கொகுடி |
கொகுடி – (பெ) ஒரு வகை மல்லிகை, a variety of jasmine creeper
1. அடுக்கு மல்லிகை, Jasmine Sambac
2. நட்சத்திர மல்லிகை, star jasmine, Jasminum Pubescens
3. மல்லிகை அல்லாத வேறு ஒரு வகை
ஞாழல் மௌவல் நறும் தண் கொகுடி – குறி 81
|
கொக்கு |
கொக்கு – (பெ) 1. ஒரு பறவை, crane
2. மாமரம், mango tree
கொக்கின் உக்கு ஒழிந்த தீம் பழம் கொக்கின்
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல் – நற் 280/1,2
மாமரத்திலிருந்து உதிர்ந்து கீழே விழுந்த இனிய மாம்பழம், பறவையாகிய கொக்கின்
கூம்பிய நிலை போன்ற மொட்டுக்களையுடைய ஆம்பல் உள்ள
|
கொங்கர் |
கொங்கர் – (பெ) கொங்குநாட்டைச் சேர்ந்தவர். A ruling tribe belonging to a place called kongu
கொங்கு நாடு என்பது சேரநாட்டை ஒட்டிய பகுதி. இந்தக் கொங்கர்கள் யாருக்கும் அடங்காமல்
தனித்து ஆளும் பண்புள்ளவர்கள். எனவே முடியுடை மூவேந்தரும் கொங்கரை அடக்கியாளப்
படைகளை அனுப்பி இவர்களைப் பணியவைத்திருக்கின்றனர்.
பழையன் என்பவனை அனுப்பிச்சோழர்கள் இவர்களைப் பணியவைத்திருக்கின்றனர்.
கொற்ற சோழர் கொங்கர் பணீஇயர்
வெண் கோட்டு யானை போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்து அன்ன – நற் 10/6-8
என்ற அடிகள் சோழர் இவர்களை வெற்றிகொண்டதை விளக்கும்.
நார் அரி நறவின் கொங்கர் கோவே – பதி 88/19
என்று சேரமன்னர்கள் பாராட்டப்படுவதால், இவர்களைச் சேரர்கள் வென்ற செய்தி தெரியவரும்.
வாடா பூவின் கொங்கர் ஓட்டி
நாடு பல தந்த பசும் பூண் பாண்டியன் – அகம் 253/4,5
என்று பாண்டியர்கள் பாராட்டப்படுவதால், பாண்டியர்கள் இவர்களை வென்ற செய்தி தெரியவரும்.
வாகை என்ற இடத்தில் இவர்கள் பாண்டியன் தளபதியான அதிகன் என்பவனின் படையினை முறியடித்து
வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்ற செய்தியும் கிடைக்கிறது.
கூகை கோழி வாகை பறந்தலை
பசும் பூண் பாண்டியன் வினை வல் அதிகன்
களிறொடு பட்ட ஞான்றை
ஒளிறு வாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே.
கொங்கரை மூவேந்தர்கள் மட்டுமன்றி ஆய் அண்டிரன் என்ற வேளிர்குல சிற்றரசனும்
வென்றிருக்கிறான்.
அண்ணல் யானை எண்ணின் கொங்கர்
குட கடல் ஓட்டிய ஞான்றை
தலைப்பெயர்ந்திட்ட வேலினும் பலவே – புறம் 130/5-7
இந்தக் கொங்குநாடு மேலைக் கடல்வரை விரிந்திருந்தது என்பதுவும் மேற்கண்ட அடிகளால்
பெறப்படும்.
ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த – பதி 22/15
சேண் பரல் முரம்பின் ஈர்ம் படை கொங்கர்
ஆ பரந்து அன்ன செலவின் பல் – பதி 77/10,11
வன்_புலம் துமிய போகி கொங்கர்
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்
சேதா எடுத்த செந்நிலக் குரூஉ துகள் – அகம் 79/5-7
என்ற அடிகளால் இவர்களின் நாடு பசுக்கள் நிறைந்தது என்பது பெறப்படும். (ஆ = பசு)
சர்க்கரைக்கட்டி கலந்து பயறுகளை வேகவைத்த உணவினை இவர்கள் உட்கொண்டனர்.
கட்டி புழுக்கின் கொங்கர் கோவே – பதி 90/25 (கட்டி= சர்க்கரைக்கட்டி, புழுக்கு = பயறுகளை வேகவைத்தது)
இவர்கள் மணியினை இடையில் கட்டிக்கொண்டு தெருக்களில் ஆடிக்கொண்டு உள்ளி என்ற
விழாவினைக் கொண்டாடுவர்.
கொங்கர்
மணி அரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி விழவின் அன்ன – அகம் 368/16-18
|
கொங்கு |
கொங்கு – (பெ) 1. பூந்தாது, pollen of flowers
2. தேன், honey
3. கொங்கு நாடு, A region called kongu
1.
கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின் – சிறு 71
இந்திர கோபத்தை ஒத்த தாதுக்கள் சேர்ந்து உதிர்தலால்
2.
கொங்கு கவர் நீல செம் கண் சேவல் – சிறு 184
தேனை நுகர்கின்ற நீல நிறத்தினையும் சிவந்த கண்ணையும் உடைய வண்டொழுங்கு
3.
கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே – புறம் 373/8
கொங்குநாட்டை வென்ற வெற்றியையுடைய வேந்தனே.
|
கொடிச்சி |
கொடிச்சி – (பெ) குறிஞ்சிநிலப்பெண், Woman of the hilly tract
சுடு புன மருங்கில் கலித்த ஏனல்
படு கிளி கடியும் கொடிச்சி கை குளிரே – குறு 291/1,2
மரங்களை வெட்டிச் சுட்டெரித்துச் சீர்ப்படுத்திய புனத்தில் தழைத்த தினையில்
வந்து வீழும் கிளிகளை ஓட்டும் தலைவியின் கையிலுள்ள குளிர் என்னும் கருவி
|
கொடிஞ்சி |
கொடிஞ்சி – (பெ) தேரில் அமர்வோருக்குக் கைப்பிடியாகப் பயன்படும் தாமரைப்பூ வடிவுள்ள
தேரின் அலங்கார உறுப்பு
Ornamental staff in the form of a lotus, fixed in front of the seat
in a chariot and held by the hand as support
யான் பெயர்க என்ன நோக்கி தான் தன்
நெடும் தேர் கொடிஞ்சி பற்றி
நின்றோன் போலும் இன்றும் என் கட்கே – அகம் 110/23-25
நான் செல்க என்று சொல்லவும், (போகாமல்) என்னை நோக்கியவனாய், அவன் தனது
நீண்ட தேரின் கொடிஞ்சியினைப் பிடித்துக்கொண்டு
நின்றான், இன்றும் என் கண் முன்னே நிற்பது போல் இருக்கிறது.
|
கொடிறு |
கொடிறு – (பெ) 1. கன்னம், cheek, jaw
2. குறடு, Pincers
1.
தளிர் புரை கொடிற்றின் செறி மயிர் எருத்தின்
கதிர்த்த சென்னி கவிர் பூ அன்ன
நெற்றிச் சேவல் – அகம் 367/10-12
தளிரைப் போன்ற கன்னத்தினையும், அடர்த்தியான மயிரினையுடைய கழுத்தினையும்
நிமிர்ந்த தலையின் மேல் முருக்கம் பூவினைப் போன்ற
கொண்டையினையும் உடைய சேவல்
2.
மென் தோல்
மிதி உலை கொல்லன் முறி கொடிற்று அன்ன
கவை தாள் அலவன் – பெரும் 206-208
மெத்தென்ற தோலாலான
மிதி(த்து ஊதுகின்ற) உலை(யைக் கொண்ட)கொல்லனுடைய முறிந்த கொறடை ஒத்த
கவர்த்த காலையுடைய நண்டின்
|
கொடுஞ்சி |
கொடுஞ்சி – (பெ) கொடிஞ்சி , பார்க்க: கொடிஞ்சி
கோட்டின் செய்த கொடுஞ்சி நெடும் தேர் – பொரு 163
(யானைக்)கொம்பாற் செய்த தாமரை முகையினையுடைய நெடிய தேரில்
|
கொடுமணம் |
கொடுமணம் – (பெ) அணிகலங்களுக்குப் பேர்பெற்ற பழையதோர் ஊர்
An ancient town noted for the manufacture of jewellery
கொடுமணம் பட்ட வினை மாண் அரும் கலம் – பதி 74/5
கொடுமணம் என்ற ஊரில் இருக்கும் வேலைப்பாட்டினில் சிறந்த அரிய அணிகலன்களையும்,
|
கொடுமரம் |
கொடுமரம் – (பெ) வில், Bow
கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த – கலி 12/2
தம்முடைய வில்லால் கொல்லப்பட்டவர்களின் உடலை இலைகளால் மூடிய குவியல்கள் வரிசையாகக் கிடக்கும்
|
கொட்கு |
கொட்கு – (வி) 1. சுழல், whirl round
2. சுற்று, revolve
3. சுற்றித்திரி, roam about
1.
அமிழ்து திகழ் கருவிய கண மழை தலைஇ
கடும் கால் கொட்கும் நன் பெரும் பரப்பின் – பதி 17/11,12
நீர் நிரம்பக்கொண்டு திரண்டு எழும் முகில்கணம் பரவுமாறு
கடுமையான காற்று சுழன்றடிக்கும் நல்ல பெரிய பரப்பினையுடைய
2.
அறாஅல் இன்று அரி முன்கை கொட்கும்
பறாஅ பருந்தின் கண் பற்றி புணர்ந்தான் – கலி 147/36,37
எப்பொழுதும் நீங்காமல், மென்மையான என் முன்கையில் சுற்றிக்கொண்டிருக்கும்
பறக்காத பருந்தாகிய குருகு என்னும் கைவளை இருக்குமிடத்தைப் பிடித்து என்னோடு சேர்ந்திருந்தவன்
3.
இறாஅ வன் சிலையர் மா தேர்பு கொட்கும்
குறவரும் மருளும் குன்றத்து படினே – மலை 274,275
முறிந்துபோகாத கெட்டியான வில்லையுடையவர்களாய் விலங்குகளைத் தேடிச் சுற்றியலையும்
குறவர்களும் (வழி தவறி)மனம்தடுமாறும் குன்றுகளில் சென்றால்,
|
கொட்டம் |
கொட்டம் – (பெ) கொட்டான், சிறிய ஓலைப்பெட்டி, small basket made of palm leaf
கொழும் கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும் – சிறு 166
கொழுவிய கொடியினையுடைய முசுட்டை கொட்டம்(போலும் பூவைத் தன்னிடத்தே) கொள்ளவும்,
|
கொட்டில் |
கொட்டில் – (பெ) சிறு குடில், small hut
குறும் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி
நெடும் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில் – பெரும் 188,189
குறிய சகடத்தின் உருளையோடு கலப்பையையும் சார்த்தி வைக்கப்பட்டமையால்
நெடிய சுவரிடத்தே தேய்ந்த புகை சூழ்ந்த குடிலினையும் உடைய
|
கொட்டை |
கொட்டை – (பெ) 1. தாமரைப் பொகுட்டு, Pericarp of the lotus or common caung flower
2. சேலை முந்தானையில் போடப்படும் முடிச்சு,
Knots made of warp threads at the end of a cloth, as ornament, etc
1.
சே இதழ் பொதிந்த செம்பொன் கொட்டை
ஏம இன் துணை தழீஇ இறகு உளர்ந்து – சிறு 75,76
சிவந்த இதழ் சூழ்ந்த செம்பொன்(னால் செய்ததைப்போன்ற) பொகுட்டின்மிசை,
(தன் உயிர்க்குக்)காவலாகிய இனிய பெடையைத் தழுவி, சிறகுகளை அசைத்துக்கொண்டு,
2.
