகரங்கள் வானை முட்டும்படி இருக்கும்.
செங்குத்தான பகுதிகளில் அருவிகள் ஆர்ப்பரித்துக்கொட்டும்.
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
வான் தோய் மா மலை – நற் 365/7,8
அருவியில் ஆரவாரத்துடன் நீர் விழும் நீர்வளம் மிக்க மலைச் சரிவையுடைய
வானத்தை எட்டும் பெரிய மலை

சிலை

சிலை 1. – (வி) 1. முழங்கு, roar
2. – (பெ) 1. வில், bow
2. முழக்கம், big sound, roar
3. ஒரு மரம், இந்த மரத்திலிருந்து வில் செய்யப்படும், a tree from which a bow is made
4. இந்திரவில், வானவில், rainbow
1.1
கணம் சால் வேழம் கதழ்வுற்று ஆஅங்கு
எந்திரம் சிலைக்கும் துஞ்சா கம்பலை
விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும்
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசைமின் – பெரும் 259-262
கூட்டமான யானைகள் கலங்கிக் கதறினாற் போன்று,
ஆலை ஆரவாரிக்கும் மாறாத ஓசையுடைய
கருப்பஞ்சாற்றைக் (கட்டியாகக்)காய்ச்சும் புகை சூழ்ந்த கொட்டில்தோறும்,
கரும்பினது இனிய சாற்றை விருப்பமுடையீராய் பருகுவீர்
2.1
சிலை உடை கையர் கவலை காப்ப – மது 312
வில்லையுடைய கையை உடையராய்ப் பல வழிகள் கூடுமிடத்தே காவல்காக்க
2.2
கடும் சிலை கடவும் தழங்கு குரல் முரசம் – பதி 68/3
மிகுந்த முழக்கத்தைச் செய்யும் ஒலிக்கின்ற ஓசையையுடைய முரசமானது
2.3
அரி மான் இடித்து அன்ன அம் சிலை வல் வில் – கலி 15/1
சிங்கம் முழங்குவதைப் போன்று முழங்கும், அழகிய சிலைமரத்தால் செய்யப்பட்ட வலிய வில்லின்
2.4
சிலை தார் அகலம் மலைக்குநர் உளர் எனின் – புறம் 61/14
இந்திரவில் போன்ற மாலையையுடைய மார்புடன் மாறுபடுவோர் உளர் எனின்

சில்கு

சில்கு – (வி) சிறிதளவாக ஆகு, குறைவுபடு, become fewer, dwindle
விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர்
நெய் உமிழ் சுடரின் கால் பொர சில்கி
வைகுறு_மீனின் தோன்றும் – அகம் 17/19-21
திருவிழாவை மேற்கொண்ட பழமைச் சிறப்புவாய்ந்த முதிய ஊரில்
நெய்யைக் கக்கும் தீச்சுடர்கள் (ஒவ்வொன்றாக அணைவது)போன்று – காற்று மோதுவதால் மிகச்சிலவாகி,
வைகறைப் பொழுதின் வானத்து மீனைப் போன்று தோன்றும் –

சில்பதஉணவு

சில்பதஉணவு – (பெ) உப்பு, salt
சில்பதஉணவின் கொள்ளை சாற்றி
பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி – பெரும் 64,65
உப்பினுடைய விலையைக் கூறி,
பல எருதுகளையுடைய உப்புவாணிகர் ஊர்களுக்குச் செல்லுகின்ற நெடிய வழி

சில்லை

சில்லை – (பெ) முரட்டுத்தனம், Unruly mischievous disposition, as of a bull;
சில்லை செவிமறை கொண்டவன் சென்னி குவி முல்லை
கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு ஆட்டிய
ஏழை இரும் புகர் பொங்க அ பூ வந்து என்
கூழையுள் வீழ்ந்தன்று-மன் – கலி 107/6-9
முரட்டுக்குணத்துடன், செவியில் மச்சத்தைக் கொண்ட காளையை அடக்கியவன் தலையில் இருந்த முல்லை அரும்பாலான
வளைவான தலைமாலையைத் தன் கொம்பினால் எடுத்துக்கொண்டு தலையை ஆட்டிய
பாவம், அந்தக் கரும் புள்ளிகளையுடைய காளை துள்ளிக்குதிக்க, அந்தப் பூ வந்து என்
சிலிர்த்த தலைமுடிக்குள் விழுந்தது;

சிள்வீடு

சிள்வீடு – (பெ) சுவர்க்கோழி, சிள்வண்டு, பார்க்க : சிதடி
வறல் மரம் பொருந்திய சிள்வீடு உமணர்
கண நிரை மணியின் ஆர்க்கும் சுரன் – அகம் 303/17,18
காய்ந்துபோன மரத்தினைப் பொருந்திய சுவர்க்கோழி எனப்படும் வண்டுகள், உப்பு வணிகரின்
கூட்டமான எருதுகளின் மணி ஒலி போல ஒலிக்கும் சுரம்

சிவணு

சிவணு – (வி) 1. பொருந்து, go with
2. கல, mix
1.
மணி புரை செ வாய் மார்பு_அகம் சிவண
புல்லி – அகம் 66/14,15
(புதல்வனின்) பவளமணியினை ஒத்த சிவந்த வாய் தனது மார்பகத்தே பொருந்த
எடுத்துத் தழுவி
2.
துடுப்பொடு சிவணிய களி கொள் வெண் சோறு – புறம் 328/11
துடுப்பினால் நன்கு கலக்கப்பட்ட களிப்பைத் தன்பால்கொண்ட வெள்ளிய சோற்றை

சிவலை

சிவலை – (பெ) செந்நிறமான விலங்கு – காளை, Reddish animal, as a bull;
நெற்றி சிவலை நிறை அழித்தான் நீள் மார்பில் – கலி 104/65
நெற்றியில் சிவந்த சுழியினைப் பெற்ற காளையின் ஆற்றலை அழித்தவனின் மார்பினை

சிவல்

சிவல் – (பெ) ஒரு பறவை, கௌதாரி, Indian partridge, Ortygorius ponticerianus
உறை கிணற்று புற சேரி
மேழக தகரொடு சிவல் விளையாட – பட் 76,77
உறைக் கிணறுகளையும் உடைய (ஊருக்குப்)புறம்பேயுள்ள சேரிகளில்
செம்மறி ஆட்டுக்கிடாயோடே கௌதாரிப் பறவை விளையாட

சிவிகை

சிவிகை – (பெ) பல்லக்கு, Palanquin, covered litter;
சகடமும் தண்டு ஆர் சிவிகையும் பண்ணி – பரி 10/17
வண்டிகள், தண்டு மரங்களோடு கூடிய பல்லக்குகள் ஆகியவற்றைத் தயார்செய்துகொண்டுும்

சிவிறி

சிவிறி – (பெ) நீரைப் பீய்ச்சியடிக்கும் குழல், a kind of syringe
நெய்ம் மாண் சிவிறியர் நீர் மண கோட்டினர் – பரி 6/34
நெய்பூசிச் சிறப்படைந்த துருத்தியை உடையோரும், உள்ளே மணக்கும் நீர் கொண்ட கொம்பினையுடையோரும்

சீ

சீ – (வி) 1. கூர்மையாகச் சீவு, sharpen
2. பெருக்கித்தள்ளு, sweep off
3. அகற்று, விலக்கு, remove, expel
4. செம்மைசெய், correct
1.
சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ
ஏறு தொழூஉ புகுத்தனர் இயைபு உடன் ஒருங்கு – கலி 101/8,9
பிறரால் சீறுவதற்கு முடியாத வலிமையுடையோனாகிய இறைவனின் குந்தாலியைப் போல் கொம்புகள் சீவப்பட்ட
ஏறுகளை அவற்றின் தொழுவினுள் (வாடிவாசலுக்கு உள்ளே) ஒரு சேர அடைத்தனர்
2.
ஈண்டு நீர் மிசை தோன்றி இருள் சீக்கும் சுடரே போல் – கலி 100/1
கடலில் தோன்றி, இந்த உலகத்து இருளைக் கூட்டித்தள்ளும் ஞாயிற்றைப் போல்,
3.
செது மொழி சீத்த செவி செறு ஆக – கலி 68/3
பொல்லாத சொற்கள் இடையில் புகாமல் விலக்கிய தம் செவிகளே விளைநிலமாக
4.
இரும் கழி இழிதரும் ஆர்கலி வங்கம்
தேறு நீர் பரப்பின் யாறு சீத்து உய்த்து – புறம் 400/19,20
கருமையான கழியின் வழியாக வந்து இறங்கும் கடலில் செல்லும் ஓடங்களை
தெளிந்த நீர் பரந்த ஆற்றைச் செம்மைசெய்து செலுத்தி,

சீத்தை

சீத்தை – (பெ) சீச்சீ – இகழ்ச்சிக்குறிப்பு, இழிந்தவன், low, base person
பிறன் பெண்டிர்
ஈத்தவை கொள்வானாம் இஃது ஒத்தன் சீத்தை
செறு தக்கான் மன்ற பெரிது – கலி 84/17-19
யாரோ ஒருத்தனுடைய மனைவிமார்
அளித்ததை இவன் வாங்கிக்கொள்வானாம்; இவனொருத்தன்! சீ! சீ!
கோபிக்கத்தக்கவன் இவன் மிகவும்!

சீப்பு

சீப்பு – (பெ) 1. காற்றால் அடித்துக்கொண்டு வரப்படுவது, That which is wafted, as fragrance by wind
2. கோட்டைக் கதவுக்கு வலியாக உள்வாயிற்படியில் நிலத்தே வீழவிடும் மரம்.
Wooden brace to a door, driven into the ground in bolting
1.
துனியல் மலர் உண்கண் சொல் வேறு நாற்றம்
கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது
துனியல் நனி நீ நின் சூள் – பரி 8/53-55
பெரிதும் வருந்தாதே! மலர் போன்ற மையுண்ட கண்களையுடையவளே! நீ சொல்வது உண்மை அன்று; இந்த மணம்
பழங்களிலும், மலர்களிலும், வீசுகின்ற காற்றினால் அடித்துக்கொண்டுவந்ததாலும் உண்டானது,
வருந்தாதே மிகவும் நீ! உன் மீது ஆணை!
2.
ஏணியும் சீப்பும் மாற்றி
மாண் வினை யானையும் மணி களைந்தனவே – புறம் 305/5,6
ஏணியையும், தாங்கு கட்டையையும் நீக்கி
போரில் மாட்சிமைப்பட்ட யானைகளின் மணிகள் நீக்கப்பட்டன.

சீரை

சீரை – (பெ) 1. மரவுரி, Bark of a tree, used as clothing
2. தராசுத்தட்டு, scale pan
1.
சீரை தைஇய உடுக்கையர் – திரு 126
மரவுரியை உடையாகச் செய்த உடையவரும்
2.
கூர் உகிர் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇ 5
தன் அகம் புக்க குறு நடை புறவின்
தபுதி அஞ்சி சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக – புறம் 43/5-8
கூர்மையான நகங்களையுடைய பருந்தின் தாக்குதலைக் கருதி, அதனைத் தப்பி
தன்னிடத்தில் அடைந்த குறிய நடையையுடைய புறாவின்
அழிவிற்கு அஞ்சி, தராசுத்தட்டினில் அமர்ந்த
குறையாத வள்ளல்தன்மையையுடைய வலியோனின் மரபில் வந்தவனே!

சீர்த்தி

சீர்த்தி – (பெ) மிகுந்த புகழ், great reputation
சாலகத்து ஒல்கிய கண்ணர் உயர் சீர்த்தி
ஆல்_அமர்_செல்வன் அணி சால் மகன் விழா
கால்கோள் என்று ஊக்கி கதுமென நோக்கி – கலி 83/13-15
சாளரங்களின் வழியே உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கும் மகளிர், மிகுந்த புகழையுடைய
ஆலமரத்தின் கீழ் இருக்கும் இறைவனின் அழகு பொருந்திய மகனின் விழா
தொடங்கிவிட்டதோ என்று மனம் களித்து விரைந்து வெளியே வந்து பார்க்க,

சீறடி

சீறடி – (பெ) 1. சிறிய கால், short leg
2. சிறிய பாதம், small foot
1.
செல்வ சிறாஅர் சீறடி பொலிந்த
தவளை வாஅய பொலம் செய் கிண்கிணி – குறு 148/1,2
செல்வர்களின் சிறுவர்களின் சிறிய கால்களில் அழகுற விளங்கிய
தவளையின் வாயைப் போன்ற பொன்னால் செய்த சதங்கையின்
2.
வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி – பொரு 42
ஓடியிளைத்த நாயின் நாவைப்போன்ற பெருமை தக்கிருக்கும் சிறிய பாதங்களையும்

சீறியாழ்

சீறியாழ் – (பெ) சிறிய யாழ், 7 நரம்புகளைக் கொண்டது, small lute with 7 strings
களங்கனி அன்ன கரும் கோட்டு சீறியாழ் – புறம் 127/1
களாப்பழம் போன்ற கரிய கொம்பினையுடைய சிறிய யாழ்

சுகிர்

சுகிர் – 1. (வி) யாழ் நரம்பைத் தேய்த்து மெல்லிழையாக்கு, rub clean and smooth, as a lute string
2. (பெ) பிசிர், Small splinter or fibre rising on a smooth surface of wood or metal
1.
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா
குரல் ஓர்த்து தொடுத்த சுகிர் புரி நரம்பின்
அரலை தீர உரீஇ – மலை 22-24
கடுகளவும் இசைச் சுருதியில் தவறு இல்லாது
ஒலிநயத்தைக் கூர்ந்து கேட்டுக்கேட்டுக் கட்டிய தேய்த்து முறுக்கேற்றப்பட்ட நரம்பினில்
கழலைகள் முற்றிலும் அகலுமாறு சிம்பெடுத்து
2.
சிதாஅர் வள்பின் சிதர் புற தடாரி
ஊன் சுகிர் வலந்த தெண் கண் ஒற்றி – புறம் 381/12,13
துண்டித்த வார்களால் கட்டப்பட்ட நைந்துபோன புறத்தையுடைய தடாரிப்பறையின்
தோலில் ஒட்டிக்கிடந்து காய்ந்து பொருக்காக இருக்கும் ஊன் பிசிர் சூழஇருக்கும் தெளிந்த முகப்பை அறைந்து

சுடலை

சுடலை – (பெ) பிணத்தை எரிக்கும் இடம், the platform where dead bodies are burnt
நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர்
என்பு படு சுடலை வெண் நீறு அவிப்ப – புறம் 356/5,6
மனம் விரும்பும் அன்புடையோர் அழுத கண்ணீர்
எலும்பு கிடக்கும் எரியூட்டும் இடத்திலுள்ள சாம்பலை அவிக்க

சுடுமண்

சுடுமண் – (பெ) செங்கல், burnt brick
சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின் – பெரும் 405
செங்கல்லால் செய்யப்பட்டு உயர்ந்த படைவீட்டைச் சூழ்ந்த மதிலினையும்

சுணங்கறை

சுணங்கறை – (பெ) உடலுறவு, sexual union
சுணங்கறை பயனும் ஊடல் உள்ளதுவே – பரி 9/22
புணர்ச்சியின் பயனும் ஊடல் செய்வதில் உள்ளது

சுணங்கு

சுணங்கு – (பெ) இளம் பெண்களின் மார்புப் பகுதியில் தோன்றும் மஞ்சள் நிறப் புள்ளிகள்,
a kind of colour change in the form of yellow dots in a young lady’s chest
இந்தச் சுணங்கு என்பது பூப்புக்குப் பின் மகளிர் மேனியில் தோன்றும் நிறப்பொலிவு என்ற ஒரு கருத்து உண்டு.

