சங்க இலக்கிய அருஞ்சொற்களஞ்சியம்

முனைவர் ப.பாண்டியராஜா
(www.tamilconcordance.in)


105

52

77

24

121

13

36

20

5

32

20

1
க்
124
கா
24
கி
12
கீ
2
கு
58
கூ
17
கெ
9
கே
7
கை
23
கொ
48
கோ
28
கௌ
1
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
15
சா
42
சி
51
சீ
7
சு
29
சூ
13
செ
66
சே
17
சை
1
சொ
6
சோ
4
சௌ
ஞ்
3
ஞா
15
ஞி
4
ஞீ ஞு ஞூ ஞெ
17
ஞே ஞை ஞொ
1
ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
113
தா
23
தி
54
தீ
13
து
76
தூ
25
தெ
44
தே
25
தை
6
தொ
44
தோ
16
தௌ
1
ந்
82
நா
44
நி
40
நீ
21
நு
30
நூ
11
நெ
39
நே
12
நை
3
நொ
24
நோ
13
நௌ
1
ப்
245
பா
80
பி
63
பீ
7
பு
173
பூ
19
பெ
48
பே
25
பை
22
பொ
76
போ
37
பௌ
1
ம்
240
மா
85
மி
35
மீ
13
மு
163
மூ
24
மெ
14
மே
30
மை
9
மொ
6
மோ
11
மௌ
1
ய்
2
யா
30
யி யீ யு யூ
2
யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
236
வா
71
வி
120
வீ
15
வு வூ வெ
81
வே
67
வை
18
வொ வோ வௌ
2
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்

ஓ – (பெ) 1. சென்று தங்குதல், going and staying
2. முடிவுறுதல், cessation
3. கூவும் ஒலிக்குறிப்பு, hello! calling attention
1.
ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி – திரு 3
உயிர் மனம் முதலிய கருவிகளில் சென்று தங்குதலில்லையாய் உள்ளத்துக்குள்ளெ ஒளிர்வதும்,
உள்ளத்திற்குத் தூரமாய் நின்று எங்கும் இயல்பாக விளங்குவதுமாகிய ஒளி.
2.
நீர் வார் நிகர் மலர் கடுப்ப ஓ மறந்து
அறு குளம் நிறைக்குந போல அல்கலும்
அழுதல்மேவலாகி – அகம் 11/12-14
நீர் சொரியும் ஒளி பொருந்திய மலரைப் போல, ஒழிதலின்றி
நீர் அற்ற குளத்தை நிறைக்கும் மடையைப்போல நாளும்
அழுதலைப் பொருந்தியவாகி
3.
காப்பு உடை வாயில் போற்று ஓ என்னும்
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி
ஒன்று எறி பாணியின் – நற் 132/8-10
காவலையுடைய வாயில்களை நன்கு காத்துக்கொள்வீர் என்று கூவுகின்ற
யாமக் காவலரின் நெடிய நாவையுடைய ஒள்ளிய மணி
ஒன்றுபட இசைக்கும் தாளம்போல

ஓக்கு

ஓக்கு – (வி) 1. உயர்த்து, lift up
2. கொடு, give, grant
3. தெய்வத்துக்குப் படைசெலுத்து, offer to a deity
1.
திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய
வேலினும் வெய்ய கானம் – பட் 299,300
திருமாவளவன் பகைவரை நோக்கி உயர்த்திய
வேலைக்காட்டிலும் வெம்மை மிக்கது காட்டுவழி
2.
கை வார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய
நிரம்பா இயல்பின் கரம்பை சீறூர் – புறம் 302/6,7
கைகளால் இசைக்கும் நரம்பினை இயக்கிப் பாடும் பாணர்களுக்குக் கொடுத்த
நிரம்பாத இயல்பினையுடைய கரம்பைகள் நிறைந்த சிற்றூர்கள்
3.
இல் உறை கடவுட்கு ஓக்குதும் பலியே – அகம் 282/18
மனையுறை தெய்வத்திற்குப்பலி செலுத்துவோமாக