கொட்டை கரைய பட்டு உடை நல்கி – பொரு 155
(பட்டுக்)குஞ்சம் (உள்ள)கரையையுடைய பட்டு உடைகளைத் தந்து
|
கொட்பு |
கொட்பு – 1. (வி) சுழல், சுற்று, சுற்றித்திரி, கொட்கு, பார்க்க : கொட்கு
2. (பெ) 1. சுழலுதல் , சுழற்சி, whirling
2. சுற்றுதல், சுற்று, revolving
3. சுற்றித்திரிதல், roaming
1.
வல மாதிரத்தான் வளி கொட்ப – மது 5
வலமாக விசும்பிடத்தே காற்றுச் சுழல
மடங்கலும் கணிச்சியும் காலனும் கூற்றும்
தொடர்ந்து செல் அமையத்து துவன்று உயிர் உணீஇய
உடங்கு கொட்பன போல் – கலி 105/20-22
ஊழித்தீயும், சிவனும், காலதேவனும், கூற்றுவனும்,
உயிர்களை விடாமல் துரத்திச் செல்கின்ற சமயத்தில், நிறைந்திருக்கும் உயிர்களை உண்பதற்காக,
ஒன்று சேர்ந்து சுற்றிவருவது போல்
பேயும் அணங்கும் உருவு கொண்டு ஆய் கோல்
கூற்ற கொல் தேர் கழுதொடு கொட்ப – மது 632,633
பேய்களும், வருத்தும் தெய்வங்களும் (காணத்தக்க)உருவங்களைக் கொண்டு, ஆராய்ந்த நெறி பிறழாத
கூற்றுவனின் கொலைத் தேராகிய கழுதுடன் சுற்றித்திரிய
2.1
விளரி கொட்பின் வெள் நரி கடிகுவென் – புறம் 291/4
விளரிப் பண்ணைச் சுழற்சியுறப் பாடித் தின்னவரும் குறுநரிகளை ஓட்டுவேன்
2.2
நிரை பறை குரீஇ இனம் காலை போகி
முடங்கு புற செந்நெல் தரீஇயர் ஓராங்கு
இரை தேர் கொட்பின ஆகி – அகம் 303/11-13
வரிசையாகப் பறத்தலையுடைய குருவியின் கூட்டம், காலையில் போய்
வளைந்த புறத்தினையுடைய சிவந்த நெற்கதிர்களைக் கொணர்ந்து தருமாறு, ஒருங்கே
இரையை தெரிந்தெடுக்க சுற்றிச்சுற்றிவருதலையுடையனவாகி,
2.3
உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொண்மார்
அந்தர கொட்பினர் வந்து உடன் காண – திரு 173,174
தமக்குற்ற குறைவேண்டும் பகுதியில் (தம்)தொழில்களைப் பெறுமுறையினை முடித்துக்கொள்வதற்கு,
வானத்தே சுற்றித்திரிதலையுடையராய், வந்து ஒருசேரக் காண –
|
கொண்கன் |
கொண்கன் – (பெ) 1. நெய்தல் நிலத் தலைவன், Chief of the maritime tract
2. நெய்தல் நிலக் காதலன், lover of the maritime tract
1.
வளை படு முத்தம் பரதவர் பகரும்
கடல் கெழு கொண்கன் காதல் மடமகள் – ஐங் 195/1,2
சங்கு ஈன்ற முத்துக்களைப் பரதவர் விலைக்கு விற்கும்
கடலைச் சேர்ந்த தலைவனின் அன்பிற்குரிய இளமையான மகள்
2.
மின் இவர் கொடும் பூண் கொண்கனொடு
இன் நகை மேவி நாம் ஆடிய பொழிலே – நற் 187/9,10
ஒளி தவழும் வளைந்த அணிகலன்கள் அணிந்த தலைவனோடு
இனிதாக நகை செய்தபடி நாம் விளையாடிய சோலை –
|
கொண்கானம் |
கொண்கானம் – (பெ) ஒரு மலை, the name of a mountain
பொன் படு கொண்கான நன்னன் நன் நாட்டு
ஏழிற்குன்றம் பெறினும் – நற் 391/6,7
பொன் விளையும் கொண்கானத்து நன்னனின் நல்ல நாட்டிலுள்ள
ஏழிற்குன்றத்தையே பெற்றாலும்.
இக்காலத்து மங்களூர் மலைக்குன்றுதான் இந்தக் கொண்கானம் என்ற ஒரு கருத்து உண்டு.
கொண்கானம் என்பது நன்னன் ஆண்ட நிலப்பகுதி என்பார் ஔவை.துரைசாமி அவர்கள். மலையாள
மாவட்டத்தின் வடபகுதியும், தென் கன்னட மாவட்டமும் சேர்ந்த பகுதிதான் கொண்கானம் என்பது
அவர் கருத்து. இதுவே கொங்கணம் என்றும் அழைக்கப்படுகிறது என்பார் அவர்.
|
கொண்டல் |
கொண்டல் – (பெ) 1. மழை, rain
2. கிழக்குக் காற்று, East wind
3. மேகம், cloud
1.
கொண்டல் வளர்ப்ப கொடி விடுபு கவினி
மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும் – மது 530,531
மழை வளர்க்கக் கொடிவிட்டு அழகுபெற்று,
மெல்லிய சுருள் விரிந்த சிறிய கொழுந்துகளையுடைய கீரைகளையும்,
2
புது மணல் கானல் புன்னை நுண் தாது
கொண்டல் அசை வளி தூக்கு-தொறும் குருகின்
வெண் புறம் மொசிய வார்க்கும் தெண் கடல் – நற் 74/7-9
புதுமணற்பரப்பைக் கொண்ட கானலில் உள்ள புன்னை மரத்தின் நுண்ணிய தாதுக்கள்
கிழக்கிலிருந்து வீசும் காற்று வந்து மோதும்போதெல்லாம், குருகின்
வெள்ளையான முதுகில் மொய்ப்பதுபோல் உதிர்க்கும் தெளிந்த கடற்கரையிலுள்ள
3.