ஆக வன முலை அரும்பிய சுணங்கின்
மாசு இல் கற்பின் புதல்வன் தாய் என – அகம் 6/12,13

என்ற அடிகளால், சுணங்கு என்பது தாய்மைப்பேறு அடைந்த பெண்ணுக்கும் வரும் என்பது தெளிவாகிறது.

மேலும், இது வெறும் பொலிவுமட்டும்தானா என்று பார்ப்போம்.

முலையே முகிழ் முகிழ்த்தனவே தலையே
கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே
செறி முறை வெண் பலும் பறிமுறை நிரம்பின
சுணங்கும் சில தோன்றினவே – குறு 337/1-4
முலைகள் முகிழாய் முகிழ்த்தன; தலையின்
கிளைத்த கூந்தல்கொத்துக்கள் கீழே விழுந்து தொங்குகின்றன;
செறிவாக அமைந்த வெள்ளைப் பற்களும் விழுந்தெழுந்து நிற்கின்றன;
தேமலும் சில தோன்றின

பருவமடைந்த ஓர் இளம்பெண்ணிடம் ஏற்படும் மாற்றங்களை இப்பாடல் குறிக்கிறது. எனினும் சுணங்கும் சில தோன்றினவே
என்ற சொற்கள், இது மாற்றம் மட்டும் அல்ல, புதிதாய் தோன்றிய தோற்றம் எனவும் தெரிவிக்கிறது.

அணி நல் ஆகத்து அரும்பிய சுணங்கே – புறம் 350/11
என்ற வரியால், இந்தச் சுணங்கு மேனியில் அரும்புவது என்பது உறுதிப்படுகிறது.

மேலும், சுணங்கு அணி ஆகம், சுணங்கு அணி இள முலை எனப் பல இடங்களில் வருவதால், இது பொதுவான
மேனி மாற்றம் அல்ல என்றும், புதிதாய்த் தோன்றிய ஓர் உறுப்பு என்றும் தெளியலாம்.

எனில், இந்த உறுப்பு எங்கே தோன்றுகிறது என்ற வினா எழுகிறது.

இந்த அடிகளைப் பாருங்கள்.

அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து – பொரு 35
ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள் – அகம் 174/12
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த – அகம் 161/12

இவற்றைப் போன்ற இன்னும் பல அடிகளைக் காணலாம். ஆகம் என்பது மார்பு. எனவே,இந்தச் சுணங்கு பெண்களின்
மார்புப் பகுதியில் தோன்றுகிறது. மார்பு என்பது கழுத்துக்குக் கீழே, வயிற்றுக்கும் மேலே உள்ள பகுதி. இந்தப் பரந்த
பரப்பில் சுணங்கு குறிப்பாக எங்கே தோன்றுகிறது என்றும் இலக்கியங்கள் கூறுகின்றன.

சுணங்கு அணி வன முலை அணங்கு கொள திமிரி – நற் 9/6
ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலை மேல் – கலி 111/16
சில் சுணங்கு அணிந்த பல் பூண் மென் முலை – அகம் 343/2

என்ற அடிகள், இந்தச் சுணங்கு, பெண்களின் முலைகளின் மேல் படர்கிறது என்று தெரிவிக்கின்றன.

இந்தச் சுணங்கு எவ்வாறு இருக்கும் என்றும் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.

பொன் பொதிந்து அன்ன சுணங்கின் – நற் 26/8
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய – அகம் 279/4

என்ற அடிகளால், இது பொன்னிறமாக இருக்கும் என்று தெரியவருகிறது.

ஒண் பொறி சுணங்கின் ஐது பட தாஅம் – நற் 191/4

என்ற அடியால், இது புள்ளி புள்ளியாக இருக்கும் என்பதும் தெரிய வருகிறது.

தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய் – கலி 57/17

என்ற அடி, சுணங்கு என்பது வேங்கை மலர் போல் இருக்கும் என்கிறது.
எனவே, ஐயத்துக்கிடமின்றி, பெண்களின் மார்புப்பகுதியில், குறிப்பாக முலைப்பகுதியில்
மஞ்சள் நிறத்தில் புள்ளிபுள்ளியாக வேங்கை மலர் போன்று அரும்பியிருப்பதே சுணங்கு என்பது பெறப்படும்.

சுண்ணம்

சுண்ணம் – (பெ) 1. பூந்தாது, pollen dust
2. வண்ணப்பொடி, saffron mixed powder
1.
பொன் காண் கட்டளை கடுப்ப கண்பின்
புன் காய் சுண்ணம் புடைத்த மார்பின் – பெரும் 220,221
பொன்னை(உரைத்து)க் காணும் கட்டளைக்கல்லை ஒப்ப, சம்பங்கோரையின்
புல்லிய காயில் தோன்றின தாதை அடித்துக்கொண்ட மார்பினையும்,
2.
சாந்தும் கமழ் தாரும் கோதையும் சுண்ணமும்
கூந்தலும் பித்தையும் சோர்ந்தன – பரி 24/84,85
சந்தனமும்,மணங்கமழும் தாரும், கோதையும், நறுமணப் பொடிகளும்
மகளிர் கூந்தலிடத்திலிருந்து மைந்தர் பித்தையிடத்திலிருந்தும் நழுவி வீழ்ந்தன

சுதை

சுதை – (பெ) 1. சுண்ணாம்பு, சுண்ணாம்புக்கலவை, lime, lime mortar
2. சுண்ணாம்புக்கலவைப் பூச்சு, lime plaster
1.
வாலிய
சுதை விரிந்து அன்ன பல் பூ மராஅம் – அகம் 211/1,2
வெண்மையான சுண்ணாம்பு வெந்து விரிந்திருப்பதைப் போன்ற பலவான பூக்களைக் கொண்ட வெண்கடப்பமரம்
2.
வெள்ளி அன்ன விளங்கு சுதை உரீஇ – நெடு 110
வெள்ளியைப் போன்ற ஒளிரும் சுண்ணாம்புச்சாந்தை வாரிப்பூசி

சுனை

சுனை – (பெ) மலை ஊற்று, Mountain pool or spring
குவளை அம் பைம் சுனை அசைவு விட பருகி – மலை 251
குவளை மலரால் அழகுபெற்ற புதிய நீர் கொண்ட சுனையில் களைப்பு நீங்கக் குடித்து

சுமடு

சுமடு – (பெ) சும்மாடு, load-pad for the head
உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து
புகர் வாய் குழிசி பூ சுமட்டு இரீஇ – பெரும் 159
உறையினால் கெட்டியாகத் தோய்ந்த இளம் புளிப்பான தயிரைக் கடைந்து, வெண்ணையை எடுத்து,
(தயிர்)புள்ளிபுள்ளியாகத் தெரிந்த வாயையுடைய மோர்ப்பானையை மெல்லிய சும்மாடின் மேல் வைத்து

சும்மை

சும்மை – (பெ) கூட்டமாக இருப்போர் எழுப்பும் பேரொலி, Loud and persistent outcry from many people
மகிழ்ந்தோர் ஆடும் கலி கொள் சும்மை – மது 364
மகிழ்ந்தோர் ஆடும் செருக்கினைக் கொண்ட ஆரவாரம்

சுரன்

சுரன் – (பெ) சுரம் என்பதன் திரிபு, பார்க்க: சுரம்
வெயில் முளி சோலைய வேய் உயர் சுரனே – ஐங் 327/3
வெயிலால் காய்ந்துபோன மரக்கூட்டத்தையுடையது மூங்கில்கள் உயர்ந்துநிற்கும் பாலைவழி

சுரபுன்னை

சுரபுன்னை – (பெ) ஒரு புன்னை வகை மரம், பூ, வழை, Long-leaved two-sepalled gamboge, Ochrocarpus longifolius
கரையன சுரபுன்னையும் – பரி 11/17

சுரம்

சுரம் – (பெ) வறண்ட பாலை நிலம், barren tract
புயல் துளி மாறிய போக்கு அரு வெம் சுரம் – கலி 13/9
மழைத்துளியே இல்லையாகிப்போன, போவதற்கு அரிய கொடிய பாலை வழியில்,

சுரி

சுரி – (வி) சுருண்டிரு, be spiral, curl
எரி அகைந்து அன்ன ஏடு இல் தாமரை
சுரி இரும் பித்தை பொலிய சூட்டி – பொரு 159,160
நெருப்புத் தழைத்தாற் போன்ற, இதழ் இல்லாத தாமரையை,
சுருண்ட கரிய மயிரில் பொலிவுபெறச் சூட்டி,

சுரிகை

சுரிகை – (பெ) உடைவாள், dirk, short sword
சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவு உடை – பெரும் 73
உடைவாள் செருகப்பட்ட கட்டு இறுகிய உடையினையும்

சுரிதகம்

சுரிதகம் – (பெ) ஒருவகைத்தலையணி, An ornament fastened to the hair with a screw;
கைவல் வினைவன் தையுபு சொரிந்த
சுரிதக உருவின ஆகி பெரிய
கோங்கம் குவி முகை அவிழ – நற் 86/5-7
கைவேலைப்பாட்டில் வல்லவனான கம்மியன் மணிகளைக் கோத்துச் செய்த
சுரிதகம் என்னும் அணியைப் போன்ற உருவத்தைக்கொண்டனவாகி, பெரிய
கோங்கின் குவிந்த முகைகள் மலர

சுரியல்

சுரியல் – (பெ) சுருண்ட மயிர், curly hair
சுரியல் அம் சென்னி பூ செய் கண்ணி – பதி 27/4
சுருண்ட மயிரையுடைய அழகிய தலையுச்சியில் பூவினால் தொடுத்த தலைமாலையை அணிந்து

சுருணை

சுருணை – (பெ) பூண், A metal cap or band placed on a wooden pole to prevent splitting
கனை இரும் சுருணை கனி காழ் நெடு வேல் – அகம் 113/15
செறிந்த கரிய பூணையும், நெய் கனிந்த தண்டையுமுடைய நீண்ட வேல்

சுருதி

சுருதி – (பெ) வேத ஒலிப்பு, vedic recitals
சுருதியும் பூவும் சுடரும் கூடி – பரி 18/52
வேத ஒலியும், மலர்களும், விளக்குகளும் கூடி

சுரும்பு

சுரும்பு – (பெ) வண்டு, bee
பெரும் பல் குவளை சுரும்பு படு பன் மலர் – மது 566
பெரிய பலவாகிய செங்கழுநீரில் வண்டுகள் மொய்க்கும் பல பூக்களை

சுரை

சுரை – (பெ) 1. கடப்பாரை, sharp crow-bar
2. பசு முதலியவற்றின் பால் மடி, udder
3. ஒரு கொடி,காய், சுரைக்கொடி, சுரைக்காய், bottle gourd, its creeper
4. துளை, cavity
5. மூங்கிற்குழாய், bamboo tube
6. பூண், ferrule
7. குழிவு, hollow interior
1.
உளி வாய் சுரையின் மிளிர மிண்டி – பெரும் 92
உளி(போலும்) வாயைக் கொண்ட கடப்பாரையால் குத்திப் புரட்டி
2.
செ வரை சேக்கை வருடை மான் மறி
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி – குறு 187/1,2
நேர்க்குத்தான மலையில் வாழும் வருடைமானின் குட்டி
தன் தாயின் மடியிலிருந்து பொழியும் இனிய பாலை வயிறாரக் குடித்து
3.
வெண் பூ வேளையொடு பைம் சுரை கலித்து – பதி 15/9
வெண்மையான பூக்களைக்கொண்ட வேளைக்கொடியுடன், பசுமையான சுரைக்கொடிகள் தழைத்துப் படர,
4
சுரை அம்பு மூழ்க சுருங்கி – கலி 6/3
காம்பு செருகும் துளையை உடைய அம்பு தைத்தலினால் உடல் தளர்ந்து
5.
அல்கு வன் சுரை பெய்த வல்சியர் – அகம் 113/11
மிக்க வலிய மூங்கில் குழாயில் பெய்த உணவினையுடையவர்
6.
மடை அமை திண் சுரை மா காழ் வேலொடு – அகம் 119/13
மூட்டுவாய் அமைந்த திண்ணிய பூணினையும் கரிய தண்டினையுமுடைய வேலுடன்
7.
உரல் முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை – அகம் 393/12
உரலில் பெய்து தீட்டிய உரலின் குழி நிறைந்த அரிசியை

சுறவம்

சுறவம் – (பெ) சுறாமீன், பார்க்க : சுறா
திருந்து வாய் சுறவம் நீர் கான்று ஒய்யென
பெரும் தெரு உதிர்தரு பெயல் – நற் 132/2,3
திருத்தமான வாயையுடைய சுறாமீன் நீரைக் கக்குவதால் ஒய்யென்ற ஒலியுடன் விரைவாக
பெரிய தெருவில் உதிர்ந்துவிழும் மழைத்தூறலை