ஓங்கல்

ஓங்கல் – (பெ) 1. உயர்ச்சி, height, elevation
2. எழுச்சி, rising
3. மலை, mountain,
1.
உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல் அம் சினை தூங்கு துயில் பொழுதின் – நற் 87/1,2
நம் ஊரிலுள்ள மா மரத்தில் இருக்கும் முள் போன்ற பற்களைக் கொண்ட வௌவால்,
உயர்ந்த அழகிய கிளையில் தொங்கியவாறு துயிலும் பொழுதில்
2.
ஓங்கல் புணரி பாய்ந்து ஆடு மகளிர் – நற் 395/6
உயர்ந்து எழும் அலைகளுக்குள் பாய்ந்து விளையாடும் மகளிர்
3.
ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீ – அகம் 228/10
மலையின் மேலுள்ள வேங்கை மரத்தின் ஒளி பொருந்திய மலர்கள்

ஓசனை

ஓசனை – (பெ) நான்கு காத தூரம், a measure of a distance
ஓசனை கமழும் வாச மேனியர் – பரி 12/25

ஓச்சு

ஓச்சு – (வி) 1. செலுத்து, cause to go
2. உயர்த்து, raise as the arm
3. பாய்ச்சு, நுழை, insert, thrust into
1.
விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்
நனம் தலை தேஎத்து நன் கலன் உய்ம்-மார் – மது 321,322
சீரிய மரக்கலங்களைக் கடலில் இயக்குபவர்கள்
அகன்ற இடத்தையுடைய நாடுகளினின்றும் நல்ல அணிகலன்களை எடுத்துச்செல்ல
2.
பால்கொண்டு மடுப்பவும் உண்ணானாகலின்
செறாஅது ஓச்சிய சிறு கோல் அஞ்சி – புறம் 310/2
பாலைக் கையில் ஏந்திக்கொண்டு வாயில் வைத்து உண்பிக்கவும் உண்ணாமையினால்
கோபிக்காமல் கையை மட்டும் ஓங்கிய சிறிய கோலுக்கு அஞ்சி
3.
ஒன்னா தெவ்வர் நடுங்க ஓச்சி
வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம் – பெரும் 118,119
(தம்மைப்)பொருந்தாத பகைவர் அஞ்ச, (அவரைக்)குத்தி,
கூரிய முனை மழுங்கின புலால் நாறும் வாயையுடைய வேல்களை

ஓடை

ஓடை – (பெ) யானையின் நெற்றிப்பட்டம், Frontlet for elephants
ஒன்னார் யானை ஓடை பொன் கொண்டு – புறம் 126/1
பகைவருடைய யானையினது பட்டத்திலுள்ள பொன்னைக் கொண்டு

ஓணம்

ஓணம் – (பெ) திருமால் பிறந்த நாள், திருவோணம், the 22nd nakṣatra.
மாயோன் மேய ஓண நன்_நாள் – மது 591
திருமால் பிறந்த திருவோணமாகிய நல்ல நாளில்,

ஓதம்

ஓதம் – (பெ) 1. கடல் பொங்கி உள்ளே வந்து பின்னர் உள்வாங்குதல், the swelling and retreading of sea water
2. கடல் அலை, wave, billow
1.
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெரும் கடல் ஓதம் போல – அகம் 123/13
பொங்கி வரும்போது இறா மீனுடன் வந்து, உள்வாங்கும்போது மாலையோடு மீளும்
பெரிய கடல் பெருக்கம் போல
2.
முழங்கு கடல் ஓதம் காலை கொட்கும் – அகம் 220/12
முழங்கும் கடலின் அலைகள் காலையில் அலையும்

ஓதி

ஓதி – (பெ) 1. பெண்களின் கூந்தல்
2. ஓந்தி, ஓணான், chameleon, garden lizard
1.
ஒடுங்கு ஈர் ஓதி ஒண் நுதல் குறுமகள் – குறு 70/1
ஒடுங்கிய எண்ணெய்ப்பூச்சுடைய கூந்தலையும் ஒள்ளிய நெற்றியையுமுடைய இளையவள்
2.
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து – நற் 186/5
வேனில்காலத்து பச்சோந்தியின், தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் முதிய ஆணானது

ஓதிமவிளக்கு

ஓதிமவிளக்கு – (பெ) அன்னத்தின் உருவத்தைத் தலையில்கொண்ட குத்துவிளக்கு, lamp with an image of swan on top
ஓதிம விளக்கின் உயர்_மிசை கொண்ட – பெரும் 317