தாக்குபு தம்முள் பெயர்த்து ஒற்றி எ வாயும்
வை வாய் மருப்பினான் மாறாது குத்தலின்
மெய் வார் குருதிய ஏறு எல்லாம் பெய்_காலை
கொண்டல் நிரை ஒத்தன – கலி 106/11-14
தமக்குள் ஒன்றையொன்று தாக்கிக்கொண்டு, காலினால் மண்ணைப் பறித்துத் தள்ளி, எல்லா இடங்களிலும்
கூர்மையான நுனியைக் கொண்ட தம் கொம்புகளால் விடாமல் குத்துவதால்,
உடம்பிலிருந்தும் ஒழுகுகின்ற செங்குருதியைக் கொண்ட காளைகள் எல்லாம், காலைப் பொழுதில் பெய்கின்ற
செம்மேகக் கூட்டத்தைப் போன்றிருந்தன;
|
கொண்டி |
கொண்டி – (பெ) 1. கொள்ளைப்பொருள், plunder, pillage
2. ஈட்டிய பொருள், earned possession
3. உணவு, food
4. பரத்தை, prostitute
5. சிறைப்பிடிக்கப்பட்ட மகளிர், captive women
6. கொள்ளையிடுதல், Plundering (a town) after capture
7. திறைப்பொருள், கப்பம், tribute
1.
கொண்டி உண்டி தொண்டையோர் மருக – பெரும் 454
பகைப்புலத்துக் கொள்ளையாகிய உணவினையும் உடைய தொண்டையோருடைய குடியில் வந்தவனே!
2.
தொல் கொண்டி துவன்று இருக்கை – பட் 212
தொன்றுதொட்டு ஈட்டிய பொருளினையுடைய நிறைந்த குடியிருப்பினையும்
3.
கள் கொண்டி குடி பாக்கத்து – மது 137
கள்ளாகிய உணவினையுடைய குடிகளையுடைய சீறூர்களையுமுடைய
4.
நெஞ்சு நடுக்கு_உறூஉ கொண்டி மகளிர் – மது 583
தம்மைக் கண்டோருடைய நெஞ்சை வருத்தி அவரின் பொருளைக் கொள்ளையிடும் பொதுமகளிர்
5.
கொண்டி மகளிர் உண்துறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின் – பட் 246,247
பிறர் நாட்டிலிருந்து கொள்ளையிட்டுக் கொணர்ந்த மகளிர் பலரும் நீர் உண்ணும்துறையில் மூழ்கி
அந்திக் காலத்தில் ஏற்றிய அவியாத விளக்கினையுடைய
6
கொண்டி மள்ளர் கொல் களிறு பெறுக – பதி 43/25
பகைப்புலத்தைக் கொள்ளையாடும் மள்ளர்கள், கொல்லுகின்ற களிறுகளைப் பெற்றுக்கொள்க
7.
போர் எதிர்ந்து
கொண்டி வேண்டுவன் ஆயின் கொள்க என
கொடுத்த மன்னர் நடுக்கற்றனரே – புறம் 51/5-7
போரினை ஏற்று
திறையை வேண்டுவனாயின் கொள்க எனக்
கொடுத்த மன்னர் நடுக்கம் தீர்ந்தார்
|
கொண்டுநிலை |
கொண்டுநிலை – (பெ) குரவைக்கூத்தில் தலைவன் விரைவில் மணம் முடிக்க வேண்டிப் பாடும் பாட்டு,
Kuravai song praying for the hero’s union in wedlock with the heroin
குரவை தழீஇ யாம் ஆட குரவையுள்
கொண்டுநிலை பாடி காண் – கலி 39/29,30
குரவைக் கூத்தைத் தழுவியவாறு நாங்கள் ஆட, அந்தக் குரவையில்
கொண்டுநிலை என்ற தலைவன், தலைவி சேர்க்கைக்கான பாடலைப் பாடுவாயாக;
|
கொண்பெரும்கானம் |
கொண்பெரும்கானம் – (பெ) கொண்கானம் – பார்க்க : கொண்கானம்
தன் பல இழிதரும் அருவி நின்
கொண்பெரும்கானம் பாடல் எனக்கு எளிதே – புறம் 154/12,13
|
கொண்மூ |
கொண்மூ – (பெ) மேகம், cloud
அந்தரத்து
இமிழ் பெயல் தலைஇய இன பல கொண்மூ
தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப – அகம் 68/14-16
வானில்
இடித்ததுடன் பெய்தலைச் செய்த கூட்டமான பல மேகங்கள்
நீங்குதல் இல்லாமல் பெய்தலால் எழுந்த வெள்ளம் இடம்தோறும் மிகுதலால்
|
கொன் |
கொன் – (பெ) 1. உயர்ந்தது, that which is great
2. அச்சம் ,fear
3. பெரியது, that which is vast
4. வீண், futility
5. விடியற்காலம், dawn
1.
கொன் ஒன்று கிளக்குவல் அடு போர் அண்ணல் – மது 207
மேலான ஒன்றைக் கூறுவேன், கொல்லும் போர்த்தொழில் வல்ல தலைவனே
2.
கடும் பகட்டு யானை நெடும் தேர் அஞ்சி
கொன் முனை இரவு ஊர் போல
சில ஆகுக நீ துஞ்சும் நாளே – குறு 91/6-8
கடுமையும் மிடுக்கும் உள்ள யானைகளையும், நீண்ட தேரினையும் உடைய அதிகமானின்
அச்சமுண்டாக்கும் போர்க்களத்தின்கண் இரவைக்கழிக்கும் ஊரினர் போன்று
சிலவே ஆகுக நீ துயிலும் நாட்கள்.