சுறவு

சுறவு – (பெ) சுறாமீன், பார்க்க : சுறா
சுறவு கோட்டு அன்ன முள் இலை தாழை – நற் 19/2
சுறாமீனின் கூரிய கொம்பைப் போன்ற முட்களைக் கொண்ட இலையையுடைய தாழையின்

சுறா

சுறா – (பெ) பற்களைக் கொண்ட கடல்மீன், மகரமீன், shark
கோள் சுறா கிழித்த கொடு முடி நெடு வலை – அகம் 340/21
கொலைத்தொழிலையுடைய சுறாமீன் கிழித்த வளைந்த முடிகளைக் கொண்ட நீண்ட வலை

சுளகு

சுளகு – (பெ) சிறிய முறம், A kind of winnowing fan for separating chaff from grain, bran from flour
சுழல்மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ் – அகம் 393/10
திரிகையில் தேய்த்த சுளகினால் கொழிக்கப்பெற்ற வெள்ளையான அரிசியை

சுள்ளி

சுள்ளி – (பெ) 1. ஒரு மரம், பூ, 1. Ceylon ebony, Disopyros ebenum; 2. Porcupine flower, Barieria Prionitis
2. சேரநாட்டிலுள்ள ஓர் ஆறு
1.எரி புரை எறுழம் சுள்ளி கூவிரம் – குறி 66
2.
சுள்ளி அம் பேரியாற்று வெண் நுரை கலங்க – அகம் 149/8
சுள்ளியாகிய பெரிய ஆற்றின் வெள்ளிய நுரை சிதற

சுழல்மரம்

சுழல்மரம் – (பெ) திரிகை, மரத்தால் ஆனது, handmill, quern
சுழல்மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ் – அகம் 393/10
திரிகையில் தேய்த்த சுளகினால் கொழிக்கப்பெற்ற வெள்ளையான அரிசியை

சுழி

சுழி – (பெ) 1. நீர்ச்சுழல், whirlpool
2. வளைப்பு, bending
1.
நெடும் சுழி பட்ட நாவாய் போல – மது 379
நெடிய நீர்ச்சுழலில் அகப்பட்ட மரக்கலத்தைப் போல
2.
புலியொடு பொருத புண் கூர் யானை 5
நல் கோடு நயந்த அன்பு இல் கானவர்
வில் சுழி பட்ட நாம பூசல் – நற் 65/5-7
புலியுடன் போரிட்ட புண்ணுற்று வருகின்ற யானையின்
நல்ல தந்தங்களை விரும்பிய அன்பு இல்லாத கானவர்களின்
வில்லின் வளைப்புக்கு இலக்கான யானையின் அச்சந்தரும் பேரொலி

சுவல்

சுவல் – (பெ) 1. மேட்டுநிலம், elevated land
2. தோள், shoulder
3. கழுத்து, பிடரி, nape of the neck
4. குதிரையின் கழுத்து மயிர், horse’s mane
1.
சுவல் விளை நெல்லின் செ அவிழ் சொன்றி – பெரும் 131
மேட்டுநிலத்தில் விளைந்த நெல்லின் சிவந்த பருக்கையாகிய சோற்றை,
2.
உறி கா ஊர்ந்த மறு படு மயிர் சுவல் – பெரும் 171
உறியினையுடைய காவடிகள் (மேலே)இருந்ததனால் தழும்பு உண்டான மயிருடைய தோளினையும்
3.
வலையோர் தந்த இரும் சுவல் வாளை – மலை 455
வலைகொண்டு மீன்பிடிப்போர் கொண்டுவந்த பெரிய கழுத்தையுடைய வாளைமீன்
4.
பொலம் படை பொலிந்த கொய் சுவல் புரவி – மலை 574
அழகிய சேணம் முதலியவற்றால் பொலிவுற்ற, கத்தரிக்கப்பட்ட பிடரிமயிரைக்கொண்ட குதிரை

சூடு

சூடு – 1. (வி) அணி, தரி, put on, wear as fowers
2. (பெ) 1. பெண்களின் காதணிகளில் பதிக்கும் மணி, gems inlaid in ear rings
2. அரிந்த நெற்கட்டு, Bundle of paddy sheaves
3. கடப்பட்டது, That which is heated, burnt, roasted;
4. சுடுதல், the act of heating
5. சூடுதல், அணிதல். the act of wearing or putting on
1.
நறும் பூ கண்ணி குறவர் சூட – பொரு 219
நறிய பூவால் புனைந்த கண்ணியைக் குறவர்கள் அணிந்துகொள்ளவும்
2.1
செம் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர – அகம் 86/27
சிவந்த மணிகள் பதித்த ஒள்ளிய குழை வளவிய காதின்கண் அசைய
2.2
அக வயல் இள நெல் அரி கால் சூடு
தொகு புனல் பரந்த என துடி பட ஒருசார் – பரி 7/27,28
வயலுக்குள் விளைந்து நின்ற இள நெற்பயிரை அறுத்து ஒருமுறை அடித்து வைத்த நெற்கட்டுகளின் மீது
மிகுந்த வெள்ளம் பெருகியது என்று துடியை முழக்கி ஒருபக்கமாய்ச் சிலர் அழைப்ப,
2.3
கடல் இறவின் சூடு தின்றும் – பட் 63
கடல் இறால்களின் (தசை)சுடப்பட்டதைத் தின்றும்,
2.4
சூடுறு நன் பொன் சுடர் இழை புனைநரும் – மது 512
சுடுதலுற்ற நல்ல பொன்னை விளங்கும் அணிகலன் செய்வாரும்,
2.5
சூடுற்ற சுடர் பூவின்
பாடு புலர்ந்த நறும் சாந்தின்
விழுமிய பெரியோர் சுற்றம் ஆக – மது 225-227
சூடுதலுற்ற ஒளிவிடும் வஞ்சியினையும், 225
பூசினபடியே புலர்ந்த நறிய சந்தனத்தையுமுடைய
சீரிய பெரியோரைச் சுற்றமாகக் கொண்டு,

சூட்டு

சூட்டு – 1. (வி) அணிவி, தரிக்கச்செய், put on, cause to wear as with flowers
2. (பெ) 1. வண்டிச் சக்கரத்தின் விளிம்பைச்சூழ அமைக்கப்பட்ட வளைவுமரம், Felloe of a wheel
2. பெண்களுக்குரிய நெற்றி அணி, forehead ornament for women
3. சுடப்பட்டது, that which is burnt and cooked
1.
எரி அகைந்து அன்ன ஏடு இல் தாமரை
சுரி இரும் பித்தை பொலிய சூட்டி – பொரு 159,160
நெருப்புத் தழைத்தாற் போன்ற, இதழ் இல்லாத (பொன்னால் ஆன)தாமரையை,
சுருண்ட கரிய மயிரில் பொலிவுபெற அணிவித்து
2.1
கொழும் சூட்டு அருந்திய திருந்து நிலை ஆரத்து – பெரும் 46
கொழுவிய வட்டைகள் தம் அகத்தே கொண்ட, திருத்தமான நிலையிலுள்ள ஆரங்களையுடைய
2.2
சூட்டும் கண்ணியும் மோட்டு வலையமும் – பரி 20/30
தலையில் சூடிக்கொள்ளும் சூட்டும், கண்ணியும், பெரிய வளையமுமாய்
2.3
தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் – பெரும் 282
பச்சை மீனைச் சுட்டதனோடு, (பசியால்)தளர்ந்தவிடத்தே பெறுவீர் –

சூதர்

சூதர் – (பெ) நின்றுகொண்டு மன்னரைப் புகழ்ந்து பாடுவோர்,
Bards who praise kings standing in their presence; encomiasts
சூதர் வாழ்த்த மாகதர் நுவல – மது 670
நின்றேத்துவார் வாழ்த்த, இருந்தேத்துவார் புகழைச் சொல்ல

சூது

சூது – (பெ) வஞ்சனை, deceit, cheating
சூது ஆர் குறும் தொடி சூர் அமை நுடக்கத்து – ஐங் 71/1
வஞ்சனை நிறைந்தவளும், குறிய வளையல்களை அணிந்தவளும், அஞ்சும்படியான அசைவுகளையுடையவளுமான

சூரல்

சூரல் – (பெ) 1. இலந்தை மரவகை, Oblique leaved jujube, Zizyphus oenoplia;
2. பிரம்பு, Common rattan, cane, Calamus rotang
3. (காற்று) சுழற்றி அடித்தல், Whirling, as of wind;
1.
விரி மலர் ஆவிரை வேரல் சூரல் – குறி 71
விரிந்த பூக்களையுடைய ஆவிரம்பூ, சிறுமூங்கிற்பூ, சூரைப்பூ
2.
குரங்கின் தலைவன் குரு மயிர் கடுவன்
சூரல் அம் சிறு கோல் கொண்டு வியல் அறை
மாரி மொக்குள் புடைக்கும் நாட – ஐங் 275/1-3
குரங்குகளின் தலைவனான, நிறமுள்ள மயிரினைக் கொண்ட ஆண்குரங்கு
பிரம்பின் அழகிய சிறிய கோலினைப் பற்றிக்கொண்டு, அகன்ற பாறையில் தேங்கியிருக்கும்
மழைநீர்க் குமிழிகளை அடித்து விளையாடும் நாட்டினைச் சேர்ந்தவனே!
3.
சூரல் அம் கடு வளி எடுப்ப – அகம் 1/17
சுழற்றி அடிக்கும் கடுமையான காற்று மேலெழும்ப

சூர்

சூர் – 1. (வி) அச்சுறுத்து, frighten, terrify
2. (பெ) 1.கொடுமை, cruelty
2. சூரபதுமன், A king of Asuras who was slain in battle by Lord Murugan
3. கொடுந்தெய்வம், வருத்தும் தெய்வம், Malignant deity
4. தெய்வமகளிர், Celestial maidens
5. அச்சம், fear
6. கடுப்பு, pungency
1.
சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின்
கழல் கண் கூகையொடு – திரு 48,49
சுழலும் விழியையுடைய பசிய கண்ணினையும், அச்சுறுத்தும் பார்வையினையும்
பிதுங்கிய கண்ணையுடைய கூகையோடு
2.1.
சூர்_அர_மகளிர் ஆடும் சோலை – திரு 41
கொடுமையுடைய தெய்வமகளிர் ஆடும் சோலையையுடைய,
2.2.
சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் – திரு 46
சூரபதுமனாகிய தலைவனைக் கொன்ற ஒளிவிடுகின்ற இலைத்தொழிலையுடைய நெடிய வேல்
2.3.
சூர்_உறு மஞ்ஞையின் நடுங்க – குறி 169
கொடுந்தெய்வம் ஏறின(பேய் பிடித்த) மயிலைப் போல் நடுங்கிநிற்க
2.4.
சூர் புகல் அடுக்கத்து பிரசம் காணினும் – மலை 239
தெய்வமகளிர் விரும்பும் அடுக்கடுக்காய் அமைந்த சரிவுகளில், தேனடையைக் கண்டாலும்
2.5.
சூது ஆர் குறும் தொடி சூர் அமை நுடக்கத்து – ஐங் 71/1
வஞ்சனை நிறைந்தவளும், குறிய வளையல்களை அணிந்தவளும், அஞ்சும்படியான அசைவுகளையுடையவளுமான
2.6.
சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல் – பரி 7/62
வண்டுகள் மொய்க்கும் கடுப்புடைய கள்ளினைத் தன் கையில் ஏந்தினாள், நீல நிற நெய்தல் போன்ற கண்களையுடையவள்

சூர்ப்பு

சூர்ப்பு – (பெ) வளைவு, whirling
விறல் விளங்கிய விழு சூர்ப்பின்
தொடி தோள் கை துடுப்பு ஆக – மது 33,34
வெற்றி விளங்கிய சீரிதாக வளைவு பொருந்திய
வீரவளையல்கள் அணிந்த தோளையுடைய கைகளே துடுப்பாக

சூலி

சூலி – (பெ) கருவுற்ற பெண், pregnant woman
விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்கு
கடனும் பூணாம் கை நூல் யாவாம் – குறு 218/1,2
பிளவுகளையும், குகைகளையும் உள்ள மலையின் சரிவிலுள்ள வலிமை பொருந்திய சூலையுடையவளுக்கு
பலிக்கடன் நேர்தலையும் செய்யோம்; காப்புநூலும் கட்டிக்கொள்ளோம்;

சூல்

சூல் – (பெ) 1. மேகம் நீர் நிரம்பியிருத்தல், Wateriness of clouds
2. கருப்பம், pregnancy
3. முட்டை, egg
1.
கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை – திரு 7
கடலில் முகந்த நிறைத்த நீர் கொண்ட மேகங்கள்,
2.
எய்யா இளம் சூல் செய்யோள் அம் வயிற்று
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல – பொரு 6,7
(பிறரால் நன்கு)அறியப்படாத இளைய கருவினையுடைய சிவந்த நிறமுடையவளின் அழகிய வயிற்றின்மேல்
மென்மையாகிய மயிர் ஒழுங்குபடக் கிடந்த தோற்றத்தைப்போல,
3.
ஞமலி தந்த மனவு சூல் உடும்பின் – பெரும் 132
நாய்(கடித்துக்) கொணர்ந்த சங்குமணி(போன்ற) முட்டைகளையுடைய உடும்பின்

சூளை

சூளை – (பெ) செங்கல், பானை முதலியன சுடும் காளவாசல், kiln, furnace
திரள் பரூஉப் புகை
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை
நனம் தலை மூதூர் கலம் செய் கோவே – புறம் 228/2-4
திரண்ட மிக்க புகை
அகன்ற பெரிய ஆகாயத்தின்கண் சென்று தங்கும் காளவாசலையுடைய
அகலிய இடத்தினையுடைய பழைய ஊரில் மண்கலம் வனையும் வேட்கோவே