ஓதை

ஓதை – (பெ) பேரொலி, ஆரவாரம், loud noise
நெடும் சுழி பட்ட கடுங்கண் வேழத்து
உரவு சினம் தணித்து பெரு வெளில் பிணிமார்
விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை – மலை 325-327
பெரிய நீர்ச்சுழலில் அகப்பட்ட கொடுங்குணமுள்ள யானையின்
மிகுகின்ற சினத்தைத் தணித்து, பெரிய கம்பங்களில் கட்டுவதற்கு,
(விலங்குமொழி கலந்த)கலப்பு மொழியால் பழக்கும் பாகருடைய ஆரவாரமும்;

ஓப்பு

ஓப்பு – (வி) ஓட்டு, drive away, cause to flee
1.
அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஓப்பும் – பதி 12/12,13
பெருமை பொருந்திய இளங்களிறு, தன்னை மொய்க்கும் வண்டு, ஞிமிறு ஆகியவற்றை ஓட்டுகின்ற,
2.
பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி – நற் 368/1
பெரிய தினைப்புனத்தின் கதிர்களைக் கொத்திச் செல்லும் சிறிய கிளிகளை விரட்டி

ஓமை

ஓமை – (பெ) ஒரு மரம், Tooth-brush tree, Salvadora persica
1.
இது ஒரு பாலை நில மரம். இன்றைய கருவேலமரத்தை ஒத்தது.
உவர் எழு களரி ஓமை அம் காட்டு
வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அரும் சுரம் – நற் 84/8,9
உப்புப்பூத்துக் கிடக்கும் களர் நிலத்து ஓமைக்காட்டு,
வெயில் நிலைத்திருந்த வெப்பம் அலையிடும் அரிய காட்டுவழியில்
2.
இதன் உச்சிக்கிளைகள் காய்ந்து பரந்து இருக்கும்
உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி – நற் 252/1
கிளைகள் பரந்த ஓமை மரத்தின் காய்ந்த நிலையில் அதனை ஒட்டிக்கொண்டு
அலறு தலை ஓமை அம் கவட்டு ஏறி – ஐங் 321/2
உச்சியில் பரந்த தலையைக் கொண்ட ஓமை மரத்தின் அழகிய பிரிந்திருக்கும் கிளையில் சென்று
3.
இதன் அடிமரம் பருத்து இருக்கும்
பணை தாள் ஓமை படு சினை பயந்த – நற் 318/2
பருத்த அடிமரத்தைக் கொண்ட ஓமை மரத்தின் தாழ்ந்த கிளை தந்த
4.
இதன் அடிமரம் பொரிந்துபோன பட்டைகளை உடையது
பொரி தாள் ஓமை வளி பொரு நெடும் சினை – குறு 79/2
பொரிந்த அடிமரத்தையுடைய ஓமையின் காற்றால் புடைக்கப்பட்ட நீண்ட கிளையின்
5.
இதன் அடிமரம் கருப்பாய் இருக்கும்
கரும் கால் ஓமை காண்பு இன் பெரும் சினை – அகம் 3/2
கருத்த அடிப்பகுதியை உடைய ஓமை மரத்தின் காண்பதற்கு இனிய பெரிய கிளையில்
6.
இதன் இலைகள் மிகச்சிறியவாய் அழகிழந்து இருக்கும்
புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம் – நற் 107/6
புன்மையான இலையையுடைய ஓமை மரங்களுடைய புலிகள் நடமாடும் கடிய பாதையில்