3
கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே – குறு 138/1
பெரிய ஊரிலுள்ளார் தூங்கினாலும் நாம் தூங்கமாட்டோம்;
4.
புன்னை அம் சேரி இ ஊர்
கொன் அலர் தூற்றும் தன் கொடுமையானே – குறு 320/7,8
புன்னை மரங்கள் சூழ்ந்த அழகிய சேரிகளையுடைய இந்த ஊரில் உள்ளோர்
வீணே பழி தூற்றுவர், தம் கொடுமையான தன்மையினால்.
5.
கொன் வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூற – புறம் 379/11
விடியற்காலத்தே வந்து பாடும் வழக்கத்தையுடைய உன் கிணைப்பொருநன் வந்து எனக்குச் சொல்ல
|
கொன்னாளன் |
கொன்னாளன் – (பெ) பயனற்ற வாழ்க்கையை வாழ்பவன், the person who leads an useless life
தண் நறும் கோங்கம் மலர்ந்த வரை எல்லாம்
பொன் அணி யானை போல் தோன்றுமே நம் அருளா
கொன்னாளன் நாட்டு மலை – கலி 42/16-18
குளிர்ச்சியான நறிய கோங்கம் மலர்ந்த மலை எல்லாம்
பொன்னாலான அணிகலன்கள் அணிந்த யானையைப் போல் தோன்றுகிறது, நம் மீது அருள்கொள்ளாத
பயனற்ற வாழ்க்கையை வாழ்கின்றவன் நாட்டு மலை!
|
கொன்றை |
கொன்றை – (பெ) ஒரு மரம், பூ, சரக்கொன்றை, Indian laburnum;
பொன்னிறத்தில் பூக்கக்கூடியது.
பொன் என கொன்றை மலர – நற் 242/3
பூக்கள் கொத்துக்கொத்தாகத் தொங்கிக்கொண்டிருக்கும்.
ஈங்கை இலவம் தூங்கு இணர் கொன்றை – குறி 86 (தூங்கு = தொங்கு, இணர் = பூங்கொத்து)
இதன் காய் நீளமாக உள்ளே துளையுள்ளது.
புழல் காய் கொன்றை கோடு அணி கொடி இணர் – நற் 296/4
காயில் துளையிட்டுப் புல்லாங்குழலாய் இசைப்பர்.
கொன்றை அம் தீம் குழல் மன்று-தோறு இயம்ப – நற் 364/10
இதன் மொட்டுக்கள் அந்தக் காலத்துப் பொற்காசுகளைப் போன்றிருக்கும்
காசின் அன்ன போது ஈன் கொன்றை – குறு 148/3
|
கொப்பூழ் |
கொப்பூழ் – (பெ) தொப்புள், Naval, umbilicus
நீர் பெயர் சுழியின் நிறைந்த கொப்பூழ் – பொரு 37
நீரிடத்துப் பெயர்தலையுடைய சுழி போலச் சிறந்த இலக்கணம் அமைந்த கொப்பூழினையும்
|
கொம்பர் |
கொம்பர் – (பெ) கொம்பு, மரக்கிளை, branch of a tree
மாவும் வண் தளிர் ஈன்றன, குயிலும்
இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும் – அகம் 355/1,2
மாமரங்களும் அழகிய தளிர்களைத் துளிர்த்தன, குயிலும்
மிக இனிய குரலால் பலகாலும் அந்தக் கொம்புகளிலிருந்து கூவும்
|
கொம்பு |
கொம்பு – (பெ) 1. கொம்பர், மரக்கிளை, பார்க்க : கொம்பர்
2. விலங்குகளின் தலையில் நீட்டிக்கொண்டிருப்பது, horn
1.
மடவ மன்ற தடவு நிலை கொன்றை
—————
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த – குறு 66/1-4
அறியாமையுடையன, நிச்சயமாக! இந்த அகலமாய் நிற்கும் கொன்றை மரங்கள்!
கிளைகளில் சேர்ந்த கொடிபோல் கொத்தாகப் பூத்தன
2.
மணி வார்ந்து அன்ன மா கொடி அறுகை
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி – குறு 256/1,2
நீல மணியின் கதிர்களை வரிசையாய் வைத்தாற்போன்ற கரிய கொடிகள் படர்ந்த அறுகம்புல்
செறிவாகப் பின்னிக்கிடந்ததை, மெல்லிய கொம்புகள் உள்ள தன் பெண்மானோடு உண்டு
|
கொம்மை |
கொம்மை – (பெ) திரட்சி Conicalness, roundness, rotundity;
கொம்மை அம் பசும் காய் குடுமி விளைந்த
பாகல் ஆர்கை பறை கண் பீலி
தோகை – அகம் 15/3-5
திரண்ட பசிய காய்களின் குடுமிப்பக்கம் பழுத்த
பாகல்பழங்களை விரும்பி உண்ணும், பறை போன்ற கண்ணையுடைய பீலிகளையுடைய
மயில்கள்
|
கொற்கை |
கொற்கை – (பெ) பாண்டிநாட்டில் தாமிரபர்ணியின் சங்கமுகத்தில் அமைந்த பழைய துறைமுகப் பட்டினம்
An ancient port formerly at the mouth of the Tāmiraparṇi in the Pāṇdya kingdom;
கொற்கையில் விளைந்த முத்துக்கள் பாண்டியநாட்டுக்குப் பெருஞ்செல்வத்தை ஈட்டித்தந்தன.
கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன
நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் – அகம் 27/9,10
கொற்கை என்ற அழகிய பெரிய துறைநகரில் விளையும் முத்தைப் போன்ற,
முறுவலால் பொலிவுடன் விளங்கும் பற்கள் உள்ள சிவந்த உன் வாய்
|
கொற்றன் |
கொற்றன் – (பெ) பிட்டங்கொற்றன் என்னும் என்னும் படைத்தலைவன்.