சூள்

சூள் – 1. (வி) சபதம்செய்,ஆணையிடு, சங்கற்பம்செய், vow, take an oath, declare solemnly
2. (பெ) சபதம், ஆணை, சங்கற்பம், vow, oath, pledge
1.
அறவர் அடி தொடினும் ஆங்கு அவை சூளேல் – பரி 8/68
அறவோர்களின் அடியைத் தொட்டு மொழிந்தாலும் மொழியலாம், ஆனால் மேற்கூறியவற்றைக் குறித்துச் சூளுரைக்கவேண்டாம்;
2.
மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியை
தலையினால் தொட்டு உற்றேன் சூள் – கலி 108/55,56
மலையைப் போல் அமைந்த மார்புடைய செல்வனான திருமாலின் அடியைத்
தலையினால் தொட்டுச் சொல்கிறேன், இது உறுதி

சூழி

சூழி – (பெ) 1. யானையின் முகபடாம், Ornamental covering for the elephant’s face
2. உச்சி, top portion
3. நீர்நிலை, சுனை, ponds in hill
1.
சூழி யானை சுடர் பூண் நன்னன் – அகம் 15/10
முகபடாம் அணிந்த யானையினைக் கொண்ட – ஒளிர்கின்ற அணிகலன்களைப் பூண்ட – நன்னனின்
2.
கூழையும் குறு நெறி கொண்டன முலையும்
சூழி மென் முகம் செப்புடன் எதிரின – அகம் 315/1,2
தலைமயிரும் குறுகிய நெறிப்பினைக் கொண்டன, முலையும்
உச்சியிலுள்ள மெல்லிய முகத்தால் சிமிழுடன் மாறுபட்டன
3.
அலங்கு கதிர் சுமந்த கலங்கல் சூழி
நிலை தளர்வு தொலைந்த ஒல்கு நிலை பல் கால்
பொதியில் – புறம் 375/1-3
அசைகின்ற கதிர்கள் நிரம்பிக் கலங்கிக் கிடக்கும் நீர்நிலை போல
நிலைதளர்ந்து பாழ்பட்டு வெடித்துச் சீரழிந்த தரையையும் பல கால்களையும் உடைய
மன்றத்தின்

சூழ்

சூழ் – 1. (வி) 1. சுற்றி மொய், hover around, swarm
2. சுற்றியிரு, encompass, surround
3. சுற்றிவா, go around
4. ஆராய், deliberate, examine
5. உருவாக்கு, make, construct
6. கருது, design, intend
2. (பெ) சுற்றுதல், surroundings
1.1.
சுறவு வாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல் – பெரும் 385
மகரவாயாகிய தலைக்கோலத்தைச் சேர்த்தின, சுரும்புகள் சுற்றி மொய்க்கும் ஒளியையுடைய நுதலினையும்,
1.2.
வாழ் முள் வேலி சூழ் மிளை படப்பை – பெரும் 126
உயிருள்ள முள்செடியாலான வேலியையும், சுற்றியிருக்கும் காவற்காட்டினையும் உடைய ஊர்ப்புறத்தையும்
1.3.
பணை தோள் குறு_மகள் பாவை தைஇயும்
பஞ்சாய் பள்ளம் சூழ்ந்தும் – குறு 276/1,2
மூங்கிலைப் போன்ற தோள்களையுடைய இளையவளுக்காகப் பாவையைப் பண்ணியதையும்
அதற்குப் பஞ்சாய்க் கோரை இருக்கும் பள்ளத்தைச் சுற்றிவந்ததையும்,
1.4.
அரும் கடி நீவாமை கூறின் நன்று என
நின்னொடு சூழ்வல் தோழி – கலி 54/17,18
அரிய கட்டுக்காவலை நான் மீறிக்கொண்டு செல்லாமல் இவனோடே மணம் கொள்ளுமாறு நீ செய்தால் நல்லது என்று
உன்னோடு கலந்துபேசி ஆராய விரும்புகிறேன்
1.5.
அலவன் ஆட்டியும் உரவு திரை உழக்கியும்
பாவை சூழ்ந்தும் பல் பொறி மருண்டும் – பட் 101,102
நண்டுகளை அலைக்கழித்தும், தொடர்ந்து வரும் அலைகளை மிதித்து விளையாடியும்,
(ஈர மணலில்)உருவங்களை உருவாக்கியும்; ஐம்பொறிகளால் நுகரும்பொருள்களை நுகர்ந்து மயங்கியும்,
1.6.
தட மென் பணை தோள் மட நல்லோள்_வயின்
பிரிய சூழ்ந்தனை ஆயின் அரியது ஒன்று
எய்தினை வாழிய நெஞ்சே – நற் 137/2-4
நீண்ட மென்மையான பருத்த தோள்களை உடைய இளமையான நம் தலைவியை விட்டுப்
பிரிந்துபோக எண்ணினால், அவளைக் காட்டிலும் அரியது ஒன்றனை
எய்தினவனாவாய், வாழ்க நெஞ்சமே
2.
ஊசி போகிய சூழ் செய் மாலையன் – அகம் 48/9
ஊசியால் கோத்துச் சுற்றுதல் அமைந்த மாலையை உடையவன்

செகில்

செகில் – (பெ) 1. தோளின் மேல்பகுதி, upper part of the shoulders
2. சிவப்பு, redness
1.
பிறந்து தவழ் கற்றதன் தொட்டு சிறந்த நல்
நாடு செகில் கொண்டு நாள்-தொறும் வளர்ப்ப – பொரு 137,138
பிறந்து தவழ்தலைக் கற்ற நாள் தொடங்கி, சிறந்த நல்ல
நாட்டை(த் தன்) தோளில் வைத்துக்கொண்டு, (அதனை)நாள்தோறும் வளர்த்தலால்,
2.
கொள்வார் பெறாஅ குரூஉ செகில் காணிகா – கலி 105/36
பிடிப்பதற்கு ஆள் இல்லாமல் இருக்கிற அந்தச் செந்நிறக் காளையைப் பார்!

செகீஇய

செகீஇய – (வி.எ) செகுக்க என்பதன் மரூஉ, தாக்கிக் கொல்ல, to attack and kill
மான்ற மாலை வழங்குநர் செகீஇய
புலி பார்த்து உறையும் புல் அதர் சிறு நெறி – நற் 29/4,5
இருள் மயங்கிய மாலைப்பொழுதில் வழிச்செல்வோரைத் தாக்கிக்கொல்ல
ஆண்புலி வழியை நோக்கிக்கொண்டிருக்கும் புல்லிய வழித்தடமான சிறிய பாதையில்

செகு

செகு – (வி) கொல், kill
உயிர் செகு மரபின் கூற்றத்து அன்ன – மலை 209
உயிர்களைக் கொல்வதையே இயல்பாகக் கொண்டுள்ள கூற்றத்தைப் போன்று

செக்கர்

செக்கர் – (பெ) சிவப்பு, redness, crimson
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி – அகம் 20/4
சிவந்த நண்டின் ஆழமான வளைகளைக் கிண்டிக்கிளறி,

செங்கழுநீர்

செங்கழுநீர் – (பெ) ஒரு கொடி, பூ, Purple Indian water-lily, Numphaea odorata;
ஒண் செங்கழுநீர் கண் போல் ஆய் இதழ்
ஊசி போகிய சூழ் செய் மாலையன் – அகம் 48/8,9
ஒளி பொருந்திய செங்கழுநீரின் கண்போன்ற அழகிய இதழ்களை
ஊசியினால் கோத்துத் தைத்துக் கட்டிய மாலையை அணிந்தவன்,

செங்காந்தள்

செங்காந்தள் – (பெ) செந்நிறமுள்ள காந்தள், Red species of malabar glory-lily, Gloriosa superba
பொருத யானை புகர் முகம் கடுப்ப
மன்ற துறுகல் மீமிசை பல உடன்
ஒண் செங்காந்தள் அவிழும் நாடன் – குறு 284/1-3
போரிட்ட யானையின் புள்ளியையுடைய முகத்தைப் போல
மன்றத்தில் உள்ள குத்துக்கல் மீது, பலவாகச் சேர்ந்து
ஒள்ளிய செங்காந்தள் மலரும் நாட்டினன்

பார்க்க காந்தள்

செங்குரலி

செங்குரலி – (பெ) ஒரு கொடி, பூ : பார்க்க சிறுசெங்குரலி
ஒண் செங்குரலி தண் கயம் கலங்கி – புறம் 283/1
ஒள்ளிய செங்குரலிக் கொடி நிறைந்த தண்ணிய நீர்நிலை கலங்க

செங்குவளை

செங்குவளை – (பெ) ஒரு நீர்த்தாவரம்,கொடி,பூ, பார்க்க குவளை
கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று நின்
எறியர் ஓக்கிய சிறு செங்குவளை
ஈ என இரப்பவும் ஒல்லாள் நீ எமக்கு – பதி 52/21-23
கரையை இடிக்கும் காட்டாற்று வெள்ளத்தில் நடுங்கும் தளிரைப் போல, கோபத்தால் மேனி நடுங்க நின்று, உன்மீது
எறிவதற்காக ஓங்கிய சிறிய செங்குவளை மலரை,
எனக்குத் தா என்று இரு கை நீட்டி வேண்டவும், சினம் குறையாதவளாய்

செங்கொடுவேரி

செங்கொடுவேரி – (பெ) செங்கொடிவேலி, ரோஜாநிறப் பூவுள்ள கொடிவகை, Rosy-flowered leadwort, Plumbago rosea;
செங்கொடுவேரி தேமா மணிச்சிகை – குறி 64

செச்சை

செச்சை – (பெ) 1. வெட்சிப்பூ, Scarlet ixora, Ixora coccinea
2. வெள்ளாட்டுக்கிடா, he goat
1.
கச்சினன் கழலினன் செச்சை கண்ணியன் – திரு 208
கச்சைக் கட்டியவன், வீரக்கழல் அணிந்தவன், வெட்சிமாலை சூடியவன்

2.
வெள்ளை வெள்யாட்டு செச்சை போல – புறம் 286/1
வெள்ளை நிறத்தையுடைய வெள்ளாட்டுக் கிடாய்களைப் போல

செண்

செண் – (பெ) ஒப்பனை செய்யப்பட்டது, கொண்டை, Tresses done into a knot
இன் தீம் பைஞ்சுனை ஈர் அணி பொலிந்த
தண் நறும் கழுநீர் செண் இயல் சிறுபுறம் – அகம் 59/13,14
இனிய சுவையுள்ள புதிய சுனையில் வழவழப்பான மேற்பகுதியையுடைய
குளிர்ந்த மணமுள்ள குவளை போன்ற கொண்டை அசையும் முதுகினை

செண்ணிகை

செண்ணிகை – (பெ) ஒப்பனைசெய்தல், தலைக்கோலங்கள், a kind of head ornament for women
செண்ணிகை கோதை கதுப்போடு இயல – பரி 21/56
தலைக்கோலங்களாகிய மாலை கூந்தலோடு அசைய

செது

செது – (வி) 1. ஒளி முதலியன மழுங்கு, lose lustre, get blunt
2. உறுதி தளர், become feeble
1.
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை
புது கண் மாக்கள் செது கண் ஆர
பயந்தனை-மன்னால் – புறம் 261/8-10
நெய் காய்கின்ற உலையில் சொரியப்பட்ட ஆட்டு இறைச்சியின் ஓசையெழுப்பும் பொரியலை
புதிய மாந்தருடைய ஒளி மழுங்கிய கண்கள் நிறைய
உண்டாக்கினாய்
2.
முதுவாய் பெண்டின் செது கால் குரம்பை – அகம் 63/14
முதுமை வாய்த்த பெண்ணின் உறுதிதளர்ந்து சோர்ந்த காலினையுடைய குடிலினில்

செதுக்கு

செதுக்கு – (பெ) 1. பூ முதலியவற்றின் வாடல், That which is faded, dried, as flowers
2. புல் முதலியனவற்றைச் செதுக்குதல், cutting off a surface, as in cutting grass; paring, shaving off
1.
செம் பூ தூய செதுக்கு உடை முன்றில் – பெரும் 338
தூவப்பட்ட சிவந்த பூக்களின் வாடலையுடைய முற்றத்தில்
2.
செம் பூ தூய செதுக்கு உடை முன்றில் – பெரும் 338
சிவந்த பூக்கள் தூவப்பட்ட (புல் முதலியவற்றைச்)செதுக்கிய முற்றத்தில்,

செதுக்கை

செதுக்கை – (பெ) குறைக்கப்பட்டது, reduced
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல்
கள்ளி முள் அரை பொருந்தி – அகம் 151/11,12
பதுக்கையினை உடையதாகிய குறைந்த நிழலை உடைய
கள்ளியின் முள் பொருந்திய அடியில் தங்கி

செதும்பல்

செதும்பல் – (பெ) சேறு, mud
பெரும் களிறு மிதித்த அடியகத்து இரும் புலி
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி – அகம் 155/11,12
பெரிய களிறு மிதித்துச் சென்ற அடிச்சுவட்டில் பெரிய புலிகள்
அடிவைத்து நடந்து சென்ற சேற்று நிலமான ஈரமுடைய வழிகள்

செதும்பு

செதும்பு – (பெ) ஆற்றில் சிறிதளவு ஓடும் நீர், Thin current of water, as of rivers in summer
இன் நுரை செதும்பு அரற்றும் செவ்வியுள் – கலி 48/18
மெல்லிய நுரைகளோடு சிறிதாக வழிகின்ற ஓடைநீர் ஒலிசெய்யும் இளவேனிற்பருவத்தில்

செத்து

செத்து – (வி.எ) கருதி, எண்ணி, having considered, thought
மற புலி குழூஉ குரல் செத்து வய களிறு
வரை சேர்பு எழுந்த சுடர் வீ வேங்கை – பதி 41/7,8
வீரம்செறிந்த புலியின் தொகுதியான பிடரிமயிர் என்று எண்ணி, வலிமைகொண்ட களிறு,
மலையினைச் சார்ந்து நிற்கும், ஒளிவிடும் பூக்களையுடைய வேங்கைமரத்தின்

செந்தினை

செந்தினை – (பெ) தினை வகை, Italian millet, Setaria italica
கரும் கால் செந்தினை கடியும் உண்டன – நற் 122/2
கரிய அடித்தண்டையுடைய செந்தினைக் கதிர்கள் கொய்யப்பட்டுவிட்டன

செந்தில்

செந்தில் – (பெ) திருச்செந்தூர், the town thiruchchendur
வெண் தலை புணரி அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியன் துறை – புறம் 55/20,21
வெண்மையான தலையை உடைய அலைகள் அலைக்கும் திருச்செந்தூரில்
நெடிய முருகவேள் நிலைபெற்ற அழகிய அகன்ற துறையில்