ஓம்பு

ஓம்பு – (வி) 1. தவிர், விலக்கு, dispel
2. பாதுகாப்பளி, protect, guard
3. பேணு, nourish
4. (விருந்தினரை)வரவேற்று உபசரி, show courtesy (to guests)
5. வளர், bring up
6. இறுகப்பிடி, clutch or grasp tightly
1.
அஞ்சிலோதி அசையல் யாவதும்
அஞ்சல் ஓம்பு நின் அணி நலம் நுகர்கு என – குறி 181
“அழகிய நுண்மையான கூந்தலையுடையவளே, கலங்கவேண்டாம், சிறிதளவுகூட 180
அஞ்சுவதை விலக்கவும், (நான்)உன் பேரழகைக் கண்டுமகிழ்வேன்” என்று சொல்லி,
2.
முரசு கொண்டு
ஓம்பு அரண் கடந்த அடு போர் செழியன் – நற் 39/8,9
அவரின் முரசைக் கைப்பற்றி
அவர் காத்துநின்ற அரணையும் வென்ற அழிக்கின்ற போரினையுடைய செழியனின்
3.
குழவியை பார்த்து உறூஉம் தாய் போல் உலகத்து
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி – கலி 99/4,5
குழந்தையைப் பார்த்து அதற்குப் பாலூட்டும் தாயைப் போல, இந்த உலகத்தில்
மழையைப் பொழிந்து அருள்செய்து பேணிக்காக்கும் நல்ல ஊழான விதியை
4.
மன்னவன் புறந்தர வரு விருந்து ஓம்பி
தன் நகர் விழைய கூடின்
இன் உறல் வியன் மார்ப அது மனும் பொருளே – கலி 8/21-23
மன்னவன் பேணிப்பாதுகாக்க, வீட்டுக்கு வரும் விருந்தினரை உபசரித்து,
தன் மனைவி மக்கள் விரும்பும்படி, அவருடன் சேர்ந்திருப்பது,
இனிய நெருக்கமான உறவினுக்குரிய அகன்ற மார்பினையுடையவனே! அதுவே நிலைத்த பொருளும் ஆகும்.
5.
அன்னை ஓம்பிய ஆய் நலம்
என் ஐ கொண்டான் யாம் இன்னமால் இனியே – குறு 223/6,7
அன்னை வளர்த்துவிட்ட ஆய்வதற்குரிய பெண்மை நலத்தை
தலைவன் கவர்ந்துகொண்டான், நாம் இப்படியானோம் இப்பொழுது.
6.
பரூஉ கொடி வலந்த மதலை பற்றி
துருவின் அன்ன புன் தலை மகாரோடு
ஒருவிர்_ஒருவிர் ஓம்பினர் கழி-மின் – மலை 216-218
பருத்த கொடிகள் பின்னியவற்றை ஆதரவாகப் பிடித்துக்கொண்டு,
செம்மறியாட்டைப் போன்று, பரட்டைத் தலையினையுடைய (உம்)பிள்ளைகளோடே,
ஒருவர் ஒருவராக (ஒருவரை ஒருவர்)இறுகப் பிடித்தவராய்ச் செல்லுங்கள்

ஓராங்கு

ஓராங்கு – (வி.அ) 1. ஒருசேர, unitedly
2. ஒன்றுபோல, in the same manner
1.
இளமையும் காமமும் ஓராங்கு பெற்றார் – கலி 18/7
இளமை நலத்தையும், காம நுகர்ச்சியையும் ஒருசேரப் பெற்றவர்கள்
2.
வேரும் முதலும் கோடும் ஓராங்கு
தொடுத்த போல தூங்குபு தொடரி
கீழ் தாழ்வு அன்ன வீழ் கோள் பலவின் – குறு 257/1-3
வேரிலும், அடிமரத்திலும், கிளையிலும் ஒன்றுபோல்
தொடுத்து வைத்தைதைப் போன்று தொங்கித் தொடர்ந்து
கீழே தாழ்ந்தாற்போன்ற தணிந்த குலைகளைக் கொண்ட பலாமரங்களையும்

ஓரி

ஓரி – (பெ) 1. குதிரையின் பிடரி மயிர், mane
2. தேன் முதிர்தலாற் பிறக்கும் நீலநிறம், dark blue colour of matured honey
3. ஓரி என்ற ஒரு கடைஎழுவள்ளல்களுள் ஒருவன், அவனுடைய குதிரை
Name of one of the seven liberal chiefs of sangam era, his horse
1.
ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க – பொரு 164
(சாதிலிங்கம்)ஊட்டின தலைச்சிறகுகள் அலையாட, பிடரி மயிர் அசையப்,
2.
நீல் நிற ஓரி பாய்ந்து என நெடு வரை
நேமியின் செல்லும் நெய் கண் இறாஅல் – மலை 523,524
கருநீல நிறமான முற்றிய தேனின் நிறம் (எங்கும்)பரவியதைப்போன்ற, உயர்ந்த மலையில்
சக்கரம் போன்று ஒழுகும் தேனைத் தன்னிடத்தேகொண்ட தேனடைகளும்,
3.
ஓரி குதிரை ஓரியும் – சிறு 111
ஓரியென்னும் குதிரையையுடைய ஓரியும்;