அரும் தொழில் முடியரோ திருந்து வேல் கொற்றன் – புறம் 171/7
இவன் சேரமான் கோதைக்குப் படைத்துணைவன். பேராண்மையும் வள்ளண்மையும் உடையவன்.
இவன் குதிரைமலையைச் சார்ந்த நாட்டினை ஆண்டுவந்தான். சங்கப் புலவரான
கருவூர் கதப்பிள்ளை சாத்தனார், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்,
உறையூர் மருத்துவன் தாமோதரனார், வடமவண்ணக்கன் தாமோதரனார்,
ஆகியோர் பாடியுள்ளனர். (புறம் 168-172)
|
கொற்றம் |
கொற்றம் – (பெ) 1. அரசாட்சி, Sovereignty, kingship, government
2. வெற்றி, victory
1.
வழிவழி சிறக்க நின் வலம் படு கொற்றம் – மது 194
வழிமுறை வழிமுறையாகச் சிறக்க நின் ஆளுமையுள்ள அரசாட்சி
2.
கடும் சினத்த கொல் களிறும்
கதழ் பரிய கலி_மாவும்
நெடும் கொடிய நிமிர் தேரும்
நெஞ்சு உடைய புகல் மறவரும் என
நான்கு உடன் மாண்டது ஆயினும் மாண்ட
அற நெறி முதற்றே அரசின் கொற்றம் – புறம் 55/7-12
கடிய சினத்தையுடைய கொல்லும் களிறும்,
விரைந்த ஓட்டத்தையுடைய மனம் செருக்கிய குதிரையும்
நெடிய கொடியைக் கொண்ட உயர்ந்த தேரும்,
நெஞ்சு வலிமையுடைய போரை விரும்பும் மறவரும் என
நான்கு படையும் கூட மாட்சிமைப்பட்டதாயினும், மாட்சிமைப்பட்ட
அறநெறியை முதலாகக் கொண்டது வேந்தரது வெற்றி.
|
கொற்றவன் |
கொற்றவன் – (பெ) அரசன், வெற்றியாளன், king, monarch, victor
வெற்றமொடு வெறுத்து ஒழுகிய
கொற்றவர்தம் கோன் ஆகுவை – மது 73,74
வெற்றியோடே செறிந்து நடந்த
மன்னர்க்கும் மன்னர் ஆவாய்,
சீர் சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ – மது 87,88
சிறப்புக்கள் அமைந்த உயர்ந்த நெல்லின் (பெயரைப்பெற்ற)
(நெற்குன்றம் என்ற)ஊரைக் கைப்பற்றிய உயர்ந்த வெற்றியை உடையவனே
|
கொற்றவை |
கொற்றவை – (பெ) வெற்றிக்கு உரியவள், துர்க்கை, Durga, as the Goddess of Victory
வெற்றி வெல் போர் கொற்றவை சிறுவ – திரு 258
வெற்றியையுடைய வெல்லும் போர்த்தெய்வமான கொற்றவையின் மகனே
|
கொற்றி |
கொற்றி – (பெ) கொற்றவை, பார்க்க : கொற்றவை
பெரும் காட்டு கொற்றிக்கு பேய் நொடித்து ஆங்கு – கலி 89/8
பெரிய காட்டிலிருக்கும் கொற்றவைக்குப் பேய் வந்து குறி சொன்னாற்போல
|
கொல்லி |
கொல்லி – (பெ) நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடர்,
Range of hills in Namakkal district
கடையெழு மன்னர்களின் ஒருவனான ஓரி என்பவன் ஆண்டபகுதி இது.
இவன் வில்லாற்றல் மிகுந்தவனாய் இருந்ததினால் வல்வில் ஓரி என்னப்பட்டான்.
இது பலாமரங்கள் மிகுந்த பகுதி.
இங்கே கொல்லிப்பாவை என்ற ஒரு தெய்வத்திற்குக் கோயில் இருக்கிறது
செ வேர் பலவின் பயம் கெழு கொல்லி
தெய்வம் காக்கும் தீது தீர் நெடும் கோட்டு – நற் 201/5,6
சிவந்த வேர்ப்பலாவின் பழங்கள் நிறைந்த கொல்லிமலையின்
தெய்வம் காக்கும் குற்றமற்ற உயர்ந்த உச்சிமலையில்
|
கொல்லை |
கொல்லை – (பெ) 1. முல்லைநிலம், Sylvan tract
2. தோட்டம், land for cultivation
1.
கொல்லை நெடு வழி கோபம் ஊரவும் – சிறு 168
முல்லை நிலத்து நெடிய வழியில் இந்திரகோபம் என்னும் பூச்சி ஊர்ந்து செல்லவும்
2.
கொல்லை கோவலர் எல்லி மாட்டிய
பெரு மர ஒடியல் போல – நற் 289/7,8
புன்செய்க்காட்டில் கோவலர் இரவில் கொளுத்திய
பெரிய மரத்துண்டைப் போன்று
|
கொளுவு |
கொளுவு – (வி) 1. ஏவிவிடு, urge on
2. விளக்கின் திரியைப் பற்றவை,light the wick of a lamp
3. செலுத்து, ஓட்டு, cause to go
1.
திங்களுள் தோன்றி இருந்த குறு முயால்
எம் கேள் இதன் அகத்து உள்_வழி காட்டீமோ
காட்டீயாய் ஆயின் கத நாய் கொளுவுவேன் – கலி 144/18-20
திங்களுக்குள் தோன்றியிருக்கும் சின்ன முயலே!
என் காதலன் இந்த உலகத்தில் இருக்கும் இடத்தைக் காட்டுவாயா?
காட்டாவிட்டால் வேட்டை நாயை உன்மீது ஏவிவிடுவேன்,
2.