செந்நாய்

செந்நாய் – (பெ) சிவப்பு நிற உடலைக் கொண்ட காட்டுநாய், dhole, canis dukhunensis
வேட்ட செந்நாய் கிளைத்து ஊண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகல் சில் நீர் – குறு 56/1,2
வேட்டையாடும் செந்நாய்கள் தோண்டி உண்ட மிச்சமாகிய
காட்டுமல்லிகை இலைகள் மூடியதால் அழுகிப்போன சிறிதளவு நீரை

செந்நெல்

செந்நெல் – (பெ) ஓர் உயர் ரக நெல் வகை, A kind of superior paddy of yellowish hue
பழன பாகல் முயிறு மூசு குடம்பை
கழனி நாரை உரைத்தலின் செந்நெல்
விரவு வெள் அரிசியின் தாஅம் ஊரன் – நற் 180/1-3
வயலருகே இருக்கின்ற பலாமரத்தில் முயிறு எனப்படும் சிவந்த பெரிய எறும்புகள் மொய்த்திருக்கும் கூட்டினை
கழனியில் இரைதேடிவந்த நாரை தேய்த்துச் சிதைத்ததால், செந்நெல்
கலந்த வெள்ளை அரிசியைப் போல் எறும்புகளும் அவற்றின் முட்டைகளும் பரந்துகிடக்கும் ஊரைச் சேர்ந்தவன்

சென்னி

சென்னி – (பெ) 1. தலை, head
2. உச்சி, top
3. பாணர், bard
1.
முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி
மின் உறழ் இமைப்பின் சென்னி பொற்ப – திரு 84,85
முடியோடு விளங்கிய (ஒன்றற்கொன்று)மாறுபாடு மிகும் அழகினையுடைய மணிகள்
மின்னலுக்கு மாற்றாகும் சிமிட்டலுடன் தலையில் பொலிவுபெறவும்,
2.
ஏணி சாத்திய ஏற்ற அரும் சென்னி
விண் பொர நிவந்த வேயா மாடத்து – பெரும் 347,348
ஏணியைச் சாத்திய ஏறுதற்கரிய உச்சியினையுடைய,
விண்ணைத் தீண்டும்படி உயர்ந்த வேயாது (சாந்திட்ட)மாடத்தில்
3.
செ வரை நாடன் சென்னியம் எனினே – பெரும் 103
செவ்விய மலைநாட்டை உடையவனுடைய பாணர் யாம்’ எனின்,

செப்பம்

செப்பம் – (பெ) 1. சரிசெய்தல், repairing
2. நேரான பாதை, straight path
1.
கள்வர்
பொன் புனை பகழி செப்பம் கொள்-மார்
உகிர் நுதி புரட்டும் ஓசை போல – குறு 16/1-3
கள்வர்கள்
இரும்பினால் செய்த அம்பினைச் செப்பம் செய்யும்பொருட்டு
(தம்)நகத்தின் நுனியில் புரட்டும் ஓசை போல,
2.
நளிந்து பலர் வழங்கா செப்பம் துணியின் – மலை 197
அடுத்தடுத்துப் பலர் புழங்காத நேரான பாதைகளில் போகத் துணிந்தால்

செப்பல்

செப்பல் – (பெ) சொல்லுதல், saying, declaring
நோய் அலை கலங்கிய மதன் அழி பொழுதில்
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும் – நற் 94/1-2
காம நோய் அலைத்தலால் கலங்கிப்போய் வலிமை அழிந்த வேளையில்
அன்பான மொழிகளைக் கூறுதல் ஆண்மகனுக்குச் சிறந்த பண்பாகும்;

செப்பு

செப்பு – 1. (வி) 1. சொல், say, declare
2. வழிபடு, worship
2. (பெ) உலோகமாகிய செம்பு, copper metal
3. நீர் வைக்கும் கரகம், பாத்திரமாகிய செம்பு, A kind of water-vessel
1.1
பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ
என்று நாம் கூறி காமம் செப்புதும்
செப்பாது விடினே உயிரொடும் வந்தன்று – நற் 79/6-8
பிரிந்து செல்ல எண்ணுவதைக் காட்டிலும் கொடியதும் ஒன்று உண்டோ?
என்று நாம் கூறி நமது ஆசையைச் சொல்லுவோம்;
அவ்வாறு சொல்லாமல் விட்டுவிட்டால் எம் உயிருக்கே கேடு வரும்;
1.2
பகை பெருமையின் தெய்வம் செப்ப
ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர் – பதி 82/1,2
உன்னுடைய பகைமை பெரிதாகையால், உன் பகைவர் தெய்வத்தை வழிபட,
இனிதாகத் தங்குவதற்கு அரிதான இருப்பிடமாயினும் வீரர்கள் அஞ்சாத, பகைவர்க்கு அச்சந்தரக்கூடிய பாசறையில்
2.
அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை
செப்பு அடர் அன்ன செம் குழை அகம்-தோறு – அகம் 9/3,4
அம்பின் குப்பி நுனையைப் போன்று அரும்பிய இலுப்பையின்
செப்புத் தகட்டைப் போன்ற சிவந்த தளிர்களின் கீழேயெல்லாம்
3.
கொம்மை வரி முலை செப்புடன் எதிரின – குறு 159/4
பெரிய, தேமல் வரிகளைக் கொண்ட முலைகள் செம்பினை ஒத்தன

செம்பியன்

செம்பியன் – (பெ) சோழன், King Chola
குட்டுவன்
அகப்பா அழிய நூறி செம்பியன்
பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிக பெரிது – நற் 14/3-5
குட்டுவனின்
அகப்பா என்னும் ஊர் அழிய இடித்தழித்துச் சோழமன்னனான கிள்ளிவளவன்
பகலில் தீயை மூட்டிய ஆரவாரத்திலும் மிகப் பெரிதாக

செம்பு

செம்பு – (பெ) உலோகமாகிய செம்பு, copper metal
செம்பு இயன்று அன்ன செம் சுவர் புனைந்து – மது 485
செம்பால் செய்ததைப் போல செவ்விய சுவர்களில் ஓவியமெழுதி

செம்பூழ்

செம்பூழ் – (பெ) செம்பூத்து என்னும் பறவை, a bird called chembooththu
கரும் தார் மிடற்ற செம்பூழ் சேவல்
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண் – அகம் 63/7,8
கரிய மாலை போன்ற கழுத்தினையுடைய செம்பூழ் என்னும் பறவையின் சேவல்
சிறிய புல்லிய பெடையுடன் குடையும் அவ்விடங்களையுடைய

செம்மலை

செம்மலை – (பெ) பண்பில் சிறந்தவன், distinguished, illustrious person
செம்மலை ஆகிய மலை கிழவோனே – கலி 40/34
பண்பிற் சிறந்தவனான அந்த மலைநாட்டுக்குரியவன்!

செம்மல்

செம்மல் – (பெ) 1. உயர்வு, சிறப்பு, பெருமை, greatness, pre-eminence
2. வாடிய பூ, faded flower
3. முல்லைப்பூ வகை, சாதிப்பூ, Large-flowered jasmine. Flower of Jasminum grandiflorum
4. பண்பில் சிறந்தவர், உயர்ந்தவர், distinguished, illustrious person
5. தலைமை, Greatness, excellence, superiority
1.
எய்யா நல் இசை செ வேல் சேஎய்
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு – திரு 61,62
அளந்தறியமுடியாத நல்ல புகழினையும், செவ்விய வேலையும் உடைய முருகக்கடவுளின் –
திருவடியில் செல்லுதற்குரிய பெருமைகொண்ட உள்ளத்தோடு
2.
அரக்கத்து அன்ன செம் நில பெரு வழி
காயாம் செம்மல் தாஅய் பல உடன் – அகம் 14/1,2
செவ்வரக்கினைப் போன்ற சிவந்த நிலத்தில் செல்லும் பெருவழியில்
காயாம்பூவின் வாடிய பூக்கள் பரவிக்கிடக்க
3.
சேடல் செம்மல் சிறுசெங்குரலி – குறி 82

4.
செம் நீர் பொது வினை செம்மல் மூதூர்
தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ – நற் 130/4,5
செவ்விய பண்புகளைக் கொண்ட, பொதுக்காரியங்களைச் செய்யும் நம் தலைவர், இந்தப் பழமையான ஊரில்
தாமாகவே இங்கு உழைத்துண்ணும் வாழ்க்கையைக் காட்டிலும் இனியது உண்டோ?
5.
உடை நிலை நல் அமர் கடந்து மறம் கெடுத்து
கடும் சின வேந்தர் செம்மல் தொலைத்த
வலம் படு வான் கழல் வயவர் பெரும – பதி 70/9-11
தனக்கே உரித்தானதாகப் பெற்ற நிலையையுடைய நல்ல போர்களை வென்று, எதிர்ப்போரின் வீரத்தை அழித்து,
மிக்க சினத்தையுடைய வேந்தர்களின் தலைமையினையும் இல்லாமற்செய்த
வெற்றி பொருந்திய பெரிய கழல் அணிந்த வீரர்களுக்குத் தலைவனே!

செம்மா

செம்மா – (வி) பெருமிதத்துடன் இரு, be stately, majestic
போர் ஆரா ஏற்றின் பொரு நாகு இளம் பாண்டில்
தேர் ஊர செம்மாந்தது போல் மதைஇனள் – கலி 109/4,5
போர்க்குணம் குறையாத காளைக்கு, ஏனைய பசுக்களுக்கு இணையாக இருக்கும் பசுவினிடத்தில் பிறந்த இளம் எருது
வண்டியை இழுத்துக்கொண்டு போகும்போது பெருமிதத்துடன் செல்வது போல, செருக்குடையவளாய்

செம்மீன்

செம்மீன் – (பெ) 1. அருந்ததி, The star Arundhati
2. செவ்வாய் கோள்மீன், The planet Mars
1.
செம்மீன் அனையள் நின் தொல் நகர் செல்வி – பதி 31/28
செம்மீனாகிய அருந்ததியைப் போன்றவள் உன் தொன்மையான அரண்மனையின் செல்வியான உன் மனைவி
2.
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் – புறம் 60/2
செவ்வாய் மீன் விளங்கும் மாகமாகிய விசும்பின்

செயலை

செயலை – (பெ) அசோகமரம், Asoka tree, Saraca indica
செயலை தண் தளிர் துயல்வரும் காதினன் – திரு 207
அசோகின் குளிர்ந்த தளிர் அசைகின்ற செவியை உடையவன்

செயிர்

செயிர் – 1. (வி) 1. குற்றம் செய், commit an offence
2. வருத்து, cause pain, afflict
3. கோபங்கொள், be angry with
2. (பெ) 1. குற்றம், பிழை, fault, blemish
2. வருத்துதல், afflicting
3. கோபம், சினம், anger, rage
1.1
செயிர்த்து எழு தெவ்வர் திறை துறை போகிய
செல்வ – பொரு 120,121
குற்றத்தைச் செய்து எழுந்த பகைவரிடம் திறைகொள்ளும் முறைகளில் தேர்ச்சிபெற்ற
செல்வனே,
1.2
அகறிரோ எம் ஆயம் விட்டு என
சிரறியவன் போல் செயிர்த்த நோக்கமொடு – பொரு 123,124
போகின்றீரோ (எம்)கூட்டத்தைவிட்டு’ என்று கூறி
வெகுண்டவனைப் போன்று (எமக்கு)வருத்தத்தைச் செய்த பார்வையுடன்,
1.3
செம் கண்ணால் செயிர்த்து நோக்கி – பட் 280
(தன்)சிவந்த கண்ணால் வெகுண்டு பார்த்து,
2.1
சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி – திரு 19
தொலைதூரத்தையும் கடந்து விளங்கும் குற்றம் தீர்ந்த நிறத்தினையும் உடைய சூரர மகளிர்
2.2
செல் கதிர் ஞாயிறு செயிர் சினம் சொரிதலின் – கலி 20/2
கடிதாய்ச் செல்கின்ற கதிர்களையுடைய ஞாயிறு, வருத்துகின்ற நெருப்பைக் கக்குவதால்,
2.3
செம் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் – நற் 298/2
செம்மையான அம்பினை அவர்மீது தொடுக்கும் சினந்த பார்வையினரான ஆடவர்

செய்யர்

செய்யர் – (பெ) சிவந்த மேனியர், a person with a fair complexion
செல் சுடர் பசு வெயில் தோன்றி அன்ன
செய்யர் செயிர்த்த நோக்கினர் – மது 411,412
வீழ்கின்ற ஞாயிற்றின் மாலைவெயிலில் காட்சியளித்தது போன்ற
சிவந்த நிறத்தையுடையவரும்; (ஆண்களை)வருத்தும் பார்வையை உடையவரும்;

செரீஇ

செரீஇ – (வி.எ) செருகி என்பதன் மரூஉ, நுழைத்து, புகுத்தி, inset
ஒண் பூம் பிண்டி ஒரு காது செரீஇ
அம் தளிர் குவவு மொய்ம்பு அலைப்ப சாந்து அருந்தி – குறி 119,120
ஒளிரும் பூக்களையுடைய அசோகின் அழகிய தளிரை ஒரு காதில் செருகி,
(அந்த)அழகிய தளிர்கள் உருண்டு திரண்ட தோளில் (வீழ்ந்து)அலைக்க, சந்தனத்தை உள்ளடக்கி,

செரு

செரு – (பெ) போர், battle
பெரும் சமம் ததைந்த செரு புகல் மறவர் – பதி 30/41
பகைவரின் பெரிய போரினைச் சிதைத்துக் கெடுத்த போரை விரும்பும் மறவர்களால்

செருக்கம்

செருக்கம் – (பெ) கள் முதலியன உண்டலால் வரும் மயக்கம், intoxication
மகிழ்ந்தோர்
கள் களி செருக்கத்து அன்ன
காமம்-கொல் இவள் கண் பசந்ததுவே – நற் 35/10-12
கள்ளுண்டு மகிழ்ந்தோர்க்கு
கள்ளால் ஏற்பட்ட களிப்பின் செருக்கு குறைவது போல
காதல் களிப்புக் குறைவோ? இவள் கண் பசந்து தோன்றுவதற்குக் காரணம்?