ஓரை

ஓரை – (பெ) மகளிர் விளையாட்டு, women’s play
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து
ஓரை ஆயமும் நொச்சியும் காண்-தொறும் – நற் 143/2,3
கொண்டுவந்த மணலை, தலைசுற்றிப் பரப்பிய வளமிக்க மனைகளின் முற்றத்தில்
ஓரையாடுகின்ற தோழியர் கூட்டத்தையும், நொச்சிவேலியையும் காணும்போதெல்லாம்

ஓர்

ஓர் 1. (வி) 1. ஆராய், examine
2. உற்றுக்கேள், listen attentively
3. தெரிந்தெடு, மேற்கொள், select
4. கருது, நினை, regard, think
2. (பெ.அ) ஒரு என்பதன் மாற்றுவடிவம், an adjectival form of ‘one’
3. (இ.சொ) அசைநிலை, expletive
1.1
அரும் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும்
திருந்து அரை ஞெமைய பெரும் புன குன்றத்து – அகம் 395/12,13
அரிய காட்டினில் செல்வோர் ஆளின் குரல் என்று நினைத்து ஆராயும்
செவ்விய அடி பொருந்திய ஞெமை மரங்களையுடைய பெரிய தினைப்புனங்களையுடைய குன்றில்
1.2
இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள் – முல் 88
இனிய பலவாகிய முழங்குகின்ற ஓசையை உற்றுக்கேட்டவளாய்க் கிடந்தோளுடைய
1.3
கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல – கலி 8/2
கொடுமை செய்வதையே மேற்கொண்ட மன்னனின் கொடுங்கோலாட்சியைப் போல
1.4
கறி வளர் சிலம்பில் வழங்கல் ஆனா
புலி என்று ஓர்க்கும் இ கலி கேழ் ஊரே – கலி 52/17,18
மிளகுக் கொடிகள் வளரும் மலைச் சாரலில் ஓயாமல் திரியும்
புலி என்று உன்னை எண்ணிக்கொள்வர் இந்த செருக்கு பொருந்திய ஊர்மக்கள்
2.
அன்னாய் இவன் ஓர் இள மாணாக்கன் – குறு 33/1
தோழியே! இந்தப் பாணன் ஓர் இளம் மாணாக்கன் போல் இருக்கிறான்
3.
மயில் ஓர் அன்ன சாயல் – மது 706
மயிலைப் போன்ற சாயல்

ஓவம்

ஓவம் – (பெ) சித்திரம், picture
ஓவத்து அன்ன வினை புனை நல் இல் – அகம் 98/11
ஓவியத்தைப் போன்று நல்ல தொழில்திறத்தால் புனைந்த நல்ல மனையில்

ஓவு

ஓவு – 1. (வி) 1. முடிவுறு, cease
2. நீங்கு, நீக்கு, part with, separate
2.(பெ) 1. ஓவியம், picture
2. முடிவுறுதல், cessation
1.1.
ஓவாது ஈயும் மாரி வண் கை – குறு 91/5
முடிவுறாமல் (இடைவிடாமல்)கொடுக்கும் மழையைப் போன்ற வள்ளல்தன்மையுள்ள கையும்
1.2.
மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்று அற்றா – கலி 81/14
மருந்து நீக்கமுடியாத என் நெஞ்சிற்கு அமிழ்தம் உண்டதைப் போல
2.1
ஓவு கண்டு அன்ன இரு பெரு நியமத்து – மது 365
சித்திரத்தில் காண்பதைப் போன்ற இரண்டு பெரிய கடைவீதிகளில்
2.2
மா கண் முரசம் ஓவு இல கறங்க – மது 733
பெரிய முகப்பையுடைய முரசம் முடிவு இல்லாமல் முழங்க