வள மனை
பூ தொடி மகளிர் சுடர் தலை கொளுவி
அந்தி அந்தணர் அயர கானவர் – குறி 223-225
செல்வம் நிறைந்த இல்லங்களில்
பொலிவுள்ள வளையல் அணிந்த மகளிர் விளக்கின் திரியை ஏற்றி
அந்திக்கடனை அந்தணர்(போல்) ஆற்ற
3.
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ
வேத மா பூண் வைய தேர் ஊர்ந்து – பரி 5/22,23
பிரம்மதேவன் செலுத்தும் முறையை அறிந்தவனாக, குதிரையைச் செலுத்த,
வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட வையகமாகிய தேரில் ஏறி,
|
கொளை |
கொளை – (பெ) 1. இசை, melody
2. தாளம், beating time (as of hands or a drum)
3. பாட்டு, song
4. கொள்கை, கோட்பாடு, will, determination
5. பயன், விளைவு, effect, result
1.
யாழ் வண்டின் கொளைக்கு ஏற்ப
கலவம் விரித்த மட மஞ்ஞை – பொரு 211,212
யாழ்(ஓசை போன்ற) வண்டின் இசைக்கு ஏற்ப,
தோகையை விரித்த மடப்பத்தையுடைய மயில்
2.
பெரும் சமம் ததைந்த செரு புகல் மறவர்
உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு கொளை புணர்ந்து
பெரும் சோறு உகுத்தற்கு எறியும்
கடும் சின வேந்தே நின் தழங்கு குரல் முரசே – பதி 30/41-44
பகைவரின் பெரிய போரினைச் சிதைத்துக் கெடுத்த போரை விரும்பும் மறவர்களால்,
இடி போன்ற நிலத்தை அதிரச் செய்யும் குரலோடு, தாள ஒலி சேர்ந்தொலிக்க,
போர்வீரருக்குப் பெரிய விருந்துணவு படைப்பதற்கு அறையப்பெறுகின்றது –
கடும் சினமுள்ள வேந்தனே! உன்னுடைய முழங்குகின்ற ஒலியையுடைய முரசம்.
3.
படு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும் – பரி 16/12
ஓங்கியடிக்கும் கண்களைக் கொண்ட இசைக்கருவிகளின் ஒலியினையும், பாட்டினையும் பயின்ற
கூத்துமகளிர் ஆடுகின்ற
4.
கொளை தளராதவர் தீமை மறைப்பென்-மன் – கலி 34/17
பொருளீட்டம் என்ற கொள்கையில் தளராதவர் இழைத்த தீமையை மறைத்துக்கொண்டேன்
5
கொடும் குழாய் தெளி என கொண்டதன் கொளை அன்றோ – கலி 132/17
‘வளைந்த குழைகளை அணிந்தவளே! என்னை நம்புவாயாக’ என்றதை ஏற்றுக்கொண்டதன் விளைவு அன்றோ
|
கொள் |
கொள் – (பெ) காணம், Horsegram, Dolichos uniflorus;
கொள்ளொடு பயறு பால் விரைஇ வெள்ளி
கோல் வரைந்து அன்ன வால் அவிழ் மிதவை – அகம் 37/12,13
கொள்ளும் பயறும் பாலுடன் கலந்து, வெள்ளியால்
கோலம் வரைந்ததைப் போன்ற வெண்மைநிறமுள்ள நன்கு வெந்த கஞ்சியை
|
கொள்ளி |
கொள்ளி – (பெ) 1.நெருப்பு, fire
2. நெருப்புப் பற்றவைக்கப்பட்ட கோல், கொள்ளிக்கட்டை, firebrand
1.
இளம்பிறை அன்ன விளங்கு சுடர் நேமி
விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப – குறு 189/3,4
இளைய பிறையைப் போன்ற ஒளிரும் சுடரையுடைய சக்கரங்கள்
வானிலிருந்து விழுகின்ற நெருப்பு அழிப்பதுபோல பசிய பயிர்களை அழிக்க
2
கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க – நெடு 8
கையில் பிடித்த கொள்ளிக்கட்டையை உடையவராய், கன்னங்கள் அடித்துக்கொண்டு நடுங்க
|
கொள்ளை |
கொள்ளை – (பெ) 1. சூறையாடல், plunder
2. விலை, Price
3. மிகுதி, abundance
1.
தொடுதோல் அடியர் துடி பட குழீஇ
கொடு வில் எயினர் கொள்ளை உண்ட
உணவு இல் வறும் கூட்டு உள்ளகத்து இருந்து
வளை வாய் கூகை நன் பகல் குழறவும் – பட் 265-268
செருப்பு (அணிந்த) காலினையுடையராய் உடுக்கை ஒலிக்கத் திரண்டு,
கொடிய வில்லையுடைய வேடர் சூறையாடிக் கொள்ளையாக(க் கொண்டு) உண்ட
நெல் இல்லாமற்போன வெறுமையான நெற்கூட்டின் உட்புறத்தில் தங்கி,
வளைந்த அலகையுடைய கூகை உச்சிக்காலத்து(ம்) கூவவும்;
2.
வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல் வாய் பஃறி – பட் 29,30
வெள்ளை(வெளேர் என்ற) உப்பின் விலையைச் சொல்லி(விற்று, அதற்கு மாற்றாக வாங்கிய)
நெல்லைக் கொண்டுவந்த, கெட்டியான விளிம்புகளையுடைய படகுகளை
3.