செருக்கு

செருக்கு – 1 (வி) 1. பெருமிதம்கொள், be proud
2. களிப்படை, exult
2. (பெ) களிப்பு, exultation
1.1
மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி – பொரு 140
இளமை(பொங்கும்) தோள்களின் மிகுந்த வலிமையால் பெருமிதம்கொண்டு
1.2
இரு மடை கள்ளின் இன் களி செருக்கும்
வன்_புல காட்டு நாட்டதுவே – நற் 59/5,6
பெரிய கலத்தில் கள்ளைப் பருகி அதன் மயக்கத்தில் களித்திருக்கும்
வன்புலமாகிய காடுகளைக் கொண்ட நாட்டில் உள்ளது
2.
பழம் செருக்கு உற்ற நும் அனந்தல் தீர – மலை 173
பழைய களிப்பினால் அடைந்த உமது போதைமயக்கம் தீரும்படி

செருத்தல்

செருத்தல் – (பெ) பசுவின் பால்மடி, மடியினைக் கொண்ட பசு, udder of a cow, cow with an udder
நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல்
பால் வார்பு குழவி உள்ளி நிரை இறந்து – குறு 344/4,5
நிலத்தில் தோயும்படி தாழ்ந்த கழுத்துத் தசைகளையும், வீங்கிய மடிகளையும் கொண்ட பசுக்கள்
பாலை ஒழுகவிட்டு, தம் கன்றுகளை நினைத்து, தம் கூட்டத்தைவிட்டு விலகி

செருந்தி

செருந்தி – (பெ) 1. வாள்கோரை, a kind of sedge
2. சிலந்தி, Panicled golden-blossomed pear tree, Ochna squarrosa;
1.
கழுநீர் பொலிந்த கண் அகன் பொய்கை
களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர – மது 171,172
செங்கழுநீர் மிக்க இடம் அகன்ற பொய்கைகளில்
யானை(யும்) மறையுமளவிற்கு வாட்கோரையும் சண்பகங்கோரையும் நெருங்கி வளர
2.
எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழ – ஐங் 141/1
மணல் மேட்டினில் உள்ள ஞாழல் மரத்தின் பூ, செருந்திப்பூவுடன் கமழ்ந்திருக்க,

செருப்பு

செருப்பு – (பெ) 1. காலணி, leather sandals
2. பூழிநாட்டிலுள்ள ஒரு மலை, A mountain in the country of pUzhi
1.
செருப்பு உடை அடியர் தெண் சுனை மண்டும் – அகம் 129/13
செருப்பினைக் கொண்ட அடியராகி, தெளிந்த சுனைநீரை மிகுதியாகப் பருகும்
2.
மிதி அல் செருப்பின் பூழியர் கோவே – பதி 21/23
மிதிக்கும் செருப்பு அல்லாத செருப்பு என்னும் மலையினையுடைய பூழியரின் அரசே

செருவம்

செருவம் – (பெ) பகைமை, மாறுபாடு, enmity
எருமை இரு தோட்டி எள்ளீயும் காளை
செருவம் செயற்கு என்னை முன்னை – பரி 8/86,87
எருமைவாகனத்தானாகிய கூற்றுவனின் பெரிய ஆணையையும் இகழும் ஆற்றலையுடைய முருகப்பெருமான்
(பொய்ச்சூள் கூறிய உன்னைப்) பகைத்துக்கொள்வதற்கும் முன்பாக,

செருவிளை

செருவிளை – (பெ) வெள்ளைக்காக்கணம், சங்குப்பூ, White-flowered mussel-shell creeper, Clitoria ternatea-albiflora
எருவை செருவிளை மணி பூ கருவிளை – குறி 68

செறல்

செறல் – (பெ) சினம், anger
வலம்புரி வாய்மொழி அதிர்பு வான் முழக்கு செல்
அவை நான்கும் உறழும் அருள் செறல் வயின் மொழி – பரி 13/45,46
வலம்புரிச் சங்கின் முழக்கமும், வேதங்கள் ஓதும் ஒலியும், மேகங்களின் அதிர்ந்த ஒலியும், இடிமுழக்கமும்
ஆகிய நான்கையும் போன்ற அருளுடைமை, சினத்தல் ஆகியவற்றை நிலைக்களனாகக் கொண்டவை உன் மொழிகள்;

செறு

செறு – 1 (வி) 1. கோபம்கொள், be angry with
2. வற்றிப்போ, become dried out
3. கொல், kill, destroy
4. உள்ளடங்கச்செய், include, comprise
5. தடு, stop, prevent
2. (பெ) 1. வயல், field
1.1.
செற்ற தெவ்வர் கலங்க தலைச்சென்று
அஞ்சுவர தட்கும் அணங்கு உடை துப்பின் – மது 139,140
(தம்மால்)செறப்பட்ட பகைவர் மனம் கலங்கும்படி அவரிடம் சென்று
(அவர்க்கு)அச்சம் தோன்றத் தங்கும், வருத்தத்தை உடைய வலிமையினையும்
1.2.
வேம்பின் ஒண் பழம் முணைஇ இருப்பை
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ
வைகு பனி உழந்த வாவல் – நற் 279/1-3
வேம்பின் ஒள்ளிய பழத்தை உண்டு வெறுத்து, இருப்பையின்
தேனுள்ள, பால் வற்றிய இனிய பழத்தை விரும்பி,
நிலைகொண்டிருக்கும் பனியில் வருந்திய வௌவாலின் மேல்
1.3
செறு தீ நெஞ்சத்து சினம் நீடினோரும் – பரி 5/73
கொல்லுகின்ற தீய நெஞ்சத்தில் சினத்தை நீட்டித்திருப்போரும்
1.4
செறுத்த செய்யுள் செய் செம் நாவின்
வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன் – புறம் 53/11,12
பல பொருள்களையும் உள்ளடக்கிய செய்யுளைச் செய்யும் செவ்விய நாவினையும்
மிக்க கேள்வியையும் விளங்கிய புகழையும் உடைய கபிலன்
1.5
நீரை செறுத்து நிறைவு உற ஓம்பு-மின் – கலி 146/43
நீரையெல்லாம் தடுத்து நிறுத்தி நிறைந்து வழியும்படி சேமித்துவையுங்கள்
2.
ஏறு பொருத செறு உழாது வித்துநவும் – பதி 13/2
காளைமாடுகள் சண்டையிட்ட சேறுபட்ட வயல்களில் உழாமலே விதைவிதைக்கவும்,

அழல் நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல் ஈன் கவை முதல் அலங்கல்
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையா துயல்வர – அகம் 13/17-20

என்ற அகநானூற்று அடிகளில் வயல், கழனி, செறு ஆகிய மூன்று சொற்களும் கையாளப்பட்டுள்ளன,
இதற்கு
வளம் மிக்க வயலில்
தீயின் கொழுந்தினை ஒத்த தோடுகளை ஈன்ற
வயல் நெல்லின் பலவாகக் கிளைத்த முதலிலிருந்து தோன்றிய நெற்கதிர்
நிரம்பிய அகன்ற வயலினிடத்து வரப்புகளை அணையாகக் கொண்டு கிடந்து அசைய

என்பது வே.நாட்டார் உரை. இங்கே வயல், கழனி, செறு ஆகிய மூன்று சொற்களுக்கும் வயல் என்றே பொருள்
கொள்ளப்பட்டிருக்கிறது. இவற்றுக்குள்ள நுட்பமான வேறுபாடு ஆய்விற்குரியது.

இவற்றுள், கழனி என்ற சொல் எதைக் குறிக்கிறது என்பதைப் பற்றிய ஆய்வு, கழனி என்ற சொல்லின் அடியில்
கொடுக்கப்பட்டுள்ளது. அதனைப் பார்க்க இங்கே சொடுக்கவும். கழனி

கழனி என்பது வயல்பரப்பு அல்லது வயல்வெளி என்பதைக் குறிக்கும் என்று அங்கு கண்டோம்.

ஏர் பரந்த வயல் நீர் பரந்த செறுவின்
நெல் மலிந்த மனை பொன் மலிந்த மறுகின் – புறம் 338/1,2
ஆகிய அடிகளுக்கு உரைவிளக்கம் தந்த ஔவை.சு.து.அவர்கள், ‘பள்ளப்பாங்கான நன்செய் வயலென்றும், மேட்டுப்
பாங்கு செறுவென்றும் தெரிந்துணர்க’ என்கிறார்.

ஆனால், செறு என்பது வரப்புடன் கூடிய வயல் என்றும், வயல் என்பது வரப்பு இல்லாத செறு என்றும் கொள்வதற்கு
இடமிருக்கிறது. அதாவது ஒரு நெல்விளையும் இடத்தை அதன் வரப்புடன் குறித்தால் அது செறு. வரப்பும் அதன் உள்ளே
இருக்கும் இடமும் சேர்ந்தது செறு. வரப்பு இல்லாமல் நெல் விளையும் உள்பரப்பை மட்டும் பார்த்தால் அது
வயல்.
மேலே காட்டப்பட்ட அகநானூற்றுப் பகுதியில், நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையா துயல்வர என்ற
அடியில் செறு, வரப்புடன் சேர்ந்து பேசப்படுவதைக் கூர்ந்து நோக்குக.

ஞெண்டு ஆடு செறுவில் தராய்_கண் வைத்த – மலை 460
நண்டுகள் ஓடித்திரியும் வயல்களின்(அருகே) களத்துமேட்டில் வைத்த,

என்ற அடியும் இதனையே குறிப்பால் உணர்த்துகிறது ஒரு வயலில் நண்டுகள் வரப்போரத்தில் வளை தோண்டி,
வரப்புகளின் மீது ஓடியாடித்திரியும் அல்லவா!

படை மாண் பெரும் குள மடை நீர் விட்டு என
கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளை
அள்ளல் அம் கழனி உள்வாய் ஓடி
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து
செம் சால் உழவர் கோல் புடை மதரி
பைம் கால் செறுவின் அணை முதல் பிறழும் – நற் 340/3-8
சிறப்பாகச் செய்யப்பெற்ற பெரிய குளத்தின் மடை நீரைத் திறந்துவிட,
வாய்க்காலை ஒட்டிச் சென்று மடைநீரை எதிர்கொண்ட திரண்ட கொம்பினையுடைய வாளை மீன்
சேற்றையுடைய அழகிய கழனியின் உட்பக்கம் ஓடி
காளைகள் சேற்றை மிதித்தலால் எழுந்த சேற்றுத்துகள் படிந்த தம் வெள்ளையான முதுகுடன்,
செம்மையாக நீள உழும் உழவர் தம் காளையைக் கோலால் அடிப்பதற்கும் அஞ்சாது செருக்குக்கொண்டு
பசுமையான வாய்க்காலையுடைய வயல் வரப்பின் அணையினடியில் பிறழும்

என்ற அடிகளிலும் செறு என்பது வரப்பைச் சேர்த்துப் பேசப்படுவதைப் பார்க்கிறோம்.

மேலே காட்டப்பட்ட, ’ஏர் பரந்த வயல் நீர் பரந்த செறுவின்’ என்ற அடிக்கு ’ஏர் உழுத வயலையும் நீர் பரவிய
வரப்பையும்’ என்று ச.வே.சு உரைகொள்கிறார். ஆனால் பல இடங்களில் செறு என்பது நெல்விளையும் இடத்தையும்
குறிப்பதால் செறு என்பது வரப்புடன் சேர்ந்த வயல் என்று கொள்ளல் தகும் எனத் தோன்றுகிறது.

செறுவும் வாவியும் மயங்கி நீர் அற்று – பட் 244 (வாவி – குளம்)
என்ற பட்டினபாலை அடியும் இதனை உறுதிப்படுத்தும். வாவி என்பது குளம், அதாவது கரையுடன் சேர்ந்த நீர்நிலை.
அதைப்போலவே செறு என்பது வரப்புடன் சேர்ந்த விளைநிலம்.
மேலும், செறு என்பதற்குப் பாத்தி என்ற பொருள் உண்டு. பாத்தி என்றாலே சுற்றிலும் அடைப்பு உள்ள
பகுதிதானே. அதைப் போலவே சுற்றிலும் வரப்பு உள்ள வயல்தான் செறு. வயல் என்பது நெல் விளையும் இடம்
மட்டுமே.
ஒரு வீட்டின் பரப்பைக் குறிக்கும்போது plinth area என்றும், carpet area என்றும் குறிப்பிடுவர். இவற்றில் plinth area
என்பது area with the boundary. carpet area என்பது area without the boundary. இதையே கணிதத்தில் closed set
என்றும், open set என்றும் கூறுவர்.
plinth area – closed set – செறு
carpet area – open set – வயல்

செறுநர்

செறுநர் – (பெ) பகைவர், foes
செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சி
சிறுவர் பயந்த செம்மலோர் என – அகம் 66/3,4
பகைவரும் விரும்பும் குற்றமற்ற அழகினையுடைய
மக்களைப் பெற்ற தலைமையையுடையோர் என

செறும்பு

செறும்பு – (பெ) பனஞ்சிறாம்பு, palm fibre
இரும் பனம் செறும்பின் அன்ன பரூஉ மயிர்
சிறு கண் பன்றி – அகம் 277/7,8
கரிய பனையின் சிறாம்பினைப் போன்ற தடித்த மயிரினையும்
சிறிய கண்ணினையும் உடைய பன்றி

செறுவர்

செறுவர் – (பெ) பகைவர், பார்க்க செறுநர்
செறுவர் நோக்கிய கண் தன்
சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே – புறம் 100/10,11
பகைவரை வெகுண்டு பார்த்த கண் தன்னுடைய
புதல்வனைப் பார்த்தும் சிவப்பு அமையாவாயின

செறுவர்க்கு
செற்றம்

செற்றம் – (பெ) மனவைரம், தணியாத கோபம், rancour, irrepressible anger
இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் – திரு 131,132
மாறுபாட்டுடன்
கோபத்தை நீக்கிய மனத்தினர்