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை
மருப்பு கடைந்து அன்ன கொள்ளை வான் பூ – அகம் 267/6,7
பூனையின் பாதத்தைப் போன்ற குவிந்த அரும்பினை உடைய இலுப்பையின்
தந்தத்தினைக் கடைந்தது போன்ற மிகுதியாகவுள்ள வெள்ளிய பூக்களை
|
கொழி |
கொழி – (வி) 1. பொழி, pour down as showers
2. (செழிப்பு)பெருகு, be in abundance
3. ஒதுக்கு, waft ashore as fine sand by waves
4. சுளகு அல்லது முறத்தில் பொருள்களை இட்டு, அதைப் பக்கவாட்டில் அசைத்து அசைத்து
பொருளில் உள்ள தூசி,கல் ஆகியவற்றை ஒதுக்குதல், sift, winnow
1.
செம் வரை கொழி நீர் கடுப்ப அரவின்
அம் வரி உரிவை அணவரும் மருங்கின் – அகம் 327/12,13
செங்குத்தான மலையிலிருந்து செழுமையாக விழும் அருவிநீரைப் போன்று
பாம்பின் அழகிய வரிகளையுடைய உரிக்கப்பெற்ற தோல்கள் பொருந்தும் பாறையிடங்களும்
2.
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி – பட் 7,8
நீர் பரந்து பொன்(போல் விளைச்சல்) செழித்துப்பெருகும்
விளைதல் தொழில் அற்றுப்போகாத அகன்ற வயல்களில்
3.
இயங்கு புனல் கொழித்த வெண் தலை குவவு மணல் – மது 336
ஓடுகின்ற நீர் ஒதுக்கித்தள்ளிய வெள்ளிய மேற்பரப்பையுடைய திரண்ட மணலையுடைய
4.
விசையம் கொழித்த பூழி அன்ன
உண்ணுநர் தடுத்த நுண் இடி நுவணை – மலை 444,445
சர்க்கரையை(ச் சுளகில்) கொழித்து (குருமணல் போன்ற பகுதியை நீக்கி ஒதுக்கிய)பொடியைப் போல,
(திகட்டலால்)உண்பாரைத் தடுக்கும் நுண்ணிதாக இடிக்கப்பட்ட தினைமாவையும்
|
கொழீஇய |
கொழீஇய – (வி.எ) கொழித்த – பார்க்க: கொழி-4
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர் – நற் 15/1
முழங்குகின்ற கடலலைகள் கொழித்துச் சேர்த்த பெரிதான மணல்மேடு
|
கொழு |
கொழு – 1. (வி) மிகு, செழித்திரு, be abundant, flourish
2. (பெ) கலப்பையில் மண்னைக் கிளரும் கூரான இரும்புப்பகுதி. ploughshare
1.
புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்து பரப்பும் – நற் 101/4
புன்னைமரத்தின் அழகிய மிகுதியான நிழலுக்கு முன்பாகப் போட்டுப் பரப்பிவிட்டிருக்கும்
கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை – நெடு 24
செழுமையான மடல்களில் (பாளை)விரிந்த திரட்சியைக் கொண்ட கொத்துக்களில்
2.
நாஞ்சில்
உடுப்பு முக முழு கொழு மூழ்க ஊன்றி – பெரும் 199,200
கலப்பையின்
உடும்பின் முகத்தை ஒத்த பெரும் கொழு மறைய அமுக்கி,
|
கொழுது |
கொழுது – (வி) 1. கோது, மூக்கால்குடை, peck, hollow out with beak
2. கொய், பறி, pluck
3. கிழி, rend, tear
1.
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் – நற் 9/10
மா மரத்தின் அரும்பைக் கோதி மகிழ்கின்ற குயில் கூவிவிளையாடும்
2.
ஞாழல் அம் சினை தாழ் இணர் கொழுதி
முறி திமிர்ந்து உதிர்த்த கையள் – நற் 106/7,8
ஞாழலின் அழகிய கிளையின் தாழ்ந்திருக்கும் பூங்கொத்தினைக் கொய்து,
இளந்தளிரை அதனுடன் சேரப்பிசைந்து உதிர்த்துவிட்ட கையினளாய்
3.
உள்ளூர் குரீஇ துள்ளு நடை சேவல்
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழையியர்
தேம் பொதி கொண்ட தீம் கழை கரும்பின்
நாறா வெண் பூ கொழுதும் – குறு 85/2-5
உள்ளூர்ச் சிட்டுக்குருவியின் குதித்துக்குதித்து நடக்கும் ஆண்குருவி
சூல் நிறைந்த தன் பெட்டைக்குருவிக்கு அடைகாத்துக் குஞ்சுபொரிக்கும் கூடு கட்ட
இன்சுவையைத் தன்னுள் பொதிந்துவைத்துள்ள இனிய கழையான கரும்பின்
மணமில்லாத வெள்ளைநிறப் பூக்களைக் அலகால் கிழித்து எடுத்துவரும்
|
கொழுநன் |
கொழுநன் – (பெ) கணவன், husband
எழு-மினோ எழு-மின் எம் கொழுநன் காக்கம் – நற் 170/5
கவனமாயிருங்கள், கவனமாயிருங்கள், எம் கணவனைக் காத்துக்கொள்ளுங்கள்!
|
கொழுந்து |
கொழுந்து – (பெ) 1. தாவரங்களின் தளிர், tender leaf
2. சங்கில் வளையல்களைஅறுத்தது போக எஞ்சியிருக்கும் நுனிப்பகுதி,
the tip of a shell which remains after cutting it for bangles
1.
கொழுந்து முந்துறீஇ குரவு அரும்பினவே – நற் 224/3
தளிர்களை முதலில் விட்டு, குராமரங்கள் அரும்புவிடுகின்றனவே!
2.
வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்த
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன
தளை பிணி அவிழா சுரி முக பகன்றை – அகம் 24/1-3
யாகம் பண்ணாத பார்ப்பான் கூரிய அரத்தால் அறுத்து எடுத்த
வளையல்கள் (அறுத்தது)போக எஞ்சிய சங்கின் தலைப்பகுதியைப் போன்ற
கட்டுண்ட பிணிப்பு அவிழாத சுரிந்த முகத்தையுடைய பகன்றையின் மொட்டுகள்
|