செற்றார்

செற்றார் – (பெ) பகைவர், enemies
பல் இரும் கூந்தல் பசப்பு நீ விடின்
செல்வேம் தில்ல யாமே செற்றார்
வெல் கொடி அரணம் முருக்கிய
கல்லா யானை வேந்து பகை வெலற்கே – ஐங் 429/1-4
பலவான கரிய கூந்தலையுடையவளே! பிரிவால் பசந்துபோவதை நீ நிறுத்திக்கொண்டால் மட்டுமே
செல்கிறேன் நான்; பகைவரின்
வெற்றிகுறித்து எழுப்பிய கொடிகளையுடைய கோட்டையை அழிக்கும்,
போரையன்றி வேறொன்றைக் கல்லாத யானைப்படையையுள்ள நம் வேந்தனின் பகைவரை வெல்வதற்கு

செற்றை

செற்றை – (பெ) 1. செத்தை, இலைதழைகுப்பை, garbage
2. சிறுதூறு, thicket, bush
1.
குளகு அரை யாத்த குறும் கால் குரம்பை
செற்றை வாயில் செறி கழி கதவின் – பெரும் 148,149
தழைகள்(தம்மிடத்தே) கட்டின குறுகிய கால்களையுடைய குடிலின்,
இலை தழைக் குப்பைகளையுடைய வாயிலையும், செறிக்கப்பட்ட கழிகளையுடைய கதவினையும்
2.
குளகு அரை யாத்த குறும் கால் குரம்பை
செற்றை வாயில் செறி கழி கதவின் – பெரும் 149
தழைகளைத் தம்மிடத்தே கட்டின குறிய கால்களையும்
சிறுதூற்றையுடைய வாயிலினையும், கழிகளால் கட்டப்பட்ட கதவினையும்

செலவு

செலவு – (பெ) 1. போக்கு, going, passing
2. பயணம், journey
3. ஓட்டம், running
1.
கோடு கொண்டு எழுந்த கொடும் செலவு எழிலி – முல் 5
மலைகளை(இருப்பிடமாக)க் கொண்டு எழுந்த விரைவான போக்கினையுடைய மேகம்-
2.
குன்று உடை அரும் சுரம் செலவு அயர்ந்தனையே – ஐங் 307/2
குன்றுகளையுடைய கடத்தற்கரிய பாலைவழியில் பயணம் மேற்கொண்டாய்
3.
வெருவரு செலவின் வெகுளி வேழம் – பொரு 172
அச்சம் தரும் ஓட்டத்தையும், சினத்தையும் உடைய யானைகளை

செலீஇ

செலீஇ – (வி.எ) சென்று என்பதன் திரிபு, going
வளை நீர் மேய்ந்து கிளை முதல் செலீஇ
வா பறை விரும்பினை ஆயினும் – நற் 54/1,2
சங்குகள் உள்ள கடல்நீரில் இரைதேடி, உன் சுற்றமுதலானவருடன் சென்று
சிறகுகளை விரித்து உயரப் பறக்க எழும்புவதை விரும்பினாயெனினும்

செல்

செல் – 1. (வி) போ, go
2. (பெ) இடி, thunderbolt
1.
செறுநர் தேய்த்து செல் சமம் முருக்கி – திரு 99
கோபமுடையோரை அழித்து, செல்லுகின்ற போரில் கொன்றழித்து
2.
செறுநர் தேய்த்த செல் உறழ் தட கை – திரு 5
தான்கோபங்கொண்டாரை அழித்த இடியின் மாற்றான பெரிய கையினை உடையவனும்,

செல்நாய்

செல்நாய் – (பெ) வேட்டைநாய், hunting dog
செல்நாய் அன்ன கரு வில் சுற்றமொடு – பெரும் 139
வேட்டை நாயைப் போன்ற கொடிய வில்லையுடைய காவலாளருடன்,

செல்லி

செல்லி – (பெ) ஆதன் எழினி என்ற அரசனின் நாட்டைச் சேர்ந்த செல்லூர் என்ற ஊர்,
a place called chellUr, belonging to the country of a chieftain Adhan Ezhini
மல்லல் யாணர் செல்லி கோமான் – அகம் 216/12
மிக்கவளம் பொருந்திய செல்லூர் என்ற ஊரின் மன்னன்

செழியன்

செழியன் – (பெ) பாண்டியன், King of the Pandiya dynasty
ஓம்பு அரண் கடந்த அடு போர் செழியன்
பெரும் பெயர் கூடல் அன்ன – நற் 39/9,10
காவலையுடைய அரணை வென்ற அழிக்கின்ற போரினையுடைய செழியனின்
பெரும் புகழ்பெற்ற கூடல்மாநகரைப் போன்ற

செவிமறை

செவிமறை – (பெ) செவியில் மறுவையுடைய எருது, Bull having a spot in its ears
செவிமறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளை – கலி 101/27
காதில் மச்சம் உள்ள, இடையர்கள் நேர்ந்துவிட்ட, மின்னும் நுண்ணிய சிவந்த புள்ளிகளைக் கொண்ட வெள்ளைக்காளை

செவிலி

செவிலி – (பெ) வளர்ப்புத்தாய், foster mother
ஊரா நல் தேர் உருட்டிய புதல்வர்
தளர் நடை வருத்தம் வீட அலர் முலை
செவிலி அம் பெண்டிர் தழீஇ பால் ஆர்ந்து – பெரும் 249-251
(ஏறி)ஊரப்படாத நல்ல சிறு தேரை உருட்டிக்கொண்டு திரிந்த பிள்ளைகள்
(தமது)தளர் நடை(யால் உண்டான) வருத்தம் நீங்கும்படி, பரந்த முலையினையுடைய
செவிலித் தாயாராகிய அழகிய மகளிரைத் தழுவிக்கொண்டு, பாலை நிரம்ப உண்டு,

செவ்வரக்கு

செவ்வரக்கு – (பெ) சாதிலிங்கம், vermilion
பரு இரும்பு பிணித்து செவ்வரக்கு உரீஇ – நெடு 80
பெரிய (ஆணிகளும் பட்டங்களுமாகிய)இரும்பால் கட்டி, சாதிலிங்கத்தைப் பூசி வழித்து

செவ்வழி

செவ்வழி – (பெ) பெரிய பண்களுள் ஒன்றாகிய முல்லைப்பண், A primary melody-type of the mullai class
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ்
இசை ஓர்த்தன்ன இன் தீம் கிளவி – அகம் 212/6,7
யாழ் வல்லோன் இயக்கும் செவ்வழிப்பண்ணை இசைக்கும் நல்ல யாழின்
இசையைக் கேட்டாற்போல மிக இனிய சொல்லினையுடைய

செவ்வி

செவ்வி – (பெ) 1.காலம், time
2. ஏற்ற காலம், opportune moment
3 பக்குவம், matured condition
4.அழகு, எழில், beauty, gracefulness
5. நேர்முகம், காட்சி, audience, interview
6. நுகர்தல், துய்த்தல், சுவைத்தல், enjoyment, tasting
1.
விடர் கால் அருவி வியன் மலை மூழ்கி
சுடர் கால் மாறிய செவ்வி நோக்கி – சிறு 170,171
முழைஞ்சுகளில் குதிக்கும் அருவியினையுடைய பெரிய மலையில் மறைந்து, 170
ஞாயிற்றின் (ஒளிச்)சுடர்கள் மாறிப்போன அந்திக்காலத்தைப் பார்த்து
2.
பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை
பெரு நீர் போகும் இரியல் மாக்கள்
ஒரு மர பாணியில் தூங்கி ஆங்கு
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ
செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து – பெரும் 431-435
பொன்னைக் கொழித்துக்கொண்டு குதிக்கும் கடத்தற்கரிய கங்கையாற்றின்
பெரிய நீரைக் கடந்துபோகும் மனக்கலக்கமுள்ள மாக்கள்
ஒரேயொரு தோணி வரும் காலத்திற்காகக் காத்திருத்தலைப் போல –
கெடாத திரைப்பொருளோடு நெருங்கித் திரண்டு,
(பொருந்திய)நேரம் பார்க்கும் வளவிய முற்றத்தினையுடைய;
3.
மடவரல் மகளிர் பிடகை பெய்த
செவ்வி அரும்பின் பைம் கால் பித்திகத்து – நெடு 39,40
பேதைமை (மிக்க)பெண்கள் — (தம் கையிலுள்ள) பூத்தட்டுகளில் பறித்துப்போட்ட
(மலரும்)பக்குவத்திலுள்ள மொட்டுக்களின் பசிய காலினையுடைய பிச்சியின்
4.
செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை – நற் 26/2
அழகு அமைந்த புள்ளிகளைக் கொண்ட வெள்ளிய அடிப்பாகத்தையுடைய
5.
அரிதால் பெரும நின் செவ்வி என்றும் – புறம் 169/6
உன்னைக் காணும் காலம் பெறல் அரிது எந்நாளும்
6.
பொய்யா மரபின் பூ மலி பெரும் துறை
செவ்வி கொள்பவரோடு அசைஇ அ வயின் – பெரும் 389,390
பொய்க்காத மரபினையுடைய பூக்கள் மிகுகின்ற பெரிய துறையிடத்தே,
(இளவேனில்)இன்பத்தை நுகர்வாரோடு இளைப்பாறி; அவ்விடத்தில்

செவ்வேள்

செவ்வேள் – (பெ) முருகக் கடவுள், Lord Muruga
செறி தொடி முன்கை கூப்பி செவ்வேள்
வெறி ஆடு மகளிரொடு செறிய தாஅய் – பட் 154,155
செறிந்த வளையல்களுடைய — முன்கை குவித்து வணங்கிநிற்க, முருகனின்
வெறியாட்டு ஆடும் மகளிரோடு (அவர் ஆட்டத்திற்கு இணையாகப்)பொருந்தப் பரந்து

சே

சே – 1. (வி) 1. தங்கு, dwell, abide
2. அடை, எய்து, get, obtain
2. (பெ) சிவப்பு, redness
1.1
சேணோன் இழைத்த நெடும் கால் கழுதில்
கான மஞ்ஞை கட்சி சேக்கும்
கல் அகத்தது எம் ஊரே – நற் 276/5-7
உயர்ந்த பரணில் இருக்கும் தினைக்காவலன் கட்டிய உயரமான கால்களைக் கொண்ட பரணில்,
காட்டு மயில்கள் தம் இருப்பிடமாய்த் தங்கிவாழும்
மலைகளுக்கிடையே அமைந்தது எமது ஊர்;
1.2
கனவின் தொட்டது கை பிழை ஆகாது
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை
வரு புனல் அணிக என வரம் கொள்வோரும் – பரி 8/103-105
கனவில் காதலரின் கையைத் தொட்டது பொய்யாகாமல்
நனவினிலும் கிட்டும்படி, ‘உனக்குரிய செறிந்த நீரையுடைய வையை ஆறு
புதிதாய் வரும் புனலை அணிவதாக’ என்று வரம் கேட்போரும்,
2.
ஏனல் காவலர் மா வீழ்த்து பறித்த
பகழி அன்ன சே அரி மழை கண் – நற் 13/3,4
தினைப் புனக் காவலர் காட்டுப்பன்றியை வீழ்த்திவிட்டுப் பறித்த
அம்பினைப் போன்ற சிவந்த வரிகளையுடைய குளிர்ச்சியான கண்களையும்

சேக்கை

சேக்கை – (பெ) துயிலிடம், படுக்கை, கட்டில், உறைவிடம், cot, bed, couch, dwelling place
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்து
தோடு அமை தூ மடி விரித்த சேக்கை – நெடு 134,135
கஞ்சி போட்டு வெளுக்கப்பட்ட துகிலின்
மலரிதழ்கள் வைத்து(மணமூட்டப்பட்ட)தூய மடியினை விரித்த படுக்கையின்கண்

செ வரை சேக்கை வருடை மான் மறி – குறு 187/1
செம்மையான மலையை உறைவிடமாகக்கொண்ட வருடைமானின் குட்டி

சேடல்

சேடல் – (பெ) பவளமல்லிகை, Night-flowering jasmine, Nyctanthes arbor-tristis
சேடல் செம்மல் சிறுசெங்குரலி – குறி 82

சேடு

சேடு – (பெ) பெருமை, சிறப்பு, greatness, excellence
சேடு இயல் வள்ளத்து பெய்த பால் சில காட்டி – கலி 72/3
சிறப்பான இயல்புடைய கிண்ணத்தில் ஊற்றிய பாலைச் சிறிதளவு எடுத்துக்காட்டி

சேணோன்

சேணோன் – (பெ) 1. குறிஞ்சி நிலத்தவன், inhabitant of a hilly tract
2. உயரமான பரணில் இருப்பவன், One who is on a platform on a tree
3. எட்டமுடியாத இடத்தில் இருப்பவன், one who is unapproachable
1.
சேணோன் அகழ்ந்த மடி வாய் பயம்பின் – மது 294
குறவன் தோண்டின, மூடின வாயையுடைய பொய்க்குழியில்
2.
சேணோன் இழைத்த நெடும் கால் கழுதில் – நற் 276/5
உயர்ந்த பரணில் இருக்கும் தினைக்காவலன் கட்டிய உயரமான கால்களைக் கொண்ட பரணில்,
3.
செல்வை ஆயின் சேணோன் அல்லன் – புறம் 103/5
நீ அவன்பால் போவாயாகின் அவன் கிட்டமுடியாதவன் அல்லன்

சேண்

சேண் – (பெ) 1. தூரம், சேய்மை, remoteness, distance
2. உயரம், height, loftiness
3. நெடுங்காலம், long span of time
1.
ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி – திரு 3
ஒழிவு இல்லாமல் மின்னும் சேய்த்துநின்று ஒளிரும் பிரகாசமான ஒளியையுடைய
2.
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினை – சிறு 254
மழைத்துளியில் நனைந்த முருக்க மரத்தின் மிக்க உயரத்திற்கு வளர்ந்த நீண்ட கொம்பில்
3.
திரியா சுற்றமொடு முழுது சேண் விளங்கி
நடுக்கு இன்றி நிலியரோ – புறம் 2/19,20
வேறுபாடில்லாத மந்திரிச் சுற்றத்தோடு ஒழியாது நெடுங்காலம் விளங்கி
துளக்கமின்றி நிற்பாயாக

சேதா

சேதா – (பெ) சிவப்புப்பசு, Tawny coloured cow
சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டு சேதா – நற் 359/1
மலைச்சரிவில் மேய்ந்த சிறிய கொம்பையுடைய சிவந்த பசு

சேதிகை

சேதிகை – (பெ) குதிரையின் உடலில் குத்தும் பச்சை, Coloured mark on a horse
வெதிர் உழக்கு நாழியால் சேதிகை குத்தி – கலி 96/27
மூங்கில் உழக்காகிய நாழியால் சேதிகை என்னும் பச்சை குத்தி

சேப்பு

சேப்பு – (பெ) சிவப்பு, redness
சிகை கிடந்த ஊடலின் செம் கண் சேப்பு ஊர – பரி 7/70
முன்னரே மீந்துபோய்க்கிடந்த ஊடலால் சிவந்திருந்த கண்களில் மேலும் சிவப்பேற

சேமஅச்சு

சேமஅச்சு – (பெ) அச்சு முறியும்போது போடுவதற்கான கூடுதல் அச்சு, stepney axis
கீழ் மரத்து யாத்த சேமஅச்சு அன்ன – புறம் 102/5
அச்சுமரத்தின் கண்ணே அடுத்துக்கட்டப்பட்ட கூடுதல் அச்சுப் போன்ற

சேமச்செப்பு

சேமச்செப்பு – (பெ) சேமித்துவைக்கும் செப்புக்குடம், copper vessel in which water is saved
அற்சிர வெய்ய வெப்ப தண்ணீர்
சேமச்செப்பில் பெறீஇயரோ நீயே – குறு 277/4,5
முன்பனிக்காலத்துக்காக விரும்பத்தக்க வெப்பத்தையுடைய நீரைச்
சேமித்துவைக்கும் செப்பில் பெறுவீராக! நீவிர்!

சேமம்

சேமம் – (பெ) பாதுகாவல், protection, security
சேம திரை வீழ்த்து சென்று அமளி சேர்குவோர்
தாம் வேண்டு காதல் கணவர் எதிர்ப்பட
பூ மேம்பாடு உற்ற புனை சுரும்பின் சேம
மட நடை பாட்டியர் தப்பி தடை இறந்து – பரி 10/34-37
பாதுகாவலான திரையைச் சூழப்போட்டு தன் கணவருடன் மலர்ப்படுக்கையில் கூடிக்களிப்போருமாய்,
தாம் விரும்புகின்ற காதல் கணவர்கள் எதிர்ப்பட்டபோது,
பூவின் சிறப்பினால் அதன்மீது மொய்க்கவரும் அழகிய வண்டினைப் போல, தமக்குக் காவலாகிய
தளர்நடைப் பாட்டியரிடமிருந்து தப்பித்து, தடைகளை மீறிக் காதலரை எதிர்கொள்ள

சேம்பு

சேம்பு – (பெ) ஒரு செடி, indian kales, Colocasia antiquorum
நீலத்து அன்ன அகல் இலை சேம்பின்
பிண்டம் அன்ன கொழும் கிழங்கு மாந்தி – அகம் 178/4,5
நீலமணியைப் போன்ற நிறத்தினையுடைய அகன்ற இலையினையுடைய சேம்பின்
பிண்டித்து வைத்தாற்போன்ற செழுமையான கிழங்கினை நிறையத் தின்று

சேய்

சேய் – (பெ) 1. சேய்மை. தூரம், remoteness, distance
2. குழந்தை, மகன்/மகள், child
3. சிவப்பு, redness
4. சிவப்புக்காளை, tawny coloured bull
1.
செல் புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று – சிறு 3
ஓடுகின்ற நீரால் வருந்தின, தொலைவினின்றும் வருகின்ற, காட்டாற்றின்
2.
நன்னன் சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு – மலை 64
நன்னன் மகனான நன்னனை நினைத்த உறுதிப்பாட்டுடன்
3
சேய் இறா எறிந்த சிறு_வெண்_காக்கை – நற் 31/2
சிவந்த இறால் மீனைப் பாய்ந்துபற்றித் தின்ற சிறிய கடற்காக்கை,
4.
வாலிது கிளர்ந்த வெண் கால் சேயும் – கலி 105/18
நன்றாய் உயர்ந்த வெண்மையான கால்களையுடைய சிவந்த காளையும்

சேர்ப்பன்

சேர்ப்பன் – (பெ) நெய்தனிலத்தலைவன், Chief of the maritime tract;
தெண் கடல் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே – நற் 49/10
தெளிந்த கடலையுடைய தலைவன் வாழும் சிறிய நல்ல ஊருக்கு

சேறல்

சேறல் – (பெ) செல்லுதல், passing, going, reaching
அரும் சுரம் சேறல் அயர்ந்தனென் யானே – அகம் 221/14
அரிய சுரநெறியில் செல்லுதலை யான் விரும்பி ஏற்றுக்கொண்டேன்

சேவடி

சேவடி – (பெ) சிவந்த பாதம், red foot
தாமரை புரையும் காமர் சேவடி – குறு 0/1
தாமரை மலரைப் போன்ற அழகிய சிவந்த திருவடிகளையும்

சையம்

சையம் – (பெ) ஒரு மலை. a mountain
புரை கெழு சையம் பொழி மழை தாழ – பரி 11/14
உயர்ச்சி பொருந்திய சையமலையில் பொழிகின்ற மழை மிகுதியாய் இறங்கிப்பாய

சொன்றி

சொன்றி – (பெ) சோறு, boiled rice
குறும் தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி – பெரும் 193
குறிய தாளினையுடைய வரகின் சிறிய பருக்கைகளாகிய சோற்றை

சொரி

சொரி – 1 (வி) 1. சிதறிவிடு, shoot down
2. கொட்டு, pour down
3. மிகுதியாகக் கொடு, வழங்கு, give away in plenty
4. தொகுதியாகச் செலுத்து, shoot as arrows
5. சொட்டு, drop out
– 2 (பெ) தினவு, itching
1.1.
கம்மியர்
செம்பு சொரி பானையின் மின்னி – நற் 153/2,3
கொல்லர் கடையும்போது
செம்புப்பொறிகளைச் சிதறிவிடும் பானையைப் போல மின்னலிட்டு,
1.2.
பல் பூ கானல் முள் இலை தாழை
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ – நற் 335/4,5
பலவான பூக்களையுடைய கடற்கரைச் சோலையின் முள் உள்ள இலைகளைக்கொண்ட தாழை
சோற்றை அள்ளிக்கொட்டும் அகப்பையைப் போல கூம்பிய மொட்டு அவிழ,
1.3.
இலம்படு புலவர் ஏற்ற கை ஞெமர
பொலம் சொரி வழுதியின் புனல் இறை பரப்பி – பரி 10/126,127
இல்லாத புலவர்கள் ஏந்திநின்ற கைகள் நிரம்பும்படி
தங்கத்தை மிகுதியாக வழங்குகின்ற பாண்டிய மன்னனைப் போலவே, வையைஆறு நீரை நாடெங்கும் இறைத்துப் பரப்பி
1.4.
வில்லு சொரி பகழியின் மென் மலர் தாயின
வல்லு போர் வல்லாய் மலை மேல் மரம் – பரி 18/40,41
வில்லிலிருந்து செலுத்தப்படும் அம்புகளைப் போல் மெல்லிய மலர்களைச் சொரிந்து பரப்பின
சூதாட்டத்தில் வல்லவனே! உன் மலை மேலிருக்கும் மரங்கள்
1.5.
கண்ணீர்
சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன – கலி 82/13,14
அவளின் கண்ணீர்
சொட்டுச்சொட்டாய் வடிந்தது முத்து மாலை அறுந்து முத்துக்கள் சிந்தியது போல் இருந்தது
2.
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து – அகம் 121/8
தினவு பொருந்திய தன் முதுகினை உராய்ந்துகொண்டதான, வழியின் பக்கத்தே உள்ள வேண்கடம்பின்

சொரிவு

சொரிவு – (பெ) கொட்டுதல், tha act of pouring down
பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவு_உழி – குறி 57
பளிங்கை (க் கரைத்துக்)கொட்டியதைப் போன்ற பரந்த சுனையில் மூழ்கி விளையாடுகின்றபொழுது

சொறி

சொறி – (வி) தினவு நீங்கத் தேய், scratch in order to allay itching
ஓங்கு எயில் கதவம் உருமு சுவல் சொறியும்
தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தட கை – சிறு 80,81
உயர்ந்த மதிலின் கதவில் உருமேறு (தன்)கழுத்தைத் (தினவால்)தேய்க்கும்
(வானத்தே)தொங்கும் கோட்டையை அழித்த, தொடி விளங்கும் பெருமையையுடைய கையினை

சொலி

சொலி – 1 – (வி) 1. உரி, பேர்த்தெடு, strip off, tear off, tear off
2. இடம்பெயர், displace
3. நீக்கு, remove, eradicate
2. (பெ) உரிக்கப்பட்ட பட்டை அல்லது மேல்தோல், Bark of a tree; the inner fibrous covering of a bamboo
1.1.
காம்பு சொலித்து அன்ன அறுவை உடீஇ – சிறு 236
மூங்கில் ஆடையை உரித்தாற் போன்றதும் ஆகிய உடையினை உடுக்கச்செய்து,
1.2.
கிளையொடு
நால் முலை பிணவல் சொலிய கான் ஒழிந்து – அகம் 248/4
தன் கூட்டத்துடன்
தொங்கும் முலையினையுடைய பெண்பன்றி இடம்பெயர, காட்டினின்றும் வெளிவந்து
1.3.
உண்ணா பிணவின் உயக்கம் சொலிய
நாள்_இரை தரீஇய எழுந்த நீர்நாய் – அகம் 336/3,4
உண்ணாமையால் வருந்திய பெண்நாயின் வருத்தத்தைப் போக்குவதற்கு
காலைப் பொழுதில் இரையினைக் கொண்டுவர எழுந்த நீர்நாய்
2.
பாம்பு உரி அன்ன வடிவின, காம்பின்
கழை படு சொலியின் இழை அணி வாரா
ஒண் பூம் கலிங்கம் – புறம் 383/9-11
பாம்பின் தோல்போன்ற வடிவினை உடையவாய் மூங்கில்
கோலின் உட்புறத்தே உள்ள தோல் போன்ற நெய்யப்பட்ட இழைகளின் வரிசை அறிய இயலாத
ஒள்ளிய பூவால் செய்யப்பட்ட ஆடை

சொல்மலை

சொல்மலை – (பெ) புகழ்ந்துகூறும் சொற்களின் தொகுப்பு, the concourse of words of praise
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை – திரு 263
அந்தணரின் செல்வமாயிருப்பவனே, சான்றோர் புகழும் சொற்களின் ஈட்டமாயிருப்பவனே

சோணாடு

சோணாடு – (பெ) சோழநாடு, The Chola country
குறும் பல் ஊர் நெடும் சோணாட்டு
வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி – பட் 28,29
அருகருகே அமைந்த பல (சிறிய)ஊர்களையுமுடைய – பெரிய சோழநாட்டில்;
வெள்ளை(வெளேர் என்ற) உப்பின் விலையைச் சொல்லி(விற்று,

சோணை

சோணை – (பெ) பாடலிபுத்திரத்துக் கருகில் கங்கையொடு கலக்கும் ஒரு நதி,
The river Son, which falls into the Ganges near Paataliputra
வெண் கோட்டு யானை சோணை படியும்
பொன் மலி பாடலி பெறீஇயர் – குறு 75/3,4
வெண்மையான தந்தங்களையுடைய யானைகள் சோணையாற்றில் நீராடும்
பொன் மிகுந்த பாடலிபுத்திரத்தைப் பெறுவாயாக!

சோபனம்

சோபனம் – (பெ) மங்கலம், Auspicious sign
சோபன நிலை அது துணி பரங்குன்றத்து – பரி 19/56
பெரிதும் மங்கலமான நிலையை உடையதாயிற்று தெளிவான திருப்பரங்குன்றத்து

சோர்

சோர் – 1. (வி) 1. விழு, fall
2. உதிர், drop off
3. தளர், be weary
4. கண்ணீர், குருதி முதலியன வடி, trickle down as tears, blood
5. நழுவு, சரிந்துவிழு, slip off
6. வாடு, wither, fade
2. (பெ) சொரிதல், pouring down as rain
1.1.
காழ் சோர் முது சுவர் கண சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி – சிறு 133,134
(ஊடு)கழிகள் (ஆக்கையற்று)விழுகின்ற பழைய சுவரிடத்தெழுந்த திரளான கரையான் அரித்துக் குவித்த
மண்துகள்களில் பூத்தன – உட்துளை(கொண்ட) காளான்
1.2.
மார்பு உறு முயக்கு இடை ஞெமிர்ந்த சோர் குழை – நற் 20/9
மார்பு முயக்குதலால் நெறிப்புண்டு உதிர்ந்த பூந்தளிர்களையுடைய
1.3
அரும் கடி காவலர் சோர்_பதன் ஒற்றி – அகம் 2/14
கடும் காவலையுடைய காவலர்கள் தளர்ந்திருக்கும் தக்க சமயத்தை உளவறிந்து கண்டு
1.4
பாய் குருதி சோர பகை இன்று உளம் சோர
நில்லாது நீங்கி நிலம் சோர அல்லாந்து – பரி 12/70,71
பாய்கின்ற குருதியாக வண்ணநீர் வடிய, அவன் அவளிடம் பகைமை கொள்ளாமல் உள்ளம் சோர்ந்துபோக,
அவ்விடத்தில் நிற்காமல் நீங்கிச் சென்று நிலத்தில் வீழ, மனம் கலங்கி,
1.5
அரிபு அரிபு இறுபு இறுபு குடர் சோர குத்தி – கலி 104/40
எலும்புகள் முறியவும், கைகால்கள் ஒடிந்துபோகவும், குடல் சரியக் குத்தி
1.6
புரப்போர் புன்கண் பாவை சோர – புறம் 235/12
தன்னால் புரக்கப்படும் சுற்றத்தாரது புல்லிய கண்களின் பாவை ஒளி மழுங்க
2.
ஆர் கலி எழிலி சோர் தொடங்கின்றே – ஐங் 428/2
பெருத்த முழக்கத்துடன் மேகங்கள் மழையைச் சொரியத்தொடங்கிவிட்டன